இப்படியுமா?
அவன் பையனுக்கு சென்னை மாநகரத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீடு தேடினான்.
அதற்குத்தான் எத்தனை நிந்தனைகள். சபர்பன் ரயில் நிலையத்திற்கு அருகில் வீடு இருக்கவேண்டும். அரசு பஸ் பிடித்து வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் மற்றும்
சினேகிதர்கள்
ஆட்டோ கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பொடி
நடையாய் வீடு வந்து சேர வேண்டும். கூடாதுகள்
சற்று அதிகம்தான் அபார்ட்மெண்ட் போ(b)ர் சென்னைக்கோடைகாலத்தில் காலை வாறிவிடக்கூடாது. குடியிருப்போரை அது ’ டான்கர்
லாரிக்கு தவம் கிடப்பா நீ’ என்று தள்ளி விடவும்கூடாது.
வீட்டுக்கு எதிராய்த் தெருக்குத்து சந்துகுத்து என்று எதுவும் கூடவே கூடாது. சாக்கடை நீர் ஓடுவதற்கு வெட்டி இருக்கும் கழிவு நீர் கால்வாய் தேங்கு குளம் என மாறிவிடக்கூடாது. வாங்கவிருக்கும் அபார்ட்மெண்ட் தெருவழியாக சொர்க்கரதம் ஊர்ந்து ஊர்ந்து மயானம் செல்லக்கூடாது.
அதனில் பிணம் போகிறதே என்கிற பயம்
அச்சான்யம் அதெல்லாம் இல்லை. சவத்திற்கு போடப்பட்ட மாலைகளைப் பிய்த்து பிய்த்து வீதியில் எறியும் அட்டகாசமும் பட்டாசு வேட்டுச்சத்தங்களும் குடித்துவிட்டு இளசுகள்
போடும் குத்தாட்டமும் பாண்டு வாத்திய தப்பட்டை
சத்தமும் ஒன்றும் சொல்கிறமதிரிக்கு இல்லையே. ஆகத்தான்.
வாங்கவிருக்கும் சொத்தின் டாகுமெண்டில் வில்லங்கம் ஏதுமின்றி லீகல் ஒபினியன் சரியாக இருக்கவேண்டும். கடைசியாக அந்த வங்கிக்காரன் சம்பள பில்லைப்பார்த்துவிட்டு ஹோம் லோன்
உனக்குத் தருகிறேன் ’ பயமில்லை வா ராஜா வா’ என்று சொல்லவேண்டும்.
கையில், சில்லரை
செலவுக்கும் வீடுபுரோக்கரின் பாத பூஜைக்கும்
பத்திர அலுவலக செலவுக்கும் என சில லகரங்கள் கேஷாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஓவியர் ரவிவர்மா வரைந்த விநாயகர் லட்சுமி சரஸ்வதி
படங்கள் பத்திர எழுத்துக்காரர்களிடமும் பத்திர அலுவலகத்திலும் கடன் தரும் வங்கியிலும்
ஒன்றுபோல் அழகாக மாட்டி மஞ்சள் வண்ண மாலையும்
போட்டிருப்பார்கள். மக்கள் மனசாட்சிக்கும்
அந்தப்படத்தில் அருள் பாலிக்கும் தெய்வங்களுக்கும்
துளிக்கூட சம்பந்தம் இருக்கவே இருக்காது.
வீட்டு விற்பனைப்பத்திரத்தை,
வீடு வாங்கக் கடன் கொடுத்த வங்கிக்காரன் பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து உங்கள் கண்களுக்குக் காட்டாமல்
சர்ரக் புர்ரக் ஆங்கிலத்தில் பேசி வாங்கிப்போயே
விடுவான். முப்பது லட்சம் வீட்டுக்கடன் வாங்கி
வட்டியோடு அறுபது லட்சம் என்று திருப்பிக்கட்டி
முடித்து பத்திர ஒரிஜனல் வீட்டு அலமாரிக்கு வரும் போது முக்கால் கிழடு ஆகியிருப்பானே
ஹோம் லோன் வாங்கிய அந்த பிரகஸ்பதி.
அது கிடக்கட்டும். நாம் கதைக்கு வருவோம். இப்படியாகத்தானே அவன் தன் பையனுக்கு ஒரு அபாட்மெண்ட் வீடு பார்த்தான்.
அவனுக்கு அரை மனசு. ஆனால் என்ன பையனுக்கும் மருமகளுக்கும் வீடு பிடித்துவிட்டது. குறுக்கே
யார்தான் கேள்வி கேட்கமுடியும். அப்புறம் பில்டிங்க் ஓனரிடம் அபார்ட்மெண்ட்
வீட்டுக்கு அட்வான்ஸ்தொகையும் கொடுத்தாயிற்று.
முதல் தளத்திலும் இரண்டாம் தளத்திலும் மூன்றும் மூன்றும்
ஆறு வீடுகள். தரை தளத்தில் ஆறு கார்களுக்கு பார்க்கிங்க் வசதி. நீள் சதுரத்தில் மஞ்சள் கோடுகள் பள பள என்று போட்டிருந்தார்கள். அபார்ட்மெண்ட்
ஒன்று தனியாய்க் கீழ் தளத்தில் இருந்தது. அவன் ஓனரிடம் பேசினான்.
‘இது என்ன சார்’ தரைதள வீட்டினைக்காட்டிக்கேட்டான்.
‘எது என்ன சார்’
‘இங்கு தரை தள அபாட்மெண்ட் ஒண்ணு இருக்கே’
‘எனக்கு பொழங்க கொள்ள வசதி வேணுமே. வந்துபோனா தங்குணுமே. அதுக்குன்னு அத வச்சிருக்கேன்
எனக்கு சொந்த ஊரு நாகப்பட்டினம்’
‘சி எம் டி ஏ அங்கீகாரத்திற்கான டாகுமெண்டில் இந்த கீழ் தள அபார்ட்மெண்ட்டு சேர்க்கப்படவில்லையே’
‘இருக்காது, எப்பிடி இருக்கும். இது எனக்குன்னு கட்டுனது’
‘உங்களுக்குன்னு கட்டுனாலும் அப்ரூவல் வேணுமே என்னா பண்ணுவீங்க’
‘நீங்க சொல்லிதான் அது நா தெரிஞ்சிக்கணும் என்ன பண்ணுவீங்கன்னு,
என்னா
கேள்வி கேக்குறீங்க’
‘வித்துவிடுவீங்களா, நீங்களே வச்சிருப்பிங்களா’
‘சாரு ஒன் வீடு
எது, அதுக்கு என்னா அப்ரூவல்
டாகுமெண்ட் இருக்குதா அத பாரு. இத பத்தி
எல்லாம் அனாவசியமா என்ன பேச்சு.’
‘இல்ல சார்’
‘நொள்ள சார். அஞ்சி பேர் அபார்ட்மெண்ட் வாங்கியாச்சு’ இன்னு ஒண்ணே ஒண்ணு பாக்கி. உனக்கு இஷ்டம்
இருக்கா இல்லையா. இல்லன்னா வேற எதனா பாரு.
இடத்தக்காலி பண்ணு’
அவன் திணறி நின்றான். அவன் மனைவி
மக்கள் ’இந்த அபார்ட்மெண்ட் வீடு பிடித்திருக்கிறது. நாம் வாங்கி விடலாம்’ என்றனர்.
அதன்படி அபார்ட்மெண்ட் வாங்கியாயிற்று. வாங்கிய வீட்டுக்கு அருகால் பூஜை
கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் கோ பூஜை பூசனிக்காய் வெட்டுதல் வாஸ்து சாந்தி பால் காய்ச்சுதல் சனாதன சாங்கியப்படி எல்லாம் செய்தாயிற்று. வாங்கிய வீட்டையும் வாடகைக்கு விட்டாயிற்று. அவன் பையன்
குடும்பமும் எப்போதும் போல் அவனோடு தான் இருந்தது. பையன் ஈ எம் ஐ கட்டுவதுதான் எப்படி?
ஒருநாள் பையன் அவனிடம் சொன்னான்.’ அப்பா நா வாங்கியிருக்குறது அபார்ட்மென்ட் வீடு. என்னையும் சேத்து அங்க மொத்தம் ஆறு பேரு. ஃபிளாட் ஒனெர்ஸ் எல்லாம் எதோ முக்கிய சமாச்சாரமா முடிவு எடுக்கணும்னு ஒரு
மீட்டிங்க் போட்டு கூட்டிருக்காங்க. என்னால
போமுடியாது. நா அஃபிசியலா டூர் போகணும். எனக்கு அது முக்கியம். நீ அந்த கூட்டத்துக்கு போயிட்டு வந்துடு’
‘சரிப்பா அதுக்கென்ன’ அவன் பதில் சொன்னான்.
வாங்கியிருக்கும் புது அபார்ட்மெண்ட் வீடு அவன் வீட்டிலிருந்து
இரண்டு கிலோமீட்டர் இருக்கலாம். அவனிடம் இருக்கும் எக்செல் வண்டியை எடுத்துக்கொண்டு
அங்கு போனான். அந்த பெருங்களத்தூர் பரத்ராம்
அபார்ட்மெண்டின் மொட்டை மாடியில் கூட்டம் போட்டிருந்தார்கள். அவனும் போய் உட்கார்ந்தான்.
‘உங்க பையன் வரலியா’
‘அவன் டூர் போயிருக்கான் வர முடியல, என்னை அனுப்பினான்’
கூட்டம் ஆரம்பமானது.
தலைவர் ஆகிருதியுடன் ஒருவர் விஷயத்தை எடுத்து வைத்தார்.
எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
‘தரை தளத்தில் ஒரு வீடு இருக்கு. எல்லோருக்கும் தெரிந்த
சேதி. அதனை இருபது லட்சத்திற்கு ஓனர் விலைபேசிக்கொண்டு இருக்கிறார். சிங்கில் ரூம்
அபார்ட்மெண்ட். அதற்கு சி எம் டி ஏ அப்ரூவல் கிடையாது. அந்த விற்பனையைத் தடுத்தாக வேண்டும்.
அது கட்டுவதற்கு என்ன செலவு ஆனதோ, அது இருக்கட்டும் அதனை ஆறு லட்சத்திற்கு மட்டும்
விலைபேசி நாம் ஆறு பேரும் எடுத்துக்கொள்ளலாம். அதற்குத்தான் பில்டிங்க் ஓனருக்கு
ஒரு லாயர் நோட்டிஸ் கொடுக்கவிருக்கிறோம்’
‘ இது குறித்து அவரிடம் பேசினோமா’ அவன் குறுக்குக்கேள்வி
கேட்டான்.
‘இல்லை’ தலைவர் பதில் சொன்னார். மற்ற ஐவரும் அவனை முறைத்தார்கள்.
‘அதற்குள் லாயர் நோட்டிஸ் என்கிறீர்கள்’
‘அதற்கெல்லாம் சாவுகாசம் இல்லை. அவர் நாளைக்கே அந்த ஃபிளாட்டினை
விற்று விட்டால் நாம் என்ன செய்வது’
‘அபார்ட்மெண்ட் வாங்கும் போதே ஓனரை அது பற்றிக்கேட்டேன்.
அது அவரின் சொந்த உபயோகத்திற்கு என்றார்’
‘அது எல்லாம் இப்போது
எதற்குப்பேசுகிறீர்கள். அந்த அன் அப்ரூடு
தரைதள பிளாட்டில் இன்னொரு நபரை அனுமதிப்பது முடியாது என்பதுதான் நம் எல்லோரின் ஏகோபித்த முடிவு’
‘நான் அவரிடம் இது பற்றி விசாரித்துவிட்டுத்தான் என் பையனுக்கு
அபார்ட்மெண்டே வாங்கினேன்’ அவன் ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.
‘அந்த விளக்கமெல்லாம் தேவையா இப்போது ? இந்த லாயர் நோட்டிசில் எல்லோரும் கையெழுத்து மட்டும் போடுங்கள்’
அவனைத்தவிர மற்ற ஐவரும் அதனில் கையெழுத்து போட்டு முடித்தார்கள்.
‘நீங்கள்’
‘இல்லை. அவரிடம் ஒரு வார்த்தை பேசாமல் இந்த நோட்டிஸ் அனுப்புவது சரியில்லை’
என்று அவன் இழுத்தான்.
அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஓனரிடம்
விஷயத்தைப் பேசவே பேசாமல் இப்படி ஒரு லாயர் நோட்டிஸ் அனுப்புவது அவனுக்குத் தவறாகப்பட்டது.
‘தாமதமானால் காரியம்
கைகூடாது போய்விடும். நீங்கள் கையெழுத்துப்
போடுங்கள்’
அவன் கூட்டத்தைவிட்டு எழுந்தான்
‘’எழுந்திரிச்சா எப்படி’
‘இல்லை. அவரிடம் பேசாமல் நேராக லாயர் நோட்டிஸ் அனுப்புவதில் எனக்கு இஷ்டமில்லை’ சொல்லிய அவன் எழுந்தான். வெளியே
வந்தான். நேராகத்தன் வீடு நோக்கிப்புறப்பட்டான்.
அவன்தன் இந்த புத்தியைக்காண்பித்து
விட்டதாய்க் கூட்டத்தில் அனைவரும் பேசிக்கொண்டார்கள். ’ இந்த புத்தி’ என்பதற்கு
வாசிப்பவர்கள் எது வேண்டுமானாலும் பொருள் கொள்ளுங்கள்.
அவன் கூட்டத்தில்
நடந்த செய்தியைத்தன் பையனிடம் சொன்னான்.
‘உனக்கு எது சரின்னு படுதோ அதனைச்செய்’ பையன் சுறுக்கமாய்
முடித்துக்கொண்டான்.
இப்படியாய் நாட்கள்
சென்றுகொண்டிருந்தன. ஒரு நாள் அபார்ட்மென்ட் ஓனர் அவனுக்கு போன் செய்தார்.
‘சார் எனக்கு லாயர் நோட்டிஸ் வந்துருக்கு. அதுல ஒங்க கையெழுத்து
மட்டும் இல்லை. உங்கள அவுங்க இந்த டீல்ல விலக்கி இருக்காங்க. அதுல எனக்கு இஷ்டமில்ல’
‘சார் நீங்கதான்
அண்ணைக்கே அந்த தரை தள ஃபிளாட்டைபத்தி
எல்லாம் பேச வேண்டாம்னு
என்கிட்ட சொன்னிங்க இல்லையா’
‘ஆமாம் அது பத்தி
கேட்டவங்க எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தைச்
சொன்னேன். ஆனா இப்போது பிரச்சனை அப்படியில்லை.
லாயர் நோட்டிஸ் அனுப்பியிருக்காங்க. எனக்கு இன்னும் பிசினஸ் ஏகப்பட்டது இருக்கு. தொழில்ல குட் வில் பாதிக்காம இருக்கணும். இந்த மாதிரி லிடிகேஷன் வர்ரது எனக்கு
பிடிக்கல்ல. அத எல்லாம் அவாய்ட் பண்ணணும்னு
என் லாயர் கண்டிப்பா சொல்றார். ஆக அந்த வீட்ட நான் அவங்களுக்கே விக்கதான் போறேன். அந்த அஞ்சி பேரும் அத வாங்கிக்கணும்னு முடிவோட இருக்காங்க. ஆனா ஒண்ணு நீங்களும் அதுல இருக்கணும். கட்டாயமா சொல்லிட்டேன்’
அவன் திரு திரு என்று விழித்தான்.
‘பையன்கிட்ட பேசுங்க. நீங்களும் இந்த டீல்ல இருக்கணும்’
ஓனர் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார்.
அவன் பையனிடம் நடந்தவற்றைச் சொன்னான்.
‘உனக்கு எது சரியோ அதனையே செய்’ அவன் மீண்டும் அதே பதிலைச்
சொன்னான்.
அபார்ட்மெண்ட் அச்சோசியேஷன் தலைவரிடம் அவன் நேராகவே சென்றான்.
‘ஓனர் என்னோடு பேசினார். தரைதள ப்ஃபிளாட் வாங்குவதில் என்னையும்
சேர்ந்து கொள்ளச்சொன்னார். ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்’
‘அதெல்லாம் முடிஞ்ச கதை’
‘அது எப்படி முடிந்த கதை. ஓனர் என்னிடம் பேசி இருக்கிறாரே’
‘அதுக்குன்னு உங்கள இப்ப டீல்ல சேத்துக்க முடியாது. அவ்வளவுதான்’
‘இது சரியில்லை’
‘எது’
‘என்னை நீக்கிவைட்டு
நீங்கள் ஐவரும் மட்டும் அந்த தரை ஃபிளாட்டை வாங்குவது’
‘இல்லை என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’
‘நாங்க எங்களுக்குள்ள ஒரு கூட்டம் போட்டுட்டு பிறகு முடிவ
சொல்லுறம்’
அவன் வீட்டுக்குத்திரும்பினான். சில நாட்கள் சென்றன.
அசோசியேஷன் தலைவர் அவனை மொபைலில் அழைத்தார்.’ உங்களையும் தரை தள வீடு வாங்குவதில் சேர்த்துக்கொள்கிறோம்.
ஆனா ஒரு கண்டிஷன். நீங்க ரெண்டு லட்சம் அதிகமா தரணும். அபார்ட்மெண்ட்க்கு விலை ஒரு
லட்சம். ஆக மொத்தமா மூணு லட்சம் தரணும்’
அவன் யோசித்தான். ‘ நீங்க எல்லாம் ஒரு லட்சம் தருவீங்க.
நான் மூணு லட்சம் போடணுமா’
‘ஆமாம்’
’ஏன்’
‘ அபார்ட்மெண்ட்ல ஒங்க பையனுக்கு பங்கு வேணும்னு கேக்குறீங்க
அதனால’
‘சரி ஒரு லட்சம் மட்டும் எனக்கு அபராதம் போடுங்க ஆக மொத்தமா ரெண்டு லட்சம் கட்டிடறேன்’ எப்படிச்சொன்னானோ. அவன் சொல்லிவிட்டான்.
‘ஆக ரெண்டு லட்சத்துக்கு
ஒத்துகுறீங்க’
‘ஆமாம்’
பாக்கி அபார்ட்மெண்ட் வாசிகள் தலா ஒரு லட்சம் என்பதில்
ஒரு இருபதாயிரம் குறைத்துக்கொண்டு எண்பதாயிரம்
மட்டுமே தந்தார்கள். ஆக ஐவருமாய் அது நான்கு லட்சம் ஆனது. அவன் இரண்டு லட்சம்
தந்தான். ஆக ஆறு லட்சம் ஓனருக்குப்போக தரைதள
அபார்ட்மெண்ட் ஆறு பேருக்கும் சொந்தமானது.
அவன் தன் பையனிடம் இந்தச் செய்தி எதனையும் சொல்லவே இல்லை. அவன் பையன் பத்திர அலுவலகத்திற்கு மட்டும் வந்தான். கையெழுத்துப்போட்டுவிட்டுப்
போனான்.
அவன் தன் மனைவியிடம் இருந்து தங்க வளையல் வாங்கி முடிச்சூர் இந்தியன் வங்கியில் விவசாயக்கடன் பெற்றான்.
எல்லா குடியிருப்பு வாசிகளைப்போல் அவன் பையனும் தன் தந்தையிடம்
ஒரு லட்சம்தான் கொடுத்தான். அவன் நகை அடகு வைத்துப்பெற்றது ஒரு லட்சம். ஆக அவனுக்குப்போட்ட அபராதத்தை ஈடு செய்தான். பையனுக்கும்
மருமகளுக்கும் இது விஷயம் எதுவும் தெரியவே தெரியாது.
அவன் மனைவி மாத்திரம் அவனைத்திட்டிகொண்டே தான் இருந்தாள். ‘ பேசத்தெரியலன்னா
வாய மூடிண்டு இருக்கணும் ஒரு அசட்டைக் கட்டிண்டு எவ்ளோ படுறது’ புலம்பிக்கொண்டே இருந்தாள்.
ஒருநாள் பில்டிங்க் ஓனர் அவனைப் போன் செய்து வீட்டுக்கு
‘ வாருங்கள்’ என்றார். எதற்குக்கூப்பிடுகிறார் அவனுக்கு ஒன்றுமே விளங்காமல் இருந்தது. அவன் பில்டிங்க் ஓனரை
அவர் வரச்சொன்ன இடத்தில் வைத்துச் சந்தித்தான்.
‘இந்தாங்க நீங்க அபராதம கட்டின ஒரு லட்சம். எனக்கு அந்த
ஃபிளாட்டுக்கு ஐந்து லட்சம் போதும். ஆறு லட்சம் என்றால் மட்டும் அது வீட்டுக்கு
சரியான விலையா. அடாவடித்தனம்தான். நான் உங்களிடம் பேசுன வார்த்தைக்காக நீங்க என்னை மதிச்சி அவுங்க கிட்ட பேசுனீங்க. அந்த பாவத்துக்காக உங்களுக்கு
அபராதம் ஒரு லட்சம்னா அது கொடுமை. அந்த நஷ்டம் ஒங்களுக்கு வேணாம். எனக்கு வரட்டும்.
என் ப்ராபர்டி பிசினஸ்ல எவ்வளவோ வரும் எவ்வளவோ போகும்’
நடப்பது நிஜமா என்று அவன்
அவனையே கிள்ளி பார்த்துக்கொண்டான். மகிழ்ச்சியோடு
அந்த ஒரு லட்சத்தை கை நீட்டி வாங்கிக்கொண்டான்.
‘ஒங்க பையனுக்கு இந்த அபராதம் ஒரு லட்சம் கட்டினது எல்லாம்
தெரியுமா’
‘தெரியாது’
‘பின்ன’
‘நான் என் மனைவி தங்க வளையல முடிச்சூர் இந்தியன் பேங்குல அடகு வச்சி விவசாயக்கடன் வாங்கினேன். அந்த அபராதத்த கட்டினேன்’
‘ நா சொன்ன வார்த்தைய
மதிச்ச ஒரு மனுஷன என் பிசினஸ் வட்டத்துல இப்பதான்
மொத மொதல்ல பாக்குறேன்’
அவன் பில்டிங் ஓனரைக் கையெடுத்துக்கும்பிட்டான். கண்கள்
ஈரமாயின.
அடகில் வைத்து
இருந்த மனைவியின் வளையலை வங்கியிலிருந்து
மீட்டுத்தன் மனைவியிடம் ஒப்படைத்தான். அந்த
பில்டிங்க் ஓனர் அவனை அழைத்துப்பேசியதும் பின்பு அங்கு நடைபெற்ற
விபரம் முழுவதும் மனைவியிடம் சொன்னான்.
‘இப்படியெல்லாம் கூட நடக்குமா’ என்றாள் மனைவி.
‘நடந்திருக்கு பாரு’ என்றான்
அவன் சந்தோஷமாக.
’அந்த பில்டிங்க் ஓனருக்கு என்ன பித்தா பைத்தியமா’
‘நல்லவங்களுக்கு அப்படித்தான் பேரு’ அவன் அவளுக்குப் பதில் சொன்னான்.
-------------------------------------------------
‘
‘