Sunday, April 25, 2021

கொரானா

 


 

 

கொரானா வைரசுக்கு

சாதியில்லை மதமில்லை

ஏழை இல்லை

பணக்காரனும் இல்லை

கிழக்குமில்லை மேற்கும்இல்லை

தெற்குமில்லை வடக்கு இல்லை

ஐ நா சபையின் நாட்டாண்மை இல்லை

அமெரிக்கா என்ன

சீனா என்ன

யாராயிருந்தால் யாருக்கென்ன

கொத்துக்கொத்தாய்

மடிகிறது மக்களிளினம்

வீட்டுக்குள் அடங்கி

உலகம் சுறுங்கி

விழி பிதுங்கி

பெரு மூச்சு விடுகிறது

ஏப்ரல் ஐந்து இருபது இருபது

ஒன்பதுமணி இரவு

ஒன்பது நிமிடம் விளக்கேற்றக்

கேட்டுக்கொண்டார் பிரதமர் மோடி.

அவருக்குத்தெரிந்தது சொல்கிறார்

நான் நினைக்க அது அரசியல் என்கிறார்கள்

சிந்திக்கத்தெரிந்தவர்கள்

இருக்கலாம்

இல்லாமலும் இருக்கலாம்

மக்களினம் காக்கப்பட

யாதும் செய்யலாம்

மக்களின் அனைவரின்  நல்வாழ்வு மட்டுமே

பிரதானம்

பிறவெல்லாம் பின்.

 

 

கண்ணுக்குத்தெரியாத

வைரஸ் ஒன்றினால்

இத்தனை ப்பெரிய உலகம்

கதறிக்கதறி அழுகிறது

இருக்கும் இடத்திலேயே

மனிதர்கள் முடங்கிக்கிடக்கிறார்கள்

ஓயாது சென்ற பயணம்

ஓய்ந்து போனது

சாலைகளில் சுடுகாட்டு அமைதி

பெரிய மனிதன் சிறிய மனிதன்

வித்தியாசம் ஏது இங்கு

பணக்காரன் ஏழை

வித்தியாசம்தான் ஏது

வைரசுக்கு உயிர் உண்டா

அது உயிரற்ற பொருளா

கொரானா வைரஸ்  கோவிட்19

மனித உயிர்களைக்குறிவைத்து

க்கபளிகரம் செய்கிறது

ஆயிரம் ஆயிரமாய்

இலட்சம் இலடசமாய் தொடர்கிறது மரணம்

இரண்டாம் உலகப்போர் பார்த்தவர்கள்

இன்றுதான் பார்க்கிறார்கள்

மொத்தமாய் மரணம்

தகவல் சாதனங்கள்

பணி செய்து பணி செய்து

சோர்ந்து கிடக்கின்றன

அம்மை காலரா மலேரியா

பிளேக் அந்த வரிசையில் கொரானா

சுனாமி எல்லாம் ஜுஜுபி

இப்படி இக்கதை

எத்தனை நாள் தொடருமோ

மனிதகுலம் பிழைத்து எழப்

பிரார்த்தனை செய்கிறேன்

சம்பவாமி யுகே யுகே

என்கிறார்களே

எந்தக்கடவுளுக்கும்

மக்கள் ஓலமிட்டு அழும் சேதி

கேட்கவே இல்லையா

தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும்

திறக்கப்படவும் இல்லை

கொடுக்கப்படவுமில்லை

மனித உயிர்கள்

பலி இங்கு தொடர்ந்துகொண்டே

உலகின்பக்கேணி

என்பது பொய்யாய்ப்போனது

செத்துப்போனார்கள்

போனார்கள் எப்படியோ

இருப்பவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்

சிறு பிள்ளைகளின்

எதிர்காலம் குறித்து

மனங்குமுறி அழலாம் அவ்வளவே

போட்டியும் பொறாமையும்

சுய நலமும் ஆணவமும்

கொடி கட்டிப்பறந்தன

மதங்கள் சாதி இனப்பூசல்கள்

கொட்டம் சொல்லிமாளாது

மனிதகுலம் வெட்கப்படவேண்டும்

இத்தனை விலை கொடுத்தும்

நல்லது கற்போமா நாம்

யாரும் கற்பனையே செய்திராத

மனித அவலம்

கண்முன்னே காட்சியாகிறது

கடவுள்கள் எங்கே

கேட்கக்கூட யாருமில்லை

மருத்துவர்களும் செவிலியர்களும்

தூய்மைப்பணியாளர்களும்

தெய்வமாய்த்தெரிகிறார்கள்

அவர்கள் சேவையின்றி

மனித உயிர்கள்

எப்படித்தான் வாழும்

மருத்துவப்படிப்பும் மனித நேயமும்

குழைத்து வாழ்பவர்கள்

நடமாடும் தெய்வங்கள்

யுத்தத்திற்கென உலகம்

கொட்டிய காசு

ரானுவம் நிர்வகிக்க

உலகம் செய்துவரும் செலவு

கோடான கோடி கோடி

அத்தனையும் கேலிக்கூத்தானது

கண்ணுக்குத்தெரியாத

கொரோனா முன்னே

நீதி மன்றங்கள்

அங்கங்கே திண்டுக்கல் பூட்டோடு

நீதிமான்கள்

படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறார்கள்

சட்டங்கள் சவமாகிக்கிடக்கின்றன

கருப்பு அங்கிக்கும்

மனித இருப்புக்குமான பந்தம் நொறுங்கிப்போனது

சிறைவாசிகளில்

தவறேதும் செய்யாத நிரபராதிகள்

ஆயிரமாயிரம்

அப்பாவிகள் தண்டிக்கப்படகூடாது

குற்றவாளிகள் தப்பினால் தவறில்லை

எழுதிய எழுத்துக்கள்

செத்துப்போய் காலங்கள் பலவானது

கொரோனா எங்கிருந்து தொடங்கியது

தெரிவது அது மட்டுமே

ஏன் தொடங்கிற்று

வினாவுக்கு விடை காணோம்

மருந்து காண்டுபிடிக்க ஆய்வுக்கூடங்கள்

ராப்பகலாய் கண்விழிக்கின்றன

விடை என்று வருமோ

இயற்கை மனிதனைத்தண்டிக்க

விட்ட சாபம் இதுவோ

பேராசைக்கார மனிதன்

அறிவின் துணைகொண்டு

எழுதிய அசிங்கமோ இது

என்றேனும் ஒரு நாள்

விடைதெரியலாம் உலகிற்கு

தவறு செய்தவன்

தான் செய்தது ஒப்புக்கொண்டு

வெளிவர வா காத்திருக்கிறான்

தேசபிதா காந்தியைச்சுட்டவன்கூட

செய்தது சரி என்று

சொல்லித்தான் போய்ச்சேர்ந்தான்

வேறெங்கு போய் விடை

காண ஆராயவேண்டும்

யாரால் என்ன செய்ய இயலும்

நாட்டின் பிரதமர்

மருத்துவர் செவிலியர் நோயிலிருந்துவிடை கண்டோர்

எல்லாரிடமும் உரையாடி முடிக்கிறார்

வணக்கமும் வாழ்த்தும் நன்றியும்

தெரிவித்தார் கச்சிதமாக

தகவல் சாதனம்

வளர்ந்திருக்கிறது இமயமாக

நல்லது நிகழ

மனம் அவாவுகிறது

இயற்கையின் திருவுளம் எப்படியோ

யாரையும் சட்டை செய்யாது

கும்மாளமடித்தபடி

மக்கள் இனம் கண்ணீர் சிந்துகிறது

அமெரிக்கா சென்று காசு அள்ள

மொட்டை போட்டு பழனிக்குப்

பால் காவடி எடுத்தவர்கள்

பழனிமுருகன் அடைத்துக்கிடக்க

நியுயார்க் நகரில்

ஈரல் குலை நடுங்க

போது கழிக்கிறார்கள்

யாரும் அறிந்திலர்

எப்போது என்ன வருமன்று

வள்ளுவரின் திருமொழி

நெடுநல் உளன் ஒருவன்

இன்றிலை எனும்

பெருமைபடைத்திவ்வுலகு

கச்சிதமாக விளங்குகிறது

கருத்து மனிதனுக்கு.

ஜெர்மானிய தேசத்து அமைச்சர்

தூக்கிட்டு தற்கொலையாம்

பொருளாதாரச்சரிவை சரிக்கட்டுவது

சாத்தியமில்லை தெரிந்துபோனதன்

விளைவு தந்த வலி.

ஸ்பெயின் இளவரசி மரணம்

கொரோனா யாரையும் விட்டு வைக்கவில்லை

இங்கிலாந்து பிரதமர்

ஐசியுவில் மூச்சு விடுகிறார்

வெள்ளைமாளிகை டிரம்ப்

இந்தியாவில்மருந்து

 மாத்திரை கேட்டுப்பெறுகிறார்

பொருளாதாரச்சரிவுகள்

எதிர்கொள்வதெப்படி

புலப்படாத குழப்பத்தில்

அந்தகாரம் கண்ணெதிரே

உலகம் பெருமூச்சு விடுகிறது.

எளிய மனிதனை

எக்காளமிட்டு எள்ளி நகையாடிய

சமூக அடுக்குக்கு

போதமிந்த தண்டனை

நல்லவர்களும்

அன்புடை மனிதர்களும்

படுகிறார்கள் கூடவே

விடையும் பெறுகிறார்கள்

உலகை விட்டு

வேறென்ன செய்ய

எல்லா வினாக்களுக்கும்

விடை நமக்கே தெரிந்திருந்தால்

பிறகென்ன பாக்கி இங்கே

தெரியாத விடைகள்

எப்போதுமிருக்கும்

தெரியப்போராடலாம்

தெரியாமல் போகலாம்

தெரியலாம் சிறிது

எதுவும் தெரிந்த எல்லாம் அறிந்த

ஏகாம்பரங்கள் அல்லர் நாம்.

------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 


No comments:

Post a Comment