Monday, April 26, 2021

எல்லாம் ஒரு கணக்கு

 

 

எல்லாம் ஒரு கணக்கு            

 

 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இன்றைக்கு ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டு இருக்கிறார். யாரைக்குற்றம் சொல்வது ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கத்தையா இல்லை ராஜ்ய சபா உறுப்பினராக்கப்பட்ட  அந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் ககாய் அவர்களையா.

 ஒரு அரசாங்கத்தை நிர்வகிக்க ஆயிரம் தில்லுமுல்லுகள் அரங்கேறும். ஆனால் நீதித்துறைக்கென்று குறைந்தபட்ச குணாம்சங்கள்  இருந்தே ஆகவேண்டும். நீதித்துறை சொல்வதை மக்கள் பொறுப்புடன் செவிமடுக்க வேண்டும். நீதித்துறை தனது கண்ணியத்தை இழக்காமல் காத்துக்கொள்வதில் கவனமாக இருக்கவேண்டும். ஜன நாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் நாட்டின்  ஆளும்வர்க்கமும் நீதிமன்றமும்  நிர்வாக எந்திரமும் அது அது தனக்கே உரிய பாதையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். அவைகளின் செயற்பாடுகளுக்கிடையே ஒரு ஒழுங்கமைதி நிலவவேண்டியது கட்டாயம்

சட்டத்தைப்பாதுகாக்கின்ற நீதி அமைப்பிற்கும், சட்டம் இயற்றும்  தகுதியும் ஆற்றலுமுடைய  மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பெரு அமைப்புக்களுக்கும் இடையே அவ்வப்போது எழும் பிணக்குகள் களையப்படவேண்டும் என்கிற  ஆரோக்கியமான நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகச்சொல்லிக்கொள்கின்றனர்.

முன்னமேயே  நீதிபதிகளை  நிர்வகிக்கின்ற கொலிஜியத்திற்கும் மய்ய அரசாங்கத்திற்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. அப்படிப்பிரச்சனைகள் இருப்பதும் கூட சோரமில்லா செயல்பாட்டின் வெளிப்பாடு என்று கொள்ளமுடியும். நீதி பரிபாலன அமைப்பும் நிர்வாக இயந்திரமும்  ஆரோக்கியமான இடைவெளிவிட்டு இயங்கினால் மட்டுமே ஒன்றுக்கொன்று நன்மைசெய்யும். ஒன்றை ஒன்று புரிந்துகொள்ள முயல்கிறேன் என்று தொடங்கிவிட்டால் நீதி நிர்வாகம் மட்டுமே தன்  சுயம் இழந்து நீர்த்துப்போகும் .அரசியல்வாதிகளோடு விவாதித்து அவர்களை  வாதத்தில் வென்று முடிவெடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. முடிவாக யார் கையில் தேசிய பொருளாதாரத்தின் சாவி இருக்கிறதோ அவர்கள் மட்டுமே இறுதியாக வெல்ல வாய்க்கும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இன்று நாடு முழுவதும் பெரும் பிரச்சனைக்கு மூலகாரணமான குடியுரிமை திருத்த சட்டம் அதனைத்தொடர்ந்து குடிமக்களின் தேசியப்பதிவேடு, குடியுரிமைப்பதிவேடு என அடுக்கி வரும் சமூக முஸ்தீபுகளுக்கு வித்தாக அமைந்தது நீதிபதி ககாய் அவர்களின் அஸ்ஸாம் மாநிலத்திற்கான உச்ச நீதிமன்ற  வழிகாட்டுதலே ஆகும். அஸ்ஸாம் மா நிலத்தில் 19 லட்சம் மக்களை குடியுரிமைப்பதிவேட்டிலிருந்து விலக்கிவைத்து மாபெரும் பிரச்சனைகளுக்கு அடித்தளமிட்டது அவர் வழங்கிய தீர்ப்பின் வெளிச்சத்திலேயே என்று சொல்லமுடியும்.

சபரிமலைக்கடவுளை எந்த வயதிலும் பெண்கள் சென்று வழிபடலாம் என்கிற ஒரு தீர்ப்பினை எதிர்த்து முளைத்த  ஒரு  வழக்கு நீதிபதி ககாய் அவர்களை த்தலைமை  நீதிபதியாகக்கொண்ட  நீதிபதிகளின் இருக்கை அமர்வுக்கு வந்தபோது அந்த சபரிமலைக்கடவுளைப் பெண்கள் வழிபடும் முடிவினை   நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகம் கொண்ட வேறு ஒரு இருக்கை அமர்வுக்கு மடை மாற்றி, , மய்ய அரசின் கனிவான கவனத்திற்கு த்தன்னை நகர்த்திக்கொண்டார் என்றும்,ஒரு குற்றச்சாட்டு அவர் மீது சொல்லப்படுகிறது.

தன்கீழ் பணியாற்றும் ஒரு குழுமத்தின் உறுப்பினரான ஒரு பெண் ஊழியரை  நீதிபதி ககாய் தவறான முறையில் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. அந்தக் குற்றச்சாட்டு எப்படியெல்லாம் கையாளப்பட்டது என்பதனை இந்த நாடே அறியும்.அந்தப்பெண்ணின் கணவர்,  சட்டம் ஒழுங்கினைக் கையாள்பவர்களால் என்ன பாடுபட்டார் என்பதனை அறிந்துதான் வைத்து இருக்கிறோம். அவருக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்ட விஷயமும், உச்ச நீதி மனற அலுவலகப் பணியிலிருந்து அவர் விரட்டப்பட்ட சமாச்சாரமும் தொடரப்பட்ட சோகங்கள். நீதிபதி ககாய்  பணிஓய்வை அடுத்து  பதவிக்கு வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் அப்பெண்ணுக்கு மறுக்கப்பட்ட பேறுகால விடுப்பும் கிடைத்தது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் பணியும் கிடைத்தது. அவமானப்படுத்தப்பட்ட அப்பெண் ஊழியருக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு  முற்றிலும் துடைத்து எறியப்பட்டது.

, தனக்கு எதிரான வழக்கில் தானே நீதிபதி என்கிற விஷயம்  நீதிபதி ககாய் அவர்களால் புதிய நடைமுறையாக உச்ச நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. வெற்றுக்கற்பனை என  உலகம் அறிந்த கடவுளர் கதைகளில் கூட இந்த சாதாரண அத்துமீறல் அரங்கேறியது இல்லை. வழக்கு உரைக்க  உதவிக்கு ஒரு வக்கீல் வைத்துக்கொள்ளவும் அந்தப்பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யக்கூட அனுமதிக்கப்படவில்லை. இவ்வழக்கு சார் நீதிமன்ற நடவடிக்கைகள்.குறிப்பெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கையின் நகல் எதுவும் அந்தப்பெண்ணுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் ராம் நாத் கோயாங்கோ சொற்பொழிவு 2018 நிகழ்வில் பங்கேற்று நீதிபதி ககாய் ஆற்றிய உரை நாட்டு மக்களை அவர் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு நிற்பவர் எனத்தான் வெளிக்காட்டியது. நியாயத்திற்கும் நேர்கொண்டபார்வைக்கும் தன்னை உதாரணமாகக்கொள்ள வழிகாட்டுவார் எனத்தான் நாடு எதிர்பார்த்தது. விசாரணைக்கைதிகளாக  மட்டுமே சிறையில் வாழும் லட்சக்கணக்கான இளைஞர்களைப்பற்றிய அவரின் புரிதலும் நீதிமன்றங்களின் நிழலைக்கூட தொட்டுப்பார்க்காத எளியமனிதர்களின் சமூக நம்பகத்தன்மைக்கு விசுவாசமாக நீதி அமைப்புக்கள் நிற்றல் என்பது பற்றி அவரின் சிந்தனையும் நம்பிக்கைத்தருவதாக அமைந்தது.

ஜனவரி 2018ல் நீதிபதியாக இருந்த ககாய் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றிய. விமரிசனம் வழங்கியவர். அரசியல் தொடர்புடைய வழக்குகளை நீதிபதிகளுக்கு வழங்குவதில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சார்பு நிலை கடைபிடிக்கப்படுவதாய்  குற்றம் சாட்டியவர் இந்திய வரலாற்றில் முதன் முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராகக் கலகக்குரல் தந்த நான்கு நீதிபதிகளில் ஒருவர்.  நீதிபதிகள் குரியென் ஜோசஃப், செலமேஸ்வர் ரஞ்சன்,ககாய் மதன்லோகர். ஆகியோர்  அப்படி எதிர்ப்புக்குரல் தந்த அந்த நால்வர்.

நீதிபதிகளோடு நட்பு பேணுவது என்பது அரசியல்வாதிகட்கு ஏற்புடையது அன்று. நீதிபதிகளுக்கு  அவர்கள் பணியில் ஊறு விளைவிக்கும் அம்சமாகவே அத்தொடர்பு அமைந்துவிடும். அமித் ஷா  தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதாசிவம் கேரள ஆளுநராக நியமனம் பெற்றது அவ்வப்போது விமரிசனத்திற்கு உள்ளாகவே செய்கிறது. சொராபுதீன் போலி என்கவுண்டர் விசாரணை தொடர்பான நீதிபதி லோயா திடீரென மரணமடைந்த  அந்த சமாச்சாரம்தான் எப்படி என்பதுவும் புதிராக பேசப்படுகிறது.

 நாட்டின் ஜனாதிபதிக்கு  தேச நலன் குறித்து சட்ட ஆலோசனை வழங்கும் நிலையில், உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த ஒருவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி எப்படித் தேவையாகிறது என்கிற விஷயம் மக்களால் கணக்கில் கொள்ளப்படும். இதனையெல்லாம் அறியாதபடிக்கு சில அப்பாவிகள் இப்படிச்செய்துவிட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் வாய்விட்டு சிரிக்க மட்டுமே வாய்க்கும்.

இவைகளை யெல்லாம் மீறிய கணக்கொன்று ஆளுங்கட்சிக்கு இருக்கவே செய்யும். மேதகு. முன்னாள் குடியரசுத்தலைவர், அப்துல்கலாம், இன்றைய குடியரசுத்தலைவர்  மேதகு ராம் நாத் கோவிந்த், ஆகியோர்  ஏதோ ஒரு கணக்கில் அத்தனை உயர்ந்த பதவிகளுக்குத்தேர்வுபெற்றார்கள். முன்பு திரு. கல்யாண் சிங்க்   உ பி யில் எப்படி முதன்மை  அமைச்சரானார் .இன்று தமிழகத்தில் தேசிய ஆளுங்கட்சியின் மாநிலத்தலமைக்கு  திரு முருகன் தேர்வான விபரம்தான்  எப்படி ? எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படைச்சூத்திரம் இல்லாமல் இல்லை.

------------------------------------------------------------------------------------

 

 

 


No comments:

Post a Comment