Sunday, April 21, 2013





வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்                                    - எஸ்ஸார்சி

ஒரு நாள் என்  அலுவலக நண்பன் என்னிடம் ,
            'நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
            வித்தகர்க்கல்லால் அரிது'. என்னும் குறளில் நத்தம் என்பதற்கு ப்பொருள் என்ன என்று  என்னிடம் கேட்டான்.அவன் பள்ளி செல்லும் மகளின் ஐய்யம் அவனிடம் வந்து என்னிடம் வந்துவிட்டது.எனக்கும் பொருள் சரியாக சொல்ல முடியாதுபோகவே சபாநாயகம் சாரைக்கேட்கலாம் என்று  அவனே  அவருக்கு ஒரு போன் போட்டான்.அப்போதுதான் எனக்கு திடீர் என்று 'அசல் திரும்பவில்லை' என்று குறுநாவல் கணையாழியில் எழுதிய வே.சபாநாயகம் பற்றிய ஞாபகம் வந்தது. ஒருக்கால் இவர் தானோ அவர் என்று கணக்குப்போட்டேன்.  ஆமாம் அது சரித்தான். ரிசீவரை நானும் வாங்கி ப்பேசினேன்.'ஆமாம்  நான் அதே சபாநாயகம் தான்' என்றார்.  கணையாழியில் நானும் நிறைய எழுதிய ஒரு காலம். அன்றுதான் அவரும் நானும் ஒரே ஊரில்  குடி இருப்பது தெரிய வந்தது.அன்று மாலையே  நேரில் சென்று அய்யாவப்பார்த்தேன். நெகிழ்ந்து போனேன்.ஆழ்ந்த ஒரு இலக்கிய ச்செறிவுக்கு அங்கே அன்பும் எளிமையும் அணிகலன்களாயிருந்தன.அன்று தொடங்கிய  இலக்கிய நட்பு இன்றும் நாளையும் என்றும்  அப்படித்தான்.

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்  மணிமுத்தாறு வலஞ்செய்து செல்லும் விருத்தாசலம் பகுதி  தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் வளமான மண். இன்று பழமலய், இமயம், கரிகாலன், கண்மணிகுணசேகரன் பல்லடம் மாணிக்கம், தெய்வசிகாமணி, பட்டிசெங்குட்டுவன், பல்லவிகுமார், ரத்தினகரிகாலன், சிலபல ஆண்டுகட்கு முன் இவர்களோடுரயில்வேத் துறை உதயசங்கர் என வரிசையாக படைப்பாளிகள் பலரை க்குறிப்பிட முடியும்.
 பிரதானமாக  எழுத்தாளர் வே.சபாநாயகமும் கவிஞர் பழமலயும் விருத்தாசலம் பகுதியைச்சேர்ந்தவர்கள்.புதுமைப்பித்தன் எழுத்தாளராய் மலர்வதற்குமுன் அவரின் இயற்பெயர் விருத்தாசலம். புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் விருத்தாசலம் நகரில் பணியாற்றி  ச்சென்றவர்  என்பது  இலக்கிய நண்பர்கட்குத்தெரிந்த வரலாற்றுச் செய்தி.
விருத்தாசலம் என்று அழைக்கப்படுகின்ற  பாடல் பெற்ற பழம் பதியாம் திருமுதுகுன்றம் நகரில்  வாழ்ந்து  வருகின்ற  வே.சபாநாயகம் புகழ்பெற்ற எழுத்தாளர், ஓய்வு பெற்ற பேராசிரியர்.  கவிஞர்  த.பழமலயின் பள்ளிக்கூட ஆசிரியர். தன் பள்ளி வகுப்பிலேயே பழமலயைக்கவிஞராய் முதன் முதலில் கண்டு சொன்ன ஒரு கணித ஆசிரியர்.
 வே.சபாநாயகம் 1950ல்  'ஆனந்தபோதினி' இதழில் 'எங்கள் வாத்தியார்' என்னும் முதல் சிறுகதை எழுதியவர். இலக்கிய இதழ்கள் தீபத்தோடும் கணையாழியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.கணையாழியின் பரிணாம வளர்ச்சி என்னும்  கட்டுரையைப்பல ஆண்டு காலம்  அதே இதழில் தொடர்ந்து எழுதிய  மூத்த எழுத்தாளர்.
 நா. பா,   வல்லிக்கண்ணன், திகசி,சுந்தர ராமசாமி, கோவை ஞானி,சிற்பி,திருப்பூர்கிருஷ்ணன், மாலன் ஆகியோருடன் நட்பு கொண்டவர்.எந்த  இலக்கிய சிற்றிதழுக்கும் முதல்  இதழ் தொடங்கி  அத்தனை இதழ்களையும் தன் நூலகத்தே காத்துவருகின்ற தமிழ் அரண்.
விளக்கு இலக்கிய அமைப்பின் விருது தேர்வுக்குழுவில் சபாநாயகம் சிறப்பாக அங்கம் வகுத்து இலக்கிய தரம் கூட்டிவருபவர்.
திண்ணை இலக்கிய இணைய இதழில் இன்றும் பளிச்சென்று வரும் தன் தொடர் கட்டுரையால் வளம் சேர்ப்பவர்.
மு.ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலிருந்து கொண்டுவரும் இலக்கிய இதழின் ஆலோசகர். தனது முத்திரைப்படைப்புக்களின் மூலம் இலக்கியச்சிறகு இதழுக்கு அணி சேர்ப்பவர்.
தனது குயிற்குஞ்சு என்னும் சிறுகதையால் ஆன ந்தவிகடனில் ஜாக்பாட் பரிசு பெற்ற எழுத்தாளர்.அண்ணாமலை ப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது மாணவப்பத்திரிகையாளனாய் ஆனந்தவிகடனால் அன்றே தேர்வுசெய்யப்பட்டவர்.
 நா. பாவோடும்,  தீபம் திருமலையோடும் சபாநாயகம் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
தொடர்ந்து கணையாழி இதழ் நடத்திய தி.ஜா. குறு நாவல் போட்டியில் மூன்று ஆண்டுகள் பரிசு பெற்ற ஒரே படைப்பாளி.
வே.சபாநாயகம் 'விதியை வென்றவள்' என்ற ஹெலன் கெல்லரின் வாழ்க்கைவரலாற்று நூலுக்காக ஏ வி எம் அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் வென்ற எழுத்தாளர்.
'ஸ்காலர்ஷிப்' என்னும் குறு நாவலை தீபத்தில்  வைர வரிகளாய் எழுதி  இலக்கிய அரங்கில் பேசப்பட்ட  படைப்பாளி.
சபாநாயகம் எழுதிய 'ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது' என்னும் புதினம் பின்னர் வெளிவந்தது. அப்புதினம் கோவை கஸ்தூரி சீனுவாசன் அறக்கட்டளையின்   பரிசு பெற்றது.பின்னர் தமிழ அரசின் விருது,திருப்பூர் இலக்கிய ச்சங்க விருது,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சிறந்த எழுத்தாளர் விருது எனத்தொடர்ந்து பல விருதுகள் அவரை த்தேடி வந்தன.
தஞ்சையில் சுந்தர சுகன் வீட்டில் வைத்து ஒரு இலக்கிய விழா நடந்தது. நானும் சபாசாரோடு அந்நிகழ்ச்சிக்குப்போயிருந்தேன்.தஞ்சை பிரகாஷ், காதம்பரி, பொதியவெற்பன், ஜாகிர்ராஜா இவர்களோடு பட்டுக்கோட்டை மு.ராமலிங்கமும் வந்திருந்தார்கள். அங்கு வைத்துதான் ராமலிங்கம் அய்யாவை எனக்கு சபா நாயகம் சார் அறிமுகம் செய்து வைத்தார்கள்.இலக்கிய இதழ் 'இலக்கிய சிந்தனை' மற்றும் ஆங்கில இதழ் 'ஷைன்'  இவைகளை ராமலிங்கம்  பட்டுக்கோட்டையிலிருந்து தொடங்க இருப்பதை  சுகன் இல்லத்தில் அறிவித்தார்.இன்றுவரை அவை கம்பீரமாய்  இலக்கிய உலகில்  வலம் வந்து கொண்டிருக்கின்றன.வடலூர் வள்ளல் ராமலிங்கர் சன்னதிமுன் துவங்கிய இலக்கியச்சிறகின் தொடக்கியவிழாவில் ஆரம்பித்து இன்றுவரைஅதன் ஆக்கத்திற்கு சபாநாயகம் உற்றதுணையாக  இருந்துவருதல் மகிழ்ச்சிக்குறிய  விஷயமாகும்.
சபாநாயகம் எழுதி விகடன் பரிசு பெற்ற 'குயில்குஞ்சு' சிறுகதை என்றும் நம் நினைவில் நிற்கின்ற ஒரு படைப்பாகும். வேத வித்தாகி நிற்கின்ற கோயில் குருக்கள் ஒருவரின் மனைவிக்குக் கோவில்  வேலைக்காரனோடு  வைத்துக்கொண்ட கள்ளத்தொடர்பில் பிறந்த ஒரு குழந்தை அத்தனை அறிவோடு  வளர்கிறது. குருக்களுக்குத்தெரிந்த ஆன்மீக  விஷயங்கள் அத்தனையும் அந்தக்குழந்தைக்கு மட்டுமே எளிதில் வந்து கூடுகிறது. உயிர்பிரியப்போராடும் குருக்களின் மனைவியின் இறுதிக்கணங்கள்  தன் கணவருக்கு அவள் செய்துவிட்ட குற்ற உணர்வென்னும் தீயில் கிடந்து  புழுவாய்த்துடிக்கின்றது. வேத ஞானம் கற்றுத் தெளிந்த குருக்களோ  இந்த எல்லா விஷயமும்  எப்போதோ அறிந்துகொண்டுவிட்டு  தன்மடிகிடக்கும் அவளுடன் அன்போடும் வாஞ்ச்சையோடும் பரிந்து பேசுகிறார். குருக்களின் மனைவி தான் செய்துவிட்ட துரோகத்தைச்சொல்லி மன்னிக்க வேண்டுகிறாள். மன்னிக்க எதுவுமே இல்லை. அவன் மட்டுமே என் வேதவாரிசு என்கிறார் குருக்கள்.  கண்ணீர் சொரிய அவளின் உயிர் உடனே விடைபெற்றுக்கொள்கிறது என்பதனைச் சொல்லும் அற்புதக்கதை.
'ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது' அந்தக்காலத்துத் திண்ணைப்பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கையோடு விறுவிறுப்பாய் நகர்ந்துபோகும் ஒரு கிராமத்து க் கதை.திண்ணைப்பள்ளிக்கூடங்கள் எப்படியெல்லாம் இயங்கின என்பதற்கு  நம்  முன்னே  சாட்சி ஆவணமாய்த்திகழும் ஒப்பற்ற படைப்பு.
தனது எழுத்துக்கும் கல்விப்பணிக்கும் ஆதாரமாய் இருந்த ஆசான் தன் இறுதிக்காலத்தில் வறுமையும் முதுமையும் வாட்ட விருத்தாசலம் கடைவீதியில் செத்துக்கிடந்த சோகத்தை வாசகனுக்குச்  சொல்லும் புதினம்.
இந்தப்படைப்பைப் பழமலய் 'கூடலை ஆற்று இலக்கியம்' எனப்பெருமையோடு அழைக்கிறார். மணிமுத்தாறும் வெள்ளாறும்  சங்கமிக்கும் நிலம் சார்ந்த மக்களின் வாழ்க்கையைக்கூறும் படைப்பு என்பதால் இது மிகச் சரியானதே..
'இனியொருதடவை' என்னும் குறு நாவல் எல்லோராலும் பாராட்டப்பெற்றது.தன் வீட்டுத்தோட்டத்தில் கூலிக்கு   முற்றிய இலவம் பஞ்சுக்காய் அடித்து உருப்படி செய்து கொடுப்பபவனோடு மல்லுக்கு நிற்கும் அந்தக்  கதாஆசிரியர் படுகின்றபாடு.  குறிஞ்சிவேலனின் 'திசை எட்டும்' மொழிபெயர்ப்பு இதழ் இக்கதையை திக்கெட்டும் பரவ வேண்டிய தமிழ்க்கதையாகத்தேர்வுசெய்து பெருமை சேர்த்திருக்கிறது.
'கணையாழித்தொகுப்பு' முதல் பாகம் சபாநாயகம்  பொறுப்பில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டது.கஸ்தூரிரங்கன் கேட்டுக்கொண்டதன் பேரில் இதனை சபாநாயகம் செய்து முடிக்க கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.
'தீபம் இலக்கியத்தடம்' தொடர்ந்து சுந்தரசுகனில் எழுதிய சபா அந்தத் தொகுப்பினை வெளியிட்டு  தீபம் நேயர்களுக்கு ப்பெரும்பங்களிப்பு செய்தார்.
ஜெயகாந்தனின் 'ஞானரதத்தில் ஜெயகாந்தன்' , மற்றும் 'ஞானரதம்' தொகுப்பினை  சபாநாயகம் தொகுக்க எ எனி இந்தியன் வெளியிட்டது.தென்னாற்காடு மாவட்ட  சிறப்பு மலரை தினமணி வெளியிட்டபோது விருத்தாசலம் பகுதியைப்பற்றிய தகவல்களை சபாநாயகம்  அவர்களே  எழுதி இந்தப்பகுதிக்குச் சிறப்பு சேர்த்தார்.
ஒரு நல்ல ஓவியரான சபாநாயகம் தன் தாய் தந்தையர் ஓவியங்களை  அற்புதமாய் வரைந்து தன் வீட்டுக்கூடத்துச்சுவரில் மாட்டியிருப்பதை அவர் இல்லம் சென்றவர்கள் பார்த்து அனுபவித்திருக்கலாம்.
 சீஷல்ஸ் நாட்டில் தன் மகள் வீட்டில் தங்கியிருந்த போது  தன்னுடைய  ஓவியத்தைத்தானே தத்ரூபமாக வரைந்து வெளியிட்டார். சபாநாயகம் ஒரு நல்ல போட்டோகிராபரும் ஆவார். அவர் எடுத்த அனேக நிழற்படங்கள் எழுத்தாளர்கள்  பலரின் புத்தகங்கள் பலவற்றுக்கு மேலட்டைகளாகி   படைப்புக்கு   வலிமை கூட்டியிருக்கின்றன.
என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 'மறு பக்கம்' அவரின் முன்னுரையோடும் அவர் எடுத்துக்கொடுத்த நிழற்படத்தை மேலட்டையில் அலங்கரித்துக்கொண்டும்  வெளிவந்து வெற்றிப்படைப்பாகியது.
எண்பதைத்தொட இருக்கும் வே.சபாநாயகம் அறுபத்துமூன்று ஆண்டுகட்கும் மேலாக எழுதிவருகின்றார்.
அவரின் தமிழ் இலக்கியப்பணி போற்றுதலுக்குறிய ஒன்று.அவரை வணங்கி நாம் பெருமை கொள்வோம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------