Saturday, September 5, 2020

வல்லரசாகவேண்டும்

 வல்லரசாகவேண்டும் 

 

 

 நாடு விடுதலை பெற்று

ஆயின எழுபதாண்டுகள்

நீதி மன்றங்களில்

தேங்கி நிற்கும்

வழக்குகளின் எண்ணிக்கை

எத்தனை எத்தனை

கிட்டும் ஏதோ ஒரு நீதியைக்

காணாமலே கண்களை மூடியவர்கள்

எண்ணிலடங்கா

சிறைவாசிகள் பாதிக்குமேல்

ஏனிங்கு  வந்தோம்  தெரியாதவர்கள்

நீதியரசர் பதவிகள் காலியாகக்

கிடக்கின்றன ஏராளமாய்

நிரப்பிடவேண்டுமாம்

கண்கலங்கினார் நீதியரசர்

பணி ஓய்வு பெறும் நாளில்.

பாகிஸ்தானிலிருந்து பாரதம் வந்தார்

கலீல் கிஸ்டி

பேராசிரியர் கவிஞரவர்க் கைதாகி

பதினெட்டு ஆண்டுகள் சிறையில்

விடிந்தது ஒரு நாள்

அவர் நிரபராதி கண்டுபிடித்துவிட்டார்களே

விடுதலையும் ஆனார் விட்டு 

விடுங்கள் அவரை.

ஆயிரம் சங்கடங்கள்

ஆயிரம் சந்தேகங்கள்

ஆயிரம் சடங்குகள்

ஆயிரம் சம்பிரதாயங்கள்

சிறை எங்கும் அழுகுரல்கள்

பாதிக்குமேல் மன நோயாளியாய்

விடுதலையும் வெளிச்சமும் வேண்டுகிறார்கள்

யாருக்கேனும் கேட்கிறதா

விடுதலை கிடைத்து  ஓடின எழுபதாண்டுகள்

வல்லரசாக வேண்டுமாம்

ஓயாமல் நடக்கும் பஜனைக்குரல்

எதைத்தான் கேட்கவிடுகிறது எம்மை.

--

No comments:

Post a Comment