21/6/24 சொல் புதிது
இணயக்கவியரங்கில்
வாசித்த கவிதை
எஸ்ஸார்சி
1 வாழ்க்கை
கல்விக்கூடங்கள்
சான்றோர்களை உருவாக்கவில்லை
அறிவாளிகளை உருவாக்கி அனுப்பி வைக்கிறது
அறிவின் பயனோ
என்ன சம்பாத்யம் உனக்கு
என்ன சொத்து உனக்கு
என்பதாய் முடிந்து போகிறது
நிறைய காசுக்கு நிறைய அறிவு
நிறைய அறிவுக்கு நிறைய காசு.
கோல்ட் மெடல் வாங்கியவர்களும்
காலம் முடிவுற்றால்
மயிர் வெளுத்து
செத்துப்போகிறார்கள்
அவ்வளவே.
2 வினாக்கள்
வில்லை எடு நாண் பூட்டு
அர்ச்சுனா என்ன தயக்கம்
சொன்ன கண்ணன்
ஒட்டு மொத்த சமுதாய நலனுக்காய்
ஏதும் சொல்லவில்லை.
பூபாளம் குறைப்பதுவா நோக்கம்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக்காட்டு
சொன்னார் சிலுவை யேசு
பாலஸ்தீனர்கள் ஆண்டுக்கணக்காய்
கன்னத்தில் அறை மட்டுமே
வாங்கி வாங்கி நிற்கிறார்கள் இன்னும்
அவன் விரும்ப அது உனக்கு
அவன் மறுக்க எவன்தான்
அளிப்பான்
என்கிறது இஸ்லாம்
அன்றாடம் ஆப்கானிஸ்தானில்
அரங்கேறும் அனைத்து அத்துமீறலுக்கும்
அவலத்துக்கும்
தீர்வு
யார் சொல்வது
விடை தெரியா வினாக்கள் ஏராளம் வரலாற்றில்.
3 தெளிவு
கையடக்க மாய் லேப்டாப்பும்
சொகுசு அலைபேசியும்
ஆட்சிக்கு வந்த பிறகு
மனித உறவுகள்
கேலிக்குள்ளாயின
கையில் காசும்
உடலில் வலுவும்
குறையாத வரை
மனிதர்க்கு எதுவுமே பிடிபட
மறுக்கிறது
அடுத்தவர் ஆதரவோடு
மட்டுமே வாழ்க்கை
என்கிறபோது
விஷயங்கள் தெளிவாகும்
ஆயின் துரும்பையும்
கிள்ளத்தான் வாய்க்காது
4 மானுடப் பிறப்பு
நாம் நினைப்பதுவே
அடுத்தவர் நினைக்கவேண்டும்
என்றெண்ணுவது போதாமை
நாம் செய்வதுவே அடுத்தவன் செய்யவேண்டும் என்றெண்ணுவது பேதமை
நாம் நினைப்பதுவும் செய்வதுவும்
இன்னொருவனுக்கு மகிழ்ச்சி தருமானால்
அதுவே உரைகல்
நம் மானுடப்பிறப்புக்கு.
No comments:
Post a Comment