Tuesday, August 11, 2026

வகுப்பறைக்கதைகள் -விட்டல்ராவ்

 

வகுப்பறைக்கதைகள்   விட்டல்ராவின்  மனப்பத்தாயம்        

 

 முப்பத்தொன்பது  பகுதிகளைக்கொண்ட ஒரு  சுவாரசியமான கட்டுரைத் தொகுப்பு. பள்ளிக்கூடப் பருவத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை மீண்டும்  மீட்டிப்பார்க்கிறார் விட்டல்ராவ். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்திற்கு  எழுத்தாளர் பாவண்ணன் முன்னுரை தந்துள்ளார். மேகங்கள்  உலா வரும் ஆகாயப் பின் புலத்தில்  ஒரு  பேனாவின் நிப்பை  மேலட்டையில் பளிச்சென்று  கொண்டிருக்கிறது இப்புத்தகம்.  புத்தகப்பின் அட்டை யோ  உள்ளடக்கம் குறித்து விவரமான குறிப்பு தருகிறது  இப்படி,

’வகுப்பறைக்கதைகள்- ஒரு மனிதனின் பள்ளி வாழ்க்கையின் முதல் வகுப்பிலிருந்து பள்ளிப்படிப்பின் இறுதிவரை உள்ள காலத்தில் அவன் பெரும் பல்வேறு அனுபவங்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகள். இவை ஆசிரியரின் சொந்த அனுபவ ரீதியான கதைகள். இக்கதைகள் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், சக மாணவர்கள் பியூன் ஆகியவர்களையும் உள்ளடக்கியவை. வகுப்பறைக்கதைகள் வகுப்பறையிலிருந்து வெளி உலகத்திற்கு, வெளி உலகத்திலிருந்து வகுப்பறைக்கும் போய் வருபவை.’

பாவண்ணன் தனது முன்னுரைக்கு ‘அது ஒரு வசந்த காலம்’  என்கிற  ஆகப்பொருத்தமானத் தலைப்பிட்டு எழுதுகிறார். விட்டல்ராவின் வகுப்பறைக்கதைகள் ஒரு காலகட்டத்தைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்க்க வைக்கின்றன. இப்போது இருப்பதைப் போலவே அந்தக் காலத்திலும் மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பாடம் நடத்திய ஆசிரியர்கள், தன் வருமானத்துக்குரிய வழியைப் பெருக்கிக்கொள்ளும் விதமாக டியூஷனுக்கு வருமாறு மாணவர்களுக்கு வலை வீசும்  ஆசிரியர்கள் என இருபெரும் பிரிவுகளாக  இருந்திருக்கிறார்கள். சூழல்களும் வாழ்க்கை முறைகளும் மாறியிருக்கிறதே தவிர, மனிதர்கள் மாறவில்லை என்பதை  இவண் பாவண்னன் உரக்கச்சொல்கிறார்.

 புக் டே இணைய தளத்தில் சென்ற ஆண்டு வெளிவந்த கதைகள் இவை. இவற்றைப் பாவண்ணன் கட்டுரைத் தொடர் என்கிற வகையில் சரியாகவே  சேர்க்கிறார். விட்டல்ராவின் தந்தை ஒரு அரசு ஊழியர். பணியிடை மாற்றல் என்பது தவிர்க்க முடியாதது. ஆக விட்டல் ராவும் தனது பள்ளித்தலத்தை மாற்றிக்கொண்டே இருக்க  அவர்  படித்த பள்ளிகளும்  தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தன.

கட்டுரையின் தலைப்புகள் வாசகனைக்  கிறங்க  வைக்கின்றன.  விட்டல்ராவோடு கதை பேசிக்கொண்டிருந்தால்  ஒருவருக்குப் பசியும் எடுக்குமா என்பது எனது அபிப்ராயம்.  கேட்டார் பிணிக்கும் தகைத்து அவரிடை  உரையாடல்கள்.

 இப்புத்தக் கட்டுரைத்தலைப்புகள் சில.

லூர்துமேரி டீச்சர், காந்திக்கணக்கு, பெஸ்ஸி டீச்சரும் அன்வரும், வால் முளைத்த சாமியார், அம்மாங்க ஆசுபத்திரி, டிராயிங் மாஸ்டரின் கோட்டு ,குட்டிக்குறளோன், இராப்பள்ளிக்கூடம், ஒய்யாரி பாமாவும் கீலு குர்ரமும்,   பெரியசாமி சின்னசாமி, இஞ்ஞாசிரியர் கூடமும், தூங்குமூஞ்சி மரமும், சோடா கலர் டீ பால் காபி, குரூப் போட்டோ.  எத்தனை எள்ளல் துள்ளல் பெயர் சூட்டுவதில்.  வாசகர்க்கு நாஞ்சில்நாடனின் எழுத்துகள் மனதில் நிழலாடலாம்.

பள்ளிகளில் நிகழ்ந்தவற்றைத் தத்ரூபமாகத் தனது படைப்பில் கொண்டு தருகிறார் விட்டல்ராவ். தனது மனப்பத்தாயத்திலிருந்து  ஒவ்வொரு நிகழ்ச்சியாக வாசகர்க்குச் சுவைக்கத் தருகிறார்.  லூர்துமேரி டீச்சர் என்கிற தலைப்பில் முதல் கட்டுரை வருகிறது. கிறித்துவ மக்கள் நிர்வகிக்கும் கல்வி நிலையங்களில் அனேகம் கற்றிருக்கிறார் விட்டல்ராவ்.  லூர்துமேரி டீச்சராயும்,  லூர்துசாமி ஆபீஸ் பியூனாயும் இருப்பதால்  லூர்து என்று மொட்டையாய்ச் சொல்ல ஆணா பெண்ணா என்று பள்ளிச் சிறார்களுக்கு ஐயம் எழுகிறது என்பதைச் சுவைபடச் சொல்கிறார் விட்டல்ராவ்.

வலது கையால் சுற்றி  வளைத்து  இடது காதைத்தொட்டு  முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டவர் விட்டல்ராவ். வயது ஆறுக்கு மேல் என்பதற்கு அதுவே  அன்று சாட்சியாக நின்றிருக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்குப்  பவுடர் பால் வழங்கிய காலம். பள்ளிக்கு கொண்டு போன  பித்தளைத் தம்பளரைத் தொலைத்து விட்டார் விட்டல்ராவ். தம்பளர்  இல்லாத விட்டலுக்குப் பால் பவுடர் மடித்துக் கொடுக்கிறார். ‘போய் வீட்ல பால் செஞ்சி குடி’ என்று அன்போடு சொல்கிறார் லூர்து மேரி டீச்சர். ஆசானும் அவரே அம்மாவும் அவரே.

காந்தி கணக்கு என்பது இரண்டாவது கட்டுரை. ஓமலூரில் பேருந்து நிலையம் அருகே  காந்தி பவன் என்கிற ஓட்டல் பற்றிய கதை. அரசாங்க உத்யோகம் பார்ப்பவர்கள் அந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு   கணக்கு நோட்டில் குறித்துவிட்டுச்  சம்பளம் வரும்போது பணம் கொடுப்பார்கள். விட்டல்ராவ் தந்தையும் அப்படியே செய்வார். விட்டல்ராவ்  அப்பா கொடுத்த ஒரு சீட்டு எடுத்துக்கொண்டுபோய் அந்த காந்தி பவனில் கொடுத்து   டிபன் வாங்கி வருவார். தலைமை ஆசிரியர் இதனை அறிந்துகொண்டு  அவரும்  விட்டலிடம்   ஒரு சீட்டு கொடுத்து டிபன் வாங்கி வரச்சொல்கிறார். இப்படி,

‘’வாப்பா! ராயர் மகன் தானே ? ஒட்டல்காரருக்கு உன்னை நல்லா தெரியும். இந்த சீட்டைக் குடுத்து இதில் இருக்கிற மாதிரி பார்சல் வாங்கிட்டு வந்து  குடுத்துட்டு வீட்டுக்குப் போ. இப்ப இல்லே  ஸ்கூல் விட்டதும்’

காந்தி பவன்  முதலாளிக்கு கவனப்பிசகுமுண்டு. தலைமை ஆசிரியர் சீட்டின் கணக்கை அப்பாவின் பக்கத்திலும் அப்பாவின் கணக்கை ஆசிரியரின் பக்கத்திலும் அவ்வப்போது இடம் மாற்றி வரவு வைத்துவிடுவார் என்கிற  சிதம்பர ரகசியத்தையும்  வாசகர்க்குப் பகிர்கிறார் நூலாசிரியர்.   தந்தைக்கு வேறு ஊருக்கு   மாற்றல் வருகிறது. காந்தி பவன் பாக்கியைத் தீர்க்காமலேயே  தந்தை ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறார். குழந்தைகளுக்கு  டீ சி வாங்க  அவர்   பள்ளிக்கு வந்தால் கொஞ்சம் நினைவு படுத்தச்சொல்கிறார் காந்தி பவன் முதலாளி.  விட்டல்ராவின் அப்பாவோ  டீ  சி  வாங்க ஓமலூருக்குப்போகவில்லை. டீ. சி இல்லாமலேயே    இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே  அவரை மூன்றாம் வகுப்பிலும் அக்காவை நாலாம் வகுப்பிலும்,அண்ணனை  ஐந்தாம் வகுப்பிலும்  தந்தையால்  சேர்க்க முடிந்தது. பள்ளி உரிமையாளருக்கு வயலில் கிணறு தோண்ட  அரசாங்கக்கடன்  வேண்டியிருந்தது. விட்டலின் தந்தையே  அந்தக்கடன் வழங்கும்  அரசாங்கப்பணிக்குப் பொறுப்பு என்கிற சூட்சுமத்தையும்    விட்டல்  வாசகர்க்குச் சொல்லி  விடுகிறார்.

பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் என்கிற கட்டுரையில்  ஸ்ரீராமவித்யாசாலா’ என்கிற  ஸ்கூல் பற்றி செய்தி வருகிறது.  தர்மபுரியில் இருந்த அந்த பள்ளிக்குக்கூடத்துக்கு   விட்டல்ராவ் என்கிற   வேறு ஒரு  மனிதர்தான் உரிமையாளர்.  அப்பள்ளிக்கு நாழி ஓடு  போடப்பட்ட கூரை.  நாழி ஓடு என்றாலே தேள் வாசம் நிச்சயம்.  தேள்கடிக்கு வைத்தியம் சொல்கிறார் விட்டல் ராவ்.

‘தேள்கடி விஷத்தை இறக்க அப்போது இரண்டு வழியைக் கடை பிடிப்பார்கள். எதிர்வீட்டு  சாம்பசிவ ஜோசியர் தன் மேல் துண்டைச் சுழற்றிச் சுழற்றிப் பாடம் போடுவார். மற்றொரு  எளிமையான வழி உடைந்த கிராமபோன் ரிக்கார்டு தட்டின் சில்லை நீரில் நனைத்து உராய்ந்து,  கடிவாயில் வைத்தால் விஷத்தை உறிஞ்சிவிடும். எங்கள் வீட்டில் உடைந்த கிராம போன் சில்லுகள் டப்பா நிறைய இருக்கும்’

வியந்துதான் போகிறோம் எத்தனை நகைச்சுவை விட்டல்ராவின் எழுத்துகளில்.

நான்காவது கட்டுரை விட்டல்ராவின் அண்ணன் ராமு ஓடிப்போன கதை.  பள்ளிக்குப் பணம் கட்ட அப்பா கொடுத்த ஒரு ரூபாய்  பணத்தை ராமுத் தானே எடுத்துக்கொண்டு ‘ ஜூது’( சூதுதான் இப்படி ஆகியிருக்கிறது)  என்கிற அதிர்ஷ்டப்பொட்டலம்  நான்கு வாங்கிவிடுகிறான். அதனில்  ஒரு மிட்டாயும் ஒரு நம்பரும் இருக்கும். அதனுள்  ஒளிந்திருக்கும்  நம்பர்  கிடைப்பதற்கு  ஏற்ப வாங்கியவர்க்குக்   காசு கொடுப்பார்கள்.  அனேகமாய் யாருக்கும்  அந்தக்காசு  வராது.   ராமு  பள்ளிக்குப்பணம் கட்டவில்லை. வீட்டிற்கு வந்தால் தந்தை அடிப்பார். ஆகவே   ராமு ஓடிப்போகிறான். ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்கிறான். தலைமை ஆசிரியர் துக்காஜிராவ் ஓட்டலில்   போண்டா சட்னி பரிமாறும்  ராமுவைப்பார்த்து அதிர்ந்து போகிறார்.  வீட்டுக்கு இழுத்துக்கொண்டு வருகிறார்.  அத்தோடு ராமுவின் பள்ளிப்படிப்பு  முடிந்து போயிற்று. பள்ளி நிர்வாகிக்குக்  கிணறு வெட்டக் கடன் உத்தரவான  நற்செய்தியை  விட்டல்ராவின் தந்தை  அவருக்குச் சொல்கிறார். எத்தனை யதார்த்தமாய் விஷயங்கள்  இவண் அவிழ்ந்து  போகின்றன.

தர்மபுரியிலிருந்து மேச்சேரிக்கு விட்டல்ராவின் குடும்பம் மாற்றலில் வருகிறது.  விட்டல்ராவின் தந்தைக்கு ஃபிர்கா சப்ளை ஆபிசர் உத்யோகம்.  அந்த உத்யோகத்தை வைத்து அவரை  எஃப் ஏ ஓ  என்றழைப்பார்கள். வெகுஜனம் அவரை ’ எப்பேசு ‘ என்றழைத்துப் பெருமை கொள்கிறது. எப்பேசு என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும்  இப்புத்தகத்தில் வாசிக்கிறோம்.

  வால்முளைத்த சாமியார் என்கிற கட்டுரை  அந்தக்காலத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாய்ப்பேச்சிக்கூத்தடிக்கும்  சாதாரண மக்களின் உணர்வுகள் பற்றி விரிவாகப்பேசுகிறது.‘யாரோ வால் முளைச்ச சாமியாராம். நடு ராத்திரியிலே  வருவாராம்’ இதுதான் பீதியைக்கிளப்பும் பேச்சாக மேச்சேரியைப் போட்டு உலுக்கிக்கொண்டிருந்தது.

‘வால் முளைத்த சாமியார் வருகிறார்- இருட்டினதும் வருவார்.கடிகாரம் காட்டும் காலக்கணக்கில் வரமாட்டார். அந்த  வருகை மனோவேகக் கணக்கிலானது. வால் முளைத்த சாமியார் குறித்து  கூடுதல் விபரங்கள் சொல்லப்படுகின்றன. வால் முளைச்ச சாமியாரைப்பார்த்து விட்டால்  பார்த்தவர்களுக்குக்  கண்ணே தெரியாதாம்.  விடை பெற்றுக்கொண்ட சமூகத்தில்  மின்சாரம் இல்லாத  காலத்து இரவுகள்  பிரசவித்த பேய்க்கதைகள் எத்தனையோ.

பாட்டு வாத்தியார் என்கிற கட்டுரை  பள்ளிக்கூட வகுப்பறையில்  டிராயிங், இசை  கைவினைப் பயிற்சி, ஒழுக்கப் பாடம் இவை எல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது பற்றிப் பேசுகிறது. பாட்டு வாத்தியார்  நாலரை அடி உயரமிருப்பார். பப்ளிமாஸ் தலை,. மிளகும் உப்பும் கலந்த தலைமுடியை  நுணுக்க வெட்டியிருந்தார். கருப்பும் குண்டுமான மேனியை  முழுக்கைச்சட்டையும்  பழுப்பு வேட்டியும் அலங்கரித்தன. இப்படி விட்டல்ராவ்  அடுக்கிக்கொண்டே போகிறார்.

மரிய சூசையின் இசை என்று வருகிறது ஒரு கட்டுரை. அதன் துவக்கத்திலேயே ஒரு செய்தி சொல்லப்படுகிறது.  பள்ளிக்கு விடுமுறை விடுகிறார்கள்.  கிடைக்கும் சுவாரசியமான செய்தி.

‘நம்ம ராஜா செத்துப்போயிட்டாரு. கொஞ்ச வருசத்துக்கு முன்னே நமக்கெல்லாம் வெள்ளக்கார ராஜா ஆறாம் ஜார்ஜுன்னு இருந்தாரு. அவரு காலத்திலே நாம சுதந்திரம் வாங்கினோம். அவருதான் நேத்து  செத்துப்போயிட்டாரு. அதனால நமக்கு லீவு’

சேலம் மாடர்ன் தியேட்டரஸின் ‘மந்திரகுமாரி’ அதனில் வரும் பாடல் ‘உலவும் தென்றல் காற்றினிலே’.  இந்தப்பாட்டில்  காதல்னு  எங்கெங்கே வருகிறதோ அதனை அன்புன்னு மாத்திப் போட்டுப் பாடுங்க என்கிற கடுமையானஉத்தரவு தருகிறார்  தலைமை ஆசிரியர். அதனைப் பாட்டு வாத்தியார் சுந்தரம் ஏற்கிறார். மரியசூசை  தனது  அற்புதக்குரலால் பாடுகிறார்.  இங்கே மறைந்த  நண்பர்  பிரபல   எழுத்தாளர் விருத்தாசலம்  வே. சபாநாயகம்  எண்பதாம் ஆண்டு நிறைவு விழா மலர் நினைவு எனக்கு வந்தது. அம்மலரின் மேலட்டையில் ஒழுக்க சீலர் வே. சபாநாயகம் என்று பெயர் போட்டிருப்பார்கள். அவர் தலைமை ஆசிரியராய் இருந்த காலை பள்ளியில்  அவர் காட்டிய ’கறார் ஒழுக்கமே’  இதற்குக்காரணம் என்றார்கள்.  சபா ஒரு கணித ஆசிரியர் நடை உடை பாவனையில் எப்படி இருக்கவெண்டுமோ அப்படி இருந்தவர்.  ஒரு ஆசிரியரை  அத்தனை   ஆகிருதிகளோடு நான் இதுவரையில் சந்திக்கவே வாய்க்கவில்லை.  சனங்களின் கதை  வழங்கிய கவிஞர் பழமலயின்  பள்ளி ஆசான் எழுத்தாளர்  வே.சபாநாயகம்.

ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி வருகிறது. அதனில் சின்னக்கண்ணு என்கிற மாணவி அபிநயம் பிடித்துப் பாடுகிறாள். அரசு ரேஷன் கடையைக் கோதுமையைக் கேலி செய்து வரும் பாடலது.

‘எஞ்சாமி சொக்கலிங்கம் பேத்தியளே

எஞ்சாமி ரேஷன்கடை மாவெடுத்து

ரேஷன் கடை மாவெடுத்து

எஞ்சாமி எட்டு நாளா ரொட்டி சுட்டு

எட்டு நாளா ரொட்டி சுட்டு

எஞ்சாமி எட்டுநாளா ரொட்டியே தின்னு

எட்டு நாளா ரொட்டியே தின்னு

எஞ்சாமி வவுத்து நோவால் கஷ்டப்பட்டு

வவுத்து நோவால் கஷ்டப்பட்டு

எஞ்சாமி டாக்டர்கிட்டே காட்டப்போனா

டாக்டர்கிட்டே காட்டப்போனா

எஞ்சாமி ஆப்புரேசன் பண்ணச்சொன்னார்

டாக்டர் ஆப்புரேசன் பண்ணச்சொன்னார்.

இன்றைக்கும்   இந்தப்பாடலை பள்ளி நிகழ்ச்சி ஒன்றில்  பாடினால் ஏற்பாடு செய்த  ஆசிரியரின் கதி அதோகதிதான்.

பதினெட்டாவது கட்டுரை ‘குட்டிக்குறளோன்’.   அரூர்  நகரத்து  ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியச் செட்டியார். அவர் உருவம் பற்றி விட்டல் ராவ் விவரிக்கிறார்.

‘விரைப்பாக இஸ்திரி மடிப்பு கொண்ட வெள்ளைக்கால் சட்டைக்கு ஏற்ற சந்தன நிற மேனியின் தூக்கலான வழுக்கை. வழுக்கையில் சங்கமித்த பரந்த நெற்றியில் துலங்கும் சின்ன சந்தனப்பொட்டு. சிறு கூன் போட்ட உடல்’

தமிழாசிரியர் சுகவனம் சிவப்பிரகாசனாருக்கு ‘ குட்டிக் குற்ளோன்’ என்ற பட்டப்பெயுர் உண்டு. ஈரடிகளாலான திருக்குறட்பாக்கள்  அனைத்தையும் சிவப்பிரகாசனார் ஒரேயொரு அடியில் சுருக்கி இயற்றி, குட்டிக் குறள் எனத்தலைப்பிட்டு வெளியிட்டார். ஆகவே  சேலத்தில் அவருக்குக் குட்டிக்குறாளோன் என்கிற பட்டப்பெயர்  வழங்கப் பட்டது.

கானுயிர் என்னும் பத்தொன்பதாவது கட்டுரையில்

இலந்தைப்பழ வடை செய்வது எப்படி என்ற குறிப்பு வருகிறது. ‘ படிக்கணக்கில் விலைக்கு வாங்கி வருவார் அப்பா. இலந்தைப்பழங்களை கொட்டையோடு உரலிலிட்டு இரும்பு உலக்கையால் நன்றாக இடித்துக் கசக்கி அத்தோடு மிளகாய் சேர்த்து இடித்து பெருங்காயம் உப்பு கலந்து வடைகளாகத் தட்டித் தட்டி  மூங்கிற் சிப்பம், பாய் மீது பரப்பி  சுக்காய்க் காயவிடுவாள் அம்மா. வெயிலில் வட வடவென உலர்ந்த பின் பழைய பானைகளில் போட்டு வைத்துவிடுவாள். ஒரு மாதம் போனதும் எடுத்துச் சாப்பிட நன்றாக இருக்கும் என்பாள். அவ்வளவு நாள் யார் விட்டு வைப்பார்கள். காயும்போதே காலியாகிவிடும்’

பாட்டுப்போட்டி என்று தலைப்பிட்டு வரும் கட்டுரை வேறு ஒரு சுவாரஸ்யத்தைச் சொல்கிறது. பாட்டுப்போட்டி பள்ளியில் நடக்கிறது.

பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே வும், நெஞ்சு பொறுக்குதில்லையேவும், ஒன்றுக்கு மேற்பட்ட உயர் வகுப்பு   ஆண் பெண்களால் பாடப்படவிருந்தன. போட்டி நாளன்று  மூன்று உயர் வகுப்பு மாணவிகள் குரல் மாறி, லயம் மாறி, ராகம் கெட்டு  வார்த்தை மறந்துபோய்த் தவித்து  ஒரு சொல்லுக்கு  வேறொரு சொல்லை வைத்து  எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயியில்  பாட்டைக் கிளப்பி விட்டு,,  போகப்போக  அடுத்து உயரம் போகையில்  முடியாமல்   குரல் தாழ்த்தி ஸ்ருதி  இறங்கி , பாட்டையும் ஏட்டையும்  கெடுத்து  உருப்படிகள் சிதறி இருந்தன’

இதனை  வாசிக்கும்  தருணம் எத்தனை இசை அறிவு விட்டல்ராவுக்கு என நாம்  பிரமித்துப் போகிறோம்.

ஒய்யாரிபாமாவும் கீலு குர்ரமும் என்று வருகிற்து ஒரு கட்டுரை.

 ஒய்யாரி பாமா என்கிற தெலுங்கு படம் பற்றி ச்சொல்லும்போது  விட்டல்ராவ் அஞ்சலியின் கவர்ச்சி நடனத்திற்கு முன்னால்   நாகே்ஸ்வர ராவின்  சாகசமெல்லாம் ஒன்றுமில்லாமல் போகிறது என்கிறார்.. மற்றுமொரு தெலுங்குப் படம்  கீலு குர்ரம்.  தமிழில் சொன்னால் ‘ மந்திரக்குதிரை’  இதனில் அஞ்சலி தேவி  நள்ளிரவில் அரசரின் யானையை அடித்துச்சாப்பிடும்  பூதமாய் நடிக்கிறார். இணை நடிப்பு  இங்கும் நாகேஸ்வர ராவ் தான். விட்டல்ராவ் வசித்த இடங்களில் தெலுங்கர்கள் அதிகம். ஆகத்தான்  இப்படி இயல்பாய்  வருகிறது தெலுங்குப்பட    விமர்சனம்  என்பதனையும்  நாம் அசைபோடலாம்.

’எழுத்துக்கூலி ’ என்கிற கட்டுரையில் விட்டல்ராவ் நாள் ஒன்றுக்கு  எட்டணா பெற்றுக்கொண்டு ஒரு வக்கீலிடம் குமாஸ்தா வேலை பார்த்த செய்தியை ச் சொல்லிப்போகிறார்.  பின்னொரு கட்டுரையில்  ‘ ஊசலை   உண்பது வறுமை.   வறுமை எனக்குப் பழகிப்போன ஒன்று.  பசி நேரத்துக்கு  ஊசிப்போனதும்  பரவாயில்லை என்ற கணக்கு. பெரும்பாலும் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு  உனவு இடைவேளையில்  வகுப்பறையிலேயே இருந்து விடுவேன்’ எவ்வளவு துன்பத்திற்கு விட்டல்ராவ்   இளமையில் உழன்று வாடியிருக்கிறார் என்பதை அறிகிறோம். அப்பா விடைபெற்றார்  என்கிற ஒரு  கட்டுரை  நூல் ஆசிரியரின் தந்தையின் மரணம் குறித்துப் பேசுகிறது. தந்தையின் சவத்தைச் சுமந்து செல்ல ஏகப்பட்ட காசு கேட்கும் பார்ப்பனச் சவுண்டிகள் அதனை கொடுக்க இயலாத ஏழ்மையில்  விட்டல்ராவின்  குடும்பம். பாப்பாரப்பொணம் பாப்பான்தான் தூக்கணும் என்கிற விஷயம்  இற்றுக்கொள்கிறது. அதே தெருவின் நெசவாளர்கள் தென்னங்கீற்று கொண்டு  பாடைக்கட்டி   ராவின் அப்பாவை  களரம்பட்டி சுடலைக்கு எடுத்துச்செல்கின்றனர். வறுமை சாஸ்திரத்தின் மீது ஏறிக்களித்து  நிற்பதை  இவண் தரிசிக்க வாய்க்கிறது. பொதுவுடைமை  இயக்க  ராஜுநாய்க்கர் இழவு வீட்டாரின்  இரவு உணவுக்கு  ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்கிறார்.

ஆண்டு மலர் என்கிற முப்பத்தெட்டாவது கட்டுரையில்,

‘என் வாழ்க்கைத்துன்பங்கள் பட்டினி பசி  உடுத்த துணிப்பஞ்சம்  என்று வறுமையின் பரிமாணங்களை சில கோணங்களில் யோசித்தேன். அப்பாவின் மறைவுக்குப்பின் இன்னும் அம்மா ஒரு ஆடைக்கடை வைத்திருக்கும்  வடநாட்டு முதலாளி வீட்டுக்குச் சமையல் காரியம் பார்க்கும் அவலம்  என்  நினைவுக்கு வந்தது.  அப்படியே மனவிருப்பை வெளிக்கொட்டி  எழுதுகிறார் விட்டல்ராவ். நமக்கும் கண்கள் பனித்து விடுகின்றன.

தான் படித்த பள்ளியின் பள்ளி ஆண்டு மலரில்  ‘மீசை’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுகிறார் விட்டல்ராவ். பாரதி, ஹிட்லர், மார்க்ஸ், லெனின்,ஸ்டாலின் ஆகியோரின் மீசையை எண்ணி எண்ணி அக் கட்டுரை பிறக்கிறது.  விட்டல் ராவ். எழுதிய   அக்கட்டுரை   ஆண்டு மலர் வெளியிடுபவர்களால் ஏற்கப்படுகிறது. அதுவே விட்டல்ராவின் அச்சில் வந்த முதல் படைப்பு என்பதை  அறிகிறோம்.

விட்டராவின்  வகுப்பறை நிகழ்வுகள்  பின் நாளில்    எழுத்துலகில்  அவர்  ஒரு மேதையாய்   பரிணமிக்கவிருக்கும்   சாத்தியப்பாடுகளை   நமக்கு முன்னரே   தெரிவித்துப் பளிச்சிடுகின்றன.

----------------------------------------------------------------------------------------------------- ------

 

 

 

No comments:

Post a Comment