வே.சபாநாயகம்
என்னும் தமிழ் விருட்சம் - எஸ்ஸார்சி
ஒரு நாள் என் அலுவலக நண்பன்
என்னிடம்
, 'நத்தம்
போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கல்லால் அரிது' என்னும்
குறளில் நத்தம் என்பதற்குப் பொருள் என்ன என்று கேட்டான்.
அவன் பள்ளி செல்லும் மகளின் ஐயம் அவனிடம் வந்து என்னிடம் வந்துவிட்டது.
எனக்கும் பொருள் சரியாக சொல்ல முடியாது போகவே சபாநாயகம்
சாரைக் கேட்கலாம் என்று அவனே அவருக்கு ஒரு போன்
போட்டான்.
அப்போதுதான் எனக்கு திடீர் என்று 'அசல்
திரும்பவில்லை'
என்று குறுநாவல் கணையாழியில் எழுதிய வே.சபாநாயகம்
பற்றிய ஞாபகம் வந்தது.
‘ஒருக்கால்
இவர் தானோ அவர்?’
என்று கணக்குப் போட்டேன். ஆமாம், அது
சரித்தான்.
ரிசீவரை நானும் வாங்கிப் பேசினேன். 'ஆமாம் நான் அதே சபாநாயகம்
தான்'
என்றார். கணையாழியில்
நானும் நிறைய எழுதிய ஒரு காலம். அன்றுதான் அவரும் நானும் ஒரே
ஊரில் குடி இருப்பது தெரிய
வந்தது.
அன்று மாலையே நேரில் சென்று
அவரைப் பார்த்தேன்.
நெகிழ்ந்து போனேன் .ஆழ்ந்த ஒரு இலக்கியச் செறிவுக்கு
அங்கே அன்பும் எளிமையும் அணிகலன் களாய் இருந்தன. அன்று
தொடங்கிய இலக்கிய நட்பு
இன்றும் நாளையும் என்றும் அப்படித்தான்.
கடலூர் மாவட்டத்தில் மணிமுத்தாறு
வலஞ்செய்து செல்லும் விருத்தாசலம் பகுதி
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் வளமான
மண்.
இன்று பழமலய், இமயம், கரிகாலன், புகழேந்தி,
கண்மணிகுணசேகரன் பல்லடம் மாணிக்கம், தெய்வசிகாமணி, பல்லவிகுமார், பட்டிசெங்குட்டுவன், இவர்களோடு
சிலபல ஆண்டுகட்கு முன் ரயில்வேத் துறை உதயசங்கர் என வரிசையாக படைப்பாளிகள் பலரைக்
குறிப்பிட முடியும்.
பிரதானமாக எழுத்தாளர் வே.சபாநாயகமும்
கவிஞர் பழமலயும் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கவிஞர் த.பழமலய்க்கு
உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியராய் இருந்த
சபா சார்,
தன் வகுப்பிலேயே பழமலயைக் கவிஞராய் முதன் முதலில் கண்டு
சொன்னவர்
வே.சபாநாயகம் 1950ல் பள்ளி
இறுதி
ஆண்டு படிக்கும்போதே 'ஆனந்தபோதினி' இதழில் 'எங்கள்
வாத்தியார்'
என்னும் முதல் சிறுகதை எழுதியவர். இலக்கிய
இதழ்கள் தீபத்தோடும் கணையாழியோடும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
‘கணையாழியின்
பரிணாம வளர்ச்சி’
என்னும் கட்டுரையைப் பல
ஆண்டு காலம் அதே இதழில்
தொடர்ந்து எழுதிய மூத்த எழுத்தாளர்.
தொடர்ந்து கணையாழி இதழ் நடத்திய தி.ஜா. குறு
நாவல் போட்டியில் மூன்று முறை பரிசு பெற்ற ஒரே படைப்பாளி.
கணையாழியில் வெளிவந்த 'இனியொருதடவை' என்னும்
இவரது குறுநாவலை குறிஞ்சிவேலனின் 'திசை எட்டும்' மொழிபெயர்ப்பு இதழ் ‘திக்கெட்டும்
பரவ வேண்டிய தமிழ்க் கதை’யாகத் தேர்வுசெய்து பெருமை
சேர்த்திருக்கிறது.
' மீட்பு' என்னும் ஒரு குறு நாவலில் அவரது ஊரைச் சேர்ந்த புரோகிதர் கிட்டு அய்யர் .அவர் புதியதாய் வாங்கிய மோட்டார் சைக்கிளை ஸ்டாட் செய்ய முடியாமல் திண்டாடியபோது ஸ்டாட் செய்து தருகிறேன் என உதவிக்கு வந்தவன் அந்த வண்டியையே கடத்திக் கொண்டு போய், அதை மீட்க கிட்டு அய்யர் பின்னர் பட்ட அவஸ்தையை அழகாய் சபா விவரித்து இருக்கிறார்
' யானை இளைத்தால்' என்னும் குறுநாவல் - ஜபர்தஸ்து மட்டுமே காட்டிய பட்டாளத்துக்காரன் ஒருவன் சீரழிந்துபோய் தான் வாழ்ந்த அந்த கிராமத்தில் ஒரு டீ குடிக்க யார் உதவுவார்கள் என்று ஏங்கி நின்ற கதை. எனக்குப்பிடித்த ஒன்று.
சபாநாயகம் எழுதிய 'அசல் திிரும்பவில்லை' குறு நாவல் தான் எனது நினைவில் நின்று இன்றும் அசைபோட வைக்கிறது. சபா சாரின் தாயார்தான் இந்தக்கதையில் ஆச்சியாக வருகிறார். மாடு மேய்க்கும் ஒரு ஊராகாலியுடன் ஆச்சி சம்பாஷிக்கும் விதமே சுவாரஸ்யமானது. ஆச்சியின் ஆளுகை மட்டுமே படைப்பு எங்கும். மறக்கவே முடியாது வாசகனால்.
'தென்றலைத்தேடி' என்னும் சபாவின் குறு நாவல் தொகுப்பு அற்புதமானதொரு படைப்பு. அத்தொகுப்பில் உள்ள இரண்டு கதைகளும் பெண்களின் விடுதலை பற்றிப் பேசுபவை.
'கிரகஸ்தாஸ்ரமம்' என்னும் கதையில் முருகன் கோவில் போலிச் சாமியாரின் ஜபர்தஸ்துகள் பற்றி தத்ரூபமாக
விவரிக்கிறார். இளம்விதவை சிவானந்தத்தோடு போலிச் சாமியார் ஓடிப்போனது
அவிழ்படும் கதையது. கேலியும் நையாண்டியுமாய் வாசகனைக் கிறங்கவைக்கும்.
‘சிறை மீளும் சீதைகள்' கதையில் அஞ்சுகத்தின் நாக்குச் சவுக்கு ஆணாதிக்க வேர் அறுக்கும் கோடரியாய் வாசகனுக்கு அனுபவமாகும்.வாசகனை அழைத்துக் கொண்டு முன்னே
செல்லும் சபாவின் எழுத்து நடை பயில்தொறும்
சுகம் தருவதாகும்.
நா. பா, வல்லிக்கண்ணன், தி.க.சி,
சுந்தர ராமசாமி,
கோவை ஞானி, சிற்பி,
திருப்பூர்கிருஷ்ணன்,
மாலன், பதிப்புச்செம்மல் ச.மெய்யப்பன், தீபம் திருமலை
ஆகியோருடன் நட்பு கொண்டவர்.எந்த இலக்கிய
சிற்றிதழுக்கும் முதல் இதழ் தொடங்கி சந்தா செலுத்தி
அத்தனை இதழ்களையும் தன் நூலகத்தே காத்து வருகின்ற தமிழ் அரண் அவர்.
‘விளக்கு’
இலக்கிய அமைப்பின் விருது தேர்வுக் குழுவில் சபாநாயகம் சிறப்பாக அங்கம் வகித்து
இலக்கிய தரம் கூட்டியவர்.
‘திண்ணை’
இலக்கிய இணைய இதழில் இன்றும் பளிச்சென்று வரும் தன் தொடர் கட்டுரையால் வளம்
சேர்ப்பவர்.
மு.ராமலிங்கம்
பட்டுக்கோட்டையிலிருந்து கொண்டு வரும் ‘இலக்கியச்
சிறகு’
இதழின் ஆலோசகர்.
தனது முத்திரைப் படைப்புக்களின் மூலம் இலக்கியச்சிறகு
இதழுக்கு அணி சேர்ப்பவர்.
தனது
‘குயிற்குஞ்சு’
என்னும் சிறுகதையால் ஆனந்த விகடனில் ஜாக்பாட் பரிசு பெற்ற எழுத்தாளர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயிலும் போது மாணவப் பத்திரிகையாளனாய்
ஆனந்தவிகடனால் அன்றே தேர்வுசெய்யப்பட்டவர்.
வே.சபாநாயகம், 'விதியை
வென்றவள்'
என்ற ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாற்று நூலுக்காக ஏ வி எம்
அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் வென்ற எழுத்தாளர்.
அவரது
'ஒரு
நதி ஓடிக்கொண்டிருக்கிறது'
என்னும் புதினம் 1994ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலுக்கான
கோவை கஸ்தூரி சீனுவாசன் அறக்கட்டளையின்
10000ரூ. பரிசு
பெற்றது.
பின்னர் தமிழக அரசின் விருது, திருப்பூர் இலக்கியச் சங்க
விருது,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன சிறந்த எழுத்தாளர் விருது எனத் தொடர்ந்து பல
விருதுகள் அவரைத் தேடி வந்தன.
'கணையாழித்
தொகுப்பு'
முதல் பாகம் சபாநாயகம்
பொறுப்பில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டது.
இதனை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது.
அத்துடன் தீபம் இதழின் 23 ஆண்டு வெளியீட்டின் தொகுப்பினையும் அவர் இரண்டு
பாகங்களாய் தொகுத்ததையும் கலைஞன் பதிப்பகமே வெளியிட்டது.
'தீபம்
இலக்கியத்தடம்'
என்ற தலைப்பில் அவர் ‘சுந்தர
சுகனி’ல்,
தீபம் இதழில் நா.பா செய்த சாதனைகளைத் தொடராக எழுதி, அது குறிஞ்சிப்பாடி மணியம்
பதிப்பக திரு.சம்பந்தம் அவர்களால் நூலாக வெளியிடப் பட்டுள்ளது.
ஜெயகாந்தனை
ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘ஞானரதத்’தின்
தொகுப்புகளான 'ஞானரதத்தில்
ஜெயகாந்தன்'
, மற்றும் 'ஞானரதம்'
இதழ்த்
தொகுப்பினை சபாநாயகம்
தொகுக்க எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டது. தென்னாற்காடு
மாவட்ட சிறப்பு மலரை தினமணி
வெளியிட்டபோது விருத்தாசலம் பகுதியைப் பற்றிய தகவல்களை சபாநாயகம் அவர்களே எழுதி இந்தப்
பகுதிக்குச் சிறப்பு சேர்த்தார்.
கடலூரில்
ராஜமாணிக்கம் என்னும் இலக்கிய நண்பர் ‘சிந்தனையஅளர் பேரவை’ என்ற அமைப்பு ஒன்றிற்கு பொறுப்பாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். இப்போது அவருமே காலமாகி விட்டார். அவர்தான் சபாவுக்கு
தீபம் இதழை அறிமுகம் செய்தவர் என்று சபா எப்போதும்
சொல்லி அவரை நினைவு கூறுவார். அந்தக்
கடலூர் அமைப்பிலேதான் சபா சாருக்கு 'சிறுகதைச் செம்மல்’ என்னும பட்டம் வழங்கி கவுரவித்தார்கள். அந்த இலக்கிய நிகழ்ச்சி கடலூர் டவுன் ஹாலில்
வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சையில் சுந்தரசுகன் வீட்டில் வைத்து ஒரு இலக்கிய விழா நடந்தது. நானும் சபாசாரோடு அந்நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.தஞ்சை பிரகாஷ், காதம்பரி, பொதிய வெற்பன், ஜாகிர்ராஜா இவர்களோடு பட்டுக்கோட்டை மு.ராமலிங்கமும் வந்திருந்தார். அங்கு வைத்துதான் ராமலிங்கம் அவர்களை எனக்கு சபாநாயகம் சார் அறிமுகம் செய்து வைத்தார். இலக்கிய இதழ் 'இலக்கியச் சிறகு' மற்றும் ஆங்கில இதழ் 'ஷைன்' இவைகளை ராமலிங்கம் பட்டுக்கோட்ட யிலிருந்து தொடங்க இருப்பதை சுகன் இல்லத்தில் அறிவித்தார். இன்றுவரை அவை கம்பீரமாய் இலக்கிய உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வடலூர் வள்ளல் ராமலிங்கர் சன்னதிமுன் துவங்கிய ‘இலக்கியச்சிறகி’ன் தொடக்க விழாவில் ஆரம்பித்து இன்றுவரை அதன் ஆக்கத்திற்கு சபாநாயகம் உற்ற துணையாக இருந்துவருதல் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
வடலூரில்
போஸ்கோ என்னும் ஒரு நண்பர் ஒரு இலக்கிய அமைப்பு நடந்திக்கொண்டிருந்தார். அதற்கு நானும் சபா சாரும் தவறாமல்
சென்று வருவோம். தங்கர்பச்சான் எழுதிய 'வெள்ளைமாடு', ' ஒன்பது ரூபாய் நோட்டு' ஆகிய படைப்புகளுக்கு அங்கே
ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தங்கர் பச்சான் நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்து
வாசகர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார்.. இந்தப்பகுதியின் பெருமைக்குரிய
ஒரு மாபெரும் சினிமாக் கலைஞ்ன் தயாராகிப் பளிச்சிடுவதை
அப்போது நாங்கள் உணர்ந்தோம்.
வடலூரில் வைத்து உ.செ. துளசி என்னும் கவிஞன் எங்களுக்கு நண்பரானார். இளம் வயதிலேயே காலமாகிவிட்ட உ.செ. துளசி அற்புதமான கவிதை களைத் தந்தவர். வடலூர் அருகேயுள்ள உள்மருவாய் அவரின் சோந்த ஊர். அவர் எழுதிய கவிதைகள் ஒரு தொகுப்பாய் வரவேண்டும். இன்னும் அது கனிய வில்லை .தான் மறைவதற்கு முன்பாக சபா சாரை அவர் வீட்டில் சந்தித்து தேநீர் அருந்தி வெகு நேரம் அளவளாவி விட்டுச் சென்றவர் துளசி. அவர் மறைந்த அன்று அந்த குக்கிராமம் சென்று அஞ்சலி விட்டு தன் சோகத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார் சபா. ‘வயது ஒரு விஷயமே இல்லை. உணர்வுகள் மட்டுமே முக்கியம்’ என்று உணர்த்துபவை சபாவின் செயல்பாடுகள்.
சபா சாரோடு நான் அனேக ஊர்களுக்கு பயணம் செய்து இருக்கிறேன். சென்னை, தஞ்சை, கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விழுப்புரம் எனப் பலமுறை இலக்கிய நிகழ்ச்சிகுக்குச் சென்று வந்திருக்கிறேன். அந்த என் அனுபவங்கள் இனிமையானவை. அவர் சிங்கப்பூர் சென்றபோதும், தன் மகள் வசிக்கும் சீஷல்ஸ் சென்ற போதும் என்னோடு தொடர்பு கொண்டே யிருப்பார். நான் அவரோடு பேசாத நாட்களே இருக்க முடியாது என்கிற விதமாய் இருந்தது எங்கள் இலக்கிய நட்பு.
.
ஒரு நல்ல ஓவியரான சபாநாயகம் தன் தாய் தந்தையர் ஓவியங்களை அற்புதமாய் வரைந்து தன் வீட்டுக் கூடத்துச்சுவரில் மாட்டியிருப்பதை அவர் இல்லம் சென்றவர்கள் பார்த்து அனுபவித்திருக்கலாம்.
சீஷல்ஸ் நாட்டில்
தன் மகள் வீட்டில் தங்கியிருந்த போது
தன்னுடைய ஓவியத்தைத் தானே
தத்ரூபமாக வரைந்து தன் வீட்டின் வரவேற்பரையில் மாட்டி வைத்துள்ளார். சபாநாயகம் ஒரு
நல்ல போட்டோ கிராபரும் ஆவார். அவர் எடுத்த அனேக நிழற்படங்கள்
தினமணி கதிர், கண்ணன் போன்ற பத்திரிகைகளில் வெளி வந்திருப்பதுடன் எழுத்தாளர்கள் பலரின் புத்தகங்கள்
பலவற்றுக்கு மேலட்டைகளாகி படைப்புக்கு வலிமை
கூட்டியிருக்கின்றன.
எனது முதல் சிறுகதைத் தொகுப்பு
நூலுக்கு சபா சார் தான் கச்சிதமான ஒரு முன்னுரை வழங்கிப் பெருமை சேர்த்தைதை இன்றும் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன். எனது முதல் கட்டுரை நூலுக்கும் 'சில ஆய்வுகள் மதிப்புரைகள்
விமரிசனங்கள்' என்னும் பொருத்தமான பெயரை அவர் தான் சூட்டினார். விருத்தாசலம் நகரின் தமிழ்நூல் காப்பக பல்லடம் மாணிக்கம் அவர்கள் அதற்கு முன்னுரை தந்து சிறப்பு சேர்த்தார்கள். இவ்விரண்டு புத்தகங்களையும் நானே என் சொந்த செலவில் அச்சாக்கினேன். இதற்காகத் துவங்கிய என்
பதிப்பகத்திற்கு சபா சார்தான் பானுசந்திரன் என்கிற பெயர் வைத்தார்கள். என் மனைவியின் பெயரிலிருந்தும் என் பெயரிலிருந்தும் பாதி பாதி என எடுத்து. அது தருமநல்லூர் '‘பானுசந்திரன் பதிப்பகம்'
என்றே ஆனது. இவ்விரண்டு நூல்களுக்கும் விருத்தாசலத்தில் பல்லடம் மாணிக்கத்தைப் பொறுப்பாளராகக் கொண்ட
இலக்கிய அமைப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தி உற்சாகம் தந்தது. பல்லடம் மாணிக்கம், கவிஞர் பழமலய், சபாசார் அருணாடெக்ஸ்டைல்ஸ்
சதாசிவம், பட்டி செங்குட்டுவன், கரிகாலன், குறிஞ்சிவேலன், குரல் நடராசன் ஆகியோர் அந்த நிகழ்ச்சிக்கு முன் கை எடுத்து உதவியதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஒரு
சமயம் 'மறு பக்கம்' என்னும் சிறுகதை ஒன்றை எழுதி எடுத்துக்கொண்டு சபா சார் அவர்களைப் போய்ப் பார்த்து அவரிடம் அபிப்ராயம் கேட்க ஆசைப் பட்டேன்.சபா
சார் அதனை சிரத்தையோடு படித்து உள்ளன்போடு பாராட்டினார். என்னுடைய முதல் சிறுகதைத்
தொகுப்பிற்கு அதனையே தலைப்பாக வைக்கவும் சிபாரிசு செய்தார். அந்த சிறுகதை தொகுப்புப் புத்தகத்தின் மேலட்டையை, சபா சார் எடுத்த அவரது ஊரான தெற்கு வடக்கு
புத்தூர் அய்யனார் கோவில் ஜோடிக் குதிரைகள் அலங்கரித்தன..
காஞ்சிபுரத்தில் வெ.நா என்கிற வெ.நாராயணன் அவர்கள் ஒரு இலக்கிய அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர் காலமாகிவிட்டார். அவரைத் தெரியாதவர்கள் அனேகமாய்த் தமிழ் இலக்கிய அரங்கில் யாரும் இருக்க முடியாது. என்னுடைய நூல் மறு பக்கத்திற்கு விமரிசனக் கூட்டம் ஒன்றை காஞ்சி வன்னியர் உயர் நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்தார்கள் . சபாசாரால் அப்போது காஞ்சி செல்ல முடியாமல் ஏதோ அசந்தர்ப்பம். நான் மட்டும் காஞ்சி சென்று வெ நா வை ச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன் . வெ.நா வோடு அங்குதான் இலங்கை எழுத்தாளர் தேவகாந்தனை சந்தித்தேன். பின்னர் எனது 'ரணம் சுமந்து' கவிதைத்தொகுப்பினை மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் அற்புதமான முன்னுரையோடு தேவகாந்தன் வெளியிட்டார்.
எனது தமிழக அரசு பரிசு பெற்ற
நாவல் 'நெருப்புக்கு ஏது உறக்கம்' பற்றிய ஒரு விமரிசனத்தை வே.சபாநாயகம், எழுத்தாளர் சித்தனை ஆசிரியராகக்
கொண்டு வெளிவந்து கொண்டிருந் த ‘யுகமாயினி’ இலக்கியச் சிற்றிதழில் வெளியிட்டார்.
'அக்கிரஹாரத்தில்
இன்னுமொரு அதிசயப்பிறவி' என்னும் விமரிசனத் தலைப்பே எனக்கு மிகப் பெரிய பாராட்டாக அமைந்து
சிறப்பு சேர்த்தது. நான் மெய்யாகவே நெகிழ்ந்து போனேன். பேரறிஞ்ர் அண்ணா, அக்கிரஹாரத்தில் ஒரு அதிசயம் என்று வ.ரா பற்றிக் குறிப்பிட்டதை நாம் அனைவரும் அறிவோம்.
எனது நாவலில் நான் பிறந்த எனது தருமநல்லூர் என்ற கிராமத்தை தருமங்குடி என்று அழைத்திருப்பேன். என் குடும்பத்தில் எனது தாய் தந்தையர் வழி பிறந்த ஒரு சகோதரப் பெண் ( தருமு) அதே தருமங்குடி கிராமத்து தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞனை (பழமலய்) த் திருமணம் செய்துகொண்டு புரட்சிகரமான வாழ்க்கை நடத்தி ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்வதாகக் கதையில் அமைந்திருப்பேன்.சபா சார் என்னிடம் சொன்னார்: 'இப்படித் தன் குடும்பத்தையே கிராமத்துக் கதையின் மய்ய ஓட்டத்துடன் இணைத்து எழுதிப் போவதற்கு ஒரு படைப்பாளிக்கு விசால மனதும், எந்த எதிர்ப்பினையும் சமாளிக்கத் தயாராகும் ஒரு அசாதாரணத் துணிச்சலும் வேண்டும்'.
இவ்வாறாக மனம் திறந்து ஒரு படைப்பாளியைப் பாராட்டும் பண்பு
வாய்க்கப்
பெறுவது
அரிதினும் அரிது. சபா சாருக்கு அது இயல்பாகவே அமைந்திருத்தலை நாம்
காணமுடியும்.
எண்பதைத்தொட
இருக்கும் வே.சபாநாயகம்
அவர்கள் அறுபத்துமூன்று ஆண்டுகட்கும் மேலாக எழுதி வருகின்றார்.அவரின்
தமிழ் இலக்கியப்பணி போற்றுதலுக்குரிய ஒன்று. அவரை வணங்கி
நாம் பெருமை கொள்வோம்.
-- 0 --