Wednesday, May 13, 2026

manasuppOLa ( short story)

 

மனசுப்போல                                                           

 

நானும் என் மனைவியும்  பெண்ணாடம் செல்லும் என் பையனோடு கடலூர் பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.. பெண்ணாடத்தில் என் மைத்துனர் குடும்பம் இருந்தது. மைத்துனரின்  பெண் குழந்தகள் இருவர்   உள்ளூர்  ஆரம்பப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நவராத்திரி விடுமுறை விட்டிருக்கிறார்கள். எப்படியோ  இந்தத்தகவல் எங்களுக்கு   வந்தது.

‘பெண்ணாடம் போயி அந்த பசங்கள கூட்டிகிட்டு வந்தா ஒரு வாரம் வச்சிருந்து அனுப்பலாம்னு எனக்கு யோசனை’

‘தாராளமா செய்யிலாம்’

‘கடலூர் சில்வர் பீச்சு பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமம் எல்லாம் காண்பிச்சு அனுப்பிவைக்கலாம்’

‘ஓகே’  நான் சொன்னேன். ஆகத்தான் என் பையன் இன்று பெண்ணாடம் செல்கிறான். மைத்துனர் குழந்தைகளை கடலூர்  அழைத்துவரத்தான்  இந்த ஏற்பாடு.  நானும் என் மனைவியும் பையனோடு பேருந்து நிலையம்  புறப்பட்டோம்.

‘நாம எதுக்கு  இப்ப பொறப்படறம்’

‘பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் போயி பையன பஸ் ஏத்திவுட்டுட்டு வந்துடுவம்.  புதுசா ஒரு ஓட்டல் தெறந்துருக்கானாம் பஸ் ஸ்டேண்டுல அங்கனு போயி ஒரு காபி சாப்பிடுவம்.  தம்பி அப்படியே பெண்ணாடம் போவுட்டும். நாம திரும்பிடுவம்’

‘காபி  சூப்பரா இருக்காமா’

‘எனக்கும் தெரியாது. யாரையும் நா கேக்கவும் இல்ல. யாரும் என்னண்ட சொல்லவுமில்ல ஒரு மாத்தமா இருக்கட்டும். போய் வருவோம்னுதான். வேறென்ன’

நாங்கள் இருவரும்  எங்கள் குடியிருப்பு அருகே  இருக்கும்   டவுன் பஸ் நிற்குமிடத்திற்கு நடந்துச் சென்றுகொண்டிருந்தோம்.  என் பையன் தான் வீட்டைப்பூட்டி விட்டு எங்களின் பின்னால் வந்துகொண்டிருந்தான். டவுன் பஸ் எதுவும் வரக்காணோம். நாங்கள் இருவரும்  நெல்லிக்குப்பம் சாலையை நோக்கிக்கொண்டிருந்தோம். பையனும் வந்துவிட்டான்.

‘டவுன் பஸ் எதுவும் வருலியா’ என் பையன் தான் என்னைக்கேட்டான்.

‘’ ஒன்னு பின்னால ஒன்னு போவும். இப்ப எதுவுமே காணும்’

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். ஆட்டோக்காரன் ஒருவன் தருவித்தருவி  எங்களிடம் வந்து நின்றான்.

‘டவுன் பஸ் இப்பக்கி வராது. டவுன் பஸ்,   ரூட் பஸ் ரெண்டுக்கும் தகறாறு.  அதுவும்  மீன் கூட லக்கேஜ் ஏத்துறதுலதான்.  கூடையில சரக்கு கொண்டாற சனத்துவுள ஆரும் ஏத்தறது இல்லயாம். அது இன்னிக்கி  பாத்துதான்   முட்டிகிச்சி. போலீசு ஜீப் அங்க  காராமணிகுப்பம்  போயிருக்கு. அங்கதான்  அந்த பஞ்சாயத்து.. அது முடிஞ்சிதான் எதா இருந்தாலுமே. நீங்க எங்க போவுணும் அத  மொத சொல்லுங்க’

‘பஸ் ஸ்டேண்ட்’

’பத்து ரூவா குடுங்க.  மூனு பேரும் ஏறுங்க’

‘பத்து ரூவாயா’

‘பின்ன எம்மாம் தருவீங்க. பஸ் வந்தாலும்  முய் ரெண்டு ஆறு ரூவா ஆவுமே’

‘ டவுன் பஸ்ல  போனா மூவர ஒன்னரதானே’ மனைவி தொடர்ந்தாள்.

‘நேரம் ஆவுது பையன் ஊருக்குப்போவ இருட்டிடிடுமே. சட்டுபுட்டுன்னு போவுணுமில்ல’ என் மனைவி என்னிடம்  குரல் தாழ்த்திச் சொல்லிக்கொண்டிருந்தாள். இதைத்தெரிந்துகொண்ட ஆட்டோக்காரன் ‘ ஏறி குந்துங்க நாழி ஆவுது. டவுன் வண்டி  இப்பக்கி வராது தெரிமா’ என்றான்.

நாங்கள் மூவரும் ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொண்டோம். ஆட்டோ ரெக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது.

‘பத்து  ரூவாயிக்கு இம்மாம் ரோசனை. அரசாங்க ஆபிசுல சம்பளம்.’ ஆட்டோக்காரன் முணுமுணுத்தான். எனக்கும் காதில் விழுந்தது. அவனுக்கு எத்தனைக் கஷ்டம் இருக்குமோ.

பேருந்து நிலையம் வந்தது. புதியதாகத் திறந்திருக்கும் ஓட்டல் வாயிலில் வண்டியை நிறுத்தச்சொன்னோம்.

‘ஓட்டலுக்கு சவாரி கொண்டாற ஆட்டோ டிரைவருக்கு ஒரு கப்  டீ  ஃப்ரீ அங்கே விளம்பரம் எழுதித்தொங்கியது. விளம்பரத்ததைப் படித்த என் பையன்’ இப்படி வேறயா’ என்றான்.

‘தொழிலுதான்’ ஆட்டோக்காரன் சொல்லிக்கொண்டான். டீ எதுவும் குடிக்காமலே விடைப்பெற்றுப்போனான்.’ எதுவும் வெளியில சாப்பிடறது இல்லே’ எனக்குச்சொன்னான். நான் என் மனைவியைப்பார்த்தேன்.

‘அப்பிடியே தெனம் வர்ர மாதிரிதான்’  அவள்.

நான் அவளுக்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நாங்கள் மூவரும் காபி சாப்பிட்டு முடித்தோம். காபி ஒன்றும் பிரமாதமாக இல்லை. டபரா செட்  மட்டும்  பித்தளையில் பள பள என்று   இருந்தது. பையனை திருச்சி செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டேன். பெண்ணாடத்தில் நின்று செல்லும் பேருந்துதான் அது.

‘நாம  இன்னும்     அந்த  பஞ்சவடி  ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போகல. போயி வந்துடுவமே’ என்ன சொல்றீங்க.

இப்போதுதான் புதுச்சேரி அருகே இருக்கும்  அந்த ஆஞ்சனேயர் கோவிலில் குட முழுக்கு நடந்தது. குட முழுக்குக்கு போகலாம் என்று யோசனையில் இருந்தேன்.  முடியவில்லை.ஆபிசில் எவ்வளவோ பிரச்சனை. எந்தப்பிரச்சனை  எப்போது ரெக்கைக் கட்டிக்கொள்ளும். சொல்ல முடிகிறதா என்ன.

‘சரி போய் வந்துடுவம்’

இருவரும்  திண்டிவனம் செல்லும் பேருந்து ஒன்றைப்பிடித்தோம். சென்னைப் போகும் எல்லாப்  பேருந்தும் அந்த வழியாகத்தான் செல்லும் ஆனால் பஞ்சவடி சீட்டு என்றால்  பேருந்துக்காரர்கள்   ஏற்ற மாட்டார்கள். காசா லேசா அதுதானே இங்கு  எல்லாமும்.

நானும்  அவளும் பாண்டிச்சேரி வழியாய் திண்டிவனம் செல்லும் அந்தப் பேருந்தில் அமர்ந்து கொண்டோம். பேருந்தில் கூட்டமில்லை. பக்கத்து பக்கத்து சீட்டுதான்  வசதியாக இருந்தது. பெண்ணையாற்றுப்பாலம் தாண்டியது.  பின்னர் பேருந்தில் நல்ல கூட்டம். மக்கள் நின்று கொண்டே பிரயாணம் செய்தார்கள்.

‘பாண்டி வரைக்கும் இப்படிக் கூட்டம் இருக்கும்’

‘அப்பறம் பத்து நிமிஷத்துல நாம எறங்கிடப்போறம்’

‘பையன அங்க அனுப்பிச்சிட்டு நாம  மட்டும் இங்க வந்தது சரியா’

‘ ஒரு எடத்துக்கு அவனயும்  அனுப்பிச்சிட்டுத்தான நாம இங்க  வர்ரம்.  அதுல  ஒன்னும் தப்புல்லவுடு’

பாண்டிச்சேரி பேருந்து நிலையம் வந்தது. பேருந்து அனேகமாகக் காலியாகிவிட்டிருந்தது. வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் வண்டியைவிட்டு இறங்கி நின்ரு கொண்டார்கள்.

‘நேரா திண்டிவனம். நேரா திண்டிவனம் ஏறு ஏறு’

நடத்துனர் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டுனர் வாயே திறக்காமல் அவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

‘டிரைவருங்க ஊரு பேரு  ஒரக்க சொல்லி ஜனங்கள  வண்டிக்கு கூப்பிடறது இல்லையே அது ஏன்’

‘எந்த டிரைவருக்கும்  அவுங்க  குரலு சரியா வராதுன்னு நெனக்கிறேன்’

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதையே கவனித்த  ஓட்டுனர் கொஞ்சமாய் சிரித்துக்கொண்டார்.

 வண்டி பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை விட்டுப்புறப்பட்டது. கோரிமேடு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறிக்கொண்டார்கள்.

‘அடுத்தது  பஞ்சவடிலதான் நிக்கும்’ எங்களைப்பார்த்து நடத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.நாங்கள் இறங்குவதற்குத் தயாராக இருந்தோம். பஞ்சவடி பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்து நின்றது. நான் முதலில் இறங்கினேன். பேருந்து தார்ச்சாலையில் சுகிராக  நின்றது. படிக்கட்டைவிட்டுக் காலை எடுத்து வைத்தால் தரையோ மிகவும் பள்ளத்தில்  இருந்தது.

‘பாத்து வா பள்ளமா இருக்குது  தரை’

அதற்குள்ளாக அவள் கால் வைத்து அது இழுத்துக்கொண்டு போய்  மண்தரையில் உட்கார்ந்தே விட்டாள். நடத்துனர் நாங்கள் எப்படி இறங்கினோம் என்பதெல்லாம் எங்கே கவனித்தார். ‘ ரைட் ரைட் ரைட்’ என்றார். வண்டி வேகமாய் நகர்ந்து போனது. சாலையில் மின்சார விளக்கும் எரியவில்லை. கும்மி இருட்டாக இருந்தது.

‘என் மனைவி காலை நீட்டிய படியே  உட்கார்ந்திருந்தாள். ‘ கால மடக்கவோ எழுந்திரிக்கவோ முடியல்ல. வலி உயிர் போகுது’ என்றாள். மனைவிக்குக் காலில் ஏதோ பிரச்சனை ஆகிவிட்டது.  ஒரே இருட்டாக இருந்தது. இரண்டு தோள் பட்டையிலும் கைகளைக்கொடுத்து மெது மெதுவாக அவளைத் தூக்கி நிறுத்தினேன். ‘அய்யோ அம்மா’ என்று குரல் கொடுத்தாள். தோளில் கைபோட்டு பைய நடந்து நடந்து கோவில் கோபுர வாசலுக்கு வர ஆரம்பித்தேன். என்னாலும் முடியவில்லை. கோவில் வாசலுக்கு வந்து விட்டு ஒரு விளக்குக்கம்பத்தின் கீழ் அவளை நிறுத்தினேன்.

‘’ஆ படிக்கட்டு இருக்கு. அதுல உக்கார வையுங்க’ என்றார் சேவார்த்தி ஒருவர்.

என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன். கண்கள் நிறைத்துக்கொண்டு நீர். இடது கால் பாதம் வீங்கி இருந்தது. ‘அய்யோ அம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவள் என்னைப்பிடித்துக்கொண்டு நடந்தாள். கோவில் படிக்கட்டுக்குச்சரியாக  வந்து விட்டோம் ‘அம்மா ‘ என்று அலறி சத்தம் போட்டாள். கோவிலுக்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர் என் மனைவி அருகே வந்து அவள்  கா;லைத்தொட்டுப்பார்த்தார். தன் கை வசமிருந்த பசை மருந்து டியூப் ஒன்றைக்கொடுத்தார்.

‘சார் டாக்டர்ங்களா’

‘ஆமாம். நாளைக்கி ஒரு எக்ஸ்ரே எடுங்க.  ஒரு ஆர்த்தோவ கட்டாயம் பாருங்க’

‘சரிங்க டாக்டர்’

‘எங்க போகணும்’

‘கடலூர்’

‘ சட்டுன்னு ஒரு டாக்சிய புடிங்க அம்மாவ ஒக்கார வையுங்க. நேரா வீட்டுக்குப்போங்க. கால் வீக்கம் வலிக்கு ஒரு டோஸ் மாத்திர தர்ரேன்’

மாத்திரயை வாங்கிக்கொண்டேன்.

‘ரொம்ப நன்றி டாக்டர்’ ஃபீஸ் ஏதும்’

அவர் சிரித்துக்கொண்டார்.  ‘ ஆக வேண்டிய வேலைய பாருங்க’ என்றார்.

என் மனைவி இரண்டு கைகளையும் கூப்பி டாக்டரை வணங்கிக்கொண்டாள். நான் என் மனைவியை அந்தக் கோவில் படிக்கட்டிலேயே உட்காரவைத்துவிட்டுக் கோவில் உள்ளே சென்றேன்.  நெடிய துளசி மாலை அணிந்த  ஆஞ்சனேயரை வணங்கி நின்றேன். ‘ ‘என்ன தப்பு செய்தோம்னு இப்பிடி தண்டிச்ச கடவுளே’ என்று  அவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் இதற்கெல்லாம் பதில் சொல்பவரா என்ன. துளசிப்பிரசாதம்  வங்கிக்கொண்டேன். கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஆஞ்சனேயரை வலம் வந்து  தரை வீழ்ந்து வணங்கினேன். பிரசாதம் புளியோதரை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாழைச்சருகு தொன்னை.  இரண்டு இரண்டு என நான்கு கப்கள் வங்கிக்கொண்டேன்

‘இது சரியில்லை’

‘கீழே என் மனைவி  உக்காந்து இருக்கா. நடக்க முடியல்ல. அவளுக்கும் சேத்துதான் வாங்குறேன்’

பிரசாதம் வழங்கியின்  கேள்விக்கு என்தரப்பு  நியாயம் சொன்னேன். நானும் அவளும் புளியோதரைப்பிரசாதம் சாப்பிட்டு முடித்தோம் . டாக்டர் கொடுத்துவிட்டுப்போனஅந்த வலி  மாத்திரையைப் போட்டுக்கொண்டாள். ‘ஆ ஊ என்று அரற்றினாள்.

‘’வலிக்குதா’

‘ஒரு டாக்சிய மட்டும்  பாருங்க’  அவள் முகம்  எட்டுக் கோணலாகியது.

‘பத்து ரூவா ஆட்டோக்காரனுக்குத் தர யோசனை பண்ணினம்’

 ‘ இதுதான் அது பேசுற  நேரமா’

‘எல்லாம்தான்’

‘வேணாம் ஆகவேண்டிய வேலயப்பாருங்க’

நாங்கள் இருவரும் பட்ட கஷ்டத்தைப்பார்த்து யாரோ ஒருவர் கோவில் அதிகாரியிடம் விஷயத்தைச்சொல்லக் கோவில் அலுவலகத்திலிருந்து ஒரு டாக்சிக்காரனுக்குப் போன் போட்டிருக்கிறார்கள். அவனும் உடன்  அங்கே வந்து சேர்ந்தான்.

‘ஏழு நூறு ஆகும்’

‘’ஐநூறு தர்ரேன்’

‘வேற ஆள பாருங்க’ நா  பொறப்படறன்’

‘அறுநூறு போட்டுகுங்க. வாங்க’ என் மனைவிகுறுக்குச் சால் ஓட்டினாள்.

டாக்சிக்காரன் அவளை ஏற இறங்க பார்த்தான். எங்களை ஏற்றிக்கொண்டான். நானும் அந்த டிரைவரும்தான் அவளை மெது மெதுவாக வண்டியில் ஏற்றிப்  நீட்டாகப்படுக்க வைத்தோம்’.

‘இட்லி மாதிரி வீங்கி கெடக்கு காலு’

‘பஸ்லேந்து ஏறங்ககுள்ள தடுமாறிட்டாங்க. பள்ளமா இருந்துது. ஸ்டாப்பிங்குல  லைட்டு இல்ல  இருட்டு வேற’

‘நேரம்னு  ஒண்ணு வேல செய்யுதே.  டிரைவர் எனக்குப்பதில் சொன்னான்.

வண்டி கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சாலை நன்றாக இருந்தது. டிரைவரும் பதனமாக வண்டியை ஓட்டினார்.

‘வீட்டுச்சாவி ஒங்கிட்டதான இருக்கு’

‘என்கிட்ட இல்லயே’

‘பெறவு’

‘வீட பூட்டுனது பையன், சாவிய என்கிட்ட தரல. உங்க கிட்ட குடுத்து இருப்பான்ல நா இருக்குறன்’

‘’என் கிட்ட குடுக்கல.  மறதியா சாவிய  அவனே  எடுத்து கிட்டு போயிட்டான்.’

‘இப்ப என்ன செய்ய’

என் மனைவி  ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

‘வலில அழுவறயா, , வூட்டு  சாவியக்காணும்னு அழுவுறயா’  நான் கேட்டேன்.

டிரைவர் நாங்கள் பேசிக்கொண்டதைக் கவனித்துக்கொண்டே வந்தான்.

‘டிரைவரு கிட்ட ஒரு யோசனை கேளுங்க இதுக்கு என்னா செய்யுலாம்னு’

‘இதெல்லாம் அவரு கிட்டா  யோசனை கேப்பாங்களா’

‘நானும்  கேட்டுகிட்டுதான் வர்ரேன். நீங்க பேசிக்கிட்டு வர்ரத. வூட்டுக்கு  என்ன பூட்டு பூட்டிருக்கீஙக திண்டுக்கல்லா இல்ல தொட்டி பூட்டு ஏதும் இருக்கா’

.திண்டுக்கல்லு பூட்டுதான்’

‘என்கிட்ட நாலு  பழஞ்சாவிவ கெடக்கு. போட்டு கீட்டு  பாப்பம். கத ஒன்னும்  ஆவுலன்னா. புது  ஆக்சா பிளேடு  ஒன்னு  இருக்கு. சுத்தி இருக்கு வச்சிருக்கேன்  பாத்துகுவம். கவல படாதீங்க’

‘ஆஞ்சனேயா’ என்றாள் என் மனைவி.

‘காலு ரொம்ப  வலிக்குதா’ என்றேன்.

என்னை ஒரு முறை முறைத்தாள்.  வண்டி தென்பெண்னையாற்றுக் குறுகல் பாலத்தைத்தாண்டியது. மஞ்சகுப்பம் வந்தது. மணி பதினொன்று இருக்கலாம்.

ராக்காலமா இருக்கு ‘பூட்ட ஒடக்கையிலே சத்தம் வருமே. அங்காண்ட இங்காண்ட எதாவது சொல்வாங்களா’

டிரைவர் என்னிடம்  மெதுவாகச்சொன்னான். நான் பதில்  ஏதும்  சொல்லவில்லை.

‘அது கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ்’ என்றாள் மனைவி அலட்சியமாக.

‘கதவ ஒடச்சி எடுத்தாலும் அடுத்த வூட்டுக்காரன் என்னான்னு எழுந்திரிச்சி வெளிய வரமாட்டான். நா பாத்து இருக்கேன்ல பலது’  டிரைவர் சொல்லிக்கொண்டு சிரித்தான். கோர்டர்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது வண்டி.  என் வீடு கீழ் தளத்திலேயே இருந்தது.

‘வூடு கீழ் தளமா’

‘ஆமாம்’

‘அதுவும் சவுகரியம்தான்.   அபார்ட்மெண்டில லிஃப்ட் இருக்கா’

‘படிக்கட்டுதான். லிஃப்ட் இல்லே’

என் வீடு பின் பக்கம் இருக்கிறது. வீட்டு வாயில் வரை கார் போகாது. நான்தான் அவளைக் கையைப்பிடித்து  மெதுவாக அழைத்துக்கொண்டு வந்தேன்.

‘சார் வீட்டு சாவி இல்லேன்னிங்க’

‘ஆமாம். இவளை வீட்டு வாயில் படிக்கட்டில் ஒக்காரவைச்சிட்டு பிறகு பூட்டு சாவி கதையைப்பாக்கலாம்’ டிரைவருக்குப்பதில் சொன்னேன்.

‘அய்யோ அம்மா’  விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள் மனைவி. கால் வீக்கம் அப்படியேதான் விண்ணென்று  இருந்தது.

’வீட்டு வாயிலில் மின் விளக்கு எரிகிறது இது எப்படி ?  பூட்டிய  பூட்டையும் காணோம். வீடு உள்ளாகச்சாத்தி இருந்தது.  வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத்திறந்தது யார்  என்கிறீர்கள் என் பையன்தான்.

‘பெண்ணாடம் போகலியா நீ’

‘நா எங்க போறது பெண்ணாடம். கடலூர் ஓடி வரைக்கும் போனேன். பெண்ணாடம் டிக்கட் வாங்கினேன். என் டிக்கட்டைப் பின் பாக்கிட்டில் நுழைத்தேன். வீட்டு சாவி தென்பட்டது. அவ்வளவுதான் வண்டியை விட்டு கீழிறங்கினேன். உங்களை எங்கே பார்ப்பது என்கிற கவலை. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியபடியே கிடந்தது. நீங்கள் இரண்டு பேரும் எங்கே போனீங்க?’

‘தம்பி என் காலப்பாருடா. அய்யோ அம்மா முடியல்லையே நான் என்ன பண்ணுவேன்’

‘என்னம்மா  ஆச்சு உன்  காலு வீங்கி கெடக்கு’

‘’பஞ்சவடி ஆஞ்சனேயரைப்பாத்து ஒரு கும்புடு போட்டுட்டு வருவோம்னு ரெண்டுபேரும் கெளம்பினம். கோவில் வாசல்லே பஸ் நின்னுது.  இறங்குனம் அப்படியே .எனக்குக் காலு கோணிகிட்டுப் போயிட்டுது.  கீழ காலு வைக்கும் போது   அந்த  எடம் ஒரே  இருட்டு பள்ளம் நா தடுமாறிப் போயிட்டன்’

நான் டாக்சி டிரைவரை கணக்கு முடித்து அனுப்பி வைத்தேன். பையன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றான்.

‘என் தம்பி பொண்ணுக வரும்னு  ஆசை ஆசையா இருந்தேன். அது நடக்கல பாரு’

‘காலு வீங்கிக்கெடக்கு அத மொதல்ல பாக்குணும். அவுங்கள சீராட்டுறது கெடக்கட்டும்’

‘ஒங்க மனசுப் போலவே  இப்ப  ஆயிடிச்சில்ல. அப்பறம் என்ன’ என்றாள் அவள். பையன் அருகிருக்க  அவள் அப்படித்தான் பேசுவாள்

------------------------------------------------------------

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

cinna vishayam -short story

 

 

 

 

சின்ன விஷயம்                                           

 

 

’காலில் இது ஏது ? புது செருப்பு’  தன் காலைப்பார்த்துக்கொண்டான். ஆமாம் அது   அவன் செருப்பில்லை .  ’வேறு ஒருவர் செருப்புதான். ’அது இருக்கட்டும்  இது எப்படி  என் காலுக்கு வந்தது’. முணு முணுத்தான். அவன் செராக்ஸ் போடுவதற்குப் போன கடையிலிருந்து   வேகு வேகு  என்று வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.  

அம்மாவுக்கு பூர்வீகம் தருமங்குடி.   நாட்டு ஓடு போட்ட  ஒரு  கல் வீடும்  பெரிய தோட்டமும் அம்மா பெயரில்  இருந்தது. அம்மா  தான் இறப்பதற்கு முன்பாகத் தன் வீட்டையும் தோட்டத்தையும்  பையன்களுக்கு   உயில்  எழுதி வைத்தாள். முடிந்து போனாள். பையன்கள் என்றால்  அவனும்  அவனோடு உடன் பிறந்த இரண்டு சகோதரர்களையும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும்.

அந்த வீடு   அவனுடைய அம்மா தாத்தா வாங்கியது.  அதன்  கிரையப்பத்திரத்தில் உள்ள நீள அகல கணக்குப்  பார்த்ததில் ஒரு பக்கம் உள்ள நீளம்  இன்னொரு  பக்கத்தில் காணோம். செவ்வகமாய் இருக்கவேண்டிய மனை வரைப்படம் நாற்கரமாய் காட்சியானது. பத்திரத்தில் உள்ள படி பார்த்தால் மனையின் மொத்த  பரப்பு  இருபத்தி நாலு செண்ட்டுக்கு  வரவேண்டும்.  ஏனோ  குடியிருக்கும்  வீட்டோடு சேர்ந்து தோட்ட நிலத்தையும்  அளந்து பார்த்தில் பதினைந்தே செண்டுதான் வந்தது. வீட்டையும் தோட்டத்தையும்   சரியாய் அளந்து கொடுக்க வருவாய்த்துறைக்கு   விண்ணப்பித்தான். நிலம் அளக்கும் சர்வேயரை வீட்டிற்கு  அழைத்து  வருவதற்குள்  போதும் போதும் என்றாகிவிட்டது.  ஒரு மாப்பிள்ளையை ஜானவாசத்திற்கு  அழைத்து வருவது போல்  அல்லவா அவனுக்கு  அது அனுபவமானது.  அப்படி வந்த சர்வேயர் நிலத்தை அளக்க  அவன் வீட்டில் அளவை சங்கிலியைப் பிடித்தார். அவன் தயாராய்க்கூர்  சீவி வைத்திருந்த  வேப்பம்  முளைக்குச்சிகளை அங்கங்கு நட்டார். ஒரு பதினைந்து அடி அளவு  அகலத்தில் குறைகிறது. கிரைய  பத்திரத்தில்  கண்டுள்ளபடிக்கு   அது தன் வசமுள்ள  அரசாங்க வரைப்படத்தில் இல்லையே என்றார்.

‘இதுக்கு நா என்ன செய்யணும்’

‘இந்த ஊரு தருமங்குடி  முதுகுன்றம் தாலுக்கா, இதுவே  ரெவின்யூ டிவிசனாவும் இருக்கு.  ஆக முதுகுன்றம்கோட்டாட்சியருக்கு மனு ஒன்னு எழுதி குடுங்க.   அவுருதான் இந்த அளவுல எது சரின்னு எது தப்புன்னு சொல்லணும்’

கிரைய பத்திரத்தில்  குறிப்பிட்டுள்ள  நீளம் அகலம்,  எஃப். எம். பி அரசு நிலவரை படத்தில் இல்லை குறைகிறது. இது விஷயம் தெரிந்துகொள்ளவே  ஆறு மாதமானது. வீட்டுப்  பத்திர சொத்து விபரத்தையும்  ரெவின்யூ அலுவலக மேப்பையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே  இது தெரிந்து விடும்.  ஆனால்  இதற்குச் சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அளக்கிறேன்  பார் என்று  சர்வேயர் வீட்டுக்கு  ஏன்  வரவேண்டும்.   கூடவே தருமங்குடி வி ஏ ஓ வும் ’இதனில் நானில்லாமலா’ என்று வந்திருந்தார்.  அவர்கள் அளவைக்கு  வந்த அன்று அந்த  இருவரும் கேட்டது  எல்லாமும் கொடுத்தான் அதில் எந்த குறையும் வைக்கவில்லை அவன்.

அந்த சர்வேயர் அவனுக்குச் சொன்னபடி  முதுகுன்றம் கோட்டாட்சியருக்கு  மனு கொடுக்கவேண்டும்.   பத்திர நகலுக்கும் பட்டா  நகலுக்கும்  செராக்ஸ்  போடத்தான்  அவன்  அந்தக்கடைக்குப் போயிருந்தான். அப்படிப் போன இடத்தில்  அவனது செருப்பை யாரோ காலில் மாட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும். தெரிந்தா இப்படிச் செய்வார்கள். தெரியாமல்தான் இது நடந்திருக்ககூடும். இனி என்ன செய்ய ?.  உடன் அந்த  செராக்ஸ் கடையை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தான். செருப்பை நாம்தான் மாற்றி போட்டுக்கொண்டு வந்துவிட்டோமா இல்லை இது ஒரே ஒரு ஜோடிதான் வாசலில் பாக்கியாய் இருந்து  அதைச் சரியாயக கவனிக்காமல் நாமே  காலில் மாட்டிக்கொண்டு விட்டோமா. அவனுக்கு  ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் காலில் போட்டிருக்கும் செருப்பு மட்டும் அவனதில்லை என்பதில் உறுதியாயிருந்தான்.

செராக்ஸ் கடை வந்தாயிற்று. செருப்புக்காலோடு  வாடிக்கையாளர்கள் யாரும் அந்தக் கடையின் உள்ளே செல்வதில்லை.  அதுப்படியே  அவன் தான் போட்டிருந்த செருப்பைக்கடை  வாசலில் கழட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.

‘இப்ப சித்த மிந்தி  உங்க கடைக்கு வந்து  பத்திர காபி  செராக்ஸ் போட்டுகிட்டு  போனேன் சார். என் செருப்பு மாறிப்  போயிருக்கு. யாரோ என் செருப்பை போட்டுகிட்டு போயிருக்கணும்’ அவன் ஆரம்பித்தான். செராக்ஸ்கடை வைத்திருப்பவரின் மனைவி  அந்தக்கடையிலேயே  கணவருக்கு ஒத்தாசையாக இருந்தாள். அவள்   செருப்புப் பிரச்சனையில்  மாட்டிக்கொண்ட  அவனையே கவனித்து பார்த்துக்கொண்டிருந்தாள். கடைக்காரரோடு அவன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.

‘சார். ஒரே  ஒரு பெரியவர் உங்களுக்கு மின்னாடி செராக்ஸ் போட்டுகிட்டு போனாரு’

‘அப்ப அவர்தான் என் செருப்பை மாத்தி போட்டுகிட்டு போயிருக்கணும்’

‘சார் அவுரு  நல்ல மனுஷன். அப்பிடி நெதானம் இல்லாம எதையும் செய்றவரு இல்ல.’

‘நான்  இங்க கொஞ்சம் வெயிட் பண்றேன்.  தெரியாம போட்டுகிட்டு போனவங்க  யாராவது திரும்பி வந்து  என் செருப்ப என் கிட்ட  குடுத்துட்டும் போகலாமில்ல’

‘பேஷா வெயிட் பண்ணுங்க.  இந்த சேர்ல உக்காருங்க.  ஆனா எனக்கு தெரிஞ்சி அவுரு  பெர்ஃபெக்ட்டான ஆசாமி’

’உங்களுக்குத்தான் நல்லா தெரியும் அவர. எனக்கு சுத்தமாத் தெரியாது.தவறுதலா கூட  எதுவும் நடந்திருக்கலாம்.   ஆர்த்தோ டாக்டர்  எனக்குன்னு பிரஸ்கிர்ப்ஷன்  எழுதிக்  குடுத்து  பிரத்யேகமா  தயார் பண்ணின செருப்பு. அதுக்குன்னு  ஸ்பெஷலா  ஒரு செருப்பு தெச்சி தர்ர தொழிலாளி அந்த டாக்டர்கிட்ட  வந்து போறாரு. எனக்கு குதிகாலு வலின்னு அந்த ஆர்த்தோ  டாக்டர் கிட்ட போயி நின்னேன். அவரு அந்த வலிக்குற குதிக்கால எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாரு. குதிகாலு எலும்பு ரொம்ப ஒழச்சி தேஞ்சிடுச்சி. அந்த தேஞ்ச எலும்ப சப்போர்ட் பண்ணறதுக்கு புதுசா ஒரு எலும்பு  மொளச்சி இருக்கு. அதனாலதான் அந்த வலின்னு’ டாக்டர்  அவனிடம் சொல்லியதை ஒரு பாட்டம் ஒப்பித்தான்.

‘என்ன டாக்டர் அப்பிடி எல்லாம்  கூட இருக்குமா. எலும்பு தேஞ்சி  போச்சின்னா இன்னொரு எலும்பு  கூட அந்த எடத்துல மொளைச்சி வந்துடுமா’ அவன் டாக்டரையே திரும்பவும் கேட்டிருக்கிறான்.

‘மொளச்சி வந்துருக்கே. அப்பிடி  ஒரு எலும்பு  வர்ரதும் சாதாரணமா  நடக்கறதுதான். இந்த எலும்பு தேஞ்சிடுச்சி.  தேஞ்ச எலும்ப  சப்போட் பண்ண இன்னொரு எலும்பு வேணும்னு  நம்ப ஒடம்பு  முடிவு பண்ணி நடக்கற வேல இது.  நம்ப மூளைக்கும் அங்க நடந்த  அந்த வேலைக்கும் தொடர்பு இருக்கும். ஆனா நமக்கு மட்டும்  அது வெளங்காது.  நமக்கு தெரியாம எவ்வளவோ வேலைங்க  நம்ப  ஒடம்புக்குள்ள நடக்குது. அப்பிடித்தான் இதுவும்’ டாக்டர் சொல்லியிருக்கிறார்.

யோசிக்கும்போது  விஷயங்கள் ஒவ்வொன்றாய் அவன் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.

அவனுக்கு வந்த குதிகால் வலிக்காக வாங்கியது. அது விலை கூடிய  பகிள்ஸ் வைத்த செருப்பு. செருப்பில் ஒரு கர்வ் அமைப்பு அதன் நடுப்பகுதியில்  மேடாக இருக்கும்.இதனை தைத்து வழங்கும் நிறுவனம் ஆதம்பாக்கத்தில் இருப்பதையும் அங்கிருந்து தாம்பரத்தில் இருக்கும் ஆர்த்தோ டாக்டருக்கு, குதிகால் வலியைக் குறைக்கும் செருப்பு  டெலிவரி செய்யப்படுவதையும், அவன் அறிந்திருந்தான். ஒரு  ஜோடி செருப்பின் விலையே மூவாயிரம் ரூபாய் ஆனது. இந்த லட்சணத்தில் ஆர்த்தோ டாக்டர் வீட்டுக்குள்ளே ஒரு செருப்பும் வீட்டுக்கு வெளியே போகும் போது  வேறு ஒரு செருப்பும் என இரண்டு செட் கட்டாயம்  வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறார். அவன் தான்  ரூபாய் மூவாயிரம் கொடுத்து ஒரு ஜோடி   மட்டும் வாங்கினான்.  காலில் போட்டு நடந்து பார்த்தான்.  குதிக் கால் வலி குறைந்து போனது. அந்த வகை செருப்பை காலில் மாட்டிக்கொண்டால் அவன் உயரம் சற்றுக்  கூடிப்போவதுவாய்க்கூட   உணர்ந்தான்.

செராக்ஸ்கடைக்காரரும் அவர் மனைவியும் அவர்களுக்குள்ளாக   இப்படிப் பேசிக்கொண்டார்கள். அவனும்  கூட அதில் கவனமாகவே இருந்தான்.

‘செருப்பு மாறின விஷயம்  எனக்கும் கஷ்டமா இருக்குங்க. ஏங்க அந்த பெரியவரு வீட்டுக்கு பக்கத்து வீடு என் சிநேகிதி வீடு. அந்த சிநேகிதி   இது விஷயம் என்னிடம்  முன்னமே சொல்லியிருக்கா. அந்த சிநேகிதிக்கு  இப்ப  ஒரு போன் போடுவோம். அந்த பெரியவர அழச்சி பேச சொல்லுவம்’

‘நல்லா தெரியுமா உனக்கு. பெரியவரு வீடு உன் சிநேகிதி வீட்டுக்கு பக்கத்து வீடுதானா.’

‘அது சரிதாங்க . அதுல ஒன்னும் தப்பு இல்ல.

செராக்ஸ் கடைக்காரரின்  மனைவி தன் சிநேகிதிக்குப் போன் போட்டார்.  செருப்பு மாறிப்போன விபரம் சொன்னார்.’ அடுத்த வீட்டு பெரியவர என் கிட்ட  கொஞ்சம் பேசச் சொல்லுங்க ’  என்று கேட்டுக்கொண்டாள். பெரியவர் வந்தார். போனில் பேசினார்.’ என் செருப்புதான் எங்கிட்ட இருக்கு. வேற யாராவது மாத்தி போட்டுகிட்டு போயிருப்பாங்க   உங்க கடையிலேயே  நல்லா பாருங்க என்றார். பட்டென்று போனை வைத்துவிட்டார்.

அந்த நேரம் பார்த்து அவன் மனைவியிடமிருந்து  மொபைலில்  அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘ என்ன சேதி’ என்றான். அவள் ஆரம்பித்தாள். ‘ மொதல்ல  நீங்க கால்ல போட்டுறுக்கறது யார் செருப்புன்னு பாருங்க. உங்க செருப்ப எதுன்னு  நீங்க பாத்து போடாம  உங்க பையன் செருப்ப மாட்டிகிட்டு போயிருக்கீங்க.  இங்க அவன்    என்னண்ட வந்து   சத்தம் போடுறான். அவனுக்கு இப்ப வெளியில எங்கோ போகணுமாம்.  உங்க செருப்பு  கூடம் உங்களுக்கு தெரியாதா. யார் செருப்பையாவது மாட்டிகிட்டு கெளம்பறதா. வயசு மட்டும்  ஆவுது அவ்வளவுதான்’

‘அப்ப என்  பக்கிள்ஸ் வச்ச ஆர்த்தோ செருப்பு’

‘நீங்க அங்காண்ட போனீங்க. கேஸ் சிலிண்டர் காரரு வந்தாரு. அவரு உங்க செருப்ப மாத்தி போட்டுகிட்டு போயிட்டாரு.  அவரே  எனக்கு போன் போட்டாரு விஷயம் சொன்னாரு.  அவருதும்  பக்கிள்ஸ் வச்ச செருப்பாம்.  நம்ம  வீட்டுக்கு திரும்பவும்  வந்தாரு. அவர்  செருப்பை அவர் போட்டுக்கொண்டாரு. ’ பக்கிள்ஸ்  போட்ட உங்க  செருப்பை அவரே  செராக்ஸ் கடைக்கு  வந்து,  உங்களை  நேரா பாத்து உங்க கிட்டயே  குடுத்துடறேன்னு சொன்னாரு’

‘அதுக்குள்ள இவ்வளவு கதை ஆயிடுச்சா. இப்பதான் உயிர்  எனக்கு வந்த மாதிரிக்கு இருக்கு’

‘அது வரட்டும்.  இப்ப நம்ம பையன் செருப்ப மறக்காம திரும்ப  எடுத்துகிட்டு வரணும். அதான் ரெம்ப முக்கியம்’

‘நா என்  கையில புடிச்சிகினு வந்துடறேன்’

‘அதான் தப்பு. செருப்ப  கையில  தூக்கிகிட்டு  ரோட்டுல வருவாங்களா. எதுதாவது தெரியுதா உங்களுக்கு’

‘பின்ன’

‘முக்கியமா உங்க கிட்ட  சொல்லுணும். ஒரு பிளாஸ்டிக் பையி,  செராக்ஸ் போடுற டாகுமெண்ட்  பேப்பரெல்லாம் வச்சி  எடுத்துகிட்டு போனீங்களே, அது உள்ள பையன் செருப்பை  போட்டு கீட்டு கொண்டாராதிங்க’

‘அது கூடமா எனக்கு தெரியாது’ அவன் சொல்வதற்குள்  அவள் போனை வைத்து விட்டாள்.

‘ அவனும் அவன் மனையாளும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டே இருந்த   செராக்ஸ் கடைக்காரரின் மனைவி ஒரு மஞ்சள்  தாம்பூலப்பையைக்  கொண்டு  வந்தாள். அதனுள்ளாக   பையனின் செருப்பை  அவன்தான்  நுழைத்தாள்.

‘இப்ப இத கையில புடிச்சிகினு ரைட்டா போங்க’ என்றாள். அவனுக்குச் சிரிப்பாய் வந்தது.

செராக்ஸ் கடை வாயிலில் சிலிண்டர் காரர் வந்து அவனை ’சார் சார்’  என்று அழைத்துக்கொண்டிருந்தார்.  அவனுடைய  பக்கிள்ஸ் போட்ட செருப்பு  கேஸ் சிலிண்டர்  வண்டியின் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருந்தது.செராக்ஸ் கடைக்காரரும் அவர் மனைவியும் அவனையும் அந்த சிலிண்டர் காரரையுமே  மாறி மாறி  பார்த்துக்கொண்டிருந்தார்கள். கேஸ் சிலிண்டர் வண்டிக்காரர் அவனுடைய செருப்பை எடுத்து அவனிடம் நீட்டினார். ‘ செய்யிற  வேலயில  பதனம் இருக்கணும்  சாரு’  வேகமாய்ச்  சொன்னார். அவனிடம் புன்முறுவலும் செய்தார்.  அப்படித்தானும்   செருப்பு மாற்றி போட்டுக்கொண்டு  போய்விட்டதை  மனதில் எண்ணி வண்டியை  மிதித்துக்கொண்டே  நகர்ந்து போனார்.அவர் கால்களிலும் பக்கிள்ஸ் போட்ட  செருப்பு இருப்பதை அவன் கவனித்தான்

.‘ ரெண்டு ரூவாய  மனுசன் சம்பாரிக்கறதுக்குள்ள எவ்வளவு பிரச்சனை’ என்றார் செராக்ஸ் கடைக்காரர்.

----------------------------------------------------------------------------------------------------

 

 

 

.

 

 

 

 

rathiyin manmathan ( akkalur iravi)

 

அக்களூர் இரவியின் சிறுகதைகள் ‘ ரதியின் மன்மதன்”           

 

அக்களூர் இரவியின்  சிறுகதைத்தொகுப்பு ‘ரதியின் மன்மதன்’. பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய எழுத்துப் படைப்பு. அக்களூர் இரவி  ஆங்கிலம்- தமிழ்,  மொழிபெயர்ப்பில்  உச்சம் தொட்டவர்.  கனவு நகரம் காஞ்சீபுரம் என்னும் அரிய கட்டுரை நூலைத்தந்தவர்.  வாசகர்கள் மத்தியில்  உய்ர்வாகப் பேசப்பட்ட அந்த நூலை சந்தியாநடராஜன்  வெளியிட்டார். சிறுகதைத் தளத்தில்  அக்களூர்  இரவி  கூடுதலாய்ச் சாதிக்கமுடியும் என்பதை’ ரதியின் மன்மதன்’  வழி வாசகர்கள்  அறிய வாய்க்கிறது. இப்படைப்பை நாற்கரம் வெளியிட்டிருக்கிறது. நாற்கரத்தின் நல்லு இதனை கவனத்தோடு கொண்டு வந்திருக்கிறார். இலக்கிய  நட்பின் இமயம்  தஞ்சாவூர்க் கவிராயரின் அணிந்துரையோடு  இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.’ ஜரிகை வேலைப்பாடுகளோ ஜோடனையோ  இல்லாத வாழ்வில் சந்திக்கின்ற,  மனிதர்களை  எதிர்கொள்கிற நிகழ்வுகளைச் சொல்லும் கதைகள் இவை’ என்கிற அரியதொரு  விளக்கத்தைத் தஞ்சைக் கவிராயர் வழங்கிருக்கிறார்.

முதல் சிறுகதை ‘விநியோகம்’. பிள்ளையாருக்குப் படைக்கும் குருக்கள் காலி  நிவேதனத் தூக்கை சந்நதிக்குக் கொண்டு வருகிறார். பிள்ளையாருக்கு  எதை வைத்துப் படைப்பது. தவறு நிகழ்ந்து விட்டது. அவசரத்தில் காலித்தூக்கை   சைக்கிளில் மாட்டிக்கொண்டு  கோவிலுக்கு வந்துவிட்டார். ஆபத்பாந்தவனாக  உள்ளூர் பிரசிடெண்டின் மனைவி இரண்டு தூக்குகளில் சர்க்கரைப்பொங்கலும் கொத்துக்கடலை சுண்டலும்  விநாயகரின்  படையலுக்குக் கொண்டு தருகிறார். பிரசிடெண்டின் பையனுக்கு சிதம்பரம் காலேஜில் இடம் கிடைத்துவிட்டதாம். ஆகக் கடவுளுக்கு நன்றி சொல்லத்தான்  அவர் வந்திருக்கிறார்.  ஆலய மணி வேக வேகமாக அடிக்கப்படுகிறது. கோவிலில்  பசியோடு காத்துக்கொண்டிருந்த சேவார்த்திகளுக்குப் பிரசாத விநியோகம் உறுதிப்படுகிறது. தினம் தினம் பிள்ளையாருக்குத் தவறாமல்  அபிஷேகம் செய்து ,  அமுது படைக்கும்  குருக்கள்தானவர்.  ஒரே ஒரு நாள்  தெரியாமல்  நிகழ்ந்துவிட்ட தவறுக்காக அவர்  தண்டிக்கப்படவில்லை. அன்று நிவேதனங்கள் அனைவருக்கும் வழங்கி  அந்தக்கடவுளே குருக்களைக் காப்பாற்றி விடுகிறார். இப்படிப் போகிற  ஒரு சுவாரசியமான கதை. விநாயகரையும்  சிறுகதையில்  அடிக்கடி பேச வைக்கிறார் இரவி.

 கையெழுத்து என்று தலைப்பிட்ட ஒரு  சிறுகதை. பள்ளியில் தரப்படும்  ஸ்காலர்ஷிப் பணம் முப்பது ரூபாயை பெற்றுத் தன் தந்தையிடம் கொடுத்தனுப்ப வேண்டும். அதற்காகத்  தந்தையும் மகனும் தலைமை ஆசிரியர் அறை முன்னர் கால் வலிக்க  நிற்கிறார்கள். பையனுக்கோ  வகுப்பில் பாடம் போய்க்கொண்டிருக்கிறது. ’வகுப்பைக் கவனிப்பதையும்  விட ஸ்காலர்ஷிப் பணம் முக்கியமாகி விட்டதா உனக்கு’ எனத் தலைமை ஆசிரியர் அவனைத் திட்டுகிறார்.  முப்பது ரூபாய் பெரிய பணமாய்  அவன் ஏழைத் தந்தைக்குப் பெரிய  ஒத்தாசையாய்  அமையுமே எனத் தீவிரமாய்   யோசிக்கிறான். அவன் வகுப்பாசிரியர் அப்போது அங்கே வருகிறார். அவன்தான்   வகுப்பில் முதல் ரேங்க் வாங்குபவன் என்பதை உறுதி செய்கிறார். உடன்   தலைமை ஆசிரியர்  ஆணையிடுகிறார்.   அவனுக்கு அந்த ஸ்காலர்ஷிப் பணம்  பட்டுவாடா ஆகிறது . கையெழுத்துப்போட்டு அந்தப் பணம் பெற்றுக்கொள்ளத்தானே அப்பாவும்  பள்ளிக்கு   அழைக்கப்பட்டிருக்கிறார்.  தந்தை தன் பெயரை  ஒவ்வொரு  எழுத்தாய் எழுதவே திணறிப்போகிறார். ’மூணாவது மட்டுமே படித்த அப்பா’ அந்த  அப்பாவுக்கு மரியாதை செய்யும் மகன்.

அடுத்து ஒரு  சிறுகதை..’ ரதியின் மன்மதன்’ இந்தத் தொகுப்பிற்குத் தலைப்பாக அமைந்து சிறக்கும் கதை. ஒவ்வொரு எழுத்தாளரும் வாசிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. படிக்கும் வாசகர்கள் நெகிழ்ந்து போவார்கள். இதனை ஒரு முத்திரைக்கதையாகவே  சொல்லலாம்.படித்தவுடன் வாசகர் மனதில் அமர்ந்துகொள்ளும் தகுதி பெற்ற கதை. ஒவ்வொரு  நிகழ்வையும் சித்திரமாய்ச் செதுக்கிய அக்களூர் இரவியை மனம் நிறைந்து பாராட்டலாம்.  ஐம்பது வயது முதியவர் சிறு கதையின் நாயகன். மணமாகாதவர்.மனம் விட்டுப்பேசவும்  ஒரு ஆறுதல் கூறவும்  அவருக்கு ஒரு துணை வேண்டும். அப்படி ஒரு பெண்ணும்  அமைந்து விடுகிறாள். ஊரார் ஆயிரம் பேசுவர்தான்.  ஈவிரக்கமற்றது காலம். அவள் இறந்தும் விடுகிறாள். அம்முதியவர்  அவளுக்கு  இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்புகிறார். அவரின்  மன வலி யாருக்குத்தான்   புரியும். அக்களூர் இரவி தத்ரூபமாக அந்த பாத்திரத்தை நம்மோடு  அமர்ந்து பேச வைக்கிறார். உள்ளூரில் காமன் தீ உற்சவம் நிகழ்கிறது. அதனில்  பாராளும்  பரமன் ஈசனுக்குக் காதல் தீ  மூட்ட முயன்று  மன்மதன் தோற்றுப்போகிறான்.   ஈசனின்  நெற்றிக்கண்ணின்  தீயில் சாம்பலாகிறான். முக்கண்ணன்  மன்மதனைச் சும்மா விடுவானா , மதுரையில்   நக்கீரரை எரித்த நயனம்தானே அது.

 மன்மதனின் ரதியோ  தன் கணவன்  சாம்பலாகிய  சோகத்தைக் கொட்டித்தீர்க்கிறாள். முக்கடவுளரையும் அழைத்து நடந்துவிட்ட அநீதிக்கு  நியாயம் கேட்கிறாள். மன்மதனுக்கு ஒரு   காமக்கணக்கு. அதற்கு  பரமனின் பதிலா இது ,  எங்கேனும் அடுக்குமா  சொல்லுங்கள் தேவர்களே என்கிறாள். ஒரு நியாயம் கிடைக்கிறது. அவள் கண்ணுக்கு மட்டுமே தென்படும்  கணவன் மன்மதன் கிடைத்துவிடுகிறான். போயும் போயும் இவனைப்போய் அந்தப்பெண் காதலித்தாளே என்று ஊரில்  புலம்புவோம். அவள் கண்ணுக்கு அவன் எப்படித்தெரிந்தான் என்பது  நாம் அறியமாட்டோம். ஈசன் கட்டளை அல்லவா அது. காதல்  குருடு.  இன்றும் நாளையும் என்றும் தான்.

உள்ளூர் கோவிலில் காமன் தகனம் முடிந்தது. அம்முதியவர் தன் துணைவி  விடைபெற்றதை நினைத்துப்பார்க்கிறார். ரதி தன் மன்மதனுக்குக் காட்டிய அதே  சோகரசத்தைக் கொட்டித்தீர்க்கிறார். அற்புதமான பாடல் வரிகள்.

’திருக்கணைகள் தாம் தொடுக்க

சிவனுடைய கண்ணாலே

தீயா யெரித்தாரோத்

தேமொழியே தாதிகளா..

முல்லையரும்போ

முகமெல்லாம் பிஞ்சரும்போ

கொல்லையரும்போ

கூடுவது மெக்காலம்

யெள்ளுக்குள் எண்ணெய்போலே

இருந்தோம் சிலகாலம்…

பாடிப்பாடி  கேவி அழுகிறார் அம்முதியவர்.

தனக்கென அங்கீகாரமோ மதிப்போ மரியாதையோ  நல்லதொரு வாழ்க்கையோ  இல்லை., தனக்கிருந்த ஒரு துணையின் இழப்பை இந்தச்சந்தர்ப்பத்தில் ஆற்றாமையோடு, ரதி மன்மதன் பாடல்களை, அந்த ஒப்பாரிப் பாடல்களைப் பாடி  மனத்தை இலேசாக்கிக் கொள்கிறாரோ? என்கிறார் இரவி. அற்புதமாய் வந்திருக்கிறது சிறுகதை.

 அப்படி இருக்கக்கூடாது – என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை. கதிருக்குக் கிருஷ்ணன் என்கிற  கல்லூரி நண்பன். அவன் குடும்பத்தில் தொடரும் துயரங்கள்.  இப்படிக்கூட நடக்குமா என்று நம்மைத் திடுக்கிடவே வைக்கின்றன. கிருஷ்ணனின் அப்பா இறந்து போகிறார்.  கிருஷ்ணனின் சகோதரிகளுக்குத் திருமணங்கள் தள்ளிக்கொண்டே போனது. எல்லாம் இருந்தும்  குடும்பத்தில் நல்லது எதுவும் நடைபெறவில்லை. ஒரு நாள் லட்சுமி என்கிற அக்கா இறந்து போனாள்.  பிறகு ஜெயா அக்கா  விடை பெற்றுக்கொண்டாள்.  சில  நாட்கள் சென்றன. கிருஷ்ணனின் அம்மாவும் இறந்து போகிறாள். கிருஷ்ணன் அங்கும் இங்கும்  எனக்கடன் வாங்கி காலம் தள்ளுகிறான்.  பெயர் கெட்டுப்போகிறது. ஒரு நாள் அவன் தம்பி,   கிருஷ்ணனுக்கு உடல் நிலை சரியில்லை  ஆக  மருத்துவ மனைக்குக் கூட்டிக்கொண்டு போனதாக அக்கம் பக்கத்தார்  சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து எந்த செய்தியும்  பிறகு வர இல்லை. கைக்குழந்தையோடு ஒரு பெண் அவர்கள் வீட்டு வாசலில்  நின்று குய்யோ முறையோ என்று  சத்தம் போட்டுவிட்டுச்சென்றதாயும் கதிர் கேள்வி.ப்படுகிறான்.   இப்படி துயரப்படமட்டுமே சபிக்கப்பட்ட ஒரு  குடும்பம். ஈவிரக்கம் வரண்டுபோன  இயற்கையின் தீண்டல்.  இது  விண்டுணரமுடியாத புதிர் என்கிறார் இரவி. வழிமொழிகிறோம் நாமும்.

‘வாழும் கலை’ சிறுகதை  கலை வாழ்வதைப்பேசுகிறது. ஆயின்   அக்கலைஞன் துயரத்தில் சுருங்கிப்போவதையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. ஒரு கலைஞன் ஒருத்திக்கு  இரண்டு குழந்தைகளைக் கொடுத்துவிட்டு வேறு ஒருத்தியுடன்  ஒடிப்போகிறான். அந்தத் தாயும் வேடம் கட்டி கூத்தாடுபவள்தான். அவள் பெற்ற மகன் தான்  அந்த கிருஷ்ணமூர்த்தி. குறவன் குறத்தி டான்ஸ் பஃபூன் வேடம் என பல வேஷங்களைக் கட்டி ஆடுபவன். வள்ளித்திருமணம்   நாடகத்தை முடித்துக்கொடுக்க மேடைக்குச் செல்கிறான். தன்னப்பெற்ற அன்னை இறந்து போகிறாள். கிருஷ்ணமூர்த்தி கலைத்தாயை வணங்கி அந்த நிகழ்வை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கிறான்.அவன் அன்னையே  தனக்கு இட்ட ஆணை  இது என்கிறான்.

‘ஊசி மணி பாசிமணி ஐசலக்கா

விக்க விக்க வந்தோம் விக்க வந்தோம்

ஐசலக்கா  லக்காடி

ஏமாத்தும் திருட்டும் ஐசலக்கா

எங்க மனதில் இருந்ததில்லை

ஐசலக்கா லக்காடி’

 

குற மக்களின்  டால்டா டப்பாக்கள்  மேடையில் ஒலியை ஓங்கி  எழுப்புகின்றன.  இரவிக்கு நாடகக்கலையில் ஆர்வம் இருக்கலாம் அப்படியும்கூட    நமக்கு  ஊகிக்க வாய்க்கிறது.

’நிலமென்னும் நல்லாள்’ என்கிற தலைப்பில் உள்ள  சிறுகதைக்கு வருவோம். கிராமங்களில் வயல்களை விட்டு நகரங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள்.  ஒரு சாண் வயிற்றுப்  பிழைப்புக்காக  மக்கள் படும் துன்பங்களை எடுத்து வைக்கிறது இக்கதை. செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் ஒரு விவசாயி எத்தனை அவமானங்களை எதிர்கொள்கிறார் என்பதனை பிரத்யட்சமாகச் சொல்கிறார் இரவி. அவருக்கு டி்ப்ஸ் ஐம்பது ரூபாய்  தர நினைக்கிறார் அது அவர் தன் மானத்தைக் காயப்படுத்திவிடுமோ என்று  அஞ்சுகிறார். கொல்லானூரில்  பத்து பேருக்குத் தன் வயலில் வேலை  கொடுத்து வாழ்வளித்துக்கொண்டிருந்த  காவிரி டெல்ட்டா  விவசாயி  ஒரு  சாலையோர உணவு விடுதி வாயிலில் படும் அவமானங்கள் வாசகனை ரணப்படுத்துகின்றன.’ஊர்ல அவர் முன்னால நின்னு எவரும் பேசவே பயப்படுவாங்க’  என்று அந்தப்பெரியவரின் ஊர்க்காரர் சொல்லும் கொசுறு  சேதி ஒரு விவசாயி சிறுத்துப் போய் நிற்பதை  நம் கன்முன்னே காட்சியாக்குகிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் சொன்ன  பொய்யாமொழியாரைத்தான்  வாசகன் எண்னிப்பாக்கிறான்.

யதார்த்தமான  இயற்கை வருணனை. பிசிறில்லாத நடையழகு, சமுதாய உணர்வு கூடிய கதை மய்யம் என நகர்ந்து செல்லும் அக்களூர் இரவியின்  சிறுகதைகள் வாசக  மனதைச் சிறைப்பிடிக்கவே செய்கின்றன. ரதியின் மன்மதன்  சிறுகதைத்தொகுப்பு  அக்களூர் இரவியின்  வெற்றிப்படைப்பாக  அமைந்து சிறக்கிறது..

-------------------------------------------------------------------------------

 

 

 

 

suzal -short story

 

 

 

சுழல்                                                               

 

மஞ்சகுப்பத்தில்  என்  அலுவலகத்துக்கு அடுத்தக் கட்டிடம்   மாவட்டத் தலைமை அஞ்சலகம்   தபால் ஒன்றை எழுதி முடித்து   அன்றைய அஞ்சலில் சேர்க்க  அந்த அஞ்சலகம் நோக்கி நடக்கிறேன்.  சிவப்பு   நிறத்   தபால் பெட்டி   அலுவலக வாயிலில் படிக்கட்டுகளுக்குப் பக்கமாய்  சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது.  நான்  கொண்டு வந்த  தபாலை அஞ்சல் பெட்டியின்  வாயினுள் நுழைத்துப் போட்டேன். பெட்டித்திறப்பில்  சிறிய மூடி ஒன்று இப்படியும் அப்படியும்  நடனம்  ஆடிக்கொண்டிருந்தது.  நான் போஸ்ட்  செய்த  கடிதம்  உள்ளாகச்சென்று விட்டதா என்று கைவிட்டுப் பார்த்தேன்.   என்   கையில் அது  தட்டுப்படவில்லை.  எப்படி எப்படியெல்லாம்  செய்துவிட்ட   ஒரு செயலைச் சரிபார்க்க வேண்டியிருக்கிறது.  தபால் ஒன்றை எழுதி முடித்து,  அதனைக் கையோடு கொண்டுபோய்  போஸ்ட் டும் செய்துவிட்டால்  மனதிற்குள் ஏதோ ஒரு நிம்மதி.      எனக்கு  எப்போதும்கிடைக்கும் அனுபவம்  இது..  எல்லோருக்கும்  அப்படித்தான் இருக்குமோ.

 தபால்பெட்டிக்கு முன்னால் ஒரு டூ வீலர் நிறுத்தப்பட்டிருக்கிறது.. அந்த டூ வீலர் என்னோடு பேச முயல்கிறது. நான் ஏதும் உளறுகிறேனா.  இல்லை நிச்சயம் இல்லை.

 இதோ  என் டூவீலர்   கிடைத்துவிட்டது  என் டூ வீலர்     வேகமாய்ச் சொல்லிக்கொண்டே  அதன் அருகே பதறிக்கொண்டு ஓடுகிறேன்.. ஆமாம்  அது  களவு போய்விட்ட என்  வண்டியேதான்.  TN.01 -9390    அந்த வண்டி எண்ணும்   சரிதான். திருடிக்கொண்டு போகிறவர்கள் வண்டியின் நெம்பரை  கட்டாயம் மாற்றி  அதனை வேறு ஊரில்  கொண்டுபோய்தான் விற்று விடுவார்களாம் கொஞ்சம்  விஷயம் தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். வக்கீலின்  கழுத்துப்பட்டைக் குறிபோட்ட ஸ்டிக்கர் வண்டியின்  நெம்பர் பிளேட் அருகே கச்சிதமாய் ஒட்டப்பட்டிருந்தது.  அதே .சிமெண்ட் கலர்.  வண்ணத்தில்  ஒன்றும் மாற்றமில்லை. வண்டியை அங்கங்கு தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டேன். வண்டி தொலைந்து போய் ஆறு மாதம் கூட ஆகியிருக்கலாம்.

   என் வண்டியைத்தான்   இங்கே  நிறுத்திவைத்துவிட்டு  யாரோ  அஞ்சலத்தின் உள்ளே  சென்றிருக்கிறார்கள். அவர்கள்   வந்த  வேலையை முடித்து விட்டுத் திரும்பவும் இந்த வண்டியை எடுத்துக்கொண்டு மட்டுமே கிளம்புவார்கள். அப்போது அவரை வழிமறித்து   இந்த வண்டி பற்றிய விபரம் கேட்டுவிடலாம்  என்கிற  தீவிர யோசனையில் இருந்தேன்.  அஞ்சலத்தினுள் ஒரே கூட்டம். தலைமை அலுவலகமாயிற்றே.

மஞ்சகுப்பம் டெலிபோன் இலாகா  அரசு  கோர்ட்டர்சுதான் நான் குடியிருப்பது,    நான் பணியாற்றும்  அலுவலகத்திலிருந்து  அரை கிலோமீட்டர் தூரம் கூட இருக்காது.  நாலு தப்படி வேகமாய்  நடந்தால் அலுவலகத்துக்கே வந்துவிடலாம். சில சந்தர்ப்பங்களில்  வேறு எங்காவது செல்லவேண்டிய படிக்கு  ஆகிவிடுகிறது. பக்கமாய் திருப்பாதிரிப்புலியூர் இங்கிருந்து  மூன்று கிலோ மீட்டர்.  சின்ன வண்டி இருந்தால்  சவுகரியமாய் போகலாம் வரலாம்.

 சிக்கரிக் கலக்காது  காபித்தூள் வேண்டுமென்றால்  அவ்வப்போது அரைத்துக்கொடுக்கும் சந்தனப்பொட்டு வைத்த காபிக்கடைக்காரர்.  அந்தப்பொட்டைப்  பார்க்கும் போது   வெண்டைக்காயை  அவர்  நெற்றியில்  நிற்கவைத்தமாதிரி எனக்குத்தோன்றும்  அவரிடம்  வெண்ணெய் நெய்  அரிசிஅப்பளம், கெட்டிப்பெருங்காயம்   எல்லாமும் விற்பனைக்குண்டு.  நாட்டு மருந்து  விற்கும் கடை பூஜைசாமான் கடை. இன்னும்  ஏதும்  இப்படியாய்  வேண்டும் என்றாலும் அந்த திருப்பாதிரிப்புலியூர் போனால்தான் நமக்கு   காரியம் ஆகும்..

ராமாபுரம் கொய்யா  கடலூர் கேப்பர்மலை  ஜைலுக்குப் பின்னாடி  நாலு கிலோமீட்டர்  நேராகப்போனால்  வருவது ராமாபுரம் அது  குக்கிராமம். அங்கு விளையும்  கொய்யாவை நீங்கள் கேள்விப்பட்டதுண்டோ. மேல் தோல் பார்க்கப் பச்சையாக இருக்கும். ஆனால்   அதன் உள்ளோ சதைப்பற்று  கனிந்தேயிருக்கும். குங்குமச் சிவப்பு நிறம். கொய்யாவை  வாயில் போடுங்களேன்   அப்படி ஒரு தித்திப்பு நொந்த. மனம் டபக்கென்று   நிறைந்து போய்விடும். கொய்யாவின் விதைகள் உன்னைப்பார் என்னைப்பார் என்று விறைத்துக்கொண்டு தின்பவர்   நாக்கில்  நர்த்தனம்  ஆடும் தின்பவரை  இம்சிக்கவே  செய்யாது  . சமத்தாய்த் தொண்டைக்குள் இறங்கி விடும்.

வடலூர் வெள்ளரிப்பிஞ்சுகள் எப்போதாவது   சாப்பிட்டு இருக்கிறீர்களா. குட்டி குட்டியாய்  அரைச்சாண் நீளம்தான். மடக் மடக் என்று ஒடியும். அத்தனைப் பச்சை மணம்  ருசி. வடலூர் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டோருக்குத் தண்ணீர் தாகமே எடுக்காது.  இவை அனைத்தும் கிடைக்கும் அதே திருப்பாதிரிப்புலியூரில்தான் சொல்லுக்குத்துணை நிற்கும் வேதியன்  பாடலீசன் திருக்கோவில் இருக்கிறது. இன்னும் போங்களேன் கெடிலக்கரை மீதமர்ந்த  வகிந்தமலை, அருள்பாலிக்கும்  தேவநாதன்  திருப்பதி வெங்கடாசலபதிக்கு  மூத்தவர். ஆக  டூ வீலர் இல்லாமல்   இவை  எதுவும் சரிப்பட்டு வராது  ஆகத்தான்  செகண்ட் ஹேண்டில்   வண்டி ஒன்று வாங்கினேன். கெட்டிக்காரத்தனமாய் நான்  அதனைப்  போற்றி    போற்றித்தான்  வைத்துமிருந்தேன்.நம் கெட்டிக்காரத்தனத்தில் எதுவுமில்லை.

கோர்ட்டர்சில் என் வீட்டுக்கு எதிரே டூ வீலர் நிறுத்தும் ஷெட்..  நான் வசிப்பது தரை தளம்.  தரை தள வாசிகளுக்குக் கஷ்டங்கள் அதிகம்  கொசு இம்சை ஏகத்துக்கு இருக்கும். சாக்கடை அடைத்துக்கொண்டால் வீடு நாறிப்போகும். மழைக்காலத்தில் தவளையும் பாம்பும் உறவு கொண்டாடும்.. வயதாகிப்போனவர்கள் முட்டிக்காலில் வலிவந்த  பேர் வழிகளுக்குக் கொஞ்சம் சவுகரியம் தெரியலாம். படிகள் ஏற வேண்டாம்.

 என் டூ வீலரை எதிரே இருந்த ஷெட்டில் நிறுத்தியிருந்தேன். சைட் லாக்கோடு இரண்டு பூட்டூம் பூட்டித்தான் வைத்திருந்தேன். மறு நாள் காலை ரேஷன் கடைக்குப்போய் கோதுமை வாங்கலாம் என்பதாய் என் திட்டம்.  வண்டி சாவியைக்  கையில் எடுத்துக்கொண்டு  சுழற்றியபடி  ஷெட்டுக்குள் நுழைந்தேன். என் வண்டியைக்காண வில்லை.  செட் ஒன்றும் பெரிய கட்டிட,ம் இல்லை. இப்படியும் அப்படியும் வளைத்து வளைத்துப் பார்த்தேன். மொத்த ஷெட்டும்   பார்த்தாயிற்று.  நான் பூட்டி வைத்துவிட்டுப்போன  அந்த வண்டி அங்கிருந்தால்தானே.  என் வண்டியை மட்டும் காணவில்லை.  வண்டி சாவியைக் கையில்  வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது. எனக்கு  மிகவும் வருத்தமாய் இருந்தது. வருத்தம் மட்டுமா   கூடவே கொஞ்சம் சிரிப்பும் வந்தது. வரக்கூடாது  தப்புதான்.

உடனே   போலீசில் புகார் கொடுத்தாக வேண்டும்  வண்டியை யாரேனும்  திருடிக்கொண்டு கள்ளச்சாராயம்   விற்பதற்கு ஊர் ஊராய்ப் போய்விட்டால்,  குரங்கு மனம் என்னவெல்லாமோ யோசிக்கிறது.. போலிசில் உடன்  புகார் செய்வது  கட்டாயம் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மட்டும் தெரியாத செய்தியா அது.  வண்டியின் ஆர் சி புக்கையும் இன்சூரன்சையும் தேடி எடுத்தேன். போலிஸ் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டேன். அதற்கான பிரத்யேக  காவல் நிலையம் எங்கே இருக்கிறது என்று நண்பர்களிடம்  கேட்டுக்கொண்டேன். நேதாஜி சாலையில்  அந்த  போலிஸ்  ஸ்டேஷன் இருந்தது. நடந்தேதான் போனேன்.  அங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டரும் ஒரு ஏட்டும்  இருந்தார்கள். அந்த ஸ்டேஷன்  வாயிலில் போய்  தருவுத்தருவி நின்றேன்.

‘என்ன சேதி’

‘டூ வீலர் களவு போயிடுச்சி சார்’

‘உங்களுக்கு  எடம் எங்க’

‘பெரிய ஆசுபத்திரி எதுத்தாப்புல டெலிபோன் கோர்ட்டர்ஸ்’

‘அங்க ஒரு பெரிய டெலிபோன்  டவர் ஒண்ணு இருக்குமே’

‘அதே இடம் தான் சார். எங்க வீட்டுக்கு முன்னாலேதான் அந்த டவர்  பாட்டமே இருக்கு;

‘எப்ப நடந்தது  இந்த சமாச்சாரம்’

‘நேத்து ராத்திரி. நான் சாயந்திரம் வண்டிய பூட்டி ஷெட்டில வுட்டிருந்தன்.  எல்லாரும் டூ வீலரை அப்படித்தான் விடுவோம். காலையில ரேஷன் கடைக்குப்போலாம்னு கெளம்பினேன். சாவி எடுத்துகிட்டு  ஷெட்டுள்ள  போயி வண்டிய பாக்குறன்  என் வண்டிய காணுல. இதுதான்  அந்த வண்டி  சாவி’

‘சாவிய  வச்சிகிட்டு நாக்க வழிக்கிறதா, சாவி  என்னாத்துக்கு இப்ப.  வண்டிக்கு  கரெக்டா  இன்சூர் பண்ணியிருக்குதா. வண்டிக்கு  ஆர்சி புக் இருக்குதா. ரெண்டையும் ஜெராக்ஸ் போட்டுக்குங்க.  அதுங்கள  கூட  வச்சி வெவராமா   ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக்குடுங்க.. பாப்பம். எங்க பாத்தாலும் களவு களவு.  இதுகதான் இப்ப  நடக்குது  நா என்னத்த சொல்ல’

‘ரெண்டு கொயர்  டிம்மி பேப்பர் வாங்கிட்டு  வந்துடுங்க. அதுவும் வேணும்’

நான் சற்றுத் தயங்கி நின்றேன்.

‘இங்க ஆபிசு வேலைக்குதான். நா ஒண்ணும் பேப்பர  பொறியல் வச்சி சாப்பிடப் போறதில்ல’ வேகமாய்ச்சொன்னார்.

ஆர் சி புக்கையும் இன்சூரன்சு பத்திர நகலையும்  பக்கத்துக்கடையில்

செராக்ஸ் போட்டேன்.  அதே கடையில் இரண்டு கொயர் வெள்ளை பேப்பர் வாங்கிக்கொண்டேன்.

 ‘ வண்டி சின்ன வண்டி போல. அதான் ரெண்டு கொயர் பேப்பரோட முடிச்சிகினாரு’ கடைக்காரர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். செய்யும் தொழில் தெய்வம்தான்.

 வண்டி தொலைந்து போன விபரம் சொல்லி ஒரு மனு எழுதினேன். மனு எழுதுவதெல்லாம் எனக்குத்தெரிந்து இருக்கிறதே  அதிலே ஒரு அல்ப சந்தோஷம்.  போலிஸ் ஸ்டேஷனுக்குப்போய்   மொத்தத்தையும் கொடுத்தேன்.  உதவி ஆய்வாளர் பெற்றுக்கொண்டார். ‘போயிட்டு வாங்க’ என்றார். நான் அங்கேயே நின்றேன்.

‘தகவல் ஏதும் தெரிஞ்சா சொல்றம். இப்ப நீங்க  போவுலாம்’

நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன்.

எ ஃபை ஆர் காபிக்காக இரண்டு முறை போயிருப்பேன்.. அதனையும் ஒரு வழியாய்  வாங்கிக்கொண்டேன்.

‘ஒரு நா  ஒங்க  கோர்ட்டர்ஸ்  வீட்டுக்கு போலிசு  வருவம். சின்ன  ஸ்கெட்ச் போட்டு பாக்குணும். எப்பிடி களவு போனதுன்னு தெரியணும். அக்கம் பக்கம் விசாரிக்கணும். ஆரு மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தா அத கட்டாயம்  இப்பவே  சொல்லுணும். களவு போன  வண்டி எதனா ஆப்டா உங்கள  கூப்பிடுவம். நீங்க வந்து  அதுவுள பாக்குணும்.  இன்னும்  சேதிவ  கனமா இருக்கு. வண்டிய கொண்டுகுனு போனவன் அத சட்டமா  வுட்டுகினு இருப்பான் நாம இங்க சின்னப்பட்டுதான் ஆவுணும் எத்தினி வண்டி களவு போச்சி எத்தினி வண்டிய புடிச்சி கொண்டாந்திங்கன்னு எங்கள  மேல இருக்குற ஆ சாமிவ தொலச்சி எடுத்துடும்.’ சப் இன்ஸ்பெக்டர் சொல்லி முடித்தார். அவரைப்பார்க்கவும் பரிதாபமாக இருந்தது.

களவு போன வண்டியை சரியாய்  இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று  அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும்.  அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ்   இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.

‘போலிசுக்கு நீங்க  குடுத்த  கம்ப்ளெயிண்ட் காபி எஃப் ஐ ஆர் காபி  அப்புறம் போலிசுல  குடுக்குற ‘  நான் ட்ரேசப்ல் சர்டுபிகேட்’  இதுக மூனும் அவசியம்.  போலிசுகாரங்க    அந்த  வண்டிய  நாங்க தேடிப்பாத்தம் அது  அகப்படலன்னு  ஒரு சர்டிபிகேட்டு தரணும் அது முக்கியம்’

‘அது குடுத்துடுவாங்களா’

‘அத அங்க கேக்குணும்’ என்றாள் அந்த அம்மா.

போலிஸ் ஸ்டேஷனுக்கு அலையாய் அலைந்தேன். எத்தனையோ முறை போயிருப்பேன். லேசில் அந்த நான் ட்ரேசபல்  சர்டிபிகேட்டை வாங்க முடியவில்லை. அது எப்படி வாங்குவது என்கிற யோசனையில் இருந்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பக்கிரி என்கிற நண்பர் எழுத்தராக இருந்தார். அவரிடம் யோசனை கேட்டேன். அவருக்கு என்னைக்காட்டிலும் பல நண்பர்கள் அதிகம்  இருந்தார்கள். அவரின் சுபாவமோ இல்லை அவருக்கு முக ராசியோ  அப்படி.  எனக்குத்தான் எந்த  ராசியுமில்லை. இது விஷயம்  எனக்கு எப்பவோ அனுபவமாயிற்று.’ உப்பு விக்கப்போனா மழை பேயும் , மாவு  விக்கப்போனா புயலடிக்கும்’ இப்படி ஒரு பழமொழிக்கும்  எனக்கும்  ஏகப்பொருத்தம் . நண்பர்  பக்கிரிக்கு அங்கங்கேயும் ஒரு ஆள் இருந்தது. அவரைப்பிடித்து இவரைப்பிடித்து   போலிசிலிருந்து எனக்கு ஒரு நான் டிரேசபல் சர்டிபிகேட் வாங்கி வந்து விட்டார். ஆயிரம் ரூபாய் செலவானது என்றார். அதனைக் கையோடு அவரிடம் கொடுத்துவிட்டேன்.  அதுவாவது   நிச்சயம் ஆகித்தான் இருக்கும். காசு பணம்  வாங்கிக்கொண்டால் என்ன  நமக்குக் காரியம் முடித்துக்கொடுப்பவர்கள் தெய்வம்.. காசும் கொடுத்துவிட்டு  காரியமும் ஆகாமல் முகத்தில் கரிபூசிக்கொண்டு  எனக்குத்தான்  எத்தனையோ அனுபவமாகியிருக்கிறது.

‘உங்களுக்கு எவ்வளவு ரூவா இன்சூரன்சுல வண்டிக்கு குடுப்பாங்க’

‘ஆறாயிரம்’ என்றேன்.

‘அந்த ஆபிசுல ஏதும் தரணுமா’

‘இல்லை.’

‘இன்னும் ஒன்னு ரெண்டு  ஆபிசுவ கெட்டுப்போவாமதான்  இருக்கு’ என்றார் அந்த பக்கிரி. அவர் இல்லாவிட்டால் இந்த சர்டிபிகேட் எங்கே நான் வாங்குவது. அந்த சான்றிதழைக் கொண்டு போய்  எஃப் ஐ ஆர் காபியோடு இன்சூரன்சு அலுவலகத்தில் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார்கள். போனேன். ஆறாயிரத்துக்கான காசோலை தந்தார்கள். அதனைச் சேமிப்பு வங்கியில்  டிபாசிட் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் தொலைந்து போன வண்டி   ரூபாய்  பன்னிரெண்டாயிரத்துக்கு செகண்ஹேண்டில் வாங்கியது. படிக்குப் பாதி தேறியது. ஆயிம் பேர் இன்சூரன்சில் பணம் கட்டினால் ஒருவன் செத்துப்போவான். அவன் குடும்பத்திற்கு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு  சாதித்ததாய்ப்  போஸ்டரில் போட்டுக்கொள்வார்கள். தொளாயிரத்து  தொண்ணூற்று ஒன்பது  பேரிடம் வாங்கிய அந்தத் தொகையோ  கொள்ளையோ கொள்ளை இன்சூரன்சு நிறுவனத்தாருக்கு. மனிதன் செத்துப்போய்விட்டால் அவன்  பிள்ளை பெண்சாதி தெருவில் நின்றுவிடுமே என்கிற அச்சத்தை வியாபாரமாக்கிப் பிழைக்கிற  நிறுவனம் தான் இன்சூரன்சு கம்பெனி. சாவு எப்போதும் யாருக்கும்  நிகழலாம் என்கிற  புரியாத விஷயம் அவர்களுக்கு தொழிலின் அடிப்படை.

இப்படியே காலம் போய் கொண்டிருந்தது. வேறு ஒரு வண்டி வாங்கினால் தேவலை. அதுவும் திருடு போகாது என்று சொல்ல முடியுமா. மஞ்சகுப்பத்தில் லட்சம் வண்டிகள் இருக்க்லாம். நம் வண்டிதானா திருடு போக வேண்டும். கடலூர் வருவதற்கு முன்னே  நான் விருத்தாசலம் பெரியார் நகரில் குடியிருந்தேன். அங்கு அப்போது  ஐயாயிரம் வீடுகள் இருந்தன. என் வீட்டுக்குத்தான் திருடன் வந்தான்.

போஸ்டாபிசுக்குள் வேலையை முடித்துக்கொண்டு அந்த வக்கீல் வெளியே வந்தார். டூவீலரின் சாவியை எடுத்து வண்டியைத்திறந்தார். என் வண்டியைத்தான் திறந்தார். சட்டமாய் அமர்ந்து கொண்டார். நான் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன். போய் அவரை  இடை மறித்து ‘அய்யா  இது என் வண்டி சொல்லலாமா’ என ஒரு மனசு சொல்ல இன்னொரு மனசோ வண்டி தொலைந்து போலிசு ஸ்டேஷனுக்கு அலைந்த கதை,  இன்சூரன்சு கம்பெனிக்கு அலைந்தகதை, . வண்டியின் ஆர்  சியின் அசல் நகலை ஒப்படைத்துப் பின்  ஆராயிரம் ரூபாயுக்கு   செக் வாங்கி வங்கியில் போட்ட கதையைச்  சொல்லியது. ’ வாயை மூடு எதுவுமே நடக்காதது போல் உடன்  நட  உன்  அலுவலகத்துக்கு’ என்று யாரோ சொல்வது போல் இருந்தது. அது யாரென்று தேடிப் பார்த்தேன் எனக்குக் கண்ணில் படவேயில்லை.

 எப்போதோ என் வசமிருந்த டூவிலர்.  அதனை  அந்த வக்கீல் ஓட்டிக்கொண்டு ஜம்பமாய்ப் புறப்பட்டார்.  நான் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருந்தேன். 

‘டெலிபோன் ஆபிசு சாருக்கு என்ன ஜோலி. போஸ்டாபீசுல   அதுவும்  இந்த நேரத்துல’ என்னை வக்கீலுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. எனக்குத்தான் அவரைத் தெரியவில்லை.

‘ இங்க  பி அண்ட்  டி கோவாப்ரேடிவ் ஸ்டோர் இருக்குதுல்ல . அதுல கொஞ்சம் மளிகை ஜாமான்  வாங்கணும் அதான்’

‘ட்யூடி  நேரமாச்சே இது’

‘ ஸ்டோர் மேனேஜர்  பாயிகிட்ட  நா  ஜாமான்  லிஸ்டு  குடுத்துட்டு போயிட்டா.  போட்டு வச்சிடுவாரு சாயந்திரம்வந்து எடுத்துக்குவேன்’’

எனக்குக் கூட  பேச  சரியாய்த்தான் வருகிறது நானே  எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

‘தப்பில்ல. பாத்துகுங்க. நா வரேன்’  சொல்லிய  அந்த வக்கீல் என் வண்டியில் தான் விர்ரென்று புறப்பட்டார்.