Tuesday, October 14, 2025

கவியுளம் -கவிதைகள்

 

 

 

 

கவியுளம்

 

 

1.ரகசியம்

2 அனுபவம்

3 எது எப்படி ஆயினும்

4  காலம்

5 என்ன செய்ய                       

6  சின்ன விஷயம்

7 உண்மை சுடும்

8 சோதிடம்

9 தேர்தல்

10 புதிர்

11 மத அரசியல்

12  புத்தகங்கள் எதற்கு

13 வேடம் கட்டிகள்

14  பொறுப்பின்மை

15 நாம்தான்

16 வாழ்க்கை

17 வினாக்கள்

18தெளிவு

19 மானுடப்பிறப்பு

20 வந்தே மாதரம்

21 தேசிய மாணவர் படை

22 மழைக்காலம் 1

23 மழைக்காலம் 2

24  மழைக்காலம் 3

25 உலகம்

26 சென்னைப்  புத்தகக்காட்சி

27 காலம் தள்ளுதல்

28 தோற்றம்

29 எப்படி

30 நாடும் நடப்பும்

31 மழை

32 மூஞ்ச பாத்தா தெரியலயா

33 ஒன்றைத்தின்று ஒன்று

34 ஆளுநரின் மயக்கம்

35  சென்னையில் வாங்காதீர் வீடு

36 குழந்தையின் அழுகை

37 கடல் கடந்து

38 கவியுளம் அறி.

39 நாம் யார்

40 மேதினம்

41 மனக்கோலம்

42 பிழைப்பு

43 பதிப்புலகம்

44 எது மெய்

45 நடப்பு

46 மொழி

47 நீதி

48 எல்லோரும் ஓர்விலை

49  காலம் மாறிப்போச்சு

50  கல்வி

51 வானம்

52 காற்று

53 ராமன் யாருடைய தெய்வம்

54 கும்பமேளா

55 கஷ்டம்

56 வரலாறு

57 பருவ நிலை மாற்றம்

58 பேய் மழை

59 கொடுமை

60  நாடாளுமன்றம்

61 பணம்

62  கூர்க்கா

6 3 கவியுளம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கவிதைகள்

 

1.ரகசியம்

என் வீட்டருகே
வீடு கட்டாத மனையொன்றில்
மாமரம் ஒன்று
பருவம் தோறும்
கொள்ளையாய்க்
காய்க்கிறது
மாவடு பறிக்கும் மாமி
மாங்காய்க்குழம்பு
வைக்கும் பெண்டிர்
உப்பு கொண்டு நசிக்கித்தின்னும் சிறுவர்
மாவத்தல் போடும் ஆயாமார்
உச்சாணிக்காய்ப் பழுத்துச் சுவைக்கும்
அணில் குருவி
என எல்லோரும்
நன்றி சொல்கிறார்கள் அம்மரத்துக்கு.
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து.
அவ்வப்போது வெள்ளநீர்
வருகையால்தான்
வீடு இன்னும் எழாமல்
அது மாமரத்து மனையெனக் கிடக்கிறது.

2.அனுபவம்

கவிதை எழுதுவதை
நிப்பாட்ட வேண்டும்
தொடர்ந்தால் துயரமே
கதை எழுதுவதும்
கட்டுரை புதினமெனப்
புனைவதும் சித்திக்காமல்
மனம் சிக்கிக்கொள்கிறது
கவிதை வரிகளில்.


மொழிபெயர்ப்புக்குப்
போனால் அவ்வளவே
சொந்தக்கற்பனையின்
ஊற்றுக்கண்
அடைத்துக்கொள்கிறது
இறுக்கமாய்.
கவிதைக்காரன் கவிதையோடு மட்டுந்தான்
நிற்கணுமோ.

 

 

3.எது எப்படி ஆயினும்

 

தைவானில் பூகம்பம்
வானுயர் கட்டிடங்கள்
நெளித்துக்கொண்டும்
நொறுங்கிப்போயும்
அச்சம் தருகிறது
தொலைக்காட்சியில். காட்டினார்கள்
நேர்ந்திட்ட
அவலத்தை.
மக்கள் அல்லாடினார்கள்
மனித இனம்  மொத்தமாய்க்
கையறு நிலையில்
காலம் தள்ளுகிறது
கண் எதிரே காட்சியாகிறது அவலங்கள்.
எது நிகழ்ந்தால் என்ன
புடின் சண்டையை
நிறுத்தப்போகிறாரா
காசாவில் தான்
அமைதி திரும்புமா
ஆப்கனில் ஏதேனும்
உருப்படியாய்
நகரப்போகிறதா

ஈழ விடுதலைப் போரில்
இருநூறு ஆண்டுகள்
வரலாற்றைப் பின்னுக்குத்தாமே தள்ளிக்கொண்ட
இலங்கைத் தமிழர்களுக்கு
நல்ல பொழுது என்றேனும் விடியுமா?

 

 

4. காலம்

புதினம் ஒன்று
எழுதலாம்
மாதம் ஒன்றாய்
தீவிர யோசனை
தடம் எதுவுமே சரியாக
அமையாமல் இழுத்தடிப்பு
யோசித்துத்தான் பார்க்கிறேன்
பொருத்தமாய் அமையவில்லை எதுவும்
பிடித்த மாதிரி
தடம் ஒன்று
அமையாமல்
நேரம்தான்
சலிப்பாய்க் கழிகிறது
காலத்தைவிட உயர்ந்தவொன்று
ஈங்கில்லை
காலம் பொன் போன்றதா
சரியில்லை அதுவுமே.
காலத்திற்கு ஈடேயில்லை
காலத்திற்கு இணையும் இல்லை
காலம் காலம் மட்டுமேதான்.

 

 

 

 

 

5.என்ன செய்ய?

 

 

தாவரங்களின்
வண்ண வண்ண மலர்கள்
அழகு காட்டி
மணம் வீசி
மது வழங்கி
எத்தனைக் கண்ணியமாய்
தம்மினம் கூட்டுகின்றன
மிருகங்கள் மொத்தமும்
பெடையோடு எப்போது
தேவையோ அப்போது
மட்டுமே கூடிக்களிக்கின்றன
அண்மையில் புதுச்சேரியில்
பத்து வயது பெண் பிஞ்சை
நாசமாக்கிச் சாக்கடையில்
வீசி எறிந்த ஜன்மங்களை
எண்ணி எண்ணி
மனிதகுலம்
வெட்கித் தலைகுனிகிறது
ஈராயிரம் ஆண்டுகள் முன்னம்
திருக்குறள் ஈந்த மண்ணப்பா இது.

 

 

6.சின்ன விஷயம்

 

 

எனக்கு நானே
தலைமுடியை ஒழுங்கு
செய்கிறேன்
கொரானா காலத்தில்
தொடங்கிய பழக்கம்
தொடர்கிறது இன்னும்
எத்தனையோ பேர்வழிகள்
தம் தலைமுடியைத்
தாமே வெட்டிக்கொள்வதாய்
என்னிடம் சொன்ன போதெல்லாம்
எப்படிச்சாத்தியம் இது
எண்ணியவன் நான்.
ஆண்டுகள் நான்கானது
என் தலைமுடி பார்க்கிறார்கள்
இது என்னய்யா இப்படி
கேட்கவும் இல்லையே யாரும்.
இப்போதுதான்
தலைமுடி
அழகாய் இருக்கிறது
என்கிறாளே
அவளும்.

 

7.உண்மை சுடும்

 

உண்மையைச் சொன்னால்
காது கொடுத்துக் கேட்பதில்லை யாரும்.
பொய்மைக்குக் கவர்ச்சி
அதிகம்
ரசிகர்கள் அதிகம்
அசுர வேகமுடையதுவே
அபத்தம் எப்போதும்.
வரலாற்றில் ஆயிரம்
பொய்கள் ஏறியிருக்கலாம்
கல்வெட்டுக்கள் அவைகளைத்
தாங்கியும் நிற்கலாம்
எந்தக் கல்வெட்டை யும்
எப்படித்தான் அப்படியே
நம்புகிறார்களோ
ஒரு உண்மையை
ஏழு தினுசுகளாய்த்
திரித்தும் பேசுவோர்
வழிவந்தவர்கள் நாம்
அன்று மட்டுமென்ன

மட்டையை ரெண்டாய்க்
கிழித்திருக்கப்போகிறோம்

 

 

8.சோதிடம்

சோதிடம் பொய்யென்றாலும்                               
அது பார்ப்பது மட்டும் ஓயவில்லை
யோசித்துப் பார்க்கிறேன்
ஆயிரம் ஆண்டுகளாய்
தொடர்கதையாய்த் தான் இது
தூக்கி அதனை ஓரமாய்
வைத்துவிட்டு
வேறு வேலை பார்க்கவும்
முடியவில்லையே
பலதுகளில் சிலதுகள்
அச்சு அசலாய் சரியாகவே இருப்பதாய்த்
தோன்றுகின்றன
ஜோதிடம் அதெல்லாம் சும்மா கதை பேசலாம்
யதார்த்தத்தில் முடியவில்லை
என்பதுவே நிதர்சனம்.

9.தேர்தல்

நாடாளுமன்றத்தேர்தல்
தமிழ் நிலத்தில்
முடிந்து போனது
தேர்தல் முடிவுகள் தெரியவரும்
நாட்கள் சிலவாகும்
காத்திருப்போம்
ஆனால் ஒரு கேள்வி
சாதி பார்த்துத்தான்
தேர்தலில் நிறுத்துவார்கள்
ஓட்டுப் போடுவார்கள்
ஐம்பத்து இரண்டில் சட்டமன்றத் தேர்தல்
நெல்லையில் சோமயாஜுலு அய்யரும்
முதுகுன்றத்தில்
வேத மாணிக்கம் அட்டவணை இனத்தாரும்

 பொதுத்தொகுதியில் நின்று
எம்எல்ஏ ஆனார்கள்
விடுதலைப் போராட்ட வீரர்கள்.
இன்றைக்குச் சாத்தியமே  இல்லை இப்படி எதுவும்
விடுதலை பெற்ற பாரதத்
திருநாட்டில்
சாதி கெட்டிப்பட்டுக்
கிடக்கிறது.
ராகுல் காந்தி
கேரள வயநாட்டில்
நிற்பது தனிரகம்.

 

 

 

10.புதிர்

 

வாசலில் ஒரு அழகுச்
செம்பருத்தி
அழகாய்ப்பூத்து வந்தது
மலரை நான் கொய்வதில்லை
பாவம் விட்டுவிடுவேன்
நல்ல பதியனாய் வாங்கியதுதான்
வேரில் செம்மண் போட்டு
வளர்த்தேன்
நல்ல நீர் தினமும்
வார்த்தேன்
அவ்வப்போது எருவுமிட்டேன்
எந்தப் பூச்சியும் அரிக்கவுமில்லை
பின் எப்படித்தான் அது
பட்டுப்போனது திடீரென்று
மலரை நான் கொய்யாதது கோபமோ.

 

 

 

 

11.மத அரசியல்

 

மதங்கள் கடவுளோடு
நிற்பதில்லை
அவை எப்போதும்
எல்லை தாண்டுகின்றன
மதங்கள் சும்மா இருப்பதில்லை
மதங்கள் மண்ணை
கூறு போடுகின்றன
கடவுள் ஆன்ம விஷயமாய்
நிற்பதில்லை
மதங்களுக்கு எப்போதும்
அரசியல் உண்டு
காசையும் கடவுளையும்
பிரித்துவிட்டால்
நிலமை சீரடையலாம்
எந்தக் கடவுளாலும்
நடக்கிற காரியமில்லையே அது.

 

 

12.புத்தகங்கள் எதற்கு?

 

 

எண்ணும் எழுத்தும்
கண்கள் இரண்டு
மனிதனைப் பிற உயிரினங்களிடமிருந்து
வேறுபடுத்தி
உயர்த்திக்காட்டுவது
மனிதச் சிந்தனை.
சிந்தனையைத்தூக்கிப்பிடிப்பன
புத்தகங்கள்.
நமது மண்ணில்
எழுதாக்கிளவியான
வேதங்களும்
இன்று புத்தகங்களாகி
வலம் வருகின்றன
நமது கடவுள்கள்
கைகளில் புத்தகங்கள்
வைத்திருக்கிறார்கள்
ஓயாமல் படித்துக்கொண்டே இருக்கிறார்கள்
நமது நீதிமன்றங்களில்
சத்தியம் செய்யப்
புத்தகங்களே
காட்சியாகின்றன
கற்ற கல்வியும்
பெற்ற ஞானமும்
பிறிதின் நோய்
தந்நோய் போல்போற்றக்
கற்றுத்தரல் வேண்டும்
அது மட்டுமே பிரதானம்
பேசுகிறது வள்ளுவம்.

 

 

13.வேடம் கட்டிகள்

தேர்தல் நேரத்தில்
எத்தனைப்பொய்கள்
மேடைதோறும்
முழங்கப் படுகின்றன
யாருக்கும் வெட்கமில்லை.
ஆகிவிட்ட வயதும்
கற்ற கல்வியும்
பெற்ற அனுபவமும்
சிறுத்துப்போய் நிற்க
வோட்டுக்காய் வேடம்கட்டி
எப்படி நடிக்கிறார்கள்
எம் தலைவர்கள்.
வாய்மையே வெல்லும்
எழுதிவைத்துக்கொண்டு
வாய்மையை வணிகப்பண்டமாய்
மதிக்கிறார்கள்
மக்கள் மதிமயங்கி
கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.

 

 

14. பொறுப்பின்மை

தாங்கமுடியாத வெயிலும்
குளிரும் மழையும்
வெள்ளமும்
பருவமாற்றத்தால்
ஓயாமல் சொல்லி
வருகின்றனர் விஞ்ஞானிகள்.
அறிவியலாளர்கள்
அரசுக் கட்டிலுக்கு ஆர்வமாய் வருவதில்லை.
புவியின் வெப்பத்தைக்
குறைக்கமுடியாமல்
நிகழ்த்தும்
போர்களால் கூட்டிக்கொண்டே போகிறோம்
அன்றாட வாழ்க்கையே
இல்லை என்றாகும் போது
புவியின் வெப்பக்கூடல்
பற்றி எங்கே சிந்திப்பது
தீவிரவாதிகள் தொடங்கும்
கலகங்கள் போர்களாய்
முடிகின்றன
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் முஸ்தீபு
பாலஸ்தீனத்தில் ஓயாச்சண்டை
காசா முற்றுகை
இஸ்ரேலுக்கு வம்பே தொழிலாகி நிற்கிறது
ரஷ்யா புடினும் தொடங்கிய
போரை நிறுத்துவதாயில்லை
யார் அழிந்தால்
எனக்கென்ன வென்று
சாராயம் விற்கும்
அரசு போலே
அமெரிக்க ஜோபைடன்.

 

 

 

15.நாம்தான்

காசு சற்றுக் கூடுதலாகக்
கொடுத்தால்
வரிசையில் நிற்காமல்
சாமிகிட்டே
சட்டென்று போய் நிற்கலாம்
சந்நிதி அய்யருக்கு
கொஞ்சம் சில்லறை
கொடு
பெரியமாலையாய்
கழுத்தில் விழும்
பிரசாதம் கையில் வரும்
சாமி முன்னே
கூடுதலாய் நின்று தரிசிக்க வாய்க்கும்
இதில் மாற்றம் வரவேண்டுமென
விருப்பம் ஏதும் நமக்குண்டா?
ஒன்று பிள்ளையாரை உடைப்போம் இல்லை
பிள்ளையார்க் கரைப்பு  ஊர்வலத்தில்
மேளம் கொட்டிக்குதிப்போம்.

 

 


 

.

 

16. வாழ்க்கை

கல்விக்கூடங்கள்
சான்றோர்களை உருவாக்கவில்லை
அறிவாளிகளை உருவாக்கி அனுப்பி வைக்கிறது
அறிவின் பயனோ
என்ன சம்பாத்யம் உனக்கு
என்ன சொத்து உனக்கு
என்பதாய் முடிந்து போகிறது
நிறைய காசுக்கு நிறைய அறிவு
நிறைய அறிவுக்கு நிறைய காசு.
தங்க  மெடல் வாங்கியவர்களும்
காலம் முடிவுற்றால்
மயிர் வெளுத்து
செத்துப்போகிறார்கள்
அவ்வளவே.

17. வினாக்கள்

வில்லை எடு நாண் பூட்டு
அர்ச்சுனா என்ன தயக்கம்
சொன்ன கண்ணன்
ஒட்டு மொத்தச் சமுதாய நலனுக்காய்
ஏதும் சொல்லவில்லை.
பூபாரம் குறைப்பதுவா நோக்கம்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக்காட்டு
சொன்னார் சிலுவை யேசு
பாலஸ்தீனர்கள் ஆண்டுக்கணக்காய்
கன்னத்தில் அறை மட்டுமே
வாங்கி வாங்கி நிற்கிறார்கள் இன்னும்

அவன் விரும்ப அது உனக்கு
அவன் மறுக்க எவன்தான்
அளிப்பான்
என்கிறது இஸ்லாம்

அன்றாடம் ஆப்கானிஸ்தானில்
அரங்கேறும் அனைத்து அத்துமீறலுக்கும்
அவலத்துக்கும்
தீர்வு
யார் சொல்வது

விடை தெரியா வினாக்கள்
ஏராளம் வரலாற்றில்.

18. தெளிவு

கையடக்கமாய் லேப்டாப்பும்
சொகுசு அலைபேசியும்
ஆட்சிக்கு வந்த பிறகு
மனித உறவுகள்
கேலிக்குள்ளாயின

கையில் காசும்
உடலில் வலுவும்
குறையாத வரை
மனிதர்க்கு எதுவுமே பிடிபட
மறுக்கிறது

அடுத்தவர் ஆதரவோடு
மட்டுமே வாழ்க்கை
என்கிறபோது
விஷயங்கள் தெளிவாகும்
ஆயின் துரும்பையும்
கிள்ளத்தான் வாய்க்காது

 

 

19. மானுடப் பிறப்பு

நாம் நினைப்பதுவே
அடுத்தவர் நினைக்கவேண்டும்
என்றெண்ணுவது போதாமை

நாம் செய்வதுவே அடுத்தவன்
செய்யவேண்டும் என்றெண்ணுவது பேதமை

நாம் நினைப்பதுவும் செய்வதுவும்
இன்னொருவனுக்கு மகிழ்ச்சி தருமானால்
அதுவே உரைகல்
நம் மானுடப்பிறப்புக்கு.

 

20.வந்தே மாதரம்

எத்தனைக் கீழ்மை
என் தாய் நாட்டிலே
உயிர்காக்கும் மருத்துவரைக்கற்பழித்து
சீரழித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்
மமதாவும் உண்டு
மாகாளியும் உண்டு
அதே வங்கத்தில்தான்.
இந்திய விடுதலையின்
மூச்சுக்காற்று வந்தேமாதரம்
வழங்கிய பங்கிம் சந்திரர்
வாழ்ந்த மண்
ராமகிருஷ்ண விவேகாநந்தரும்
தாகூரும் நேதாஜியும்
நிவேதிதாவும் சாரதாதேவியும்
வழிகாட்டிய தேசம் இது
உயிர்காக்கும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்
பெண் மருத்துவருக்கு அரங்கேறிய அவலத்துக்கு
நாம் வதியும் பூவுலகை
எரித்தும் நியாயம் கேட்கலாம்
புறப்படட்டும் ஓர் புதுமைப்பெண்.

 

 

21.தேசிய மாணவர் படை

நடந்தே முடிந்தது கிருஷ்ணகிரியில்
தேசிய மாணவர்ப் படை
முகாம் என்னும் போலி நிகழ்வில்
இளம் பிஞ்சுகள் எத்தனையோ பேரை
சீரழித்து முடித்திருக்கிறார்கள் .
நாமறிவோம் என் சி சி
இராணுவத்திற்கு இணையானது.
கருகிப்போனதுவே
கட்டுப்பாடும் ஒழுக்கமும்
என்ன விளக்கம் கொடுத்தால் என்ன
ஒவ்வொரு மாணவிக்கும்
நிகழ்ந்த சோகத்திற்கு
இத்தேசமே மண்டியிட்டு மடியட்டும்
தனியொரு மனிதனுக்குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் சொன்ன பாரதியே
ஏதுமறியாப் பிஞ்சுப் பெண்களை பொசுக்கிச் சுகம் கண்ட
வக்கிரங்களை என்ன செய்யலாம் சொல்.

 

22. மழைக்காலம்  1

முடிச்சூர்சமீபம்
அடையாற்றங்கரையில்
வீடு கட்டிக் குடியிருப்பதால்
அக்டோபர் மாதம் தொடங்கி
புலம்புவதே வாடிக்கை
மழை என்று வந்துவிட்டால்
அடையாற்றில் தண்ணீர்
எவ்வளவு போகிறது என்பதைப்
பார்ப்பதுதான் முதல் திருப்பணி
ஆறு நிரம்பிக் கரை வழிய ஆரம்பித்தால்
தரைதளவாசிகள் மூட்டைக்கட்டிக்கொண்டு
புறப்படத் தயாராகிறார்கள்
வீதிக்குத் தண்ணீர் வரும்
வாயில் தாண்டி வரும்
வீட்டுக்கள் நுழையும்
பின் எல்லாம் நாஸ்திதான்
இங்கிங்கெல்லாம் வெள்ளம் வரும்
கட்டாதே வீடு
சொல்லியிருக்கலாம்
சென்னையில்  பாதி காணாமல் போயிருக்கும்.

23. மழைக்காலம்  2

வடகிழக்குப் பருவமழை
ஆரம்பிக்கின்ற அன்றே
ஏகப்பட்ட கெடுபிடி
வருகுது சென்னையில்
பேய்மழை
ஊரெல்லாம் இதேப் பேச்சு
ரெட் அலர்ட்சொன்ன
நாளன்று பூமி மீது
சொட்டு மழை விழவில்லை
சூரியன் சுட்டெரித்தது
பட்டாணி வேர்க்கடலை
முட்டைப்பொரி ரொட்டி
காய்கறி கனிகள்
விலை ஏறின விஷமாய்
மெழுகுவர்த்தி ரூபாய் 35
கடைக்காரன் சொன்னதே விலை
ரெட் அலர்ட் என்றால்
மழை பெய்ய வேண்டுமென்று கட்டாயமில்லை
எச்சரிக்கை மட்டுமே தெரிந்து கொள்
வியாக்கியானம் விளம்பினார்கள்
தெரிந்து கொள்ளலாம் நிறையவே
வயதுதான் போதாது.

24. மழைக்காலம் 3

வள்ளுவர் கோட்டம் அருகே லேக் வ்யூ
மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்
அருகே லேக் வ்யூ
லேக்குகள்தான் அம்பேல் ஆகிவிட்டன
ஏரிக்கு நடுவே வீடு கட்டிக்கொண்டு
லபோ திபோ என்கிறோம்
வீடு கட்டிக் குடியிருக்க
இந்த இடங்களில் அனுமதியில்லை
என்று ஒரே ஒரு போர்டு
சென்னை முழுதும்
தேடினாலும்
எங்கேயும் காணோம்
கடல் உயரமாயும்
சென்னப் பள்ளமாயும்
எனக்குத்தோன்றும்
சிலர் அப்படித்தான் என்கிறார்கள்
தப்பு தப்பு என்கிறார்கள் பலர்
சென்னையே இல்லாது போகும் கடல் விழுங்கி
என்பாரும் இல்லாமலில்லை
யார் யாருக்குப்
பிராப்தம் என்னவோ.

25. உலகம்

இசுலாமிய தலைவரைக்
கொன்று விட்டதாய்
இசுரேலிய வீதிகளில்
துள்ளிக்குதிக்கிறார்கள்
அவர் சாகவேயில்லை
மறுக்கிறது ஹமஸ்
காசாவில் தொடர்ந்து குண்டுமழை
ஆயிரமாயிரம் அப்பாவிகள்
மடிகிறார்கள் கட்டிடங்கள்
இடிபடுகின்றன
காசா பிடித்து வைத்திருக்கும்
இசுரேலியர்கள்
விடுபடும்வரை
ஓயாது போர்
கர்ஜிக்கிறார் நேதன்யாஹு
போரை நிறுத்த ஒரு ஆளில்லை
கொம்பு சீவிகள் ஏராளமாய்.

 

 

 

26 சென்னைப் புத்தகக் காட்சி

 

நந்தனம் பேருந்து நிறுத்தம் இறங்கினால்
அண்ணாசாலையைத் தாண்டத்தான் வேண்டும்
பதினைந்து நாட்களுக்கு
ஒரு டிராஃபிக் காவலரைப் போடாது நிர்வாகம்
புத்தகக் காட்சிக்குச் செல்லும்
நடைபாதையில்
பழைய புத்தகக் கடைகள்
அடைத்துக் கொண்டு.
தார்ச்சாலை நடைபாதை
இவையிடை கிடக்கும் உடைந்த கருங்கல் சில்லுகள்
காருக்கும் டூவீலருக்கும்
நடப்போருக்கும் ஓரேயொரு பாதை
ஒரு கிலோ மீட்டருக்கு நடந்தால் புத்தகக் காட்சியை எட்டலாம்
டிக்கட் கவுண்ட்டர்கள்
ஒன்றிரண்டு இயங்கி உதவும் உங்களுக்கு.
வாங்கிய டிக்கெட்டை நம்பேரெழுதி பாதிக்

கிழித்துப் பெட்டியில் போடவேண்டும்
அது சம்பிரதாயம்
எங்கும் தரை சமதளமாய் இருக்காது
பள்ளமும் மேடும் தட்டுப்படும்
கேபிள்கள் அடி செல்லும்
நீட்டுப் பெட்டிகள்
இடை இம்சிக்கும்.
கழிப்பறை நடந்துசெல்ல கதவைத் திறந்து மூட
வித்தை கற்றவர் களால் மட்டுமே முடியும்
உரைவீச்சும் பட்டிமன்றமும் வாயிலில் நடக்கும்
அரங்க இருக்கைகள் பாதிகாலியாய்
நல்ல காபிக்கும் நல்ல டிபனுக்கும் பிரார்த்தனை செய்தால் உண்டு
திருவள்ளுவர் சிலை அருகே செல்ஃபி எடுப்போர் கூட்டமாய் நிற்பர்.
அனைத்தையும் விடுங்கள்
நல்ல புத்தகங்கள் நிச்சயம் வாங்கலாம்
புத்தகக்காட்சியில்
ஐயமே இல்லை.

 

27 காலம் தள்ளுதல்

 

மாநகரை ச்சுற்றித்தான்
வருகிறான் போகிறான்
வந்து வந்து போகிறான்
பூஞ்சையானது கண்ணும் காதும்
பேசி பேசிச் சிரிக்கிறான்
உடம்போ சுகமில்லை
வந்தவளும் முடமானாள்
வாய்த்ததுவும் பொய்த்துப்போனது
கூடிப் போனது வயது
கேட்டுக்கொண்டா கூடுமது
சட்டையே செய்யாது
கழிகிறது காலம்
அது ஒன்றே எவரையும்.

28   தோற்றம்

காசும் பணமும்
பொருட்டா எனக்கு
நீட்டு நீட்டாய்ப் பேசலாம்
தோற்றம் மட்டுமே அது

காமம் இற்றுக்கொண்ட தாய்
கர்ஜனைகள் செய்யலாம்
தோற்றம் மட்டுமே அது

கோபமே வாராது எனக்கு
சத்தியம் செய்யலாம் அடித்து
தோற்றம் மட்டுமே அது

என்னைப் புகழ்தல்
எனக்குப் பிடிக்காது எப்போதும்
வீம்புக்குப் பேசலாம்
தோற்றம் மட்டுமே அது

பொறாமையா அதெல்லாம்
நான் படுவதேயில்லை
தோற்றம் மட்டுமே அது.

 

 

 

29  எப்படி

வாழும் புவியில்
ஓர் உயிரினம்
இன்னொரு உயிரினத்திற்கு உணவு

தாவரம் விலங்கோ
யாதும் உயிர்தானே
ஆகக்கொல்.
கொன்றால் மட்டுமே
தொடரும் வாழ்க்கை
கொலைகளம்தான்
இப்பூலகம்
அய்யமேஇல்லை.
அன்பும் அருளும்
கருணையும் கடவுளின்
பண்பாய்க் கொள்வதெப்படி.

30 .நாடும் நடப்பும்

நாடு விடுதலை யடைந்து
எழுபத்தேழு ஆண்டுகள்
உருண்டோடின
மக்களாட்சி நடக்கிறதாம் இங்கு
மதமும் சாதியும் இனமும்
இணைந்தும் பிரிந்தும்
தேர்தலைச் சந்திக்கின்றன
பணப்பட்டுவாடா அது
அதன் வேலை செய்கிறது
அம்பானியும் அதானியும் இன்னும்
அந்த வகையறாக்களும்
ஓகோ வென்று கொழிக்கிறார்கள்
நீதிமன்றங்கள் சப்பைத்தீர்ப்பு வழங்குகின்றன
அப்படியும் இப்படியும்.
அரசுத்துறை நிறுவனங்களைத்
திட்டம் போட்டு அழிக்கும்
சதிச்செயலை
ஆட்சிபுரிந்த எல்லோரும்
செய்தார்கள் செய்கிறார்கள்
தனியார் வங்கிகள் தலைதூக்கி ஆள்கின்றன
அரசு வங்கிகள் அன்றாடம் நொண்டி
அடிக்கின்றன
அரசு மருத்துவமனைகள்
பேர் கெட்டுப்போகின்றன
தனியார்
மருத்துவச் சதிவணிகம்
கொடிகட்டிப்பறக்கிறது
எங்கள் தலைவர்கள்
ஆண்டுக்கு இருமுறை
தேசியக்கொடி ஏற்றி
டில்லிக்கு தலைநகரில்
பாப்கான் சாப்பிடுகிறார்கள்.

 


31    மழை

 

வானிலிருந்து கொட்டுகிறது மழை

பூமியில் உயிர்கள்

பிழைக்க வேண்டி

இயற்கையின் அருள் அது

மழையின்றேல்

நீயுமில்லை நானுமில்லை

எதுவுமில்லை

மாதம் மும்மாரி பெய்திட்ட

வாழ்க்கை

முன்னோர்களது

இப்போதோ அச்சத்தை

தருகிறதே மழை

தவறுகள் எங்கிருந்தோ.

 

 

32   மூஞ்ச பாத்தா தெரியலையா.

 

 

கலிபோர்னியாவில் என் பையன்

அவன் சென்னை வீட்டை

நான் தான்

வாடகைக்கு விட்டேன்

மூன்று மாதமாய்

வாடகை வரவில்லை

நான்காவது மாதம்

வீட்டைக்காலி செய்

என்றேன்

என்னால் முடியாது என்றான்

குடும்பத்தில் ரொம்பக்

கஷ்டமென்றான்

என்ன செய்வேன் நான் என்றான்

பையனிடம் விஷயம்

சொன்னேன்

மூஞ்சை பாத்தா தெரியலையா

வாடகை

தருவான் மாட்டானென்று

என்னையே திருப்பிக் கேட்டான்

வீட்டுக்கு ஈ எம் ஐ கட்டும் அவன்

’அதெல்லாம் தெரிந்திருந்தால்

வேலையில் இல்லாமல்

இருப்பதாய்ப்

பொய் சொன்ன பிரகஸ்பதிக்குத்

தங்கையைக் கொடுத்திருப்பேனா

நான் எனக்குள் மட்டும்

சொல்லிக்கொண்டேன்.

 


33.  ஒன்றைத்தின்று ஒன்று

 

ஓர் உயிரைக்கொன்று மட்டுமே

அடுத்து ஒரு உயிரின் வாழ்க்கை

இயற்கையின் படைப்பு

முழுவதுமாய் இப்படி

எல்லா ஆடுகளும் கோழிகளும்

கொல்லப்படவே பிறப்பெடுக்கின்றன

எல்லா மீன்களும் தின்னப்படவே

தோன்றி முடிகின்றன

அனைத்துத் தாவரங்களும் தம்மைப்

பிற உயிரினங்களுக்கு

உணவாக்கி மட்டுமே

மறைகின்றன

அன்பே சிவம் என்பதில்

நம்பிக்கையுள்ளவர்கள்

எப்படித் தருவார்கள் விளக்கம்

பிடிபடாப் பொருளாகவே

என்றும் அந்த மறை பொருள்.

 

34.  ஆளுநரின் மயக்கம்

 

பள்ளிக்கூடத்தில் ஜனகண மன

பாடினால்

புத்தகப்பையை  இறுக்கிப்

பிடித்துக்கொள்வோம்

ஜெய ஜெய  ஜெயஹே என்போம்

ஓட்டம் பிடித்து விடுவோம் வீட்டுக்கு

ஆக நிகழ்ச்சி முடியும் போது மட்டுமே

தேசிய கீதம் பாடிப்பழகி இருக்கிறது

எல்லோருக்கும்

தமிழ்த்தாய் வாழ்த்து

நிகழ்வின் தொடக்கம்

இங்கே மரபு

தமிழோ உலக மொழிக்கெல்லாம் உச்சம்

பாரதி சொன்னதுதான்

ஒப்புக்கொள்ளத்தான் பெருமனம் வேண்டும்

எந்த நிலத்தில் என்ன மரபோ

அதனை ஏற்பதில் கூட

என்னவாம் தயக்கம்.

 

35.  சென்னையில் வாங்காதீர் வீடு

 

பாதி மக்கள்

மழைக்காலம் வந்தால்

அல்லோல கல்லோலப் படுகிறார்கள்

எந்த ஊரில் எந்தத்தெருவில்

எவ்வளவு தண்ணீர் வரும்

யாருக்கும் தெரியாது

ஒவ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு விதமாய்

சென்னை மாநகரமே

கடல் மட்டத்திற்குக்கீழிருப்பதாய்

குசு குசு ச் சொல்கிறார்கள்

பல இடங்களில் தரைத்தளம்

கார் பார்க்கிங் மட்டுமே

சதுப்பு நிலம் வேண்டாம்

தொல் பொருள் ஆய்வுத்துறை இடம் கூடாது

அரசு இனாமாய்க்கொடுத்த இடம் ஜாக்கிரதை

ரயில் நான்காவது வழித்தடம் வருகிறது

மெட்ரோ கொணர்  ஜேசிபிக்கு ராசியான இடம்

2015 ல் வெள்ளம் கண்டது

அடையாறு கொசஸ்தலை  கூவம்

பக்கிங் ஹாம் விசுவ ரூபமாகி

பாதிக்கும் இடங்கள்

திரும்பும் இடமெல்லாம்

ஏரி ஜல தரிசினம்

செம்பரம் பாக்கம்

 புழல் பேரூர்

ரெட்டேரி மணிமங்கலம்

பொத்தேரி முடிச்சூர்

இரும்புலியூர்  சிட்ல பாக்கம்

பள்ளிக்கரணை பல்லாவரம்

மடிப்பாக்கம்  மைலாப்பூர் ஆதனூர் என 

ஏரிகள்  வரிசை வரிசையாய்

எந்த ஏரி எப்போது நிறையும்

எப்போது உடையும்

யாருக்கும் தெரியாது.

மழை அளவோடு பேய்ந்தால்

காலம் தள்ளிவிடலாம்

மழை எல்லை தாண்டினால்

சிரிப்பாய் சிரித்துப்போகும்

சென்னை வாழ்க்கை

 

36..  குழந்தையின் அழுகை

 

ஒரு வயது நிரம்பா

பேரக்குழந்தை

ஓயாது அழுகிறது

தாயும் முனைகிறாள்

தந்தையும் முனைகிறாள்

அழுகை நின்றால்தானே

தாத்தா நானும் பாட்டி அவளும்

எத்தனை சமாதானம் செய்தும்

அழுகை நின்றபாடில்லை

பால் குடுத்தாயிற்று

கிரைப் வாட்டர் ஊற்றியும் ஆனது

எப்படிச் சமாதானம் செய்வது

நிறை கூடை பொம்மைகள் வைத்து

ஆட்டம் காட்டியும்

அழுகை நின்றால்தானே

என்னதான் செய்வது

என்று விழிக்கும்போது

போர்ட்டிக்கோவில் பொத்தென்று

குதித்தது ஒரு பூனை

கருப்பும் வெள்ளையுமாய்

குழந்தை பார்த்தது

அழுகை நின்றது

பொக்கை வாயில் வந்தது புன்னகை.

 

37.  கடல் கடந்து

 

மதம் குறுக்கே நின்றது

காந்தியைக் கடல்

கடந்து போகக்கூடாது

தாய் புத்லிபாய் சொன்னார்

மீறிப்போன காந்தியோ

மகாதமா ஆனார்

இந்தியக்கடவுள்கள்

உலகெங்கும் பரவி

கோவில்கள் ஆங்காங்கு

சிற்பக்கலைஞர்கள்

தச்சாரிகள்

பட்டாச்சாரி குருக்களென்று

மொத்தமாய்க் கடல் கடந்து

எல்லாம் மாறும்

என்பதே மாறாதது

சொல்கிறது மார்க்சியம்.

 

 

 

38.  கவியுளம் அறி.

 

மெல்லத்தமிழ் இனிச்சாகும்

என்று பாரதி  உரைத்ததாய்

எத்தனை மேடைகளில்

முழங்கக்கேட்டிருக்கிறேன்

அரைகுறை வாசிப்பா

வேண்டுமென்றே பேசுவதா

பாரதி இவனை எப்படிச்

சொன்னால் என்ன என்று

இருக்கலாமோ

மெல்லத்தமிழ் இனிச்சாகுமென்று

ஒரு பேதை உரைத்ததாய்ச்சொல்லி

அந்த வசை என் மொழிக்கு வரல் ஆமோவெனத்

தமிழை உயர்த்துகிறார் பாரதி

கவியுளம் காணாக்கீழ்மையை

எப்படிப்பொறுப்பது.

 

39. நாம் யார்?

 

உலகமே ஒரு கொலைக்களம்

ஒன்றைத்தின்று ஒன்று வாழும்

என்ன கணக்கிதுவோ

யாருடைய சூத்திரமோ

புல்லைத்தின்னும் ஆடு

ஆட்டைத்தின்னும் புலி

புழுவைத்தின்னும் எறும்பு

எறும்பைத்தின்னும் பல்லி

பல்லியைத்தின்னும் பூனை

பூனையைத்தின்னும் நரி

நரியைத்தின்னும் குறவன்

மனித மாமிசம் உண்போரும் உண்டே

விடைதெரியாக் காலக்கணக்குகளிவை

காலத்தின் சிறு மைப்புள்ளியாய் நாம்

விடைதான்  தெரிய வருமோ

வினாவாகி நிற்போமா.

 

 

40.  மேதினம்

 

மேதினம் வரப்போகிறது

தொழிலாளிக்குத் தினம் எட்டுமணி நேர உழைப்பும்

வாரம் ஒரு நாள் ஓய்வும்

வாங்கித் தந்த

சிக்காக்கோ போராட்டம்

அர்த்தமற்றுப்போனது

எந்த உத்தரவாதமுமில்லா

நொண்டி அடிக்கும்

அலுவலகப்பணி இன்று

ஓய்வூதியம் விடைபெற்றுக்கொண்ட

பெருஞ்சோகம்

வயிற்றுப்பசிக்கு ஒரு வேலை

அதுவுமே இல்லாது போய்விடுமோ

பெருங்கவலையோடு

வாழ்ந்து முடிக்கிறான் தொழிலாளி.

உலகமயம் தனியார்மயம் தாராளமயம்

தொழிலாளியின் தன்மானத்தை

விழுங்கியே விட்டது.

 

41.  மனக்கோலம்

 

மனக்கிடங்கில்

எத்தனையோ விஷயங்கள்

அத்தனையும் அடுத்தவரிடம் சொல்லமுடியாது

எழுத்தில் வடித்துப்

படைப்பாக்கியும்

சாத்தியப்படாது

அவரவர்க்குத்தெரியும் அவை எதுவென

அவரவர்களோடு மட்டுமே அவை மரித்துப்போகும்

ஆகப்பெரிய மகானாய் இருக்கலாம்

இருந்தாலென்ன

மனதில் கிடப்பதையும்

எண்ணத்தில் தோன்றுவதையும்

முற்றாய்ப்பகிர்தல் சாத்தியமேயில்லை.

 

42  பிழைப்பு

 

காற்றுக்கருப்பு

இடுகாட்டு மண்டையோடு

தாயத்து திருநீறு

முடிகயறு  வாய்க்கட்டு  நரபலி

பில்லி சூனியம் என அடுக்கடுக்காய்

பொய்சொல்லி

எத்தனை மந்திரவாதிகள்

ஏமாற்றிப்பிழைக்கிறார்கள்

அறிவியல் வளர்ந்து

அவை சற்று முடங்கிப்போய்

காட்சியாகிறது

எந்த மந்திரவாதியாவது

நாடுகளியே நிகழும்

யுத்த களத்தில்

மந்திரம் ஓதி

ஏவுகணையை

தடுத்து நிறுத்தினால் என்ன.

 

 

 

43 பதிப்புலகம்

 

பதிப்பகம் ஒன்றில்

புத்தகம் ஒன்று போட

கட்டுரைகள் கொடுத்து

வருடம் இரண்டாகப்போகிறது

அதோ இதோ என்கிறார்

எப்போது கேட்டாலும்

தயாரிப்பில் இருக்கிறது

எத்தனை முறை சொல்லுவார்

இதே பதிலைத் தெரியவில்லை

‘இயலாது வேறு எங்கேனும் முயலுங்கள்’

சொல்லிவிடுங்களேன்

எனக்கொன்றும் வருத்தமில்லை

எதற்கு ஒரு அளவு வேண்டாமா

சொல்லிவிடலாம் தொண்டை வரை

வந்துவிடும் யோசனை

அதற்குமேல் எழும்புவதில்லை

அதுதான் நான்.

 

 

 

 

 

44. எதுமெய்?

 

என்ன சொல்கிறோம்

என்பதே தெரியாமல்

இறைமுன் அடுக்கிச் சொல்லும்

மந்திரங்கள் எதற்கு.

எந்த மதமாக இருக்கட்டும்

புரியாத மொழியில்

இறைவழிபாடு

அர்த்தமற்றது

வடமொழியோ அரபியோ

இலத்தீனோ

எதுவாக இருந்தாலும்

அது மெய்யான இறைவழிபாட்டைக்

கேலி பேசுவதே ஆகும்

இன்ன மொழியின் ஒலி மட்டுமே

இறைவனுக்குப்பிடிக்கும்

என்பது எத்தனைப்பேதமை

கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர் மெய்தானே.

 

 

 

 

45.  நடப்பு

 

யாரும் உருப்படியாய்

புத்தகம் எடுத்துப் படிப்பதில்லை

நல்லவை சொல்லக்கேட்பதுமில்லை

எல்லோரும்  கையில் ஒரு மொபைலோடு

எதனையோ எந்நேரமும்

வேடிக்கை பார்த்துக்கொண்டு

நக்கல் ரகளை

விரசம் வன்மம்

வக்கிரம் சவடால்          

அழுகை அவலம்

மாறி மாறி பீத்தல்களின் அணிவரிசை

நல்லது கற்றுக்கொள்ளக்

காட்சி பார்ப்பதில்லை யாரும்

அதிசயமாய் அது காட்சியானாலும்

பார்க்க யாரும் தயாரில்லை

மண்டை முழுவதும்

ஓசைமிகு சீரியல் வம்புகள்

மனித உறவுகள்

முடமாகி விசும்புகின்றன.

 

 

 

46.   மொழி

 

தாய்மொழி வேறு

வாழ்மொழி வேறு

மாநிலங்கள் மொழி வழி

பிரிந்தன மெய்தான்

இந்தி பேசும் மாநிலங்கள்

ஒன்றாகவா உள்ளன இன்று

தெலுங்கு பேசுவோர்

ஆந்திரம் தெலங்கானாவாய்ப் பிரிந்தனர்

புத்ச்சேரியும் காரைக்காலும்

தமிழ்நாட்டோடு

இணைய மறுக்கின்றன

அருணாசலில் நாகாலாந்தில்

ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி

தாயும் பிள்ளையுமானாலும்

வாயும் வயிறும் வேறு

என்பதே யதார்த்தம்.

 

47.  நீதி

 

நீதி சும்மா கிடைக்காது

காசு வேண்டும்

கண்ணகி மதுரையில் அன்று காசு கொடுத்தா

நீதி கேட்டாள்

கீழமை நீதிமன்றம்  உன்னைக்

குற்றவாளி எனும்

மேலமை நீதி மன்றம்

நிரபராதி நீ  போ என்னும்

வாதாடுகின்ற வக்கீலைப்பொறுத்து

மாறும் தீர்ப்பு

பொதுவாய் ஒரு நியாயம் இல்லை.

ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில்

மூவர் சொல்வதே தீர்ப்பாகும்

ஆக மற்று இருவர் ஒன்றுமே தெரியாதவர்கள்

சட்டம் ஒரு இருட்டறை வக்கீலின் வாதம் ஒரு விளைக்கு

உன் வங்கி இருப்பே

திறமையான வக்கீலைத்தீர்மானிக்கும்.

நியாயங்கள் வேறு

தர்மங்கள் வேறுதான்.

 

 

 

48. எல்லோரும் ஓர்விலை

 

எல்லோரும் ஓர் விலை

எல்லோரும் ஓர்  இனம்

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

அந்தப் பாரதிப்புலவன் பாவம்

விடுதலை அடைந்து  போயின

எழுபத்தெட்டு ஆண்டுகள்

கிராமப் பஞ்சாயத்து உறுப்பினராய் ஆவதற்கும்

வேண்டும் பல லட்சம் ரூபாய்

கோடிகள் இருந்தால் மட்டுமே

நாடாளுமன்றத்துக்கு சட்ட மன்றத்துக்கு நின்று பார்க்கலாம்

சாதி வோட்டு வலு வேண்டும்

பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும்

கைவர வேண்டும்

மக்களுக்காக மக்களால் மக்களுடைய

எந்த நாடாக இருந்தாலென்ன

விளக்கம் இதுவேஆய்.

 

49. காலம் மாறிப்போச்சு

 

காமராஜும் கக்கனும்

வாழ்ந்து காட்டிய அரசியல் வாழ்க்கைக்கு

இணையாய்

வேறு ஒரு தலைவர்

வாழ்க்கையைத்தான் கூறிடத்தான் முடியுமா

தமிழ் நாட்டில்.

பெங்களூர் நீதிமன்றத்திந்தீர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள்

தமிழக அரசிடம் ஒப்படைப்பு

ஆறு டிரங்க் பெட்டிகளில்

தங்க வைர நகைகள்

ஆயிரத்து ஐநூற்று இருபத்தாறு ஏக்கர் நிலங்கள்

ஆவணங்கள் ஒப்படைப்பு

வட்டமேசை மாநாட்டில்

மகாத்மா காந்தி

மேல் சட்டை இல்லாது வேட்டித்துண்டோடு

உலகத்தையே ஆண்ட இங்கிலாந்து அரசர் அரசியை

எதிர்கொண்ட தேசம் இது.

                                                                  

50.  கல்வி

விலை போட்டு வாங்கவே

முடியும் கல்வி இன்று

பள்ளிகளில் எத்தனை ரகம்

கல்லூரிகளில் எத்தனை ரகம்

சமூகத்தில் எத்தனை பிரிவோ

அத்தனைப் பிரிவுகள்

கல்விக்கூடங்களில்

நிரந்தர வேலை யாருக்கும் கிடையாது

அலைந்துகொண்டே இருக்கிறார்கள்

வேலை வேலை என்று

ஓய்வும் கிடையாது

ஓய்வூதியமும் கிடையாது.

 

51.  வானம்

 

வானம் எத்தனை பெரியது

அளவிட்டுக்கூறமுடியுமா மனிதனால்

எத்தனை விண்மீன்கள்  வானில்

கணக்குப்போட்டுச்சொல்ல

யாருமுண்டோ

விண்மீன்களை எண்ண எண்ன

அவை கூடிக்கொண்டே போகின்றன

மனிதன் சிறுத்துப்போகிறான்

வானத்தின் கீழே என்றும்.

 

52. காற்று

கண்ணுக்குத்தெரியாத ஒன்று

பஞ்ச பூதங்களில்

பிரதானமானது

பூமியோடு கவசமாய்ச்

சுற்றி வருகிறது  நித்தம் நித்தம்

மாசுபடுத்திக்கொண்டே இருக்கிறோம் அதை

சிந்தனை ஏதும் இல்லாமலே

இப்படியே இது தொடர்ந்தால்

உயிர்வளியை கையோடு

எடுத்துக்கொண்டு

மனிதன் நடமாடும் நாள்

வந்து கொண்டேயிருக்கிறது

கையில் தண்ணீர் பாட்டிலோடு

அலைகிறோம் இன்று

ஐம்பதாண்டுகள் முன்

யாரேனும் சொல்லியிருந்தால்

நம்பியிருப்போமா நாம்.

 

 

53.  ராமன் யாருடைய தெய்வம்

 

தெய்வம் என்ற ஒன்று

தன் மக்களை மட்டுமே

காக்குமென்று சொன்னால்

அது தெய்வமாக இருக்குமா

எந்த  மதமாக இருந்தாலென்ன

கடவுளின் குணங்கள் வேறுபடுமா

உலகத்தை ஒரே குடும்பமாய்ப்

பார்க்கச்சொன்னதுதான் இராமனின் இந்து மதம்

பகை வளர்த்துப்

பலன் பெறுவது

என்ன குணமோ

எந்த நாடோ எந்த இனமோ

அன்பை அடி வயிற்றிலிருந்து

போற்றத்தெரியாதவர்கள்

பூமிக்குச் சுமையாய்

மட்டுமே வரலாற்றில்.

 

 

 

54. கும்ப மேளா

 

கும்ப மேளாவில் நெரிசல்

கோடி கோடியாய் மக்கள் கூட்டம்

நூற்று நாற்பத்து நான்கு

ஆண்டுகட்கு ஒரு முறை

வரும் அதிசயப் பெருவிழா

உலக அளவில் இத்தனை

மக்கள் திரள்

எங்கும் கூடுவதேயில்லையாம்

கூட்ட நெரிசலில்

முப்பது பேருக்குமேல் பலி

எண்ண்ற்றோர் காயம்

தண்ணீர் தரமிழந்து

ஆயிரம் ஆண்டுகள்  முன்னரே

 சித்தர்கள் பாடினார்கள்

கங்க நீரில் சர்வ காலமும் வாழும்

மீனும் தவளையும் நண்டும்

நத்தையும் சொர்க்கம்

பெற்றிடுமா என்று

நீயே அது ஆகிறாய்

தத் த்வம் அசி  சொன்ன தேசம் அல்லவா இது.

.

 55.    கஷ்டம்

 

கோடி கோடியாய் வைத்திருப்போருக்கு

இன்னும் கொட்டி கொட்டித்தரும்

சதித்திட்டங்களை ஓயாமல்

தீட்டும் புத்திசாலிகளை

வோட்டுப்பெட்டிகள் தாமே கூட்டி வந்தன

கோபுரம் ஏற்றின.

அரசு நிறுவனங்களைக் கணக்குப்போட்டுத்

தரந்தாழ்த்தி

சொல்லி வைத்தாற்போல்

அதே நாலு பேருக்குத்

தாரை வார்க்கும் தறுதலைகள்

கண் முன்னே கம்பீரமாய் உலா வருகிறார்கள்

நிர்மாணப்பணிகள் எதுவாயிருந்தால் என்ன

மொத்தமாய்க் காண்ட்ராக்ட்

அதனதனில்  பாதி

பின் பக்கமாய்த் தனக்கே வந்து சேரும்

சூட்சுமம் தெரிந்தவர்கள்

தங்கச் செங்கோல் வைத்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சியோ எதிர்க்கட்சியோ

சாராயம் தயாரிப்பவர்கள்

மலை மலையாய்க் காசு பார்க்கிறார்கள்

வயிற்றுப்பசிக்கு சாராயப்புட்டி விற்கும்

டாஸ்மாக் ஊழியர்கள்

அரசு கஜானா நிரப்புகிறார்கள்

எம்மக்கள் எப்போதும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்தபடி

நல்ல புத்தி எல்லோருக்கும் தருவதில்

என்ன தயக்கம்

என்ன சுணக்கம்

இறைவா என்றேன்

‘என் கஷ்டம் எனக்கு

உன் கஷ்டம் உனக்கு.’

சொல்லி அக்கணமே

மறைந்து போனான் இறைவன்.

 

56. வரலாறு

 

அண்டைய நாடு பங்களாதேஷில்

ஷேக் முஜிபிர் ரஹ்மான்

உடைத்தெறிந்து போராட்டம்

வங்கத்தந்தையாய்ப் போற்றப்பட்டவர்

வரலாறு திருத்தி எழுதப்படுகிறது

இத்தோடு சரியா

சொல்வதிற்கில்லை

வேறு ஒரு நாள்

வேறு ஒரு வரலாறு சமைக்கப்படலாம்.

சமூகம்  யாரையும் எங்கும் நிறுத்தும்

என்று நிறுத்தும் அது

யாருக்குத்தெரியும்

புதிரின் விடை.

 

 

57. பருவ நிலைமாற்றம்

 

மாதமோ புரட்டாசி

கொளுத்துகிறது வெய்யில்

பருவ நிலை மாற்றம்

சந்துபொந்தெல்லாம்

ஓயாமல் பேசுகிறார்கள்

விடைகாணத்தான் யாருமில்லை

வெப்பம் அதிகம்

வெள்ளம் அதிகம்

பனிப்பொழிவு அதிகம்

மொத்தமாய் மடிவோம்

விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்

ஆட்சியாளர்க்கு

எல்லாமே வெற்றுப் புள்ளி விபரங்கள்தான்.

 

 

58. பேய் மழை

 

வடகிழக்குப்பருவமழை

திக்கு முக்காட வைக்கிறது மனிதனை

என்று எவ்வளவு

எங்கே பெய்யும் யாரறிவார்

எத்தனையோ கணக்குகள்

அத்தனையும் பொய்யாகும்

ஆண்டு முழுவதற்குமான மழை

கொட்டித்தீர்க்கிறது ஒரே நாளில்

வாழ்புவியில்

கரியமில வாயு கூடிப்போனது

கடல் நீர் வெப்பமடைகிறது

கணிக்க முடியாது எதையும்

ஆளை விடு என்கிறது அறிவியல்

புவியைச் சூடாக்குபவர்கள் அடுக்ககத்தில்

கொட்டமடிக்கிறார்கள்

ஆற்றோரத்து  அன்னாடு காய்ச்சிகள்

அவஸ்தையில் எப்போதும்.

 

 

 

59. கொடுமை   

           

வீடு தேடி வந்த

காமாந்தகனுக்கு

‘அய்யாவுக்கு எப்படி இருந்தா பிடிக்கும்

சைவமா வைணவமா’

வினாவைத்தாளாம் விலைமகள்

பட்டமளிப்புவிழா பல கண்ட பேராசிரியர்

இந்நிலத்துக்கு அமைச்சரும்கூட

கொடுத்திட்ட சைவ வைணவ விளக்கம்                   

உலகமே கேட்டுத்தானிருக்கிறது

வானாகி மண்ணாகி

பாடிய மணிவாசகரும்                                                                

சிற்றம் சிறுகாலே பாடிய

திருவில்லிப்புத்தூர் நங்கையும்

ஏன் பெரியபுராணம் தந்த சேக்கிழாரும்

திருபெரும்புதூர் ராமானுஜரும்

வெண்ணீரணிந்த வள்ளலாரும்

கல்லறையில்  இந்நேரம் புரண்டு புரண்டு படுத்திருப்பார்கள்

தெய்வத்தமிழ்தந்த தேவர் மண்

பெரிதாய் அலட்டிக்கொள்ளவுமில்லை

நெஞ்சு கனக்கிறது

காலம்தான் விடை தரணும்.

 

 

60. நாடாளுமன்றம்

 

ஓய்வூதியம்  உறுதி

கணிசமாய் மாத சம்பளம்

விமானப்பயணம் ஓசியாய்

விதம் விதமாய்க் கேண்டீன்

தங்கித் தூங்க குளிர் வசதி

தொலைபேசி வசதி எப்போதும்

அறிவு ஊற ஆகபெரிய நூலகம்

தெரிந்தது சொன்னேன் இன்னுமும்

இருக்கலாம் எத்தனையோ

டில்லித்தலைநகரில்

நாடாளுமன்ற இரு அவையிலும்

நடப்பது என்னவோ

குடுமிப்பிடி சண்டை

கூச்சல் கும்மாளம் எப்போதும்

அரசியல் சாசனம்

அற்புதமாய்

அதன் ஆசியோடு இவை அத்தனையும்.

 

 

 

 

 

 

61.  பணம்

 

பணம் பண்ணுவதெப்படி

அதுவேதான் வாழ்க்கை

பணம் செய்துவிடும் அத்தனையும்

பணத்தச்சேர்

பணத்தைச்சேர்த்தவர்கள்

பேசுமொழி வேறாக இருக்கிறது

ஆக அவர்கள் கடவுளும்

வேறாகத்தெரிகிறார்

எல்லோரும் ஒன்றென     

ஓயாமல் சொல்லிக்கொள்

புத்தகங்கள் ஆயிரமுண்டு

தூக்கம் வராதா நேரங்களை

எப்படித்தொலைப்பாய்

பாவம் நீ.

 

 

62. கூர்க்கா

 

கரும்பச்சைக்காக்கி உடுப்பு

மாதம் பிறந்தால்

கூர்க்கா ஒருவன் பித்துக்குளி சிவப்பிலே

வீட்டுக்கேட்டைத்தட்டிவிட்டு

;சாப் நமஸ்கார்’ என்கிறான்

பத்து ரூபாய் அவனுக்கு

பதினைந்து வருடமாய் அதுவே தான்

‘தன்யவாத்’ சொல்லிடுவான்

புன்னகைத்து விடை பெறுவான்

அவனும் கூட்டிக்கேட்கவில்லை

நானும் கூட்டிக்கொடுக்கவில்லை  கூலியை.

 

 

63.    கவியுளம்

 

கடலூரில் பெருமன்றக்

கவிதைமாலை விழா

ஞானக்கூத்தன் தலைமை

பெருமன்ற சிவப்பு மேடையில்

ஞானக்கூத்தனா

எல்லோருக்கும் ஆச்சரியம்

கவிதை படித்தனர்

கடலூர்க் கவிஞர்கள்

கவி ஜிஜெ வாசித்த

நண்டு தலைப்பிட்ட கவிதை

உழவர்குத்தோழனாம்  நண்டு

ஆகச்சிறப்பென்றார் ஞானக்கூத்தன்

இவர்க்கு நண்டு பித்ததெப்படி

மண்டபத்தில் பேசிக்கொண்டார்கள்

கவிதை வாசித்த கவிஞர்கள்

வடமொழி அறிய

தமிழ்ப்படைப்பு சிறக்கும்

கம்பனை பாரதியை விஞ்சிய

தமிழ்க்கவிதைதானுண்டோ

பேசி முடித்தார் ஞானக்கூத்தன்

கூட்டம் கலைந்து போனது

கவிஞர் உரைத்தது

கரைய மறுக்கிறது இன்னும்.