விட்டல் ராவின் ’நில நடுக்கோடு’ -
கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர் விட்டல் ராவ். தமிழில் பத்து புதினங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். சிறுகதைத்தொகுப்பு கட்டுரை நூல் எனப் பலவற்றைப்படைத்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் உழைப்பாளி.. தீவிர இலக்கிய வாசகர்கள் அவர் எழுத்துக்களை நிச்சயம் வாசித்தே இருப்பர்.
தொலைபேசித்துறையில் சென்னையில் பணியாற்றி, பணி ஓய்வுக்குப்பின் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது ‘போக்கிடம்” புதினம் இலக்கியச்சிந்தனையின் பரிசு (1971) பெற்றது.
நில நடுக்கோடு என்னும் புதினம் அனேகமாக விட்டல் ராவின் சுயசரிதை என்றும் சொல்லிவிடலாம். அவர் வாழ்க்கையே ஒரு நிலநடுக்கோடு என்கிறபடி அனுபவம் ஆவதை வாசகன் இங்கே அவதானிக்கலாம்.
சென்னைப் பெரு நகரை அழகுச்சித்திரமாக இப்புதினத்தில் தரிசிக்க வாய்க்கிறது. தந்தையை இழந்தவன் தேவ். இப்புதினத்தின் கதா நாயகன். ஹமீத் என்னும் இசுலாமியர் தேவின் தந்தைக்கு நண்பர். அவரே தேவுக்கு ஆதரவாக இருந்து வழி காட்டுகிறார். அவரே தேவை சென்னை நகருக்கு எக்ஸ்ரே டெக்னீஷியன் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். சென்னையில் தங்குவதற்குத் தனக்கு நெருக்கமான மிஸ்டர் ஹெல்ட் என்னும் ஒரு ஆங்கிலோ இந்தியர் குடும்பத்தைத் தேர்வு செய்து அங்கேயே தேவை அனுப்பி வைக்கிறார்.
ஓலவக்கோடு பாசஞ்சர் ரயில் நிலக்கரியால் இயங்கி நீராவியால் இழுத்துச்செல்லப்பட்டதை விட்டல் குறிப்பிடுகிறார். ‘கரிதூவிக்கொண்டு கீதம் இசைத்தவாறு ரயில் பயணித்தது’ இப்படியாய் வாசகனுக்குச்சொல்கிறார்.
அன்றைய சென்ட்ரல் ரயில் நிலயத்தில் இறங்கிய தேவ் வால்டாக்ஸ் சாலையில் கிழக்குமுகமாய் அமைந்திருந்த ரயில்வே கேண்டீனில் டிபன் சாப்பிடுகிறான். அங்கே டிபன் சாப்பிடுபவர்களுக்குப் பல் துலக்க ‘ சிறிய டப்பா ஒன்றில் இளஞ்சிவப்பு நிற நஞ்சன் கூடு பல் பொடி வைக்கப்பட்டிருந்தது’ என்பதைத்தவறாமல் சொல்லிக்கொண்டுசெல்கிறார்.
அந்தக்காலத்தில் சென்னையில் கை ரிக்ஷாக்கலின் புழக்கம் அதிகம். தேவ் ஒரு கைவண்டியில் ஏறினான். மதராஸ் பாஷையை விட்டல் இங்கே நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
‘ நீ சொல்லுற எடமெல்லாம் ஒரே சந்து பொந்து. நம்ம ரிக்ஷான்னா அசால்டா பூந்து போய்ரும்’
தேவ் விலாசத்தை ’போர்ச்சுகீஸ் சர்ச் தெரு பதி மூணாம் நம்பர்’ என்று சொல்ல ரிக்ஷாக்காரன்,
‘அதான் ஒருவாட்டி சொல்லிட்டல்ல, சொம்மா சொல்லிகினே வராதே’ என்று கட் அடித்துப்பேசுகிறான். ரிக்ஷாக்காரர்கள் சென்னையில் சட்டம் பேசுவதை இப்படியாய் அனுபவித்தவர்கள் நிச்சயம் நினைத்துத்தான்பார்ப்பார்கள்.
தேவ் தங்கியிருந்த அந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பத்தில் ‘ரேடியோகிராம் ஜெர்மன் க்ரண்டிக்’ இருக்கிறது. அதனை தேவ் ஆச்சரியத்தோடு பார்க்கிறான். ’இசைத்தட்டின் ஒரு பக்கம் ஓடிமுடிந்தவுடன் ரேடியோகிராமின் கை போன்றதொரு சாதனம் எழுந்து இசைத்தட்டைத்தூக்கித் தோசையைத் திருப்பிப் போடுவதுபோல திருப்பிவைத்து மறுபக்க இசையை ஓட வைத்த இயந்திர மின்சார சாதனையைக்கண்டு தேவு பிரமித்தான்.’ இப்படிக்குறிப்பிடுகிறார் விட்டல்.
எக்ஸ்ரே பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொண்டார்கள் என்பதை சுவாரசியமாகக்குறிப்பிடுகிறார்.’ ஆங்கிலோ இந்தியர்கள் விருப்பத்தோடு வாங்கிப்படிக்கும் மெயில் இதழ் பற்றிய செய்தி வருகிறது. ஆங்கிலோ இந்தியர்கள் குதிரைப்பந்தயமான கிண்டி ரேசில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருந்தார்கள் என்பதனை அறிகிறோம். ஆங்கிலோ இந்தியப்பெண்கள் ‘ஜொலிக்கும் உடையில் மணக்கும் மேனியில் கிலுகிளுக்கும் சிரிப்பில் பார்க்கையில் வெகுவாய் விலகிப்போய் மிகவும் அந்நியனாய் உணர்ந்தான் தேவ். சற்று முன்னிருந்த அவர்களின் தோற்றத்தை நினைவுபடுத்திக்கொண்டான்’ ஒப்பனையின் வீச்சு ஆங்கிலோ இந்தியப்பெண்களிடையே எத்தனை ஆகிருதியோடு இருந்தது என்பதனை நாம் ஊகித்துக்கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியப்பெண்களுக்கு நடனம் என்பது நம்மூர்ப்பெண்களுக்குக்கோலம் போடுவது போல என்று சொல்கிறார் ஆசிரியர்.
டவுன் பஸ் கண்டக்டர் சென்னையில் அன்று ஒரு பைசா டிக்கட்டுக்கு பத்து பைசா வாங்கிக்கொண்டு மூன்று பைசா திருப்பித்தந்ததை வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ‘எல்லாரும் பத்து பைசா நீட்னா நாந்தான் சில்லரைக்கு எங்கே போறது?’ எரிந்து விழுகிறார் கண்டக்டர். காலம் எங்கோ சென்றுவிட்டதை வாசகன் மனத்திரையில் கோலம் போட்டுப்பார்க்கிறான்.
திராட்சைப்பழத்தைக்கூவிக்கூவி ஏழைப்பெண்கள் விற்கிறார்கள். அவர்களை நோட்டம் விட்டுக்கொண்டு சில ஆண்கள் நிற்கிறார்கள். திராட்சைப்பழ வியாபாரம் பாலியல் ரீதியான போட்டியாகப் பொறாமையாக மாறிவிடுகிறது. திராட்சை விற்கும் பெண்களின் குடிகார கணவன்மார்கள் அவ்விடம் தோன்றி ஜபர்தஸ்து காட்டுகிறார்கள்.
‘இன்னாம….. இன்னாம…… கம்னிரும…’ என்றபடி.
அங்கே போலிசு வருகிறது.
லத்தியால் தட்டுகிறது. விரட்டுகிறது. இப்போது அந்த பழ வியாபாரப்பெண்களிடையே வெறுப்பு பொறாமை சண்டையெல்லாம் மறைந்து ஒற்றுமை சகோதரிப்பாசமெல்லாம் திரும்பியிருந்தன.
‘ஏய் மாமன் வர்ராண்டி …. மாமன் வர்ரான்…’
‘யக்கா, மாமன் வர்ரான்’ ஓர் அழகுச்சிறுகதையாக இதனை வாசகன் அனுபவிக்க முடிகிறது.
தேவ் ஃபஸ்ட் லைன் பீச் பக்கம் செல்கிறான். சிறுநீர் கழிக்க இடம் தேடுகிறான். சுண்ணாம்புக்காரை கட்டுமானம் சிலதுகள் கண்ணில் படுகின்றன. இவைதான் இயற்கை அழைப்புக்குப் பொது ஜனத்திற்கு ஒத்தாசை. அங்கு எதிர்படும் ஒரு பொது ஜனம் தேவிடம் இப்படிப்பேசுகிறது.
‘இதெல்லாம் உலக மகாயுத்தம் வந்தப்ப அவங்க கட்டின வார் பங்கருங்க. பங்கர்னா பதுங்கியிருந்து எதிரியை சுடற அறை. எதிரி கப்பலுங்க வந்து ஹார்பரைத்தாக்கினா மறைஞ்சியிருந்து சுடறதுக்குன்னு இந்த சந்துங்க. இது மாதிரி இந்த பீச்சுல ஏழெட்டு பங்கர் இருக்கு. தோ தெரியுதா?’
மருத்துவமனையில் வார்டு பாயாக ஆரிமுத்துக்கு அரசு வேலை. வெளியிலும் டாக்டராக வேலை பார்ப்பது. போலி டாகடர்தான். மருத்துவ மனையிலிருந்து மருந்துகள் திருடுவது அரசாங்க மருத்துவ மனையிலுள்ள நோயாளியை தன் வீட்டுக்கு சிகிச்சைக்கு அழைப்பது எனப்பல அல்டாப் வேலைகள் செய்து மாட்டிக்கொண்ட ஆரிமுத்து ஒரு நோயாளியை இறக்கவும் விட்டு விடுகிறான். ஆரிமுத்து பணி நீக்கம் செய்யப்படுகிறான். விசாரனை தொடர்கிறது. தேவ் அத்தனையும் பார்க்கிறான்.
புரசைவாக்கம் செயிண்ட் இமானுவேல் சர்ச் பற்றிய செய்தி. ’தேவாலயம் பெரிது. பெரிய ஜன்னல் கண்ணாடிகள் ஸ்டெயின் கிளாஸ் ஓவியங்களால் அழகுறத்தோன்றின.போலவே அதன் மணியோசையும். மணியோசைக்கு ஒருவித பூடகமான தெய்வீக சக்தி இருப்பதை பல கோயில்களிலும் கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கேட்டுணர நேர்ந்திருக்கிறது’
ஜான் த பாப்டிஸ்ட் கோலார் தங்க வயலில் பனிசெய்தவர். சென்னை வருகிறார். ஓயாமல் இருமுகிறார். தங்க சுரங்கப்பகுதியில் சயனைட் பயன்படுத்தப்படுவதாகவும் அதனால் அனேகர் சீக்காளியாகி வேலையை வேண்டாமென்று சொல்லி பெங்களூர் சென்றுவிட்ட விஷயமும் நமக்குச்சொல்லப்படுகிறது.
சென்னைக்கடற்கரையில் கூவம் கடலோடு கலக்குமிடத்தில் காதல் கடற்கரை இருந்ததை விட்டல் ராவ் பதிவு செய்கிறார்.’ அங்கங்கே இடம் விட்டு இடம் பூக்காத தாழம்பூ புதர்கள் மற்றும் பிற புதர்கள் மண்டிக்கிடக்கும் ,மணல்வெளி இந்த சூழலின் வசதியில் இளஞ்சோடிகள், கள்ளக்காதலர்கள் புதுமணத்தம்பதிகள், என்று ஜோடி ஜோடியாய் ஆண்கள் பெண்கள் தங்கள் அந்தரங்கம் பேணி யார் பார்வைக்கும் சட்டென்று பட்டுவிடாமல் செளகர்யமாய் ஒளிந்து உட்கார்ந்தோ அருகருகே சயனித்தோ ஒருவர் மடியில் இன்னொருவர் சாய்ந்தோ உரசி உலகை மறந்து உவகையுறும் விதத்தில் அவர்களுக்கு அந்தக்கடற்கரைக்காணி நிலம் கிடைத்திருக்கிறது. காதலே இங்கு பூர்ண சுதந்திரமும் செளகர்யமுமில்லாமல் கள்ளத்தனமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.’
மரினா கடற்கரையை கண்முன்னே கொண்டு நிறுத்துகிறார் விட்டல் ராவ். காணி நிலம் என்றதும் பாரதியின் நினைவும் காதல் காதல் காதல் என்னும் அவரின் காதல்பாட்டு வரிகளும் மனத்திரையில் எட்டிப்பார்க்கின்றன.
ஆங்கிலோ இந்திய குடும்பத்தை விட்டு வேறு இடம் செல்லவேண்டிய சூழல் தேவுக்கு வந்தது. அவர்கள் வீட்டு லீசு முடிந்து வீட்டைக்காலிசெய்ய தேவும் வேறு அறைக்குச்செல்வது என முடிவாகியது. அப்போதுதான் முதல் முறையாக மின்சார ரயிலில் ஏறுகிறான் தேவ்.
‘கக்கூஸ் இல்லையா?’
‘அதெல்லாம் இதிலே இருக்காது’ அறை தேடிகொடுக்கும் புஷ்பநாதன் தேவுக்குப்பதில் தருகிறான்.
மின்சார விசிறி சுழன்று சுழன்று ரயில் பெட்டியில் வீசுவது காண்கிறான் தேவ். ரயில் பெட்டியில் ‘பில்ட் இன் நேப்பிள்ஸ், இட்டலி’ என்கிற விவரம் எழுதியிருப்பதை தேவ் படித்துப்பார்க்கிறான்.
நுங்கம்பாக்கம் செளராஷ்டிர நகரில் தேவ் தங்குவதற்கு கொட்டகைக் ஏற்பாடாகிறது. அது தெலுங்குப்பெண் கக்கூஸ் அள்ளும் குடியிருப்பு. காலை ஏழரைக்குத்தான் சுத்தம் செய்யும் ஆள் வரும். அதற்கு நாம்தான் தண்ணீர் இறைத்து ஊற்ற வேண்டும். குடியிருப்பவர்களுக்கு அது முறைப்படி வரும். அவள் தண்ணீர் சேந்திவிடமுடியாது. தொடர்ந்தார்போல் மாட்டுக்கொட்டகை ஒன்று. கொசுக்களின் ஆக்கிரமிப்பு. தங்கும் அறையிலோ மூட்டைப்பூச்சிகளோடு போர். ஆக தேவ் சண்முகராயன் தெருவுக்கு குடிமாறுகிறான். அது ஏன் மலம் அள்ளுபவர்களும் செறுப்புத்தைப்பவர்களும் தமிழ் மண்ணில் தெலுங்கு பேசிகளாக மட்டுமே இருக்கிறார்களோ? ஒட்ட தெலுங்கு ’ கிந்த குந்து’ (கீழே உட்கார்) அவர்கள் பாஷை.
ஆங்கிலோ இந்தியரை ஆப்பக்காரன் என்று ஒரு கிழவி அழைப்பதும் நமக்குச்செய்தியாகிறது. ஹாஃப் காஸ்ட் காரன் ( கலப்பினம்) என்பது ஆப்பக்காரனாய் மாறிய அந்த சூட்சுமம் சொல்லப்படுகிறது.
சினிமா சுவரொட்டிகளோடு சகோதரர் பாலாசீர் லாறி பிரசங்கக்கூட்ட அழைப்பான’ குருடர்கள் பார்க்கிறார்கள்,செவிடர்கள் கேட்கிறார்கள் ஊமைகள் பேசுகிறார்கள் சப்பாணிகள் நடக்கிறார்கள்’’ என்பதையும் விட்டல் ராவ் குறிப்பிடுகிறார்.
எக்ஸ்ரே பயிற்சியில் சேகரித்த எலும்புத்துண்டுகளை சேலம் வீட்டில் அழகாய் அடுக்கிவைக்கிறான் தேவ். அவன் தங்கை இரவில் அவை கண்டு அரண்டுபோகவே அவன் அம்மா அவைகளை சுடுகாட்டுக்குக்கொண்டுபோய் எறியச்சொல்கிறாள். சேலம் கல்ரம்பட்டி சுடுகாட்டில் கொண்டுபோய் எலும்புகளை எறிந்துவிட்டு தலைமுழுகிக்குளித்து வீட்டுக்கு வருகிறான் தேவ்.
எக்ஸ்ரே டெக்னீஷியன் வேலை உடனே கிடைப்பது சாத்தியம் இல்லை என்பதால் தேவ் மத்திய அரசின் டெலிபோன் ஆப்ரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்கிறான். ஆங்கிலோ இந்தியப்பெண் உதவி செய்கிறாள். மவுண்ட்ரோடு தொலைபேசியகத்தில் வேலையில் சேருகிறான்.
லைன்மென் யூனிஃபார்ம், பற்றிப்பேசுகிறார். ‘கவர்மெண்டிலே லோயஸ்ட் கொடேஷன் கால்டு ஃபார்னு கேட்டாக்க இதுமாதிரிதான் சப்ளையாகும்’ அரசின் மீதும் நல்ல விமரிசனம் வருகிறது.
சிப்பந்திகளில் பிரம்மசாரியாயிருப்பவர்கள் பருவமழைக்காலத்து வேலைப்பளு ,கெடுபிடி, நெருக்கடி நிலைமையைக்கருத்தில்கொண்டு இரவு பகலாய் இணைப்பகத்திலேயே இருந்துவிட்டனர்.
‘ஓ டி. யாம் ஓ. டி . யாருக்கய்யா ஓவர்டைம் வேணும். ஒண்ணும் வேணாம் ஆளவுடு படுத்தா போதும்னு இருக்கு’
‘’சார் இந்த போஸ்ட்ல பாம்பு ஏறிப்படுத்திகினுருக்கு என்னால ஆவாது’
இவ்வகை கெடுபிடிப்பேச்சுக்களையும் விட்டல் ராவ் பதிவு செய்திருக்கிறார்.
தேவ் ஒரு நாள் சேலத்தில் பித்துக்குளி முருகதாஸ் கச்சேரிக்குப்போய்வருகிறான். சென்னையிலிருந்து சேலத்திற்கோ டிரெயின் எஞ்சின் அறைப்பயணம். ஷொரனூர் பாசஞ்சர் வண்டி. ஆங்கிலோ இந்திய நண்பர் லான்சி தேவ்வை சேலத்திற்குக் கூட்டிப்போகிறார்.
‘முருகதாசின் குரலும் மொழி ஞானமும் தேவுவை பிரமிக்க வைத்தது.சந்நியாசிபோல காவிக்கோலத்தில் தலைக்குக்க்காவி கட்டி,கருப்புக்கண்ணாடி அனிந்திருந்த முருகதாஸ் ஹார்மோனியத்தோடு இசையில் நடனமாடினார்.’ என்று சொல்கிறார் விட்டல்.
பிறகு ஒரு சமயம் சென்னையில் ஜெனரல் பாட்டர்ஸ் சாலை அருகே பிள்ளையார் கோவிலில் பித்துக்குளி முருகதாஸ் கபீர் தாஸ் பக்திப்பாடலை ப்பாட ‘இந்தியில் ஏன் பாடுகிறாய் நிறுத்து, ’தமிழ் எங்கள் உயிர் இந்தி எங்கள் மயிர்’ எனக்கூவிக்கொண்டு ஒரு கும்பல் வருகிறது. பிள்ளையாருக்கும் முருகதாசுக்கும் இடையே மிகப்பெரிய கட்டி கல்பூரம் ஏற்றி முருகதாசை மூச்சுத்திணற வைத்து கச்சேரியை நிறுத்துகிறது. கலவரம். தேவ் செருப்பு வார் அறுந்து ஓடியதாய்க் குறிப்பிடுகிறார் விட்டல்.
பிரதமர் நேரு காலமான துயர அறிவிப்பு வருகிறது. தொலைபேசிகள் அத்தனையும் இயங்கி எக்சேஞ்ச் படு படு பிசியாகிற விஷயம் சொல்லப்படுகிறது.
நாட்டில் உணவுப்பஞ்சம் ‘தினமும் ஒருவேளைச் சாப்பாட்டை விட்டு விடவும்-மிஸ் எ மீல்- ப்ரொகிராம் பிரதமரால் மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்தி மொழி மத்திய அரசு ஊழியர்களுக்குச்சொல்லிக்கொடுக்கப்படுகிறது. மைய அரசு தரும் சலுகை சன்மானம் உண்டு.’ பரீட்சையிலே கேள்விக்கு பதில் எழுதத்தெரியலேனா கேள்வித்தாளை அப்படியே பாத்து பிரதியெடுத்து எழுதித்தந்தா போதும்,பாஸ் மார்க் போட்டுடுவோம்’ இந்தி கற்பிக்கும் ஆசிரியை சொல்கிறார்.
சிவப்புச்சாயம் பூசிக்கொண்ட தொலைபேசி
தொழிற்சங்க கூட்ட அரங்குகள் பற்றியும் தவறாமல் குறிப்பிடுகிறார் விட்டல்.
எம் ஜி ஆரை எம் ஆர் ராதா துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு வருகிறது. தமிழகமே அல்லோல கல்லோல படுகிறது. பிரபல நடிகரின் உயிர் பிரச்சனை ஆனது. இது எதிர்க்கட்சிக்கு’ கூரையைப்பிய்த்துக்கொண்டு கொட்டிய கணக்கு’ என்கிற கூர்மையான அரசியல் விமரிசனம் வைக்கிறார் விட்டல் ராவ்.
அண்ணா மறைந்த செய்தி அதன் பின் நிகழ்வுகள் பற்றியும் விவரம் சொல்கிறார் விட்டல்..
நாடு தழுவிய வேலை நிறுத்தம் வருகிறது. தோழர்கள் ஜெகனும் முத்தியாலுவும் கூட்ட நிகழ்ச்சியில் பேசுவதாயிருந்ததால் ஆஜர் முற்றிலுமாயிருந்தது. மாலையில் தோழர் மஜீதும்,ஏகேவியும் கலந்து கொள்வதாயிருந்தது. விட்டல் எதனையும் விட்டு வைக்கவில்லை.
தேவ் கமலம் என்றொரு பெண்ணை க்காதலித்து மணக்கிறான். திருநீர்மலைக்கோவிலில் திருமணம் நடக்கிறது. நண்பர்கள் மட்டுமே உதவி. உதவிக்கு வேறு யாருமில்லை.
பின்னர் ஒரு நாள் பெண்ணின் தந்தை மருத்துவ மனையில் இருக்கின்றபோது தன்னுடைய குருதியை அவருக்குக்கொடுத்து அவரை தேவ் காக்கிறான். உரவு துளிர்க்கிறது. தேவின் தாய் செங்கல்பட்டில் மகள் வீட்டில் இருந்துவிட்டு உடல்நிலை மோசமாகி தேவ் இல்லம் வருகிறாள் மறு நாளே மரணிக்கிறாள்.
தேவ் என்னும் கதாபாத்திரம் வழி உலகைப்புரிந்துகொள்வதெப்படி என்னும் விஷயத்தை வாசகர்க்கு எளிதாக்குகிறார் விட்டல் ராவ்.
, இவண் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைச்சித்திரமாக்கித்தந்திருப்பதால் எழுத்தாளர் பாவண்ணன் இப்புதினத்தை ‘விடுபட்டவர்களின் வரலாறு’ என்று பொருத்தமாகவே அழைக்கிறார்.
பாரதிபுத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் வாசகர்க்கு வெகு நிறைவு தருகிறது.
-------
No comments:
Post a Comment