பேரெழுத்தாளர் கி.ரா விடைபெற்றார்.
எழுத்தாளர் கி.ரா என்று பாசத்தோடு அழைக்கப்பட்ட ஸ்ரீ
கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் நாயக்கர் 17/05/2021 அன்று புதுச்சேரியில் லாஸ்பேட்டையிலுள்ள
அரசுக்குடியிருப்பில் நம் எல்லோரையும் மீளொணா
சோகத்திலாழ்த்தி விட்டு விடைபெற்றுக்கொண்டார்..
எழுத்தாளர்களுக்கு ப்புதுவை மண்ணில் எப்போதும் ஒரு
தனி மரியாதை இருக்கவே செய்கிறது. மகான் அரவிந்தர்
சுப்ரமணிய பாரதி சுத்தானந்த பாரதி நூற்கடல்
கோபாலய்யர் கவி மனோஜ்தாஸ் ம லெ தங்கப்பா இளம்பாரதி பஞ்சாங்கம் ராஜ்ஜா என இப்பட்டியல் இன்னும் நீளவே செய்யும். இந்த நகரத்தில்தான் எழுத்தாளர்
இந்திராபார்த்தசாரதி ’ பாவாட சட்ட கிழிஞ்சி போச்சுதே பள்ளி க்கூட புள்ள
எல்லாம் கேலி பேசுதே’ நாட்டுப்புறப்பாடல் புகழ்
கே ஏ குணசேகரன் எழுத்தாளர் கி ரா போன்றோர்
புதுவையில் பல்கலைக்கழ ப்பேராசிரியர்களாக
ப்பணியாற்றினார்கள்
முதன் முதலாய் பிரபஞ்சனில் தொடங்கி எழுத்தாளர்களின் மறைவுக்கு
இங்கே அரசு மரியாதை என்னும் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுவருகிறது. அவ்வகையில் கி.ரா
மறைவுக்கு ஆளுநர் தமிழிசை - குமரி அனந்தன்
திரு மகளார்- அரசு மரியாதை செய்தார். எழுத்தாளன்
ஒருவன் பெறும் உச்சபட்ச கெளரவம் இதுவேயல்லாமல்
வேறு என்ன.
கி. ரா வின் பூத
உடல் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்துக்கு அரசு வாகனத்தில் தகுந்த மரியாதையோடு
எடுத்துசெல்லப்பட்டது.19/05/2021 அன்று கரிசல் மண்ணில் அவருக்குச்சொந்தமான தோட்டத்தில்
அன்னாரின் பூத உடலுக்கு விடைகொடுக்கப்பட்டது.
தமிழக அரசின் தகு மரியாதையோடு குண்டுகள் முழங்கின
மாவட்ட ஆட்சியரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் எழுத்தாளர்கள் புடை
சூழ இறுதியாய் கி. ரா அனுப்பிவைக்கப்பட்டார்.
இனி எழுத்தாளர்
கி.ரா வுக்கு வருவோம்.
மக்கள் பேசுமொழியைக்கவிதையாக்கிய
மாகவி பழமலய் கி. ரா வை ‘ நயினா எப்பிடி இருக்காரு’
என்றே உரிமையோடு பேசுவார். புதுவைக்குச்சென்றுவிட்டு
கி.ரா இல்லத்திற்குச்செல்லாத தமிழ் இலக்கியவாதிகள்
அனேகமாக இருக்கத்தான்மாட்டர்கள்.
லாஸ்பேட்டையிலுள்ள
அவரது இல்லத்திற்கு திசை எட்டும் குறிஞ்வேலன்
புதுவை இளம்பாரதியோடு நானும் கி.ரா பிறந்த
நாளன்று சென்று இருக்கிறோம். திசை எட்டும்
எனும் மொழிபெயர்ப்புக்காலாண்டிதழுக்கு விருது கொடுத்து கி.ரா ப்பெருமைபடுத்திய தருணம் அது.
கி.ரா வுக்கு தாய்மொழியோ தெலுங்கு. அவரோ தமிழ்ப்பண்பாட்டின்
காவலராய் அறியப்பட்டவர். புதுக்கவிதையின் பிதாமகன் என்றழைக்கப்பட்ட ந. பி யும்
தெலுங்கர்தான்.
எத்தனையோ பிற மொழிக்காரர்கள் தமிழை ஆன்மாவிலிருந்து நேசித்திருக்கிறார்கள்
திராவிட விஷயத்தை தமிழ் நிலத்தில் உறுதிப்பொருளாக்கிய
பெரியவர் ஈ.வெ ரா வின் தாய்மொழி கன்னடம். ஆக தாய்மொழி ஒரு பொருட்டு இல்லை அவர்கள் இங்கு என்ன செய்தார்கள் என்பதே
எல்லாவற்றிர்க்கும் அடித்தளமாகிறது.
நெய்வேலி புது
நகரில் அன்று தேசமறிந்த மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் நல்லி
சில்க்ஸ் குப்புசாமிசெட்டியாரின் உற்றதுணையோடு
கொண்டுவரும் திசை எட்டும் இதழின் வெளியீட்டுத்துவக்க
விழா. வெகு விமரிசையாக நடந்த அவ்விழாவில் திசைஎட்டும்
முதல் இதழை கி.ரா தான் வெளியிட்டார். அதனை இந்து நடராஜன் பெற்றுக்கொண்டார். இலக்கியச்செல்வர் வேர்கள் ராமலிங்கம் விழாநிகழ்ச்சிக்கு
முக்கியமானவராய்ச்செயல்பட்டார்.
கடலூர் தொலைபெசி ஊழியர்களின் அமைப்பான தோழர் சிரில் நினைவு அறக்கட்டளையில் நான்
மேநாள் பொறுப்பிலிருந்தேன். அவ்வமைப்பின் சார்பாக ஆண்டுதோறும் நிகழும் தமிழ் விழாவுக்கு ஒருமுறை
வந்து சிறப்பு செய்யுமாறு கி.ரா வை க்கேட்டுக்கொண்டேன்.. அந்த உரையாடலைப்பருங்களேன்.
‘ நா அங்க வந்து தொழிலாளிகிட்ட என்ன பேசப்போறன்’ .
‘தொலைபேசி ஊழியர்கள்
தமிழ் நிலத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.
அதனிலும் கடலூர்க்காரர்கள் தமிழுணர்வும் தேச பக்தியும் மிக்கவர்கள் ஆக ஐயா நீங்கள்
வரவேண்டும்’ என்றேன்.
‘சந்தோஷம்ப்பா
ஆனா என்னால முடியலயே என்ன வுட்டுடு’
‘சென்னை நிகழ்ச்சிக்கு
அய்யா போகப்போறதாகூட பேப்பர்ல ஒரு செய்தி வந்திருக்கு பாத்தேன்’
இப்படி நான் கேட்டது
தவறுதான். எனக்கு அது தெரியாமலும் இல்லை.
ஆனால் அவர் பதில்
சொன்னார்,
‘ அவுனுவ என்ன உட மாட்டேங்கறானே. இமுசைதான். நீனாவது
என்ன புரிஞ்சிகயேன். என்னால வரமுடியல்ல’
அதற்குமேல் நானும்
பேசவில்லை. முடித்துக்கொண்டேன்.
விருத்தாசலம் பகுதி
கடலூர் மாவட்டத்து நகரம். பழைய தென்னாற்காடு
மாவட்டம் சார்ந்தது. கோவேரிக்கழுதைகள் புதினம்
படைத்த இமையம் அண்மையில் சாகித்ய அகாதெமி விருது பெற்றாரே அவர் விருத்தாசலத்துக்காரர்தான்.
அப்பகுதிக்காரரே எழுத்தாளர் கண்மணி குணசேகரன் நல்ல பல படைப்புக்களை த்தந்தவர். அஞ்சலை புகழ் கண்மணியை
எழுத்துலகம் அறியும்.
எழுத்தாளர்கள் வே.சபாநாயகம் கவிஞர் பழமலய் கரிகாலன்
தமிழ்ச்செல்வி ரத்தின புகழேந்தி தெய்வசிகாமணி
எஸ்ஸார்சி பல்லவிகுமார் என்று இப்படி ச்சொல்லிக்கொண்டே
போகலாம். படைப்புக்கள் பலவோடு நடு நாட்டு வழக்குமொழி
அகராதி நூல் படைத்தவர் கண்மணி குணசேகரன். கி.
ரா பிறந்த நாளன்று கோவை விஜயா பதிப்பக வேலாலாயுதம்
அளிக்கும் கொடை ரூபாய் ஒரு
லட்சத்தை இவ்வாண்டு எழுத்தாளர் கண்மணி
குணசேகரனுக்கு அளித்துப் பெருமை படுத்தியவர்
கி.ரா.
‘ இருபதே எழுத்துக்கள் கொண்டு உலகில் உள்ள அனைத்து
மொழிகளிலும் சொற்கள் வாக்கியங்கள் புத்தகங்கள் என எழுதிவிடமுடியும்.
’ஒரே ஒரு எழுத்துமுறைபோதும் தனி அடையாள எழுத்துக்கள் தேவையில்லை’ இப்படி வித்தியாசமாய்ச்சிந்தித்தவர்
கி.ரா.
கதைசொல்லி இலக்கியக்காலாண்டிதழ் ஆசிரியராக கி. ரா இருக்க கழனியூரன்
கே எஸ் இராதாகிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் அவருக்குத்துணை
செய்தனர். தமிழ் நிலத்தில் கம்பீரமாய் உலா
வருகிறது கதை சொல்லியின் கதை சொல்லி.
ஒரு ஜன சமூகம் தன் பூர்விக நிலத்தைவிட்டு நிர்ப்பந்தத்தின்
பேரில் இடம் பெயருகிறது. இவ்வரலாறுதான் கி.
ரா படைத்த ’கோபல்ல கிராமம் என்னும் பேசப்படுகிற புதினம். இதன் காலச்சுவடு கிளாசிக் வரிசை வெளியீட்டிற்கு முன்னுரை
தந்து சிறப்பித்த யுவன் சந்திரசேகர்’ இப்படிக் குறிப்பிடுகிறார்.
’ புதுமைப்பித்தனைவிடவும்
கி.ராஜநாராயணனிடம் கூடுதலாக இருந்த ஒரு அம்சம் அவர் எழுத்தாளர் என்ற பீடத்திலிருந்து
என்னுடன் உரையாடவில்லை என்பது .கிராமவாசிகளில் ஒருவராக இருந்து தமது வம்சக்கதையைச்சொல்லும்
கதை மாந்தராகவே தென்பட்டார்’’ .
அப்படித்தான் கி. ரா வாசகர்கட்கெல்லாம் அனுபவமாகிறார்.ஒவ்வொரு
வாசகனும் இதனை உணர்ந்தே இருக்கிறான்.
யுவன் சந்திர சேகர்’ கி. ரா எழுத்து நடை பற்றி மிகச்சிறப்பாகக்குறிப்பிடுவது
இதுவே. ’வாசிப்பவனின் தோள் மீது கை போட்டுக்கொண்டு
இயல்பான குரலில் பேசும் எழுத்து. பேச்சு வழக்குக்கும் எழுத்து மொழிக்குமான இடைவெளியை
மெல்ல மெல்ல அழித்துச்செல்லும் எழுத்து. எளிமையாகவும் நேரடியாகவும் கதை சொல்வதால் மொழியின்
அழகிலும் லாகவத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை கி.ரா’
காதில் விழுந்த
கதைகள் என்னும் கதை நூலில் கி.ரா கரிசல் மக்கள்
எப்படிப்பேசுவார்களோ அப்படியே அசல் அச்சாகப்
பதிவு செய்கிறார்.
வேதங்களின்றி வேறில்லை
இந்த மானிடர் பேசும் வார்த்தையெல்லாம் என்று
ஓங்கிப்பேசுவார் கரிசல் காட்டிலே பிறந்த எட்டயபுரத்து மாகவி அவ்வரியே நம் நினைவில்
வந்து வந்து நிற்கிறது.
காதில் விழுந்த கதைகள் கி ரா புத்தகத்தில் ‘காவல்
அய்யனார்’ என்னும் கதையில் கீழ்க்காணும் கரிசல்
பதப்பிரயோகங்களளை வாசகன் நிறைவாக அனுபவிக்கலாம்.
அங்கன
இருந்த வனாந்தரம்
ரோசிக்சிட்டு உக்காதிருந்தா
இதுக்குத்தானா
கவலைப்படுதெ
ஒரு மரம் நிக்கி
நெத்தமா வருது
விசாரம் புடிச்சி
சுத்துப்பட்டி
மொத்தமும்
சவுர்தம் கூறி
சேவுகம் பண்ணி
மக்கமனுச
இப்படிப்பேசுமொழி
இலக்கியமாகிற பாக்கியத்தை கி. ரா போன்ற வட்டார
மொழி எழுத்தாளுமைகள் இலக்கிய தளத்தில் சாத்தியமாக்கி
இருக்கிறார்கள்.
அனேகமாய்
ஒரு நூற்றாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்து சாகித்ய அகாதெமி விருதும் பெற்ற தமிழ் எழுத்தாளர் கி.ரா அந்த ஞான பீடமும் பெற்றிட ஆகத் தகுதியானவர்தான்.
எங்கேயோ எதுவோ
எப்போதும் இடிக்கிறது தமிழ் மண்ணில்.
மறைந்த பேரெழுத்தாளர்
கி. ரா வுக்கு எனது நெஞ்சம் நிறைந்த மரியாதைகள்..
----------------------------------------------------------------