Friday, December 20, 2019

vellam 13


'சென்னையில் வெள்ளம் ' 13
 ’
குரோம்பேட்டை வாசம் ஒரு மாதம் நீடிக்கும் என கணக்குப்போட்டிருந்தேன். அது அந்தப்படிக்கு ஆகாமல் பத்து நாளில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கவில்லை. நேதாஜி நகருக்கு மின்சாரம் வந்த பிறகு குரோம்பேட்டையில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம்.
 நாமும் முதல் தளத்தில்தான் குடியிருக்கிறோம். ஒன்றும் பிரச்சனையில்லை. வீட்டில் கரண்ட் வந்து மோட்டாரும் தண்ணீர் இறைக்க ஆரம்பித்து விட்டது.பிறகு என்ன? புதிய ஒரு தெம்பு வந்ததுபோல் உணர்ந்தேன்.
‘பொங்கல் வர இருக்கிறது’ என் மனைவியிடம் பேச்சுக்கொடுத்தேன்.
‘ நம் சொந்த வீட்டில் எல்லாமும் சரியாகிவிட்டால் இங்கு நமக்கு வேலை என்ன’ அவள் பதில் சொன்னாள்.
சில தினங்களாக டிவிஎஸ் எக்செலில்தான் குரோம்பேட்டைக்கும் பழைய பெருங்களத்தூருக்கும் போய் போய் வந்தேன். வீட்டில் இருந்த பெரிய வண்டிக்கு என் பெரிய பையன் பொறுப்பு பெறும் மழையில் ஜலக்ரீடை செய்த .அதனை  பழைய பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தம் அம்பேத்கார் சிலை எதிர் இருக்கும் டூ வீலர் மெக்கானிக்கிடம் கொண்டு காட்டினான். ஒருவழியாக அதனைச் சரிசெய்து பழையபெருங்களத்தூரிலிருந்து குரோம்பேட்டைக்கும்கொண்டுவந்தான். ஓ எம் ஆர் சாலையிலிருக்கும் தன் மென்பொருள் அலுவலகம் அந்த வண்டியிலேயே போய்வந்தான்.               இந்த இரண்டு வண்டிகளையும் நிறுத்தி வைக்கத்தான் குரோம்பேட்டையில் சரியாக இடம் கிடைக்கவில்லை. கிடைத்த இடத்தில் இரண்டு வண்டிகளையும் சொறுகித்தான் வைத்து விடுவோம். சொறுகி என்று அப்படிச்சொன்னால் அது சரியே.
வெள்ளம்  வந்த பாதிப்பில்என் சிறிய மகனின் பாட புத்தகங்கள் எதுவும் தேறவில்லை.சாஸ்த்ரா தஞ்சாவூரில் மெக்கானிக் எடுத்து படித்தவன்.பிறகு அங்கிருந்தே பெங்களூர் வேலைக்குச்சென்றுவிட்டான்.கோர் சப்ஜெக்ட்டில்தான் வேலைக்குப்போவேன்.என்று வைராக்கியமாக இருந்தான்.அப்படியே வேலைக்கும் போனான்.அவன் போற்றிப்பாதுகாத்த புத்தகங்கள் ரெகார்டுகள் கொழ கொழ என்று உயிர் தொலைத்து நின்றன.
                       நேதாஜி நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சென்னையில் பெருமழை கொட்டிய பகுதிகளில்  சேதமுற்ற அந்த சாமான்களை வாங்குவதற்கு என்று மினி லாரி வைத்துக்கொண்டு வியாபாரிகள் சுற்றி சுற்றி வந்தாகள். அவர்கள்  கிடைத்த எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் கொடுத்த ஏதோ காசை  வாய் திறக்காமல் வாங்கிக்கொண்டவர்கள் நாங்கள். நம்மை விட்டு விட்டு  இவைகள்  வேறு இடம் போனால் போதும் என்கிற நிலைக்கு அல்லவா இப்போது வந்து நின்றுவிட்டோம்.
ஒவ்வொருவர் வீட்டு வாயிலிலும் நனைந்து நாறிய துணிமணிகள் மலை மலையாகக்கிடந்தன. 
வெள்ள நீரில் நனைந்த மளிகை சாமான்கள் பெருவெள்ளம் வந்த அன்று சமையல் அறையில்  மிச்சம் மீதி இருந்தவை வீதியில் அருவறுப்பாய்க்கிடந்தன. சமைத்த ஒன்றினையும்  கடையில் வாங்கிய ஒன்றினையும் நாம் தின்று முடிப்போம் என்பது நிச்சயமில்லைதானே..
கீழ் வீட்டில் வைத்திருந்த நான்கு போட்டோ ஆல்பங்கள் நனைந்து  பழைய பழைய நினைவுகளைத்தாங்கிய நிழற்படங்களை அழித்துவிட்டிருந்தன. நனைந்துவிட்ட அவைகளைக்காப்பாற்றவே முடியவில்லை. எத்தனைக்கு  நல்லதுக்கு முயல்கிறோமோ அத்தனைக்கு அவை நாசமாகி நம்மை திகைக்க வைத்தன. என் திருமண ஆல்பமும் அதனில் ஒன்று நாற்பதாண்டுகளுக்கு முன்னர் யாரெல்லாம்  என்னுடன் மகிழ்ச்சியாக உலாவந்து இப்போது இல்லாமல் போனார்களோ அவர்களின் நிழற் படங்கள் இருந்தன. அவை இன்றுஅழிந்துபோனது ரொம்பவும் வருத்தமாக இருந்தது.
எது எப்போது அழியும் என்று யார் கண்டார்கள். ஆல்பத்துக்குள்ளே வெள்ள நீர் ஒளிந்துகொண்டு போட்டோக்களை உருக்குலைத்துக்கொண்டிருந்தது.போட்டோவை வெளியில் எடுக்கவே முடியவில்லை.எடுத்தால்  போட்டோ சிறிது சிறிதாகக்  கிழிந்து கிழிந்து உருட்டிக்கொண்டு வந்தது. அதுகள்  ஒன்றும் இனி தேறாது. என்மனம்தான் கிடந்து அடித்துக்கொண்டது.
ஒவ்வொருவர் வீட்டு வாயிலிலும் மெத்தையொன்று வீங்கிக்கொண்டு கிடந்தது.சில தலையணைகள் உருக்குலைந்து கிடந்தன. பார்ப்பதற்கு அவை கோரமாக க்காட்சியளித்தன.இவைகள் கண்ணில் படாமல் இருந்தால் தேவலை என்று மனம் சொன்னது.விழைவதெல்லாம் நடந்துவிடுமா என்ன?
இப்பகுதிக்குள்ளே நுழையும்போதே ஒரு வீச்சம்.ஒரு கமறல். ஆனால் ஒரு விஷயம் எந்த புது வியாதியும் இந்த வெள்ளக்கொடுமையினால் சென்னைக்கு வந்துவிடவில்லை. அரசாங்கத்தார் தடுப்பூசி போட்டார்கள்.  பெரும் பகுதிகளில் போடாமலும் விட்டார்கள். ஆனால் இயற்கை எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டது. அதற்கும் ஒரு கணக்கு இருக்குமே.
பரணியிடம் தொலைபேசியில் பேசினேன்.
‘’ நேதாஜி நகருக்கே திரும்பி விடலாம் என்று இருக்கிறேன்‘’
‘இனி ஒன்றும் மழையில்லை. நீங்கள் தாராளமாக புறப்படுங்கள். வண்டி அனுப்பி வைக்கட்டுமா’
‘அனுப்பிவையுங்கள்’ தைர்யமாக ப்பதில் சொன்னேன்.
லேசாக சிறிய ஒரு அச்சம் இல்லாமல் இல்லை.அது பாட்டுக்கு அது. நானும் என் மனையாளும் க்ரோம்பேட்டை வீட்டில் இருக்கும் சாமான்களை மூட்டைக்கட்டிக்கொண்டு புறப்பட்டோம். பரணி நல்ல மனிதர். அப்படி ஒரு மனிதரை நண்பராகப்பெற்றது ஒரு கொடுப்பினை. அவர் அனுப்பிய சின்னயானை என்கிற வண்டி  குமரன் குன்றம் வந்தது. வீட்டு சாமான்களை வாரிப்போட்டுக்கொண்டு நாங்களும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். மனைவிதான் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு ஏறினாள்.இறங்குவதற்கும் அப்படித்தான். எப்படியோ நேதாஜி நகருக்கு வந்தாயிற்று. எல்லோரும் அப்படி எங்கு எங்கு போய் தங்கி உயிர் பிழைத்துக்கொண்டோர்களோ எல்லோரும் ஒவ்வொருவராக தம் இருப்பிடம் வந்துகொண்டிருந்தனர்.
‘வெயில் காலம் வந்தால் வீட்டை விற்றுவிட்டு வேறு எங்காவது ஒரு வீட்டை வாங்கிவிடலாமா’
என் மனைவி ஆரம்பித்தாள்.
‘அப்படி கணக்கு போட்டால் சென்னையையே காலிசெய்வது என்கிற முடிவில்தான் பாதிக்கப்பட்ட நாம் போய்  நிற்போம்’
  ’நாம்தானே அவஸ்தை ப்பட்டவர்கள்’
‘ நான் இல்லையென்று சொல்லவில்லை.சென்னையில் பழையழைய வசிப்பிடங்கள் பாதிப்பில்லாமல் நன்றாகவே இருந்தன. புதியதாக முளைத்தவை  வெள்ளத்தண்ணீரில் மூழ்கின. இப்போதைக்கு என்னவென்று பார்ப்போம்.பிறகு பிறகு பார்க்கலாம் வேறு இருப்பிடம்  அந்த விஷயங்கள் எல்லாம்’
‘போதாக்குறைக்கு பையனுக்கு ஒரு விடு இந்த மடுவிலேயே வாங்கினீர்களே.என்ன சாமர்த்தியம் உங்களுக்கு’
‘வீட்டின் அருகிலே ஒரு வீடு.  அகவிலை கொடுத்துத்தான். அந்த வங்கிக்காரன் கொடுத்தானே ஒரு கடன் என்று வாங்கினோம்’
‘ நமக்குத்தெரிய வேண்டும். இல்லாவிட்டால் தெரிந்தவர்களையாவது யோசனை கேட்கவேண்டும்’’
‘இரண்டுமில்லை. தவறுதான். நாம்தான் சாமர்த்தியம் நமக்கு நிகர் யார் என்று எண்ணம் அரும்பும் போதே எதோ தப்பு நடந்துபோய்விட்டது என்பதுறுதியாகிவிடுகிறது..
.இனி என்ன செய்வாய். இந்த பெருவெள்ளம் சென்ற ஆண்டே வந்திருந்தால் விஷயங்கள் அத்துப்படி ஆகியிருக்கலாம்’
‘வெள்ளம்வந்தால்தான் உங்ககளுக்கு சில விஷயங்கள் விளங்கும் என்றால் எங்கே போய்முட்டிக்கொள்வது’
ஆத்திரமாகப்பேசினாள். எவ்வளவோ பேசுவாள்  என் தங்கைக்கு ஒரு வேலயே இல்லாத வெட்டி மாப்பிள்ளையைப்பார்த்துக் கட்டிவைத்து அவள் பாவத்தைக்கொட்டிக்கொண்டதும் அவள் தன் வாழ்க்கையை பாதியிலேயேய முடித்துக்கொண்டு செத்துப்போனதும் என் நினைவுக்கு வந்து வந்து எப்போதும் வருத்தின.என்னை மன்னிக்கத்தான் மார்க்கமுண்டா என்ன.
என் மனைவி பேசும் இந்தப்பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது. என் பையனுக்கும் இங்கே ஒரு வீடு வாங்கி   எனக்கு ஏதோ சாமர்த்தியம் இருப்பதாய்  கற்பனையில் இருந்தேன் அந்த சாயம்தான் இப்போது வெளுத்துவிட்டது.
 வெள்ளம் வந்து எவ்வளவோ பட்டுவிட்டோமே. இனி மழை என்று ஒன்று வந்தால் அடி மனத்தில் ஒரு அச்சம் வந்து குடிகொண்டுவிடுமே. யோசித்துக்கொண்டு’ அமர்ந்துவிட்டேன்.
’‘டம் டம் டம் டம்’ தெருவில் பறை தட்டி செய்தி ஒன்று சொல்லிக்கொண்டு ஒருவன் தலைப்பாகையோடு சென்று கொண்டிருந்தான்.
‘’இந்த நேதாஜி நகரு விரிவுப்பகுதி மனைங்க மொத்தமா எல்லாம்  ஆத்துப் பொரம்போக்கு மனைங்க .அது பொதுப்பணித்துறைக்கு மட்டுமே சொந்தம் இந்த அடையாத்துல வெள்ளம் வந்து இந்த ஏரியாவை பாழாக்குவதனாலே அங்க குடியிருப்பவங்க உடனடியா  குடியிருப்பை காலி செய்யணும்.அரசாங்கம் மாத்து குடியிருப்பு எலவசமா கொடுப்பாங்க.அதுக்குன்னு  ஒரு அதிகாரி ஆபீசு  தாம்பரம் தாலுக்கா ஆபிசு வளாகத்துல  வேல செய்யுது.. சம்பந்தப்பட்ட சனம் ரேஷன் கார்டோட உடன் அவர போய் பார்க்கணும்  இந்த இடத்தை காலி பண்றதுக்கு  இண்ணையிலேந்து பதினைந்து நாளுதான். டைம் டம் டம் டம்’ அவன் நடந்துகொண்டே போனான்.
‘ நாம எங்க இருக்கம்’
‘’ நாம விரிவுப்பகுதியில் இல்லே. விரிவுப்பகுதிதான் மொத்தமா புறம்போக்குன்னு. இந்த ஆர்டர் வந்து இருக்கு. இந்தவெள்ளம் வந்த பின்னாடி இதெல்லாம் அரசாங்கத்தோட நடவடிக்கை’
‘வீடெல்லாம் கட்டி குடியிருக்காங்க. இப்ப எங்க போவறது’
‘அரசாங்கம் வீடு குடுக்குது. அங்க போகவேண்டியதுதான். அதுவும் இலவசமா கொடுக்குது. வேற என்ன செய்வே’
‘கோர்ட்டுக்கு போனா என்ன செய்வாங்க’
‘இது ஹை கோர்ட்டார் உத்திரவுப்படிதான் நடக்குது.அதனால எந்த கோர்ட்டுக்குப்போனாலும் ஒண்ணும் ஆகாது’
நாங்கள் குடியிருக்கும் நேதாஜி நகர் அருகே இருந்த விரிவுப்பகுதியில் ஒரு நூறு மனைகள் இருக்கலாம். அதனில் ஒரு ஐம்பது  அறுபது வீடுகள் இருந்தன. ஒரு மெத்தை. இரண்டு மெத்தை கொண்ட வீடுகள் கூட கட்டப்பட்டு இருந்தன. அங்கே  குடியிருந்தவர்கள் எல்லோரும் கூடி கூடி ப்பேசினார்கள். விவாதித்தார்கள். சிலர் புலம்பினார்கள்.சிலர் அழவும் ஆரம்பித்தார்கள்.
அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி வந்து நேதாஜி நகர் விரிவு மக்களோடு பேசிச்சென்றார்கள்.போலிசு அதிகாரிகள் வந்து வந்து குழம்பிப்போனவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள். போலீசுக்காரர்கள் விளக்கம்  நமக்குத்தெரியாததா என்ன. 
ரேஷன் அட்டைகள் புது விலாசத்துக்கு மாற்றித்தருவதாக ச்சொன்னார்கள். குழந்தைகளுக்கு வேறு  பள்ளியில் இடம் பெற்றுத்  தருவதாகச்சொன்னார்கள். சாமான்களை கொண்டுபோய் சேர்க்கும் செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருவதாகச்சொன்னார்கள்
. எது சொன்னால் என்ன புறம்போக்கு நிலம் அதனையும் ஒரு விலை கொடுத்து வாங்கி வீடு எனக்கட்டி மின்சாரம் தண்ணீர் வசதி எல்லாம் பெற்று வீட்டுவரி கட்டி வோடர் கார்டும் ரேஷன் கார்டும் ஆதார் கார்டும்  இதே விலாசத்தில் வாங்கி தார்ச்சாலை போட்டு சாக்கடை க்கால்வாய் அமைத்து தெரு விளக்கு பளிச்சென்று எரிந்துகொண்டிருக்க ‘உனக்கு இந்த வீடு இல்லை நான்  வீடென எங்கோ ஒரு மூலையில் ஒன்று தருவேன் நீ அங்கு போயே ஆகவேண்டும்’ என்று கட்டளை தந்தால் அதனை எப்படி ஏற்பது என்கிற விஷயமாகப் பிரச்சனை விசுவ ரூபமெடுத்தது
                              தினம் தினம் தெருவில் இதே பேச்சாக இருந்தது. ஏதோ இங்கு வசிப்பவர் ஒருவர் பெரிய மனதுக்காரர் புகார் எழுதிப்போட்டு மட்டுமே இந்த நிலமை வந்துவிட்டதாகப்புரளி பேசினார்கள். ஆளுங்கட்சிக்காரர்கள் எதிர்க்கட்சியையும் எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளுங்கட்சியையிம் பிரச்சனைக்கு காரணம் என்றார்கள்.
எல்லோருக்கும்  அரசு நோட்டீசு வந்தது. சிலர் வாங்கினார்கள் சிலர் வாங்க மறுத்தார்கள்.  அரசு சிப்பந்திகள் சிலர் வீட்டு வாயிலின் கதவுகளில் நோட்டிசினை ஒட்டிவிட்டுச்சென்றார்கள். அதனை ச்சிலர் கிழித்தும் எறிந்து கத்திக்கொண்டே இருந்தார்கள்.
நேதாஜி நகர் விரிவுப்பகுதிக்கு இனி மின்சாரம் கிடையாது எனப்பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த அதிகாரிகள் ஒரு வாரத்தில் எல்லா   மின் இணைப்பையும் இல்லை என்று ஆக்கினார்கள். பேரூராட்சி குடி நீர் சப்ளையை நிறுத்திக்கொண்டது.
ஒரு நாள் இரண்டு ஜீப்பில் வந்து அதிகாரிகள். ரேஷன் அட்டையை பார்த்துப்பார்த்து   புது வீடு ஒன்றின் சாவியைக்கொடுத்துப்போனார்கள். சிலர் அதனை விருப்பத்தோடு வாங்கினார்கள்.சிலர் கூச்சலிட்டு அதிகாரிகளை வாயுக்கு வந்தபடிதிட்டித்தீர்த்தார்கள்.
பெண்கள் வீதிக்கு வந்து இரண்டு கைகளாலும் மண்ணை வாரிவிட்டார்கள்
'கொழா சட்ட போட்டுகுனு வந்தவனுங்க எங்க கூடிய கெடுத்தவனுங்க  மொத்தமா  நாசமாப்போவ'  
’ எங்கள இங்கிருந்து கெளப்பி விட்டவன்  மண்ணாய்ப்போவான்’;
 என்று சாபம்தந்தார்கள்.
வீடுகளைக்காலிசெய்துகொண்டு செல்பவர்கள்’ 'உங்களுக்கும் இந்த கதி வரும்' என்று எங்களைப்பார்த்துச் சொல்லிச்சென்றார்கள். அதைக்கேட்க அச்சமாகக்கூட இருந்தது.
நேதாஜி நகரின் விரிவுப்பகுதியில் எப்படியோ  இந்த போர்க்கோலம் அரங்கேறியது 
                    ஒரு நாள் அதிகாலை நேரம். ஆயிரம் போலிசாருக்கு வந்து இந்தப்பகுதியைச்சுற்றி நின்றார்கள். ஆம்புலன்சு வண்டிகள் நான்கு தயாராக நின்றன. ஜீப்புகளும் அதிகாரிகளின் கார்களும் வந்து  நின்றன. ஜே சி பிக்கள் நான்கும் கிரேன்கள் நான்கும் நேதாஜி நகர் விரிவுப்பகுக்குள் நுழைந்தன. மக்கள் குய்யோ முறையோ என அலறி அடித்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்தார்கள்.
               ‘ உங்களுக்கு இன்னும் ஒரு மணி  நேரம் டயம் தர்ரம் . வீட்டுச் சாமானுங்க  எதாவது எடுத்துகிட்டு. ஒதுங்கி ப்போயிடுங்க’ என்று இறுதி எச்சரிக்கை தந்தார்கள்.
எமன் போன்று உருமிக்கொண்டு வரும் புல்டோசருக்கு எதிரே  வரிசையாக படுத்து மறித்தவர்கள் குண்டு கட்டாகத் தூக்கி போலிசு வானில் ஏற்றப்பட்டார்கள். பெண்[பொலிசுகாரர்கள் ஆண்போலிசுகாரர்கள் என இணைந்து போராட்டட்தை த்வம்சம் செய்தார்கள். எங்கும் புகை மண்டலமாக இருந்தது. வீடுகள் இடிப்பில் எழுந்த புழுதி அப்படிப் புகையென ப்பரவியது. நாரசமான இடிப்பொலி கேட்டுக்கொண்டேஇருந்தது.
பத்திரிகைகாரர்கள் டி வி காரர்கள் சுற்றி சுற்றி வந்து செய்தி சேகரித்தார்கள்/ அரசியல் வாதிகள் ஒருவரும் கண்ணில் படவே இல்லை.
                ஒரு பக்கம் ஜீப்பில் சில அதிகாரிகள் அமர்ந்து ரேஷன் கார்டை சரிபார்த்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐயாயிரம் ரூபாய் என சாமான்களை எடுத்துச்செல்வதற்கு என வழங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுச் சாவியை ஒவ்வொருவருக்கும் கொடுத்து சான்றொப்பம் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
அன்றுமாலையே நேதாஜி நகர் விரிவுப்பகுதி இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போனது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எழுதப்பட்ட கீதையின் வாசகம் தாங்கிய தகர த்துண்டு சுவர் இடிப்பு இடிபாடுகளின் மய்யமாக க்கிடந்தது.
                      ‘அந்த புறம்போக்குப்பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டாமல் தப்பிவிட்டதற்கு அந்த இறைவனுக்கு நன்றி சொன்னேன். இறைவன் இருக்கிறானா இல்லையா அந்தக்கேள்விக்கெல்லாம் விடை எனக்குத்தெரியாது. ஒன்று மட்டும் சொல்வேன்.இறைவன் உண்டென்று நம்பிவிட்டால் கொஞ்சம் இலகுவான வாழ்க்கை உறுதிப்படுகிறது. நாம் செய்யும் காரியங்கள்  ஒவ்வொன்றையும் யாரோ ஒருவன் எங்கிருந்தோ  பார்த்துக்கொண்டிருப்பதாக நினைக்க  நினைக்க நம்மில்  மனிதத்தன்மை  கூடிப்போவதாக நான் உணர்வதுண்டு.
மற்றபடி இறைவன் என்கிற சமாச்சாரம் அவரவர் பாடு.அது பற்றி ஏதும்தெரியாத அடுத்தவர்கள் வியாக்கினம் செய்வது வேண்டாதவேலை. லெளகீக வாழ்க்கையோடு ஆன்மீக சமாச்சாரத்தைக் குழப்பிக்கொள்வதால் இரண்டுமே மதிப்பிழந்துதான் போகும். இப்படிச் சில நேரங்களில் நான் யோசிப்பதுண்டு.
               சென்னையில் அடையாற்றங்கரை கூவம் நதிக்கரை, பக்கிங்ஹாம் கால்வாயென அனைத்தின்கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படச்  செய்தி ஊடகங்கள் சூடு பறக்கும் விவாதத்தில் இறங்கின.ஏரிகளின்  அதீத ஆக்கிரமிப்புக்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  மாநகரில் காணாமல்போன ஏரிகள் பற்றி எத்தனையோ செய்திகள் அறியக்கிடைத்தன. மாநகரம் நோக்கியே மக்கள்  பெரும்கூட்டம் ஏன் வருகிறது என்பது பேசுபொருள் ஆனது. ஒவ்வொரு நீர் ஆதாரத்தின் நீள அகல ஆழங்கள் பட்டியலிடப்பட்டன. ஆற்றங்கரைகள் உயரம் குறைந்து அகலம் குறைந்து இற்றுப்போனது பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரிய வந்தன. நீர் நிலைகளில்  மய்யமாய் முளைத்துவிட்டிருக்கும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு பற்றி எல்லோரும் வித்தாரமாய்ப்பேசினார்கள்.  சில அரசு அலுவலகங்களும் பெரிய பெரிய தனியார்க்கல்லூரிகளும் பெரிய ஏரிகளைத்தூர்த்து வானாளாவ கான்க்ரீட் கட்டிடங்களாக நிற்பது தெரியவந்தது.
 வரும் நாட்களில் இந்த மீறல்கள் மக்களால் மறக்கப்பட்டுவிடும். எத்தனையோ மறந்து போனவர்கள்தாமே நாம். வேறு வேறு செய்திகள் ஜனிக்கும் பிரதானமாக பேசப்படும். அவை  வருநாளில்  மறக்கப்படும்..
‘’தெருவில் நாய்களின் கூட்டம் தாங்கமுடியல’
என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்.
‘ கூடவே வாழ்ந்து வந்த ஆடு மாடுகள்  வீடு இழந்து வேறிடம் செல்லும் எஜமானர்களோடு ச்சென்றுவிட்டன.ஆனால் வீட்டில் இருந்த நாயும் பூனையும் என்ன செய்யும். விலையுயர்ந்த ஜாதி நாய்கள் மட்டும் எஜமானர்களோடு அமைதியாக ப்பயணம் சென்றுவிட்டன.’ நான் பதில் சொன்னேன்.
குப்பை பொறுக்கும் கூட்டம் ஒன்று இடிக்கப்பட்ட பகுதிகளை ச்சுற்றி சுற்றி மூட்டை மூட்டையாக இரும்புத்துண்டுகளை பிளாஸ்டிக் உடைசல்களை பொறுக்கிப்  பொறுக்கி எடுத்தன. வானில் பறவைகள் தொடர்ந்து வட்டமிட்டபடியே இருந்தன.
மரங்களின் எச்சங்களை விறகுகளை ப்பொறுக்கி  வண்டி வண்டியாக அவைகளை ஏற்றிக்கொண்டு எளிய வியாபாரிகள் இங்கும் அங்கும் அலைந்தபடியே இருந்தனர்.
‘பார்வதி நகர் சக்திவிநாயகர் கோவிலில் ஒரு யாகமும் அபிஷேகமும் அறிவிக்கப்பட்டது.
‘ஏன் சாமிக்கு என்ன ஆச்சு’ கேட்டாள் மனைவி.
‘ஏது ஏதோ அசிங்கம் ஆபாசம் கலந்து  அடித்துக்கொண்டு வந்த வெள்ள நீரில் மூழ்கிக்கிடந்த சாமியை புனிதப்படுத்த வேண்டாமா’
நான் சொல்லி நிறுத்தினேன்.
‘ஆமாம் மாலிக்காபூர் படையெடுப்பின் போது சிதம்பரம் திருக்கோவில் நடராசரைக்கூட உடையார்பாளையம் ஜமீன் அரண்மனையில் பத்திரமாய்ப் பதுங்க வைத்தார்களாம்.’
‘ காஞ்சி அத்திவரதர்  கோவில் திருக்குளத்துக்குள் ஒளித்துவைக்கப்பட்டதும் இப்படித்தானே’
ஏதோ பேசிக்கொண்டே இருந்தோம்.
 நேதாஜி நகர் விரிவு வாசிகள் கண்ணீர் மல்க எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள்.
‘இந்த வெள்ளமும் மழையும் எங்கள் வாழ்விடத்தை ப்புரட்டிப்போட்டுவிட்டன சொல்லிக் கொண்டே அவர்கள் சோகமாக நகர்ந்து போனார்கள். செம்பரம்பாக்கம் ஏரி என்னும் ஒரு அசுரன் திறந்துவிடப்பட்டதுதான் சென்னையின் பேரழிவுக்குக்காரணம் என்பதை யாரும் லேசில் மறந்துவிடமுடியாது. 
அப்படி திறந்தும் விடாதிருந்தால் முழுவதுமாய் இந்த மாநகரம் அழிந்தேபோய் இருக்கும் என விளக்கம் தருபவர்கள் கூடவே இருக்கிறார்கள். இரண்டிலும்  உண்மை சரிபாதிக்கு இருக்கலாம். 
ஒரு  ஐநூறு மனிதஉயிர்கள் வெள்ளத்தில் மடிந்து போயிருக்கலாம். ஒரு பத்தாயிரம் கோடிக்கு மேல் சேதாரம் இருந்திருக்கும்.ஆடுகள் மாடுகள் மரங்கள் செடி கொடிகள் என அழிவு கணக்கில் சொல்ல முடியாது.
எங்கள் தெருவில் வசித்தவர்கள் அரசாங்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஒரு அய்யாயிரம் சேர்த்துவிட்டதை ப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
‘இப்படியாக ஒரு அய்யாயிரம் ரூபாய் சென்னையில் அனேகம் பேருக்கு வந்திருக்கலாம். ஆனைப்பசிக்கு சோளப்பொரி மட்டுமே இது. எல்லோரின் விமரிசனமும் இப்படியே.
              புவியின் வெப்பம் கூடிப்போனதுவே  பெய்யும் பேய் மழை மற்றும் கோடையில்  வெயில் தாறுமாறாக எகிறிப்போவதற்கு க்காரணம் என்கிறார்கள்
.புவியின் வெப்பம் கூடிப்போவதற்கு யார் காரணம்? .
     கரியமில வாயு மட்டுமே  எங்கும் கூடிப்போனது.  சாலை வாகனங்கள் எண்ணிக்கை புழுத்துப்பெறுகின. நமக்குக்கிட்டும்  அனல் மின்சாரம் அணு மின்சாரம் வெப்பம் கொட்டுவன
.ஃபிரிஜ்ஜும் ஏசியும் இல்லாவிட்டால் மக்கள் மரித்துப்போய்விடுவார்கள் என்கிற பரிதாப நிலைக்கு  வந்து எத்தனையோ காலம் ஆகிறது.
காலால் நடந்து சிறிது தூரம் செல்வது மறந்துபோனோம்.  மிதி வண்டி உபயோகமா அப்படி  ஒன்று உண்டா என்ன ?
         சென்னைக்குப்பெரு வெள்ளம் வந்த நாள் தொடங்கி ஒவ்வொருஆண்டும் மழைக்கால மூன்று மாதங்கள் சென்னை வாசிகளுக்கு முகம் ஜிவ்வென்றுதான் காட்சி தருகிறது .
                     மாரிக்காலம்  எனும்  அந்த சோதனைக் காலம் முடிந்து பின்னே தொடருகிறதுஒவ்வொருஆண்டும் 'சென்னைமார்கழி-இசைப்பெருவிழா' எனும் பெரு நிகழ்வு. உலகில் வேறெங்கும்  காணக்கிடைக்கா மானுடப்   பேறு அது. .
அடுத்தும் கூட ஒரு வெள்ளமுண்டு
ஒவ்வொரு ஆண்டு சென்னைப் புத்தகக்காட்சி ஞான வெள்ளமே அது.

நம்பிக்கையோடு வாழ்வதே மனித இருப்புக்கு நாம் செய்யும் மரியாதை. ஆகப்  பெரு வெள்ளமும் நமக்குக்கற்றுக்கொடுக்கட்டுமே சிலவற்றை.. ஞானத்தாயல்லவா பெய்திட்ட மாமழை.
‘ நாம  நம்ப வேலய பார்ப்போம். இன்னும் இந்த மாதம் ரேஷன் கடைக்கு போகல’ என் மனைவி எனக்கு வழக்கம்போல்  நடப்பை இருப்பை நினைவு படுத்தினாள். நான்  துணிப்பைகள் சிலவோடு ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு  ரேஷன்கடை நோக்கிப் புறப்பட்டேன்.
-------------------------------------------------------------------------
.







.





.
                                                        











No comments:

Post a Comment