Sunday, March 8, 2026

நல்லகண்ணு மறைந்தார் அஞ்சலி

 


 

 

 

பொதுவுடமைப் பெரு-ஒளி

விடை பெற்றுக்கொண்டது.                                   நம் தோழர் நல்லகண்னு மறைந்தார்.

 

 தோன்றின் புகழொடு  தோன்றுக அஃதிலார்

தோன்றலிற் தோன்றாமை நன்று

என்கிற வள்ளுவர் வாக்கிற்கு மிகப்பொருத்தமாய்  நிறை வாழ்க்கை வாழ்ந்து முடித்த  ஒரு மாமனிதர் இன்று  (25/02/2026)  விடைபெற்றுக்கொண்டார். ஏழைப்பங்காளனாய்த் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த தகை சால் தமிழர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர்.

ஸ்ரீவைகுண்டத்தில் தோன்றி தனது வீரஞ்செறிந்த போராட்டாத்தால் தமிழகம் முழுதும் தடம் பதித்த தோழர். இந்தியப் பொதுவுடமை இயக்கத்தேரின் அச்சாணியாய் விளங்கிய செந்துண்டுக்காரர்.

தாய்நாட்டு விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுஞ்சிறையில் தனது பல்லாண்டு  இளமைக்காலத்தைக் கழித்தவர். தனது முறுக்கு மீசை வெள்ளையக் காவலர்களின் தீயால் சுடப்பட்டுச்  சாம்பலாகியது. மீசை இழந்த  மாவீரனாய் இத்தேசத்தை வலம் வந்தவர் நல்லகண்ணு.

விவசாயத்தொழிலாளர்களோடும் உழைக்கும் தொழிலாளர்களோடும்  வாழ்க்கை முழுதும் உழன்ற உத்தமர். எளிமையான தோற்றத்தை எப்போதும்  மேற்கொள்ளும் பெருமனதுக்காரர்.

பி எஸ் என் எல் தொழிலாளர்களின்  நலனிலும் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டிய பொதுவுடமையாளர். நமது கடலூர் தொலைத்தொடர்புப் பகுதியில் தனது தொண்டால் பொழுதளந்த உத்தமர் தோழர். டி. ரகுநாதன் அவர்களின் பணி ஓய்வுப்பெருவிழா தோழமைப்பெருவொளி. அரங்கில்   01.06.2002  அன்று  நடைபெற்றது.  ஈடு இணையற்ற அவ்விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்திய தோழமைக்கு இலக்கணம்  தோழர். நல்லகண்ணு.

சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் தோழர் . நல்லகண்ணு அவர்களுக்கு  எண்பது அகவை நிறைவு விழா நிகழ்விற்கு  கடலூர் தொலைத்தொடர்புப் பகுதியிலிருந்து பெருவாரியான  தோழர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினோம். சீர்மிகு செவ்வரங்கில்  தோழர்களால்   தனக்கு வழங்கப்பட்ட ரூபாய் ஒரு கோடி நிதியை இந்தியப் பொதுவுடமைக்கட்சிக்குக் காணிக்கையாக்கிய பொதுவுடமைக்காரர்.

தமிழகத்தின் தென்பகுதியில் நடைபெற்ற மதக்கலவரங்களை  அடக்கி அமைதிப்படுத்தி மக்களின் மத நல்லிணக்கத்திற்கு ஒயாது சிந்தித்து ஈடு இணையற்ற தியாகங்களுக்குச் சொந்தக்காரர் தோழர் நல்லகண்னு.

தாமிரபரணி ஆற்று மணல் செல்வம்  கொள்ளைபோய் அப்பகுதி வளம்  குன்றும் நிலையைத் தடுக்க போராட்டக் களம் கண்ட மக்கள் தலைவர் நல்லகண்ணு.

தனது நூற்றாண்டு விழாவின் போது பொதுவுடமைக் கட்சிக்கும் நூறாண்டு விழாப் பெரு நிகழ்வு. ஸ்ரீவைகுண்டத்துப் பிறந்த மண்ணின் அரசு மருத்துவ மனையைத் தரம் உயர்த்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து அதனைப்பெற்றுத்தந்த ஏழைப்பங்காளர் நல்லகண்ணு.

இந்தியப் புராண இதிகாசங்களை தமிழ் நிலத்து இலக்கியச்செழுமைகளை தன் உள்ளத்தில் ஊற்றாய்க்காண்பவர். இந்தியப் பொதுவுடமை இயக்கத்துப் பொக்கிஷம் ஜீவா  பாலதண்டாயுதம் ஆகியோர் மீது பெருமதிப்பு கொண்டவர் நல்லகண்ணு.

தேசபிதா மகாத்மாவை புரட்சிக்கவி சுப்ரமணிய பாரதியை நெஞ்சில் வைத்துப்போற்றிய உத்தமர் தோழமைக்கு இலக்கணமாய்  வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்றப் பொதுவுடமையாளர் நல்லகண்ணு.

அவரோடு நாமும் இயக்கத்தில் இருந்தோம் அது நமக்கு வாழ்வில் பெருமை.

 அவர் காட்டிய பாதையில் என்றும் வீறு கொண்டு நடப்போம் என்பது நாம் அவருக்குச் செய்யும்  மெய்யான அஞ்சலி.

தோழர். நல்லகண்ணு  பெரும்புகழ்  நீடு  நிலவட்டும்.

 

 


No comments:

Post a Comment