Monday, April 26, 2021

யயாதி

 

யயாதி வழங்கிய காண்டேகரும் மொழிபெயர்த்த  கா ஸ்ரீ ஸ்ரீ யும் 

மகாபாரதக்கதையில் வரும் பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி.அத்தினாபுரத்துச்சக்கரவர்த்தி நகுஷனின் குமாரன். நகுஷனோ இந்திரனை வெல்லும் ஆற்றல் பெற்றும் அகத்தியமுனியிடம் சாபம் பெற்றவன்.

யதி, யயாதி இருவரும் நகுஷனின் புதல்வர்கள் .யதி அரண்மனையை விட்டு நீங்கி வனத்தை சரண் அடைகிறான். யயாதி அரண்மனையை அலங்கரித்துக்கொண்டே வளர்கிறான்.’நகுஷ ராஜாவின் மக்கள் ஒரு போதும் சுகமாக வாழமாட்டார்கள்’ என்கிற அகத்திய முனிவனின் சாபம் இந்த சகோதரர்களுக்கு தலைக்கு மேலாக அச்சுறுத்திக்கொண்டே நிற்கிறது.

’யயாதி’ என்கிற இந்த நாவல் ஒரு புராண நாவலன்று.புராணக்கதையினை ஆதாரமாகக்கொண்டு காண்டேகர் மராத்தியில் படைத்திட்ட மாபெறும் அற்புதம்.யயாதியை பெண் பித்தனாக நிறுத்தும் மகாபாரதத்தினின்றும் சற்று ஆழமாகச்சிந்தித்து பெருங்கவி காளிதாசனோடு காண்டேகர் ஒத்துப்போகிறார்.

அக்கினியை அந்தணர்களை சாட்சியாய்க்கொண்டு யயாதி தேவயானியை மணக்கிறான்.தேவயானியோ அசுர குரு சுக்ராச்சாரியரின் மகள். தேவயானி யயாதிக்கு வழங்க மறுத்த அந்த அன்பினை தேவயானியின் பணிப்பெண்ணாய் ப்பணிக்கப்பட்ட சர்மிஷ்டை வழங்குகிறாள்.

காளிதாசனின் கூற்றுப்படி தன் சொந்த சுகத்தையும் கடந்து கணவனின் அன்புக்காக நிற்பவளாய் பெண் வெற்றி பெறுகிறாள்.சர்மிஷ்ட்டயை  காண்டேகர் அப்படித்தான் பார்க்கிறார்.கணவனுக்கு மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பிற்குத்தேவையான பரிவு ஈரம் தீவிரம், மேன்மை ஆகிய எதுவும் தேவயானிடமிருந்து யயாதிக்குக்கிட்டவில்லைதான்.

சஞ்சீவினி என்னும் உயிர்ப்பிக்கும் வித்தையை சுக்கிராச்சாரியரிடமிருந்து கற்றுக்கொண்ட கசன் தேவருலகம் செல்கிறான்.துறவி கசன் தேவர்களின் குரு பிரகஸ்பதியின் குமாரன்.ஆங்கிரச முனிவரின் பேரன். மகாபாரதக்கதையிலிருந்து  காண்டேகரின் கசன் வித்தியாசமானவன் .அளவறிந்து வாழ்பவன்.எல்லைகளை மதித்து வெற்றிகொள்பவன்.தேவயானியிடம் கொள்கின்ற முதற்காதலை ஞானத்தால் செரித்து வெற்றி கொள்கிறான். காமவிஷயத்தை ஆத்மபலத்தால் சமாளித்து எழுகிறான்.யயாதி அவனின் சகோதரன் யதி சர்மிஷ்டை சர்மிஷ்டைக்கும் யயாதிக்கும் புதல்வனான புரு ராஜமாதா நகுஷனின் மனைவி அனைவரிடமும் இணையான அன்பினை ப்பொழிகின்ற மனோதர்மத்தை தனதாக்கிக்கொள்கிறான்.

காண்டேகர் கசனின் கடிதத்தை தேவயானி படிப்பதாக எழுதுகிறார். இயற்கைக்கும் இறைவனுக்கும் நடுவிலே மிகச்சிறந்த இணைப்பாகத்திகழ்பவன் மனிதன் என்றும் தாகத்தினால் தவிக்கும் மனிதனின் வேட்கையைத்தணிக்கும்  அந்த ஆறு அவன் சிறிது முன்னால் ஆழத்தில் சென்றால் அவனுடைய உயிரையே பறித்து விடுகிறது என்னும் விஷயத்தைச்சொல்கிறார்.

மனிதன் இரட்டைகளாகவே உலகைப்பார்க்கிறான். நன்மை தீமை, தர்மம் அதர்மம்,உடல் ஆத்மா,ஆண் பெண், என்கிறபடியாய்.இறைவனோ எல்லா இரட்டை நிலைகளையும் கடந்தவன் என்கிறார் காண்டேகர். வடலூர் வள்ளல் ராமலிங்கரின் இறைவன் கல்லார்க்கும் கற்றவர்க்கும்,வல்லார்க்கும் மாட்டார்க்கும்,மதியார்க்கும் மதிப்பவர்க்கும், நரர்களுக்கும் சுரர்களுக்கும் என்கிற இரட்டை நிலைகளைக்கடந்தவன் என்பதை இங்கே நினைவுபடுத்தி சிந்திக்கலாம்.

காண்டேகர் குறிப்பிடுகிறார் ‘இல்லறம் என்பது உயர்ந்த தூய வேள்வி. ஆயிரம் அசுவமேத யாகங்களின் புண்ணியம் இதில் அடங்கிக்கிடக்கிறது. எனினும் இந்த இல்லற வேள்வி அது நிறைவேறவேண்டுமானால் கணவனும் மனைவியும் அதற்குக்கொடுக்கவேண்டிய முதல் அவி தங்கள் தங்கள் அகங்காரத்தை துறப்பதுதான் இந்த அற்புத விஷயத்தை தமிழ் வள்ளுவரின் மங்கலம் என்ப மனை மாட்சியோடு எண்ணிப்பார்க்கலாம்.

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து                 குறள் எண் 48).. என்கிற துறவறத்தை வெல்கின்ற இல்லறத்தையும் ஒப்பிட்டு நோக்கலாம். இந்தப்புனிதத்தில் ஆணுக்கு ஒரு விளக்கமும் பெண்ணுக்கு ஒரு விளக்கமும் தருகிறார் காண்டேகர். ஆண் உருவமற்ற பொருட்களின் பின்னால் ஓடுகிறான்..புகழ், ஆத்மா,,தவம், வீரம் ஆண்டவன்முதலிய விஷயங்கள் அவனை விரைவில் கவர்கின்றன.ஆனால் பெண் இவற்றில் சடக்கென்று மயங்குவதில்லை.அவளை க்காதல், கணவன்,குழந்தை,,தொண்டு,குடும்பம் என்கிற உயிருள்ள பொருள்களே பெரிதும் கவர்கின்றன.

காண்டேகர் ஒரு வரையறை தருகிறார்.’’ பெண் மனத்தை அடக்கித்தியாகம் செய்வாள்.ஆனால் அது உயிருள்ள பொருள்களுக்காக மட்டுமே. உருவமற்ற பொருள்களிடம் ஆணைப்போல் அவள் ஆர்வம் கொள்வதில்லை தன்னிடமுள்ள அனைத்தையும் தந்து வழிபடுவதற்கு அல்லது தன் கண்ணீரை அபிஷேகம் செய்வதற்கு அவளுக்கு மூர்த்தம் வேண்டும். ஆண் இயல்பிலேயே வானத்தை வழிபடுகிறான்.பூமியை வழிபடுவதே பெண்ணுக்கு மிகவும் பிடித்தமானது’

பொறுப்புள்ள வாசகனை, காண்டேகரின் எழுத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. படித்து படித்து, சிந்தித்து சிந்தித்து,ரசித்து ரசித்து புரிதலை ஆழமாய் அகலமாய் க்கொண்டுமட்டுமே இந்த ப்படைப்பினை அணுகமுடிகிறது.

யயாதியின் உயிர் நண்பன் மாதவன் .சர்மிஷ்டையைக்காத்து அப்புறப்படுத்தியதில் இயற்கையின் இடரால் ஆரோக்யம் இழந்து மாய்ந்தவன். நட்புக்காக த்தன் உயிரைத்தியாகம் செய்த உத்தமன்.அவனின் இழப்பில் யயாதி இப்படிப்பேசுகிறான்.

‘மனிதன் என்று நாம் எவனை மதித்துப்போற்றுகிறோமோ ஆண்டவனின் இவ்வுலகத்து ப்பதுமை என்று கூறி எவனுடைய செயல் திறமையை வழிபடுகிறோமோ அந்த மனிதன் எவன் ? உலகம் என்ற விரிவான மரத்திலுள்ள சிறிய இலை அவன்’ இந்தப்பேரண்டத்தைப்பெருவனமாய் இப்பூவுலகத்தினை ஒரு விருட்சமாய் மனித இருப்பை ஒரு இலையாய் ஒப்பீடு செய்கிறார் காண்டேகர் மாகவி.பாரதியின் காலமும் காளிசக்தி என்னும் ஒரு வண்டும் நம் நினைவுக்கு வந்துவிடும்.

சர்மிஷ்டை குமாரன் பிருகுவுக்குக் கசன் தன் தவ வலிமையால் இளமையை மீட்டுத்தருகிறான் புதிய வாழ்வை பெற்றுக்கொண்ட யயாதி இத்தகு அறிவுரை வழங்குகிறான்.’காமம் பொருள் என்னும் இவ்விரு புருடார்த்தங்களை எப்போதும் கடிவாளமிட்டு காக்க வேண்டிய கடமை அறம் என்னும் புருடார்த்தத்திற்கானது. அறம் பொருள் வீடு என்கிற புருடார்த்தங்களில் இன்று  பொருளும் இன்பமும் மலிந்து கிடக்கின்றன.அறம் அதனைக்கட்டுப்படுத்தாது செயலிழந்து ஊனமாகிக்கிடப்பதையும் சுட்டுவது தன் விழைவு என்கிறார். காண்டேகரின் பெரு விருப்பம் அது என்று அறிந்து நாம்  பிரமிக்கிறோம்.

யயாதியைத்தமிழில் தந்த கா.ஸ்ரீ .ஸ்ரீ( கா.ஸ்ரீ. ஸ்ரீ நிவாசார்யார்) மொழிபெயர்ப்பில் உச்சத்தை எட்டியிருக்கிறார்.மூலமா அல்லது மொழிபெயர்ப்பா என்பதனை வாசகன் பிரித்து அறியமுடியாமல் திக்குமுக்கு ஆடுகிறான்.மூலத்தை வென்று நிற்கும் மொழிபெயர்ப்பு என்பது யயாதியில் சித்தித்து இருக்கிறது. நாவலைப்படிக்கும் போதெல்லாம் மேலட்டையைத்திருப்பி திருப்பி மொழிபெயர்ப்புதான் என்று உறுதி செய்துகொள்ள வேண்டியதாகிறது.

தமிழ் வாசகர்களுக்கு காண்டேகரை அறிமுகம் செய்து ஞானசம்பந்தம் ஏற்படுத்திக்கொடுத்தமை கா ஸ்ரீ ஸ்ரீ என்கிற மொழிபெயர்ப்பாளனுக்கு வசப்பட்டிருக்கிறது. தாய்மொழி தமிழ் ஆகி பல இந்திய மொழிகளில் வல்லமை பெற்று நமது தமிழ் பண்பாட்டுக்கு கருத்து வளம் சேர்த்தமை போற்றுதலுக்குறிய தொண்டு என்று வரலாறு அவரின் படைப்பு பற்றி என்றும் பெருமையோடு பேசும்.

--------------------------------------------------------

 

 .


No comments:

Post a Comment