Sunday, April 25, 2021

வெள்ளையனே வெளியேறு இயக்கம் -

 

வெள்ளையனே வெளியேறு இயக்கம் -

 

வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியத்திருநாட்டு விடுதலைப்போராட்ட வரலாற்றில் சிகரமாய் விளங்குகிறது.1942 ஜூலை 14 அன்று வார்தாவில் நடைபெற்ற காங்கிரசின் மத்ய செயற்குழு ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் புரட்சித் தீர்மானத்தை வடித்தெடுத்தது

.1942 ஆகஸ்ட் 8 ஆம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் அத்தீர்மானத்தை நிறைவேற்றிப்பெருமை கொண்டது.

உலக அரங்கில் ஜப்பான் கிழக்கிந்திய நாடுகளை ஒவ்வொன்றாகவென்று தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது.அது இந்தியாவை நோக்கிய தன் பயணத்தை செயல்படுத்திக்கொண்டிருந்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது படைகளை ‘டெல்லி சலோ’ என்னும்வீர கோஷம் கொடுத்து இந்திய தேசியப்படையை வழி நடத்திக்கொண்டிருந்தார்.

இத்தருணத்தில் பிரிட்டனின் நிலமை கூடுதல் சங்கடமாகியது.இந்திய விடுதலைப்போராட்டம் கொழுந்துவிட்டெரிய ஜப்பானியப்படைகளோ பர்மாவைக்கடந்து இந்தியா நோக்கி வந்தவண்ணம் இருந்தன வாய்த்த .இத்தருணத்தைத்தனதாக்கிக்கொள்ளத்திட்டமிட்டார் மகாத்மா.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மூன்று பிரதான அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.அகிம்சையுடன் கூடிய ஒத்துழையாமை இயக்கத்தைத்தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். எத்தருணத்திலும் அந்நிய நாட்டுப்படைகள் இந்திய மண்ணில் அடி எடுத்து வைக்க அனுமதிக்கவேகூடாது.பிரிட்டீஷார்  நமது மண்ணை விட்டு வெளியேறுதல் என்பது உறுதிசெய்யப்படுதல் ஆகியன அவை.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்குப் பின்புலமாய் சர் ஸ்டா போர்டு கிரிப்சின் திட்டத்தைச்சற்று ஆராயலாம்.கிரிப்ஸ் பிரிட்டனிலுள்ள லேபர் கட்சியின் பிரதி நிதி. அவர் மார்ச்சு 2 1942 ல் இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.அவர் தெரிவித்த ஆலோசனையின் படி இரண்டாம் உலப்போர் முடிவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும்.தற்காலிக நிர்வாக அசெம்பிளி அமைக்கப்பட்டு அதனில் பிரிட்டீஷ் இந்திய பிரதி நிதிகளும் பிராந்திய அரசர்களின் பிரதி நிதிகளும் இருப்பார்கள்.பிராந்திய அரசர்கள் விரும்பினால் இந்திய ஆளுகையின் கீழ் பங்கு பெறலாம்.அல்லது தனித்துச்செயல்படவிரும்பினால் அதனையும் அனுமதிக்கலாம்.

இதனைக்கேள்வியுற்ற காந்திஜி கிரிப்சிடம்,’இது தான் உங்கள் திட்டம் என்றால் நீங்கள் அடுத்த விமானத்தைப் பிடிக்கலாம்.உங்கள் தாய் நாடு திரும்பலாம்’என்று மறுத்துரைத்தார்.

கிரிப்ஸ் தனது திட்டத்தை’பின் தேதியிடப்பட்ட காசோலை’ என்று வர்ணித்தார்..மகாத்மாவோ,’இந்தியாவை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுங்கள்.இந்தியா தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும்’ என்று பதில் அளித்தார்.

இந்திய விடுதலையின் இறுதிப்போரைத்துவக்கிய அகில இந்திய காங்கிரஸ் ஆகஸ்ட் 8 ல் பம்பாய் ஆசாத் மைதானத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை முன் மொழிந்தது. காந்திஜி ஆற்றிய அனல் தெறிக்கும்அவ்வுரையில்’செய் அல்லது செத்துமடி’ என ஆணையிட்டார்.’இப்போது விடுதலை இல்லையேல் இனி அது எப்போதும் இல்லை’ உறுதிபடச்சொன்னார்..

‘உங்களை இனி சகித்துக்கொள்ள முடியாது.உங்களை எதிர்த்து நடத்தும் இந்தப்போரில் நாங்கள் வீழவேண்டும் இல்லையேல் வாழவேண்டும்.இதுதான் எங்கள் இறுதி யுத்தம்’ அகிம்சை நெறியாளர் காந்தியே இப்படிக்கொக்கரித்தார்.

காங்கிரசின் பிரதி நிதியாய்ப்போன மீராபென் பிரிட்டீஷ் அரசால் திருப்பி அனுப்பப்படுகிறார்.’புரட்சி வழியை தனதாக்கிக்கொண்டுவிட்டது காங்கிரஸ்’ என வைசிராய்  இழித்துப்பேசுகிறார். காங்கிரஸ் பிரிட்டீஷ் அரசுக்கு 24 தினங்கள் அவகாசம் அளித்தது.

இந்திய நிலமை இப்படியே தொடருமானால் ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பும் இலக்கணமும்கேள்விக்குறியாகிவிடும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு எச்சரிக்கை தந்தார் அமெரிக்காவின் அதிபர் ரூஸ்வெல்ட்.

ஆகஸ்ட் 9 அன்று காலை ஜவஹர்லால் நேருவை அமெரிக்கா அனுப்பத்தீர்மானமாக்கிறது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால் ஆகஸ்ட் 9 அன்று கதிரவன் எழுவதற்கு முன்பாக மகாத்மா காந்தி,ஜவஹர் லால் நேரு,ஆசாத்,சர்தார் வல்லபாய் படேல்,பாபு ராஜேந்திர பிரசாத்,ஆச்சார்ய கிருபாளனி,அசப் அலி,சரோஜினி நாயுடு ஆகியோரை சிறைக்கு அனுப்பிவிடுகிறது பிரிட்டீஷ் அரசாங்கம்..

புரட்சியொத்த புதிய சாஹசத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டதாக மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் அரசு.ஆனால் இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்தது.விடுதலை ப்போராட்டத்தளபதிகள் மொத்தமாய் சிறையில் மக்களே போராட்டவடிவத்தை ஆங்காங்கு முடிவு செய்துகொண்டனர்.1857 க்குப்பிறகு வரலாறு சந்தித்த இந்திய மக்களின் தன்னெழுச்சி என இதனை நேரு வர்ணித்தார்.

செய்திப்போக்குவரத்து நாடெங்கும் சீர்குலைந்தது.மின்சாரம் முற்றாய் இல்லை.தொலைபேசிகள் ஒய்ந்துபோயின.ரயில் அசைய மறுத்தது.காவல் நிலையங்கள் பற்றி எரிந்தன.ராணுவ வண்டிகள் சின்னா பின்னமாகின.தொழிற்சாலை ஊழியர்கள் தெருவுக்கு வந்தார்கள்.’வெள்ளையனே வெளியேறு’ என்கிற முழக்கம் எங்கு நோக்கினும் கேட்டுக்கொண்டே இருந்தது.

 நான்கே மாதங்களில்538 இடங்களில் துப்பாக்கிச்சூடு,ஆயிரக்கணக்கானோர் பலியயினர் பல்லாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.26 ஆயிரம் குற்றப்பத்திரிகைகள் கொடுக்கப்பட்டன.2.5 கோடி ரூபாய் அபராதத்தொகையாக வசூலித்தது பிரிட்டீஷ் அரசு.விடுதலை வீரர்களின் இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன

.பிப்ரவரி 10,1943 அன்று உண்ணா நோன்பு துவக்குகிறார் மகாத்மா.தேசபிதாவின் வாழ்வு முடிந்துவிடும் என்று தப்புக்கணக்குப்போட்டது பிரிட்டீஷ் அரசு.

காந்திஜியின் ஆன்மபலம் அளவிடற்கரியது.தன்னம்பிக்கையின் இமயம் அல்லவா அவர்.21 நாட்கள் உண்ணா நோன்பு முடித்து எழுகிறார் மகாத்மா. நாடே அவரைக்கண்டு மகிழ்ச்சி கொள்கிறது.

அமெரிக்க பிரதிநிதி வில்லியம் பிலிப்சுக்கு காந்திஜியை சந்திக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சர்ச்சில் இந்தியப்பிரச்சனை குறித்துப்பேசவே அனுமதி மறுக்கிறார்.இத்தருணத்தில் இந்திய வைசிராயாக சர் அர்ச்பால்ட் வேவல் பொறுப்பேற்கிறார்.காங்கிரஸ் கட்சி எந்த கூட்டத்தையும் நடத்த வேவல் அனுமதி மறுக்கிறார்.

1943 வாக்கில் இந்தியா ஒன்றுபட்ட தேசமாக விடுதலை பெறுவது இனி சாத்தியமில்லை என்பது நிதர்சனமாயிற்று.இந்திய தேசிய காங்கிரசின் ஒற்றுமை முயற்சி படு படுதோல்விகண்டது.பிரிட்டீஷார் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் உதயமாகவேண்டும் என்றார் முகமதலி ஜின்னா.

உலக அரங்கில் இரண்டாம் உலகப்போர்முடிவுக்குவரும் தருணம் சமீபமானது.1945 மே 7 அன்று பாசிச ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு மடிகிறான்.

அமெரிக்க ரூஸ்வெல்ட் விலகி அங்கே ட்ரூமன் பதவிக்கு வருகிறார்.உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றி புதிய சூழலை உருவாக்குகிறது.உலக அறிஞர்கள் பெர்னாட் ஷா பெர்ட்ரண்ட் ரசல் முதலியோர் காலனிய நாடுகளின் விடுதலையை முன்னிலைப்படுத்துகின்றனர். இந்திய கப்பற்படையும்,இந்திய ராணுவமும்,பிரிட்டீஷாருக்கு எதிராக தன்னை நிலை நிறுத்தியது.1945 ஜூலை 5 அன்று தொழிற்கட்சியின் பிரதமர் அட்லி பொறுப்பேற்கிறார்.பிப்ரவரி 20 1947 அன்று இங்கிலாந்து பாராளுமன்றம் இந்திய விடுதலைத் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.1947 மார்ச்சு 22 அன்று லார்டு மவுண்ட் பேட்டன் இந்தியாவுக்குப்பொறுப்பு ஏற்கிறார். ஜூலை 18 அன்று பிரிட்டீஷ் அரசர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் விடுதலையை அங்கீகரிக்கிறார்.

பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 அன்றும் இந்தியா ஆகஸ்ட் 15 அன்றும் முழு விடுதலை பெற்ற நாடுகளாயின. வல்லபாய் பட்டேல் இந்திய பிராந்திய அரசர்களை ஒன்றிணைத்து சரித்திரம் படைக்கிறார்.

மவுண்பேட்டன் பிரிட்டீஷாரின் யூனியன் ஜாக் கொடியை 1947 ஆகஸ்ட் 14 அன்று இறக்குகிறார்.

மூவர்ண தேசியக்கொடி பட்டொளி வீசி 1947 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கி பட்டொளி வீசி பறக்கத்தொடங்கியது.

இந்திய விடுதலைப்போரில் வீழ்ந்த மலர்களை வணங்கிப்பாடுவோம்.

’ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’

-------------------------------------------------

 


No comments:

Post a Comment