Thursday, June 30, 2022

இதனை இதனால் கதை

 இதனை இதனால்                 -எஸ்ஸார்சி

 

என் பையனுக்கு முடிச்சூர் பக்கமாய் வீடு வாங்கினேன்.வாங்கும் போதே அகவிலைதான்.  அருகில்  ஓடுகிறது ராட்சதன் அடையாறு.  மூச். அதெல்லாம்  அப்போது யார் எனக்குச் சொன்னார்கள்.   செம்பரம்பாக்கப் பெருவெள்ளம்   சென்னையை  பார்த்திராத  அந்தக்காலம். நடக்கச் சோம்பேறி சித்தப்பன் வீட்டில் பெண் கட்டினான்  என்பார்கள். அந்தக்கதைதான்.நான் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டின்  வெகு அருகில்  விலைக்கு வந்த வீடு அது.

  ஜாதகப்படி எட்டாம் இடத்தில்  ஈசுவரப்பட்டம் பெற்ற  அந்தச்சனி பகவான்  வந்திருக்கிறார் சட்டென்று என் புத்திக்கு உறைக்கவில்லையே.  அப்படி   அது உறைக்காமலும்  இருக்க அவனே பார்த்துக்கொள்வானாம்.  பணி ஓய்வின் போது எனக்கு  மைய அரசாங்க கொடுத்த பணிக்கொடை இத்யாதிகள் எல்லாம்சேர்த்து அப்படி இப்படி  என்று  என்   பையன் பெயரில்  வீடு வாங்கினேன்..

 ’தாலி கட்டிய கையோடு பையனுக்குத்   தனிக்குடித்தனம்  வைத்துவிடு. இயன்றவரைக்கும்  தாயும் தந்தையும் தனியாக இருப்பதுதான்  உசத்தி. அந்த மகாவிஷ்ணுவே வந்து உன்னைச் சமாதானம் செய்தாலும்  ஒன்றாய் இருக்க மட்டும் ஒத்துக்கொண்டு விடாதே ’என் மூத்த  நண்பர் சொன்னக் கனமான யோசனை. அவர் என்ன பாடு பட்டோரோ.

 கல்யாணமாகி  குடித்தனம்  வைக்கும்போதே நாமே தனியாக  ஜாகை வைத்துவிட்டால்  அது உசிதம்.   மருமகள்  வீட்டுக்குள் அடி எடுத்து  வைத்தாள். ஒற்றுமையாய் இருந்தக்  குடும்பத்தைப்பிரித்துகொண்டு தனியாகப்போய்விட்டாள்.  இந்தக் கெட்டபெயர்தான் அவளுக்கு எதற்கு? என் மனைவி சாதுரியமாக எப்போதேனும் பேசிவிடுவாள்.

 ஊனக்கண்ணிற்கு அகப்படா அசுரன் கொரானா. அவன்  ஜனிப்பதற்கு முன் பையன்  அமெரிக்கா தேசத்துக் கலிபோர்னியாவுக்குப் போய்விட்டான். அவன்  மனைவியும்  உடன் போனாள் பேத்தியும் அவர்களோடு போயாயிற்று.

பையனுக்கு வாங்கிய புது  வீட்டில்  ஒரு மதுரைக்காரன் வாடகைக்குக் குடியிருந்தான்.  ஊர் ராசி.  சென்னையில் மதுரைக்காரர்களும் திருநெல்வேலிக்காரர்களும்தான் கெத்தாய் பவனிவருகிறார்கள்.  வாடகைக்கு வரும்போதே  மதுரைக்காரன் வீட்டில் ‘கார் பார்க்கிங்’ இருக்கிறதா என்று கவனமாய் விசாரித்து வந்தான். அவனிடம் கார் ஒன்றும் இல்லை. மதுரையிலிருந்து ஊறுகாய் டப்பிகள் ஏற்றிக்கொண்டு  அந்த குட்டியானை ஒன்று  வரும்.  குட்டியானை என்றால் அதுதான் மினி லாரி உங்களுக்குத்தெரியாத சமாச்சாரமா.

. ஊறுகாய் பேக்கிங்க்கள்  கார் பார்க்கிங்  பகுதியில் அடைத்துக்கொண்டு கிடக்கும். அவை அங்கங்கு வண்டி ஏறிப் போகும் போனவை.  திரும்ப வராது. புதியவை வரும். அமரும். புறப்படும்..

கொரானா காலத்து வாடகை பாக்கி முப்பதனாயிரம் மதுரைக்காரன்  எனக்குத் தரவேயில்லை. ‘பாக்கலாம் சார்’ என்பான். அவன்  பார்க்கவேயில்லை. சமீபமாக ஒரு  ரெண்டு மாத வாடகை டிமிக்கி. மூன்றாவது மாதம் ஓடிக்கொண்டிருக்க வீட்டுச் சாவியை என் பக்கத்துவீட்டு ஆசாமியிடம் கொடுத்துவிட்டு ஓடியே போய்விட்டான்.

என் மனைவி ’மதுரைக்காரன்  எவ்வளவோ நல்லவன் வீட்டுச் சாவியை அவனே எடுத்துக்கொண்டு போயிருந்தால்  நாம் என்ன செய்வது’ சொல்லிக்கொண்டாள். அவளுக்கும் சொந்த ஊர் மதுரைப்பக்கம். அந்த எஃபெக்ட்  எப்போதும் உண்டு..

வாடகைக்கு  விட்ட என் பையன் வீட்டைத்திறந்து பார்த்தேன். வீடு மனிதர்கள் குடியிருந்தமாதிரிக்கு இல்லை. மூன்று ஃபேன்களில் ரெண்டு ரிப்பேர். டாய்லெட் நாறிக்கிடந்தது.  பாத் ரூம் அலங்கோலம்.  ஜோராய் வெள்ளைஅடித்தால்தான் இனி வாடகைக்கு விடலாம். ஜன்னல் கதவுகள் உடைந்து திருகிக்கொண்டு கிடந்தன. தோட்டக்கதவு திறக்க வரவேயில்லை. மூச்சைப்பிடித்துக்கொண்டு திறந்தேன். ஒரு கறிவேப்பிலை ஒரு வாழை ஒரு நெல்லி மரங்கள் பிராணனை வைத்துக்கொண்டு கோபமாய்  என்னை முறைத்தன. தப்பு முளை மாங்கன்று தள தள என்று வளர்ந்து இருந்தது. அது ஏன் தப்பு முளைகள்  மட்டும் வீர்யத்தோடு காட்சி தருகின்றனவோ, சூட்சுமம் பிடிபடுவதில்லை.

அண்ணாந்து பார்த்தேன். பக்கத்து வீட்டுக்காரன் என் பையன் தோட்டத்து அத்தில்  ஜன்னல்  வைத்து இருக்கிறான். எல்லையாயுள்ள  தாய்ச்சுவரைத்தாண்டி ஜன்னல் கதவை நீட்டி  அதன் மேல் சன் ஷேடும் அமைத்து விட்டிருந்தான். அவனுக்கு த்தாய் சுவரோடு சரி. என் பையன் தோட்டத்து மண்ணில்  ஒண்ணரை அடிக்கு  ஆக்கிரமித்து இருந்தான்.  எனக்கு வயிற்று எரிச்சலாய் இருந்தது. இது என்ன அக்கிரமம் அநியாயம். நாம் இப்படிச் செய்தால் அவன் சும்மா இருப்பானா.  விர்ரென்று போனேன்.அடுத்த வீட்டுக்காரனை அழைத்தேன்.

அவன் மனைவி வெளியில் வந்தாள். ‘ என்ன’

‘ என்ன   இது அக்கிரமம்  என் வீட்டு தோட்டத்து அத்துல ஜன்னல வச்சி கதவயும் வெளியில தொறந்து விட்டு இருக்கிங்க சன் ஷேடு வேற மேல நிக்குது   எல்லாமே தப்பு.  இத உடனே  எடுத்துடணும்’

‘ எங்க செவுறுல நாங்க  ஜன்னலு வச்சம் அதுல உனக்கென்னா போச்சி’

‘ எங்க பக்கமால்ல  நீட்டி வச்சிருக்கிங்க’

‘இப்ப  அதுக்கு என்ன செய்ய’

‘ அத எடுத்துடணும்’

‘ வேற வேல எதனா இருந்தா பாரு’

அந்த அம்மாள் உள்ளே சென்று விட்டாள். என் பையனுக்கு தகவல் சொன்னேன். வாட்ஸப்பில் ஜன்னலைப்  படம் எடுத்து அனுப்பினேன்.  வாடகைக்கு  குடி இருந்த  மதுரைக்காரர் இந்த ஜன்னல் வைத்த  விஷயம் என்னிடம் சொல்லவேயில்லை. அவர்தான்  வீட்டு சாவியே என்னிடம்  நேரில் கொடுக்காமல் போனவராயிற்றே. போன் போட்டாலும் எடுப்பாரா என்ன?

‘ இன்னொரு முறை  அவர்களிடம் எடுத்து  சொல்.   கொஞ்சம் கெஞ்சு. பிறகு பார்ப்போம்’ பையன் சொன்னான்.

 என் பையன் சொன்னபடிக்கு  பக்கத்துவீட்டுக்காரரை நேரில் பார்த்துச் சொன்னேன்.

‘’சார் அந்த ஜன்னலு’

‘ எந்த ஜன்னலு  எங்க தோட்டத்து அத்துல தப்பா வச்சியிருக்கிங்க அத எடுத்துடணும்’

‘ நானு வச்சத  நானே எடுக்குணுமா’

‘தப்பால்ல வச்சிரிக்கிங்க’

‘ நீ  அங்க வூடு கட்டு  செவுறு எழுப்பு  அப்ப எடுக்குறன் இப்பக்கி  ஒண்ணும் ஆவாது’

‘அப்ப  நா என்ன செய்யறது’

‘ நீ என்ன செய்யினுமோ செஞ்சிகு அவ்வளவுதான். ஏ  கிறுக்காப்பா நீ  ரவ மண்ணுக்கு என்ன ஆத்திரம் என்ன ரோசம் பாரையா’

அவர் போய்விட்டார்.

அந்தப்பகுதிக்கு ஒரு குடியிருப்போர் சங்கம் இருந்தது. அந்த செகரெட்ரியிடம் போனேன்.  வீட்டுக்கு  மாத  சந்தா சரியாகக்கட்டியிருந்தேன்.  பக்கத்து வீட்டுக்காரன் ஜன்னல் வைத்த  விஷயம் சொன்னேன். நியாயம் வேண்டுமென்றேன். அவர் சிரித்துக்கொண்டார். ‘இது ஆவுற கதையா’ என்றார்.

அந்த எரியா முனிசிபல் கவுன்சிலர்  வீட்டு  விலாசம்  தேடிச்சென்று முறையிட்டேன்.’ நான் இப்பத்தான் புதுசா வந்திருக்கேன். உங்க விஷயம்  அங்க  வந்து பாக்குறேன்.’ பதில்  எனக்குச்  சட்டமாய் சொன்னார்.

கதை ஒன்றும் ஆகாது தெரிந்துவிட்டது. வீட்டுக்கு வாஷிங்க் ரிப்பேர் பார்க்க ஒரு டெக்னீசியன் வந்திருந்தார். அவரிடம் என் பையன் வீட்டு அத்தில்  அடுத்த வீட்டுக்காரர்  ஜன்னல் வைத்துவிட்ட  கதை  சொன்னேன். ‘போலிசுக்கு போங்க ஒரு மனு கொடுங்க ஆனா  உங்களுக்கு பத்து  அவுருக்கு பத்து செலவு வரும்’

‘ பத்துன்னா’

‘பத்தாயிரம்தான். அது எல்லாம் இப்ப  ஒருபணமே இல்ல.  நாளைக்கு நீங்க  உங்க பையன் வீட்டை விக்கிணும்ல’

சரியாகத்தான்’ சொல்கிறார்’

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உடன் செயலில் இறங்கினேன்.

’வீடு விற்பனைக்கு’ ஒரு அட்டையில் எழுதி அதன் கீழ் என் தொலைபேசி எண் எழுதி என் பையன் வீட்டு  வாயில் கேட்டில் கட்டினேன். அடுத்த வீட்டுக்காரர்  அதனை வந்து பார்த்து படித்துவிட்டு தலையை சொறிந்துகொண்டே போனார்.

என் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

‘ சார். உங்க பையன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் பேசறேன்’

‘ சொல்லுங்க’

‘ நெசமாவே வீடு விக்க போறிங்களா’

‘ என்ன விளையாடுறீங்களா’

‘  வீடு  சேல்ஸ் முடிஞ்சி போச்சி’

‘என்ன சொல்றீங்க’

‘ வீட்ட  ஆட்டுத்தொட்டி  தோல் மண்டி ஆசாமிகிட்ட  பேசி முடிச்சிட்டன்’

‘என்ன சொல்றீங்க சார்’

‘இனிமே அந்த கார் பார்க்கிங்க்கு ஊறுகா பேகிங்க்  வராது. மதுரைக்காரரு காலிபண்ணிகிட்டு  போயிட்டாரு.  தோலு  பிசினஸ் ஆளு கெரயம் வாங்கிகிட்டு  வருது. ஆட்டு தோலுவதான் மலை மலையா குவிஞ்சி கெடக்கும் பாத்துகுங்க’

‘சார்  நாங்க பக்கத்து வீட்டுலகுடியிருக்கறமே. ஆட்டுத்தொட்டி அஸ்ஸாமிகிட்ட  உங்க வீட்ட  வித்திங்கன்னா என்னா  ஆவுறது’‘ ’

ஆமாம் சாரு உங்க செவுத்துல  நீங்க ஜன்னலு வக்கிறீங்க  அது அத்து தாண்டி வருது.. தப்புன்னேன்.  எங்க செவுறு  நாங்க ஜன்னல் வப்பம்னு சொல்றீங்க.   எங்க வீடு  இப்ப நாங்க அத   யார்கிட்டயும் விப்பம் அவ்வளவுதான்’

‘சார் நா  அந்த ஜன்னல்ல மரக்கதவ எடுத்துடறன். கண்ணாடி  ஸ்லைடிங் டோர் போட்டுகிறேன்.  உங்க அத்துல   அந்த ஜன்னல் வரவே வறாது. அந்த சன் ஷேட் டையும் தட்டி வுட்டுடறன்’

‘ பேசறது நீங்கதானா’

‘  ஆமாம் சாரு. உங்க வூட்ட அப்பிடியெல்லாம் கன்னா பின்னான்னு வித்துடமாட்டிங்க  தெரியும் சாரு.’  பேச்சில் மரியாதை மிளிர்ந்தது.

மவுனமானேன்.

அவர் அந்த  ஜன்னலுக்கு  ஸ்லைடிங்க் டோர் போட்டார். சன் ஷேடயும் தட்டிவிட்டார். நான் என் பையன் வீட்டு வாசலில்  ‘அவுஸ் ஃபார் சேல்’  அறிவிப்பை கழட்டிவிட்டு ‘டு லெட்’போர்டை  இப்போதுதான் மாட்டிவிட்டேன்.

மதுரைக்காரர்கள் யாரேனும்  வந்து. வாடகைக்கு வீடு வேண்டும்  என்று உங்களைக்கேட்டால் எனக்கு  அவசியம்  ஒரு போன்  போடுங்கள்.

------------------------------------