Friday, July 1, 2022

குறிஞ்சிவேலன் 80


Tue, May 3 at 7:50 AM

செயற்கரிய செய்வார் பெரியர்.               

 

இனிய  நண்பர் ‘திசை எட்டும்’ மொழிபெயர்ப்புக்காலாண்டிதழின் ஆசிரியர்  குறிஞ்சிவேலனுக்கு வயது 80. தீபம் இலக்கிய இதழோடு மிக நெருக்கமாக இருந்தவர்.  மலையாளத்து வி.பி.சி நாயரின்’ முழுமையைத்தேடும் முழுமையற்ற புள்ளிகள்’ என்னும்  வித்தியாசமான மொழிபெயர்ப்புத்தொடரை தீபத்தில் எழுதி இலக்கியவாதிகளின் கவனத்தை ஈர்த்தவர்.   மாபெரும் இலக்கிய ஆளுமை தீபம் நா பார்த்தசாரதி அவர்களின் பேரன்புக்குப்பாத்திரமானவர். மலையாளமொழியைப்பயின்று அந்த மொழியில் உள்ள இலக்கியசெல்வங்களைத்தமிழுக்குக்கொண்டுதந்தவர்.

 எஸ்.கே பொற்றேகாட் எழுதிய விஷக்கன்னி நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தமைக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.  எம். டி.வாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம் நாவலை தமிழில் கொண்டுவந்தமைக்கு இலக்கிய உலகின் பாராட்டுதலைப்பெற்றவர்.

திசைஎட்டும் மொழிபெயர்ப்பு இதழை ஜூலை 2003ல் தொடங்கிய பெரிய  மனதுக்காரர். மொழிபெயர்ப்புக்காக ஒரு இதழினைத் தமிழ் மொழியில் தொடங்கிய சாஹசக்காரர். குறிஞ்சிப்பாடிக்கு அருகே உள்ள சிற்றூர் மீனாட்சிப்பேட்டையிலிருந்து இந்திய தேசத்து இலக்கிய ஆளுமைகளைத்தன்பக்கம் திரும்பிப்பார்க்கவைத்தவர்

அமரர் கி.ரா தான் திசை எட்டும் முதல் இதழை  நெய்வேலி புது நகரில்வெளியிட்டார். இந்து நடராஜன் பெற்றுக்கொண்டார்.

நல்லிகுப்புசாமி செட்டியார்  அன்புத்துணையோடு நல்லிதிசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருதினை ஆண்டுதோறும்  சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைத்தேர்ந்து வழங்கி வருபவர் குறிஞ்சிவேலன். நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களை  தமிழ் மண்ணில் அடையாளங்கண்டு மேடை ஏற்றிப்பெருமை படுத்தியவர். முதல் திசைஎட்டும்  விருது வழங்கும் விழாவைச்சொந்த மண்ணான கடலூரில் நடத்தினார். வங்கமொழிக்குப்பாலமாய் விளங்கிய  சு .கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்டது

இலக்கிய உலகில் சகோதர எழுத்தாளர்களை மொழிபெயர்ப்பாளர்களை கொண்டாடிய ஒரு ஆளுமை குறிஞ்சிவேலனைத்தவிர வேறுயாருமில்லை.

என்னுடைய ‘மறுபக்கம்’ சிறுகதைத் தொகுப்பு,’சில ஆய்வுகள் மதிப்புரைகள் விமர்சனங்கள்’ கட்டுரை நூல் வெளியீட்டுவிழா மற்றும் அறிமுகவிழா பல்லடம் மாணிக்கம் அய்யா முன்கையெடுக்க விருத்தாசலத்தில் 1995ல் நடந்த போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த குறிஞ்சிவேலன் அவர்கள்  என்னை குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகத்து  பேராசிரியர் சு.சம்பந்தம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தான் என்னுடைய முதல் நாவல் ‘மண்ணுக்குள் உயிர்ப்பு’ என்னும் நூலை மணியம் பதிப்பகம் வெளியிட்டு என்னை கெளரப்படுத்தியது. பிறகு சிறுகதைத்தொகுப்புக்கள் கட்டுரை நூல்கள் என என்னுடைய  புத்தகங்கள்  தொடர்ந்து வெளிவர  மணியம் பதிப்பகம் சிறப்பாக உதவியது.

விருத்தாசலம் எழுத்தாளர் அமரர் வே. சபாநாயகம்  எழுதிய ‘ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது’  என்னும் அவரின் முதல் புதினம் குறிஞ்சிவேலன் அவர்கள் தோழமை வழிகாட்டலால் மணியம் பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து வே. சபாநாயகம் எழுதிய  பல இலக்கிய நூல்களை மனியம் பதிப்பகம் வெளியிட்டு அவரைப்பெருமைப்படுத்தியது.

கண்மணி குணசேகரன் எழுதிய முதல் நாவல் ‘அஞ்சலை’. அதனையும் வெளியிட குறிஞ்சிவேலன் மணியம் பதிப்பகம் வழி அன்போடு உதவி செய்தவர். ஜீவகாருண்யனின்’ களரி’  என்னும் சிறந்த புதினத்தை மணியம் பதிப்பகம் வெளியிட்டது

இன்னும் இந்தப்பகுதி படைப்பாளர்களின் எழுத்துக்கள் அச்சு வாகனம் ஏற  குறிஞ்சிவேலன் பேருதவி செய்ததை எண்ணி எண்ணிப் போற்றுகிறோம்.

என்னுடைய புதினம்’ நெருப்புக்கு ஏது உறக்கம்’ தமிழக அரசின்( 2008 )விருதுபெற்றது இப்புதினத்தை குறிஞ்சிப்பாடி  அலமேலு   பதிப்பகம் வெளியிடத் துணையாக நின்ற பெருந்தகை குறிஞ்சிவேலனே என்பதை  இங்கு நிறைவோடு குறிப்பிடவிரும்புகிறேன்..

திசை எட்டும் மொழிபெயர்ப்பு இதழில் ‘திசை எட்டும் பரவ வேண்டிய கதைகள் என்னும் சிறப்புப்பகுதியை குறிஞ்சிவேலன் தொடங்கிவைத்தார். என்னுடைய ‘யாதுமாகி’ சிறுகதையைத்தேர்வு செய்து வெளியிட்டு என்னைப்பெருமைப்படுத்தியதும் என் நினைவில் வந்து நிழலாடுறது.

’கலைஞர் டிவியில் ’சிறப்பு விருந்தினர்’  நேர்காணல் நிகழ்ச்சிக்கு என்னை அனுப்பிவைத்த பெருமையும் குறிஞ்சிவேலனைச்சாரும்..

நெய்வெலி புத்தகக்காட்சி திசை எட்டும்  புத்தக விற்பனை அரங்கிலும், சென்னை புத்தகக்காட்சி திசை எட்டும்  புத்தக அரங்கிலும்  பங்கேற்றுப்பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு..

அண்மையில் எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களை பெங்களூரில் அவர் இல்லத்தில் சந்தித்துப்பேசிக்கொண்டு இருந்தோம் எழுத்தாளர் பாவண்ணன் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தார்.  விட்டல் ராவ்   குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள வெங்ககடாம்பேட்டை கிருஷ்ணன் கோவிலுக்கு குறிஞ்சிவேலன் அழைத்துப்போய்க் காட்டிய நிகழ்வை அற்புதமாய் விவரித்தார். வடலூர் வள்ளல் ராமலிங்கரின் ஞானசபைக்கும் அழைத்துச்சென்றதாகக்குறிப்பிட்டார். என்னையும் குறிஞ்சிவேலன் அவர்கள் அந்த புராதன  வைணவத்திருக்கோவிலுக்கு அழைத்துச்சென்று காட்டியமை மறக்கமுடியாத  நிகழ்வாகும்.

கிட்டத்தட்ட இருபதாண்டுகளாகத் திசை எட்டும்  மொழிபெயர்ப்பிதழ் குறிஞ்சிவேலன் அவர்களின் இடையறா முயற்சியால் சீரும் சிறப்புமாகவெளிவந்துகொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் திசை எட்டும்  இலக்கிய விழாக்களை தமிழமெங்கும் பெரிய நகரங்களில் நடத்தி இலக்கிய ஆளுமைகளை அழைத்துப்பேசவைத்து கெளரவம் செய்திட்ட நிகச்சிகள் எத்தனையோ.

சாகித்ய அகாதெமியார் செய்யவேண்டிய மொழிப்பணியை, ஒரு தேசியப்பணியை  குறிஞ்சிவேலன் அவர்கள்  தாம் ஒருவராகவே நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் உற்ற தோழமை உதவியோடு நிறைவேற்றிக்கொண்டுவருவது போற்றிப்பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்.

குறிஞ்சிவேலன் துணைவியார்காந்திமதி. அய்யாவைப்பார்க்க அவர் இல்லம் செல்லும்பொதெல்லாம் இன்முகத்தோடு உபசரித்த சகோதரியாவார்.குறிஞ்சிப்பாடி ரயில் நிலைய நிறுத்தத்திலிருந்து மீனாட்சிப்பேட்டை அவரின் இல்லம்  செல்ல இரண்டு  கிலோமீட்டருக்குள்ளாக நடக்கவேண்டிவரும். நடந்த களைப்பே தெரியாமல் விருந்து உபசரித்து நிறைவடையச்செய்வார் அந்தத்தோழியர்.  குறிஞ்சிவேலனின் மக்கட்செல்வங்கள் அவரோடு இணைந்து இலக்கியப்பணி ஆற்றிவருவதும் மகிழ்ச்சிதரும் விஷயங்களாகும்.

நான் தொலைபேசித்துறையில்  படைப்பாளிகள் நிறைந்த விருத்தாசலத்தில் இருபதாண்டுகள் பணியாற்றினேன். கடலூரில் 13 ஆண்டுகள் பணிய்யாற்றிப்பின் சென்னைக்கு வந்தேன். கடலூர் மாவட்டத்துக்குள் பணியாற்றியபோது  மீனாட்சிப்பேட்டை அவர் இல்லம் செல்வதும் திசைஎட்டும் பற்றி  விவாதிப்பதும் அவ்வப்போது நடைபெறும்.

ச.சிவராமன் வேர்கள் ராமலிங்க, ஜீவகாருண்யன், பல்லவிக்குமார் பாரதிக்குமார்,ஆயிஷா நடராஜன், செல்வம், கசப்பு குப்புசாமி என அன்பு நண்பர்கள் கூடுவோம். எல்லோருடனும்  சிரித்த முகத்தோடு பழகி இலக்கியத் தோழமையைப்பகிர்ந்துகொண்ட பெரிய மனதுக்காரர் குறிஞ்சிவேலன் அவர்கள்.

வையவனின் தாரணி பதிப்பகம் வெளியிட்ட ‘உலகச்சிறுகதைகள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை அவருக்குக்காணிக்கை ஆக்கினேன்.என் மனம் நிறைவுற்றது.

குறிஞ்சிவேலனுக்கு அறுபது ஆண்டு நிறைவு குறிஞ்சிப்பாடியில் சிறப்பாக நடைபெற்றது. அப்போதும் ஒரு இலக்கிய மலர் வெளியிடப்பட்டது. அதனில் பட்டுக்கோட்டை இலக்கியச்சிறகு  ஆசிரியர் மு. ராமலிங்கம்  எழுதியக்கட்டுரை  நினைவுக்கு வந்துபோகிறது.  ஐந்து செண்ட் நிலம், முழுமையைத்தேடும் முழுமையற்றபுள்ளிகள் இவை மு.ராமலிங்கத்திற்கு மிகவும் பிடித்த  குறிஞ்சிவெலனின் மொழிபெயர்ப்புக்களாகும்.

மொழிபெயர்ப்பு பற்றித் ’ தமிழ்ப்பல்லவி ’இதழுக்கு அளித்தபேட்டியில் குறிஞ்சிவேலன் இப்படிக்குறிப்பிடுகிறார்.

‘மூலமொழியிலுள்ள வரிகளை மொழிமாற்றம் செய்வதல்ல மொழிபெயர்ப்பு. மூலமொழியிலுள்ள ஆத்மாவை அப்படியே மாற்றும் மொழி( Target Language) க்குக்கொண்டுவரவேண்டும். மொழியாக்கம் என்பது நாற்றைப்பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவு செய்வது போன்றதாகும்’

தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு வரலாறு வரையப்படும்போது குறிஞ்சிவேலனின் சாதனைகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

‘செயற்கரிய செய்வார் பெரியர்.

--------------------------------------------------

 

 

 

 

 

 

 




No comments:

Post a Comment