Friday, October 17, 2014

munnurai - birammalipi




பிரம்ம லிபி இது என்னுடைய ஏழாவது சிறுகதைத்தொகுப்பு.

வண்டி யோட்டி ஒருவன் தானிய மூட்டைகள் சுமந்த பரரவண்டியை ஓட்டிக்கொண்டே செல்கிறான்.. காளைகள் வண்டியை இழுத்துக்கொண்டு மண்சாலையில் நடக்கின்றன. காளைகளின் கழுத்துப்பட்டை சதங்கை ஒலியும் கொம்பில் தொங்கும் மணி களின் ஒலியும் கூத்து அரங்கொன்றை மனத்திரையில் காட்சிப்படுத்துகின்றன. முன் இரவுப்போது.சாலை நெடுகிலும் அடர்ந்து உயர்ந்த மரங்களின் வரிசை. மலர்ந்து மணம் வீசும் பூங்கொத்துக்ககளை அவை தாங்கி நிற்கின்றன.பறவைகள் இரவுக்கு த்தம் இருப்பிடம் வந்துவிட்டதை க் கூவி க்கூவித்தம் சொந்தங்களுக்கு அறிவிக்கின்றன
ஆகாயத்தில் சிரிக்கும் பொக்கை நிலவோடு தாரகைகள் சூழ இடை இடையே மேகங்கள் நடனமாடுகின்றன.தூரத்தில் ஒரு நீர் நிலை இருப்பதை த்ழுவிச்செல்லும் குளிர் காற்று ச்சுகம் உறுதி செய்கிறது.சாலை ஓரத்தில் நடப்பட்டிருக்கும் குத்து மைல் கற்கள் கடந்து வந்ததும் கடக்க இனி காத்திருப்பதும் எத்தனை தூரம் என்பது பேசுகின்றன.
வண்டியோட்டிக்கு த்தலையில் ஒரு முண்டாசு. கையில் கடிதோச்சி மெல்ல எறியும் ஒரு மூங்கில் கொம்பு.. தன்னை அறியாமலே தன் வாய் எதுவோ ஒரு ராகத்தை நீட்டிப்பாடுகின்றது. வண்டியோட்டியின் ஆழ்மனம் சொல்லொணா நிறைவு ஒன்றை இக்கணம் அசைபோடுகிறது. .
ஒரு சிறுகதை எழுதி முடித்ததும் படைப்பாளி பெறும் மன நெகிழ்வு இது.

பிரம்ம லிபி -இந்த தொகுதிக்கு தலைப்பாகி வந்திருக்கும் சிறுகதை. கபாலி என்னும் என் நண்பனின் மகள் +2 படிக்கும் அருணா தற்கொலை செய்துகொள்கிறாள்.அவளின் அத்தைக்கு தன் தங்கச் சங்கிலியை ஏதோ ஒரு நிகழ்வுக்கு கழுத்தில் அணிந்து செல்லக் கடனாகக்கொடுக்கிறாள். அதனை அந்த அத்தை புருஷன் சர்ராயம் குடிக்க வாங்கிச்சென்று விற்று விடுகிறான். அருணா தன் அப்பாவுக்குத்தெரியாமல் நடந்துவிட்ட இந்த நிகழ்வுக்காக செய்வது அறியாமல் தூக்குப்போட்டு மடிகிறாள்.
அத்தை அருணாவின் இறப்புக்கு வருகிறாள். துக்கத்தில் கலங்கிப்போயிருக்கும் இருக்கும் சகோதரனுக்கு ஆறுதலாக க்கொஞ்ச காலம் தங்கி இருப்பதாக க்கணவனிடம் பொய்சொல்லி விட்டு தன்னால் நடந்துவிட்ட இந்தத் துயரம் தாங்கமாட்டாமல் ஊரைவிட்டு எங்கேயோ சென்று விடுகிறாள்.
ஒரு நாள் இறந்த மகளின் டைரியை தற்செயலாகப்புரடட்டுகிறான் கபாலி. தன் மகள் அருணா தன் இறப்புக்குக்காரணத்தை ஸ்கூல் டைரியில் ப்பதிவு செய்து இருப்பதைப்படிக்கிறான். தன் மனைவியிடம் நடந்த அந்த விஷயம் எப்படிச் சொல்வது. ஆக அடக்க முடியாத சீற்றத்தோடு தன் தங்கையின் வீடு தேடிப்போகிறான்.
அங்கு சென்று தன் தங்கை, தன் அண்ணன் தங்கி வீட்டில் இருப்பதாய்ப்பொய்சொல்லிவிட்டு எங்கோ சென்றுவிட்டதை அக்கணம்தான் கேள்விப்படுகிறான்.எதிரே தன் தங்கையின் கணவன் வழக்கம் போல் குடித்துவிட்டு போதை தலைக்கேறி நிலைதடுமாறி வீடு வந்து சேர்கிறாான். இருப்பிடம் தேடி வந்த மைத்துனனை தன் வசம் இன்னும் பாக்கி இருக்கும் சாராயத்தைக்குடிக்கச்சொல்லிக் குழந்தையாய் க்கெஞ்சுகிறான்.
தன் தங்கை. தன் மகள் தன் தாரம் ,தன்தாய்.எல்லோரையும் தான் ஏமாற்றி விட்டதை நினைத்துக்கபாலி குமுறுகிறான்.குடிகாரக்கணவனைத்தன் தங்கைக்கு அவன் தான் மணம் முடித்துவைத்தவன். அன்று ஏமாந்துபோனான் இந்தக் கபாலி.
காலமாகிப்போனக் கபாலியின் தாய் எப்படி நொந்துபோயிருப்பாளோ. இன்று தன் மகள் நடந்துவிட்ட இந்த எதுவும் தன் தாயுக்குத்தெரியவேண்டாம் என்று எழுதி வைத்துவிட்டு 'அத்தை பாவம்' என்று அவள் டைரிக் குறிப்பை முடித்து இருப்பதுவும் அவனுக்கு மனதில் ரணமாய் நெருடுகின்றது.
இவற்றிர்க்கு எல்லாம் விடை காணமுடியாத கபாலி ' எதுவும் அவன் போட்ட எழுத்துப்படி 'என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.
தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லுவார் மனிதன் ஒரு புதிர்.அந்த ப்புதிர் அவிழ்க்கப்படும்வரை இறைவன் இம்மண்ணில் இருக்கவே செய்வார் என்று. மாற்று வழி அறியாது துயரம்தொடர்கின்றவரை மனிதன் இறைவனிடம் சென்றுதான் மண்டியிட்டு நிற்பான் இப்படி இயம்புகிறது மார்க்சியம். ஆனாலும் தத்துவங்கள் என்றும் பசி ஆற்ற மாட்டாதன
. மனித இருப்பும் உழைப்பும் அன்பெனும் விருடசம் தழைக்க ஆதாரமாகும்போது மட்டுமே அமரத்வம் பெருகின்றன. அவ்வழி ப்பயணித்து இறை நிலை என்பது மானிட உன்னதம் என்றும் கொள்ளலாம்
சுழல் என்னும் சிறுகதை மனிதன் காசு என்னும் ஒரு விஷயத்துக்கு பின்னால் ஒரு நாயாய் குழைந்து அனுபவமாவதைப்பேசுகின்றது.பேராசை இல்லை என்று வெற்று வாயால் சொல்லமட்டுமே முடிகிறது.அடி மனத்தில் அந்த ஆசை மண்ணுக்குள் உயிர்ப்புபோல எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.நல்லவனைப்போல வேடமிட மனிதன் எத்தனை ஆலாய்ப்பறக்கிறான்.தோலை உறிக்க உறிக்க இல்லாதுபோகும் வெங்காயம்போல மனிதனின் வைராக்கியங்கள் நெருக்கடியில் தம் முகம் தொலைத்துவிடுகின்றன. .ஏமாற்றுக்காரர்கள் சின்னத்தனமாய் அயல் மொழி பேசுவதும் பகட்டு வித்தை காட்டுவதும் நெளித்துக்கொண்டு நிற்பதுவும் தொடரமட்டுமே வாழும் இச்சமுதாய அரங்கம் அமைக்கிறது.
சுழல் இக்கதையைத்தன் 'சங்கு' இதழில் வெளியிட்ட எனது பாசமிகு நண்பர் வளவதுரையன் யான் பெற்ற நட்புச்செல்வம்.மாற்றுஅறியா அன்புக்குரியவர். என் நன்றிக்கும்தான்.
'ஆகவே' என்னும் சிறுகதை சுரண்டப்படும் வர்க்கத்திற்கு எதிராக த்தன்னை வரிந்து கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் கூர்மை எப்படி மழுங்கிப்போகிறது என்பது பேசும். அதிகாரமும் அகங்காரமும் பொதுவுடமை இயக்கத்தை விழுங்கும் ராகுவும் கேதுவும். மனித அன்பை புரிந்துகொள்ளுதல் முதலாளித்துவ சதி என்று பேச ஆரம்பித்தால் போதும் அதிகாரக்கதவுகள் அங்கே திறந்துகொள்ளும். ஆய்வு செய்யப்படாத விஷயங்கள் ஆய்வு கட்டாயம் செய்யப்பட வேண்டிய முடிச்சுக்கள் ஏராளமுண்டு.நேர்மையான ஆய்வாளர்களின் வருகைக்குத்தேவை பொதுவுடமை அரங்கில் அசாத்தியம் நேர்மை என்பதற்கு உடன் இலக்கணம் யார் சொல்வது?.
எழுத்தாளர் சத்யானந்தன் என்றும் என் மரியாதைக்கு உரியவர். அவர் ரசித்துப்படித்த கதை நாய்ப்பிழைப்பு, மனிதர்கள் நாய்களோடு எப்படி வாழ்ந்து பின் வீழ்ந்து போகிறார்கள் என்பது பேசும் சித்திரம். இக்கதை குறித்து சத்யானந்தனின் திண்ணை பின்னூடாக்குறிப்புக்கும் எனது நன்றிகள். திண்ணை இலக்கிய இணைய வார இதழுக்கு என் நன்றிகள் என்றும் போல்.
'காசிக்குத்தன்போனெலென்ன' கதையை ரசித்துப்பாராட்டியவர் என் சொந்த ஊர் மூத்த எழுத்தாளர், சகிருதய்ர், வே.சபாநாயகம். எங்கு போனாலும் நம் நிழல் நம்மோடு என்பது வாசகர்க்குச் சொல்லும் கதை இது.
இப்படியாய் இங்கு இன்னும் பல கதைகள். நானே சொல்லிக்கொண்டு போனால் என்ன ஆவது. வாசகர்கள் நீங்கள் படியுங்கள்
. இத்தொகுப்பை எனது எழுத்தாள நண்பர் எஸ்.ஷங்கர நாராயணனுக்கு ச்சமர்ப்பிக்க என் மனம் விரும்பயது அவரின் வாழ்த்துக்களின்றி'பிரம்ம லிபி' சோபிக்கவும் முடியாது.
என் நண்பர் இத்தொகுப்பு வெளியீட்டுக்கு உறுதுணையாளர் உதயகண்ணனுக்கு என் அன்பு எப்போதும்..


எஸ்ஸார்சி

23 அ இரண்டாவது தெரு
நேதாஜி நகர்
பழைய பெருங்களத்தூர்.சென்னை 63.

9443200455.
... . .

.


.

.

No comments:

Post a Comment