Sunday, September 9, 2018

thaiyalai uyarvu sey -bharathi


'தையலை உயர்வு செய்' - எஸ்ஸார்சி


பெண்களைப்போற்றிய பேராசான் பாரதி. மாகவி பாரதிக்கு முன்னர் மகளிரின் விடுதலையில் இத்தனை ஆழமாக அக்கரை காட்டியவர்கள் யார் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் கோடிட்டுச்சொல்லும்படியாக தமிழ் மண்ணில் யாரும் இல்லை
.பாரதியின் குரு, சகோதரி நிவேதிதை மிகச் சரியாக வழிகாட்டியதனால் பாரதிக்கு மகளிரைப்பற்றிய பார்வை விசாலமானது. படைப்புத்தளத்தில் அடிவயிற்றிலிருந்து எழும் உணர்வுக்கொப்பளித்து ச்சிந்தனையை உலுக்கிட பாரதிபோல் யாரும் எழுதிடவில்லை.பாரதிதான் அதனைத்தொடங்கி வைக்கிறார்.அன்னமூட்டிய அன்னை ஆணையில் அனலை விழுங்குவோம் பாரதி முழக்கமிடுகிறார்.நிவேதிதை பாரதியின் ஞானகுரு.பாரதியின் கண்களைத்திறந்துவிட்ட மாமேதை.மெய்யான முற்போக்கின் ஊற்றுக்கண்.
கற்பினை ஆணுக்கும் பெண்னுக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி. திருவள்ளுவர் இது விஷயத்தில் பெண்டிரை மட்டுமே சுட்டிக் 'கற்பெனும் திண்மை' என்கிறார்.சிலப்பதிகாரமோ கண்ணகியைக்கற்பின் செல்வி என்று போற்றுகிறது.கம்பன் சீதையைத் திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வி என்று பேசுகிறார்.பாரதிக்கு கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.சமத்துவமானது.
அடுப்படியில் சமைத்தல் மட்டுமா அவள் தொழில்.சட்டங்கள் இயற்றுவாள்.பாராளப்புறப்படுவாள்.புரட்சிப்பெண் அன்றோ அவள்.ஆணுக்குப்பெண் என்றும் இளைத்தவள் இல்லை பாரதிக்கு.
பராசக்தியே பாரதிக்குக்கடவுள்.மாகாளியே அவன் கும்பிடும் தெய்வம்.சோவியத் நாட்டில் மாகாளி கடைக்கண் வைத்துத்தான் புரட்சி சாத்தியமானதுவாய் பேசுவான் பாரதி.
பாஞ்சாலி சபதத்தில் பாரத அன்னையை பாஞ்சாலியாகப்பாவித்து ப்படைத்தப் பெருந்தகையோன் பாரதி.அவரின் கவிதைகள் அனல் வீசுபவை.கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் என்று நம்பிக்கை விதை வழங்குவோன்அவன்.வெள்ளையர்களை விரட்டிய பின்னர்தான் பாரதிக்கு இந்தியத்தாய் ஆனந்தக்கூத்திடுவாள்.பாஞ்சாலியின் சபதம் பாரத அன்னையின் அடிமை விலங்கு ஒடித்த காவியமாக பாரதிக்கு அனுபவமாகிறது.நாட்டின் சுதந்திரத்தை 'சுதந்திர தேவியாய்த்தரிசித்தவன் பாரதி.
தம்ழ் இனத்துப்பெண்டிர் பிஜித்தீவின் கரும்பு வயல்களில் வியர்வையும் குருதியும் சிந்தி பாழும் வயிற்றுக்கு உழைத்துச்சாவதை எண்ணி எண்ணி ஏங்கி நின்றவன் பாரதி.நாம் அழுதுகொண்டிருக்கவா பிறந்தோம் ஆண் பிள்ளைகளா நாம்? வினா தொடுக்கிறான் பாரதி.
தமிழைத்தேனாய்ப்பாவித்தவன் பாரதி செந்தமிழ் நாடு என்று வாயினால் சொன்னாலே தேன் வந்து தன் காதிலே பாய்வதாய் உணர்ந்தவன் பாரதி.வானத்தைக்கிழித்து நீ வைகுண்டம் பர்க்கவேண்டாம்.'தமிழ் பயில்' என்று கட்டளை தருகிறான் மாகவி.தமிழின் சுவை கண்டார் இங்கு அமரர் நிலை கண்டார் என்று நெஞ்சு நிமிர்த்திப்பேசிய பெருமனதுக்காரன்..
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பேசி 'சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்' கட்டளை தருகிறான்.'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'என்று வேண்டுதல் வைக்கிறான்.
வாழ்கிற மண் மீது ஆறாக்காதல் கொண்டவன் இக்கவிஞன்.எத்தனை வளம் உண்டு புவிமேலே அவை அத்தனையும் பெற்றுச்சிறப்பாய் நிற்கிறாள் தமிழ்த்தாய் என்கிறான். தமிழ் மண்ணை பெற்ற தாயாய் நேசித்தவன்.தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா' என்று பாடிய கவிஞன்.த்மிழ் நாட்டை முதன் முதலா 'திரு நாடு' என்று போற்றுகிறான் பாரதி.
பாரதிக்கு தமிழ், தமிழ் நாடு,இந்தியா,இப்பூவுலகு,பேரண்டம் எல்லாமே பெண் உரு தான்.பராசக்தியின் பல் வேறு காட்சி மாற்றங்கள் அவை.காலமே அவனுக்கு வனம்.காளித்தாய் பேரண்டமாம் மரத்தில் சுற்றித்திரியும் அழகு வண்டு. அத்தனையையும்.'யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய்' என்று பெண் தெய்வத்தை நிறைவாக வாழ்த்திய கவிஞன்.
பெண்பால் கவிஞர் அவ்வை மூதாட்டியை பாரதியைத்தன் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறான்.சாதி இரண்டொழிய வேறில்லை,இங்கு நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்று பாடிய அவ்வையைவிட புரட்சிக்காரி யார்? நமக்கு வினா வைக்கிறான் பாரதி.
'தையலை உயர்வுசெய் என்று' வேண்டுகிறான் கவிஞன். சிறியரை மேம்படச்செய்தால் தெய்வம் அத்தனை பேரையும் வாழ்த்தும் என்கிறான்.நீ என்ன இறைவனை வாழ்த்துவது உனது செயல்பாட்டால் இறைவன் இந்த மண் மீது வந்து, உன்னை வாழ்த்தட்டும் என்று கட்டுடைத்துப்பேசுகிறான் பாரதி.
மண்னின் மாண்புகளை மதித்துப்போற்றிய மாகவி பெண்விடுதலைக்கு வெளிச்சம் பாய்ச்சிய ஞானக்கதிரவன்.
கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணைவாசகத்து உட்பொருளாக அந்த பெண்தெய்வம் அவனுக்குக்காட்சியாகிறது.
'பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா' என்று கொக்கரித்த பேரன்புக்குச்சொந்தக்காரன்.பெண்விடுதலையொடு தன்னை எப்போதும் இணைத்துக்கொண்ட பாரதி பெண்விடுதலைக்குக்குரல் தந்த பொதுவுடைமையாளன். வரலாற்றில் நிலைத்த விஷயம் வணக்கத்திற்குறியஅந்தப்பேருண்மையே.
---------------------------------------------------------

No comments:

Post a Comment