Friday, July 1, 2022

இராஜகோபாலாச்சாரி

 சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி’   -ஆர்.கே. மூர்த்தி            -

 

நவபாரத சிற்பிகள் வரிசையில் இராஜாஜி பற்றி இந்திய அரசின் பப்ளிகேஷன்ஸ் டிவிஷன் -தகவல் ஒலி பரப்பு அமைச்சகம் - வெளியிட்ட நூல்.

முதல் பதிப்பு 2006  ரூ 145 பக்கங்கள் 284

 

மூதறிஞர் இராஜாஜி என்போம். ஆயின் அவர் வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப்பிடித்தார். ஏர் பிடிப்பவன் மகனும் ஏர் மட்டுமே பிடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டவர் என்றும் சொல்வோம்.  ஒரு ஆளுமை பற்றி மெய்யான அறிதலுக்கு மட்டும் முயற்சி எடுத்துக்கொள்ளத் தயங்குகிறோம்.

இந்த நூல் இராஜாஜி பற்றி நாம் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களை நமக்குத்தருகிறது. நம் தேசத்து முதல் பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வரலாற்று விஷயங்களில் அக்கறை செலுத்துவோர் அவசியம் வாசிக்க வேண்டிய இந்த அரிய நூலை  ஆர். கே. மூர்த்தி ஆங்கிலத்தில் எழுத எஸ். கணேசன் தமிழில் தந்திருக்கிறார். இந்நூல்  அமரர்.பேராசிரியர்  கே . சுவாமிநாதன் நினைவு போற்றி வெளிவந்திருக்கிறது.

 இராஜாஜி, ஓசூர் கிராம முன்சீப்பின் மூன்றாவது மகனாக டிசம்பர் 10 1878 அன்று பிறந்தவர். சட்டம் பயின்றவர். சேலம் நகரில் கிரிமினல் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

கோகலே அழைப்பின் பேரில்  தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த காந்தி சென்னைக்கு 1919ல் வருகை தருகிறார். இராஜாஜி சென்னையில்வைத்துக் காந்தியைச் சந்திக்கிறார்.1921ல் மகாத்மா அழைப்பின்பேரில்  இராஜாஜி  முழு நேர சுதந்திரப்போராளியாகிறார்.

1921ல் முதன் முறையாக சிறை செல்கிறார். திருச்செங்கோட்டில் ஆசிரமம் தொடங்கி ஏழைகளையும் தாழ்த்தப்பட்டோரையும் இணைத்துக்கொள்கிறார்.

1935 க்குப்பிறகு சென்னை மாகாண முதலமைச்சராகிறார். முதன் முதலில் மதுவிலக்கை அமுல் படுத்துகிறார். ஹரிஜன் ஒருவரை தனது அமைச்சரவையில் பொறுப்பாக்குகிறார். இந்துக்கள் எந்த சாதியினராக இருந்தாலும் ஆலயப்பிரவேச உரிமை உண்டென  அதனை நடைமுறைப்படுத்துகிறார். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து போவதை முதன் முதலாக அங்கீகரித்த தலைவர் இராஜாஜியே. சுதந்திர இந்தியாவில் வங்காள கவர்னராகவும் இந்திய கவர்னர் ஜெனரலாகவும் பணிபுரிந்தார். நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். சென்னை ராஜதானிக்கு முதலமைச்சரானார்.

மகாபாரதம் இராமாயணம் என  இலக்கிய நூல்களை எழுதினார்.  சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.அணு ஆயுதங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார்.  அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை ச்சந்தித்து விவாதித்து இருக்கிறார்.

94 வயதில் இயற்கை எய்தினார்.

இரண்டு இந்தியர்கள் இராஜாஜியின்  புரிதலுக்கும் அரசியலுக்கும் அடித்தளமிட்டனர். ஒருவர் விவேகானந்தர் அடுத்தவர் பாலகங்காதர் திலகர்.

தம்மைப்போன்ற மன நிலையில் இருந்த  மாகவிசுப்ரண்ய பாரதியை சந்திக்கிறார். பாரதியைப்பற்றி நூலாசிரியர் ஆர். கே  மூர்த்தி பின் வருமாறு எழுதுகிறார்.

‘..அதுவரை கற்றறிந்த சான்றோர்கள் சமுதாயத்தில் மேல்தட்டு மக்கள், ஆடம்பர வசதிகளும் படாடோபமான வார்த்தை விளையாட்டுகளும் கொண்டோரின் கைப்பாவையாக இருந்து வந்த தமிழை பாமரனுக்காக மீட்டுத்தந்தார். சாலைகளில் காணப்படும் சாதாரண மனிதனின் பேச்சுத்தமிழை அவர் பயன்படுத்தினார். இது தமிழ் பண்டிதர்களை உலுக்கியது. அவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்  அதற்குள்  வெகுதூரம் முன்னே சென்று மக்கள் கவியாகிவிட்டார்.’

சேலத்தில்  இராஜாஜி வக்கீலாகப் பணியாற்றிய போது இரண்டு ஹரிஜனச் சிறுவர்களை ப்பொது ப்பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார். பிரச்சனை பூதாகாரமாகிறது. பள்ளி ஆசிரியர் இந்த   இரண்டு ஹரிஜனச் சிறுவர்களால் 200  ஜாதி இந்துப்பிள்ளைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்களே என ஆட்சேபிக்கிறார்.

’பள்ளியை அழித்து விடாதீர்கள்’ என எச்சரிக்கிறார்.

இராஜாஜி ஹரிஜனச்சிறுவர்கள் அப்பள்ளியில் படித்தே ஆகவேண்டும் என்கிறார். சில ஜாதி இந்துப்பிள்ளைகள் பள்ளியை விட்டு நின்றுதான் போனார்கள். பலர் தொடர்ந்து படித்தார்கள்.  அந்த இரண்டு ஹரிஜனப்பிள்ளைகளில் ஒருவன் படித்துத்தெர்ந்து  அரசு வேலைக்குப் போய்விடுகிறான்.

1917 ல் சிதம்பரம் நகரில் ஹரிஜங்களுக்குப் பள்ளி நடத்திய  சுவாமி சஹஜானந்தாவுக்கு  சேலம் நகரில் இராஜாஜி  சிறந்த வரவேற்பு கொடுக்கிறார்.   இது கண்டு சேலம் பிராமணர்கள் ஆத்திரப்படுகின்றனர். இராஜாஜியை ஜாதி விட்டு பகிஷ்காரம் செய்வது என்று முடிவு செய்கின்றனர். இராஜாஜி அப்பிராமணர்கள் செயலைத் துச்சமென ஒதுக்குகிறார்.

முதலில் இராஜாஜி ஹிந்தி மொழி பயில்வதை ஆதரிக்கிறார். தானும் கற்றுக்கொள்கிறார். ஆனால் ஹிந்தி மொழி ஆர்வலர்கள், அம்மொழிபேசாத பிரதேச மக்களின் தொண்டைக்குள் அதை வலுக்கட்டாயமாக  திணிக்க முயன்ற மொழி வெறியே அவரது மனதை புண்படுத்தியது.

‘ஹிந்தி மொழி மட்டுமே அரசுமொழியாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் மூலம் அவர்கள் அம்மொழி மீதிருந்த மரியாதையை சேதப்படுத்தி விட்டனர்.’  என்கிறார் இராஜாஜி.

‘1937ல் நான்  சென்னை மாகாண பிரதமராக இருந்தபோது ஹிந்தியை கட்டாயபாடமாக்கினேன்.காலம் மாறிவிட்டது. ஹிந்தி மொழியைத் தூக்கிப்பிடிப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்தி மொழியை தம்மொழியாகக்கொண்டவர்கள் மொழிவாரியான தலைமை பொறுப்பு கிடைப்பதற்காக அவர்கள் இதனை ஆதரிக்கிறார்கள்.’

‘ஹிந்தி எதிர்ப்பு ஹிந்தி மொழிக்கு எதிரானதல்ல’ என்கிற சூக்குமங்களை இராஜாஜி எடுத்துச்சொல்கிறார்..

கிலாஃபாத் இயக்கத்தில் தீவிரப்பங்கு கொண்டார் இராஜாஜி. திருச்சியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில்  காலிப்புக்கு எதிராக பிரிட்டன் கொண்டு வந்த   நடவடிக்கையை ரத்து செய்யத்தீர்மானம்    ஒன்றை  நிறைவேற்றுகிறார்.

இரத்தின சபாபதி கவுண்டர் என்ற ஜமீன் 12 ஏக்கர் நிலத்தை இராஜாஜியிடம் ஒப்படைக்கிறார். அதனில் இராஜாஜி காந்தி ஆஸ்ரமத்தை அமைக்கிறார். அந்த ஆஸ்ரமத்தை முதலில் ஒரு காங்கிரஸ்காரராக வாழ்க்கையைத் துவங்கி பின்னர் பிராமணர் அல்லாதவர்கள் நலன் பக்கம் இழுக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முன்னோடியாக இருந்தவரும் இராஜாஜியின் நண்பருமான பெரியார் ராமசாமி நாயக்கர் திறந்து வைத்தார். இராஜாஜியின் நண்பர் என்றால் அது  அய்யா  பெரியார் என்பது தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த செய்தியே.

ஹரிஜனங்களை ஆச்ரமத்தில் சேர்த்தமைக்காக ஜாதி இந்துக்கள் ஆஸ்ரமத்திற்கு கொடுக்கும் வழக்கமான பாலை  நிறுத்திவிடுகின்றனர். ’ வைத்து  நாங்கள் வாழக்கற்றுக்கொள்வோம்’ என இராஜாஜி எதிர்க்குரல் முழங்கினார்.

இராஜாஜியின் கொள்கைகள்.  1. மது ஒழிப்பு 2.ஊரகப்பகுதிகளில் கடன் நிவாரணம் 3. ஹரிஜனங்கள் கோவிலுக்குள் அனுமதி 4. மக்கள் காதி கைத்தறி துணி அணிவது 5.இந்து முஸ்லிம் ஒற்றுமை. இவையே  இச்சமூக வளர்ச்சிக்கான  திறவுகோல் என இராஜாஜி கண்டுகொண்டார்.

மது விலக்கினால் அரசுக்கு  ஏற்படும் வருவாய் இழப்பை  விற்பனை வரி மூலம் சரிக்கட்டலாம் என்கிற இராஜாஜியின் யோசனையை பிரிட்டீஷார் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொண்டுவிடவில்லை. இன்று காமதேனு வாக உள்ள விற்பனைவரியினை அன்றே  கண்டு சொன்னவர் இராஜாஜி.

தஞ்சாவூர் நிலச்சுவான்தாரர்களுக்கும்  ஏழை விவசாயிகளுக்கும் இடையே பாலமாக அமைந்த ‘தஞ்சாவூர் பண்ணையாள் சட்டம்’ கொண்டுவந்தார். அந்தப்பகுதி கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தை இராஜாஜி  வலுவிழக்கச்செய்தார் என்பதுவும்  நாம் அறிந்த வரலாறு.

’மாறிவிட்ட நிலமைகளுக்கு ஏற்ப பிராமணர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். எவ்வளவு சீக்கிரம் அவ்வாறு செய்கிறார்களோ அது அவர்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கும்’ இது இராஜாஜியின் புத்திமதியாக இங்கே  ஆசிரியரால் குறிப்பிடப்படுகிறது.

மொழிவழி மா நிலத்தை இராஜாஜி ஏற்றுக்கொண்டவரில்லை. ஆனால் அதுசென்னைச் சட்டசபையில் ஒப்புதல் பெற் றுவிடுகிறது. இராஜாஜி ஒரு ஜன நாயகவாதி.சட்டப்பேரவையில்  ஒப்புதல் பெற்றுவிட்ட தீர்மானத்திற்கு  எதிராக வரும்  ஒரு யோசனையை அவரால் சகித்துக்கொள்ளமுடியாது.இதனை அழகாகப்பதிவு செய்துள்ளார்.

 நேதாஜி சுபாஷ் காங்கிரசின்  தலைவராகிறார்.  நேருவும் இராஜாஜியும் செயற்குழுவில்  அவரோடுபணியாற்ற மறுக்கிறார்கள். போஸ் திணறிப்போகிறார். தலைவர் பதவியில் அதிகாரம்  ஏது ?  அந்த மகாத்மா காந்தியிடம்தான் பலமும் ஆதார சக்தியும் இருக்கிறது என்பதை போஸ் அறிந்துகொள்கிறார்.  உடனே பதவி விலகினார். இந்தக்கொந்தளிப்பான நாடகத்தில் இராஜாஜி பெரும்பங்காற்றினார் என்பதை  ஆர். கே மூர்த்தி  பதிவு செய்கிறார்.

1936ல் இராஜாஜியை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்து அவருடைய சேவைகளை அங்கீகரிக்கும்படி  காந்தியை பட்டேல் தூண்டினார். இராஜாஜி அதனை ஏற்க மறுத்துவிடார்.

இந்திய அரசியல் களத்தில்  சோதித்து பார்க்கப்பட்ட ஆயுதங்களான அஹிம்சைமுறையிலான ஒத்துழையாமையை  காந்தி அறிமுகப்படுத்திய[போது ஜின்னா ஆட்டம் கண்டு போனார். மிக உயர்ந்த சட்ட அறிவு கொண்ட அவர் அரசியல் சாஸன முறைகள் மூலம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொண்டுவர முடியுமென நம்பினார். இப்படி இந்நூலில் பதிவு தொடர்கிறது

பாகிஸ்தான்  பிரிவினை கோரிக்கை சரிதான் வேறு வழியில்லை  இது இராஜாஜியின் குரலாக இருக்கவே  மகாத்மா இராஜாஜியை,  இனியும் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை  காங்கிரசிலிருந்து விலகிவிடுங்கள் என்று கூற அவரும் விலகிவிடுகிறார்.

மும்பையில் அருணா( பின்னாளில்  அசப் அலி யை மணந்தவர்) ‘க்வாலி தலாப்’  மைதானத்தில் மிகப்பெரிய மேடையில் மூவர்ணக்கொடியை ஏற்றி பிரிட்டீஷாருக்கு எதிராகத் துணிச்சலாக நின்றார். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கத் துணிந்த இளம்பெண்  அருணா  என்று சரித்திரம் பேசியது.

1946ல் கடற்படை சிப்பந்திகளின் புரட்சி பற்றிக் குறிப்பிடும்போது  அது பிரிட்டீஷ் அரசுக்கு விடப்பட்ட சவால் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

பதினைந்து மாகாணங்களில் பன்னிரெண்டு மாணங்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சர்தார் பட்டேலின் பெயரை பரிந்துரைக்கிறது. காந்தி பட்டேலை விலகிக்கொள்ளச்சொல்லிவிட்டு நேருவையே தேர்ந்தெடுக்கிறார்.

நேதாஜிக்கும் பட்டேலுக்கும் வரலாற்றில் அனேக எதிர்வினைகள் மகாத்மாவால் நேர்ந்திருப்பதை வாசகன் உணர்ந்தே இந்நூலை வாசிக்கமுடிகிறது.  

இராஜாஜி வங்காள கவர்னராய் வருவதை  சுபாஷின் சகோதரர் எதிர்க்கிறார் கருப்புக்கொடிகள் வரவேற்க கல்கத்தா  டம் டம் விமானநிலையத்தில் இராஜாஜி வந்து  இறங்குகிறார்.  நேதாஜி சகோதரர் சரத் சந்திர போசின் இல்லம் சென்று அவரோடு பேசி ஒத்துழைப்பு பெறுகிறார்.

1947 டிசம்பரில் காந்தி மீது நிகழ்த்தப்பட்ட ஒரு   வெடிகுண்டு தாக்குதல் தேசபிதாவுக்கு உள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டியது என்று  ஆசிரியர் பதிவு செய்கிறார் .

மனோபாவத்தில் நேருவும் பட்டேலும் இரு துருவங்கள் என்பதைச்சரியாகக்குறிப்பிடுகிறார் ஆர் .கே மூர்த்தி.

 ஜூன் 21 1948 கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார் இராஜாஜி.

ஹைதராபாத் அரசர் நிஜாம் இந்திய அரசுடன் இணைய மறுக்கிறார்.மோதல் நிகழ்கிறது. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில்

 தெலுங்கானா பிராந்தியத்தில் கம்யூனிஸ்டுகளும் தொல்லைகளைத் தூண்டிவிடுவதில் ஈடு பட்டனர். இச்செய்தியும் ஒரு கொசுறாக வாசகனுக்குக்கிட்டுகிறது.

காஷ்மீர் பிரச்சனை, இந்திய திபேத் கொள்கையில் மாறுபாடு இவை இராஜாஜியையும் நேருவையும் பிரித்தன.

நாடு  விடுதலை அடைந்து  முதலாவது பொதுத்தேர்தலுக்குத் தயாரானது. சென்னை ராஜதானியில் மொத்தமுள்ள 375 இடங்களில் காங்கிரஸ் 152 சுயேச்சை  62  கம்யூனிஸ்ட் 62 உழவர் கட்சி 38 என்று மக்கள் வாக்களித்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கால்வலிக்க சீட்டுக் கேட்டு எங்கெங்கோ நிற்கின்ற நிலை ஏன் வந்தது என்பதை மட்டும்  ஆராய்ச்சி செய்வதில்லையே.

இராஜாஜி சென்னை மாகாண முதல்வரானார், பிரச்சனைகள் தொடர்ந்தன. போலிசார் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய   போராட்டத்தைக்கையாண்டது அவருக்கு எதிரானது

.புதிய கல்விக்கொள்கையை க்கொண்டு வந்த இராஜாஜி  சரியான கிடுக்கிப்பிடியில் மாட்டிக்கொண்டார். ஜாதியை பின்புறவழியாக்கொண்டு வருகிறார் இராஜாஜி எனப் பிரச்சாரம் தொடர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்று பொருளாதார நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த சூழல் நல்ல பள்ளிக்கூடங்கள் இல்லை. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. உபகரணங்கள்  எதுவும் இல்லை. எங்கும் பஞ்சம்.இராஜாஜி கொண்டுவந்த கல்வித் திட்டமோ தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டது.

வேறுவழியின்றி அவர் கொண்டுவந்த கல்விக்கொள்கை- தொழிற்பயிற்சி அவரையே  வெளியேற்றியது.

 

தெலுங்கு மொழி பேசும்  ஆந்திர மக்களோ தனி  ஆந்திரா மா நிலம் கேட்டுப்போராடினர் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணா விரதமிருந்து உயிர் விட்டார்.

இவை  அவர் வெளியேறப் போதுமானவையாக இருந்தன. இராஜாஜி  வேண்டியவர்க்கு  அறிவுரை சொல்லும் ஒரு  மூதறிஞர் ஆனார்.

‘தேவையான போது  இரட்சகரை நாடுவதும் வேலையானதும் இரட்சகருக்கு எதிராக மாறுவது தொன்று தொட்டு நிகழ்ந்துவருவதுதான். மனிதனின் பலவீனம்தான் சரித்திரத்தை மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறது  என்கிறார் மூர்த்தி.

இராஜாஜியைப்பயில்வது இந்திய அரசியலைத் தமிழக அரசியலை ஆழமாக விளங்கிக்கொள்ள உதவலாம். எந்த முன் முடிவும் வைத்துக்கொள்ளாது வாசகன் இராஜாஜியை அணுகினால் மட்டுமே  அது சத்தியப்படும்.

-----

No comments:

Post a Comment