தாயிற்சிறந்தவை மரங்களே
நமது தேசத்தைப்பொறுத்தவரை
மரங்கள் என்றும் உயர்வானவை. அவை இயல்பாய்ப்
பெற்ற நற்குணங்கள் கருதி, மரங்களைக் கடவுளாய்ப்
பாவித்தத் தேசம் இது. பெருங்கடவுள் சிவபெருமான் ஆல் அமர் செல்வன் என்றே போற் றப்படுகிறார்.
ஆலமரங்கள் நமது மரபில் பல விழுமியங்களுக்குச் சொந்தமானவை. அது நமது தேசிய விருட்சமும்
கூட. தமிழ்மறை திருக்குறள் மருந்து மரத்தையும்,
கனி ஈனும் மரத்தையும் மனிதர்களில் சான்றாண்மை மிக்கவர்களோடு ஒரே நேர்க்கோட்டில் வைத்துப்பேசுகிறது.
மருந்தாகித்தப்பா
மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகையான்
கண் படின். - குறள் 217
பயன் மரம்
உள்ளூர் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடையான்
கண் படின். -குறள் 216
ஆக நம்மொடு
வாழும் மரங்கள் மனித இனத்திற்குச்செல்வாதாரங்கள்.ஒவ்வொரு தலத்திற்கும்
ஒரு மரத்தைத்தெரிந்து தல விருட்சமாய்ப்போற்றி ஆராதிக்கும் வாழ்வியலே, நமக்குத் தொல்மரபு.
மரங்களின் இன்றியமையாமை
மரங்கள் கரியமில
வாயுவைப் பச்சை இலைகளால் கிரகித்துக் கதிர்
ஒளியில் பச்சையம் தயாரித்துச் சீவிக்கின்றன. டிரான்ஸ்பிரேஷன் என்கிற இந்த இரசாயன நிகழ்வின்போது
உயிர்வளி மரங்களால் வெளியேற்றப்படுகிறது. மாறாக
புவி வாழ் விலங்குகள் மனிதனையும் சேர்த்துத்தான்
உயிர்வளியை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன.
இது சுவாசித்தல் எனும் உயிர் இருத்தலின் இன்றியமையா நிகழ்வாகிறது. உயிர் வளியை நமக்குக்கொடை ஆக்குவன விருட்சங்களே.
மானுட இருப்புக்கு உயிர்வளி எத்தனை முக்கியமானது
என்பதனை இவண் சிந்திக்கலாம்.
2004 டிசம்பர்
மாதம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை விழுங்கிய சுனாமி என்னும் ஆழிப்பேரலை இந்தோனேஷியாவில் தொடங்கி
இந்தியக்கிழக்குக் கடற்கரைக்குயைத் தாக்கியது. இந்த இயற்கைச் சீற்றத்தின் போது அலையாற்றிக்காடுகளின் முக்கியத்தேவை குறித்து உணரத்தொடங்கினோம். சுந்தரவனக்காடுகளின் பராமரிப்பும்
கடலை ஒட்டிய சதுப்பு நிலக்காடுகளின் இருப்பும்
ஆழிப்பேரலைகள் நிலப்பரப்பைத்தைத் தாக்கி ஏற்படுத்தும்
அழிவுகளிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுகின்றன. வளி மண்டலத்தே வியாபித்துள்ள தூசு
மாசுகளை மரங்கள் ஈர்த்து நாம் சுவாசிக்கும் காற்றைத் தூய்மையாக வைத்திருக்கப்
பேருதவி புரிகின்றன. வளி மண்டலத்தே அலையும்
மாசுகளை விருட்சத்தின் இலைகள் ஈர்த்து தாங்கித்தம்மோடு வைத்துக்கொள்கின்றன. தொடர்ந்து
பொழியும் மழை நீர் அவைகளை ஆற்றின் வழிச் சுமந்துக் கடலில் சேர்த்து முடிக்கிறது.
மரங்கள் வெளியேற்றும்
நீர் ஆவியாகி காற்றுமண்டலத்தைச் சென்றடைகிறது. இந்நிகழ்வை ஆங்கிலத்தில் வேபரிசஷன் என்றழைக்கிறோம். இது புவியின் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துகிறது.
துருவங்களில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டத்தை உயர்த்துவது தடுக்கப்படுகிறது.
புவி மண்டலம் வெப்பம் கூடுவது புவியின் உயிர் இருப்பைக்கேள்விக் குறியாக்கும் பெருவிஷயமாகும்.
கடல் ஓரத்தில் அமைந்திருக்கும் சென்னை மும்பை விசாகப்பட்டினம் போன்ற பெரு நகரங்கள்
கடல் மட்டம் உயர்வதால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது என்று புவியியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
சமூகப் பொறுப்பின்மை
சமீபமாய்த்தமிழகத்தில்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பனை மரங்கள் நூற்றுக்கணக்கில் வெட்டப்பட்ட நிகழ்வொன்று
அரங்கேறியது. நூற்றாண்டு வாழ்ந்த புளிய மரங்கள் அறுபட்டன. நான்கு வழிச்சாலை அமைத்தல் என்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டனவாம். ஊர் மக்கள் போராட்டத்தில் இறங்கிய பிறகே அரசு விழித்துக்கொண்டு வெட்டப்பட்ட மரங்களுக்காக மாற்று
மரங்கள் நடப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஒரு கிராம நிர்வாக அதிகாரிக்குக்கூடத்
தெரியாமல் சாலையில்
மரங்கள் வெட்டுதல் பொறுப்பற்று நிகழ்ந்திருக்குமா? அறிவியல்
பார்வையும் போதிய கவனமும்
தேசபக்தியும் இல்லாப் பணிக்கலாசாரமே
மரங்கள் வெட்டுதலுக்குக் காரணியாய் அமைந்து நிற்கிறது.
பெங்களூருவுக்கும்
சென்னைக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலையில் பனைமரங்கள்
தொடர்ந்து வெட்டப்படுவதைக் காணலாம். கேபிள் கற்றைகளைத் தரைவழியே கொண்டு செல்வோர் பனை
மரங்களை வெட்டிவீழ்த்திச் செல்வதையும் பார்க்க முடிகிறது. ஐம்பதாண்டு முடித்த பனைமரங்கள்
அடியோடு அறுபட்டுத் தரையில் கிடப்பது சோகத்தைக் கொணர்வதாகும். மழை வெள்ளக்காலங்களில்
பனை மரங்களோ மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்
மாபெரும் புனிதச்செயலை ஆற்றி வருபவை.
ஒரு காலத்தில்
மரங்கள் விறகுக்காக வெட்டப்படுவது சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.பிறகு விறகுக்கு என
பிரத்யேகக் கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டன. அவை தரை ஈரத்தை வெகுவாய் உறிஞ்சி ஆவியாக்கி மண்ணை ஈரப்பதமற்ற சக்கையாய் மாற்றின.
இன்று அந்த சீமைக்கருவேல மரங்கள் வளர்ப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சி இருப்பவை முற்றாய் அழிக்கப்படுகின்றன. அம்மரங்கள் புவியை வளப்பமற்றதாய்
மாற்றும் போக்குத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மரங்களைக்காப்பதில் நீதி மன்றங்களின் கூடுதல் அக்கறையும் எச்சரிக்கையும் இவண் மரங்களைச்சீராய்
நிர்வகிக்க உதவியிருக்கிறது.
கணினி உலகம்
வந்தபிறகு காகித உபயோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிடல் டிரான்ஸாக்ஷன் புழக்கத்துக்கு
வந்த பிறகு காகிதத்தின் தேவை குறைந்துள்ளது.பணப்பரிமாற்றமே டிஜிடல் மயமானதால் காகிதப்பணத்தின்
தேவை சுருங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கணினி ஆக்கிரமிப்பின் விளைவால் அங்கேயும் காகிதங்களின் தேவை அருகிப்போனது. காகிதக்கூழிலிருந்து
காகிதம் தயாரிக்கப்படுவது குறைந்தது. இதன் விளைவாக மரங்கள் காகிதக்கூழுக்காக வெட்டப்படுவதும்
கணிசமாகக் வெகுவாகக் குறைந்துள்ளது.
பாதாசாரிகள்
கடந்த பல்லாண்டுகளாக நடைபாதை மனிதர்கள் என்கிற விஷயம்
கவனிப்பார் அற்றுப்போனது. காலம் நம்மை வேறு தளத்திற்கு நகர்த்திவிட்டிருக்கிறது. சாலையில்
நடந்து செல்வோரின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. சாலையில் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.
சாலையில்
பாதாசாரிகளுக்கென்று தனித்தடத்தின் உபயோகம் இன்று அருகி வருகிறது. நடைப்பயிற்சிக்கெனத் தனிப்பூங்காக்கள்
அமைக்கப்படுகின்றன. மொட்டைமாடியும் நடை இயந்திரமும் நடைப்பயிற்சிக்குப் பிரத்யேக புழங்கு பொருளாயின.
இந்திய நாட்டின்
தலைநகர் புதுடில்லி காற்று மாசின் கிடுக்கிப்பிடியில் அகப்பட்டு திக்குமுக்காடுகிறது.
வாகனங்களின் அபரிமித ஆதிக்கம். அவை வெளியிடும் புகை மண்டலத்தால் நாட்டின் தலை நகர் வாழத்தகுதியற்ற நகரமாகியது. டில்லியில் வாகனக் கட்டுப்பாடுகள்
கெடுபிடிகள் அமலுக்கு வந்தன. டில்லியைத்தொடர்ந்து பெங்களூரு தொழிற்கூடப்புகை நச்சால் காற்று மாசு கூடிய நகரமாகியிருக்கிறது. ஹரியானா மாநில விவசாயிகளின் அறுவடை முடிந்த அடிக்கட்டை
மொத்தமாய் எரிப்பும் அம்மாநிலத்தில் காற்று
மாசு அதிகரிக்க ஒரு காரணி என்பதறிவோம்.
மாமன்னர் அசோகர் சாலைகளில் நிழல் தரும் மரங்களை நட்டுப்
பராமரித்ததை வரலாற்றில் நாம் படித்திருப்போம். பிரிட்டீஷார் சாலை ஓரங்களில் புளிய மரங்களை
நட்டு வளர்த்துவிட்டிருப்பதை இன்றும் காண்கிறோம். பயன் தரு சாலையோர மரங்களால் அந்த அந்த ஊர் மக்கள் பலன் அடைந்தார்கள்.
மழைக்காலங்களில் சாலையின் மண் அரிப்பை அந்தப்
புளிய மரங்கள் தடுத்து நிறுத்தின. பாதாசாரிகளுக்கு அவை நிழல் தந்து உதவியது என்பதனைக்
குறிப்பிடுவது அவசியம்.
தென்னந்தோப்புகளும்
மாந்தோப்புகளும் புளியந்தோப்புகளும் வாழைத்தோட்டங்களும் காய்கறி கனி மலர் தோட்டங்களும் மனித வாழ்க்கைக்கு
இன்றியமையாத உதவும் கரங்களாய் நிற்கின்றன.
தேயிலைச்செடிகளும்
காபிச்செடிகளும் ரப்பர் மரங்களும் மிளகும்
ஏலமும் காஷ்மீரத்துக் குங்குமப்பூவும் நாட்டின்
முக்கியமான தாவரச்செல்வங்கள். மீனவர்களின் வாழ்வாதாரமான கடல்பயணத்திற்குத் துணை நிற்கும் படகுகள்
கட்டுமரங்கள் இவைகளை விருட்சங்கள் கொண்டே வடிவமைக்கிறோம்.
மாசுகளில்
ஒலி மாசுபற்றிக் குறிப்பிட வேண்டும். பட்டாசு வெடிப்பு மானுட செவித் திறனை மந்தமாக்கும்
ஒலி மாசு, மற்றும் காற்று மாசு. ஒலி மாசினைக்
கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள் பெரு ஒலி
இடை தடுப்பாய் நின்று மனித குலத்திற்குப்
பெரிதும் உதவுகின்றன.
’Woods
are lovely dark and deep’ என்பார் கவிஞர்
ராபெர்ட் ஃப்ராஸ்ட். மனித மன இறுக்கத்தை இறக்கிவைக்க அவை சுமை தாங்கியாய் நின்று மனித
சமுதாயத்தைப் பேணிக்காக்கின்றன. காடுகளிடை நடை பயில்வது இரத்த அழுத்தம் சர்க்கரை நோய்
என்னும் குறைபாடு குறையக்காரணிகளாகின்றன.
மரங்களின் கொடை
மரங்களில் அரச மரம் உயிர் வளியை அதிகம் வெளிவிடும்
மரமாக அறியப்பட்டு இருக்கிறது. சாதாரணமாக ஒரு
மரம் ஒரு ஆண்டிற்கு 280 பவுண்டு உயிர்வளியை உற்பத்தி செய்து நமக்கு வழங்குகிறது. நான்கு
நபர்கள் உள்ள குடும்பத்திற்குத்தேவையான உயிர்வளியை இரண்டு வளர்ந்த மரங்களே அளித்து
உதவுகின்றன.
இன்றும் அரசமரமும்
விநாயகரும் இல்லாத கிராமங்களைப் பார்த்தல் அரிது. அவ்வரச மரத்தோடு வேப்பமரம் இணைந்து
வளர்க்கப்படுதலும் காண்கிறோம்.
புத்தர் ஞானம்
பெற்றது போதிமரத்திற்குக்கீழாக என்று வரலாறு
பேசும்.அதன் கிளை ஒன்று பெளத்தம் பரவ இலங்கைக்குக்
கொண்டு வரப்பட்டு அசோக மன்னர் வம்சத்தினரால் அனுராதபுரத்தில் நடப்பட்டதுவும் வரலாறு. மரங்களைப் புனிதச்சின்னங்களாக
வைத்து வணங்கிய புராதன பாரம்பரியம் நமக்குண்டு.
மரங்களின் கொடையான மா பலா வாழை எனும் முக்கனிகள்
தமிழ் மண்ணில் பிரதானமானவை. அவை முக்கனிகள் என போற்றப்படுகின்றன.
தொன்மங்கள்
கிடைத்தற்கரிய நெல்லிக்கனி ஒன்றை கவி அவ்வைக்கு சிற்றரசன்
அதியமான் வழங்கிய வரலாறு நாம் அறிந்த ஒன்று. மானுட வாழ்நாளை க்கூட்டும் நெல்லிக்கனியைத் தமிழ்க்கவி
உட்கொள்வது தமிழுக்குச்செய்யும் ஒரு உபகாரமாய் அவ்வரசர் கருதியது பெருமை மிகு வரலாறு.
முல்லைக்கொடி
படறத்தவித்தபோது தான் ஏறி வந்த அரச ரதத்தை வழங்கினான் வள்ளல் பாரி. ஆக முல்லைக்குத்தேர் ஈந்த பாரி என்று புகழப்படுகிறன்.
தமிழ் நாட்டு
மிளகும் ஏலமும் பிற வாசனைத்திரவியங்களும்
அரபிக்கடலில் பயணித்துப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிச்
சென்றதை நாம் படித்திருப்போம். பண்டைய பொருளாதாரம்
செழிக்கத் தமிழர்க்கு அவை பேருதவியாய் இருந்தன.
எட்டுத்தொகை
நூல்களில் நற்றிணையில் ஒரு பாடல். வீட்டுத்தோட்டத்திலே
ஒரு புன்னை விருட்சம். அதன் கீழ் ஒரு தலைமகன் தலைவியை காதலிக்கச்சீண்டுகிறான். தலைவித்
தயங்கிச் சொல்கிறாள்.’ எனது தாய் இம்மரத்தை தமக்கை
எனக்காட்டி எனக்கு சோறு ஊட்டினாள். அப்போது யான் சிறு குழவி. ஆகவே இம் மரம் எனக்குச் சோதரி. அவள் முன்னே நகைத்து விளையாடுதல் கூடாது. நமது பண்பாடு இது’ என்கிறாள். ஆக விருட்சங்களைத்
தம் உடன் பிறப்பாய்ப் பாவித்தது நம் சங்க கால மரபு.
விளையாடு
ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம்
துறந்தகாழ் முளை அகைய
நெய்பெய்
தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும்
சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள்
பன்னையது சிறப்பே
அம்ம! நாணுதும்
நும்மொடு நகையே -நற்றிணை 177
கேரளத்து
மக்கள் தென்னையை கல்பக விருட்சமாகக்கருதுகிறார்கள்.
தென்னம் பூ அவர்கட்கு தெய்வ சாந்நித்யம் கொண்ட பொருளாகும்.. திருச்செந்தூர் தமிழ்க்கடவுள்
முருகன் மாமரமாக நின்ற அசுரனை இறுதியில் சம்ஹாரம்
செய்தார். அம் மாமரம் இரண்டாகப்பிளக்க ஒன்று சேவலாகவும் மற்றது மயிலாகவும் மாறிற்று. மயிலை த்தனது வாகனமாகவும் சேவலைக்கொடியாகவும் கொண்டார் முருகப்பெருமான். ஆக மரங்கள் தமிழ் மானுட வாழ்வோடு
பின்னிப்பிணைந்தவை.
பறவைகள் மரங்களில்
கூடு கட்டி வாழ்கின்றன. பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து அவை இன விருத்தி செய்கின்றன.
வேடந்தாங்கல் ஏரியைச்சுற்றி நிற்கும் மரங்கள்
பன்னாட்டுப்பறவைகளின் தங்குமிடங்களாகின்றன. இவை தொடர்ந்து நடைபெறுதல் புவியில் நாம் மனிதர்களாக வாழ்வதற்கு ஆதாரமாகிறது. மனிதர்க்கு மட்டுமா
உணவு வழங்குகிறது மரங்கள். பிற மிருகங்கட்கும் அவை உணவாகின்றன. மரத்தின் உணவின்றி ஒரு
நாள் கூட யானையால் உயிர் பிழைத்திருக்கமுடியாது.ஒட்டகச்சிவிங்கிகளும்
மானினமும் பிற விலங்குகளும் மரங்களை நம்பியே
வாழ்கின்றன. பறவைகட்கு அவை இன்பக்குடில். மனித வாழ்வுக்கு மகத்துவம் சேர்ப்பவை மரங்களே.
’காற்று மரங்களிட்டைக்காட்டும்
இசைகளிலும்’ என்பார் குயிற்பாட்டில் மகாகவி.
முடிவுரை
பூவுல நண்பர்களின்
குழாம் கூடிக்கொண்டு வருகிறது. உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. உயிரினம் ஒன்றன் வாழ்வியல் மற்றதன் வாழ்வியலுக்கு
ஆதாரமாகிறது.மரங்களை நட்டு நீர் ஊற்றிப் பராமரிப்பவன் அடுத்தவரை நேசிக்கிறான்.தன்னையும்
நேசிக்கிறான்.
ஆலம் விழுதுகள்தாம்
உயிரினங்கட்கு ஆனந்த ஊஞ்சல்.
-----------------------------------------------------
.