ஒரு தனித்துவமான
காடு
இந்நூலை சிந்தியிலும்
இந்தியிலும் எழுதியவர் ஹூந்தராஜ் பல்வாணி. இவர் சிறுகதை மற்றும் குழந்தை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்களித்துள்ளார். இந்நூல் சாகித்ய அகாதெமியின் பால சாகித்ய புரஸ்கார் பெற்றிருக்கிறது. பதினாறு
சிறார் சிறுகதைகளின் தொகுப்பை இந்நூலில் நாம் வாசிக்கலாம். சிறார்களுக்கான சிறந்த பொழுது
போக்கிற்கு இந்நூல் உதவ முடியும். அதே நேரத்தில் அவர்களின் ஒழுக்க மேம்பாட்டிலும் இந்நூல் தன் பங்கைச் செலுத்துவதை நாம் உணரலாம். காட்டிலுள்ள பறவைகளும் விலங்குகளும் இணைந்து ஒற்றுமையாக
வாழ்தலை நாம் இங்கே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு காட்டு விலங்கும் தான் வாழும் காட்டை நவீன காடாக மாற்றவேண்டும் என்று உறுதியேற்கிறது.
சாகித்ய அகாதெமியால்
வெளியிப்பட்டுள்ள இந்த நூல் எண்பது பக்கங்கள் கொண்டது. இதனை பெ. சரஸ்வதி சென்னைப்பல்கலைக்கழக இந்தி உதவிப் பேராசிரியர்
தமிழில் மொழி பெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பாளர் கருத்து என்கிற தலைப்பின் கீழ் அவரின்
காத்திரமான பதிவை நாமும் வழிமொழியலாம்.
’சாதாரணமாக
மனிதர்கள் நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ‘நாயைப் போல
நன்றியுள்ளவன்’, ‘கழுதையைப் போல பொதி சுமக்கிறான்’, ’கிளி போல மூக்கு’,’யானைக்காது’,’மயில்
போல சாயல்’,’குயில் போல குரல்’, ‘மாடு மாதிரி உழைப்பவன்’,’மதில் மேல் பூனை’,’ஆமை புகுந்த
வீடு’,’நரியைப் போல தந்திரம்’,’மான் விழி’,’முதலைக் கண்ணீர்’,’சிங்க நடை’,’ காக்கை
போல கூட்டமாக’,’யானை பலம்’, என்று பல விஷயங்களில் விலங்குளையும் பறவைகளையும் உதாரணமாகக்
கூறுவதைப் பார்த்திருக்கிறோம்.’
மனிதரை விட
நல்ல வாழ்க்கையை க் காட்டில் வாழவேண்டும் என்பதில் கூடுதல் அக்கறையுடன் விலங்குகள் சிந்திப்பதை
ஹூந்தராஜ் பல்வாணி சிறார் கதைகளில்
கொண்டு தருகிறார். முதல் கதை ’ஒரு தனித்துவமான
காடு’. அனைத்து விலங்குகளும் காலையில் ‘காட்டுச்செய்தி’ என்கிற செய்தித்தாளைப் படிக்கின்றன.
அதனைப் படித்த பிறகுதான் மற்ற வேலைகள் ஆரம்பிக்கின்றன. இந்தக் காட்டிற்கு அரசன் சேர்
சிங்கம். காட்டை நிர்வகிக்க ஒரு அதிகாரியைத் தேர்தல் மூலம் ஆண்டு தோறும்
விலங்குகள் தேர்ந்தெடுக்கின்றன. மனிதர்களைப்
போலத் தவறான நம்பிக்கைகளும் மூட நம்பிக்கையும் இவைகளிடம் இல்லை என்கிறார் ஆசிரியர்.
இரண்டாவது கட்டுரை ‘நகரத்து அரசரும் காட்டு அரசரும்’. இதனில் நுட்பமான ஒரு செய்தி சொல்லப்படுகிறது.
லாலீ என்கிற குள்ள நரி சொல்கிறது,’நகரத்து அரசரிடம் இன்று என்ன இருக்கிறதோ அது நாளை
இல்லாமல் போகலாம். நாளை வேறொரு பல சாலி அரசர்,
அவர் மீது படையெடுத்து அவரிடம் இருப்பதை
எல்லாம் அபகரித்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுடைய வன அரசை உங்களிடமிருந்து அபகரிக்க இன்னும் யாரும்
பிறக்கவில்லை. இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் உண்மையான அரசர் நீங்களா? அல்லது நகரத்து அரசரா?’
ஹப்பூ என்கிற
யானை வைத்திருக்கும் இனிப்புக்கடையில் இனிப்புக்களைச்
சரியாக மூடிவைக்கவில்லை. அதனால் இனிப்பை வாங்கித்தின்ற அனேக விலங்குகள் நோய்வாய்ப்
பட்டன. கரடி டாக்டர் சந்த் ‘ இனிப்புக்களைச்சரியாக மூடி வைக்க அறிவுறுத்துகிறது. ஹப்பூ யானையும் அதனை ஒத்துக்கொள்கிறது. எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறது.
’ மகிழ்ச்சியில்
இடையூறு’ என்கிற அடுத்த கதையில் குழந்தைகளைக்
கவனிப்பது பெற்றோர் கடமை, பெரியவர்கள் சொல் பேச்சு கேட்பது குழந்தைகள் கடமை
என அறிவுரை தரப்படுகிறது. அடுத்து ‘ இதோ காற்றாடி’ என்கிற கதையில் பலு குரங்கு மரத்தில்
ஏறி சிக்கிக்கொண்ட காற்றாடியைக் கீழே எடுத்து
வந்து உதவி செய்கிறது. அடுத்து வரும் ஆறாவது
கதையில் யானைத்தாத்தா ஹோலிப்பண்டிகை கொண்டாடிய
விவரணை வருகிறது. ஏழாவது கதை சேர் சிங்கத்தின் பிரம்பு என்கிற கதை. கடுமையான தண்டனையை
நிறுத்திய அரசன் சேர் சிங்கத்திடம், கைப்பிரம்பைத் தூக்கி எறிந்துவிடவும் லாலூ லங்கூர் குரங்கு வேண்டுகோள் வைக்கிறது. எட்டாவது கதை ‘ புதிய வருடம்
பிறந்தது, புதிய பொருளும் கிடைத்தது’. இதனில் வரும் ஒரு கடையில் ‘ கடன் உறவை முறிக்கும் கத்தரிக்கோல்,
இன்று ரொக்கம் நாளை கடன்’ என்று சுவாரசியமான வாசகங்கள் எழுதித் தொங்கவிடப்படுகிறது.
’அடுத்து தேர்வு நெருங்கி விட்டது’ கதையில்,’ நாம் தொலைக்காட்சி
மற்றும் சினிமா பார்த்து நேரத்தை வீணடிப்பதில்லை. இரவு வெகு நேரம் விழித்திருந்து நடன
நிகழ்ச்சி பார்ப்பதில்லை’ என்கிற நியாயத்தை
யானைத்தாத்தா சொல்கிறது. சேர் சிங்கத்தின் அரண்மனை என்கிற கதையில் சிங்க அரசன்
‘ இந்த அரண்மனை என்னுடையது மட்டுமல்ல,அனைவருக்குமானது அனைவரும் சேர்ந்துதான் இதனைக்கட்டினோம்
என்கிற பொதுவுடமை விஷயம் பேசுகிறது. பதினொன்றாவது
கதை’ வண்டி தாமதமாகிவிட்டது’.. வாழைப்பழத்தோலை வீதியில் வீசியது பலீ குரங்கு. ஹேமீ
மான் அதனை மிதித்துக் கீழே விழுந்து விடுகிறது.
அதற்கு வைத்தியம் நடக்கிறது. வண்டிக்குத்
தாமதம் பலீ குரங்கு வாழைப்பழத்தோலை ஜன்னல்
வழி வீசியதே என்கிற செய்தி நமக்குத் தரப்படுகிறது. அடுத்த கதையில்’ பால் குடித்தார் கணேஷ் ‘ என்கிற
செய்தியால் மக்கள் பட்ட துன்பம் பேசுகிறது. வன ராஜா சேர் சிங்கம் தவறான செய்தியை இனி ஒளிபரப்பாதீர் என ஒரு ஆணை பிறப்பிக்கிறது. அடுத்து ’குண்டு வெடிப்பு
’என்கிற கதை. இதனில் ‘ நகரத்தில் பரவியுள்ள தீவிரவாதம் நம்முடைய காட்டிலும் பரவ விடாமல்
நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிற தரும நியாயம்
சொல்கிறது. பதினாலாவது கட்டுரை ’காட்டில் நடந்த தேர்தல்’. இதனில் ஹகூ யானையின் மகன்
’வன நிர்வாகி’ தேர்தலில் வெற்றி பெறுகிறது. ’நகருக்குள் புகுந்த
வெள்ளம் ’என்னும் கதையில் பறக்கும் பறவைகள்
தவிக்கும் மனிதர்க்கு உணவுப்பொட்டலங்களை மேலிருந்து போடுகின்றன. கடைசியாக வரும் கதை ’சேர் சிங்கத்தின் கொள்கை அறிக்கை’.
இக்கதையில் வரும் செய்தி, ‘ நாங்கள் ஒரு பொழுதும் சிறு சிறு விஷயங்களுக்காக எங்களுக்குள்
சண்டையிட மாட்டோம் ,பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்போம், சிறியவர்களிடம் அன்புடன் இருப்போம்’
என்பதே.
காட்டின்
அறக்குரல் இந்தப் படைப்பில் ‘ஹூந்தராஜ் பல்வாணி’ மூலம் ஓங்கி சொல்லப்படுகிறது. பெ.
சரஸ்வதியின் மொழிநடை கதைகளை நன்கு
வாசிக்க
உதவி செய்கிறது. சிறார்கள் நிச்சயம்
பயன் பெறுவர். - எஸ்ஸார்சி
No comments:
Post a Comment