Monday, March 6, 2017

vellam3



சென்னையில் வெள்ளம்....3




'இது ரிசர்வேஷன் பொட்டி தெரியுமா தெரியாதா என்று  கூச்சலிட்டுக்கொண்டிருந்த
அவரை சட்டை செய்யாமலேயே வண்டியில் மக்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள்.என்  மனைவி மட்டும் ஒரு இருக்கை பார்த்து அமர்ந்துகொண்டாள் .பேத்தியை  அமர்ந்துகொண்ட  மனைவியிடம் ஒப்படைத்தேன் நானும் என் பையனும் நின்றுகொண்டேதான் இருந்தோ ம் .வண்டியில் எங்கோ ஒரு மூலையில் இடம் இல்லாமல் இல்லை.வண்டியில் ஏறிவிட்டார்களே தவிர யாருக்கும் உட்கார்ந்துகொள்ளப்  பிடிக்கவில்லை.மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதை ஒருமுறை பார்த்துக்கொண்டே ன்.வண்டியில் ஏறியவர்களை விரட்டிய முதியவர் தன் முகத்தைத்தூக்கிவைத்துக்கொண்டு இங்கும் அங்கும் விரைத்தபடி நடந்து கொண்டிருந்தார்.என்னோடு ஏறிக்கொண்ட இன்னொருவர் முதியவரிடம் பேச்சை ஆரம்பித்தார்.
'அய்யாவுக்கு எந்த ஊர் இப்ப எங்க போவுது'.
'பேச்ச மாத்தாதிங்க, இது ரிசர்வேஷன் கோச்சு இங்க நீங்க எப்பிடி வரலாம்'
'மழை கோட்டோ கொட்டுன்னு கொட்டுது.என்னா செய்யுறதுன்னு முழிக்கறம்.இந்த வண்டிதான் வந்துது.எங்களுக்கும் தெரியாதா ஏறுலாம் கூடாதுன்னு பெருசா சொல்ல வந்துட்டிங்க'
' வரட்டும் அந்த டி டியோ இல்ல யாரோ உங்களை என்னா பண்ணுறன்னு அப்ப பாருங்க'
எல்லோரும் அமைதி ஆயினர்.தாம்பரத்தைவிட்டு நகர்ந்தால் போதும் என்று ஆகிவிட்டது. வெளியில் எட்டிப்பார்த்தால் ஒரே வெள்ளக்காடாக இருந்தது.ஒன்றுமே புரியவில்லை. மாம்பலமாவது இந்த வண்டி செல்லுமா அல்லது இடையில் நின்றுவிடுமா அச்சம் தொண்டையைப்பிடித்தது.பேத்தி பாட்டியின் மடியில் கட்டை விரலை சப்பிக்கொண்டு கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருந்தாள்.மகனும் மருமகளும் ஏதோ முணுமுணு த்துக்கொண்டே வந்தார்கள்.ரயில் வண்டி தண்டவாளத்தில் போகிறதா தண்ணீரில் போகிறதா என்று அனைவரும் பேசிக்கொண்டார்கள்.
மின்சார ரயில்கள் எதுவும் ஓடவில்லை.நாங்கள் பயணிக்கும் ரயிலோடு சரி.பிறகு எந்த வண்டியும் நகரவில்லை.
நாங்கள் மாம்பலம் நிறுத்தத்தில் இறங்க இருப்பது எப்படியோ அறிந்து கொண்டுவிட்ட அந்த முதியவர் என்னிடம் வந்து நின்றுகொண்டார்.'இந்த வண்டி மாம்பலத்துல நிக்காது அது உங்களுக்கு த்தெரியுமா?' நான் என்ன பதில் சொல்வது என்று விழித்தேன்.மனம் கனத்துப்போய் இருந்தது.பசி வயிற்றை க்கிள்ளிக்கொண்டிருந்தது.'நின்றால் சரி நிற்காவிட்டால் எழும்பூர் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்வதுதான்'
'டிக்கட் மாம்பலம் வரைக்குந்தானே உங்ககிட்ட இருக்கு'
நான் அமைதியாக இருந்தேன்..'நீங்க உங்க வேலய பாருங்க.இந்த கவலயெல்லாம் உங்களுக்கு வேண்டாமே' சொல்லி முடித்தேன்.மாம்பலம் நிறுத்தம் வந்ததுஅந்த .வண்டியும்  நின்றது.நாங்கள் அனைவரும் இறங்கி பிளாட்பாரத்தில் நின்றோம்.பிளாட்பாரட்தில் கடல் போல் மக்கள் கூட்டம்.
 அந்த முதியவரை த்தேடினேன்.அவரைக்காணவில்லை/
.'எங்க அந்த பொல்லாத மனுஷன்' என்றான்  என் பையன்.
'கிறுக்கனைக்காணவில்லை' பதில் சொன்னேன்.
'வக்கீல் தொழில்  பாக்கிறவனா என்னன்னு தெரியல'
'இருக்கலாம்.ஆனா ஆளு இப்ப க்காணோ ம்'
'ரொம்ப வேகமா பேசுறாரு'
'சிலர் அப்படியே வாழ்ந்து முடிச்சுடுவாங்க'

                      இரும்பு ப் படிக்கட்டு எங்கே என்று தேடிக்கண்டுபிடித்தோம்.மேம்பாலம் அடைத்துக்கொண்டு மக்கள் சென்றுகொன்டிருந்தார்கள்.மழை விட்டபாடில்லை.ரெங்கனாதன் தெருவை எட்டிப்பார்த்தேன்.தெருவில் கால் முட்டிவரைக்கும் தண்ணீர் இருந்தது.ராமேஸ்வரம் சாலை முகப்பில் இருக்கும் தண்ணீரில் நடக்கவே முடியாது ஆக சுற்றிக்கொண்டுதான் அந்த கலா பிளாட்ஸ் சின்ன அண்ணன் குடியிருப்புக்குச்செல்லமுடியும் என்று சொன்னார்கள்.
 ;ஒரு ஆட்டோ பிடிங்கோ சுற்றிண்டு போயிடலாம்' என் மனைவி என்னிடம் மெதுவாகச்சொன்னாள்.ஓரு ஆட்டோ பிடித்து அதனுள் எங்களை ப்பொறுத்திக்கொண்டோம்.ஆட்டோ ஒரு படகு போல தண்ணீரில் சென்றுகொண்டிருந்தது.'இனி எந்த ரயிலும் கிடையாது.
'டிராக்கெல்லாம் தண்ணீ நிக்குதுன்னு சொல்றாங்க.மழை உடற மாதிரி இல்லே.இது எப்பிடி முடியுமோன்னு பயமா இருக்கு' ஆட்டோக்காரன் எங்களிடம் சொல்லிக்கொண்டான்.என்னோடு என் மனையாள் என் மகன் மருமகள் பேத்தி ஆக எல்லோரும் கலா பிளாட்ஸ் கண்டுபிடித்து ஒவ்வொருவராக பைய்ய  நடந்து அண்ணன் வீடு நோக்கி போயிக்கொண்டு இருந்தோம்.வாட்ச்மேன். கலா பிளாட்சின் வாயிலில் மணல் மூட்டைகளை அடுக்கி சரிசெய்துகொண்டு இருந்தான்
.'தெரு தண்ணீ உள்ள பூந்துடுமே அதுக்குத்தான்' அவன் சொல்லிக்கொண்டான்.'இங்கயும் தண்ணி வருமா என்ன' என் மனைவி அவனிடம் கேள்வி வைத்தாள்.'மழை ஓயாம பேஞ்சா என்ன ஆவும் சொல்லுங்க' அவன் பதில் சொன்னான்.என் மனதிற்கு அச்சமாக இருந்தது.அண்ணன் எங்கள் கூட்டம் பார்த்து ஏதேனும் சொல்லிவிடுவாரா என்றும்  கூட ஒரு அச்சம் இருக்கத்தான் செய்தது.'எல்லாரும்உள்ள  வாங்க.ஈர துணிய மாத்திகுங்க.வெந்நீர மட்டும் குடியுங்க.பச்சதண்ணீ வேணாம்.கொழந்தை பத்திரம். எப்பவும் ஒரு சொட்டர போட்டுவைங்க' அண்ணன் எங்களிடம் சொல்லி நிறுத்தினார்.மின்சாரம் இல்லை.தொட்டியில் தண்ணிர் இல்லை.பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் குடங்களில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தாள் அண்ணி.அண்ணன் மகள் வக்கீலுக்கு படிக்கும்பெண்தான் வீட்டில் அண்ணிக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள்... .