Wednesday, November 19, 2014

cuddalore neelakandan panioyvu





தொடரும் சிரிலின் பாரம்பரியம் - தோழர் நீலகண்டனுக்குப்பணி நிறைவு


நீலகண்டன். கடலூர் நீலகண்டன்..தொலைபேசி அலுவலத்தில் எழுத்தராய்ப்பணியைத்துவங்கியவர்.அண்ணாமலையில் படித்த அன்றைய வேதியல் பட்டதாரி. சீர்காழிக்காரர்.நாளும் தமிழிசையால் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தரின் ஊர்க்காரர் என்றால் மிகச் சரியே.
. என்.எஃப்.டி.இ தொழிற்சங்கம் கடலூர் என்றால் அது தோழர் நீலகண்டனைச் சேர்த்துத்தான்.பருப்பு இல்லாமல் கல்யாணமா என்பார்கள். அப்படித்தான் கடலூர்மாவட்ட த் தொலைபேசித் தொழிற்சங்க இயக்கத்தின் போராட்ட களம் என்றால் அங்கே தவறாமல் இருப்பவர் தோழர் நீல கண்டன்.
அமுதத்தமிழ் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆராக்காதல் கொண்டவர்.இயல்பாய்க்கவிதை படைப்பவர். தமிழ் நேசர் தோழர் முத்தியாலு முன்னாள் மாநிலச்செயலரால் 'ஆயிரத்தில் ஒருவன்' என ப்போற்றப்பட்ட பெரியமனதுக்காரர்.மகாகவி பாரதிக்கு தமிழால் சொந்தமாகிப்போனவர்.அசப்பில் கடலூர் மண்ணின் எழுத்தாளர் ஜெயகாந்தனை ஒத்தவர். நீலகண்டனின் செம்மாந்த மீசையும் தலைமுடிப்போக்கும் இலக்கிய நேசமும் அப்படித்தான்.கடலூர் தொலைபேசி மாவட்டத்தில் நாற்பதாண்டுகள் பணியாற்றி நிறைவோடு இப்போது ஓய்வுபெறுகிறார்.
கடலூர் மாவட்டம் என்றால் தொழிற்சங்க இயக்கங்கள் என்றும் ஓயாது. கடலூரின் அலைகள் அறச்சீற்றத்தால் அமரத்துவம் பெற்றவை.உழவாரம் தூக்கிய சமயக்குரவர்அப்பர்பிரானை தூக்கிக்கரை சேர்த்த க்கடலலைகள் அவை. கடலூர் தொலைப்பேசித்தொழிற்சங்க அரங்கில் தோழர்கள் சிரில் ஜகன் ஆர்கே த்மிழ்மணி ரகு ரெங்கநாதன் என இன்றளவும் தொடரும் அதன் போற்றுதலுக்குரிய போர்க்குணம் மிக்கத்தலைமை.வர்க்க ஞானம் ஒளிருமொரு வழித்த்டம்.
தோழர் நீலகண்டனின் தொழிற்சங்கப்பணி அது நித்தம் தொடரும் வரலாறு.இன்றுதானே வந்தன இந்த டிஜிடல் பேனர்கள் அன்றைக்கு எல்லாம் தட்டி ஒட்டி அதனில் தூரிகை கொண்டு எழுதி எழுதித்தான் விளம்பரங்கள் செய்தி தந்தன..
தொலைபேசி ஊழியர்களின் அகில இந்திய மா நாடு.சென்னையில் விஜய் சேஷ மஹாலில் நடைபெற்றது நாமறிவோம்.. சென்னையைச்சிவக்க வைத்த அந்த அகில இந்திய மா நாட்டில் விளம்பரத் தட்டி எழுதும் குழுவுக்குத்தலைமை தோழர் நீலகண்டன்.. நம் தோழர் ஜகனின் தேர்வு அப்படி அமரர் ஜகனின் அன்புக்குப்பாத்திரமான கடலூர் தோழர்கள் பலரில் நீலகண்டன்.தலை மாணாக்கர்.
பெருங்கவி ஞானக்கூத்தன் தலமையில் கடலூர் கலை இலக்கிய ப்பெருமன்றத்தில் நிகழ்ந்த கவியரங்கில் அவர் வாசித்த கவிதையிலிருந்து ஒரு வரி,

பார்வையை மேலே வைத்தல்
உயர்வென எண்ணி
காலடியில் மிதிபடுவதும் தெரியாமல்
தப்படிகள் தடுமாறி நடந்தது போதும்!

எத்தனை ஆழமான அழுத்தமான செய்தி. அது நம் எல்லோருக்கும் தான்.காக்கைக்குருவி எங்கள் சாதி என்னும் மாகவிபாரதியின் அன்பனல்லவா நீலகண்டன் .தொழிற்சங்க இயக்க பிரச்சனையில் பழிவாங்குதல் மாற்றலில் சிதம்பரம் சென்று பல ஆண்டுகள்:பணிபுரிந்து தொழிற்சங்க வழிகாட்டுதலில் மட்டுமே பின்னர் மாவட்டத்தலை நகர் திரும்பியவர்.எண்ணற்ற தணடனைகள் அவரின் இயக்க ப் போர்க்குண்ததிற்கு சவாலாக நின்றன.நிலையின் திரியாத நேர்மையாளர் அவர்.
தன் திருமணத்தை தேவையற்ற வைதீக ச்சடங்கு தவிர்த்து புதுமையாக நடத்திக்காட்டிய உறுதியாளர்.நல்ல புத்தகங்களின் நண்பன்.புரட்சிக்கருத்துக்களின் கருவூலம்.அஞ்சாமை அவரின் செல் நெறி.
அவரின் துணைவியார் தமிழாசிரியர். கடலூர் தொலைபேசி அலுவலத்தில் தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை அனைத்து தமிழ் விழாக்களிலும்
சிறப்பாய்ப்பங்கேற்பவர்.நீலகண்டனின் மகளார் மருத்துவம் பயிலும் பாரதி வாலன்டீனா இருமுறை சிரில் அறக்கட்டளையினரின் தமிழுக்கு ஊக்கம் விருதுக்கு த்தேர்வு செய்யப்பட்டார்.நல்ல தமிழ்க்குடும்பம் அவருடையது.
தனது திருமண வெள்ளிவிழாவினை கடலூர் டவுன் ஹாலில் அவரின் நண்பர்களோடு கொண்டாடிய புதுமையைச்செய்தார்.இனிய விருந்தோம்பலோடு ,கடலூர் தொழிற்சங்க ஆசானும் இலக்கியவாதியுமான எழுத்தாளர் சிரிலின் சிறுகதைத்தொகுதி 'வேலைகொடு' நூலினை மறு பதிப்பு செய்து அனைவருக்கும் வழங்கிய் தமிழ்ப்பற்றாளர்.தமிழையும் சிரிலையும் தனது இரு கண்களாய்க்கொண்டிருப்பது நமக்குப்பெருமை.
கடலூர் மாவட்டச்சங்கத்தின் பொருளராக ப்பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் நீலகண்டன்.ர்கடலூர் மாவட்டச்சங்க த்தலமைக்கு எழுத்துப்பணியால்.எப்போதும் உதவுவது தோழரின் பெருங்குணம். ஆங்கிலமோ அல்லது தமிழோ அவர் மனந்தோய்ந்து உருவாகும் கடிதங்கள் என்று மட்டுமில்லை இன்ன பிறவும்தான்.
கடலூர் தொலைபசிமாவட்டத்து தொழிற்சங்க மகளிர்தினம்,சிரில் அறக்கட்டளையாரின் தமிழ் விழா, கலை இலக்கிய பெருமன்ற நிகழ்வுகள் எல்லாவற்றிலும் தன் முத்திரை பதித்தவர்..
கடலூர் தமிழ் இலக்கிய அமைப்புக்கள் பலவற்றோடும் தோழமை உறவு பேணும் பெரும் பேற்றுக்குச்சொந்தக்காரர்.
தோழருக்கு ப்பணிிலிருந்து ஒய்வு. அலுவலகப்பணியிலிருந்து மட்டுமே.இனி த் தொழிற்சங்கப்பணிக்கும் தமிழ்ப்பணிக்கும் தோழரின் வருகை கூடுதலாய் வலிவும் பொலிவும் இசைந்து மெருகு சேர்க்கும்.
அவரைமோதிப்பார்த்த இன்னல்கள் அவரை வியந்து நோக்குவது மட்டுமே எமக்குக் காட்சியாகிறது.தோழரே உமது சேவையும் எளிமையும் கடலூர்.மண்ணுக்கு மாசற்ற செல்வங்கள்.
தொடரட்டும் உமது சேவை
சிறக்கட்டும் இந்த மானுடம்....
---------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment