Sunday, July 7, 2024

 

 

சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்                                                Bookday  ல்  வெளிவந்தது

 

‘சுத்தம் சோறு போடும்’ என்பது நம்மிடையே வழங்கும் பழமொழி.   இப்பழமொழியின் பொருள் நம்மால் இன்னும்  உணர்வு  பூர்வமாக  கிரகித்துக் கொள்ளப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பொது நல அமைப்புக்கள் தோன்றியுள்ளன. சுற்றுப்புறத்தை எப்படித்தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கற்பித்தலை  அவை பிரதானமாய்ச் செய்து வருகின்றன.  சமூக பிரக்ஞை மேலோங்கிய சில நல்ல குடிமக்களின் செயல்பாடாக மட்டுமே அவை அங்கீகரிக்கப்படுகின்றன.

 அறிவியலிலின் பங்களிப்பால் முன்னேறிய நாடான அமெரிக்காவில் கலிஃபோர்னியா  மாநிலத்தில்  அண்மையில் நான்  பயணம் மேற்கொண்டேன். சாதாரணமாக அங்கு அனுசரிக்கப்படும் சுத்தம் பற்றிய உணர்வு என்னைச் சிந்திக்க வைத்தது. வாகனங்கள் செல்லும்  சாலைகளில் தூய்மையைக் காணும் போது பெருமிதமாக இருந்தது. இப்படியும் சாலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது சாத்தியமா என்கிற ஆச்சரியம்  என்னைக் கவ்விக்கொண்டது.

 மழை நீர் செல்லும் கால்வாயை  பாலத்தின் அருகே இருந்து நோக்கினேன். அதனில் தண்ணீர் மட்டுமே சல சலத்துச் சென்று கொண்டிருந்தது. ஒரு சின்னக்  கடுதாசி கூட  அநாவசியமாய் மிதந்து  செல்வதைக்  காண முடியவில்லை. அமெரிக்கர்  ஒவ்வொருவரும்  ஒரு வளர்ப்பு நாயை தன்னோடு கூடவே  அழைத்துசெல்கின்றனர். நம்மூர்  சாலையில் அலைகின்ற நாய்களைப் போல் அங்கே  அவைகளைக்காண முடியாது.  அமெரிக்கர்கள் வளர்க்கும் நாய்களின் கழிவுகள் வீதியில் பிரத்யேகமாய் அமைக்கப்பட்ட கூடை அமைப்புக்களில் சேகரிக்கப்படுகின்றன. நீச்சல்குளங்களில்  எப்போதும்  சுத்தமான தண்ணீர்  நிரப்பப்படுகிறது. நீச்சல் பழகுவதற்கு வருபவர்களின் ஆரோக்கியம் தெரிவு செய்யப்பட்டே தண்ணீரில் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.காய்கறிக்கடைகளும் கனி விற்பனை செய்வோரும் மக்களின் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொள்வதை கண் எதிரே பார்க்கமுடியும்.

சுற்றுப்புறச்சூழல் பற்றி யோசிக்கும் வேளையில்  சென்னையின் அடையாறும் கூவம் நதியும் பக்கிங்க்ஹாம் கால்வாயும் மனத்திரையில் நிழலாக ஓடத்தான் செய்கின்றன. புற நகர் தொடர் வண்டியில் எக்மோரிலிருந்து   பீச் செல்வதற்குள் நாம் சந்திக்கும்  நீர்த்தடங்களில் எத்தனை மாசுகள் மலை மலையாய்  குவிந்து கிடத்தலைப் பார்த்து இருக்கிறோம்.  வரலாற்றில்   புனித நதியாய் விளங்கியது  சென்னையின் கூவம்  என்றால் இன்று யாராவது நம்புவார்களா? மருத்துவக்கழிவுளை மொத்தமாய்ச் சுமந்து வரும் அடையாற்றிலிருந்து எழும் துர்நாற்றம் சகிக்கத்தான் முடிகிறதா?.  பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள்  அயல் நாட்டுப்பறவைகளின்  அரிய  சரணாலயமாய் விளங்கிய பெருமை பெற்றது.  இன்று காண்பதுவோ  சதுப்பு  நீர் நிலைகளில் மலை மலையாய் குப்பைகளின் ஆக்கிரமிப்பு.

அண்மையில்  சென்னையில் வீசியது மிக்ஜாம் புயல். வெகுவாய்  வெள்ளம் சுமந்தது கொசஸ்தலை ஆறு. குப்பைகள் குன்றென ஆற்றில் மிதந்து சென்றன. திருவள்ளூர் நகர பஞ்சாயத்துக்களில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மாறிப்போயிருக்கிறது.

 2023 ஆம் ஆண்டு  டிசம்பர் 26 அன்று எண்ணூர் கோரமண்டல்  உர ஆலையின்  அமோனியா கசிவு காற்றில் விடப்பட்டது.  அமோனியா வாயுக்கசிவால்  மீனவர்கள் அல்லலுற்றனர் .  சதுப்பு நிலப் பறவைகள் கடல் வாழ் உயிர் இனங்கள் சித்திரவதைக் குள்ளாயின. மீனவப்  பெண்களும் குழந்தைகளும் பட்ட அவஸ்தைகளை எண்ணிப்பார்ப்போம்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி

பிறவும் தமபோற் செயின் (குறள் 120)

இது ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்  நமது தமிழ் மண்ணின்  வணிக அறம்.  அடுத்தவன்  பொருளைத் தமது பொருளாய்ப் போற்றுவதும் பேணுவதும் என்பதுவே அது. நுகர்வோர் இடத்தில் தன்னை வைத்து  ஒரு வியாபாரி செயல்படவேண்டும். அத்தகைய மாண்புகளுக்கு இன்று எங்கே போவது. வணிகக்கண்ணோட்டம் என்பது சுயலாபத்தை மட்டுமே கணக்கில் கொள்வது என்பதுவாய்  காட்சி மாறிப்போயிருக்கிறது.

 சென்னை வாசிகளில் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்கள் அங்கு காய்கறிகள் கனிகள் அழுகி நாறும் துர் நாற்றத்தை அனுபவிக்காமல் திரும்ப முடியாது. வியாபார யுக்தியாய்   கார்பைடு  கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பதுவும், கனிகளின் மீது ரசாயனம் தடவி அவை பளிச்சென்று நம் கண் முன்னே காட்சியாவதும் நாம் அறிந்திருப்போம்.

மதராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பிரதான சாலையில் வழக்கறிஞர்கள் பதிவு அலுவலகம் முன்பாக எத்தனை அசுத்தங்கள்.  முகம் சுளிக்க   வீசும் துர்நாற்றம். மெத்தப் படித்தவர்கள் இடையேதான் கூடுதல்  சமூகப்பொறுப்பின்மை.

பொருளீட்டலும் சுயநலமும் மட்டுமே குருதியில் ஏற்றி,  மதிப்பெண் அட்டையைக் கையில் கொடுத்து  இன்றைய  கல்விக்கூடங்கள் பிள்ளைகளைச்  சமுதாயத்துக்குப் பிரஜைகள் என  அனுப்பி வைக்கின்றன.  மாறாக இந்திய விடுதலைக்கான தீவிர இயக்கங்கள் நடந்த காலை தேசபிதா மகாத்மாவின் கட்டளையை ஏற்றுக் கல்விக்கூடங்களை விட்டு  வெளியேறிய அன்றைய மாணவர்கள் வீதிக்கு வந்தனர். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப்போராடி சிறைக்கூடம் ஏகினர். அன்றைய காலத்தின் தேவை கருதி நமது முன்னோர்கள் தம் வாழ்க்கையை தாய் நாட்டிற்காய் அர்ப்பணித்தனர்.

இன்றைக்கு  நமது ரயில் நிலையங்களும் பேருந்து நிலையங்களும் நாம் தூய்மையைப் பேணுவதில் எத்தனைக்கு அக்கறை காட்டுகிறோம் என்பதை உலகுக்குப் பறை சாற்றுகின்றன.  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் சாயத்திரை என்னும் தனது நாவலில் திருப்பூர் பகுதி நீர்த்தடங்கள் சாயப்பட்டறைக் கழிவுகளால் எப்படி தமது  சுத்தத்தைத்தொலைத்து  நஞ்சாக மாறி ஊறு விளைவிக்கின்றன என்பதனைச் சொல்லியிருப்பார். நொய்யலாற்றின் சோகம் சொல்லில் அடங்காது.  நொய்யல்  கொணரும் நீரைக் கால்நடைகளும் அருந்தாது வயல்களுக்கும் பாய்ச்ச முடியாது. 160 கிலோமீட்டர் ஓடும் ஆறு 152 கிலோ மீட்டருக்கு சாக்கடையாய்க்காட்சி தருகிறது.

‘காவிரித் தென் பெண்ணைப்பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனை-நதி-என

மேவிய ஆறு பல ஓடத் திரு

மேனி செழித்த தமிழ்நாடு.’

என்றார் மகாகவி பாரதி.   மேனி செழிக்கிறதா என்ன? இன்று காவிரியும் தென்பெண்ணையும் பாலாறும் வைகையும் தாமிரபரணியும் எத்தனை வகை  வகையாய் குப்பை கூளங்களைச் சுமந்து செல்கின்றன. நதிகளைத் தாய்த்தெய்வமாக வழிபடும் மரபு நமது.  சரஸ்வதி,  சிந்து ,கங்கை,பத்மா,  நர்மதை, காவேரி, பொன்னி, வைகை, பெண்ணை எனப் பெண்குழந்தைகளுக்கு நதிகளின் பெயர் வைத்து அழைப்பவர்கள் நாம்.

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதிI

நர்மதே சிந்து காவேரி

ஜலேஸ்மின் சன்னிதிம் குரு II

என்று   சப்த (ஏழு) கங்கைகளை அழைத்து வணங்கி  மட்டுமே  நீராடும்  பண்டை மரபு  நமது.  இறை தொழ நமது உடலும் உள்ளமும் அப்படித்தான் தூய்மையாயின.

பாலிதீன் பைகளை உபயோகிப்பதில் அனேக கட்டுப்பாடுகளைச் சில ஆண்டுகள் முன்னே ஆட்சியாளர்கள் கொணர்ந்தார்கள். நெகிழிகள். அவை மண்ணில் மக்குவது அத்தனை எளிதில் நிகழ்வதில்லை. கால்நடைகள் அவைகளை உணவென விழுங்கி அவதியுறுகின்றன. வானிலிருந்து விழும் மழை நீர் பூமியின் அடி ஆழத்தைச்  சென்றடைவதை நெகிழிகள் தடுக்கின்றன. பூமியின்  நீர் சேமிக்கும்  அரிய குணாம்சத்தை அவை  வெகுவாய்ப்  பாதிக்கத்தொடங்கின.  

சில காலங்கள் முன்னே மஞ்சள் துணிப்பை உபயோகம்  அரசாங்கத்தால்  வெகுவாக விளம்பரப்படுத்தப்பட்டது.  மக்கள் பாலிதீன் பைகள் உபயோகிக்காமல் இருப்பதைக் கவனமாகப் பின்பற்றத்தொடங்கினர்.  உணவுப்பொருட்களை  மட்டுமா தேநீரையும் காபியையும் கூட  பார்சலில் வழங்கிய  உணவு நிறுவனங்கள்,  பாலிதீன் பைகள் உபயோகிப்பதை நிறுத்தின. மக்கள் தம் வீட்டிலிருந்து பாத்திரங்களை டிபன்  டப்பாக்களைக் கொண்டு வந்து உணவகங்களில் பார்சல் உணவு வாங்கினார்கள். மளிகைக்கடைகள்  பாலிதீன் பைகளை உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தன. மக்கள் துணிப்பையை எடுத்துக்கொண்டு சாமான்கள் வாங்க கடைத்தெருவுக்குப் போனார்கள். பேப்பர் கப்புகள் தட்டுக்கள் பாக்கு மட்டைத்தட்டுக்கள்  என்பன அதிகமாக உபயோகத்திற்கு வந்தன. ஆரோக்கியமான சூழ்நிலை நோக்கிய  நமது பயணம் துவங்கி விட்டதாக எண்ணத்தொடங்கினோம்.

யார் எதிர் பார்த்தார்கள், கொரானா என்னும் கொடிய உயிர்க்கொல்லி ( கோவிட் 19 )நோய் உலகெங்கும் பரவியது. மனித  நுரையீரலை கடுமையாக பாதிக்கும் வைரஸ்  SARS-CoV-2  அதற்குக் காரணமாகியது. கொரானாவால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்பட்டன.  விண்ணில் தெரியும் நிலாவிலும் செவ்வாயிலும் மக்கள் குடியேறமுடியுமா என்பது பற்றி   விவாதித்தவர்கள்  நம்மிடையே உண்டு. ஆயின் கொரானா உயிர்கொல்லி கண்டு இப்பூஉலகம்  விழிபிதுங்கித் தவித்தது. மனிதக்கண்களால் பார்க்கமுடியாத உயிரினம் மனத சமூகத்தை திக்குமுக்கு ஆட வைத்தது. இயற்கைக்கு என்ன கணக்கோ  நாம் அறிய மாட்டோம். ஆயினும்  தாவரங்களும் விலங்குகளும்  பாதிப்பு ஏதுமின்றி உயிர்தப்பின. சீன  தேசத்து உஹான்  உயிரியல்  ஆய்வகத்திலிருந்து இது பரவியதாய் சொல்லப்படுகிறது. வைரஸ்  பாதித்த வவ்வாலைத் தின்றது ஒரு சீனப் பாம்பு.அதனை உணவாக உட்கொண்ட சீன  மனிதன் வழி உலகம் முழுவதும் அந்நோய் கடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கொரானாவால் ஸ்தம்பித்துப்போயிற்று. கொரானா பாதித்த காலம் சற்றேரக்குறைய மூன்றாண்டுகள். மனிதர்கள் தப்பிப் பிழைப்போமா மாட்டோமா என்று அஞ்சினார்கள்.

பாலிதீன் பை உபயோகம் கூடாது  பற்றி எல்லாம்  எங்கே பிரச்சாரம் செய்வது.கொரானா சவங்களை பாலிதீன் பைகள் கொண்டே மூட்டை கட்டி உலகெங்கும் அகற்றினார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் பாலிதீனும் பிளாஸ்டிக்கும் கொண்ட கவசங்கள் அணிந்தே  மருத்துவ சேவைகளைச் செய்தார்கள்.  மனித உயிர்கள்  கொரானா  அசுரனை விஞ்சி இவ்வுலகம் வாழுமா என்கிற அச்ச இருள் எங்கும்  பரவியது. மனித குலத்தால் வாழ்தலின்  அத்யாவசியம்  உணரப்பட்டது. மும்முரமாய் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகள் கொரானா தடுப்பூசிகளைக்  கொண்டுவந்தன. உலகை கொரானா பாதிப்பிலிருந்து காப்பாற்றியதில் நமது பாரத நாட்டின் பங்கு மகத்தானது. ஆகப்பெரிய செல்வந்த நாடுகள் தாம்  வாழ்தலை மட்டுமே  பிரதான இலக்காய் எடுத்துப்பணியாற்றின. மக்கள் தொகை வெகுவாய்க்கொண்ட வளரும் நாடு இந்தியா. இந்தியத் திருநாட்டின் பெரிய மனம் உலக மக்களால் உணரப்பெற்றது.’ வசு தெய்வ குடும்பகம்’ என்னும்  இந்தியாவின்  மனித நேய  விசுவாசம்  உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ பவர் கொண்ட நாடுகள் தம் சுய நலத்தை மட்டுமே பிரதானப்படுத்திச் செயல் பட்டன. எங்கிருந்தாலும் மனிதகுலம் ஒன்றே  என்று இந்தியா தன் பங்கை ஆற்றியது. எப்படி எல்லாமோ போராடினோம். மருத்துவப்பணியாளர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள்.  ஒரு வழியாய் கொரானா விடை பெற்றது. உலக அரங்கில் மக்கள் தொகையில்  இரண்டாவதாக  இருந்த  நமது நாடு இந்தியா,  சீனாவை விஞ்சி முதல் இடத்திற்கு வந்திருக்கிறது.  உயிர்க்கொல்லி கொரானா அந்த அளவுக்கு சீனாவைப் பாதித்தும் இருக்கலாம்.

 பூவுலகம் பருவநிலை மாற்றத்தால் திணறத்தொடங்கியது.மண்ணில் உலாவும் மிருகங்களும், தாவர வகைகளும் வறட்சியை உணரத்தொடங்கின. பூமியின் சராசரி வெப்பம் உயரத்தொடங்கியது. கிழக்கு மற்றும் மத்திய  பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. அதன்காரணமாக இந்துமகா சமுத்திரத்தின் வெப்ப நிலையில் மாறுதல் உண்டானது. இது அதீத மழையையும் அதீத வெப்பத்தையும் கொடுத்துப் புவியைக் கெடுத்து  வருவதைக்காண்கிறோம். இதனை எல்நினோவின் பாதிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.

பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்ந்தாலும் அது  ஆர்டிக் துருவப்பகுதிகளில் பனிமலைகளை உருகச்செய்துவிடும். பூவுலகின் தட்ப வெப்ப சூழலில் அது வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். பருவநிலை மாற்றம் இந்தியத் திருநாட்டின் கடற்கரை ஒட்டிய நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். புவி வெப்ப மயமாதலைத் தடுக்க  அனல் வழி மின்சாரம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தி கடல் அலைகள், வீசும்  காற்று, நீர்நிலைகள் இவைகளைப்பயன் படுத்தி  மட்டுமே மின்சாரம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் வந்தாயிற்று. மின்சாரம் தயாரிக்கும்  டர்பைன்களை சுழற்ற நீர் ஆவியைப்பயன்படுத்துகிறோம். அப்படி  மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலைகளில்  எரிபொருளாக நிலக்கரி பயன் படுத்தப்படுகிறது. அணு உலைகளும் வெகுவாய் மின் சாரத்தைத் தயாரிக்கின்றன.அணு உலைகள் வெளியிடும் வெப்பம், அணு உலைகள் வெளியிடும் கழிவுகள் ஆபத்தை விளைவிப்பவை. மின்சாரத்தின் தேவை பன்மடங்கானதுவே இதற்கு அடிப்படைக்காரணம்.

மக்கள் தேவையை அனுசரித்துப் போக்குவரத்து சாதனங்களின் எண்ணிக்கைப் பன் மடங்கு பெருகியது. அவை உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் இவற்றால் வெளியேறும் புகையில் கார்பன் மோனாக்சைடு (CO) கார்பன் டை ஆக்சைடு CO2) போன்றவற்றின் அளவு கூடிக்கொண்டே போகிறது.  உயிரினங்கள் சுவாசிக்கும் காற்று,  உயிர் வளி ( o2) நஞ்சாகிறது. புவியின் வெப்ப நிலை கூடிக்கொண்டே போகிறது.

உலகெங்கிலும்  பொருட்களைப் பாதுகாக்கும் குளிர் சாதனப்பெட்டிகளும், குளிர்சாத சாதனங்கள் பொறுத்தப்பட்ட அறைகளும்  குளோரோ ஃப்ளுரோ கார்பன்கள் (CFC)   எனும் வாயுவை வெளியிட்டு ஓசோன் என்னும்  இயற்கைப் புவியரணை நாசப்படுத்துகின்றன. ஓசோன் அரண் எனும்  புவிக்காப்பில் அண்டார்டிகாவிற்கு நேர் மேலாக  ஓட்டை  விழுந்திருக்கும் பேராபத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள்.

புவி கூடுதலாய்  வெப்பம் அடையவே கூடாது. கரியமில வாயுக்கள் வெளிப்பாடு கட்டுப்படுத்தப்படவேண்டும். சாலைகளில் விரையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல் டீசல் பயன்பாட்டில்  மிகக்கவனமாய் இருத்தல் வேண்டும்.  ஆகத்தான்   பாட்டரி கார்கள் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கின்றன. அவைகளின்  உபயோகம்  கூடுதலாக  ஊக்குவிக்கப்படவேண்டும்.

சமீபகாலமாக  வீட்டுக்கு வீடு சோலார் பாட்டரிகள் நிறுவப்பட்டு மின்சாரம் சூரிய சக்தியினின்று தயாரிக்கப்படுகிறது.   இவ்வமைப்பிற்கு அரசாங்கமும்  சில சலுகைகள்   வழங்கியிருக்கிறது. கார்களுக்கும் எலக்ட்ரிகல் ரீசார்ஜ் சூரிய சக்தியினின்று கொடுக்கப்படவேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள் பாட்டரி மின்சாரத்தில் வெகுவாக இயங்கத்தொடங்கியுள்ளன. புகை நச்சு வளிமண்டலத்தில் கலப்பதை அவை வெகுவாகக் குறைக்க உதவுகின்றன.

’புதியதோர் உலகம் செய்வோம்

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’.

என்று உலகிற்கு நல்லது விழைந்தார் பாவேந்தர் பாரதிதாசன். ஆயின்  யுத்தபேரிகை முழங்குவது எங்கே நின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சூன்யாமாக்கும் போர், என்றேனும் சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தியது உண்டா என்ன?நாடுகளுக்கு இடையே  எழும் போர் முதலியவற்றால் மனித உயிர்கள் லட்சக்கணக்கில் பலியாவது மட்டுமா நிகழ்கிறது. யுத்த களத்தில் துப்பாக்கிகளும் டாங்குகளும் வெடிகுண்டுகளும் கிளப்பும் புகை நச்சு சொல்லி மாளாது. ஆண்டொன்றுக்கு மேலாய் உக்ரைனுக்கும் ருஷ்யாவிற்கும் சண்டை, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் எப்போதும்  முஸ்தீபு. இன்னும் எத்தனையோ  அப்பாவி அழுகுரல்கள் உலகெங்கும்  தொடர்கதையாகி நிற்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பெயரளவுக்கு மட்டுமே ஒரு அமைப்பாக  இயங்க முடிகிறது.  மனஞ்சிறுத்துப்போன அமெரிக்க ஐக்கிய நாடு (USA) தனக்கு  யுத்த தளவாடங்கள் போணியானால் சரி என்று சொத்தை நியாயத்தைத் தொடர்ந்து பேசிவருவது வேதனையான விஷயமாகும்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப்பிரச்சனையோடு, காசா முற்றுகை  ஹமஸ் அமைப்புடன் சண்டை என ஓயாத துப்பாக்கி வெடிகுண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமே உள்ளன. யாருக்கு யார் நியாயம் சொல்வது. சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு பற்றியெல்லாம் இந்த மக்களிடம் விவாதம் செய்ய சாத்தியப்படுமா.  வவுனியாவில் ஒன்றரை   லட்சம் தமிழர்கள் சமாதி ஆனார்கள். சொச்ச இலங்கைத்தமிழர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக  இரண்டாம் பிரஜைகளாக அங்கங்கே வாழ்ந்து வருகிறார்கள்.சொந்த மண்ணும் வீடும் நிலபுலனும் எங்கோ இருக்க அரை வயிற்றுக்கஞ்சிக்காய் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று வயிற்றுப்பசிக்கு  கூலி வேலை செய்கிறார்கள். மிச்சமாய் சிலவர் இலங்கையில்.  இலங்கையோ பொருளாதார கிடுக்கில் சிக்கிச் சீரழிகிறது.  இவர்களிடம்  எல்லாம் போய் நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு  பருவநிலை மாற்ற  ம் என்பது  எல்லாம்  பற்றி விவாதிப்பது  நேர்மையாகுமா?

ஆப்கானிஸ்தான்  ஒரு நாடு. இன்னும் ஆரோக்கியமான மக்கள் சமூகம் அங்கு ஸ்திரப்படவில்லை. ஆட்சியாளர்கள் உலக அரங்கில் அங்கீகரிக்கப் படாதவர்களாக காலம் போய்க்கொண்டே இருக்கிறது. முன்னர் ரஷ்யா  ஆப்கனை ஆக்கிரமித்தது.பின்னர் அமெரிக்கா ராணுவ  முகாம் அமைத்தது. அதுவும் முகாமைக்காலி செய்தது. இன்று கொம்பு முளைத்தவர்க:ள் தலையீடுகள் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயகச் சூழல் அங்கு மலரவில்லை. அன்றாடம் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் அரங்கேறுகிறது. தலிபான்கள் அரசு நிர்வாகப் பொறுப்பு எடுத்தார்கள்.  ஆப்கனிலிருந்து உலக நாடுகள் அச்சத்துடன் சற்றுத்தள்ளியே நிற்கின்றன. வாழ்நிலையே  கேள்விக்குறியாகி விட்டபோது சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்க சாத்தியப்படுமா என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல்  திட்டங்கள் பருவ நிலை மாற்றங்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.  கரியமில வாயு வெளிப்படுதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயம், கட்டுமானம், வனப்பராமரிப்பு ,தொழிற்சாலை போக்குவரத்து ஆகிய துறைகளில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை (UNO) சவலைக்குழந்தைதானே.

க்ரீன்ஹவுஸ் வாயுக்கள்( பசுமை இல்ல வாயுக்கள்) என்பன கார்பன் டை ஆக்சைடு ( CO2),மீதேன்( CH4) ,  நைட்ரஸ் ஆக்சைடு( N2O), செயற்கை ரசாயனங்கள். க்ரீன்ஹவுஸ்  என்பது கண்ணாடியால் ஆன வீடு. மோசமான வெப்ப தட்ப நிலையிலிருந்து தாவரங்களைக் காப்பாற்றி வளர்க்க இவை நிறுவப்படுகின்றன. இவையே  தாம் பெற்ற வெப்பத்தை இருத்தி வைத்துக்கொள்கின்றன. பசுமை இல்ல வாயுக்களே புவி வெப்பமாவதற்குப் பிரதான காரணிகள். இப்போதிருக்கும்  வெப்ப நிலையில்  1.5 டிகிரி செல்ஷியஸ் புவியின் வெப்பம்  இன்னும் கூடிப்போனால்  சொல்லொணாத் துயரங்களை மக்கள் சமூகம் எதிர்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். அறிவியலாளர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். செய்யவேண்டியவர்கள் புவி வெப்பம் குறைவதற்காய் உருப்படியாய் எதுவும் செய்யப்படவில்லை.

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடற்கரைக்கு யாத்திரை என்று சென்று பார்த்தவர்கள்   புனித நீராட வரும் மக்கள் கடற்கரையை எவ்வளவு அசுத்தமாக்கியிருக்கிறார்கள் என்பதை அறியலாம்.  வட இந்திய யாத்திரைக்குச் செல்கிறவர்கள் கங்கைக்கரைகள் எவ்வளவுக்கு அசுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன என்பதைப்பார்ப்பார்கள்.

 பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டு அவை கடலை அடைந்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்க்கையை சின்னா பின்ன மாக்குகின்றன. சிறிய மீனிலிருந்து பெரிய திமிங்கிலம் வரை பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு நோயுற்று மடிகின்றன. ஆண்டொன்றுக்கு எண்பது லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.மீன்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் பிளாஸ்டி பேரிடி தரும் பெரிய விஷயமாகும். பிளாஸ்டிக்கை விழுங்கிய மீன்களுக்கு ஏற்படும்  அபாயம்  மீன்களை உணவாகக்கொள்ளும்  உட்கொள்ளும் மனிதர்களுக்கும் நீளும்தானே. பிளாஸ்டிக் கழிவுகள் பவளப்பாறை உயிரினங்களை அழித்தொழித்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் கடல்சார் விஞ்ஞானிகள். அரியவகை தாவரங்கள், கிளிஞ்சல் உயிரினங்கள் இவைகளின் இருப்பு கேள்விக்குறியாகி  நிற்கிறது.

ஆண்டொன்றுக்கு  மூன்று டிரில்லியன் டாலர்  ராணுவத்திற்குச்  செலவு செய்கின்றன  உலக நாடுகள். ஒரு டிரில்லியன் என்பதற்கு ஒன்று போட்டு 13 பூச்சியங்கள்.ராணுவச்செலவு குறைக்க முடியாததுவா. மனம்தான் செம்மையாகவில்லை.  கணம் தோறும்   மாசுபடும் சுற்றுச்சூழல் குறித்து  பருவ நிலை மாற்றம் குறித்து  இப்புவி அழியும் விளிம்பில் இருப்பது குறித்து எவ்வளவு அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது வேதனை.

-------------------------------------------

 

 

 

 

 

No comments:

Post a Comment