Monday, April 26, 2021

மேதினச்செய்தி

 

மேதினச்செய்தி                   

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்  அவன் போற்றுதலுக்குரியவன் இதை ஓங்கி ப்பிரகடனப்படுத்துவதே ’மே தினம்’. அந்த நாள் உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத்திரு நாள். தொழிலாளியின் இன்றியமையாமையை நமக்கு உணர்த்தும் நாள்.

1886 மே முதல் நாள் அமெரிக்கத்தொழிலாளிகள் சிக்காகோ நகரில் ஹே மார்கெட்பகுதியில் பஞ்சாலைத்தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் மட்டுமே  தொழிலாளியின்  உழைப்பதற்கான நேரம் என்பதை.உரக்கக்கூவி ஊர்வலம் சென்ற புரட்சி தினம்.

சிக்காகோ தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தில் தோய்த்து எடுத்த அவர்தம் உடையினை உழைப்பவர் இயக்கச் செங்கொடியாக தூக்கிப்பிடித்து கோஷம் இட்டனர் ஒவ்வொரு செங்கொடியும் தொழிலாளர்களின் தன்மானத்தைத்தூக்கிப்பிடித்துத்தான் பட்டொளி வீசிப்பறக்கிறது என்பதை எண்ண எண்ண  நமக்குக்கர்வம் கூடவேசெய்யும்..உழைப்பவனுக்கே இந்த பூமி சொந்தம்  அதுவே சத்தியம் என்பதை உணரும்போது தொழிலாளி பெருமிதம் கொள்கிறான்.

வரலாற்றில் காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஆகிய முப்பெரும் மாமனிதர்களே உழைப்பாளிகளின் பங்களிப்பினை உலகுக்கு உணர்த்தினர்.அவர்களின் சிந்தனைக்கு முன்னர் தொழிலாளி என்பவன் சமூகத்தில் சபிக்கப்பட்டவனாக பாவப்பட்டவனாக வல்லமை படைத்தவர்களின் கடைக்கண் பார்வையால் வாழ்க்கை நடத்துபவனாக கருதப்பட்டான் வல்லமை உள்ளவன் எளிய.மனிதனை விலைக்கு வாங்கி அவனை அவர்களின் ஏவல்காரனாக வைத்துக்கொள்வதே வரலாற்றில் வழமையாக இருந்தது.

பொதுவுடைமை தத்துவம்  என்னும் வெளிச்சம் மலர்ந்த பின்னரே தொழிலாளர்கள் வர்க்க ஞானம் என்னும் விழிப்புண்ர்வு பெற்றனர்.

ஏதுமற்ற உழைக்கும் கூட்டத்தை, நசுக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தை, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பகுதியை தட்டி எழுப்பும் பெரும்பணியை, தத்தமது கோரிக்கைகளை வெல்வது மட்டுமல்லாமல், தொழிற்சங்க அமைப்புக்கள் செய்யவேண்டிய கடமை விதிக்கப்பட்டே இருக்கின்றது.ஓய்வில்லாத சமூகத் திருப்பணி அது.அப்பணி ஓய்வில்லாது தொடர்ந்து நிகழ்த்தப்பட தொழிலாலர்கள் நாம் மே நாளில் சபதமேற்போம்.போராட்ட உண்ர்வு என்னும் கனல் உயிர்ப்போடு காப்பாற்றப்படவேண்டிபெரு விஷயம்.அதுவே நமது முழுமுதற்கடமையாகிறது

.எந்தஒரு சமூக விடுதலைக்கும் தொழிலாளர்களின் பங்கு என்பது இல்லாமல் அது சாத்தியப்படுவதில்லை.இந்திய விடுதலை ப்போராட்டத்திலும் நமது தொழிலாளர்களின் பங்கு கணிசமானது.பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைத்தொழிலாளர்களும்,மத்யஅரசு ஊழியர்களும்,ரயில்வே அஞ்சல் தொழிலாளர்களும் ராணுவ வீரர்களும்,கப்பல் படை வீரர்களும் என அணிவகுத்துப்போராடி ரத்தம் சிந்திப் பெற்றதுவே நமது விடுதலை

.ஒரு லட்சத்து எண்பதனாயிரம் மனித உயிர்களை பலிகொடுத்துப்பெற்ற சுதந்திரம்  நாடு.விடுதலை பெறுங்காலை நாம் இழந்த மனித உயிர்கள்பல லட்சங்களைத்தாண்டும்.மதக்கலவரம் வித்தாகி விடமான சோகக்கதை அது.

நமது நாடும் நமது இயற்கைச்செல்வங்களும் எல்லோர்க்கும் உரியன. நாம் எல்லோரும் இந்திய மக்கள்.

சாதியின் பேரால் இந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஆயிரமாயிரம்.சாதிய நஞ்சு நமது மக்களின் குருதியில் கலந்துஆங்காங்கே   கோரதாண்டவமாடுகிறது.எத்தனை சான்றோர்கள் இந்த மண்ணில் என்ன மொழிந்தாலும் அது நம் மக்களை நல்வழிப்படுத்த ப்போதுமானதாகவில்லைஜன நாயகத்தில் .வோட்டு வங்கி அரசியல் என்பது நிதர்சனமானபிறகு சாதிய சமாச்சாரங்கள் கெட்டிப்படுத்தப்பட்டுகாட்சியளிக்கின்றன.

மக்கள்தொகை எண்ணிக்கையில் பாதிக்கு மேலாக.இருக்கும் பெண்களுக்கு முற்றாக விடுதலை கிடைத்தபாடில்லை.33சதவிகிதம் பாராளுமன்றஉறுப்பினர் பங்கிற்கே பெண்களுக்கு இன்றுவரை ஒரு நியாயம் கிடைத்தபாடில்லை.பெண்களின் பாதுகாப்பு என்பது வக்கிரமாகிவரும் சமூக சூழலில் எண்ணிப்பார்க்கவே முடியாத விஷயமாகியிருக்கிறது.

காண்ட்ராக்ட் என்கிற பெயராலே உழைப்புச்சுரண்டல் நாடெங்கும் கும்மாளம் போடுகிறது.அரசாங்கப்பணிகள் காண்ட்ராக்ட் விடப்பட்டு நடைபெறுதல் என்பது நம்மை வேதனைப்படுத்துகிறது.முன்னுதாரண்மாக இருக்கவேண்டிய அரசாங்க நிறுவனங்கள் காண்ட்ராட் என்பதைக்கைக்கொள்வது ஆரோக்கியமான விஷயமாகாது.மக்கள் அரசாங்கம் என்பது எல்லோர் நலனையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டியது மறந்துபோய் வெகுகாலமாயிற்று.

கல்வி நிறுவனங்கள் வணிகமயமாகி தம் தொழிலை ஜாம் ஜாம் என்று நடத்துகின்றன.எல் கே ஜி சேர்ப்புக்கே மூன்று லட்சம் ரூபாய் கட்டாயம் என்பதுவும் அதற்கே இடம் கிடைப்பது நிச்சயம் இல்லை என்பதுவும் நடைமுறையாகி இருக்கிறது.அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளோடு போட்டி போடும் நிலையில் என்றும் இருந்தது இல்லை.வாய்ப்பு உள்ளவர்கள் நல்ல தரமான கல்வியும் வாய்ப்பற்றவர்கள் பெயரளவுக்கும் கல்வி கற்க வேண்டிய சூழல்.சமூகம் சீராக வளர்ச்சி என்பதை ப்புறந்தள்ளி ஏற்றத்தாழ்வான சமூகம் நம் கண் முன்னே சமைக்கப்படுகிறது.இந்திய அரசியல் நிர்ணய சட்டப்பிதாமகர்கள் மனம் குமைந்துதான் போவார்கள்.

மருத்துவ சேவை என்பதும் வணிகமயமாகி அனுபவமாகிறது.அரசாங்க மருத்துவ மனைகளிலே பற்றாக்குறை. நோயாளர் மக்கள் கூட்டம்அலை மோதுகிறது.சாதாரண மக்களுக்கு அங்கே நிறைவான சேவை கிடைக்கிறதா என்றால் அதுபற்றி விவாதமே வேண்டாம்.பணத்தை மூட்டை கட்டிகொண்டு தனியார் மருத்துவமனக்குப்போக சாத்தியப்படுமானால் நோயாளிக்கு நிவாரணம் கிடைக்கலாம்.

விவசாயிகளின் நிலை பரிதாபமானது.அவன் வயலில் ஆறுமாதங்கள் உழைத்துக்கொண்டு வெளிக்கொண்டுவந்த பண்டங்களுக்கு க்கட்டுப்படியாகும் விலை என்றும் இல்லை.அவன் சிந்தும் கண்ணீரை ப்பார்ப்பதற்கு யாரும் இல்லை.இயற்கையின் சதி ஒருபுறம்மனிதர்களின் சுரண்டல் மறுபுறம்.தற்கொலை செய்துகொள்வதுமட்டுமே விவசாயிக்கு சாத்தியப்படுகிற விஷயமாக இருக்கிறது.

தண்ணீர் காற்று ஆகாயம் கடல் ஆற்றுமணல்என்கிற இயற்கைச்செல்வங்கள் சமூக ப்பார்வையற்றவர்களின் வளைத்துக்குள் சிக்கி சீரழிந்துகொண்டு வருகின்றன.

வங்கிகளுக்கும் சாதாரணமனிதனுக்குமான ஆரோக்கியமான தொடர்பு அறுந்துபோய் வெகுகாலம் ஆயிற்று.வங்கிகள் நமக்காக செயல்படுகின்றன என்பதை சாதாரண மனிதன் நினைத்துப்பார்த்த ஒரு பொற்காலம் இங்கே இருந்ததுண்மை.இன்று நிலமை அப்படி இல்லையே.

கடவுளின் பேரால் சண்டைகள் தொடர்கதையாக அரங்கேறிவருதலைக்கண்கிறோம்.இந்த மண்ணிற்கும் அத்தகைய சண்டைக்கும் எந்த ஒட்டும் உறவும் இல்லை.அறிவும் அன்பும் தெய்வங்களென்பதுவே இந்தமண்ணின் சாரம்.

இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏன் மாணவிகள் போதைப்பழக்கத்திற்கும்  பாட்டாளி மனிதர்கள் குடிப்பழக்கத்திற்கும் அடிமைகள் ஆகி எத்தனையோகாலம் ஆயிற்று.

பாலியல் வன்மங்கள்  கண் முன்னே தொடர்கதை.சிறார் சித்திரவதைப்படுவது நம் கண்களை ஈரமாக்குகின்றன.

இவை எல்லாவற்றையும் சிந்திக்கவேண்டிய பெருங்கடமை ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிச்சயம் இருக்கிறது.

எல்லோரும் ஓர்விலை எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

நாம் பெற்ற தாய் நாட்டு விடுதலை பொருள்பொதிந்த ஒன்றாக அமைய நமது பங்கு என்ன என்பதை ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயம் சிந்திக்கவேண்டிய நேரம் இது.

மேதினம் நம்மை வலுவான இயக்கம் காண நெறிப்படுத்தட்டும்

----------------------------------------------------------------

 

 

 


No comments:

Post a Comment