Friday, January 16, 2015

katamaiyaissey -short story






கடமையைச்செய் -எஸ்ஸார்சி


அவன் தங்கைக்குத்திருமணமாகி ஒரு வாரம்தான் ஆகி இருக்கலாம். அதற்குள் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன அவள்.இன்று தனியாகவே சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை தன் கணவன் வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள்.அவளின் பிறந்த ஊர் தருமங்குடி. சென்னையிலிருந்து இரு நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள ஒரு குக்கிராமம்.
மஹாபாரதக்கதையில் வரும் அந்த பஞ்ச பாண்டவர்களில் மூத்தவன் தருமன் முக்கண்ணன் சிவனை வழிபட்ட ஊர் இது. ஆகவேத்தான் இந்த ஊருக்குப்பெப்பெயர் தருமங்குடி. இங்கேயுள்ள தருமாம்பிகை உடனுறை தருமை நாதர் சிவன் கோவிலில் தருமனுக்கு ஒரு சன்னதியும் இருக்கிறது..
குக்கிராமம் என்றால் முதலில் அதனையும் கொஞ்சம் சொல்லிவிட வேண்டும். பேருந்து செல்லும் தார்ச்சாலை வழியில் வண்டியை விட்டு இறங்கியவுடன் அந்த ஊர் டபக்கென்று உங்கள் கண் முன்னே வந்து நின்று விடாது. அரை மணி நேரத்துக்கு பொடி நடையாய் நடந்து.போய் மட்டுமே அடையப்படுவது. இப்படிச்சொன்னால் அது சரி....
திருமுதுகுன்ற நகரில் அவனுக்கு த்தபால் இலாகாவில் வேலை. ஊர் பெயரில் குன்று வருகின்றதே என்று போய்த் தேடினால் குன்று எதுவும் உங்கள் கண்ணில் அகப்படாது. ஒரு காலத்தில் குன்று இருந்ததாம் பிறகு அது மறைந்து போனது ஆகவேதான் இல்லையாம். ரொம்பவும் நோண்டினால் சுவாமிமலையில் ஒரு மலை கிலை உண்டா என்ன என்று பதில் கேள்வி வைப்பார்கள்.
அவன் வேலை பார்க்குமிடம் அந்த முதுகுன்றத்துக்கு மய்யமாயுள்ள பெரிய போஸ்ட ஆபிஸ். தருமங்குடி யிலிருந்து திருமுதுகுன்றம் அரை மணி நேர பேருந்துப்பயணம்.பேருந்து நிலையத்திற்கு அருகிலேதான் அந்தப் பெரிய அஞ்சல் அலுவலகம். தருமங்குடியிலிருந்து திருமுது குன்றத்துக்கு அரை மணிக்கு ஒரு பஸ் வரும் போகும்.
அவன் நான்கு மைலுக்கு வேகு வேகு என நடந்து கம்மாபுரம் என்னும் பேரூர் போய்தான். கழக உயர் நிலை ப்பள்ளியில் படித்தான். ஜில்லா போர்டு பள்ளியை அப்படித்தானே அன்று அழைத்தார்கள். அவன் அப்பா தருமங்குடிப் புரோகிதர். புரோகிதர்கள் நாட்டை ஆளும் அரசனுக்கு யோசனை சொன்னது கி மு ஐயாயிரமாயிருக்கலாம். உள்ளூர் ஜனங்கள்.தானத்தில் வைத்துக்கொடுத்த எட்டு முழ வெள்ளை வேட்டியை க்கிழித்து அவனுக்குச் சட்டையும் டிராயரும் அப்பா தைத்துக்கொடுத்தார்.
மதிய சாப்பாடு எடுத்துச்செல்ல பிடியில்லாத ஒரு அலுமினிய டிபன் பாக்ஸ். எவர்சில்வர் தூக்கு என்பது எல்லாம் அப்போது நினைத்துப் பார்க்கமுடியாது. ஒரு ஜோடி எவர் சில்வர் டபரா டம்ள்ரே வாங்க முடிந்தால்தானே.. அம்மா கையி னால் தைத்த ஒரு துணிப்பையினுள் அலுமினிய தூக்குப் பதுங்கிக்கொள்ளும். அது அவன் தோள் பட்டையில் தொங்கி ஆடி ஆடி அவனோடு பள்ளிக்கு வரும். ஒரு நீட்டு பத்தை .காய்ந்து போன நார்த்தங்காய் ஊறுகாய் டப்பா உள்ளே பழைய சோற்றின் மீது ஒய்யாரமாக நீச்சலடித்துக்கொண்டிருக்கும்.
இப்போது வோட்டு க்கு வீங்கிகள் கொடுத்த இலவச பஸ் பாசெல்லாம் அப்போது ஜனித்துவிடஇல்லை. அப்படியாய் இருந்ததே அந்த ஒரு காலத்தில் அவன் எஸ் எஸ் எல் சி படித்தான். முன் வகுப்பைப் பாஸ் செய்துவிட்டு ப்போனவர்கள் அரை விலைக்குக்கொடுத்த பழைய.புத்தகங்கள் வாங்குவான்.புத்தகத்தின் மேலட்டை தொடங்கி அடியட்டைவரை கடம் அடிப்பான். தெரியாதவர்களுக்கு மட்டும் சொல்கிறேன் கடம் அடித்தல். என்றால் மனப்பாடம் செய்வதுதான். பொது ஜனம் வேண்டிய மட்டும் ஆகா ஊகு என்கிற எஸ் எஸ் எல் சி பரிட்சை எழுதினான்.+2 சமாச்சாரம் எல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது.. அந்த எஸெசெல்சி தேர்வில் அவன் வாங்கிய மொத்த மார்க்கு வைத்து இந்திய அஞ்சல் இலாகாவில் அவனுக்கு ஒரு எழுத்தர்.வேலை கொடுத்தாகள். அய்ந்து பைசாவுக்கு பாய்க்கடையில் வாங்கிய வெள்ளை பேப்பரில் விண்ணப்பம் எழுதி நாலணாவுக்கு போஸ்டாபிசில் விற்கும் வெள்ளை குட்டி க்கவரில் அதை மடக்கி வைத்துதானே அனுப்பினான். மெய்யாலும் ஒரு நல்ல வேலை கிடைத்தது..
வேறு எங்குபோய் குட்டிக்கர்ணம் போட்டாலும் அவனொத்த கஷ்ட ஜீவனங்களுக்கு வேலை கிடைக்குமா என்ன..அவன் பிறந்த விட்ட அந்த ஜாதியோ ஒரு பிரச்சனை. அது அவனை முன்னால் போனால் முட்டும் பின்னே போனால் உதைக்கும்.
.யார் வீட்டு வாசலில் ஒரு கால் படி அரிசிக்கும் ஒரு வாழைக்கச்சலுக்கும் அவன் தந்தை கால் கடுக்க நிற்கிறாறோ அவர் சமூகத்தில் மிக மிக பிற்படுத்தப்பட்டபிரிவு என்கிறார்கள். அவர் வீட்டுப்படியேறி பசிக்கு ப்பிச்சை கேட்கும் அவன் அப்பாதான் முன்னேறிய வகுப்பாம்.இதெல்லாம் இங்கே பேசலாமோ என்னமோ யாராவது சண்டைக்கு வந்தாலும் வரலாம்..தப்பு தப்பு.
அஞ்சல் இலாகாவில் அவன் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினான்.கடின மான தேர்வுதான். புத்தகமும் கிடைக்காது புரட்டிப்பார்க்க கைடும் விற்காது.விடுப்பு எடுத்துக்கொண்டு கிடைத்த கிழிந்த நைந்த புத்தகங்கள் சிலது வைத்துப்படித்தான்.திருமுதுகுன்றத்து பழமலையப்பன் கருங்கல் பிரகாரத்தில் கத்திரி வெய்யிலில் உட்கார்ந்துதான் படித்தான்.அவன் மட்டுமே தேர்வு எழுதிய நூற்றுக்கணக்கானவர்களில் பாஸானான். அஞ்சல் இன்ஸ்பெக்டர் ஆக பதவி உயர்வுப் பயிற்சிக்கு என அவனை மைசூர் அனுப்பி வைத்தார்கள். ஆய்வாளருக்கான பிரத்யேக பயிற்சி எடுத்தான். பயிற்சியின் போதும் அவன் தானே அங்கு முதல் ராங்க் வாங்கினான்.
திருமுதுகுன்றம் பகுதியிலேயே உடன் அஞ்சல் ஆய்வாளர் பணிக்கும் சேர்ந்தான்.கிளை அஞ்சலகங்களின் கணக்குகளை சரி பார்ப்பதில் நிபுணன் என எளிதில் வாங்க முடியாத ஒரு நல்ல பெயர் வாங்கினான்.ஊழல்கள் ஆங்காங்கே நிகழ்ந்ததையும் ஆய்ந்து வெளிக்கொணர்ந்தான். இலாகாவில் மக்கள் செலுத்தும் பணம் கறாராக வரவு வைக்கப்படுதலை இலாகா செய்யும் செலவுகள் சரியாகத் தணிக்கையாதலை ஊர்ஜிதம் செய்தான்.அவன் பணி நேர்த்தி கண்டு அவனை இலாகா பாராட்டிப்பெருமைப் படுத்தியது. மாவட்ட்ம் முழுவதும் அலுவலகப்பணிக்காகவே பம்பரமாய்ச்சுற்றி சுழன்று வந்தான்.மாநிலத்திலேயே முதல் தரத்திற்கு அந்த அஞ்சல் சேவைப்பகுதியை மாற்றிக்காட்டினான்.ஆக அவனை அறியாதவர்கள் அந்தப்பகுதியில் யாரும் இல்லை. அவனை ஒரு மாடல் எம்ப்ளாயீ எனத்தான் அஞ்சல் அலுவலகங்கள் அனைத்தும்.பதிவு செய்தன.அறிக்கை பலகையில் அப்படி எழுதி அழகு பார்த்தன..
'என்னடி ஆச்சு உனக்கு இப்படி தன்னந்தனியா வந்து நிக்கற?' பதறிப்போய் அவன் தங்கையைக் கேட்டான்.
அவனுக்கு அவள் பதில் சொன்னால்தானே.திருமணமாகி ஒரே ஒரு வாரம் மட்டுமே ஆகியிருக்கிறது.அதற்குள் தனியாகவே தன் தங்கை, பிறந்த வீடு.திரும்புகிறாள்.
அம்மா அடுக்களையிலிருந்து வேக வேகமாக அவன் தங்கையைக்கட்டிக்கொண்டாள்.
'இப்படி நீ வரக்கூடாது உனக்கு யாரும் சொல்லலயா' அம்மா அதிர்ந்து போய் க்கேட்டாள். அம்மாவுக்கும் அவள் பதில் சொன்னால்தானே அவன் தந்தை உள்ளூர் செல்வ விநாயகர் கோவிலுக்குச்சென்றிருக்கலாம். அது அவர் வயிற்றுப்பிழைப்புக்கு பூசை செய்யும் சிறிய கோவில். அவர் வேறு எங்கும் கூட சென்றிருக்கலாம்..அருகம் புல் ஒரு கைப்பிடி பறித்து தெருவில் நடமாடும் பசு மாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு க்கொடுத்துவிட்டு அது மென்று தின்று.முடிப்பதை பார்த்துக்கொண்டே நிற்பார்.
அவன் வீட்டு வாசலில் ஒரு பெரிய அரச மரம்.அதன் கீழ்த் தரையில் கிடக்கும் காய்ந்துபோன அரசங் குச்சிகளைப்பொறுக்கி ச் சிறியதாகக் கட்டி கட்டி வைப்பார் அவன் அப்பா. தருமங்குடியில் யார் வீட்டிலேனும் ஹோமம் இத்யாதிகளுக்கு அவரை த்தேடி வந்துதான் அது கேட்பார்கள்.
அவன் தங்கை அழுது கொண்டே கூடத்தில் நின்றிருந்தாள்.
'ஒன்றும் பேச வேண்டாம் கொஞ்சம் விடு. அவளே சொல்வாள்' என்றாள் அம்மா.ஆனால் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது.அவன் தன் தாய் அருகே சிலை போல் நின்றிருந்தான்.
.' இது எது வாசல்ல புதுசா ஒரு ஜோடி செறுப்பு கெடக்கு, பொம்மனாட்டி செறுப்பு. எம் பொண்ணு . கல்யாணத்து அண்ணைக்கு நேரா மண்டபத்துக்கு முடியாதவா யாராவது கல்யாணம் விஜாரிக்கலாம்னு ஆத்துக்கு வந்து இருக்கலாம்'' சொல்லிக்கொண்டே அவன் தந்தை உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.
கூடத்தில் நின்று கொண்டிருந்த அவள், தன் தந்தை வந்ததும் அவர் கால்களைப்போய்க்கட்டிக்கொண்டாள்.'அப்பா, ஒரு படு பாவிக்கு வாக்கு பட்டு அது தாங்க முடியாம உங்கிட்டயே திரும்ப வந்துட்டேனே'. தலையில் கைகளால் ஓங்கி பட் பட் என அடித்துக்கொண்டாள்.' என்னைப்பெத்த அப்பா இனி நான் என்ன செய்வேன் அந்த நாசமா போனவனுக்கு மொதல்லயே ஒரு கல்யாணம் ஆகி பொண்டாட்டியோட ஒரு பொண் கொழந்தையும் இருக்கே. ஆத்துக்கு பத்து பாத்திரம் தேய்க்க வந்தாளாம் ஒரு செறு பொண்ணு. அவன் அவளை விட்டு வைக்கலயாம். எல்லாம் ஆச்சி. இப்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவ வீட்டுக்கும் போயிட்டு ராத்திரி தங்கி இருந்துட்டு அப்புறமாதான் அவன் சொந்த ஆத்துக்கு வர்ரது பழக்கமாம். எனக்கு என்னமோ சந்தேகம் வந்துது.. அக்கம் பக்கத்தில கேட்டேன். பக்கத்துல இருக்கறவா சொன்னா 'அவனுக்கு ஒரு குடும்பம் ஒண்ணு மொதல்லயே இருக்கு இது சமாச்சாரம் தெரிஞ்சிதான் இங்க என்னை க்குடுத்தும் இருக்கலாம்னு' நாக்குல நரம்பு இல்லாமலே பேசினா. நா பாழுங்கிணத்துல உழுந்துட்டேனே அப்பா.எனக்கு இது கேள்விப்பட்டதிலேந்து கண் இருட்டித்தே, வயிறு கலங்கி கலங்கி வயித்தால போச்சே. அங்க .தவிச்சிப்போயி நிற்கதியா நின்னேனே..எனக்கு இது விஷயம் தெரிஞ்சி போச்சின்னு ஆனதும் எம்மாமியாரும் வீட்டுல இல்லாம எங்கேயோ போயிட்டா. எனக்கு அங்க யாரையும் கண்ணால பாக்க பிடிக்கல்ல. அந்த கடங்காரங்கிட்ட பேசினா இன்னும் எதுவும் விபரீதம் ஆயிடுமோன்னு பயம் மென்னிய பிடிச்சது. இப்படி செய்யுறவன் இன்னும் எதைதான் செய்ய மாட்டான். அந்த ஊரையே கொளுத்திட்டு வந்துடணும்னு நேக்கு அடி வயத்துலேந்து ஆத்திரமா பொங்கிண்டு வந்துது. என்ன செய்யறது. கிளம்பிட்டேன். திட்டக்குடி போற பஸ் கண்ணில பட்டுது.ஏறி உக்காந்துண்டு டிக்கட் வாங்கக்கூட சரியா காசில்லே கண்டக்டர் என்னமோ குறையறதுன்னான். அவனண்டை . தெய்வமே எங்கிட்ட இல்லப்பா. நீயே போட்டுக்கோன்னு சொல்லி அழுதேன். அவன் ஒண்ணும் பேசல,.அப்படியா திருமுதுகுன்றம் வந்தேன்.எதிர் வீட்டு இயரிங்க் எய்டு காதுல வச்சிண்டு இருக்குற சண்முக பிள்ளை கண்டக்டர் ஞாபகம் வந்துது. அந்த ராஜேஸ்வரி பஸ்சை தேடினேன்.,அதுவும் ஸ்டாண்டுல நின்னுது. எப்பிடியோ.ஏறி உக்காந்துண்டேன். நம்ப ஊர் தருமங்குடி வந்துது. இறங்கிண்டேன்.. இந்த பஸ்சுல டிக்கட்டுக்கு காசு ஏது. அந்த சண்முகம் பிள்ளையே போட்டுண்டு இருப்பார்' அவள் இன்னும் அழுது கொண்டே இருந்தாள்..
' நீ ஒண்ணும் பேசவேண்டாம். மொதல்ல சாப்பிடு. பாக்கி எல்லாம் அப்புறம் ' அவன் அப்பா அவளிடம் சொல்லி க்கண்களைத்துடைத்துக்கொண்டார்.அவரின் நெஞ்சு படபடத்துக்கொண்டிருந்தது.
அவன் அம்மா முற்றத்தில் மய்யமாய் நின்றுகொண்டு 'சூரியா நாராயணா அங்கேந்து நீ இத எல்லாம் பாத்துண்டுதான் இருக்கயா, நட்ட நடு ஆத்துல இருக்கயே துளசிமாதா எல்லாரும் உன்னை தாய்னு சொல்வாளே உனக்கும் மனசுங்கறது இல்லயா. ஏமாந்து போனேனே எம் பொண்ணு தலயில நெருப்பு அள்ளி வச்சிட்டாளே.இப்ப என்ன பண்ணுவேன்'.அவள் துளசி மாடத்தைப்பிடித்துக்கொண்டு ஓங்கிப் ப்புலம்பினாள்.
அவன் அடுத்த அஞ்சல் மாவட்டத்துத்தலை நகராம் கடலூரில் சேமிப்புக் கணக்குத்தணிக்கையில் கவனிக்க வேண்டிய பிரதான விஷயங்கள் பற்றி வகுப்பெடுக்கக்குறிப்புக்கள் சிலவற்றை மும்முரமாய் தயார் செய்து கொண்டிருந்தான்.
எத்தனை பசியோ சரியாய்த்தூங்கி எத்தனை நாளாயிற்றோ அவன் தங்கைதான் சாப்பிட்டுக்கொண்டு அப்படியே உறங்கிப்போனாள். அவளருகில் அவன் தந்தை கண்களை மூடி அமர்ந்திருந்தார்.. .
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
..

No comments:

Post a Comment