சி.மகேந்திரனின்
‘தீக்குள் விரலை வைத்தேன்’ இலங்கை பேரினவாதத்தின் முடிச்சவிழ்ப்பு.
தீக்குள் விரலை வைத்தேன் படித்து ஆராயலாம். ஏன் பதறிபோகலாம்.கண்கள்
நிறைத்துக்கொண்டு சினம் கொப்பளிக்கலாம்.மனித நேயம் போற்றும் மானிட இலக்கணங்களைக்கண்டு
தெம்பு கூட்டலாம்.காக்கைகள் பங்கு போட்டுத்தின்னும் தமிழனின் தெரு ரணக்களத்தை தரிசித்துவிடலாம்.
மனமே இல்லாத மனித உருக்களால் திட்டமிட்டு இனச்சிக்கல் வளர்க்கப்படுவதை கண்டு நோக்கலாம்.
சி. மகேந்திரனின் ‘தீக்குள் விரலை வைத்தால்’ அற்புதமாய் வந்திருக்கிறது.பக்குவப்பட்ட
அரசியல்வாதி என்பதால் படைப்பிலே முதிர்ச்சியை அனுபவிக்க முடிகிறது.பொதுவுடமைவாதியின்
கண்களுக்கு முன்னாலேயே இத்தனை அட்டகாசங்களும் தென்படுகிறபோது உலக சகோதரத்துவம் என்பது
ஆடிப்போகிறது.
மஎந்திரனின் நூலுக்கு செ.கணேசலிங்கன் அறிமுகம் தந்துள்ளார்
‘’இந்நூல் நான் பிறந்து வளர்ந்த வாழ்ந்த நாட்டை
மேலும் சிறப்பாக எனக்கே அறிமுகப்படுத்துகிறது.’ இது முற்றிலும் மெய் என்பதனை வாசகனும்
அங்கீகரித்து விடுகிறான்.இலங்கையின்இனச்சிக்கலை,பேரினவாதத்தை நன்கு விளங்கிக்கொள்ள
இந்நூல் துணைபுரியும். நேர்மையாக எழுதப்பட்ட படைப்பு என்பதனை ப்படிக்கிறபோது உணர்ந்து
பிரமிக்கச்செய்கிறது. மகேந்திரனின் மாணவப்பருவத்து அமைப்புப்பயிற்சியும்,தாமரையின்
இலக்கிய அனுபவமும் பொதுவுடமை அரசியல் பாத்திரப்பணியும் நிகரற்றவை என்றாலும்’’தீக்குள்
விரலை வைத்தேன் ’ அனைத்தையும் விஞ்சி நிற்கிறது.ஆம் என்றுமே நிற்கும் என்பதனை உறுதியாகச்சொல்லமுடியும்.
இலங்கயின் இனச்சிக்கல் இத்தனை எளிமையாய், பன்முகத்தன்மையோடு வெளிப்படுத்துதல் என்பது
அவரின் அடிமன ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.இலங்கையைப்பற்றிய ஓர் இனப்புரிதல் இனி மகேந்திரனின்
இந்நூலை விடுத்து சாத்தியப்படாது என்பதனை உணர்த்தி நிற்கிறது.
நடப்பில் ஜன நாயகம் என்கிற எந்திரம் தன் வடிவத்தை எப்படி எளிதாய்
மாற்றிக்கொண்டு ஒரு சிறுபான்மை இனத்தின் அடையாளங்களை அழித்துவிட முடிகிறது என்பதனை
இலங்கையில் காண நேரிடுகிறது.இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள தமிழின முரண்பாடு,தமிழர்களிடையே
மலையகத்தமிழர்களின் கையறு நிலை, இசுலாமியத்தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என
முக்கியமாய் மூன்று கூறுகளைக்காணலாம்.இவை ஒவ்வொன்றையும் அக்கு வேறு ஆணி வேறாக அறிவதற்கு
மகேந்திரன் உதவி இருக்கிறார் என்றும் குறிப்பிடலாம். பதிப்புரையில் சொல்லப்பட்டபடி’
இலங்கை பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல்களில் இது தனிப்பட்டதாகும் என்பது சரியான
விளக்கமே. உணர்ச்சிப்பிரவாகத்தின் மீது கொப்பளித்து
எழுகின்ற சினக்குன்றின் மீது, துயரக்குகையில் குப்புறப்படுத்து க்குமுறுதலில் ஆழ்ந்து,
மானுடத்தை வக்கிரமாக புரிந்துகொண்டு வியூகம் அமைப்பதில் தவறிவிட்டு,குழம்பிக்கொண்டும்
குழப்பிக்கொண்டும்.கூக்குரல் எழுப்பி அலையொலியில்
ஒளிந்துகொண்டும், நெளிந்துகொண்டும் படைப்பு என்கிற ஒன்றை வெளிக்கொணரும் அசாதாரணச் சூழலில் மட்டுமே அனுபவமாகிப்போன
வாசகனுக்கு இந்த நூல் நல்ல புரிதலை கொடையாக்கி உதவுகிறது.
சி.மகேந்திரனின் வார்த்தைகளில் கச்சிதமானது அனேகம்.எடுத்துக்காட்டாய்
சிலதுகளைச்சொல்லமுடியும். முதல் அத்தியாயத்து இறுதியில் இப்படிச்சொல்கிறார் ஆசிரியர்.’ஜன
நாயகம் என்னும் மிக உயர்ந்த அரசியல் வடிவத்தை சிறுபான்மையினரின் உரிமையை நசுக்கும்
கருவியாகப்பயன்படுத்தும் போது மோசமான விளைவுகளில் நாடு சிக்கிகொள்கிறது. இது எந்த ஒரு
ஜன நாயக நாட்டுக்கும் ஆகப்பொருத்தமானதே..1972
ல் இலங்கை பெளத்த நாடாக அறிவிக்கப்பட்டதே எல்லாப்பிரச்சனைகளுக்கும் ஊற்றுக்கன்ணாய்ப்போனதை
மகேந்திரன் அற்புதமாய்க்கூறிவிடுகிறார். இரத்தம் சிந்துதல் உள்ளிட்ட எந்த கொலைக்கள
கூச்சலையும் எழுப்பும் உரிமை பெற்றவர்கள் புத்த பிக்குகள் என்கிற விஷயம் அம்மலப்படுகிறது.
iஇலங்கையின் முற்போக்கு எழுத்தாளர்சங்க இலக்கியப்பேரரங்கின்
ஜன நாயகத்தன்மையை புகழ்ந்து சொல்கிறார் ஆசிரியர்.அது மிகச்சரியானதே.உலக அரசியல், சித்தாந்த
நெருக்கடியில் சிக்கித்தவித்த பொதுடமை அமைப்புக்கள் நீளவாட்டில் தம்மை கூறுபோட்டு மகிழ்ந்துபோயின.
இன்றளவும் இதன் மீது விமரிசனம் எழும்போது பார்த்துக்கொள்கிற ‘சாக்கிரதை மனோபாவம்’ புரட்சி
மேகங்களால் அடைகாக்கப்படுகிறது என்பது நிதர்சனம். ப்ரேம்ஜியின் விடையாய் மகேந்திரன்
இப்படிச்சொல்கிறார்.
ஜன நாயகமும் இலக்கிய நோக்கம் குறித்த பொறுப்புணர்வும்தான் எதனையும்
சாத்தியப்படுத்துகிறது. இப்படிப்பேசும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் குறித்து
நாம் பெருமிதம் கொள்ளலாம். தோழர் பிரேம்ஜி ஒரு பொதுஉடமைவாதி.
சிங்கள
இன அரசு இயந்திரத்தால் யாழ்ப்பானத்திலிருந்து விரட்டப்பட்ட இசுலாமியத்தமிழர்கள் கேட்கும்
கேள்வியை நாம் ஒவ்வொருவரும் அது நமக்கே எனப்பாவிக்கலாம்.
கேள்வி இது
துப்பாக்கி
முனையில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டபோது தமிழகத்தில் ஏன்
எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை ? அந்த அப்பாவி மக்களுக்கு ஏன் ஆறுதல் வார்த்தைகூட
எங்கிருந்தும் வரவில்லை. மெய்யாகவே நமக்குத்தலை தாழ்ந்துபோகிறது. இந்திரா பார்த்தசாரதி
‘பனியும் பறையும்’ என்ற படைப்பில் குறிப்பிட்டுள்ளதனை மகேந்திரனே இங்கே பேசுவதைச்சொல்லி
ஆறுதல் தேடலாம். ஒரு ஆஸ்திரேலிய வெள்ளையர் விமானப்பயணத்தின் போது கேள்வி கேட்டாராம்.’இந்தியாவிலுமா
தமிழர்கள் வசிக்கிறார்கள் ? என்று. வேதனையின் உச்சம்தானே இது.
இலங்கை
மலத்தோட்டங்களில் தம் குருதியைக்கொட்டி தமிழ் இனம் லட்சக்கணக்கில் கேட்பார் அற்றுக்கிடக்கிறது.
இலங்கை குடியுரிமை இல்லை. இந்தியாவுக்கு ச்செல்லவும் வழி இல்லை. தலைமுறைகள் ஏழு கடந்தன.வயிற்றுப்பசிக்கு
படகில் ஏறிப்போனவர்கள் விலாசம் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். மனிதப்புழுக்களாய்க்காட்சி
தரும் தமிழர்கள். லால்பஹதூர் சாஸ்திரியையும் ராஜிவ் காந்தியையும் சபித்துக்கொண்டு.
தமிழ் ச்சகோதரர்கள் விதியின் சதியில்.
இலங்கை
மலையகத்தமிழர்களின் வாழ்வுக்குப்போராடிய உத்தமத்தோழர் நடேச அய்யரைப்பற்றிய குறிப்புகள்
மகேந்திரன் எழுத்து நேர்மைக்கு ச்சான்று பகர்கின்றன. தமிழ் மண்ணில் இப்படி எல்லாம் எழுதிவிட்டு குப்பை கொட்டிவிடமுடியாதபடிக்கு.
எதோ ஒரு அறிவு திரையிட்டு நிற்கிறது. என்பது வேறு. நடேச அய்யரின் துணைவியார் மீனாட்சி
அம்மையின் பேச்சாற்றல், கவிதா வலிமை,தொழிற்சங்க ஆளுமை குறித்தும் மகேந்திரன் பேசுகிறார்..
கண்டி நகரில் கைலி கட்டிக்கொள்வது தமிழனுக்கு பாதுகாப்பு. கண்டித்தமிழன் காது குத்திக்கொள்ள
அஞ்சுகிறான். வேட்டிகட்டுதலும் காது குத்துதலும் அவனைக்காட்டிக்கொடுத்துவிடும் அடையாளங்களாக
ஈனப்பட்டு நிற்கின்றன. மாத்தளை சோமு தனது எல்லைதாண்டா அகதிகள் என்னும் புதினத்தில்
குறிப்பிடும் உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மகேந்திரன்.’தமிழர்கள் சிங்கள மண்ணைக்கவர்ந்த
பகைவர்கள் என்கிற விஷத்தை ஊட்டியே காடையர்கள் என்கிற ரவுடிக்கும்பலை திட்டமிட்டு அரசாங்கம்
ஆசிர்வதித்து நடத்துகிறது. நரபலிகள் இலங்கையில் தொடர்கதையாகிறது.
யாழ்ப்பாணம்
பற்றிய ஆய்வு நீண்டதொரு கட்டுரையாய் மலர்ந்திருக்கிறது. யாழ்ப்பாண கல்வி நிலையங்கள்,சமுதாய
அமைப்பு,சாதீய விஷயங்கள்,சாப்பாட்டு விஷயங்கள், வழிபாடுகள்,இலக்கிய ப்பங்களிப்புகள்
அனைத்துமே விரிவாகப்பேசப்பட்டுள்ளன.மறக்காமல் எஸ்.பொ.வையும் அவரின் எழுத்து கம்பீரத்தையும்
தொட்டுப்பேசுகிறார் மகேந்திரன்.பொருத்தமாய்ச்சேரனின் கவிதை ஒன்றை யாழ்ப்பாண நிலமைகளுக்குச்சான்றாய்
வைக்கிறார் ஆசிரியர்.
‘இரு புறமும்
துப்பாக்கி
நடுவில்
நான்
எரிகின்ர்ற
நெருப்புக்கு
நடுவில்
நான்
அவன்
‘இரு’ என்றால்
இவன்
‘ எழும்பு’ என்பான்
அவன்
’’வா என்றால்
இவன்
’போ’ என்பான்
அவன்
‘இற’ என்றால்
இவன்
‘இரு’ என்பான்
அவன் உடலைக்கொன்றான்
இவன் ஆத்மாவைக்கொன்றான்
இப்போ
நான் பிசாசானேன்.
யாழ்ப்பாண
நூலகம் எரிப்பு என்னும் மீளமுடியாத சோகம் துக்க சாகரமாய் உணரப்படுவதைத்தவறாமல் மகேந்திரன்
குறிப்பிடுகிறார். வரலாற்று ரீதியாக த்தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வந்திருக்கிறது
என்பதை அப்பட்டமாய் ஒத்துக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர் டி.யூ. குணசேகராவை ஆசிரியர்
அடையாளம் காட்டுகிறார். சிங்கள மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக க்காடையர்கள் ரவுடிகள்
என்று முடிவுகட்டுதல் நியாயமாகாது என்கிற நல்ல செய்தியையும் சொல்கிறார். தமிழர்களை
மணந்துகொண்ட சிங்களவர்களும் சிங்களவர்களோடு வாழ்க்கையைத்தொடங்கிய தமிழர்களின் முன்னுதாரணங்கள்
எத்தனையோ இருப்பதை மறக்காமல் சுட்டிக்காடுகிறார் மகேந்திரன்.
இலங்கையின்
வெளிக்கடை சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரத்தில் தப்பி டேவிட் அய்யா பற்றிய மகேந்திரனின்
எழுத்தாக்கம் வாசகனை நெஞ்சத்தால் வணங்க வைக்கிறது. மகேந்திரனின் சித்திர எழுத்தினை
இப்படிக்காணலாம்.
‘அர்த்தமற்று
வாழும் வாழ்க்கை என்ற மதிப்பீட்டுக்குள்ளிருக்கும் அர்த்தங்கள் நம்மை அதிர்ச்சியுறச்செய்யும்’-
எத்தனை ப்பொருள் பொதிந்த வாசகம் இது.ஒவ்வொரு வாசகனும் படித்து சிந்தித்து சொக்கிபோய்
பிரமிக்க வேண்டியிருக்கிறது. எந்த கர்வத்தினையோ யாருமே செய்யத்தயங்கும் தியாகத்தையோ
தான் செய்துவிட்டதற்கான ஆணவத்தையோ கிஞ்சித்தும்
வெளிக்காட்டாத மாமனிதன் டேவிட் அய்யாவை தரிசிக்கத்தந்த ஆசிரியரின் மானுடப்பிடிப்பை
ப்போற்றிப்பெருமிதம் அடைகிறோம்.
மகேந்திரனின்
எழுத்தாற்றல் வெளிப்பாடு இந்த நூல். இது அவரின் எழுத்து நேர்மையை உரக்கப்பேசுகிறது.
நெஞ்சுக்கு நேர்மையாய் அவர் வெளிப்படுத்திய விஷயங்கள் மனசாட்சி உள்ளோரை ரணப்படுத்தியே
முடிக்கும்.அதுவே மானுட இருப்பின் நியாயமும் கூட..
(மே
2004 தாமரை)
’ .