Sunday, July 28, 2019

sirilin- kathaiyulagam



சிரிலின் கதையுலகம்


தமிழகத்தொலைபேசி ஊழியர்கள்  வேறு துறை ஊழியர்களைவிடச் சற்று சமூகப்பார்வை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.எந்த ஒரு சிறு நகரத்திலும் தொழிலாளர் பிரச்சனைகளைக்கூர்மையாகக்கவனித்து அது தீர்க்கப்படுவதற்கு வழிமுறைகளைக்காணும் குழாத்தில் அவர்கள் தவறாமல் காணப்படுகிறார்கள்.
 நெல்சன் மண்டேலா சிறைப்பட்டதற்கும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும் பிகார் பூகம்பத்திற்கும்,ஒரிசாவின் புயல் சேதத்திற்கும் தஞ்சை டெல்டா விவசாயிகள் காவிரியின் வறட்சியால் சிக்கித்தவித்தபோதும் ஓடோடி வந்து தோழமைக்குரல் கொடுக்கிறார்கள்.பொருளுதவி செய்கிறார்கள்.இந்தப்பார்வை எப்படிச்சாத்தியமாயிற்று எனக்கேள்வி வைக்கலாம்.அதற்கு விடை சொல்லவேண்டுமென்றால் தோழர் சிரில் என்னும் ஒரு வழிகாட்டியை நல்லதலைவனை இலக்கியவாதியை போராளியை கொண்ட கடமை முடிக்கும் தொழிலாளியைத் தவறாமல் குறிப்பிடவேண்டும்.
கடலூர் மாவட்டத்து நிலக்கரி நகராம் நெய்வேலியில் தொலைபேசி இலாகாவில் தோழர் சிரில் மெகானிக்காக பணியாற்றி தொழிற்சங்கவாதியாகவும் இலக்கியவாதியாகவும் தன் வாழ்வை அமைத்துக்கொண்டவர். 19.05.1974 ல் தனது 46 ஆம் அகவையில் மறைந்த தோழர் சிரில் பற்றி அன்றைய ஜனசக்தி தன்னுடைய 30.05.1974 இதழில் இப்படியாகச்செய்தி வெளியிட்டது. தொழிற்சங்கத்தலைவர் சிரில் மறைதார் எனக்குறிப்பிட்டு அவரது 20 ஆண்டுகால தொழிற்சங்கப்பணியை ப்பாராட்டி புகழ்ந்து எழுதியது. தேசி, வேந்தன், என்னும் புனைபெயரில் சாகாச்சிறுகதைகள் பல எழுதியவர் சிரில் எனவும் குறிப்பிடுகிறது.
சிரிலின் சிறுகதைகள் இரண்டு தொகுப்புக்களாய் வெளிவந்துள்ளன. வேலை கொடு, பாலம் என்பவை அவை. யதார்த்தவாதப்பாணியில் எழுதுவதைத்தன் தடமாய்க்கொண்டு எழுதியவர் சிரில்.அன்றைய சரஸ்வதி, தாமரை,ஆனந்தவிகடன்,கல்கி, தினமனிக்கதிர் ஆகிய பத்திரிகைகள் அவரின் படைப்புகளை வெளியிட்டன.கவிதைகள் எழுதுவதிலும் தன் ஆர்வத்தைச்சிரில் காட்டியிருக்கிறார். தேன்கூடு,என்னும் இலக்கிய இதழுக்கு ஆசிரியராகவும் அவர் விளங்கியிருக்கின்றார் என்பதைக்குறிப்பிடலாம்.
சிறுகதைகள் சிலவற்றை ஆய்வு செய்வதன் வழி அவரின் எழுத்தாளுமையை அவரின் சிந்தனை மையத்தை நாம் தெரிந்துகொள்ளலாம். கதைகளில் நடுத்தர வர்க்க கதாபாத்திரங்களை அதிகம் காணமுடிகிறது. கண்டக்டர், ஆசிரியர், நர்ஸ் எனத்தொழிலாளர்களையும் கூலித்தொழிலாளர்கள் ஏதுமற்ற ஏழைகள் எனப்பலபாத்திரங்களையும்  வாசகனுக்குக்கொண்டுதருகிறார்.
‘வேலைகொடு’ என்னும் சிறுகதை இலங்கை சென்ற தொழிலாளி பிழைக்கப்போன இடத்தில் பட்ட கஷ்டமும்,அவன் திரும்ப இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதும் பற்றிப்பேசுகிறது.தாய் மண்ணின் மீது பற்றுள்ளவன் இங்கே இருந்துமட்டும் என்ன பெரிதாய்ப்பெற முடிகிறது என்கிறார் சிரில்.
‘ நிர்வாணம்’ என்னும் சிறுகதை புடவையை ப்பிணத்தின் பெட்டியிலிருந்து-பிணத்தை நிர்வாணமாக்கித்தான் – திருடி துணியே இல்லாமல் அலையும்  ஒரு அபலைக்கு அளிக்கிறகதை.அவள் புதுப்புடவை கட்டி அந்தப்பகுதியிலே நடமாடியதும்,பிணக்குழி திறந்துகிடந்ததும் விஷயத்தை க்காட்டிகொடுத்துவிடுகிறது.அந்தப்பகுதியே கலவரமாகி நிற்கிறது என்பதாகச்சொல்லும் கதை. பாலம் என்னும் கதை 1.06.1958 கல்கியில் வெளியாகியுள்ளது.இதுவே ஒருதொகுப்பின் தலைப்பகவும் ஆகிபோனகதை.. கொள்ளிடம் பாலம் கட்டியபோது அந்தப்பாலம் கட்டும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாய் வாழ்ந்ததும்,அந்தப்பாலம்,அதன் தூண்கள் எழும்ப எழும்ப அவர்கள் வாழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்து போனதையும் சொல்லும் கதை. அவர்கள்கட்டிய பாலம் திறந்து அது உபயோகத்துக்கு வரும் சமயம் அந்த உழைப்பாளிகள் அதன் அருகே கூடவரமுடியாமல் பிழைப்புக்காக வேறு  ஒரு இடம் தேடிச் செல்லும் கதை. உழைப்பு அங்கீகரிக்கப்படாத சோகம் பேசும் கதை. சிரிலின்  வர்ணனை ஓவியமாக அமைந்துகிடக்க  கதை படிக்கும் வாசகனின் கண்கள் ஈரமாகி நிற்பதைக் காணமுடியும்.
‘ஒரு வேளை சோறு’ என்னும் கதை கல்கியில் வெளிவந்துள்ளது.8.01.1958 தேதியிட்ட இதழில் இதனைக்காணலாம் இது .பசிக்குத்திருடியவனின் கதை. டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை இயக்கத்திற்கு வந்தபின் எங்கு நோக்கினும் சிமெண்ட் பூசும் கலாச்சாரம் தொடங்கிற்று. ஏழை ஒருவனின் வீட்டுக்கூரை டால்மியா சிமெண்ட் மூட்டையின் அட்டை உறைகளால் வேயப்பட்டுள்ளது..அவர்கள் வீட்டு கூரைக்கும் டால்மியா சிமெண்டுக்கும் எப்படியோ ஒரு சம்பந்தம் ஏற்பட்டதில் அவர்களுக்கு ப்பெருமை என்கிறார் சிரில்.
உருவககதைகள் எழுதுவதில் முனைப்புக்காட்டியிருக்கிறார் சிரில். காலம் தாழ்ந்தபின் என்னும் உருவகக்கதை 31.03.1963 ஆனந்தவிகடனில் பிரசுரமாகியுள்ளது.அத்னில் வரும் குளத்து நீர் இப்படிப்பேசுகிறது.
‘’அவர்கள் பேசமட்டுமே தெரிந்த மனிதர்கள் .அவர்களில் சிந்திக்கதெரிந்தவர்கள் பேசத்துணிவதில்லை. பேசத்துணிந்தவர்களுக்கு சிந்திக்கத்தெரிவதில்லை. அதுதான் மனித இயல்பு’’ சிரிலின் தெளிவு இங்கே வெளிப்படுவதைக்காணமுடியும்.
ஆனந்தவிகடன் 21.10.1962 ல் 30 காசு விலையில் வெளிவந்து இருக்கிறது.அதனில் ‘ஓடுகள்’ என்னும் உருவகக்கதை எழுதிடுள்ளார்.கீழ்வரும் உரையாடல் அந்தக்கதையில் அற்புதமாய் அமைந்து நிற்பதை உற்று நோக்க சிரிலின் எழுத்துத்திறனை போற்றலாம். இப்படிச்செல்கிறது’ஓடுகள்’.
மண் ஓடு மண்டை ஓட்டை நோக்கி,”அண்ணா ?’
மண்டை ஓடு: சீ நீயா தம்பி உறவு கொண்டாடுகிறாயா ! வாயை மூடு!
மண் ஓடு: ஒரே இனத்தவர்களாகிய நாம் தம்பி உறவு கொண்டாடுவது குற்றமா ?
மண்டை ஓடு: மண் ஓடும் மண்டை ஓடும் ஒரே இனமா ? நீ என் படைப்பு. நான் கடவுளின் படைப்பு. மனிதன் என் மூலப்பொருள். நீ கேவலம் களிமண்.இப்போது சொல் நீயும் நானும் உறவு கொண்டாடும் ஒரே இனமா ?
அந்த வழியே வந்த ஒரு பிச்சைக்காரன் மண் ஓட்டைக்கையில் எடுத்தான்.அது ஓட்டை உடைசல் இல்லாத உருப்படியான மண் ஓடு என்று தெரிந்ததும் மகிழ்ச்சியோடு அத்துடன் நகர்ந்தான். அவன் அறியாமலேயே அவன் காலால் எத்திவிட்ட மண்டை ஓடு அவனுக்கு முன்னால் சற்று தூரம் உருண்டோடி நின்றது.அவனது இதமான அரவணைப்பில் இருந்த மண் ஓடு இந்த மனிதர்களின் போக்கே புரியாமல் திகைத்து க்கொண்டிருந்தது. இங்கே அற்புதமாகக் கதை சொல்கிறார் சிரில்.சொக்கிப்போகவேண்டும் வாசகன்.எழுத்தின் உச்சம் என இதனை நிறைவாய்ப்பாராட்டலாம்.
’வேலை கொடு’ என்னும் சிறுகதைத்தொகுப்பின் முன்னும் பின்னும் சில செய்திகள் சிரில் பற்றி நாம் அறியக்கிடக்கின்றன. சிரிலின் தோற்றம் 19.11.1924. மறைவு 19.05.1974.. நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் இங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம்’ என்று எழுதிப்பெருமை பேசுகிறது. தொழிற்சங்கத்தலைவர் ஜெகன் அத்தொகுப்பின் முன்னுரையில்,’’ தோழர் சிரிலின் கண்களிருந்து எந்த சிறு நிகழ்ச்சியும் தப்பியதில்லை’ என்று குறிப்பிடுறார்.எழுத்தாளர் சித்தார்த்தன் (சிவா) சிறுகதைத்திறனாய்வு என்னும் உரைகல்லில் சுடர்விடும் சித்திரங்கள் அவரது சாகா ச்சிறுகதைகள் என்று பேசுகிறார்.
‘சொல்லும் கசக்கும்’ என்னும் தாமரையில் வெளிவந்த கதை சோஷலிசம் பற்றி சில விஷயங்கள் சொல்கிறது. இன்றைய அதிகார வர்க்க அசகாய சூரர்கள் சோஷலிசத்தின் பெயராலேயே தொழிலாளர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தையே கொத்தடிமைகளாக்கிவிடும் திறமைசாலிகள் என்றோ. குமரேசன்  புரிந்துகொள்வதற்கு நியாயமே இல்லை. ஏனென்றால் சோஷலிசம் என்ற சொல்லை யார் சொன்னாலும் நம்பிவிடும் இந்த நாட்டின் லட்சோப லட்சம் அப்பாவிகளில் அவனும் ஒருவன்.. ஒவ்வொரு விஷயத்தையும் கழுகுக்கண்கொண்டு பார்க்கும் பார்வை சிரிலுடையது என்பதை நாம் இங்கே காண்கிறோம்.
‘கங்கை வற்றி விட்ட்து’ என்னும் சிறுகதையில் இளைஞர்கள் வயிற்றுப்பசிக்காக ஏதும் செய்யத்துணிந்த நிலையில் அவர்களைத்தவறான திசைவ்ழியில் செலுத்தி காசு பண்ணுகிறார்கள் கயவர்கள் என்று சொல்கிறார் சிரில். வாழ்ந்து உய்ர வேண்டிய இளைஞர்களைக்கடத்தல் தொழிலுக்குப்பயன்படுத்தி பணம் பெருக்கிக்கொள்ளும் கொடுமையைக்கண்டு மனம் பதைக்கிறார். இளைஞர்களுக்கு பாலியல் உணர்வு த்தூண்டலை மட்டுமே செய்து பணப்பையை நிரப்பிக்கொள்ளும் சமுதாய ஈனப்பிறவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறது மனம் பதைக்கிறார் சிரில்.
இத்தனை அவலங்களைப்பார்த்தபிறகும் இன்னும் கங்கையும் காவிரியும் வற்றவில்லை என்று கதை அளந்து கொண்டு இருக்கிறோம்.அப்படிச்சொல்லி சொல்லியெ இந்த நாட்டு இளைஞர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டிய அத்தனை உணர்வுகளையும் வற்றவைத்துவிட்டோம் நாம் பாவிகள்தான்.
மனோகரா பஸ் என்னும் சிறுகதையில் ‘மனிதர்களை வெறும் டிக்கட்டுகள் என்றே ஏற்றி இறக்கும் கண்டக்டர் என்று இலக்கணம் சொல்கிறார் சிரில்.
திருச்சிராப்பள்ளி தந்திப்பொறியியல் துறையைச்சார்ந்த தோழர்களால் ‘தேன் கூடு’ என்னும் இதழ் ஆரம்பிக்கப்படுகிறது. சிரில் அதன் ஆசிரியராகப்பணி ஆற்றுகிறார். புதுவைத்தொலைபேசியிலே பணிசெய்த சிரில் அந்த இதழில் ஒரு துண்டு சீட்டு வைத்து வினியோகிக்கிறார். வாசகர்கள் கவனம் பெறவேண்டும் என்பதே சிரிலின் விழைவு.
‘புதுவை தொலைபேசி அலுவலக இலக்கிய நண்பர்களுக்கு,
நமது தோழர்களால் துவங்கப்பெற்றிருக்கும் இந்த மலரை கண்ணுற்ற பிறகு இலக்கிய ஆர்வமுள்ளோர் அனைவரும் இதில் மனமுவந்து பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இப்படியோர் நல்ல இலக்கிய முயற்சி வெற்றி அளிக்கும்படி  அன்பர்கள்  தேன்கூடு காவலர்களாகவும் தங்களைப்பதிவு செய்துகொண்டு மாதா மாதம் நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இதற்கு சம்மதம் உள்ளோர் தங்கள் பெயருக்கு அடியில் தே.கா என்று குறிப்பிடவும்.ஏனையோர் படித்துவிட்டமைக்கு அறிகுறியாக கையெழுத்திடவும்.
அன்புடன்
பொ.தே.சிரில் (தே.கா.)
கு.செந்தில் (தே.கா.)
ஜீவிராமன் (தே.கா)
அருணா கனகம்
·          காவலர்களுக்கு ஒரு பிரதி கொடுக்கப்படும்
இப்படிச்செல்கிறது சிரிலின் க்றிப்புச்சுற்றறிக்கை.இது சிரிலின் இலக்கிய அடிமன ஆழத்தை ஆர்வத்தை தெளிவாக்குகிறது. காவலர்களுக்கு ஒரு பிரதி இலவசமாக கொடுக்கப்படும் என்று எழுதுவதை த்தவறு என்று அவதானிக்கும் சுயமரியாதைக்காரரான சிரிலைக்கண்டு நெகிழ்ந்து போகிறோம்.
தற்காப்பு –என்னும் கதை எழுதி பாண்டிச்சேரி வானொலிக்கு அனுப்பியிருக்கிறார் சிரில். லூஸ் கிருஷ்ண மூர்த்தி பற்றி இப்படி வருகிறது கதையில்.
‘இது கூட உங்களுக்குப்புரியலையா? ? அது ரொம்ப சிம்பிள் சார் நம்ப சூழ்னிலையிலே இப்படி ஒருவன் உருவாக முடியாது.அப்படி ஒருத்தன் உருவாயிட்டா அவன் லூசாகத்தான் இருக்கணும். இல்லேன்னாலும் நாம் அவனை லூஸ் ன்னுதான் சொல்லணும்.அப்பத்தானே தப்பித்தவறிக்கூட நமக்கே அவனைப்போல இருக்கணும் என்கிற இன்ஸ்பிரேஷன் ஏற்படாமலிருக்கும் ? அவ்வளவு தற்காப்புணர்ச்சி சார் மனுஷனுக்கு என்று சொல்லி விட்டு மூர்த்தி வாய்விட்டு சிரித்தான்.
இன்றைய உலக நடப்பை அங்கதமாய்ச்சொல்லும் அழகு சாத்தியமாயிருக்கிறது சிரிலுக்கு.
‘கடத்தல்’ என்னும் சிறுகதை சிரி காலமான பிறகு தாமரையில் வெளிவந்த அவரின் கடைசசிக்கதை. சிரில் படத்தோடு வெளிவந்திருக்கிறது. தாமரைக்கு நல்ல இலக்கியவாதிகள் என்றும் கடன் பட்டவர்களே.,
தொலைபேசி இலாகாவிலே அன்று பணிபுரிந்த சிரில் ’தனக்கு முன் சேவை,’ நிறைவு’ என்னும் இரண்டு கதைகளை பணியிடம் அதன்  கெடுபிடிகள் இத்யாதிகளோடு இணைத்து எழுதிகிறார். ஒரு ரயிலின் பயணத்தை நிறுத்திவிட்டது பெருமழை. தகவல் அறியும் தொடர்பு  இற்றுக்கொண்டது.   செய்தி தொடர்பு எடுத்துச்செல்லும் அந்த தந்திக்கம்பம் சாய்ந்து கீழே விழுந்துவிட்டது. அப்போதெல்லாம் ரயில்வே தொலைபேசி இலாகாவோடு இணைந்து வேலைசெய்தால்தான் ரயில் வண்டி நகரவே முடியும். இன்று நிலமை அப்படியில்லை. ரயில்வே தனக்கென ஒரு ரைல்டெல் சேவையை  வைத்துக்கொண்டுள்ளது. கதைக்கு வருவோம். ஒரு தொழிலாளி  இரவில் மழையில் நனைந்துகொண்டே பழுது நீக்கி மக்கள் பயணிக்கும் ரயிலை இயங்கவிட்டு விட்டு தன்வீடு திரும்புகிறார். அந்த லைன்மென் பெயர் சின்னசாமி .மறு நாள் அவருக்கு சரியானகாய்ச்சல் வந்துவிடுகிறது. தன் வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் தன் உடலைக்காண்பித்து மருந்து மாத்திரை வாங்கிச்சாப்பிடுகிறார். இலாகா அதிகாரிகளோ   வைத்தியம் செய்துகொண்டதற்கு அவர் அனுப்பிய  அந்த மெடிகல் கிளைம் பில்லை ஏற்காமல் திருப்பிவிடுகின்றனர் ஒரு. தனியார் மருத்துவரிடம் எப்படி நீ உன் உடலைக்காண்பிக்கலாம் என்பது அதிகாரிகளின்  அந்த மெடிகல் பில் திருப்பலுக்கான வாதம்.. அரசு விதிகள் எப்படி யதார்த்தத்திற்கு தொடர்பே இல்லாமல்  தொழிலாளர்  நலனுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் சிரில்.
‘ நிறைவு’ என்னும் கதை தன் குழந்தைக்கு புது  யூனிஃபார்ம் எடுத்து தைக்க முடியாத ஒரு தொழிலாளிக்கு அரசு தனக்குத் தந்த புது புது யூனிஃபார்மோடு பணிக்குச்செல்ல நேர்கிறது.
குழந்தை கேட்கிறது. ‘உனக்கு மட்டும் எப்படி புது த்துணி ?
தொழிலாளி பதில் சொல்கிறான்..’ இது நான் தைக்கலம்மா. அப்பா தைச்சா இப்படியா கை நீளமா காலு குட்டையா தொள ட்தொளன்னு தைச்சுக்குவேன் ?
சிரில் இலாகா தொழிலாளிக்கு வழங்கிய யூனிஃபாரம் எப்படி இருந்தது என்கிற விமரிசனத்தையும் வைத்துவிடுகிறார்.
நல்ல வேலைக்காரன் என்று பெயர் வங்கியவர் சிரில். அனேக தொலைபேசி நிலையங்களை நிர்மாணித்தவர் சிரில். நல்ல தொழிலாளர்களை உருவாக்கியவர் சிரில்., சீர்மிகு தலைவர்களை உருவாக்கி உலவவிட்டவர். தமிழக தொலைபேசிஊழியர்களின்  இதயங்களில் என்றென்றும் வாழ்கின்ற கலங்கரை விளக்கமாய், காட்டில் மேட்டில் பனியில் குளிரில் ,,உடல் வருத்தி உழைத்த  ஆயிரம் ஆயிரம் மஸ்தூர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய மாமனிதராய் எளிமையாய் மட்டுமே வாழ்ந்து விடைபெற்றுக்கொண்ட அன்பின் திருஉரு, ஜெகன் அவர்களை உருவாக்கிய பிரம்மா போற்றுதலுக்குரிய அந்த சிரில்.
விருந்து தன் வீட்டுக்குவந்தபோது ‘இன்னொரு இலை’ இன்னொரு உலை அல்ல என்று தோழமையோடு வாழ்ந்துகாட்டிய்வர் சிரில்.
கவிதை எழுதுவதிலும் தன் ஆளுமையை செலுத்தி இருக்கிறார் சிரில்.’இன்றைய பொங்கல்’ என்னும் கவிதை சுண்டுமுத்து கவிராயர் என்னும் புனை பெயரில் வெளியாகி இருக்கிறது.
‘மாடும் மனிதனுமாய்
பாடுபட்டபின்னரே
காடும் கழனிகளும்
கதிர்மயமாய்க்காட்சி தரும்’
மனித உழைப்பும் மனிதனோடு தோழமை பேணும் அந்த மாட்டின் உழைப்பும் பெருமைகொள்கிறது சிரிலின் கவிதையில்.
இன்றும் தொலைபேசி ஊழியர்கள் நெய்வேலியில் ஆண்டுதோறும் மே 19 அன்று சிரில் நினைவு நாளை பொறுப்போடு கொண்டாடிவருகிறார்கள்.
கடலூர் விழுப்புரம் மாவட்டத்து தொலைபேசி ஊழியர்கள் (NFTE) சிரில் அறக்கட்டளை நிறுவி ஆண்டு தோரும்  தங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்த  சிரில் பெயரால் விழா நடத்துகிறார்கள். தமிழ்ச் சான்றோர் ஒருவரை  அழைத்துகெளரவப்படுத்துகிறார்கள். தொலை பேசி ஊழியர் அதிகாரிகளின் குழந்தைகளில் பத்து பதினொன்று வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற. மாணவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் என ரொக்கப்பரிசும் சான்றிதழும் வழங்குகிறார்கள்.
தொழிற்சங்க வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களுக்கு ‘சிரில் விருது’ தங்க மெடல் ஒரு சவரன் அளித்து கடலூர்  தொலைபேசிமாவட்டசங்கம் சிரிலின் நினைவுக்கு அவ்வப்போது கூடுதல் விழுமம் சேர்க்கிறது. தோழர்கள் ரகுநாதன், ரெங்கநாதன் சிரிலோடு பழகிய  இவ்விரு தோழர்கள். அந்த கெளரவத்தைப்பெற்றார்கள்.
தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்த ,சமுதாய உணர்வு மேம்பட, அநீதி கண்டு போராட சிரிலின் சிந்தனைகள் என்றென்றைக்கும் தேவை.. நல்லன எல்லாம் தர  சித்தமானவையே  அந்தத்தோழர் சிரிலின் எழுத்துக்கள்
----------------------------------------------------

.
  .
.




No comments:

Post a Comment