ரகுவீரரின் 'ஒரு கல் சிலையாகிறது' ஒரு பார்வை- எஸ்ஸார்சி
ரகுவீரர் எழுதிய 'ஒரு கல் சிலையாகிறது' கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின் அயரா வைணவ உழைப்பு போற்றுதலுக்குரியது கூடவே தமிழ் மொழி மீது அவர் கொண்ட காதல் வாசகனை நெகிழ வைக்கிறது.
அட்டைப்பட ஓவியம் அஜந்தா குகை அழகு ராமர் சிலை. நூலுக்கு வலு சேர்க்கிறது.
நாராயணியமும் நானும்- என்றொரு கட்டுரை. ரகுவீர் இப்படிச்சொல்கிறார்,சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் எழுதிய 'நாராயணீயம்' என்னும் உரை நூலை படித்த பின்னர் 'அரைகுறை நாஸ்திகனான எனக்கு அவையெல்லாம் புனை உரைகளோ என்கிற சந்தேகம் அடிக்கடி ஏற்படும்'. வைணவர்க்கே உரிய தன் அடக்கம் இங்கே ரகுவீரரிடம் யதார்த்தமாக வெளிப்படுகிறது.
ரகுவீரரின் இந்து மதம் பற்றிய ஒரு கண்ணோட்டம் 'இருமாயனின் பாராட்டு' என்னும் கட்டுரையில் கச்சிதமாக சொல்லப்படுகிறது.''மற்ற மதத்தைப்போல அல்லாமல் இந்து மதம் கொள்கை அல்ல.ஒரு வாழ்க்கை வழி.உயிருடன் தொடர்புடைய ஒன்று.எனவே உண்மையான இந்து வேறு மதத்தைத்தழுவினாலும் இந்து என்ற இரத்தம் மாறாது.மாற்ற முடியாது.' மூதறிஞ்ர் ராஜாஜி எழுதிய 'இந்துயிசம் தி வே அன் டாக்ட்றின் ஆஃப் லைஃப்' என்னும் நூல் வாசகனின் மனத்திரையில் ஓடி நிற்கிறது.
தற்கால அரசியல் மட்டும் விடுமா என்ன ? ரகுவீரரை அது பாதிக்கவே செய்கிறது.பரம்பரை ஆட்சி உரிமை பெறுவது சமூகத்திற்கு நல்லதல்லவென்பதால் சனநாயகம் என்ற மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. (ஏன் ஜன நாயகம் என்று சொல்ல மனம் ஒப்பவில்லைபோலும்) குழு ஆட்சிகளும் குடும்ப ஆட்சிகளும் பெருகி வருவதால் மீண்டும் நாம் பழைய நிலைக்கே செல்கிறோமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்று அச்சத்தோடு குறிப்பிடுகிறார் பிறிதொரு கட்டுரை 'ஆறு மனமே ஆறு'
அதனில் சேலம் மாவட்டத்தில் ஸ்ரீ சென்ராயப்பெருமாள் கோயில் அடிவாரம். செங்கோடம்பாளையம் என்னும் ஊர்' சாத்தாத' ஸ்ரீ வைணவர்களை அர்ச்சராக உடையது என்கிற செய்தி தருகிறார்.சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சன்னிதிகளில் ' சாத்தாத' ஸ்ரீ வைணவர்களே அர்ச்சக ர்களாக இருப்பது நடைமுறை. இப்படி ஒரு நல்ல செய்தி சொல்லப்படுகிறது.'சாத்தாத' என்பதற்கு என்ன பொருளோ , பூணல் அணியாத பிறசாதியினரா, சாத்துதல் என்பது சங்கு சக்கரம் சாத்திக்கொண்டு ஒரு நெறிமுறைப்படுத்தி வைணவர்கள் கூடுதல் ஆசாரம் எடுப்பார்களே அந்த வகையா? எது எப்படியோ பிற சாதியினர் பூசை செய்து மக்கள் வழிபாடு தொடர்வது ஆரோக்கியமான சமாச்சாரமே.
கடுக்கலூர் திருமாலடியார் அருள் நெறி மன்றத்து 'உய்யும் வழி' இதழில்தான் இவைகள் தொடராக ப் பிரசுரமாகி ஆன்மீக வாசகனைத்தொட்டு வந்திருக்கின்றன. ஆக இதழ் வாசித்த வைணவர்கள் பெரும்பாலும் இது விஷயங்கள் அறிந்தே இருப்பர்.தமிழர்களில் பிராம்ணர்கள் தமது தாய்மொழியை பிராம்ணர் அல்லாதார் இடமிருந்து வித்தியாசமாகவே பேசுகின்றனர்.தெலுங்கர் கன்னடர் மராட்டியர் என பிற வட இந்திய பிராம்ணர்கள் இப்படி பிற மக்களிடமிருந்து வேறு பட்ட ஒரு ஒலியொடு பேசுவார்களா என்பது தெரியவில்லை.
தன்னைப்பற்றியே ஓரிடத்தில் ஆய்ந்து குறிப்பிடும் ரகுவீரர்,
'பல ஊர்களுக்குச்செல்லவைத்து என்னைப்பக்குவப்படுத்துகிறான்.பல மாத இதழ்கள் மூலம் என்னை அருளிச்செயலில் ஆழங்காற்பட வைக்கிறான்.பல வைணவ மா நாடுகள் மூலம் என்னைப்படிக்க வைக்கிறான்.பண்படுத்துகிறான்படிப்படியாக என்னைப்படிக்க வைக்கிறான். ஆக படியாய்க்கிடந்தே( படித்துக்கிடந்தே) பவளவாய்க்காண்பேனே' இப்படியாகவே ஒரு முடிவுக்கு வருகிறார். பவளவாயன் நெடுந் திருமால் அவன் திருவடிகள் சிக்கெனப்பிடித்துவிட ஒரு பெரு விண்ணப்பம் அவருள்ளாகப் பொதிந்து கிடக்கிறது. ' கடவுளும் கந்த சாமிப்பிள்ளையும்' புகழ் புதுமைப்பித்தனின் கடவுள் என்னும் கட்டுரையிலிருந்து சில வரிகளை ரகுவீரர் மிகப்பொருத்தமாகக்கையாள்கிறார்.'கடவுள் உண்டென்னும் சமாச்சாரம் மனித சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பிரயோசனப்படுகிறது என்றால் அது இருக்கத்தான் வேண்டும்.'இந்த கடவுள் விஷயம் என்பது மிகவும் சுவாரசியமானது.அது தனிமனிதனுக்கு தைரியத்தைக்கொடுக்கிறது.சமூகத்திற்கு ஒரு சக்தியைக்கொடுக்கிறது.நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமாக இருக்கலாம் அது சுவாரசியமற்றது..வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்ற முடியாது.அது தனி மனிதனுக்குச்சாந்தியை அளிக்கலாம்.ஆனால் அது ரசனை யற்றது. இங்கே'பகுத்தறிவுவாதிகளுக்கு ஒரு வினா வைக்கிறார் ரகுவீரர்.
'இறைமையை மறுப்பவர்கள் இயற்கையைப் போற்றலாமே!இளைஞ்ர்களிடம் காணப்படும் உழைப்பின்மையைப்போக்க பகுத்தறிவாளர்கள் ஏதாவது முயற்சி எடுத்தார்களா?மேலும் கூடுதல் பொறுப்போடு ஒரு விஷயம் சொல்கிறார்.'ஒரு குறிப்பிட்ட இனத்தைத்தாக்குவதையே அல்லவா குறிக்கோளாக்கி விட்டார்கள்'அது எந்த இனம் அது ஏன் இப்படி என்ற வினா இங்கே வேண்டாம்.அனேகமாக தமிழ்ச்சமுதாயத்தில் ஒவ்வொரு பிராமணனல்லாதவரும் கடுகளாவது பிராமண எதிர்ப்பாளரே என்கிற சின்ன விஷயம் யாவரும் அறிந்ததே. ஏற்ற இறக்கங்கள் சிறிது இருக்கலாம். அது நியாயமும் கூட. .
'கங்கையைக்கண்டேன்' என்னும் ஒரு கட்டுரை. அந்த நதியோடு ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பந்தப்பட்டுக்கிடக்கிறார்கள் என்பதுணர்த்தி ரகுவீரர் எழுதிச்செல்கிறார்.'கங்கையில் நீராடிய
பொழுதுதான் நான் பாரதத்தாயின் மகனானேன்.' உணர்ச்சி வெள்ளம் கொப்பளிக்க கட்டுரை நீண்டு கொண்டு செல்கிறது.
கங்கை சுமந்துவருவது அமுதம் அதனைத் தூய்மையாக வைத்து இருக்க எப்போதேனும் வாய்க்குமோ' காசியம்பதியின் அந்த காலபைரவருக்கு இதுகள் எல்லாம் கவனிக்க நேரம் இல்லை போலும்.
தாய்முகம்' என்னும் ஒரு கட்டுரை ஒரு புதிய செய்தியைச்சொல்கிறது.ஸ்ரீவைகானச ப்பிரிவு வைஷ்ணவர்களுக்குகருவில் இருக்கும்போதே எட்டாவது மாதத்தில் அந்தத் தாய்க்கு விஷ்ணுபலி என்கிற சடங்கின் மூலம் வைணவதீட்சை செய்யப்படுகிறது.என்வே ஸ்ரீவைகானசர்கள் கர்ப்ப வைணவர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆக வயிற்றில் இருக்கும் சிசு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த வைண்வ தீட்சை உண்டு..
'முயற்சியே போதும் என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை நல்ல பல தகவல்களை அள்ளித்தந்து வாசகனை நிறைவுகொள்ள வைக்கிறது.கர்னல் பிளேஸ் ம்துராந்தகம் ராமர் கோவிலில் ஒலி எழுப்பும் கருவி (?) வழங்கியிருக்கிறார்.ராபர்ட் கிளைவ் கஞ்சி வரதருக்கு பதக்கம் நல்கி யிருக்கிறார்.திருமலைஅப்பனுக்கு ஒரு இசுலாமியர் பொற்காசுகள் தந்து பெருமை பெறுகிறார்.அரும்பாக்கம் ராஜகோபுரத்தில் ஒரு நிலை கிருத்துவர் ஒருவரின் அன்பளிப்பு.கிள்ளை திருத்தலத்தில், திருமுட்டம் பூவராகருக்கு இசுலாமியர்களின் வரவேவேற்பு. திருவரங்கத்துத் துலுக்க நாச்சியார் சன்னிதி என பட்டியல் தொடர்கிறது.இன்னும் இந்த வகையில் எத்தனையோ. இந்தப் புனித மண்ணில் ஆயிரம் ஆயிரம் என்று இவை எண்ணிக்கையில் கூடிக்கொண்டே இருக்கலாம். நாம் இவைகளை அறிந்தே இருக்கிறோம்.
விண்ணிலிருந்து வீழும் மழை நீர் பல பெயர் கொண்டு கடலை அடைவது ஒப்ப மதங்கள் பல எனினும் சென்றடையும் இறை ஒருவனே என்பது இங்கு வேதம் சொல்லும் சமாச்சாரம். சான்றோர் க்கவி எனக்கிடந்த கோதாவரியைப்பாடும் கம்பர் நீராடு துறைகள் பலப்ப்ல எனினும் நதியொன்றே.சமயங்கள் வேறு வேறு எனினும் இறையொன்றே என்று பேசுவார். இன்றளவும் மனிதனால் செய்யப்பட்ட அரிய ஆன்மீக ப்படைப்பு அற்புதப்படைப்பு என்பது இந்திய மண்ணின் உப நிடதமே. இது மிகையில்லை ஒரு சத்தியமான வார்த்தை.
ரகுவீரரின் 'ஒரு கல் சிலையாகிறது' நூலுக்கு வருவோம். அவர் தம் வைணவப்பணியைப் பட்டியலிடுகிறது இக்கட்டுரைத்தொகுப்பு. மதுராந்தகத்துப் பெருமகனின் உழைப்பு கடினமானது.ஆத்மார்த்தமானது. கற்றுத்துறைபோகிய வைணவர்கள் இன்னும் நன்கு தெரிந்து நமக்குச்சொல்ல நிறைய விஷயங்கள் இங்கு இருக்கவே செய்யும். அமுதத்தமிழும் திருவைணவமும் நூலாசிரியர் ரகுவீரருக்கு இரு தோள்களாக இருப்பதை வாசகர்கள் உணரமுடியும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------. .