Sunday, March 14, 2021

வசதி - கதை

 

 

 

 

 

வசதி                                    -எஸ்ஸார்சி

 

மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார்க்கடிதம் எழுதினான்.  அந்த சுபாஷ் நகர் ஒரு பெரு நகரத்தை ஒட்டிய  புதிய குடியிருப்புப்பகுதி. அங்குதான் அவன் எலக்ட்ரிகல் கடை நடத்திக்கொண்டிருந்தான்

எண்ணிக்கையில் .பத்து இருக்கலாம்.   கீழ்த்தொட்டியிலிருந்து தண்ணீர் மேல் ஏற்றும் சிறு மோட்டார்கள் அவனிடம்  விற்பனைக்கு இருந்தன. யாரும் வாங்கிப்போகாமல்  கடையின் பெரிய அலமாரியின் மேலடுக்கில் அப்படியே தூங்கிக்கொண்டிருந்தன. இவைகளை எப்படி போணியாக்குவது. ஒரு மோட்டார் விலை ஆறாயிரம் ஆக  ஒரு அறுபது ஆயிரம்  ரூபாய்..  இருந்தாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் அவைகளை விற்காமல்  வைத்துக்கொண்டிருப்பது.

 ’’பெரு மதிப்பிற்குறிய ’மாவட்ட ஆட்சித்தலைவரின்  கவனத்திற்கு ப்பணிவான வின்ணப்பம்.

 எங்கள் சுபாஷ் நகரில் வீடுகளுக்கு குடிதண்ணீர் கனெக்‌ஷன் கொடுத்து இருக்கிறார்கள். தெருவிலும் பொதுக்குழாய்கள் இருக்கின்றன. ஒரு சில வீடுகளில்  சிறிய மோட்டார் பொறுத்தி  திருட்டுத்தனமாக குடி தண்ணீர் எடுக்கிறார்கள். அதனால்  தெருவின் பொதுக்குழாயிலும் மோட்டார் பொறுத்தாமல் நியாயமாய் குடி நீர் இணைப்பு பெற்றுள்ள குடியிருப்புக்களிலும் தண்ணீர் சரியாக வருவது இல்லை.  இப்பகுதி மக்கள் மிகமிகக்கஷ்டப்படுகிறோம். ஆகவே அய்யா அவர்கள் உடனடியாக இந்தத்திருட்டு மோட்டார்களை பறிமுதல் செய்து சுபாஷ் நகரில் எல்லோருக்கும் குடி தண்ணீர் நேர்மையாகக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்’

மாவட்ட ஆட்சித்தலைவருக்குப்புகார் மனுவை அனுப்பி முடித்தான்.

ஒருவாரம் சென்றது. நகராட்சிக்காரர்கள். மாவட்ட ஆட்சியரிடமிருந்து என்ன ஆணை பெற்றார்களோ  அது தெரியவில்லை. ஒரு நாள் காலை. அதிகாலைதான்.. சுபாஷ் நகருக்கு  நகராட்சியின் பெரிய லாரி ஒன்றில் நான்கைந்து பேருக்கு தொற்றிக்கொண்டு வந்தார்கள்.  ஸ்டீல் வின்ச் ஸ்பானர் ரோப் இத்யாதிகள்  கைவசம் இருந்தன. கூடவே  நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் வந்திருந்தார்.

‘அப்படியே இங்க பாருங்க இந்த நகரு குடி தண்ணீர் கனெக்‌ஷனுங்க  சீரியல் நெம்பரு  அது அதுங்க விலாசம்  இருக்கு. நேரா போங்க சின்ன மோட்டார் போட்டு நம்ப சப்ளயை திருட்டுத்தனமா  எடுக்குறாங்களான்னு பாருங்க அப்பிடி இருந்தா. அலெர்ட். அந்த மோட்டரை நாம பறிமுதல் செய்யுறம்’

என்றார் அந்த ஆய்வாளர்.

 

அவன் எலக்ட்ரிகல் கடையிலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்று நோட்டம் விட்டான். ஒரு பத்து மோட்டர்களை இவர்கள் கழட்டிச்சென்றால் தேவலை. அவனிடம் விற்காமல் கிடப்பில்  கிடக்கும் பத்து மோட்டர்களை மீண்டும் போணியாக்கிவிடலாம்..  தீவிர யோசனையில் இருந்தான்.

‘இப்ப போறமே இது தண்ணி  வுடுற நேரம்தானா சாரு’

வயதில் மூத்த தொழிலாளி  நகராட்சி ஆய்வாளரைக்கேட்டுவைத்தான்/.

‘பிறகென்ன இதுதான் நாம குடி தண்ணி சப்ள பண்ற கரெக்ட் டயம்’ அதான் நாமளும் வந்துருக்கம். நீங்க போங்க போயி அந்த திருட்டு மோடாருவுள கழட்டிக்கொண்டாங்க. அதான் இப்பக்கி நம்ப  ஜோலி.  நா சொல்றது என்னன்னு தெரிதா’ கட்டளை தந்தார் ஆய்வாளர்.

குடிதண்ணீர் எடுக்கப்படும் எல்லா வீடுகளுக்கும் அந்தக்குழு சென்றால் அதுவே சரியாக இருக்கும். அதுதானில்லை. ஏனில்லை. அதற்குக்காரணம்  இலாமலா..

‘என் வீட்டுக்கு முந்தி வீட்ட வுட்டுப்புட்டு என் வீட்டுக்குள்ளாற நுழையுறிங்க. அங்கயும் சின்ன மோட்டாரு ஓடுதே’

என்றாள் ஒரு பாட்டி.

 பயனாளிங்க விலாசமும்  டாப் கனெகஷன்  நெம்பரும் எங்களுக்கு குடுத்து இருக்காங்க அது பிரகாரம் எங்க வேலய நாங்க செய்யுறம். நீங்க சொல்லுற அந்த வீட்டு விலாசம் இங்க எங்களண்ட இல்லயே’ என்றார் வந்திருந்த  மூத்த தொழிலாளி.

‘அவுங்க கனெக்‌ஷனே திருட்டு கனெக்‌ஷன்.  நாங்க அப்பிடி இல்லே. தண்ணி வரமாட்டேங்குதுன்னு கொழாயில சின்ன மோட்டரு செறுகியிருக்கம். அதான்.  நாங்க தண்ணி வரியும் கட்றமே. அவுங்க  அந்த அதயும் கட்றதில்லே. ஆனா அங்க திருட்டு மோட்டரு ஓடுது இது மாதிரிக்கு இன்னும் பல பேரு வூட்டுல  திருட்டு கனெக்‌ஷனுங்க இருக்கு சாரு. அங்க நீங்க போவுணும்ல

மூத்த தொழிலாளியிடம் கேட்டாள் அந்த ப்பாட்டி.

‘எங்க வேலய நாங்க செய்யுறம் அவ்வளவுதான்’

முடித்துக்கொண்டார்  அந்த மூத்த  நகராட்சி ஊழியர்.  நான்கைந்து தாய்மார்கள் நேரே நகராட்சி ஆய்வாளரிடம் வந்து கத்தினார்கள்.

‘ மோட்டர கழட்டி எடுத்துகினு போங்க. எங்க வூட்டுல நாலு கொடம் தண்ணி வேணுமே. சின்ன மோட்டர் போட்டாத்தான் அது வரும்  மோட்டர் இல்லன்னு வச்சிக்க வெறும் காத்துதான் வரும் தண்ணி வராது’ சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

‘ எதாயிருந்தாலும் எங்களுக்கும்  ஒசக்க பெரிய ஆபிசருங்க இருக்காங்க. அவுங்களை பாருங்க. ஒங்க கொறய சொல்லுங்க.’

என்றார் ஆய்வாளர்.

 நகராட்சி லாரியில் பத்து பதினைந்து மோட்டார்களை அங்கங்கு பார்த்து கழட்டிக்கொண்டுவந்து   தொழிலாளர்கள் அடுக்கினர். வண்டி புறப்பட்டது.

‘அநியாயம் அக்கிரும்பு’ புலம்பினர் சுபாஷ் நகர் வாசிகள்.

நகராட்சி லாரியில் அவர்கள் எடுத்துச்சென்ற அனைத்து மோட்டார்களுமே அவன் அவர்களுக்கு  தனது எலக்ட்ரிகல் கடையிலிருந்து விற்றவைதான். அந்த ஸ்டாக்கில்தானே இன்னும் பத்து மோட்டர்கள் கடையில் பாக்கியாகிக்கிடக்கின்றன.

எலக்ட்ரிகல் கடையிலிருந்து அவன்  நடந்த களேபரத்தைப்பார்த்துக்கொண்டேஇருந்தான்.

மாலை நேரம். ஒவ்வொருவராக மோட்டார் பறிகொடுத்த சுபாஷ் நகர்காரர்கள் கூடினார்கள். என்ன செய்வது என்று யோசித்தார்கள். தண்ணீர் வரியே கட்டாதவர் வீட்டில் மோட்டார் இருக்கும். தண்ணீர் வரும்..  திருட்டு கனெக்‌ஷன் திருட்டு.. மோட்டார். அக்குரும்பு அக்குரும்பு’.. மாறி மாறி இதனையே பேசினார்கள்.

‘ நாளைக்கு தண்ணி வேணுமே என்ன செய்வே’

ஓங்கிக்குரல் கொடுத்தார் ஒரு பெரியவர்.

அவரே சொன்னார்.

‘ கழட்டி எடுத்துட்டுப் போன மோட்டாருங்களை  நாம திரும்ப கொண்டாரணும். அது  ஒண்ணும் இப்பக்கி ஆவாது.  நாம  அதே எலக்ட்ரிகல் ஷாப்புக்கு  போவுறம். திரும்பவும்  காசு போட்டு புதுசா வாங்குறம். அதச்சொறுகி தண்ணி எடுப்பம்.வேற என்னா வழி இருக்கு. நாளைக்கு நாம வேலைக்கு போவுணும்.  நம்ப புள்ளிங்க ஸ்கூலுக்கு போவுனும்ல யாரு தப்புக்கு யாரு தண்டம்  அழுவுறது.‘. முடித்துக்கொண்டார்.

எலக்ட்ரிகல் கடைக்கு சொல்லிவைத்தாற்போல் ஒருவர்பின் ஒருவராய் சென்றனர். அந்த சிறிய மோட்டாரை அதே எலக்ட்ரிகல் கடையில் விலைக்கு வாங்கினர். வீட்டுக்குழாய் இணைப்பில்  அதனைத்திரும்பவும் பொறுத்தினர்.  குடி தண்ணீர் பழைய படிக்கு வந்தது.

ஆறுமாதம் கழிந்தது. நகராட்சிக்காரர்கள் தகவல் அனுப்பினார்கள்.  ஒவ்வொருவரும் ஐநூறு ரூபாய் நகராட்சிக்கு அபராதத்தொகை  எனக்கட்டினார்கள். ன ந்கராட்சிக்காரர்கள் கழட்டிச்சென்ற  அந்த அந்த மோட்டாரை திரும்பவும் பெற்றுக்கொண்டனர்.

அவன் எலக்ட்ரிகல் கடையில் இருந்தான்.  அவரவர்கள்  நகராட்சியிலிருந்து பழைய மோட்டாரை வாங்கிக்கொண்டு  தத்தம்  வீட்டுக்குச்செல்வதை உற்றுப்பார்த்தான்.

‘பத்திரமா  கொண்டுபோய் வீட்டுல வையுங்க இது ரிப்பேரா அது. அது ரிப்பேரானா இதுன்னு வச்சிகிடலாம். அதுலயும் ஒரு வசதி இருக்குது  அவர்களைப்பார்த்து  எலக்ட்ரிகல் கடைக்காரன் சொல்லி நிறுத்தினான்.

--------------------------------------------

 

---------------------------------------------------------------------------------------.

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment