Saturday, September 5, 2020

வல்லரசாகவேண்டும்

 வல்லரசாகவேண்டும் 

 

 

 நாடு விடுதலை பெற்று

ஆயின எழுபதாண்டுகள்

நீதி மன்றங்களில்

தேங்கி நிற்கும்

வழக்குகளின் எண்ணிக்கை

எத்தனை எத்தனை

கிட்டும் ஏதோ ஒரு நீதியைக்

காணாமலே கண்களை மூடியவர்கள்

எண்ணிலடங்கா

சிறைவாசிகள் பாதிக்குமேல்

ஏனிங்கு  வந்தோம்  தெரியாதவர்கள்

நீதியரசர் பதவிகள் காலியாகக்

கிடக்கின்றன ஏராளமாய்

நிரப்பிடவேண்டுமாம்

கண்கலங்கினார் நீதியரசர்

பணி ஓய்வு பெறும் நாளில்.

பாகிஸ்தானிலிருந்து பாரதம் வந்தார்

கலீல் கிஸ்டி

பேராசிரியர் கவிஞரவர்க் கைதாகி

பதினெட்டு ஆண்டுகள் சிறையில்

விடிந்தது ஒரு நாள்

அவர் நிரபராதி கண்டுபிடித்துவிட்டார்களே

விடுதலையும் ஆனார் விட்டு 

விடுங்கள் அவரை.

ஆயிரம் சங்கடங்கள்

ஆயிரம் சந்தேகங்கள்

ஆயிரம் சடங்குகள்

ஆயிரம் சம்பிரதாயங்கள்

சிறை எங்கும் அழுகுரல்கள்

பாதிக்குமேல் மன நோயாளியாய்

விடுதலையும் வெளிச்சமும் வேண்டுகிறார்கள்

யாருக்கேனும் கேட்கிறதா

விடுதலை கிடைத்து  ஓடின எழுபதாண்டுகள்

வல்லரசாக வேண்டுமாம்

ஓயாமல் நடக்கும் பஜனைக்குரல்

எதைத்தான் கேட்கவிடுகிறது எம்மை.

--

இன்றும் அன்றும்

 

 

இன்றும் அன்றும்

 

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில்

உறுதிமொழி எடுப்பது

காலை இறைவணக்கத்தோடு கட்டாயமாக

இப்போது உறுதிமொழி ஏற்பு

காணோம் எங்கும்

உறுதிமொழி எடுப்பானேன்

அதை பின் விடுவானேன்

அக்காடா என்று அதை விட்டுவிட்டவர்கள்

விபரம் தெரிந்தவர்கள்

சரக்கு விற்று க்காசு பார்த்தவர்கள்

சர்வகலாசாலைத்துவக்கி

கல்லா கட்டுகிறார்கள்

அரசுப்பள்ளியில் ஆரம்ப நிலை ஆசிரியர்களின்

அரைசம்பளம் கூட

பெறாத சுய நிதிக்கல்லூரி ஆசான்கள்

கோடி கோடியாய்

கல்விக்கொள்ளையர் முன்

தண்டனிட்டபடி

சொச்சமாய் த்தெரிந்த தேசியகீதத்தோடு

மொத்தாய் த்தெரியாத தமிழ்த்தாய் வாழ்த்தும்

பாடிக்கொண்டு கல்விக்கூடங்கள் தொடர்கின்றன

வல்லரசாகவேண்டும் தாய் நாடு

அகண்ட நாம பஜனை

எங்கும் நடக்கிறது

இடைவெளியே இல்லாமல்..

--------------------------

 

 

 

Friday, September 4, 2020

நடப்பு

 

 

 நடப்பு

 

திருப்பூர் சமீபம்

கண்டெயினரில் பயணித்த

கரன்சி நோட்டுக்கு

ஆயி அப்பனை

இன்னும்தான் தேடுகிறார்கள்

சாராயக்கடை முன்னே

வெற்று ச்சாகசம் பேசலாம்

வோட்டுக்கு வீங்கிப் பிழைப்பு

அன்றாடம் என்றானபின்

கையில் கம்பு

கை நிறைய காசு

கசமால சாதியை

அடகும் வைக்கவேண்டும்

லட்டு நகர் திருப்பதிக்கு

தேர்தலில் சீட்டுப்பெற

காவடி கட்டாயம் எடுத்தாகவேண்டும்

ஆகாயம் தொட்ட

நீதிமன்றம் தீர்ப்பு

என்னத்தைச்சொன்னால்தான் என்ன

வோட்டுக்கு அம்மணமாய் வாழும் வாழ்க்கை

அண்டை அசலூரார்

சொட்டுத்தண்ணீர் திறக்க

இறங்குவதே இல்லை மனம்

கையில் பகவத்கீதை பிடித்து

ஊர் வலம் தவறாமல் வருகிறார்கள்.

சாதிக்காரன் வோட்டும்

கோடி கோடியாய்க்காசும்

மடையர் முன்

மண்டியிட்டு நிற்கவும் தெரிந்திருந்தால்

மக்கள் மன்றங்களில்

மரக்கட்டையாய்

வாயையும் இன்னொன்றையும் பொத்தி அமரலாம்

நல்ல ஜோசியரைப்பாருங்கள் முதலில்

தங்கள் ஜாதகம்தான் எப்படியோ

வெள்ளைச்சட்டை  சில இஸ்திரி செய்து

பத்திரமாய் இருக்கட்டும்

நினைவில் வையுங்கள்.

.

-----------------------