Wednesday, July 6, 2016

COM.GJ




தோழமைச்செல்வம் கோவி.ஜெயராமன் -எஸ்ஸார்சி

தொழிற்சங்க இயக்கம் என்றால் அது கடலூர் மாவட்டம். இன்றும் என்றும் தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஊழியர்களின் தொழிற்சங்க இயக்கத்தில் பிரதானமாக த்தன்பங்கை ஆற்றி ப்பெருமைகொள்வது கடலூர்.
தோழர் சிரில் என்னும் செஞ்சுடர் வாழ்ந்து வழிகாட்டிய தொழிற்சங்க இயக்கத்தை தன் ஆதாரச் சுருதியாகக்கொண்டது.
கோவி.ஜெயராமன் என்னும் சிறந்த கவிஞர் இங்குதான் கூர்மைமிகு தொழிற்சங்க இயக்கத்தில், தோழர் சிரிலின் குருகுலத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சிரில் ஆழ்ந்த தமிழ்ப்பற்றாளர், சிறந்த சிறுகதையாளர் நல்ல கவிஞ்ர் மனித நேயம் ஊறிய மார்க்சீயர்.
கோவி.ஜெயராமன் பண்ருட்டிக்காரர்.தொழிற்சங்கப்பணிக்காக கடலூர் வந்தவர். சீர்மிகு கவிஞர் சிறந்த கட்டுரையாளர்,நாத்திறம் கொண்ட மேடைப்பேச்ச்சுக்கு ச்சொந்தக்காரர்.வடலூர் வள்ளல் இராமலிங்கரின் நெறிக்கு உறவாளர்..பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் என்பது கருணை வள்ளலின் அன்புக கட்டளை. ஆகவேதான் பொதுவுடமை என்னும் செந்நெறி தோழர்கோவி.ஜெயராமனை சிக்கெனப்பிடித்தும் இருக்கலாம்.

கடலூர் மாவட்ட தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றம் ஜெயராமனின் முயற்சியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. கவிஞர்கள் க.பொ. இளம்வழுதி, வளவதுரையன், விழுப்புரம் பழமலய் என இலக்கியச்சான்றோர்கள் மன்றத்துக்கு ப்பெரு ஆதரவு தந்தார்கள். பெருமன்றம் ஒரு கவிதை அரங்கை நடத்தியது.சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஞானக்கூத்தன் கவியரங்கத்தலைமை.கடலூர் நகர மற்றும் சுற்றுப்புற கவிஞ்ர்கள் பா.சத்தியமோகன் உள்லிட்ட கவிஞர்கள் ஐம்பது பேருக்குமேல் கலந்துகொண்டனர்.கோவி.ஜெயராமனின் 'நண்டு' கவிதை மிகச்சிறந்த கவிதையென ஞானக்கூத்தன் கவிதையரங்கில் பாராட்டினார்.அனைத்துக்கவிதைகளையும் ஒரு தொகுப்பாக்கி' கவிதை மாலை' என பெருமன்றம் பின்னர் அதனை வெளியிட்டது.
'நண்டு' கவிதை எழுதிய ஜெயராமன் இப்படிப்பேசுவார்.
பசி வயிற்றுக்கு
பயிர்களை நறுக்கினால் தப்பாம்......
வரப்புக்களைத்துளைத்து
இல்லாதவன் பிரதேசத்தில்
ஈரம் ஊட்டினால் தவறா?
நண்டு எழுப்பும் வினாவோடு ஆழ்ந்த பொருள் சுமக்கும் வரிகள் இக்கவிதைக்கு வலுசேர்ப்பதைக்காணமுடியும்.
ஜீவா நூற்றாண்டு நிறைவு விழாவினை கடலூரில் வெகு சிறப்பாகக்கொண்டாடியது இலக்கியப்பெருமன்றம்.ஜூலை 8 ,2007 ல் நடை பெற்ற கவியரங்கில் இரா.காமராசு,க.எழிலேந்தி,த.பாலு,பி.கே.பெரியசாமி,ம.ரா.சிங்காரம்.வெ.நீலகண்டன் ஆகியோரோடு கோ.வி.ஜெயராமனும் அற்புதக்கவிதை தந்தார்.இந்த ஏழு பெருங்கவிதைகளையும் ஒரு தொகுப்பாக்கி கடலூர் பெருமன்றம் கவிதை மாலை இரண்டு என வெளியிட்டது. 'திசை எட்டும்' சசி தலைவராகவும்,வீ.லோகநாதன் துணைத்தலைவராகவும் இருந்து பெருமன்றம் செழித்துச் சீராய் செயல்பட அடிகோலினர்.கோவி.ஜெயராமன் பெருமன்றப்பொருளராக இருந்து செய்ல்பட்ட அருமைத்தோழர்.
இர்ர்.காமராசு தலைமையில் நடந்த அக்கவி அரங்கில் ஜெயராமன் 'வடலூரார் எம் உறவு' என்னும் பொருளில் கவிதை தந்தார். அந்தக்
கவிதையில் இருந்து வடலூர்ர் வள்ளலின் ஆன்ற அருள்தமிழ் உணர்வையும் கோவி. ஜெயராமனின் தமிழ் நெஞ்சத்தையும் நாம் அறியலாம்
தமிழ் பேச தமிழ் மண்ணில் வாழ
பிறப்பித்த ஆண்டவனுக்கோர்
நன்றி சொன்ன நாயகன் நீ
ஆதலால் நீர் எமக்கு உறவு.
அற்புதத் தமிழின் பெருமை அறியா மக்களை க்கண்டு நொந்து போனவன் எட்டயபுரத்துக்காரன் பாரதி.தமிழை அறிதல் மனித வாழ்வை அறிதல் என்பதே மெய். தமிழின் திருக்குறளும் திருவாசகமும் திரு மந்திரமும் படித்து இன்புறத் தமிழனாய்ப்பிறக்க வாய்க்கவேண்டும் என்பதுவே உண்மை.
வடலூர் கருணை வள்ளல் ராமலிங்கரின் சமூகக்கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜெயர்ரமன் வடலூர் குருகுலம் உயர் நிலைப்பள்ளியின் மாணாக்கர்.வடலூர் வள்ளலின் அடியார் தவத்திரு ஊரன் அடிகளுக்கு மிக நெருக்கமானவர்.'வள்ளலார் ஒரு சமூக ஞானி' ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிட்டவர்.வடலூரில் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார் நிறுவிய அப்பர் அநாதை ஏழை மாணவர் இல்லத்தில் தங்கிவள்லார் குருகுலம் உயர் நிலைப்பள்ளியில் படித்துப் பள்ளி முதல்வனாகத்தேர்ச்சி பெற்றவர்.
ஜெயராமன் ஒரு நல்ல கவிஞர்,ஆக தான் எழுதிய அழகுக்கவிதைகளை 'வெளிச்சப்புள்ளிகள்' என்னும் தலைப்பிலே ஒரு கவிதை நூலாகக்கொணர்ந்தவர். விழுப்புரம் நகரின் பெருமைமிகு கவிஞர் த.பழமலயின் அணிந்துரையோடு வெளிச்சப்புள்ளிகள் வெளிவந்தது.காலத்தை விடுதலை செய்யும் கவிதைகள் என அக்கவிதைகளை ப்பெருமையோடு பேசுகிறார் கவி பழமலய். சாதி அரசியல் பற்றி அங்கே ஒரு கவிதை இப்படிப்பேசுகிறது.
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாதி பலமான ஆயுதந்தான்
அது நெருப்பையும் மாசுபடுத்தும் வல்லமையுடையது
மார்க்சிய வெளிச்சத்திற்குள்ளேயே கூட
இருளை அடைக்க முயல்கிறது
தத்துவத்திற்குள் இருக்கும் மனிதாபிமானம்
அரசியலில் காணாமல் போனதால்
விடுதலைத்தியாகத்தைக்கூட
விலை பேசுகிறது சாதி.
படைப்பாளியின் அற்புதமான நிதர்சனப்பார்வை வாசகனுக்கும் கிட்டிவிடுகிறது
கடலூர் தொலை பேசி மாவட்டச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஒரு கணிசமான தொகையை தமிழ் வளர்ச்சி மற்றும் அதன் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள ஒரு அறக்கட்டளை நிறுவுவது என முடிவாகியது. பதினாறு ஆண்டுகளுக்கு மேலாக சிரில் நினைவு அறக்கட்டளை என்ற
அந்த அமைப்பு தொடர்ந்து 'தமிழ் விழா' என்னும் பெயரில் ஒரு பெரு நிகழ்ச்சியை கடலூரில் நடத்திவருகிறது.தொலைபேசி த்துறையி பணிபுரியும் ஊழியர்களின் செல்வங்களில் பத்து பன்னிரெண்டாம் வகுப்புகளில் தமிழில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு ச் சங்க வேறுபாடு எதுவுமின்றி ரொக்கபரிசுகள் வழங்குவது, மற்றும் தமிழ் அறிஞ்ர் ஒருவரை அழைத்து கௌரவிப்பது என்பன முடிவாகி அந்த நற்பணி இன்றுவரை சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது. கடலூரின் பல் வேறு தமிழ் அமைப்புக்கள் இந்த த்தமிழ் நிகழ்வில் நிறைவோடு பங்கேற்கின்றன. கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்து தமிழ்ச்சான்றோர்கள் அதனில் பங்கேற்று ச்சிறப்பிப்பது மரியாதைக்குரிய ஒரு நிகழ்வு. இந்த செவ்விய முடிவு நிகழ் சாத்தியமாக உழைத்திட்ட நல்ல உள்ளம் கோவி.ஜெயராமனது என்றால் மிகையாகாது.கடலூர் மாவட்டச்சங்கத்து தமிழ்ப்பணி போற்றுதலுக்குறியது.
கடலூர் தொலைபேசி ஊழியர்களின் பெருமை மிகு தலைவர் ரகு நாதன். அன்னாரின் பணி ஓய்வு விழா நிகழ்வு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. மரியாதைக்குரிய மார்க்சீயப்பெரியவர் தோழர் நல்லக்கண்ணு ரகு நாதனை அரங்க மேடையில் வாழ்த்திய வரலாற்று நிகழ்வு அது. இதனை ஒட்டி தோழர் ரகுவின் பணி ஓய்வு பாராட்டு விழா மலர் ஒன்று கடலூர் தோழர்களால் கொண்டு வரப்பட்டது.அந்த மலரின் சிறப்புக்குக்காரணமாக அமைந்தவர் ஜெயராமன். அவ்விழா மலரில் ஜெயராமன் தோழர் ரகு பற்றி இப்படிப்பேசுவார். விருட்சமாய்.. என்னும் தலைப்பிட்ட கட்டுரை அது.
'மத நல்லிணக்கம்,தேச ஒற்றுமை,சாதி ஒழிப்பு,விடுதலைப்பொன்விழா உலக அமைதி,நெல்சன் மண்டேலா விடுதலை இப்படி ஏதேனும் ஒரு செய்தியை முன்வைத்து கடந்த காலங்களில் மா நாடுகளை நடத்தியுள்ளோம்.சமூக உணர்வு தளத்துக்கு உறுப்பினர்களை அழைத்துச்செல்ல இவை பங்காற்றியுள்ளன.இதன் கர்த்தா தோழர் ரகு தான்.' இப்படித்தான் தெரிந்து கொண்டஉண்மைய ஓர்ந்து சொல்லும் பெரிய மனதுக்காரர் ஜெயராமன்.
மகளிர் தின விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடியது கடலூரின் வரலாறு. தோழியர் ராஜம் கிருஷ்ணன் தொடங்கி எத்தனையோ பெரியவர்கள் சிறப்பாகப்பங்கேற்றனர். நானும் நண்பர் ஜெயராமனும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் வந்தவர்களை ஊர் திரும்ப அனுப்பிவைக்கும் நிகழ்வுக்குச்சென்று வருவோம். தோழியர் ராஜம் கிருஷ்ணனோடும்,பதமாவதி விவேகானந்தனோடும், இலக்கியம் பேசிக்கொண்டிருந்த நிகழ்வுகள் நினைத்துப்பார்க்க இப்போதும் மனம் நெகிழ்வு கொள்கிறது. எழுத்தாளர் பொன்னீலனோடு மிக நெருக்கமான தோழர் ஜெயராமன்.
பட்டுக்கோட்டை ராமலிங்கம் அவர்களால் கொண்டுவரப்படும் இலக்கிய இதழ் 'இலக்கியச்சிறகு' வில் நிறைய கவிதைகளை எழுதியவர்.. இலக்கியச் சிறகின் முதல் இதழ் வெளியீட்டு நிகழ்வு வடலூர் வள்ளலின் சபை வளாகத்தில் நிகந்தது.கவிஞர் ஜெயராமன் அதனில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தவர்.
கடலூரில் ஒரு கவிதைப்பட்டரை அதனில் தமிழகம் முழுவ்திலிருந்து தொலைபேசித்துறையின் இலக்கிய படைப்பாளிகள் பங்குகொண்டு 'ஈழம் மலரும்' என்னும் தலைப்பில் கவிதை வாசித்தனர்.இந்தப்பெரு நிகழ்வு தமிழ் மாநில சங்கம் பொறுப்பேற்று நடத்தியது.கொவி.ஜெயராமனின் கடின உழைப்பு இந்நிகழ்வுக்கு பின்புலமாக இருந்ததைக்குறிப்பிடவேண்டும்.
கடலூர் தோழர்களிடையே விடுதலைப்புலிகளின் கவி காசி ஆனந்தனையும், அமரர் நூற்கடல் கோபாலய்யரையும் மேடையேற்றிப்பேசவைத்த சூத்திரம் தெரிந்தவர் ஜெயராமன். ஊதிய உயர்வு சரி,உள்ளம் உயர்தல் வேண்டும் என்பதறிந்தவர்கள் என்றும் இந்தக் கடலூர் தோழர்கள்.
ஒன்றா இரண்டா எத்தனையோ மனம் நிறைந்த நிகழ்வுகள் இப்படி இப்படி. கடலூர் அருகே சாத்தங்குப்பம் அனாதை ஆசிரமத்துக்கு கடலூர் தோழர்களை அழைத்துச்சென்று அன்புப்பணியில் பங்கு கொள்ள வைத்தவர் ஜெயராமன்.
கடலூரிலிருந்து 'நெய்தல்' என்னும் இலக்கிய இதழைத்தொடங்க ஜெயராமனும் ஒரு சமயம் முடிவுசெய்திருந்தோம்.அமரர் சிரிலின் அனைத்துப்படைப்புக்களையும் ஒரு தொகுப்பாக வெளியிடவும் விரும்பினோம்.
இலக்கியப்பெருமன்ற மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடந்த சமயம் ஜெயராமன் கடலூர் சசி ஆகியோர் பங்கேற்றனர். பெருமன்ற மாநிலச்செயலரான தனுஷ்கோடி ராமசாமி கடலூரில் ஜெயகாந்தன் ஞானபீடம் பெற்றகாலை சிறப்பு நிகழ்ச்சியில் பங்குகொண்டார்.
ஒரு தருணத்தில் கடலூரில் தொலைபேசி தொழிற்சங்க (என்.ஃப் டி. இ) சம்மேளனக்கவுன்சில் கூடியது. தொலைபேசி ஊழியர்களின் மூன்றாம் பிரிவும் நான்காம் பிரிவும் இணைந்து ஐக்கியமாயின.ஜெயராமனின் பொறுப்புக்கள் தொழிற்சங்க இயக்கத்தில் கூடிப்போனது. தொழிற்சங்க இயக்கம் இலக்கிய தளத்தை விஞ்சி ஜெயராமனை ஆட்கொண்டது. அகில இந்திய பொறுப்புக்கள் தொழிற்சங்க அரங்கில் தொடர்ந்து அவருக்குக்கொடுக்கப்பட்டன. கடமை பெரிது. இன்றளவும்அவருக்குள்ளாக ஒரு கவிதைக்காரன் இருப்பது மட்டும் மெய்.
அன்பர் பணிக்கென்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்பதுவே நிதரிசனம்.
-----------------------------------------------------------------------------------------------------------------







.




.