வெசயம் -எஸ்ஸார்சி
அனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு அறுகால் ஆறு ஜன்னல்கள் மஞ்சளைப் பூசிக்கொண்டுதயார் ஆனது.அவன் அனுவலகத்துக்கு ஒருமாதம் விடுப்பு போட்டான்..இதற்கு செலவு ஆகாத விடுப்பு பின் எதற்கு என்றுதான் தோன்றிற்று.
ரெடிமேடாகவே அறுகாலும் ஜன்னலும் மரவாடியில் தயாராக விற்பனைக்கு இல்லையா என்ன. நாமே ஆசாரி வைத்து செய்வது போல் ஆகுமா என்று சொல்கிறார்களே.
ரெடிமேடு ரெடிமேடு தான் நாம ஆசாரி வச்சி செய்யுறதுன்னா அது வேறதான் இப்படித்தானே பேச்சு காதில்விழுகிறது.
பூதாமூர் அவுசிங்க் போர்டுக்கு அருகில் மனை வாங்கியிருந்தான். அவனுக்குத் தெரிந்தவர்களும் அங்குதானே மனை வாங்கினார்கள்.கடைகால் போட்டு கிடக்கிறது.தரைக்கு மேலே இரண்டு அடிக்கு கருங்கல் சுவர் வெளியே தெரிகிறது.அதற்கு மேலாக காங்க்ரீட் பில்ட் போட்டிருக்கிறது'..மேற்கொண்டு வேலை ஆரம்பிப்பது அறுகால் ஜன்னல் ரெடியான பின்னர்தான் என்று அவனுக்கு க் கோவிதராஜு மேஸ்திரி அறிவிப்புகொடுத்துவிட்டார்.
'காலைல மாலைல தண்ணீய மாத்திரம் தவறாம காங்க்ரீட் கட்டு சுவத்துல அடிச்சிகிட்டே இருங்க.அது ரெம்ப முக்கியம்' சொல்லிப்போன மேஸ்திரி இன்னும் திரும்பி வந்து கட்டு வேலை தொடங்க ஒருமாதமாகலாம். அதற்குள் மர வேலைகள் முடிக்க வேண்டும். அனேகமாக மர வேலைகள் எல்லாமும் முடித்துவிட்டார்கள் நான்கு ஆசாரிகளுக்கு வேலை..அன்றுதான் கடைசி நாள்.வேலை வேலை சஞ்சாயம் என்பதால் இப்படி காண்ட்றாக்ட் என்று விட்டிருந்தால் இந்நேரம் வேலை எப்பவோ முடிந்து இருக்கும்.எட்டு மணி நேர உழைப்பு எட்டு மணி நேர உல்லாசம் எட்டு மணி நேர உறக்கம் என்கிற மூன்று 'உ' க்கள் எல்லாம் வேலை காண்றாக்ட் என்று சொல்லி விட்டால் பறந்தே போய்விடுகிறது.. .
'சாரு ராயல் கடைக்கு போயி பட்டை சீல வாங்கியாருணுமே'
' என்ன பெரிய ஆசாரியாரே வேலை சாய்ந்திரம் முடியப்போவுது இப்ப வந்து பட்டை சீல அது இது ண்றீரு'
'இதான் உங்கள் கிட்ட எனக்கு புடிக்காத வெஷயம். நான் என்னா வாயில போட்டு முழங்கிடப்போறனா; வாங்கியாங்க எதா இருந்தா என்ன வேலயானாதும் மிச்சத்தை சொச்சத்தை கெடாவிட்டுப்போறவன். நா வூட்டுக்குப் போவகுள்ள பாத்துகுங்க என்னா மடியில முடிஞ்சகிட்டு போறன்னுட்டு'
''நீங்க கேக்கறது எல்லாம் அப்ப அப்ப நா வாங்கித்தருலயா இப்ப வேல முடியப்போவுதேன்னு கேட்டேன்'
' இங்க உங்க வூட்டுக்கு தச்சு வேல நடக்குது சரக்கு முடிச்சி நா இங்க வச்சிருக்கிறதை நாலு பேரு பாத்தா ஆசாரி தேவுலாம். வாங்குன காசிக்கு வேலயும் நடந்து இருக்குன்னு நெனைக்கணும். வேற என்னா ஒரு வெஷயம் நீயும் நானும் காலமாயிப்போனாலும் நம்ம பேரனுக்கு பேரன் நம்ம தச்சு வேலய பாப்பான் தேவுலாம் வேலன்னு சந்தோஷப்படுவான் தெரிதா சாரு '
'இப்ப என்னா வேணும்'
'பட்டை சீலன்னு கேளு நாலு நறுக்கா ராயல் கடையில கேட்டு வாங்கியாரணும். ராயல்கடை பெரியபாயிக்குதெரியும் வேலாயுதம் காந்தி நகரு ஆசாரின்னு சொல்லுணும் அது .சொல்லுலன்னா காரியம்தான் சுகுரா எப்பிடி ஆவும்'
'பட்டை சீல எதுக்கு'
'ஆரம்பிச்சிட்டீகளே. இப்பதானே இம்மாம் பேசுனேன். ரம்பத்துல கூரம் இல்ல.சுத்தமா போயிட்டுது பட்டை சீல வச்சி சொரண்டியாவணும். வேலன்னா சுத்தமா இருக்குணும்ல'
அவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
முதுகுன்றம் ஜங்க்ஷன் ரோடில் ராயல் ஹார்டு வேர் ஸ்டோர் இருந்தது.பெரிய பாய் கடையில் நான்கைந்து ஆசாரிகள் நின்று கதைப்பேசிக்கொடிருந்தனர். கதை என்றால் கதை இல்லை. இவர்களுக்கு வேலை இல்லாமலா இங்கு நின்று இது பேசிக்கொள்கிறார்கள்.யார் வீட்டிலேனும் தச்சு வேலையில் மும்முரமாக இருப்பார்கள்.இடுக்கில் ராயல் கடைக்கு வந்து ஆசாரிகளுக்குள் விஷயம் பரிமாரிக்கொள்வார்கள்.விஷயம் என்றால் என்ன என்கிற அந்த பரம ரகசியம் எல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்..
'பட்டை சீல நாலு வேணும்'
'ஆசாரி யாரு'
'ஆசாரி யாரா இருந்தா என்னா பாயி'
'உன் நல்லதுக்குதான் சொல்றன்.வாங்கிகினு போயி அங்க முழிக்காம இருக்கணும்ல'
'காந்தி நகர் வேலாயுதம் ஆசாரி'
' அப்பிடிபோடு அருவாளை இண்ணைக்கு மாலையோட வேல முடியுதா'
'ஆமாம் அது எப்படி அந்த சேதி உங்களுக்குத்தெரியும் பாயி'
'இந்தா நாலு பட்டை சீல கொண்டு போயி அந்த ஆசாரிண்ட கொடு எனக்கு என் வேல கெடக்கு' அவன் நூறு ரூபாயை பெரிய பாயிடம் கொடுத்தான். பாக்கி வாங்கிக்கொண்டான்.சைக்கிள் காரியரில் வாங்கிய பட்டை சீலையை பத்திரமாக வைத்துக்கொண்டு அவன் சைக்கிளை மிதித்தான்.
பூதாமுர் வளையும் சாலையில் வண்டியைத்திருப்பினான்.எதிரே தலையில் பத்து தேக்க சட்டங்களைச்சுமந்துகொண்டு ஆசாரி ஒருவர் மெதுவாக தார்ச்சாலையைக்கடந்தார். மணிமுத்தார்ற்றுப்பக்கமாகத்தான் அவர் நெளித்து நெளித்து நடந்துகொண்டிருந்தார்..
'யாரு ஆசாரி போறது'
'ஏன் நாந்தான்'
அவன்வீட்டில் வேலைசெய்துகொண்டிருந்த நான்கு ஆசாரிகளில் ஒரு ஆசாரிதான் அவர்.தாடி வைத்தக்கொண்டிருந்தார்.
'என்ன சட்டம் எல்லாம் எடுத்துகிட்டு போறீங்க் யாருது எவ்ருது என்னா சேதி இது எல்லாம்' சத்தமாகக்கேட்டான்.
'என்னா சாரு இண்ணைக்கு வேல முடியுது.உங்க கெரகபிரவேஷம் இன்னும் வருணும் அதுக்கு ஆசாரிவ நாங்க ஒரு முக்காலி ஒரு விளக்குதண்டு ஒரு மணைப்பலகை இந்த மூணும் புத்சா சேஞ்ஜி தரோணும். எங்க மொறன்னு ஒண்ணு இருக்கு.புள்ளயாரு குந்த முக்காலி காமாட்சி வெளக்கு குந்த அப்படி இல்லைன்னா ரட்சுமி வெளக்கு.குந்த ஒரு வெளக்குதண்டு, ஊட்டுக்குவர்ர வூட்டுக்கு வர்ர அந்த அய்யிரு குந்த மணைப்பலக இதுவ மூணுமில்லன்னா அது அப்புறம் ஒரு வூடாவரது தான் எப்பிடி.நானு அந்த மூணையும் ரட்சணமா செஞ்சி கொண்டாந்து புது வீடு குடி நொழையகுள்ள கூடத்துல வைப்பன்'
அவனுக்குத்தலை சுற்றியது.ஆசாரி எதோ திருடிச்செல்வதாகவும் தான் அதனைக்கண்டு ப்பிடித்து விட்டதாகவும் மனதில் கணக்கு போட்ட அவனுக்கு ஒரு புது செய்தியை இந்த தாடி வைத்த ஆசாரி சொன்னார்.
' நீங்க ராமமா இல்ல பூசையா'
'பூசை' சரியாகத்தான் சொன்னோமா என்று யோசித்தான்.
' சாரு அதுக்குத்தக்கன ரட்சுமி வெளக்கு இல்லன்னா அந்த காமாட்சி வெளக்குக்கு தண்டு நானு செய்யகுள்ள அந்த குறி வைக்கோணும்'.
' சரிசரி ஆவுட்டும்'
அவன் வீடு நோக்கி சைக்கிளை மிதித்தான்.வீட்டில் மூன்று ஆசாரிகள் மட்டும் உட்கார்ந்து கதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
'இந்தாங்க பட்டை சீல'
'அப்பிடி வையுங்க சாரு'
'அவுசரமா வேனும்னு சொன்னீங்களே'
'வேல முடிஞ்சிப்போச்சி. இப்ப என்னாத்துக்கு பட்டை சீல அப்ப்டி வையுங்க'
'என்ன வேல முடிஞ்சிப்போச்சி'
'உங்க வூட்டு ஆசாரி வேலவ முடிஞ்சி போச்சின்னேன்'
'இப்ப வாங்கியாந்தது என்ன செய்ய கொண்டு போயி ராயல் கடையில பெரிய பாயிண்ட நானு குடுத்துடலாமா ஆசாரியாரே'
'ஓ அப்பிடி போவுதா சமாச்சாரம். நல்லா இருக்குது கதை. வேற வேல இருந்தா பாருங்க சாரு'
'இனி பட்டை சீலைக்கு வேலை இல்லதானே'
'சாரு நாங்க எங்க ரம்பத்துக்கு புதுசா கூரம் வச்சாதாம் நாளைக்கு ஒருத்தன் வீட்டுக்கு வேலைக்குப்போவுலாம்.அதுக்கு பட்டை சீல வேணாமா'
'சரி கெடக்கட்டும். இன்னொரு ஆசாரி தாடி வச்சவரு இருந்தாரே அவரு எங்கே'
'வருவாரு. வயிறு செத்த வலிக்குதுன்னு வெளியில போனாரு'
'எப்பிடி வருவாரு இங்க நானு என் கண்ணால பாத்தனே வர்ர வழியில. அது என்னா தேக்க சட்டம் எல்லாம் வாரிகிட்டு போறாரு'
'நீங்க கேட்டதுக்கு தாடிக்காரரு என்னா சொன்னாரு'
' புதுசா விளக்கு தண்டு முக்காலி மணைப்பலகைன்னு செய்து கொண்டாரென்னாரு'
'ரொம்ப மோசம் சாரு நீங்க ஒரு வெஷயத்தை தெரிஞ்சிகிட்டு அப்புறம் எங்கிட்டயும் கேக்குறது என்னா நெயாயம்' ..என்றார் அந்த காந்தி நகர் வேலாயுதம் ஆசாரி.
பாக்கி ரெண்டு ஆசாரிகளும் வெற்றிலை போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் கள்ளமாக பார்த்துக்கொண்டனர்.
'அந்த மூணு ஜாமானும் கெரகபிரவேசத்துக்கு வந்துபுடும்ல ஆசாரியாரே'
'கெடக்கு வுடுங்க அதையே பேசிகிட்டு. நாங்க கிளம்புறம் கோவிந்த ராசு மேஸ்திரி வந்தார்னா சேதி சொல்லுங்க.அவுரு வேல முடிச்சாருன்னா நானு வந்து கதவுவுள எல்லாம் மாட்டி ஆட வுட இங்க வருணும். அந்த வேல பாக்கி கெடக்கு'.
அந்த மூன்று ஆசாரிகளும் அப்போதே கிளம்பிப்போயினர்.கோவிந்தராசு மேஸ்திரி அவர் சொன்னபடி வந்தார் கட்டுவேலை பூச்சு வேலை எல்லாம் முடித்தார்.பின்னே அந்த காந்தி நகர் வேலாயுத ஆசாரி வந்தார் கதவுகளை அங்கங்கு மாட்டி மாட்டி ஆடவிட்டார்.
கிரகப்பிரவேசம் திருநாளும் வந்தது.கோவிந்தராசு மேஸ்திரியும் வேலாயுத ஆசாரியும் வந்தனர். அவன் இரண்டு பேருக்குமே தங்க மோதிரம் வேட்டி சட்டை வாங்கி வைத்துக்கொடுத்தான்.
'என்னா ஆசாரியாரே அந்த முக்காலி,விளக்கு தண்டு.மணைப்பலகை செஞ்சி கொண்டாரென்னு என் தேக்க சட்டத்தை கொண்டுபோன தாடி வச்ச ஆசாரி வருல'
'சாரு படிச்சிருக்கிங்க ஆனா அந்த அளவுக்கு வெசயம்தான் எட்டுல' வேலாயுத ஆசாரி அது மட்டுமே அவனிடம் சொல்லிவிட்டு அந்த காந்தி நகர் நோக்கி ப்புறப்பட்டார்..
--------------------------------------------------------------------------------------------------------------
ி
.
No comments:
Post a Comment