என்னத் தவம் செய்தோம்.
’இலக்கியச்சோலையின் ஆலமரம்’ இது நூலின் தலைப்பு. 38 கட்டுரைகளக் கொண்ட ஒரு தொகுப்பு நூல். தொகுத்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் பாவண்ணன்.
எங்கே இருக்கிறது இலக்கியச்சோலை? யார் இந்த ஆலமரம்? இக்கேள்விகளுக்கு விடை சொல்லித்துவங்கலாம்.
இலக்கியச்சோலை கடலூரில் இருக்கிறது. ஆலமரமாய் வாழ்பவர்
வளவ. துரையன். எழுபத்தைந்து அகவை நிறைந்த இந்தத் தமிழ்ப்பணியாளர் கடலூரில் வாழ்கிறார்.
ஆசிரியராகப்பணி புரிந்து ஓய்வு பெற்ற வளவ.துரையன் வளவனூர்க்காரர். அண்ணாதுரையின் மீது
தனக்கிருந்த பற்றுதலால் துரையன் என்பதை ஊரோடு
சேர்த்துக்கொண்டு வளவ. துரையன் ஆனார்.
சங்கு இலக்கியக்காலாண்டிதழின்
ஆசிரியர். கடலூர் இலக்கியச்சோலை என்னும் பேரமைப்பின் மூல வேர். அன்னாருக்குச் சிறப்பு சேர்க்கத் தமிழ் அன்பர்களால்
எழுதப்பட்டக் கட்டுரைகளின் தொகுப்பையே சந்தியா பதிப்பகம் அழகிய புத்தகமாக வெளியிட்டுள்ளது.
முதல் கட்டுரை நாஞ்சில் நாடன் ’எம்முளும் ஒரு பொருநன்’
என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். அதன் இறுதி வரிகளில் இப்படிப்பேசுகிறார்.
‘வாழ்த்தவும் பாராட்டவும் மதிப்புரை எழுதவும் முக நூலில்
பதிவிடவும் சினிமா அரசியல் சாதி பின்புலங்கள் இன்றியமையாதனவாகக் கருதப்படும் சம கால
இலக்கியச் சூழலில் வளவ. துரையன் போன்ற மூத்த தமிழ் எழுத்தாளருக்குச் சிறப்பிதழ் வருவது
உவப்பானது.’ இதைவிடக் கருத்துச்செறிவாய் வளவ. துரையன் பற்றிச் சொல்வதற்கு
ஏதுமில்லை.
மன்றவாணன் என்னும்
எழுத்தாளர்’ தமிழ்தான் முதல், அப்புறம்தான் நீ’ என்னும் தலைப்பிட்டுத் தமிழாகவே வாழும்
வளவதுரையனுக்குப் பெருமை சேர்த்துள்ளார். பிராமண குலத்தில் பிறந்த யாரும் தம் பிள்ளைகளுக்குத்
தனித்தமிழில் பெயர்கள் சூட்டுவதில்லை. இறைவன் பெயரே ஆனாலும் முருகன் என்ற பெயரை வைப்பதில்லை.
ஆனால் இவர் தம் பிள்ளைகளுக்கு எழிலன், முகிலன், அல்லி என அழகு தமிழ்பெயர்களைச்சூட்டித்
தமிழுணர்வில் திளைத்தவர் என்று பெருமையோடு குறிப்பிடுகிறார்.
எழுத்தாளர் அன்பாதவன்
வளவதுரையன் பற்றி,’ ஏரியின் சில்லிப்பு, ஏரிக்காற்றின் குளிர்மை, தாகம் தீர்க்கும்
தாய்மை, கரைகளால் காவல் என வளவனூரின் படிமமாகவே இனியவர் வளவ. துரையனின் இலக்கியப்பயணத்தைக்
காண்கிறேன்’ என்கிற பட்டயம் வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.
முனைவர் பாஸ்கரன் தனது படைப்பில் ’ ஒரு பருந்துப்பார்வையில்
முப்பது ஆண்டுகளாய் எழுதிவரும் வளவ. துரையனின்
படைப்புகளை ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் பார்க்கும் போதுவெவ்வேறு வண்ணங்களிலும்
கோணங்களிலும் எழுதப்பட்ட தவிப்பின் சித்திரங்கள் நிறைந்திருப்பதை உணரமுடியும்’ என்று முடிக்கிறார்.
எழுத்தாளர் எஸ்.
ஜெயஸ்ரீ ,’ கால் நூற்றாண்டாக இவ்வளவு பெரிய ஆளுமை நம்மோடு இருப்பதற்கு நாம் என்ன தவம் செதிருக்கிறோம் என்று பல சமயங்களில் நான் வியந்து
போயிருக்கிறேன் என்று உணர்ச்சி மேலிடக் குறிப்பிடுகிறார்.
கோவி. ஜெயராமன் என்னும் எழுத்தாளர் ‘நிழல் தரு’ என்னும்
தனது கட்டுரையில் இப்படி எழுதிச்செல்கிறார்.
‘எந்த இலக்கிய இசங்களுக்குள்ளும் அடங்கிவிடாமல் அதே சமயம்
எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொள்ளும் கடல் போன்றது இவருடைய மனம். எதன் மீதும் இவருக்கு
வெறுப்பு இல்லை’ எத்தனை கச்சிதமான வரையறை. நூலை வாசிக்கும் வாசகன் நெகிழ்ந்துதான் போகிறான்.
கடலூர் சீனு என்னும் சீரிய வாசகர், தனது ‘ அபூபுர்வ மனிதர்
என்கிற கட்டுரையில், எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களின் பெயரை நான் கேள்விப்பட்டது
எழுத்தாளர் ஜெயமோகன் வசமிருந்துதான். எழுத்துலக ஜாம்பவான் ஜெயமோகன் சொல்ல அவரைத்தான் அறிந்து கொண்டதாய்க் குறிப்பிடுகிறார்.
தாமே செம்மைப்படுத்திக்கொண்ட பாதையில் வளவதுரையனுடைய தேர் சீரான வேகத்தில் நகர்ந்துகொண்டே இருக்கிறது என்று முத்தாய்ப்பாகப் புத்தகத்தை முடிக்கிறார் பாவண்ணன்.
தமிழ் எழுத்துலகில் இப்படி ஒரு சிறப்பை ஒரு எழுத்தாளன் சக எழுத்தாளனுக்குச் செய்ததில்லை. இதுவே ஒரு வரலாறு.
ஆலமரத்தை அறிவோம் வாருங்கள்.
தொகுப்பாசிரியர் பாவண்ணன்
சந்தியா பதிப்பகம் பக்கங்கள்
286 விலை ரூ 350 பதிப்பு 2025.