பாரபட்சம்
அவன் வீடு கட்ட சென்னையில் இடம் ஒன்று
வாங்கினான். அது முடிச்சூர் அருகிலேதான். தாம்பரத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர்
போங்கள் அந்த முடிச்சூர் வரும். ஒரு அரை கிரவுண்ட்தான் அவனால் வாங்க முடிந்தது. அதுவே பெரிய சாதனையாக உணர்ந்தான். அங்கே வீடொன்று கட்டவேண்டும்.’ வாழப்போகும் அந்த வீட்டின் விலாசத்தில் சென்னை மாநகரத்துப் பின் கோடு இருந்தால்
போதாதா, ஒருவருக்கு வேறென்ன வேண்டும்’ அவன் மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டான்.
அவன் மனை வாங்கியதில் ஒரு விசேஷம். அது சி
எம் டி ஏ அப்ரூவல் பெற்ற மனை. மனையில் அவன்
சக்திக்கு ஒரு கட்டிடம் கட்டுவதைக் காண்ட்ராக்டாக விட்டான். வீட்டு
வேலை ஆரம்பிக்க வேண்டும். முதலில் பில்டிங்
பிளான் அப்ரூவல் வாங்கியாகவேண்டுமே ஆக அதற்கு விண்ணப்பங்கள் தயார் செய்தான். அதனை எடுத்துக்கொண்டு உள்ளூர் ஆட்சி மன்ற அலுவலகம் சென்றான். செயல் அதிகாரியிடம்
பவ்யமாய் நீட்டினான். செயல் அதிகாரி என்கிற
அந்தஸ்த்தில் வீடு கட்டும் அப்ரூவல் விவகாரங்களையெல்லாம் கவனிப்பதற்காகவே அந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்பாக கனமான அகலமான ரிஜிஸ்தர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் தன் மேசை மீது பிரித்துவைக்கப்பட்டுள்ளக் கோப்புக்களை
நோட்டமிட்டபடி இருந்தார்.
‘என்ன செய்தி’
‘வீடு கட்டணும். அதற்கு அப்ரூவல் வேணும். விண்ணப்பம் கொண்டு
வந்து இருக்கேன்’
அதிகாரிக்குப்பதில் சொன்னான்.
‘ஏரியா பெயர் என்ன
சொன்னீங்க’
‘நேதாஜி நகர்,
பார்வதி நகருக்கு வடக்க’
‘அந்த மடுவங்கரையிலதானே’
அவன் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருந்தான். மடுவங்கரை
என்றால் என்னவாக இருக்குமோ யோசித்தான்.
‘ஒரு பார்ட்டி
மெட்ராசுல டிராபிக் ராமசாமின்னு தெரியுமா.
அவுரு நிர்வாகத்து மேல கேசு போட்டுருக்காறு.
இங்க இங்கெல்லாம் வீடு கட்ட அரசாங்கம் அனுமதி
கொடுக்கக்கூடாதுன்னு. அதுல இந்த நேதாஜி நகரும் வருது’
‘சார் என்ன சொல்றீங்க’
‘சுப்ரீம் கோர்ட்டுல கேசு இருக்கு. நீங்க வாங்கியிருக்குற அந்த இடத்துல வீடு கட்டறதுக்கு நாங்க அப்ரூவல்
தரக்கூடாது’
‘கிரவுண்ட் அப்ரூவல் ஆயிருக்கே’
‘ அத இண்ட்விஜூவலா
வாங்கியிருப்பாங்க. அது லே அவுட் அப்ரூவல் இல்ல. தெரியுமா’
அவன் கைகளைப்பிசைந்துகொண்டு நின்றான்.
‘கேசு முடியணும். முடிஞ்சாதான் எதையும் சொல்ல வைக்கும்’
‘இப்ப என்ன செய்யலாம்னு அய்யா சொல்லுங்க’
’ கைகாசு போட்டு
வீட்ட கட்டிகிங்க. பாங்க் லோன் எதுவும்
கெடைக்காது அத மட்டும் சொல்லிடுறன்’
‘லோன் இல்லாம எப்பிடி ஆவுறது சார்’
‘ சொந்தக் கைய
வச்சி கர்ணம் போடறதுதான்.எவ்வளவு முடியுமோ அதுவரைக்கும் செய்யுலாம்ல’
விண்ணப்பத்தைத் திருப்பிக் கொடுத்தார் அதிகாரி.
‘நீங்க சொன்ன அந்த கோர்ட் கேசு இருக்குற
செய்திய ஒரு வரி என் விண்ணப்பத்து மேலேயே எழுதி குடுத்துடுங்களேன்’
‘அது முடியாதுல்ல. நீங்க விண்ணப்பத்த பதிவுத்தபால்ல அனுப்பிவையுங்க.
அது இந்த ஆபிசுக்கு வரட்டும். அத கன்செண்ட்டு
செக்ஷன்ல எனக்கு புட் அப் செய்வாங்க. நா அத பாப்பேன் படிப்பேன் ஒங்க விண்ணப்பத்துக்குப் பதில் சொல்லுவேன்’
அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.
‘வேற எதாவது ஒரு வழி எனக்கு உதவுறமாதிரி சொல்வீங்களா சார்’
‘நீங்க எங்க வர்ரீங்கன்னு தெரியுது. யார் இந்த சீட்டுல
இருந்தாலுமே அது எல்லாம் இப்ப நடக்குற காரியம் இல்லே. கோர்ட் கேசு இருக்குதுல்ல.
அதுல ஒரு தீர்ப்பு வரணும். அது எப்ப வரும்னு
எப்பிடி வரும்னு நா சொல்லமுடியாதுல்ல’
அவன் உள்ளூர்
ஆட்சி அலுவலகத்தை விட்டுப் புறப்பட்டான். எது
எது வோ யோசனை செய்தான். தெரிந்தவர்கள் உறவினர்கள் எல்லோரிடமும் கடனோ உடனோ வாங்கினான். கையில் இருந்த காசு பணம்
எல்லாவற்றையும் திரட்டிப்போட்டான். வட்டிக்கும் தான் கடன் வாங்கினான் எது எதுவோ எல்லாம்தான்.
வீடு எப்படியோ கட்டி முடித்தாயிற்று. கடன் அங்கங்கே நின்றுகொண்டிருந்தது. அவன் தொடர்ந்து கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டிருந்தான். காலம் உருண்டோடியது.
பஸ் ஸ்டாப்பிங்கிலிருந்து அவன் வீடு கொஞ்ச
தூரம் இல்லை, கொஞ்சம் தூரம்தான். அது நடக்கிற தூரமும் இல்லை. ஆட்டோ பிடித்து போகிற
தூரமும் இல்லை. டிவிஎஸ் எக்செல் ஒன்று வைத்துக்கொண்டு அங்கங்கு எனத் தடமாடிக்கொண்டு
இருந்தான். கடைத்தெருவுக்கும் வீட்டுக்கும் டூ வீலர் இல்லாமல் கதை ஆகாது. வீட்டுக்கு
வருகைதரும் விருந்தினர்கள் ஆட்டோவோ டாக்சியோ இல்லாமல் வரவும் முடியாதுதான்.
2015 நவம்பர்
மழையோ மழை. மாமழை.’ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ எங்கே போற்றுவது, பெரு வெள்ளம்தான் வந்தது. ஊர் உலகமே சென்னையை இளக்காரமாக வேடிக்கை பார்த்தது. அவன் வீட்டுக்குள்ளாய் செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீர் புகுந்து விளையாடியது. சென்னையில் இருக்கும் மூன்று
நீர் சைத்தான்களில் ஒன்று அடையாறு. அவன் வீட்டுக்கருகில் அடையாறு ஓடுவதாய் அப்போதுதான் அவனுக்குத்தெரிய வந்தது.
அது ஏதோ சிற்றோடை அல்லது கன்னி வாய்க்கால்
என்று அலட்சியமாகத்தான் அது நாள் வரை எண்ணியிருந்தான். அங்கங்கு ’இது ஓடை இது ஏரி இது ஆறு’ என்று பெயர் பலகைகள் வைத்திருந்தால்தான்
பொதுமக்களுக்குச் சவுகரியமாக இருக்குமே. அப்படியெல்லாம் அரசாங்கம் வைத்தால் இந்த மாநகரம் எப்படித்தான் உருவாவது சொல்லுங்கள். விவரமானவர்கள் என்றும் விவரமாகத்தானே
இருப்பார்கள்.
ஆட்டோ ஒன்றைப்பிடித்தான். தப்பித்தோம் பிழைத்தோம் என அவன் குடும்பத்தோடு அருகிலிருக்கும் மேற்கு தாம்பரம் நகரம் நோக்கிச் சென்றான்.
வாழும்
மக்கள் சமூகத்தில்
நடுத்தர வகுப்பாருக்கு ஏற்ற
மாதிரி
சென்னை நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது அருணா நடராஜ் லாட்ஜ். அதில்
ஒரு
அறை எடுத்துத் தங்கினான். அருகில் அடையாறு ஆனந்த பவன் இருந்தது. அடையாறு என்கிற அதுவும் அவனை விடுவதாயில்லை. வேளாவேளைக்கு எடுக்கும் பசிக்கு ஏதேனும் சாப்பிட வசதியாகவே இருந்தது. ஒரு வாரம் ஓடிப்போயிற்று. நிலைமை
கொஞ்சம் சீரடைந்தது. சென்னை மாநகரமே வெள்ள நீரில் நாறித்தான் போயிற்று. ஹெலிகாப்டர்களும் ரப்பர் போட்டுக்களும் சென்னை வீதிகளை வலம் வந்த கதை ஓய்ந்தது. ஐநூறு பேருக்கு மேல் வெள்ள நீரில்
மடிந்து போனார்கள். பொருள் நாசம் சொல்லி முடியாது.
அவனையும் எல்லோரும் துக்கம் விசாரித்தார்கள். வீட்டிலிருந்த மின்சார சாதனங்கள் எல்லாம் பற்களை இளித்துக்கொண்டு நின்றன. வெள்ளம் வடிந்து அவன் வீட்டை சுத்தம் பண்ணவே போதும் போதும் என்றானது. தெருவெங்கும் ஒரே வீச்சம். ஏதோ அழுகலின் ஆளுகை. அது சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. தரைதள வாசிகள் எல்லோரும் மொத்தமாய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள். நிகழ்ந்துவிட்ட சோகத்திலிருந்து
மீளவே வெகு நாட்களாயிற்று.
இனி இந்தப்பகுதியில்
குடியிருக்க தரை தளம் லாயக்குப்படாது. முதல்
தளத்தில் ஒரு சிறிய வீடு கட்டினால் தான் தப்பிப்பிழைக்கலாம். மழை வெள்ளம் வந்தாலும் வீட்டுப் பொருட்கள் காப்பாற்றப்படும். ஆக முதல்
தளத்தில் ஓர் அறை, சின்னதாய் ஒரு ஹால்கொண்ட வீடொன்று கட்டத் திட்டமிட்டான். கையிலிருந்தது,
நண்பர்கள் கடன் என்று ஆரம்பித்து நகை நட்டுக்களை
விற்றுக்காசாக்கி மேல் தளத்தில் வீடு என்று சொல்லும்படிக்கு ஒரு வசதி செய்து கொண்டான்.
தரை தள வீட்டைக்காலி செய்துகொண்டு மேல் வீட்டுக்கு குடிபோனான்.
பிறகென்ன சும்மாவா
கீழ் வீட்டை வாடகைக்கு விட்டான். லட்சம் ரூபாய்
மாதம் சம்பாதிப்பவர்களா அவன் தரை தள வீட்டிற்கு வாடகைக்கு வரப்போகிறார்கள். அதுதான் இல்லை. ஊறுகாய்
விற்பவர்கள், முதியோர் இல்லத்தில் ஆயா வேலை பார்ப்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள் பசு
மாட்டை தெருக்காடுகளில் மேய விட்டுவிட்டு காலை
மாலை பால் மட்டுமே கறந்து டீக்கடையில் விற்பவர்கள், மாத சம்பளத்திற்கு
அடுத்தவர் இல்லங்களில் வீடு பெருக்கி பத்து பாத்திரம் தேய்ப்பவர்கள் என்றுதான்
மாறி மாறி குடி வந்தார்கள். ஏரியா பவிசு அவ்வளவே. ’கீழ் வீடு பூட்டிக்கிடக்காமல் யாரேனும் கதவைத்திறந்தும் மூடியும் வைத்துக்கொண்டால் அதுவே
பெரிது’ என்று அவன் மனைவி ஆறுதலாய்ச்சொன்னாள்.
இனிவெள்ளம் இந்தப்பகுதிக்கு வரவே வராது.முதலில் வந்தது கூட நூறு ஆண்டுகளில் பெய்யாத ஒரு பேய் மழையால் வந்த
வினைதான் எனவும் ஆங்கங்கே பேசிக்கொண்டார்கள். யாரோ ஒரு அதிகாரி செய்துவிட்ட செம்பரம்பாக்கத்திறப்புப்
பிழை என்றும் அடித்துச்சொன்னார்கள்.
அரசும் நிர்வாகமும்
ஆறுகளை ஆழப்படுத்துகிறேன் பார் என்றார்கள். அதில் பல ஆயிரம் கோடியை செலவழித்தார்கள். ஆற்றில் வெட்டிய மண் பத்தாயிரம் லோடு லாரிகளில் எங்கெங்கோ சென்று மறைந்தது.. ஆற்றின்
கரைக்கும் ஏரியின் கரைக்கும் சுவர் எழுப்பினார்கள். அதனில் கோடி கோடியாய் காசு வந்தது. எழுப்பிய
சுவரோ மூலைக்கு மூலை உடைந்து பொக்கை பொக்கையாய்
நின்றது. ஆற்றுக்கு அங்கங்கே இரும்பு ஷட்டர் போட்டார்கள். தேவையில்லாத இடங்களில்
தேவையில்லாத அளவுகளில் அவை அசுரனாய் காட்சி தந்தன. ஆற்றின் கரைகளில் இரும்பு கம்பி
வைத்து ஃபேப்ரிகேடெட் வேலி போட்டு நூறு கிலோமீட்டர்களுக்கு
எடுத்துச்சென்றார்கள். அது எதற்கு என்று வேலை செய்யும் ஆட்களைக்கேட்டால் ‘ இத இத இங்க இங்க
வய்யின்னு அவுக சொன்னா, அது அத அந்த அந்த எடத்துல வைப்போம் வேறு எதுவும் எங்களுக்குத்தெரியாது’ என்று பவ்யமாகச்சொன்னார்கள்.
கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கிறேன் என்றார்கள். வெள்ளத்தடுப்பு
என்றார்கள். சாலையில் ஓவராய்ச் செல்லும் நீரை
சாலையின் கீழே எடுத்துச்செல்கிறோம் என்றார்கள். பெய்கின்ற பெரு மழைக்கும் அந்த கால்வாய்
அகலத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. தப்பு தப்பு துளிக்கூட சம்பந்தமே இருக்காது. மழை
அடி அடி என அடித்தால் தண்ணீர் கீழுள்ள கால்வாயில்
மட்டுமென்ன மேலிருக்கும் சாலையிலும் அது தன் ராஜ பாட்டையில் போகும்தான். மராமத்துப்பணி என்பதெல்லாம் எல்லாம்
அய்யா காசு பண்ணும் வழி. மக்களுக்கு இது
செய்கிறேன் அதுசெய்கிறேன் என்பதே இன்னார்
இன்னார் பணம் சுருட்டிக்கொள்வதற்கு யுக்தியாகத்தான்
அனுபவமானது.
செம்பரம்பாக்கம் எரியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திறந்தால்
ஊரை வெள்ளம் பாதிக்கவே செய்யாதென்றார்கள்.
ஆனால் மழைக்காலம் வந்தது இவ்வாண்டும்தான்.
பெய்தது சென்னை மாமழை. பாதி சென்னைத் தண்ணீரில் சிரிப்பாய் சிரித்தது. வேளச்சேரியில்
’அது செய்தாயிற்று இது செய்தாயிற்று’ என்று கூத்தாடினார்கள், பள்ளிக்கரணையிலோ வெள்ளம்
வதைத்து எடுத்தது. புராதன ஊர்களுக்குள் வெள்ளம் வராது என்றார்கள் தலை நரைத்த பெரியவர்கள். ஆனால் இந்த முறை மைலாப்பூர் நாறிப்போயிற்று.
திருவள்ளுவர் பிறந்த புராதன ஊர் ஆயிற்றே அது. மடிப்பாக்கம் எப்போதும் மழைக்கால கந்தல்வெளி சொல்லவே வேண்டாம். மாம்பலத்தில் ரயில்வே ஸ்டேஷனை
ஒட்டிய சங்கர மடத்துக் காஞ்சி
காமாட்சி அம்மன் கோவிலில் தரை தளம் எல்லாம் தண்ணீர் தண்ணீர்.
அவன் தரை தள வீட்டுக்குள்ளும் அந்த செம்பரம்பாக்கம் வெள்ளத்தண்ணீர்.
இம்முறை வீட்டுக்கதவை இழுத்து
வீட்டைப்பூட்டிகொண்டு ஓடினான். நகரில் எங்கும்
மின்சாரம் இல்லை வீதியில் மார் முட்டும் தண்ணீர்.
பார்க்கப்பார்க்க அவனுக்கு பி.பி எகிரிக்கொண்டிருந்தது. குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லை.
வெள்ளம் என்றால் அவன் படை
எடுக்கும் மேற்குத்தாம்பரம் அதே விடுதிக்குத்தான் போனான். அடையாறு ஆனந்தபவனும்
அங்கேதானே இருக்கிறது. மூன்று நாட்கள் விடுதியில் தங்கியிருந்தான். கனத்த மனத்தோடு அவன் வீட்டுக்குத் திரும்பினான்.தரைதள வீட்டினுள் வெள்ளத்
தண்ணீர் இல்லை. வடிந்திருந்தது. கீழ் வீட்டுக்
கூடம் முழுவதும் சேரும் சகதியும் முட்டு முட்டாய் கூடவே குப்பையும்தான். அவன் வசிக்கும்
அந்த நேதாஜி நகர் இரண்டாவது தெருவில் தண்ணீர்
சிலு சிலு என்று ஓடிக்கொண்டிருந்தது.
கீழ் வீட்டில்
வாடகைக்குக் குடியிருந்தவர் எங்கோ மறைமலை நகர் உறவினர் வீட்டுக்குப்போய்த் தங்கிவிட்டு
அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். கீழ் வீட்டு தோட்டக்கதவு, ரூம் கதவு இவை பொல பொல என உதிர்ந்து தூளாய்க் கொட்டியன. தரை
தள வீட்டில் குடியிருந்தவர் ஆந்திரா ஊறுகாய்
வியாபாரம், எல் ஜி கூட்டுப் பெருங்காயம் இத்யாதிகளை லொட லொட டூவீலரில் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்பவர். ஒரு
பத்தாயிரம் ரூபாயுக்கு விற்கும் சரக்கு வெள்ளத்தண்ணீரில் ஊறி நாசமாகியது. வீடு முழுவதும் தண்ணீரில்
நனைந்த எலுமிச்சை ஊறுகாய் மணம், பெருங்காய
மணம் வீசிக்கொண்டு இருந்தது. குளிர்சாதனப்பெட்டி
செயலிழந்து செத்துப்போயிருந்தது. மரக்கட்டில் ஊறி நெளித்துப்போனது. மெத்தைத் தலையணை
போர்வைகள் தண்ணீரில் ஊறி உப்பிக்கிடந்தன.
என் வீட்டுக்குத் தண்ணீர்
இறைக்கும்’ ஃபிக்ஸ் அண்ட் ஃபர்கெட்’ பளிச்சென்று
எழுதிக்கொண்ட சுகுணா மோட்டார், இரண்டு டூவிலர்கள், எனது பிள்ளையின் யூனிகானும் எனது லொட புட எக்செலும், செம்பரம் பாக்கம் தண்ணீர் குடித்து விட்டு மயக்கத்தில்
கிடந்தன. பேத்தி ஓட்டும் குச்சி குச்சி லேடிஸ்
சைக்கிள் வண்ணமிழந்து களைத்துக்கிடந்தது.
தெருவில் வெள்ள பாதிப்பு பார்க்க வந்த அதிகாரிகள் சிலர்
ஜீப் ஒன்றில் வந்து இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தார்கள். எழுத்தர் ஒருவர் கத்தையாக
பிரிண்ட் அடித்த காகிதம் வைத்துக்கொண்டு பென்சிலால் டிக் அடித்துக்கொண்டும் பெயரை வாசித்துக்கொண்டும்
இருந்தார்.
இந்த நகரத்து நான்கு
தெரு வாசிகள் ஒவ்வொருவராய் தம் பெயர் நிவாரணத்தொகை வழங்கப்படும் லிஸ்டில் இருக்கிறதா
என்பதனை உறுதிப்படுத்திக்கொண்டு, ஆறாயிரம்
ரூபாயுக்கான டோக்கன் பெற்று நெஞ்சை நிமிர்த்திச்சென்றார்கள்.
அவன் மெல்ல அவர்களிடம் நிவாரணத்தொகைக்கான
டோக்கன் பெற்றுவிடலாம் என ஆசை ஆசையாய் ச்சென்றான். ஊறுகாய் விற்றுக்கொண்டு
தன் வீட்டில் குடியிருக்கும் அவரையும் அழைத்துக்கொண்டு அந்த அதிகாரிகள் குழாம் முன்பாய் நின்றுகொண்டான்.
அவன் தன் பெயரைச்சொன்னான். ரேஷன் கடை ஸ்மார்ட்டைக்காட்டினான்.
அங்கு நின்றிருந்த எழுத்தர் லிஸ்ட்டைப்பார்த்துவிட்டு உதட்டைப்பிதுக்கி
’ பெயர் இல்லையே ’என்றார்.
‘இந்த தெருவில குடியிருக்கும் எல்லாருக்கும் லிஸ்ட்டில் பேரு இருக்கு,
ஆபிசுல வேல பாக்குறவங்க மாச சம்பளம் வாங்குறவங்க,
பென்சன் வாங்குறவங்க எல்லாருக்கும் பேரு இருக்கு.
எனக்குத்தான் அது இல்லை. லிஸ்டுல என் பேரு இல்லையே ஏன் சார்’
தான் தயாராக வைத்திருந்த ரேஷன்கடை ஸ்மார்ட்
கார்டை அதிகாரிகளிடம் நீட்டினான்.
‘லிஸ்ட்டில் பேரு இல்லன்னா அதுக்கு என்ன, ஒரு விண்ணப்பம்
இப்பவே தாரம். அத சரியா பூர்த்தி செஞ்சிட்டு உள்ளூர் ஆட்சி மன்ற அலுவலகத்துக்கு போங்க. ஆபிஸ்
கேட்டு கிட்ட வச்சிருக்கிறம் ஒரு பெரிய டப்பா
அத
அதுல சேத்துடுங்க. அவ்வளவுதான். உங்க வங்கி
கணக்கோட பாஸ்புத்தகம் அதன் முதல் பக்க செராக்ஸ் காபி , ஆதார் கார்டு காபி,
ரேஷன்கடை ஸ்மார்ட் கார்ட் காபி, இத மூணையும் இந்த விண்ணப்பத்தோட கூட கட்டாயமா இணைச்சிடுங்க. வரவேண்டிய நிவாரணப் பணம் உங்க வங்கி கணக்குல டாண்ணு வந்துடப்போவுது. உங்களுக்குன்னு
வர வேண்டிய பணம் எங்கயும் போயிடாது. பயப்படாதிங்க’ எத்தனை அழகாய்ச்
சொன்னார்கள்.
அவன் வீட்டில் குடியிருந்து ஊறுகாய் விற்றுப்பிழைக்கும்
அவரும் ‘ சார் நான் மதுரைக்காரன், பொழப்புக்கு சென்னை வந்து வருஷம் ரெண்டாச்சு, எனக்கு
ஏகப்பட்ட நஸ்டம், அன்னாடம் நா விக்குற பொருளு,
அந்த மொதலு போயிடுச்சி, ஃபிரிஜ் போயிடுச்சி,
துணி மணிவ போயிடுச்சி, பண்டம்பாடி எல்லாம் மொத்தமா போயிடுச்சி’
‘உனக்கு ரேஷன் கார்டு எங்க இருக்கு’ கம்பீரமாய்க் கேட்டார்
எழுத்தர்.
‘ மதுரை கல்லுபட்டில இருக்கு’ ஊறுகாய்க்காரர் சொன்னார்.
‘இப்புறம் எங்கள கேட்டா நாங்க என்ன செய்யுறது’ என்றார்
லிஸ்டை வைத்திருந்த எழுத்தர்.
வந்திருந்த குழாமில், இருந்த மூத்த அதிகாரி’ அவருக்கும் ஒரு விண்ணப்பத்த குடுங்க அவுரு அத பூர்த்தி செஞ்சி அந்த ஆபிசில் இருக்குற அதே டப்பாவுல
போடட்டும். அங்க அவுங்க விண்ணப்பத்த பாத்து எதையும் முடிவு பண்ணிகறாங்க’
கச்சிதமாகச் சொன்னார்.
மகிழ்ச்சியோடு ஊறுகாய்க்காரர் அந்த விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டார்.
அவனும் ஊறுகாய்க்காரரும் உடனே விண்ணப்பங்களை சரியாகப் பூர்த்தி செய்தனர். இணைக்க வேண்டியது எல்லாம்
இணைத்தனர். அந்த உள்ளூர் ஆட்சி மன்ற அலுவலகம் சென்று அந்த நெட்டை டப்பாவில் விண்ணப்பங்களச்
சேர்த்துவிட்டு வீடு திரும்பினார்கள். அத்தோடு சரி.
எல்லோருக்கும் இந்த ஆண்டு
வெள்ளம் பாரபட்சமில்லாமல் வந்தது. அரசின் நிவாரணம் மட்டும் அப்படி வரவில்லை.
அவன் அவ்வப்போது சொல்லிக்கொண்டான்.
--------------------------------------------
No comments:
Post a Comment