Sunday, July 31, 2022

கோவி ஜெயராமனின் சடையப்பவள்ளல்

 

 

கோவி. ஜெயராமனின்  சடையப்ப வள்ளல் ஆய்வு        -எஸ்ஸார்சி

சடையப்ப வள்ளல் (கம்பர் காவலர்)  என்ற தலைப்பிட்டு ஒரு ஆய்வு நூலை கவிஞர் கோவி. ஜெயராமன் படைத்துள்ளார். கோவி. ஜெயராமன் ஒரு மார்க்சியர். தொழிற்சங்கப் பொறுப்பக்கள் பல  ஏற்றுப்பணியாற்றியவர். தமிழ்ப் பற்றாளர்.  வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன் என்று முழங்கிப் பாட்டாளி சமூகத்தோடு தன்னை அடையாளம் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகள் மீது  ஈடுபாடு உடையவர் 

 வள்ளலார் ஒரு சமூக ஞானி என்னும் ஒரு நூலை  முன்னம் ஆய்வு நோக்கில்  எழுதியுள்ளார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் குறித்த வரலாற்று நூல் ஒன்றையும் அண்மையில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள் தியாகம்  குறித்து ஈடுபாடுடையவர். அஞ்சலை அம்மாள் நினைவு போற்றப்படவேண்டும் என்பதில்  மிகுந்த கவனம் கொள்பவர். மகாகவி கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் குறித்த ஆய்வு நூல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

கம்பன் பிறந்த தமிழ் நாடு என்று மாகவி பாரதி பெருமையோடு பேசுவார் தமிழ்.இலக்கியங்களில் கம்பராமாயணம் சிறப்பகப்பேசப்படுவது. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடுமென்பது வழக்கு. கம்பனை ஆதரித்துப் போற்றியவர் திருவெண்ணய்நல்லூர் சடையப்ப வல்ளல். அந்த சடையப்ப வள்ளல் குறித்த ஒரு ஆய்வே இந்நூல்

.கம்பர் வாழ்ந்த காலம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு என்பதை உயர்த்திப்பிடிக்கிறார் நூலாசிரியர். கம்பர் அடிப்பொடி சா. கணேசன் தொண்டை மண்டல சதகத்தை ஆதாரமாகக்கொண்டு கம்பர் காலத்தை நிறுவுவதைக் குறிப்பிடுகிறார்.

‘எண்ணிய சகாத்த மெண்ணூற்றேழின் மேற் சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்

பண்ணிய விராமகாதை பங்குனி யுத்தரத்திற்

கண்ணிய வரங்கர் முன்னே கவிரங்கேற்றினானே’

 என்பதுவே அந்த தொண்டை மண்டல சதகப்பாடல்.

ஜெயராமன் தனது கள ஆய்வில்  மயிலாடுதுறையை அடுத்த தெரெழுந்தூர் ஆமருவியப்பன் பெருமாள் கோவிலில் கம்பரும் அவரது மனவியும் சிலையாக வைக்கப்பட்டுள்ளதைக்குறிப்பிடுகிறார். அக்கோவிலின் சற்று அருகே ‘கம்பர் மேடு’ என்னும் தொல்லியல் துறையின் கீழ் உள்ள  மேடானபகுதியையும், உவச்சர் குலத்தில்( கோவில் பூசாரி) பிறந்த கம்பர் பூசித்த காளி கோவிலையும் பற்றி விவரமாகக்குறிப்பிட்டுள்ளார்.

மேலையூர் மாரியம்மன் கோவிலில் கம்பர் வணங்கிய கம்பர் விநாயகர் சன்னதி, கம்பருக்கு கவிதை வரம் தந்த மாகாளி என்று பேசப்படுகிற அங்காளம்மன் கோவில் என்று கம்பர் புழங்கிய இடமெல்லாம் கோவி.ஜெயராமன்பார்வையிட்டு வந்திருக்கிறார்.

சடையப்பவள்ளல் வாழ்ந்த இடம் இது தான் என்று அரிதியிட்டு சொல்லமுடியாமல் போய்க்கொண்டே  இருக்கிறது. விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூரா  அல்லது மயிலாடுதுறை அருகே இருக்கின்ற வெண்ணெய்நல்லூரா என்கிற விவாதம் வருகிறது.

சோழமண்டலச் சதகத்தில் புதுவைச்சடையன், புதுச்சேரிக்கொடையான் சேதிராயன்  என்கிற சுட்டுதலும் கம்பரின் தனிப்பாடலில் புதுவையான் என்கிற குறிப்பும் சடையப்பவள்ளலின் ஊரை வேறு வேறு இடங்களுக்கு நம்மை ஆற்றுப்படுத்தி  திகைக்க வைக்கின்றது..

திருவாரூரை ஒட்டிய அடியக்கமங்கலம் புதுச்சேரி,கும்பகோணத்தை அடுத்த புதுச்சேரி, புதுச்சேரி மாநிலத்து சேதுராயன்பட்டு என்பனவும் சடையப்பவள்ளலின் ஊர்கள் என்கிறபடி ஆய்வுப்பாதை தொடர்கிறது.

கம்பர் காலத்தில் வெண்ணெய்நல்லூர் என்று அழைக்கப்பட்டதே காலப்போக்கில் கதிராமங்கலமாக மாறிப்போனது என்கின்றன்றனர்  இப்படி மக்கள் செய்தியும் வருகிறது.

உ. வே. சா   மயிலாடுதுறை அருகேயுள்ள திருவெண்ணெய்நல்லூரைப்பார்வையிட்டதாகவும், அந்த ஊர் சடையப்பபிள்ளை கிராமம் என்று வழங்கப்பட்டதாகவும் குறிப்பு எழுதியுள்ளதை ஜெயராமன் சுட்டிச்செல்கிறார்.

ஈரோடு மாவட்டம் தென்முகம் வெள்ளேடு என்ற ஊரிலும் இராசாக்கோவிலிலும் சடையப்பருக்கு சிலைகள் உள்ளன. சடையப்பர்  கொங்கு வேளாளக்கவுண்டர் என்று மொழிவாரும் உளர்.

‘சடையப்பர் இல்லையேல் ஒரு கம்பர் இல்லை,கம்பர் இல்லையேல் கம்பராமாயணம் இல்லை.கம்பராமாயணம் இல்லையேல் தமிழ்ச்சமூகம் ஒருபெரும் இதிகாசத்தை இழந்திருக்கும்’ என்று கூறி, தமிழக அரசின் கடமைகள் பலவற்றில்  கம்பரைக்காத்த சடையப்ப வள்ளல்  வாழ்ந்த ஊரை ஆய்ந்து  உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஒன்று என நூலாசிரிய்ர்  முடித்துள்ளார்.

ஜெயராமனின்  தொடர் மனிதத்தேடலின் மாண்பாக இவைகளை வாசிக்கவேண்டும்.

கம்பரும் சடையப்ப வள்ளலும் தமிழ் உள்ளளவும் வாழ்வர்.   வள்ளல்  சடையப்பர் குறித்த சரியான வரலாறு சமைப்பதுவும் நமது கடமை.

-------------------

 

 

 

 

 

 


No comments:

Post a Comment