Monday, May 10, 2021

 

 

மோடியின் தப்புக்கணக்கு -                  

முதல் அலை கொரானாவின் போது அதனை எதிர்கொண்ட மோடி இரண்டாவது அலை வந்து இந்திய மக்களை விரட்டும்போது திணறித்தான் போயிருக்கிறார். முதல் அலையின்போது வானத்துக்கும் பூமிக்கும் ஜுலும்பியது அனைத்தும்   விடுங்கள் காற்றில் போகட்டும். இன்றைக்கு நிலமை என்ன என்று .மக்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.  வலம் வந்த  தலைவர்களை அடிவயிற்றிலிருந்து ச்சாபமிடுகிறார்கள்.

 தேர்தல் களத்து வோட்டுப்பெட்டியை  எடுத்துக்கொண்டு மக்கள் முன்னே போய் நின்று வோட்டுக்கேட்க  இன்றைக்கு  இந்திய தேசியக்கட்சிகள் எதற்கும் அருகதை என்பதில்லை. இடது சாரிகளை விடுங்கள் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.  பாவம் பேசிப்பேசியே சுருங்கிப்போனார்கள்.

 அரசியல் வித்தகர் அமித்ஷாவின்   அரசியல் சூதும் வாதும் ஆகா ஓகோ என்று பேசப்பட்டதெல்லாம்  இந்த 2021 சட்டசபைத்தேர்தலில்  காணாமற்போனது. கேரளாவும் மேற்கு வங்கமும் பாரதிய ஜனதாக்கட்சியை  நெடு நாட்களுக்கு உறக்கம் பிடிக்காமல் ஆக்கியிருக்கின்றன. அந்த வகையில்  பாரத நாட்டின்  வெகு சாதாரண மக்கள் வணக்கத்திற்குரியவர்கள்

தமிழகத்து தேர்தல் நிலமை வேறு. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தேர்தல் வரை  மாநில நிர்வாகத்தை சாமர்த்தியமாக ஒப்பேற்றியது. முன்னாள் முதல்வர் பழனிசாமி அந்தவகையில் கெட்டிக்காரர்தான்.

  பழனிசாமி முடிந்தவரைக்கும் தேர்தல் களத்தில் விழுந்து  விழுந்து புரண்டார்.   புரண்டவரைக்குமான பலாபலன்  அவருக்கு முதுகில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

ஊருலகத்துக்கெல்லாம் மருந்தும் தடுப்பூசியும் அனுப்பிவைத்து ப்பெருமைகொண்ட மோடி  பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது உலகத்தின் முன்னே சொந்த நாட்டு மக்களைக்காப்பாற்றக் கை யேந்தி  ’பவதி பிக்‌ஷாம் தேஹி’ என்று  நிற்கிறார்.  இந்தியாவில்  உயிர்வளி  இருப்புண்டு என்கிறார்கள். அதனை எடுத்துக்கொண்டு போய்த்  தேவையான மருத்துவமனைகளில் ஆங்காங்கு   வழங்கிடத்தான்  சரியான கண்டையனர்கள் இல்லை.  உயிர் வளி சிலிண்டர்கள் இல்லை. திறம்பட அதன்  விநியோகிப்பு நிகழாமல் மக்கள் மடிந்து போகிறார்கள். இதிலும் முழு உண்மை இல்லை. ஆங்காங்கு உயிர்வளி உற்பத்தி செய்கிறேன் என்கிறார்கள்.

பசி பசி என்று அலறித்துடித்தானாம் ஒருவன் நான் தான் என்  சொந்த வயலில்  நெல் பயிர் நடவு நட்டுள்ளேன். விளைவு வரும்  விளைவிலிருந்து நெல் வரும்  அரிசி வரும்  உனக்கு சோறும் வரும்   அதோ பார் நீ கவலைப்படாதே’ என்று பதில் சொன்னகதையாய் இருக்கிறது இன்றைக்கு இந்திய  கொரானா நோயாளிகளின் உயிர்வளி த் தட்டுப்பாட்டைத்தீர்க்கும் பிரச்சனை.

சென்னை உயர்நீதிமன்றம் இத்தனைக்கொளறுபடிக்கும் தேர்தல் கமிஷன் பதில் சொல்ல வேண்டும் என்று பேசியது. மக்கள் உயிர்வளி இன்றி மடிவது கண்டு தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் அது தவறாகிவிடாதென்றது.  இந்தப்பழிக்கு உங்களுக்கு நாங்களா கிடைத்தோம் என உச்ச நீதி மன்ற,ம் போய் தேர்தல் கமிஷன்  கூடுதலாய் இன்னும் கொஞ்சம் வசவு  வாங்கி கட்டிக்கொண்டது.

மேற்கு வங்கத்தில் எட்டு தவணை  மாநிலத்தேர்தல் அதுவும்பெருந்தொற்றுக்காலத்தில். உயர் நீதி மன்றமும் உச்ச நீதி மன்றமும் உள் புகுந்து கொஞ்சம் குழப்பத்தை சரிசெய்துமிருக்கலாம். ஏனோ அமைதி காத்தன. மம்தா முடிந்தவரைக்கும் புலம்பினார். தேர்தல் கமிஷனிடம்  தேர்தல் தவணை எண்ணிக்கையைக் குறையுங்கள் என்றார். யாரும் சட்டை செய்யவே இல்லை. அதனை சட்டை செய்திருந்தால் மக்கள் இத்தனை த்துன்பங்களை அனுபவித்து இருக்கமாட்டார்கள். பாரதிய ஜனதாவுக்கு இன்னும் கூடுதல் வெற்றி கிட்டியுமிருக்கும். எல்லோரும்  மொத்தமாய் அசிங்கப்பட்டுத்தான் போனார்கள் வங்கத்தில். தேர்தலுக்கு முன்னும் பின்னும்.

அயோத்தி ராமனை த்தலையில் தூக்கிவைத்து ஆடியவர்களுக்கும்,  வங்கத்து ரவிந்திரரை தலையில் தூக்கி ஆடியவர்களுக்கும்தான்  அங்கு  குழாய்ச்சண்டை..  வங்க உணர்வுதான்  வங்க மக்களை  மிகையாக ஆக்கிரமித்தது.  வங்க உணர்வே வெற்றிகண்டது.

இடது சாரிகளும் காங்கிரசும் வங்கத்தில் தொலைந்து போய்விட்டதை ஆச்சர்யத்தோடு இந்திய மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த  மக்கள் வோட்டுப்போட்டு ஆட்சி கண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில்தான் உண்டு.  கேரளாதான்  அதற்கும் வழி காட்டியது.

கேரள மக்கள் நல்ல அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் வாய்க்கப்பெற்றவர்கள்.  சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொது இடது சாரியை எதிர்த்து ராகுல் காந்தி நின்று வென்ற போதே கேரள மட்டுமில்லை உலகமே காங்கிரசை  ராஜிவைப் பார்த்து இது சரியா என விமரிசனம் வைத்தது.

 காந்த மலை  அய்யப்ப சாமியை காங்கிரசுக் காரர்களும் பாரதிய ஜனதாவும் வம்புக்கிழுத்து  சட்ட சபைத்தேர்தலில்  கைகளைச்சுட்டுக்கொண்டனர்.

நாராயண நம்பியை பழி வாங்கிய  விவகாரமும் சொப்னா  தங்கக்கடத்தல் விவகாரமும்  கேரள மக்கள் அலசி ஆராயமல் இல்லை. கிறித்துவ நிர்வாகங்கள் சிற்சில இடங்களில் தவறிழைத்து ப்பிரச்சனையில் சிக்குவதையும் அவர்கள் கணக்கில் கொள்ளாமலும் இல்லை.

பத்ம நாப சுவாமி தங்க ப்புதையல் அதிசயங்களை  நேர்மையாக ஆளவும் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள்

மலையாளத்து மகா புருடர்கள்.

மருத்துவமனையில் படுக்கை இல்லை ரெம்டெவிசிர் மருந்தில்லை ஆக்சிஜன் இல்லை  மக்களுக்கு த்தடுப்பூசி இல்லை மயானத்தில் பிணம் எரிக்க விறகில்லை.கங்கைத்தாய்  கொரானா ப்பிணம் சுமந்து நம்மைப்பார்த்துச்சிரிக்கிறாள்.

 முகில் தொடும்  வல்லபாய் படேல் சிலையும்  அயோத்தி ராமர் கோவிலும்  டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடமும் யாருக்காக எழுப்புகிறோம்..

-------------------------------------------------------------------------------------------------    

 

 

No comments:

Post a Comment