Tuesday, December 13, 2022

தாயிற்சிறந்தவை மரங்களே

 

 

 

 தாயிற்சிறந்தவை  மரங்களே               

 

நமது தேசத்தைப்பொறுத்தவரை மரங்கள் என்றும் உயர்வானவை.  அவை இயல்பாய்ப் பெற்ற  நற்குணங்கள் கருதி, மரங்களைக் கடவுளாய்ப் பாவித்தத் தேசம் இது. பெருங்கடவுள் சிவபெருமான் ஆல் அமர் செல்வன் என்றே போற் றப்படுகிறார். ஆலமரங்கள் நமது மரபில் பல விழுமியங்களுக்குச் சொந்தமானவை. அது நமது தேசிய விருட்சமும் கூட.  தமிழ்மறை திருக்குறள் மருந்து மரத்தையும், கனி ஈனும் மரத்தையும் மனிதர்களில் சான்றாண்மை மிக்கவர்களோடு ஒரே நேர்க்கோட்டில் வைத்துப்பேசுகிறது.

மருந்தாகித்தப்பா மரத்தற்றாற் செல்வம்

பெருந்தகையான் கண் படின்.   - குறள் 217

பயன் மரம் உள்ளூர் பழுத்தற்றாற் செல்வம்

நயனுடையான் கண் படின்.        -குறள் 216

ஆக  நம்மொடு   வாழும்   மரங்கள்  மனித இனத்திற்குச்செல்வாதாரங்கள்.ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு மரத்தைத்தெரிந்து தல விருட்சமாய்ப்போற்றி ஆராதிக்கும்  வாழ்வியலே, நமக்குத் தொல்மரபு.

மரங்களின் இன்றியமையாமை

மரங்கள் கரியமில வாயுவைப்  பச்சை இலைகளால் கிரகித்துக் கதிர் ஒளியில் பச்சையம் தயாரித்துச் சீவிக்கின்றன. டிரான்ஸ்பிரேஷன் என்கிற இந்த இரசாயன நிகழ்வின்போது உயிர்வளி மரங்களால் வெளியேற்றப்படுகிறது.  மாறாக  புவி வாழ் விலங்குகள் மனிதனையும் சேர்த்துத்தான்  உயிர்வளியை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. இது சுவாசித்தல்  எனும்  உயிர் இருத்தலின் இன்றியமையா நிகழ்வாகிறது.  உயிர் வளியை நமக்குக்கொடை ஆக்குவன விருட்சங்களே.  மானுட இருப்புக்கு உயிர்வளி எத்தனை முக்கியமானது என்பதனை இவண்  சிந்திக்கலாம்.  

2004 டிசம்பர் மாதம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை விழுங்கிய  சுனாமி என்னும் ஆழிப்பேரலை இந்தோனேஷியாவில் தொடங்கி இந்தியக்கிழக்குக் கடற்கரைக்குயைத் தாக்கியது. இந்த இயற்கைச் சீற்றத்தின் போது  அலையாற்றிக்காடுகளின் முக்கியத்தேவை குறித்து  உணரத்தொடங்கினோம். சுந்தரவனக்காடுகளின் பராமரிப்பும் கடலை ஒட்டிய  சதுப்பு நிலக்காடுகளின் இருப்பும் ஆழிப்பேரலைகள்  நிலப்பரப்பைத்தைத் தாக்கி ஏற்படுத்தும் அழிவுகளிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுகின்றன. வளி மண்டலத்தே வியாபித்துள்ள தூசு மாசுகளை மரங்கள்  ஈர்த்து  நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மையாக வைத்திருக்கப் பேருதவி புரிகின்றன. வளி மண்டலத்தே அலையும்  மாசுகளை விருட்சத்தின்   இலைகள்  ஈர்த்து தாங்கித்தம்மோடு வைத்துக்கொள்கின்றன. தொடர்ந்து பொழியும் மழை நீர் அவைகளை ஆற்றின் வழிச் சுமந்துக் கடலில் சேர்த்து முடிக்கிறது.

மரங்கள் வெளியேற்றும் நீர் ஆவியாகி காற்றுமண்டலத்தைச் சென்றடைகிறது. இந்நிகழ்வை ஆங்கிலத்தில்  வேபரிசஷன்  என்றழைக்கிறோம். இது புவியின் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துகிறது. துருவங்களில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டத்தை உயர்த்துவது தடுக்கப்படுகிறது. புவி மண்டலம் வெப்பம் கூடுவது புவியின் உயிர் இருப்பைக்கேள்விக் குறியாக்கும் பெருவிஷயமாகும். கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் சென்னை மும்பை விசாகப்பட்டினம் போன்ற பெரு நகரங்கள் கடல் மட்டம் உயர்வதால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது என்று  புவியியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே  இருக்கிறார்கள்.

 சமூகப் பொறுப்பின்மை

சமீபமாய்த்தமிழகத்தில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே   பனை மரங்கள் நூற்றுக்கணக்கில் வெட்டப்பட்ட நிகழ்வொன்று அரங்கேறியது.  நூற்றாண்டு வாழ்ந்த புளிய மரங்கள்  அறுபட்டன.  நான்கு வழிச்சாலை அமைத்தல் என்பதற்காக  மரங்கள் வெட்டப்பட்டனவாம். ஊர்  மக்கள் போராட்டத்தில் இறங்கிய பிறகே அரசு  விழித்துக்கொண்டு வெட்டப்பட்ட மரங்களுக்காக மாற்று மரங்கள் நடப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஒரு கிராம நிர்வாக அதிகாரிக்குக்கூடத்  தெரியாமல்   சாலையில் மரங்கள் வெட்டுதல் பொறுப்பற்று நிகழ்ந்திருக்குமா?   அறிவியல் பார்வையும்   போதிய கவனமும்  தேசபக்தியும் இல்லாப் பணிக்கலாசாரமே  மரங்கள் வெட்டுதலுக்குக் காரணியாய் அமைந்து நிற்கிறது.

பெங்களூருவுக்கும்  சென்னைக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையில் பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதைக் காணலாம். கேபிள் கற்றைகளைத் தரைவழியே கொண்டு செல்வோர் பனை மரங்களை வெட்டிவீழ்த்திச் செல்வதையும் பார்க்க முடிகிறது. ஐம்பதாண்டு முடித்த  பனைமரங்கள்  அடியோடு அறுபட்டுத் தரையில் கிடப்பது சோகத்தைக் கொணர்வதாகும். மழை வெள்ளக்காலங்களில் பனை மரங்களோ மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்  மாபெரும் புனிதச்செயலை ஆற்றி வருபவை.

ஒரு காலத்தில் மரங்கள் விறகுக்காக வெட்டப்படுவது சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.பிறகு விறகுக்கு என பிரத்யேகக் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டன. அவை தரை ஈரத்தை வெகுவாய்  உறிஞ்சி ஆவியாக்கி மண்ணை ஈரப்பதமற்ற சக்கையாய் மாற்றின. இன்று அந்த சீமைக்கருவேல மரங்கள் வளர்ப்பது தடுக்கப்பட்டிருக்கிறது.  எஞ்சி இருப்பவை  முற்றாய் அழிக்கப்படுகின்றன. அம்மரங்கள் புவியை வளப்பமற்றதாய் மாற்றும் போக்குத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மரங்களைக்காப்பதில்  நீதி மன்றங்களின் கூடுதல்  அக்கறையும் எச்சரிக்கையும் இவண் மரங்களைச்சீராய் நிர்வகிக்க  உதவியிருக்கிறது.

கணினி உலகம் வந்தபிறகு காகித உபயோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிடல் டிரான்ஸாக்‌ஷன் புழக்கத்துக்கு வந்த பிறகு காகிதத்தின் தேவை குறைந்துள்ளது.பணப்பரிமாற்றமே டிஜிடல் மயமானதால் காகிதப்பணத்தின் தேவை சுருங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கணினி  ஆக்கிரமிப்பின் விளைவால்  அங்கேயும் காகிதங்களின் தேவை அருகிப்போனது. காகிதக்கூழிலிருந்து காகிதம்  தயாரிக்கப்படுவது  குறைந்தது.  இதன் விளைவாக மரங்கள் காகிதக்கூழுக்காக வெட்டப்படுவதும் கணிசமாகக் வெகுவாகக் குறைந்துள்ளது.

பாதாசாரிகள்

 கடந்த பல்லாண்டுகளாக நடைபாதை மனிதர்கள் என்கிற விஷயம் கவனிப்பார் அற்றுப்போனது. காலம் நம்மை வேறு தளத்திற்கு நகர்த்திவிட்டிருக்கிறது. சாலையில் நடந்து செல்வோரின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. சாலையில் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

சாலையில் பாதாசாரிகளுக்கென்று தனித்தடத்தின் உபயோகம்  இன்று அருகி வருகிறது. நடைப்பயிற்சிக்கெனத் தனிப்பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. மொட்டைமாடியும் நடை இயந்திரமும்  நடைப்பயிற்சிக்குப் பிரத்யேக புழங்கு பொருளாயின.

இந்திய நாட்டின் தலைநகர் புதுடில்லி காற்று மாசின் கிடுக்கிப்பிடியில் அகப்பட்டு திக்குமுக்காடுகிறது. வாகனங்களின் அபரிமித ஆதிக்கம். அவை வெளியிடும்  புகை மண்டலத்தால் நாட்டின் தலை நகர்  வாழத்தகுதியற்ற நகரமாகியது. டில்லியில் வாகனக் கட்டுப்பாடுகள் கெடுபிடிகள் அமலுக்கு வந்தன. டில்லியைத்தொடர்ந்து பெங்களூரு தொழிற்கூடப்புகை நச்சால்  காற்று மாசு கூடிய நகரமாகியிருக்கிறது.  ஹரியானா மாநில விவசாயிகளின் அறுவடை முடிந்த   அடிக்கட்டை மொத்தமாய் எரிப்பும்  அம்மாநிலத்தில் காற்று மாசு  அதிகரிக்க ஒரு காரணி என்பதறிவோம்.

 மாமன்னர் அசோகர் சாலைகளில் நிழல் தரும் மரங்களை நட்டுப் பராமரித்ததை வரலாற்றில் நாம் படித்திருப்போம். பிரிட்டீஷார் சாலை ஓரங்களில் புளிய மரங்களை நட்டு வளர்த்துவிட்டிருப்பதை இன்றும் காண்கிறோம். பயன் தரு  சாலையோர மரங்களால் அந்த அந்த ஊர் மக்கள் பலன் அடைந்தார்கள்.  மழைக்காலங்களில் சாலையின் மண் அரிப்பை அந்தப் புளிய மரங்கள் தடுத்து நிறுத்தின. பாதாசாரிகளுக்கு அவை நிழல் தந்து உதவியது என்பதனைக் குறிப்பிடுவது அவசியம்.

தென்னந்தோப்புகளும் மாந்தோப்புகளும் புளியந்தோப்புகளும் வாழைத்தோட்டங்களும்   காய்கறி கனி மலர் தோட்டங்களும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உதவும் கரங்களாய்  நிற்கின்றன.

தேயிலைச்செடிகளும் காபிச்செடிகளும் ரப்பர் மரங்களும்  மிளகும் ஏலமும்  காஷ்மீரத்துக் குங்குமப்பூவும் நாட்டின் முக்கியமான தாவரச்செல்வங்கள். மீனவர்களின்  வாழ்வாதாரமான கடல்பயணத்திற்குத் துணை நிற்கும் படகுகள் கட்டுமரங்கள்  இவைகளை விருட்சங்கள்  கொண்டே வடிவமைக்கிறோம்.

மாசுகளில் ஒலி மாசுபற்றிக் குறிப்பிட வேண்டும். பட்டாசு வெடிப்பு மானுட செவித் திறனை மந்தமாக்கும்  ஒலி மாசு, மற்றும் காற்று மாசு. ஒலி மாசினைக் கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள் பெரு ஒலி  இடை  தடுப்பாய் நின்று மனித குலத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

’Woods are lovely dark and deep’  என்பார் கவிஞர் ராபெர்ட் ஃப்ராஸ்ட். மனித மன இறுக்கத்தை இறக்கிவைக்க அவை சுமை தாங்கியாய் நின்று மனித சமுதாயத்தைப் பேணிக்காக்கின்றன. காடுகளிடை நடை பயில்வது இரத்த அழுத்தம் சர்க்கரை நோய்  என்னும் குறைபாடு  குறையக்காரணிகளாகின்றன.

மரங்களின் கொடை

 மரங்களில் அரச மரம் உயிர் வளியை அதிகம் வெளிவிடும் மரமாக  அறியப்பட்டு இருக்கிறது. சாதாரணமாக ஒரு மரம் ஒரு ஆண்டிற்கு 280 பவுண்டு உயிர்வளியை உற்பத்தி செய்து நமக்கு வழங்குகிறது. நான்கு நபர்கள் உள்ள குடும்பத்திற்குத்தேவையான உயிர்வளியை இரண்டு வளர்ந்த மரங்களே அளித்து உதவுகின்றன.

இன்றும் அரசமரமும் விநாயகரும் இல்லாத கிராமங்களைப் பார்த்தல் அரிது. அவ்வரச மரத்தோடு வேப்பமரம் இணைந்து வளர்க்கப்படுதலும் காண்கிறோம்.

புத்தர் ஞானம் பெற்றது  போதிமரத்திற்குக்கீழாக என்று வரலாறு பேசும்.அதன் கிளை ஒன்று  பெளத்தம் பரவ இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டு அசோக மன்னர் வம்சத்தினரால் அனுராதபுரத்தில்  நடப்பட்டதுவும் வரலாறு. மரங்களைப் புனிதச்சின்னங்களாக வைத்து வணங்கிய புராதன பாரம்பரியம் நமக்குண்டு.

 மரங்களின் கொடையான மா பலா வாழை எனும் முக்கனிகள் தமிழ் மண்ணில் பிரதானமானவை. அவை முக்கனிகள் என போற்றப்படுகின்றன.

தொன்மங்கள்

 கிடைத்தற்கரிய நெல்லிக்கனி ஒன்றை   கவி அவ்வைக்கு   சிற்றரசன் அதியமான் வழங்கிய வரலாறு நாம் அறிந்த ஒன்று. மானுட  வாழ்நாளை க்கூட்டும் நெல்லிக்கனியைத் தமிழ்க்கவி உட்கொள்வது தமிழுக்குச்செய்யும் ஒரு உபகாரமாய் அவ்வரசர் கருதியது பெருமை மிகு  வரலாறு.

முல்லைக்கொடி படறத்தவித்தபோது தான் ஏறி வந்த அரச ரதத்தை வழங்கினான் வள்ளல் பாரி.  ஆக முல்லைக்குத்தேர் ஈந்த பாரி என்று புகழப்படுகிறன்.

தமிழ் நாட்டு மிளகும் ஏலமும்   பிற வாசனைத்திரவியங்களும் அரபிக்கடலில் பயணித்துப் பிற நாடுகளுக்கு  ஏற்றுமதியாகிச் சென்றதை நாம் படித்திருப்போம்.  பண்டைய பொருளாதாரம் செழிக்கத் தமிழர்க்கு அவை பேருதவியாய் இருந்தன.

எட்டுத்தொகை நூல்களில்  நற்றிணையில் ஒரு பாடல். வீட்டுத்தோட்டத்திலே ஒரு புன்னை  விருட்சம். அதன் கீழ் ஒரு  தலைமகன் தலைவியை காதலிக்கச்சீண்டுகிறான். தலைவித் தயங்கிச் சொல்கிறாள்.’  எனது தாய் இம்மரத்தை  தமக்கை   எனக்காட்டி  எனக்கு சோறு ஊட்டினாள். அப்போது யான் சிறு  குழவி. ஆகவே இம் மரம் எனக்குச் சோதரி. அவள் முன்னே  நகைத்து விளையாடுதல் கூடாது.  நமது பண்பாடு இது’ என்கிறாள். ஆக விருட்சங்களைத் தம்  உடன் பிறப்பாய்ப் பாவித்தது  நம் சங்க கால மரபு.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்தகாழ் முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று

அன்னை கூறினள் பன்னையது சிறப்பே

அம்ம! நாணுதும் நும்மொடு நகையே    -நற்றிணை 177

 

கேரளத்து மக்கள்  தென்னையை கல்பக விருட்சமாகக்கருதுகிறார்கள். தென்னம் பூ அவர்கட்கு தெய்வ சாந்நித்யம் கொண்ட பொருளாகும்.. திருச்செந்தூர் தமிழ்க்கடவுள் முருகன் மாமரமாக நின்ற அசுரனை இறுதியில்  சம்ஹாரம் செய்தார்.  அம் மாமரம் இரண்டாகப்பிளக்க ஒன்று  சேவலாகவும் மற்றது  மயிலாகவும் மாறிற்று.  மயிலை த்தனது வாகனமாகவும்  சேவலைக்கொடியாகவும் கொண்டார் முருகப்பெருமான்.  ஆக மரங்கள் தமிழ்  மானுட  வாழ்வோடு பின்னிப்பிணைந்தவை.

பறவைகள் மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன. பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து அவை இன விருத்தி செய்கின்றன. வேடந்தாங்கல் ஏரியைச்சுற்றி நிற்கும் மரங்கள்  பன்னாட்டுப்பறவைகளின் தங்குமிடங்களாகின்றன. இவை தொடர்ந்து நடைபெறுதல்  புவியில் நாம்  மனிதர்களாக வாழ்வதற்கு ஆதாரமாகிறது. மனிதர்க்கு மட்டுமா உணவு வழங்குகிறது மரங்கள். பிற மிருகங்கட்கும் அவை உணவாகின்றன. மரத்தின் உணவின்றி ஒரு நாள் கூட  யானையால் உயிர் பிழைத்திருக்கமுடியாது.ஒட்டகச்சிவிங்கிகளும் மானினமும்  பிற விலங்குகளும் மரங்களை நம்பியே வாழ்கின்றன. பறவைகட்கு அவை இன்பக்குடில். மனித வாழ்வுக்கு  மகத்துவம் சேர்ப்பவை மரங்களே.

’காற்று மரங்களிட்டைக்காட்டும் இசைகளிலும்’   என்பார் குயிற்பாட்டில் மகாகவி.

 

முடிவுரை

பூவுல நண்பர்களின் குழாம் கூடிக்கொண்டு வருகிறது. உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.  உயிரினம் ஒன்றன் வாழ்வியல் மற்றதன் வாழ்வியலுக்கு ஆதாரமாகிறது.மரங்களை   நட்டு நீர் ஊற்றிப் பராமரிப்பவன் அடுத்தவரை நேசிக்கிறான்.தன்னையும் நேசிக்கிறான்.

ஆலம் விழுதுகள்தாம்   உயிரினங்கட்கு ஆனந்த ஊஞ்சல்.

-----------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

Friday, November 18, 2022

விழுதுகள்

 

 

 

விழுதுகள்                                                  

வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய  வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும்  இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன  மாமா எப்போதோ அந்த  பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று. ஒரேபிள்ளை. அவனும் எங்கோ வெகு தூரத்தில். பல  ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளான்.திரைகடல் ஓடித் திரவியம் தேடும் கூட்டத்தில் அவனும் ஒருவன். எப்போதேனும் இந்தப்பக்கம் வருவான். ஊர்ச் சுற்றிச் சுற்றி எல்லாம் பார்த்துவிட்டுப் புறப்படுவான். மாமிக்கு எது  எல்லாம் வேண்டுமோ அதுகள் செய்து கொடுப்பான். மாமிக்குக்காசு பணத்திற்குக் கஷ்டம் ஏதுமில்லை. குடும்ப ஓய்வூதியம் வருகிறது. அது போதும். பையனும் அவ்வப்போது  தேவையானதை அனுப்பியே வைக்கிறான்.

ஏன்தான்  அவன் திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இன்னும் இருக்கிறானோ  மாமி  விசாரப்படுவாள். மாமி விசாரப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. வசந்தி மாமி தன் தங்கையின் வீட்டில் தங்கியிருக்கிறாள். குருபுரத்துக்கு அருகில் தங்கையின் வீடு   அதுவும்  இந்த வெண்காட்டில்தான்  இருக்கிறது. வெண்காடு கோவில் நிரவாகத்துக்கு ஒரு பெரிய  பள்ளி. அதனில் மாமியின் தங்கைக்கு  இசை ஆசிரியை உத்யோகம்.  யார் இப்போது பள்ளியில்  பாடங்கள் படித்துக்கொண்டே இசையை எல்லாம் கற்றுக்கொள்கிறார்கள். மதிப்பெண்கள்தானே வாழ்க்கை. பள்ளி நிர்வாகங்கள் இசை ஆசிரியருக்கு, ஓவிய ஆசிரியருக்கு  என்று  வேறு ஆயிரம் வேலைகள் வைத்திருக்கும். இசைப் பற்றி பள்ளி நிர்வாகிகளுக்கு   அக்கறை  புதிதாக  என்ன வந்துவிடப்போகிறது.

 மாதம் ஒரு நடை  வசந்தி மாமி குருபுரம் அக்கிரகாரம் வருவாள்.  குருபுரம் மாமி வீட்டில் காவலுக்கு  என்று  ஒரு ஆசாமி. அவன் இரவில் படுக்க ஏற்பாடு ஆகியிருந்தது.. அந்த ஆசாமிக்கு மாத சம்பளம். அதனைக்கொடுத்துவிட்டு தன் வீட்டருகே இருக்கும் சண்டோத் சண்ட விநாயகரைப்பார்த்து  மாமி ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான்   வழக்கமாய்  அந்த வெண்காடு  திரும்புவாள்.  மாமிக்கு வாடிக்கையாய் வருபவன் ஒரு ஆட்டோக்காரன். அவன் வசந்தி மாமியை பத்திரமாய்க்  குருபுரம் அழைத்துப்போய்  வருவான்.

 வசந்திமாமி தன்  குருபுரம் வீட்டில் வேலை  எதாவது இருந்தால் பார்ப்பாள். ஆட்டோக்காரன் குருபுரம்  மாமி வீட்டின் தோட்டத்தில் விளைந்த எலுமிச்சம்பழம்  தென்னை மரங்களிருந்து  கீழே விழுந்து கிடக்கும்  நெற்றுத்தேங்காய்கள், வாழைக்காய் வாழை இலை கறி வேப்பிலை பெரண்டை இன்னுமேதும் இருந்தாலும் சேகரித்து  ஆட்டோவில் எடுத்து வைப்பான். இதில் பாதி அவனுக்கு வந்துவிடும்.

 ‘யார் இது புதுசா ரெண்டுபேரு.’

ஆணு பொண்ணும் வயசானவங்கதான் இருந்தாலும்  வசந்திமாமி மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

‘அம்மா நாங்க இதே தெருவுதான். உங்களுக்கு எங்கள தெரியாது. பழக்கமில்லில்ல. அவ்வளவுதான்  கிழவன்   சொன்னான்.

‘ நா ஏற்பாடு பண்ணுன ஆளு  ராத்திரில காவலுக்கு இங்க  படுத்துக்குல’

‘நாலு நாளா நாங்கதான் படுத்துக்கறம். அவரு அவுரு வீட்டுலயேதான் படுத்து இருக்காரு.’

‘ அதுதான் ஏன்னு கேக்குறன்’ என்றாள் வசந்தி மாமி.

கிழவி ஆரம்பித்தாள்.

‘ இந்த அக்கிரகாரத்து கடைசி வீடு எங்க வீடு. கூரை வீடு.  எம்மொவனுக்கு  சமீபமா கல்யாணம் கட்டுனம். நாங்க கெழவன் கெழவி ரெண்டு பேரும்  எங்க பழைய   கூரை வீட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன சாளயா போட்டுகிட்டு தனியாதான்  குடி இருந்தம். எம்மொவனுக்கும் என்ன கவருமெண்டு வேலயா. கூலி வேலக்கி  அங்கங்க போவான் வருவான். அவனும் அவன் பொண்டாட்டியும்  புதுசா கல்யாணம் கட்டிகிட்டவங்க ஆக நாம தனியா  இருந்துதுருவம்னுட்டு அந்த கூர கொட்டாயிலதான் குடி இருந்தம்.  ஊர்ல  நாலு நாளா நல்ல மழயாச்சா.  இந்த மழ வெங்காட்டுலயும் பெஞ்சி இருக்கும்ல. பேஞ்ச  மழத் தண்ணி வெள்ளமாயி  தெருவுல ஓடி  எங்க சாள வூட்டுல பூந்துட்டுது. வீடு பூரா சேறும் சகதியுமா போச்சி. எம்மவன்  இருக்குற வூட்டுல போய்  கட்டுன துணியோட மொடங்கிகதான்  ரவ எடம் கேட்டம். சரி படுத்துகன்னு  மவனும் மருமவளும் சொன்னாங்க. நாங்க ரெண்டு பேரும்  அந்த வூட்டுலயே  அண்ணிக்கி ராத்திரி மொடங்கிகினம். ராவுல இந்த கெழவரு நாலு தரம் கதவ தொறந்துகிட்டு ஒண்ணுக்கு இருக்குணும்னு  போயிட்டு  போயிட்டு வந்தாரு. எம்  மருமொவ  இப்பிடி ஆரம்பிச்சாளே பாக்குணும்.. ‘ ரா முச்சூடும்  பெரிசு லொட்டு லொட்டுன்னு  தெருக்கதவு தொறக்குது, மூடுது. இது எல்லாம் என்னா ஈனத்தனமான  வேல கெழவருக்கு.  ராவுல  செத்த  தூங்க முடியுதா மனுசாளால. பெரிய இமுசை. எப்பிடி மாமி  இந்தக்கத தெனம் நடக்குறது தானா, இது பெரிய  புடுங்கலுதான்  எம்மா’ இப்பிடி எங்கிட்ட  ரப்பா   ராங்கியா நீட்டிப் பேசுனா. கெழவர்ன்னா ராத்திரில ரெண்டு தரம் மூணு தரம் எழுஞ்சி போயி வரமாட்டாங்களா அதுக்குன்னு இப்பிடி மரிமவ  பேசுனா நெயாயமா. இனிமேலுக்கு   மவன் வூட்டுல நாம  படுக்கறது தப்புன்னூ முடிவு பண்ணினேன். கெழவன இட்டுகினு  ரவ  எடம் தேடிகிட்டே உங்க வூட்டுக்கு வந்தம். உங்க வூட்ட  அந்தக் காவலுக்கு படுத்துகிறவருகிட்ட கேட்டன். அவுருதான் நா எம்பொண்டாட்டி புள்ளிவள வுட்டுல வுட்டு புட்டு நாலு காசு கெடக்குமே, அது கெடச்சா  அந்த புள்ளிவுளுக்கு  ஒரு செலவுக்கு ஆவுமேன்னு  இந்த மாமி வூட்டயே மொடங்கிகிறேன்னு சொன்னாரு. நாங்க மாமி வூட்ட பாத்துகறம் அந்த மாமி  மாசா மாசம் குடுக்குற  சம்பள காச நீயே வாங்கிக. எங்களுக்கு  காசு வேணாம். நாங்க   இந்த பெரிய திண்ணையில ராவுல ரவ மொடங்கிகறம்.  மாமி வூட்டயும் நல்லா பாத்துகறம்னுட்டு சொன்னன்’

‘நீங்க ரெண்டு பேரும் இப்ப   என் வீட்டுக்கு காவலு. அந்த  ஆசாமி  நா காவலுக்குன்னு   என் வூட்டுக்கு வச்ச ஆளு  அவுரு   வூட்டுல  பொண்டாட்டி புள்ளிங்களோட  இருக்காரு அதான் நீ சொல்ற சேதி’

‘அதான் மாமி வேற ஒண்ணும் இல்ல’

கிழவனும் கிழவியும்  வசந்தி மாமியை வணங்கிக்கொண்டே நின்றார்கள்.

‘ வேணாம் நீங்க  வயசுல பெரியவங்க  இப்பிடி எல்லாம் செய்யவேணாம்’ மாமி அழுத்தமாய்ச்சொன்னாள்.

வேக வேக மாக நடந்து  தூரத்தில் வந்துகொண்டிருந்தான் வசந்தி மாமி தன் வீட்டுக்குக்காவலுக்கு ஏற்பாடு செய்த  அதே ஆசாமி.

‘மாமி கும்புடறன்’

‘ என்ன காவல்காரரே எங்க போயிட்டீரு’

‘ ஒரு தப்பு  உங்க கையில இப்பவே  சொல்லுணும். ஒரு நா ராவுல இந்த பெரியவங்க படுத்துக ரவ எடம் வேனும்னாங்க.  அவுங்க இருந்த  குச்சி  வூடு  பெருசா பேஞ்ச  இந்த மழல்ல மாட்டிகினு சேரும் சகதியுமா  நாறி புடுச்சி. இவுங்க  இந்த ஊருதான்.  இதே தெருவுதான்.  நல்ல மனுஷாளு.  வயசுங்கறது  ஆருக்கும் ஆவும்தான.  இதே தெருவு கடைசி கூர வூடு அவுங்களது. பெத்த மவன் மருமவ பேசுன பேச்சி பொறுக்கமாட்டாத தான் என்கிட்ட வந்து  என் கைய புடிச்சிகினு  ரொம்ப  கேட்டுகினாங்க.  உடம் பொறப்பா நினச்சி ஒதவுன்னாங்க. எம்மனசு கேக்குல. சரின்னுட்டேன். அது தப்புதான். அதனபிரசங்கி நா.  ஒங்க கையில  இந்த சேதிய ஒடனே சொல்லுணும்னு பாத்தன். முடியல. இந்த மழலு வேற ஒயல’

‘இப்ப எப்பிடி  வீட்டுக்கு வந்தீரு நா வந்தது உனக்கு தெரியுமா’

மாமி பெரியவரிடம் கேட்டாள்.

‘’நல்லா கேட்டிங்க. இந்த பெரியவங்களோட  அதே மருமவ ஓட்டமும் நடையுமா எங்க வூட்டுக்கு வந்துது. மாமி வந்துருக்காங்க  சட்டுன்னு வான்னு சொல்லிச்சி’

‘நல்ல விஷயம்தானே இது’ மாமி சொல்லிக்  கொண்டாள்.

’அப்பிடி  போவுலயே  சேதி.  மாமி  குடுக்குற  வூட்டுக்காவல் சம்பளத்த உங்கிட்டல்ல அவுங்க தரணும். அத எம் மாமியாரும் மாமனாரும்  உன்ன ஏமாத்தி வாங்கிகிட்டா என்னா செய்யிறது. அது பெசகுல்லன்னுட்டு அது ரைட்டா பேசிச்சி.’

 இதுக்குதான் உன் வீட்டுக்கு  வந்துதா’

‘ ஆமாங்க மாமி. காச அவுங்க வாங்கிகினா நீ  என்ன செய்யிறதுன்னு ரொம்ப அக்கறையா எங்கிட்ட பேசுனாங்க’

மாமி சற்று யோசித்தாள். டக்கென்று முடிவு செய்தாள்.

‘தேவலாம் கத.  உன்கிட்ட  நா  பேசுன படி காவலுக்கு    மாச சம்பளம்  ஆயிரம் இந்தா  அத நீ வச்சுக’

‘ நா இங்க படுக்குல. அவுங்கதான வூட்ட பாத்துகினாங்க’

மாமி வீட்டில் படுக்கைக்கு வந்திருந்த கிழவரும் கிழவியும்’ அவுருகிட்டயே காசு குடுத்துடுங்க, அப்பிடித்தான் நாங்க பேசி இருக்குறம் அந்தப்படிக்குதான் நாங்க படுக்கறதும்’ என்றனர்.

‘ ஆயிரம் ரூவாய தரன்  ஆளுக்குப்பாதியா ஐநூறு ஐநூறுன்னு பிரிச்சிகுங்க’. மாமி சொன்னாள்.

புதிதாக படுக்கைக்கு வந்த  அந்த நாதியற்ற  பெரியவர்கள் இருவரும் ’காசு  மொத்தமும் அவரண்ட குடுத்துடுங்க மாமி,  மொடங்கிக  ரவ எடம் குடுத்ததே போதும்’ எகோபித்துச்சொன்னார்கள்.

காவலுக்கு மாமியே ஏற்பாடு செய்தப் பெரியவரோ’ அவுங்கதான படுத்துகிறாங்க அவுங்க கிட்ட சம்பளம் முழு காசும் குடுத்துடுங்க’ என்றார்.

வசந்திமாமி  இரண்டாயிரத்தை கையில் எடுத்து இரண்டு பெரியவரிடமும் தலா ஒரு ஆயிரமாகக் கொடுத்து முடித்தார். இருவரும்  வாங்கிக்கொண்டார்கள்.

இரண்டு பெரியவர்களும் மாமியை வணங்கி நின்றார்கள்.

‘வூட்ட பாத்துகுங்க. பெரியவரும் அந்த பெரியம்மாவும் படுத்துகறவரைக்கும் இங்க படுத்துகட்டும்.  காவலு பாக்குற நீ அப்ப அப்ப வந்து தோட்டம் தொறவ பாத்துக. நா கெளம்புறன்’ என்றாள் மாமி.

பெரியவர்களை விரட்டிய அந்த மருமகள் எட்டி  நின்று அனைத்தையும் வேடிக்க்கை  பார்த்துக்கொண்டே இருந்தாள். வசந்தி மாமி அந்த மருமகளையும் கவனித்துக்கொண்டாள்..

‘இதென்னாடி இங்க நடக்குறது எல்லாம்  ஒரே அதிஷயமா இருக்கு’  அந்த மருமகள் சொல்லிக்கொண்டாள்.

ஆட்டோக்காரன் வண்டியை கிளப்பினான் வசந்தி மாமி ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். வண்டி வெண்காட்டிற்குப்புறப்பட்டது.. வசந்தி மாமி அந்த மருமகளைப்பார்த்து ‘ பெரியங்கள நீ நல்லாவே பாத்துகற  சந்தோஷம்’என்றாள்.

‘கூர வூட்ட மொடங்கின கெழம்  இண்ணக்கி இந்த மாமி மச்சு வூட்டுக்கு வந்து படுக்குதுன்னா. அது எல்லாம்  யாரால’  அந்த மருமகள் மாமிக்குப்பதில் சொன்னாள். வசந்தி மாமிக்கு இது .கேட்டும் இருக்கலாம்.

-------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, November 9, 2022

கதை - பயணம்

 

 

பயணம்                                                        

 

புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம்.  பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன்   வாங்கியிருந்தான். அவனேதான் வண்டியை ஓட்டினான். நானும் என் மனைவியும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தோம். இது நாள் வரைக்கும் வாடகைக்காரில் மட்டுமே  எங்கள் பயணம்.  அது மட்டுமே சாத்தியமானது. ஆம் அப்படித்தான்   சென்றும்  வந்தும் இருக்கிறோம்

  எல்லோ போர்டு மாட்டிக் கொண்ட வண்டியில் சென்ற போதெல்லாம் போகும் சாலை எப்படி  என்று அதன் தரம்  என்ன வென்று எல்லாம் பெரிதாகக்கவலைப்பட்டது இல்லை. எந்தபடிக்கு  சாலை இருந்தால்  நமக்கு என்ன அது  எக்கேடு கெட்டும் போகட்டும் என்றிருப்பேன். சாலையில்  ஆங்காங்கு இருக்கும் குண்டு குழி பற்றிக்கவலைப்பட்டது இல்லை. சாலையில் இங்கும் அங்குமாய் இறைந்து கிடக்கும் கூர்மையான  ஆணிகள் இரும்புக் கம்பிகள் மாடு குதிரையின்  கால்களிலிருந்து கழண்டு விழுந்த உலோக லாடங்கள் பற்றி   இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தேன். தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தானே புரிகிறது.

மகன் வண்டியை  ஓட்டுவதால் மனது சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் கண்ணை  மூடு மூடு என்று மூடத்தான்  வைத்தது. மனம் நீ  எப்படிடா  தூங்குவாய்    உன்னை அனுமதிக்கமாட்டேன் என்றது

மொபைலில் கூகுள் காட்டும்   பரமபத பாம்பு ஒத்த வழித்தடம்  பார்த்துப்பார்த்து  பெரும்பாலும்  என் மகன் வண்டியை ஓட்டினான். சில இடங்களில்  கூகுள்  நாம் செல்ல வேண்டிய  வழியைத் தவறாகக்காட்டுவதும் உண்டுதான். ஷார்டெஸ்ட் ரூட் தான் கூகுளுக்கு கணக்கே தவிர  அந்த வழியில் வண்டி போய்ச்சேருமா என்பதெல்லாம் அதற்குக் கிடையாது.    முழுதாக  கூகுளை நம்பவும் கூடாது. நம்பாமல் அதனை  ஒதுக்கவும் முடியாது.

 சாலையில்  எங்கோ இருக்கும் ஒரு  ஊரின் பெயர் மற்றும்  அந்த ஊர் இருக்கும் தூரம் காட்டும் பலகைகள் சில இடங்களில் இருந்தன.  எழுத்து பளிச்சென்று இல்லைதான். பல இடங்களில் பலகைகள் காணப்படவுமில்லை. நெடுஞ்சாலைத்துறை அது தன் விருப்பத்துக்கு வேலை செய்து விட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

சாலையில் பல இடங்கள் வெற்றுக் கற்களாகவே கிடந்தன. சில இடங்களில் மண் குவியல்கள் மட்டுமே சாலையை நிறைத்துக்கொண்டிருந்தது. ’டேக் டைவெர்ஷன்’  என எழுதிய அறிவிப்புகள்  ஆங்காங்கே  செல்லும் வழியை மாற்றிக்காட்டியது. பாலம் வேலை நடைபெறும் இடங்களாகவே அவை இருந்தன.

 சில இடங்களில் ’ஒன் வே’  எழுதிக்கொண்ட பலகை குறுக்கிட்டது. சில இடங்களில்  சாலை டிவைடர்கள் என்கிற பிரிப்பான்கள் செம்மையாக எழுப்பப்பட்டிருந்தன. அனேக இடங்களில் அவை  உடைந்து உடைந்து பொக்கையும்  போரையுமாக பல் இளித்தன.  பசுமாடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் சாலையில் தெரிந்தன.  சில ஆடுகளும் சாலைகளில் நடமாடின.அவை இட்ட சாணமும்  புழுக்கையும்  பயணிகளுக்குக் காட்சிப்பொருளாயின. சாலையில்  பன்றிகள் தென்படவில்லை. வாகன ஓட்டிகள் அக்காடா என்று நிம்மதிப்படலாம்.பன்றிகளை ஒரு வாகனம் இடித்தாலே ஏதோ போதாத காலம்  வாகனத்திற்கு என்பது மூடநம்பிக்கை. அது  யாரையும் பிடித்து  ஆட்டித்தானே முடிக்கிறது.

 சாலையின்  இரு ஓரத்திலும் மனிதர்கள் யாருமே நடந்து செல்லவில்லை. அசோகமன்னர் வந்து  நிழல்தரும் மரம் நட வாய்ப்பேதும் இல்லை.  சுமை தாங்கிக் கற்கள் இல்லை. அப்படி எல்லாம் சொன்னால் யாருக்கேனும் புரியுமா என்ன?   சைக்கிளில் செல்பவர்கள் ஒருவரும்  இல்லை. மாட்டு வண்டிகள் மருந்துக்குக்கூட  இல்லை. டூ வீலர் ஓட்டிகள் மட்டும்  ஓரிருவர் தென்பட்டார்கள்.

 சிவப்பு விளக்கும் சிவப்புக்கொடியும்  தூக்கிப்பிடித்த ராட்சத டிரக் பூட்டிக்கொண்ட பெரிய லாரிகள் நிறைய  நிறைய பயணிக்கின்றன. பதினாறு சக்கரங்கள் அவைகளை இழுத்துச்சென்றன. அவை  யாவுமே தனியார் உடமைதான். அவைகள்   விரைந்து  செல்லத்தான் இச்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ..

டோல்கேட் நிறுத்தங்கள் கறாராய் வண்டிகளை நிறுத்தி வசூலை பெருக்கிக்கொண்டன. எத்தனைக்காலம் இந்த வசூல் கொள்ளை தொடருமோ யாருக்கும் தெரியாது. அது எப்போதேனும் நிறுத்தப்படுமா அதுவும் தெரியாது. இந்த வசூல் எப்படிச்செலவாகிறது இதனில்  என்னதான் விஞ்சுகிறது.  இந்த டோலில் லாபம் பெறுவது அரசா, தனியாரா, அரசியல் கட்சிகளா? யாருக்கும் அது பற்றிய கவலை இல்லை.  தகவல் பெற  ஆர் டி ஐ என்று ஒரு வழி உண்டு.யாரும் முயல்வதுதான் இல்லை.

ஐம்பது கிலோமிட்டருக்கு  போலீஸ்காரர்கள்  இருவர்  சிவப்புக்கலர் ஜீப்போடு நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் முன்பாக நாலைந்து லாரிகள் நின்றுகொண்டு இருந்தன. ஏதோ பஞ்சாயத்து  அவர்களுக்குள்ளாக காரசாரமாக நடந்துகொண்டிருந்தது.  இந்தக்காட்சியை அவ்வப்போது பார்க்கமுடிந்தது. லைசென்ஸ் இருக்கா ? வண்டி ஆர் சியை காட்டுங்க, பொல்யூஷன் சர்டிபிகேட் இருக்கா,டேஞ்சர் லைட் பல்ப் சரியா எரியுதா, ஹெட் லைட்டுல சென்டர்ல கருப்பு வண்ணத்துல வட்டப்புள்ளி  இருக்கா,  வண்டிபர்மிட், எஃப் சி,   இன்சூரன்ஸ் காட்டுங்க,   சீட் பெல்ட் எல்லாம் போட்டுகிட்டு இருக்காங்களா என  அதே கேள்விகளை ஒருவர்  மாற்றி ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு பேருந்து டூவீலர்க்காரனோடு மோதி அதில் டூவீலரில் பயணித்த  ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணிக்க அதில்  ஜனித்தது பெருஞ் சண்டை.  அந்தக் கிராமத்து ஜனங்கள் பஸ்ஸை மறித்துப்போட்டார்கள். டிரைவரை அருகிலிருந்த புளியமரத்தில் கட்டிப்போட்டு சகட்டுமேனிக்கு அடித்துக்கொண்டு இருந்தார்கள். அவ்வழி வந்த சில வாகனங்கள் மேல்கொண்டு செல்லமுடியாமல்  வந்தவழியே   யூ டேர்ன் போட்டு திரும்பிக்கொண்டன. தப்பித்தால் போதுமென அவை ஓட்டம் பிடித்தன.

 இன்னொரு ஊர்ச் சாலையின் நடுமையத்தில் அரசியல் வாதி ஒருவர்  தொண்டர்களுக்கு  ஏதோ அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார். ஆளுங்கட்சியில் பெரிய புள்ளி எனத்தெரிந்தது. பாதுகாப்புக்காவலர்கள் ஆயுதங்களோடு தலைவருடன்  உடன் ஏகத்துக்கு இருந்தார்கள். வரிசையாக   பெரிய பெரிய மகிழுந்துகள் அகம்பாவத்தோடு ஒன்றை அடுத்து ஒன்று நின்றுகொண்டிருந்தன. அவை  சாலையில் அவ்வப்போது ஊர்ந்து செல்லவும் செய்தன.  வானத்தில்  வேட்டுச்சத்தம். வாண வேடிக்கை விட்டுக்கொண்டு இருவர் சாலை ஓரமாய்  அமர்க்களப்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.  ஆகப்பெரிய   மனிதர்கள்   இங்கே இதோ வந்து விட்டார்கள் என்பதை மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

எங்களின்  கார் போல் எத்தனையோ வண்டிகள் சாலையின் ஓரமாய் ஒன்றன் பின் ஒன்று என ஊர்ந்து ‘ அய்யா பெரியவங்களே  நாங்கள்  என்றுமே உங்களுக்குக்கீழ்ப்படிந்தவர்கள்’ என்பதைச்சொல்லிக்கொண்டே சென்றன.

 சாலையோர உணவுவிடுதிகள் பலதினுசுகளாய் இருந்தன. பஞ்சாபி டபா என்று அனேக உணவு விடுதிகள் இருந்தன.  உடுப்பி ஹோட்டல்களும் முனியாண்டி விலாசுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. இயற்கை அழைப்புக்களைச் சமாளிக்க பயணிகள் இங்குதான் வந்து செல்லவேண்டி இருக்கிறது. உணவு விடுதிகளின்  ஜிகினா அலங்கரிப்புக்கள் மட்டும் அதிகம். உணவின் தரம் அது இது  எல்லாம்  மூச் கேட்காதீர்கள்.

மல்லிகை பூக்களைச் சரமாய்த் தொடுத்துக்  கூவிக்கூவி விற்கும் சிறுமிகள்  மகளிர் அனேகரைப் பார்க்கமுடிந்தது..

வெள்ளரிபிஞ்சுகள் நுங்குகள் இள நீர்,  மிளகாய்ப்பொடி உப்புப்பொடி சேர்த்து அரிந்த ஒட்டு மாங்காய் என விற்போர் பலர்.  சாலை ஓரத்தில் வளர்ந்து நிற்கும் மரங்களின் கீழ்விழும்  அவர்களைத்  தரிசிக்க முடிகிறது. எளிய மனிதர்களின் வணிகம். அவர்கள் பயணிப்போரைக் கெஞ்சுவதும் மன்றாடுவதும்  மனதிற்கு பாரமாக மட்டுமே உணரமுடியும்.

பயணத்தில் கர்நாடக மாநிலம் பிறகு ஆந்திரம் தொடர்ந்து தமிழ்நாடு இறுதியாய்ப் புதுச்சேரி என நான்கு மாநிலங்கள். தமிழ் மாநிலத்தில்தான் நெருக்கமாய் ஊர்கள் தெரிகின்றன.கிராமங்கள் ஒன்றைஅடுத்து ஒன்று எனத் தொடர்ந்து வருகின்றன. செழிப்பும் வனப்பும் தமிழ் நிலத்தில் கூடித்தெரிந்தன.

இப்பயண அனுபவம் ஏனோ என்னை பின்னோக்கி அழைத்துச்சென்றது. முதுகுன்றம் நகரில் பேருந்து நிலையம் அருகே  அறை  ஒன்று  மாத வாடகைக்கு எடுத்து நான் தங்கியிருந்தேன்.  தொடக்கத்தில் அங்குதான் பணியாற்றினேன். அது ஒரு காலம். எழுபதுகளில் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

 என் அறைக்கு அருகில் மூன்று தனியார் பேருந்து  நிறுவனங்களின் அலுவலகங்கள் அடுத்தடுத்து இருக்கும். பேருந்தின் கண்டக்டரும் டிரைவரும் அன்றாட வசூலை மானேஜர்களிடம் ஒப்படைப்பார்கள். குறைந்தபட்ச வசூல்   ஒரு நாளைக்கு இன்னது  அதுவும்  இன்ன வண்டிக்கு என நிர்ணயித்து இருப்பார்கள். அதனைத்தாண்ட முடியாது போன கண்டக்டர்கள் வரிசையாக நின்று முதலாளிக்குப் பதில் சொல்லவேண்டும்.  முதலாளிக்கு திருப்தி இல்லாத படசத்தில் ’ பிரம்பால் பூசையோ, கொட பாட்டோ நிச்சயம்’ உண்டு. கொட பாட்டோ  என்றால் அது  குடைகின்ற வசைச்சொல்.

 டீசல் அதிகமாய் செலவழித்த டிரைவர்களுக்குப்பிரத்யேக தனிக்கச்சேரி  இருக்கும். கண்டக்டரும்  அதற்கு  விழி பிதுங்கி பதில் சொல்லி மீண்டு வருவார்கள். முதலாளிகள் நாராசமாய் அவர்களைத் திட்டுவது காதால் கேட்கவே சங்கடமாயிருக்கும். சிலருக்கு’ நாளையிலிருந்து நீ வேலைக்கு வரவேணாம் வேற வேல எதாவது  இருந்தா பார்’ என்று அனுப்பி வைப்பார்கள். அவர்கள் கண்கள் நீர் சொரிய  முதலாளி வீட்டை விட்டுத்  தட்டுத்தடுமாறி  நடப்பார்கள்.  முதுகுன்ற  பேச்சிலர் வாழ்க்கையில் தினமும் நான் இரவு டீக்கடையில் பால் என்ற ஒன்றைக் குடித்து விட்டு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவரச்செல்வது  வழக்கம். இந்த டிரைவர் கண்டக்டருக்கு நடக்கும் பூசைகளை எத்தனையோ முறை கேட்டும் இருக்கிறேன். அதனை இப்போது நினைத்து  நினைத்து வருத்தப்படுகிறேன்.

 அன்றிருந்த சாலையில்.  அதுவும்   தரம் என்று எதுவுமே இல்லாத கப்பிச்சாலையில் எப்படியெல்லாம் பேருந்துகளை  டிரைவர்கள் இயக்கினார்களோ.  கண்டக்டர்கள்  அன்றாடம்  குறைந்தபட்ச வசூல் கொண்டு வரவில்லை என்றால் மூன்று முறை  மாப்பென்று அனுமதிப்பார்கள். நான்காவது முறை என்றால் அவர்கள் நேராக அவரவர்  வீட்டுக்குத்தான் போகவேண்டும். இது எழுதப்படாத சட்டமாக இருக்கும். வேலை போனது போனது தான்.

அந்தக்காலப் பேருந்து ஓட்டிகளை கண்டக்டர்களை நினைத்துக்கொண்டே புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்குக் காரில் திரும்பிக்கொண்டு இருந்தேன்.

‘மகன் பக்கத்துல இருந்தா  ஒரு வார்த்தை பேசக் கூட வராது அய்யாவுக்கு’ மனைவி முகத்தைத்தூக்கிவைத்துக்கொண்டாள். என் பயணக் கதையை உங்களிடம் மட்டும் தானே சொல்லமுடியும்..

--------------------------------------------

 

 

 

 

 

 

 

 

Wednesday, October 26, 2022

படி அளக்குறவரு பரமசிவம்

 

 

 

 

படி அளக்குறவரு பரமசிவம்        

 

 

 

குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான். தன் கணவருக்கு சிவன் கோவில் நிர்வாகம்  சொல்ப வாடகைக்குக்கொடுத்தவீடு.  வீட்டின்  தரை பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்குச்சொந்தம்

அன்றாடம்  கோவில்  கிணற்றில் தண்ணீர் சேந்தி  சுவாமி அபிஷேகத்துக்கு கொண்டு செல்வதுதான்   அந்தத்தாத்தாவின்  பிரதான வேலை.  பெரிய சிவாச்சாரியார் கோவிலில் இட்ட சில்லறைப் பணிகள் ஏதுமிருந்தால் அதனையும் செய்வார். கோவிலில்  இறைவனுக்குப்படைத்த இரண்டு பட்டை அன்னம் ஒரு தேங்காய் மூடி  அவருக்கான பங்கென்று கொடுப்பார்கள். தினம் தினம் கோவிலில் ரூபாய் ஐந்தோ பத்தோ பெரிய மனதுடையோர் அவருக்குத் தானமாய்க் கொடுத்துப்போவார்கள்.

இந்த தம்பதியர்க்கு ஒரு மகன் இருந்தான். ஏதோ உள்ளூர் பள்ளிக்குப்போனான். பள்ளிப்படிப்பை நிறைவாய்  முடிக்கவில்லை. துஷ்ட சகவாசம்.  அது எல்லாம் எப்படித்தான் வந்து சேருமோ. போதாத காலம் வந்தால்  அந்த அதுவும் பாம்பாகும் என்பார்கள். அப்படித்தான்  அவனுக்கும் ஆனது. குடிக்க ஆரம்பித்தான்.  வேறென்ன   உங்கள் கணக்குச் சரி. சாராயம்தான். முதல் இரண்டு தினங்களுக்கு அவனை   ஜானுவாச மாப்பிள்ளையாய் பலான  நம்பர் கடைக்கு அவன்  கூட்டாளிகள் அழைத்துப்போனார்கள்.

‘ குடித்துப்பார்லே தெரியும்’ என்றார்கள்

‘ ஆகாயத்தில் பறக்குறா போல   தெரியும்  பாரு  அதான் ஷோக் இதுல. நீ தான் ஒணருணும்  நாங்க சொல்லி ஆவுமா.  ஆகாசத்துல இருக்குற மேகத்தில போயி  ஒலாவிகிட்டு வர்ரது போல இருக்குமே.  என்னமோ   இந்த ஒடம்பு  ஒரு காத்தாடி போல ஆயிடும்.  மனிஷனுக்கு  வொடம்பு வலியாவது  ஒண்ணாவது   மூச்.  அவங்க அவுங்க. குடிச்சு பார்த்தா தான் அந்த வெஷயம்  அத்துபடி ஆவும். அடுத்தவங்க என்ன சொன்னாலும் அத  எல்லாம் வெளங்கவைக்க முடியுமா. மனுஷப்பிறவி வாக்கறது   எப்பமோ ஒரு மொற  அடுத்த  பொறப்புக்கு நாம நாயோ  இல்ல நரியோ  அத  ஆரு கண்டா. ஆக  ரவ   குடி. குடி ராசா   இந்த  அம்ருதத்த குடிச்சி பாரு. தவறினா நீ வருத்தப்படுவடா என்  கண்ணுல்ல’ தேனொழுகப்பேசினார்கள். சாராயக்கடையில் சாராயம் விற்பனைசெய்பவன் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தான். புன்னகைத்தான்.

நண்பர்கள் சாராயம் வாங்கிக் கொடுத்தார்கள்.            

‘பாப்பார புள்ள அதான்  ரவ ரோசன பண்ணுது.  பலான கடை முன்னால நிக்குறம்.  நீ அத வுட்டாலும் அந்தக்கடை உடுமா உன்ன’  கூட இருந்த அவர்களே சொல்லிக்கொண்டார்கள். அவன் கண்களிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது.

‘ இப்ப  இங்க வந்துட்டு அழுவக்கூடாது.  ராசா கணக்கா நிமிந்து  நிக்குணும் ராசா நீ எப்பவும்  ராசாதான், என்னா ரோசனை ஒனக்கு   அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சாப்புடு, ராசா குடுக்கறத வாங்கிக. சாப்புடு’ என்றனர்.

அவன் டம்ப்ளரைக்கையில் வாங்கி வாயில் மடக் மடக் என்று  வாயில் ஊற்றிக்கொண்டான்.வயிற்றுக்குள் அதி இடி போல் இறங்கியது.

‘இனிமே  நாயாட்டம்  யாரு எங்க கூட்டாலும்  வாலு ஆட்டிகிட்டு வருவாரு அய்யிரு’ அவர்களே சொல்லிக்கொண்டார்கள்

ஒரு நாள். இரண்டு நாள். பிறகு அவனே வீட்டில்  காசு  திருடினான் வெளி வீடுகளில் திருடினான். பேத்து மாத்து  பித்தலாட்டம் செய்தான்.  கன  ஜோராய்க் குடிக்கத்தொடங்கினான். மடா குடிகாரனான். தெருவில் புழுதியில் குப்பைத்தொட்டி அருகே கிடந்தான். அவன்  அருகில் சொறி நாயும்  சேறு  சகதி பூசிக்கொண்ட பன்றியும் சுற்றி சுற்றி வந்தன.

கோவில் அய்யிரான தந்தையும் தாயும்  செய்வதறியாது திகைத்தனர். ஒரு நாள்  தெருச்சாக்கடையில் வீழ்ந்து கிடந்தவனைச்சிலர் ‘ நம்ப  செவன் கோவிலு அய்யிரு மொவன்’ என்று அவன் அக்கிரகார வீட்டுக்குத்தூக்கிவந்து கிடத்தினார்கள். சில நாட்கள் கழிந்தன.  என்ன கஷ்ட காலமோ ஒரு நாள் காலை அதே நம்பர் கடைக்குப்போனான். வாங்கி வாங்கி சாராயத்தை குடித்துக்கொண்டே இருந்தான். காசு எங்கிருந்து வந்ததோ. வீட்டில்  அம்மா அப்பா  மளிகை  சாமான் அரிசி வாங்க வைத்திருந்த  காசு  திருடிக் கொண்டு வந்து குடித்தான்.

தீயதை எல்லாம்  நல்லது எனப் பேசிடும் பழக்கம்  எத்தனை  எளிதாய்த் தொற்றிக்கொண்டது. பாப்பான் குடிக்க  ஆரபிச்சான்னா அவ்வளவுதான் அவன் மூச்சடங்குனாதான் நிறுத்துவான்’ கடைக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.

‘’’போதும் அய்யிரே  நிறுத்து’ சண்டை போட்டர்கள். எங்கே அவன் கேட்டான். வயிறு வீங்கியது. ஒரு கணத்தில் படார் என  வெடித்துச்சிதறியது. வயிறு  கூட அப்படி வெடிக்குமா என்ன?  சாராயக் கடை முன்பாகவே பிணமானான்.  பரிதாபப்பட்ட  சாராயக்கடைகாரர்கள் பிணத்தை அக்கிரகாரத்துக்கு தூக்கிவந்து   அவன் வீட்டு வாயிலில் போட்டார்கள். அவன் கதை முடிந்தது.

மகன் இப்படிப்போனதை எண்ணி எண்ணி அப்பா கலங்கினார். அத்தந்தை ஒரு நாள். மனையாளிடம்  ’அங்கு வலி இங்கு வலி’ என்றார்.  அவரும் தன் வாழ்கைய முடித்துக்கொண்டார். இப்போது அந்த குஞ்சுப்பாட்டி மட்டுமே இருக்கிறாள்.

கோவில்காரர்கள். அந்தக்கிழம் இருக்கிறவரை கோவில் மண்ணில்  இருந்து விட்டுப்போகட்டும் என விட்டு விட்டார்கள்.

குஞ்சுப்பாட்டி  அக்கிரகாரம் முழுவதும் தெருவில் மாடுகள் போடும் சாணி பொறுக்கினாள். ஒரு நாளைக்கு பத்து விராட்டிகள் அதிக பட்சம் தட்டுவாள். பாட்டிக்கும் வயதாகிவிட்டதே. தன் வீட்டு சுவரில் அதனை வரிசையாக தட்டிவிடுவாள். அவை காய்ந்து பதமானபின் அவைகளை அடுக்கு அடுக்காய் எடுத்து வைப்பாள். ஐம்பது  நூறு என விராட்டிகளை இடுகாட்டிலிருந்து  வாடிக்கையாய்  பாட்டியைத் தேடிவந்து வரும்  பிணம் சுடும் தொழிலாளர்கள் விலைக்கு வாங்கிப்போவார்கள்.  அந்த விராட்டிகள்  வண்டியிலோ தலைச்சுமையாகவோ இடுகாடு போய்ச்சேரும்.  இப்படியாயக் கிடைக்கும் வருமானமே குஞ்சுப்பாட்டிக்கு வாழ்வாதாரம். மழை தொடர்ந்து பெய்துவிடுமானால் பாட்டியின் பிழைப்பு அம்போதான். கோடைக் காலம் என்றால் சரி. மழைக்காலம் குளிர் காலம் பனிக்காலம் என்று வந்தால் பாட்டி புலம்பித்தீர்ப்பாள்.

‘ஒரு கம்முனாட்டி என்ன செய்துட முடியும். எந்த மொதலும் இல்லாம காசு  கொஞ்சம் வேணும்னா சாணி பொறுக்குவதுதான் ஒரே வழி. அதத்தான் நா செய்யுறேன். என் புருஷன்  சாமி சன்னதியில நல்ல படியாய் கைங்கர்யம் செஞ்சாரு.  அது என்னால ஆவுமா  என்ன  அந்த வேலைக்கு  வுடுவாங்களா. வயசு அதுபாட்டுக்கு ஆவுதே. அது நம்ப சொன்னா நிக்குமா. தேகம் அதுக்க தக்கன கோணுது மாணுதுல்ல’.

புலம்புவாள்.

ஒருநாள் தெருவில் பறை அறைந்துகொண்டு  தோட்டியும் தலையாரியும் நடந்துகொண்டிருந்தார்கள். இடு காட்டுத்தொழிலாளிகள் இருவர் அவர்களோடு உடன் வந்தனர். பாட்டி  அவர்கள்  என்ன சொல்லப்போகிறார்கள் என உற்றுக்கேட்டாள்.

‘டப் டப் டப் டப்’

‘ இந்த  பெண்ணாகடம் நகர வாசிங்க ஆணு பொண்ணு அத்தனையும் அறியவேண்டியது. நாளையிலேந்து நம்ம ஊர் மயானத்துல கரண்டுஅடுப்பு வச்சி பிரேதம் எரிப்பாங்க. அதுக்கு கட்டணம்   ரூவா ஆயிரத்து இருநூறு  அது சின்னதோ பெரிசோ  எப்பிடி ஆனாலும். ரெண்டு நாளு உற்றாரு உறவுசனம் மயானம் வரவேணாம். அலச்சல் இல்ல.  அண்ணிக்கி அண்ணைக்கே தகனம். .ரவ நாழில அஸ்திய டப்பால குடுத்துடுவாங்க. அவாள் அவாள் எங்க சவுரியமோ அங்க அஸ்திய அப்பவே கரச்சிகிலாம்’

‘டப் டப் டப் டப்’

 

பாட்டி அவர்களிடம் நேராக சென்றாள்.

‘ கட்டய  விராட்டிய  வச்சியும்  சவத்த எரிய வுடலாமுல்ல’

‘அது அவாள் அவாள் சவுரியம் ஏன் ஒன் விராட்டி  இனிமேலுக்கு விக்காதுன்னு பாக்குறயா’ திருப்பிக்கேட்டார் இடுகாட்டுத்தொழிலாளி.

‘ அப்பிடி இல்லே.மாத்தம்னா எதுலயும் வருந்தான். பைப்புல தண்ணிவருது  தெருவுல கரண்டு வெளக்கு எரியுது,  கரண்டுல காத்தாடி சுத்துது, பொணம் வைக்க  அய்ஸ்பொட்டி, பயனத்துக்கு  காரு ரயிலு ஏராப்ளேன் எல்லாம் வந்து போச்சி,  அது அதுஅதுலயும் மாத்தம் வருமுல்ல’

‘’ நல்லா சட்டமா பேசுற பாட்டி’ என்றனர்.

குஞ்சு பாட்டி விசனப்பட்டாள். அவளின் விராட்டி இனி விலை போவது சிரமந்தான். பாட்டியின் ஆழ்ந்த சிந்தனையை அவர்கள் அவதானித்தார்கள்.

  நீ ஒண்னும் ஓசனை பண்ணாத  பாலும் டீ தூளும்  எங்க காசுல  வாங்கியாரம்  நீ நெதம் டீ போடு. ரெண்டு வேளக்கி போடு.   நல்லா சூடு தாங்குற கூசாவுல ஊத்தி  என்னண்ட  ,குடு. நா மயானம்  எடுத்தும் போறன். நாங்க அஞ்சி பேரு அவுத்த வேல பாக்குறம்.  இப்புறம் நீ சாணிதான்  பொறுக்கு இல்ல பொறுக்காம போ. உன்ன செண்டுப்பா நாங்க பாத்துகறம். நீனு எங்கள்ள ஒரு ஆளுன்னே வச்சிகறம். பொணஞ்சுட   எங்களுக்கு விராட்டி அனுப்புனது நீதான. இப்புறம் உன்னால  என்னா செய்யவைக்கும். விராட்டியும் போணி ஆவாது.    ஒரு நாளைக்கி அம்பது ரூவா நாங்க உனக்கு  தர்ரம். நீ வெசனப்படாதே’  இடுகாட்டுத்தொழிலாளி பாட்டியிடம்  சொன்னார்.

‘ தெனம் ரூவா அம்பது தர்ர’

‘ ஆமாம்’

‘’பொணம் வுழுவுலன்னா’

‘ இது என்னா குறுக்கால  பேச்சு. நீ  கண்டது  ஒரு நாளைக்கி அம்பது  ரூவா அதோட வுடுவியா‘

‘ ரொம்ப நல்லது என் சாமி, படி அளக்குறவரு  பரமசிவம்’ இரண்டு கைகளாலும் கும்பிட்டாள் பாட்டி.

 எங்கள  கும்பிடாத நீ, நாங்கதான்  எப்பவும் சாமின்னு  உழுந்து கும்புடறது’  இடுகாட்டுத்தொழிலாளி சொல்லிக்கொண்டார்.

’டப் டப் டப் டப்’ ஒலி வந்துகொண்டே இருந்தது.

---------------------------------

 

 

,

அவரவர் நிழல்

 அவரவர் நிழல்                              

 

 

’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான்   இருந்தாள்.

  யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும் ரயில் வண்டியினுள் ஒரே களேபரமாக இருந்தது.  வண்டி மதுரையத்தாண்டி  திருச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த அர்த்த ராத்திரியில்  அந்த ஸ்லீப்பர் கோச்சில்  இப்படி ஒரு கலவரம். பத்து பயணிகளுக்கு அங்கே கூடி கன்னா பின்னா என்று  சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

‘  பாதி ராத்திரில்ல  இது  பாத் ரூம் போயி வந்த நாயி  கம்முனு படுக்க வேண்டியதுதானே, வயசு எழுபது தொட்டுகிட்டு இருக்கும் போல தலமுடியப்பாரு  வெள்ளப்பொறா கணக்கா  திருவிகிட்டு கெடக்கு. இதுல  அய்யாவுக்கு  இது  கேக்குதாம்  இது’

‘எங்க போனாலும் இவுனுவ இமுச பெரிய இமுச .  கழுதங்க  அது  அதுக்குன்னு ஒரு எடம்  இருக்கு.  அவ்வெடத்துக்கு போவுலாம் நெஞ்ச நிமித்திகிட்டு  திரும்பிவந்துடலாம்ல. இங்க வண்டிக்குள்ள என்னாத்துக்கு அசிங்கிதம். பொது எடத்துல எதுக்கு அய்யா  இப்பிடி’

‘ இந்த கேடுகெட்ட  பேமானிய போயி  அய்யா கொய்யான்னு சொல்றீக’

இப்படி வேறு.

கம்பம் நகரில் ஒரு இலக்கியக்கூட்டம். இந்த காலமான காலத்தில் இலக்கியக்கூட்டம் நடப்பதே அதிசயம்.  கொரானா அவரவர்களை வீட்டோடு முடக்கிப்போட்டு ஆண்டுகள் சில ஆனது.  கிடைத்த  இடுக்கில் சிலர் அதிசயமாய் நிகழ்ச்சிகள் நடத்திப்பார்த்தார்கள் .

 தமிழில் இராமாயணம் படைத்திட்ட   கம்பருக்குத்தான்  இந்தக் கம்பம் நகரில் ஒரு இலக்கியக்கூட்டம்.’ கம்ப ராமாயணத்தில்  படகோட்டி குகன் தான்  அந்த ராமனை ஆகப்பெரிய பீடத்தில் தூக்கி நிறுத்தியவன்’ இதுதான் தலைப்பு. அவனைப்பேச அழைத்து இருந்தார்கள். கம்பம் போய் வரவேண்டும்.  கம்பம்  நகருக்குப்  போகாமல் இருக்கலாமா, மனம் ஒத்துக்கொண்டால் பரவாயில்லை.. யார் ஒருவரைக்கூப்பிட்டு மேடையில் உட்காரவைத்து மைக்கும் கொடுத்து பேசச்சொல்கிறார்கள்.  நீட்டய்ச்சால்வை போடுகிறார்கள்.

 கம்பம் நகருக்கு ரயில் வசதிதான் இல்லை.  திண்டுக்கல்லுக்கும்  சரியாய் ரிசர்வேஷன் டிக்கட் கிடைக்கவில்லை. தேஜஸ் ரயிலில் எப்படியோ ஒரு டிக்கட் கிடைத்தது.  அவன் பெருங்களத்தூரிலிருந்து   ஓலோ கார் வைத்துக்கொண்டு எழும்பூர் போனான்.  தேஜஸ் ரயில்  தாம்பரத்தில் நிற்காதாம்  அது விஷயம் அன்றுதான் தெரிந்துகொண்டான்.

 திண்டுக்கல்லில் தேஜஸ் ரயிலை விட்டு  இறங்கினான். ஒரு  பேருந்து பிடித்தாக வேண்டும்.,  அது   பெரியகுளம், தேனி, சின்னமனூர் உத்தமபாளையம் என்று  ஒரு மூன்று மணி நேரம் உருட்டு உருட்டென்றும். அப்படி  உருட்டினால் அந்தக்கம்பம் போய்ச்சேரலாம். அப்படித்தான் அவன் திண்டுக்கல்லில்  ரயிலைவிட்டு இறங்கி அந்தக் கம்பத்திற்கு பஸ்  பிடித்தான்.   இலக்கியக்கூட்டத்திற்குப் பத்திரிகை பெரிய சைசில்   அச்சிட்டிருந்தார்கள். ஒரு  நூறு  பேருக்கு அதனில்  பெயர்  இருந்தது. முன்னிலை  முன்னிலை என்று ஐம்பது பேருக்கு இருக்கலாம்.    அழைப்பிதழில்  ஜனங்களின் பேர் போடுவதில் பல நன்மைகளுண்டு.  கூட்டச்செலவுக்குக்காசும் பேரும். கூட்டத்திற்கு  ஆட்களின் வருகையும் கூடும். ஒவ்வொன்றிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

இலங்கைக்கு  அரசன்  ராவணன். அவனைப்  போரில் வென்றான் ராமன்.  அந்த கங்கையில் படகோட்டினான்  குகன்.  குகனோடு  உறவு போற்றிய  அயோத்தி ராமனே உயர்ந்தவன் அவன்  வளைத்து வளைத்துப்பேசினான்.   நெடிய கைதட்டல் வாங்கினான்.

‘ பேசுனாலும் அது அதுல ஒரு அர்த்தம்  இருக்கணும் இப்படிக் கூட்டத்தில் அவன் காது படவே ஓரிருவர்  பேசிக்கொண்டார்கள். இதைவிட என்ன வேண்டும் ஒரு பேச்சாளனுக்கு. ஒரு சால்வை போர்த்தி  ரூபாய் ஐயாயிரம் கவரில் போட்டுத்தான் கொடுத்தார்களே.  இலக்கியக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் இதைவிடப்பெரியதாய்  என்ன செய்வார்கள். அவனுக்கு ரயிலுக்கும் பேருந்துக்கும் சாப்பாட்டிற்கும் எனப்போனதெல்லாம் போக காசு  ஒன்றும் மிச்சமில்லை. கூழுக்காகக்கவி பாடும் கூனக்கிழவி நம் கிழவி என்று அவ்வையாரையேச் சொல்கிறார்களே அது நமக்கும்கூட   ஒரு  நியாயம் சொல்லத்தான் சொல்கிறது. அவனே சமாதானம் செய்துகொண்டான்.

கம்பம் போகும் போது சவுகரியமாகத்தான் பயணம் இருந்தது. திண்டுக்கல் வரை சொகுசு ரயிலில் அல்லவா பயணித்துப் பேருந்து பிடித்தான் . திண்டுக்கல்லிலிருந்து மூனார் செல்லும் பேருந்து.  கம்பம் நகரில்  அவனுக்கு ’யூனிவெர்சல்’ என்னும்  பழைய லாட்ஜில் ரூம் போட்டிருந்தார்கள். அவன் லாட்ஜ் அறையில் சற்றுப் படுத்துப்பார்த்தான்.  எழுந்தான்.  தலைமுடியை அழுத்தி வாரி முடித்தான். பவுடர் போட்டபின் முகம் இன்னும் கோரமாய்த் தெரிகிறது.அதற்காக பவுடரை விடத்தான் முடிகிறதா என்ன?

கம்பத்தில்  அதே  லாட்ஜுக்காரர்களே  ’போடி ஹொட்டெல்’  நடத்துகிறார்கள். இந்தக்கலிகாலத்தில்  தமிழகத்தின் இந்தக் கோடி நகரில் சுவையாய்ச்  சூடாய் டிபன் கிடைக்கிறது. மணக்கும் காபியும்தான். நல்ல ஹோட்டலில்  சிற்றுண்டி. அதற்கும்  ஒரு ராசியிருக்கத்தான் வேண்டும். திருப்தி பட்டுக்கொண்டான்.

திண்டுக்கல்லில் திரும்பவும் வந்து ரயில் பிடிக்கவேண்டும். சட்டு புட்டென்று கூட்டம் முடிந்த கையோடு கிளம்பினான். ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்தான். கம்பம் நகரப்புதிய பேருந்து நிலையம். கழிவறைக்குச்சென்று வந்தான், ‘பத்து ரூவாதான் நீ எதானா போயிக்க’ சட்டமாய்ச்சொன்னார் பொறுப்பில் இருந்தவர்.’ யாரும் கழிவறைக்கு வருவதில்லையாம்.  கட்டண வசூல் கட்டுப்படியாகவில்லை.’ அவரே  புலம்பினார்..  

திண்டுக்கல் பஸ் ஒன்றில் ஏறி அமர்ந்தான். லொடக் புடக் என்று அந்த வண்டி கம்பத்தை விட்டுப்புறப்பட்டது. அரசுப்பேருந்து.  ஜன்னல்  மூடும் திறைகள் கிழிந்து கிழிந்து தொங்கின. பெருந்தலைவர்  காமராஜ்  ஆட்சிக்காலத்தில்  இந்தப் பேருந்தை எல்லாம் வாங்கியிருப்பார்கள்.

திண்டுக்கல்லிலிருந்து நேராகச்  சென்னைக்கு   ரிசர்வேஷன் டிக்கட் கிடைக்கவில்லை. விருதுநகரிலிருந்து சென்னைக்குக் கிடைத்தது. செகண்ட் ஏசி.    போர்டிங்க்  மட்டும் திண்டுக்கல் எனப்போட்டிருந்தார்கள். இரவு பன்னிரெண்டு மணிக்கு திண்டுக்கல் ஸ்டேஷனில் ஏறியாகவேண்டும்.  பேருந்தில் மூன்று மணி நேர  கடக் புடக் பயணம்.பிறகு திண்டுக்கல் வந்தடைந்தான். ஒரு கொடைக்கானல் வாழைப்பழமும் இரண்டு  ஆறிப்போன சமோசாவும் சாப்பிட்டு இரவு உணவு முடிந்தது.  சாலையில் போக்கு ஆட்டோவை க்காணவில்லை. தனி ஆட்டோ பிடித்தான் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தான். ஹோ என்று கிடந்தது பிளாட்பாரம். ரயிலுக்குக்காத்திருந்த அவன் அரைத்தூக்கத்திலிருந்தான். குருவாயூர் வண்டி இரவு பன்னிரெண்டுக்கு திண்டுக்கல்  ரயில் நிலையம் வந்தது. இவன்  ஏற வேண்டிய பெட்டியை த்தேடினான். கோச் டிஸ்பிளே போர்டு  அதெல்லாம்  அங்கு இல்லை.  ரயில்வேகாரர்கள் சொல்வதை வைத்து  அந்த அடையாளம்   பார்த்து  நின்றவன்  பெட்டியில் சரியாக ஏறிக்கொண்டான்.  நடு நிசி. பெட்டியில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். இவனுக்கு  ஒதுக்கப்பட்ட படுக்கையைத்தேடி கண்டு பிடித்தான். அதனில் யாரோ காலை நீட்டி உறங்கிக்கொண்டிருந்தார்கள். குளிர்சாதன வசதிப்பெட்டி நல்ல உறக்கம்தான்.

கோச்சுக்குப்பொறுப்பு அதிகாரி அரைத்தூக்கத்தில் இருந்தார். அவனுக்கு ஒரு காலி பெர்த்தைக்காட்டினார்.’ இதுல படுங்க பாக்கலாம்’ என்றார். அவனுக்குக் குறிக்கப்பட்ட படுக்கை எண் இல்லை. எதுவாயிருந்தால் என்ன, எதோ ஒன்று ஏறிப்படுத்தான். உறங்கினான். சர்க்கரை வியாதிக்காரன். இரவில் குறைந்தது இரண்டு தரம் விழித்து பாத் ரூம் போவான். பாதி இரவு முடிந்து போனதால் ஒருமுறை எழுந்தான். பாத் ரூம் போனவன் திரும்பிவந்தான். அவன் படுத்திருந்த இடத்தில் போர்வை கன்னா பின்ன என்றுதான் கிடந்தது. அதனில் கை வைத்து இழுத்ததுதான் தாமதம்,

‘அய்யோ  பொம்பள கைய புடிச்சி இழுக்குறான் கைய புடிச்சி இழுக்குறான்’ கூவினாள் ஒரு பெண். நடுத்தர வயது. பெட்டியில் இருந்தவர்கள் லைட்டைப்போட்டார்கள். ’ஆ ஊ’ என்று கத்தினார்கள். அதற்குள்ளாய் இரண்டு போலீசுகாரர்கள் வந்து நின்றார்கள்.

அவன் கத்திப்பார்த்தான். அவன்  சொன்னதை யாரும் காதில் வாங்கினால்தானே. கோச் பொறுப்பதிகாரி வந்தார்.

‘ஏம்மா இந்த சீட்டுக்கு ஏன் நீ வந்தாய். உனக்கு வேற  பெர்த்துல்ல  குடுத்து இருந்தேன்’

‘ நீங்க எனக்கு குடுத்த சீட்ல  ஜோல்டிங்  ரொம்ப அதிகமா இருந்திச்சி. கண்ண மூடவே முடியல. அதான் எனக்கு அலாட்டான  சீட்ட வந்து பாத்தன் அது காலியாயிருந்துது. சரி படுப்பமேன்னு படுத்தேன். தூங்கிட்டேன். தூக்கத்துல  யாரோ போர்வயை இழுக்கறது தெரிஞ்சிது.  நல்ல தூக்கம் அதான் கத்திட்டேன்’

அவன் கண்களோ குளமாகியிருந்தது.

‘ சார் பாத் ரூம் போயிட்டு வந்தன் பெர்த்ல  போர்வ கன்னா பின்னான்னு கெடக்கு போலன்னு கை வச்சி பாத்தேன்.  மங்கலான  லைட் வெளிச்சம் வேற. அவுங்க சத்தம் போட்ட பெறகுதான் அந்த எடத்துல  ஒரு அம்மா படுத்து இருக்கறதே எனக்கு தெரியும்.’

அவன் விளக்கம் சொன்னான். மீண்டும் கண்களைத்துடைத்துக்கொண்டான்.

போலீசுகாரர் ஒருவர்’ நீங்கதான்   சொல்லுணும்.  அதான்  இங்க  ரொம்ப முக்கியம்.  இப்ப  என்னம்மா சொல்றீங்க’ அந்தப்பெண்ணைப்பார்த்து  வினவினார்.

’பெரியவர் சொல்றதுதான் சரி.’. அந்தப்பெண் சட்டெனச்  சொல்லிமுடித்தாள். கோச் சின் பொறுப்பு அதிகாரியும் அதனை ஆமோதித்து நிம்மதியடைந்தார்.

’அவுங்க அவுங்க போங்க’  ஒரு போலீசுகாரர் சத்தமாய்ச்சொன்னார்.

சுற்றி நின்றவர்கள் ‘ அட  இதுல ஒண்ணும்  விஷயம் இல்ல இத வுடுங்க’ சொல்லி விட்டு அவரவர்கள் பெர்த்தில்  படுத்துக்கொண்டார்கள்.

 இப்போது  அவன்அவனுக்கு ஒதுக்கப்பட்ட  சரியான பெர்த்தில் போய்ப் படுத்துக்கொண்டான்.  சீட்  உலுக்கி உலுக்கி  எடுத்தது.  ஜோல்டிங்க்  இருக்கத்தான் செய்தது.  பொழுது  அனேகமாய் விடிந்து விட்டிருந்தது. சற்றைக்கெல்லாம் தாம்பரம் வந்துவிடும்..  தாம்பரத்தில் இந்த வண்டி நிற்கும். கம்பம் இலக்கியப்பயணத்தை  அவன் எங்கே மறப்பது.

----------------------------------------------------------------------------

--------------