Thursday, August 6, 2026

விட்டல்ராவ் கட்டுரைகள்

 

விட்டல்ராவ்

 

1.        சிறுகதைகள்                           

 

விட்டல் ராவ்  சிறுகதைகள்  அத்தனையும் முத்துக்கள். வெகு சுவாரசியமானவை.     தோள் மீது கைபோட்டு வாசகனை வாஞ்சையாய்   அவை தன்னுள்ளே  அழைத்துச்செல்லும்  படைப்புகள்.   சிறுகதையைப் படித்து முடித்த பின் நம் சிந்தனையில்  அமர்ந்து கொள்ளும் ஈர்ப்பு கொண்டவை. எளிய மனிதர்களின்  கண்ணுக்கு முன்னே காட்சியாகும் அத்தனையும் விட்டல் ராவுக்கு  கதைக்கருக்களாய்ப் போட்டி போட்டுக்கொண்டு    நிற்கின்றன. எதனையும் வலிந்து செயற்கையாய்   வாசகன் முன் நிறுத்திச் சோதனைக்குட்படுத்தும் பாணி விட்டல் ராவுக்கு அந்நியமானது. விட்டல்ராவின்  சிறுகதையை வாசிப்பது  நம்  சொந்த சித்தப்பன் அத்தைமாரோடு    அரசமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற  சுகானுபவத்தையே பிரத்யட்சமாக்கும்.

விட்டல்ராவின் ஐந்து சிறுகதைத்தொகுதிகளின் உள்ளடக்கத்தை  சந்தியாபதிப்பகம் ‘விட்டல்ராவின் சிறுகதைகள்’ என்கிற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கியப்பணி ஆற்றியிருக்கிறது. வணிக மயமான   சமூகச் சூழலில்  சிறந்த மொழிபெயர்ப்பாளரும் படைப்பாளருமாகிய சந்தியா நடராஜனின் இலக்கிய சேவை வரவேற்புக்குரியது. இரண்டு தொகுதிகளிலும் சேர்த்துத் தேர்ந்த சிறுகதைகள் 116 வாசகனுக்குக் கிடைத்துவிடுகிறது. 

மரியாதைக்குரிய எழுத்தாளர் பாவண்ணன் ‘புதிர்த்தருணங்களின் காட்சி’ என்று தலைப்பிட்டு   அணிந்துரை ஒன்றை இதனில் வழங்கியுள்ளார்.

‘காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் காலில் காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன என்பது தேவதச்சனின் கவிதைவரி.  வண்ணத்துப்பூச்சிகளைப்போல இந்த வாழ்க்கையும் தன் கால்களில் மட்டுமின்றி தோள்களிலும் தலைகளிலும் புதிர்களைச் சுமந்துகொண்டு அலைகின்றன.காலம்தோரும் படைப்பாளர்கள் அப்புதிர்களைக்காட்சிப்படுத்தியபடி இருக்கிறார்கள்.ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக படைப்புலகில் இயங்கிவரும் மூத்த எழுத்தாளர் விட்டல்ராவின் சிறுகதைகளில் அத்தகு தருணங்கள் ஆழ்கடலில் முத்தென அமைந்திருக்கின்றன.’ என்று தொடங்குகிறார் பாவண்ணன். முத்துக்கள் சிலதை நாம் தரிசிப்போம்.

தனது முன்னுரையில் விட்டல்ராவ் இப்படிக் குறிப்பிடுகிறார்.

‘நான் ஏறத்தாழ 160 சிறுகதைகளை இருக்கும் பல்வேறு இதழ்களில் எழுதியிருக்கிறேன். அவற்றிலிருந்து நான் தேர்ந்தெடுத்தச் சிறுகதைகளே  என்னுடைய ஐந்து தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சொற்ப அளவு கதைகள் வணிக இதழ்களில் வெளியானவை. இத்தொகுப்பில் பல கதைகள் எனக்கு  அந்நியோன்மாய் உகந்த கதைகள். அவற்றில் நான் முக்கியமாய் நினைக்கும் கதைகளில் ‘தேடல் ‘ என்பது ஒன்று.’

ஆக அவரின் தேடல் என்னும் சிறுகதையிலிருந்து நாம் தொடங்குவோம்.  நா.பா வின் தீபம் இதழில் 1980ல் வெளிவந்த சிறுகதை.  தங்கம் வெள்ளி ஷராப் கடை முன்னால் ஓடும் சாக்கடையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் விட்டல் ராவ். கடைகளுக்கு  எல்லாம் விடுமுறை. சாக்கடை விடுமுறை எதுவுமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. தட்டாரத்தெரு  கன்னிகாபரமேஸ்வரி கோயில் அக்கிரகாரம் வியாசராயர் மடம் திருமணிமுத்தாறு  என சாக்கடை தாண்டித்தாண்டிதான் போய்க்கொண்டே இருக்கிறது.  சாக்கடை இறுதியில்  திருமணிமுத்தாற்றில் வீழ்ந்து  அதனையும்  தனது ஆளுகையின் கீழ் கொணர்ந்து விடுகிறது. ஆற்றையும் சாக்கடையாக மாற்றும் செய்தி நமக்குச் சொல்லப்படுகிறது. சாக்கடையை ஒட்டி  அமைந்திருக்கும் ஒன்றிரெண்டு பெட்டிக்கடைகளும்  தேனீர் விடுதியும்  விடுமுறை எதுவுமின்றி வாரமெல்லாம் திறந்தே கிடப்பவை. பெயருக்கு விடுமுறை என்று காட்டிவிட்டு ஷராப் கடைகள் வேலை செய்துகொண்டுதான் இருக்கின்றன . சாரமற்ற  சட்டங்களின் சாத்தியப்பாடு பற்றி வாசகனுக்கு  விஷயம் சொல்லப்படுகிறது.

சாக்கடையைச் சலித்துத் தம்   வயிற்றுப்பசிக்கு ஏதும்  கிடைத்து விடுமா என்கிற ஆசையில்  களம் இறங்கியிருக்கின்ற  ஒரு ஏழைக்குடும்பத்தை நம் கண் முன்னே காட்சியாக்குகிறார் விட்டல்ராவ். கைக்குழந்தைக்குப் பாலுட்டிவிட்டு அக்குழந்தையை  ’ கடையின் நிழலில் வெறுந்தரையை வாயால் நன்றாக  ஊதிவிட்டுப்படுக்கப் போட்டு விட்டுத் தன் தலையை மூர்க்கத்தனமாய்ச் சொரிந்தபடி  அவனருகில் வந்து அவள் நிற்கிறாள்.’ பையன் சாக்கடையில் இறங்கிக் கற்களைப்பொறுக்கிச் சேது பந்தனம் கட்டுகிறான்.’ சேது பந்தனம் என்கிற புராணப் பெரு வார்த்தையை  துர்நாற்றமெடுத்து ஓடும்  தெருச்சாக்கடைக்கு  அழைத்து வந்து விடுகிறார் விட்டல். தாய் மகன்  தந்தை மூவரும் சாக்கடை நீரைச் சலிக்கத்தொடங்கி விடுகின்றனர் சாக்கடை அள்ளிப்போடும் முனிசிபல் தொழிலாளர் வருகிறார். அவரை இந்தக்குடும்பம் சற்றுத்தள்ளிபோய்  வேலை செய்யுயுமாறு வேண்டிக்கொள்கிறது. அவரும் அப்படியே செய்கிறார். சாக்கடை சலித்தலில்  உடைந்த பிளாஸ்டிக் ஊதல், பவுடர் டப்பா மூடி,, பேனா நிப்  என்று வரிசையாய்க் கிடைக்கின்றன.  சாக்கடையில் இருக்கும் பையன் ‘ யப்பா .. யப்பா..’ ஆச்சரியப்பட்டு நிற்கிறான்.  பயன்படுத்தப்பட்டதோ என்னவோ  நிரோத் ஒன்று பையன் கையில் கிடைக்கிறது. தந்தை  சனியனைக் கீழே போடச்சொல்கிறான். அவன்  நடுங்கிப்போய் கீழே  போடுகிறான்.  அது அடித்துக்கொண்டு அவளிடம் வருகிறது.’தென்னாது லப்பரு?’ என்கிறாள்.

’அதான் போட்டுகினா புள்ள உண்டாவாது’ என்று பளிச்சென்று அவன்  சொல்கிறான். கண்ணைச்சிமிட்டுகிறான். ’ அதெல்லாம் நம்ப மாதிரி ஆளுங்களுக்கு இல்லே.ஆபிசுக்கு போறதுங்க , சம்பளம் வாங்கித் தின்றதுங்க  பார்க்கவேண்டிய சாஸ்திரம் சங்கதி…எனக்குமொனக்கும் எத்தினி பொறந்தா ஒனக்கென்ன கவலை, எனக்கென்ன கொற? தெல்லாத்தையும் சாக்கடையள்ளறதுக்கு உட்ர மாட்டனா’ அவன் பதில் சொல்கிறான். அடித்தட்டு மக்களின் மன நிலையைப் படம்பிடித்துக் காட்டி  வாசகனைச் சொக்க வைக்கிறார் விட்டல் ராவ். திடீரென்று அவர்களுடைய  சலித்தலில் பள பளக்கும் உலோகத்துகள் கிடைக்கிறது. அது தங்கம் இல்லை என  அவள் முகர்ந்து பார்த்துச் சொல்கிறாள். அவன் அதனை எடுத்துக்கொண்டு தட்டாரின் வீட்டுக்கு ஓடுகிறான். அங்கு அது தங்கம் இல்லை என்று முடிவு சொல்கிறார்கள். மீண்டும் சாக்கடை சலிப்புத் தொடர்கிறது. கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் கவாஸ்கர், கபில் என்று எண்ணிக்கொண்டவர்கள் பந்து பொறுக்கச் சாக்கடைப்பகுதிக்கு வருகிறார்கள். ஏதுமற்றவர்களால்  அவர்களை ஒன்றும் சொல்லமுடியாமல் போகிறது. உழைப்பு தொடர்கிறது. பலன் பூஜ்யம்தான்.  இல்லை என்கிற விஷயமே அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்கிறார் விட்டல். ஆயினும்  அவர்களின் உற்சாகம் மட்டும் குறைந்தபாடில்லை. சாக்கடையில் விழுந்த பந்தால் அவர்களின் முகமெல்லாம் சாக்கடை  துர் நீர். பந்து  வேகமாக வந்து அவர்களின் சட்டியை உடைத்துத் தூளாக்கிவிடுகிறது. கதையின் கடைசி வரி இப்படி வருகிறது.

‘வாளே, போவுலாம். இன்னொரு நா வந்து பாக்கலாம்’ என்கிறான் அவன். அவர்கள் அடுத்த நாளைக்கு வேறு தெருவின் சாக்கடையை நிச்சயம் செய்தபடி எழுந்து நடந்தார்கள்.  சிறுகதை முடிந்து போகிறது.

‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இன்னதென்ற அறிவுமிலார்’ பாரதி சொல்லிச்சென்றது எங்கிருந்தோ வந்து  வாசகனுக்குக் காதில் ஒலிக்கவே செய்கிறது.

பாவண்ணன், விட்டல் ராவ் எழுதிய கதைகளில்’ அவளுக்கும் அவனுக்கும் இடையே’ என்னும் சிறுகதையை  மிகவும் முக்கியமான ஒன்று என்கிறார்.  அங்கம்மா என்கிற இளம்பெண்  தன்குழந்தையோடு கிராமத்தில் வசித்து வருகிறார். அவளின் கணவன் ஆசாரியாய் அபுதாபியில் வேலை செய்கிறான். அவனிடமிருந்து பணம் தொடர்ந்து வருகிறது. ஆனால் கடிதம் எதுவும் வருவதில்லை. ஆசாரியின் மனைவி  அடுத்த தெருவில் படிப்பறிவு கொண்ட ஒருவனை வைத்துக் கடிதம் எழுதி எழுதிப்போடுகிறாள். போட்டுமென்ன  கணவனிடமிருந்து பதில் எதுவும் இல்லை. அவள் அவனோடு பேசிக் கடிதம் எழுதச்சொல்வதை ஊரார் கேலி பேசுகின்றனர். வக்கிரமாய் கணக்குப்போடுகின்றனர். மனித இயல்புதானே அது. பாலியல் சங்கேதம் விடை காணா ஒன்று. இருப்பின் என்ன? அங்கம்மா திரும்பவும் அவனிடம் செல்கிறாள். தன் கணவனுக்குக் கடிதம் எழுத வேண்டுகிறாள். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அவள் சொல்வதை எல்லாம் அவன் கடிதத்தில் எழுதிவிடுகிறான். தன் போக்கில் தனக்கு மனதில் தோன்றிய  சிலதையும் சேர்த்துக்  கடிதத்தில் எழுதி முடிக்கிறான். கடிதம் கணவனை அடைகிறது. கடிதம் கண்ட சில நாட்களிலேயே அங்கம்மாவின் கணவன் வெளிநாட்டிலிருந்து ஊர் வந்து சேர்கிறான்.  கணவன் கொண்டு வந்த வெளிநாட்டு சட்டையொன்றைப் பரிசாகக் கடிதம் எழுதிய அவனுக்கு அங்கம்மா கொண்டு  அன்போடு தருகிறாள். பாவண்ணன் சொல்கிறார்,’

 அங்கம்மாவின் கடிதவரிகளோ வேண்டுகோளோ  மட்டும் அவன் ஊருக்குத்திரும்பிவருவதற்கான காரணமல்ல. அங்கம்மாவின் சொற்களுக்கு அப்பால்  அவன் எழுதிய கூடுதல் சொற்களே முக்கியக்காரணம். அதன் கூர்மையும் அழுத்தமும் தாங்காமல்தான் அவன் வெளி நாட்டிலிருந்து வேக வேகமாகத் திரும்பிவிட்டான். அது தெளிவாகத் தெரிகிறது.ஆனால் அவனை வரவழைக்கும் வகையில்  என்ன எழுதியிருப்பான் என்பது   புதிராகவே இருக்கிறது.’  கதையில்  புதிராகவே விடப்பட்டுள்ளது  என்பதுதான் கதையின் வெற்றி. அந்த மெளனமே விட்டல்ராவின்  சிறுகதைக்கலை  என்கிறார் பாவண்ணன்.

விட்டல்ராவின் கதைகள் அனைத்துமே ஒரு புதிரொன்றைச் சுமந்து  படைக்கப்படுகின்றன. வாசகனுக்கு அந்தப்புதிரை அவிழ்த்துப்பார்க்கும் வேலை கொடுக்கிறார் விட்டல்ராவ். வாசனைத் தன் உணர்வோடு இணைத்துக்கொண்டு’ போதலில் அவரின் எழுத்துத் தனித்துவமாய்  அமைகிறது.

’அவர் நினைவாக’  என்கிற சிறுகதையொன்று குங்குமத்தில் (1979)  வெளியாகியிருக்கிறது. கந்தசாமியின் தகப்பன் இறந்து கிடக்கிறான்.  அந்தத் தகப்பனை ஊரே படையாச்சி  என்றுதான் அழைத்திருக்கிறது. பறைமேளங்கொட்டிகள் தோலைச்சூடாக்கி  அடித்து அடித்துப் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த கோவிந்தசாமி  படையாச்சிக்கு  ஒரு கூத்தியாள் இருக்கிறாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை ரத்தினம்.  அவனும்  படையாச்சி தனக்குத்தந்தை ஆயிற்றே என்று எழவு வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனின் தாய் அவனை அனுப்பி வைத்திருக்கிறாள். ஒரு கூத்தியை வைத்துக்கொள்வது ஒரு ஆடவனுக்கு பெரிய கெளரவமாக  ஊரார் பேசிக்கொள்கிறார்கள். ரத்தினம் ஒண்டியாய் வரவில்லை. அவனோடு நாலைந்து பேர் சகா வந்திருக்கிறார்கள். எழவுக்கு  வந்த சனம் கூத்தியா பெற்ற பிள்ளை ரத்தினத்தை மாறி மாறி பார்த்து  மகிழ்ந்து போகிறார்கள். கூத்தியாளின் நிறம் சிவப்பு. அதே நிறத்தில் ரத்தினம் இருப்பதைப் பெருமையாகப் பார்க்கிறார்கள். கந்தசாமி  தனக்குச் சகோதரனான ரத்தினத்தையும்  வாஞ்சையாய்  அழைத்து வந்து சவத்திற்கு அருகே நிற்கிறான். படையாச்சிக்கு வீட்டில் போட்டோ எதுவும் இல்லை. சவத்தையாவது ஒரு போட்டோ எடுத்துவிடவேண்டும் எனக் கந்தசாமி ஆசைப்படுகிறான். ரத்தினசாமி அதற்கான ஏற்பாட்டோடு அங்கே வந்திருக்கிறான்.

‘கூத்தி ஷோக்கு  வச்சிகிறதுக்கும் ஒரு தெகிரியம் ஒரு அந்தஸ்து  வேணும்டா  யப்பா?’ என்று பேசுகிறது எழவுக்கு வந்த ஒரு கிழம்.

‘இருந்தாக்கூட மித்தவங்க மாதிரி, வூட்டுப்பக்கமே வராமயோ  வூட்டையே கெவுனிக்காமயோ  இருந்திடலே  ராமாயிக்குத்தான் என்ன கொறவச்சாருங்கறென்?’ என்கிறது மற்றொரு கிழம்.  ராமாயிதான்    கோவிந்தசாமி தாலி கட்டிய மனைவி. சம்பாஷணைகளை தத்ரூபமாகத் தரவல்லவர் விட்டல்.  சேலம்  வட்டாரத்துத்துச்  சனம் பேசும் பேச்சு அவருக்குத் தங்குதடையில்லாமல் எழுத்தில் வெளிப்படுகிறது.

கோவிந்தசாமியின் சடலத்தை நாற்காலியில் உட்காரவைத்து போட்டோ எடுக்கிறான் ரத்தினம். சவத்தை நாற்காலியில் உட்காரவைப்பதற்கு  ஏகப்பட்ட முஸ்தீபுகள் நிறைவேறுகின்றன.

கோவிந்தசாமி படையாசி ஒரு முறை தன் மகன்  கந்தசாமியைத் தன் கூத்தி தங்கமணி வீட்டிற்கு அழைத்துப்போனார். கந்தசாமி அப்போது சிறுவன். கந்தசாமிக்குத் தலைமுடி நீட்டமாக இருந்தது.  அதனை சீவிச் சிங்காரித்து அனுப்பினாள் தங்க மணி.  அதிரசம் சுட்டுக்கொடுத்தாள்.  அங்கு  நடந்த மொத்த விஷயத்தையும்  விவரமில்லா கந்தசாமித் தன் தாய் ராமாயியிடம் சொல்லிவிட்டான்.. கந்தசாமிக்குப் பூசை கிடைக்கிறது. ராமாயி அழுதாள். அரற்றினாள்.. இவை அதனையும் சாவு வீட்டில்  கந்தசாமியின் மனதில்  காட்சியாக ஓடுகின்றன. கதைக்குள் ஒளிந்திருக்கும் கதையை அவிழ்த்துச்சொல்வதில்  விட்டல்ராவுக்கு அத்தனை  இலாகவம்.

ரத்தினத்திடம் தன் தந்தை சவத்தின் படமொன்று வேண்டுமென்று கேட்கிறான் கந்தசாமி. அவன் அதற்கு  இசைவு சொல்கிறான். அவன் தன் சகாக்களோடு கிளம்பிவிடுகிறான். அவன் தான் கூத்திப்பிள்ளையாயிற்றே. கந்தசாமி   தன் தந்தையின் சவப்போட்டோ வேண்டுமென்று  ரத்தினத்திடம் பல்லைக்காட்டிக் கெஞ்சிக்கேட்டது  தனக்கு அவமானம் என்று எண்ணுகிறான். சிறுகதையில்  மனித மனங்கள் படும்  சின்ன அவஸ்தையைப் புட்டு புட்டு வைக்கிறார் விட்டல்ராவ்.

மரி சுவாமிகள் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை மிக சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. சுவாமிகளுக்கு ஐந்து முடிந்து ஆறு வயது தொடங்குகிறதாம்.இன்று பட்டாபிஷேகம் என்று சொல்கிறார்கள். கல்விப்பயிற்சி பிற சாத்திர போதனையெல்லாம் ஆரம்பிக்கப்போகிறார்கள். அதையொட்டித்தான்  இந்தத் திருவிழாக் கொண்டாட்டம். ஐநூறு மைலிலிருந்தும் ஜனங்கள் வருவார்களாம். தொடர்ந்து  வருகிறது பால சுவாமிகளுக்கு பாத பூஜை . அதற்கான ஒலிபெருக்கி அறிவிப்பு. பதினெட்டு வயது வரைதான் பாலசுவாமிகளுக்குச் சிறப்பு  பட்டமெல்லாம். பிறகு வேறு மடத்திற்கு மாற்றி அனுப்பிவிடுவார்களாம். மறுபடியும் ஒரு பாலசுவாமி  பதவிக்கு ஏற்பாடாவாராம். இப்படிப்போகிறது  மரி கதை.  பால சுவாமிகள் பயணத்தின் போது கோலி  குண்டு அடித்து விளையாடும் சிறுவர்களைப்பார்த்து விடுகிறார். அவருக்கும் குண்டு விளையாடும் ஆசை தொத்திக்கொள்கிறது. குண்டு விளையாட்டிலே ஜெயித்தவன் பாடும் பாட்டை நமக்கு விட்டல்ராவ் சொல்லிச்செல்கிறார்.

அஞ்சிலே குஞ்சம்,அறுவக்கத் தகடி,எழுவக்கமைனா,எட்டாச்சி கோட்டை,,தொம்பம்பேட்டை,தொசிக்கிட்டி ராஜா  என்று ஜெயித்தவன் பாட்டாய்ச் சொல்ல தோற்றவன்  வரக் வரக்கென்று முட்டி இழுத்துத் தேய்ந்து போகிறது. விளையாடும் பையன்களோடு  பாலா சாமி சேர்ந்துகொள்கிறார். கோலி விளையாடும் சிறுவர்கள் பயந்து போகிறார்கள். குண்டு விளையாட்டில்  சுவாமி தோற்றுப்போகிறார். கூட வந்த பெரியவர்கள் சுவாமியை  கையைப்பிடித்து  அழைத்துப்போகிறார்கள். சுவாமி விளையாடிய கோலிக் குண்டை வீசித்தான் எறிகிறார்கள்.

ஏதுமறியா சிறுசுகளை சாமியாக்கித்  தூக்கிச் சுமக்கும் சமூக மெளடீகத்தைச் சாடுகிறார் விட்டல்ராவ்.

பன்றி என்னும் தலைப்பில் விட்டல்ராவ் எழுதிய கதை மிகச்சிறப்பானது. கதைசொல்லியின் வீடு வாடகை வீடு. அந்த வீட்டிற்கு அருகே பெரிய பெரிய புதர்கள். அதனில் சில  பன்றிகளின் வாசம். ஓயாத உறுமல்  ஒலி அது கேட்டுக்கொண்டே இருக்கிறது. பன்றியின் உரிமையாளர்கள் எங்கோ தொலைவில் வசிக்கிறார்கள். எப்போதேனும் வந்து பன்றிகள் இருப்பை உறுதி செய்துகொள்வார்கள். ஒரு சமயம் ஒரு பன்றி  எட்டு குட்டிகளை ஈன்றது. அனைத்தும் தாய்ப்பன்றியிடம் பால் குடித்தன.  மூன்று குட்டிகள்  செத்துப்போயின. ஒரு குட்டி நோயால் மெலிந்து போகிறது.  அது வாழ வேண்டாம் என முடிவு செய்து   தாய்ப்பன்றியே அதனைக் கொன்றுவிடுகிறது. ஆனால் எங்கிருந்தோ  வந்த புதிய பன்றிக்குட்டிக்குத் தாய்ப்பன்றி பால் கொடுக்கிறது. அது வாட்ட சாட்டமாய் வளர்கிறது.   பன்றி  உரிமையாளர்க்கு அது ஒப்ப முடியாமல் போகிறது.   அதன் காதுகளைப்பிடித்து  குற இணையர்   பேனாக்கத்தியால்  அறுத்து விடுகிறார்கள். தாய்ப்பன்றியும் ஏதோ ஒரு அறத்தை மேற்கொண்டு  வேறு ஒரு  பன்றியின் குட்டிக்குப் பால் கொடுக்கிறது என்கிற அரிய செய்தியை நமக்குச் சொல்கிறார் விட்டல்ராவ். பன்றிகள் ஊர் சுகாதாரம் பேணும் ஜீவன்களாக வலம் வருகின்றன. அவைகள் இங்கே  லட்சுமம்மாக்கள் ஆகின்றன. எது எப்படி இருந்தால் என்ன வாடகை  வீட்டுக்குச் சொந்தக்காரன்  எந்த வசதியும் செய்யகொடுக்க மறுக்கிறான் என்று மனித வக்கிரத்தை எழுத்தில் வரைந்து காட்டுகிறார் கதாசிரியர்.

’கல்யாணமான முத்தம்மா’ என்று ஒரு சிறுகதை. ஏழாம்வகுப்பு படிக்கும் முத்தம்மாவுக்குத் திருமணம் கூடிவிடுகிறது. திருமணத்தை முடித்துக்கொண்டு அந்தக் குழந்தை வகுப்புக்கு வருகிறாள் . வகுப்பு மாணவர்கள்  ஒருத்தர் பாக்கியில்லாமல் முத்தம்மாவைக்  கேலி பேசுகின்றனர். தேவபிச்சைதான் வகுப்பாசிரியர்.பிரம்பால் மாணவர்களை அடிப்பது என்பது அவருக்குச் சர்வ சாதாரணம். வகுப்பில் ஒவ்வொரு மாணவனும்  தேவபிச்சையின் அடியை ஒவ்வொரு விதமாய் எதிர்கொள்கின்றனர். அடியைக்கண்டு மிரளாதவள்  இந்த முத்தம்மா. தான் அடி வாங்குவதற்காகவே பூமியில் பிறந்திருப்பதாய் எண்ணுகிறாளோ என்னவோ அவளை நோக்கிப்.பிரம்பு பாய்ந்து வரும்போது மிரண்டு விடமால் அடியை வாங்கிக்கொள்வாள். அடி வாங்கிய கை வலிக்கும். அதனை ஒரு ஊது ஊதிவிட்டுக்கொண்டு தன் இருப்பிடம் சென்றுவிடுவாள். பிரம்பை ஓங்கி நிற்கிறார் தேவபிச்சை. முத்தம்மா சொல்கிறாள்.’நா நாளையிலேந்து  இஸ்கூலுக்கு  வரமாட்டேன் சார். அவுங்க இஸ்கூல்லேந்து நின்னுக்கச் சொல்லிட்டாங்க’

தேவபிச்சை ஓங்கிய பிரம்பைத்  தாழ்த்திக்கொண்டு கேட்கிறார்.

‘ஆரு?’

‘எங்கூட்டுகார்ரு சார்’  என்றாள் முத்தம்மா. அதோடு விடவில்லை முத்தம்மா.

‘நாளைக்கு அவுங்களே  இஸ்கூலுக்கு வந்து சொல்லிக்குவாங்களாம் சார்’ முடித்து வைக்கிறாள். பிள்ளைகள் அவளையே திரும்பத்திரும்பப் பார்க்கின்றனர். தேவபிச்சை பிள்ளைகளை ஆட்சேபிப்பதை தற்காலிகமாக      நிறுத்திக்கொண்டார் என்று முடிக்கிறார் விட்டல்ராவ். முத்தம்மாவை நினைக்க நினைக்க வாசக மனம் கனத்துத்தான் போகிறது. 1981ல் குங்குமத்தில் பிரசுரமான கதை இது.

சட்டிச்சாமி என்கிற சிறுகதை என்னை மிகவும் பாதித்த கதை . சமூக எள்ளலை இப்படைப்பில்  விட்டல்ராவ் எப்படிக் கையாள்கிறார் என்று பார்க்கலாம். சட்டிச்சாமியைப்பற்றி சரியாகப் பேச வேண்டுமென்றால் உள்ளூர் பூகோள அறிவும்,தரும சிந்தையும் இருக்கவேண்டும். தருமம் என்பது பிறருக்குத் தந்துதவும் அறிவுரையல்ல கும்பலோடு கலந்து பிறர் தருவதை வாங்கிக்கொள்வது. தருமத்தின் இருமுனைகளில் ஒன்றைப்பற்றிக்கொண்டால் சட்டிச்சாமியின் தரிசனத்திற்கு ஆளாகமுடியும் என்கிறார் விட்டல்.

மலையும் மலை சார்ந்த இடமுமாகியது குறிஞ்சி. அந்நிலத்தில் ஒரு முருகன் கோயிலில்  சட்டிச்சாமியார் தங்கியிருந்தார். கள்ளங்கபடமற்ற முகம் அவருக்கு.  எப்போதேனும் அவர் சிரிப்பார். பேச்சுவராத குழந்தை தான் கழித்த சிறுநீரிலேயே அளைந்து புரண்டு பூசிக்கொண்டு பிறர் படும் அசிங்க உணர்வைக் கண்டும்புரிந்து கொள்ளாததாய்  சிரிக்குமே  அந்தத் தோற்றம். திருகு திருகாய்  ஓடு அகன்ற  புளிபோன்ற செம்பட்டைச்சடை. கோவணம் மட்டுமே ஆடை. பழுப்பு நிறதேகம். ஆடையையும் பிறர்தான் கட்டிவிடவேண்டும். பல் துலக்கல் குளியல்,ஓய்வு ,உறக்கம், சிந்தனை,பேச்சு, அறிவுரை, எதுவுமே கிடையாது. அந்த முருகன் கோயிலில் சாம்பார்சாதமும் தயிர்சாதமும் மக்களுக்கு  வழங்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். சட்டிச்சாமி தன் பங்கிற்கு  மண் சட்டி ஒன்றை வைத்துக்கொண்டிருப்பார். முக்காலுக்கு  அதனில் குழம்பு சோறு இருக்கும். சட்டியை அவர்  இழுத்துக்கொண்டும் தூக்கிக்கொண்டும் அங்குமிங்கும் அலைவார். சன்னிதானத்துக்கு அருகிலும்  பலிபீடத்துக்கு அருகிலும் போய் உட்கார்ந்து  சட்டியில் கையை விட்டு  விட்டு நக்கிக்கொண்டிருப்பார்.’சுவாமியோவ்’ என்று ஜனங்கள் அவருக்குக் கரம் குவிப்பார்கள். தம் குழந்தைகளை அவர் காலடியில் போட்டு  ஆசி வாங்குவார்கள். தைப்பூச நாளன்று   அக்கோவிலுக்கு  ஆன்மிக சொற்பொழிவாற்ற   ஒரு  சான்றோர் வருகை தருகிறார். சைவச்செருக்கு அவருக்கு. அழகு   கூடிய  ருத்திராட்ச மாலை  கழுத்தில் மின்னியது. சட்டிச்சாமி  ஏனோ   அன்று  யாருக்கும் சோறு போடவில்லை. சொற்பொழிவாளர்  சிறிது நேரம் பார்த்தார். வேறு ஒரு நிகழ்ச்சி  அவருக்கு இருப்பதாய்ச்சொல்லிப் புறப்பட்டார். வந்தவர்கள் அன்னதானம் பெறாது கலைந்துகொண்டிருந்தார்கள். சட்டிச்சாமி சிரிக்காத்தால்  அன்று சோறு யாருக்கும்  விநியோகிக்கப்படவில்லை.  கோவிலில் குழம்பு சோறு மீந்து கெட்ட வாடை வந்தது.  பின்னர் சட்டிச்சாமி காட்னாம்பட்டு மலைமீதேறி  நின்றது.  ஊர்ஜனங்களும் போலிசும் அவரை தரைக்கு வந்துவிட வேண்டுகோள் விடுத்தனர்.  சட்டிச்சாமி எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. சட்டிச்சாமியிடம் ஊர் மக்கள் மன்னிப்பு கோறினார்கள்.’ கால்ல வுழுறோம், காவடி தூக்கறோம்’ என்றார்கள். ஆனால் சட்டிச்சாமி அழுதது. முதன் முதலாக அன்றுதான்  அழுதது. இறுதி அழுகையும் அதுவே. மலையினின்று வழுக்கிக் கீழே வீழ்ந்த  சாமி செத்துப்போனது.

சட்டிச்சாமியின்  ரிஷி மூலத்தைக்கண்டறிந்து  வெண்பாக்களால் ஆன புத்தகம்  ஒன்றை ஆக்கி அச்சேற்றி கோயிலில் விநியோகித்தார்கள். அந்த சாமிக்குத்  தானே மெய்யடியான் என்று கூறிக்கொண்ட ஒருவர் சட்டிச்சாமிக்குச்  சமாதி கட்டும்  திருப்பணி மேற்கொண்டார்.

அன்னதானம்  மட்டும் இன்றும் நாளையும் காட்னாம்பட்டியில்  தொடர்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் விவரமறியா ஏமாளித்தனத்தை, போலிச் சாமியார்களின் முகமூடியை  வாசகர்கள் தரிசிக்க  விட்டல்ராவின் சிறுகதை  ஆதாரமாகிறது. நாஞ்சில்நாடனின் எள்ளல் எழுத்து நம் நினைவுக்கு வந்து போகிறது. 1992ல் கவிதாசரணில் வெளிவந்த படைப்பு இது.

ஒத்திகை என்று ஒரு சிறுகதை 1993ல் இந்தியா டுடே யில்  வெளிவந்திருக்கிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு நாடகம் குறித்த ஒத்திகை. அது முதலில் சாதாரண உடையில் நிகழ்ந்தது. பின்  அவரவர்கள் போட்டுக்கொள்ளவேண்டிய சரியான  உடைகளைப்போட்டுக்கொண்டும் நடந்தது.  அது யூசுஃப் என்னும் நாடகம். யூசுஃப்பின் ஒரே மகனை யாரோ கொன்றுவிடுகிறார்கள். கொலைகாரனைக் கண்டுபிடித்து பழிவாங்க  தந்தை  பாலைவனத்தில் கூடாரமடித்துக் காத்திருக்கிறான். அப்போது சிப்பாய்கள் துரத்த  ஒருவன் யூசுஃப்பிடம் அடைக்கலம் கேட்டுத்தங்குகிறான்.  உயிர் தப்புகிறான். மாற்றுடையும் பணமும் குதிரையும் பெற்றுக்கொண்ட அவன்  யூசுஃப்பின் காலில் விழுந்து தன்னைக்கொல்லும்படிக் கெஞ்சுகிறான்.  யூசுஃப்ப்பின் மகனைக்கொன்றது தான்தான் என்கிறான். அடைக்கலமென்று வந்தவனைக்கொல்ல மறுக்கிறான். யூசுஃப்.  அவனைத் தப்பிச்செல்ல மட்டுமே  அனுமதிக்கிறான்.  இதில் கொலையாளியாக நடிப்பவன் ஜெகதீசன்.

ஒத்திகைக்கான உடைகள் இருக்கும் அறைக்கு  ரெவரெண்டு எபினேசர் சாமியார்   நாடகத்தில் நடிக்கும் மாணவர்களை  அழைத்துச்செல்கிறார். கிறித்துவப்பள்ளிதானே அது. அங்கு ஜெகதீசன் ஒரு ஓவர்கோட்டைக்காண்கிறான். கோட்டுக்குப்பித்தளைப்பொத்தான்கள் அழகு செய்தன. அதனில் பிரிட்டீஷ் அரசு முத்திரை சிங்க உருவம் கொலுவிருந்தது.  ஜிகினா பார்டருடன் அந்தக்கோட்டை க்கண்ட ஜெகதீசன் அதனைத் தான்  அபகரித்துச்செல்லவேண்டும் என  முடிவு செய்கிறான். தனக்கு வழங்கப்பட்ட நாடக உடைகளுடன் அதனை வெளியில் தெரியாமல் மடித்து வைத்துத் தன்  வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுகிறான். இத்திருட்டு விஷயம் சாமியாருக்குத்தெரிந்து தான் மாட்டிக்கொண்டுவிட்டால் என்னாவது என்கிற குற்ற உணர்வு அவனை நிலைத் தடுமாற வைக்கிறது. ஆகவே பிறகு நடந்த ஒத்திகைகளில் அவன் சரியாக நடிக்க முடியாமல் சங்கடப்பட்டான். சாமியார் அவனை இந்நாடகத்தில் இரண்டு பரிசுகள்  கட்டாயம் பெறவேண்டும் என எச்சரிக்கை செய்கிறார். நாடக  நாள்  வருகிறது.  நாடகத்தில் சாமியார்தான் யூசுஃப்பாக நடிக்கிறார். ஜெகதீசன் கொலைகாரனாக நடிக்கிறான். சாமியாரின் காலைப்பிடித்துத் தான் செய்த தவறைச்சொல்லித் தன்னைக் கொலை செய்ய  வேண்டினான். தான் ஓவர் கோட் திருடிய  அந்த நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு சாமியாரிடம் கதறிக்கதறி அழுதான்.  தத் ரூபமாகத் தனது பாத்திரப்படைப்பை  வெளிக்காட்டினான். கிளிசரின் போடாமலேயே அழுதான். ஆகச்சிறந்த நாடகம் அந்த  யூசுஃப் என்றும்  ஆகச்சிறந்த நடிகர் ஜெகதீசன் என்றும் மேடையில்  அறிவித்தார்கள். பிற்காலத்தில் ஜெகதீசன்   சிறந்த நடிகனாக வருவான் என  நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் வாழ்த்துக்கூறினார்.

மறுவாரம் நாடக உடைகளைத் திரும்ப  ஒப்படைக்கும் நிகழ்வு. ஜெகதீசன். தான் கொண்டுவந்த நாடக உடைகளோடு  திருடிக்கொண்டுவந்த ஓவர் கோட்டையும் அதே  பையில் போட்டு எடுத்துக்கொண்டு பள்ளிக்குப்  போகிறான்.

‘சரி பார்த்துக்கலாமுங்களா சாமி?” என்கிறான் சாமியாரிடம்   பியூன்.

சாமியாரோ  ’ஜெகதீசன் கணக்கை சரிபார்க்க வேண்டாம் . அது சரியாகவே இருக்கும்’ என்று ஜெகதீசனைப்பெருமையாகப் பேசி முடிக்கிறார். ஜெகதீசன்   தான் கொண்டுவந்த அந்தப்பையை  ஓவர் கோட்டோடு  அதற்கான அலமாரியில் வைத்துவிட்டுத் திரும்புகிறான்.  அச்சமயம்  ஜெகதீசனை சாமியார்’ ஒரு நிமிஷம் என்  ரூம் வரை வந்திட்டுப் போ’ என்கிறார்

. சாமியார் இதனைச்  சிரித்துக்கொண்டே சொல்கிறார் என்கிறார் விட்டல் ராவ். பின் என்ன நடந்தது என்பதை நீங்களும் நானும் ஊகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.  விட்டல்ராவ்  நமக்கு  விட்டு வைக்கிறார். சிறுகதையின் வெற்றி இங்கே பளிச்சிடுவது கண்டு நாம் சபாஷ் சொல்கிறோம்..

ஒரு சின்னஞ்சிறிய சிறுகதை’ நேதாஜி இருக்கிறார்’. சுகவனம் என்பவர்  வீடு கட்டி முடித்துக் குடியேறி யிருந்தார். பக்கவாட்டில் குடிக்கூலிக்கு  ஒரு குடும்பத்தை  அமர்த்திக்கொள்கிற மாதிரிக்கு  ஒரு போர்ஷனும் கட்டியிருந்தார். அந்த வீட்டுக்குக் குடி வந்தவர்  பெயர் வேலாயுதன். அவரை’டான்’ என்று பர்மாவில் அழைப்பார்களாம். தன் என்று முடிவதை டான் என்று சொல்வது அந்தப் பர்மியப்பழக்கம் என்கிறார் விட்டல். கதையில் சுவாரசியங்களுக்கு குறைவேது. அவை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அவர் ‘நேதாஜி உயிரோடிருக்கிறார்’  என்கிற பெயரில் ஒரு புரட்சிகர மாத இதழ் பற்றிய சந்தா விபரம் அடங்கிய குறிப்பைச் சுகவனத்திடம் கொடுக்கிறார்.

‘ஆனால் எனக்குத்தெரியும் நேதாஜி உயிரோடுதான் இருக்கார். இமயமலை அடிவாரத்திலே எங்கேயோ சந்நியாசி மாதிரி’ என்று டான்   சுகவனத்திடம் பீடிகை  போடுகிறார்.  அப்புரட்சிகர இதழுக்கு . சுகவனத்தை ஒரு ஆண்டு சந்தா தாரராக ஆக்கிவிடுகிறார். இதழ்தான் வந்த பாடில்லை. இதோ அதோ என்பார். தன் மகள்  விலாசினி கல்கத்தா போயிருக்கிறாள் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நேதாஜியின் கையெழுத்துப்பிரதிகளைப் போட்டோ எடுத்துவரத்தான் அவளின் பயணம் என்பார் அந்த  டான். சுகவனம்  இரவு நெடுநேரம் வரை அவர் சொல்லும் நேதாஜிக் கதைகளைக்கேட்டுக்கொண்டே இருப்பார். அந்த விலாசினி கன்னங்கரேல் என்கிற ஒருவனோடு ஓடிப்போனதே தெரியாமல் தகப்பன்  டான் காலந்தள்ளுகிறார். ஆறுமாதமாய் வாடகை பாக்கி. புரட்சிகர பத்திரிகை எங்கே வெளி வந்தது.  டானின் மகள் விலாசினி மட்டும் ஒரு நாள்  ஆறு மாத கர்ப்பிணியாய்த்தன் வீடு வந்து சேர்ந்தாள்.

டான் என்பவரை வேலாயுதன் என்று  மட்டுமே அழைத்து வீட்டைக்காலி செய்யச் சொன்னார் சுகவனம்.  உடன் மந்தைவெளியில் வேறு வீட்டுக்குப்போன வேலாயுதன்  இன்னும் இரண்டு மாதத்தில் வாடகை  பாக்கியைத்  தந்துவிடுவதாய்ச் சொன்னார். அவ்வளவே.   ஒரு பழைய ரெஃப்ரிஜிரேட்டரை பணயமாக சுகவனத்திடம் வேலாயுதம் கொடுத்துவிட்டுச்சென்றார். சுகவனம் மந்தை வெளிக்கே சென்று அவரைத்தேடினார். வாடகை பாக்கி பாக்கிதான். அந்த வீட்டிலும் அவர் இல்லை. அவர் பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டதாய்க்கூறினார்கள். வீட்டுக்கு வந்த சுகவனம்  வேலாயுதன் கொடுத்துவிட்டுப்போன ரெஃப்ரிஜிரேட்டர் பாக்கிங்கை உடைத்துப்பார்த்தார்.  அதனுள் கம்ப்ரசர் இல்லாத ஒரு ஓட்டை ரெஃப்ரிஜிரேட்டர் பதுங்கிக்கிடந்தது.

விட்டல் சொல்கிறார்,’ நேதாஜியின் அஸ்தி ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு  விமானத்தில் வந்தது   என்பது சமீபத்தில் வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. டான் என்னும் வேலாயுதன்  இன்னும் உயிருடன்தான்  இருக்கிறாரா என்று கூட சந்தேகம் பிறந்தது  சுகவனத்துக்கு.

’இந்தியா டுடேயில் 2000ஆம் ஆண்டு இக்கதை வெளிவந்திருக்கிறது.

அடுத்து 1996  ல் தினமணி கதிரில் வெளியான ‘மகமாயி’ என்னும் சிறுகதைக்கு வருவோம். மாசானியம்மன் கோயில்  மகமாயியைக்காண சார்லுவும் கிருஷ்ணப்பண்டாரமும் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் நிற்கிறார்கள்.  ஆதிவாசிகளால் நிர்மாணிக்கப்பட்ட  தெய்வம் இந்த மகமாயி. கிருஷ்ணப்பண்டாரம். அந்த  மகமாயியின் மகிமைகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார். 

மாசானியம்மன் கோயில் செல்லும் பாசெஞ்சர்  ரயில் இன்னும் வரவில்லை. எல்லோரும் காத்திருக்கிறார்கள்.  ஒரே பிளாட்ஃபாரம் கொண்ட ரயில் நிலையம். மக்கள் கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது. எல்லோருக்கும் மகமாயியைக்கண்டு அவள் அருள் பெறுவதே  ஒரே இலக்கு.

பிளாட்ஃபாரம் ஓரமாய்  விளிம்பில் ஒரு மனிதப்பிறவி அமர்ந்திருக்கிறான். தொடைகளுக்கும் புட்டத்துக்குமாய்ச் சேர்த்து லாரிடயரிலிருந்து உரித்தெடுத்த ரப்பர் மட்டை ஒன்றால்  கவசம் போல் பாதுகாப்பு தரித்திருந்தான். அவன் தரையில் தன்னுடலை அழுத்தித்தேய்த்துத் தேக்கிக்கொண்டு நகர்கையில் தொடைகளோ புட்டமோ  சிராய்ப்புற்று ரணமாகாது.  அவன் இங்கும் அங்கும் பார்க்கிறான்.’மகமாயி துணை…. மகமாயி துணை’ என்று கத்திக்கொண்டே கைகளை நீட்டுவதும் கும்பிடுவதுமாக இருந்தான். சார்லுவும் கால் ரூபாய் நாணயத்தை அவனுக்குப் போடுகிறார்.

சமீபமாய் ஒரு கூட்டம். அதனில் ஒரு இளம்பெண். மூக்கில் வைர மூக்குத்தி   அணிந்திருந்தாள். கிருஷ்ணப்பண்டாரம் சமீபத்தில் மகமாயிக்கு  வைர மூக்குத்தி  சாத்தப்பட்ட செய்தியை சார்லுவுக்குச் சொல்கிறார்.

 சப்பாணி ‘அய்யய்யோ அந்த வண்டி அந்த பிளாட்ஃபாரத்தில் நிற்குமே குறுக்கே கூட்ஸ் வண்டி நிக்குதே’ என்று புலம்ப ஆரம்பித்தார். சப்பாணியின் கதறல் யார் காதிலும் விழவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சனைகள்.’ அய்யய்யோ எனக்கு ஒதவறதுக்கு யாருமில்லையே மகமாயி’ என்ன பண்ணுவேன் ஒன்ன இந்த ஆடி வெள்ளிக்குப் பார்த்தாகணுமுனு ஆசைபட்டேனே’ அவன் புலம்பல் நிற்கவில்லை.

கிருஷ்ணப்பண்டாரம் சார்லுவை விரைவு படுத்தினார். கூட்ஸ்வண்டியைத் தாண்டி பாசெஞ்சர் ரயிலைச் சந்திக்க இருவரும் முனைகிறார்கள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. அந்த  ஒற்றை வைரக்கல் மூக்குத்தி அணிந்த பெண் அந்த சப்பாணியை அலாக்காகத்தூக்கிகொண்டு கூட்ஸ் வண்டியைத்தாண்டிக்கொண்டு பாசெஞ்சர் வண்டிக்குச் செல்கிறாள். அவனை வண்டியில் ஏற்றி விடுகிறாள். அவனைக்கண்ணால் பார்த்துப் பிச்சையிடவே அருவறுப்பாய் எண்ணுகின்ற மக்கள் கூட்டத்திற்கு  மத்தியில்  அந்த ஒற்றைக்கல் வயிரமூக்குத்தி அணிந்த பெண் அந்த சப்பாணியைத்தூக்கி அவனுக்கு உதவி நிற்கிறாள். ‘யம்மா யம்மா’ என்று அந்த சப்பாணி கூவுகிறான்.  அவளுக்குத் தனது நன்றியைத்தெரிவிக்கிறான். அந்தப்பெண்ணும் அதே வண்டியில் தன் குடுமபத்தோடு பயணிக்கிறாள்.

சார்லு சொல்கிறார், ‘ அம்பாளைப்பார்த்தாச்சு’.  இனி எங்கேயும் செல்ல  சார்லு  தயாரில்லை. இப்படித் திக்கற்றவருக்கு உதவும் மற்றொரு மனிதனே  மெய்யான தெய்வம். அந்த மகமாயியும்  அவளே என்பதை விட்டல் நமக்குச்சொல்கிறார். பார்ப்பனராய்ப்பிறந்து  வளர்ந்த விட்டல்ராவ்  புனிதப்பூணலைக் கழற்றி எத்தனையோ காலமானது. சக மனிதனைச் சகோதரனாக எண்ணும் ஒரு எழுத்தாளன் தன் படைப்பில் தனது உயரிய  சிந்தனையைப் பதிந்து விடுகிறான்.  அந்த வகையில் விட்டல்ராவ்   உயர்ந்த மானுடனாய் நம் கண்முன்னே  விரிதலை நாம் தரிசிக்கிறோம்.

உங்கள் ஓட்டு எங்களுக்கே என்கிற சிறுகதைக்கு வருகிறோம்.  தேர்தல் மக்களை எப்படியெல்லாம்  பிய்த்துப்போடுகிறது என்பது  இங்கே சொல்லப்படுகிறது. குட்டப்பன் ராஜவேலு இரு ஜல்லி  விற்பனைக் காண்ட்ராக்டர்கள் நிகழ்த்தும்  அரசியல்   நாடகத்தை அழகாகக் காட்டுகிறார் விட்டல் ராவ். ராஜவேலுக்குக் கிடைதத காண்ட்ராக்ட் குட்டப்பனுக்குக்கிடைக்கவில்லை. ராஜவேலுக்கு எதிராக வேலை செய்கிறான் குட்டப்பன்.  சிறார்களை  வேலைக்கு அமர்த்தி சுரண்டும் கொள்ளையை ராஜவேலு செய்வதாக  ஊரெல்லாம் பரப்பினான்.

குட்டப்பனுக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்கு குழந்தைகள் தேவைப்பட்டார்கள். தினம் தினம்  இரண்டு மணி நேரம் குட்டப்பனை ஆதரித்து குழந்தைகள் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். அந்தச்சிறுவர்களை ராஜவேலு  தன் பக்கம் இழுக்க ஆசைகாட்டிப் பேசுகிறார். பையன்கள் ஏற்கனவே ஒருவரை ஆதரித்து வேலை செய்கிறோம். நாங்கள் உங்களோடு வரமாட்டோம் என்கிறார்கள். பணித்தருமம் பார்க்கிறார்கள்.

ராஜவேலு இப்பொழுது வேறு   ஒரு குறுக்குத்  திட்டம் போடுகிறார். சிறார் தொழிலை ஒழிப்பதாய் குவாரித்தொழிலை ஓரங்கட்டுவதாய் ச் சொன்ன குட்டப்பன்  பள்ளிக்குப்போகும் சிறார்களை வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்வதைப்பாருங்கள்  என்று சுவரொட்டிகள் அங்கே  தயாரனது. ஊரெல்லாம் பிரச்சாரமும் நடந்தது. குழந்தைத்தொழிலாளர்களுக்கு  ஆபாச வீடியோக்கள் காட்டப்படுவாதகவும் ராஜவேலு தெருவெல்லாம் பிரச்சாரம் செய்தார். குட்டப்பன் சிறுவர்களைக்கொண்டு  தேர்தல் வேலை செய்வதை அப்போதே நிறுத்திவிடுகிறார்.

பிரச்சாரக்கூலி பாக்கியைக்கேட்க வந்த சிறார்களைப்பார்த்து, குட்டப்பன்,

‘கோஷம் போட வானாண்டா பசங்களா, நோட்டீசு ஒட்ட வர்ரீங்களா? நிறைய ஒட்டனும் ராவிலே போய் ஒட்டினா போதும்’ என்கிறார்.  அவ்விடத்திற்கு  ராஜவேலுவின் ஆட்கள் வருகிறார்கள்.’ என்னடா பாக்கியெல்லாம் தீர்த்திட்டாரா குட்டப்பன்?’ நக்கலாய்  கேள்வி வைக்கிறான் ராஜவேலுவின் நொண்டிப்பாண்டி.

’சர்தான் போய்யா வந்திட்டாரு’   சிறார் குழாத்துத்தலைவன்  சிட்டி அவனை அழகாய்  மடக்கிப்பேசுகிறான்.

சமுதாயச் சுரண்டலை நம் கண் முன்னே நிறுத்தி நியாயம் கேட்கிறார்..

 நல்ல   எழுத்தாளனின் பேனா யாருக்காக வேலை செய்யவேண்டும் என்பதற்கு   இலக்கணம் வரைந்து தருகிறார்.

விட்டல்ராவின் சிறுகதைகள் நம்மைச் சும்மா விடுமா என்ன?.

·          ---------------------------------------------------------------------------------

 

                                              2.   ‘காம்ரேடுகள்’         

              

தான் பணியாற்றிய  தொலைபேசித்துறையின்   அன்றைய சூழலைத்  தொழிற்சங்கச் செயற்பாடுகளை,  போராட்ட இயக்கத்தை முன்னின்று நடத்திய தலைவர்களின் ஏற்ற இறக்கங்களை ’காம்ரேடுகள்’ என்னும் புதினத்தில் சித்திரமாகக் கொண்டு தருகிறார் விட்டல்ராவ்.  இப்புதினத்தை ஜைகிரி பதிப்பகம்  பெங்களூர் வெளியிட்டுள்ளது. தனது முன்னுரையில் விட்டல்ராவ்  இந்நூலின் நோக்கம் குறித்து இப்படிக்குறிப்பிடுகிறார்.

‘1962 –இல் நிகழ்ந்த இந்திய சீன எல்லைப்போரையடுத்து பொதுவுடைமைக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு  என்பவை இந்திய தொழிற்சங்கங்களிலும் எதிரொலித்து  அதே விளைவை ஏற்படுத்திய அக்குறிப்பிட்ட  காலத்தில் அரசுத்துறையொன்றின் தொழிற்சங்கத்துப் பின்னணியை விவரிப்பது.’

தென்னக ரயில்வே அலுவலகத்துக்கும் வால்டாக்ஸ் சாலைக்குமிடையேயுள்ள சாலைச் சந்திப்பில்  தொலைபேசி இலாகாவின் முக்கிய  சிகப்பு நிற கேபிள் கையிழுப்பு வண்டி  வந்து நின்றது. தென்னக ரயில்வே, பொதுமருத்துவமனை , மருத்துவக்கல்லூரி  இவைகளின்  கேபிள்கள் பழுதாயின.  கேபிள் ஜாயிண்டர் முத்துமல்லா அந்தப்பழுது நீக்கும் பணியிலிருக்கிறார். அவர் சைக்கிளின் அழகு பற்றி விவரிக்கிறார் விட்டல்ராவ்.’ பள பளக்கும் புதிய சைக்கிள், சைக்கிளுக்குப்பின்னால் பக்கத்துக்கொன்றாக இரு சிவப்பு விளக்குகள், ஹாண்டில் பார் பிடிகளில் குஞ்சங்கள், சைக்கிள் பாருக்குப் பட்டுக்கவசம்,ஆசனத்துக்கு வெல்வெட் உறை,, முன் மட்கார்டையொட்டி காத்திரமான பம்பர், பம்பர் நுனியில் அழகிய பிளாஸ்டிக் வண்ணக்குப்பி, முன் மட்கார்டு நுனியில் பறக்கும் நிலையில் பொருத்தப்பட்ட வெண்கல குதிரைப்பதுமை, பெரிய மணியுடன் சுழன்று சுழன்று  ஓசை எழுப்பும் சிறிய மணி ஒன்று.’

அலுவலகத்தில்  கேபிள்  பணிக்குக் கொடுத்த  அரசாங்க  ஈயத்தில் ஒருபகுதியை  முத்துமல்லா  திருட்டுத்தனமாய் விற்றுக் காசுபார்க்கிறார். தன் உதவியாட்களுக்குக்கொஞ்சம்  காசு கொடுத்துவிட்டு மீதியைத் தன் ஜேபியில்  பத்திரப்படுத்துகிறார்.

தம்பய்யா  பொது மருத்துவமனையின் தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அவரிடம் கேபிள்ஜாயிண்டர்  முத்துமல்லா  மீன் எண்ணெய் மாத்திரை தனக்கு வேண்டும். அது  தீர்ந்து போய்விட்டது என்கிறார். அதற்கும் தம்பய்யா  அரசு மருத்துவமனையில்  ஏற்பாடு செய்யவேண்டும்.

சத்தியநாராயணா காலமாகிவிட்டார். இதுதான் புதினத்தில்  வரும் பிரதான செய்தி. சத்தியநாராயணா யார் என்பதைச் சொல்லவேண்டும். தொலைபேசி ஊழியர் தொழிற்சங்கத்தின் தலைவர். அவரை அறியாதவர்கள் அனேகமாக யாரும் அங்கே இருக்கமாட்டார்கள். அகில இந்திய சம்மேளனத்தின் உதவிப்பொதுச்செயலராய் நியமிக்கப்பட்டவர். இந்திய அளவில் அவரின் பெயர் பிரபலம்

.’ போயிட்டார். காம்ரேட்டு சத்தியநாராயணா போயிட்டார்.பாடி ஜி. ஹெச்லே இருக்கு. போஸ்மார்ட்டம் முடிஞ்சி வரும்’ என்று அப்பர்சாமி அறிவித்துக்கொண்டே போகிறார். அவரைச் சக ஊழியர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் என்பதை விட்டல்ராவ் அழகாகக் கையாள்கிறார்.புதினத்தில் வரும் அப்பர்சாமி விட்டல்ராவ்தான்.

‘ஆரு சத்தியநாராயணா’

‘அஞ்சி வருஷத்துக்கு மின்னாடி அவரு ஒரு தலைவரு. அஞ்சி வருஷத்துக்கு மின்னாடி சர்க்கிள் கான்ஃபரன்சுக்கு வந்திருந்தயா,மகாஜன சபாலே நடந்திச்சே’

‘இல்லியே இப்ப இப்பத்தான் யூனியன் கூட்டத்துக்கெல்லாம் வந்து போறேன்’

‘இருயிரு செவப்பா.ஒல்லிய,ஒசரமா தண்ணி போடறாஆளா?’

‘அதேதான் வுடாதே புடிச்சிக’

‘கம்னீஷ்டா’

‘கம்னீஷ்டுதான்..கம்னீஷ்டுதான்’

‘ஓஅவரா’

ஊழியர்கள் அந்தத்தலைவரை நினைவுக்குக்கொண்டு வந்துவிட்டார்கள்.

போஸ்ட்மார்டெம் முடித்தபின் பாடியை எந்த வீட்டுக்குக் கொண்டுவந்து  இறுதிச்சடங்குமுடிப்பது  பின் மயானத்திற்கு எடுத்துச்செல்வது என்பதில் பிரச்சனை.

‘தப்பா நினைச்சிக்காதீங்க சார். சத்தியநாராயணா  ஒங்க தம்பி சார் ‘ என்றான்  ரமணய்யாவிடம்  அப்பர்சாமி.

‘பாரு அப்பர் வெளியிலேந்து பிரேதத்தை,  வாடகைக்கு குடியிருக்கிற வீட்டுக்குக் கொண்டு வர்ரதுங்கறது மட்றாஸ் சிடியிலே பொதுவா ஒத்துக்கற விஷயமில்லே. இங்கே ஏழெட்டு குடித்தனமிருக்கு. எல்லாம் ஆச்சாரமான குடும்பங்கள், பொணத்தை இங்கே கொண்டுவந்து வைக்கறதிலே ஆட்சேபணை எழுப்பும். ஆகாது, ஆகவே ஆகாது’ என்று மறுத்துப்பேசுகிறார் ரமணய்யா.

புதினத்தில்  சோஷலிச நாட்டுப் புத்தகங்கள்  விற்பனைக் குறித்து விவரணை வருகிறது. அது கூர்மையான விமரிசனமாக  அமைந்துள்ளது.

‘சோஷலிஸ நாட்டுப்புத்தகங்கள் முதன்மையும் பெருவாரியாகவும் இருந்தன. அதிலும் சோவியத் சீனப் புத்தகங்கள்  ஆளுமை கொண்டிருந்தன. பல்கேரிய ,ருமேனிய, கிழக்கு ஜெர்மனி நாடுகளின் மாத காலாண்டிதழ்கள் தென்பட்டன. இவற்றின் மேல் அப்புத்தக நிறுவனமாகவே  விலையைநிர்ணயித்துப் போட்டிருந்தது. விலை மலிவில் சீனப்புத்தகங்களுக்கும் ருஷ்யப்புத்தகங்களுக்கும் சரியான வியாபாரப் போட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. வியாபாரத்தைக் காட்டிலும் கொள்கை பரப்பும் முகமாயும் அந்த விலை நிர்ணயப்போட்டி தெரிந்தது.’

இன்றைய வாசகன் நினைத்துப்பார்க்கிறான்.  சிவப்பு  ருஷ்யாவையும் செஞ் சீனாவையும் வரலாறு எங்கே கொண்டுபோய் நிறுத்தி  கண் சிமிட்டி விளையாடிக்கொண்டிருக்கிறது என்பதனை.

ஒரு சமயம் சத்தியநாராயணாவும் அப்பர்சாமியும் சென்னையிலிருந்து  திருப்பதி கோவிலுக்குப் புறப்படும் குடை ஊர்வலத்தைக்காணக்கிளம்புகிறார்கள். சென்னை நகரமே  திரண்டு வந்து  அந்த பெரம்பூர் பாரக்ஸ்  சாலையில் நிற்கிறது. அவதானம் பாப்பய்யர் தெரு, என்பது  திருப்பதி குடை ஊர்வலம்  கடந்து செல்லவேண்டிய நிகழ்ச்சி நிரலின் பார்வையில் கிட்ட தட்ட ஒரு ராணுவ முக்கியத்துவம்  வாய்ந்த தந்திரமிக்க மையம் போன்றது . அழகாய் ஆடம்பரமாய் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களிலும் ஜிகினா மினு மினுப்பிலுமாய் ஜோடி ஜோடியாகக் குடைகள் ஒரு வழியாக அவதானம் பாப்பய்யர் தெருவைக் கடந்து விட்டன என்று எழுதுகிறார் விட்டல் ராவ்.

புரட்டாசி மாதத்தில்  சனிக்கிழமை தோறும் வரும் நாராயணா கோபாலா அரிசி  கேட்டு  யாசிக்கும்  நாமதாரிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் ‘கோய்ந்தா கோய்ந்தா…… கோ  யிந்தா.’ மாடிப்படி ஏறி  வருகிறது செம்புக்கூட்டம். சத்தியநாராயணா  சொல்லி அனுப்புகிறார்.’ இங்கெல்லாம் ஒண்டிக்கட்டைங்க குடியிருக்கிறது. கீழே போய் கேளு’. 

’இல்லை,   போய்ட்டுவா என்று சொல்லியனுப்ப பயம்’  பொது ஜனங்களுக்கு  என்கிற உள்விஷயத்தையும் சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.

சத்தியநாராயணா இன்று இல்லை. அவரின் பூத உடலுக்கு மாலை மரியாதை செய்ய  காம்ரேடு காசி  கைக்குட்டையை விரித்துக் காசு கேட்கிறான். வழக்கமாய் இந்தக்காரியங்களுக்கு எடுப்பு எடுத்து செய்வதில்  முனைப்பாய் இருப்பவன் இந்தக் காசி. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக்  குறைந்த பட்சம் இவ்வளவு போடவேண்டும் என்று நிர்ணயித்து விடுவான் காசி. ஆனால் இறப்புக்கு அப்படியில்லை. மாலை வாங்க காசு போடுவது அவரவர் விருப்பம். கருப்பு ரிப்பன்களைத் துண்டு துண்டாக வெட்டி குண்டூசியுடன்  விநியோகம் நடக்கிறது. சத்தியநாராயணாவைத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் விரும்பியவர்கள் வெறுத்தவர்கள், ஏற்றுக்கொண்டவர்கள் வேறுபட்டுப்போய் எதிர்த்தவர்கள்  என்று எல்லோருமே  கருப்பு ரிப்பனை வாங்கி சட்டையில் குத்திக்கொண்டனர். ஒருவருக்கும் முகமே சரியில்லை என்கிறார் விட்டல்ராவ்.

அப்பர்சாமி பாண்டியனைத்தேடிச் சென்றிருந்தான். இருவரும் ஒரு தேநீர்க் கடையில் அமர்கின்றனர். அப்பர் சாமி சிரித்துக்கொண்டான்.’

‘என்ன நீங்களே சிரிக்கிறீங்க?’

‘ஒரு விஷயத்தை நினைச்சேன்  சிரிப்பு வந்தது’’

‘தெரிஞ்சிக்கலாமா, மிஸ்டர் அப்பர்?’

‘இந்த இடது சாரி வலதுசாரி  விஷயம்தான். யாரெல்லாம் இடதுசாரி, வலதுசாரி?’

‘எல்லாம் இடதுசாரிதான். இடதுக்குள்ளேயே தீவிரமானது, மிதமானதுன்னு ஆயிட்டது பாருங்க அதுக்குள்ளேயே இடது வலதுன்னு’

அப்பர்சாமி மேலும் சொல்லுகிறான்.

‘இன்னைக்கு இடது சாரியா தோண்றது நாளைக்கு வலது சாரியா சூடாறிடலாம்’

இவை அனைத்தும் வாசகர்க்கு விஷயதானங்கள் ஆகின்றன.

காம்ரேடு கிருஷ்ணனுக்கு ஆறு  ஆண் குழந்தைகள். ஏழாவது பிரசவத்துக்குத்  திருமதி கிருஷ்ணன் மருத்துவமனையில் இருக்கிறாள். கிருஷ்ணன் உண்ணாவிரதப்போராட்டத்தில் பந்தலில் இருக்கிறார்.  அவருக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையைப் பார்க்கக் கூட கிருஷ்ணன் மருத்துவமனைக்குச் செல்ல மறுக்கிறார். உண்ணாவிரதம் முக்கியமாகிவிடுகிறது.  அன்று மாலையில் பிறந்த  குழந்தை இறந்து விடுகிறது. அப்போதும் உண்ணாவிரதப்போராட்டத்திலிருந்து கிருஷ்ணன் எழுந்து  மருத்துவமனைக்குப் போகவில்லை. கணவன் மனைவிக்குள் நிரந்தரமாய் அந்த வடு இருக்கவே செய்தது.

தோழர்களிடையே  தலைமாட்டிலிருந்து உள்ளங்கால்வரை  நெரி ஏறிப்பரவி பிளவுகளை ஏற்படுத்தக் கருத்துப்போர் நிகழ  சீனப்படையெடுப்பு அளவு கோலாகக்கொள்ளப்பட்டது. ஒருவரை ஒருவர் துரோகி என்றனர்.தொழிற்சங்கம் பகிரங்கமாக இரண்டு பட்டு நின்றது.

 இரண்டு பட்டு மட்டும் நிற்கவில்லை.  அது முடிந்த கதை. இரண்டும்  வேறு வேறு தொழிற்சங்கமாக  மாறிப்போனது  என்பதுவே   இன்றைய யதார்த்தம்.

தொழிற்சங்கத்திலே   மிலிடன்சி சரிவராது. முதல் ரெண்டு ரவுண்டிலேயே   ஆட்டம் பிரமாதமாக இருக்கும். அப்புறம்  கவுந்துக்கும். தீவிரப்போக்குக்கு நீண்ட நாள்  உத்திரவாதமிருக்காது’ என்கிறார் சத்தியநாராயணா. தேசியத்தலைவர்கள் மரணமுறும்போது  இரட்டை ஒவர் டைம் பணிக்காசு  கிடைக்கும் என்பது  தொழிலாளர்கள்  எல்லோருக்கும் எப்போதும் சந்தோஷத்தைத்தருவது. மாநில அளவிலான தலைவர்கள் மரணம் இந்த வகையில் காசு கொண்டு  தராது. ஆக அது  அவர்களுக்கு வருத்தமே.

இயற்கைச் சீற்றம் சென்னை தொலைபேசி சேவயைப் புரட்டிப்போட்டபோது சத்தியநாராயணா ஒரு அறிக்கையைத் தொழிலாளர்களுக்காக  விடுவிக்கிறார். அது இப்படிப் போகிறது.

‘தொழிலாளிக்கு தொழிற்சங்கம் ஒரு கண் என்றால்  அவன் சேவைபுரியும்  தொலைபேசிச் சந்தாரர்கள் மற்றொரு கண் ஆகும். அவர்களுக்கு அளிக்கப்படும் சிறந்த சேவைதான்  தொழிலாளர் நலன் மீது  அவர்களுக்கும்  கவனமும் அக்கறையும் கொள்ளச்செய்யும். சந்தாதாரர்களான பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிறந்த சேவைதான் தொழிலாளரின்  ஸ்தாபன எதிர்ப்பின் போதும் வேலநிறுத்த நடவடிக்கையின் போதும் அவன் மீதும் அவன் தொழிற்சங்க நடவடிக்கை மீதும்  இரக்கமும் கவனமும் கொண்டு நியாயம் பார்த்து  ஆதரவுக்கரம்  நீட்டவும் ஏதுவாக இருக்கும்’

அப்பர்சாமி  ‘ஃப்ராக்‌ஷன்னா? என்ன என்கிறான்.

 ‘காம்ரேடுகள் சந்திச்சுப் பேசுற முறைக்கூட்டம்னு வச்சுக்க’ சத்திய நாராயணா விடை தருகிறார்.

காம்ரேடுகளுக்குக்  கிருஷ்ணன் தெய்வம் போல. ஒரு காம்ரேடு கொஞ்சம் மாடுகளை வைத்திருப்பவர். அவர் கிருஷ்ணனுக்கு ஒரு சினை மாடு ஒன்றினை  பரிசாக  அளிக்கிறார். கிருஷ்ணனின் குடும்பம்  அந்தப்பசு மாடு மீது தன் உயிரையே வைத்திருந்தது. திருமதி கிருஷ்ணன் மாட்டின் பாலை விற்றுக் காசாக்கிக் குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்தாள். மாட்டுக்குத் தீவனம் வாங்கிப்போடுவாள். மாட்டின் சாணத்தை  வரட்டி தட்டி விற்று வீட்டு காய்கறிச்செலவுக்கு  வைத்துக்கொள்வாள்.

ஒரு நாள் அதிகாலை அப்பர்சாமியின் வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. காம்ரேடு கிருஷ்ணன் திருமதி கிருஷ்ணன், அவரது  பிள்ளைகள் யாவரும் வாயிலில் வந்து  நிற்கிறார்கள்.

‘மாட்டைக்காணோம்’ சின்னவன் சத்தம் போட்டுச்சொன்னான். எல்லோரும் மாட்டுக்கொட்டகை   நோக்கி  விரைவாக நடக்கின்றனர்.’

‘நேத்து ராத்திரி கடைசியா நாந்தான் பார்த்தது.தண்ணி வச்சேன்’ என்று கூறிவிட்டு கலங்கின கண்களோடு கொட்டகையைச்சுற்றிச்சுற்றி  நோட்டம் விட்டாள் திருமதி கிருஷ்ணன். காலையில் பால் கறக்க வந்த வாடிக்கைக்காரன் சொல்லத்தான்  மாடு காணும் என்பதே எல்லோருக்கும் தெரிய வருகிறது. தொலைந்து போன மாடு கொட்டகையில்  போட்டு விட்டுப்போன சாணம் பற்றி இப்படிப் பேச்சு.  பள பள என்று பூட் பாலிஷ் மாதிரி போட்டு விட்டுச்சென்றிருக்கிறது.  சுவாரசியமான ஓர் தகவலும் வருகிறது.

‘விடிய காத்தாலே போட்டிருக்கு’ என்கிறார் திருமதி கிருஷ்ணன்.

மாட்டை ஊரெல்லாம்  தேடுகின்றனர். காம்ரேடுகள்தான் புறப்படுகின்றனர்.  மேடவாக்கம் ஏரி வரைச் சென்று மாடு தேடப்படுகிறது. எரி வறண்டு கிடக்கிறது. தண்ணீர் இல்லை. புல் பூண்டுகள் முளைத்திருந்தன. ஏரியுள் ஆங்காங்கே மாட்டுச்சாணம் கிடந்தது. திருட்டு மாடுகளை ஓட்டி வந்து பேரம் பேசி விற்கும் இடம் அது என்று அழகாகச்சொல்கிறார் விட்டல் ராவ்.   மாடு தேடிப் போனவர்கள் அங்கு தரை மீது  கிடந்த கயிற்றின் துண்டுகளைப் பார்க்கிறார்கள். எதுவும் தொலைந்துபோன மாட்டின் கயிற்றோடு ஒத்துப்போகவில்லை. கிருஷ்ணனுக்கு பசுமாடு  கொடுத்த ரெட்டியார் தம்பதி வீட்டிற்கு வருகை தருகிறது. ரெட்டியார் மனைவி, திருமதி கிருஷ்ணனிடம் பேசுகிறார். மந்திரவாதி ஒருவரிடம் போய் யோசனை கேட்கலாம் என்று சிபாரிசு சொல்கிறார்.

‘கோயில் இல்லே வீடுதான். வெத்திலையில் மை தடவிப் பாத்துச் சொல்லுறா அந்த அம்மா. சொன்னா சரியா இருக்கும் தப்பாது’  என்று விளக்கம் தருகிறாள்.

‘எனக்குத்தெரிஞ்சி நிறையபேர் சொல்றாங்க காம்ரேட், அந்தம்மா பார்த்து சரியா சொல்றாங்களாம். இந்த திசை  இவ்வளவு தூரம்னு தெரிஞ்சிடுதாம்’ என்கிறார் ரெட்டியார்.

காம்ரேட் கிருஷ்ணனுக்குப் போக மனமில்லை. திருமதி கிருஷ்ணன் சின்னு ரெட்டியாரின் மனைவியோடு மந்திரவாதி வீட்டுக்குப் புறப்பட்டுப் போகிறார்.

’தென்கிழக்காலே தென்னந்தோப்பிலே இருக்குமாம். அமாவாசைக்குள்ளே திரும்பி வராட்டா  மாடு நம்பளது இல்லையாம்’ மந்திரவாதி அம்மா  சொன்னதாய்  நமக்கும்  சேதி  சொல்லப்படுகிறது.

  அதற்குள்ளாக மாடுதேடும் குழாம் நங்கநல்லூரை அடுத்த  தலக்காணாஞ்சேரிக்கு விரைகிறது. அங்கு ஒரு சிறிய குட்டை . அதன் அருகே  மாடு அடிக்கிற இடம்.

அங்கு ஒரு பறட்டைத்தலையன்   வந்தவர்க்கு   விளக்கம்  அழகாகச்சொல்கிறான், பழைய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறான்.

‘அதுக்குள்ளேதான் திருட்டு மாடுங்களை அடிக்கிறது. வம்புத் தும்பு  எதுவும் வச்சிகாதிங்க. அவங்களுக்கெல்லாம் எம். எல். ஏ. மந்திரின்னு ஆளிருக்கு.  எவனும் ஒண்ணும் ஆட்ட முடியாது. இந்த மாதிரி னு நயமா சொல்லி தன்மையா கெஞ்சிக்கேட்டாக்க ஒரு தொகை சொல்லுவாங்க. குடுத்துப்டு மாட்டைப்  புடிச்சிகிட்டு போய்ட்டே இருங்க. ஆமா. திருட்டு மாட்டைத்துட்டு குடுத்துல்லே இவங்க வாங்கறாங்க.நாம்ப பணம் குடுத்தாவணும்.. போய்க் கேளுங்க.ஒரு ஆளை மாத்திரம் உள்ளே போய் பார்க்க வுடுவாங்க. மாட்டை  அடையாளம் தெரிஞ்சவங்க போங்க’ என்கிறான். இப்படித்தன்மையாய்ப் பேசிய அவனைக் கெளரவப்படுத்தாமல் போனால் எப்படி? எனவே இடை மறிக்கிறான் அந்தப்பறட்டை.  பத்து ரூபாய் தருகிறார்கள் அவனுக்கு.   அவன்  அதனை ஏற்க வில்லை. அவன்  பின்னுக்காய் இரண்டடி நகர்ந்து கொள்கிறான். இருபத்தைந்து ரூபாய்க்குக் குறையாத  நயம் அவனுடைய சொல் வியாபாரம்.  அதனைக்கொடுத்துவிட்டுத்தான் அவர்கள்  அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும். கம்பீரமாய்ப்பேசும் அந்த பறட்டைத்தலையனை நமக்கும் கண்ணால்  பார்த்துவிடவேண்டும் என ஆசை வருகிறது. விட்டல் ராவ் இவ்விடத்தே  நல்ல சிறுகதையொன்றைச் செறுகி யிருக்கிறார்.

காம்ரேடு கிருஷ்ணன்  மட்டும் பழைய  கட்டிடத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார். எங்கெங்கோ களவாடப்பட்ட மாடுகள் அங்கே  எலும்பும் தோலுமாய்க் காட்சியாகின்றன. கசாப்புக்கென அவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாடும் அவரைத்திரும்பிப் பார்க்கிறது. காதை  ஆட்டி  ஆட்டி  ’என்னைக் காப்பாற்று என்னைக் காப்பாற்று’ என்று அழைப்பது போல இருந்தது கிருஷ்ணனுக்கு என்கிறார் விட்டல் ராவ்.  அங்கு எந்த மாடும் அவருடையதாக இல்லை.  மாடு களவு போனது போனதுதான்.

ஒரு சமயம் காம்ரேடு கிருஷ்ணன் சவால்விட்டுச்சொல்கிறான்.

‘வேணுமானாப்பாரு. என்னோட மூத்தப் பையன்களிலே ஒருவனுக்காச்சும் நிச்சயமா சேரிக் குடும்பம் ஒண்ணிலேந்து பொண்ணு கட்டுவேன்’   ஆரோக்கியமான சமூகப்புரிதலில்  விளைந்த  சொல்லாட்சி.

கிருஷ்ணன் அரும்பாக்கத்திலே வீடு கட்டிக்குடி போகிறார். நாள் நட்சத்திரம் பார்த்துத்தான்.  நாள் நட்சத்திரம் எல்லாம் எல்லா ‘இசத்திற்குள்ளும்’ நுழைந்து வெளிப்பட்டு விடும் ஆற்றலுடையது. .  இராகு காலத்திற்கு யோகம்தான் என்கிறார் விட்டல்ராவ்.  யாரும் அலட்சியம் செய்யாதபடிக்கு ராகு காலம்  ஆளுகையின் உச்சத்தில் உள்ளது என்பதைச் சொல்லுகிறார்.

மத்திய அரசு ஊழியர்கள் எப்போதும் எதாவது கடன் வாங்கிக்கண்டே இருப்பவர்கள். கடனிலிருந்து விடுதலை என்பதை அறியாதவர்கள். அவர்களை கடனாளி ஆக்குவதில் அரசுக்கே ஆனந்தம் போலும் என்கிறார் விட்டல் ராவ். மின்விசிறி வாங்கக்கடன், சைக்கிள்  வாங்கக் கடன்,ஸ்கூட்டர் கடன், வீடு கட்டக்கடன், வறட்சி நிவாரணக்கடனுதவி, அல்லது வெள்ள நிவாரணக்கடனுதவி என்று பட்டியல் நீளுகிறது. கடன் சொசைட்டிக்கள்  அவற்றின் பலவகைக் கடன் கொடுக்கும் வசதி. அதன் ஆளுகை அங்கு ஆட்சி செய்வோர் தேர்ந்தெடுக்கப்படுதல், அதனில் தொழிற்சங்கத்தின் பங்கு என எல்லா விஷயங்களையும் அடுக்கி அடுக்கிச் சொல்கிறார் விட்டல் ராவ்.  சொசைட்டியில் கடன் பெற்றவர்கள் அதிலிருந்து  விடுதலையே ஆவதில்லை. எதாவது ஒரு கடனில் தன் தலையைக் கொடுத்து விட்டு அல்லல் படுபவர்களாகவே இருக்கிறார்கள். சொசைட்டிக்கான நிர்வாகிகள் தேர்தல் அரசியல் ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும்  நடக்கும் தன்மை  கொண்டது என்பதையும்  பாக்கி வைக்காமல் சொல்லி விடுகிறார். 

தொழிற்சங்க வேலையாய் டெல்லிக்குப்போய் ஒரு வாரம் கழித்துத் திரும்பி  வருகிறார் சத்திய நாராயணா.  வீடு பூட்டியிருந்தது. டெம்போ ஒன்றில் சாமான்களை அள்ளிப்போட்டுக்கொண்டு மனைவி அலமேலு   எங்கோ கிளம்பிப்போய் விடுகிறாள். யாரோ ஒரு கருத்த ஆசாமி கூட  வந்துஇருந்திருக்கிறான் என்று சொல்கிறார்கள்.  பொய் அட்ரெ்ஸ் ஒன்று கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறாள். அங்கு போயும் சத்தியநாராயணா பார்த்திருக்கிறான். அவள் எங்குதான் சென்றாளோ?

சத்தியநாராயணா குடிகாரன் என்றும் ஓடுகாலி என்றும் சமூகத்தில்  கெட்டபெயர் வாங்குகிறான்.  பதவி உயர்வுக்கான  இலாகாத் தேர்வு எழுதக்கூட அவனை நிர்வாகம் அனுமதிக்க  மறுக்கிறது.  ஓடிப்போன  மனைவி  அலமேலு  அவள் பெங்களூரில் இருப்பதாக சுகுமார் நாயர் மூலம் தெரிந்துகொள்கிறான்.  சத்தியநாராயணாவும்  பெங்களூர் செல்கிறான். 

என் மகனுக்கு ‘ நான் வச்ச பேரு வருண்’ என்கிறான்.  அது இல்லை இப்போது. அவள் பையன் பெயரை ராஜா என மாற்றிவிட்டாள். அவனைப்பையன்  தந்தையாகப் பார்க்கவில்லை. அந்நியனாகவே பார்க்கிறான். பயந்து பயந்து ஓடுகிறான். 

மின்சார ரயிலில் அப்பர்சாமி பயணிக்கும்போது  நக்சல்பாரித்தோழர்களைப் பார்க்கிறான்.’ பார்ப்பன பாசிச ஆதிக்கம் ஒழிக. நக்சல்பாரிகளை பயங்கரவாதிகளாய்ப் பிரகடனப் படுத்தாதே. நக்சல்பாரிகளை முற்போக்குப் புரட்சியாளர்களாக அங்கீகரி. பிற்போக்குக் கலாசாரமும் நசிவு இலக்கியமும் ஒழிக. ஓட்டுக்கட்சிகளின் பின்னால் போகாதீர்கள். புரட்சிகர முற்போக்கு அரசியல் கொள்கைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.மார்க்சிஸ்ட் லெனினிசம் வாழ்க’ என்று முழக்குகிறார்கள் அந்த நக்சல்பாரிகள். கம்யூனிசத்தின் மற்றுமொரு தடமும் வாசகனுக்குக் காட்சியாகிறது.

‘ஓவரா குடிச்சிருப்பாருங்க. அர்த்த ராத்திரியிலே தண்ணி தாகம் எடுக்கும். உடனே குடிச்சாவணும். தண்ணி சொம்புக்குதான் கட்டில்லயிருந்து குனிஞ்சபடியே கையை கட்டிலுக்குக் கீழே நீட்டித்துழாவியிருக்காரு. அதுக்குள்ளே எல்லாம் குளோஸ். இருதயம் நின்னுபோயிருக்கு’    விடுதிக்காரர்  தலைவர் சத்தியநாராயணா பற்றிய கடைசிச் செய்தி சொல்கிறார்.

சத்தியநாராயணாவின் சடலத்தை தம் வீட்டில்  வைத்து சடங்கு முடித்து  மயானத்துக்குக் கொண்டு செல்லத்தான்  உறவு மயங்குகிறது. நட்பும்தான்.

‘எவனும் வர வேணாய்யா. எவனையும் இனி கெஞ்ச வேணாம். எங்கயும் தோழரைக் கொண்டு போக வேணாம். நாமெல்லாம் யாரய்யா? நாமெல்லாம் அவருக்கு அண்ணன் தம்பி இல்லையா ? நாமளே எல்லாத்தையும் செஞ்சி முடிச்சா போச்சி. பாடிய நேரா யூனியன் ஆபிசுக்கே எடுத்திட்டுப் போயிடலாம். எல்லாரையும் யூனியன் ஆபிசுக்கே வரச்சொல்லிடலாம்’ என்கிறார் தோழர் ஆதி. சிவப்புக்கொடியைப் போர்த்திக்கொண்டு சத்தியநாராயணாவின் சடலம் யூனியன் அலுவலகப் பெஞ்சில் கிடத்தப்பட்டது.

சத்தியநாராயணாவின் இறப்பு இலாகாவில் எவ்வளவு  பணத்தை விடுவிக்கும்.   அலுவலகத்தில் வாரிசு என்று யாரைக்குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார் அவர் என்கிற பேச்சுக்கள் பேசப்பட்டன. தூரத்து உறவுகள் அது குறித்துக் கவலைப்பட  ஆரம்பித்தன. காசா லேசா என்பதே கடைசி விஷயமாகிறது. அப்பர்சாமியின் வீட்டிற்கு  ரமணய்யா வருகிறார். சத்தியநாராயணாவின் இறப்பில்  எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை அறிய  ஆர்வமாய் இருக்கிறார். தனக்கு ஏதும் தொகை  தரப்படுமா என்பதே அவரின் கேள்வி.  இடுகாட்டு  வெட்டியான் புத்தகத்தில் அவர்தான் கையெழுத்துப்போட்டவர்.  மரணச்சான்றிதழ் தானே  பெற்றுத் தன் வசம் வைத்துக்கொள்ள முனைப்பாக இருக்கிறார். இந்நேரம் பார்த்து சுகுமாரன் நாயர்,  சத்தியநராயணாவை உதறிவிட்டுப்போன அலமேலு,  அவளின் சிறு பையன் ஆகிய மூவரும் வந்து அப்பர்சாமி முன்பாக நிற்கின்றனர். எல்லோருக்கும் சத்தியநாராயணாவின் இறப்பு  எவ்வளவு   காசு  அள்ளித்தரும் என்பதே  வினாவாகி  நிற்கிறது.

ஆகப்பெரிய பொதுவுடைமைத் தத்துவத்தை சரியாகப் புரிந்துகொண்டு  அதன்படி வாழ்ந்து காட்ட  ஆசைப்பட்டவன் சத்தியநாராயணா.தனிமனித ஒழுக்கம் என்பதில் கோட்டை விட்டுவிட்டு தானே  முச்சந்திக்கு வருகிறான். வாழ்க்கையில் தோற்றுப்போகிறான். அவனைச்சுற்றி மனிதம் வறண்டு போகிறது. காசே பிரதானமாய்ப்போன நடப்புலகு நெருக்கிக்கொண்டு நிற்கிறது. விட்டல்ராவ் ‘ காம்ரேடுகள்’ நாவல் வழி  யதார்த்தம் சொல்கிறார். மெய்யான தோழர்கள் மட்டுமே   கேட்டிலும் துணிந்து அவனோடு நின்று தோழமைபு காட்டுகிறார்கள். அவர்கள்தானே காம்ரேடுகள்.

                             

3    ’மின்னற்பொழுதுகள்’ கட்டுரை நூல்      

 

பேசும் புதிய சக்தி இதழில் வெளிவந்த கட்டுரைகள் அடங்கிய நூல். பேசும் புதிய சக்தியின் திரு. ஜெ. ஜெயகாந்தன் இந்நூலை  வெளியிட்டுள்ளார். பதினெட்டு கட்டுரைகள் இதனில்  பளிச்சிடுகின்றன. ஆற்றல் மிகு எழுத்தாளுமைகள் பலருடன் விட்டல் ராவ் கொண்ட தோழமையை வாசகர்கள் இங்கே தரிசிக்கலாம்.  இப்புத்தகத்தின்  பதிப்புரையில் ஜெ. ஜெயகாந்தன் இப்படிக் குறிப்பிட்டுள்ளதை  வாசகர்களாகிய நாமும் ஆமோதிக்கிறோம்.

‘எழுத்தாளர், சினிமா விமர்சகர், புகைப்படக்கலைஞர்,ஓவியர் என்று பன்முகங்களைக்கொண்டவர் விட்டல் ராவ். ஒவ்வொரு அத்யாயத்திலும்  அவர் வாழ்ந்த காலத்தில்  அவரது நெருங்கிய நண்பர்களைப்பற்றியும் அவர்களுடன் தனக்கும் தன்னுடைய இலக்கியத்திற்கும் அவருக்கும் அவர்களுடைய இலக்கியத்திற்குமான புரிதல்களையும் முரண்களையும் நட்பு ரீதியான அணுகுமுறையுடன் அவருக்கேயுரிய எழுத்து வசீகரத்துடன் கட்டுரைகளாக எழுதி வந்தார்’

மின்னற்பொழுதுகள் என்கிற இந்நூல்  அமரர் சா. கந்தசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்லது. இந்நூலுக்கு மின்னற்பொழுதுகள் என்று தலைப்பிட்டவர்  மூத்த எழுத்தாளர் திரு. எஸ். சங்கரநாராயணன். அன்னாரின் உழைப்புக்கு ஜெ. ஜெ நன்றி கூறுகிறார்.

விட்டல் ராவ் தன்னுடைய முன்னுரையில் தனது ஐம்பதாண்டு எழுத்தனுபவம் இந்நூலுக்கு ஆதாரமாய் இருந்ததைக்குறிப்பிடுகிறார். ஒவ்வொரு எழுத்தாளரைப்பற்றியும் ஒரு செய்தியை வாசகனுக்குச் சொல்லிப்போகிறார். அதுவே வெகு சுவாரசியமாக உள்ளது. .

சாவி- சுதந்திரமாக எழுத ஆரம்பம் முதலாகவே  விட்டல் ராவுக்குப் பச்சைக்கொடி காட்டியவர்.

கோமல் சுவாமிநாதன் -  இலக்கியத்தில்   அரசியலில்  எதிரெதிர்  நிலைப்பாடுகளிலிருந்து இயங்கியவர்களுக்கெல்லாம் மேடை அமைத்துத் தந்தவர்.

பாவைசந்திரன் -  எழுத்தாளன் எனும் உறவுக்கு மேலே ஒரு நண்பன்.

அசோகமித்திரன் -  சக மனிதன் பேரில் அபரிமிதமான அபிமானம் உடையவர்.

சா. கந்தசாமி-   விட்டல் ராவ்,  மற்றும் சில இலக்கியவாதிகளோடு  இணைந்து  பணியாற்றியவர்.

திலகவதி- விட்டல் ராவின் இளைய சகோதரியாய் அமைந்தவர்.

பாவண்ணன் – தன்னிடமிருக்கும் அறிவை  ஞானத்தை தயங்காது மற்றவர்களுக்கும் தந்துதவும் அன்பு மனிதர். உதாரண புருஷர்.

மா. அரங்கநாதன் -  தமிழின் தலை சிறந்த  எழுத்தாளர்களுள் ஒருவர்.

வெங்கட் சாமிநாதன் – விட்டல் ராவின் மிகுந்த மரியாதைக்கும் உயர்ந்த மதிப்பீட்டிற்கும் உரியவர்.

கலைஞன் மாசிலாமணி நர்மதா இராமலிங்கம்- பதிப்பாளர்களுள்  விட்டல் ராவ் அன்பும் மரியாதையும் வைத்துள்ள இருவர்.  விட்டல் ராவுக்கு உடன் பிறவா சகோதரர்கள்.

ஏ. வி தனுஷ்கோடி- சிறந்த ஓவியர்- பன்முக ஆளுமை கொண்டவர்.  விட்டல் ராவின் நெருங்கிய நண்பர்.

தீபம் திருமலை-  நீண்ட கால நண்பர்.  திருமலையின் தீபம் நாட்களை  விட்டல் ராவால் மறக்கவே இயலாது

கோவை அருவி கலை இலக்கிய அமைப்பாளர்களின்-   செயல்பாடுகள் வியப்பூட்டுவை

இந்நூலில் உள்ள பதினெட்டு கட்டுரைகளில் பதினைந்து பேசும் புதிய சக்தியிலும். மூன்று அம்ருதாவிலும் வெளிவந்தவை.

விட்டல் ராவின் கட்டுரை  நூலுக்குள்  இப்போது நுழையலாம்..

முதல் கட்டுரையின் தலைப்பு  தேனுகா என்னும் அபூர்வராகம். தேனுகா பற்றித்தான் விட்டல் ராவ்  முன்னுரையில் குறிப்பிடாமல் விட்டிருந்தார்.   தேனுகா கும்பகோணத்துக்காரர். கர்நாடக இசையில்  தேனுகா என்பது ஒரு ராகத்தின் பெயர்.  கும்பகோணம் ஸ்டேட் வங்கியில் காசாளரான சுவாமிநாதன் தான் அந்த தேனுகா.

 தீபம் திருமலை தேனுகாவை விட்டல் ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். 1986ல் விட்டல் ராவ் தனது மனைவி கமலா,  மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த   மகள்  ஹரணி இவர்களோடு  கும்பகோணம் செல்கிறார். தேனுகா அவர்களை இரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்றுத் தன் இல்லத்திற்கு அழைத்துச்செல்கிறார்.

 கோபால் ராவ் லைப்ரரி, காந்தி பூங்கா வெங்கட்ரமணா ஹோட்டல், சாரங்கபாணி கோவில் அருகில் இருக்கும் மாமி மெஸ், மாதவ அக்ரஹாரம்,, தாராசுரம் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க  தேனுகா  இவர்களைக் கூட்டிச்செல்கிறார். விட்டல் ராவ்  கும்பகோணத்துக் கரிச்சான் குஞ்சுவையும், எம். வி. வெங்கட்ராமையும்  காந்தி பூங்காவில் வைத்து சந்திக்கிறார்.

இக்கட்டுரையில் ஒரு விஷயத்தை  வாசகர்க்குச் சொல்கிறார் விட்டல் ராவ். தஞ்சை மண்ணின் அசலான எழுத்து என்று  யாரைச்சொல்லலாம் என்கிற ஜெயந்தனின் கேள்விக்குப் பலர் தி. ஜானகிராமனை விடையாய்ச் சொல்கிறார்கள். விட்டல் ராவோ தஞ்சை மண்ணின் அசலான எழுத்துக்கு இருவரைச் சுட்டுகிறார். ஒருவர் சா. கந்தசாமி, மற்றொருவர் சி. எம் முத்து. அதற்கு விளக்கமும் தருகிறார், ’தி.ஜாவின் எழுத்து  ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் நடையுடை மொழி வசனம்வாழ்வியல் பற்றியது. அதுதான் தஞ்சை மண்ணின் அசல் எழுத்து என்பதை என்னால் ஏற்க முடியாது’ என்கிறார் ராவ்.

பிறகு ஒரு முறை  1990 மார்ச்சு மாதம்  தேனுகாவின் அழைப்பின் பேரில் மீண்டும் கும்பகோணம் செல்கிறார். இம்முறை  விட்டல் ராவ் காசி லாட்ஜில் தங்குகிறார். ரவிசுப்ரமணியத்தோடு நட்பு கொள்கிறார். கோபால் ராவ் நூலகத்தில்  வைத்து தஞ்சை பிரகாஷ், சி. எம். முத்து, கவிஞர் கிருஷாங்கினி,டாக்டர். இராமகுருநாதன், எம் வி வெங்கட்ராம் கரிச்சான் குஞ்சு கலைக்கோ இவர்களோடு உரையாடுகிறார். டாக்டர். இராமகுருநாதன்  விட்டல் ராவின் ‘ நதிமூலம்’ நாவலுக்கு ஒரு பாராட்டுக்கூட்டத்தை நடத்தி முடிக்கிறார்.

தனது 64 வயதில் மறைந்துபோன தேனுகா பற்றிய குறிப்போடு சோகமாய் முடிகிறது இக்கட்டுரை.

அடுத்து வருவது ‘ அன்பார்ந்த அசோகமித்திரன்’ என்னும் கட்டுரை. சேலம் மகரிஷி விட்டல் ராவுக்கு நா. பார்த்தசாரதியை அறிமுகப்படுத்தினார். சேலத்தில் மின்சாரம்  வழங்கு அலுவலகத்தில்  இருவரும் பணியாற்றி இருக்கிறார்கள். பிரதானமாய்  சினிமா விஷயங்கள்  விட்டல் ராவ் அசோக மித்திரன் இருவரையும்  இணைத்திருக்கிறது. இருவரும்  சென்னை வீதியில் சைக்கிள் ஓ ட்டுபவர்கள்.  அமெரிக்க நூலகத்திற்கு ஒன்றாய்ப்போய் வருபவர்கள். அசோகமித்திரனின் சைக்கிளில் கொலுவிருக்கும் எண்ணெய் விளக்கும் அதன் பச்சை சிவப்பு கண்ணாடிக்கதவுகளும் பற்றிய சுவாரசியமான தகவல்கள்  கட்டுரையில் வருகின்றன. உஸ்மான் சாலையில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஒட்டிய  பிள்ளையார் கோவில் அருகில்  செக்கச்செவேல் நிறத்தில் இருந்த குடை ரிப்பேர்க்காரனிடம் இருவருமே குடை  ரிப்பேருக்காய்ச்சென்று வந்திருக்கிறார்கள்.

 ‘இவனே’ என்றுதான் எப்போதும் விட்டல் ராவை அசோகமித்திரன் விளிக்கிறார். சோவியத் கலாசார மையத்திற்குச் சென்று ‘பொடெம்கின் யுத்தக்கப்பல்,’மதர்’ இவான் தி டெரிபுள்’ ‘ப்ளாக்சன்’ ஆகிய அரிய திரைப்படங்களை  இருவருமே பார்த்திருக்கிறார்கள். தாம்பரம் அருகே பெருங்களத்தூரில்  இருக்கும் பாவேந்தர் இலக்கியப் பேரவைக்கு இருவரும் சென்று நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்தி நடிகர் திலீப்குமாரோடு அசோகமித்திரன் பழகியிருக்கிறார்.  தன் வசமிருந்த ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலை  அவர் அசோகமித்திரனுக்கு வழங்கியிருக்கிறார்.

சாகித்ய அகாதெமி மாக்ஸ்முல்லர் பவனில் ஒரு மொழிபெயர்ப்புப் பட்டறையை 90களின் தொடக்கத்தில் நடத்தியிருக்கிறது. பட்டறையின் இயக்குனராக அசோகமித்திரன் இருந்திருக்கிறார்.  அது பத்து நாட்கள் நிகழ்வு. திலீப்குமார்,ம.ந. ராமசாமி,திலகவதி, ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், மா. அரங்கநாதன் ஆகியோர் இதனில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

மூன்றாவது கட்டுரை’ஒரு சாவியும் சில பூட்டுக்களும்’. இது சாவி பற்றிப் பேசுகிறது. சாவி என்கிற சா. விசுவநாதன்  ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராகப்பணி ஆற்றியவர். பிறகுதான்  தினமணிக்கதிரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விகடனுக்குப் போட்டியாகக் கதிரைக் கொண்டுவர சாவி பாடுபட்டார். ஜெயகாந்தன் கதைகள் அனைத்தையும் முத்திரக்கதைகளாகவே சாவி வெளியிட்டார். விட்டல் ராவின் முதல் கதையே 1968 ஜனவரியில் நட்சத்திரக்கதையாக வெளியானது. ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கோபுலுவின் கோட்டோவியத்தோடு சாவி  தினமணிக்கதிரில் வெளியிட்டார். இல்லஸ்டிரேடட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங்கை  முன் மாதிரியாக கொண்டு  இதழ்ப் பணியில் சாவி செயல்பட்டார்.

சாவியின் மகள் ஜெயாவுக்குத் திருமணம் நடக்கிறது.  எம். எல். வி கச்சேரியோடு  திருமண வரவேற்பு. சாவியின் மாப்பிள்ளை விமான விபத்தில் காலமாகிறார். சாவியின் ஆற்றொணாத் துயரத்திற்கு ‘ஆறுதல் அளித்து ஆன்ம ஒத்தடம் கொடுத்த ஒரே மனிதர் கலைஞர் கருணாநிதி என்பதையும் விட்டல் ராவ் பதிவு செய்கிறார்.

ஒரு வெளிநாட்டுப்பயணத்தில் சாவி இருந்தபோது தினமணிக்கதிரிலிருந்து வெளியேற்றப்படுகிறார். கலைஞர் உதவியோடு சாவி ‘ குங்குமம்’  என்னும் புதிய இதழைக்கொண்டுவருகிறார்.’ வேறு பெயர் அகப்படவில்லையா? எனக்கலைஞர் சிரித்துக்கொண்டே  கேட்டிருக்கிறார்.’  குங்குமம்’ பெண்கள் விரும்புவது என்று சாவி விடை சொல்லியிருக்கிறார். 2001ல்  அவரது சுயசரிதை வெளியீட்டுவிழா கலைஞர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. சாவி ஏற்புரையின் போது  மயங்கி விழுந்து  மருத்துவ மனையில்  முடிந்து போகிறார். அப்போது அவருக்கு வயது 85.

விட்டலும் கந்தசாமியும் என்பது அடுத்தக் கட்டுரை. சா. கந்தசாமியின் கரடு முரடான ஆக்ருதிகளை  அவரது ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ வாள், நிழல் பாய்ச்சல் ஆகிய சிறுகதைகளிலும், சூரிய வம்சம்,அவன் ஆனது ஆகிய நாவல்களிலும் வாசகன் கண்டெடுத்துக் கொள்ளலாம். சொல்வதை விட சொல்லப்படாமல் விட்ட கதைகளை அவர் படைத்திருப்பதை விட்டல் ராவ் அரிதும் அற்புதமும் என்கிறார். விட்டல் ராவின் நதி மூலம் நாவல் குறித்துத்  தக்கர் பாபா வித்யாலயத்தில்   சா. கந்தசாமி  மிகக்கூர்மையானதொரு விமர்சனத்தைத் தந்ததாய்க் குறிப்பிடுகிறார். 

சா. கந்தசாமியின் குரோம்பேட்டை புது வீட்டு குடிபுகுவிழாவுக்கு மா. அரங்கநாதனோடு சென்றதையும்  யாழ்ப்பாணத்துத் தென்னங்கன்று ஒன்றைப் பரிசுப்பொருளாய்  கொடுக்க எடுத்துச்சென்றதையும் நமக்குச் சொல்கிறார் விட்டல் ராவ்.டெல்லியில் சா. கந்தசாமியோடு  குதூப்மினார்  கண்டதையும் அங்கு ஒரு குஜராத்தி உணவு விடுதியில்  ஆளுக்கு ஒரு செம்பு மோர் வாங்கி சாப்பிட்டதையும் நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.

குமரிமலர்க்காரர் என்னும் கட்டுரை யில்  திரு. ஏ. கே செட்டியார் பற்றிய விஷயங்கள் வருகின்றன. குமரி மலர் என்னும் இதழுக்குச் சொந்தக்காரரும் பதித்திரிகை ஆசிரியரும் உலகம் சுற்றும் தமிழன் எழுதி அந்தப்பெயரைப் பட்டப்பெயராகச் சூட்டிக்கொண்ட திரு. ஏ. கருப்பண்ணச் செட்டியார் பற்றி சுவாரசியமான பல விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ’தமிழ் நாடு’ என்னும்பயணக்கட்டுரைத் தொகுப்பினைக் கொண்டு வந்தவர் ஏ. கே செட்டியார். அது கூறும் ஒரு செய்தி.’ இராயபுரம் ரெயில்வே ஸ்டேஷன் தென்னிந்தியாவின் முதல் புகைவண்டி நிலையம். இந்த ஸ்டேஷன் கட்டடத்திற்கான  கடகால் தோண்டு விழாவின் போது  பாடப்பட்ட கும்மிப்பாடலும், டிராம் வண்டிக்கான ஒரு விசேஷக் கும்மிப்பாடலும்  ஏ. கே. செட்டியாரால் பாடுபட்டுத் தேடிச் சேகரித்து இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.’

அடுத்த கட்டுரை ‘கலைஞன் மாசிலாமணி சமூகம்’. லா. ச. ராவின் சிறுகதைத்தொகுப்பைத்தேடிக்கொண்டு பாண்டி பஜாரில் கலைஞன் பதிப்பகம் போன விட்டல் ராவ் மாசிலாமணியைச் சந்திக்கிறார். 1933ல் தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டை ஒட்டி கலைஞன் பதிப்பகம் 100 சிறுகதைகள் கொண்ட தொகுப்பை வெளியிடுகிறது. விட்டல் ராவ்தான்  சிறுகதைகள் தேர்வுக்குப் பொறுப்பாக்கப்பட்டார்.

 நர்மதா பதிப்பகம், இராமலிங்கம்  மாசிலாமணியின் மைத்துனர். விட்டல் ராவின் வண்ணமுகங்கள் நாவல்   1994ல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது. அந்த நாவலை  வெளியிட்டது நர்மதா. விட்டல் ராவின் வாழ்வின் உன்னதங்கள் என்னும் கட்டுரைத் தொகுப்பு   2012ல் டெல்லி குசுமாஞ்சலி  சாகித்ய சம்மான் விருது பெற்றது. இதனையும்  நர்மதா இராமலிங்கம்தான் வெளியிட்டவர். கலைஞன் பதிப்பக வெள்ளி விழாவின்போது 1979-80 ல் தூறல் என்கிற விட்டல் ராவின் நாவலை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. விட்டல் ராவின் தங்கையின் திருமணத்தின் போது  மாசிலாமணி  நேரில் வருகை தந்து வாழ்த்தியவர்.  மாசிலாமணி அவர்கள் தனது  எண்பது வயதில் காலமானார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பெரிய மாலைபோட்டு அவரை வழியனுப்பி வைத்தார் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

பாவண்ணன் சில நிகழ்வுகள் சில அன்பர்கள் என்பது அடுத்த கட்டுரை. பாவண்ணன் எனும் பேனா பெயருக்குரிய பாஸ்கரன் பெங்களூருக்கு வந்தது முதல் எனது உற்ற நண்பராய் உண்மையான வாசகராய் மிக அருகிலுள்ள முக்கியப் படைப்பாளியாய் வாய்த்திருப்பது என் அதிருஷ்டம் என்கிறார் விட்டல் ராவ்.  பெங்களூரில் சேலம் விஜயனும்  இளம் விஞ்ஞானி திருஞானசம்மந்தமும் விட்டல் ராவுக்கு உற்ற துணையாய் விளங்குகிறார்கள்.  பாவண்ணனின் நாவல் ‘பாய்மரக்கப்பல்’  மிகவும் குறிப்பிடத்தக்கது. 1995 ஆம் ஆண்டு இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இது புதுச்சேரியில்  வாழ்ந்த மூன்று தலைமுறைகளைப் பற்றிப் பேசும் நாவல். பாவண்ணன் இயற்கையை அதன் அழகிய படைப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர் என்பது அவருடைய சில கவிதைகளிலும் பல சிறுகதைகளிலும் தெரியவருகிறது என்கிறார் விட்டல் ராவ். பாவண்ணனுக்கு இராமானுஜர், சங்கரர், பசவண்ணர் ஆகிய மூவரின் ஆன்மீகப்பங்களிப்பு  பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. பாவண்ணனின் ஆட்டம்,ஜெயம்மா,சைக்கிள், கல்தொட்டி போன்ற சிறுகதைகள் உணர்ச்சி பொங்க படைக்கப்பட்டவை. கட்டுரைகளில் உச்சத்தைத்தொட்டவர்  எழுத்தாளர் பாவண்ணன் என்கிறார் விட்டல் ராவ்.

திருமலை தீபம் பற்றிய கட்டுரை  திருமலையின் தாராள மனசு பற்றிப் பேசுகிறது.’ தீபத்தில் நான் நிறையவே எழுதினேன். மாதம் ஒரு சிறுகதை  குறுநாவல்கள் என ஏராளமாய் எழுதினேன்.’ வெப்பக்காற்று’  என்கிற தொடர் நாவலும் எழுதினேன்’ என்கிறார் விட்டல். 1988  ஜனவரியில் உலகத்தமிழ் மாநாட்டுக்கு மலேஷியா போய் வந்த நா. பா  சென்னை வந்ததுமே மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்.  தனது ஐம்பத்து நான்கு வயதில் நா. பா காலமாகிறார். மாசிலாமணி, இராமலிங்கம், இராம. கண்ணப்பன்  ஆகியோரோடு  சென்று விட்டல் ராவ்   நா. பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, தொ மு சி ரகுநாதன், பி. எஸ். ராமையா, க. நா. சுப்பிரமணியம் முதலிய இலக்கியவாதிகளுக்கு  சாகித்ய அகாடெமி பரிசு கிடைக்கக் காரணமாக இருந்தவர் நா.பார்த்தசாரதிதான் என்று அசோகமித்திரன் குறிப்பிட்டதை வாசகனுக்குச்சொல்கிறார் விட்டல் ராவ்.

நேர்மைக்குப் பெயர் பெற்றவரும் உழைப்புக்கும் அலைச்சலுக்கும் அஞ்சாதவருமான தீபம் திருமலையின்  அரிய குணங்களைப் போற்றிப் பேசுகிறார் விட்டல் ராவ்.

சகோதரி திலகவதி அவர்கள் என்கிற தலைப்பிடப்பட்டது அடுத்த கட்டுரை. திரு இராமலிங்கம் இல்லத்தில் நடந்த எழுத்தாளர்கள் கூட்டத்தில்  மல்லிகையின் ஆசிரியர்  இலங்கை டொமினிக். ஜீவா கலந்துகொள்கிறார். அந்தக்கூட்டத்தில்தான் திலகவதியைச் சந்தித்துப் பேசுகிறார் விட்டல் ராவ். பின்னர் சைக்கிளிலேயே ஆதம்பாக்கத்திலிருந்து போரூர் திலகவதியின் இல்லத்திற்குச் செல்கிறார்.  விட்டல் ராவின்  இல்லத்திற்கு   மகள் ஹரணி பிறந்தநாளன்று  திலகவதி நேரில் வந்து வாழ்த்துகிறார். விட்டல் ராவ் வசித்த தெருவுக்கு அடுத்த தெருவில் தி. க. சி  தன் மூத்த மகனோடு வசித்திருக்கிறார். தி.க.சி யை  திலகவதி இல்லத்திற்கு விட்டல் ராவ் அழைத்துச்சென்றிருக்கிறார். விட்டல் ராவின் தங்கையின் திருமணத்திற்கு திலகவதி வந்து சிறப்பித்திருக்கிறார். திலகவதியின் ’நேசத்துணை’ நாவலை இந்தியா டுடேயில்  விட்டல் ராவ் விமர்சனம் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி நடத்திய மொழிபெயர்ப்புப்பட்டறைகளில்  இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

‘ஆங்கிலம் நிச்சயம் இந்திய மொழிகள் எதையும் அடித்துக் கொன்று விடாது, கொல்லவும் முடியாது. ஆங்கிலம் பிற பிராந்திய மொழிகளைக்கொல்லும் என்பது விசாலமான பார்வையன்று. எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியால் அழிக்கப்பட்டு விடாது’ என்று சொல்கிறார் விட்டல் ராவ். திலகவதியின் ‘கல்மரம்’ சாகித்ய அகாதெமி விருது பெற்றது. திலகவதியின் இதழ் ‘அம்ருதா’ வில் விட்டல் ராவ் நிறையவே எழுதியுள்ளார். அம்ருதாவுக்காக கணபதி ஸ்தபதியை திலகவதியும் விட்டலும் பேட்டி காண்கின்றனர். தமிழுடன் சமஸ்கிருதத்திலும்  புலமை பெற்றிருந்த கணபதி ஸ்தபதியவர்கள் ’சமஸ்கிருத அறிவு கலைஞர்களுக்கு அவசிமென்கிறார்’ என்பதையும் விட்டல் ராவ் பதிவு செய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும்  முத்துக்கள் பத்து எனப் படைப்புக்களைத்தேர்ந்து  வெளியிடும் திலகவதியை விட்டல் பாராட்டுகிறார்.

’கோவையில் ஒர் அருவி’ என்னும் கட்டுரை  கோவை நகரில் இலக்கிய சாகசங்கள் நிகழ்த்தும்  அமைப்பு பற்றிப்பேசுகிறது. அருவியின் முக்கிய மனிதர்கள் ஸ்ரீநிவாஸ், சூரி,  சுரேஷ்குமார், ஆனந்த், ஞானவேல் என அத்தனைபேரையும் பெருமையோடு  விட்டல்  நினைவு கூறுகிறார். தமிழகக்கோட்டைகள் பற்றியும்  விட்டல் ராவ் இவ்வமைப்பில் உரையாற்றுகிறார்.  விட்டல்ராவ் அருவியின் சீனுவாசன் வீட்டில் தங்கியிருக்கச்செல்கிறார். அன்றிரவே    சீனுவாசன் வாழ்வு  முடிந்துபோனதை  நினைத்து நினைத்து வருந்துகிறார். 2016ல் அருவியில் ஒரு நிகழ்வுக்குப் பாவண்ணனோடு மீண்டும்  பயணம் செய்கிறார் விட்டல் ராவ்.

 ’எழுத்தில் சித்து’  மா. அரங்கநாதன் கட்டுரயை அடுத்ததாய்ப் பார்க்கலாம். விட்டல் ராவ் திருப்போரூருக்கு அரங்கநாதனோடு பேருந்தில் பயணிக்கிறார். அவர்களுக்கு வந்த காசு கஷ்டம் பாருங்கள்.’ கோயில் வாசலில்  செருப்பு விடுவதற்கு இரண்டு மூன்று கடைகள். ஜோடி ஒன்றுக்கு இரண்டணா என அறிவிப்பு. செருப்பை விட்டால் கையிருப்புக்காசு குறையும். செருப்பை விடாவிட்டால்  கோயிலுக்குள் போக முடியாது.’ ’சரி வெளியிலிருந்தே கோயிலைச் சுத்திடலாம்’  என்றார் அரங்கநாதன்.

மா. அரங்கநாதனின் ‘ பொருளின் பொருள் கவிதை’  பற்றி வியந்து பேசுகிறார் விட்டல் ராவ்.  அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும் சா.கந்தசாமியும்  அக்கவிதைத் தொகுப்பைப் பாராட்டியிருக்கிறார்கள் .’இவனே பிரமாதமா எழுதியிருக்கார். அவர் என்ன தமிழ் பண்டிட்டா?’  என்று அசோகமித்திரன் பேசியிருக்கிறார். க.நா. சுவை விட்டல் ராவ் அரங்கநாதனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மா. அரங்கநாதன் ‘முன்றில்’ அமைப்பை ஏற்படுத்திப்  பல கூட்டங்கள் நடத்தியவர். மா. அரங்கநாதனுக்குச் சாகித்ய அகாதெமி பரிசு  போன்ற விருது கெளரவம்  அளிக்கப்படாதது அது போன்ற நிறுவனங்களுக்கு கெளரவத்தையும் சிறப்பையும் பெருமையையும்  சேர்க்காது என்று ஒரு கூரிய விமர்சனமே வைக்கிறார் விட்டல் ராவ்.

அடுத்து தனுஷ்கோடியின் பன்முக ஆளுமை என்னும் கட்டுரைக்கு வருகிறோம். வெளியுலகிற்குத்தெரியாமலே சுடர்விட்டுப் பிரகாசித்தவர் திரு. ஆற்காடு வரதராசபிள்ளை தனுஷ்கோடி.  மதராஸ் ஆர்ட் கிளப்பின் ஓவியர் அதன் செயலர்.  நீர் வண்ண ஓவியத்தில் நிபுணர். விட்டல் ராவ் அவர் உதவியோடுதான்  அமெரிக்க நூலகத்தில் உறுப்பினரானார்.  தனுஷ்கோடி மேடை, அரங்கம்,நடிப்பு,  நாடக இயக்கம் ஆகிய துறைகளில் பிரகாசித்தவர். மொழிபெயர்ப்புத் திறன் மிக்கவர்.

தனது சினிமா அனுபவத்தில் விட்டல் ராவுக்கு இருவர் கன்னத்தில் அறைவாங்கி உணர்ச்சியை வெளிப்படுத்தியது மனதில் இன்றும் நிற்கிறது. ஒன்று  சகஸ்ரநாமம் பத்மினியிடம் அறைவாங்குவது படம் ‘ மண மகள்’. இரண்டாவது   ராஜபார்வை படத்தில் தனுஷ்கோடி  கன்னத்தில் அறை வாங்கினபோது காட்டும் முக பாவம்.

பதிமூன்றாவது கட்டுரை’ எல்லோருக்கும் இனிய கோமல்’. கோமலின்’ கோடுகள் இல்லாத கோலம்’ நாடகத்தை  மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்ல்  தன் மனைவியோடு விட்டல் ராவ் முதன் முதலில் பார்க்கிறார். அந்நிகழ்ச்சிக்கு அசோகமித்திரன், வைத்தீஸ்வரன்,லா.ச.ரா, தி.க.சி ஆகியோரும் வந்திருக்கிறார்கள். சுப மங்களா வை 1991ல்  கோமலின் பொறுப்பில் வெளிவருகிறது. ஸ்டான்லி க்ராமர், க்ளாட் மோனே ஆகிய நவீன ஓவியர்கள் குறித்துக் கோமல் கேட்டுக்கொண்டதற்கிணங்க கட்டுரையைத்தந்தார் விட்டல் ராவ். கோமலுக்கு ஓவியத்தின் பால் இருந்த  அபார ஞானம் விட்டலை பிரமிக்க வைக்கிறது.

 விட்டல் குறித்து, கோமல்,

‘ஒரு மார்க்சிய தொழிறசங்கவாதியாக இருந்து கொண்டும் உங்கள் இடது சாரி மனதை  உங்கள் எழுத்து வாயிலாகப் பார்க்க முடியவில்லை’ என்று சொன்னதை நாமும் ஆமோதிக்கிறோம்.

புதியபார்வையும் பாவையும் என்னும் கட்டுரை பதினான்காவது கட்டுரை. இதனில் பாவைசந்திரனைப்பற்றிப் பேசுகிறார் விட்டல் ராவ். சாவி குங்குமத்தைவிட்டுச்செல்கையில் பாவைசந்திரனை அடையாளம் காட்டிவிட்டுச் செல்கிறார். பாவை பொறுப்பாசிரியராக இயங்கிய குங்குமத்தில்  விட்டல் ராவின் கதைகள் நிறையவே வெளிவந்தன., 1992ல் துவங்கப்பட்ட புதியபார்வைக்கு பாவை இணை ஆசிரியரானார். தாஜ்கொரமண்டலில் வைத்து திரு. நடராஜனால் இதழ் ஆரம்பிக்கப்ப்ட்டது. கோமல்,பாவைசந்திரன், சா.கந்தசாமி,செ.யோகநாதன், கலைஞன் மாசிலாமணி, ஞானி, பாரதிராஜா,சுஜாதா, விக்கிரமன் வைரமுத்து, இந்துமதி ஆகியோர் விழாவுக்கு வந்திருந்தனர். வாழ்த்தினர். புதியபார்வையின் பெண்கள் சிறப்பிதழ், பம்பாய் சிறப்பிதழ்  ஒரிசா சிறப்பிதழ் ஆகியன புகழ்பெற்றவை.

மற்றொரு கோட்டை என்கிற அடுத்த கட்டுரையில்  சரித்திரப் பேராசிரியர் வெங்கணாச்சார்  பற்றியும் சித்திரதுர்கம் கோட்டைபற்றியும் விஷயங்கள் வருகின்றன. தொடர்ந்து வரும் கட்டுரை ‘இறந்து போனதாக’.  விட்டல் ராவ்  என்னும் அதே பெயர் கொண்ட  வேறு ஒருவர்  தொலைபேசித் துறையில் பணியாற்றுபவர்  இறந்து போக, இவர்தான் இறந்துவிட்டார் என்று தவறுதலாக எண்ணிவிட்டதன் விளைவுகள் பற்றிய செய்தி வருகிறது.

முகம் என்னும் கட்டுரை ஐம்பத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின்  சேலத்துச் சண்முக சுந்தரம் என்னும் நண்பரைச் சந்தித்த அனுபவம் பற்றிப்பேசுகிறது. இந்தக்கட்டுரையில் வரும் மத நல்லிணக்க முன்னோடி  ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தி  என்னும் நபரை  அறிமுகப்படுத்துகிறார் விட்டல் ராவ்.  இத்தொகுப்பில் வரும் கடைசிக் கட்டுரை மகரிஷி நினைவுகள்.  விட்டல் ராவோடு சேலத்தில் மின்சாரம் வழங்கு கம்பெனியில் பணியாற்றிய ந்ண்பர் பற்றியது. மகரிஷியின் நாவல் ‘பனி மலை’ கே.எஸ். கோபாலகிருஷ்ணனால் திரைப்படமாக்கப்பட்டது. மகரிஷிக்கு இந்த விஷயமே தெரியாது. நான் நீதிமன்றம் போவேன் என்று  கே.எஸ். ஜி யிடம் மகரிஷி  முறையிட  அவர் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.  மகரிஷிக்கு  உரிய பணமும் தந்தார்.

தீபம் நா.பாவுக்கும், கல்கி கி. ராஜேந்திரனுக்கும்  விட்டல் ராவை அறிமுகப்படுத்தியவர் மகரிஷி. எழுத்தாளர் பாவண்ணனே மகரிஷி  தனது 87 வயதில் இயற்கை எய்தியச் செய்தியை  விட்டல் ராவுக்குத் தெரிவிக்கிறார்.

விட்டல்ராவ் என்னும் இலக்கிய  ஆளுமையின் ஆழமும் விசாலமும் அறிய நாம் வாசிக்கவேண்டிய  ஒரு அரிய நூல் இது ’மின்னற் பொழுதுகள்’

----------------------------------------------------------------------------.

 

 

 

 

 

 

 

                                                                 4.   ’போக்கிடம்’                                

 

எழுத்தாளர் விட்டல்ராவ்  எழுதிய ‘போக்கிடம்’ நாவல் 1976 ல் இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றிருக்கிறது.  இதுவே இலக்கியச் சிந்தனையின் முதல் ஆண்டு பரிசுத்தேர்வு. விட்டல்ராவை வைத்து   இலக்கிய அமைப்பில்  ஒரு நல்ல துவக்கம்.  கையெழுத்துப் பிரதியாக நாவலை  அனுப்பிப் போட்டியிலே வென்றிருக்கிறார் விட்டல் ராவ்.

சேலம் மாவட்டத்தில்  மாக்னசைட் இரும்புத்தாது சேர்வராயன்  மலையை  அடுத்துப் புதைந்து கிடப்பதை நாம் கேள்வியுற்றிருக்கிறோம். சேலம் ஜில்லாவிலே  ஒரு குக்கிராமம் டேனிஷ் பேட்டை.. அங்கே  இரும்புத்தாதுவை  சுரங்கம் வைத்து  வெட்டி எடுக்க அரசு திட்டமிடுகிறது. அரசின் ஆணைக்கிணங்க கிராமத்தைக்காலி செய்து  மூட்டை முடிச்சுகளோடு கிராமத்து  மக்கள்  வேறு ஒரு இருப்பிடம் நோக்கிப் பயணமாகிறார்கள். அந்தச்  சிறிய கிராமத்தில் ஆசிரியப்பணி செய்யச் சென்ற  சுகவனம்  இந்தப்புனைகதையின் நாயகன். அவ்வாசிரியன் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் நமக்குக் கதைப்பொருளாகின்றன.

சிறுவாணி வாசகர் வட்டம் வெளியிட்ட இப்புதினத்தின் மூன்றாம் பதிப்புக்கு   மதிப்பிற்குரிய  எழுத்தாளர் பாவண்ணன் முன்னுரை வழங்கியிருக்கிறார். அம்முன்னுரை இப்படிப்பேசுகிறது.

‘போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே  அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே  இடப்பெயர்வுகளும்  உருவாகிவிட்ட சூழலில்  இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒரு போதும் தன் இளமையை இழப்பதில்லை. காலம்தோறும்  வாழ்வதற்கான வழிகளைத்தேடி  அமைதியைத்தேடி பாதுகாப்பத்தேடி வெற்றியைத்தேடி சுதந்திரத்தைத்தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.’

சேலத்து மக்கள் பேசும் மொழியை அப்படியே அந்த மண்ணின் மணத்தோடு  எழுத்தில் வழங்கியிருக்கிறார் விட்டல்ராவ்.  அவரும் சேலத்துக்காரர்தான்.’ உங்களுடன் கொஞ்சநேரம்’  என்று தலைப்பிட்டு ஒரு சிறு கட்டுரையை இப்புத்தகத்தில்  விட்டல்ராவ்  கொடுத்துள்ளார். அதனைப்படித்து நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

‘’சேலம் ஜில்லா என் ஜில்லா. நான் பிறந்து வளர்ந்து ஆளான ஜில்லா. அதன் மண்ணை, அதன் மனிதர்களை,அவர்களின் விஷயங்களையெல்லாம்  இலக்கியமாய்ப்படைத்து என் ஜில்லாவைத் தமிழ் இலக்கியத்தில் ஓர் உன்னத ஸ்தானம் பெற வைக்கவெண்டும் என்பது  எனது தீராத ஆசை. அந்த ஆசையை ’போக்கிடம்’ தீர்த்திருக்கிறதென்று நான் அறியும் நேரமே எனக்கு மிக உன்னதமான நேரம்’

பாவண்ணன் விட்டல்ராவை நேர்காண்பதுவும் நூலின் கடைசிப் பகுதியாய் இணைக்கப்பட்டுள்ளது. விட்டல்ராவை  மேலும்  விஸ்தாரமாய்   வாசகர்கள் அறியக்கூடும்.

டேனிஷ்பேட்டைக்காரனுக்கு சேர்வராயன்மலை ஓர் உயிருள்ள பொருள். அவன் இப்படிப்பேசுகிறான்.

.போனவாட்டி பாத்ததுக்கு இந்தவாட்டி பாக்கிறப்போ வளர்ந்திருக்கு மலை…இந்த மலை இப்படியே வளந்து கினே போவும்.. வளந்து மானத்தைத்தொடும் தோ  அது  கீதே அதுதான் அப்பா மலை. இது ஆத்தா, தொலைவுலே தெரியிது பாரு புளூவ்வா அதெல்லாம் புள்ளிங்க’

போக்கிடம் புதினத்தில் ‘பேச்சி’ என்பவளின் பாத்திரப்படைப்பு  உச்சம் எனலாம். கதைப்பின்னலில்  அவளைச்சுற்றியே அனேகமாக அத்தனை பாத்திரங்களும்  சுழன்று வருவதைப்பார்க்க முடிகிறது.  பேச்சி கணவனை இழந்தவள். பெற்ற பிள்ளை  ஒருவன்  அவளோடு கூடவே இருக்கிறான். பேச்சிக்கு இருபது வயது.  ஆடுகளை வைத்து அவள் பிழைப்பு நடக்கிறது. டேனிஷ்பேட்டையின் பஞ்சாயத்து போர்டு தலைவர் மாரிமுத்துக்கவுண்டர். அவருக்கும் பேச்சிக்கும் உள்ள பாலியல் தொடர்பு ஊரே அறிந்த ரகசியம். மாரிமுத்துக்கவுண்டர் பேச்சிக்கு உதவிசெய்து ஆதரிக்கும் நோக்கத்தில் எல்லாம் பழகவில்லை. அவரின் பாலியல் இச்சைக்கு வடிகாலாக மட்டுமே  அவள்  காட்டப்படுகிறாள்.  சுகவனமும் அவளோடு எப்போதேனும் தொடர்பு வைத்துக்கொள்கிறான். பாலுணர்வு என்னும் பிசாசு யாரையும் விட்டு வைப்பதில்லை. சுப்புரு வுக்கு அவளை அனுபவித்துவிடவேண்டும் என்கிற  உணர்வு மட்டுமே பிரதானமாக உள்ளது.

டேனிஷ் பேட்டைக்கிக்குப் புதிய தார்ச்சாலை அமைக்க வரும்  ரோட் ரோல்லர்  டிரைவர் பீர் முகம்மது   பேச்சியை அழைத்துக்கொண்டு  வேறு எங்கோ ஒரு இடத்துக்குச் சென்றுவிடுகிறான். அவர்களோடு சிறுவன் பையப்பனும் சென்றுவிடுகிறான்.

மொரப்பூர் என்கிற சற்று பெரிய ஊரில் பிளாக் டெவலப்மன்ட்  அலுவலகம்  இருந்தது.  அந்த அலுவலகத்திற்குச் சென்றுதான்  சுகவனம் ஆசிரியர்  வேலையில் சேர்ந்ததற்கான அறிக்கை தரவேண்டும். அந்தப் பள்ளிப்பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வலுவலகம் பற்றி விட்டல்ராவ் அழகாக எழுதுகிறார். அதில்தான் எத்தனை  எள்ளல்.  அத்தனையும் பாந்தமான எள்ளல்.

‘பிளாக் டெவலப்மெண்ட் அலுவலகம் மிகவும் சிறியது. நான்கைந்து குமாஸ்தாக்கள்  கடை விரித்திருந்தனர். மாநில அரசு அலுவலகங்களுக்கே உரிய  லட்சணத்தோடு , சாண  நிறத்து காகிதக்குவியல்களும், காவி நிற ஃபைல்களும், ஒரு தலைமுறைக்கால புழுதி படர்ந்து,  மனித சக்தியையும்  சாதனையையும்  நம்பிக்கையையும்  மீறிப்போய்க் கிடந்தன. எடை போட்டாலுங்கூட  அலுவலகத்துச்  சிப்பந்திகளின் எடையைவிடக்  காகிதங்களின் எடையே கூடுதலாக இருக்கும்.’

சுகவனம் ஜாயினிங் ரிபோர்ட்டை எழுதி ஒரு குமாஸ்தாவிடம்  நீட்டிவிட்டு  சர்வீஸ் ரெஜிஸ்டருக்காக  ஒரு  அரை ரூபாய் நாணயத்தை  எடுத்துவைத்தான்.  இந்த வரியில் நீட்டிவிட்டு, எடுத்து வைத்து, என்பன ’ஆகப்பொறுத்தமாக வார்த்தைகள். அந்த குமாஸ்தா  சுகவனத்திடம் என்ன பதில்  சொல்கிறார் பாருங்கள்.

’இன்ஸ்பெக்‌ஷனுக்கு டெபுடி பால் கிருபைநாதன் வரும்போது கோழியடிச்சு கவனிச்சுக்கோங்க…ஒங்களுக்கு எந்தத்தொந்தரவும் கிடையாது..’  சொல்லிவிட்டுச் சிரித்தான்  அந்த  குமாஸ்தா. தனக்கே உரிய  நகைச்சுவை உணர்வோடு  எழுதுகிறார் விட்டல் ராவ்.

மாரிமுத்துக்கவுண்டருக்கு ஒரு  மகன் தீர்த்தகிரி.  பள்ளியிறுதி வகுப்பில் மார்ச்சில் தோற்றுவிட்டு அக்டோபருக்குத் தயாராகிறான். அவன் தன் பாட்டி வீட்டிலே தங்கி படிக்கிறான். சுகவனத்திடம் தீர்த்தகிரி உரையாடுகிறான். அவன் ஆங்கிலத்திலே  மிக மிகப் பலஹீனமானவன். ஆனால் இந்தி மொழியைத்தான் எதிர்த்தானாம். படிக்கவும் மாட்டானாம்.    இந்தியில் முப்பது மார்க் வாங்கியிருக்கிறான். அதெப்படி சாத்தியமாயிற்று என்கிறார் சுகவனம். அதற்கு தீர்த்தகிரி சரியாகப் பதில் தருகிறான்.

‘ஆமா சார். பரீட்சைக்கு படிச்சிட்டெல்லாம் போவுறதில்லே. படிக்கவுந்தெரியாதே.ஆனா இந்திப்பரீட்சையிலே தர்ராங்களே கொர்ச்சின் பேப்பரு. அந்த கொர்ச்சின் பேப்பரை அப்பிடியே ஆன்ஸ்ர் பேப்பர்லே காப்பிப் பண்ணித் தந்தாப் போதும். எங்க இந்தி மாஸ்டரு முப்பதை போட்டிருவாரு’

இந்தப்படிக்கு  அண்ணன்மார்கள்  படித்த  அதே இந்தியை எதிர்த்துத்தான் தமிழ் நிலத்தில் தொடர்  போராட்டங்கள்  ரயில் மறியல்  கல்லடி துப்பாக்கிச்சூடு தீயிடுதல் தற்கொலை தொடர்ந்து ஆட்சிமாற்றம் அத்தனையும்  அரங்கேறியது. வாசகர்களில் சிலருக்கேனும் இச்செய்தி  சிந்தனையைக் கிளறக்கூடும்.

சுகவனம் பணியாற்றும்  பள்ளிக்கூடம் பற்றி அறிய வேண்டாமா? ஒன்று முதல் ஐந்து வரை வகுப்புகள். ஐந்து வகுப்புகளிலும் சேர்த்து மொத்தமாய் எழுபது மாணவர்கள். ஐந்து வகுப்புக்களுக்கும் ஒரே ஆசிரியர்.  அது சுகவனம்தான். பள்ளிக்குப் பாதி மாணவர்கள் தாமதமாக வருவார்கள். அல்லது வராமல்  இருப்பார்கள். அவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்  என்று சுகவனம் கேள்வி வைக்கிறான். மானவர்களின் பதில்கள் இப்படி வருகின்றன.

‘காட்டுக்கு வெறகு பொறுக்கியாறப்  போயிருப்பாஞ் சார்’

‘கம்மங்கொல்லையிலே  குருவி  முடுக்கிக்கினு கீறாஞ்சார்.’

‘சந்தைக்குப் பூ எடுத்துக்கினு போயிருப்பாஞ்  சார்’

பேச்சியின் மகன் பையப்பனை பிரம்பால் அடித்து விடுகிறார் ஆசிரியர்  சுகவனம். பேச்சி பள்ளிக்கூடத்திற்கு வந்து சத்தம் போடுகிறாள்.

‘நீங்க மனுசந்தானா? இந்த மாதிரி பச்செ புள்ளையைப் போட்டுக் குச்சியாலே அடிச்சிருக்கீங்களே அப்பனில்லாத பயன்னா அனாதயாப் போய்ட்டானா என்ன..? பாருங்க இவுத்தெ’ என்றாள். பையனை  முன்பக்கமாய் இழுத்து  உள்ளங்கையைத் திருப்பிக் காட்டுகிறாள்.

‘மன்னிச்சுக்கோம்மா.. வேணுமின்னு அடிக்கல்லே. பையனைத் திருத்தோணுமின்னுதான்’ தடுமாறிப்பதில் சொல்கிறான் சுகவனம்.

‘நல்லாக்கீது ஒங்க நடவடிக்கெ’ சொல்லிய பேச்சி சுகவனத்தை  ஒருமுறை முறைக்கிறாள்.

இரும்புக்கனிமம்  தேடி வந்த  மத்திய அரசு  அதிகாரிகளோடு சுகவனம் அவர்கள் இலாகா  வண்டியில் இங்கும் அங்கும்  போய் வருகிறான். டேனிஷ்பேட்டையில் இரும்பு  இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஊர் மக்கள் சுகவனத்தைக் கேள்வி கேட்டுத் திணற  அடிக்கின்றனர்.  சுகவனம் ஓடையிலிருந்து  பிடி மணலை எடுத்து வருகிறான். ஒரு பேப்பரில் கொட்டிக்கொள்கிறான். தன் ஜேபியிலுள்ள லாடக்காந்தத்தை  அதன் மீது எடுத்து வைக்கிறான். லாடக்கந்தத்த்தைப் பிறகு  உயரே தூக்கிக்காட்டுகிறான். லாடக்காந்தத்திற்கு  தாடி முளைத்துத் தொங்குகிறது.  இரும்புத்துகள்  தாடி போல் காந்தத்தில் ஒட்டிக்கொண்டு காட்சியாகிறது.  இந்த ஊர் முழுவதும் இரும்பு இருப்பது உறுதியாகிறது. ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டு  சுகவனத்தையே பார்க்கிறார்கள்.

ஒரு மணியார்டர் வாங்குவதற்கு கையெழுத்துப்போடவேண்டும். சுகவனத்திடம்  பேனா  கடன் கேட்கிறாள் பேச்சி. எப்படி

‘ரவூண்டு பேனா குடுங்க சார் மணியார்டரு  வந்துக்கீது. ஒப்பம் போடணும்’

பேனாவை வாங்கிப்போனவள்  போனவள்தான். பேனாவைத்திரும்பக் கேட்டு வாங்கப் பேச்சி வீட்டை விசாரித்துக்கொண்டு  நடக்கிறான் சுகவனம் .  பையப்பனின் தாய்தான்  அந்தப்பேச்சி.  இளம்பெண். கைம்பெண்.  பேச்சி வீட்டில் ஒதுங்கி  இருந்த  கவுண்டர் வெளியே வருகிறார். அவர்  காபி குடித்துவிட்டுச் செல்வதாயும் இந்த ஊரில் காபி போடத்தெரிந்த  ஒரே நபர்  தான்தானென்றும் சுகவனத்திடம்   கொசுறு செய்தி சொல்கிறாள். பையப்பன்  நாவிதன் கடைக்குச் சென்றிருக்கிறான். அவன் முடி வெட்டிக்கொண்டு வீடு திரும்புகிறான்.  ஊர் ச்சிறுவர்கள் அவன் முடிவெட்டிக்கொண்டு வருவதால்’ தீட்டு ’ என்று சொல்லி  அவனிடமிருந்து தூரம்  தூரமாய்ப் போகின்றனர்.

‘ஓடுங்க எல்லாரும். பையப்பன் நாசுவங்கடையிலேந்து வர்ரான்’ என்று  அச்சிறுவர்கள் கூச்சலிடுகின்றனர்.

‘யம்பேரு மானம்.என்னியேத் தொட்டா பாவம். யம்பேரு மானம் என்னியேத் தொட்டா பாவம்’ என்று  பாட்டுப்பாடுகிறார்கள். வலக்கையால்  தம் தலையைத்தொட்டுக்கொண்டு தரையில் அமர்கிறார்கள். அப்படிச் சொல்லிவிட்டு அமர்ந்தவர்களைத்  தீட்டுக்காரர்கள்  தொடக்கூடாது என்கிற கிராம  ஐதீகத்தை நமக்குச் சுட்டிச்செல்கிறார் விட்ட;ல்ராவ். அக்குக்கிராமத்தில் நிகழும் சிறு சிறு  அசைவுகளையும் எப்படி கூர்ந்து நோக்கியிருக்கிறார் எழுத்தாளர் என்று வாசகன் மலைத்துத்தான் போகிறான்.

இந்தப்பாட்டைப்பாடி   தரையில் அமர்ந்தவர்களை விட்டு விட்டு மற்றவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினான் பையப்பன் என்று போகிறது கதை.

சுகவனம் பள்ளியில் பிள்ளைகளுக்கு நிறைய கதைகள் சொல்லுகிறான். அவர்கள் போடும் கூச்சலை அடக்க வேண்டும் என்றால் கதை சொல்லியே ஆகவேண்டும். ராஜா ராணிக் கதை, ஈசாப் கதை, தெனாலி ராமன் கதை, பேய்ப்பிசாசு கதை, மந்திரவாதிகள், துப்பாக்கிக் கதை, சாகசக் கதை இப்படி  அடுக்கடுக்காய் கதைகள்  சொல்லி  மாணவர்களை  கட்டுக்குள் கொண்டு வருகிறான். ஒவ்வொரு கதையும் சொல்லி முடித்தபின் இதனால்  நீ அறிந்து கொள்லும் நீதி என்ன? என்ற கேள்வியைக் கட்டாயம் வைப்பான். அப்படிக் கேட்பது சுகவனத்திற்கு பிடிக்காதுதான். வேறு வழியில்லையே. அந்தக்கேள்வி மட்டுமே பிள்ளைகள்’ இன்னும் இன்னும் கதை சொல்லுங்கள்  சார்’ என்று அவனைத்  தொல்லைப்படுத்தாமல் இருப்பதற்குக்  கட்டை போடும்.

மாரிமுத்துக் கவுண்டர் வீட்டில் பூசை நடக்கிறது. நல்ல கூட்டம். சுகவனத்திற்கு மட்டும் ஒரு நாற்காலி போட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தரையில் அமர்ந்து கொள்கிறார்கள்.  சுகவனத்தைத் தன் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க வேண்டிப்பேசுவதற்காக  சுப்புரு அழைக்கிறான். சுகவனம் வெளியில்   சென்று வரக் கவுண்டரிடம் சொல்லிக்கொள்கிறார். உடனே கவுண்டர் சுகவனத்திடம் சொல்கிறார்,

‘ஏங்க… நம்பூட்லயே கக்கூசு கீதே . நம்பூடு  ஒங்கூடு மாதிரி இருக்கு. ஏன் வெளில போவுறது’

;அதுக்கோசரம் போவல்லே கவுண்டரே. சும்மா’  சுகவனம்  சமாளித்துப் பதில் சொல்லுகிறான்.

சுப்புரு சுகவனத்திடம் தன் பிள்ளைகளுக்கு டியூஷன்  சொல்லிக்கொடுக்க சுகவனத்திடம் பேசுவதைப்பாருங்கள். ரீங்கரிக்கும் சேலத்து பாஷையைத்தான்  விட்டல்ராவ் எத்தனை ரம்மியமாய் நம் காதுகளில் கொண்டு சேர்க்கிறார்.

‘நம்ம பசங்க நல்லாவேப் படிக்கறதில்லே சார். கொஞ்சம் அதுங்களுக்கு  புரவேட்டு டீ்ஸன் சொல்லிக் குடுக்கலாமுனுதான் ஒங்களை  கூட்டியாறச்சொன்னது. நம்ப தொளிலு கீதே கரும்பி கிஸ்ஸுரு , அதுக்கு ஏகமாப் போட்டி.வெவசாயம் சரியில்லே. கெவுருமெண்டும் சரியில்லே.இன்னிக்கி கீற சட்டம் நாளைக்கு வேற. அது நமக்குக் கட்டுப்புடியாகல்லே. பசங்களையாச்சி நல்லா படிக்கவுட்றலாமுனா  வேதில போவுறதுங்க  படிக்கவே மாட்டேங்குது. அதனாலே நீங்க  கொஞ்சம் அதுங்களுக்கு  வூட்லே கண்டிப்பு கறாரா  புரவேட்  டீஸன்  சொல்லிக்கோணும். மாசம் எவ்வளவு கேக்கறீங்க?’

ஊரில் கர்ண மோட்சம் கூத்து நடக்கிறது. கர்ணனாக  சின்னக்காளி நடிக்கிறான்.  பொதுவசனத்தோடு  மேடை இயக்கம்  தொடங்குகிறது. ‘ அகோதெப்படி யென்றால் , இந்தப்பிரகாரமாக  துரியோதனன்  அரசு செய்து வாராநின்ற அஸ்தினாபுரி பட்ணத்தில் விளங்கியிராநின்ற வினாயகமூர்த்தி சபைக்கி  வருகிற விதங்காண்க’ கர்ணன் சின்னகாளி  தான் வருவதை சபைக்கு எப்படி  அறிவிக்கிறான் பாருங்கள்.

‘தேரின் மீதிலேறி வந்தேனே

கர்ண பூபதி

மண்டலம் தானதிர டங்கா

மாரியடிடா ஜெயமென்று

சல்ல ராஜனே

நீ யெந்தன் சமர்த்தையும் பார்

வில்லினில் வல்லவனாய் வந்து

விளங்கும் விஜயனை

நானுமிப்போ ஒரு  கணையால் சிரசை

 பாரில் புரண்டிடச் செய்குவேன்.

துருசாய் குதிரைகளை

போகத்தூண்டி  நடத்துவீர்

தந்தின தின தின நம்’

 சின்னகாளி பாடுகிறான். சுழல்கிறான். ஊரே கூத்து கண்டு களிக்கப்  பேச்சி  சுகவனத்தோடு ஒரு ஆனந்தக்  கூத்துக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டு கிளம்புகிறாள். பையப்பன் உறக்கத்தில் இருக்கிறான். அவன் கூத்துக்கு வரவில்லை  என்று படுத்துக்கொள்கிறான்.   பேச்சி கூத்துக்குப்போவதாய்க் கிளம்பி  சுகவனம் அறைக்கு  வந்து சேர்கிறாள். அறைக்கதவை ஒரு தட்டு தட்டுகிறாள். சுகவனம் கதவைத் திறக்கிறான். அதிர்ந்து போய் நிற்கிறான். இனி நடப்பதை விட்டல்ராவ் எப்படிச்சொல்கிறார் பாருங்கள்.

‘விலகி நின்று அவளைப்பார்த்து  ரசித்து  மனத்துக்குள்ளாகவே  சுகமயமான பிரம்மச்சாரிக் கற்பனைகளையெல்லாம் அவளுக்கும்  தனக்குமாக சேர்த்துவைத்து உண்டாக்கிக் கொண்ட பொய்மைக்கும் இப்போது அவளே தனிமையில்  தன்னிடம் வந்து  நிற்பதிலுள்ள உண்மைக்கும் இடையே இருந்தான் சுகவனம். தைரியமற்று  நடுங்கினான்,குழறினான், பின்  என்ன நடந்தது. அவனுக்கும் அவள்  ஆசிரியை ஆனாள், அவன் ஒன்றும் அடங்காப்பிடாறி மாணவனல்ல.

எத்தனை செய்நேர்த்தி  எழுத்தாளரின் இந்த வரிகளில்தான்.

சுகவனத்தின்  அறையில்  பேச்சி  விட்டுச்சென்ற சவுரி முடியை , அவளிடம் தான் சேலத்தில்,  பேரு பெற்ற   வில்வாத்திரி பவனில்  வாங்கி வந்த ’ பாதாமி அலுவா’ வோடு கொண்டு கொடுக்கிறான்.

பால்கிருபைநாதன் டெபுடி இன்ஸ்பெக்டர் பள்ளித் தணிக்கைக்கு வருகிறார். பிள்ளைகள் எல்லோரும் சீவி சிங்காரித்துக்கொண்டு  பள்ளிக்கு வந்திருந்தனர்.  அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்  சுகவனம் சொல்லிக்கொடுத்தபடியே  மாணவர்கள் பதில் சொல்கின்றனர். நடக்கின்ற எல்லா தில்லு   முல்லுகளும்  பால்கிருபைநாதன் அறிந்தவையே. மாரிமுத்துக் கவுண்டர் வீட்டில் டெபுடிக்கு நல்ல சாப்பாடு ஏற்பாடாகிறது. ஆய்வறிக்கையை  சபாஷ் என்கிறபடிக்கு டெபுடி எழுதி வைக்கிறார். அவருக்கு ஊரிலிருந்து  பை பையாக  சீர் வந்து சேர்கிறது. ஒரு வாழைக்குலை,இளநீர்க்காய்கள், ஒரு சில தானிய வகைகள், வெற்றிலை, துலுக்கசாமந்திப்பூ ஒரு கூடை, பலவித  காய்கறிகள், இரண்டு பப்பாளி பழங்கள், இருபத்தைந்து மக்காச்சோளக் கதிர்.  இவைகளை மூன்று மூட்டையாகக் கட்டி மூவர் தூக்கிகொண்டு டெபுடி பின்னால் செல்கின்றனர்.

‘முன்னாலே அவர்களை நடக்கச்சொல்கிறார் டெபுடி.

‘வாணாம் வாணாம்னாலும் எங்கே கேக்கறாங்க. ஒவ்வொரு தபா வரும்போதும் இப்படித்தான் எதையாச்சி குடுத்து சொமக்க வைக்கிறாங்க’ என்று ஒப்புக்குப் பேசுகிறார்  டெபுடி  பால்கிருபைநாதன். சுகவனத்திடம் மறக்காமல்  ஒரு பிளாஸ்டிக் பையில் பால் பவுடரைக் கேட்டு  வாங்கிக் கொள்கிறார் அந்த  டெபுடி. யதார்த்தத்தை சித்திரமாக்குவதில் விட்டல்ராவ் அதி சாமர்த்தியர்தான்.

சுரங்கம் தோண்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா.  மத்திய மந்திரி வந்திருக்கிறார்.  அவருக்கு இந்தியும் ஆங்கிலமும் தெரியும். தமிழ்நாடு என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறார். அது தமிழில் மொழிபெயர்த்து தரப்படுகிறது. அந்த உரையைக் கேட்ட பொதுமக்கள் தலையை ஆட்டுகின்றனர். அது எப்படி இருக்கிறது.  சந்தைப்பேட்டையில் ஆந்திர வேடுவ ஜோசியன் சுரைக்காய் துந்தனாவை மீட்டி  சொல்லும் ஜோசியம்  சொல்வார்.  அது எப்படி?

‘அண்ண தம்புடு  குருநாதண்ணாகேளியே  ஜீவி.. ஜீவி  நீ போட்ட பிளானு சரியாருக்கும் பார்த்துக்கோ ஜீவி ராமோவ்  ராமா  ராமோவ்  ராமா… என்பார். அந்த ஜோசியம் கேட்கக்  காசு கொடுத்தவன்    காசு கொடுத்த கருமத்திற்காக  தலை தலையை ஆட்டுவது போல் மக்கள் தலையை  ஆட்டினார்கள் என்கிறார் விட்டல் ராவ். எத்தனை ஆழமான எள்ளலும் நகைச்சுவையும் பளிச்சிட்டுபத்தான்  காட்சியாகிறது இங்கே.

கூத்துக்கட்டும்  சின்னக்காளி இந்த சுண்ணாம்புக்கல்லும் இரும்புக்கனிமமும் இந்த சேலம் பகுதிக்கு எப்படி வந்தது என்பதை நமக்கு விளக்குகிறான்.  அதிகம் படிக்காதவன் என்றாலும் அனுபவம் கொண்டு பேசுகிறான்.

‘ராமியாணக் கதையிலே  வர்ர எத்தினியோ  விசயங்கல்லாம் நம்ப ஜில்லாவுலேதான் நடந்திச்சாம். சேலத்துக்கு  அஞ்சு மைல்லே அயோத்தியா ப் பட்டணமினு  ஒரு ஊரு கீது . அவுத்தெ  ராமரோட  பாதம் கல்லுலே  கீது. திருச்சி ரோட்லேதான்  பொய்மாங்கரடு கீது, பச்செப்புள்ளைக்குக் கூடத்தெரியும்.ராமரு மாரீச்சனை  அடிச்ச எடமே அது தான். மைத்தபடி ராவுணே்ஸ்பரன் சீதையோட போவையிலே  ஜடாயுக் களுவு  வந்து மறை கட்டிச்சா. ராவுணேஸ்பரன்  அதை வெட்டிப்போட்டான். அந்தக் களுவு  எம்மாம்  பெரிசுனு ஒங்களுக்குத் தெரியும். அது உளுந்து அதனோட எலும்பெல்லாந்தான்  அம்மாசி  மலைக்கிப் போற தடத்திலே  இந்த சுண்ணாம்புக் கல்லா போயிருச்சி. அதைத்தாந்தோண்டி  எடுக்கிறானுங்க… இது நாஞ் சொன்னதில்லே. நம்ப சரித்திரத்திலேயே கீது.’

சுகவனம் பள்ளியில் மாணவி  அலமேலு வயசுக்கு  வந்துவிடுகிறாள். அவளை அவளின்  தாய் வீட்டுக்கு அழைத்துப்போகிறாள். சுகவனத்தையும் சடங்கு விசேஷத்துக்கு அழைக்கிறார்கள்.  பின் ஒரு நாள் சுகவனத்திற்கு அக்கி என்கிற நோய் வந்துவிடுகிறது.  அவர் குலாலர் வீட்டுக்குச் செல்கிறார். சிங்க படம் சுகவனம் முதுகில்  செம்மண்ணால் வரையப்படுகிறது. மூன்று நாட்களில் சுகவனம் அந்த பேர் சொல்லக்கூடாது  என்கிற  அந்நோயிலிருந்து மீள்கிறார்.

சுகவனத்தின் தாய்  இறந்துபோகிறாள்.  காரியத்திற்காக மீசையைச்  சிறைத்துக்கொள்கிறான் சுகவனம்.                              பேச்சிக்கு சேதி சொல்கிறான்.  தனது மாமா பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாகக்கூறுகிறான். தன் தாயிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டதாய் பேச்சியிடம் சொல்கிறான். பேச்சி நொந்து போகிறாள். பேச்சியும் சுகவனமும்  ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு காதலை  ருசிக்கின்றனர். அப்போதும்  அது நிகழ்ந்தது எ ன்கிறார் விட்டல்ராவ்.  சுப்புருக்கும்  இந்த நிகழ்வு   தெரிய வருகிறது.  சுப்புரு பேச்சியை மிரட்டுகிறான். கவுண்டரிடம் சேதியைச்  சொல்லிவிடுவேன் என்கிறான். பேச்சி காலில் விழுந்து கெஞ்சுகிறாள். சுப்புருவும் பேச்சியை அனுபவித்து முடிக்கிறான்.  அந்தப்பேச்சிக்கு வேறு வழிதான் ஏது.

ஊருக்கு சுரங்கம் வருகிறது. நல்ல சாலை போட  ரோடு  ரோலர் எஞ்சின் வருகிறது அதனை இயக்கும் பீர் முகம்மது வருகிறான். அவன் காய்ச்சிய தாரில் பேச்சியின் ஆடு விழுந்து விடுகிறது. மண்ணெண்ணெய் விட்டு அந்த ஆட்டைத் தாரின் பிடியிலிருந்து  முகம்மது விடுவிக்கிறான். பையப்பனும் முகமதுக்கு ந்ல்ல  நண்பனாகிறான். முகம்மது கெட்ட வார்த்தை பேசுவதில் ஹாஸ்யம் கொப்பளிக்கிறது. ஆண்களும் பெண்களும் அதனை மிகவும் விரும்பிக் கேட்கின்றனர். பேச்சியும் முகம்மதுவும்  ஒருவருக்கொருவர் தொடர்பானார்கள். பாலுணர்வு  எதனையும் விஞ்சி விடுகிறது.

நெடுநாளைய புங்க  மரம் சாலை போடுவதற்காக வெட்டப்படுகிறது. அந்த மரத்தில்தான்  கன்று போட்ட பசுவின் எச்ச  உறுப்பு வழக்கமாய்க்  கட்டப்படும். அப்படிக்கட்டினால்தான் அப்பசு அடுத்து சினை பிடிக்கும். அந்த பசுவின் நஞ்சுக்கொடியைத்  தரையில்  புதைத்துவிட்டால்  குள்ள நரிகள் பிடிங்கித்தின்றுவிடும் ஆக அதுவும் கூடாது. இப்படியொரு  பழக்கம் அங்கு நிலவியது.புங்கங் காய்களை   ஆண் குழந்தைகளின் அரைநாணில்   முன் பக்கமாய்க் கட்டி இரு தொடைகளுக்கிடை  நிற்குமாறு  வைப்பதுவும் அவ்வூரில் பழக்கமாயிருந்தது. ஊருக்கு  இரும்புச் சுரங்கம் வருகிறது.  வண்டிகள்  ஏகத்துக்குச் செல்ல வேண்டும்.  சாலை அமைக்க வேண்டுமே  ஊரில் அந்த புங்க   மரமும் இல்லாமல் போகிறது. 

ரோடு எஞ்சின்  பீர் முகம்மது குடித்து விட்டுக் கீழே விழுந்து கிடக்கிறான்.  இரவு நேரம். பேச்சியும் பையப்பனும் அவனைத்தூக்கிக்கொண்டு தம் வீடு செல்கின்றனர். அவனைச் சுத்தப்படுத்துகின்றனர். குளிப்பாட்டி விடுகின்றனர்.  அவன் மகிழ்ந்து போகிறான். பையப்பன் உறங்கி விடுகிறான். பேச்சியும் முகம்மதுவும்  அன்றிரவில்  இணைந்து மகிழ்கின்றனர்.

டேனிஷ்பேட்டை மனிதர்கள்  புதிய டேனிஷ்பேட்டைக்குக் குடி மாறுகிறார்கள். ஆடு மாடு கோழி சகிதமாய் பிரயாணம் தொடர்கிறது. ஒவ்வொரு குடும்பமும் ஆறேழு குழந்தைக்  குட்டிகளோடு புறப்படுகிறது. கூட்டம் கூட்டமாக  லாரியில் ஏறிக்கொள்கிறார்கள். அழுக்குப்பாய்,தலையணை, துணிமணிகள், சட்டி முட்டிகள் எல்லாமும் பயணிக்கின்றன. சுகவனம் துக்கத்தோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே நிற்கிறான். பிள்ளைகள் ஈடுபாட்டோடுத்  தன் பள்ளிக்கு வரவில்லை. ஆனாலும் அவர்கள் ஊரைவிட்டுப் பிரிகிற போது  அவன் மனம் பாரமாகிவிடுகிறது.

சனிக்கிழமை அவ்வூரில் சந்தை கூடுகிறது. சுகவனம் சந்தைக்குப்போகிறான். சந்தையில் காய்கறிகள்,இறைச்சி,மீன், கருவாடு, கவுச்சை தினுசுகள், தோல், கால் நடைகள்,  கோழிகள் அனைத்தும் போணியாவதற்குத் தயாராக வந்திருந்தன. சந்தையில் சுங்க வரி வசூலும் மும்முரமாக நடக்கிறது. பிச்சை எடுப்பவர்களின் வெவ்வேறுவிதமான  வேட அலங்காரங்கள் அழுகைகள் புலம்பல்கள் கதறல்கள்.  ஒரு மனிதன் எதிர்ப்படும் மனித மனத்தை  அசைத்துப்பார்க்க எத்தனை வேடம் போட வேண்டியிருக்கிறது. சுகவனம் எண்ணிப்பார்க்கிறான். ஓரிடத்தில் ஒரு மு்ஸ்லிம் மாடுகளுக்கு லாடம் அடிக்கிறார். மாடுகள் படும் துன்பத்தைக்கண்டு சுகவனம் என்ன வாழ்க்கை இது என்று எண்ணிப்பார்க்கிறான். ஒரு சாயுபு  வேறு  ஓரிடத்தில் அமர்ந்து சாமான்களுக்கு ஈயம் பூசிக்கொண்டிருக்கிறார். அவரோடு  ரோடு ரோலர் டிரைவர் பீர்முகமது பேசிக்கொண்டிருக்கிறான்.  அவனருகில் பேச்சி கையில் ஒரு கூடையோடு காட்சி தருகிறாள். சுகவனம் அவர்களை கண்டுகொள்ளாமல் தள்ளியே போகிறான்.

கட்டில் கடையும் காக்காய் ஹோட்டல்களும்  நமக்கு விட்டல்ராவ் அறிமுகப்படுத்துகிறார்.

டேனிஷ்பேட்டையிலிருந்த கெங்கம்மனை புதிய இடத்திற்கு கொண்டு போக  முடிவு செய்கிறார்கள்:.’

‘நம்பளோடயே  நம்ப கெங்கம்மந்தாயும் வருது.அவுத்த புதுசா கோயிலு கட்டி சாமிய வச்சிருவோம்’ என்கிறார் கவுண்டர். உட்னே பேச்சி கேட்கிறாள்.’ மனுசனை  ஊரு வுட்டு வூரு மாத்தி குடி வெக்கிற மாதிரி சாமியையும் குடி மாத்தலாமா?’

‘செய்யிலாம்.தொள்சம்பட்டி  அய்யிரு கூட ஆமான்னுப் போட்டாரு. நாம்பளா தொட்டு எடுத்துகினுபோயி  வக்கிறோம்.அய்யிரல்லே வரப்போறாரு?  அதெல்லாம் ஒண்ணும் தோசமில்லே புள்ளே’ மாரிமுத்துக் கவுண்டர்  விடை தருகிறார். ஆனால் தொல்பொருள் இலாகாவினர்  கெங்கம்மன் கோயிலை ஆய்ந்து   சுத்தம் செய்து வண்ணமடித்து  கம்பி   போட்டு அது அரசாங்க  தொல் பொருள் சொத்து என போர்டு எழுதி வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள்  கோயிலை எடுத்துக்கொண்டார்கள்.

பேச்சி,  பையப்பன்,  பீர்முகமது மூவரும்  ஊரைவிட்டே  சென்றுவிடுகின்றனர்.

‘அந்த  துலக்கனோட  ஓடிப் போயிட்டா’

‘துலக்கம் பின்னால  ஓடிப்போட்டா பேச்சி’ 

ஊர் பேசிக்கொள்கிறது. கவுண்டரின் மனைவி ஆராயி கெங்கம்மனின் அருள் தனக்கு கிடைத்துவிட்டதாய் கணக்குப்போடுகிறாள். கவுண்டரோடு இனிமேல் தான் அவள் நிம்மதியாக  படுத்துக்கொள்வாள்.

ஒடிப்போன பேச்சி மட்டுமே  கவுண்டரின் வலு. கவுண்டரைத் தேர்தலில் இனி தோற்கடிப்பது சுலபம் என்று ஒரு  கணக்குப்போடுகிறான் சுப்புரு. கவுண்டரின் கம்பீரம் கர்வம், வீரியம்,நம்பிக்கை, சுறுசுறுப்பு எல்லாமே பேச்சிதான்.  பேச்சிதான் போய்விட்டாளே. பேச்சியின் வீட்டு நாய்  கரியன்  பட்ட  அவல சோகத்தைச் சிறப்பாகச்சொல்கிறார் விட்டல்ராவ்.

தீர்த்தகிரிக்கு சுரங்க கார்ப்பரேஷனில் குமாஸ்தா வேலை கிடைத்துவிட்டது.  அவன் அலுவலகம் செல்லும் வழியில்  சித்தப்பா  சின்னகாளியைப் பார்க்கிறான். சித்த சுவாதீனம் இழந்த தன் சித்தப்பாவை பரிவோடு நோக்குகிறான்.

‘’போய்க்கினேக் கீறியேடா பியா….. காப்பிக்கி எட்டணா குட்றா…. ஒண்ணு குடுக்கறேன்னு சொல்லு…. போய்க்கினேருந்தா எப்படியாம்?’ என்கிறான் சின்னகாளி.  சித்தப்பன் கேட்கும் பிச்சைக்குக் காசு போட அவன்  தன்மானம் மறுக்கிறது. நம் சித்தப்பனுக்கு இப்படியும்  ஒரு நிலமையா என்று மனம் வெதும்புகிறான். . தீர்த்தகிரியின் கண் கலங்குகிறது.

புதிய டவுன்ஷிப் சுரங்கத்தில்  வேலை செய்யும்  ஆட்களுக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்கா, உயர்நிலைப்பள்ளி,ஆங்கில நர்சரி,சிறப்பு அங்காடி,மருத்துவமனை, கடைத்தெரு,தண்ணீர்த்தொட்டி, குழாய்

நீர் வசதி, விளையாட்டு மைதானம் ,நூல் நிலையம்  குடியிருக்காலனிகள்  எல்லாமும்தான்   அங்கு வந்து விட்டன.

சேர்வராயன் மலை எப்போதும் போலத்தானிருந்தது.’ சிவனே’ என்று அசையாமல்  நிற்கிறது  அந்தச்  சேர்வராயன் மலை.

‘தோ அது அப்பா அது ஆத்தாள் அதெல்லாம் புள்ளெங்க’  பேரக்குழந்தைகளுக்கு  மலைத்தொடர்கள்  காட்டப்படுவது  வழி வழித்  தொடர்கிறது.. போக்கிடம்  என்னும் புதினம் வழி விட்டல்ராவின் எழுத்தாளுமையை  நாம் நிறைவாய்த் தரிசிக்கிறோம். அவரின் கூரிய காமிராக் கண்கள் சேலத்துக் கிராமத்தை எப்படி எப்படியெல்லாம்  பார்த்தன என்பதை நமக்குச்சொல்லும்  ஆவணம் ‘ போக்கிடம்’.

 

 

 

 

   5  தொலைபேசி நாட்கள்

 

சென்னைத்தொலைபேசியில் 35 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர்  எழுத்தாளர் விட்டல் ராவ். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். தன்னுடைய பணிக்கால அனுபவங்களை சுவாரசியமானதொரு கட்டுரை நூலாக்கியிருக்கிறார். அம்ருதா இலக்கிய இதழில் தொடர்ந்து விட்டல் ராவால்  எழுதப்பட்ட 25 வார பங்களிப்பை அம்ருதா பதிப்பகம்’ தொலை பேசி நாட்கள் ‘என்னும் ஒரு புத்தகமாய் வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது. விட்டல் ராவ் கலை இலக்கியம் பற்றி ஆழமான புரிதல் உள்ள எழுத்துப் படைப்பாளி. பேசும் புதிய சக்தி இதழிலும் ஒவியம் சிற்பம் கட்டிடக்கலைப் பற்றி  விரிவான கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதி வருகிறார்.

 மேலட்டையில் பிரமாதமாக விட்டல் ராவின் வண்ணப்புகைப்படத்தோடு  இப்புத்தகத்தை  அம்ருதா பதிப்பகத்தார்  கொண்டு வந்துள்ளார்கள். சந்தியா நடராஜன் நல்லதொருஅணிந்துரை வழ்ங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர் பாவண்ணன்’ இவர்தான் விட்டல் ராவ், நம்மாளு’ என்று சொல்லி சந்தியாநடராஜனுக்கு அறிமுகப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார்.

‘எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலையோ தொழிலோ அமைவதில்லை.கிடைத்தவேலையில் ஜீவித்துக்கொண்டு ஆன்மப்பசிக்குத்தீனி போடுகிறவர்கள் மிகச்சிலரே.அந்த மிகச்சிலரில் விட்டல் ராவ் மேல்நிலைத் தகுதிக்குரியவர் என்பதில் எனக்கேதும் ஐயுறவு இல்லை.’  இப்படி ஆவணப்படுத்துகிறார் சந்தியாநடராஜன். தொலைபேசி வரலாற்றைப் பேசிக்கொண்டே நேற்றைய சென்னையையும் அறிமுகப்படுத்திச் செல்கிறார் விட்டல் ராவ் என்று சரியாகவே பதிவு செய்கிறார் சந்தியா நடராஜன்.

தன்னுடைய  உரையை ’ஓர் உரை’ என்று புதிய தலைப்பிட்டு எழுதும்  விட்டல்  ராவ் ‘ நீண்ட கால அன்புறவும் பரஸ்பர அக்கறையும் கொண்ட எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான என் அருமைச்சகோதரி திருமதி திலகவதி அவர்கள்  விரும்பிக்கேட்டுக் கொண்டதற்கிணங்கி ’தொலைபேசி நாட்களை’ அம்ருதா இதழில் 25 மாதங்கள் தொடராக எழுதிமுடித்து வெளியிடச்செய்தேன்’ என்று செய்தி சொல்கிறார். இக்கட்டுரைகளில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை,எரிச்சல், எதிர்ப்பு,உவகை சாகசம்,வரலாறு என்று பல்வேறு சங்கதிகள் அடங்கியுள்ளன என்று விளக்கம் தருகிறார்.

பாஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் 1876 ல் டெலிபொனைக் கண்டுபிடித்தார்.. அது ஐந்தாண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. லண்டனைத்தலைமை இடமாகக்கொண்ட ஓரியண்டல் டெலிபோன் அண்ட் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் ஏஜண்டுகளான அர்புத்னாட் அண்டு கம்பெனியின் மேற்பார்வையில் சென்னையில்  தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது என்று   ஆரம்பிக்கிறார் விட்டல் ராவ்.

தொலைபேசிநாட்கள் என்னும் முதற்கட்டுரையில் நடிகர் மேஜர் சுந்தரராஜன் பற்றி விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.  இவர் இந்தத்துறையில் டெலிபோன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர். திரையுலகில் பிரகாசித்த நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்னும் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதிலிருந்து மேஜர் சுந்தரராஜன் ஆனார் என்கிற  அரிய விஷயம் சொல்கிறார் விட்டல் ராவ்.

 தொலைபேசித்துறையில் பணியாற்றி இலக்கியத்துறையில் பிரகாசித்த பாவண்ணன் என்கிற பாஸ்கரன், சுப்ரபாரதிமணியன், எஸ்.சங்கரநாராயனன்,விட்டல்ராவ் எனும் விட்டல், ரா சேஷாத்ரி,ஜெயமோகன்,லதாராமகிருஷ்ணன்(ரிஷி) இலந்தை.சு. ராமசாமி என்று தன் நினைவுக்குத்தெரிந்த பிரபலங்களை அடுக்கிச்செல்கிறார்.

பொதுமக்கள் பேசுவதற்கான செந்நிறக்கூண்டுகள்- பப்ளிக் கால் ஆபிஸ் - நகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும்.அதனுள்ளாய் சில விஷமிகள் நுழைந்து தொலைபேசி சேவையில் கிடைக்கும் இலவச எண்களோடு பேசுவார்கள்.  அடுத்தமுனையில்  பெண் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்களோடு  தேவையில்லாமல் பேசுவது  விஷமிகளின் வாடிக்கையாகியிருந்தது. அவர்களை எப்படி ஸ்விட்ச் ரூம் மெக்கானிக்குகள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தெரிவித்து தண்டனைக்குள்ளாக்கினார்கள் என்பதனையும் விட்டல் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராகப் பொறுப்பு ஏற்றபோது அவருக்குச் சில மிரட்டல் கால்கள், அசிங்கமாகப் பேசும் கால்கள் வந்ததாகவும் அதன் மீது காவல்துறை உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டதனையும் வாசகர்க்குச்சொல்கிறார்  நூல் ஆசிரியர்.

விட்டல்ராவ் நல்ல ஓவியர்.  தொலைபேசி இலாகா சார்பாக அகில இந்திய ஓவியப் போட்டி ஹைதராபாத்தில் 1966 ல் நடைபெற்றதாகவும் அதனில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றதையும் நமக்குச்சொல்கிறார். பின்னர் எழும்பூர் தினத்தந்தி  அலுவலக மைதானத்தில் விட்டல் ராவ் நடத்திய ஒவியக்கண்காட்சியைப்பற்றி அழகாகக் குறிப்பிடுகிறார். காட்சிக்கு வைத்த படங்கள் 22. அதனில் சில படங்கள் ஆண் பெண் நிர்வாண நவீன ஓவியங்கள். தொலைபேசி ஊழியர்களில் பெரும்பான்மை ஆண் பெண்களுக்கு பெரிய விஷயமாக,ஆர்வமூட்டுவதாக,அருவருப்பூட்டுவதாக,கிளர்ச்சிகரமாக,அசிங்கமானதாக,கிளிகிளுப்பூட்டுவதாக, இந்த நவீன ஓவியங்களே  இருந்தன என்பதை யதார்த்தமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

 சென்னைத்தொலைபேசியில் பணியாற்றிய ரா. சேஷாத்ரி ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்.ஆனந்தவிகடனிலும் தினமணிகதிரிலும் முத்திரைக் கதைகளையும் நட்சத்திரக்கதைகளையும் எழுதியிருப்பவர். இவர்  இதே இலாகாவில் டைரக்டர் ஆஃப் விஜிலன்ஸ் உயர்பதவி வகித்தவர் என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார்.  தொலைபேசி இலாகாவில் சென்னை  மக்கள் தொடர்பு அதிகாரியாய்  பணியில் இருந்த  இலந்தை சு .இராமசாமி, அமுத சுரபி கலைமகள், கல்கி, ஆகிய இதழ்களில் எழுதிப்புகழ்பெற்றவர் என்பதையும் சொல்லிச்செல்கிறார் விட்டல் ராவ். சென்னை  தொலைபேசி இல்ல இதழ் டெலி நியூஸ் என்பது அதனில் வெளியிடுவதற்காக தன்னை இலந்தை சு. இராமசாமி பேட்டி கண்டதையும்  அப்போது எழுத்தாளர் சா.கந்தசாமி உடன் இருந்ததையும் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். தொலைபேசித்துறையில் எலக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்களை அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப வல்லுநர் சாம்பிட்ரோடா பற்றி நிறைய செய்திகளை வாசகர்க்குச்சொல்கிறார்.

இந்தத் துறையில்  டெலிபோன் டயல் என்பது எப்படி வந்தது என்கிற சுவாரசியமான கதையை வாசகர்க்குச்சொல்கிறார் விட்டல் ராவ். அமெரிக்காவில் கான்சாஸ் நகரில்  ஸ்டோவ்ஜர் என்பவர் சவப்பெட்டிகளை   தனக்கு வரும் ஆர்டர்களுக்கு சப்ளை செய்பவர். நம்பர் ப்ளீஸ் எக்சேஞ்கள் இயக்கத்தில்  இருந்த போது அங்கு பணியாற்றிய பெண்கள் அடிக்கடி ’எங்கேஜ்டு எங்கேஜ்டு’ என்று சொல்லி ஸ்டோவ்ஜரை நோக அடித்து இருக்கிறார்கள். ஆக இதிலிருந்து விடுபட  1891 ல்  அவரே கண்டுபிடித்ததுதான் டயல். டயல் வந்த பிறகு வேண்டும் தொலைபேசி எண்ணை அந்த அந்த  வாடிக்கையாளரே சுழற்றிக்கொள்ள முடியும். ஆப்ரேடர்களின் உதவி இல்லாமலே வாடிக்கையாளர் பேசி முடித்துவிடுவார். இதனைக்கண்டுபிடித்த ஸ்டோவ்ஜர் பெயராலேயே  அந்த எக்ஸ்சேஞ்சும் அழைக்கப்பட்டது.

சென்னை ஆலந்தூர் கடைத்தெருவில் மளிகைக்கடை வைத்திருந்த சங்கரலிங்க நாடார்’ ஐயா நம்ம டயல சுத்தினா, அது அப்படியே நிக்கி’ என்று சொன்னதைத்  தத்ரூபமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களே மனமுவந்து ஊழியர்களுக்கு  கொடுத்த இனாம்’ பக்‌ஷீஸ்’ பின்னாளில் எப்படி கையூட்டாக உருப்பெற்றது என்கிற கதையையும் வாசகர்க்குச்சொல்கிறார்  நூல் ஆசிரியர். ஊழியர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமைஆகி அவஸ்தை பட்ட துன்ப  வரலாறும்  ஊடாகவே வந்துவிடுகிறது.

டெலிபோன் டைரக்டரிகள்  தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவதை தமாஷாகச்சொல்கிறார் விட்டல் ராவ். அந்த ஊழியருக்கு ஆங்கிலம் தெரியவேண்டும்,  அவர் டை கட்டிக்கொள்ளவேண்டும்.  சென்னைத்தொலைபேசி டைரக்டரிகள் 1941ல் தி அசோசியேட் பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. அச்சுப்பிழையின்மை,எழுத்துக்களின் கூர்மை,சிறந்த வடிவமைப்பு எல்லாம் ஒருங்கே கொண்ட அச்சகமாக அது அந்நாளில் கொண்டாடப்பட்டது. பிறகு ‘குமுதம்’ அந்த பொறுப்பை  ஏற்றுக்கொண்டது. அன்று குமுதத்திற்குரிய  குனேகா செண்ட் வாசனையோடு அந்த டைரக்டரிகள் விநியோகிக்கப்பட்டன.பிறகு டைரக்டரி தயாரிக்கும்பணி ‘யெல்லோ பேஜ்’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. பிறகு ஒரு காலத்தில் டைரக்டரி வழங்குவதே நின்றுபோனது என்பதைக்குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

மவுண்ட் ரோடில் அண்ணா சிலை இருக்குமிடத்திற்கு அருகில் இருக்கும்  வி ஜி பி காட்சிக்கூடம் பற்றிச் சொல்கிறார். அங்கு  நாற்காலி மேஜை  வாங்கப்போகிறார் கதை சொல்லி. அந்தக்கடையில் ஒரு விளம்பரம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.’ தவணை முறையில் நாங்கள்தான்  இந்தியாவிலேயே முதன் முதலாக டிரான்சிஸ்டர் ரேடியோவை நரிக்கிறவர்களுக்கு அளித்தோம்’. இன்று டிரான்சிஸ்டர் என்றால் வாழும் தலைமுறைக்கு அது  என்னவென்றே தெரியாத சூழ்நிலையை அல்லவா காண்கிறோம்.  அறிவியலின் கொடையால் உலகம்  எங்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

கதை சொல்லி டெரிடோரியல் ஆர்மியில் பயிற்சிக்கு என கல்கத்தா பயணமாகிறார். அங்கு விக்டோரியா மெமோரியல் மியூசியம் சென்று பார்க்கிறார். அங்குதான் விட்டல் ராவ்,  பெயிண்டர்கள் டானியல்களின் ஓவிய பிரிண்ட்கள் அடங்கிய காலரியைக் காண்கிறார். தமிழகக்கோட்டைகள், கோயில்கள்,மாளிகைகள், மகாபலிபுரக்காட்சிகள் என்று  1780ல் செய்திருக்கும் வண்ண பதிப்போவியங்களை நோக்குகிறார். பின்னாளில் விட்டல் ராவ் தமிழகக்கோட்டைகள் என்னும் நூல் எழுத இவ்விஷயமே காரணமாக அமைந்தது என்பதையும் வாசகனுக்குச் சொல்கிறார்.

தொழிற்சங்கம் என்னும் தலைப்பிட்ட கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. விட்டல் ராவ் தான் பணி ஓய்வு பெறும்வரை மே தின விழாவில் கலந்துகொண்டதை பெருமையோடு குறிப்பிடுகிறார். மே தின வரலாற்றையும் வாசகர்க்குச்சொல்கிறார். 1886 மே முதல்நாள் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் என்னும் இடத்தில் தொழிலாளர்கள் ’எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பு’ என்று கோஷமிட்டு ஊர்வலம் செல்கின்றனர். கூட்டத்தைக் கலைக்க அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. பல தொழிலாளர்கள் காயமுறுகிறார்கள். போராட்டத்திற்குத் தலைமையேற்ற  ஜார்ஜ் எங்கெல்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ்,ஆல்பர்ட் பார்சன்ஸ்,சாமுவேல் பில்டன், அடால்ஃப் ஃபிஷெர்ஸ் என்று ஐவர் தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர்.அவர்களின் நினைவாகவே உலகெங்கும் மே தினம் கொண்டாடப்படுகிறது என்கிற  மேதினச் செய்தியைச்சொல்கிறார் விட்டல்.

தொலைபேசித்துறையின் பலம் பொருந்திய தொழிற்சங்கமாக NFPTE  இருந்தது. அதிலிருந்து 1970ல் FNPTO என்னும் ஒரு புதிய சங்கம் உருவானது. ஓம் பிரகாஷ் குப்தா என்னும்  தலைவர் நீண்டகாலம் NFPTE அமைப்பில் பொறுப்பில் இருந்ததைச்சொல்கிறார் விட்டல் ராவ். தமிழகத்தில் தொலைபேசித் தொழிற்சங்க இயக்கத்தில் மறக்கமுடியாத தலைவர்கள் என்று,தோழர் ஞானையா,பிரேமநாதன்,முத்தியாலு,சந்திரசேகரன்,ஏ. கே வீரராகவன், சீனுவாச ராவ்,பாண்டுரெங்கன், ஏ. டி ருக்மணி,அப்துல் மஜித்,ஜே.ரங்கநாதன்,மற்றும் ஜெகன் ஆகியோரைக்குறிப்பிடுகிறார்.இடது வலது இரு அணிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று  ஜெகனை நேர்மையோடு குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது அதனை எதிர்த்துச் சில தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் உண்டு. அந்த கருங்காலி ஊழியர்களுக்கு நிர்வாகம் சிற்றுண்டி காபி மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கிய சிறுமையைக் குறிப்பிடுகிறார். இணைப்பக உயர் அதிகாரியே தன் கையால் ரொட்டியில் வெண்ணெய் தடவி அவர்களுக்குத் தந்த அனாசார செயலையும்  விடாமல் எழுதியிருக்கிறார். பொதுத்தொலைபேசி கூண்டுக்குள் சென்று பணியில் இருக்கும் கருப்பு ஆடுகளை வண்டை வண்டையாகத்திட்டிய தீவிர தொழிற்சங்கப் பற்றாளர்களையும் நமக்குக் காட்டிச்செல்கிறார் விட்டல் ராவ்.

1943 டிசம்பர் 12  அன்று இரவு ஜப்பானிய குண்டு வீச்சு சென்னையில் நிகழ்ந்ததைச் சித்திரமாய்த் தீட்டித்தருகிறார் விட்டல் ராவ். வீசப்பட்டு சேதம் ஏற்படுத்திய ஜப்பானிய குண்டின் சிதறிய பாகம் ஒன்று இன்றளவும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள, கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது என்கிற வரலாற்றுச்செய்தியையும் வாசகன் அறிந்து கொள்கிறான்.

செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொலைபேசி அகத்தில் இருந்த ஆலமரங்கள் செங்கல் முட்டுக்கள் அங்கு பிடிக்கப்பட்ட பாம்புகள் எல்லாம் பற்றிச் சுவாரசியமாக வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர். ருமால் பாவாடை ஆன கதை என்னும் கட்டுரையில் சில சுவாரசியமான செய்திகளை நமக்குச்சொல்கிறார். ருமால் என்பது தலைப்பாகை. அதற்கு ஒண்ணரையடி நீளத்துக்கு வால் தொங்கும். இலாகா  லைன் இன்ஸ்பெக்டர்கள் தலைக்கு  ருமால் சுத்திக் கட்டிக்கொள்ளவேண்டும். ருமால் தனித்தனியே இரண்டு நிறங்களினாலான கதர்த்துணியால் ஆனதாய்  இருக்கும். ஒன்று காக்கி மற்றொன்று இரத்தச்சிவப்பு, ஒரு ஊழியருக்கு இரண்டு ருமால்கள் வழங்கப்படும். பொன்னுசாமி என்னும் ஊழியர் ருமால் தைப்பதற்கு ஒத்துக்கொண்டு அதனில் மீதமாகிய  துணியை தொடர்பகத்திலுள்ள பதினைந்து பெண் ஊழியர்களுக்கு  உள் பாவாடை தைக்க  ஏற்பாடாகிய சுவாரசியமான செய்தி சொல்லப்படுகிறது. அந்த உள் பாவாடைகள் தலையணை உறைகளாக மட்டுமே தைக்கப்பட்ட சோகத்தையும் வாசகன் அறிந்து  கொள்கிறான்.

சடகோபன் என்னும் நேர்மையான ஊழியரை, லஞ்சம் கொடுத்தால் மறுக்கும் நேர்மையான தொழிலாளியையும் அடையாளம் காட்டுகிறார் விட்டல்  ராவ். அவருக்கு ‘சஞ்சார் ஸ்ரீ’  எனும் உயரிய விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறாது என்பதனையும் இங்கே  நாம் தெரிந்துகொள்கிறோம்.

எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மொஹித்தே மைதானம் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. மக்கள் கடல் போல் கூடி அவரை வரவேற்கிறார்கள். விட்டல் ராவின் கவலை எல்லாம்  அவர் வருகைக்காக கொடுத்த அவசர  தொலைபேசி இணைப்புகள்  சரியாக  இயங்கி  நம் பேர் சொல்லவேண்டுமே  என்றுதான். மெய்யான தொழிலாளிக்கு உணர்வு  அப்படித்தானே இருக்க முடியும்.

பேஜர் என்னும் செய்தி அனுப்பும் கருவியினையும் தொட்டுச்செல்கிறார் விட்டல் ராவ். அதன் வழி ஒருவர்  பேச முடியாது. ஆனால் ஒரு பேஜரிலிருந்து அடுத்த பேஜருக்கு செய்தி  மட்டுமே அனுப்பலாம்.

தந்தி என்னும் வசதி உலக அரங்கில்  மூடுவிழா கண்டதைப் பதிவு செய்கிறார். 1970 ல் தினமணி கதிர்   நடத்திய சிறுகதைப்போட்டியில்   விட்டல் ராவ் முதற்பரிசு பெற்ற  செய்தியை தந்தி மூலமே சாவி அவர்கள் அவருக்கு  அனுப்பி வைத்ததையும் வாசகர்க்குச்சொல்கிறார்.

பின்னர்  பாரத் சன்சார் நிகம் லிமிடெட்  என்கிற கார்ப்பரேட்,   BSNL   உதயமாகிறது.

ஓய்வூதியம் என்னவாகுமோ என்று கவலைப்பட்ட  இலாகா ஊழியர்களுக்கு மய்ய அரசின் தொலைத் தொடர்புத்துறை மூலம் அது அவர்களுக்கு  பிரச்சனையே இல்லாமல்  வழங்கப்படும் என்கிற  நற்செய்தி,  தொழிற்சங்கப்போராட்டத்திற்குப்பிறகே  சாத்தியமானது என்பதனையும்   வாசகர்க்குச்சொல்கிறார் விட்டல்ராவ்.

இறுதியாய் ஒரு  சாம்ராஜ்யம் வீழ்ந்து போனது என்கிறார் விட்டல் ராவ். கனக்கும் இதயத்தோடு  மட்டுமே இதனை எழுதுவதாய்க் குறிப்பிடுகிறார்.  இப்படைப்பில் இத்தனைச்செய்திகளையும் படித்து விட்ட  வாசகன் நூலாசிரியரின் கழுகுக்கண்களுக்கு எதுவும் தப்பவில்லை  என்பதையும்  வழி மொழிகிறான்.

 

 

 

 

 

 

 

                                                   6.          ’கலையும் காலமும்’    

       

கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள’ கலையும் காலமும்’ என்னும் நூல்  ஓர் கலைச்சுரங்கம். ஆசிரியர் விட்டல் ராவ். இப்படைப்பை நாடறிந்த   எழுத்தாளர்  திரு. பாவண்ணன் அவர்கட்குச் சமர்ப்பித்துள்ளார். பாவண்ணனை சக எழுத்துப்பயணி, அன்பு சகோதரர் என்று  விளிக்கிறார் விட்டல் ராவ். நன்பர்களோடு பேசும்போது  தான் பெங்களூரில் வசித்து வருவதற்கு திரு. பாவண்ணனே காரணம்  என்று  சர்வ சாதாரணமாகக் குறிப்பிடுவார். இந்நூலுக்குப் பதிப்புரை தந்துள்ள அருமை நண்பர் மு. வேலாயுதம் இப்படிப் பதிவு செய்கிறார், ‘கலை இலக்கியம் இரண்டுமே மானுட சமூகத்தை மேன்மையை நோக்கி   அழைத்துச்செல்வதை தமது முக்கிய இலக்காகக் கொண்டவை. அந்த வகையில் ‘கலையும் காலமும்’என்ற விட்டல் ராவின் இந்நூல் கலையைச்சொல்கிறது. காலத்தைச்சொல்கிறது.அமைதியைச்சொல்கிறது.நிறைவைத்தருகிறது’.

விட்டல் ராவ் தன்னுடைய என்னுரையில்  அடிப்படையில் தான்  ஒரு ஓவியன் என்பதைக்குறிப்பிடுகிறார். அவர் சிற்பங்கள்,சிற்ப வடிவக் கட்டுமானங்கள் என்பவற்றில் மனத்தைப்பறிகொடுத்திருக்கிறார். கோயில்கள் கட்டிடங்கள் என்பவற்றைக்காண அனேக பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். ’ மண்ணில் தோன்றி மண்ணுக்கே திரும்பும் சகல உயிரினங்களில், மகத்தான மனிதன் ஆற்றிய பெருஞ்சாதனைகளில் முக்கியமானது, அவன் தன்னை வெளிப்படுத்தியிருக்கும், வெளிப்படுத்திக்கொண்டே வரும் கலைக்கரியங்கள்’ என்கிறார்.  தொடர்ந்து  இக்கட்டுரைகளை  வெளியிட்ட பேசும் புதிய சக்தியின்  திரு. ஜெயகாந்தன் அவர்கட்கு தனது நன்றியைச் சமர்ப்பிக்கிறார்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்,

‘என் மனம் கவர்ந்த நண்பர்களில் விட்டல் ராவ் ஓர் அபூர்வப் பறவை.தனது சிறகுகளைப் பல்வேறு திசைகளில் புகைப்படம், ஓவியம், புனைவிலக்கியம் என்று விரித்துப்பறந்த 82 வயது பறவை. இவரது சிறகுகள் தொடர்ந்து பறப்பதில் சோர்வறியாதவை’ என்று குறிப்பிடுகிறார்.

கலையும் காலமும்  நூல் 28  கட்டுரைகளைக் கொண்டது. மண் கல் மரம் சிற்பம் ஓவியம் கட்டிடம் என்கிற வரிசையில்  கட்டுரைகளை நாம் இங்கே வாசிக்கலாம். சுடுமண் பற்றிப்பேசுவன முதல் இரண்டு கட்டுரைகள்.களிமண்ணாலான கலைப்படைப்பை ஏழை மனிதனின் கலை என்று சொல்கிறார்கள். அசையும் மற்றும்  அசையாத் சொத்துக்களை அதிகமாகக்கொண்ட செல்வந்தர்களின் ஆட்சியின் கீழுள்ள திருக்கோவில்களில்  தங்கம் வெள்ளி வெங்கல சிலைகளை கருங்கற் சிற்பங்களைக்காண முடியும். ஊரின் நடுநாயகமாய் அவை  குடிகொண்டிருக்கும். ஏழைகளின் சாமிகள் சுடுமண்ணாலானவை.ஊர் கோடியில் மட்டுமே அவை காணப்படும்.சுடுமண்ணாலான ‘முனியப்பன்,ஐயனார் சிலைகள்  சுடுமண் குதிரைகள் முதலான கிராம பாதுகாப்புத் தெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடல், கள் சாராயம் சுருட்டு முதலியன படைத்தல்  வ ழக்கமாயின. அதற்கென நியமிக்கப்பட்ட  பூசாரிகள் அந்த அந்த காரியங்களைச் செய்தார்கள். தாரை, தப்பட்டை,எக்காளம்,பம்பை ஆகியன  இத்தெய்வங்களுக்கு இசைக்கருவிகள் ஆயின. பிராமணர்கள் இக்கோயிலகளுக்கு வருவதில்லை. அச்சமே காரணம் என்கிறார் விட்டல் ராவ்.

கற்சிற்பங்கள்,ஓவியங்கள், கல், சுதைச் சிற்பங்களாலான கோபுரங்கள் ஆகமம் என்றான  பெரிய கோவில்கள்  உயர்ஜாதிக்கோயில்கள் என்றே பார்க்கப்பட்டன. அவை பிராமண பூசாரிகள் வசமாயின.

மேட்டூர் அணைக்கட்டுக்குக் கீழே உள்ள பரந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ‘ அணைக்கட்டு முனியப்பன் சுடுமண் சிலையை,   சேலம் நாலு ரோடு முனியப்பன்  சுடுமண் சிலையை, ஏழைகளின் சாமிகளுக்குச் சான்றாய்க் காட்டுகிறார் ஆசிரியர்.

எழுத்தாளர் சா. கந்தசாமி எழுதிய ‘நிழல்’ என்னும் சிறுகதையில் தெய்வம்  முனிக்குப்படையலும் பூசையும் நடைபெறும். முனிக்கு ஒரு பாடல் ஒன்றையும் சா.கந்தசாமி அக்கதையில் வழங்குகிறார்.

‘அண்ட சராசரம் காக்கும் ஆதிமுனியே

வால்முனியே அப்பனே

ஆதி முனியே எங்க அப்பனே

ஐயாவே எங்கள் குல நாயகரே

எலந்த மரம் விட்டு இறங்கி வரவேணும்

ஒதியமரம்விட்டு ஓடி வரவேணும்

பனைமரம் விட்டு பாய்ந்து வரவேணும்

இலுப்பைமரம் விட்டு இங்க வரவேணும்

இப்ப வரவேணும் இங்க வரவேணும்

காத்திருக்கும் பிள்ளைகளைக் காக்க வரவேணும்’

மூன்றாவது கட்டுரை ’கல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  மணற்கல்லில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் மிகமிகப்பெரியது காஞ்சி கைலாசநாதர் கோயில்.  நூல் ஆசிரியர் இந்தக்கோயிலை நான்குமுறை பார்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டக் கோயில் இது. கோயில் மதிற்சுவரில் பெரிய  யானைச் சிற்பம்  காணப்படும். பல்லவர் செய்வித்த கோயில்களில் சிற்பங்கள் தனித்தே இருக்காது. கோயிலே சிற்ப வடிவமாகவே அமைந்திருக்கும் என்கிறார் விட்டல் ராவ். காஞ்சி கைலாசநாதர் கருவறையின் உள்ளே பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் இருக்கிறது. இதற்கு முன்னால் கருப்புக்கல்லால் ஆன லிங்கம் அமைந்திருக்கிறது. நந்தியின் சிலை  கோயிலுக்கு முன்னால் வெளியே  வெகு தூரம் தள்ளி மணற்கல் மேடையில் காணப்படுகிறது. நந்தி அமர்ந்துள்ள  மேடை மூன்று அடுக்குகளைக் கொண்டது. தரையோடு சேர்ந்துள்ள பகுதியில் சிவ கணச் சிலைகள் ஏராளமுள்ளன.

மேலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சப்த மாதர்கள், ருத்திரர்கள் அஷ்டதிக் பாலகர்கள் என்னும் இந்திரன், யமன்,அக்னி,நிருதி,வாயு, வருணன், சோமன்,ஈசானன் சிலைகளோடு , நரசிம்மனுக்கும் கருடனுக்குமான சண்டைக்காட்சிகளும், மணற்கல்லில் சிற்பங்களாய் படைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட  சிறு கோயில்கள் உள்ளன. சிவன் பார்வதி முருகன்  இணைந்த சோமாஸ்கந்தர் ஓவியங்கள் அதிகமுள்ளன. க்ரீட அலங்காரம், ஆபரணங்கள்,குடை தினுசுகள் அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சை சோழர் ஓவியங்கள் போலவே உள்ளன.

நந்திவர்மன் கட்டிய கோயில் ஒன்று உத்திர மேரூரில் இருக்கிறது. இவ்வூரிலுள்ள  வைகுண்டப்பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. மற்றுமொரு கோயில் சுந்தர வரதப்பெருமாள் கோயில். இது 1200  ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இக்கோயிலில், ஆஞ்சனேயர்,கருடாழ்வார்,நின்ற கோலத்தில் சுந்தரவரதர் ஆகியோர் இருக்கிறார்கள்.  நின்றான், அமர்ந்தான், கிடந்தான், என்ற மூன்று நிலைகளிலும் அத்திமரத்தால் செய்யப்பட்ட  மூலவர்கள்  இருக்கிறார்கள். உத்திர்மேரூர் சுந்தரவரதப்பெருமாள் கோவிலின் மாதிரியில்தான் சென்னை அஷ்டலக்‌ஷுமி கோயில் கட்டப்பட்டுள்ளதாக விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.

’மரம்’ என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகள்  வந்துள்ளன. மரப்பாச்சிகள் நல்ல செம்மரத்தில் செய்யப்படுபவை. அவை ஒரு அடி உயரமிருக்கும். சிலை செதுக்கும்போது  உடை ஆபரண தினுசுகளையும் செதுக்கியிருப்பார்கள். பெண் பொம்மைகளின் காதும் மூக்கும் குத்தப்பட்டிருக்கும். இதற்கென்றே கிடைக்கும் போலி நகை நட்டுக்களை அதனில் மாட்டி வைப்பார்கள். நார்பட்டில் புடவை, ரவிக்கை,வேட்டி, வஸ்திரம், மரப்பாச்சிகளுக்கு அணிவித்து இருப்பார்கள். மரப்பாச்சி பொம்மைகளுக்குத் திருமணம் உண்டு.  திருமண விருந்தும் ஏற்பாடாகும். நவராத்திரியின் கடைசியில்  ஒருநாள் பொம்மையைத் தூங்கவும் வைப்பார்கள். பிறகு அவை அனைத்தும் பரணைக்கு வந்து விடும்.

பழங்குடி மக்களின் கைவினைப்பொருட்கள் காட்சியகம்  ஒன்று மைசூர் மானசகங்கோத்திரியிலுள்ளது. 1968ல் தொடங்கப்பட்டது. 6500 அரிய  கலைப்பொருட்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சுண்டு விரலில் பாதி அளவு தொடங்கி  ஆளுயர மரப்பாச்சி வரை இங்கே நாம் பார்க்கமுடியும். ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சியை  மரச்சிற்பமாக  செதுக்கியிருத்தலைக் கண்டு பிரமித்துப்போகலாம் நாம்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதி ’சித்திரச்சாலை’ என்னும் பொம்மைக்கூடத்தைப்பற்றியும் விளக்குகிறார் விட்டல் ராவ். பொது மக்கள் இதனைச் சொர்க்க நரக பொம்மைச்சத்திரம் என்றழைப்பதாகவும் தெரிகிறது. சித்திரையில் நடைபெறு அறுபத்து மூவர் விழாவின் போது பொது மக்கள் இதனை கண்டு களிக்கிறார்கள். வியாசர் பாடி விநாயக முதலியாருக்குச் சொந்தமானது இச்சத்திரம். ஆற்காட் நவாபின் அரண்மனை கட்டட காண்ட்ராட்டராக இருந்தவர் இந்த முதலியார்.

தமிழ்நாட்டுக்கோயில்களில் சிதம்பரம், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் இங்கெல்லாம் மரத்தாலான  கோயில்கள் காணப்படுகின்றன.கேரளத்தில் பத்மநாப அரண்மனை அருங்காட்சியகத்தில்  துர்கை சிற்பம் சிறப்பானதாகும். குறிப்பிடப்படவேண்டிய மற்றொன்று பைரவரின் சிற்பம். கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன. அவற்றை ஒட்டி சிங்கங்கள். முழுச்சிற்பத்தையும் இருபத்திநான்கு நாகங்கள்  பின்னிச் சுழன்று காவல் புரிகின்றன. கேரள மரச்சிற்பியின் அரிய திறமையை உலகுக்குப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷம் இது.

நாம் தேர்த்திருவிழா பல ஊர்களில் பார்த்திருப்போம். மரச்சிற்பங்களின் மொத்த வெளிப்பாடும் தேர் சிற்பங்களில்தான் குடிகொண்டுள்ளன. தேர் செய்வதற்கு ஏற்ற மரங்கள் கோங்கு, அல்லது சால் ,செம்மரம், ஆப்பிள் மரம், சரகம்  முதலியன. புளியமரங்களையும் தேரின் சக்கரம் பீடங்கள் செய்ய  பயன்படுத்துகிறார்கள்.  பிரம்மன்,விஷ்ணு,சிவன்,கார்த்திகேயன்,விநாயகர், அம்மன், இலக்குமி, சரஸ்வதி என உருவங்கள் தேர்களில் கொலுவிருக்கும். தேர்  அமைப்பு எண்கோண வடிவ பீடத்தில், அடுக்கு அடுக்காக ஒன்றன் மேல் அமைந்திருக்கும். நாகஸ்வரம் வாசிப்பவர்கள் தேர் மீது அமர்ந்து வாசிப்பார்கள். தேரை நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இழுத்துச் செல்வார்கள். தேர் இழுக்கும் போது வாசிக்கும் ராகம்,

‘தித்தி தித்தீ தின தியாகராஜா

தித் தினத தித்தீன தித்தி தித்தி…’

கோயிலில் ஒரு தேர் நிலையை அடைவது வரை அழகாகச்சொல்கிறார் விட்டல் ராவ்.

கிறிஸ்துவக்கோயிலிலும்  தேர் செய்யப்பட்டு  இறைவனின்  வீதி உலாவிற்குப் பயன்படுத்தப்படுவது குறித்து இக்கட்டுரையில் வருகிறது. திருச்சி டால்மியாபுரம் அருகே வடுகம்பட்டியில்  வீரமாமுனிவரால் அமைக்கப்பட்ட தேர் குறித்து  விபரங்கள் தரப்பட்டுள்ளன. இத்தேரில்  இயேசுநாதரின் வாழ்க்கைக் காட்சிகள் மரச்சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

கல் என்னும் தலைப்பில்  முதல் மூன்று  கட்டுரைகள் மணற்கல்லினால் செதுக்கப்பட்ட சிலைகளைப்பற்றிப் பேசுகின்றன. முதல் கட்டுரையில் காஞ்சீபுரம்  தான்தோன்றீசுவரர் மணற்சிற்பங்கள் குறித்து நிறைய செய்திகள்  தரப்பட்டுள்ளன. இக்கோயிலின் வெளிச்சுற்றுச்சுவரில் தனித்தனியாக ஏழு மணற்கல் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை காபாலிகர்களின் உருவங்களைத்தாங்கி நிற்கின்றன. இந்தியாவிலேயே காபாலிகர்கள் சிற்பம்  காணப்படுவது  இந்தக்கோயிலில்தான்.  காபாலியோடு காபாலினியும்  ஜோடியாகவே காணப்படுகிறார்கள். மாட்டுக்கொம்பில் மதுவை நிரப்பிக்குடித்தபடி நடனமாடுகிறார்கள்.

முக்தீஸ்வரர் கோயிலில் அனேக மண்ற்கல் சிற்பங்கள் பார்க்கலாம். இராவண கர்வ பங்கம் என்னும் புடைப்புச்சிற்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. முக்தீஸ்வரர் கோயிலின் வெளிச்சுவர்களில் ஈசன் நடராஜ வடிவங்கள்  இரண்டு இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வைகுண்டப்பெருமாள் கோயில் பல்லவப்பேரரசு சாளுக்கிய மன்னனை  வெற்றிகொண்டதற்குச்  சின்னமாகக் கட்டப்பட்டது. இக்கோயில் காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டேண்டுக்கும் இடையே அமைந்துள்ளது. வைகுண்டப்பெருமாள் கோயிலிலும் ஏனைய பல்லவ காஞ்சிபுரத்துக்கோயில் போல  அதிட்டானம் கருங்கல்லால் ஆனது. மற்றவை மணற்கற்களால்ஆக்கப்பட்டுள்ளன. இகோயிலில் செதுக்கப்பட்டுள்ள குதிரைச்சிற்பங்கள் நம்மைப்பார்ப்பது போன்றே  வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

 கட்டுரைகள் ’ கல்’-   நான்கும் ஐந்தும்  கற்சிற்பங்களைப் பற்றிப் பேசுகின்றன. செஞ்சிக்கோட்டையில் உள்ள  வெங்கட ரமணர் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில், ஸ்ரீரெங்கம் அரங்கன் கோயில், சங்ககிரி வரதராஜப்பெருமாள் கோயில் தஞ்சைப்பெருவுடையார்கோயில் ஆகியன  சிறப்புமிக்க கற்கோயில்களாகும்.

அடுத்த  ’கல்’கட்டுரை ஐயங்கார் குளம், திருப்பனங்காடு மற்றும் கூழம்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள கற்சிலைகளைப்பற்றி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஐயங்கார் குளத்தில் உள்ள கோயிலுக்கு சஞ்சீவராயர் கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையோடு பறந்து செல்கையில்  ஒரு துண்டு இந்தக் கோயில் உள்ள இடத்தில் வீழ்ந்துவிட்டதாம் ஆகவே தான் இது சஞ்சீவராயர் கோயில் ஆனது என்கிறார்கள். ஐயங்கார் குளத்திலிருந்து  இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது  திருப்பனங்காடு. பெயருக்கு ஏற்றார்போல் இவ்வூரில் பனைமரங்கள் அதிகமாகக்காணலாம். கூழம்பந்தல் என்னும் ஊர் பற்றி விவரணை தொடர்கிறது. இங்குள்ள கோயிலின் பெயர் கங்கைகொண்ட சோழீச்வரம். இக்கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கிடையாது. தென்திசை  நுழைவாயிலில் பிரம்மாண்ட இரு துவார பாலகர் சிலைகள் கம்பீரமாய் நிற்கின்றன. சற்று தூர நின்று பாருங்கள், இக்கோயில்,  சக்கரங்கள் இணைக்காத  பெரும் கல் ரதம்  போன்ற வடிவமைப்பைக் கொண்டது. கி.பி 1012-1044ல்  கட்டிமுடிக்கப்பட்டதாகும் கோயிலுக்கு முன் பக்கத்தில் இருபது பருத்த தூண்களைக்கொண்ட பெரிய நடன மண்டபம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து இருபத்து நான்கு  தேவரடியார்களை அழைத்து வந்து  இந்த மண்டபத்தில் நடன  நிகழ்ச்சி நடைபெற்றதாக அறியப்படுகிறது.

அடுத்த கட்டுரை  புத்த ஜைன காஞ்சி.

1927ல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வரலாற்றுப் பேர்டாசிரியர் துப்ரேல் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பல பளிங்கிலான புத்த மதச்சின்னங்கள்  கொண்ட  தூண்களைக் கண்டிருக்கிறார். இதை டாக்டர் மீனாட்சி என்கிற வரலாற்றாளர் வழிமொழிந்திருக்கிறார் என்பதனை அறிகிறோம். திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரில் சமணக்குடியிருப்புகள் இருந்திருக்கின்றன. சந்திர பிரபா தீர்த்தங்கரர் திருக்கோயில்  இங்கு வெகு சிறப்பாக இருந்திருக்கிறது.

கட்டுரைகள் 12 ம் 13ம்  மகாபலிபுரம் பற்றிப்பேசுகின்றன.  இது கல்லிலே கலை வண்ணம் கண்ட தலம். மகாபலிபுரத்திலுள்ள ராய கோபுரங்கள் இரண்டுமே முற்றுப்பெறாதவை. ஒன்று அர்ஜுன தபஸ் சிற்பத்திற்குப்பின்னால் இருப்பது மற்றொன்று  தலசயனப்பெருமாள் கோயிலுக்கு முன்பாக நிற்பது. இவை இரண்டும் விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்டவை. அலங்காரத்தூண்களும் யாளி மீது நிற்கும் ஆளுயர மங்கயாக நிற்கும் கங்கைச்சிலையும் மிக முக்கியமானவை. 18 ஆம் நூற்றாண்டில் கடல் வழி தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் மஹாபலிபுரத்தை  ஏழு கோபுரங்கள் அல்லது ஏழு கோயில்கள் என்றே குறிப்பிட்டு  அழைக்கின்றனர். இக்கோயில்களைக் கடல் கொண்டுபோய் இருக்கலாம். 2004 டிசம்பரில் வந்த சுனாமி இயற்கைப்பேரழிவுக்குப்பின் வெகு மாற்றங்கள் கடற்கரைக் கோவில்களில் பார்க்க முடிந்திருக்கிறது.  வங்கக்கடல் அப்போது  வெகு தூரம் உள்  வாங்கியதால் பல கட்டிட இடிபாடுகளைக்  கடற்கரை மக்கள் பார்த்ததாகச்சொல்வதையும் விட்டல் ராவ் பதிவு செய்திருக்கிறார்.

மகாபலிபுரத்தில் உள்ள  பஞ்ச பாண்டவர் ரதச்சிற்பங்களைப்பற்றிக்குறிப்பிடும்போது தர்மராஜா ரதத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்கிறார் ஆசிரியர். பொதுவாக பொதுமக்களை ரதத்தின் மேல் ஏறிப்பார்க்க அனுமதிப்பதில்லை. சிறப்பாகத்தான் அனுமதி பெற்று ஆசிரியர் சென்றிருக்கிறார். தர்மராஜ ரதத்தின் மேற் பகுதியில் இரண்டு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் சோமாஸ்கந்தரின் சித்தரிப்பு, குழந்தை வடிவத்தில் முருகன்.  முருகனைப்பார்த்தபடி சிவனும் பார்வதியும் இருக்கிறார்கள். இடது புறமும் வலது புறமும் பிரம்மாவும் விஷணுவும் இருக்கிறார்கள். புடைப்புச்சிற்பங்களுக்கு மேலே ’ஸ்ரீநரசிம்மா ’என்கிற   கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. அர்ஜுனன் பாசுபதம் பெறும் காட்சிச் சிற்பம் மிகச்சிறப்பானது. திருபுராந்தகச்சித்தரிப்புச் சிற்பம் காண்போர்  மனதைக் கொள்ளை கொள்வது. முண்டாசு கட்டிக்கொண்டு எளிய தோற்றத்தில்  ஒரு சிவன் சிற்பம். காதில் குண்டலங்களோடு கையில் கழியொன்றை வைத்துக்கொண்டு அடியாரைப்பார்க்கும் ஈசன்,  இப்படிச் சிற்பங்கள் பலவற்றைக்காணலாம். இரண்டாவது தளத்தில் கதையை ஊன்றிய துவாரபாலகர்கள், அடுத்து பக்தர் வடிவில் பல்லவ மன்னன் தொடர்ந்து, அரச குடும்பம், கையில் மண்டையோடு வைத்திருக்கும்  கபாலீசுரர் சிற்பம் என அற்புதச்சிலைகளைக்காணலாம்.

அடுத்து வரும் கட்டுரை சாளுக்கியர்களின் இரு கோயிற்கலை மரபு என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. பாதமி  என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். வாதாபி என்பதுவே கால ஓட்டத்தில்  பாதமி ஆயிற்று. சாளுக்கிய அரசர்களில் புகழ்பெற்றவன் இரண்டாம் புலிகேசி. பதாமி குகைக்கோயில்கள் சிவப்பு நிற மணற்கற்களாலானவை. இவர்களின் கட்டடக்கலை மரபு இரண்டு விதமானவை ஒன்று வடஇ ந்தியமரபு அது ‘நாகரமரபு ’ மற்றொன்று  தென்னிந்தியாவினது’ திராவிட மரபு’. இவ்விடத்தில் விட்டல் ராவ் ஒரு சிறிய விமர்சனத்தை சினத்தோடு சுட்டிச்செல்கிறார். நமது வெகு பழங்காலச்சொல்லான  ’திராவிடம்’ என்கிற பதத்தை ஏதோ ஒரு  ஆங்கிலேயன் வந்துதான் இங்கு ஆரம்பித்து  வைத்தான் என்று யாரேனும் சொல்வார்களானால் அவர்களுக்கு வரலாற்று அறிவு போதாது என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார். ஹியூவன் சாங்  என்னும்   சீன யாத்ரீகன்  தான் சாளுக்கிய நாட்டுக்கு வருகை புரிந்ததைத் தன்னுடைய குறிப்புக்களில்  சொல்லியிருப்பதையும்  வாசகனுக்குச் சொல்கிறார் விட்டல் ராவ்.

இரண்டாம் புலிகேசி மக்லேந்திரவர்மனைத்தோற்கடித்துப்  பல்லவச்சிற்பிகளையும்  கலைஞர்களையும் பதாமிக்கு கூட்டிச்சென்று திராவிடப்பாணி கோயில் கட்டுமானங்களையும் குகைக்கோயில்களையும் கட்டுவித்தான்.பதாமி மலையில் நான்கு குகைக்கோயில்கள் உள்ளன. பல்லவ பாணியில் அமைக்கப்பட்ட  சிவனும் திருமாலும் ஒன்றாகிய ஹரிஹரன் சிலை இங்கே பிரசித்தி பெற்றது. பட்டதகல் கோயிலில் அமைந்திருக்கும் லஜ்ஜாகெளரி என்னும்  சிற்பம் பெண்குறியைக் காட்டியபடி  அமைந்திருக்கும். சில இடங்களில் ஆண்குறியோடு கூடியதாகவும்  லஜ்ஜாகெளரி சிலை காணப்படும். விஜயநகரப்பேரரசு காலத்தில் நிறைய பாலியல் உணர்த்தும்  சிற்பங்கள் கோயில்களில் தேர்களில் இடம்பெற்றன. இவை தமிழகத்துக்கும்விரிவடைந்தன. பட்டதகல் என்னும் ஊரின் பெயர்,  சாளுக்கிய மன்னர்கள்  இந்த ஊருக்கு வந்து மட்டுமே  ஒரு  பெரிய கல் மீது அமர்ந்து  அரச முடிசூட்டுக்கொள்வதை பழக்கமாகக்கொண்டதால் வந்தது என்பதையும் ஆசிரியர் தவறாமல்  குறிப்பிடுகிறார்.

பதினைந்தாவது கட்டுரை எலிஃபண்டா குகைச் சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. எலிஃபண்டா தீவு மும்பை கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலுள்ள அபல்லோ பந்தரிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எலிஃபண்டா தீவின் புராதனப்பெயர் ‘கராபுரி’. இத் தீவின் முனையில் யானைச்சிற்பம் ஒன்று நின்றதால் இத்தீவு எலிஃபண்டா தீவு என அழைக்கப்பட்டது. அந்த யானையோ வெடிவைத்துத் தகற்கப்பட்டு விட்டது. இங்கு முத்தலை சிவனின் சிற்பம் புகழ் பெற்றது. அது  புகழ்பெற்ற தீன் மூர்த்தி சிலை என்றழைக்கப்படுகிறது. துர்கைக்கான கோயில் ஒன்றும்  சிவனுக்கான கோயில் ஒன்றும் இங்கே இருப்பதைக்காண முடியும். சிவன் பார்வதி திருக்கல்யாணக்காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதையும் இங்கே பார்க்கலாம்.

அடுத்து மூன்று கட்டுரைகள் சுவர் ஓவியங்கள் பற்றிப்பேசுகின்றன. கேரளாவில் வயநாட்டிலிருந்து  40 கிலோமீட்டர் பயணித்தால் எடக்கல் மலைக்குகையை அடையலாம். இங்குள்ள மலையும் குகையும் மத்திய தொல் பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பவை. இங்கே  கூர்மையான கருவியைக்கொண்டே ஓவியங்கள் ஒத்த கீறல்களை ஆவணமாக  செய்துவைத்துள்ளதைக் காணமுடியும். மத்தியப்பிரதேசத்தில் பிம்பெட்கா  மலைக்குகைகளில் பண்டைகால ஓவியங்கள் காணப்படுகின்றன. மகாராஷ்ட்ரக் காடுகளில் உள்ளவை அஜந்தா குகை ஓவியங்கள். இவை அனைத்துமே புத்தமதம் தொடர்பானவை. அஜந்தா ஓவியம் என்றாலே நினைவுக்கு வருவது ‘அப்சரஸ்’ என்னும் தெய்வீக மங்கையின் ஓவியம். இது குகை எண் 17 ல் உள்ளது. மூக்கு உதடு இவைகளைத் தூக்கிக்காட்டும் விதத்திலேயே இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. தஞ்சைப்பெருவுடையார் கோயில்  ஓவியங்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரிய்ர் எஸ் .கே கோவிந்தசாமி என்பவரால் வெளி உலகுக்குக் கொணரப்பட்டவை.  பெருவுடையார் கோயில் பிரதட்சிணப்பாதையில் 15 அறைகள் உள்ளன. இவைகளின் உள்ளே  சோழர்கால ஓவியங்களும் நாயக்கர் கால ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியின் சித்தரிப்பு, சுந்தரர் வெள்ளையானைமீதமர்ந்து கைலாயம் பயணித்தல், சிதம்பர நடராஜரை சோழ அரசர் வணங்குதல், கல்யாண சுந்தரராய் சிவபெருமான், இராவணன் கயிலையைத் தூக்க முயற்சிக்கும் காட்சி, திருபுராந்தகர் சினத்தோடு இருக்கும் காட்சி என்று தஞ்சை ஓவியங்கள் பெரும் புகழ் வாய்ந்தவை.

19 வது கட்டுரை திருபுவனச்சிற்பங்கள் என்னும் கட்டுரை. விட்டல் ராவின் இனிய நண்பர் தேனுகா,  நூல் ஆசிரியரை சுவாமிமலைப்பகுதியில் 12 நாட்கள் தங்க வைத்துக் கும்பகோணம் நகரைச்சுற்றியுள்ள சிற்பக்கலைத்தலங்களைப் பார்வையிட்டு வர உதவியிருக்கிறார். தஞ்சைப்பெருவுடையார் கோயில்,கங்கைகொண்டசோழபுரக்கோயில்,தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், மற்றும் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் என்கிற பிரதான கோயில் சிற்பங்கள் குறித்து இக்கட்டுரை இனிதே ஆய்கிறது. கம்பஹரேஸ்வரர் கோயில் இராமாயணச் சிற்பங்கள் குறித்து  விரிவான ஆய்வு இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது.

5 அரசகுலங்களும் 3 சிற்பக்கோயில்களும் என்னும் அடுத்த கட்டுரையில் சோழ அரசர்கள் கர்னாடக மண்ணில் எடுப்பித்த சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. பெங்களூருக்கு 60 கிலோமீட்டர் தொலைவில் நந்திமலைக்கு அடியிலுள்ள நந்தி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சைவக்கோயில் சோழ அரசர்களால் கட்டப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயில், போக நந்தீஸ்வரர் கோயில், யோக நந்தீஸ்வரர் கோயில் என்று மூன்று சிறப்புப் பெற்ற கோயில்கள் உள்ளன. கோலாரை அடுத்த முலபாகில்  மத்வர்களுக்கான மடம் உள்ளது. இங்கிருந்து சற்றுத் தொலைவில் குருடு மலை உள்ளது. கூடு மலையே பின்னர் குருடு மலை என வழங்கலாயிற்று. சோழ மன்னனால் கட்டப்பட்ட  சோமேசுரர் ஆலயம் இம்மலையில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இத்திருக்கோயில்.

ஹொய்சாளர்களின் நுண் நுணுக்கச் சிற்பங்கள் என்னும் அடுத்த கட்டுரை ஹாவேரி என்னும் ஊருக்கு நூலாசிரியர் தம் துணைவியாரோடு தேனிலவுலவுக்குச் சென்றதில் ஆரம்பிக்கிறது.  நூலாசிரியரின் தமக்கை  அவ்வூரில் குப்பி வீரண்ணாவின் நாடகக்கம்பெனிமுகாமிட்டிருந்ததில்  பங்கெடுத்துக்கொண்டிருந்தார். ஹொய்சாளர்கள் அமைத்த  சித்தலிங்கேஸ்வரர் கோயில்  இங்கே உள்ளது. ஹொய்சாளர்கள் சிற்பத்திற்கு ’சோப் ஸ்டோன்ஸ்’ என்னும் சற்று மிருதுவான கருங்கல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 435 சிற்பக்கோயில்களை ஹொய்சாளர்கள் அமைத்திருக்கிறார்கள். சுமார் 150 கோயில்களில் கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. சிற்பிகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் ஹொய்சாளர்களின் கல்வெட்டுக்களிலிருந்து பெறமுடிவது ஒரு அரிய விஷயமாகும். பிராகிருத மொழியில் ‘வோஜா’ என்றால் உபாத்யாயர். அதுவே ஆச்சாரி என்று மற்ற மொழிகளுக்கு வந்ததையும் ஆசிரியர் சொல்கிறார்.’சரஸ்வதி கன தாசர்கள்’ என்றும் அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜன் கர்னாடகதேசத்துக்கு  அடைக்கலமாக வந்து இங்கிருந்த ஹொய்சாள மன்னரை ஜைன மதத்திலிருந்து வைணவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார். விஷ்ணுவர்த்தன் என்கிற பெயரை ராமானுஜரே அவருக்கு வைத்தவர். ஹொய்சாளர் சிற்பக்கோயில்கள்  கர்நாடகத்தில்  ஹாசன் மாவட்டத்தில் அனேகம் உள்ளன.ஹளே பீடு, பேளூர் ஆகிய இடங்களில் புகழ் பெற்ற கோயில்கள்  காணப்படுகின்றன. பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர் கோயில்   சிகரங்கள் கொண்ட அழகான கோயிலாகும்.

அடுத்து மூன்று கட்டுரைகள் விஜயநகரக் கலை  குறித்துப்பேசுகின்றன. இன்றைய ஹம்பியே அந்த நாளைய விஜயநகரம். பெர்ஷியத்தூதுவர் அப்துர் ரஜ்ஜாக்  இந்நகர் பற்றிச் சொல்லும்போது,’இந்த இடத்தைப்போல் இன்னொன்றைக்கண்கள் பர்த்ததில்லை, இதற்கிணையான இன்னொரு இடத்தை உலகில் இருப்பதாய் என் செவிகள் கேட்டதுமில்லை’ என்று குறிப்பிடுகிறார். இன்றைய ஹம்பி என்பது கோயில்கள் அரண்மனைகள் மாளிகைகள்  குளங்கள் இவைகளின் மிச்ச சொச்சங்களே ஆகும். விஜயநகரப்பேரரசில் முக்கியமானவர்  கிருஷ்ணதேவ ராயர். ஆமுக்த மால்யதா என்னும் தெலுங்கு இலக்கிய நூலை எழுதியவர்.

 ஹம்பியில் நுழைந்ததுமே  நாம் காண்பது ஜைன பசதி என்னும் கலைக்கோயில். இது சிற்ப ரூபக்கோயில்..அடுத்து நாம் காண்பது பீமனின் நுழைவாயில். தொடர்வது விருபாட்சர் கோயில். சேதப்படுத்தப்படாத அழகுக்கோயில் இது. விருபாட்சர் கோயிலில் தலைவாசலில்  காண்பது  நிர்வாணக்கோலத்தில் நிற்கும்  பெண்ணின் சுதையுருவம்.   தன் பெண் குறியை  அகலத்திறந்து காட்டும் ஒரு வித, தாந்திரிகக் காட்சியாக  அதனை நாம் காணலாம். ஹம்பி யாத்திரையைக் கோடைகாலத்தில்  நாம் மேற்கொள்ளக்கூடாது. நவம்பர் டிசம்பர் ஜனவரியில் மேற்கொள்வது சவுகரியமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.

விஜய விட்டலர் கோயிலின்  ’கருங்கல் ரதம்’ குறித்து நல்ல விவரணையைத் தருகிறார். நாம் ஐம்பது ரூபாய் பச்சை நோட்டில் காணும்  கருங்கல் ரதம் நம் நினைவுக்கு வரலாம். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணன் கோயிலும், ஹசாரா ராமர் கோயிலும் சிற்பக்கலையழகு கொண்டவை. கிருஷ்ணன் கோயில் மகாமண்டபத்துத்  தூண்களில்  விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. குதிரைத்தலையுடன் கூடிய  கல்கி உருவம் அற்புதமானது. அர்த்த மண்டபத்தில் காதல் சிற்பங்கள் சிறப்பானவை. அடுத்து சொல்லப்படுவது ’தாமரை மஹால்’ என்னும் ஹம்பியின் பெருமைபேசும் அற்புதக் கட்டிடம். துங்கபத்திரை நதியிலிருந்து ஹம்பிக்கு உயரமான கால்வாய் வழியாகத்தண்ணீர் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனைப்பார்த்த  டோமிங்கோ பேயஸ்  என்னும் போர்ச்சுகீசிய பயணி ஹம்பியை  ரோம் நகரத்துக்கு ஒப்பாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தாக உக்கிர நரசிம்மர் சிலை. 6.7 மீட்டர் உயரமானது. நரசிம்மருக்கு  ஏழுதலை கொண்ட  நாகம் குடை பிடிக்கிறது. தொடைமீது இலக்குமியை இவர் கொண்டிருப்பதால்  இவரை யோகநரசிம்மர் என்பதே  சரி என்கிறார்கள். இசுலாமிய படையெடுப்பால் கண்டதுண்டமானது நரசிம்மர் சிலை. 600 துண்டுகளாகச் சிதறிய சிலையை  கர்நாடக அரசின் தொல்லியல்துறையே  நாகராஜ ராவ் என்பவரின் தலைமையில்  முயன்று மீண்டும்  நிலை நிறுத்தியிருக்கிறது. அடுத்து லேபாக்‌ஷி  என்னும் ஊர். அயோத்தி   இராமன்  ’சடாயு’ என்னும்  கழுகைப் பார்த்து’ பறவையே எழுந்திரு’  என்றாராம்,அதுவே ‘லே பட்சி’ லேபாக்‌ஷியாய் ஆகியிருக்கிறது.

ராட்சஸ தங்கடி எனும் ஊரில் இசுலாமியப்படைகள் ஹம்பிக்கான போரை இறுதியாய் நடத்தின. அவை வென்றன. ஹம்பி சூறையாடப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்டது.உடைக்கப்பட்டது. தீயிடப்பட்டது. அழிக்கப்பட்டது.  அந்தக்கால’ யுத்த தர்மம்” அதுவே என்கிறார் ஆசிரியர்.

இசுலாமியக்கலை என்னும் இரண்டு கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன. இசுலாமியக்கலை என்பது முக்கியமாய்ச் சங்கேதக்குறிகள் வாசகங்கள் கொண்டது. உருவங்களையோ  அவற்றின் எவ்வித குறியீடுகளையோ கொண்டதன்று. உருவ வழிபாடு இல்லாத காரணத்தால் இசுலாம் ஓவியம் சிற்பம் குறித்து எதுவும் சொல்வதில்லை. கலையுலகிற்கென்று  இஸ்லாம் செய்திருக்கும் பெருங்காரியம் கட்டடக்கலை. ’காலிகிரஃபி’ என்னும் எழுத்துக்கள் முஸ்லிம்களால்  உயர்வாகக் கருதப்படுகிறது. ஜேட்  என்பது  உயர்தரக்கல் வகை. இதனை ஆபரணங்களில், கத்திகளுக்குக் கைப்பிடியில்,  மூக்குப்பொடி டப்பி செய்வதில், மோதிரம், பூ ஜாடி, லோட்டா குவளை, பேலா, ஹூக்கா செய்வதில் உபயோகமாகிறது. மீனாகாரி எனாமல் என்னும் கலை இஸ்லாமியர்க ளால் பெரிதும்  ஆதரிக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி 1367 ல்  மன்சூரின் பேரன்  ரஃபி  என்பவரால் கட்டப்பட்ட  ஜாமி மசூதி இசுலாமியக் கலைப்பாணிக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐயாயிரம் பேர் ஒரே நேரத்தில் இதனுள்ளே தொழுகை செய்ய முடியும்.`

தக்காணக்கோட்டைகளில் முக்கியமானது கோல்கொண்டா. இதன் இளவரசன்  குலிகுதுப் தன் காதலி பாக்மதியைச் சந்தித்த இடத்தில்தான் ’சார்மினார்’ கட்டப்பட்டுள்ளது.பாக்மதியை  குலிகுதுப்  மணந்தபிறகு அந்த இடம் பாக்நகர் என்று பெயரிடப்பட்டது. பாக்மதியே  பின்னர் ஹைதர் மஹல் ஆனாள். பாக்நகர்  ஹைதராபாத் ஆனது. இந்த வரலாற்றையும் இங்கே சொல்கிறார் விட்டல் ராவ்.

அடுத்துவரும் இரண்டு கட்டுரைகள்  இந்திய ஐரோப்பியக் கலை பற்றிப்பேசுகின்றன.  நவீன ஓவிய சிற்பக்கலையில் ’ரோகோகோ’ என்னும் வகைமை ஃபிரான்சில் தொடங்கிச் சிறிதுகாலம்  நடைபோட்டது. எளிமைமிக்க அழகியலுக்கு ஆதரவு பெருகியது. பீங்கான் தங்கம் வெள்ளி வேலைப்பாடுகளில் ரோகோகோ இணைந்துகொண்டது. இந்தியாவில் தவழும் கிருஷ்ணன், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன்  போன்றவை ரோகோகோ  கலையை  வெளிப்படுத்தின.பிறகு சலவைக்கல்லின் ஆளுமையைக் கலைத்துறையில் காணமுடிந்தது.

காலனிய சிற்பங்களில் கொண்டாடப்பட்டது விக்டோரியா மகா ராணியின் சிலை. பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ்  அந்த ராணியின் புகழைப் பறைசாற்றியது. சென்னையில் அழகிய உலோகச் சிலை சர் தாமஸ் மன்றோ சிலை. இன்றும் அது  கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கிறது. பெங்களூரில் கப்பன் பூங்காவில் ஏழாம்  எட்வர்டின் சிலையும் விக்டோரியாவின் சிலையும் புகழ் பெற்றவை.1901ல் விக்டோரியா மகாராணி ,காலமானபோது அவருக்கு ஐம்பது சிலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டன. கர்நாடக நவாப்  1768ல் சேப்பாக்கம் அரண்மனையை இந்தோசாராசனிக்  பாணியில் கட்டினார். இது பின்னர் பிரிட்டிஷார் வசமாயிற்று. கல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் இருந்த பெரிய மைதானத்தில்  பிரிட்டிஷ்ராஜின் தாஜ்மஹால் என்றழைக்கப்பட்ட ’விக்டோரியா மெமோரியல் ஹால்’  என்னும் கட்டடம் உருவானது. இதற்கு ராஜஸ்தானிலுள்ள மக்ரானா சலைவைக்கற்கள் தருவிக்கப்பட்டன. எண்பதனாயிரம் டன் சலவைக்கற்கள் இந்த மஹாலுக்காக உபயோகப்படுத்தப்பட்டன. 1921 டிசம்பர் 28ல்  வின்சர் கோமகன் வேல்ஸ் இள்வரசரால் இது திறந்துவைக்கப்பட்டது.  இந்தியாவின் மாபெரும் சலவைக்கல் கட்டுமானம். இதனைக்கட்டி முடிக்கவேண்டும் என்று பெரு முயற்சி செய்த கர்சன் பிரபு , லண்டனுக்குச்சென்றார் ஆனால்  இந்தியாவுக்கு திரும்பவும் வந்து அதனை நேரில்  பார்க்காமலே முடிந்து போனார் என்பது ஒரு  வரலாற்றுச்சோகம். அவரது  அழகுச் சிலை  மட்டும் மியூசியத்தின் வெளிப்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது.

விட்டல் ராவின்  கலை ஆர்வம் வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. அவருடைய கலைப் பயணங்கள்  திட்டமிடப்பட்டவை. எள்முனைகூட சலிக்காது ஒவ்வொரு சிலையையும் ஓவியத்தையும்  கட்டிடத்தையும் அவர் கழுகுக்கண்கொண்டு பார்த்திருக்கிறார். மனைவி, மகள், உறவினர், நண்பர்கள்  கலைப்பயணத்தில் அவருக்கு  அத்தனை ஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே  நம் நன்றிக்குரியவர்கள்.

-------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

7.          சஹ்ருதயர் விட்டல் ராவ்                                              

 

 

என் நண்பர்  பாவண்ணனுக்கு நண்பர். எனக்கும் நண்பர்.   நண்பர் பாவண்ணன் தான் என்னை ராமமூர்த்தி நகரிலுள்ள  விட்டல் ராவ் வீட்டிற்கு முதன் முதலில்  அழைத்துச் சென்றார். என் இளையமகன்  குடும்பம் பெங்களூரில் இருக்கிறது. ஆக சென்னையில் வசிக்கும்  நான் பெங்களூர் அடிக்கடி செல்ல   வாய்ப்பு. எழுத்தாளர் பாவண்ணன் எங்கள் பகுதிக்காரர்.   எழுத்தாளர் பாவண்ணன் படைப்புக்களில் நான் மிகுந்த ஈர்ப்பு உடையவன். பாவண்ணனின் சொந்த ஊர் வளவனூர். நானும் கடலூர் மாவட்டத்துக்காரன். இன்னும் கூடுதலாய்ச்சொல்ல நாங்கள்  எல்லோருமே தொலைபேசி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். விட்டல் ராவ் அவர்களின் வீடு   ராமமூர்த்தி நகரில் டி சி பாளையா  பிரதான சாலையில் கோஷி மருத்துவ மனைக்கு அருகில் இருக்கிறது. நன்பர்  பாவண்ணனின் அப்போதைய குடியிருப்பு அல்சூரில் இருந்தது.  பேருந்தில் பயணித்து  ராமமூர்த்தி நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் வந்து இறங்கிய பாவண்ணனோடு நானும் சேர்ந்துகொண்டேன். இருவரும் நடந்தே விட்டல் ராவ் வீட்டிற்குச்சென்றோம். கல்கரே மெயின் ரோடு வழியாகத்தான் விட்டல் ராவ் இல்லத்துக்கு நடந்து சென்றோம்.

அன்றுதான் முதன் முதலாக விட்டல் ராவ் அவர்களை முதலில் பார்க்கிறேன். அவர் எழுத்துக்களை வாசித்து வந்தவன்தான். சிரித்த முகம் வெள்ளை நிறத்தில் தலையில் சின்னச்சின்ன முடிகள். வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருக்கலாம். அவருக்குத்தனி வீடு. சொந்த வீடு. கலைஞானமுள்ள ஒரு மனிதரின் வீடு என்பதை வீட்டில் நுழைந்ததும் அறிந்துகொண்டேன். அவர் வரைந்த  ஓவியங்களும் எடுத்த  நிழற்படங்களும் நம்மை வரவேற்கின்றன.  விட்டல் ராவின் வீடு ஒரு அரிய நூலகமாகவே திகழ்கிறது.

விட்டல் ராவ்  மிகச்சிறந்த ஓவியர். சினிமாக்கள் பற்றிய அவர் விஷய ஞானம் அபாரமானது.சிற்பங்கள் குகைகள் பற்றிய அவரின் அறிவு   விசாலமானது. சிறுகதைகள் நாவல்கள் என பிரமிக்கத்தக்க படைப்புக்களைத்  தமிழில் தந்தவர்.அவரின் ஆங்கில அறிவு பாரமானது.தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலம் மற்றும் அதன் பகுதிகளில் இளமைக்காலத்தில் வசித்துச் சென்னைக்குச் சென்றுள்ளார். ஒரு எக்ஸ்ரே டெக்னீஷியனாத் தன் பணியைத்துவக்கி சென்னைத் தொலைபேசியில் பல்லாண்டுகாலம் பணியாற்றியுள்ளார். சென்னையை அணு அணு வாய் அறிந்தவர். அனுபவித்தவர். சென்னைத்தமிழ் விட்டலுக்கு கைவந்த விஷயம்.  சென்னையின்  புராதனக்  கட்டிடக்கலை, ஓவிய சிற்பக்கலைகள் பற்றிய அவரின் தெளிவு நம்மைக்கிறங்க வைக்கும். அவரோடு உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவரின் வரலாற்று ஈடுபாடு எவ்வளவு  உயிர்ப்பானது என்பதை நாம் அவதானிக்க முடியும்.

அம்ருதா இலக்கிய இதழில் தொலைபேசி நாட்கள் என்னும் தொடர்ச் சித்திரத்தை எழுதியவர். பேசும் புதிய சக்தி இதழில் புராதனச் சிற்பங்கள் ஒவியங்கள் குகை அமைப்புக்கள் குடைவரைக்கோவில்கள் பற்றிய தொடர் ஒன்றை விஸ்தாரமாக வெளியிட்டுக்கொண்டும் இருக்கிறார்.  எழுத்தாளர்  பாவண்ணனோடு விட்டல் ராவ் உரையாடிக்கொண்டிருப்பது அருகிருக்கும் நமக்கு அனேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு  வாய்ப்பாக அமையும். சுவாரசியமான  உரையாடலில்  இலக்கியச் சங்கதிகள் அவரிடமிருந்து வந்து வந்து விழுந்துகொண்டே இருக்கும்.

விட்டல் ராவ்’ வண்ண முகங்கள்’ என்னும் புதினத்தைப்படைத்துள்ளார். நாடகக்கம்பெனிகளில் நடிக்கும் மனிதர்கள் படும் இன்ப துன்பங்களை அலசி ஆராயும் நூலாக இது அமைந்துள்ளது. கன்னட மண்ணின் நாடக உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் விட்டல்.

இந்த நாவலுக்கு முன்னுரை தந்த ‘இரா. முருகன், இப்படிப்பேசுகிறார்.

‘கன்னட நாடக அரங்கு பற்றிய இந்த நாவல் எழுதிய விட்டல்ராவின் சகோதரி பங்கு பெற்றிருந்த  வரலாற்றுப்புகழ் மிகுந்த  கன்னட நாடக கம்பெனி குப்பி வீரண்ணா தியேட்டர்ஸ்.  அக்காவோடு இருக்க, ஊர் பார்க்க, நாடகம் பார்க்க, ரசிகர்களை மேடைக்குப்பின்னாலிருந்து பார்க்க,ஆண் பெண் நாடக நடிகர்களோடு நேசத்தோடு பழக, அவர்களோடு சேர்ந்திருந்து உண்ண உறங்க,சுவாசிக்க விட்டல் ராவுக்குக் கிடைத்த அனுபவங்களனைத்தின் சாரம் அவருடைய வண்ண முகங்கள் நாவல்.’

விட்டல்ராவ் ஹோசூரில் பிறந்தவர். தாய்மொழி கன்னடம் ஆயினும் பயின்றமொழி பழகிய மொழி தமிழ். சேலம் பகுதிளில் இளமைக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அவர் எழுதிய’ அன்னாடு காச்சியின் சேலம்’ என்கிற படைப்பு  அன்றைய சேலம் நகரைப்பற்றி விரிவாகப்பேசுகிறது. இந்த அரிய படைப்பை எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார். சா.கந்தசாமி பற்றி விட்டல் சொல்லும்போது  ‘எழுத்துலகத்தில் என்னுடைய சகபயணியும் குடும்ப நண்பருமான மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களுக்கு என் அன்புக்காணிக்கை’  என்று குறிப்பிடுகிறார்.

விட்டல்ராவ் தன்னுடை முன்னுரையில் இப்படிச்சொல்கிறார்.

‘என்னுடைய நாவல்கள் சிலவற்றிலும் சிறுகதைகள் நெடுங்கதைகளிலும் சேலத்தை, சேலத்தானை, அதன் அன்னாடு காச்சிகளை, அன்னாடுகாச்சித் தனத்தையெல்லாம் வேண்டிய மட்டும் தேவைப்படும் பொதெல்லாம் சித்தரித்து வந்திருக்கிறேன். சேலம் என் ஊர்,என் மண். என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று.’

விட்டல் ராவின் பார்வை எத்தன கூர்மையானது என்பதனை விளக்க ’ ஓர்  அன்னாடு காச்சியின் சேலம்’ வரலாற்று நூலில் வரும் இந்த எடுத்துக்காட்டு போதுமானது. இப்படிச் சொல்லிச் செல்கிறார் விட்ட;ல் ராவ்.’ எங்கள் குல தெய்வமான எல்லம்மன் என்றழைக்கப்படும் ரேனுகாதேவி கோயில் பூசாரி எனக்கு மொட்டையடிக்கும்  போது பூணூல் அணிந்திருக்கவில்லை.அவருக்குப்பின் அந்த திருச்செயலை சுவீகரித்துக்கொண்ட அவர் மகன் அம்மனுக்குப் பூசை  காரியத்தின் போது பூணூல் அணிந்திருப்பது வழக்கமாயிற்று’ இதை என் மகளுக்கு அங்கு  முடி இறக்கிய போது நான் கவனித்தேன்.

அர்ச்சகர் என்ற சொல் பூசாரி என்கிற சொல்லினும் உயர்வு பட்டதாக இந்த சமூகம் கருதத்தொடங்கியதை வேதனையோடு குறிப்பிடுகிறார் விட்டல். இருவரும் ஒரே தொழிலைச்செய்தாலும் இந்த  ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிலவத்தொடங்கியதைக் குறிப்பிடுகிறார்.

 அன்றைய திரையரங்குகள்   மாடர்ன் தியேட்டர்ஸ்  படப்பிடிப்பு இடங்கள்,  சிறு மலர் உயர் நிலைப்பள்ளி  போன்ற கல்வி நிலையங்கள், சேலத்து  வீதி ஒழுங்குகள் கடைத்தெருக்கள் உணவுவிடுதிகள், உணவு விடுதி சிப்பந்திகள்,  சிறிய பெரிய  திருக்கோயில்கள், சமூகப் பொதுமேடைகள் என்பனபற்றி  இந்நூல் விரிவாகப்பேசுகிறது’ .டி. ஆர் சுந்தரமும்  அவரது ஆங்கிலேய மனைவியும் திட்டமிட்டு எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் இருக்கும்படியாகத்  திரைப்பட ஸ்டுடியோ ஒன்றைக்கட்ட முடிவு செய்தனர்.இப்படியாக ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஏற்காடு செல்லும் ரம்மியமும் அமைதியுமான சூழலில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ 1935ல் உருவானது. மாடர்ன் தியேட்டர்ஸின் முதல் தயாரிப்பான ‘சதி அகல்யா’ பற்றிப்பேசுகிறார் விட்டல். இப்புத்தகத்தின் இறுதியில்  தனது தந்தை மரணமெய்திய செய்தியைப்பதிவு செய்கிறார். மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் டபள்யூ எஸ் சுந்தரம்  விட்டல் ராவிடம் ’ பிழைப்பது கஷ்டம். இந்த நிலையிலேயே கூட்டிட்டு போனா குதிரை வண்டி வரும்.செலவு ஜாஸ்தியிருக்காது. இங்கே செத்துப்போயிட்டா குதிரை வண்டி வரமாட்டான். வந்தாலும் ஏராளமா பணம் கேப்பான்’  மருத்துவர் பளிச்சென்று  கூறியதைப்பதிவு செய்கிறார்.

சேலத்தைப்பற்றி ஒரு வரியில்,’சேலம் பிறர் அறியாத மகத்தான மனிதர்களை நிறையவே கொண்டிருக்கிறது என்கிறார் விட்டல். அந்த மகத்தான மனிதர்களின் வரிசையில் விட்டல் ராவும் உண்டுதானே.

விட்டல் ராவ் எழுதிய தமிழகக்கோட்டைகள் என்கிற நூல் இங்குள்ள கோட்டைகளின்வரலாறு  கட்டிட அமைப்பு  கோட்டைகளின் சிறப்பு அம்சங்கள்அதனோடு தொடர்புடைய மன்னர்கள் ஆட்சியாளர்கள் அந்தக்கோட்டைகளின் இன்றைய நிலை, குறிப்பிடப்படவேண்டிய சிறப்பான தகவல்கள் அந்த இடத்தினைப் பார்வையிட ஒருவர்  எப்படி  அடைவது என்கிற எல்லா விஷயங்களையும் வாசகர்கள் எளிதில் அறியுமாறு விறுவிறுப்பான நடையில் எழுதியுல்ளார் விட்டல் ராவ்.

அவர் தொட்டுப்பேசும் கோட்டைகள் ஓமலூர், நாமக்கல்,கிருஷ்ணகிரி,தேன்கனிக்கொட்டை,ஓசூர், தர்மபுரி,சந்திரகிரி,தரங்கம்பாடி திருமெய்யம்,வேலூர்,செயிண்ட்ஜார்ஜ் கோட்டை என நீள்கின்றன. கோட்டைகளைப் பற்றி  ராவ் சொல்லுகையில் திப்புசுல்தானின் சரித்திரமும் கூடவே பயணிக்கிறது. தொடக்க கால யுத்தங்களை பிரெஞ்சுப்படைகளுடன் சமாளித்த  திப்புசுல்தான் , ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டதால்  சங்கடத்தில் சிக்கிக்கொள்கிறார். திப்பு சுல்தானின் தலைப்பாகை கீழேவிழ அவர் போரிடுவதைச் சித்திரமாக வரைந்து  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார்.  கட்டிவைத்த கோட்டைகள் எதிரிகளால் வெல்லப்படுவதை விட சூழ்ச்சிகளால் துரோகங்களால் சதிகளால் வெல்லப்படுவதை அழகாய்ச்சுட்டுகிறார்.

கோட்டைகளை ஆய்கையில்    அவருக்குத்துணையாக வருபவர்கள் வழிகாட்டுபவர்கள்,வரலாற்றுக்கதை சொல்பவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களே என்பதை நேர்மையாகப் பதிவு செய்கிறார்விட்டல்.

நிலநடுக்கோடு என்கிற நாவல் அவருடைய சென்னை வாழ்க்கையை சென்னையின் புராதன கட்டிடக்கலை விஷயங்களை அன்று இயங்கிய திரையரங்குகளை, வாடகை வீடுகளை  அன்று உலாவிய சமூக உணர்வுகளை பொது மருத்துவமனை இயங்கிய விதங்களை அன்று மிச்ச சொச்சமாய் சென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின் ஒழுகலாறுகளை எழுத்துச் சித்திரமாய்த்தீட்டித் தந்திருக்கிறார் விட்டல்.

சென்னையில் உள்ள தேவாலயங்கள், சென்னையின் பிரதான பழைய புத்தகக்கடையான மூர் மார்க்கெட்,மரினா கடற்கரை, செயின் ஜார்க் கோட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம். அன்று நகரத்தில் ஓடிய ரிக்ஷாக்கள், நகரப்பேருந்துகள் அவை ஏழு பைசாவுக்கு வழங்கிய டிக்கட்டுகள், எம்ஜி ஆர்  எம் ஆர் ராதாவால்  சுடப்பட்ட சமாச்சாரம்,  பிரதமர் நேரு இறந்தபோது  மாநகர கெடுபிடி, பின்னர் நாட்டில் வந்த உணவுப்பஞ்சம் அதனை சென்னைநகரம் அணுகிய விதம், அவர் காதலித்துத்திருமணம் செய்துகொண்ட சாகசம் நிறைந்த சென்னை வாழ்க்கை, தொலைபேசித்துறையில் பணியாற்றிய கெடுபிடி அதிகாரிகள், பொறுப்புமிக்க ஊழியர்கள், சோரமில்லா  தொழிற்சங்கத்தலைவர்கள், தலைவர்கள் நிகழ்த்திய விறு விறுப்பான கூட்டங்கள், தொலைபேசித்துறையில் நடைபெற்ற  அகில இந்திய வேலை  நிறுத்தங்கள், இன்னும் எத்தனையோ சுவாரசியமான செய்திகளைச் சொல்லிக்கொண்டே போகிறார். புத்தகம் வாசகனை கட்டிப்போட்டுவிடுகிறது. விட்டலின் எழுத்து நடை நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

நிலநடுக்கோடு புதினம் பற்றி பாவண்ணன்  இப்படிக்குறிப்பிடுகிறார்,

’வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச்சித்திரம்போல் ஒன்றிரெண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம் ஒளிவுமறைவுப்பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள் மீது வெளிச்சம்  விழும்படியாக ஒரு நாவலை எழுதிப்பார்த்திருக்கிறார் விட்டல் ராவ். தெருக்கள், வீடுகள் கடைகள், திரையரங்குகள்,உணவுவிடுதிகள் குதிரைப்பந்தயம் என சென்னை வாழ்க்கையைப்பற்றி அவர் அளிக்கும் பல நுண் தகவல்கள் வாசிப்பின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன.அறுபதுகளின் வாழ்க்கை நம் கண் முன்னால் எழுத்தில் ரத்தமும் சதையுமாக விரிகிறது.,’

தேவ் என்கிற பெயரில் வரும் இந்த நாவலின் கதாநாயகன் விட்டல் ராவ் அவர்களேதான். தகப்பனை இழந்த தேவு எனும் தேவேந்திர அய்தாளாவின் பேரில் குழந்தை பாக்கியமற்ற டாக்டர் ஹமீத் தம்பதிகள் வாஞ்சை காட்டி வந்தனர். சேலத்திலிருந்து ஒலவக்கோடு பாசெஞ்சரில் சென்னை நோக்கி மூன்றாம்வகுப்புப்பெட்டியில் கூட்டத்தோடு கூட்டமாய் வண்டியில் ஏரும்  கதாநாயகன்  தேவை வழி அனுப்ப டாக்டர் ஹமீத் சேலம் ரயில்வே சந்திப்புக்கு வருகிறார் என்று தொடங்குகிறது நாவல். தேவின் நல்ல குணங்களை அவரின் மாமனார் தன்னுடைய வாழ்வின்  இறுதிக்கணங்களில்  மட்டுமே  தரிசிக்க வாய்க்கிறது.

 ‘தனக்கு மனிதர்கள் உண்டு மொழி உண்டு ஊர் உண்டு இனி எல்லாம் உண்டு என்ற தெளிவான நம்பிக்கை மிக்க பிரக்ஞை தேவுக்குள் எழுந்து பரவியது.’ என்று முடிக்கிறார் விட்டல்.

’மின்னற்பொழுதுகள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பு பேசும் புதியசக்தி இதழில் வந்த இலக்கியக்கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலுக்குப் பதிப்புரை எழுதிய ஜெ .ஜெயகாந்தன்,  ஓவியர் தேனுகா,எழுத்தாளர் சா.கந்தசாமி அசோகமித்திரன், மா. அரெங்கநாதன்,தனுஷ்கோடி ,மகரிஷி,பாவண்ணன்,பாவை சந்திரன்,பதிப்பாளர் கலைஞன் மாசிலாமணி  ஆகியோரைப்பற்றி விட்டல் ராவின் நினைவுகள் அபாரமானவை என்று வியந்து எழுதுகிறார்.

தனுஷ்கோடியின் பன்முக ஆளுமை என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதும்  விட்டல், ‘ நம்மைச்சுற்றி நமக்கு அருகே அரைகுறைகளும், அதுவுமில்லாதவையும் தாம் தூமெனக் குதிதெழும்பிச் சுய பீற்றலில் ஜொலிக்கையில், குடத்திலிட்ட மணி விளக்காய் அதிகம் தெரியவராமலே இருப்பவர்கள் அனந்தம். அவ்வாறான பன்முகக் கலை ஆளுமை கொண்ட திரு. ஆற்காடு வரதராசப்பிள்ளை தனுஷ்கோடி வெளியுலகுக்குத்தெரியாமலே சுடர்விட்டுப்பிரகாசிப்பவர் என்று தொடங்குகிறார்.

 தனுஷ்கோடி மூன்று தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘ஹாசன்’ சகோதரர்கள் தயாரித்த ‘ராஜபார்வை’ டி. ராஜேந்தர் இயக்கிய ‘நெஞ்சில் ஒரு ராகம்’ பிரதாப் போதன் இயக்கிய இந்தியப்பிரதமரின் பரிசுபெற்ற ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற மிக அரிய விஷயங்களை வாசகர்க்குத் தருகிறார்.

கன்னத்தில் அறைவாங்கி தத் ரூபமாய் நடித்தவர்கள் தமிழ்த்திரையுலகில் இருவர் என்கிறார் விட்டல். ஒருவர் சகஸ்ரநாமம், ‘மண மகள்’ படத்தில் பத்மினியிடம் அறை வாங்குவது, மற்றொன்று  ‘ராஜ பார்வை’ படத்தில் எல் வி பிரசாத்திடம்  அறை வாங்கும் தனுஷ்கோடி என்கிறார். சினிமா பற்றிய விட்டலின் தெரிவு இயல்பாய்  மிக ஆழமானது.

’எழுத்தில் சித்து மா. அரங்கநாதன்’ என்னும் கட்டுரையில் விட்டலும் மா. அரங்கநாதனும் திருப்போரூர் பேருந்தில் பயணித்த சுவாரசியமான  கதை வருகிறது. அரங்கநாதனிடம்  இருப்பது  ஐந்து ரூபாய், விட்டலிடம் இருப்பது ஒண்ணரை ரூபாய. இருவரும்  திருப்போரூர் பயணம் போய் திரும்பிய கதையை நகைச்சுவையோடு சொல்கிறார் விட்டல்.

தனக்கொரு முன் மாதிரியாக எவரையும்  சொல்லமுடியாத ஒப்பற்ற கதாசிரியர் மா. அரங்கநாதன். அவர் பெயரில் ஒரு அறக்கட்டளைத்தொடங்கி இலக்கிய ஆளுமைகளுக்கு பரிசளிப்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுப் பாராட்டுகிறார் விட்டல்.

புதுமைகளை  விரும்பும் சாவி  ,  மனிதத்தன்மை மிக்க கோமல் சுவாமிநாதன், நட்பு போற்றும் பாவை சந்திரன்  ஆகியோர் பற்றிய கட்டுரைகளை இப்படைப்பில் காணலாம். இந்த  நூலில் இன்னும்   திருவாளர்கள் சா. கந்தசாமி,பாவண்ணன், கலைஞன் மாசிலாமணி, நர்மதா இராமலிங்கம், தீபம் திருமலை என்னும் பல ஆளுமைகளைச்சிறப்பித்து எழுதுகிறார் விட்டல்.

பாவண்ணன் பற்றிய கட்டுரையில், வெங்கட்சாமினாதன் குறிப்பிட்ட செய்தியினைப்பதிவு செய்கிறார் விட்டல்.

‘பாவண்ணன் ரொம்ப நல்லவனா தெரியறான்யா,அவ்வளவு நல்லவனாவும் இருக்கக்கூடாதய்யா’

‘’ இயல்பை மாத்திக்க முடியாது அண்ணா’ விட்டலின் பதில் இது.

நான் ஒரு சமயம் கவிஞர் பழமலயிடம் பேசிக்கொண்டிருந்தேன். பாவண்ணனின் வளவனூரில்தான். ஏதோ ஒரு இலக்கிய  நிகழ்ச்சிக்குப்போயிருந்தோம்.’ பாவண்ணன் ஈர வன்னியன், வீர வன்னியன் இல்லே’ என்று குறிப்பிட்டார் பழமலய்.  அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக்கடைக்கு இயயைந்தவராய் எழுத்தாளர் பாவண்ணனைச்சொல்லலாம். இதுவே வெ. சா வின் பாவண்ணன்  பற்றிய வரையறையிலும் இருப்பதை நாம்  காணலாம்.

’காலவெளியில் வண்ண முகங்கள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பை லாவண்யா சுந்தரராஜன் கொண்டு வந்துள்ளார். அதனில் பாவண்ணன் எம் கோபாலகிருஷ்ணன்,லாவண்யா சுந்தரராஜன்,குமாரநந்தன், மு. குலசேகரன்,சிவபிரசாத், சாகிப் கிரான்,ரமேஷ் கல்யாண்,திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தம் ஆகியோர் விட்டல்ராவின் பன்முக ஆளுமை பற்றி போற்றிப்  போற்றி எழுதியிருக்கிறார்கள்.

எளிய மனிதர்களின் ஆன்மாவைத்தேடிய பெரிய எழுத்தாளர் விட்டல். உலக சினிமா பற்றிய ஞானம் பெற்றவர், நடமாடும் ஒரு தகவல் களஞ்சியம், மொழியை மிக நுட்பமாகக் கையாளுபவர், சளைக்காத கலைப்பயணி, நாட்டுப்புற மனிதர்களின் சம்பாஷணையில் ஒளிந்திருக்கும் அற்புதத்தை தரிசிக்கத்தெரிந்தவர்,ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின் வாழ்வியலை நுட்பமாக அறிந்தவர், காம்ரேட்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்ட சோகத்தைப் பதிவு செய்தவர், மனித உறவுகளின் நுட்ப இஅவதானிக்கத்தெரிந்தவர், தமிழக சமூக வரலாற்றை உள்வாங்கிய படைப்பாளி, ஏதுமிலிகளின்வழக்கறிஞராய் விட்டலை வாசகர்கள் தரிசிக்க முடிகிறது.

 

 

 

 

 

 

 

 

8.                       விட்டல் ராவ்  ஓர் கலைச்சுரங்கம்

 

’ஒரே ஒரு சிறுகதை  விட்டல் ராவ் உரையாடல்கள்’  என்னும்  கட்டுரை நூலை எழுத்தாளர் பாவண்ணன்  படைத்திருக்கிறார். எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்களோடு பாவண்ணன் நிகழ்த்திய உரையாடல்  இங்கே  ஒரு நூலாகியிருக்கிறது. விட்டல்  ஓர்   கலைகளின் சுரங்கம் என்பதைத் தெரிவிக்கும்  பலகணியாய்  இந்நூல் வாசகனுக்கு அனுபவமாகிறது.

 சந்தியா பதிப்பகம் இந்நூலை கொண்டு வந்திருக்கிறது. மணியான பத்தொன்பது கட்டுரைகளைக்கொண்ட இந்நூல் 262 பக்கங்களாய் விரிகிறது.  இப்படைப்பின் பெரும்பாலான கட்டுரைகள் அம்ருதா இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இந்த நூலை  இவ்விரு  இலக்கியப் பெருமக்களுக்கும் நண்பராய் இருந்த   நாடறிந்த  எழுத்தாளர்   அமரர்  அசோகமித்திரனுக்குப் பாவண்ணன் வணக்கத்தோடு சமர்ப்பித்திருக்கிறார்.

பாவண்ணனும் விட்டல்ராவும் பெங்களூருவில் வசித்து வருகின்ற எழுத்தாளுமைகள். இருவரும் வெளியூர்களில் நிகழும் பல இலக்கிய நிகழ்வுகளுக்குச் சேர்ந்தே பயணித்திருப்பதும்,  வாழிடம் அண்மை என்பதால் இவரும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதும்   இந்நூல்  உருப்பெற உதவியிருக்கின்றது. இந்நூலை வாசிக்கின்றபோது பகவத்கீதையின் வினாவிடைப் பாணி  காட்சியாவதாய் நான் உணர்ந்தேன். விட்டல்ராவ் கீதையின் விளக்கம் சொல்லும்  கண்ணனாக, பாவண்ணன் வினா வைக்கும் பார்த்தனாக எனக்கு அனுபவமானார்கள். பாவண்ணன் வாசகர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வினாக்கள் வைப்பதை நாம் உணரலாம்.

பாவண்ணன் தனது முன்னுரையில் மிகச்சிறப்பாக இந்நூலின் முக்கியத்துவம் பற்றிக்குறிப்பிடுகிறார்.

‘விட்டல் ராவுடன் உரையாடுவது ஒரு நூலகத்துக்குச்சென்று புத்தகம் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத்தொடங்கினால் எண்ணற்ற தகவல்கள் வந்துகொண்டேயிருக்கும். அவருடைய நினைவாற்றல் ஒரு பெரும்புதையல். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும் ஆற்றல் அவருக்குண்டு. அவர் வழியாக எண்ணற்ற மனிதர்களைப் பற்றித்தெரிந்து கொண்டேன்.’

ஒவ்வொரு கட்டுரையிலும்  பாவண்ணன் தனக்கு நேர்ந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறார். அவைகளின் ஒரு முனையை விட்டல் ராவோடு பகிர்ந்து கொள்கிறார். விட்டல் அதனைப் பற்றிக்கொண்டு  தனது சொந்த  அனுபங்களை அருவியெனக் கொட்டுகிறார். அதனை வாசகப் பெருமக்களுக்குக் கடத்துகிறார் பாவண்ணன்.

முதல் கட்டுரைக்குக்  கபாலி என்று பெயர் கொடுத்திருக்கிறார் பாவண்ணன்.  தினமணிக்கதிரில்  அறுபது எழுபதுகளில் விட்டல் ராவ் தான்  எழுதிய கதைகளை இரண்டு தொகுதிகளாக பைண்ட் செய்து வைத்திருக்கிறார். அதில் ஒரு தொகுதியை படிக்க  வாங்கி வந்த பாவண்ணனுக்கு விட்டல் ராவின்  சிறுகதைப்படைப்புகளில் ’ கபாலி’ என்னும் சிறுகதை  மிகவும் பிடித்துப்போகிறது. கபாலி ஒரு பேட்டை ரவுடி. அதே ஊரில் வீரய்யா  என்பவன் இன்னொரு ரவுடி.  கபாலிக்குக் கான்ஸ்டபிள் துரை  வேண்டியவராகிறார். அதே ஸ்டேஷனைச்சார்ந்த கான்ஸ்டபிள் சாயிராம்  வீரய்யாவுடன் நெருக்கமாகிறார். இருவேறு ரவுடிக் கும்பல்களுக்கிடையே  சதா மோதல்கள் நடக்கின்றன. இரு வேறு கான்ஸ்டபிள்களுக்கு  இடையேயும்  பொறாமையும் போட்டியும்  தொடர்கின்றன,  அதிர்ச்சி அளிப்பதாய்  கபாலியின் மரணம் நிகழ்கிறது. அவனது உடல் சாக்கடையை அடைத்துக்கொண்டு கிடக்க அதனை வெளியே எடுத்துப் போடுகிறார்கள். இந்தக்கதையை  நண்பர்  விட்டல் ராவோடு தொடங்குகிறார் பாவண்ணன். அந்தக் கபாலி கதைக்குள் இன்னும் பல கதைகள் இருப்பதாய் விட்டல் ராவ் ஆரம்பிக்கிறார். ஒரு  சினிமா நடிகையோடு  அவனுக்குப் பழக்கம்  ஏற்படுகிறது. அந்த நடிகை  ஷூட்டிங்க்  முடித்த கையோடு  ஷாப்பிங்க் போகும் சமயம்  கபாலி பார்த்து விடுகிறான். அவனுக்கு என்னமோ கிளு கிளுப்பு. அந்த நடிகையைக் கட்டிப்பிடித்து  மார்பகத்தை கடித்தே விடுகிறான்.  அவனை யாராலும் பிடிக்கவே முடிய வில்லை. எங்கு போனான் என்றே தெரியவில்லை. ஒரு நாள் அவன்  சவம் சாக்கடையில் அடைத்துக்கிடந்ததது. இந்த நிகழ்வைத்தான்  நடிகை சமாசாரத்தை மட்டும் நீக்கிவிட்டு ’கபாலி’ என்னும் சிறுகதையாக விட்டல்  எழுதியிருக்கிறார்.  அதற்குத் தினமணிக்கதிரில்  எழு நூற்றி ஐம்பது ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது.  அதனை பெற்றுக்கொண்ட விட்டல் ராவ்  ஆதம்பாக்கத்தில் தன் வீட்டுக் கழிப்பறையைப்  பேசின் வைத்த நவீன கழிப்பறையாக மாற்றியிருக்கிறார். அதுவரைக்கும் கையில் காசில்லாத்தால்  லெட்ரின் கழிவுகளை தானும் தனது மனைவியும் இரவில் யாருக்கும் தெரியாமல்  வெகுதூரம் எடுத்துக்கொண்டு போய் கொட்டி சுத்தம் செய்து வந்திருக்கிறார்கள். எளிமை  நேர்மை உண்மை   இவைதானே விட்டல்ராவ்.

கபாலி கட்டுரையை இப்படி முடிக்கிறார் பாவண்ணன். ‘ ஒரு கதை,அந்தக் கதைக்குள்ள ஒரு கதை, அதுக்குப் பின்னணியா  இன்னொரு ஒரு கதை எல்லாமே அருமை’

அடுத்தக் கட்டுரை  இரண்டு ரோஜாப்பூக்கள். ஒரு சமயம் ’சர்வோதயம்’ மலர்கிறது இதழுக்காக  லால் பகதூர் சாஸ்திரி பற்றி ஒரு கட்டுரையைப் பாவண்ணன்  எழுதிக்கொண்டிருக்கிறார். விட்டல் ராவ் கை பேசியில் அவரை அழைக்கிறார்.’நீங்க சாஸ்திரியைப் பார்த்திருக்கீங்களா சார்?’ வினா வைக்கிறார் பாவண்ணன். தான் அவரை நேரில் பார்த்திருப்பதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ‘உண்மையாவா சார்? யாராவது அழைச்சிட்டு போனாங்களா,,இல்ல நீங்களா பாத்தீங்களா” என்கிறார் பாவண்ணன். அதற்கு விடையாக ஒரு நீண்ட கதை சொல்கிறார் விட்டல் ராவ்.   பிரசன்ன வெங்கடேசன் என்னும் கும்பகோணத்துக்காரர் தன்னோடு ஆப்ரேட்டராக சென்னையில் பணியாற்றியவர். அந்த  நண்பரின் வாழ்க்கையைச்சொல்கிறார் விட்டல் ராவ்.  பிரசன்னா  தொலைபேசியில் இயங்கிய என் எஃப் டி இ தொழிற்சங்கத்தில் தீவிரப் பற்றோடு இருந்தவர்.  தொழிற்சங்கப் பணியாய் டில்லியில்  தாதா கோஷ் பவனுக்கு அடிக்கடிச் செல்வார். அப்படிச் செல்கின்றபோது  கோபண்ணா என்கிற காங்கிரஸ் காரரோடு  அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டாகிறது.  அப்படியே  சூழலியலாளர் பகுகுணாவோடும் நெருக்கமாகிறார். ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ் நாட்டைப்பற்றி ஏதோ அய்யம் வர அதற்கு விடை சொல்லும் முகத்தான் பிரசன்னா அனுப்பப்பட்டிருக்கிறார். சாஸ்திரியோடு பிரசன்னா   பேசியிருக்கிறார்.  அச்சந்திப்பு முடியும் போது இரண்டு ரோஜாப்பூக்களை சாஸ்திரி பிரசன்னாவிடம் வழங்கியிருக்கிறார். அதனைத் தேவலோகத்து மலர்களாய் நினைத்து பிரசன்னா தனது டைரியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார்.  தனக்குத்  தெரிந்த எல்லோருக்கும் அதனைப் பெருமையோடு காண்பிக்கவும் செய்தார். அவர்தான் விட்டல் ராவை பிரதமர்  சாஸ்திரியின் கூட்டத்திற்கு அழைத்துச்சென்றவர்.

பிரசன்னா நல்ல புத்திசாலி. இலாகா தேர்வு எழுதி ஜே இ பதவிக்குத் தகுதியானார். மேலுள்ள அதிகாரிகள் பயிற்சி வகுப்புக்கு  அவரை அனுப்பாமல் முடக்கிப்போட்டார்கள். அதனை எதிர் கொள்ள டிரிப்யூனலுக்குப்போனார்.  நீதிமன்றத்தில் வென்றார் ஆயினும் அவரை  எதோ சாக்கு சொல்லி பயிற்சிக்கு அனுப்பாமல்  அதிகாரிகள் காலம் கடத்தினார்கள். வெறுத்துப்போன பிரசன்னா  தனக்கு எந்தப் பதவி உயர்வும்  வேண்டாமென்று ஆப்ரேட்டராகவே பணி தொடர்ந்தார். வாழ்க்கைத்துணைவியாய் ஒரு பெண்ணை மணந்தார். அதுவுமே விளங்கவில்லை. மண வாழ்க்கை முறிந்து போனது. கைக்குழந்தையோடு டில்லி சென்ற மனைவி அவரை முற்றாக மறந்து போனார்.  பிரசன்னாவைக் குடிப்பழக்கம் தொற்றியது.   ஒரு நாள் அனாதையாய் இறந்து போனார். அவரின் இறப்பு நிகழ்வும்,  சவ அடக்கமும் சோக மயமானது. பிரசன்னாவின் வாழ்க்கையையே விட்டல் ராவ் காம்ரேட் என்கிற நாவலாக எழுதினார்.

‘த் ச் பாவம்,  பிரசன்னன்தான் பாதி சினிமாவுல  எழுந்து போகிற மாதிரி  அரை கொறயா வாழ்ந்துட்டு போயிட்டாரு’ என்று  உரையாடலை முடிக்கிறார் விட்டல் ராவ்.

  மூன்றாவதாக வரும்  கட்டுரை எஸ்.வி.எஸ் என்னும் மாமனிதர்.   பாவண்ணன் சென்னையில் காந்தி கல்வி நிலையத்தில்  அ. இராமசாமி எழுதிய ‘தமிழ் நாட்டில் காந்தி’ என்னும் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று பேசுகிறார். அது தக்கர் பாபா வளாகம். அவ்வளாகத்தைப் பல்வேறு கோணங்களில் நிழற்படமெடுத்து  விட்டல் ராவுக்குக்காண்பிக்கிறார் பாவண்ணன். விட்டல் ராவ் அங்கிருந்த ராஜாஜி நூலகத்தை உருவாக்கிய எஸ்.வி.சுப்ரமணியம் பற்றி உரையைத் தொடங்குகிறார். எஸ்.வி.எஸ்  ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.  காந்தியத் தொண்டர். விடுதலைப்போரில் சிறைக்கு ஏகியவர். கல்கியின்  நண்பர். சிறு கதைகள் சில படைத்தவர். கல்கியில் துணையாசிரியர். இலக்கியச்சிந்தனை அமைப்போடு இயங்கியவர்.இசையரசி         எம் எஸ், திகசி, அசோகமித்திரன்  ஆகியவர்களோடு பழகியவர்.

‘ஒவ்வொரு செங்கல்லா வச்சி வீடு கட்டறதுமாதிரி சிறுகச்சிறுக  பாடு பட்டு அந்த நூலகத்தை உருவாக்கினார் எஸ். வி. எஸ். துரதிருஷ்ட வசமா அவருடைய மரணத்துக்குப் பிறகு  எதிர்பார்த்த அளவுக்கு  அந்த நூலகம் சரியா இயங்கல.’  தன் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் விட்டல் ராவ்.

மைலாப்பூர்  பாரதிய வித்யா பவன் இராஜாஜி பெயரில் ஒரு நூலகம் உருவாக்கி நடத்த முனைந்தார்கள். தக்கர் பாபா வளாகத்தில் இருந்த எஸ்.வி.எஸ் நூலகம் முழுவதுமாய் இராஜாஜி நூலகத்திற்கு இடம் பெயர்ந்து  எஸ். வி. எஸ் நூலகம் காணாமல் போயிற்று.

அடுத்து வருவது’ நாற்பது ரூபாய் ’  என்று தலைப்பிட்ட கட்டுரை. விட்டல் ராவும்  இயல்பாய் ஒரு ஓவியர். எழும்பூர்  கலைப்பள்ளியில் பயின்றவர். பாவண்ணனும் ஓவியம் பற்றி நன்கு  அறிந்தவர்தான். மாடலாக ஓவியம் வரைவதற்கு வந்து நிற்கும்  எளிய பெண் அவள் உடன் வரும் அவளின் சிறு குழந்தை. மாடலுக்கு நிற்கும்   அவள் கை ரிக்‌ஷா இழுப்பவனின் மனைவி  அப்பெண்ணுக்குக் கூலி ஐந்து ரூபாய். அது பற்றி விபரம் சொல்கிறார் விட்டல்.

‘’பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆர்டி்ஸ்ட்  மனசுக்குள்ளயும்  ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா இருக்கும்.அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத் தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக  ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான் மாடலை நிக்க வைக்கிறது .எந்த மாடலுடைய படத்தையும் எந்த ஸ்டுடியோவுலயும் எந்த ஆர்டிஸ்டும் வரையமாட்டான். அது ஒரு அறம். கண்ணால பார்க்கிற  உருவத்துக்கு அவன் தன் நெஞ்சில இருக்கிற உருவத்தைத்தான் கொடுப்பான்’

என்கிற அரிய செய்தியை விட்டல் ராவ் வழி  வாசகர்க்குச்சொல்கிறார் பாவண்ணன்.  அங்கிருந்த எல்லோரிடமிருந்தும்  பணம் வசூலித்து ஒரு நாற்பது ரூபாயை அந்த மாடலுக்காக  வந்த பெண்ணுக்குக் கொடுத்தனுப்புகிறார்கள் என்கிற  நல்ல செய்தியும் கட்டுரையில் வருகிறது.

’பாலர் பாடல்கள்’ என்னும் தலைப்போடு வரும் அடுத்த கட்டுரையில் விட்டல் ராவ் தனது சிறுவயதில் கற்றுக்கொண்ட ஆங்கிலப் பாடல்களை அழகாக ஒப்பித்து அசத்துகிறார்.

‘Cocks crow in the morn

To tell us to rise

And he who lies late

Will never be wise  என்கிற  சேவல் பற்றிய பாடல்,

‘Cock a doodle do

My dame has lost her shoe  என்கிற மற்றுமொரு சேவல் பாடல்

‘Her arms across her breast she laid

She was more fair than words can say

Barefooted  came the beggar maid

Before the king Cophetua.  என்கிற கோமாளி ராஜா ஒரு பிச்சைக்காரப் பெண்ணை மணக்கும்  பாடல் ஒன்று கூட வெளிப்படுகிறது  விட்டல் ராவின் மனக்குகையிலிருந்து.

அடுத்து வரும் கட்டுரை’ ஒரே ஒரு சிறுகதை’. இந்நூலுக்குத்தலைப்பாய் அமைந்த கட்டுரை. தினமணியின் ஆழ்ந்த  வாசகரான பாவண்ணன் தினமணியில்  அம்ஷன் குமார் பற்றியும், சாகித்ய அகாதெமியின் சிறுகதைத்தொகுப்பு  பற்றியும் கலாரசிகன் குறிப்பிட்டுள்ளது பற்றி விட்டல்ராவோடு பேச்சுத்தொடங்குகிறார். விட்டல் ராவ் கலைஞன் பதிப்பகத்து மாசிலாமணி யின்   ஆலோசனையில் இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்னும் தொகுப்பு வேலையை ஆரம்பித்த கதையைச் சொல்கிறார்.  எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே சிறுகதைத் தொகுப்பிலே சேர்ப்பதற்கு  தன் கதையைத் தானே தேர்வு செய்தது சொல்கிறார். எழுத்தாளர்கள் பட்டியலை  ஜெயகாந்தன் வாங்கிப்பார்க்கிறார். அதனில் இருவர் பெயர் விட்டுப் போயிற்று என்கிறார்.  பி. ச. குப்புசாமியும், பி. ஸ்ரீனிவாசனும் அந்த இருவர். குப்புசாமியின் கதை கங்கவரம், ஸ்ரீனிவாசனின் கதை திருமணம் என்கிற ஒரு  குறிப்பும்  தருகிறார். அந்த இருவரின் விலாசமும் தருகிறார். விட்டல்ராவ் ஒரு   கடிதம் எழுதிட திருப்பத்தூரிலிருந்து  குப்புசாமி கங்கவரம் கதையை அனுப்பி வைக்கிறார். சென்னையிலிருந்த ஸ்ரீனிவாசனை விட்டல் ராவ் நேரில் சென்று சந்திக்கிறார்.’ திருமணம்’ சிறுகதையைப் பெற்றுக்கொள்கிறார். இதுவரை ஒரு தொகுப்புமே போடாத  எழுத்தாளர் ஸ்ரீனிவாசனிடமிருந்து இருபது  சிறுகதைகளை வாங்கி வந்து  அதனை ஒரு தொகுப்பாக்க முனைகிறார் விட்டல் ராவ். அதுதான் நடைபெறவேயில்லை.  அந்தப்பதிப்பகத்தாரரோ கதைகளைத் தொலைத்தும் விடுகிறார்.   பதிப்பாளரின் பெயரை  விட்டல் ராவ் குறிப்பிடவும் இல்லை. விட்டல் ராவ் தொகுத்த  நூறு கதைகளில் ஒன்றாக  ஸ்ரீனிவாசனின் திருமணம் இடம் பெறுகிறது. ஆனால் தொகுப்பைக் கண்ணால் பார்க்காமலே மறைந்து விடுகிறார் ஸ்ரீனிவாசன்.

’’ஒரு தொகுப்புக்கான கனவு’  என்று தலைப்பிட்ட கட்டுரையில் பாவண்ணன்  வி. கமலா ராவ் பற்றிக்குறிப்பிடுகிறார். கமலா ராவ்  என்கிற பெயரில் இரண்டு சிறுகதைகள் ஒன்று  ‘பாசம் பிரிவதில்லை’  மற்றொன்று ‘ எஞ்சின் தண்ணீர்’ இவ்விரண்டு கதைகளைப் பற்றி விரிவாகப்பேசுகிறார்.  பாவண்ணன் விட்டல் ராவிடம்  கமலா ராவ் யாரெனக் கேட்கிறார். விட்டல் ராவின் மனைவிதான் அந்த கமலா ராவ்.  இதனை அறிந்த பாவண்ணன் வியந்து போகிறார். விட்டல் ராவ் தனது மனைவி   கமலா  ஏழு சிறுகதைகள் எழுதி அவை வெவ்வேறு  இதழ்களில் பிரசுரமானதைப் பற்றிக்குறிப்பிடுகிறார். அவைகளைச் சரியாக பாதுகாத்து வைக்காதது பற்றி விட்டல் ராவ் வருத்தப்படுகிறார். அவைகளை எப்படியேனும் தேடிக்கண்டு பிடித்து ஒரு தொகுப்பாய்க் கொண்டு வரலாம் என்கிற  உருப்படியானதொரு யோசனையை வைக்கிறார் பாவண்ணன்.

பாகவதரின் பாடல்கள் என்னும் கட்டுரையில் பாவண்ணன் தனது தந்தை பலராமன்   தியாகராஜ பாகவதரின் பாடல்களில்  எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்று  தொடங்குகிறார். விட்டல் ராவ் அவரது குடும்பமே பாகவதரின் பாடல்களில் தோய்ந்து போயிருந்ததைக் குறிப்பிடுகிறார். ‘ பவளக்கொடிதான் பாகவதரு முதல் படம். அவருக்கு அதுல ’அர்ஜுனன் நானடி மானேன்னு’ ஒரு பாட்டக்கேட்டு கிறங்காத ஆளே அந்தக் காலத்துல தமிழ்நாட்டுல இல்லை. ஒரே படத்துல அவர் புகழ் உச்சிக்கே போயிட்டாரு’ என்று சொல்லிக்கொண்டே போகிறார்.

  கிருஷ்ணகிரியிலேந்து சென்னைக்குப்போகிற வழியில்  காட்னாம் பட்டி என்றொரு ஊர் உள்ளது. அங்கு ஒரு மலை முருகன் கோவில். அந்தக்கோவிலில் நிகழும் அன்னதானம், அங்கு ஒரு வாய் பேசாத சாமியார் இருந்தார். அவருக்கு சட்டி சாமியார் என்று பெயர். அன்னதான  சட்டியைக்   கயிற்றால் கட்டி  அதனைத் தன் இடுப்பில் சுற்றியபடி அவர் முருகன்  கோவிலை வலம் வருவார்.  வேறு ஒரு சிவாச்சாரியார் அந்தக்கோவிலுக்குப்  புதிதாய் வர சட்டி சாமியாருக்கும் அவருக்கும் பிரச்சனை எழுகிறது.  அந்தப்புதியவர் சட்டி சாமியாரை  விரட்டி அடித்தார். சட்டி சாமியார் ஒரு மலையில் ஏறி விழுந்து இறந்து போகிறார். பிறகு பாகவதர் பற்றிய விபரம் சொல்கிறார் விட்டல் ராவ்.

‘காட்னாம்பட்டியில் முதல் கச்சேரி எப்பவும் கே .பி. சுந்தராம்பாள் கச்சேரிதான்.அருமையா பாடி ஆரம்பிச்சி வைப்பாங்க.அடுத்த நாள் லோகநாதன் கச்சேரி. அதுக்கப்புறம் சி. எஸ். ஜெயராமன் பாடுவாரு. அதுக்கப்பறம் நம்ம தியாகராஜ பாகவதர் வருவாரு’

பாகவதருடைய  இரண்டு பாடல்கள், ஒன்று  ‘கைமாறு செய்வதுண்டோ- காந்திஜிக்கு கைமாறு செய்வதுண்டோ, மற்றும் ஒன்று ‘காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பதும் எளிதாமோ’ இவைகளைச் சிறப்பாக விட்டல் ராவ்  பாடி முடிக்கிறார்.

’அந்தக்காலத்து நண்பர்கள்’ என்கிற கட்டுரை,  விட்டல் ராவுடைய  பள்ளிக்கூட நண்பர் சந்திரசேகர் பற்றிப் பேசுகிறது. அவருடைய இறப்பு செய்தியை அவருடைய பிள்ளையே  விட்டலிடம் போனில் தெரிவிக்கிறார். அதிர்ந்து போகிறார்   விட்டல் ராவ். பாவண்ணனிடம் சந்திரசேகர் பற்றிய முழு விபரமும் சொல்லப்படுகிறது. சந்திரசேகருடைய தந்தை  ஸ்ரீகண்டையா. கன்னடம் பேசுபவர். அவருக்கு ஒன்பது குழந்தைகள். அவர்களின் பெயர்கள் தொழில் வாழ்க்கை அத்தனையும்  வாசகர்க்குப் பட்டியல் போட்டுத்தருகிறார் விட்டல் ராவ்.

அடுத்த கட்டுரை ’ மகத்தான ரசிகர்’. அக்கட்டுரையில்  க. நா. சு வுக்கு  ஒரு சமயம் தொண்டை கட்டிப்போன செய்தியையும், அதற்குக் காரணமான நார்த்தங்காய் ஜூஸ் பற்றியும்  க. நா. சுவின் மனைவியே அவரிடம்  சொன்னதைப் பகிர்கிறார் விட்டல் ராவ்.அந்த  மாமி க. நா. சு பற்றி,’ இவருக்குப் புத்தியே இல்லைங்க’ என்று சொன்னதையும்,  அதனையே யாரோ தனக்கு பெரிய விருது அறிவிப்பு செய்வது போல் க.நா.சு பாவித்துக்கேட்டதையும்  அழகாய்ச் சொல்கிறார். வெளி நாட்டுப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் க. நா. சு எழுதிய கட்டுரைக்கு எழுபது டாலர் சன்மானம் வருகிறது. அதனை  ரூபாயாக மாற்றி  ஐந்து ரூபாயை மாமிக்குக்கொடுத்துவிட்டு மற்றதை க. நா.சு   மசால் தோசை, காபி சாப்பிட்டே முடித்ததை நகைச்சுவையோடு சொல்லிப்போகிறார் விட்டல் ராவ்.

அடுத்த கட்டுரை ’அதிகாரத்தின் கதை’.  புகழ்பெற்ற சம்ஸ்கார திரைப்படம் பார்த்த பாவணணன் மறுநாள் விட்டல் ராவைச் சந்திக்கிறார். விட்டல் ராவ் வீட்டில்  ஒரு நோட்டுப்புத்தகத்தில்  செய்தித்தாள்களின் நறுக்குகள்  ஒட்டப்பட்டிருந்ததைக் கவனிக்கிறார் பாவண்ணன். இங்கிலாந்தில் லெய்செஸ்டர் என்னும் இடத்தில்   ஒரு கழிவு நீர்க்கால்வாயைச் சுத்தம் செய்தபோது  கிடைத்த ஒரு சவப்பெட்டியைப் பற்றிய செய்திக்குறிப்பு ஆர்வமூட்டுவதாக இருந்தது. அந்த சவப்பெட்டியில் இருந்த எலும்புக்கூடு  மூன்றாம் ரிச்சர்ட் என்கிற அரசனுடையது என்பதை பல ஆய்வுகளுக்குப்பிறகு கண்டு பிடித்தனர். அதனைச்சகலஅரச  மரியாதையோடுமீண்டும் அடக்கம் செய்கிறார்கள்.  மாபெரும்  எழுத்தாளர் ஷே்க்ஸ்பியர் இந்த அரசனை வைத்து  மூன்றாம் ரிச்சர்ட் என்கிற பேசப்பட்ட நாடகத்தைப்படைத்தார்.

தொடர்ந்து வருவது ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்னும் கட்டுரை. இக்கட்டுரை ஓவியம் வரைவோர் பற்றிய கட்டுரை. கல்கத்தா பம்பாய்  கேரளம் சென்னை என்று பல்வேறு ஓவியப்பள்ளிகள் குறித்தும்  விரிவாகப்பேசுகிறார் விட்டல் ராவ். சென்னை மெரினா கடற்கரையிலுள்ள  தேவிபிரசாத் ராய்  செளத்ரியின்  உழைப்பாளர் சிலை பற்றியும் பேச்சு வருகிறது.சென்னையில் நாற்பத்தைந்து வருஷம் வாழ்ந்த விட்டல் ராவ்  ஆர். சூடாமணி என்னும் எழுத்தாளர் மிகச்சிறந்த ஓவியரும் கூட என்பதை அறியாது போனதற்காக மிகவே வருத்தப்படுகிறார்.

விட்டல் ராவ் வாட்டர் கலர் ஓவியம் பற்றி ஒரு வரையறை தருகிறார்.‘வாட்டர் கலர் பெயிண்டிங்கறது சாதாரண விஷயமில்லை பாவண்ணன். ஒரே ஒரு சின்ன ஸ்ட்ரோக்  தப்பா போனாலும் மொத்த படமும்  வீணாயிடும். திருத்திப்போட வழியே இருக்காது. நாலஞ்சி மடங்கு உழைப்பைப் போட்டாத்தான் நல்லா வரும். அதுல சூடாமணியம்மா ரொம்ப திறமைசாலியா  இருந்திருக்காங்க.ஒரே ஊருக்குள்ள  ரொம்ப பக்கத்திலே இருந்துங்கூட தவற விட்டுவிட்டேங்கற எண்ணம்தான் வருத்தமா இருக்குது’

 கலையின் வெற்றி என்கிற  அடுத்த கட்டுரை இல்லுஸ்ட்ரேடெட் வீக்லி ஆஃப் இந்தியா ஆசிரியர்  குஷ்வந்த் சிங் பற்றி விரிவாக அலசுகிறது. அவ்வார இதழை  உயர்தட்டு  மக்களுக்கானது என்பதிலிருந்தும்   எல்லோருக்குமானதாக  மாற்றியது அவர்தான்.  இதழில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு பிரதான பங்களிப்பு தந்தவர் அவரே . யு . ஆர் . அனந்தமூர்த்தியின் சம்ஸ்கார  நாவலை ஏ. கே ராமானுஜம் வழியாக மொழிபெய்ர்க்க வைத்து  அவர்  வெளியிட்டார்.  எம். டி வாசுதேவ நாயரின் ஒப்போள் என்கிற நாவலையும், தி. ஜானகிராமனின்  அம்மா வந்தாள் என்கிற நாவலையும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.  ப்ரிஞ்சால் ஸ்டோரி என்னும்  ஒரு  புதுமைக்கதையையும் அவர் வெளியிட்டார். ஒரு  குண்டு கத்திரிக்காய் ஒருவர் கா;லில் மிதிபட்டுவிட  அந்த மிதிபட்ட உருவம் அடுத்தவருக்கு பிள்ளையார் மாதிரி தெரிகிறது. அதுவும் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு வழிபடப்படுகிறது. பின்னர்  அதுவே  காய்ந்து குச்சியாகி   சிலுவையில் அறையப்பட்ட ஏசுவாய்  ஒருவருக்குத் தெரிய அப்படியேயும்   வழிபடப்படுகிறது. பிறகு அதுவே ஒரு  முஸ்லிம் பெரியவருக்கு,   சூஃபி யின் உருவாய்த்தெரிகிறது. அதை எடுத்துப்போய் அவரும் வழிபடுகிறார். எத்தனை அடுக்கு அடுக்காய்  கடவுள் பற்றிய சமூக விமரிசனம் செய்து பேசுகிறார் குஷ்வந்த் சிங் என்கிறார் விட்டல் ராவ். 

’இரண்டு ஓவியங்கள்’ என்கிற கட்டுரை தொடர்ந்து வருகிறது. எழுத்தாளர்கள் பலர் ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தாகூர்  பாவண்ணன்  விட்டல் ராவ்                          வே. சபாநாயகம் போன்ற எழுத்தாளர்கள் ஓவியம் வரைவதிலும்  மிகுந்த ஆர்வமுடன் இருந்திருக்கிறார்கள். விட்டல் ராவ் ஓவியம் பற்றி மிக ஆழ்ந்த விஷயங்களைக் கற்றுத்தேர்ந்தவர். இதை  அவருடைய  படைப்புக்களே உணர்த்துகின்றன.  விட்டல் ராவ் இரண்டு ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டு  இக்கட்டுரையில்  பேசுகிறார். ஒன்று மெட்ராஸ் வெயில் பற்றிய அழகான ஓவியம்.  சென்னைக்கோடை வெயில். ஒரு பனை மரம். அதன் நிழலில் ஒரு தம்பதியர். குடை பிடித்துக்கொண்ட  அவர்களின் குழந்தைகள் இருவர்.

 மற்றொன்று மெட்ராஸ் மழை பற்றிய ஓவியம். ’சோன்னு கொட்டுற மழையில ஒரு தெருவுக்குள்ள  பல பேரு சுத்தி சுத்தி நடக்கறாங்க. மழை பெய்யுதேன்னு மத்த ஊருல ஒதுங்கி நிக்கிறமாதிரி மெட்ராஸ்ல யாரும் ஒதுங்கி நிக்கற பழக்கமில்லை.’ என்கிறார்.   ‘கொட்டோ கொட்டுனு அடிக்குற மழையில ஏராளமான குடைகள் மட்டுமே தெரியற காட்சி அது. யாருடைய முகமும் ஓவியத்துல கிடையாது. அதே மாதிரி  எல்லாருடைய கால்கள்ளயும் விதம் விதமான ஹவாய் செருப்புகள். யாருடைய முகமும் ஓவியத்துல கெடையாது. எல்லாருமே  முதுகுப்பக்கம் மட்டுமே  தெரியற மனிதர்கள்.’ என்கிற ஓவியம் பற்றிய செய்தி வருகிறது.

’தற்செயல்களும் திருப்பு முனைகளும்’  என்னும் கட்டுரையில்  இலங்க வானொலியின்  பி. எச். அப்துல் ஹமீத் பற்றி பாவண்ணன் தொடங்கி வைக்கிறார்.  விட்டல் ராவ்  வீணை. எஸ். பாலச்சந்தர் தொடர்பு  அவருக்கு எப்படி ஏற்பட்டது  என்பது பற்றியும், அவரால் ஒரு  குடத்துள் இட்ட விளக்காய் இருந்த  ஒரு நெல்லூர் மனிதர், விஜயவாடா வானொலியில் எப்படி  நிலையக்கலைஞரானார் என்கிற வரலாறு பற்றியும் பேசுகிறார்.

’சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை மவுண்ட் ரோடு கீதா ஹோட்டலுக்குப் பக்கத்தில் ஒரு  சிறிய அறையில் பழைய புத்தகக்கடை வைத்திருந்த சிவா பற்றிப் பேசுகிறது. ஆதம்பாக்கத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருந்த  ஹரி என்பவர் புராதனக் கோட்டை கொத்தளங்கள் பற்றி  மிகுந்த  ஈடுபாடு உடையவர். காமிராக்காரர். அவரும் விட்டலுக்கு நெருங்கிய  நண்பரானார். இருவருக்கும் தொல் பொருள் பற்றிய   மிகை ஆர்வம் உறவுக்குக் காரணமாகிறது. அந்த ஹரியே பழைய புத்தகக்கடைக்கு விட்டல் ராவை  ஆற்றுப்படுத்தியவர்.

அடுத்த கட்டுரை ‘நினைக்கப்படும்’. இதனில்  ஜெர்மானிய கதே கால்வி்ட்ஸ் பற்றி விவாதிக்கப்படுகிறது.  கால்விட்ஸ்  மிகச்சிறந்த ஓவியர். உலகப்புகழ் பெற்றவர். இவருடைய ஓவியங்களையும்  அவரே  தன்னைத்தான் செதுக்கிய சிற்பத்தையும்,   தீட்டிய ஓவியத்தையும் சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் 1967 வாக்கில் கண்டதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ஜெர்மனியில் நடந்த இரண்டு உலகப்போர்களும் அவரை வெகுவாகப் பாதித்துவிட்டன. அக்கால ஜெர்மனி  துக்கத்தைத்தான் அனுபவித்தது. அந்த துக்கத்தைக் கலையாக மடை மாற்றிய கலைஞர்  கால்விட்ஸ்.  இறந்துபோன    ஒரு குழந்தையின் உடலைத்தன் மார்போடு அணைத்திருக்கும் அவரின்  ஓவியத்தைக்கண்டு மனம் பதைக்கிறார் பாவண்ணன்.

’அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை பிரதிவாதி பயங்கரம்  அன்னங்கர ஆச்சாரியார்  காஞ்சீபுரம்  வீட்டில் காணப்பட்ட  செராமிக் ஓவியங்கள் பற்றி வியந்துபேசுகிறது. பெல்ஜியத்திலிருந்து காஞ்சீபுரம் வீட்டுக்கூடத்திற்கு வந்த ராமாயண பீங்கான் ஒவியங்கள் பற்றிக்கேள்விப்பட  நாம் வியந்து போகிறோம்.

இறுதியாக இப்புத்தகத்தில் வந்துள்ள கட்டுரை ‘விசித்திரமானவர்கள்’.  இது மைசூரில் இருந்த ‘த்வன்யலோகா’ என்னும் கலைஞர்களை ஆதரிக்கும் அமைப்பு பற்றிப்பேசுகிறது. இந்த அமைப்போடு நெருக்கமாய் இருந்த விட்டல் ராவை எண்ணி வாசகன் பிரமித்துப்போகிறான்.’ ஒரு எழுத்தாளனுக்குத் தொடர்ச்சியா  நாற்பத்தியஞ்சி நாட்கள்  தங்கறதுக்கு  த்வன்யலோகாவுல அறை ஒதுக்கிக் கொடுப்பாங்க. சிவராம கரந்த்,  ஐயப்ப பணிக்கர், ஏ.கே ராமானுஜம்,ஆர்.கே நாராயண். ஜயந்த் மகாபாதரா போன்றோர் அங்கு தங்கி கலைத்தவம் புரிந்திருக்கிறார்கள்.  ஆங்கிலக்  கவி  நிசிம் எழிக்கலும் அப்படி வந்து  அங்கு தங்கியிருக்கிறார். அவர் விட்டல் ராவுக்கு நெருக்கமாகி இருக்கிறார். நூலகத்தில்  படிக்க வாங்கிய புத்தகத்தைத் தன் அறையில் வைத்துவிட்டு மறந்து பம்பாய் போன நிசிம் எழிக்கல் திரும்பவும் மைசூர்  த்வன்யலோகா வந்து அதனை நூலகரிடம் ஒப்படைக்கிறார். அவ்வறையில் அப்போது  தங்கியிருந்தவர்தான் நண்பர் விட்டல் ராவ்.

’தமிழ் நாட்டுல  இப்படி ஒரு அமைப்பு இருந்தா நல்லா இருக்கும். அந்தக்கனவு என்னைக்கு நிறைவேறுமோ தெரியல’ என்று தன் ஆதங்கம் சொல்கிறார் பாவண்ணன். தமிழ் மண்ணில் சாதியும் அரசியலும் அதனைச் சாத்தியமாக்க விடுமா என்ன? என்பது என் வினா.

இந்த நூலை வாசித்த போது  இரு  பெரு நதிகள் சந்தித்துக்கொண்டு பேசியமாதிரி  அல்லவா  நான் உணர்ந்தேன்.

-------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

9.     நிலநடுக்கோடு ’     -

 

கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர் விட்டல் ராவ். தமிழில் பத்து புதினங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். சிறுகதைத்தொகுப்பு கட்டுரை  நூல் எனப் பலவற்றைப்படைத்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் உழைப்பாளி.. தீவிர இலக்கிய வாசகர்கள் அவர் எழுத்துக்களை நிச்சயம்  வாசித்தே  இருப்பர்.

தொலைபேசித்துறையில் சென்னையில் பணியாற்றிபணி ஓய்வுக்குப்பின் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரதுபோக்கிடம்புதினம் இலக்கியச்சிந்தனையின் பரிசு (1971) பெற்றது.

நில நடுக்கோடு என்னும் புதினம் அனேகமாக விட்டல் ராவின் சுயசரிதை என்றும் சொல்லிவிடலாம்.  அவர் வாழ்க்கையே  ஒரு  நிலநடுக்கோடு என்கிறபடி அனுபவம் ஆவதை வாசகன்  இங்கே அவதானிக்கலாம்.

 சென்னைப் பெரு நகரை அழகுச்சித்திரமாக இப்புதினத்தில் தரிசிக்க வாய்க்கிறது. தந்தையை இழந்தவன்  தேவ். இப்புதினத்தின் கதா நாயகன். ஹமீத் என்னும் இசுலாமியர் தேவின் தந்தைக்கு நண்பர். அவரே தேவுக்கு ஆதரவாக இருந்து வழி காட்டுகிறார். அவரே தேவை சென்னை நகருக்கு எக்ஸ்ரே டெக்னீஷியன் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். சென்னையில் தங்குவதற்குத் தனக்கு நெருக்கமான  மிஸ்டர் ஹெல்ட் என்னும் ஒரு ஆங்கிலோ இந்தியர் குடும்பத்தைத் தேர்வு செய்து  அங்கேயே  தேவை அனுப்பி வைக்கிறார்.

ஓலவக்கோடு பாசஞ்சர் ரயில் நிலக்கரியால் இயங்கி நீராவியால் இழுத்துச்செல்லப்பட்டதை விட்டல் குறிப்பிடுகிறார். ‘கரிதூவிக்கொண்டு கீதம் இசைத்தவாறு ரயில் பயணித்தது’  இப்படியாய் வாசகனுக்குச்சொல்கிறார்.

அன்றைய சென்ட்ரல் ரயில் நிலயத்தில் இறங்கிய தேவ் வால்டாக்ஸ் சாலையில் கிழக்குமுகமாய்  அமைந்திருந்த ரயில்வே கேண்டீனில் டிபன் சாப்பிடுகிறான். அங்கே  டிபன் சாப்பிடுபவர்களுக்குப் பல் துலக்கசிறிய டப்பா ஒன்றில் இளஞ்சிவப்பு நிற நஞ்சன் கூடு பல் பொடி வைக்கப்பட்டிருந்ததுஎன்பதைத்தவறாமல் சொல்லிக்கொண்டுசெல்கிறார்.

அந்தக்காலத்தில் சென்னையில் கை ரிக்ஷாக்கலின் புழக்கம் அதிகம்தேவ் ஒரு கைவண்டியில் ஏறினான். மதராஸ் பாஷையை விட்டல் இங்கே நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

நீ சொல்லுற எடமெல்லாம்  ஒரே சந்து பொந்து. நம்ம ரிக்ஷான்னா அசால்டா பூந்து போய்ரும்

தேவ் விலாசத்தை  ’போர்ச்சுகீஸ்  சர்ச் தெரு பதி மூணாம் நம்பர்என்று சொல்ல ரிக்ஷாக்காரன்,

அதான் ஒருவாட்டி சொல்லிட்டல்ல, சொம்மா சொல்லிகினே வராதேஎன்று கட் அடித்துப்பேசுகிறான். ரிக்ஷாக்காரர்கள் சென்னையில்  சட்டம் பேசுவதை  இப்படியாய் அனுபவித்தவர்கள் நிச்சயம்  நினைத்துத்தான்பார்ப்பார்கள்.

தேவ் தங்கியிருந்த அந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பத்தில்ரேடியோகிராம் ஜெர்மன் க்ரண்டிக்’  இருக்கிறது. அதனை தேவ் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். ’இசைத்தட்டின் ஒரு பக்கம் ஓடிமுடிந்தவுடன்  ரேடியோகிராமின் கை போன்றதொரு சாதனம் எழுந்து இசைத்தட்டைத்தூக்கித் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல திருப்பிவைத்து மறுபக்க இசையை ஓட வைத்த இயந்திர மின்சார சாதனையைக்கண்டு தேவு பிரமித்தான்.’  இப்படிக்குறிப்பிடுகிறார் விட்டல்.

எக்ஸ்ரே பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என்பதை சுவாரசியமாகக்குறிப்பிடுகிறார்.’ ஆங்கிலோ இந்தியர்கள்  விருப்பத்தோடு வாங்கிப்படிக்கும் மெயில் இதழ் பற்றிய செய்தி வருகிறதுஆங்கிலோ இந்தியர்கள் குதிரைப்பந்தயமான கிண்டி ரேசில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள் என்பதனை அறிகிறோம். ஆங்கிலோ இந்தியப்பெண்கள்ஜொலிக்கும் உடையில் மணக்கும் மேனியில் கிலுகிளுக்கும் சிரிப்பில் பார்க்கையில் வெகுவாய் விலகிப்போய் மிகவும் அந்நியனாய் உணர்ந்தான் தேவ். சற்று முன்னிருந்த அவர்களின் தோற்றத்தை நினைவுபடுத்திக்கொண்டான்’  ஒப்பனையின் வீச்சு ஆங்கிலோ இந்தியப்பெண்களிடையே எத்தனை ஆகிருதியோடு இருந்தது என்பதனை நாம் ஊகித்துக்கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியப்பெண்களுக்கு நடனம் என்பது நம்மூர்ப்பெண்களுக்குக்கோலம் போடுவது போல என்று சொல்கிறார் ஆசிரியர்.

டவுன் பஸ் கண்டக்டர் சென்னையில் அன்று  ஒரு  பைசா டிக்கட்டுக்கு பத்து பைசா வாங்கிக்கொண்டு மூன்று பைசா திருப்பித்தந்ததை வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ‘எல்லாரும் பத்து பைசா நீட்னா நாந்தான் சில்லரைக்கு எங்கே போறது?’ எரிந்து விழுகிறார் கண்டக்டர். காலம் எங்கோ சென்றுவிட்டதை வாசகன் மனத்திரையில் கோலம் போட்டுப்பார்க்கிறான்.

திராட்சைப்பழத்தைக்கூவிக்கூவி ஏழைப்பெண்கள் விற்கிறார்கள். அவர்களை நோட்டம் விட்டுக்கொண்டு சில ஆண்கள் நிற்கிறார்கள். திராட்சைப்பழ வியாபாரம் பாலியல் ரீதியான போட்டியாகப் பொறாமையாக மாறிவிடுகிறது. திராட்சை விற்கும் பெண்களின்  குடிகார கணவன்மார்கள் அவ்விடம்  தோன்றி ஜபர்தஸ்து காட்டுகிறார்கள்.

இன்னாம….. இன்னாம…… கம்னிரும…’ என்றபடி.

 அங்கே போலிசு வருகிறது.

லத்தியால் தட்டுகிறது. விரட்டுகிறது. இப்போது அந்த பழ வியாபாரப்பெண்களிடையே வெறுப்பு பொறாமை சண்டையெல்லாம் மறைந்து ஒற்றுமை சகோதரிப்பாசமெல்லாம்  திரும்பியிருந்தன.

ஏய் மாமன் வர்ராண்டி …. மாமன் வர்ரான்…’

யக்கா, மாமன் வர்ரான்’   ஓர் அழகுச்சிறுகதையாக இதனை வாசகன் அனுபவிக்க முடிகிறது.

தேவ் ஃபஸ்ட் லைன் பீச் பக்கம் செல்கிறான். சிறுநீர் கழிக்க இடம் தேடுகிறான். சுண்ணாம்புக்காரை கட்டுமானம் சிலதுகள் கண்ணில் படுகின்றன. இவைதான் இயற்கை அழைப்புக்குப் பொது ஜனத்திற்கு  ஒத்தாசை. அங்கு எதிர்படும் ஒரு பொது ஜனம் தேவிடம்  இப்படிப்பேசுகிறது.

இதெல்லாம் உலக மகாயுத்தம் வந்தப்ப  அவங்க கட்டின வார் பங்கருங்க. பங்கர்னா பதுங்கியிருந்து எதிரியை சுடற அறை. எதிரி கப்பலுங்க வந்து ஹார்பரைத்தாக்கினா மறைஞ்சியிருந்து சுடறதுக்குன்னு இந்த சந்துங்க. இது மாதிரி இந்த பீச்சுல ஏழெட்டு பங்கர் இருக்கு. தோ தெரியுதா?’

மருத்துவமனையில் வார்டு பாயாக ஆரிமுத்துக்கு  அரசு  வேலை. வெளியிலும் டாக்டராக வேலை பார்ப்பது.  போலி டாகடர்தான். மருத்துவ மனையிலிருந்து மருந்துகள் திருடுவது அரசாங்க மருத்துவ மனையிலுள்ள நோயாளியை  தன் வீட்டுக்கு சிகிச்சைக்கு அழைப்பது எனப்பல அல்டாப் வேலைகள்  செய்து மாட்டிக்கொண்ட ஆரிமுத்து ஒரு நோயாளியை இறக்கவும் விட்டு விடுகிறான். ஆரிமுத்து பணி நீக்கம் செய்யப்படுகிறான். விசாரனை தொடர்கிறது. தேவ் அத்தனையும் பார்க்கிறான்.

புரசைவாக்கம் செயிண்ட் இமானுவேல் சர்ச் பற்றிய செய்தி. ’தேவாலயம் பெரிது. பெரிய ஜன்னல் கண்ணாடிகள் ஸ்டெயின் கிளாஸ் ஓவியங்களால் அழகுறத்தோன்றின.போலவே அதன் மணியோசையும். மணியோசைக்கு ஒருவித பூடகமான தெய்வீக சக்தி இருப்பதை பல கோயில்களிலும் கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கேட்டுணர நேர்ந்திருக்கிறது

ஜான் பாப்டிஸ்ட் கோலார் தங்க வயலில் பனிசெய்தவர். சென்னை வருகிறார். ஓயாமல் இருமுகிறார். தங்க சுரங்கப்பகுதியில் சயனைட் பயன்படுத்தப்படுவதாகவும் அதனால் அனேகர் சீக்காளியாகி வேலையை வேண்டாமென்று சொல்லி பெங்களூர் சென்றுவிட்ட விஷயமும்  நமக்குச்சொல்லப்படுகிறது.

சென்னைக்கடற்கரையில் கூவம் கடலோடு கலக்குமிடத்தில் காதல் கடற்கரை இருந்ததை விட்டல் ராவ் பதிவு செய்கிறார்.’ அங்கங்கே  இடம் விட்டு இடம் பூக்காத தாழம்பூ புதர்கள் மற்றும் பிற புதர்கள் மண்டிக்கிடக்கும் ,மணல்வெளி இந்த சூழலின் வசதியில் இளஞ்சோடிகள், கள்ளக்காதலர்கள் புதுமணத்தம்பதிகள், என்று ஜோடி ஜோடியாய் ஆண்கள் பெண்கள் தங்கள் அந்தரங்கம் பேணி யார் பார்வைக்கும் சட்டென்று பட்டுவிடாமல் செளகர்யமாய் ஒளிந்து உட்கார்ந்தோ அருகருகே சயனித்தோ ஒருவர் மடியில் இன்னொருவர் சாய்ந்தோ உரசி உலகை மறந்து உவகையுறும் விதத்தில் அவர்களுக்கு அந்தக்கடற்கரைக்காணி நிலம் கிடைத்திருக்கிறது. காதலே இங்கு பூர்ண சுதந்திரமும் செளகர்யமுமில்லாமல் கள்ளத்தனமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.’

மரினா கடற்கரையை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் விட்டல் ராவ். காணி நிலம் என்றதும் பாரதியின் நினைவும் காதல் காதல் காதல் என்னும் அவரின் காதல்பாட்டு வரிகளும்  மனத்திரையில் எட்டிப்பார்க்கின்றன.

ஆங்கிலோ இந்திய குடும்பத்தை விட்டு வேறு இடம் செல்லவேண்டிய சூழல் தேவுக்கு வந்தது. அவர்கள்  வீட்டு லீசு முடிந்து வீட்டைக்காலிசெய்ய தேவும் வேறு அறைக்குச்செல்வது என முடிவாகியது. அப்போதுதான் முதல் முறையாக மின்சார ரயிலில் ஏறுகிறான் தேவ்.

கக்கூஸ் இல்லையா?’

அதெல்லாம் இதிலே இருக்காதுஅறை தேடிகொடுக்கும் புஷ்பநாதன் தேவுக்குப்பதில் தருகிறான்.

மின்சார விசிறி சுழன்று சுழன்று ரயில் பெட்டியில் வீசுவது காண்கிறான் தேவ். ரயில் பெட்டியில்பில்ட் இன் நேப்பிள்ஸ், இட்டலி’  என்கிற விவரம் எழுதியிருப்பதை தேவ் படித்துப்பார்க்கிறான்.

 நுங்கம்பாக்கம் செளராஷ்டிர நகரில்  தேவ் தங்குவதற்கு கொட்டகைக் ஏற்பாடாகிறது.  அது தெலுங்குப்பெண் கக்கூஸ் அள்ளும் குடியிருப்பு. காலை ஏழரைக்குத்தான் சுத்தம் செய்யும்  ஆள் வரும். அதற்கு நாம்தான் தண்ணீர் இறைத்து ஊற்ற வேண்டும். குடியிருப்பவர்களுக்கு அது முறைப்படி வரும். அவள் தண்ணீர் சேந்திவிடமுடியாது. தொடர்ந்தார்போல் மாட்டுக்கொட்டகை ஒன்று. கொசுக்களின் ஆக்கிரமிப்பு.  தங்கும் அறையிலோ மூட்டைப்பூச்சிகளோடு போர்.  ஆக தேவ் சண்முகராயன் தெருவுக்கு குடிமாறுகிறான். அது ஏன் மலம் அள்ளுபவர்களும் செறுப்புத்தைப்பவர்களும் தமிழ் மண்ணில் தெலுங்கு பேசிகளாக மட்டுமே இருக்கிறார்களோ? ஒட்ட தெலுங்குகிந்த குந்து’ (கீழே உட்கார்) அவர்கள் பாஷை.

ஆங்கிலோ இந்தியரை ஆப்பக்காரன் என்று ஒரு கிழவி அழைப்பதும் நமக்குச்செய்தியாகிறது. ஹாஃப் காஸ்ட் காரன் ( கலப்பினம்) என்பது ஆப்பக்காரனாய் மாறிய  அந்த சூட்சுமம் சொல்லப்படுகிறது.

சினிமா சுவரொட்டிகளோடு  சகோதரர் பாலாசீர் லாறி பிரசங்கக்கூட்ட அழைப்பானகுருடர்கள் பார்க்கிறார்கள்,செவிடர்கள் கேட்கிறார்கள் ஊமைகள் பேசுகிறார்கள் சப்பாணிகள் நடக்கிறார்கள்’’ என்பதையும் விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.

எக்ஸ்ரே பயிற்சியில் சேகரித்த எலும்புத்துண்டுகளை சேலம் வீட்டில் அழகாய் அடுக்கிவைக்கிறான் தேவ். அவன் தங்கை இரவில்  அவை கண்டு அரண்டுபோகவே அவன் அம்மா அவைகளை சுடுகாட்டுக்குக்கொண்டுபோய் எறியச்சொல்கிறாள். சேலம்  கல்ரம்பட்டி சுடுகாட்டில் கொண்டுபோய்  எலும்புகளை எறிந்துவிட்டு தலைமுழுகிக்குளித்து வீட்டுக்கு வருகிறான் தேவ்.

 எக்ஸ்ரே டெக்னீஷியன் வேலை  உடனே கிடைப்பது  சாத்தியம் இல்லை என்பதால் தேவ்  மத்திய அரசின்  டெலிபோன் ஆப்ரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்கிறான்.  ஆங்கிலோ இந்தியப்பெண் உதவி செய்கிறாள். மவுண்ட்ரோடு தொலைபேசியகத்தில் வேலையில் சேருகிறான்.

லைன்மென் யூனிஃபார்ம்பற்றிப்பேசுகிறார். ‘கவர்மெண்டிலே லோயஸ்ட் கொடேஷன் கால்டு ஃபார்னு  கேட்டாக்க இதுமாதிரிதான் சப்ளையாகும்அரசின் மீதும்  நல்ல விமரிசனம் வருகிறது.

சிப்பந்திகளில்  பிரம்மசாரியாயிருப்பவர்கள் பருவமழைக்காலத்து வேலைப்பளு ,கெடுபிடி, நெருக்கடி நிலைமையைக்கருத்தில்கொண்டு இரவு பகலாய்  இணைப்பகத்திலேயே இருந்துவிட்டனர்.

டி. யாம் . டி . யாருக்கய்யா ஓவர்டைம் வேணும்.  ஒண்ணும் வேணாம் ஆளவுடு படுத்தா போதும்னு இருக்கு

‘’சார் இந்த போஸ்ட்ல பாம்பு ஏறிப்படுத்திகினுருக்கு என்னால ஆவாது

இவ்வகை கெடுபிடிப்பேச்சுக்களையும் விட்டல் ராவ் பதிவு செய்திருக்கிறார்.

தேவ்  ஒரு  நாள்  சேலத்தில்  பித்துக்குளி முருகதாஸ் கச்சேரிக்குப்போய்வருகிறான். சென்னையிலிருந்து  சேலத்திற்கோ  டிரெயின்  எஞ்சின் அறைப்பயணம்.  ஷொரனூர் பாசஞ்சர் வண்டிஆங்கிலோ இந்திய நண்பர் லான்சி  தேவ்வை  சேலத்திற்குக் கூட்டிப்போகிறார்.

முருகதாசின் குரலும் மொழி ஞானமும் தேவுவை பிரமிக்க வைத்தது.சந்நியாசிபோல காவிக்கோலத்தில் தலைக்குக்க்காவி கட்டி,கருப்புக்கண்ணாடி அனிந்திருந்த முருகதாஸ் ஹார்மோனியத்தோடு இசையில் நடனமாடினார்.’  என்று சொல்கிறார் விட்டல்.

பிறகு ஒரு சமயம் சென்னையில் ஜெனரல் பாட்டர்ஸ் சாலை அருகே பிள்ளையார் கோவிலில்  பித்துக்குளி முருகதாஸ் கபீர் தாஸ் பக்திப்பாடலை ப்பாட   ‘இந்தியில் ஏன் பாடுகிறாய் நிறுத்து,  ’தமிழ் எங்கள் உயிர்  இந்தி எங்கள்  மயிர்எனக்கூவிக்கொண்டு ஒரு  கும்பல் வருகிறது. பிள்ளையாருக்கும் முருகதாசுக்கும் இடையே மிகப்பெரிய கட்டி கல்பூரம் ஏற்றி  முருகதாசை மூச்சுத்திணற வைத்து கச்சேரியை நிறுத்துகிறது.   கலவரம். தேவ் செருப்பு வார் அறுந்து ஓடியதாய்க் குறிப்பிடுகிறார் விட்டல்.

பிரதமர் நேரு காலமான துயர  அறிவிப்பு வருகிறது. தொலைபேசிகள் அத்தனையும் இயங்கி எக்சேஞ்ச் படு படு  பிசியாகிற விஷயம் சொல்லப்படுகிறது.

நாட்டில் உணவுப்பஞ்சம்  ‘தினமும் ஒருவேளைச் சாப்பாட்டை விட்டு விடவும்-மிஸ் மீல்- ப்ரொகிராம் பிரதமரால் மக்களுக்கு  அறிவிக்கப்படுகிறது.

இந்தி மொழி மத்திய அரசு ஊழியர்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்படுகிறது. மைய அரசு  தரும் சலுகை சன்மானம் உண்டு.’ பரீட்சையிலே கேள்விக்கு பதில் எழுதத்தெரியலேனா கேள்வித்தாளை அப்படியே பாத்து பிரதியெடுத்து எழுதித்தந்தா போதும்,பாஸ் மார்க் போட்டுடுவோம்இந்தி கற்பிக்கும் ஆசிரியை சொல்கிறார்.

சிவப்புச்சாயம் பூசிக்கொண்ட தொலைபேசி

 தொழிற்சங்க  கூட்ட அரங்குகள் பற்றியும் தவறாமல் குறிப்பிடுகிறார் விட்டல்.

எம் ஜி ஆரை எம் ஆர் ராதா  துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு வருகிறது. தமிழகமே அல்லோல கல்லோல படுகிறது. பிரபல நடிகரின் உயிர் பிரச்சனை ஆனது. இது  எதிர்க்கட்சிக்குகூரையைப்பிய்த்துக்கொண்டு கொட்டிய கணக்கு’  என்கிற கூர்மையான அரசியல் விமரிசனம் வைக்கிறார் விட்டல் ராவ்.

அண்ணா மறைந்த செய்தி அதன் பின் நிகழ்வுகள் பற்றியும் விவரம் சொல்கிறார் விட்டல்..

நாடு தழுவிய வேலை நிறுத்தம் வருகிறது. தோழர்கள் ஜெகனும் முத்தியாலுவும்  கூட்ட நிகழ்ச்சியில் பேசுவதாயிருந்ததால் ஆஜர் முற்றிலுமாயிருந்தது. மாலையில் தோழர் மஜீதும்,ஏகேவியும் கலந்து கொள்வதாயிருந்ததுவிட்டல் எதனையும் விட்டு வைக்கவில்லை.

தேவ் கமலம் என்றொரு பெண்ணை க்காதலித்து மணக்கிறான். திருநீர்மலைக்கோவிலில் திருமணம் நடக்கிறது. நண்பர்கள் மட்டுமே உதவி. உதவிக்கு வேறு யாருமில்லை.

 பின்னர் ஒரு நாள்  பெண்ணின் தந்தை மருத்துவ மனையில் இருக்கின்றபோது தன்னுடைய குருதியை அவருக்குக்கொடுத்து அவரை தேவ் காக்கிறான்உரவு துளிர்க்கிறது. தேவின் தாய்  செங்கல்பட்டில் மகள் வீட்டில் இருந்துவிட்டு உடல்நிலை மோசமாகி தேவ் இல்லம் வருகிறாள் மறு நாளே  மரணிக்கிறாள்.

தேவ் என்னும் கதாபாத்திரம் வழி  உலகைப்புரிந்துகொள்வதெப்படி என்னும் விஷயத்தவாசகர்க்கு எளிதாக்குகிறார் விட்டல் ராவ்.

இவண் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைச்சித்திரமாக்கித்தந்திருப்பதால் எழுத்தாளர் பாவண்ணன் இப்புதினத்தைவிடுபட்டவர்களின் வரலாறுஎன்று  பொருத்தமாகவே அழைக்கிறார்.

பாரதிபுத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் வாசகர்க்கு வெகு நிறைவு தருகிறது.

-------

 

,

 

10.            ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’.    

                

 வெளியீடு சந்தியா பதிப்பகம் சென்னை 83.  145 பக்கங்கள் விலை ரூ 150.

விட்டல் ராவ் மூத்த எழுத்தாளர். பெங்களூரில் தற்காலம் வசித்துவருகிறார்.தொலைபேசித்துறை எத்தனையோ எழுத்தாளர்களை தமிழ் எழுத்துக்களத்திற்கு அனுப்பி இருக்கிறது. அந்த எழுத்தாளர் திருக்கூட்டத்தில் விட்டல் ராவ் பெருமைக்குறியவர்

சேலம் அவர் இளமைக்காலத்தில் வாழ்ந்த பெரு நகரம். ஒரு சாதாரணன் பார்வையில் சேலம் எப்படி இருந்தது என்பதனை விருவிருப்பான நடையில்ஓர் அன்னாடு காச்சியின் சேலம் என்னும் நூலாக விட்டல் ராவ் படைத்துள்ளார். இது  உலர் சுவை கட்டுரை நூல் அன்று. தன் வரலாறும் அன்று .புதினம் என்றும் இதனைச்சொல்லமுடியாது. விட்டல் ராவின்  சுவாரசியமான எழுத்துக்களால் உருவான எழுத்துச்சித்திரந்தான்  இந்நூல்.

விட்டல் ராவ் எழுதிக்குவித்தவை  நாவல் 12, குறுநாவல்2, சிறுகதை தொகுப்பு 4, கட்டுரை நூல் 10. இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் என்னும் மாபெரும் இலக்கியப்பணியை மூன்று பெரும் 1தொகுதிகளாகச் சாதித்தவர் விட்டல் ராவ்வெளியீடு கலைஞன் பதிப்பகம்.’ நதி மூலம்இவரின் பேசப்பட்ட புதினமாகும்.

எழுத்துமட்டுமல்ல இவர் நுழைபுலம் இன்னும் , ஓவியம் சிற்பம் திரைப்படம் என்று விரிந்து செல்கிறது.  விட்டல் இசையில் ஈடுபாடும் நல்ல  குரல் வளமும் படைத்தவர்.

 ’ஓர் அன்னாடு காச்சியின் சேலம்என்னும் நூலை  எழுத்தாளர் அமரர் சா. கந்தசாமிக்கு அன்புக்காணிக்கையாக்கியுள்ளார்.என்னுடைய சக பயணியும் குடும்ப நண்பருமான கந்தசாமி என்று பெருமையோடுஅவரைக் குறிப்பிடுகிறார்.

சேலம் என் ஊர்,என் மண்,என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று என்று நிறைவோடு பேசுகிறார்.

12 பகுதிகளாக  இந்நூல்  வாசகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ’குல தெய்வம்தொடங்கிசேலம் இன்றுஎன்பதோடு நூல் முடிகிறது.

விட்டல் ராவின் குல தெய்வமானஎல்லம்மாவை பவ்யமாய்க்குறிப்பிடுறார். சேலத்தில் பிரசத்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் பற்றி எழுதுகிறார். கூடவே ஜாதிய சதி பற்றியும் இப்படி விமர்சிக்கிறார்.

ஜாதீயத்தை  ஏற்படுத்தியவன் கூடவே தாங்கள் உண்டாக்கிய சாமிகளையும் உயர் ஜாதி கடவுள்கள், கீழ் ஜாதி கடவுள்கள் எனவும்,சட்டென பார்வைக்குப்படும்படியாய் வகைமைப்படுத்தி வைத்தான்.’

 தேர் முட்டி  அருகே இருந்த வில்வாத்திரி பவன் என்னும் உணவகத்தை அதன் சிறப்பை விளக்கமாகக்குறிப்பிடுகிறார்பழுப்பேறிய வேட்டியை தூக்கி க்கட்டிக்கொண்ட வயதான பிராமணர்கள் அங்கு பரிசாரகர்களாக இருந்தனர் என்பதைப்பதிவு செய்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் கர்னல் அலெக்சாண்டர் ரீட் (1792 வருடம் ) சேலத்தில்  கலெக்டராகவும் சூப்பரின்டெண்டாகவும் இருந்தவர். போலீசு,  என்ஜினியரிங், நீதி  இந்த மூன்று துறைக்கும் அன்றைய சேலம் மாவட்டத்துக்கு அவர் ஒருவரே.

அன்று மக்களிடம் கடிகாரம் கிடையாது. தினம் மூன்று பீரங்கிக்குண்டுகள் முழக்கப்பட்டன. காலை 6 மதியம் 12 இரவு 8 என்பவை  அந்த நேரங்கள்.

நேஷனல் ஓட்டல் என்னும் நட்சத்திர விடுதி கட்டப்பட்டபோது  எதிரே இருந்த சர்க்கிள் ஏரி காணாமல் போனதை வருத்தத்தோடு எழுதுகிறார்.

விக்டோரியா மைதானம் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் ஓரினப்பாலுறவு மைதானமாக மாறிய செய்தியை விடாமல் குறிப்பிடுகிறார்.

தான் படித்த சிறுமலர் உயர் நிலைப்பள்ளி பற்றிப் பெருமையொடு பதிவு செய்கிறார். அந்நாள் தலைமை ஆசிரியர் ரெவெரெண்டு ஃபாதர் புஷ்ப நாதர், ’சிறிய புஷ்பம்உயர் நிலைப்பள்ளி என்றுதான் குறிப்பிடுவாராம்.

நடிகர் அசோகன் அப்பள்ளியில் தாமஸ் என்ற பெயரில்படித்ததை இவண் நாம் அறிகிறோம்.

சேலம் மத்திய சிறைக்குப்பின்னே காடும் புதருமாய் மண்டிக்கிடக்கும். மாடர்ன் தியேட்டர்ஸ்ஸாரின்படப்பிடிப்புக்கள் அனேகம் அங்கு நடைபெறும். அங்குள்ள ஓடையைச்சுற்றி சிறுகளா,காரை,சூரப்பழம்,அழிஞ்சி,சங்கம்,கறிவேப்பிலைக்கு சக்களத்தி,காட்டிலந்தை,சப்பாத்தி, கள்ளி ஆகிய செடிகள் செழித்திருக்கும். இவை இவை பேசப்படுகின்றன.

பேரு சொல்லாம திங்கணும்,பேரு சொல்லி போட்டு தின்னா கசக்கும்,புளிக்கும்சங்கப்பழம் பற்றிச்சுவையான செய்தியை விட்டல் குறிப்பிடுகிறார்.

மாம்பழங்களின் வகை, மல்கோவா,கிளிமூக்கு,குதாதாத், ஜஹாங்கீர்,குண்டு ஈமாம் பசந்து,தில் பசந்து என சேலத்து அற்புதக்கனி குறித்து இனிமையாய்ச்சொல்லிப்போகிறார்.

 இராமாயண ஜடாயு என்னும் கழுகு மரித்த இடமான சுண்ணாம்புக்கரடு பற்றியும், கல்கி   ஒரு புதினத்தின் தலைப்பாய்க்குறிப்பிட்டபொய்மான் கரடுபற்றியும் அனேக செய்திகளை இங்கே வாசகர்கள் அறியவாய்க்கிறது.

அயோத்தியாப்பட்டிணம்என்னும் ஊர் பற்றிய கதையொன்று வருகிறது. ராமனும் சீதையும் ராவண சம்ஹாரத்திற்குப்பிறகு  புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்கின்றனர். நடுவானில் இருட்டிவிடவே சேலம் பகுதியில் கீழிறங்கித் தங்கினர். விடிந்து மறு பயணம் புறப்படுவதற்குள்   பட்டாபிஷேகத்திற்கு குறித்த நேரமும் வந்துவிடுகிறது.  ராம பட்டாபிஷேகத்தை அயோத்தியாப்பட்டிணத்திலேயே முடித்துக்கொண்டு இருவரும்  புறப்பட்டனர். அயோத்திக்குச் சென்றவுடன் சம்பிரதாயத்துக்கு ஒரு பட்டாபிஷேகம்  நடத்திக்கொள்வதாய் ஒரு முடிவானது. அச்சமயம்  ராவணின் தம்பி விபீடணனும்  ராவணன் அடக்கம் முடித்து விட்டு  அவர்களோடு அயோத்தியாபட்டினத்தில் வந்து சேர்ந்துகொண்டானாம். விட்டல் ராவ் விவரமாய்த்தான் சொல்கிறார்.

 எழுத்துலகில் எழுத்தாளர் சேலம் பகபில பகடாலு நரசிம்மலு நாயுடுதட்சிண இந்திய சரித்திரம்’  என்னும்  அரிய பெரிய நூலை எழுதியவர். இது நமக்குப் படிக்க கிடைக்குமா தெரியவில்லை

 நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை  என் கதை,மலைக்கள்ளன் நூல்களைத்தந்தவர்.

 எழுத்தாளர்கள் கு. சின்னப்ப பாரதி,தமிழ் நாடன்,சி. மணி, பாக்கியம் ராமசாமி,மகரிஷி, திலகவதி பி எஸ்,பெருமாள்முருகன் கலைஞர்கள் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், சேலம் ஜெயலட்சுமி என சேலத்துப்பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் விட்டல் ராவ்.

விட்டுப்போனவைகள் என்று சில  இருக்கலாம்.   விட்டல் ராவால் சொல்லப்பட்ட விஷயங்கள்  மிக அழகாகச்சொல்லப்பட்டுள்ளன. படிக்கத்துவங்கினால் படித்து  முடித்துவிட்டுத்தான்  மறுவேலை என்கிறபடிக்கு வாசகனைப்பந்தப்படுத்துகிறது விட்டலின்  எழுத்துநடை.

பாவண்ணன் பெங்களூரை எழுதினார் சந்தியா நடராஜன் மயிலாடுதுரையை எழுதினார், சுப்ரபாரதிமணியன் புதுச்சேரியை எழுதினார் விட்டல் ராவ் சேலத்தை எழுதினார். இன்னமும் சில இவ்வகையில் இருக்கலாம். இதுஊரும் பேரும்காலமோ என்னவோ.

-----------------------------

 

 

 

 

 

11.                           கோட்டைகள் ஆய்ந்த விட்டல் ராவ்.      

              

 

விட்டல் ராவின் தமிழகக்கோட்டைகள் படித்தேன்.பாரதி புத்தகாலயம் இதனைக் கொண்டுவந்திருக்கிறது. 232 பக்கங்கள்.  இத்தனை சுவாரசியமாய்த் தமிழகக் கோட்டைகள் பற்றிய வரலாறை  வேறு  யாரும் எழுதியிருக்க முடியாது. விறு விறுப்பான  எழுத்து நடை.

 விட்டல்ராவின் புத்தகம்  தமிழகக்கோட்டைகள் பற்றிய வரலாறு  அவைகளின் அமைப்பு வடிவம் கட்டிடக்கலை பற்றிப்பேசுகிறது. கோட்டையை எழுப்பி  அமைத்தவர் வரலாறு சொல்கிறது. அவ்வமைப்பின் இன்றைய  இழிநிலையை விவரிக்கிறது.  அந்தக்கோட்டைகளோடு தொடர்புடைய  வேறு சில வரலாறுப்பற்றிக்குறிப்பிடுகிறது. அக்கோட்டையைச்சுற்றி வாழும் இன்றைய மனிதர்கள் அக்கோட்டை குறித்து  என்ன செய்தியைச்சொல்கிறார்கள் என்பதனை  வாசகர்க்குக்கொண்டு தருவதில் கூடுதல் கவனத்தோடு இருந்திருக்கிறார் விட்டல் ராவ்.

பூங்குன்றன் ஒய்வுபெற்ற இயக்குனர் தொல்லியல் துறை’ சுடர்மணிச் சொற்கோட்டைகளும் நம் வரலாறும்’ என்னும் நூலறிமுகக் கட்டுரையைத் தந்துள்ளார். ‘எதிர் காலத்தில் கோட்டைகளைப்பற்றிய ஆய்வு செய்பவர்கள் தேடிப்பிடித்துப்படிக்கும் நூல்களில் இது முதல் நூலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று பேசுகிறது அக்கட்டுரை.

இந்நூலுக்கு மேலும் ஒரு  நீண்ட முன்னுரை வழங்கியுள்ள எழுத்தாளர் பாவண்ணன் இப்படிக்குறிப்பிடுகிறார்.’பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த டானியல் சகோதரர்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்தார்கள். அப்போது தாம் கண்டு களித்த பட்டணக்காட்சிகளையும் கோட்டைக்காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குச்சென்றார்கள். அங்கே எல்லாபடங்களையும் செப்புத்தகடுகளுக்கு மாற்றி  ஆக்வாடிண்ட்( நீர்வண்ண) பதிப்புகளாக நூல் வடிவில் வெளியிட்டார்கள். 144 ஓவியங்கள் ஆறு தொகுதிகளாக அவை வெளிவந்தன. கீழைநாட்டு இயற்கைக்காட்சிகள் ( ஓரியண்டல் சீனரி) என்னும் தலைப்பில் அமைந்த அத்தொகுதிகளை தற்செயலாகப்பார்த்து மனம் பறிகொடுத்த விட்டல் ராவ் தனக்குள் உருவான மன எழுச்சியின் காரணமாக அத்தொகுதிகளில் உள்ள கோட்டைகளை நேரில் சென்று பார்த்து எழுதும் திட்டத்தைத் தனக்குள் வகுத்துக்கொண்டார்.’

பாரதி புத்தகாலயம் தந்துள்ள பதிப்புரையில்’ விட்டல் ராவ்  சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் என்பதாலும், நல்லதொரு விமர்சகரும் ஓவியம் சிற்பங்களில் ஞானமுள்ளவர் என்பதாலும் கோட்டைகளை அவற்றின் பழைய ஐரோப்பிய ஓவியங்களினூடே பார்த்து ஒப்பிட்டு விமர்சித்து அவர் எழுதியிருப்பது அரியது சிறப்புமானது’ என்று கச்சிதமாகக்குறிப்பிடுகிறது.

தோற்றுவாய் என்னும் கட்டுரையில் ஒரு புராதனக் கோயில் கட்டிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசர்களால் அவர்தம் தனிப்பெரும்  கட்டிடக்கலை மரபில்  அமைந்து  வளர்ந்து மெருகேற்றிக்கொள்வது வரலாறு என்று விட்டல் குறிப்பிடுகிறார். பல்லவ அரச மரபில்  சிற்பம் அமைந்த சிறிய கோயில், சோழ அரச மரபில் கற்றளி, அல்லது சுதைப்பணியாக கோபுரங்கள், விஜயநகர ஆட்சியில் உயர்ந்த மதில், கொடிக்கம்பம், ஒன்றுக்குமேற்பட்ட நுழைவாயில்கள் அந்த நுழைவாயிலில் சுதை உருவங்களென அவைகள் தொடரப்பட்டன என்பதறிகிறோம்.

 இந்நூலில்   நாம்   பார்க்கும் கோட்டைகளின்  அற்புத வண்ணப்புகைப்படங்கள் ஆசிரியராலேயே எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் சிறந்த புகைப்படக் கலைஞர்.  கட்டுரைகளுக்கு வலு  கூட்டுவதாய்  அவை அமைந்துள்ளன.  புகைப்படங்களில் செஞ்சிக்கோட்டையும் ஆற்காடு மஸ்ஜித்தும் வாசகனோடு பேசிப்பார்க்கின்றன.

நாமக்கல்கோட்டையைப்பற்றிய அடுத்தகட்டுரை இப்படி  விரிவாகப்பேசுகிறது. ’கீழேயிருந்து அண்ணாந்து பார்த்தால் விக்டோரியா மகாராணியின்  குண்டு தலையின்மேல் வைத்த சின்ன கிரீடம் போல மலைக்கோட்டைத் தோன்றுவதாக’ விட்டல் குறிப்பிடுகிறார். சிறிய செங்கற்களும் சுண்ணாம்பு சாந்தும் பயன்படுத்தப்பட்டுக் கோட்டைச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளதை அறிகிறோம். கோட்டை ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன்மீது பெருமாள் கோவில் ஒன்று இருந்தமை தெரிய வருகிறது என்கிறார் விட்டல்.

நாமக்கல் மலை அடிவாரத்தின் சற்று உயரத்தில் குடைவரைக்கோயில் உள்ளது. திருமால் நரசிம்மர் கோயில் அது. அதனில் உக்கிர நரசிம்மர் யோக நரசிம்மர் இருவரையும் தரிசிக்கலம். ’இரண்யனை வதம் செய்ததனால் நரசிம்மருக்கு கையில் ரத்தக்கறை’  என்று  சொல்லி அரச்சகர் சந்நிதியில் தீபாராதனை காட்டுவாராம்  விட்டல் குறிப்பிடுகிறார்.  சிலையின் கை சற்று சிவந்து காணப்படும் என்றும் எழுதுகிறார். கோயில் அர்ச்சகர் ‘ இது இரண்டாயிரம் வருஷத்து கோயில் மகேந்திர பல்லவன் காலத்தது’ என்பாராம். விட்டல் நேர் செய்கிறார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதியமான்களால் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில்கள்தாம் இவை’

நாமக்கல் புகழ்பெற்ற அனுமனின் சிலை  நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். அந்த அனுமனின் உச்சந்தலையிலிருந்து கற்றைக் குடுமி முடிந்து கட்டின நிலையில் இருப்பதை அதிகம் பேர் கவனித்து இருக்க மாட்டார்கள் என்கிற சுவாரசியமான செய்தியொன்றையும் வாசகனோடு பகிர்ந்துகொள்கிறார். அந்த அனுமன் கோயிலின் முன் மண்டபத்து தூண் ஒன்றில் உடலுறவு கொள்ளும் குரங்கின் காட்சி புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. பாலுறவு சிற்பங்கள் பல்லவர் காலத்திலோ சோழர் காலத்திலோ கிடையாது. இவை விஜயநகர நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டவை என்றும் சொல்கிறார் விட்டல்.

ஓமலூர் கோட்டை இருந்ததற்கான எவ்விதச் சுவடுமில்லை. அது அழிந்து போனது என்று சொல்வதற்குக் கூட மனிதர்கள் இல்லை. இன்றைய கல்விமுறைக்கு ஒரு விமரிசனம் தரும் ஆசிரியர் யதார்த்தம் ஒன்றை விடுவிக்கிறார்.’ ’வேறெந்தப்பிரிவும் கிடைக்காத படசத்தில் குறைந்த மதிப்பெண்களில் தேர்ச்சியடைந்தவர்கள் இறுதி முயற்சியாக எடுத்துப்படிப்பதே வரலாற்றுப்பிரிவு என்பது கண்கூடு.’

1932ல் கட்டப்பட்ட ஸ்டான்லி அணை என்னும் மேட்டுர் அணை நீர்த் தேக்கத்தில் வழக்கமாய் மூழ்கிடும்  திப்புசுல்தான் கோட்டை, ஜலகண்டேசுரர் கோயில் நந்தி மண்டபம், கிறித்துவ தேவாலயம் பற்றியும் நாம் அறிகிறோம். பவானி நீர்தேக்கத்தில் மூழ்கிய விஜயநகர மன்னர்களால் எழுப்பப்பட்ட   டணாய்க்கன் கோட்டை அதாவது தர்ம நாய்க்கன் கோட்டை பற்றியும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணத்து ஆட்சியாளர் திப்புசுல்தான் கொண்டாடிய இந்து மக்களின் நல்லுறவையும் அவர் கடைபிடித்த தீவிர மதுவிலக்குக் கொள்கையையும் வாசகர்க்குச்சொல்லிச்செல்கிறார் விட்டல்.

மூன்றாவது கட்டுரை ஹொசூர் பாரமஹால் பற்றியது.

சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஹொசூர் பகுதிகள் பாரமஹால் என்றழைக்கப்படுகின்றன. இந்தப்பகுதியின் வரலாற்றில் ஹைதர் அலியும் திப்புசுல்தானும் மிக முக்கியமானவர்கள். ஹொசூர் கோட்டையில் இரண்டு சமாதிகள் உள்ளன. ஒன்று பிரெட்  என்கிற வெள்ளைக்கார கலக்டர் சமாதி மற்றது அவரின் நாய் சமாதி. முதலில் நாயைச்சுட்டுக்கொன்றுவிட்டு பிறகு தன்னையே அவர் சுட்டுக்கொண்டராம்.

பிரெட் இங்கிலாந்தில் ஒரு பெண்ணைத்திருமணம் செய்துகொண்டு விடலாம் எனப் ப்பார்த்திருக்கிறார். அப்பெண்  ’முதலில் கெனில்வர்த் மாளிகையைப்போல ஒரு மாளிகையை ஹொசூரில் கட்டுங்கள்’ என்றாராம்.  பிரட்டும் அப்படியே கட்டினாராம். ஆனால் அவள்தான் இந்தியா வரவில்லை. அவள் வேறு ஒருவனோடு ஓடிப்போய்விட்டாள். அன்று அந்தக்கோட்டையைக்கட்ட பிரெட்டுக்கு ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய் செலவானது என்பது செய்தி. அரசுப்பணத்தையும் சொந்தப்பணத்தையும் அந்த கலெக்டர் செலவு செய்து கட்டினாராம். அவள்  ஓடிப்போய்விட்ட அவமானம் தாங்க முடியாமல் பிரெட் அங்கெயே தற்கொலை செய்துகொண்டாராம். அவரின் நாய் சுடப்பட்டிருக்கவேண்டாம்.

வீட்டுவசதிவாரிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஹொசூரின் வரலாற்றுச்சின்னங்களான கெனில்வர்த் கேசில், திப்புசுல்தான் கோட்டை,  அகழி முதலியன தகர்த்தெறியப்பட்டது என்பது இன்றைய செய்தியாகும்.

நான்காவது கட்டுரை தென்கரைக்கோட்டை பற்றி விளக்குகிறது. இது ஹரூரிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் உள்ளது. பள்ளி செல்லும் பிள்ளைகளைப் பள்ளி ஆசிரியர் அழைத்துச்சென்றுள்ளார்.  எல்லோரும் நடந்தே சென்று திரும்பியிருக்கிறார்கள் என்பது இன்று ஆச்சரியமாக இருக்கிறது. ஜல்கண்டேசுவர நதி அங்கே சல சலத்து ஓடுவதை ஒவியமாக எழுத்தில் கொணர்ந்துள்ளார் இந்நூல் ஆசிரியர். பல்வேறு  செவிவழிக்கதைகளை கோட்டைப் பற்றி இவர்களிடம் அங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். சிவன்கோயிலும் பெருமாள் கோயிலும் சிதிலமடைந்து துகள்களாய்க் காணப்படுகின்றன.

ஐந்தாவது கட்டுரை கிருஷ்ணகிரி தங்கணிக்கோட்டை பற்றி விவரிக்கிறது. தங்கணி என்கிற பெண் பூதம் மிகுந்த அட்டகாசம் புரிந்து தொல்லைகொடுத்து வந்ததாம். அதை சம்ஹாரம் செய்ய வேட்டைக்காரன் உருவில் விஷ்ணு வந்தாராம். ’பேட்ராய’  என்பது கன்னட பாஷையில் வேட்டையைக்குறிக்குமாம். டெங்கணிக்கோட்டையில் உள்ள பெருமாளுக்கும் பேட்ராயசுவாமி என்று பெயராய் இருக்கக் காண்கிறோம்.

ராயக்கோட்டை, ஜெகதேவி, வீரபத்ரதுர்கம்,மகாராஜகடை  என்கிற தலைப்பில் வந்துள்ளதுதான் ஆறாவது கட்டுரை. கிருஷ்ணகிரியிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜெகதேவி. மகாராஜாகடை கிருஷ்ணகிரியிலிருந்து பதினோரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு மகாராஜா என்பது  சத்ரபதி சிவாஜியைக்குறிக்கும். இங்குள்ள மலைக்கோட்டைக்கு மகாராஜா கடை என்பது பெயர். இங்கு வெங்கட்ரமணா கோயில் ஒன்றும் பள்ளிவாசல் ஒன்றும் காணப்படுகின்றது. பெண்ணை ஆற்றுச்சமவெளியை அடுத்து உயர்ந்து காணப்படும் வீரபத்ர துர்கம், திப்புசுலதானின் ஆட்சியின் கீழ் இருந்தது.

ஜெகதேவராயனின் தலைநகராய் விளங்கியது ராயக்கோட்டை.  இது பாலக்கோடு கணவாயை நோக்கி அமைந்திருக்கிறது. ஹைதர், திப்புசுல்தான் இவர்களிடையே போர்க் காலத்தில்  இக்கோட்டை முக்கியத்துவம் பெற்றதாகும். ராயக்கோட்டை மலை உச்சி ஏறி இயற்கை அழகை ரசிப்பது பெரும்பேறு.

ஏழாவது கட்டுரை சங்ககிரி ஆத்தூர் தியாகதுர்கம் செங்கல்பட்டு கோட்டைகள் பற்றி விஸ்தாரமாகப்பேசுகிறது. சங்ககிரிகோட்டை ஹைதர் அலியின் கஜானாவாக  விளங்கியது. பின்னர்  அந்த வரிப்பணம்  ஸ்ரீரெங்கபட்டணம் கோண்டுசெல்லப்பட்டதாம்.

சேலத்திலிருந்து ஒரு மணி நேர சாலைப்பயணம் ஆத்தூர் சென்றுவிடலாம். ஆத்தூரில் ஓடும் வசிஷ்ட நதிக்கு வடக்கே இருக்கிறது ஆத்தூர் கோட்டை.   கோட்டையின் உள்ளே கிழக்கிந்திய கம்பெனியின் லெஃப்டினெண்ட் கர்னல் ஜான் முர்ரேவுக்கு ஒரு நினைவுச்சின்னம், அவர் மனைவி ஆன் முர்ரேவால்  எழுப்பப்பட்டுள்ளதாக  கோட்டைப்பலகையில் எழுதப்பட்டுள்ளது.  இதனை ஊர் மக்கள் ராஜா சமாதி என்றழைக்கின்றனர்.

1790ல் திப்புசுல்தான் ஒரு படையுடன் தியாகதுர்க்கத்தைத் தாக்கியுள்ளார்.பிரிட்டீஷ் காப்டன் ஃப்லிண்ட் அவரை எதிர்த்து நின்றார். இன்று இக்கோட்டைப்பகுதிகள் வீடு கட்டும்  கருங்கல் ஜல்லிக்காக அழிக்கப்பட்டு வருவது  பெருஞ்சோகம்.

செங்கல்ப்பட்டுக்கோட்டையில் ஒரு ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. இவ்வளாகத்தில் தாலுகா கச்சேரி நீதிமன்றம் சீர்திருத்தப்பள்ளி இவை இயங்குகின்றன. அரண்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் ரயில்வே தண்டவாளங்கள் போடப்பட்டுள்ளன.

வண்டிவாஷ், வேலூர், சட்றாஸ், சந்திரகிரி,செயிண்ட் ஜார்ஜ், செயிண்ட் டேவிட் பாலக்காடு கோட்டைகள் பற்றி எட்டாவது கட்டுரை பேசுகிறது. வந்தவாசி வரலாற்றில் ஒரு முக்கியமான இடம். இங்கு பிரிட்டீஷாருக்கும் ஃபிரெஞ்ச் படையினருக்கும்  கடும்போர் நிகழ்ந்திருக்கிறது. ஃப்ரெஞ்ச் ஆட்சியரின் அதிகாரம் பாண்டிச்சேரி காரைக்கால் ஏனாம் மாஹி என்பதோடு சுருங்கிப்போக  இந்த வந்தவாசி யுத்தமே காரணமாயிற்று. செங்கல்பட்டிலிருந்து கல்பாக்கம் செல்லும் சாலையில் சட்ராஸ் உள்ளது. சதுரங்கப்பட்டினமே சட்றாஸ் என்றானது. இது டச்சுக்காரர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாயிருந்தது. சட்றாஸ் ஒரு டச்சு வியாபாரக் குடியேற்றமாய் நிர்மாணிக்கப்பட்டது.

விஜயநகரப்பேரரசின் தலைநகராய் சந்திரகிரி விளங்கியது. அறுநூறு அடி உயரத்திலுள்ள சந்திரகிரிக்கோட்டை வேலூர் கோட்டையை ஒத்துள்ளது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கான காலியிடம் 1639ல் அசல் பத்திரம்  பூந்தமல்லி நாயக்கால் கிழக்கிந்தியக்கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுளளது. சந்திரகிரி அரசு கிழக்கிந்தியக்கம்பெனிக்கு நிலம்  வழங்கியதை அங்கீகரித்துள்ளது. விஜயநகர் அரசின் அசல் பத்திரம்( 639).   1645ல்  இதனையே  செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என உறுதிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது.

விஜயநகரமன்னர் ஸ்ரீரங்கராயர் எழுதிக்கொடுத்த வாசகம்.

‘எனது புதியநகரங்களில் ஒன்றை அளிக்கிறேன். அங்கு நீங்கள் ஒரு கோட்டையை எழுப்புகிறீர்கள். அதனைச்சுற்றிப்பாதுகாப்பு அரண்களையும் கட்டுகிறீர்கள். உங்கள் கடல் வாணிபத்தையும் இதர வியாபாரத்தையும் செய்வீர்களாக’

வியாபாரம் மட்டுமா நடந்தது. இருநூறு ஆண்டுகள் பிரிட்டீஷாருக்கு ’அடிமை ஆனோம்’ என்பது  நமது சோக வரலாறு.

 தேவனாம்பட்டினத்து செயிண்டேவிட் கோட்டை 1686ல் எலிஹ யேல் கவர்னரால் வாங்கப்பட்டது. செயிண்டேவிட் கோட்டையில் குமாஸ்தாவாக இருந்த  ராபர்ட் க்ளைவ்,  ஸ்டிஞ்சர் லாரன்ஸ்  என்பவருடன் சேர்ந்து சென்னை மீது ராணுவத்தாக்குதல் நிகழ்த்தி இந்தியாவில் பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தைத் தொடங்கினார்.

 சத்துவாச்சேரி கோட்டையின் இன்றைய இழிந்த நிலமை குறித்தும் விவரமாகக்குறிப்பிடுகிறார் விட்டல். வேலூர் கோட்டையின் அழகும் அமைப்பும் ஜலகண்டேசுரர் கோவிலின் அமைவிடமும் ஆசிரியரால் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளது. 1806ல் நிகழ்ந்த சிப்பாய்க்கலகம் பற்றியும் அதோடு தொடர்புடைய வேலூர் கோட்டை பற்றிய விவரணையை இவண் காண்கிறோம். 1922 ல் வேலூர் கோட்டை தேசிய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாய் அறிவிக்கப்பட்டது. இன்று தொல்பொருள் ஆய்வுத்துறையின்  கீழ் உள்ளது.

ஹைதர் அலி 1766ல் கட்டிய பாலக்காடு கோட்டையின் அழகும் அமைப்பும் குறித்து விட்டல் கச்சிதமாகக்குறிப்பிடுகிறார். நகரின் மய்யமாயுள்ள இக்கோட்டையும் அகழியும்  இன்றளவும் உயிர்ப்போடு இருப்பதை மகிழ்ச்சியோடு  ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

செஞ்சி பற்றிய விபரம் கட்டுரை ஒன்பதில் கொடுக்கப்பட்டுள்ளது. செஞ்சியின் ஆதிபெயர் செங்கிரி அதாவது சிவப்பு மலை. இங்குள்ள மூன்று மலைகளில் ஒன்றில் செஞ்சியம்மன் கோயில் உள்ளது. ஆகவேதான் இது செஞ்சியானது என்கின்றனர். கிருஷ்ணபுரம் என்கிற பெயரும்  செஞ்சிக்குண்டு.  வெகுவாக இடையர்கள் வாழும் பகுதி அவர்களின் கடவுள் கிருஷ்ணன்.  செஞ்சிக்கோட்டைப்பகுதியில் கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, ராஜகிரி அல்லது ராஜாகோட்டை,மற்றும் சக்கிலியன் துர்க்கம் ஆகிய மூன்று  மலைகள்  இங்குள்ளன. செலுத்தவேண்டிய வரி நிலுவை காரணமாக சதாதுல்லாகானுக்கும்  ராஜா  தேசிங்குக்கும் யுத்தம் மூண்டது. 1714 அக்டோபர் 3 அன்று 22 வயதான தேசிங்க் யுத்தத்தில் கொல்லப்பட்டார். இந்த சுற்று வட்டாரத்தில் தேசிங் பற்றியும் அவனது குதிரை பற்றியும் கதைப்பாடல்களும் கூத்துகளும் நிறையவே காணப்படுகின்றன.வெங்கட்ரமணா கோயில் ஒன்று பிரம்மாண்டமாய் இங்கு அமைந்துள்ளது. ஏழு நிலைகொண்ட இக்கோபுரம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒன்றாகும்.

திருமெய்யம், திண்டுக்கல், டேன்ஸ்பர்க், பெங்களூர் கோட்டைகள் பற்றி  பத்தாவது கட்டுரை விவரிக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் திருமெய்யம் உள்ளது. மலையில் இரு குடைவரைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று விஷ்ணுவுக்குமானது. இந்த இரண்டு கோவில்களுக்குமிடையே இருந்த நீண்டகால தாவாவை  ஹொய்சாள தளபதி அப்பண்ண தண்ட நாயகா தீர்த்துவைத்ததாகக் கல்வெட்டுச்செய்தியால் அறியமுடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனும் அவன் தம்பி ஊமத்துரையும் திருமய்யம் கோட்டையில் தங்கியிருந்ததாகவும் தொண்டைமான்தான்  அவர்களை பிரிட்டீஷாருக்குக்காட்டிக்கொடுத்து விட்டார் என்ற செய்தியும் உண்டு. திண்டுக்கல் கோட்டைத் தரைமட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மேலே செல்ல  800 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மலைமீதுள்ள சிறைக்கூடங்கள் பயங்கரமானவை என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.

டேன்ஸ்பார்க் கோட்டை எனும் தரங்கம்பாடிக்கோட்டை டென்மார்க் அரசுக்கு சொந்தமானது. அதனை 1845ல் பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனி  இதனை விலைக்கு வாங்கியது. அண்மையில் வந்த சுனாமி அலைகள் கோட்டையை அழிக்கவில்லை.  கோட்டையைத் தடுப்புச்சுவர்கள் காப்பாற்றிவிட்டன

பெங்களூர் கற்கோட்டை கலாசிபாளையத்தில் உள்ளது. பெங்களூர் என்பது பெந்தக்காளூர் என்பதன் திரிபு. இவ்வூரை நிர்மாணித்த  மாகடி கேம்பகவுடா வேட்டை முடிந்து  களைப்பு மேலீட்டால் ஒரு குடிசையில் கிழவியிடம் உணவு கேட்டாராம். கிழவி வேகவைத்த  வெறும் பயரை அவருக்கு  கொடுத்தாராம். அரண்மனைக்கு வந்து தன்னைப் பார்க்குமாறு அந்தக்கிழவியிடம் பாளையக்காரர் சொல்லிச்சென்றாராம். மாகடி சென்ற கிழவிக்கு மன்னர்  ஒரு வீட்டையும் பொருளையும் பரிசாக வழங்கினாராம்.  அதன்பின் 1537ல்  கெம்ப கெளடா உருவாக்கிய நகருக்கு ‘பெந்தக்காளூர்’ என்று பெயரிட்டு சிறப்பு செய்துள்ளார். வெந்த பயறு என்பதுவே இதன் தமிழாக்கம். அது காலப்போக்கில் பெங்களூர் என்றாயிற்றாம். இன்று ஆஞ்சனேயர் கோவில், வெங்கட்ரமணா கோவில், விக்டோரியா அரசு மருத்துவமனை  பெரிய மசூதி என்பன கோட்டை வளாகப்பகுதியிலேயே அமைந்துள்ளன. பெங்களூரில் உள்ள திப்புவின் அரண்மனை ரஷ்க்-ஏ-ஜன்னத் என்ற பெயர் கொண்டது. சொர்க்கமே அதனைக்கண்டு பொறாமைப்படும் அழகு வாய்ந்தது என்பது அதற்குப்பொருளாகும்.

கடைசி கட்டுரை ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை பற்றியது.  இக்கோட்டையும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை போன்று சமவெளியில் அமைந்தது. வரலாற்றில் ஸ்ரீரங்கபட்டண வீழ்ச்சி பிரிட்டீஷ் ஆட்சி நிலைத்ததற்கான பிரதான காரணமாகும். திப்புவைக்கண்டு திகைத்தவர்கள் பிரிட்டீஷார்.

கர்னல் பெய்லி ,ஜெனரல் பேய்ர்டு,கர்னல் ப்ரெய்த் வெயிட், ரேசர் ,லின்ஸே, காப்டன் ருலே ஆகிய பிரிட்டீஷ் ராணுவ அதிகாரிகள் திப்புவின் பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர்.

சரித்திரம் மாறியது. 1792ல் பிரிட்டீஷார்  திப்புவோடு  மோதி வெற்றி பெற்றனர். தனது நாட்டில் பாதியும்  மூன்று கோடி ரூபாயும் பிரிட்டீஷாருக்கு கொடுத்துவிட்டு தான் பெற்ற இரு செல்வங்களை பணயக்கைதிகளாய் அனுப்பிவைத்தார் திப்பு.  1799 மே 4 அன்று ஸ்ரீரங்கப்பட்டணம் பிரிட்டீஷார் கைவசமானது.  போரில் தோற்ற திப்புசுல்தானின் போர்வாள் ஜெனரல் பேய்ர்டுக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1799 மே 5 அன்று திப்புவின் உடலை முழு ராணுவ மரியாதையோடு கும்பெஜ் கல்லறையில் அடக்கம் செய்தவிபரத்தை  தொல்லியல் துறை அறிவிப்பு பலகை குறிப்பிடுகிறது.   

திப்புவின் போர்வாள்  2003ல்  பேய்ர்டின்  சந்ததியினரால் ஏலம் விடப்பட்டது. விஜய மல்லய்யா  அதனை ஒண்ணரைகோடக்கு ஏலம் எடுத்தார் என்பதும் செய்தி.

 ஸ்ரீரங்கப்பட்டணம் பிரிட்டீஷாரால்  இடித்துத் தகர்க்கப்பட்டது. நகரின் அழகு முகம் கோரமுகமானது. திப்புவின் லால் மஹால் இடிக்கப்பட்டு அதன் விலை உயர்ந்த கற்களும் மரங்களும் உதகமண்டலம்  கொண்டுவரப்பட்டு ஸ்டீஃபென்ஸ் சர்ச் மற்றும் ஹோலி டிரினிடி சர்ச்கள் கட்டப்பட்டன.

அச்சம் தருவித்த பிரம்மாண்ட கோட்டைகள் இன்று அவைகளின் மகத்துவம் குன்றி பராமரிப்பு குறைந்து காசு கொடுத்து மக்கள் பார்க்கும் காட்சிப்பொருள்களாகி  பரிதாபமாகக் கிடப்பது  வரலாற்றுச்சோகம்.

தமிழகக்கோட்டைகள் எழுதிய விட்டல் சாதித்துத்தான் நிற்கிறார். சரித்திரப்பிரியர்கள் நிறைவாகப்பாராட்டுவோம்.

-------------------------------------------------------------------------