Friday, January 19, 2018

vellam4

சென்னையில்  வெள்ளம்  4

பி எஸ் என் எல் லேண்ட் லைன் மட்டும் அங்கங்கே வேலை செய்தது. எப்பவோ போடப்பட்ட தாமிர கேபிள்.இன்னும் நன்றாகவே இருக்கிறது.மொபைல் போனில் எல்லாம் சார்ஜ் போயாயிற்று.மொபைல் போன், டவரும் படுத்துக்கொண்டது.
என் மருமகள் சேரன்மகாதேவிக்கு பி எஸ் என் எல் லேண்ட் லைனில் பேசிவிட்டுவந்தாள். அவளுக்கு ப்பிறந்தகம் அல்லவா. சின்ன அண்ணன் வீட்டுக்கு இரண்டு அபார்ட்மென்ட் தள்ளி ஒருவர் வீட்டில்தான் அந்த லேண்ட் லைனுக்கு உயிர்  வந்து வந்து போனது.தொலைபேசி நிலையங்களில் தண்ணீர் புகுந்து  அனேகமாக எல்லாமே  பழுதாகி இருக்கலாம்.
தினசரி நாளிதழ்கள் வரவில்லை.டெலிவிஷன்கள் உயிரிழந்தன.யுபிஎஸ் ன் பேட்டரிகள் தமது மூச்சை இழுத்து இழுத்து விட்டு விட்டு போதும் அய்யா என்னை விடுங்கள் என சொல்லிப்  படுத்துக்கொண்டன.
கலாபிளாட்சின் கோடியில் ஒரு கிணறு.ராட்டினக்கிணறு சென்னையில் மழையோ  மழை ஆக அதனில்  நம்  நீட்டிக் கைவிட்டால் தண்ணீர் சேந்தலாம் இரண்டுமுழம் கயிறு அதிகம்  என்கிறபடிக்கு அக்கிணறு   இக்கணம் நிரம்பிக்கிடக்கிறது. கிணற்றிலிருந்து அபார்ட்மென்ட்காரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீர் எடுத்துப்போனார்கள்.சின்ன அண்ணன் மட்டும்  நடு இரவில்தான் தண்ணீர் எடுப்பார். இதில் எல்லாம் என்ன வரட்டு க்  கவுரமோ நானும் அவர்  கூட கூட போய்வந்தேன்.பிளாஸ்டிக் பக்கெட்டும் குடமும் கிணற்றுக்குள் விட்டால் மொள்ள மறுத்து அவை தண்ணீரில் மிதக்கவே பார்க்கின்றன.
குடிப்பதற்குத்தண்ணீரோ  அந்த வானத்து மழை நீர். இந்தக் கிணற்று நீர் மொண்டுபோய் பாத் ரூமுக்கு இன்னும் இத்யாதிகளுக்கு பயன் படுத்தினோம்.காமாட்சி விளக்குகள்தான் இரவில் வெளிச்சம் தந்தன.சின்ன அண்ணன் எங்கோ போய்  லிட்டர் ரூபாய் நூறு என ஒரு லிட்டர்  கிரெசின்  வாங்கிக்கொண்டு வந்தார்.இரண்டு சிம்னி விளக்குகள்  ஒளி தந்தன . ஒரு மூலையில் கிடந்தவை.இன்று அவைகளுக்கு வந்திருக்கிறது நேரம் .அவை பிரதானமாகி வெளிச்சம் கொடுத்துக்கொண்டு நிற்கின்றன.கன்னங்கறேல் என்கிற புகை அந்த சிம்னி விளக்கிலிருந்து வெளிப்பட்டது .ஏதோ ஒரு துர்  நாற்றம்.சகிக்கமுடியாமல்.  எல்லாமே பழைய சமாச்சாரம்தான்  இப்போதைக்குப்   புதிதாக  த்தெரிந்தது.
                                                                      இந்த சிம்னி விளக்குகள் வைத்துக்கொண்டு அந்தக்காலத்தில் எங்கள்  தருமங்குடி கிராமத்து வீட்டில் வாழ்க்கை நடந்தது.ஒரு சிம்னி விளக்கைச்சுற்றிக்கொண்டு நான்கு பேருக்கு உட்கார்ந்துகொண்டு படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கியது ஒரு காலம்.இப்போது சிம்னி விளக்கைப்பார்த்தாலே அச்சமாக இருக்கிறது.என் அப்பா ஒரு காலத்தில் டைனமோ இல்லாத சைக்கிளில் பட்டை நாடா திரி போட்ட  விளக்கு (ஆமணக்கு)  எண்ணெய் விளக்கு எரியவிட்டபடி இரவில் பயணம் போய்  வருவார்.விளக்கின் முன்னே தடித்த வட்ட வடிவ சாதா க் கண்ணாடியும் மற்ற இரு திசைகளில் சிவப்பும் பச்சையுமென சிறு சிறு நீள்சதுரக் கண்ணாடிகள் பொறுத்தப்பட்டு இருக்கும்.பார்க்க ப்பார்க்க வேடிக்கையாக இருக்கும்.  அந்த புராதன சைக்கிள் விளக்கு இன்னும் தருமங்குடியில் என் வீட்டு  உள் அறையின்  ஒரு பிறையில் தூங்கிக்கிடக்கிறது.பழங்கதையை தான்.மறக்கத்தான் முடிகிறதா என்ன.
'தி.நகர்'துரைசாமி சப் வே மழை நீரால் முற்றும்மூழ்கி இருக்கிறது. அது இருந்த   இடம் தெரியவில்லை' சின்ன அண்ணன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
மாநகரத்தில் ரயில் இல்லை.பஸ் இல்லை.  சென்னையிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
'பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் சென்னையை ச்சுற்றிப்பார்க்கிறாராம். ராணுவ விமானத்தில் அரக்கோணம் கடற்படை விமானதளம்  வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு வருவாராம். வெள்ளம் அதன் பாதிப்புகளை வானிலிருந்து   பார்க்கிறார்' சின்ன அண்ணா  சொல்லிக்கொண்டார்.
'அப்போதுதான் சரியாகப்பார்க்க வைக்கும்' என் பையன்  அவருக்குச் சொன்னான்.
'குடிப்பதற்கு  பாட்டில்- தண்ணீர் இங்கு வாங்கமுடியுமா?' நான் கேட்டேன்.
'எதிரே உள்ள சேட்டு பார்மசியில் விற்கிறார்கள்.கேள்விப்பட்டேன்.விலை தாறுமாறாக இருக்கலாம்'
'பரவாயில்லை நான் போய் பார்க்கிறேன்'
'நானும் வருகிறேன் வா' என்றார். இருவரும் ராமேஸ்வரம் சாலையில் கலா பிளாட்சுக்கு எதிரே இருந்த சேட்டுவின் பார்மசிக்குப்போனோம்.வீதியில் முழங்கால் அளவுக்குத்தண்ணீர். குமட்டும் துர் நாற்றம். மிதக்கும் குப்பைகளின் ஆக்கிரமிப்பு.பார்மசியில் நல்ல கூட்டம்.தண்ணீர் பாட்டில்கள் மும்முரமாக விற்பனை ஆகிக்கொண்டு இருந்தன .ஒரு லிட்டர் குடிக்கும் தண்ணீர் முப்பது ரூபாய் என்றார்கள்.ஒரு நபருக்கு இரண்டு பாட்டில்கள் மட்டுமே என்கிற கட்டுப்பாடு. அது இல்லை என்றால் எல்லா குடி நீர் பாட்டில்களையுமே ஒரு ஆசாமியே வாங்கிப்போயிருப்பார்.சேட்டின் இந்த அகவிலை விற்பனையில்கூட ஒரு அப்படி இப்படி என்கிற ஒரு சப்பை நியாயமும் இருக்கவே செய்தது.
கலா பிளாட்ஸ் முன்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளின் மீது நாய் ஒன்று உறங்கிக்கொண்டிருந்தது.மழை கொஞ்சம் விட்டிருந்தது.திரும்பவும் மழை ஆரம்பித்துக்கொண்டது.நாய் ஓட்டம் பிடித்தது. திரும்பியது பின்  கலா பிளாட்ஸ் வாட்ச்மேன் கட்டிலுக்குக்கீழாகப்போய் படுத்துக்கொண்டது.
தரை தளத்து வாட்ச்மென் அன்றிரவு சுமார்   பன்னிரெண்டு மணி   இருக்கலாம்    குய்யோ முறையோ என்று அலறினார். அபார்ட்மென்ட்காரர்கள் ஓடிச்சென்று பார்த்தார்கள்.
'தோ தண்ணி ஏறுது ஏறுது' வாட்ச்மென் கத்திக்கொண்டே இருந்தார்.அவரின் கட்டிலை மூழ்கடித்துக்கொண்டிருந்தது வெள்ள நீர்.
'எல்லாம் அந்த அடையாத்து தண்ணீர்தான் சைதாப்பேட்டை தாண்டி உசுமான் ரோடால உள்ளார வருது' என்றார் சின்ன அண்ணன்.தரைதளத்துக்காரர்கள் முதல் தளத்துக்கு தஞ்சம் புகுந்துகொண்டிருந்தார்கள்.
'நந்தனம் பூரா வெள்ளம்.மெட் ரோ ரயிலுக்கு எடுத்த  பெரும் பள்ளம் வழியா அந்த அடையாத்து வெள்ளத் தண்ணி புகுந்து போச்சி.மியாட் ஆஸ்பிடல் பூரா தண்ணி ஜெனெரேட்டர் ரூமுலயும்  தண்ணீ. ஐசியுல  இருந்தவங்க இருவது பேருக்கு காலிஆகிட்டாங்க..
பள்ளத்துல கட்டுன குலோபல் ஆசுபத்திரி பாதி  தண்ணில மூழ்கி போச்சி பேஷன்ட்.எல்லாரையும் தூக்கிகிட்டு வெளிய வந்துட்டாங்க.குரோம்பேட்டை ஆசுபத்திரி,சானடோரியம் ஆசுபத்திரி எல்லாம்வெள்ள தண்ணி புகுந்துகிட்டு கட்டில்ல படுத்துக்கெடக்குற  பேஷண்டை  விரட்டுது.
ஏன் ஜெயா டிவி ஆபிசுல தண்ணி அங்கயும்  ஒண்ணும்  பாக்கி இல்ல' விடாமல்   சொல்லிக்கொண்டே வாட்ச்மென் மாடிப்படி உச்சிக்கு ஏறி  அமர்ந்து கொண்டார்.
'செம்பரம் பாக்கம் ஏரி தண்ணி  தொறந்து விட்டதுதான் ஏகப்பட்ட பிரச்சனைக்கும் காரணம்'
சின்ன அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தார்.
'மரினா பீச்சுல மணல் இல்ல ஒரே தண்ணி வெள்ளக்காடு' என்றார் வாட்ச் மேன்.
'தி நகர் பஸ் ஸ்டாண்ட் ல எல்லாம் வெள்ளம். நின்னுகிட்டு இருந்த பஸ்ல எல்லாம் தண்ணி. அந்த பெரியார் சில கால தொட்டுகிட்டு வெள்ள த் தண்ணி
நிக்குது ,ஜியார் டி குள்ள எல்லாம்  தண்ணி. நல்லி சில்க்ஸ்  உள்ரதான்  போவுமா வேண்டாமான்னு பாக்குது' என்றார் சின்ன அண்ணன்.
'எழுத்தாளரு விக்கிரமன்னு ஒரு அய்யரு எனக்கு தெரிஞ்சவரு செத்து நாலு நாளு ஆச்சி சவத்தை  ஊட்டுக்கு கொண்டாருல .ஆசுபத்துரி அய்சு பொட்டில வச்சி இருக்குறாங்க' மீண்டும் தொடர்ந்தார்  வாட்ச் மேன்.
'வானிலை அறிக்கை சொல்லுற ரமணன் ஊட்டுல வெள்ளமாம்.கேள்விப்பட்டேன்' சொன்னர் சின்ன அண்ணன்.
'இந்த வேளச்சேரி தான் ரொம்ப மோசம்.ஊரு மூச்சூடும் வெள்ளம்.பிட்டு எடம் பாக்கி இல்ல .எங்கயும் போட்டுலதான் வருலாம் போவுலாம்.விருகம்பாக்கம் வெம்புலியாயிதெருவுல வெள்ளம். அங்க சொடலையில பொணத்தை ஒரு சிமென்ட் மரத்துல கட்டிபுட்டு, வெட்டியான பாத்துக்கசொல்லிட்டு சாதி சனம் திரும்பிடுச்சி'
வாட்ச் மென் சொல்லிக்கொண்டே போனார்.
அவரின் வாயையே எல்லோரும் பார்த்துக்கொண் டே இருந்தனர்.
ஆதம்பாக்கத்து அண்ணனோடு பேசமுடியவில்லை.திருவல்லிக்கேணி அக்காவோடு பேச முடியவில்லை. முடிச்சூர் பகுதி எங்கும் ஹெலிகாப்டரில் உணவுப்பொட்டலம் போட்டார்களாம் பேசிக்கொண்டார்கள். சின்ன அண்ணன்
வீடு முழுவதும் சொதசொத என்று இருந்தது.வீதியில் வெள்ள நீரின் ஆட்சி.அங்கங்கே குப்பைகள் கூளங்கள் அருவறுப்பாய்  மிதந்து கொண்டு கிடந்தன. தெருவில் சுற்றி வந்த  நாய்கள் எல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை.ஒன்றையும் கண்ணில் காணோம்.
                                என்ன கிடைத்ததோ அதுதான் அவ்வப்போது   சமையல். காய்கறி .மார்கெட் எல்லாம் விலாசம் இல்லை.பசிக்கு ஏதேனும் கிடைத்தால் போதும் என்று இருந்தது.'இந்த மழை விடுமா விடாதா' என்று மனம் ஜபிக் கதொடங்கி விட்டது.வீட்டில் என்னதான் செய்வது? சில சமயம் எதுவுமே   விளங்காமல் இருந்தது.போழுது போக்க எதுவும் இல்லை.மின்சாரம் இல்லை .ரேடியோ எல்லாம் கண்ணால்   பார்த்து வெகுகாலம் ஆயிற்று. பின்னர் அதுவும் ஃப் எம் மட்டும்தான்  அதற்கும் மின்சாரம்பேட்டரி  வேண்டும்.டிரான்சிஸ்டர் வைத்துக்கொண்டு சிலோன் காரனின்  தமிழ்  பாட்டு கேட்டுக்கொண்டு இருந்த பொற் காலம்  எப்பவோ முடிந்து போனது.
 எல்லாம் கைபேசிக்குள் என்றான  பிறகு.அது இயங்க மறுத்தால் எங்கும் ஒரே இருள் பேரிருள் ..
'மழை விட்ட மாதிரி தெரிகிறது' என்றார் அண்ணன். வெளியில் வந்து ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.
எப்படியும் நேதாஜி நகருக்குப்போகமுடியாது. இனி அந்த வீட்டிற்குள் போக முடியுமா அப்படியே  போனாலும் என்ன மிஞ்சி இருக்கப்போகிறது என்கிற அச்சம் தொற்றிக்கொண்டது.
'ஆதம்பாக்கம் ஆட்டோ ,பஸ் ஏதும் போகுமா?' என்னிடம் கேட்டாள் மனைவி.
'மின்சார ரயில்கள் ஒன்று இரண்டு ஓடுவதாகச்சொன்னார்கள்.தாம்பரம் போகாது பல்லாவரம் வரை போகும் என்றார்கள்.பாதை மூழ்கிக்கிடக்கிறது என்று அதற்கு மேல் போகவில்லை என்றார்கள்.எதுவும் உறுதியில்லை. மீனம்பாக்கத்தில் விமான ஓடுபாதைக்கு கீழாக செல்லும் ராட்சசனாய் விழித்திருக்கும் அந்த  அடையாற்றின் மீது சிமென்ட் காங்கிரீட் மூடிகள்  போட்டுத்தான் வைத்து இருக்கிறார்களாம். அந்த விஷயமே இப்போதுதான்  எல்லோருக்கும் தெரிகிறது.ஓடு பாதை எல்லாம் இடுப்பு அளவு தண்ணீர்.அங்கங்கே சேறும் சகதியும் நாறிக்கொண்டிருப்பதாகக்கேள்வி.
'ஆதம்பாக்கம் அண்ணன் வீட்டுக்குப்போகலாமா?' மீண்டும் மனைவி  கேட்டாள்.
'தெருவெல்லாம் எப்படி இருக்கிறது என்ன சமாச்சரம் என்று பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். பிறகு பேசுவோம்' என்றேன் அவளிடம்.
                                 நானும் அண்ணனும் வீட்டைவிட்டு வெளியில் வந்தோம்.ராமேஸ்வரம் சாலை  வழி போய்  துரைசாமி சப்வே எப்படி எனப்பார்த்தோம்.ராமேசுரம் தெருவிலேயே முட்டி அளவுக்கு தண்ணீர் இருந்தது.எங்கும் ஒரே நாற்றம். மூக்கைப்பிடித்துகொண்டுதான் நடக்கவே  முடியும்.துரைசாமி சப்வேயில் ஜெனெரட்டர் வைத்து தண்ணீர் இறைக்கிறார்கள்.இறைக்க இறைக்க தண்ணீர் குறைந்தால்தானே.தண்ணீர் இருந்த அளவுக்கே மீண்டும் மீண்டும் வந்து விடுகிறது.
தரைதளத்தில் இயங்கும் கடைகளில் எல்லாம் தண்ணீர் புகுந்துஅசுரனாய்  ஆட்சி செய்தது.ஒரு ஜி ஆர் டி கடைக்குள் தண்ணீர் புகுந்து கடையின் உருக்குலைத்து   ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதைப்பார்த்தேன்.அப்படியே தத்தி தத்தி தி நகர் நடந்து பேருந்து நிலையம் வந்தோம். பேருந்து நிலையத்துக்குள் சில பேருந்துகள் வெள்ள நீரில் நாறிப்போய் நின்றுகொண்டிருந்தன.பேருந்து இயக்கிகள்  நடத்துனர்கள் சிலர் இங்கும் அங்கும் நின்று கொண்டிருந்தார்கள்.
'ஆதம்பாக்கத்துக்கு பேருந்து இருக்கா?'
'எது எங்க போவுது எப்ப போவுதுன்னு சொல்லமுடியாது. பஸ் வந்தா ஏறிகினுபோங்க.எதுவும்  நாங்க சொல்லமுடியாது.ரோடு நல்லா இருந்தா வண்டி வுடுவம்.'
எனக்கு ப்பதில் சொன்னார்கள்.ஆட்டோக்காரர்கள் ஒருவர் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
''இண்ணைக்கு நாங்க சொல்றதுதான் ரேட்டு'
'ஆதபாக்கம் வருவீங்களா'
'கிண்டி போவுலாம்னு நெனைக்கிறேன்.அங்க போயிதான் ஆதம்பாக்கம் போவுறதா வேணாமான்னு சொல்லுலாம்'
'கிண்டி போயிட்டு பெறகு அந்தாண்ட போவுல்லன்னா'
'போவுலன்னா என்னா செய்வ திரும்பவும் தி நகருக்கே வந்துடவேண்டியதுதான்'
ஆட்டோக்காரன் சொல்வதும் சரிதான் என்று தோன்றியது.
'அண்ணே நாங்க எல்லாரும் ஆதம்பாக்கம் போறம்.இங்க வந்து அஞ்சி நாளாச்சில்ல'
'போவுணும்னு இல்ல.போனாலும் தப்பு இல்ல. அங்க கரண்டு தண்ணி எல்லாம் எப்படி இருக்கோ தெரியல. எதுக்கும் போயி பாருங்க' சின்ன
அண்ணன் எனக்குப்பதில் சொன்னார்.நானும் அண்ணனும் வீட்டிற்கு வந்தோம்.
'கெளம்புங்க நாம ஆதம்பாக்கம் போவுறம்'
'அங்க நிலமை எல்லாம் எப்படியாம் கேட்டிங்களா? கரண்டு இருக்குதா? கரண்டு இருந்ததாம்,   இப்பவும்  இருக்கும்.இங்க எந்த ஏடிம்மும் வேல செய்யில செலவுக்கு .என்ன செய்றதுன்னு தெரியல்லே'
'எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை.என்னா செய்வ.' நான் என் மனைவிக்குப்பதில் சொல்லிப்புறப்பட்டேன்.
அண்ணிக்கு எங்களை அனுப்புவதற்கு மனசே இல்லை.நான் என் மனைவி, என் பையன் மருமகள், பேத்தி ஐவரும் ஒரு ஆட்டோ பிடித்து ஏறிக்கொண்டோம்.
'கிண்டி வரைக்கும் அறு நூறு ரூவா'
'என்னப்பா இப்படி சொல்ற. பஸ் கூட போவுதுன்னு சொன்னாங்க'
'ரயிலு பொவுலயே.அதான் சமாச்சாரம்.பஸ் ஒண்ணு ஒண்ணு  போவும் அவ்வளவுதான்.உங்களுக்கு நானு வந்துருக்கேன். அத நினைச்சி பாருங்க'
' ஐநூறு போட்டுக்கலாம் கொஞ்சம் பாருங்க'
சரி ஒரு ஐம்பது தள்ளுங்க. ஐநூத்தி ஐம்பது கொடுங்க என்ன'
'சரி' அவனுக்கு பதில் சொல்லி நாங்கள் எல்லோரும் ஏறி அமர்ந்து கொண்டோம்.பெரிய ஆட்டோ கூட இல்லை. ஏதோ இருந்தது.
'அந்த பொண்ணுகிட்ட ஐநூரு ரூவா கொடுங்க' என் அண்ணனின் பெண்ணுக்குத்தான்  என்மனைவி கொடுக்கச்சொன்னாள்.
'அதெல்லாம் எதுக்கு' என் சின்ன அண்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார் .
'ஏடிம்மும் வேல செய்யுல அதான் சிக்கல்' சொல்லிக்கொண்டே ஒரு அய்நூறு ரூபாயை எடுத்து அண்ணன் மகளிடம் கொடுத்தேன்.
அவள் பதில் ஏதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள்.சின்ன அண்ணன் முகத்தில் சிறியதாக ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. பணப்புழக்கமே இல்லை.
சின்ன அண்ணன் குடும்பத்தோடு நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து கொண்டால் கஷ்டம்தானே.அதுவும் இந்த மழை வெள்ளத்தில்
எத்தனையோ விதத்தில் துன்பங்கள்.ஆதிவாசிகள்  வாழ்க்கையாய்  மாறிப்போனது  இந்த சென்னை  வாழ்க்கை.ஆட்டோ புறப்பட்டது.வழி நெடுகிலும் சேரும் சகதியும்.தரைதள வீடுகளில் எல்லாம் தண்ணீர் புகுந்து வாழ்க்கையை க்கந்தலாக்கி இருக்கிறது .மக்களைப்பார்க்கப்பார்க்க பாவமாக இருந்தது.
                            என்னுடைய செருப்பு ஒன்று இற்றுக்கொண்டு இம்சை கொடுத்தது.ஒரு நிமிடம் ஆட்டோவை நிறுத்தச்சொல்லி ஏதேனும் ஒரு கடை அதுவும் செறுப்புக்கடை திறந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.ஒரு குல்லா வைத்த  பாய்  மட்டும் அவரின் கடையைத்திறந்து ஆராய்ந்துகொண்டிருந்தார்.கடைஉள்ளே தண்ணீர் வெள்ளமாக இருந்தது.
'ஒரு செருப்பு வேணும்'
'என்னாப்பா பேஜாரு நானே நொந்துபோயி கெடக்குறன்'
'அவசரமா ஒரு செறுப்பு வேணும் ஆட்டோக்காரன் நிக்குறான்'
'சரி எவ்வளவு ரூபாயுல'
'ஒரு நூறு ரூவாயில'
'இந்தா இந்த செறுப்பு இது ஒன்பதாம் நெம்பரு உனக்கு சரியா இருக்கும்னு நெனக்குறன் என்ன'
'என்ன வெல'
'நூற்றி ஐம்பது'
'என்ன ங்க இது'
'உங்கிட்ட பேச எனக்கு நேரமும் இல்ல.காசு கொடு பொருள எடுத்துக'
ஒரு நூற்றி ஐம்பது ரூபாயை ஒப்படைத்தேன்.புதிய செறுப்பை காலில் மாட்டிக்கொண்டேன்.
'என்னா யோசனை.வேலய பாரு. பட்னத்துல ஐநூறு பேரு ஆயிரம் பேரு  செத்துப்போனான். வெள்ளம் சிட்டிய  பெறட்டி போட்டுடுச்சி'
அந்த பாய் தன்னுடைய வேலையைத்தொடர்ந்து கொண்டார்.
'உங்களுக்கு என்ன அழுவி போற பண்டமா'
'வந்துட்டாருடா பத்து நாளா கட தொறக்குல. இன்னும் எத்தினி நாளு ஆவும் வியாவாரம் தொடங்கறது .ஒண்ணும் சொல்லுறப்புலயே இல்லே.இதுல செத்த பேசுறாரு'
ஆட்டோக்காரன் ஹாரனை அடித்துக்கொண்டே இருந்தான்.தெற்கு உசுமான் ரோடெல்லாம் மரங்கள் முறிந்து விழுந்து கோரதாண்டவம் ஆடியிருந்தது.


.


No comments:

Post a Comment