சிறுகதை -கணக்கு
பெருவரப்பூர் அய்யங்கார் என்றால்தான் எனக்குத்தெரியும்.
அவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் என்னவோ இருக்கலாம். யாருக்கும் தெரியாது. எங்கள் கிராமம்
தருமங்குடிக்கு அவர் அடிக்கடி வருவார்.பண்ணையார் வீட்டில் குழந்தைகளுக்குப் பாடம்
சொல்லித்தருவார். பண்ணையார் வீட்டுக் குழந்தைகளில் மூத்த பிள்ளையின் படிப்புக்கு அவர் கூடுதலாய்ப் பொறுப்பு எடுத்துக்கொண்டவர். பண்ணையார்
வீட்டில் அந்த மூத்த பிள்ளைதான் வக்கீலுக்குப் படித்தார்.
பெருவரப்பூர் தருமங்குடியிலிருந்து மூன்று கிலோமீட்டர்
இருக்கலாம். ஊரின் தெற்குவெளி வயலில் இறங்கி வரப்பு வரப்பாய் நடக்கவேண்டும். எங்கு
பார்த்தாலும் பச்சைப்பசேல் என்று நஞ்சை நிலங்கள். இரண்டு கிராமங்கள் குறுக்கே வரும். தட்டோன் ஓடை, ஆலம்பாடி என்பவை அவை. பெருவரப்பூர்
அய்யங்காருக்குத் தான் பிறந்த பெருவரப்பூரில் யாரும் இல்லை. குழந்தையாய் இருக்கும்
போதே அவர் தாயை இழந்தார். அப்பாவோடு பாட்டி கூட மாட இருந்து குழந்தையை வளர்த்தார்.தன்
குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித்தர தருமங்குடிப் பண்ணையார் பெருவரப்பூர் அய்யங்காரை
தருமங்குடிக்கு அழைத்து வந்தார்.
ஃபோர்த் ஃபாரம்
சிதம்பரம் ராமசாமி செட்டியார் ஹை ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த பெருவரப்பூர் அய்யங்காருக்கு
அப்பா காலராவில் தவறிப்போனதால் படிப்பு நின்று
போனது. ஆங்கிலப் புலமை அய்யங்காருக்கு அபாரம். ஆங்கில எழுத்துக்கள் மணி மணியாய் காட்சி
தரும். அவர் பேசும் ஆங்கிலத்தில் சொக்கித்தான்
அவரைப் பண்ணையார் டியூஷனுக்கு அழைத்து வந்தார். கிடைத்த இடுக்கில் அய்யங்கார் ஜோசியம் பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டுவிட்டார்.
ஜாதகம் கணிப்பதில் நிபுணரானார்.கிரகப்பெயர்ச்சி பலன் அறிய வெள்ளாழத்தெரு ஆச்சிமார்களில்
அனேகர் அவரைச் சுற்றிவர ஆரம்பித்தனர்.
பண்ணையாருக்கு மூன்று வேளை உணவு படுக்க இடம், கை செலவுக்குப்பணம்
எல்லாம் வேண்டுமே அதனை எல்லாம் பண்ணையார் கவனித்துக்கொண்டார்.தருமங்குடியில் அப்போது
பள்ளிக்கூடம் ஏது. அருகில் சிதம்பரம்தான் பள்ளிக்கூடங்கள்
நிறைந்த ஊர். சிதம்பரம் கனகசபை நகரில் பண்ணையாருக்கு ஒரு பெரிய வீடு இருந்தது. குழந்தைகளைப்
படிக்க வைக்கவேண்டுமே ஆகக் குடும்பம் சிதம்பரத்தில் இருந்தது.பண்ணையார் சிதம்பரத்துக்கும்
தருமங்குடிக்கும் போய் போய் வருவார். டியூஷன் வாத்தியாரான அய்யங்காரும் பிள்ளையோடு
தருமங்குடிக்கு வருவார். தருமங்குடிப் பண்ணையாரின் பிள்ளைகள் பள்ளி விடுமுறையில் எல்லாம்
கிராமத்தில்தான் இருப்பார்கள். குழந்தை பிறப்பே குறைந்துபோன இந்தக்காலம் போலவா, பண்ணையார்
பிள்ளைக்கு ஆண் மக்கள் நால்வர், பெண்குழந்தைகள் இருவர்.எல்லா பிள்ளைகளுக்கும் தமிழும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்து ’கற்றல்’ என்கிற
வண்டியை ஓட விட்டுக்காட்டியது அய்யங்கார்தான்.
தருமங்குடிக்கு வரும்போதெல்லாம் பெருவரப்பூர் அய்யங்கார்
எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். மதியம் இரவு என்று இரண்டு வேளை. பண்ணையாரின் வீட்டு
ஆச்சி, அய்யங்கார் சாப்பிட எங்கள் வீட்டிற்கு
அரிசியும் தயிரும் அனுப்பி வைப்பார். புரோகிதரான எங்கள் அப்பா காய்கறியும் வாழை இலையும்
வீட்டில் பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்வார்.
எங்கள் வீட்டுத்திண்ணையில் அய்யங்கார் மதியம் சாப்பிட்டுவிட்டுத் தூங்குவார். எழுந்து காபி சாப்பிடுவார்.
காலை வேளை காபி பிள்ளை வீட்டிலேயே முடித்துக் கொள்வார். அம்மா அவரிடம் தன் குழந்தைகளுக்கெல்லாம்
ஜாதகம் கணிக்க வேண்டிக்கொள்வார். ஜாதக பலன்களை எழுதி வாங்கிக்கொள்வார். அனேகமாக அய்யங்கார்
சொன்னால் ஜாதக பலன்கள் சரியாகவே இருக்கும்.
பண்ணையார் வீட்டு ஆச்சிதான் ஒரு நாள் அய்யங்கார் வாத்யாரைக் கேட்டிருக்கிறார்.’
இப்படியே போவுறதா காலம்.உங்களுக்கு வயசு ஆயிகிட்டே
போவுது. ஒரு குடும்பம்னு ஆவுறது இல்லையா. காலா
காலத்துல ஒரு பொண்ணு பாருங்க. கல்யாணம் பண்ணிகுங்க. நாளைக்கு உங்களுக்கு வயசு ஆகும்.
கை காலு சோறும் முடியாம போகும். அப்ப ஒரு சொம்பு வெந்நீர் வச்சி தர ஆளு வேண்டாமா’
‘பார்க்கலாம்ங்க ஆச்சி. அதுக்கு இன்னும் நேரம் வருல’ அய்யங்கார்
பதில்.
‘ஊரு உலகத்துக்கே
ஜாதகம் பாக்குறீங்க. உங்க ஜாதகத்த பாத்துகணும்ல’ என்பாள் ஆச்சி.
பதில் ஏதும் சொல்லாமாட்டார். லேசாக சிரித்துக்கொள்வார்.
அதற்கு என்ன பொருளோ.
பண்ணையார் வீட்டுக்குழந்தைகள் எல்லோரும் படித்தார்கள்.
வேலைக்குச் சென்றார்கள். கல்யாணம் செய்துகொண்டார்கள். குழந்தை குட்டிகள் பிறந்தன. ஒரு
குடும்பம் பல குடும்பங்களாய் மாறிப்போயின. அய்யங்கார் பிள்ளை வீட்டு எல்லா வைபவங்களுக்கும் வந்து போனார்.அப்போதெல்லாம் எங்கள்
வீட்டுக்கும் கட்டாயம் வருவார். அவருக்குத் தெரியாத விஷயங்கள் உண்டா என்ன. திண்ணையில்
அமர்ந்து பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. அய்யங்காருக்குத் தலை நரைக்க ஆரம்பித்தது.
நெற்றியில் லேசாக வழுக்கை விழத்தொடங்கியது. அம்மாதான் மிகவும் கவலைப்படுவார். அய்யங்காருக்கென்று இப்போது
இருப்பது பிள்ளை வீடு மட்டுமே. பண்ணையாருக்கும் வயதாகிக்கொண்டே போனது. ஆச்சிக்கும்
அடிக்கடி உடம்பு முடியாமல் போனது. அவர்களுக்கே யாராவது ஒத்தாசை செய்தால் தேவலை என்கிற
நிலமை வந்தது. யாராயிருந்தாலும் அது இயற்கைதானே.
அய்யங்கார் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தார்.’ நா இனி
இந்த ஊருக்கு அடிக்கடி வர்ரது சிரமம்னு நெனைக்கிறேன். பிள்ளைக்கும் வயசாறது. ஆச்சிக்கும்தான்.
அவர் குழந்தைகள் தலையெடுத்து அது அது வேற வேற ஊர்னு போயாச்சு. நா இப்ப அவாளுக்கு அனாவசியமா
இருக்கலாம். ஆக நா இனி தருமங்குடிக்கு வர்ரது சாத்தியமில்லேன்னு தோண்றது’
‘எங்க போவேள்’
‘பகவானுக்குத்தான் தெரியணும்’
‘இப்பிடி ஒரு பதிலா’
‘ எங்கிட்ட இருக்கற பதிலதான நா சொல்லலாம்’
‘இதுக்குத்தான் ஆச்சி அப்பவே சொன்ன உங்களண்ட’
‘என்ன சொன்னா’
‘ஒரு கல்யாணத்த பண்ணிகுங்கோன்னு’
அய்யங்கார் எப்போதும் சிரிப்பது போல் லேசாக சிரித்துக்கொண்டார்.
ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லைதான்.
அப்பா இந்த விஷயங்களில் எல்லாம் பட்டுக்கொள்ளவே மாட்டார்.
அது அம்மா பாடு என்று விட்டு விடுவார். தருமங்குடியில் வயதாகி உடம்பு முடியாமல் போகிறவர்கள்
எல்லாம் தினம் தினம் ஒரு முறையாவது எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மா கையால் ஒரு
பிடி சாதமாவது வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத்தான் போவார்கள். எத்தனையோ முதியவர்களை அப்படி நான் பார்த்து இருக்கிறேன். வேலாயுதம் பிள்ளை தினம் வருவார். முதுகு வளைந்து கூன் விழுந்திருக்கும்.’ரவ
வாழ எல கிழிசலு ஒரு உண்ட சோறு ரசம் ஊத்தி குடுங்க’ என்பார். காதில் அரை பவுனுக்குத்
தோடு இருக்கும். பேரூர் வைத்தியநாதம் பிள்ளை
வருவார். அவர் என் எல் சி கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்தான். ‘
அம்மா விருந்து வருது’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைவார். ஒரு டம்ப்ளர் மோர் மட்டுமே வாங்கி சாப்பிடுவார்.
இலுப்பைத்தோப்பிலிருந்து பரதேசிப் படையாச்சி
கையில் தடியோடு வருவார்.’ அம்மா இருக்காங்களா, நீராகாரம் ஒரு ரோட்டா குடுத்திங்கன்னா தேவலாம்’ என்பார். அப்படியே வீட்டின் முன் கட்டில் உட்கார்ந்து விடுவார். இடையர்
தெருவிலிருந்து ஆறுமுகக் கோனார் வருவார்.’ அய்யிருட்டம்மா ஒரு கரண்டி சாம்பார் ரவ சாதம்’ என்பார்.
தொழூராங்க என்னும் கிழவி வருவார் ’ஒரு தரத்துக்கு வெத்திலை
குடு’ என்பார். ஊருக்கே மாடு மேய்க்கும் ராமசாமி வருவார் ‘ராமசாமி வச்சினாடு தொம்லபாக்கு
காவாலி’ என்று தெலுங்கு மொழியில் கேட்பார். பூசாலி குப்பன் பாரியாள் தங்காயா’ அய்யரூட்டு
அம்மா’ என்று கூடவே இருப்பாள்.ஆதிநாராயண சர்மா பண்ணையார் வீட்டு ரைஸ் மில்லில் கணக்குப்பிள்ளையாய்
வேலைசெய்தார். அவர் எங்கள் வீட்டு ஒரு போர்ஷனில் குடியிருந்தார். அந்த குடும்பத்திற்கு
அம்மா ஒத்தாசையாகவே இருந்தார். பஞ்சாயத்து போர்டில் கணக்குப்பிள்ளையாய் வேலை செய்த
கிருஷ்ணமூர்த்திக்கும், அரிசன நலத்துறைப்பள்ளியில் வேலை பார்த்த லக்ஷ்மணன் சாருக்கும்
அம்மாதான் மதிய உணவு கொடுப்பார். அவர்கள் சாப்பிட்டதற்கு அம்மாவிடம் தோராயமாகக் கணக்குப் போட்டுக் காசு கொடுப்பார்கள். இருவரும் சம்பாதிப்பவர்கள். இந்த குக்கிராமத்தில்
அவர்களுக்கு இது மிகப் பெரிய ஒத்தாசை. அம்மா அன்னபூரணிதான்.
பெருவரப்பூர் அய்யங்கார் பிறகு பிறகு ஊர் பக்கம் வருவதேயில்லை. நாங்களும் அவரை மறந்துதான்
விட்டோம். ஆண்டுகள் எத்தனையோ உருண்டோடியும் விட்டன. ஒரு நாள் அண்டையூர் வளையமாதேவிக்கு
பெருவரப்பூர் அய்யங்கார் வரப்போவதாய் தருமங்குடியில் அங்கங்கு பேசிக்கொண்டார்கள்.அவர்
இப்போது திருபெரும்புதூர் மடத்து பெரிய ஸ்வாமிகள் என்றும் பேசிக்கொண்டார்கள். வளையமாதேவியில்
ஒரு பெரிய பெருமாள் கோவில் இருக்கிறது. வேதவல்லி சமேத வேதநாராயணப்பெருமாள் திருக்கோவில்.
அந்தக்கோவிலின் டிரஸ்டி லக்ஷ்மிகாந்தம்பிள்ளை திருபெரும்புதூர் சென்றதாயும் அப்போது
மடத்து பெரிய ஸ்வாமிகளைச் சந்தித்தாயும் சொன்னார்கள்.தருமங்குடி
பண்ணையார் பற்றி, அவர் குடும்பம் பற்றி யோகக்ஷேமம் விஜாரித்ததாகவும் பேசிக்கொண்டார்கள்.
இத்தனை ஆண்டு காலம் அவர் சமஸ்கிருதம் கற்று, வேதங்கள் ,உபநிடதங்கள்
, சர்வ தர்ம சாஸ்திரங்கள், பாஷ்யங்கள், பதினெட்டு புராணங்கள், கற்று பாண்டித்யமாகியிருக்கிறார்
என்றும் திருபெரும்புதூர் மடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு அங்கேயே ஜீயர் ஸ்வாமிகள் ஆகி விட்டார் என்றும் சொன்னார்கள்.
காலக்கிரமத்தில் அவர் பெரியமடத்துக்கு மகா ஸ்வாமிகள் ஆகிவிட்டதாகவும் செய்தி பரவியது. தற்சமயம் வளையமாதேவி வேதநாராயணப்பெருமாள்
சந்நிதிக்கு எழுந்தருளியிருப்பதாயும் மக்கள் அவரைக்கண்டு ஆசிபெற்றுச் செல்வதாயும் தருமங்குடி தெருக்களில் பேசிக்கொண்டார்கள்.
‘பெருவரப்பூர் அய்யங்கார் வளையமாதேவிக்கு வந்துருக்கிறாராம்’
என்றாள் அம்மா.
‘திருபெரும்புதூர் ஜீயர்னு சொல்லு , சுவாமி எழுந்தருளியிருக்கார்னு
சொல்லணும்’ என்றார் அப்பா.
நாங்கள் மூவருமே வளையமாதேவிக்குச்சென்று ஜீயரைப்பார்த்துவருவது என்று முடிவு செய்தோம். காலம்
என்ன என்னவோதான் செய்து விடுகிறது. பெருவரப்பூர் அய்யங்கார் இப்போது வணக்கத்திற்குரிய மகான் ஆகியிருக்கிறார்.
தருமங்குடி பண்ணையாரும் இல்லை அந்த ஆச்சியும் இல்லை. காலம் அவர்கள் கணக்கை முடித்துக்கொண்டு
விட்டது. அவரின் பிள்ளைகள் எங்கெங்கோ உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றுவிட்டார்கள்தான்.
என் பெற்றோரும்
நானும் வளையமாதேவி பெருமாள் கோவில் செல்வது
எனப்புறப்பட்டோம். ஜீயர் ஸ்வாமியைப் பார்த்துவிடுவது, அவரிடம் பேசமுடிந்தால் பேசுவது, எப்படியும் அவரிடம்
ஆசி வாங்கிக்கொண்டு திரும்புவது எனக் கிளம்பினோம்.
எங்கள் வீட்டில் எத்தனையோ முறை சாப்பிட்டவர். எங்கள் வீட்டுத்திண்ணையில்
படுத்து உறங்கியவர். அம்மா கையால் எத்தனைதரம் காபி சாப்பிட்டு இருப்பார். ஒரு பெண்ணைப்
பாருங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று
பண்ணையார் வீட்டு ஆச்சி எவ்வளவு முறை அவரிடம் வற்புறுத்தி இருப்பார். என் அம்மா மட்டுமென்ன
எத்தனையோ பக்குவமாய் அவரிடம் திருமணம் செய்துகொள்ளுங்கள்
என்று பேசியிருக்கிறார். யார் கேட்டாலும் ஒரு புன் சிரிப்பு மட்டுமே பதிலாக வரும் அவரிடமிருந்து.
மற்றபடி அமைதியாகத்தான் இருப்பார். எதுவும் பதில் பேச மாட்டார்.
வளையமாதேவி பெருமாள் கோவிலில் ஒரு பெரிய ஷாமியானா போடப்பட்டிருந்தது.
கோவில் வாயிலில் ஒரு புன்னை மரம் அதனில் ஒரு யானை கட்டப்பட்டிருந்தது. எவ்வளவோ ஆண்டுகளைக்
கடந்து நிற்கும் தல விருட்சம் அது. புறாக்கள்
இங்கும் அங்கும் கொள்ளையாய்ப் பறந்து கொண்டிருந்தன.
சந்நிதியில் ஒரு கீற்றுக்கொட்டகை. அதன் உள்ளேதான் திருபெரும்புதூர் ஜீயர் இறங்கியிருப்பதாய்ப்
பேசிக்கொண்டார்கள். நானும் என் அப்பாவும் அம்மாவும்
அந்தக்கட்டிடம் அருகே சென்றோம். எங்கும் ஒரே அமைதியாக இருந்தது. ஒரு ஐம்பது பேருக்கு
’’நாராயணா கோவிந்தா’ சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கழுத்தில் ஒரு துளசி மாலையோடு
காவித்துணி போர்த்திக்கொண்ட ஒரு உடல் ஒரு சாய்வு
நாற்காலியில் அங்கே சாய்ந்த வண்ணம் வைக்கப்பட்டிருந்தது.
‘இது என்ன விபரீதம்’
‘ஆமாம் அப்பா விபரீதம்தான்’ என்றேன்.
திருபெரும்புதூர் ஜீயர் ஸ்ரீ ஆச்சாரியன் திருவடியை அடைந்தார்
என்று சன்னமான குரலில் பேசிக்கொண்டார்கள்.
‘சாயந்திரம் பட்டினப்பிரவேசம் வச்சிருக்கு. பல்லக்கு ஒரு சகடையில வச்சி நாலு பிரதான வீதிகள்ளயும்
சுத்திவரதா ஏற்பாடு. சுவாமி பல்லக்குல கால வச்சி ஏறும்போதே உக்காந்துட்டார். கைத்தாங்கலா
அழைச்சிகினு வந்து சாய்வு நாற்காலில உக்கார வச்சம். கண்ண திறந்தார். மூடினார். தீர்த்தம்
என்றார். ’நாராயணா நாராயணா’ சொல்லி தீர்த்தம் வாயில் விட்டோம். கண்ணு சொறுகிடுச்சி.
முடிஞ்சி போச்சு. என்ன பண்றது. மனத்த திடப்படுத்திண்டு
பெரிய மடத்துக்கு போன் போட்டு விஷயம் சொன்னோம்.
அங்கிருந்து இங்கு வந்த அதே கார்லயே,
திருபெரும்புதூர் மடத்துக்குப் பெரியவா சரீரத்தை அனுப்பிவைக்க சொல்லிட்டாங்க.
இதுதான் எங்களுக்கு ஜீயருக்கு அடுத்ததா
அங்க இருக்குறவா போட்ட உத்தரவு. இன்னும் சித்த நாழில கார் பொறப்படும். வந்தவா
ஜாடா சேவிச்சிகணும்.’ நாராயணா கோவிந்தான்னு’
மூணு தரம் சொல்லி நமஸ்காரம் பண்ணி சேவிக்கணும்.
சாஷ்டாங்க நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் புருஷா பொண்டுகள் யதா சவுகரியத்துக்கு பண்ணிக்குங்க.
இது ஒரு ஆசீர்வாதம். ஆகட்டும் கார் பொறப்பட இருக்கு’
சொல்லி முடித்தார் வேத நாராயணப்பெருமாள் டிரஸ்டி லக்ஷிகாந்தன்
பிள்ளை. ‘ நாராயணா கோவிந்தா’ என்று மூன்று முறை சொல்லிக் கீழே விழுந்து எழுந்தார் அக்ரஹாரவாசியான
டிரஸ்டிப் பிள்ளை.
அம்மாவைப்பார்த்துக்கொண்டேன். கண்கள் குளமாகி இருந்தது.
‘’எதோ ஒரு அதிசயம் பாக்கப்போறம் நம்மாத்துல காபி சாப்டார் டிபன் சாப்டார் நம்மாத்து திண்ணையில படுத்துண்டு
தூங்கினார். நம்ம கொழந்தைகள் ஜாதகம் கணிச்சி
குடுத்தவர். அந்த மனுஷன பாக்கணும் . பேசணும்.
ஆசிர்வாதம் வாங்கிகணும்னு வந்தோமே. குடுத்து வக்கலயேடா நமக்கு’
அப்பா தரையில் விழுந்து நமஸ்கரித்தார். நானும் தான்.
அம்மா ‘பகவானே இப்பிடி பிராப்தம் இல்லாம பண்ணிட்டயே, சித்த
மின்னாடி வந்தா பேசியிருக்கலாம். ஆசிர்வாதம் வாங்கியிருக்கலாமே’ சொல்லிக்கொண்டே நமஸ்கரித்தாள்.
‘நாராயணா கோவிந்தா’ மட்டும் சொல்லணும்.
வேகமாகச்சொன்னார் கோவில் டிரஸ்டி.
‘எல்லாரும் வெளில, இப்பவே வெளில
வந்துடுங்கோ’ கட்டளை வந்து கொண்டிருந்தது.
’சரீரத்த கார்ல எடுத்துண்டு இரு நூறு கிலோமீட்டர் போயாகணும்.
யாத்ராதானம் பண்ணி, கார நகத்தணும்’ சொல்லிய
சிதம்பரம் மேலப்புதுத்தெரு வாத்யார் சுயமாச்சாரியார் தனது சடங்குகளை ஆரம்பித்தார்.
‘இதராள் இங்க யாரும் இருக்கப்பிடாது’ என்றார் அவர்.’
’பெருவரப்பூர் அய்யங்கார் தப்பு தப்பு
திருபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள், ஸ்தூல சரீரத்த பெஞ்சில
படுக்க வைக்கமாட்டாளா’ அப்பாவைக்கேட்டேன்.
‘வாய மூடுடா’ என்றார் எரிந்து விழுந்தார் அப்பா.
அம்மாதான் என்னை
சமாதானப்படுத்தி வெளியில் அழைத்து வந்தார்.
நாங்கள் மூவரும் தருமங்குடி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
‘ஒரு பொண்ணு பாருங்க . கல்யாணம் பண்ணிகோங்க’ பெருவரப்பூர்
அய்யங்காரைப் பார்த்து ஓயாமல் சொன்ன
பண்ணை வீட்டு ஆச்சியை நினைத்துக்கொண்டே அம்மா நடக்க ஆரம்பித்தாள்.
‘ நம்ம போடறது எல்லாம் எப்பவும் கணக்காகாது’ அப்பா அம்மாவிடம் சொல்லிக்கொண்டார்.
-----------------------------------------------------