இலக்கியம் சில புரிதல்கள்.
இலக்கியம்
என்றால்
என்ன? இலக்கியம் என்பது மானிட சமூகத்தைப்பிரதிபலிக்கின்ற
ஓர் ஆவணம்.மனித வாழ்க்கையில் எதனை ஈர்ப்புள்ளதாகக்
கண்கிறோமோ அதனைக் கவனத்தோடு ஆவணப்படுத்துவது இலக்கியமாகிறது. வாழ்க்கை நமக்கு என்ன
அனுபவத்தைக்கொடுக்கிறதோ அதனை நாம் இலக்கியத்தில்
மீட்டுருவாக்கம் செய்கிறோம். ஓர் நிகழ்வின் அனுபவம் நம் மனதில் ஏற்படுத்தும் எண்ண அலைகள் மற்றும்
சிந்தனை அதிர்வுகள் எவை? இதன்வழி எதனைத் தெரிந்து கொண்டோம், எப்படி உணர்ந்துகொண்டோம் என்பதனை
அடுத்தவர்க்கு எடுத்து இயம்புகிறோம். அந்த நிகழ்வின் அல்லது அனுபவத்தின் பொதுத்தன்மை
எப்படி அமைகிறது அது இந்த மானிடப்பெருந்திரளுக்கு
ஆக்கம் தருமா? அதன் உடனடித்தேவைதானென்ன? என்கிற
இத்தனைத் தரவுகளைக் கணக்கில் கொள்ளவேண்டியது இன்றியமையாதது.
மனிதன் ஓர் சமூக விலங்கு.தனித்து இயங்குதல் என்பது சாத்தியப்படாத
ஒன்று. அது வழி வந்த மரபும் அன்று மாண்புடையதும் ஆகாது. ஒரு மனிதன் அவனைச்சுற்றியுள்ள
மனிதர்களோடு எந்த விஷயத்தையும் எப்போதும் பகிர்ந்துகொள்ளவே
அவாவுகிறான். எதனையும் உடன் இருப்பவர்களோடு பகிர்தல் என்பது அவனுடைய இயற்கைக்குணம்.
ஒரு விஷயத்தைப் பகிர்தலில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடுகாணமுடிகிறது. ஒரு நிகழ்வு
காட்சியாகும்போது பல்வேறு எண்ண அலைகளை மனிதனுக்குள்
விளைவிக்கிறது. அது மனிதனின் உணர்வு நிலைகளைத் தட்டி எழுப்புகிறது. கற்பனையைக் கிளறச்செய்கிறது. சமூக தளத்தில் அதன் வெளிப்பாடு வெவ்வேறு கலை வடிவங்களாய்
உருக்கொள்கிறது..
மாத்யூ ஆர்னால்ட் என்னும் ஆங்கில எழுத்தாளன், இலக்கியம்
என்பது மனித வாழ்க்கையை விமரிசனத்துக்குள்ளாக்குவது Literature is criticism of
life என்பார். ஒரு பெரும் படைப்பு என்பது படைப்பாளியின் மூளை மற்றும் இதயம் இவற்றினின்று
பிறப்பது. ஆக அறிவும் அன்பும் இசைந்து ஒரு
படைப்பு வெளிப்படுகிறது. ஒவ்வொரு படைப்பிலும் பிரத்யேகமாய் ஒரு மெய்த்தன்மை காணப்படும்.
ஒரு புதுமையொன்றும் வெளிப்படும்.
தான் வாழ்ந்த வாழ்க்கை, தான் பார்க்க நேர்ந்த சம்பவம்,
இவை ஏற்படுத்திய எண்ண அலைகள்,அந்த எண்ணங்கள் வெளிப்படுத்திய உணர்வு நிலை, இவைகளினின்று
பெறப்பட்டது என்ன என்பதையே ஒரு படைப்பாளி கற்பனச்செறிவோடு இலக்கியமாக வெளிப்படுத்துகிறான்.
ஒரு வாசகன் ஒரு படைப்பை வாசகனாய் அணுகுகிறான். படைப்பாளியோ
தனது படைப்பை வாசகத்தளத்தில் நிறுத்துகிறான்.அப்படைப்பு
பின்னர் சமூக விஷயமாகிறது.
இராமாயணம் படைத்திட்ட
வால்மீகி முனிவர் கிரவுஞ்சப்பறவையின் இணையைப் பார்க்கிறார். தாமசா நதிக்கரை. கங்கைநதியின் ஆளுகையில் உள்ள நிலப்பகுதி. ஜோடிப்பறவைகள் அவை. ஆடிப்பாடி
அவை விளையாடி மகிழ்கின்றன. காதல் செய்கின்றன, நடனமாடி குதூகலிக்கின்றன. ஒரு வேடன் அவ்விடம்
தோன்றுகிறான். அந்த இணையில் ஆண் பறவையை அம்பு எய்திக்கொல்கிறான். அது சுருண்டு விழுந்து
உயிர் துறக்கிறது. பெண்பறவை துயரத்தில் ஓலமிடுகிறது. தன் துணை உயிர்துறந்ததை எண்ணி
எண்ணி அழுதுகொண்டே இருக்கிறது. அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வருகிறது. சோகத்தின்
பிடியில் அந்த சூழலே மாறி நிற்கிறது. அதுதான் அந்த ஆதிகவியை ஒரு பெருங்காவியம் எழுதவைக்கிறது.
அந்த உணர்வுக்கு ஒரு வடிவம் தர வால்மீகி முற்படுகிறார். நமக்கு இராமயண காவியம் கிடைக்கிறது.
இப்படித்தான் இலக்கியங்கள் பிறக்கின்றன.
சித்தார்த்தன்
ஒரு வயோதிகனை, ஒரு நோயாளியை, ஒரு சவ ஊர்வலத்தை என மூன்று காட்சிகளைக்காண்கிறான். இவை
அவனுள்ளத்தே பல வினாக்களை எழுப்பித் தூக்கம்கெட வைக்கின்றன. அரசகுலத்துச்செம்மல் அரண்மனையை விட்டு நீங்குகிறான்.
மனவி மக்களைத்துறந்துகானகம் எங்கும் அலைந்து திரிகிறான். அவன் மனதைத்துளைக்கும் வினாக்களுக்கு விடை தேட முற்படுகிறான். இறுதியாய்
போதி மர நிழலில் அமர்கிறான். சித்தார்த்தனுக்கு ஞானம் பிறக்கிறது. உலகுக்கு அவன் அறிவொளி வீசும் புத்தனாகிறான்.
சிலப்பதிகார காவியத்தில் சேரநாட்டில் புலவர் சீத்தலைச்சாத்தனார், சோழநாட்டு பூம்புகாரின் கோவலன் வானில் தோன்றி தன் துணைவி
கண்ணகியை அழைத்துச்செல்வதைக்காண்கிறார். அதனை இளங்கோவடிகளுக்குச் சொல்கிறார்.
இளங்கோ அடிகள் அந்த முழுச்செய்தியையும் கேட்கிறார். சிலப்பதிகார காவியத்தைப்படைக்கிறார்.
ஆக ஒரு தூண்டுதல் ஒரு பெருங்காவியத்தின் பேரிலக்கியத்தின்
ஆதாரமாக அமைகிறது.
எம் .கே. காந்தி சிறுவனாய் அரிச்சந்திர நாடகம் பார்க்கிறார்.
விடிய விடிய அந்நாடகத்தைப்பார்த்துக் கண்கள் குளமாகின்றன.காந்தி’ இனி சத்தியத்தை மட்டுமே பேசுவேன் ’என்று உறுதி ஏற்கிறார். அவர் வக்கீல் படிப்பதற்காக லண்டன் புறப்பட்டபோது அன்னைக்குக்கொடுத்த வாக்குறுதிகள் மூன்று. மது மாமிசம் இவைகளைத்தொடமாட்டேன். பிற பெண்களையும் தொடமாட்டேன்
என்பதே அது. கொடுத்த வாக்குறுதியை மீறாது காத்த
காந்தி நடைமுறையில் சத்தியவானாகிறார். பேரறிஞர் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம்
(Un to this last) நூலை வாசிக்கிறார். வாழ்க்கை முழுவதும் சத்தியம் அகிம்சை மகாத்மாவின்
இரு ஆயுதங்களாகின. அது காந்தியின் சிந்தனையை அசைத்துப்பார்க்கிறது. காந்தி தென்னாப்பிரிக்கா
செல்கிறார். வக்கீல் தொழிலுக்காகத்தான். அங்கு
இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகண்டு வெகுண்டெழுகிறார். முதல் வகுப்பு
டிக்கட் வாங்கியிருக்கிறார். இந்தியர் என்பதால் ரயில் வண்டியிலிருந்து வெள்ளைய டிக்கட்
பரிசோதகரால் காலணியால் அடித்து விரட்டப்படுகிறார்.
‘நாயும் இந்தியர்களும் கருப்பர்களும் நுழைவதற்குத்தடைசெய்யப்பட்ட வெள்ளையர்களின் வீதிகளைப்பார்க்க்கிறார். காந்தி மனம் நொந்துபோகிறார். தென்னாப்பிரிக்காவில்
எண்ணற்ற போராட்டங்கள் நடத்துகிறார். இந்திய விடுதலை இயக்கத்தைத் தலைமை தாங்குவதற்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறார். மகாத்மாவின்
லட்சியங்களுக்குத் தென் ஆப்ரிக்காவில் வலுவான அடித்தளம் அமைக்கப்படுகிறது.
ஆங்கில மாகவி வில்லியம்
வேர்ட்ஸ்வர்த் ஏரி குளங்கள் என நீர்நிலைகள் புல் வெளிகள் நிறைந்த
ஏரி மாவட்டத்தில் பிறக்கிறார். இயற்கைக்காட்சிகளைக் காண்கிறார். இயற்கையிடம் மனத்தைப்பறிகொடுக்கிறார். கவிஞனாகிறார்.
I wandered lonely as a cloud என்கிற
கவிதையில்,
They flash upon that inward eye
Which is the bliss of solitude
And then my heart with pleasure fills
And dances with daffodils. என்று முடிக்கிறார். கவிஞர் தனிமையில் இருப்பது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தருணம். அவர் மனக்கண்ணில்
முன்புகாட்சியாகிய அதே மஞ்சள் மலர்கள் மீண்டும்
ஒளிர்கின்றன. அவரின் இதயம் ஆனந்தத்தால் நிறைகிறது.
Solitaray reaper
என்கிற ஓர் கவிதை. வயல் வெளியில் தானியம் அறுக்கும் ஒரு சிறுமியை க்கண்டு வர்ட்ஸ்வர்த்
பாடுகிறார். ‘ Behold her single in the
field, You solitary Highland Lass! என்று தொடங்கி ‘ Some natural sorrow loss or pain, that has
been and may be again? என்று தொடர்ந்து
Whatever the theme the maiden sang, As if her song could have no ending இப்படியும்
சென்று The music in my heart I bore, long after it was heard no more என்று முடிக்கிறார்.
வயலில் அவள் ஓரியாய் நிற்பதைப் பாருங்கள்
உயர் நிலத்துத் தனிமைப்பெண்ணல்லவோ நீ
இயற்கை இழப்போ
வருத்தமோ உடன் இருந்து
பாதிக்கிறது அவளை
மீண்டும் அது தொடரவும்
செய்யுமோ ,
என்று தொடங்கிய
வர்ட்ஸ்வர்த்.
எந்த நோக்கத்தோடு
பாடினாளோ அவள்
நிறைவுறும் பாட்டா அது
என்றும் சொல்லி
என் இதயத்தில் வதியும் பாடல் அது
அதனை வேறு எங்கேயும் நான் கேட்டதேயில்லை,
இப்படிக் கவிதையை முடிக்கிறார்.
தமிழ்க்கவிஞன் பாரதி தன்னை ஷெல்லி தாசன் என்று அழைத்துக்கொண்டவன்.
ஷெல்லியின் ஆங்கிக்கவிதைகள் பல படித்திருப்போம். வானம்பாடியைப்பார்த்து ஷெல்லி பாடிய
அந்த ‘To a Skylark’ கவிதை அனைவராலும் போற்றப்படுவது. கடந்துபோனவைகளையும் வர இருப்பனவைகளும்
எண்ணி எண்னி வாழும் காலத்தைத்தொலைத்துவிடுபவர்கள்
மனிதர்கள் நாம் . வானம்பாடி அப்படி இல்லை.
அது வாழும் கணப்போது கூட வானில் உயரப்பறக்கிறது
பாடுகிறது.பாடிப்பாடி இன்னும் உயரே உயரே பறந்து
செல்கிறது. அந்தப்பறவை அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு இணையாக எதைச்சொல்வது, ’நீ அனுபவிக்கும்
அந்த ஆனந்தத்தில் பாதி போதும்
எனக்கு, அது எப்படி என்பதைச்சொல்லிக்கொடேன்’
என்று பறவையைக்கவிஞன் வேண்டுகிறான். Skylark
கவிதையில் கவிஞரின் வரிகள் இதோ.
We look before and after
And pine for what is not
Our sincerest laughter
With some pain is fraught
Our sweetest songs are those that tell
Of saddest thought.
கீட்ஸ் என்னும்
ஆங்கிலக்கவிஞன் சத்தியத்தையை அழகைப்பற்றிப்பேசுகிறான். ’உண்மையே அழகு. அழகுதான் உண்மை.
உலகில் அதனை அறிவதே பிரதானமானது. அது தவிர்த்து
வேறு எதுதான் மனிதன் அறிய வேண்டும்’ என்று பேசுவான். கீட்சின் கவிதை வரிகள் Ode on a Gracian
Urn என்னும் கவிதையில் இப்படி வரையறை தருகின்றன.
Beauty is tuth,truth beauty-that is all ye know on
earth and all ye need to know’
கேட்ட பாடல்களிலும் இனி கேட்கவிருப்பவை சுவைகூடியவை என்கிறார் கீட்ஸ்.
‘Heard melodies are sweet but those unheard are sweeter’
ஜார்ஜ்கிஸிங் என்னும் ஆங்கில நாவலாசிரியர் கவிஞர் கீட்ஸ் பற்றிக்குறிப்பிடும்போது இப்படிச்சொல்லுவார்.‘TO
like Keats is a test of fitness for understanding poetry just as to like
Shakespeare is a test of general mental capacity ’ கீட்சின் கவிதைகளைப் புரிந்துகொள்ளாதவன் கவிதைகள்
என்ன என்பதையே அறியாதவன் என்று நாம் கொள்ள முடியும்.
A Thing of Beauty
என்னும் கவிதையில் கீட்ஸ் இப்படிப்பேசுவார்.
A Thing of beauty is joy for ever
Its loveliness increases it will never pass in to
nothingness but will keep
A bower quiet for us, and a sleep
Full of sweet dreams and health and quiet breathing.
அழகானவை எப்போதும்
மகிழ்ச்சி தருபவை. உதிக்கும் கதிரவனும் குளிர் நிலவும் மர நிழலும் பிரவாகித்துச்செல்லும்
ஆறும் புல்வெளியும் மக்களுக்கு ஆனந்தம் அருள்பவை.
.வாழும் சூழலும்
நேரும் அனுபவங்களும் ஒரு படைப்பாளியின் படைப்பாற்றலுக்கு கூடுதலாய் வளம் சேர்க்கின்றன.
ஒரு மொழியின் இலக்கியப்பொக்கிஷங்கள் அனைத்தும் அந்த மொழியிலுள்ள ஒரு படைப்பாளியால் உள்வாங்கப்படுதல் மிக முக்கியமானவிஷயமாகும். படைக்கும்
மொழியிலுள்ள உன்னதங்களை வாசித்திராத ஒரு படைப்பாளி நிறைவாக ஒரு படைப்பினை வழங்குதல்
சாத்தியமாகாத ஒன்று. எடுத்துக்காட்டாக தமிழ் மொழியின் தொல் இலக்கியங்கள் அதாவது சங்க
இலக்கியங்களை ஆய்ந்திராத ஒரு படைப்பாளி தன் படைப்பு மொழி குறித்துப் பெருமைகொள்ளல்
எங்ஙனம்?. புறநாநூற்றுக்கருத்துச்செல்வங்கள் தமிழ் மொழியின் விழுமியங்கள். ஈராயிரம்
ஆண்டுகள் முன்னர் தமிழ் மக்கள் எத்தகைய உயர்ந்த பண்பாட்டு நெறியோடு வாழ்ந்திருக்கிறார்கள்
என்பதறிய எவருமே வியந்து போகலாம். பண்பாட்டின்
உச்சம் தமிழ் மக்கள் தம் அன்றாட வாழ்வில் அனுபவமாக்கியிருத்தலை நாம் தரிசிக்க
முடிகிறது.
பெண்பாற்புலவர் ஒளவையார் புறநாற்றுக்கவிதையில் இப்படிப்பேசுவார்.
‘நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி வாழிய நிலனே’ (புறம் 187)
நாடோ இல்லை காடோ,
தாழ்நிலமோ இல்லை உயர் நிலமோ, ஆண்மக்கள் தம்மை அந்நிலத்தில்
எப்படி நடத்திக்கொள்கிறார்களோ அப்படியே அந்நாடு
அமைகிறது. பெண்டிரெப்போதும் பண்பாடு போற்றுபவர்களாகத்திகழ்வதால் ஆண்மக்கள் தமது நடத்தையால்
தாம் வாழும் சமூகத்தின் குணநலனைத்தீர்மானிப்பவர்களாக அமைகிறார்கள். எத்தகைய கூர்மையான
சமூகப்பார்வையை இக்கவிதை எடுத்துப்பேசுகிறது.பண்டைய தமிழ்ச்சமூகத்தில் பெண்மக்கள்
அத்தனை ஒழுக்க சீலர்களாக விளங்கியிருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை.
பன்னாள் பயின்று பலரோடு செல்லினும் அரசன் அதியமான் எத்தைய
விருந்தோம்பும் குணமுடையவன் என்பதை ஒளவையார்
குறிப்பிடுகிறார்.
‘ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்
பன்னாள் பயின்று பலரோடு செல்லினும்
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ’ ( புறம் 101)
பலரைக்கூட்டிக்கொண்டு
பலநாட்கள் அதியமானிடம் சென்றாலும் முதல் நாள் எப்பிடி அன்பாக இருந்தானோ அப்படி என்றும் இருப்பவன் என்கிறார்.
மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரு கவிதைத் தந்திருக்கிறார்
இப்படி.
‘தெண்கடல் வலாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப்பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரோக்கும்மே
செல்வத்துப்பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே’ ( புறம் 189)
வெண்குடைகீழ் அரசாளும்
அரசனோ, விலங்குகளை மேய்த்துக் கானகம் வாழ்பவனோ
யாராயிருந்தால் என்ன? இருவர்க்கும் உண்பதும் உடுத்துவதும் ஒன்றேயாகும். பொருட்செல்வம் நம்மிடம் இருப்பது இல்லாதவர்க்கு
ஈந்து மகிழ்வதற்கே என்பதை அழுத்திச்சொல்லும்
ஒரு புலவனை நாம் பெருமிதத்தோடு பார்க்கிறோம்.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் புலவர் அன்றைய தமிழர் பண்பாட்டின் உச்சத்தைப்பேசுகிறார்.
‘உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரன்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்னமாட்சி அனையராகி
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே.’ (புறம் 182)
புகழ்குறித்து வாழ்ந்ததே பண்டைச்சமூகம். சுயநலம் இன்றி
இயங்கிய சமூகம் அது. அடுத்தவனின் நன்மைக்கு வேறு ஒருவன் தானாக உழைப்பது என்பது மெய்யாகவே இவண்
நிகழ்கிறது. அந்த உயர்குணத்தால் மட்டுமே இப்பூவுலகம்
செழித்துத்தழைத்து நிற்கிறது. தேவலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும் பங்கிட்டு உண்ணும்
பண்பாளர்கள் இவண் வாழ்கிறார்கள். எப்படி ஒரு சமூகம் ஒழுக்கத்தால் செம்மாந்து இருந்தது
என்பதனை ஓவியமாய்த்தீட்டுகிறார் இளம்பெருவழுதி.
தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் எனப்பேசப்படும்’ யாதும் ஊரே
யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின்
கவிதைக்கு வருவோம்.
‘’யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர
வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனியது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாதென்றலும் இலமே மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர்வழிப்படூஉம் புணைபோல
ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ (புறம் 192)
பெருமைமிகு சான்றோரைத் தமிழர்கள் வியந்து நோக்குவதுமில்லை. அதைவிட எதுவும் அறியா எளியோரை இகழ்வது என்பது எப்போதுமே இல்லை. இந்நற்குணம் வாய்ந்த பெருமக்கள்தாம்
இந்த மண்ணில் உலவி வாழ்ந்து விடைபெற்றுச்சென்றிருக்கிறார்கள். அவர்கள் நம்
வேர் என்பது எத்தகைய பீடுடைய செய்தி.
இவை அத்தனையும் உள்வாங்கிச்செறித்துக்கொள்ளாத
ஒருவரின் கவிதை உள்ளம் என்ன பக்குவம் பெறும்.
நரிவெரூஉத்தலையார் என்னும் புறநாநூற்றுப்புலவர் ’ நீ நல்லவை
செய்யாது போயினும் பரவாயில்லை தீயவை செய்யாதிருப்பாயாக’. அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது என்கிறார். கவிதை
இதோ இப்படி வருகிறது.
‘பல் சான்றீரே! பல் சான்றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சிக்கூர்ம்படைக்கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும்காலை இரங்குவர் மாதோ!
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லோரும் உவப்பதன்றியும்
நல்லாற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே! ( புறம் 195)
நல்லாறு அதாவது
நல்வழி செல்கிறோம் என்று சொன்னால்
அது நன்மை செய்யாவிடினும் தீமை செய்யாது இருப்பதே. . உயிர் பிரியும் அக்கணம் உம்மால்
ஒன்றும் செய்ய இயலாது. உமது தலைமுடி கயல் மீன் முள் என வெளுத்துக் கிடக்கின்றது.
வயதாகிய பெரியோரே! நன்மை செய்ய வேண்டாம் தீமையாவது செய்யாதிருங்கள் என்கிறார்.
இவ்வுலகம் இன்பமும் துன்பமும் நிறைந்தது. ஒரு வீட்டில்
இறப்பு ஒரு வீட்டில் திருமணம். மணமாகி இணைந்து
மாலை அணிவோர் சிலர், உலகைவிட்டு மறைந்து போனவர்க்காய்
கண்ணீர்விட்டு அழுவார் இன்னும் சிலர். கடவுள் என்ன மன்றப்பண்பு உள்ளவனா? இவ்வுலகத்தை
சரியாகப் புரிந்துகொண்டவர்களால் மட்டுமே இனியதைக்காண
வாய்க்கும். பிறரால் இயலாது என்கிறார் பக்குடுக்கை நன்கணியார்.
’ஓரில் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ந்தண் முழவின் பாணிததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப்பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே’ (புறம் 194)
பிசிராந்தையார் என்னும் புலவர் வயதில் மூத்தவர். அவருக்குத்தலையில் நரைத்தமுடி ஒன்று கூட காணப்படவில்லை. இது எப்படிச்சாத்தியம்
என்று அவரிடம் கேள்வி வைக்கிறார்கள். பிசிராந்தையார் விடை சொல்கிறார்.
‘யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்காகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான்.அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.’ ( புறம் 191)
ஐம்புலன்களை அடக்கிய
பல விஷயங்கள் முற்றாய்த்தெரிந்து ஆயின் அடக்கமே உருவான சான்றோர் பலர் தனது ஊரில்
வாழ்வதாகச்சொல்கிறார் பிசிராந்தையார். மனைவி மக்கள் அறிவு நிறைந்தவர்கள். என் இளையர்
எந்நாட்டு அரசர் எவருமே தீயவை செய்யமாட்டார்கள்.
தனக்கு நரை தோன்றாததற்கு இவைகளைக் காரணமாகச்சொல்கிறார் புலவர். நம் பழம் பெருமை நம்மை
பிரமிக்க வைக்கிறது.
‘உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும் பிற்றைநிலை முனியாது
கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன
உடன் வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால்
தாயும் மனம் திரியும் ஒருகுடிப்பிறந்த
பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்தநாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால்
ஒருவனும் அவன் கண் படுமே. ( புறம் 183)
இப்படிக்கல்வியின் சிறப்பை உயர்த்திப்பேசுகிறார் ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியன். நான்கு வர்ணங்களில் கீழ் நிலையில் இருப்பவன் கல்வி கற்றால் அவனே
ஏனைய மூன்று வர்ணத்தாரால் போற்றப்படுவான் என்கிறார். மூத்தோன் என்பதைக்கணக்கில் கொள்ளாமல்
அறிவுடையோன் சொல்லும் வழி அரசனும் செல்வான்.பெற்ற தாயுமே அறிவுடைய குழந்தைமீது அதிக
அன்பு செலுத்துவாள் என்கிறார் புலவர்.
சங்க காலத்திலும் வறுமையின் கொடுமை இல்லாமலில்லை. ஒரு புலவன்
வீட்டுக்கு ஒரு விருந்தினர் வருகிறார். அவர் மிகவும் வேண்டிய விருந்தினர். ஆயின் என்ன?
புலவரின் வறுமை அவரை விருந்தினரிடமிருந்து ஒளிந்து மறைந்து வாழ நிர்பந்திக்கிறது. பெருங்குன்றூர்
கிழார் அந்த கையறு நிலையை எத்தனை அழகாகக்கவிதையாக்கித்தருகிறார் அது காண்போம்.
‘உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தாவாழ்க்கை
பொறிப்புணர் உடம்பில் தோன்றி என்
அறிவுகெட நின்ற நல்கூர்மையே’ ( புறம் 266)
வறுமை மனிதனை எது
செய்யக்கூடாதோ அதனைச்செய்யப்பணிக்கிறது. அறிவு கெட ,வைக்கும் வறுமை என்று அதற்கு அடைமொழி
தருகிறார் புலவர்.
ஒல்லையூர் நாட்டு அரசன் சாத்தன் இறந்துபோகிறான். குடவாயிற்கீரனார்
என்னும் புலவர் அந்தத்துயரை எத்தனைத் துயரத்தோடு வர்ணிக்கிறார் பாருங்கள். ’ஏ முல்லைச்செடியே ஒல்லையூர் சாத்தன் அன்றோ இறந்துபோனான். அப்படிப்
பெருந்துயர் இருக்க உனக்கு பூ பூக்க எப்படித்தான்மனம் வந்தது? என்கிறார்.
’இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்யாழ் மருப்பின் மெல்லவாங்கிப்
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர்க்கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’
என்று பேசுகிறது கீரனார் கவிதை.( புறம்242)
பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் வறுமையில் உழன்று, அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் சென்று ஏதும்
பெறலாம் எனச்செல்கிறார். அரசன் புலவனைக்காணாது அலட்சியமாக இது கொண்டு செல்க என எதுவோ பொருள் தந்து அனுப்புகிறார். புலவர் அரசன் தன்னை
அவமதித்து விட்டதை உணர்கிறார்.
’குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டெனென்
செலற்கு என
நின்ற என்நயந்து அருளி இது கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கரும் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப்பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்து ஆயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே’ ( புறம் 208)
என்னைப்பார்க்காமல்
அரசன் எனக்குப் பொருளை அளிப்பதை யான்
ஏற்கிலேன். என்னை அறிந்து என்னைக் கண்ணால்
கண்டு தினை அளவு பரிசிலை கொடுத்தாலும்
அதை மகிழ்ச்சியோடு ஏற்பேன். யான் என்ன வாணிகப்பரிசில் என்று ஊதியம் மட்டுமே
பெறும் தரம்தாழ்ந்த புலவனா? அல்லேன் என்கிறார்.
எத்தனைத் தன்மானம் பெருஞ்சித்திரனார்க்கு,
கவிதை கண்டுவியந்து நிற்கிறோம்.
மோசிகீரனார் என்னும் புலவர் ஒரு அரசனுடைய நல்லாட்சி எத்தனை
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனைக்குறிப்பிடுகிறார்.
‘நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ (புறம் 186)
நல்லாட்சிமட்டுமே
ஒரு நாட்டின் வளமான இருப்புக்கு அடிப்படை என்பதனைச் சுட்டுகிறார்.
புலவர்கள் சுயமரியாதை
பேணுபவர்களாக வாழந்ததைப் பல பாடல்கள் நமக்குச்சொல்கின்றன.
‘மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சியில்லோர் உடமைஉள்ளேம்
நல்லறிவு வுடையோர் நல்குரவு
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே’ ( புறம் 197)
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது இப்பாடல்.
சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவன் பற்றி இப்புலவர் இப்படிக்குறிப்பிடுகிறார்.
எத்தனைத்துன்பம் வந்தாலும் என்னை உணர்வு நிலையில் விளங்கிக்கொள்ளாத ஒருவரிடம் பொருள்
கேட்டுப்பெறமாட்டேன். ஆயினும் வறுமையில் உழலும்
நல்லறிவுடைய பெருமக்களிடம் மகிழ்ச்சியோடு கேட்டுப்பெறுவோம். தமிழ்ச்சான்றோர்கள் அன்று
வாழ்ந்த பண்பாட்டின் உச்சத்தை இப்புலவர் தொட்டுக்காட்டுகிறார்.
’வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் மெய் கூறுவல்’ ( புறம் 139) என்று மருதன் இளநாகனார்
பேசுவதும்,
‘இம்மைச்செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே’ ( புறம் 134)
என்று உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் தாம் செய்யும் அறச்செயலுக்குப்
பேரம் பேசும் கீழ்மை அறியாதவர்கள் தமிழர்கள் என்பதைச்சொல்லிச்செல்கிறார்.
புகழின் உச்சியில் வாழ்ந்திட்ட பாரிமன்னன் சேர சோழ பாண்டிய
வேந்தர்களார் சூழப்படுகிறான். இறந்துபோகிறான். தான் பெற்ற பெண்மக்களை நண்பர் கபிலரிடம் ஒப்படைத்துவிட்டு உலகு
நீங்குகிறான். பாரி மகளிர் பாடுவதாகக்கபிலர் என்னும் பெரும் புலவர் குறிப்பிடுகிறார்.
‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எறி முரசின்
வேந்தர் எம்
குன்றும் கொண்டார் எந்தையும் இலமே’ (புறம் 112)
கபிலர் தம் நண்பர் பாரியைப்பற்றிக்குறிப்பிடும்போது,
‘பாரி பாரி என்று பலவேத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே’ (புறம் 107)
இதைவிடவும் சிறப்பாக ஒரு மனிதனை ப்புகழ்ந்துவிடமுடியுமா
என நாம் எண்ணிப்பார்க்கிறோம். பாரிக்கு இணையாக மாரியைத்தான் சொல்லமுடியும் என்கிறார்
கபிலர் பிரான்.
தமிழின் பெருமிதம் என்று மூன்று நூல்களை நான் எப்போதும்
சொல்வேன். அவை திருக்குறள் திருவாசகம் திருமூலம் என்பன. இந்த மூன்று நூல்களைப்படிக்கவேண்டி ஒருவன் தமிழனாகப் பிறக்கவேண்டும்.மொழிபெயர்த்துப்
படித்தால் அந்த இன்பத்தைப்பெறவே முடியாது. திருக்குறளுக்கு எத்தனை மொழியாக்கம் ஆங்கிலத்தில்
பார்த்திருக்கிறோம். ஜி.யு போப்பையும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும். தமிழில் வாசிக்கும்
குறளுக்கு இணையாக மொழிபெயர்க்கப்பட்ட எந்த
மொழியிலும் அந்தச் சுவையைக் காணமுடியாதுதான்.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் 972 )
திருவள்ளுவரின் சமுதாயப்பார்வை எத்தனை விசாலமாய் அர்த்தமுள்ளதாய்
நேர்மையானதாய் மனசாட்சிக்கு விடையளிப்பதாய்த் திகழ்வதை நாம் காண்கிறோம். இன்றைக்கும்
கூட பிரிந்து பிரிந்து கிடக்கும் மனிதச்சமுதாயத்தை அன்றைய நமது தமிழ்ச்சமுதாயம் எப்படி நோக்கியிருக்கிறது
என்பது நமக்குப் பெருமை சேர்க்கிறது.
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற’ (குறள் 34 )
இன்று படோடோபமாய் நிகழ்த்தப்படும் அறச்செயல்கள் குறித்து
திருவள்ளுவருக்கு அன்றே எத்தகைய கூர்த்த பார்வை இருந்திருக்கிறது.
இன்பத்துப்பாலில் ஒரு குறள். அதுவும் இன்பத்துப்பாலில், கல்வியை அறிதலை ஒரு பெண்ணிடம்
பெறும் கலவி இன்பத்தோடு ஒப்புமைசெய்து கூறமுடியும்
என்பதை திருவள்ளுவர் நிர்ணயம் செய்கிறார்.
‘அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு ( குறள் 1110 )
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசத்துக்கும் உருகார்
என்பது ஆன்றோர் சொல். திருவாசகத்தை எழுதியவர்
மாணிக்கவாசகர். மதுரைக்கு அருகேயுள்ள திருவாதவூரில் தோன்றியவர். அவருக்கு திருவாதவூரர் என்கிற பெயரும் உண்டு. பாண்டிய
அரசவையில் அமைச்சராக விளங்கியவர். பாண்டிய அரசன் அரேபியக்குதிரைகள் வாங்கிவரக்கொடுத்த
பணத்தைச் சிவ சேவையில் செலவு செய்தவர். அரசன், உன்னை வாங்கிவரச்சொன்ன குதிரைகள் எங்கே?
என்று மாணிக்கவாசகரை நெருக்கடி கொடுக்கஅவர் தனக்கு நேர்ந்துவிட்ட கஷ்டத்தை சிவபெருமானிடம்
முறையிடுகிறார். சிவபெருமான் ஆவணி மூலத்தன்று
குதிரைகள் பாண்டிய அரசனை வந்தடையும் என்று
சொல்ல அரசரும் சமாதானமானார்.
அருள் வள்ளல் ராமலிங்கர் திருவாசகம் பற்றிக்கூறும்போது,
‘வாட்டமிலா மாணிக்கவாசக நின் வாசகத்தை
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும்பொல்லா விலங்குகளும் மெய்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நான் அடைதல் வியப்பன்றே’ என்று பேசுவார். திருவாசகத்தேன் எப்படி இருக்கிறது
என்ற கேள்விக்கு விடைசொல்கிறார் வள்ளலார்.
‘வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து
என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’
திருவாசகத்தில் ஒரு சில பாடல்களைப்பார்ப்போம். அவை சொல்லும்
செய்திகள் நம்மைக்கிறங்கச்செய்பவை.
‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக்கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே’
இறைவன் உண்மையன்,அவ்விறைவன் பொய்யன் என்கிறார் மாணிக்கவாசகர்.
உண்மையுமாய் இன்மையுமாய் இருப்பவன் அவன். ‘யான் எனது என்று அவரவரைக்கூத்தாடச்செய்கிறான்அந்த
இறைவன். யான் யான், எனது எனது என்பதெல்லாம் திருக்கூத்து. இறைவன் நம்மில் காட்டும்
விளையாட்டு.பிரமித்துப்போகிறான் திருவாசகத்து வாசகன்.
‘சாதிகுலம்பிறப்பென்னும் சுழிப்பட்டுத்தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யான் எனது என்னுரை மாய்த்துக்
கோதிலா அமுதினானை குலாவுதில்லைக்கண்டேனே’
சாதி குலம் பிறப்பு என்பனதாம் சமூகக்காட்டாற்றுச் சுழல்கள்.அதனில்
அகப்பட்டு மனிதன் விழிபிதுங்குகிறான். அடுத்தவன் உரு பற்றி உரை,அறிவில்லாதவனின் குணம்பற்றி
உரை, யான், எனது என்னும் என்னுரை, என்பன போன்ற
சுயதம்பட்டங்கள் பற்றி மட்டுமே தொடர்ந்து பேசுகிறான்.
முன்னம் இவைகள் மாயவேண்டும். நாம்தான் மாய்க்கவேண்டும்
குற்றமிலா அமுதன் அந்த தில்லை வாழ் இறைவனைப் பின்னர் மட்டுமே காணவாய்க்கும் என்கிறார்
திருவாசகப்பெம்மான்.
‘வைத்தநிதி பெண்டீர் குலம் கல்வி என்னும்
பித்த உலகிற் பிறப்பொடு இறப்பென்னும்
சித்தவிகாரக்கலக்கம் தெளிவித்த
வித்தகத்தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பி’
சித்தவிகாரங்கள் மனிதனுக்கு ஓயவேண்டும். அவை யாவன? ஒருவன் சேமிக்கும் பணம், கட்டிய மனைவி, பிறந்த குலம்,
கற்ற கல்வி என்பன அவனை பித்தனாக்குகின்றன. இவைகளோடு பிறப்பும் இறப்பும் சேர்ந்து மனிதனை
பெருங்குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. வித்தகத்தேவனாகிய இறையே மனிதனை குழப்பத்தினின்று தெளிவுபடுத்தி மீட்டெடுக்கிறான் என்கிறார் மாணிக்கவாசகர்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும்
ஏமாப்புடைத்து என்னும் வள்ளுவம் கேள்விக்குள்ளாகிறது.
கிடைக்கும் சிற்றின்பத்தில் நீ மூழ்கிவிடாதே. பேரின்பம்
உனக்குக்காத்திருக்கின்றது. கூத்தாடும் இறைவன் உனக்குக் கட்டாயம் இன்பம் அருளுவான். மாணிக்கவாசகப்பெருமான் திருக்கோத்தும்பியில்
அழகாக எடுத்து வைக்கின்றார்.
தினைத்தனை யுள்ளதோர்
பூவினில் தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும்
பேசும் தொறும் எப்போதும்
அனைத்து எலும்பு உள்நெக
ஆனந்ததேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே
சென்று ஊதாய் கோத்தும்பீ
மணிவாசகர் அரச வண்டை அழைத்துப் பணிக்கின்றார். நீ ஆடல்வல்லானிடம்
செல். எப்போதும் அங்கே உனக்கு ஆனந்ததேன் சொறியக்காத்திருக்கின்றது. நினைக்கும்
போதும் பார்க்கும் போதும் பேசும் போதும் என்று
அடுக்கிக்கொண்டே போகிறார்.பிறகு எப்போதும் என்று முடிக்கிறார். ஆடல் வல்லானிடம் ஆனந்த்தேன் சொறியும் இன்பம் தயாராய்
இருக்க நீ ஏன் தினையளவு இருக்கும் சிறுமலரிடம்
செல்கிறாய். தேன் உண்ணவே அவதியுறுகிறாய்.
பல பிறப்புகள் தான் எடுத்துவிட்டதாகக்குறிப்பிடுகிறார்
மாணிக்கவாசகப்பெருமான். அவைகளை வரிசைப்படுத்துகிறார்.
‘புல்லாகிப்பூடாகி புழுவாகி மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய் பேயாய்க்கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த்தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்’
மனிதப்பிறவிக்குப்பிறகு வருபவை, பேய், கணம் ,அசுரர்,முனிவர்,தேவர் என்கிற பிறவிகள் என்கிறார் திருவாசகப்பெருமான்.
தேவர்களும் நல்வினை தீர்ந்துபோனால் மீண்டும்
பிறவிச்சுழலில் வந்து பந்தப்படுகிறார்கள் என்பது ஒரு செய்தி.
அடுத்து திருமூலர் படைத்த திருமூலம் என்னும் நூலுக்கு வருவோம்.
தமிழின் உன்னதம் என்று சொன்னால் அது திருமூலம் சொல்லும் பாடல்களென அவைகளைக்கற்று நாம்
உணர்தல் வேண்டும். மூவாயிரம் பாடல்களுக்குமேல் திருமூலர் நமக்கு வழங்கியுள்ளார். ஒவ்வொன்றும்
நமக்கு ஒரு அறத்தினை எடுத்தியம்பக்காத்துக்கொண்டு நிற்கிறது. தன்னை இறைவன் இறைச்செய்திகளை
தமிழ் மொழியில் கொண்டு தரவே படைத்தனன் என்கிறார் திருமூலர்.
‘பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாறே ’( திருமூலம் 81)
பிராமணர்கள் எப்படி ஒரு உண்மையின் மீது பிடிப்பு இல்லாமல்
வாழ்நாளை வீணாகக்கழிக்கின்றனர் என்று ஒரு பாடலில் சாடிநிற்கிறார்.
’சத்தியம் இன்றித்தனி ஞானம் தானின்றி
ஒத்தவிடயம் விட்டு ஓரும் உணர்வின்றிப்
புத்தியும் இன்றிப்பரன் உண்மையின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே’ ( திருமூலம் 231)
வீதியில் பசியோடு செல்லும் பிச்சைக்காரனுக்கு ஏதும் உணவு
வழங்காமல் ஓவியத்திலும் சிற்பத்திலும் வடித்து நிற்கும் இறைவர்க்கு உணவு படைக்கிறீர்களே
இது என்ன அறம்? என்று பேசுகிறார் திருமூலர்.
பிச்சைக்காரனுக்கு உனவளிப்பதுவே அந்த இறைவர்க்கு அளிப்பது. படத்திலும் சிற்பத்திலும் உள்ள இறைவர்க்குப்படைப்பது எந்த ஏழையையும் சென்றடைவதில்லை என்கிறார் பகுத்தறிப்பகலவனாய்த்திருமூலர்.
‘படமாடக்கோயிற் பகவற்க்கொன்று ஈயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கங்காகா
நடமாடக்கோயில் நம்பர்கொன்று ஈயில்
படமாடக்கோயில் பகவற்கு அதாமே’ ( திருமூலம் 1857)
ஒன்றுதான் குலம். தெய்வமும் ஒன்றே. நன்றது நினைப்போம் என்கிறார்
திருமூலர். மதச்சண்டைகள் எங்கிருந்து வரும்?
திருமூலரை நாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டால் என்று கொக்கரிக்கலாம்
நாம்.
‘ஒன்றே குலம் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை
சென்றே புகுங்கதியில்லை நுஞ்சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைத்துய்மினே’ ( திருமூலம்
2104}
வெற்று ஆடம்பரப்பூசைகளைச் சோடனைகளை ஒதுக்கி நிற்கிறார்
திருமூலர். சட்டமாய்ச்சொல்கிறார் எப்படிச்செயல்படவேண்டும் நாம் என்று.
‘யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே’ ( திருமூலம் 252)
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், காக்கை கரைதுண்ணும் காலம் அறிமினே, அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார் ,உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, உள்ளம்பெருங்கோயில்
ஊன் உடம்பு ஆலயம், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்றும் பற்பல வைர வரிகள் தந்தது ஞனச்செல்வமாம் திருமூலம்.
நம் ஆன்றோர் நமக்குத்தந்த ஞானக்கொடை. காலத்தே
துய்ப்போம் தெளிவோம்.
கீதாஞ்சலி என்னும் கவிதைநூலை எழுதியதால் நோபல் பரிசுபெற்றார்
இரவிந்திரநாத தாகூர். இந்தியர் வங்காளியர்.கீதாஞ்சலியை முதலில் வங்கமொழியில் படைத்தார்.
அவரே அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். W.B யீட்சின் முன்னுரை(
Introduction) யோடு வெளிவந்த அந்த நூல் உலக அரங்கில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. இரவிந்திரர்
பெருந்தனக்காரர்.உயர் குடும்பத்தைச்சேர்ந்தவர்.தேசபிதா காந்திஜியால் ‘குருதேவ்’ என்றழைக்கப்பட்டவர்.
நமது நாட்டு தேசிய கீதம் ஜன கண மன பாடிக்கொடுத்த பெருமைக்குறியவர். அவரே பங்களாதேஷ்
நாட்டு தேசிய கீதத்தையும் படைத்துக்கொடுத்தவர்.இசையில் மேதமை நிறைந்தவர். வங்காளத்தில்’
ரவிந்திர சங்கீதம்’ என்னும் ஒரு தரவை இசைத்துறையில் கொடையாக்கியவர்.சாந்திநிகேதன் என்னும்
பல்கலைக்கழகத்தை இந்திய கலாசாரத்தை ஒட்டி நிறுவியவர்.
அவருடைய கீதாஞ்சலியில் ஒரு கவிதையைப்பார்ப்போம். ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அப்படி.
கீதாஞ்சலி கவிதை 36
This is my prayer to thee my lord-strike
Strike at the root of penury in my heart
Give me the
strength lightly to bear my joys
and sorrows
Give me the
strength to make my love fruitful in service
Give me the strength never to disown the poor or
Bend my knees before insolent might.
Give me the strength to raise my mind
high above daily trifles.
And give me the strength to surrender my strength to
thy will with love.
ஏழைமனிதர்களை என் உறவாகப்பேணிக்கொள்ளும் வலிமையை எனக்குத்தா
என்கிறார் தாகூர்.ஏழை எளியவர்களை தம் உறவாகப்பேணிக்கொள்ளுவதற்கு ஒருவற்கு மனம் விசாலப்படவேண்டும். மனம் அது வலிமையோடு திகழவேண்டும். புத்திகெட்ட வல்லாளரின்
முன் நான் மண்டியிட்டு நிற்கக்கூடாது.அதற்கு
எனக்கு வல்லமைதா இறைவா என்கிறார் தாகூர். இறைவிருப்பத்திற்கு எனது வல்லமையை ஒப்படைக்க சக்தி கொடு என்று அன்போடு
வேண்டுகிறார் தாகூர். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று பராசக்தியிடம்
வேண்டி நின்ற தமிழ்க்கவிஞன் மாகவி பாரதி நம்
நினைவுக்கு வருகிறான்.
மனிதநேயம் என்றால் மாற்றுக்குறையாத மனிதநேயம் இவண் வடலூர்
வள்ளல்இராமலிங்கரை எண்ணிப் பார்க்கிறோம். இவ்வுலகில் பயிர் வாடியது கண்டு வாடிய பெருமகனார்.
பாரிவள்ளல் முல்லைக்குத்தேர் ஈந்த செய்தி அறிவோம். குளிரால் நடுங்கிய மயிலுக்குப்போர்வை
அளித்த பேகனை அறிந்திருக்கிறோம். பயிர் வாடுவது தன்னால் தாங்கிக்கொள்ளமுடியாத சோகம்
என்கிறார் வள்ளலார். விவசாயிகளின் சோகத்தையே அவர் குறிப்பிடுவதாய்க்கொள்வார் கவிஞர்
பழமலய்.
‘வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம்
வாடினேன்பசியினால்
இளைத்தே
வீடுதோர் இரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக்கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றார் என்
நேர் உறக்கண்டுளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’
வடலூரில் சத்தியதருமச்சாலை அமைத்து அன்றாடம் உணவுக்கொடை
அளித்து ஏழைகளைக்காத்தவர் இராமலிங்கர். அவர் மூட்டிய அந்த திரு அடுப்பு இன்றுவரை அணையாமல் காக்கப்பட்டு, அன்றாடம் உணவு தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.
’சாதி மதங்களுக்கு எதிராக நின்றவர் வள்ளலார்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவுகலவாமை வேண்டும்
பெருமைபெறும் நின் புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுகவேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்கவேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வில்
நான் வாழவேண்டும்
தருமைமிகு சென்னையில்கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத்துய்யமணி பண்முகச்சைவமணி
சண்முகத்தெய்வமணியே’
வள்ளலார் எது எது வேண்டும் என்பதைப்பட்டியலிடுகிறார். மதமான
பேய் பிடியாது இருக்கவேண்டும் என்று இறைவனிடமே வேண்டுகோள் வைக்கிறார். யாருக்கு அவர் பணிசெய்யக்காத்திருக்கிறார் எனபதை த்தெளிவாக இயம்புகிறார்.
பாடல் இதோ வருகிறது.
‘எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தேர்ந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புருந்திட என்
சிந்தை மிக விழைந்ததாலோ. ( அருட்பா 5298)
எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணி, உள்ளத்தால் ஒத்து, அவ்வுயிரையும்
பூரண உரிமை உடையதாய் எண்ணி மகிழ்ச்சி பாவிக்கின்ற மனிதர் யார்? அவர் உளந்தான்
சித்துருவாய் எம்முடைய இறைவன் நடம் புரியும் என்கிறார் வள்ளலார். அந்த பெரிய மனிதரின்
திருவடிக்குப் பணி செய்திட என் மனம் விழைகிறது என்று பேசுகிறார்.
வள்ளலார் அருளிய
அருட்பா ஆறாவது திருமுறையில் அருள்விளக்கமாலை 28 என வரும் பாடலை நோக்குவோம்.
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும்
கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என் அரசே யான் புகலும் இசையும் அணிந்தருளே
அற்புதமான இந்தப்பாமாலை எத்தனைப்பெரிய இறை விளக்கத்தை வாசகனுக்கு அருளிச்செய்கிறது பார்க்கிறோம்.
மாகவி பாரதி காளியிடம் வேண்டிப்பாடுவார், மனித வாழ்வை எவ்வளவு இலக்கண சுத்தமாக
அலசி அலசி எடுத்து வைக்கிறார் பார்ப்போம்.
‘தேடிச்சோறு நிதந்தின்று- பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடித்துன்பம் மிக உழன்று -பிறர்
வாடப்பலசெயல்கள் செய்து -நரை
கூடிக்கிழப்பருவம் எய்தி--கொடுங்
கூற்றுக்கு இறையெனப்பின்- மாயும்
வேடிக்கை மனிதரைப்போலே -நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
எனக்கு ஒரு இலக்கிய நண்பர் நெய்வேலியில் தொலைபேசித்துறையில் ஆய்வாளராக இருந்தார் பெயர் திரு.கணேசன். அவர் பாரதியின்
இந்தப்பாடலை ஓயாமல் சொல்லிக்கொண்டேயிருப்பார். மானுடவாழ்வை பொறுள் கூடிய ஒன்றாக மாற்ற
விழையும் ஒவ்வொரு மனிதரும் இந்த வரிகளை அசைபோடாமல் அடுத்த அடி எடுத்துவைக்க வாய்ப்பேயில்லை
என்பார் அருமை நண்பர். ஆயிரங்காலம் ஆனாலும் பாரதியின் இந்த வைர வரிகள் உயிர்ப்போடு பேசுவன. பாரதி பாடல்களுக்குப்பொருள்
சொல்ல வேண்டுமா என்ன, புரியாத வார்த்தைகளைப் பாரதி பெரும்பாலும் கையாள்வதேயில்லை.
‘Think like a wiseman but communicate in the
language of people’ என்பார் W B Yeats.
தேடிச்சோறு நிதம்
தின்று வாழும் மிருகங்களாக நீ வாழ்ந்துவிடாதே என்கிறார் பாரதி. ஆயின் மிருகங்கள்
பசிக்குத்தான் பிற விலங்குகளைத் தாக்குமேயன்றி மனிதரைப்போல் ’பிறர் வாடப்பல செயல்கள்
என்றும் செய்வதில்லை’. பாரதியின் இறைக்கு வருவோம்.
‘ஆத்திச்சூடி இளம்பிறையணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறங்கொண்டு பாற்கடல்மிசைக்கிடப்போன்
மகமதுநபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப்பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வெய்துவோம்.
பள்ளியிலே மானவர்களால்
இறைவணக்கப்பாடாலாகத் தொடர்ந்து பாடப்பட்டிருக்கவேண்டிய அற்புதப்பாடல் அல்லவா இது. மதச்சண்டைகள் எங்கிருந்து
வரமுடியும். இளம்பிள்ளைகள் எல்லா மதங்களையும் ஒன்றாகப்பார்க்கும் நற்பார்வை நல்குவதல்லவா
இப்பாடல்.
வேதம் புதிது செய் என்று ஆத்திச்சூடி சொன்னவன் பாரதி. வேதங்களைப்பற்றி
பாரதி என்ன சொன்னான் என்பதை நோக்குவோம்.
‘வேதங்கள் கோத்துவைத்தான்
வேதங்கள் மனிதர் தம் மொழியிலில்லை
வேதங்கள் என்று புவியோர் சொல்லும்
வெறுங்கதைத்திரளிலவ்வேதமில்லை
வேதங்கள் என்று அவற்றுள்ளே அவன்
வேதத்திற் சிற்சில கலந்ததுண்டு
வேதங்கள் அன்றியொன்றில்லை இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்’
வேதத்தை மனிதர்தம் மொழியில் தராத கொடுமையை எண்ணிப்பார்க்கிறான்.
மனிதர் பேசும் மொழியில் வேதங்கள் இல்லை என்றால்
அது எந்த மொழியில் தரப்பட்டது? பாரதி வினா
வைக்கிறான். வேதங்களோ வெறுங்கதைத்திரள் என்கிறான். வேதத்தில்
சிற்சில வேத விஷயங்கள் கலந்திருப்பதாக
வரையறை தருகிறான். இவ்வுலகில் எளிய மனிதர்கள்
கூறும் நல்ல வார்த்தைகள்தாம் வேதங்கள் என்று
விளக்கம் தருகிறான். வேதங்கள் யாருக்கோ உரியன
என்பது பொய் அது மேதினி மாந்தர்க்கு உரிமையானது
என்று பொதுமைப்படுத்துகிறான். நல்ல மனிதர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலென்ன அவர்கள்
சொல்லும் வார்த்தைகளெல்லாம் வேதம்தான். ஒரு
சாராரால் வேதம் மறைபொருள் என்று பேசப்படுவதை
எதிர்த்து எல்லோருக்கும் மத்தியில்
அதனை இறக்கி வைத்து வாருங்கள் பாருங்கள் என்று கூவுகிறான்.
கண்ணன்பாட்டிலே சமுதாயச்சீர்கேட்டை இப்படியாய்ப் பாரதி
சாடுவான்.
‘மேலவர் கீழவர் என்ற வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச்சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டென்பான்’
பாரதியின் உள்ளக்குமுறலை வாசகன் இங்கே தரிசிக்க வாய்க்கிறது.
பாரதியின் குயில் பாட்டு பாரதிகவிதைகளில் சிகரம். பாரதி தான் தெளிந்த தத்துவக்கருத்துக்களை குயில்பாட்டு
வழி பதிவு செய்கிறார்.
’கானப்பறவை கலகல எனும் ஓசையிலும்
காட்டு மரங்களிடைக்காட்டும் இசைகளிலும்
ஆற்று நீர் ஓசை அருவி ஒலியினிலும்
நீலப்பெருங்கடல் எந்நேரமும் தானிசைக்கும்
ஓலத்தினைடையே உதிக்கும் இசையினிலும்
மானுடப்பெண்கள் வளரும் ஒரு காதலினால்
ஊனுருகப்பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோல்தொடியார் குக்குவெனக்கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணைமடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப்பெண்கள் வளைக்கரங்கள்தாம் ஒலிக்கக்
கொட்டி இசைட்டிடுமோர் கூட்டமுதப்பாட்டினிலும்
வேயின் குழலொடு வீணை முதலாமனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி
நாட்டினிலும் காட்டிலினும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டிலினும் நெஞ்சைப்பறிகொடுத்தேன் பாவியேன்.
பாரதிக்கும் எங்கு திரும்பினும் இசைப்பிரவாகமாய் அனுபவமாகிறது.
எந்த ஒலியிலும் ஒரு இன்பம் விஞ்சுகிறது. நாடு காடு எங்கிருதாலும் பாரதியால் பரவசநிலை
எய்துதல் சாத்தியமாகிறது. குயில்பாட்டு கவிஞனின்
ஆன்மாவை மீட்டிப்பார்க்கிறது.’பாட்டினைப்போல்
ஆச்சரியம் பாரினில் இல்லையடா’ என்று வாக்குமூலம் தருகிறார் பாரதி.
ஆங்கிலக்கல்வியின் மோகத்தை மடமையை ச்சாடியவர் பாரதி. ஆயின்
ஆங்கிலக்கவி ஷெல்லியைப்போற்றியவர். தன்னை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொண்டவர் அல்லவா.
கனவு என்னும் பாடலிலே, இப்படிப்பேசுவார்.
‘செலவு தந்தைக்கு ஓராயிரம் சென்றது
தீது எனக்குப்பல்லாயிரம் சேர்ந்தன
நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன்இதை
நாற்பதாயிரம் கோயிலிற்சொல்லுவேன்’
வாணியாகிய சரஸ்வதியை வணங்குகிறார் பாரதி. வெள்ளைத்தாமரைப்பூவிலிருப்பாள்
என்று தொடங்கும் அந்த அழகிய பாடல். கொள்ளை இன்பம் குலவும் கவிதையைப்படைக்கின்ற கவிஞரின்
உள்ளத்தில் வதிபவள் வாணி.கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசகத்து உட்பொருளாவாள்
அவளே. முனிவர்களில் கள்ளத்தோடு வாழ்பவர்களை பாரதி சந்தித்திருக்கலாம். ஆகத்தான் சரஸ்வதி
அவர்களின் வார்த்தைகளில் வதியமாட்டாள் என்று அடித்துச்சொல்கிறார்.
சரஸ்வதிபூசை எப்படி நடத்துவது என்பதற்கு இலக்கணம் சொல்கிறார்
பாரதி.
‘மந்திரத்தை முணுமுணுத்து ஏட்டை
வரிசையாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை அன்றாம்’
என்று சொல்லி ஏழைமக்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் வைத்தல் எத்தனை நற்செயல் என்பதனை விளக்குகிறார்.
பள்ளி இலாத ஊர் தீக்கிரையாகட்டும் என்று முழங்குகிறார். கோவிலில்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம் என்பார் அவ்வை. பள்ளி இல்லாத ஊர்
இருந்தென்ன அது அழியட்டும் என்கிறார் புரட்சியாளர் பாரதி.
‘இன்னறுங்கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
ஏழைமக்களுக்குக்கல்வி எத்தனை முக்கியத்துவம்வாய்ந்தது என்பதனைக்
கவிதையில் நிறுவி நிற்கிறார் பாரதி.பரமசிவவெள்ளம்
என்னும் கவிதையில் போலிச்சாமியார்களைக் கேலி செய்கிறார் கவிஞர்.
’காவித்துணி வேண்டா கற்றைச்சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே’ என்று பேசும் கவிஞர்,
‘சாத்திரங்கள் வேண்டா
சதுமறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம்
தொட்டு நின்றால் போதுமடா’
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் பிற ஆகுல நீர என்கிற
குறள் இங்கே நம் நினைவில் வந்து நிழலாடுகிறது.
உயிர்பெற்ற தமிழர் பாட்டு என்னும் கவிதைப் புராண இதிகாசங்களை வெற்றுக்கதைகள் வரையறை செய்கிறது.
‘உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக்கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம் பிறிது
உள்ள மறைகள் கதையெனக்கண்டோம்’ என்று சொல்லி இராமாயண பாரதக்கதைகளுக்கு
வருகிறார் பாரதி.
‘கடலினைத்தாவும் குரங்கும் வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப்பெண்ணும்
வடமலை தாழந்ததனாலே தெற்கில்
வந்து சமன் செயும் குட்டை முனியும்
நதியினுள்ளே மூழ்கிப்போய் அந்த
நாகர் உலகில் ஓர்பாம்பின் மகளை
விதுயுறவே மணம் செய்த திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்’
இப்படிச்சொல்லிக்கொண்டே போகிறார் பாரதி.’ கவிதை நல்லதேனும்
அக்கதைகள் பொய்யென்று தெளிவுறக்கண்டோம், புவிதனில் வாழ்நெறிகாட்டி நன்மைபோதிக்கும்கட்டுக்கதைகள்
அவைதாம்’
என்று அய்யத்திற்கு இடமின்றி இது இப்படித்தான் என்று கவிதை தருகிறார்.
பழைய புராணங்கள் சொல்லும் செய்தி பற்றி எத்தனைப் புதுமையாய்
மகாகவியால் சிந்திக்க முடிகிறது. புராணங்கள் படிக்கும் வாசகன் பாரதியால் புத்தொளி பெறுகிறான். இலக்கியங்களில் எதனை எப்படி எடுத்துக்கொள்வது வாசகனுக்கு
பாரதி ஒத்தாசை செய்கிறார். எதனிலும் பதுங்கிக்கிடக்கும் மானுட அறத்தைக் கண்டு தெளிகிறார்
பாரதி.
‘ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்- ஒன்றில்
உண்மையென்றோதி மற்றொன்று பொய்யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்’ புராணங்களை விமர்சனம் செய்கிறார் பாரதி. அவை நல்ல
கவிதைகள் சமூகம் அவைகளைக் கவிதைகளாய் ஏற்கவேண்டும்.
’ கவிதை மிக நல்லதேனும்- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்வுநெறி காட்டி- நன்மை
போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்’’
நல்லவை போதிக்கும் ஆயின் என்ன அவை மொத்தமாய்க் கட்டுக்கதைகள்
அன்றி வேறென்ன என்கிறார் பாரதி. எவையும் மாற்றத்திற்கு உட்பட்டவையே. மாற்றம் என்பது
மட்டுமே மாறா ஒன்று என்பதைத் தூக்கிப்பிடிக்கிறார்.
‘ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் எந்த
நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றும் இல்லை’ எத்தனை
விசாலாமாய் எதிர்காலம் குறித்த பார்வை கவிஞனுக்கு. வாசகன் பிரமித்துத்தான் போகிறான்.
தமிழுக்கும் அமுதென்று பேர் என்பார் பாரதியின் வழிவந்த பாவேந்தர். தமிழ் தனது உள்ளத்தில் உய்யும் தீ என்பார். தமிழ்
அன்னைத்தவமாய்த் தவம் செய்து பெற்ற பிள்ளைதான் மாகவிஞன் பாரதி என்பார். பாரதியை நாடு மறந்தால் அவர்க்கு மற்ற பாதி துலங்குவதில்லை. பாரதியைப் படித்தும் விளங்கிக்கொள்ளாதவர்களை அரைகுறைகள்
எனச் சாடுகிறார் பாரதிதாசன்.
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ சங்க நாதமிட்டக் கவிஞர்
அவர். பெண் குழந்தைக்குத்தாலாட்டுப்பாடுகின்ற பாரதிதாசன்,
‘சாணிக்குப்பொட்டிட்டுச் சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு,நகைத்து நீ கண்ணுறங்கு’ என்று பகுத்தறிவு பேசுகிறார்.
ஒற்றுமையை மெச்சிப்பேசும் கவிஞர்,
’வாடித்தொழில் இன்றி
வறுமையாற் சாவதெல்லாம்
கூடித்தொழில் செய்யாக் குற்றத்தால் தோழர்களே’ என்று விளக்கம்
தருகிறார். மதத்தைப்பற்றிய பாவேந்தரின் பார்வையைப்பார்ப்போம்.
‘சேசு முகம்மது என்றும்-மற்றும்
சிவனென்றும் அரியென்றும்
சித்தார்த்தனென்றும்
பேசி வளர்க்கின்ற போரில்- உன்
பெயரையும் கூட்டுவர் நீ ஒப்ப வேண்டாம்’ என்று எச்சரிக்கை
தருகிறார். உலகம் உன்னுடையது என்னும் கவிதையில்
பாவேந்தர் கவிதையின் உச்சத்தைத்தொடுகிறார். கவிஞன் என்பவன் இந்த உலகுக்குச் சொந்தக்காரன்.
மக்களுக்குச்சொந்தக்காரன். பிரிவினைக்கு இங்கு இடம்,இல்லை என்கிறார். இந்த உலக்ம் உங்களை
எப்படியோ பார்க்கட்டும். இலக்கியக்காரன் நீ
எப்படி இருக்கவேண்டும் என்பதை மட்டுமே பார் என்கிறார் கவிஞர்.
‘மனிதரில் நீயுமோர்
மனிதன்மண்ணன்று!
இமை திற,எழுந்து நன்றாய் எண்ணுவாய்
தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக்கொளிசெய்!
நகைப்பை முழக்கு ! நடத்து லோகத்தை!
உன் வீடு உனது
பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து வானை இடிக்கும் மலை மேல்
ஏறு விடாமல்! ஏறு மேன் மேல்!
ஏறி நின்று பாரடா இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப்பரப்பை!
பாரடா உன்னொடு பிறந்த பட்டாளம்!
‘என்குலம்’ என்றுனைத்தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!
அறிவை விரிவு செய் அகண்டமாக்கு!
விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னை சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய்!
‘புகல்வேன்’ ‘ உடமை மக்களுக்குப்பொது’
புவியை நடத்து பொதுவில் நடத்து!.............
இக்கவிதைக்கீடாக உலகக்கவிதையெல்லாம் அள்ளி வைத்தாலும் ஈடாகுமா?
இப்படிப்பேசும் தமிழ்க்கவிதைக்குமேலாக இப்பெருநிலம் இன்னும் இலக்கியத்தில் என்னத்தை எதிர்பார்க்குமோ!.இலக்கியங்கள்
மட்டுமே மனித மாண்புக்கு என்றும் அச்சாரமாய்
நிற்பவை.
--------------------------------------------------------------------
வளவ.துரையனின் தமிழ் வாழ்க்கை.
எனது ஆத்ம நண்பர்
வளவ.துரையன். அவரது இயற்பெயர் அ. ப. சுப்பிரமணியன்,வளவனூர்க்காரர் பரமேஸ்வரன் லலிதா
இணையர்க்குத் திருமகனாய் 1950 நவம்பர் 14 அன்று பிறந்தவர். அருளியல் அரசியல் சமுதாயம் இலக்கியம் எனப் பலவற்றானும்
சிறந்து விளங்கிய வளவனூர் அர. இராசாராமன் நெறி தொடர்ந்த பெருமகனே அ. ப. சுப்பிரமணியன்.
அவருக்குப் பேரறிஞர் அண்ணாதுரையை மிகவும் பிடிக்கும் என்பதாலேயே துரையன்ஆகி வளவனூர்க்காரர் என்பதால் வளவ.துரையன் ஆனார்.கடலூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வேங்கடவரதா நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி ஆற்றி ஓய்வுபெற்றவர்.. கடலூரில் கூத்தப்பாக்கம்
பகுதியில் வசித்து வருகிறார். சங்கு இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர். 1984ல் தொடங்கிய இக்காலண்டிதழை தொய்வேயில்லாமல் தொடர்ந்து ஒரு வேள்வி போல் நடத்திவருகிறார்.கூத்தப்பாக்கம்
இலக்கியப் பேரவை என்னும் ஒரு அமைப்பினை நிறுவினார். அது ஆல்போல்
தழைத்து தமிழ்ப்பணி ஆற்றிட மிகச்சிறப்பாக
உழைத்து வருகிறார். நூற்றுக்கணக்கான
இலக்கிய நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றுள்ளன. வளவ.துரையன் கடலூர் நகரத்துத் தமிழ்ச்
சான்றோர்களில் முக்கியமானவர்.
என் பிறந்த ஊர்
கடலூர் மாவட்டம் தருமநல்லூர். நான் விருத்தாசலத்தில்
தொலைபேசித்துறையில் 1975 ஜூலை தொடங்கி பணியிலிருந்தேன். 1996 ல் கடலூருக்குப்பதவி உயர்வு மாற்றலில் வந்தேன்.
விருத்தாசலம் இலக்கிய
அபிமானிகளின் இலக்கிய படைப்பாளர்களின் திருத்தலம்.
அங்கு எனக்கு மிக நெருங்கிய இலக்கிய நண்பர் காலம் சென்ற வே. சபாநாயகம். அவரின் மாணாக்கர்
கவிஞர் பழமலய்.விருத்தாசலத்தில் அப்போது தனியார் நூலகப்புகழ் பல்லடம் மணிக்கம், அருணா
ஜவுளியக சதாசிவம்,பட்டி செங்குட்டுவன், கரிகாலன்,
இமயம், கண்மணிகுணசேகரன், ஜி டி என்றழைக்கப்பட்ட நடவு இதழின் ஆசிரியர் தெய்வசிகாமணி, இரத்தின புகழேந்தி, சு. தமிழ்ச்செல்வி, வின்செண்ட்,
தபசி, கோவில் பட்டி உதயசங்கர், பல்லவிக்குமர், கடற்கரய் என மிகப்பெரிய இலக்கியக் குழாம்
இருந்தது. இலக்கியக்கூட்டம் அவ்வப்போது பல்லடம்
மாணிக்கம் இல்லத்தில் நடைபெறும். சில சமயம்
பழமலைநாதர் திருக்கோவில் மண்டபத்தில்
அல்லது தென்கோட்டை வீதி நகராட்சி ஆரம்பப்பள்ளியிலும் நிகழ்வதுண்டு. நான் கடலூருக்குப் பணி மாற்றலில் வரும் சமயம்
மக்கள் பேசுமொழியில் கவிதை தந்து வரலாறு
படைத்த கவிஞர் பழமலய், என்னிடம் சொல்லி அனுப்பினார்,
‘ நீங்க கடலூர் போறிங்க. அங்க நமக்குன்னு ஒரு ஆளு சொல்லுணும்னா அ. ப. சு. அதான் அ.ப. சுப்ரமணியன் கடலூர் கூத்தப்பாக்கத்தில குடி இருக்காரு. கடலூர் பக்கத்துல கிருஷ்ணாபுரம். உதவி பெறும்
தனியார் பள்ளியில ஆசிரியரு. ’சங்கு’
ன்னு ஒரு இலக்கிய இதழ், செராக்ஸ் வடிவத்துல நடத்துறாரு. கடலூர் போனா மொதல்ல அவர கண்டுபுடிங்க. அவர் தொடர்புதான் உங்களுக்கு உபயோகமா இருக்கும்’.
இதனைக் கேட்டுக்கொண்ட நான் கடலூர் தொலைபேசி அலுவலகத்துக்கு வந்து பணியில் சேர்ந்ததும் டெலிபோன் டேரக்டரியை எடுத்து ஏ பி சுப்பிரமணி யணின் தொலைபேசி எண்ணைத்தேடிக்கண்டு பிடித்தேன்.
தொடர்பு கொண்டேன்.நாங்கள் இருவருமே அன்றைய
கணையாழியின் தீவிர வாசகர்கள். மகிழ்ச்சியோடு
பேசினோம். அவரே என் மஞ்சக்குப்பம் அலுவலகத்துக்கு ஒரு நாள் மாலை வந்தார். நாங்கள் நீண்ட
நேரம் இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இப்படியாய்த்தொடங்கியது நட்பு. ஒரு
முப்பதாண்டுகளாய் அய்யாவை எனக்குப்பழக்கம்.
கடலூருக்கு நான் வந்த பிறகு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக்கிளை மீண்டும்
துவங்கப்பட்டது. கடலூர் தொலைபேசி நண்பர்கள் உதவினார்கள்.தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள்
ரகுநாதன் ஸ்ரீதர் நீலகண்டன் ஜி. ஜெயராமன் மற்றும் அனேக தொலைபேசித் தோழர்கள் துணை நின்றார்கள். கலை இலக்கியப் பெருமன்றத்தின்
மாவட்டப் பொறுப்பாளராய் நான் பத்தாண்டுகள்
கடலூரில் இருந்து செயல்பட்டேன். கலை இலக்கியப் பெருமன்ற நிகழ்வுகள் அனைத்திற்கும்
வளவ துரையன் உறுதுணையாக இருந்தது பேருதவி . கடலூரில் அன்று இயங்கிய இலக்கிய அமைப்புக்கள்
ஒன்றுக்கொன்று தோழமையோடு இயங்கின. இன்றும்
கடலூர் அப்படித்தான்.
கடலூர் தொலைபேசி மாவட்ட NFTE தொழிற்சங்கத்தினர் அமரர் சிரில் நினைவு அறக்கட்டளை என்கிற இலக்கிய அமைப்பினைத்
தொடங்கினார்கள்.அந்த அறக்கட்டளை பல்வேறு இலக்கிய நிகழ்வுகளைக் கடலூரில் நிகழ்த்தியது.
சிரில் என்னும் தொழிற்சங்கத் தலைவர் வேந்தன் என்கிற பெயரில் கதைகள் எழுதியவர். சிரில்
அறக்கட்டளை தமிழ்ப்பாடத்தில் சிறந்து விளங்கிய தொலைபேசி ஊழியர்களின் பிள்ளைகளுக்குப்பரிசு வழங்கியது.
பத்தாம்வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப்பொதுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்களை வைத்துப்
பரிசு தரப்பட்டது. ஒரு தமிழ் அறிஞரை ஆண்டுதோறும் கடலூருக்கு அழைத்து ஒரு தமிழ்விழா நடத்தி கெளரவித்தார்கள்.
அந்த அமைப்பு நடத்திய எல்லா நிகழ்வுகளுக்கும் கடலூர் தமிழ் அன்பர்கள் தவறாது கலந்துகொண்டு
பெருமை சேர்த்தார்கள். வளவ.துரையன் சிரில்
அறக்கட்டளையின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்
வருகைதந்து சிறப்பிப்பார்.நான் கடலூரிலிருந்து சென்னைக்கு மாற்றலில் வரும் வரை அந்தத் தமிழ் அமைப்பின் பொறுப்பாளராய் இருந்து செயல்பட்டேன்.
கடலூர் கூத்தப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் வளவதுரையன்
இல்லம் இருக்கிறது. அவர் இல்லத்திற்கு நான்
அனேக முறைகள் சென்று வந்துள்ளேன். அவருடைய துணைவியார் அலர்மேல்மங்கை, ஆசிரியையாக இருந்து
பணிஓய்வு பெற்றவர். அவர்கள் இல்லம் வரும் தமிழ் அன்பர்களை மகிழ்வோடு உபசரிப்பவர். வளவ.துரையன்
இல்ல வாயிலில், தினம் ஒரு திருக்குறள் அதன் பொருளோடு எழுதிய ஒரு ஒரு பலகை நம்மை வரவேற்கும்.
வளவ.துரையனின் பிறந்த ஊரான வளவனூரில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் நான் அவரோடு
சென்று வந்துள்ளேன். வளவனூரை சொந்த ஊராகக்கொண்ட பிரபல இலக்கிய ஆளுமை பாவண்ணன் அவர்களின்
படைப்புக்களை நான் முன்னமே அறிந்தவன். விருத்தாசலத்தில் என்னோடு தொலைபேசிநிலையத்தில்
பணியாற்றிய வளவனூர் மோகன் அவர்களும் நானும்
நிறைய பாவண்ணன் எழுத்துக்கள் பற்றிப் பேசி இருக்கிறோம். வளவனூரில் பாவண்னனுக்குப்பெருமை
சேர்க்கும் விதமாக ஒரு இலக்கிய நிகழ்ச்சி ஏற்பாடாகியது.பாசத்திற்குரிய
கவிஞர் பழமலய் அவர்கள் வந்திருந்தார்கள். பாவண்ணன் இல்லத்தில் மதிய உணவு சாப்பிட்டோம்.
வளவனூர் அன்பர்கள் என்றுமே விருந்தோம்பலுக்குச்
சளைத்தவர்கள் இல்லை. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர்
வளவனூர் திருக்குறள் பேரவையின் ஆண்டு விழா பட்டிமன்ற நிகழ்ச்சி ஒன்றிற்கும் வளவனூருக்கு
வளவ.துரையனோடு நான் சென்று வந்தேன். வளவனூர்
தமிழ் அன்பர்கள். திருவாளர்கள் துரை. சுந்தரமூர்த்தி,
இரா. துரைக்கண்ணன் இவர்களின் உரை வீச்சினை
செவிமடுத்து இன்புற ஒருவருக்குக் கொடுத்துத்தான்
வைத்திருக்கவேண்டும்.
அனேக நிகழ்ச்சிகளுக்கு கூத்தப்பாக்கம் இலக்கியப்பேரவைக்கு
நான் சென்று வந்தவன். தமிழ்ப்புலவர் ராஜாராமன் ஒவ்வொரு நிகழ்விலும் திருக்குறள் விளக்க
உரை வழங்குவார்கள். எனது புதினம் ’நெருப்புக்கு ஏது உறக்கம்’ தமிழக அரசின் விருது பெற்ற
போது எனக்காக ஒரு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு
செய்து என்னை கெளவரவம் செய்தவர் வளவ.துரையன்.
சங்கு இலக்கிய இதழின் ஆசிரியர் வளவதுரையன் அந்த இதழை மிகச்சிறப்பாக
நடத்தி வருகிறார். எழுத்தாளுமைகள் நாஞ்சில் நாடன் பாவண்ணன் தேவதேவன்
விக்கிரமாதித்தன் சுப்ரபாரதிமணியன்
ராஜ்ஜா போன்றோர் அதனில் கணிசமாய்ப் படைப்புக்களை
அளித்து வருகிறார்கள். அவ்விதழ் முன்னம் செராக்ஸ் இதழாக வந்துகொண்டிருந்தது. வளவதுரையன்
அய்யாவிடம் இனி அது அச்சில் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். நானும் அய்யாவும்
சிதம்பரம் சென்று தெற்கு வீதி கஜேந்திரா அச்சகத்து
நடராஜனிடம் கேட்டுக்கொண்டோம். நூறாவது இதழை
அச்சு இதழாகக் கொண்டு வந்தோம். பிறகு சங்கு இதழ் கடலூரிலேயே நண்பர் திரு ரமேஷ் அவர்களால் சிறப்பாகக் கொண்டுவரப்படுகிறது.
கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி, வளவதுரையன் அய்யாவுக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் புதுப்பாளையம்
தர்மாம்பாள் திருமணக் கூடத்தில் வைத்திருந்தார்கள். நான் வளவதுரையன் அய்யாவின் சிறப்புக்கள்
பற்றிப்பேசவேண்டும் என்று என்னைக் கவிச்சித்தர் பணித்தார். அந்நிகழ்வு வெகு சிறப்பாக
அமைந்தது.
நான் ஒரு சமயம்
குடும்பத்தோடு மும்பை சென்றேன். அலுவலகம் தந்த
சலுகைச் சுற்றுலாப்பயணம் அது. வளவ.துரையன்
பிள்ளைகள் எழிலன் முகிலன் இருவரும் அப்போது
மும்பையில் இருந்தார்கள். எங்களை அன்போடு உபசரித்து மும்பை நகர் காட்டி எல்லோரா குகைக்குப்
படகில் அழைத்துச்சென்று பவுத்தத் தொன்மச் செல்வங்கள்
காட்டி கடலூருக்குத் திரும்பவும் தொடர்வண்டியில் அனுப்பிவைத்தார்கள். அந்நிகழ்வு எங்களுக்கு ஒரு
கொடுப்பினை. இந்நிகழ்வினை யோசிக்கையில்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல் எனும் சொல் – என்னும் திருக்குறள் எப்போதும்
என் நினைவுக்கு வரும்
விருத்தாசலம் நகரில்
தொலைபேசி நண்பர்கள் எனக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தார்கள். நான் தொலைபேசித்துறையிலிருந்து
பணி ஓய்வு( 2014 ) பெற்ற நேரம் அது. அவ்விழாவுக்கு வளவ.துரையன் வருகை தந்து என்னை வாழ்த்தி எனக்குப்பெருமை சேர்த்ததை நான் என்றும்
மறவேன்.
வைணவ இலக்கியங்களில் ஆழங்கால் பதித்தவர் வளவதுரையன். திருப்பாதிரிப்புலியூர்
பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி
மாதம் முழுவதும் நிகழும் திருப்பாவை ச் சொற்பொழிவு நிகழ்வை தனது செறிவான அருள் உரையால்
மெருகு கூட்டியவர். கடலூரில் வளவதுரையனுக்கு அவர்தம் படைப்புக்கள் பற்றிய ஆய்வரங்கம்
ஒரு பேரரங்கில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. அந்த நிகழ்வில் நானும் பங்குபெற்றேன். அவ்வமயம்
வளவதுரையனின் சிறுகதைகள் அதுகாறும் வெளிவந்த மொத்தமும் சேர்த்து ஒரே தொகுப்பாக தாரிணி
பதிப்பகத்து வையவன் அவர்கள் கொண்டுவந்திருந்தார்கள். அந்நிகழ்வில்பாவண்ணன் ஜெயஸ்ரீ ரகுராம்
பேராசிரியர் பாஸ்கரன் மன்றவாணன் சிதம்பரம் செல்வராஜு புதுவை ஜி. நாகராஜன் வளவனூர்
இலக்கிய நண்பர்கள் துரைக்கண்ணு சுந்தரமூர்த்தி
மற்றும் கடலூர் சுற்றுவட்டார இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.
வளவ.துரையன் மரபுக்கவிஞராய் பட்டிமன்றப் பேச்சாளராய் இலக்கியப்பணியைத்
துவங்கியவர். ஒயாத வாசிப்பு என்றும் அவருடைய பழக்கமாக இருந்தது. மரபுக்கவிதை யாத்தலில்
இன்று வளவ.துரையனுக்கு இணையாகத் தமிழ் படைப்புத்
தளத்தில் யாரையும் சொல்லமுடியாதுதான்.
மரபுக்கவிதை தளத்தில் சமீபமாய் சிறப்பாகப்
பணி ஆற்றிவரும் கவிச்சித்தர் பி. கே பெரியசாமி அவர்களின் வெல்லமுடியாத தமிழ் நூலுக்கு
வளவதுரையன் பொருத்தமானதொரு முன்னுரை தந்தவர்.
பெரியசாமிக்குப்பரிசும் பாராட்டும் குவிந்தவண்ணம் உள்ளன.பி.எஸ் என் எல்- டி. ஜி. எம்
(ஓய்வு) பி. கே பெரியசாமி கடலூரில்
தொலைபேசியில் பணியாற்றிச் சென்னைக்கு மாற்றலில் வந்தவர். சென்ற ஆண்டு ஏர்வாடி இராதாகிருஷ்ணனின் ‘கவிதை உறவு’ அமைப்பில் வெல்லமுடியாத தமிழ் என்னும் மரபுக்கவிதை நூலுக்கு முதற்பரிசு பெற்றார்.
இப்படி படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் வளவதுரையனுக்கு எப்போதும் மிகை ஆர்வமுண்டு.
பட்டுக்கோட்டை
இலக்கியச்சிறகு இதழின் ஆசிரியர் மறைந்த மு. இராமலிங்கம் அவர்களின் வேண்டுகோளினை
ஏற்று ‘இலக்கியச்சிறகு 23’ வெளிவர கைகொடுத்தவர்
வளவ. துரையன் என்றால் மிகையாகாது.கடைசியாக வெளிவந்த அந்த இதழுக்கு நானே ஆசிரியர், வளவ. துரையன் ஆலோசகர்.
கடலூர் சங்கு இலக்கிய இதழ் அச்சிடப்படும் திரு. இரமேஷின் அச்சகத்திலேயே அவ்விதழ் அச்சிடப்பட்டு
வெளிவந்தது.
பட்டுக்கோட்டை
மு. இராமலிங்கம் அய்யாவின்’ இலக்கியச்சிறகு’ முதல் இதழ் வடலூர் வள்ளலார் ஞானசபை வளாகத்திலிருந்து
வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய அன்பர்கள் பலரோடு வளவ.துரையன் கலந்துகொண்டதனையும்
பெருமையோடு நினைவு கூறுகிறேன்.
மரபுக்கவிதை வெளியில் வளவதுரையன் உச்சம் பெற்றார் என்பதற்கு
அவரின் அர. இராசாராமன் ஆற்றுப்படை என்னும் நூலே சான்று. அந்த நூலே வளவதுரையனின் முதல் புத்தகப்படைப்பாகும். அந்தப்பாவிசைத்தென்றல் இராசாராமனின்
பாடலொன்று அந்தப்புத்தகத்தின் பின்னட்டையை அலங்கரித்து அவர் தம் குறிக்கோள் பேசும்.
தண்டமிழின் சுவைகாணத்
தவறுகின்ற பொழுதெல்லாம்
வாரமெல்லாம் திங்களெல்லாம்
கொண்டிழந்த பேரிழப்பாய்க்
கொள்கின்ற குறிக்கோளாய்
நின்றிருக்கும் ஒருவன் நானே!
நண்பர் எழுத்தாளர் பாவண்னன் அந்த சிறிய நூலுக்கு ஓர் முத்தான
அணிந்துரை வழங்கியிருக்கிறார். அதன் தலைப்பே அற்புதம்.’ ஆலமரமாக வாழ்ந்த ‘அர. இரா’,
அவருடைய எளிமை இனிமையான பேச்சு கவித்துவம் அனைத்தும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய
குணங்கள். இக்குணங்களைப் பயில்வது முக்கியம் என்கிறார் பாவண்ணன். வளவனூர் இராசாராமன்
அய்யா குணங்கள் பற்றி வெண்பா புனையும் வளவதுரையன்,
கால்களே ஊர்தி கரத்தில் துணிப்பை
ஆல்போல் உறுதி அவரிடத்தில்- தால் திறந்தால்
எந்தமிழே கொட்டுகின்ற ஏந்தலவர் என்றென்றும்
செந்தமிழ்க்குச் செய்தார் சிறப்பு. என்று
பேசுகிறார்.
பள்ளி ஆசிரியரான வளவ.துரையன் அதிகாரம் இழந்த அதிகாரங்கள்
என்னும் தொகுப்பில் கல்வி பற்றியொரு கவிதை தருகிறார்.
பணத்திற்கும் சிபாரிசுக்கும் அடைமையாகி
படுக்கையிலே கிடக்கின்ற கல்வி பாரீர்
குணம் செய்யும் மருத்துவராய் வருவதற்கும்
குற்றமின்றிப் பொறியியலைக் கற்பதற்கும்
பணம் தன்னை இலட்சமாக வாங்கி வாங்கிப்
பாரினிலே கல்விக்கே நோய் கொடுத்தார்
மணமுள்ள மலர் வீசி மருந்தளித்து
மறுபடியும் கல்வி உயிர் பிழைக்கவேண்டும்.
மரபுக்கவிதையில்
உச்சம் தொட்ட வளவதுரையன் புதுக்கவிதையிலும் சாதித்துத்தான் காட்டியிருக்கிறார்.
அப்பாவின் நாற்காலி என்னும் கவிதைத்தொகுப்பு விருட்சம் வெளியீடாக வந்திருக்கிறது. அட்டைப்படமே
அருமை. கவிதைகளும் அருமைதான் . ‘எதில் சேர்த்தி?’என்னும் கவிதையை அனுபவிப்போம்.
குடித்தால்தான்
எனக்குக் கவிதை வரும்
இது விக்ரமாதித்தன்.
கவிதையைக்
குறுக்கு நெடுக்காக
நீள அகலமாய்ப்
புரிந்துகொள்ள வேண்டும்
முன்பு பிரம்மராஜன்.
என் கவிதையெல்லாம்
யதார்த்தமானவை
இது கரிகாலன்.
நான் கவிதையில்
சொல்வது என்
சனங்களின் கதை
இது பழமலய்.
எல்லாமே நல்லதுதான்
இவற்றில் யார் பக்கம்
சேர்வது என்று விழிக்கிறது
என் கவிதை.
இன்னுமொரு புதுக்கவிதைத் தொகுப்பு’’ விடாத தூறலில்
’. அகரம் வெளியீடு தஞ்சாவூர். இத்தொகுப்பிற்கு இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் அணிந்துரை வழங்கியுள்ளார்.
அவரின் வார்த்தைகள் இதோ,
தனக்கான வாழ்வினூடே எந்தப்பாசாங்குகளும் இன்றி எந்த மேற்கோள்களையும்
மூளையில் சுமக்காமல் வாழ்வின் மீதொரு பார்வையைச் செலுத்தி அதனைப்பரிசீலிக்கத் தூண்டும் கவிதைகள்
இவருடையவை.’
’சில’ என்னும்
ஓர் கவிதை.
எல்லா நண்பர்களுமே
நண்பர்கள் இல்லை
சிலர் ஒதுக்கவேண்டியவர்கள்
எல்லாப் பகைவரும்
விரோதிகள் இல்லை
சிலர் விரும்பக்கூடியவர்கள்
எல்லாப்பேச்சுக்களும்
கேட்கத்தக்கவை இல்லை
சில வேண்டத்தகாதவை
எல்லா நூல்களுமே
படிக்கக்கூடியவை இல்லை
சில தேவையில்லாதவை
எல்லாக் கவிதைகளும்
எழுத முடிந்தவை இல்லை
சில மனத்திலேயே
இருக்கவேண்டியவை.
இப்படி அற்புதமான கவிதைகளை இந்தத் தொகுப்பில் நாம் காண
வாய்க்கிறது. மரபு புது இரண்டு கவிதைத் தளங்களிலும் சாதித்துக்காட்டுகிறார் வளவ.துரையன்.
கண்ணாடிக்குமிழ்கள் என்னும் கவிதைத்தொகுப்பு 2023ல் சந்தியா பதிப்பகத்து நண்பர்
சந்தியா நடராஜன் வெளியிட்டுச் சிறப்பு சேர்த்துள்ளார்கள்.
அந்தத்தொகுப்பில் இருந்து ஒரு கவிதை. எடை போட….என்னும் தலைப்பில் அது இப்படித்தான் முடிகிறது.
சாதித்தராசுகளும்
அரசியல் அவலங்களும்
மத மலக்கூடைகளும்
மனிதர்களை என்றும்
மதிப்பிடத்தகாதவை
வள்ளுவன் என்னும் பேராசான்
வார்த்தைகளே போதும்
என்னை எடை போட.
சாதியும் அரசியலும் மதமும் தான் இன்று மனிதர்களைத் தீர்மானிக்கின்ற
காரணிகளாய் இருப்பதை வளவ. துரையன் கவலையோடு பார்க்கிறார். வள்ளுவம் தான் அவருக்கு மன
ஆறுதலைத் தருகிறது. திருக்குறளை வைத்து என்னை எடை போடுங்கள் என்று வாசகர்க்குச் செய்தி
சொல்கிறார். ‘தொலைத்தல்’ என்னும் கவிதையில் ஒரு அற்புதமான உவமானத்தைக் கையாள்கிறார்.
வாழை மரம் குலை தள்ளியிருக்கும் வீடு என்று அடையாளம் வைத்துக்கொண்டு ஒரு வீட்டைத்தேடுதல்
இயலுமா என்கிறார். அது வெட்டப்பட்டிருக்கும் அல்லவா என்கிற வினாவை வாசகன் அசை போடுகிறான்.
’வாழைமரம் குலைபோட்ட
வீட்டை அடையாளம்
வைத்தவன் போல்
மனம் திரிந்து தேடினேன்’.
என்று அழகாய் வருகிறது அந்தக்கவிதை.
வளவ.துரையன் படைத்திட்ட சிகரங்கள் என்னும் கட்டுரைத்தொகுப்பு அவரின் இலக்கிய ஆழத்தைத் தரிசிக்கத் தூண்டுகிறது. இது முத்து பதிப்பகம் விழுப்புரம் வெளியீடு. ஒன்பது கட்டுரைகளைக்கொண்ட நூல் பெருமதிப்பிற்குரிய
ஜெயமோகன் மிக நீண்ட முன்னுரை தந்துள்ளார். நவீன சூழலில் புதிய தலைமுறை வாசகர்களுக்காக
எளிய முறையில் செவ்விலக்கியங்களை அறிமுகம் செய்யும் பொறுப்பையே இந்நூலில் வளவ.துரையன்
மேற்கொள்கிறார் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
ஜெயமோகனின் அழுத்தமான பார்வைகள் இக்கட்டுரையில் சில.
பல காலம் நாம் மரபில் இருந்து துண்டித்துக் கொள்வதன் மூலமே
அடுத்த கட்டத்தை அடைந்து விடலாம் என்று நம்பியிருந்தோம். அது நம்மை பிற மரபுகளை பிரதியெடுக்கும்
நிலைக்கே இட்டுச்செல்லும் என்று இன்று தெளிவாகியிருக்கிறது.
மரபு குறித்த விமர்சனப் பார்வையும் ஆழமான அகத்தொடர்ச்சியும் இல்லாமல் நாம் நமது இலக்கியங்களை
உருவாக்கிவிட முடியாது.
துறவு அல்லது வீடு பேறு என்ற சமண அறமே சீவக சிந்தாமணியின்
சாரமான தரிசனம்.ஆனால் தமிழ் மரபோ அகத்துறையில் ஆழமாக வேரூன்றியது.ஆகவே இரு தரப்புக்கும்
இடையேயான ஒருவகை சமநிலையாக அக்காவியம் அமைந்துள்ளது. அது இன்பச்சுவை மிக்க காவியம்.
ஆனால் வீடுபேற்றை முன் வைப்பது.
காபியங்களும் நீதி நூல்களும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்தவை.
ஆனால் முற்றிலும் மாறுபட்ட அழகியல் உடையவை.
ஜெயமோகனின் முன்னுரை
இந்நூலில் செறிவானதொரு இலக்கியத் தரவாக வாசகனுக்குக் காட்சியாகிறது.
வளவதுரையனின் முதல்
சிறுகதைத்தொகுப்பு ‘தாயம்மா’. விழுப்புரம் சக்தி நிலையம் டிசம்பர் 2000ல் வெளியிட்டுள்ளது.
இந்தத் தொகுப்பிலிருந்துதான் வளவ. துரையனின்
படைப்புகள் காத்திரமான புத்தகங்களாக வந்துள்ளன.பதிப்பகத்தார் தன்னுடைய பதிப்புரையில்
‘மரபுக்கவிதைகள் எழுதித் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கிய வளவ. துரையன் தற்பொழுது நவீன
கவிதைகளிலும் சிறுகதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் .பல்வேறு இலக்கிய அமைப்புகளிலும்
பங்கெடுத்துக்கொள்ளும் இவர் தமிழ்ச்சிறு பத்திரிகைகளில் அடிக்கடி காணப்படுகிறார்’’
என்று சரியாகவே பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார்.
வளவ. துரையன் தன்னுடைய ‘என்னுரையில்’
‘ சிற்றிதழ்களை எனக்கு அறிமுகப்படுத்தி என் எழுத்தை மடைமாற்றம்
செய்தவரும் இத்தொகுப்பினை வகைப்படுத்தியதோடு அணிந்துரையும் எழுதித்தந்த நண்பர் பாவண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிடுகிறார்.
பாவண்ணன், சிறுகதை புதினம் எனக் கதையுலகில்
வளவ.துரையன்சாதிப்பார் என்பதனைச் சரியாகவே கணித்திருக்கிறார்.
தாயம்மா சிறுகதைத்தொகுப்புக்கு எழுத்தாளர் பாவண்ணன்
கச்சிதமானதொரு அணிந்துரை தந்துள்ளார். பதிமூன்று கதைகளைக் கொண்ட தொகுப்பு இது. இவை எளியவர்களின் மொழியில் எழுதப்பட்ட கனமான கதைகள். தொகுப்பிற்குத்
தலைப்பிட்ட ‘தாயம்மா’ கதையைப்பார்க்கலாம். தாயம்மா செத்துக்கிடக்கிறாள். பிச்சைக்காரியவள்.
அவளின் மகள் செல்லம்மா. விஷச்சாராயச் சாவில்
எல்லாம் தொலைத்துவிட்டு, சொந்த ஊரைவிட்டுக்கிளம்பி
ஓர் ஊர் ரயில்வே ஸ்டேஷன் அருகே குடிபெயர்ந்தவள்தான் தாயம்மா. சோமு என்பவனோடு பலான அந்தப்
பழக்கம் செல்லத்திற்கு உண்டு. அவன் தான் இப்போது அங்கே வந்து
இச்சாவு எடுக்க கைகொடுக்க வேண்டும்.
அந்தச் சோமு வருகிறான். செல்லத்திற்கு
ஆறுதல் சொல்கிறான். அவன் தலைவன் கணக்காய் நடந்துகொள்கிறான். சவத்திற்கு பூ மாலை வருகிறது. சவத்தை ஒரு போர்வையில்
கிடத்தி மாலையிட்டு பக்கத்தில் ஒரு புடவையை
விரித்து தன்னிடமிருந்த இரண்டு ரூபாய்த்தாளையும்
சில சில்லரை நாணயங்களையும் அதில் போட்டு வைக்கிறான்.
சவத்தைப்பார்ப்பவர்கள் காசு போடவேண்டுமே என்பதற்கு ஏற்பாடு. அவனே உள்ளூர் ஆட்சியாளர்களிடம்
பேசி இலவச ஆம்புலன்சிற்கு ஏற்பாடு செய்கிறான். தேர்தல் சமயங்களில் எல்லாம் எல்லா கட்சித்
தலைவர்களோடும் அவனுக்குப் பரிச்சயம் அதிகம். அதனால் அரசு அலுவலகங்களிலும் அவனுக்குச்
செல்வாக்கு பெருகியிருக்கிறது. தாயம்மா சவத்தை
ஒரு அனாதைப்பிணமாக்கி அதனை உடன் அப்புறப்படுத்தவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சனை
கலவரம் ஆகிவிடும் என்று அதிகாரிகளையே விரட்டிப்பேசுகிறான்.
‘சார் இந்த சால்ஜாப்பெல்லாம் எங்கிட்ட வாணாம். பொணம் ராவு
பூரா அங்கெயே கெடந்து நாத்தம் எடுக்கும். அப்புறம் சாதிக்கலவரம் வரும், அவ்ளோதான் இதுக்கெல்லாம்
நீங்கதான் பொறுப்பு, சீக்கிரம் வண்டிக்கு ஏற்பாடு செஞ்சு அடக்கம் பண்ணுங்க’
ஒரு குட்டி அரசியல்வாதியை
சோமுவின் பாத்திரம் வழியே வாசகனைத் தரிசிக்க
வைக்கிறார் நூல் ஆசிரியர்.
தாயம்மா சவத்திற்கு
பொதுமக்கள் ஒரு இரு நூறு போட்டிருப்பதாய் சோமு மகிழ்ச்சி கொள்கிறான். ஒரு ஐம்பது ரூபாயை
செல்லம்மாவிடம் கொடுக்கிறான். ஆம்புலன்ஸ் வண்டி தாயம்மா சவத்தை அனாதைப்பிணமாய்ச் சொல்லிக்கொண்டு அங்கிருந்து எடுத்துப்போகிறது. நான்கு தினங்களுக்கு
டவுன் பக்கம் சென்று பிச்சை எடுக்க வர வேண்டாம் நான் காசு தருகிறேன் என்கிறான் சோமு. ’குளிச்சு முடிச்சிட்டு சாப்பிட்டுடு. ராத்திரி
இங்க தனியா கெடக்க வாணாம் அங்க வந்துடு’ என்கிறான்.
அம்மா சாவிலுமா இது தொடரவேண்டும் கொஞ்சம் அவகாசம்
வேண்டாமா என்று கெஞ்சுகிறாள் தாயைத்தொலைத்த செல்லம்மா. ’அந்தத் துக்கம் மறக்கத்தான்’ அந்த செல்லத்தைத் தன்னிடம் வரச்சொல்வதாக எத்தனை
அழகாகப் பேசுகிறான் சோமு. சோமு எல்லா ஊரிலும் உண்டுதானே.
வளவ.துரையன் யதார்த்தமாய் நகரத்தின் ஒரு புறத்தே நிகழும்
ஒரு சம்பவத்தை நம் கண் முன்னே ஓவியமாக்கிக் காட்டுகிறார். தாயம்மா செல்லம்மா சோமு என்கிற
ஏதுமிலிகளுக்கும் அவர்களைச் சுரண்டி வாழும் கைத்தடிக்காரனுக்கும் பெயர்கள் சொல்லும்
வளவ.துரையன், உள்ளூர் அதிகாரி ஆம்புலன்ஸ்காரன்
ரயில்வே ஸ்டேஷன் புழங்கிகள் யாருக்கும் பெயர்
எதுவும் சொல்லாமலே கதையைக் கொண்டு செல்கிறார். இந்தக் கதை யுக்திதான் எனக்கு
மிகவும் பிடித்து இருக்கிறது.
அடுத்து ஒரு சிறுகதைத்தொகுப்பு.’ தேரு பிறந்த கதை’. பதினாறு
சிறுகதைகளை உள்ளடக்கிய அற்புதமான தொகுப்பு. இத்தொகுப்பிற்கு எஸ்ஸார்சியாகிய நான்தான்
அணிந்துரை வழங்கியுள்ளேன். மருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதலில் நூலின் தலைப்புக்தையாகிய ‘ தேரு பிறந்த கதைக்குச்செல்வோம்.
தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வர அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தவே மேல் தட்டு சமூகம் இந்த தேரில் இறவனை அமர்த்தி வீதியில் வலம் வரச்செய்வது என்கிற உத்தியினை கையாள்கிறது
என்கிற சோகம் சொல்கிறார் வளவ. துரையன். வாசகனைச்
சிந்திக்க வைக்கிற கதை. ஆசிரியரின் அடி மன
ஆழத்தில் அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் அவதுயுறு கின்ற விஷயம் உறைந்து கிடப்பதை அறியமுடிகிறது. ஒருவற்கு
முற்போக்குச் சிந்தனை நல்ல இலக்கிiயங்களை ஆழமாய்ப்
படிக்கப்படிக்க அது தானே சித்திக்கும் என்பதனை நாமும் வழி மொழியலாம். தேரு பிறந்த கதையில் வரும்
முனுசாமிக்கிழவன் கோவிலில் தேர்த்திருவிழா ஏன் வந்தது என்பதற்கான காரணத்தை இப்படிச் சொல்கிறான்.
‘இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் கோயில்
கட்டிய சாதாரண மக்களைக் காண அவர்களைத்தேடி வீடு வீடாகக் கடவுள் வரப்போகிறார். அவர் பார்வை பட்டு அருள் பெற அவரை அழைத்துவரும் பொறுப்பு மிக முக்கியம். எனவே
அழைத்து வர வாருங்கள்! இழுத்து வர வாருங்கள்! கடவுளைத்தேடி பிறர் போகும்போது கடவுள் நம்மைத்தேடி வருகிறார்.! வருகிறார்! வருகிறார்!’
கதை கேட்டவர்கள்,’ இன்னா தாத்தா கதை நின்னு போச்சு’ என்கின்றனர்.
முனுசாமி தாத்தா கம்பீரமாய்ச் சொல்கிறார்,’ இல்லடா , இன்னிக்கும்
தொடர்ந்துகிட்டேதான் இருக்கு’
எல்லா அக்கிரமங்களுக்கும் தொடர்கதையாகத் தானே இருக்கிறது
என்கிறார் வளவ. துரையன். அற்புதமான ஒரு அவிழ்ப்பினை சாதித்துக்காட்டுகிறார். எழுத்தாளரின் உள்ளக்கிடக்கையை வாசகன் தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பாக
இக்கதை அமைந்து சிறக்கிறது.
கூச்சம் என்று தலைப்பிட்ட ஒரு சிறுகதைத்தொகுப்பு இருபது
சிறுகதைகளை உள்ளடக்கியது. அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்து நண்பர் உதயக்கண்ணன் வெளியிட்டது.
அறிவுலகின் திறவு கோல் என்று ஒரு வாசகத்தை அந்த பதிப்பகத்தார் பதிப்பகத்தின் பெயருக்குக்
கீழே போட்டிருப்பது எடுப்பாக இருந்தது. இந்தத்தொகுப்புக்கு கருத்துரை வழங்கியவர் எஸ். ஜெயஸ்ரீரகுராமன். அவரின் அழகு வார்த்தைகளில் வளவ.துரையனின் கதைகள்
பற்றிப்பார்க்கலாம்.
‘அவர் ஒரு நடமாடும் வீடியோ கேமரா போல அன்றாட நிகழ்வுகளை
மனதில் படம் பிடித்துப் பதியவைத்துக்கொள்கிறார்.அந்தப்பதிவுகளை மீண்டும் மீண்டும் ஓடவிட்டு அவற்றிலிருந்து வாழ்க்கை எழுப்பும் கேள்வி
ஒன்றை வாசகருக்கு விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். காட்சி விவரிப்புகள் மூலம் வாசகர்களை
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் வளவ.துரையனின் கதைகள் மனதில் நீங்கா இடம்பெறத்தக்கவை’
கூச்சம் என்னும் நூலுக்குத் தலைப்பிட்ட அந்தக்கதையில் வரும் அங்கப்பன் ஒரு நாள் கூலி வேலை கிடைக்கப் படாத
பாடு படுகிறான். பேப்பர் போடும் வேலைக்குப் போகிறான். அவன் சரியாகப்பேப்பர் போடவில்லை
எனப்புகார் வருகிறது. முதலாளி திட்டுகிறார். வேலையை விட்டு விடுகிறான். தியேட்டரில்
டிக்கட் கொடுப்பது இரவில் போஸ்டர் ஒட்டுவது விளம்பரம் எழுத வெள்ளை அடிப்பது என எதாவது
ஒரு வேலையைச் செய்துகொண்டே இருக்கிறான். கடைசியில் ஒரு கட்சி ஊர்வலத்துக்கு நூறு ரூபாய் கூலிக்காகச்செல்கிறான். அந்தக்கூட்டத்தில்
இப்படிக் கூட்டமாய் வந்தவர்களைப்பார்த்துக் கட்சியின் தலைவர் இப்படிப்பேசுகிறார்.
‘இந்தக்கூட்டம் சாதாரணமானது அல்ல.உணர்ச்சி மிக்க தொண்டர்களின்
கூட்டம்.எடுத்தகாரியத்தை முடித்துவிடும் கூட்டம். உள்ளத்தில் உணர்ச்சிகள் கொப்பளிக்க
ஓடி வந்துள்ள எழுச்சிமிக்க கூட்டம். இவர்களின் சாதனையில்தான் இந்தக்கட்சியே இருக்கிறது’
அங்கப்பனுக்கு தலைவர் பேசப்பேச உள்ளங்காலில் கடித்த கட்டெறும்பு
உடம்பு முழுவதும் கடிப்பது போல இருந்தது. எழுந்து வெளியே வந்து விட்டான். அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பாலு அவனுடைய வீடு தேடி வந்து ஒரு நூறு ரூபாய்த்தாளை நீட்டுகிறான். ‘என்னடா காசு வாங்கிக்காம வந்துட்ட’
என்கிறான். அந்தக்காசை அவன் தன் அம்மாவிடம் கொடுத்துவிடச்சொல்கிறான். அதைத்தொடவே அங்கப்பனுக்கு
அருவருப்பாக இருந்தது என்கிறார் வளவ.துரையன்.
மனசாட்சி உள்ள இளைஞர்கள் படும் பாட்டையும் அரசியல் கட்சிகள் அவர்களைக் கூலிக்கு
அழைத்துச் சென்று கூட்டம் சேர்ப்பதையும் பகடி செய்கிறார் ஆசிரியர்.
இதே கூச்சம் தொகுப்பில் இன்னுமொரு கதை கொடிமரம். ஜமால்
சார் தான் குடியரசு தினத்தன்று கொடியேற்ற
அவ்வளவு பொறுப்போடு எல்லா காரியங்களையும் பார்க்கிறார். கொடியேற்றத்திற்கான ஏற்பாடு எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
மாணவர்களுக்குத் தலா ஒரு பணி என்று கட்டளை தருகிறார். தேசியக்கொடியைக் கம்பத்தில் கட்டி
ஏற்றுவதற்குப் பணிக்கப்பட்ட ஆறுமுகம் தேசியக்கொடியை வைத்துக்கொண்டு விழிக்கிறான். கொடி
மரத்தைக்காணவில்லை. ஒரு மாணவன் சொல்கிறான்,
’மேனேஜர் வீட்டுல சாயந்திரம் மஞ்சள் நீர் சடங்கு செஞ்சாங்கள்ள சார், பந்தலுக்குக் கால்
கொரஞ்சதால எடுத்துகிட்டு போயிட்டாங்க’
கொதிக்கிற எண்ணெய்ச்சட்டியில் தன்னைத் தூக்கிவாரிப்போட்டதாக
உணர்ந்த ஆசிரியர் ஜமால் தேசியக்கொடியைக் கையில் வாங்கி உயரப்பறக்குமாறு தூக்கிபிடித்து
நிற்கிறார். ’ என் கூட ப்பாடுங்கடா எல்லாரும் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று சொல்வதாய்
முடிக்கிறார் வளவ. துரையன். பள்ளிக்கூட ஆசிரியரின்
செயல்கண்டு வாசகன் அதிர்ந்து போய் நிற்கிறான். இச்சிறுகதையைப் படிப்பவர்கள் எளிதில் மறக்க முடியாத
கதை இது. வளவதுரையனின் சிறுகதை ’ கொடிமரம்’ இங்கே வெற்றிக்கொடி
நாட்டி நிற்கிறது.
புதினங்கள் படைப்பதில் வளவ. துரையன் தனது எழுத்துத்திறமையை
வெளிக்கொணர்ந்துள்ளார்.மலைச்சாமி என்கிற புதினம் இதனை மருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இது 2009 ல் வெளிவந்த நாவல். மும்பையில் தனது பிள்ளைகள் வீட்டில் தங்கியிருந்தபோது
ஒரு மாதத்தில் இந்தப்புதினத்தை எழுதி முடித்ததாகச் சொல்கிறார் வளவ. துரையன். இப்புதினத்தை மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற பாவண்ணனுக்குச் சமர்ப்பித்து நிறைவடைகிறார் வளவ.துரையன். இந்த நாவலுக்கு புதுச்சேரி பேராசிரியர் க. நாகராசன் முன்னுரை தந்துள்ளார்.
அவர் தன் கருத்துரைக்குத் தந்த தலைப்பே அற்புதமாய் இருக்கிறது’ மகாநதியும் மயிலிறகும்’.
மலைச்சாமி புதினம் இது நான்கு குடும்பங்களை
மய்யப்படுத்தி எழுதப்பட்ட நாவல். மிகப்பெரிய நிலச்சுவான்தார் ஒரு பிராமணர் விவசாயியாய் கிராமத்தில் இருப்பவர், பகுத்தறிவாளர் சின்ன அய்யர்
குருமணி, பாசம் மிகுந்த சகோதரர்கள் முருகேசன் பெரியசாமி குடும்பத்தார், தம்புசாமி சுலோச்சனா
குடும்பம் அதனில் குறுக்கிடும் இளைஞன் கோபு.
தோட்டத்தில் எதையோ
கண்டு மயக்கம் போட்டு விழும் மாலதி. அவளைச் சரி செய்ய மலையிலிருக்கும் சாமியார் மலைச்சாமி யிடம் அழைத்துச் செல்வது என்பதில் தொடங்கி பல நிகழ்வுகளைச்
சந்தித்து பல பிரயாணங்களை மேற்கொண்டு கடைசியில்
அந்த மலைச்சாமியின் ஆசிரமத்திலேயே முடிகிறது கதை. இப்புதினத்தில் முருகேசன் என்னும்
பாத்திரம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். நல்ல மனிதனாய் வாழவே முடிவோடு இருக்கும்
மலைச்சாமி படும் துன்பங்கள் அதிகம். எத்தனை சோதனைகள் வந்தாலும் அயராத முருகேசன் அன்பையே
வழங்கி உயர்ந்து நிற்கிறான். மாறாக சுலோச்சனா கோபு இணை தவறை மட்டுமே செய்கிறது. சோதனைகள்
எதுவும் எதிர்கொள்ளாமல். மனித வாழ்க்கை ஒரு புதிராக இருப்பதை வளவ. துரையன் காட்சி ஆக்குகிறார்.
கிராமத்துப் பின்புலம். அங்கு காணக்கிடைக்கும் மனித உறவுகள்
அங்கு கனியும் விழுமியங்களைக்கொண்டு புனையப்பட்ட புதினமே ‘மலைச்சாமி’.
அடுத்து ‘சின்னசாமியின் கதை’ என்னும் இப்புதினம்
தஞ்சை அனன்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. முனைவர் . பாஸ்கரன் இப்புதினத்திற்கு
சிறப்பானதொரு கருத்துரை வழங்கியுள்ளார். இப்புதினத்தை கடலூர் நண்பர்
கோ. மன்றவாணன் அவர்கட்குச் சமர்ப்பித்துள்ளார் வளவ.துரையன்.
‘சில மகிழ்வான தருணங்கள்,கிடைத்த நகைச்சுவைகள்,அடிபட்ட
காயங்கள்,விழுந்ததால் உண்டான வலிகள் செயல்களை முடித்த வெற்றிக்களிப்புகள்,சந்தித்த
பல்வகை மனிதர்கள் இப்படிப்பட்ட எல்லாமே கலந்ததுதான் இந்தச்சின்னசாமியின் கதை’ புதினத்தின் ஆசிரியர் பகிரும் சொற்கள் இவை.
இப்புதினத்தில் வரும்
ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொரு வாசகனுக்கும் பொருந்திய படிக்கு அனுபவமாகும் என்பதை வளவ. துரையன் குறிப்பிடுகிறார்.
கோயில் தெய்வங்களான ஐயனார், அம்மன், பெருமாள், சிவபெருமான் இவர்கள் கோவிலை விட்டு வெளியில்
வந்து பகடியாய்ப் பேசிக்கொள்வதை வாசகர்க்குக் காட்டுகிறார் ஆசிரியர்.
‘சாதிக்குள்ளேயே இருக்கின்ற முரண்கள் உடையும் வரை அல்லது
சாதிக்குள்ளே இருக்கின்ற இறுக்கங்கள் தளரும்வரை சாதியக் கட்டுமானங்களில் மாற்றம் விளைவதற்கான
சாத்தியங்கள் இல்லை என்பதுவே புதினம் தரும் செய்தியாகப் பேராசிரியர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.
’இரண்டாவது மதகு’ என்னும் வளவ. துரையனின் புதினத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு எழுத்தாளர் பாவண்ணன் ‘புதிர்களின் களம்’ என்னும் அற்புதமானதொரு முன்னுரை
வழங்கியுள்ளார்.கிராமங்கள் மெல்ல மெல்ல நகரம் நோக்கி நகர்தலை மய்யப்படுத்திய புதினம்
இது. பல் வகைப்பட்ட கிராம மக்களும் இரண்டாம் மதகில்தான் அமர்ந்து விவாதிக்கின்றனர். அப்படி இந்த இரண்டாம் மதகு, எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்குக் களமாய் அமைந்து நிற்கிறது. இப்புதினத்தில் மூன்று
கதைப் போக்குகள் இருப்பதை வாசகன் உணர்கிறான். மண்ணாசை பிடித்த நரிக்கால் அய்யர், உறவின்
அருமையே தெரியாத சாமிநாத அய்யர், ரெட்டியார்
வீட்டில் பண்ணை வேலை செய்த சின்னான் மனைவி பாஞ்சாலி என்கிற இம் மூவரும் சந்திக்கின்ற
போராட்டமே புதினமாகியிருக்கிறது. செண்பகத்தின் இளமையும் அது கொணரும் தொடர் சிக்கல்களும், அவளின் பழிவாங்குதல் நிகழ்வும் நாவலில் ஓவியமாகியிருக்கிறது. இரண்டாம் மதகு அதன் சாதனையால் வெற்றி பெற்றிருக்கிறது.
தொடர்ந்து இலக்கியப்பணி செய்துவரும் வளவ. துரையன் ஓர் விருட்சத்தின்
குளிர் நிழலாய் இருந்து இலக்கிய அபிமானிகளுக்கு எப்போதும் உதவுகிறார். இதிகாசங்கள் மாபாரத இராமாயண மேடைப்பேச்சுக்களாலும், திருப்பாவை
திருவெம்பாவை தெய்வீக தொடர் உரைகளாலும், செவ்விலக்கியங்கள் மீதான ஆழமான கட்டுரைகளாலும், விடாது நடத்திவரும் இலக்கியப் பேரவை நிகழ்ச்சிகளாலும்,
சங்கு என்னும் இலக்கியக்காலாண்டிதழ் சேவையாலும்,பிரபல பத்திரிகைகளில் எழுதிவரும் தன்னுடைய கூர்மையான கருத்துக்கடிதங்களாலும் தனது வாழ்க்கையை
தமிழ் வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டு வாழ்ந்து காட்டுகிறார். தொடர்ந்து சாதிக்கட்டும் எழுத்தாளர்
வளவ. துரையன்.
--------------------------------------------------------------
விட்டல் ராவ் ஓர்
கலைச்சுரங்கம்
’ஒரே ஒரு சிறுகதை
விட்டல் ராவ் உரையாடல்கள்’ என்னும் கட்டுரை நூலை எழுத்தாளர் பாவண்ணன் படைத்திருக்கிறார். எழுத்தாளர் விட்டல் ராவ் அவர்களோடு
பாவண்ணன் நிகழ்த்திய உரையாடல் இங்கே ஒரு நூலாகியிருக்கிறது. விட்டல் ஓர் கலைகளின்
சுரங்கம் என்பதைத் தெரிவிக்கும் பலகணியாய் இந்நூல் வாசகனுக்கு அனுபவமாகிறது.
சந்தியா பதிப்பகம்
இந்நூலை கொண்டு வந்திருக்கிறது. மணியான பத்தொன்பது கட்டுரைகளைக்கொண்ட இந்நூல் 262 பக்கங்களாய்
விரிகிறது. இப்படைப்பின் பெரும்பாலான கட்டுரைகள்
அம்ருதா இதழில் தொடர்ந்து வெளிவந்தவை. இந்த நூலை
இவ்விரு இலக்கியப் பெருமக்களுக்கும்
நண்பராய் இருந்த நாடறிந்த எழுத்தாளர்
அமரர் அசோகமித்திரனுக்குப் பாவண்ணன்
வணக்கத்தோடு சமர்ப்பித்திருக்கிறார்.
பாவண்ணனும் விட்டல்ராவும் பெங்களூருவில் வசித்து வருகின்ற
எழுத்தாளுமைகள். இருவரும் வெளியூர்களில் நிகழும் பல இலக்கிய நிகழ்வுகளுக்குச் சேர்ந்தே
பயணித்திருப்பதும், வாழிடம் அண்மை என்பதால்
இவரும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதும் இந்நூல் உருப்பெற உதவியிருக்கின்றது. இந்நூலை வாசிக்கின்றபோது
பகவத்கீதையின் வினாவிடைப் பாணி காட்சியாவதாய்
நான் உணர்ந்தேன். விட்டல்ராவ் கீதையின் விளக்கம் சொல்லும் கண்ணனாக, பாவண்ணன் வினா வைக்கும் பார்த்தனாக எனக்கு
அனுபவமானார்கள். பாவண்ணன் வாசகர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு வினாக்கள் வைப்பதை நாம்
உணரலாம்.
பாவண்ணன் தனது முன்னுரையில் மிகச்சிறப்பாக இந்நூலின் முக்கியத்துவம்
பற்றிக்குறிப்பிடுகிறார்.
‘விட்டல் ராவுடன் உரையாடுவது ஒரு நூலகத்துக்குச்சென்று
புத்தகம் படிக்கும் அனுபவத்துக்கு நிகரானது. அவர் உரையாடத்தொடங்கினால் எண்ணற்ற தகவல்கள்
வந்துகொண்டேயிருக்கும். அவருடைய நினைவாற்றல் ஒரு பெரும்புதையல். ஒவ்வொரு நிகழ்ச்சியையும்
நம் கண் முன்னால் நிகழ்த்திக்காட்டும் ஆற்றல் அவருக்குண்டு. அவர் வழியாக எண்ணற்ற மனிதர்களைப்
பற்றித்தெரிந்து கொண்டேன்.’
ஒவ்வொரு கட்டுரையிலும் பாவண்ணன் தனக்கு நேர்ந்த நிகழ்வுகளை எண்ணிப்பார்க்கிறார்.
அவைகளின் ஒரு முனையை விட்டல் ராவோடு பகிர்ந்து கொள்கிறார். விட்டல் அதனைப் பற்றிக்கொண்டு தனது சொந்த
அனுபங்களை அருவியெனக் கொட்டுகிறார். அதனை வாசகப் பெருமக்களுக்குக் கடத்துகிறார்
பாவண்ணன்.
முதல் கட்டுரைக்குக்
கபாலி என்று பெயர் கொடுத்திருக்கிறார் பாவண்ணன். தினமணிக்கதிரில் அறுபது எழுபதுகளில் விட்டல் ராவ் தான் எழுதிய கதைகளை இரண்டு தொகுதிகளாக பைண்ட் செய்து
வைத்திருக்கிறார். அதில் ஒரு தொகுதியை படிக்க
வாங்கி வந்த பாவண்ணனுக்கு விட்டல் ராவின்
சிறுகதைப்படைப்புகளில் ’ கபாலி’ என்னும் சிறுகதை மிகவும் பிடித்துப்போகிறது. கபாலி ஒரு பேட்டை ரவுடி.
அதே ஊரில் வீரய்யா என்பவன் இன்னொரு ரவுடி. கபாலிக்குக் கான்ஸ்டபிள் துரை வேண்டியவராகிறார். அதே ஸ்டேஷனைச்சார்ந்த கான்ஸ்டபிள்
சாயிராம் வீரய்யாவுடன் நெருக்கமாகிறார். இருவேறு
ரவுடிக் கும்பல்களுக்கிடையே சதா மோதல்கள் நடக்கின்றன.
இரு வேறு கான்ஸ்டபிள்களுக்கு இடையேயும் பொறாமையும் போட்டியும் தொடர்கின்றன,
அதிர்ச்சி அளிப்பதாய் கபாலியின் மரணம்
நிகழ்கிறது. அவனது உடல் சாக்கடையை அடைத்துக்கொண்டு கிடக்க அதனை வெளியே எடுத்துப் போடுகிறார்கள்.
இந்தக்கதையை நண்பர் விட்டல் ராவோடு தொடங்குகிறார் பாவண்ணன். அந்தக்
கபாலி கதைக்குள் இன்னும் பல கதைகள் இருப்பதாய் விட்டல் ராவ் ஆரம்பிக்கிறார். ஒரு சினிமா நடிகையோடு அவனுக்குப் பழக்கம் ஏற்படுகிறது. அந்த நடிகை ஷூட்டிங்க்
முடித்த கையோடு ஷாப்பிங்க் போகும் சமயம் கபாலி பார்த்து விடுகிறான். அவனுக்கு என்னமோ கிளு
கிளுப்பு. அந்த நடிகையைக் கட்டிப்பிடித்து
மார்பகத்தை கடித்தே விடுகிறான். அவனை
யாராலும் பிடிக்கவே முடிய வில்லை. எங்கு போனான் என்றே தெரியவில்லை. ஒரு நாள் அவன் சவம் சாக்கடையில் அடைத்துக்கிடந்ததது. இந்த நிகழ்வைத்தான் நடிகை சமாசாரத்தை மட்டும் நீக்கிவிட்டு ’கபாலி’
என்னும் சிறுகதையாக விட்டல் எழுதியிருக்கிறார். அதற்குத் தினமணிக்கதிரில் எழு நூற்றி ஐம்பது ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. அதனை பெற்றுக்கொண்ட விட்டல் ராவ் ஆதம்பாக்கத்தில் தன் வீட்டுக் கழிப்பறையைப் பேசின் வைத்த நவீன கழிப்பறையாக மாற்றியிருக்கிறார்.
அதுவரைக்கும் கையில் காசில்லாத்தால் லெட்ரின்
கழிவுகளை தானும் தனது மனைவியும் இரவில் யாருக்கும் தெரியாமல் வெகுதூரம் எடுத்துக்கொண்டு போய் கொட்டி சுத்தம்
செய்து வந்திருக்கிறார்கள். எளிமை நேர்மை உண்மை இவைதானே விட்டல்ராவ்.
கபாலி கட்டுரையை இப்படி முடிக்கிறார் பாவண்ணன். ‘ ஒரு கதை,அந்தக்
கதைக்குள்ள ஒரு கதை, அதுக்குப் பின்னணியா இன்னொரு
ஒரு கதை எல்லாமே அருமை’
அடுத்தக் கட்டுரை
இரண்டு ரோஜாப்பூக்கள். ஒரு சமயம் ’சர்வோதயம்’ மலர்கிறது இதழுக்காக லால் பகதூர் சாஸ்திரி பற்றி ஒரு கட்டுரையைப் பாவண்ணன் எழுதிக்கொண்டிருக்கிறார். விட்டல் ராவ் கை பேசியில்
அவரை அழைக்கிறார்.’நீங்க சாஸ்திரியைப் பார்த்திருக்கீங்களா சார்?’ வினா வைக்கிறார்
பாவண்ணன். தான் அவரை நேரில் பார்த்திருப்பதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ‘உண்மையாவா
சார்? யாராவது அழைச்சிட்டு போனாங்களா,,இல்ல நீங்களா பாத்தீங்களா” என்கிறார் பாவண்ணன்.
அதற்கு விடையாக ஒரு நீண்ட கதை சொல்கிறார் விட்டல் ராவ். பிரசன்ன வெங்கடேசன் என்னும் கும்பகோணத்துக்காரர்
தன்னோடு ஆப்ரேட்டராக சென்னையில் பணியாற்றியவர். அந்த நண்பரின் வாழ்க்கையைச்சொல்கிறார் விட்டல் ராவ். பிரசன்னா
தொலைபேசியில் இயங்கிய என் எஃப் டி இ தொழிற்சங்கத்தில் தீவிரப் பற்றோடு இருந்தவர். தொழிற்சங்கப் பணியாய் டில்லியில் தாதா கோஷ் பவனுக்கு அடிக்கடிச் செல்வார். அப்படிச்
செல்கின்றபோது கோபண்ணா என்கிற காங்கிரஸ் காரரோடு அவருக்கு நெருங்கிய பழக்கம் உண்டாகிறது. அப்படியே
சூழலியலாளர் பகுகுணாவோடும் நெருக்கமாகிறார். ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரிக்குத்
தமிழ் நாட்டைப்பற்றி ஏதோ அய்யம் வர அதற்கு விடை சொல்லும் முகத்தான் பிரசன்னா அனுப்பப்பட்டிருக்கிறார்.
சாஸ்திரியோடு பிரசன்னா பேசியிருக்கிறார். அச்சந்திப்பு முடியும் போது இரண்டு ரோஜாப்பூக்களை
சாஸ்திரி பிரசன்னாவிடம் வழங்கியிருக்கிறார். அதனைத் தேவலோகத்து மலர்களாய் நினைத்து
பிரசன்னா தனது டைரியில் வைத்துப் பாதுகாத்திருக்கிறார். தனக்குத்
தெரிந்த எல்லோருக்கும் அதனைப் பெருமையோடு காண்பிக்கவும் செய்தார். அவர்தான்
விட்டல் ராவை பிரதமர் சாஸ்திரியின் கூட்டத்திற்கு
அழைத்துச்சென்றவர்.
பிரசன்னா நல்ல புத்திசாலி. இலாகா தேர்வு எழுதி ஜே இ பதவிக்குத்
தகுதியானார். மேலுள்ள அதிகாரிகள் பயிற்சி வகுப்புக்கு அவரை அனுப்பாமல் முடக்கிப்போட்டார்கள். அதனை எதிர்
கொள்ள டிரிப்யூனலுக்குப்போனார். நீதிமன்றத்தில்
வென்றார் ஆயினும் அவரை எதோ சாக்கு சொல்லி பயிற்சிக்கு
அனுப்பாமல் அதிகாரிகள் காலம் கடத்தினார்கள்.
வெறுத்துப்போன பிரசன்னா தனக்கு எந்தப் பதவி
உயர்வும் வேண்டாமென்று ஆப்ரேட்டராகவே பணி தொடர்ந்தார்.
வாழ்க்கைத்துணைவியாய் ஒரு பெண்ணை மணந்தார். அதுவுமே விளங்கவில்லை. மண வாழ்க்கை முறிந்து
போனது. கைக்குழந்தையோடு டில்லி சென்ற மனைவி அவரை முற்றாக மறந்து போனார். பிரசன்னாவைக் குடிப்பழக்கம் தொற்றியது. ஒரு நாள் அனாதையாய் இறந்து போனார். அவரின் இறப்பு
நிகழ்வும், சவ அடக்கமும் சோக மயமானது. பிரசன்னாவின்
வாழ்க்கையையே விட்டல் ராவ் காம்ரேட் என்கிற நாவலாக எழுதினார்.
‘த் ச் பாவம்,
பிரசன்னன்தான் பாதி சினிமாவுல எழுந்து
போகிற மாதிரி அரை கொறயா வாழ்ந்துட்டு போயிட்டாரு’
என்று உரையாடலை முடிக்கிறார் விட்டல் ராவ்.
மூன்றாவதாக வரும் கட்டுரை எஸ்.வி.எஸ் என்னும் மாமனிதர். பாவண்ணன் சென்னையில் காந்தி கல்வி நிலையத்தில் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ் நாட்டில் காந்தி’ என்னும்
நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்று பேசுகிறார். அது தக்கர் பாபா வளாகம். அவ்வளாகத்தைப்
பல்வேறு கோணங்களில் நிழற்படமெடுத்து விட்டல்
ராவுக்குக்காண்பிக்கிறார் பாவண்ணன். விட்டல் ராவ் அங்கிருந்த ராஜாஜி நூலகத்தை உருவாக்கிய
எஸ்.வி.சுப்ரமணியம் பற்றி உரையைத் தொடங்குகிறார். எஸ்.வி.எஸ் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியத் தொண்டர். விடுதலைப்போரில் சிறைக்கு ஏகியவர்.
கல்கியின் நண்பர். சிறு கதைகள் சில படைத்தவர்.
கல்கியில் துணையாசிரியர். இலக்கியச்சிந்தனை அமைப்போடு இயங்கியவர்.இசையரசி எம் எஸ், திகசி, அசோகமித்திரன் ஆகியவர்களோடு பழகியவர்.
‘ஒவ்வொரு செங்கல்லா வச்சி வீடு கட்டறதுமாதிரி சிறுகச்சிறுக பாடு பட்டு அந்த நூலகத்தை உருவாக்கினார் எஸ். வி.
எஸ். துரதிருஷ்ட வசமா அவருடைய மரணத்துக்குப் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு அந்த நூலகம் சரியா இயங்கல.’ தன் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் விட்டல் ராவ்.
மைலாப்பூர் பாரதிய
வித்யா பவன் இராஜாஜி பெயரில் ஒரு நூலகம் உருவாக்கி நடத்த முனைந்தார்கள். தக்கர் பாபா
வளாகத்தில் இருந்த எஸ்.வி.எஸ் நூலகம் முழுவதுமாய் இராஜாஜி நூலகத்திற்கு இடம் பெயர்ந்து எஸ். வி. எஸ் நூலகம் காணாமல் போயிற்று.
அடுத்து வருவது’ நாற்பது ரூபாய் ’ என்று தலைப்பிட்ட கட்டுரை. விட்டல் ராவும் இயல்பாய் ஒரு ஓவியர். எழும்பூர் கலைப்பள்ளியில் பயின்றவர். பாவண்ணனும் ஓவியம் பற்றி
நன்கு அறிந்தவர்தான். மாடலாக ஓவியம் வரைவதற்கு
வந்து நிற்கும் எளிய பெண் அவள் உடன் வரும்
அவளின் சிறு குழந்தை. மாடலுக்கு நிற்கும்
அவள் கை ரிக்ஷா இழுப்பவனின் மனைவி
அப்பெண்ணுக்குக் கூலி ஐந்து ரூபாய். அது பற்றி விபரம் சொல்கிறார் விட்டல்.
‘’பொண்ணா இருந்தாலும் சரி, ஆணா இருந்தாலும் சரி, ஒவ்வொரு
ஆர்டி்ஸ்ட் மனசுக்குள்ளயும் ஒரு பொண்ணுக்கான முகம்,ஒரு ஆணுக்கான முகம்னு தனித்தனியா
இருக்கும்.அந்த உருவம்தான் ஓவியத்துக்குள்ள வரும். அப்புறம் எதுக்கு மாடல்னு உங்களுக்குத்
தோணலாம். அது அந்த குறிப்பிட்ட ஒரு கோணத்துக்காக
ஒரு சாயலுக்காக. உடல் வளைவுக்காக. அந்த துல்லியத்தைப் புரிஞ்சிக்கறதுக்காகத்தான்
மாடலை நிக்க வைக்கிறது .எந்த மாடலுடைய படத்தையும் எந்த ஸ்டுடியோவுலயும் எந்த ஆர்டிஸ்டும்
வரையமாட்டான். அது ஒரு அறம். கண்ணால பார்க்கிற
உருவத்துக்கு அவன் தன் நெஞ்சில இருக்கிற உருவத்தைத்தான் கொடுப்பான்’
என்கிற அரிய செய்தியை விட்டல் ராவ் வழி வாசகர்க்குச்சொல்கிறார் பாவண்ணன். அங்கிருந்த எல்லோரிடமிருந்தும் பணம் வசூலித்து ஒரு நாற்பது ரூபாயை அந்த மாடலுக்காக வந்த பெண்ணுக்குக் கொடுத்தனுப்புகிறார்கள் என்கிற நல்ல செய்தியும் கட்டுரையில் வருகிறது.
’பாலர் பாடல்கள்’ என்னும் தலைப்போடு வரும் அடுத்த கட்டுரையில்
விட்டல் ராவ் தனது சிறுவயதில் கற்றுக்கொண்ட ஆங்கிலப் பாடல்களை அழகாக ஒப்பித்து அசத்துகிறார்.
‘Cocks crow in the morn
To tell us to rise
And he who lies late
Will never be wise
என்கிற சேவல் பற்றிய பாடல்,
‘Cock a doodle do
My dame has lost her shoe என்கிற மற்றுமொரு சேவல் பாடல்
‘Her arms across her breast she laid
She was more fair than words can say
Barefooted
came the beggar maid
Before the king Cophetua. என்கிற கோமாளி ராஜா ஒரு பிச்சைக்காரப் பெண்ணை மணக்கும் பாடல் ஒன்று கூட வெளிப்படுகிறது விட்டல் ராவின் மனக்குகையிலிருந்து.
அடுத்து வரும் கட்டுரை’ ஒரே ஒரு சிறுகதை’. இந்நூலுக்குத்தலைப்பாய்
அமைந்த கட்டுரை. தினமணியின் ஆழ்ந்த வாசகரான
பாவண்ணன் தினமணியில் அம்ஷன் குமார் பற்றியும்,
சாகித்ய அகாதெமியின் சிறுகதைத்தொகுப்பு பற்றியும்
கலாரசிகன் குறிப்பிட்டுள்ளது பற்றி விட்டல்ராவோடு பேச்சுத்தொடங்குகிறார். விட்டல் ராவ்
கலைஞன் பதிப்பகத்து மாசிலாமணி யின் ஆலோசனையில்
இந்த நூற்றாண்டு சிறுகதைகள் என்னும் தொகுப்பு வேலையை ஆரம்பித்த கதையைச் சொல்கிறார். எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே சிறுகதைத் தொகுப்பிலே
சேர்ப்பதற்கு தன் கதையைத் தானே தேர்வு செய்தது
சொல்கிறார். எழுத்தாளர்கள் பட்டியலை ஜெயகாந்தன்
வாங்கிப்பார்க்கிறார். அதனில் இருவர் பெயர் விட்டுப் போயிற்று என்கிறார். பி. ச. குப்புசாமியும், பி. ஸ்ரீனிவாசனும் அந்த
இருவர். குப்புசாமியின் கதை கங்கவரம், ஸ்ரீனிவாசனின் கதை திருமணம் என்கிற ஒரு குறிப்பும்
தருகிறார். அந்த இருவரின் விலாசமும் தருகிறார். விட்டல்ராவ் ஒரு கடிதம் எழுதிட திருப்பத்தூரிலிருந்து குப்புசாமி கங்கவரம் கதையை அனுப்பி வைக்கிறார்.
சென்னையிலிருந்த ஸ்ரீனிவாசனை விட்டல் ராவ் நேரில் சென்று சந்திக்கிறார்.’ திருமணம்’
சிறுகதையைப் பெற்றுக்கொள்கிறார். இதுவரை ஒரு தொகுப்புமே போடாத எழுத்தாளர் ஸ்ரீனிவாசனிடமிருந்து இருபது சிறுகதைகளை வாங்கி வந்து அதனை ஒரு தொகுப்பாக்க முனைகிறார் விட்டல் ராவ்.
அதுதான் நடைபெறவேயில்லை. அந்தப்பதிப்பகத்தாரரோ
கதைகளைத் தொலைத்தும் விடுகிறார். பதிப்பாளரின்
பெயரை விட்டல் ராவ் குறிப்பிடவும் இல்லை. விட்டல்
ராவ் தொகுத்த நூறு கதைகளில் ஒன்றாக ஸ்ரீனிவாசனின் திருமணம் இடம் பெறுகிறது. ஆனால் தொகுப்பைக்
கண்ணால் பார்க்காமலே மறைந்து விடுகிறார் ஸ்ரீனிவாசன்.
’’ஒரு தொகுப்புக்கான கனவு’ என்று தலைப்பிட்ட கட்டுரையில் பாவண்ணன் வி. கமலா ராவ் பற்றிக்குறிப்பிடுகிறார். கமலா ராவ் என்கிற பெயரில் இரண்டு சிறுகதைகள் ஒன்று ‘பாசம் பிரிவதில்லை’ மற்றொன்று ‘ எஞ்சின் தண்ணீர்’ இவ்விரண்டு கதைகளைப்
பற்றி விரிவாகப்பேசுகிறார். பாவண்ணன் விட்டல்
ராவிடம் கமலா ராவ் யாரெனக் கேட்கிறார். விட்டல்
ராவின் மனைவிதான் அந்த கமலா ராவ். இதனை அறிந்த
பாவண்ணன் வியந்து போகிறார். விட்டல் ராவ் தனது மனைவி கமலா ஏழு
சிறுகதைகள் எழுதி அவை வெவ்வேறு இதழ்களில் பிரசுரமானதைப்
பற்றிக்குறிப்பிடுகிறார். அவைகளைச் சரியாக பாதுகாத்து வைக்காதது பற்றி விட்டல் ராவ்
வருத்தப்படுகிறார். அவைகளை எப்படியேனும் தேடிக்கண்டு பிடித்து ஒரு தொகுப்பாய்க் கொண்டு
வரலாம் என்கிற உருப்படியானதொரு யோசனையை வைக்கிறார்
பாவண்ணன்.
பாகவதரின் பாடல்கள் என்னும் கட்டுரையில் பாவண்ணன் தனது
தந்தை பலராமன் தியாகராஜ பாகவதரின் பாடல்களில் எத்தனை ஈடுபாடு கொண்டிருந்தார் என்று தொடங்குகிறார். விட்டல் ராவ் அவரது குடும்பமே பாகவதரின்
பாடல்களில் தோய்ந்து போயிருந்ததைக் குறிப்பிடுகிறார். ‘ பவளக்கொடிதான் பாகவதரு முதல்
படம். அவருக்கு அதுல ’அர்ஜுனன் நானடி மானேன்னு’ ஒரு பாட்டக்கேட்டு கிறங்காத ஆளே அந்தக்
காலத்துல தமிழ்நாட்டுல இல்லை. ஒரே படத்துல அவர் புகழ் உச்சிக்கே போயிட்டாரு’ என்று
சொல்லிக்கொண்டே போகிறார்.
கிருஷ்ணகிரியிலேந்து
சென்னைக்குப்போகிற வழியில் காட்னாம் பட்டி
என்றொரு ஊர் உள்ளது. அங்கு ஒரு மலை முருகன் கோவில். அந்தக்கோவிலில் நிகழும் அன்னதானம்,
அங்கு ஒரு வாய் பேசாத சாமியார் இருந்தார். அவருக்கு சட்டி சாமியார் என்று பெயர். அன்னதான சட்டியைக்
கயிற்றால் கட்டி அதனைத் தன் இடுப்பில்
சுற்றியபடி அவர் முருகன் கோவிலை வலம் வருவார். வேறு ஒரு சிவாச்சாரியார் அந்தக்கோவிலுக்குப் புதிதாய் வர சட்டி சாமியாருக்கும் அவருக்கும் பிரச்சனை
எழுகிறது. அந்தப்புதியவர் சட்டி சாமியாரை விரட்டி அடித்தார். சட்டி சாமியார் ஒரு மலையில்
ஏறி விழுந்து இறந்து போகிறார். பிறகு பாகவதர் பற்றிய விபரம் சொல்கிறார் விட்டல் ராவ்.
‘காட்னாம்பட்டியில் முதல் கச்சேரி எப்பவும் கே .பி. சுந்தராம்பாள்
கச்சேரிதான்.அருமையா பாடி ஆரம்பிச்சி வைப்பாங்க.அடுத்த நாள் லோகநாதன் கச்சேரி. அதுக்கப்புறம்
சி. எஸ். ஜெயராமன் பாடுவாரு. அதுக்கப்பறம் நம்ம தியாகராஜ பாகவதர் வருவாரு’
பாகவதருடைய இரண்டு
பாடல்கள், ஒன்று ‘கைமாறு செய்வதுண்டோ- காந்திஜிக்கு
கைமாறு செய்வதுண்டோ, மற்றும் ஒன்று ‘காந்தியைப் போலொரு சாந்த சொரூபனைக் காண்பதும் எளிதாமோ’
இவைகளைச் சிறப்பாக விட்டல் ராவ் பாடி முடிக்கிறார்.
’அந்தக்காலத்து நண்பர்கள்’ என்கிற கட்டுரை, விட்டல் ராவுடைய பள்ளிக்கூட நண்பர் சந்திரசேகர் பற்றிப் பேசுகிறது.
அவருடைய இறப்பு செய்தியை அவருடைய பிள்ளையே
விட்டலிடம் போனில் தெரிவிக்கிறார். அதிர்ந்து போகிறார் விட்டல்
ராவ். பாவண்ணனிடம் சந்திரசேகர் பற்றிய முழு விபரமும் சொல்லப்படுகிறது. சந்திரசேகருடைய
தந்தை ஸ்ரீகண்டையா. கன்னடம் பேசுபவர். அவருக்கு
ஒன்பது குழந்தைகள். அவர்களின் பெயர்கள் தொழில் வாழ்க்கை அத்தனையும் வாசகர்க்குப் பட்டியல் போட்டுத்தருகிறார் விட்டல்
ராவ்.
அடுத்த கட்டுரை ’ மகத்தான ரசிகர்’. அக்கட்டுரையில் க. நா. சு வுக்கு ஒரு சமயம் தொண்டை கட்டிப்போன செய்தியையும், அதற்குக்
காரணமான நார்த்தங்காய் ஜூஸ் பற்றியும் க. நா.
சுவின் மனைவியே அவரிடம் சொன்னதைப் பகிர்கிறார்
விட்டல் ராவ்.அந்த மாமி க. நா. சு பற்றி,’
இவருக்குப் புத்தியே இல்லைங்க’ என்று சொன்னதையும், அதனையே யாரோ தனக்கு பெரிய விருது அறிவிப்பு செய்வது
போல் க.நா.சு பாவித்துக்கேட்டதையும் அழகாய்ச்
சொல்கிறார். வெளி நாட்டுப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் க. நா. சு எழுதிய கட்டுரைக்கு
எழுபது டாலர் சன்மானம் வருகிறது. அதனை ரூபாயாக
மாற்றி ஐந்து ரூபாயை மாமிக்குக்கொடுத்துவிட்டு
மற்றதை க. நா.சு மசால் தோசை, காபி சாப்பிட்டே
முடித்ததை நகைச்சுவையோடு சொல்லிப்போகிறார் விட்டல் ராவ்.
அடுத்த கட்டுரை ’அதிகாரத்தின் கதை’. புகழ்பெற்ற சம்ஸ்கார திரைப்படம் பார்த்த பாவணணன்
மறுநாள் விட்டல் ராவைச் சந்திக்கிறார். விட்டல் ராவ் வீட்டில் ஒரு நோட்டுப்புத்தகத்தில் செய்தித்தாள்களின் நறுக்குகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கவனிக்கிறார் பாவண்ணன். இங்கிலாந்தில்
லெய்செஸ்டர் என்னும் இடத்தில் ஒரு கழிவு நீர்க்கால்வாயைச்
சுத்தம் செய்தபோது கிடைத்த ஒரு சவப்பெட்டியைப்
பற்றிய செய்திக்குறிப்பு ஆர்வமூட்டுவதாக இருந்தது. அந்த சவப்பெட்டியில் இருந்த எலும்புக்கூடு மூன்றாம் ரிச்சர்ட் என்கிற அரசனுடையது என்பதை பல
ஆய்வுகளுக்குப்பிறகு கண்டு பிடித்தனர். அதனைச்சகலஅரச மரியாதையோடுமீண்டும் அடக்கம் செய்கிறார்கள். மாபெரும் எழுத்தாளர் ஷே்க்ஸ்பியர் இந்த அரசனை வைத்து மூன்றாம் ரிச்சர்ட் என்கிற பேசப்பட்ட நாடகத்தைப்படைத்தார்.
தொடர்ந்து வருவது ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்னும் கட்டுரை.
இக்கட்டுரை ஓவியம் வரைவோர் பற்றிய கட்டுரை. கல்கத்தா பம்பாய் கேரளம் சென்னை என்று பல்வேறு ஓவியப்பள்ளிகள் குறித்தும் விரிவாகப்பேசுகிறார் விட்டல் ராவ். சென்னை மெரினா
கடற்கரையிலுள்ள தேவிபிரசாத் ராய் செளத்ரியின்
உழைப்பாளர் சிலை பற்றியும் பேச்சு வருகிறது.சென்னையில் நாற்பத்தைந்து வருஷம்
வாழ்ந்த விட்டல் ராவ் ஆர். சூடாமணி என்னும்
எழுத்தாளர் மிகச்சிறந்த ஓவியரும் கூட என்பதை அறியாது போனதற்காக மிகவே வருத்தப்படுகிறார்.
விட்டல் ராவ் வாட்டர் கலர் ஓவியம் பற்றி ஒரு வரையறை தருகிறார்.‘வாட்டர்
கலர் பெயிண்டிங்கறது சாதாரண விஷயமில்லை பாவண்ணன். ஒரே ஒரு சின்ன ஸ்ட்ரோக் தப்பா போனாலும் மொத்த படமும் வீணாயிடும். திருத்திப்போட வழியே இருக்காது. நாலஞ்சி
மடங்கு உழைப்பைப் போட்டாத்தான் நல்லா வரும். அதுல சூடாமணியம்மா ரொம்ப திறமைசாலியா இருந்திருக்காங்க.ஒரே ஊருக்குள்ள ரொம்ப பக்கத்திலே இருந்துங்கூட தவற விட்டுவிட்டேங்கற
எண்ணம்தான் வருத்தமா இருக்குது’
கலையின் வெற்றி
என்கிற அடுத்த கட்டுரை இல்லுஸ்ட்ரேடெட் வீக்லி
ஆஃப் இந்தியா ஆசிரியர் குஷ்வந்த் சிங் பற்றி
விரிவாக அலசுகிறது. அவ்வார இதழை உயர்தட்டு மக்களுக்கானது என்பதிலிருந்தும் எல்லோருக்குமானதாக மாற்றியது அவர்தான். இதழில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு பிரதான பங்களிப்பு
தந்தவர் அவரே . யு . ஆர் . அனந்தமூர்த்தியின் சம்ஸ்கார நாவலை ஏ. கே ராமானுஜம் வழியாக மொழிபெய்ர்க்க வைத்து அவர் வெளியிட்டார். எம். டி வாசுதேவ நாயரின் ஒப்போள் என்கிற நாவலையும்,
தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் என்கிற நாவலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ப்ரிஞ்சால் ஸ்டோரி என்னும் ஒரு புதுமைக்கதையையும்
அவர் வெளியிட்டார். ஒரு குண்டு கத்திரிக்காய்
ஒருவர் கா;லில் மிதிபட்டுவிட அந்த மிதிபட்ட
உருவம் அடுத்தவருக்கு பிள்ளையார் மாதிரி தெரிகிறது. அதுவும் ஒரு பிள்ளையார் கோவிலுக்குக்
கொண்டு செல்லப்பட்டு வழிபடப்படுகிறது. பின்னர்
அதுவே காய்ந்து குச்சியாகி சிலுவையில் அறையப்பட்ட ஏசுவாய் ஒருவருக்குத் தெரிய அப்படியேயும் வழிபடப்படுகிறது. பிறகு அதுவே ஒரு முஸ்லிம் பெரியவருக்கு, சூஃபி யின் உருவாய்த்தெரிகிறது. அதை எடுத்துப்போய்
அவரும் வழிபடுகிறார். எத்தனை அடுக்கு அடுக்காய்
கடவுள் பற்றிய சமூக விமரிசனம் செய்து பேசுகிறார் குஷ்வந்த் சிங் என்கிறார் விட்டல்
ராவ்.
’இரண்டு ஓவியங்கள்’ என்கிற கட்டுரை தொடர்ந்து வருகிறது.
எழுத்தாளர்கள் பலர் ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதை நாம்
அறிவோம். தாகூர் பாவண்ணன் விட்டல் ராவ் வே. சபாநாயகம் போன்ற எழுத்தாளர்கள்
ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஆர்வமுடன் இருந்திருக்கிறார்கள்.
விட்டல் ராவ் ஓவியம் பற்றி மிக ஆழ்ந்த விஷயங்களைக் கற்றுத்தேர்ந்தவர். இதை அவருடைய
படைப்புக்களே உணர்த்துகின்றன. விட்டல்
ராவ் இரண்டு ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டு
இக்கட்டுரையில் பேசுகிறார். ஒன்று மெட்ராஸ்
வெயில் பற்றிய அழகான ஓவியம். சென்னைக்கோடை
வெயில். ஒரு பனை மரம். அதன் நிழலில் ஒரு தம்பதியர். குடை பிடித்துக்கொண்ட அவர்களின் குழந்தைகள் இருவர்.
மற்றொன்று மெட்ராஸ்
மழை பற்றிய ஓவியம். ’சோன்னு கொட்டுற மழையில ஒரு தெருவுக்குள்ள பல பேரு சுத்தி சுத்தி நடக்கறாங்க. மழை பெய்யுதேன்னு
மத்த ஊருல ஒதுங்கி நிக்கிறமாதிரி மெட்ராஸ்ல யாரும் ஒதுங்கி நிக்கற பழக்கமில்லை.’ என்கிறார். ‘கொட்டோ கொட்டுனு அடிக்குற மழையில ஏராளமான குடைகள்
மட்டுமே தெரியற காட்சி அது. யாருடைய முகமும் ஓவியத்துல கிடையாது. அதே மாதிரி எல்லாருடைய கால்கள்ளயும் விதம் விதமான ஹவாய் செருப்புகள்.
யாருடைய முகமும் ஓவியத்துல கெடையாது. எல்லாருமே
முதுகுப்பக்கம் மட்டுமே தெரியற மனிதர்கள்.’
என்கிற ஓவியம் பற்றிய செய்தி வருகிறது.
’தற்செயல்களும் திருப்பு முனைகளும்’ என்னும் கட்டுரையில் இலங்க வானொலியின் பி. எச். அப்துல் ஹமீத் பற்றி பாவண்ணன் தொடங்கி
வைக்கிறார். விட்டல் ராவ் வீணை. எஸ். பாலச்சந்தர் தொடர்பு அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பது பற்றியும், அவரால் ஒரு குடத்துள் இட்ட விளக்காய் இருந்த ஒரு நெல்லூர் மனிதர், விஜயவாடா வானொலியில் எப்படி நிலையக்கலைஞரானார் என்கிற வரலாறு பற்றியும் பேசுகிறார்.
’சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்’ என்னும் அடுத்த
கட்டுரை மவுண்ட் ரோடு கீதா ஹோட்டலுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறையில் பழைய புத்தகக்கடை வைத்திருந்த சிவா
பற்றிப் பேசுகிறது. ஆதம்பாக்கத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருந்த ஹரி என்பவர் புராதனக் கோட்டை கொத்தளங்கள் பற்றி மிகுந்த
ஈடுபாடு உடையவர். காமிராக்காரர். அவரும் விட்டலுக்கு நெருங்கிய நண்பரானார். இருவருக்கும் தொல் பொருள் பற்றிய மிகை ஆர்வம் உறவுக்குக் காரணமாகிறது. அந்த ஹரியே
பழைய புத்தகக்கடைக்கு விட்டல் ராவை ஆற்றுப்படுத்தியவர்.
அடுத்த கட்டுரை ‘நினைக்கப்படும்’. இதனில் ஜெர்மானிய கதே கால்வி்ட்ஸ் பற்றி விவாதிக்கப்படுகிறது. கால்விட்ஸ்
மிகச்சிறந்த ஓவியர். உலகப்புகழ் பெற்றவர். இவருடைய ஓவியங்களையும் அவரே தன்னைத்தான்
செதுக்கிய சிற்பத்தையும், தீட்டிய ஓவியத்தையும்
சென்னை மாக்ஸ்முல்லர் பவனில் 1967 வாக்கில் கண்டதாகச் சொல்கிறார் விட்டல் ராவ். ஜெர்மனியில்
நடந்த இரண்டு உலகப்போர்களும் அவரை வெகுவாகப் பாதித்துவிட்டன. அக்கால ஜெர்மனி துக்கத்தைத்தான் அனுபவித்தது. அந்த துக்கத்தைக்
கலையாக மடை மாற்றிய கலைஞர் கால்விட்ஸ். இறந்துபோன
ஒரு குழந்தையின் உடலைத்தன் மார்போடு அணைத்திருக்கும் அவரின் ஓவியத்தைக்கண்டு மனம் பதைக்கிறார் பாவண்ணன்.
’அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்’ என்னும் அடுத்த கட்டுரை
பிரதிவாதி பயங்கரம் அன்னங்கர ஆச்சாரியார் காஞ்சீபுரம்
வீட்டில் காணப்பட்ட செராமிக் ஓவியங்கள்
பற்றி வியந்துபேசுகிறது. பெல்ஜியத்திலிருந்து காஞ்சீபுரம் வீட்டுக்கூடத்திற்கு வந்த
ராமாயண பீங்கான் ஒவியங்கள் பற்றிக்கேள்விப்பட
நாம் வியந்து போகிறோம்.
இறுதியாக இப்புத்தகத்தில் வந்துள்ள கட்டுரை ‘விசித்திரமானவர்கள்’. இது மைசூரில் இருந்த ‘த்வன்யலோகா’ என்னும் கலைஞர்களை
ஆதரிக்கும் அமைப்பு பற்றிப்பேசுகிறது. இந்த அமைப்போடு நெருக்கமாய் இருந்த விட்டல் ராவை
எண்ணி வாசகன் பிரமித்துப்போகிறான்.’ ஒரு எழுத்தாளனுக்குத் தொடர்ச்சியா நாற்பத்தியஞ்சி நாட்கள் தங்கறதுக்கு
த்வன்யலோகாவுல அறை ஒதுக்கிக் கொடுப்பாங்க. சிவராம கரந்த், ஐயப்ப பணிக்கர், ஏ.கே ராமானுஜம்,ஆர்.கே நாராயண்.
ஜயந்த் மகாபாதரா போன்றோர் அங்கு தங்கி கலைத்தவம் புரிந்திருக்கிறார்கள். ஆங்கிலக்
கவி நிசிம் எழிக்கலும் அப்படி வந்து அங்கு தங்கியிருக்கிறார். அவர் விட்டல் ராவுக்கு
நெருக்கமாகி இருக்கிறார். நூலகத்தில் படிக்க
வாங்கிய புத்தகத்தைத் தன் அறையில் வைத்துவிட்டு மறந்து பம்பாய் போன நிசிம் எழிக்கல்
திரும்பவும் மைசூர் த்வன்யலோகா வந்து அதனை
நூலகரிடம் ஒப்படைக்கிறார். அவ்வறையில் அப்போது
தங்கியிருந்தவர்தான் நண்பர் விட்டல் ராவ்.
’தமிழ் நாட்டுல
இப்படி ஒரு அமைப்பு இருந்தா நல்லா இருக்கும். அந்தக்கனவு என்னைக்கு நிறைவேறுமோ
தெரியல’ என்று தன் ஆதங்கம் சொல்கிறார் பாவண்ணன். தமிழ் மண்ணில் சாதியும் அரசியலும்
அதனைச் சாத்தியமாக்க விடுமா என்ன? என்பது என் வினா.
இந்த நூலை வாசித்த போது இரு பெரு
நதிகள் சந்தித்துக்கொண்டு பேசியமாதிரி அல்லவா நான் உணர்ந்தேன்.
-------------------------------------------
கணித விஞ்ஞானி ராமானுஜன் - திராவிடப் பெருமை
என் பையன்
தன் அலுவலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டுவந்தான். அவனுக்கு பெங்களூரில் ஒரு தனியார்
கம்பெனியில் வேலை.
புத்தகத்தின் பெயரையும் அதன் ஆசிரியரையும் முதலில்
சொல்லிவிடுகிறேன். ’THE FUTURE IS FASTER THAN YOU THINK ’ BY PETER H. DIAMANDIS and STEVEN KOTLER.
SIMON
& SCHUSTER PAPERBACKS, NEWYORK,
LONDON ,TORONTO, SYDNEY ,NEW DELHI. 2020 JAN EDITION
பீட்டர் ஹெச். டயமண்டிஸ். - நியு
யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக
ஆசிரியர். இருபது உயர் தொழிற்நுட்ப நிறுவனங்களின் ஸ்தாபகர். ஹார்வெர்ட் மருத்துவக்கல்வி
நிறுவனத்தில் எம் டி பட்டம் பெற்றவர். ஃபார்ச்சூன் மாகசின் தேர்வு செய்த ஐம்பது பெருந்தலைவர்கள் பட்டியலில் ஒருவர்.
ஸ்டீவன் கோட்லெர்,- இவரும்
நியு யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக ஆசிரியர், விருது பெற்ற பத்திரிகையாளர். இவருடைய
படைப்புகள் நாற்பது மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேல் பதிப்பு
கண்டுள்ளது. இரண்டு முறை இவர் புலிட்சர்
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்..
இந்தப்புத்தகத்தில்
நமது மண்ணின் கணித மேதை ராமானுஜம் பற்றிய குறிப்பு
( பக்கம் 79) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. அதனை தீவிர வாசகர்கள் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசை.
பாகம் ’ வலிமை
- பேரறிவு ’ 4
FORCE# 4 : More Genius
1913 ஆம்
ஆண்டு காம்பிரிட்ஜ் கணித மேதை ஜி ஹெச். ஹார்டிக்கு
ஒரு வித்தியாசமான கடிதம் தபாலில் வந்தது
. ‘அன்புள்ள
அய்யா’ என்று தொடங்கிற்று.
.’ ஆண்டுக்கு
20 பவுண்டு சம்பளம் பெறும் மதராஸ் போர்ட் டிரஸ்ட் ஆபிஸ் கணக்குப்பிரிவு குமாஸ்தாவாகிய நான் என்னை அறிமுகம் செய்துகொள்ள உங்களைப் பணிகிறேன்.
ஒன்பது பக்கங்களுக்கு
அக்கடிதம் நீண்டது. அக்கடிதம் முழுவதும் கணிதம்
குறித்தே. நம்பர் தீயரியில் ( Number
Theory) 120 விடைகள், ஆகப்பேரெண்ணின்
(Infinitive series) தொடர்ச்சி, பின்னத்தின்( continued fractions) கீழ் நிலைத்தொடர்ச்சி,
தகாத்தொகையீடுகள்(improper integrals) என்பன
அவை. கடிதம் தொடர்கிறது.
நான் ஒரு ஏழை.
தங்களுக்கு
நான் அனுப்பியுள்ள தேற்றங்களில் ஏதேனும் குறிப்பிடத்தக்க
விஷயம் தங்களுக்குச் சரி என்று பட்டு ஏற்றால், அவைகளை வெளியிட விரும்பிகிறேன்.
எஸ். ராமானுஜன். என்று கையொப்பமிடப்பட்டிருந்தது.
காம்பிரிட்ஜ்
கணிதாசிரியனுக்கு இப்படி சமன்பாடுகள் தபாலில்
வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தக்கடிதம் ஹார்டியின் கவனத்தைச்சுண்டியது.
கணிதம் என்பது
உலகறிந்த கால்குலஸ் என்பதில் தொடங்கியிருந்தாலும் வெகுவிரைவிலேயே அது திகைக்கவைக்கும் பல்வேறு
திசைகளுக்கு வியாபித்தது.
ஹார்டியை அது இப்படிச்
சொல்லவைத்தது’ கட்டாயம் இவை உண்மைதான். உண்மையில்லை என்றால் யாரும் இதனை இவ்விதம்
யோசித்து யோசித்துக் கண்டுபிடித்திருக்கமாட்டார்கள்’
அப்படித்தான்
அந்தக் கணிதப்பெருங்கதை தொடங்கியது.
ஸ்ரீனிவாச ராமானுஜன் மதராஸில் 1887 ல் பிறந்தார்.
அவரின் தாய் வெளி வேலை எதற்கும் செல்லாத வீட்டுத்தாய். ஒரு புடவைக்கடை கணக்குப்பிள்ளையே அவர் தந்தை.
எண்கள் மீது
லயிப்பு கொண்ட ராமானுஜனுக்குச் சரியான கணித ஆசிரியர் தொடர்பும் கிடையாது பயிற்சி
எதுவும் இல்லை. பள்ளிப்படிப்பிலும் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. கல்லூரியில் ஒவ்வொரு
வகுப்பிலும் தேர்வாகமாட்டார். ஆனால் கணிதப்பாடத்தில் மட்டும் அப்படி இல்லை அவருடைய .கணிதபேராசிரியர்களுக்கே அவர் போடும் கணக்கு விளங்காது.
இருபது வயது
ஆவதிற்கு முன்பே அவர் தோற்றுப்போனார். நான்காண்டுகள் வறுமையில் வாடினார். கடைசியாக
நொந்துபோய்தான் ஹார்டிக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கண்ட ஹார்டிக்கு முதலில் குழப்பம்.’ இது என்ன தமாஷா இருக்குமா? என்று உடன் பணியாற்றும்
கணித ஆசிரியன் ஜான் லிட்டில் வுட்டிடம் அந்தக்கடிதத்தைக் கொண்டுபோய்க் காட்டினார்.
அது அப்படி ஒன்றும் தமாஷ் சமாச்சாரம் இல்லை
என்பது அவர்கட்கு விளங்கிற்று. அம்முடிவிற்கு
வரக் காலதாமதம் ஏதும் ஆகவில்லை.
தத்துவ ஞானி
பெர்ட்ரண்ட் ரசல் மறுநாள் அந்த இருவரையும் சந்தித்தார். அவர் எழுதினார். ’ 20 பவுண்டே
ஒரு ஆண்டுக்கு சம்பளம் வாங்கும் மதராஸ் இந்து குமாஸ்தா. அவரை
இரண்டாவது நியூட்டனாகக்கண்டு அல்லவா
அந்தக்கணிதமேதைகள் பேராச்சரியம் அடைந்திருந்தனர்’
காம்பிரிட்ஜுக்கு
ராமானுஜம் அழைக்கப்பட்டார். ஐதாண்டுகள் சென்றது.
பெருமைமிகு ராயல் சொசைட்டிக்குத்தேர்வு செய்யப்பட்டார்.
முதன் முதல் தேர்வு செய்யப்பட்ட I இந்தியரும் அவரே. வயதில் இளைஞரும் அவரே. இவை இரண்டுமே வரலாறு.
எலும்புருக்கி நோயினால் பாதிக்கப்பட்ட
ராமானுஜம் நான்காண்டுகளில் மரணமடைந்தார். மரணத்திற்கு முன்பாக 3900 தேற்றங்களைக் கணிதசாத்திரத்துக்கு கொடையாக்கினார். விடையே காணமுடியாது கணித உலகில் புதிராக இருந்த அருங்கணக்குகளுக்கு விடை கண்டுபிடித்தார். இயற்பியல்,மின்பொறியியல்,
கணிப்பொறி இயல் இவைகட்கு அவரின் நுணுக்கமானஆய்வுகள் இன்றும் ஆய்வுபேருதவியாய்த்திகழ்கின்றன..
அய்யத்திற்கு
இடமின்றி கணிதப்பேரறிஞர். வரலாற்றில் ஓர் மாமனிதர்
என்றும் ராமானுஜன் உறுதிபடுத்தப்படுகிறார். இத்தனைக் கணித விஞ்ஞானக்கொடைகள் அவர் வழங்கியிருந்தாலும் ஒரு விந்தை. அதுவரை அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுவே.’
மனதிற்கு
நிறைவு தந்த இந்தக்குறிப்புக்கள் நிச்சயம்
நெகிழவைக்கும். கணிதமேதை ராமானுஜத்தை எப்போது
நாம் சிறப்பாகக்கொண்டாடுவோம். இதனை அதனைப்பாராது ஒரு பேரறிஞரைப் போற்றுவோமா? தமிழக அரசின் கவனம்
ராமானுஜத்தின் மீது விழுமா?
----------------------------------------------------------------------------------------------------------
அருணா ராயின்
‘தகவல் அறியும் உரிமை’ - RTI
அருணா
ராயின் ’தகவல் அறியும் உரிமை- ஓர் எழுச்சியின் கதை’ அக்களூர் இரவியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம்
இதனை வெளிட்டிருக்கிறது.
படித்த நடுத்தர
வர்க்கத்தினருக்கு தேசம் பற்றிய விழிப்புணர்வு தருவிக்கும் படைப்பாக இது மலர்ந்திருக்கிறது.
அருணா ராய், மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனுடன்
இணைந்து இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறார். இந்நூலைத் தமிழாக்கம் செய்த அக்களூர். இரவி மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி இருக்கிறார். அவருடைய
அர்ப்பணிப்பும் உழைப்பும் மெச்சத்தக்கது. 559 பக்கங்களுக்கு நீளும் இப்புத்தகம் மொழிபெயர்ப்பில் ஒரு சாதனை.
இந்தியா விடுதலை அடைந்து நாற்பதாண்டுகளுக்குப்பின்னர் தகவல்
அறியும் உரிமைக்கான குரல் ஒலிக்கத்தொடங்கியது. ராஜஸ்தானைச்சேர்ந்த தேவ்துங்ரி கிராமம்.
அதனைத்தேர்வு செய்து மூவர் தகவல் அறியும் உரிமைக்காய் உழைக்கத் தொடங்கினார்கள். ஒருவர்,
அருணா ராய் இந்திய ஆட்சிப்பணி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். அடுத்து, சங்கர்
சிங் தொலைநோக்குப்பார்வைகொண்ட உள்ளூர் பேச்சாளி,
மூன்று அமெரிக்காவில் கல்லூரிப்படிப்பை இது பயனற்ற வேலை என்று பாதியிலேயே விட்டு விட்டுத் தாயகம் திரும்பிய நிகில்
தேய், விமானப்படை ஏர் மார்ஷலின் மகன். இவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த கருங்கல்லும்
சேறும் கொண்டு கட்டப்பட்ட அந்தக்குடிசை. அதனுள்ளாக அந்த கிராமத்து மக்கள் எப்படி வாழ்ந்தனரோ
அதுபோலவே இவர்களும் வாழ்ந்தனர்.
அருணா ராயின் பின்புலம் பற்றி வாசகர்கள் கட்டாயம் அறிதல்
வேண்டும். டில்லியில் தான் படித்து பட்டம்
பெற்ற அதே இந்திர பிரஸ்தா கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியானார். இந்திய ஆட்சிப்பணியில்
ஏழு ஆண்டுகள் சேவை.பிறகு ராஜஸ்தானில் ஒரு கிராமப்புற
தன்னார்வ அமைப்பில் ஒன்பதாண்டுகள் பணி, பின்னர் கிராமம் ஒன்றில் தங்கி அவர்களின் அடிப்படை
ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவது என முடிவு செய்தவர்.
இந்நூலுக்கு ஆகப்பொறுத்தமான முகப்புரை தந்துள்ள கோபாலகிருஷ்ண காந்தி வாசகர்க்கு எதைச்சொல்ல வேண்டுமோ அதனை நறுக்கெனச்சொல்லியுள்ளார்.
‘அறிந்துகொள்வது புரிந்துகொள்வதற்கே.பரிந்துகொள்வது அமைதியாக
இருப்பதற்கன்று- போராட்ட ஆயத்த நிலைக்கு.’
‘சுதந்திரத்திற்குப்பின்
இயற்றப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் நன்கு படித்த நேர்மையான மனிதர்களால் படிப்பறிவற்ற
அப்பாவிகளுக்காக உருவாக்கப்பட்டவை என்று சொல்கிறார்கள். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தும்
வேலை கூர்மையான இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விளைவு அதிர்ச்சியும் ஏமாற்றமும் விரக்தியும்.’
‘புத்துயிர் பெற்ற உணர்வுகளுடன், புழுதி படிந்த தெருக்களில்
நடந்த வீரியம் மிக்க போரட்டங்களையும் அயர்வற்ற பேரணிகளையும் இந்நூல் விவரிக்கிறது.’
மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி,தனது குறிப்பில் ஒரு விஷயத்தைப்
பெருமிதத்தோடு நினைவு கூறுகிறார்.’ நூலில் அருணா அக்கா விவரிக்கும் நிகழ்வுகளும் மனிதர்களும்
தொலைத்தொடர்புத் துறையில் ஐந்தாறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நாங்கள் சந்தித்த
இடர்களையும் ஒன்றுபட்ட இயக்கம் இறுதியில் வெற்றி பெற்றதையும் நினைவூட்டின.’ மொழிபெயர்ப்பாளர் இரவி ஒரு போராளி என்பதை இவண் வாசகர்கள் அவதானிக்கலாம்.
தேவ்துங்ரியில் இந்த போராட்டக்காரர்கள் வருகையால் பிரச்சனைகள்
எழுந்தன. சாதிபாகுபாடு காட்டாமல் அவர்கள் எல்லோருடனும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுடனும்
பழகியதால் கிராமமே அவர்களை எதிரியாகக்கருதி அவர்களோடு மோதல் போக்கைக் கையாண்டது. போராட்டக்குழுவுக்கு
யார் வீட்டை வாடகைக்குக் கொடுத்தாரோ அவருக்கு சாதி விலக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
சங்கதன் உருவானதை அறிவித்து இக்குழுவினர் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். அது பற்றி
அருணா ராய் விவரிக்கிறார். கிராமப்புற மக்கள் துண்டறிக்கைகளை பொறுப்போடு வாசிப்பார்கள்.
நகர்ப்புறத்தில் இவ்வறிக்கைகள் சந்திக்கும் நிலைமை கிராமத்தில் இவற்றிற்கு நிகழ்வது கிடையாது. நகரத்தில்
அவை உடனடியாகத் தின்பண்டங்கள் விற்பவர்களுக்குப் பயன்படுகின்றன அல்லது குவிந்திருக்கும்
குப்பைகளுடன் சேர்ந்துகொள்கின்றன.
பாலி மாவட்டம் கோட் கிரானாவில் டிசம்பர் 2, 1994 அன்று
முதல் பொது விசாரணை தொடங்கியது. ஆர் .டி. ஐ க்கு ஒரு சட்டம் ( Right To
Information Act) வேண்டும் என்ற கோரிக்கை முதன் முதலாக, கோட் கிரானாவில்தான் விவாதம்
செய்யப்படுகிறது. பொதுத்தணிக்கை மேடையாக அமைந்த இந்த’ ஜன் சுன்வாயில்தான்’ சமூகத் தணிக்கை’
நடைமுறைக்கான விதைகள் ஊன்றப்பட்டன.பொதுவாக இந்தக்குழுவினர் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில்தான்
தூங்குவார்கள். கிராமத்தினரோ தங்கள் வீடுகளில்தான் தூங்கவேண்டும் என்று அவர்களைக் கட்டாயப்படுத்தினர். முன்னாள் துணை சபாநாயகர்( பா.ஜ.க)
ஹீரா சிங் இந்தக்குழுவினரைத் தாக்குவதற்கு
உள்ளூர் மாஃபியாவை ஏற்பாடு செய்தார். சாட்சிகளை ராய்ப்பூருக்குத் தூக்கிச்சென்றார்.
எதிர் வாக்கு மூலங்களில் கையெழுத்திட வைத்தார். இப்படி அருணா ராய் நடந்தவைகளை நேர்மையாகப்பதிவு
செய்கிறார்.
மக்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்கிறார் அருணா
ராய். சுதந்திரப்போராட்டத்தின் போது காந்திஜியும் இதைத்தான் செய்தார்.அச்சத்திலிருந்து
மக்களை விடுவித்தார்.அகிம்சையைப்பின்பற்றிய மக்கள் வலிமை மிக்க பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை
எதிர்த்து நின்றனர்.ஆர். டி. ஐ க்கான இயக்கத்தின்போது சங்கதன் இதைத்தான் செய்தது என்று
நிறைவோடு பதிவு செய்கிறார்.
மக்களின் பணம் அவர்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் தொகை,
இடைத்தரகர்களால், அதிகாரிகளால் கையாடல் செய்யப்படுவது வெட்கக்கேடானது. இவை அத்தனையும்
திரைமறைவில் நிகழ்கின்றன. மக்கள் மன்றத்தின் முன்னே கொள்ளையர்கள்
ஒரு போதும் நிறுத்தப்படுவது இல்லை.
ஒரு சிலரால் கையாடல் செய்யப்படும் இந்தப்பணம் இந்தநாட்டின் வறிய மக்களுக்குச்சொந்தமானது.
தகவல் அறியும் உரிமைக்கான தேசிய இயக்கம் தேவை கருதி உருவானது. அதற்கான முதல் அமர்வு முசோரியில் லால்பஹதூர்
சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமியில் நடைபெற்றது.இங்கு என் .சி சக்சேனாவால் பரிந்துரைக்கப்பட்ட
பரிந்துரை மிக முக்கியமானது. இந்த அறிவு பூர்வமான பரிந்துரை ஆர்.டி. ஐ சட்டம் 2005
பிரிவு 8ல் சேர்க்கப்பட்டது. அது இதைத்தான்
சொல்கிறது.’ நாடாளுமன்றத்துக்கோ மாநில சட்டமன்றத்துக்கோ தேவை என்று கேட்டுப்பெறப்படும் தகவல்கள் எந்த ஒரு தனிமனிதனுக்கும்
மறுக்கப்படக்கூடாது’
1996 அக்டோபரில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமியில்
கூடிய போராளிகள் ஆர். டி. ஐ சட்ட வரைவுகளைத்
தயாரிக்கலானார்கள். மக்கள் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. கீழ்க்கண்ட ஷரத்து அதனில்
பிரதானமாய் அங்கம் வகித்தது.
‘ஜன நாயகம் என்பது மக்களின் ஆட்சி என்று இந்த பிரச்சார
இயக்கம் நம்புகிறது.மக்கள் பிரதிநிதிகள் அவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களின் நலனுக்காக
ஆட்சி செய்கிறார்கள்.அரசாங்கத்தின் பணம் மக்களுடையது. அதனால் அரசாங்கம் எடுக்கும் முடிவுகள்
அனைத்தையும் அறிந்துகொள்ள நாட்டு மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது.’.
நான்காம் வகுப்பு படித்த பெண் இந்த சட்டத்தை ஆதரித்துப்பேசினார்.
ஆனால் உலகனுபவம் கொண்ட கல்வியாளர்கள் இந்த
விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அந்தப் பெண் ஒரு எளிய விஷயத்தை எடுத்து வைத்தார். இதுவே அது.
‘என் மகனிடம் 10 ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பினேன்.அவன்
திரும்பி வந்ததும் நான் கணக்குக்கேட்கிறேன். என் பெயரில் இந்த அரசாங்கம் பல கோடி ரூபாய்
செலவு செய்கிறது. எனக்கான கணக்குகளை நான் கேட்கவேண்டாமா?’
இப்புத்தகம் தரும் ஆழமான விஷயங்கள் வாசகனைச் சிந்திக்க
வைக்கும். புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் சலுகைக்கும் உண்மையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைக்கும்
தொடர்பே கிடையாது என்பதனை உணர முடியும். ஜானவாத் என்னும் ஊரில் நிகழ்ந்ததாய்த் தகவல்
உரிமையின் கதை என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையை வாசிக்கும்போது அதனை கண்ணெதிரே காணமுடியும்.
‘கொள்கையும் நடைமுறையும் வேறுபடுவது என்பது இந்தியாவில்
சாதாரணமான ஒன்று. பஞ்சாயத் சட்டத்தின் கீழ்,
தகவல் கோரப்பட்ட நான்கு நாட்களுக்குள் தகவல் அளிக்கப்படவேண்டும் என்ற நிலையில்,
ஓராண்டுக்குப்பிறகுதான் தகவல் கிடைத்தது.’ கிடைத்த தகவல்களும் முழுமையானதாக இல்லை.
செலவினங்கள் குறித்த ஆய்விற்கு அனுமதிக்கடிதங்கள்,
தொழில் நுட்ப அனுமதி,வருகைப் பதிவேடுகள்,பில்கள்,அளவைப்புத்தகம்,பயன்பாட்டுச்சான்றிதழ்,
தணிக்கை அறிக்கை ஆகியன கோரப்பட்டன. ஜானவாத் பஞ்சாயத்தில் நகல் எடுக்கப்பட்ட ஆவணங்களைப்பார்த்தால்,வருகைப்பதிவேடுகள்
இருந்தால் பில்கள் இல்லை, பில்கள் இருந்தால் அளவைப்புத்தகங்கள் இல்லை. அளவைப்புத்தகங்கள்
இருந்தால், பயன்பாட்டுச்சான்றிதழ் இல்லை.’ பஞ்சாயத்து அலுவலகத்திற்குப் பலமுறை அலைந்த
பிறகே இந்தத்தகவல்களும் கிடைத்திருக்கின்றன இதன அருணா ராய் விவரமாய்க் குறிப்பிடுகிறார். விஷயம் அறிந்த ஆளுகை
என்பது என்னவென்று புரிந்த படித்த வர்க்கத்தினருக்கே நிலைமை இப்படி என்றால்
இந்த நாட்டின் கடைகோடி மனிதனுக்கு இது எல்லாம் சாத்தியப்படுமா? நடமுறைக்குத்தான் வருமா?
என்கிற கவலை வாசகனைக் கவ்விக்கொள்கிறது.
‘இறுதி நிமிடம் வரை அனைத்துப்பதிவேடுகளும் கிடைக்கவில்லை.
சில பதிவேடுகள் இப்போதும் காணப்படவில்லை’ என்பதனை அருணா ராய் குறிப்பிடுகிறார். தகவல்கள்
மறுக்கப்படும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்பதற்கான விதியை உள்ளடக்கிய சட்டம்
அவசியம் என்பதை ஜானவாத் நேர்வுகள் வலியுறுத்தின.
இந்தியாவைப்பொறுத்தவரை சட்டங்கள் என்றும்
சரியாக எழுதப்பட்டிருக்கும். நடைமுறையைப்பார்க்கும் போதுதான் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள
முடியும். இதுவே சாதாரண மனிதனின் அனுபவமாகும்.
இந்திய அதிகார வர்க்கம் என்பது ஒரு இரும்புச்சட்டகம். இ.ஆ.
ப ( IAS) என்கிற சொற்கள் முதன்மையான சேவைக்கு மந்திரத்தன்மை அளிப்பன. யதார்த்தத்தில் இந்த அதிகாரக்கட்டமைப்போ ஒன்றன்மீது
ஒன்று வேரூன்றி நிற்கும். இதுவோ
அற்பமான அரசியல் கட்டமைப்போடு இணைந்துகொண்டு அரசு சேவைகளைப்பயன்படுத்தக் காத்திருக்கும். மெய்யாய் சாமான்யர்களுக்குக் கேடு மட்டுமே எஞ்சி
நிற்கும் என்று நாட்டு நடப்பினை இலக்கணச் சுத்தமாக
படம் பிடிக்கிறார் அருணா ராய். இரவியின் மொழி பெயர்ப்பு உழைப்பு இவ்விடத்தே செம்மாந்து
நிற்கிறது.
கோப்புக்குறிப்பு பற்றி அருணா ராய் விளக்கமாகப்பேசுகிறார்.
கோப்புக்குறிப்பு என்பது கோப்புக்களின் இடது பக்கத்தில் ஒரு தனித்தாளில்( பொதுவாகப்
பச்சைத்தாளில்) எழுதப்படும் குறிப்பு. கோப்பின் வலது பக்கத்தில் முன் மொழிவு இடம் பெற்றிருக்கும்.
இடது புறம் அதிகாரியின் பரிசீலனைக்குரிய கருத்துக்கள் எழுதப்படும். முன்மொழிவின் மீது
கருத்துக்கள் தெரிவிக்கப்படும். இது மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் தங்கள்
கருத்துக்களைப்பதிவு செய்வார்கள். அதிகார வர்க்கத்தின் ஆள்வோரின் எண்ணங்கள் முடிவுகளாகி
வெளிவரும். இந்த முடிவு எடுக்கும் நடை முறையை
மக்கள் மேடையில் வெளிப்படுத்தாது மறைக்க
மத்திய அரசு முனைப்பாக இருந்தது. இதற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஜூலை 2006ல் மத்திய அமைச்சரவை ‘கோப்புக்குறிப்புக்களை வெளியிடத் தடை செய்வது’ என்கிற
முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. மத்திய தகவல் ஆணையர் கோப்புக்குறிப்புக்களைத் தரலாம் என்று கொடுத்த ஆணையை
எதிர்த்துத்தான் இந்த அமைச்சரவையின் கோப்புக் குறிப்புக்களை வெளியிடத்தடை செய்யும்
முடிவு அவசர அவசரமாக எடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளான மறைந்த கிருஷ்ண ஐயரும், ஜே எஸ்
வர்மா, நீதிபதி சாவந்த் ஆகியோ அமைச்சரவையின் ஒப்புதலுக்கு எதிராகக் கருத்துத்
தெரிவித்தனர். இதற்காக நடைபெற்ற தர்ணாவில் அரசு கொண்டுவரும் திருத்தங்களுக்கு எதிராகக்
கடுமையான அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் வி. பி. சிங் . சி பி ஐ, சி பி
எம், ஃபார்வர்ட் பிளாக் தலைவர்கள் உடன் வந்தனர். அருணா ராய் இங்கு உடன் வந்த இடது சாரித் தலைவர்களின் பெயர்களைச் சொல்லி
இருக்கலாம். சொல்வதில் என்ன தயக்கமோ அவருக்குத்தான் தெரியும்.
புத்தகத்தின் இறுதியில் அருணா ராய் குறிப்பிடும் விஷயங்கள்
சாதாரண மனிதர்களை கவலை கொள்ளவே வைக்கிறது.
கோபாலகிருஷ்ண காந்தி திருவனந்தபுரத்தில் பேசியதை வாசகர்க்குச்சொல்கிறார் அருணா
ராய்.
அவரது கேள்வி, இந்தியாவை ஆள்வது யார்? நாடாளுமன்றமா,சட்டமன்றமா
பஞ்சாயத்தா அல்லது நோட்டாவா? என்பது.
பயம், அவநம்பிக்கை, பணம் இவையே இங்கு உண்மையான ஆட்சியாளர்கள் என்கிறார் கோபால கிருஷ்ண காந்தி.
இன்றைய ஆட்சியில்,
விவரம் தெரியாதவர்கள் அச்சப்படுகிறார்கள், படித்த வர்க்கத்தினர்
அவநம்பிக்கையோடு வாழ்கின்றனர், கோடானுக்கோடிக்குச் சொந்தக்காரர்கள் பணத்தைவைத்துக்
காயை சாமர்த்தியமாய் நகர்த்துகிறார்கள்.
இப்புத்தகம்
1987 தொடங்கி 2005 வரையிலான 18 ஆண்டுகள்
சமூக நியாயத்திற்கான பயணம் எப்படி நிகழ்ந்தது என்பதனை விவரிக்கிறது. ஆண்டு தோறும்
6 லட்சம் முதல் 8 லட்சம் மக்கள் இந்தசட்டத்தை
பயன் படுத்துகிறார்கள். அந்த ஒவ்வொருவரும் இயக்கத்தின் முக்கியமான வீரர்கள்
என்கிறார் அருணா ராய்.
அறிந்துகொள்ளும் உரிமை வாழ்வின் அடிப்படை உரிமை. அறிந்து
கொள்ளும் உரிமை வாழ்வதற்கான உரிமை. இது அரசு நிர்வாகம் என்பதைத் தாண்டிய விஷயம் என்கிறார்
ஆசிரியர். ‘கேள்வி கேட்பதா வேண்டாமா’ என்பதே இன்று கேள்வியாகி நம்முன் நிற்கிறது.
அதிகாரப்பகிர்வு எப்போதும் போட்டி நிலவும் இடம்தான். ஊழலையும்
தன்னிச்சையான அதிகாரப்பயன்பாட்டையும் ஆர் டி
ஐ வழி கேள்வி கேட்டதால், எழுபதுக்கும் மேற்பட்டோர் தம் உயிரை இழந்துள்ளனர்
உண்மையைத்தேடி அலைந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆர் டி ஐ சட்டங்கள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன
என்பது நமக்கு ஆறுதல்.
சத்யமேவ ஜயதே என்று முடிக்கிறார் அருணாராய்.
இந்த புத்தகத்தின் பிற்சேர்க்கையாக ‘தகவல் அறியும் உரிமைச்
சட்டம் 2005 எண் 22/2005 கொடுக்கப்பட்டுள்ளது. இவண் மொழிபெயர்ப்பாளர் இரவியின் அர்ப்பணிப்புணர்வு
மெருகிடக்கண்கிறோம்.
நெஞ்சு நிறை நன்றி
என்று சொல்லி இறுதியாய்
ஆயிரம்போராட்ட வீரர்களின் பெயரைச்சேர்த்திருக்கிறார் அருணா ராய். இதனிலும் விடுபட்டவர்களின் பெயர் ஏதும் இருப்பின்
அதற்காகத் தனது மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்
ஆசிரியர்.
காலச்சுவடு மொழி
பெயர்ப்புக்கு இந்நூலை நன்கு தெரிவு
செய்துள்ளது.
கவிஞர் பெரியசாமியின்
கவின்மிகு கவிதைப்பயணம்
’வாழ்வை வெற்றிகொள்’
என் இனிய நண்பர் கவிஞர் பி.கே. பெரியசாமியின்
இரண்டாவது கவிதைத்தொகுப்பு. நூற்றுக்கு
மேற்பட்ட முத்தான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைப்பேழை இது .மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகள்
இரண்டிலும் அவருடைய கவித்திறன் மிளிர்வதை நெருங்கிய வாசக நண்பர்கள் அறிந்திருக்க முடியும்.
’வாழ்வை வெற்றிகொள்’ கவிஞர் இத்தொகுப்பில் படைப்பு முழுவதினையும் புதுக்கவிதையாகத்
தந்திருக்கிறார். வாழும் சமுதாயத்தின் மீது கவிஞருக்கு இருக்கும் ஆரோக்கியமான விமர்சனப் பார்வையை வாசகன்
இங்கே அனேக தருணங்களில் தரிசிக்க வாய்க்கிறது.
தமிழ் மொழி
மீது ஈடில்லாப் பற்று, சாதிக்கொடுமைகளால் மக்கள் படும் அவதி குறித்த தர்மாவேசம், பெண்டிரை மேல் நிலைக்குக் கொண்டுவருதலில்
காட்டும் கூடுதல் அக்கறை, ஒரு சமூக ஞானியை அப்பழுக்கற்ற ஒரு நேர்மையாளரை, மனித நேயம் மிக்க ஒரு சான்றோரைத்தேடிக்கண்டுவிடத்துடிக்கும் இலக்கோடு
கவிதைப்பயணத்தைத்தொடருகிறார் கவிஞர்.
’அட என்ன
நடக்குது நாட்டுல’- என்னும் முதல் கவிதை ஓசை நயம் மிக்கது. இது சமுதாயத்தில் அன்றாடம்
காட்சியாகும் நடப்புக்களை பட்டியலிடுகிறது.
‘தட்டிப்பறிச்சவன்
மேட்டுல அத
விட்டுக்கொடுத்தவன்
ரோட்டுல’
சாலையில்
பறிதவிப்பவனுக்காகக்குரல் கொடுக்கிறார் கவிஞர். அரசாங்கத்தின் எந்த சேவையையும் ஒரு எளியோன் பெற்றுவிடுதல் சாத்தியமே இல்லை. ஆயிரம்
பிரச்சனைகள் தொடரும் குறுக்கீடுகள். இது பற்றிப்பேசுகிறது ‘அருகதை’ என்னும் கவிதை.
‘கோப்பிலே
போட்ட பாதிக்கையெழுத்திற்கும்
போடப்போகும்
மீதி கையெழுத்திற்கும்
பேரம் பேசும்
அதிகாரிகள்’
அறிவியலின்
ஆட்சி இன்று இணையதளத்தை பாரெங்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.ஆனால்
மனித உறவுகளோ நொறுங்கிப்போய்விட்டன.
கவிஞரின்
மனம் கனமாகிறது இப்படி.
’உனது இந்தக்கண்டுபிடிப்பால்
உலகம் மட்டுமா
சுருங்கிவிட்டது.
உள்ளமும்தான்.’
நாட்டுவிடுதலைக்காகத்
தம் இன்னுயிர் ஈந்த தியாகிகள் அந்தமான் சிறையிலே
செங்குருதி சிந்தினர். செக்கிழுத்தினர். கவிஞர் அந்தமான் பகுதியில் கணிசமான
காலம் தொலைபேசித்துறையில் கணக்குஅதிகாரியாய் பணிசெய்துள்ளார் என்பது ஒரு சிறப்புச்செய்தி.
கவிதை இப்படி வருகிறது.
’செக்கிலே
எண்ணெய் பிழிய நீ ஏவப்பட்டாயா?
இல்லை!
நீயே
எண்ணெயாய் பிழியப்பட்டாய்’.
குழந்தையாய்
வாழ்ந்த நாட்கள் மீண்டும் வராதா என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருப்பதுதான். கூட்டாஞ்சோறு
கூடி உண்டு களித்த நாட்கள் திரும்பவும் வராதுதான்.
கவிஞர் இதனை ஆழ்மனதில் எண்ணிப்பார்க்கிறார்.
‘அந்த நாள்
வருமென்று
ஆவலாய் எதிர்பார்க்கிறேன்
பிள்ளைப்பிராயத்திலே
பெற்றதொரு
பெருமகிழ்ச்சி’
என்கிறார்
கவிஞர். கவிஞரின் தாய் அண்மையில் மறைந்துபோகிறார். நிறை வயது வாழ்ந்து
விடைபெற்றவர். ‘தாயே’ என்கிற ஓர் கவிதை எழுதுகிறார்.
எதிர் நிற்கும் பெற்ற மகனின் உரு அன்னையின் கண்ணுக்குத்தெரியாது போகிறது.
‘என் உருவம்
தெரியாதபோதும் என்னை
உண்மையாய்
நேசித்த ஒரே ஜீவன்’ என்று பெற்ற தாயுக்குப்பெருமை
சேர்க்கிறார்.
கவிதைப்புத்தகத்துக்குத்
தலைப்பாக வரும் கவிதை ‘வாழ்வை வெற்றிகொள்’.
வாசகர் உள்ளத்தில் நம்பிக்கையை விதைக்கும்
படைப்பாக மலர்ந்திருக்கிறது.நம்பிக்கைதான் வாழ்க்கை.நேர்மறையான எண்ணங்களே மனித வாழ்க்கையின்
அடித்தளம்.
‘இன்றைய நூற்றாண்டின்
இணையற்ற மனிதனே
நம்பிக்கை
கொண்டிரு
அதுதான்
பூமிப்பாறையைப்
புரட்டிடும்
நெம்புகோல்’.
கவிதை வாசகனுக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது. வாழ்க்கைச்சவால்களை எதிர்கொள்ள
அழைக்கிறது.படைப்பை படியுங்கள், தீர்க்கமாய் விமரிசியுங்கள் வாசகர்களே!
அழகான கவிதைகள்.
ஆழமான கருத்துக்கள். படிக்கப்படிக்க ஓர் நிறைவை அனுபவமாக்கும் பெரியசாமியின் கவிதைமலர்கள்.
தொடர்க கவிஞரே உமது வெற்றிப்பயணம். வாழ்த்துகள்பலவோடு.
----------------------
சஹ்ருதயர் விட்டல் ராவ்
என் நண்பர் பாவண்ணனுக்கு
நண்பர். எனக்கும் நண்பர். நண்பர் பாவண்ணன்
தான் என்னை ராமமூர்த்தி நகரிலுள்ள விட்டல்
ராவ் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்துச் சென்றார்.
என் இளையமகன் குடும்பம் பெங்களூரில் இருக்கிறது.
ஆக சென்னையில் வசிக்கும் நான் பெங்களூர் அடிக்கடி
செல்ல வாய்ப்பு. எழுத்தாளர் பாவண்ணன் எங்கள்
பகுதிக்காரர். எழுத்தாளர் பாவண்ணன் படைப்புக்களில்
நான் மிகுந்த ஈர்ப்பு உடையவன். பாவண்ணனின் சொந்த ஊர் வளவனூர். நானும் கடலூர் மாவட்டத்துக்காரன்.
இன்னும் கூடுதலாய்ச்சொல்ல நாங்கள் எல்லோருமே
தொலைபேசி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். விட்டல் ராவ் அவர்களின் வீடு ராமமூர்த்தி நகரில் டி சி பாளையா பிரதான சாலையில் கோஷி மருத்துவ மனைக்கு அருகில்
இருக்கிறது. நன்பர் பாவண்ணனின் அப்போதைய குடியிருப்பு
அல்சூரில் இருந்தது. பேருந்தில் பயணித்து ராமமூர்த்தி நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் வந்து இறங்கிய
பாவண்ணனோடு நானும் சேர்ந்துகொண்டேன். இருவரும் நடந்தே விட்டல் ராவ் வீட்டிற்குச்சென்றோம்.
கல்கரே மெயின் ரோடு வழியாகத்தான் விட்டல் ராவ் இல்லத்துக்கு நடந்து சென்றோம்.
அன்றுதான் முதன் முதலாக விட்டல் ராவ் அவர்களை முதலில் பார்க்கிறேன்.
அவர் எழுத்துக்களை வாசித்து வந்தவன்தான். சிரித்த முகம் வெள்ளை நிறத்தில் தலையில் சின்னச்சின்ன
முடிகள். வயது எண்பதைத்தொட்டுக்கொண்டிருக்கலாம். அவருக்குத்தனி வீடு. சொந்த வீடு. கலைஞானமுள்ள
ஒரு மனிதரின் வீடு என்பதை வீட்டில் நுழைந்ததும் அறிந்துகொண்டேன். அவர் வரைந்த ஓவியங்களும் எடுத்த நிழற்படங்களும் நம்மை வரவேற்கின்றன. விட்டல் ராவின் வீடு ஒரு அரிய நூலகமாகவே திகழ்கிறது.
விட்டல் ராவ் மிகச்சிறந்த
ஓவியர். சினிமாக்கள் பற்றிய அவர் விஷய ஞானம் அபாரமானது.சிற்பங்கள் குகைகள் பற்றிய அவரின்
அறிவு விசாலமானது. சிறுகதைகள் நாவல்கள் என
பிரமிக்கத்தக்க படைப்புக்களைத் தமிழில் தந்தவர்.அவரின்
ஆங்கில அறிவு பாரமானது.தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேலம் மற்றும்
அதன் பகுதிகளில் இளமைக்காலத்தில் வசித்துச் சென்னைக்குச் சென்றுள்ளார். ஒரு எக்ஸ்ரே
டெக்னீஷியனாத் தன் பணியைத்துவக்கி சென்னைத் தொலைபேசியில் பல்லாண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
சென்னையை அணு அணு வாய் அறிந்தவர். அனுபவித்தவர். சென்னைத்தமிழ் விட்டலுக்கு கைவந்த
விஷயம். சென்னையின் புராதனக்
கட்டிடக்கலை, ஓவிய சிற்பக்கலைகள் பற்றிய அவரின் தெளிவு நம்மைக்கிறங்க வைக்கும்.
அவரோடு உரையாடிக்கொண்டு இருக்கும் போது அவரின் வரலாற்று ஈடுபாடு எவ்வளவு உயிர்ப்பானது என்பதை நாம் அவதானிக்க முடியும்.
அம்ருதா இலக்கிய இதழில் தொலைபேசி நாட்கள் என்னும் தொடர்ச்
சித்திரத்தை எழுதியவர். பேசும் புதிய சக்தி இதழில் புராதனச் சிற்பங்கள் ஒவியங்கள் குகை
அமைப்புக்கள் குடைவரைக்கோவில்கள் பற்றிய தொடர் ஒன்றை விஸ்தாரமாக வெளியிட்டுக்கொண்டும்
இருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணனோடு விட்டல் ராவ் உரையாடிக்கொண்டிருப்பது
அருகிருக்கும் நமக்கு அனேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். சுவாரசியமான உரையாடலில்
இலக்கியச் சங்கதிகள் அவரிடமிருந்து வந்து வந்து விழுந்துகொண்டே இருக்கும்.
விட்டல் ராவ்’ வண்ண முகங்கள்’ என்னும் புதினத்தைப்படைத்துள்ளார்.
நாடகக்கம்பெனிகளில் நடிக்கும் மனிதர்கள் படும் இன்ப துன்பங்களை அலசி ஆராயும் நூலாக
இது அமைந்துள்ளது. கன்னட மண்ணின் நாடக உலகில் நிகழ்ந்த சம்பவங்களை அடுக்கிக்கொண்டே
போகிறார் விட்டல்.
இந்த நாவலுக்கு முன்னுரை தந்த ‘இரா. முருகன், இப்படிப்பேசுகிறார்.
‘கன்னட நாடக அரங்கு பற்றிய இந்த நாவல் எழுதிய விட்டல்ராவின்
சகோதரி பங்கு பெற்றிருந்த வரலாற்றுப்புகழ்
மிகுந்த கன்னட நாடக கம்பெனி குப்பி வீரண்ணா
தியேட்டர்ஸ். அக்காவோடு இருக்க, ஊர் பார்க்க,
நாடகம் பார்க்க, ரசிகர்களை மேடைக்குப்பின்னாலிருந்து பார்க்க,ஆண் பெண் நாடக நடிகர்களோடு
நேசத்தோடு பழக, அவர்களோடு சேர்ந்திருந்து உண்ண உறங்க,சுவாசிக்க விட்டல் ராவுக்குக்
கிடைத்த அனுபவங்களனைத்தின் சாரம் அவருடைய வண்ண முகங்கள் நாவல்.’
விட்டல்ராவ் ஹோசூரில் பிறந்தவர். தாய்மொழி கன்னடம் ஆயினும்
பயின்றமொழி பழகிய மொழி தமிழ். சேலம் பகுதிளில் இளமைக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்.
அவர் எழுதிய’ அன்னாடு காச்சியின் சேலம்’ என்கிற படைப்பு அன்றைய சேலம் நகரைப்பற்றி விரிவாகப்பேசுகிறது. இந்த
அரிய படைப்பை எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார். சா.கந்தசாமி
பற்றி விட்டல் சொல்லும்போது ‘எழுத்துலகத்தில்
என்னுடைய சகபயணியும் குடும்ப நண்பருமான மறைந்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களுக்கு
என் அன்புக்காணிக்கை’ என்று குறிப்பிடுகிறார்.
விட்டல்ராவ் தன்னுடை முன்னுரையில் இப்படிச்சொல்கிறார்.
‘என்னுடைய நாவல்கள் சிலவற்றிலும் சிறுகதைகள் நெடுங்கதைகளிலும்
சேலத்தை, சேலத்தானை, அதன் அன்னாடு காச்சிகளை, அன்னாடுகாச்சித் தனத்தையெல்லாம் வேண்டிய
மட்டும் தேவைப்படும் பொதெல்லாம் சித்தரித்து வந்திருக்கிறேன். சேலம் என் ஊர்,என் மண்.
என்னை ஆளாக்கிய புனித பூமி. அதைப்பற்றி எழுதுவது என் கடமைகளில் ஒன்று.’
விட்டல் ராவின் பார்வை எத்தன கூர்மையானது என்பதனை விளக்க
’ ஓர் அன்னாடு காச்சியின் சேலம்’ வரலாற்று
நூலில் வரும் இந்த எடுத்துக்காட்டு போதுமானது. இப்படிச் சொல்லிச் செல்கிறார் விட்ட;ல்
ராவ்.’ எங்கள் குல தெய்வமான எல்லம்மன் என்றழைக்கப்படும் ரேனுகாதேவி கோயில் பூசாரி எனக்கு
மொட்டையடிக்கும் போது பூணூல் அணிந்திருக்கவில்லை.அவருக்குப்பின்
அந்த திருச்செயலை சுவீகரித்துக்கொண்ட அவர் மகன் அம்மனுக்குப் பூசை காரியத்தின் போது பூணூல் அணிந்திருப்பது வழக்கமாயிற்று’
இதை என் மகளுக்கு அங்கு முடி இறக்கிய போது
நான் கவனித்தேன்.
அர்ச்சகர் என்ற சொல் பூசாரி என்கிற சொல்லினும் உயர்வு பட்டதாக
இந்த சமூகம் கருதத்தொடங்கியதை வேதனையோடு குறிப்பிடுகிறார் விட்டல். இருவரும் ஒரே தொழிலைச்செய்தாலும்
இந்த ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிலவத்தொடங்கியதைக்
குறிப்பிடுகிறார்.
அன்றைய திரையரங்குகள் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு இடங்கள், சிறு மலர் உயர் நிலைப்பள்ளி போன்ற கல்வி நிலையங்கள், சேலத்து வீதி ஒழுங்குகள் கடைத்தெருக்கள் உணவுவிடுதிகள்,
உணவு விடுதி சிப்பந்திகள், சிறிய பெரிய திருக்கோயில்கள், சமூகப் பொதுமேடைகள் என்பனபற்றி இந்நூல் விரிவாகப்பேசுகிறது’ .டி. ஆர் சுந்தரமும் அவரது ஆங்கிலேய மனைவியும் திட்டமிட்டு எல்லா வசதிகளும்
ஒரே இடத்தில் இருக்கும்படியாகத் திரைப்பட ஸ்டுடியோ
ஒன்றைக்கட்ட முடிவு செய்தனர்.இப்படியாக ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஏற்காடு செல்லும் ரம்மியமும்
அமைதியுமான சூழலில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ 1935ல் உருவானது. மாடர்ன் தியேட்டர்ஸின்
முதல் தயாரிப்பான ‘சதி அகல்யா’ பற்றிப்பேசுகிறார் விட்டல். இப்புத்தகத்தின் இறுதியில் தனது தந்தை மரணமெய்திய செய்தியைப்பதிவு செய்கிறார்.
மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் டபள்யூ எஸ் சுந்தரம் விட்டல் ராவிடம் ’ பிழைப்பது கஷ்டம். இந்த நிலையிலேயே
கூட்டிட்டு போனா குதிரை வண்டி வரும்.செலவு ஜாஸ்தியிருக்காது. இங்கே செத்துப்போயிட்டா
குதிரை வண்டி வரமாட்டான். வந்தாலும் ஏராளமா பணம் கேப்பான்’ மருத்துவர் பளிச்சென்று கூறியதைப்பதிவு செய்கிறார்.
சேலத்தைப்பற்றி ஒரு வரியில்,’சேலம் பிறர் அறியாத மகத்தான
மனிதர்களை நிறையவே கொண்டிருக்கிறது என்கிறார் விட்டல். அந்த மகத்தான மனிதர்களின் வரிசையில்
விட்டல் ராவும் உண்டுதானே.
விட்டல் ராவ் எழுதிய தமிழகக்கோட்டைகள் என்கிற நூல் இங்குள்ள
கோட்டைகளின்வரலாறு கட்டிட அமைப்பு கோட்டைகளின் சிறப்பு அம்சங்கள்அதனோடு தொடர்புடைய
மன்னர்கள் ஆட்சியாளர்கள் அந்தக்கோட்டைகளின் இன்றைய நிலை, குறிப்பிடப்படவேண்டிய சிறப்பான
தகவல்கள் அந்த இடத்தினைப் பார்வையிட ஒருவர்
எப்படி அடைவது என்கிற எல்லா விஷயங்களையும்
வாசகர்கள் எளிதில் அறியுமாறு விறுவிறுப்பான நடையில் எழுதியுல்ளார் விட்டல் ராவ்.
அவர் தொட்டுப்பேசும் கோட்டைகள் ஓமலூர், நாமக்கல்,கிருஷ்ணகிரி,தேன்கனிக்கொட்டை,ஓசூர்,
தர்மபுரி,சந்திரகிரி,தரங்கம்பாடி திருமெய்யம்,வேலூர்,செயிண்ட்ஜார்ஜ் கோட்டை என நீள்கின்றன.
கோட்டைகளைப் பற்றி ராவ் சொல்லுகையில் திப்புசுல்தானின்
சரித்திரமும் கூடவே பயணிக்கிறது. தொடக்க கால யுத்தங்களை பிரெஞ்சுப்படைகளுடன் சமாளித்த திப்புசுல்தான் , ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும்
உடன்படிக்கை ஏற்பட்டதால் சங்கடத்தில் சிக்கிக்கொள்கிறார்.
திப்பு சுல்தானின் தலைப்பாகை கீழேவிழ அவர் போரிடுவதைச் சித்திரமாக வரைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். கட்டிவைத்த கோட்டைகள் எதிரிகளால் வெல்லப்படுவதை
விட சூழ்ச்சிகளால் துரோகங்களால் சதிகளால் வெல்லப்படுவதை அழகாய்ச்சுட்டுகிறார்.
கோட்டைகளை ஆய்கையில் அவருக்குத்துணையாக வருபவர்கள் வழிகாட்டுபவர்கள்,வரலாற்றுக்கதை
சொல்பவர்கள் ஆடு மாடு மேய்ப்பவர்களே என்பதை நேர்மையாகப் பதிவு செய்கிறார்விட்டல்.
நிலநடுக்கோடு என்கிற நாவல் அவருடைய சென்னை வாழ்க்கையை சென்னையின்
புராதன கட்டிடக்கலை விஷயங்களை அன்று இயங்கிய திரையரங்குகளை, வாடகை வீடுகளை அன்று உலாவிய சமூக உணர்வுகளை பொது மருத்துவமனை இயங்கிய
விதங்களை அன்று மிச்ச சொச்சமாய் சென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின்
ஒழுகலாறுகளை எழுத்துச் சித்திரமாய்த்தீட்டித் தந்திருக்கிறார் விட்டல்.
சென்னையில் உள்ள தேவாலயங்கள், சென்னையின் பிரதான பழைய புத்தகக்கடையான
மூர் மார்க்கெட்,மரினா கடற்கரை, செயின் ஜார்க் கோட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
அன்று நகரத்தில் ஓடிய ரிக்ஷாக்கள், நகரப்பேருந்துகள் அவை ஏழு பைசாவுக்கு வழங்கிய டிக்கட்டுகள்,
எம்ஜி ஆர் எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட சமாச்சாரம், பிரதமர் நேரு இறந்தபோது மாநகர கெடுபிடி, பின்னர் நாட்டில் வந்த உணவுப்பஞ்சம்
அதனை சென்னைநகரம் அணுகிய விதம், அவர் காதலித்துத்திருமணம் செய்துகொண்ட சாகசம் நிறைந்த
சென்னை வாழ்க்கை, தொலைபேசித்துறையில் பணியாற்றிய கெடுபிடி அதிகாரிகள், பொறுப்புமிக்க
ஊழியர்கள், சோரமில்லா தொழிற்சங்கத்தலைவர்கள்,
தலைவர்கள் நிகழ்த்திய விறு விறுப்பான கூட்டங்கள், தொலைபேசித்துறையில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தங்கள், இன்னும் எத்தனையோ சுவாரசியமான செய்திகளைச்
சொல்லிக்கொண்டே போகிறார். புத்தகம் வாசகனை கட்டிப்போட்டுவிடுகிறது. விட்டலின் எழுத்து
நடை நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
நிலநடுக்கோடு புதினம் பற்றி பாவண்ணன் இப்படிக்குறிப்பிடுகிறார்,
’வரலாற்றில் எப்போதுமே வெளிச்சத்திலிருக்கிற மனிதர்களையும்
நிகழ்ச்சிகளையும் ஒரு கோட்டுச்சித்திரம்போல் ஒன்றிரெண்டு வரிகளில் தீட்டிவிட்டு, காலமெல்லாம்
ஒளிவுமறைவுப்பிரதேசத்திலேயே வாழ்ந்து மறையும் எளியவர்கள் மீது வெளிச்சம் விழும்படியாக ஒரு நாவலை எழுதிப்பார்த்திருக்கிறார்
விட்டல் ராவ். தெருக்கள், வீடுகள் கடைகள், திரையரங்குகள்,உணவுவிடுதிகள் குதிரைப்பந்தயம்
என சென்னை வாழ்க்கையைப்பற்றி அவர் அளிக்கும் பல நுண் தகவல்கள் வாசிப்பின் சுவாரசியத்தை
அதிகரிக்கின்றன.அறுபதுகளின் வாழ்க்கை நம் கண் முன்னால் எழுத்தில் ரத்தமும் சதையுமாக
விரிகிறது.,’
தேவ் என்கிற பெயரில் வரும் இந்த நாவலின் கதாநாயகன் விட்டல்
ராவ் அவர்களேதான். தகப்பனை இழந்த தேவு எனும் தேவேந்திர அய்தாளாவின் பேரில் குழந்தை
பாக்கியமற்ற டாக்டர் ஹமீத் தம்பதிகள் வாஞ்சை காட்டி வந்தனர். சேலத்திலிருந்து ஒலவக்கோடு
பாசெஞ்சரில் சென்னை நோக்கி மூன்றாம்வகுப்புப்பெட்டியில் கூட்டத்தோடு கூட்டமாய் வண்டியில்
ஏரும் கதாநாயகன் தேவை வழி அனுப்ப டாக்டர் ஹமீத் சேலம் ரயில்வே சந்திப்புக்கு
வருகிறார் என்று தொடங்குகிறது நாவல். தேவின் நல்ல குணங்களை அவரின் மாமனார் தன்னுடைய
வாழ்வின் இறுதிக்கணங்களில் மட்டுமே
தரிசிக்க வாய்க்கிறது.
‘தனக்கு மனிதர்கள்
உண்டு மொழி உண்டு ஊர் உண்டு இனி எல்லாம் உண்டு என்ற தெளிவான நம்பிக்கை மிக்க பிரக்ஞை
தேவுக்குள் எழுந்து பரவியது.’ என்று முடிக்கிறார் விட்டல்.
’மின்னற்பொழுதுகள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பு பேசும் புதியசக்தி
இதழில் வந்த இலக்கியக்கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூலுக்குப் பதிப்புரை எழுதிய ஜெ
.ஜெயகாந்தன், ஓவியர் தேனுகா,எழுத்தாளர் சா.கந்தசாமி
அசோகமித்திரன், மா. அரெங்கநாதன்,தனுஷ்கோடி ,மகரிஷி,பாவண்ணன்,பாவை சந்திரன்,பதிப்பாளர்
கலைஞன் மாசிலாமணி ஆகியோரைப்பற்றி விட்டல் ராவின்
நினைவுகள் அபாரமானவை என்று வியந்து எழுதுகிறார்.
தனுஷ்கோடியின் பன்முக ஆளுமை என்று தலைப்பிட்டு கட்டுரை
எழுதும் விட்டல், ‘ நம்மைச்சுற்றி நமக்கு அருகே
அரைகுறைகளும், அதுவுமில்லாதவையும் தாம் தூமெனக் குதிதெழும்பிச் சுய பீற்றலில் ஜொலிக்கையில்,
குடத்திலிட்ட மணி விளக்காய் அதிகம் தெரியவராமலே இருப்பவர்கள் அனந்தம். அவ்வாறான பன்முகக்
கலை ஆளுமை கொண்ட திரு. ஆற்காடு வரதராசப்பிள்ளை தனுஷ்கோடி வெளியுலகுக்குத்தெரியாமலே
சுடர்விட்டுப்பிரகாசிப்பவர் என்று தொடங்குகிறார்.
தனுஷ்கோடி மூன்று
தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ‘ஹாசன்’ சகோதரர்கள் தயாரித்த ‘ராஜபார்வை’
டி. ராஜேந்தர் இயக்கிய ‘நெஞ்சில் ஒரு ராகம்’ பிரதாப் போதன் இயக்கிய இந்தியப்பிரதமரின்
பரிசுபெற்ற ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற மிக அரிய விஷயங்களை வாசகர்க்குத் தருகிறார்.
கன்னத்தில் அறைவாங்கி தத் ரூபமாய் நடித்தவர்கள் தமிழ்த்திரையுலகில்
இருவர் என்கிறார் விட்டல். ஒருவர் சகஸ்ரநாமம், ‘மண மகள்’ படத்தில் பத்மினியிடம் அறை
வாங்குவது, மற்றொன்று ‘ராஜ பார்வை’ படத்தில்
எல் வி பிரசாத்திடம் அறை வாங்கும் தனுஷ்கோடி
என்கிறார். சினிமா பற்றிய விட்டலின் தெரிவு இயல்பாய் மிக ஆழமானது.
’எழுத்தில் சித்து மா. அரங்கநாதன்’ என்னும் கட்டுரையில்
விட்டலும் மா. அரங்கநாதனும் திருப்போரூர் பேருந்தில் பயணித்த சுவாரசியமான கதை வருகிறது. அரங்கநாதனிடம் இருப்பது
ஐந்து ரூபாய், விட்டலிடம் இருப்பது ஒண்ணரை ரூபாய. இருவரும் திருப்போரூர் பயணம் போய் திரும்பிய கதையை நகைச்சுவையோடு
சொல்கிறார் விட்டல்.
தனக்கொரு முன் மாதிரியாக எவரையும் சொல்லமுடியாத ஒப்பற்ற கதாசிரியர் மா. அரங்கநாதன்.
அவர் பெயரில் ஒரு அறக்கட்டளைத்தொடங்கி இலக்கிய ஆளுமைகளுக்கு பரிசளிப்பதை மகிழ்ச்சியோடு
குறிப்பிட்டுப் பாராட்டுகிறார் விட்டல்.
புதுமைகளை விரும்பும்
சாவி ,
மனிதத்தன்மை மிக்க கோமல் சுவாமிநாதன், நட்பு போற்றும் பாவை சந்திரன் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை இப்படைப்பில் காணலாம்.
இந்த நூலில் இன்னும் திருவாளர்கள் சா. கந்தசாமி,பாவண்ணன், கலைஞன் மாசிலாமணி,
நர்மதா இராமலிங்கம், தீபம் திருமலை என்னும் பல ஆளுமைகளைச்சிறப்பித்து எழுதுகிறார் விட்டல்.
பாவண்ணன் பற்றிய கட்டுரையில், வெங்கட்சாமினாதன் குறிப்பிட்ட
செய்தியினைப்பதிவு செய்கிறார் விட்டல்.
‘பாவண்ணன் ரொம்ப நல்லவனா தெரியறான்யா,அவ்வளவு நல்லவனாவும்
இருக்கக்கூடாதய்யா’
‘’ இயல்பை மாத்திக்க முடியாது அண்ணா’ விட்டலின் பதில் இது.
நான் ஒரு சமயம் கவிஞர் பழமலயிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
பாவண்ணனின் வளவனூரில்தான். ஏதோ ஒரு இலக்கிய
நிகழ்ச்சிக்குப்போயிருந்தோம்.’ பாவண்ணன் ஈர வன்னியன், வீர வன்னியன் இல்லே’ என்று
குறிப்பிட்டார் பழமலய். அறிவினான் ஆகுவதுண்டோ
பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக்கடைக்கு இயயைந்தவராய் எழுத்தாளர் பாவண்ணனைச்சொல்லலாம்.
இதுவே வெ. சா வின் பாவண்ணன் பற்றிய வரையறையிலும்
இருப்பதை நாம் காணலாம்.
’காலவெளியில் வண்ண முகங்கள்’ என்னும் கட்டுரைத்தொகுப்பை
லாவண்யா சுந்தரராஜன் கொண்டு வந்துள்ளார். அதனில் பாவண்ணன் எம் கோபாலகிருஷ்ணன்,லாவண்யா
சுந்தரராஜன்,குமாரநந்தன், மு. குலசேகரன்,சிவபிரசாத், சாகிப் கிரான்,ரமேஷ் கல்யாண்,திருநாவுக்கரசு,
திருஞானசம்பந்தம் ஆகியோர் விட்டல்ராவின் பன்முக ஆளுமை பற்றி போற்றிப் போற்றி எழுதியிருக்கிறார்கள்.
எளிய மனிதர்களின் ஆன்மாவைத்தேடிய பெரிய எழுத்தாளர் விட்டல்.
உலக சினிமா பற்றிய ஞானம் பெற்றவர், நடமாடும் ஒரு தகவல் களஞ்சியம், மொழியை மிக நுட்பமாகக்
கையாளுபவர், சளைக்காத கலைப்பயணி, நாட்டுப்புற மனிதர்களின் சம்பாஷணையில் ஒளிந்திருக்கும்
அற்புதத்தை தரிசிக்கத்தெரிந்தவர்,ஆங்கிலோ இந்தியக்குடும்பங்களின் வாழ்வியலை நுட்பமாக
அறிந்தவர், காம்ரேட்கள் வாழ்க்கையில் நிகழ்ந்துவிட்ட சோகத்தைப் பதிவு செய்தவர், மனித
உறவுகளின் நுட்ப இழைகளை அவதானிக்கத்தெரிந்தவர், தமிழக சமூக வரலாற்றை உள்வாங்கிய படைப்பாளி,
ஏதுமிலிகளின்வழக்கறிஞராய் விட்டலை வாசகர்கள் தரிசிக்க முடிகிறது.
’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்
கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள’ கலையும் காலமும்’
என்னும் நூல் ஓர் கலைச்சுரங்கம். ஆசிரியர்
விட்டல் ராவ். இப்படைப்பை நாடறிந்த எழுத்தாளர் திரு. பாவண்ணன் அவர்கட்குச் சமர்ப்பித்துள்ளார்.
பாவண்ணனை சக எழுத்துப்பயணி, அன்பு சகோதரர் என்று
விளிக்கிறார் விட்டல் ராவ். நன்பர்களோடு பேசும்போது தான் பெங்களூரில் வசித்து வருவதற்கு திரு. பாவண்ணனே
காரணம் என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடுவார். இந்நூலுக்குப்
பதிப்புரை தந்துள்ள அருமை நண்பர் மு. வேலாயுதம் இப்படிப் பதிவு செய்கிறார், ‘கலை இலக்கியம்
இரண்டுமே மானுட சமூகத்தை மேன்மையை நோக்கி
அழைத்துச்செல்வதை தமது முக்கிய இலக்காகக் கொண்டவை. அந்த வகையில் ‘கலையும் காலமும்’என்ற
விட்டல் ராவின் இந்நூல் கலையைச்சொல்கிறது. காலத்தைச்சொல்கிறது.அமைதியைச்சொல்கிறது.நிறைவைத்தருகிறது’.
விட்டல் ராவ் தன்னுடைய என்னுரையில் அடிப்படையில் தான் ஒரு ஓவியன் என்பதைக்குறிப்பிடுகிறார். அவர் சிற்பங்கள்,சிற்ப
வடிவக் கட்டுமானங்கள் என்பவற்றில் மனத்தைப்பறிகொடுத்திருக்கிறார். கோயில்கள் கட்டிடங்கள்
என்பவற்றைக்காண அனேக பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். ’ மண்ணில் தோன்றி மண்ணுக்கே திரும்பும்
சகல உயிரினங்களில், மகத்தான மனிதன் ஆற்றிய பெருஞ்சாதனைகளில் முக்கியமானது, அவன் தன்னை
வெளிப்படுத்தியிருக்கும், வெளிப்படுத்திக்கொண்டே வரும் கலைக்கரியங்கள்’ என்கிறார். தொடர்ந்து
இக்கட்டுரைகளை வெளியிட்ட பேசும் புதிய
சக்தியின் திரு. ஜெயகாந்தன் அவர்கட்கு தனது
நன்றியைச் சமர்ப்பிக்கிறார்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலை இலக்கிய விமர்சகர்
இந்திரன்,
‘என் மனம் கவர்ந்த நண்பர்களில் விட்டல் ராவ் ஓர் அபூர்வப்
பறவை.தனது சிறகுகளைப் பல்வேறு திசைகளில் புகைப்படம், ஓவியம், புனைவிலக்கியம் என்று
விரித்துப்பறந்த 82 வயது பறவை. இவரது சிறகுகள் தொடர்ந்து பறப்பதில் சோர்வறியாதவை’ என்று
குறிப்பிடுகிறார்.
கலையும் காலமும்
நூல் 28 கட்டுரைகளைக் கொண்டது. மண்
கல் மரம் சிற்பம் ஓவியம் கட்டிடம் என்கிற வரிசையில் கட்டுரைகளை நாம் இங்கே வாசிக்கலாம். சுடுமண் பற்றிப்பேசுவன
முதல் இரண்டு கட்டுரைகள்.களிமண்ணாலான கலைப்படைப்பை ஏழை மனிதனின் கலை என்று சொல்கிறார்கள்.
அசையும் மற்றும் அசையாத் சொத்துக்களை அதிகமாகக்கொண்ட
செல்வந்தர்களின் ஆட்சியின் கீழுள்ள திருக்கோவில்களில் தங்கம் வெள்ளி வெங்கல சிலைகளை கருங்கற் சிற்பங்களைக்காண
முடியும். ஊரின் நடுநாயகமாய் அவை குடிகொண்டிருக்கும்.
ஏழைகளின் சாமிகள் சுடுமண்ணாலானவை.ஊர் கோடியில் மட்டுமே அவை காணப்படும்.சுடுமண்ணாலான
‘முனியப்பன்,ஐயனார் சிலைகள் சுடுமண் குதிரைகள்
முதலான கிராம பாதுகாப்புத் தெய்வங்களுக்கு ஆடு கோழி பலியிடல், கள் சாராயம் சுருட்டு
முதலியன படைத்தல் வ ழக்கமாயின. அதற்கென நியமிக்கப்பட்ட பூசாரிகள் அந்த அந்த காரியங்களைச் செய்தார்கள்.
தாரை, தப்பட்டை,எக்காளம்,பம்பை ஆகியன இத்தெய்வங்களுக்கு
இசைக்கருவிகள் ஆயின. பிராமணர்கள் இக்கோயிலகளுக்கு வருவதில்லை. அச்சமே காரணம் என்கிறார்
விட்டல் ராவ்.
கற்சிற்பங்கள்,ஓவியங்கள், கல், சுதைச் சிற்பங்களாலான கோபுரங்கள்
ஆகமம் என்றான பெரிய கோவில்கள் உயர்ஜாதிக்கோயில்கள் என்றே பார்க்கப்பட்டன. அவை
பிராமண பூசாரிகள் வசமாயின.
மேட்டூர் அணைக்கட்டுக்குக் கீழே உள்ள பரந்த பூங்காவில்
அமைக்கப்பட்டுள்ள ‘ அணைக்கட்டு முனியப்பன் சுடுமண் சிலையை, சேலம் நாலு ரோடு முனியப்பன் சுடுமண் சிலையை, ஏழைகளின் சாமிகளுக்குச் சான்றாய்க்
காட்டுகிறார் ஆசிரியர்.
எழுத்தாளர் சா. கந்தசாமி எழுதிய ‘நிழல்’ என்னும் சிறுகதையில்
தெய்வம் முனிக்குப்படையலும் பூசையும் நடைபெறும்.
முனிக்கு ஒரு பாடல் ஒன்றையும் சா.கந்தசாமி அக்கதையில் வழங்குகிறார்.
‘அண்ட சராசரம் காக்கும் ஆதிமுனியே
வால்முனியே அப்பனே
ஆதி முனியே எங்க அப்பனே
ஐயாவே எங்கள் குல நாயகரே
எலந்த மரம் விட்டு இறங்கி வரவேணும்
ஒதியமரம்விட்டு ஓடி வரவேணும்
பனைமரம் விட்டு பாய்ந்து வரவேணும்
இலுப்பைமரம் விட்டு இங்க வரவேணும்
இப்ப வரவேணும் இங்க வரவேணும்
காத்திருக்கும் பிள்ளைகளைக் காக்க வரவேணும்’
மூன்றாவது கட்டுரை ’கல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மணற்கல்லில் கட்டப்பட்டுள்ள கோவில்களில் மிகமிகப்பெரியது
காஞ்சி கைலாசநாதர் கோயில். நூல் ஆசிரியர் இந்தக்கோயிலை
நான்குமுறை பார்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டக்
கோயில் இது. கோயில் மதிற்சுவரில் பெரிய யானைச்
சிற்பம் காணப்படும். பல்லவர் செய்வித்த கோயில்களில்
சிற்பங்கள் தனித்தே இருக்காது. கோயிலே சிற்ப வடிவமாகவே அமைந்திருக்கும் என்கிறார் விட்டல்
ராவ். காஞ்சி கைலாசநாதர் கருவறையின் உள்ளே பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம்
இருக்கிறது. இதற்கு முன்னால் கருப்புக்கல்லால் ஆன லிங்கம் அமைந்திருக்கிறது. நந்தியின்
சிலை கோயிலுக்கு முன்னால் வெளியே வெகு தூரம் தள்ளி மணற்கல் மேடையில் காணப்படுகிறது.
நந்தி அமர்ந்துள்ள மேடை மூன்று அடுக்குகளைக்
கொண்டது. தரையோடு சேர்ந்துள்ள பகுதியில் சிவ கணச் சிலைகள் ஏராளமுள்ளன.
மேலும் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சப்த மாதர்கள், ருத்திரர்கள்
அஷ்டதிக் பாலகர்கள் என்னும் இந்திரன், யமன்,அக்னி,நிருதி,வாயு, வருணன், சோமன்,ஈசானன்
சிலைகளோடு , நரசிம்மனுக்கும் கருடனுக்குமான சண்டைக்காட்சிகளும், மணற்கல்லில் சிற்பங்களாய்
படைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட சிறு கோயில்கள் உள்ளன. சிவன் பார்வதி முருகன் இணைந்த சோமாஸ்கந்தர் ஓவியங்கள் அதிகமுள்ளன. க்ரீட
அலங்காரம், ஆபரணங்கள்,குடை தினுசுகள் அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சை சோழர் ஓவியங்கள்
போலவே உள்ளன.
நந்திவர்மன் கட்டிய கோயில் ஒன்று உத்திர மேரூரில் இருக்கிறது.
இவ்வூரிலுள்ள வைகுண்டப்பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள்
அதிகம் காணப்படுகின்றன. மற்றுமொரு கோயில் சுந்தர வரதப்பெருமாள் கோயில். இது
1200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இக்கோயிலில்,
ஆஞ்சனேயர்,கருடாழ்வார்,நின்ற கோலத்தில் சுந்தரவரதர் ஆகியோர் இருக்கிறார்கள். நின்றான், அமர்ந்தான், கிடந்தான், என்ற மூன்று நிலைகளிலும்
அத்திமரத்தால் செய்யப்பட்ட மூலவர்கள் இருக்கிறார்கள். உத்திர்மேரூர் சுந்தரவரதப்பெருமாள்
கோவிலின் மாதிரியில்தான் சென்னை அஷ்டலக்ஷுமி கோயில் கட்டப்பட்டுள்ளதாக விட்டல் ராவ்
குறிப்பிடுகிறார்.
’மரம்’ என்னும் தலைப்பில் இரண்டு கட்டுரைகள் வந்துள்ளன. மரப்பாச்சிகள் நல்ல செம்மரத்தில் செய்யப்படுபவை.
அவை ஒரு அடி உயரமிருக்கும். சிலை செதுக்கும்போது
உடை ஆபரண தினுசுகளையும் செதுக்கியிருப்பார்கள். பெண் பொம்மைகளின் காதும் மூக்கும்
குத்தப்பட்டிருக்கும். இதற்கென்றே கிடைக்கும் போலி நகை நட்டுக்களை அதனில் மாட்டி வைப்பார்கள்.
நார்பட்டில் புடவை, ரவிக்கை,வேட்டி, வஸ்திரம், மரப்பாச்சிகளுக்கு அணிவித்து இருப்பார்கள்.
மரப்பாச்சி பொம்மைகளுக்குத் திருமணம் உண்டு.
திருமண விருந்தும் ஏற்பாடாகும். நவராத்திரியின் கடைசியில் ஒருநாள் பொம்மையைத் தூங்கவும் வைப்பார்கள். பிறகு
அவை அனைத்தும் பரணைக்கு வந்து விடும்.
பழங்குடி மக்களின் கைவினைப்பொருட்கள் காட்சியகம் ஒன்று மைசூர் மானசகங்கோத்திரியிலுள்ளது. 1968ல்
தொடங்கப்பட்டது. 6500 அரிய கலைப்பொருட்கள்
இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. சுண்டு விரலில் பாதி அளவு தொடங்கி ஆளுயர மரப்பாச்சி வரை இங்கே நாம் பார்க்கமுடியும்.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சியை
மரச்சிற்பமாக செதுக்கியிருத்தலைக் கண்டு
பிரமித்துப்போகலாம் நாம்.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதி ’சித்திரச்சாலை’ என்னும்
பொம்மைக்கூடத்தைப்பற்றியும் விளக்குகிறார் விட்டல் ராவ். பொது மக்கள் இதனைச் சொர்க்க
நரக பொம்மைச்சத்திரம் என்றழைப்பதாகவும் தெரிகிறது. சித்திரையில் நடைபெறு அறுபத்து மூவர்
விழாவின் போது பொது மக்கள் இதனை கண்டு களிக்கிறார்கள். வியாசர் பாடி விநாயக முதலியாருக்குச்
சொந்தமானது இச்சத்திரம். ஆற்காட் நவாபின் அரண்மனை கட்டட காண்ட்ராட்டராக இருந்தவர் இந்த
முதலியார்.
தமிழ்நாட்டுக்கோயில்களில் சிதம்பரம், கும்பகோணம் நாகேஸ்வரன்
கோயில் இங்கெல்லாம் மரத்தாலான கோயில்கள் காணப்படுகின்றன.கேரளத்தில்
பத்மநாப அரண்மனை அருங்காட்சியகத்தில் துர்கை
சிற்பம் சிறப்பானதாகும். குறிப்பிடப்படவேண்டிய மற்றொன்று பைரவரின் சிற்பம். கேரளத்தின்
மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு
அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய்
இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த்
துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு
நாகங்கள் பின்னிப்பிணைந்து பக்கத்திற்கு ஒன்றாக
படமெடுத்து ஆடுகின்றன. அவற்றை ஒட்டி சிங்கங்கள். முழுச்சிற்பத்தையும் இருபத்திநான்கு
நாகங்கள் பின்னிச் சுழன்று காவல் புரிகின்றன.
கேரள மரச்சிற்பியின் அரிய திறமையை உலகுக்குப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷம் இது.
நாம் தேர்த்திருவிழா பல ஊர்களில் பார்த்திருப்போம். மரச்சிற்பங்களின்
மொத்த வெளிப்பாடும் தேர் சிற்பங்களில்தான் குடிகொண்டுள்ளன. தேர் செய்வதற்கு ஏற்ற மரங்கள்
கோங்கு, அல்லது சால் ,செம்மரம், ஆப்பிள் மரம், சரகம் முதலியன. புளியமரங்களையும் தேரின் சக்கரம் பீடங்கள்
செய்ய பயன்படுத்துகிறார்கள். பிரம்மன்,விஷ்ணு,சிவன்,கார்த்திகேயன்,விநாயகர்,
அம்மன், இலக்குமி, சரஸ்வதி என உருவங்கள் தேர்களில் கொலுவிருக்கும். தேர் அமைப்பு எண்கோண வடிவ பீடத்தில், அடுக்கு அடுக்காக
ஒன்றன் மேல் அமைந்திருக்கும். நாகஸ்வரம் வாசிப்பவர்கள் தேர் மீது அமர்ந்து வாசிப்பார்கள்.
தேரை நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இழுத்துச் செல்வார்கள். தேர் இழுக்கும் போது வாசிக்கும்
ராகம்,
‘தித்தி தித்தீ தின தியாகராஜா
தித் தினத தித்தீன தித்தி தித்தி…’
கோயிலில் ஒரு தேர் நிலையை அடைவது வரை அழகாகச்சொல்கிறார்
விட்டல் ராவ்.
கிறிஸ்துவக்கோயிலிலும் தேர் செய்யப்பட்டு இறைவனின்
வீதி உலாவிற்குப் பயன்படுத்தப்படுவது குறித்து இக்கட்டுரையில் வருகிறது. திருச்சி
டால்மியாபுரம் அருகே வடுகம்பட்டியில் வீரமாமுனிவரால்
அமைக்கப்பட்ட தேர் குறித்து விபரங்கள் தரப்பட்டுள்ளன.
இத்தேரில் இயேசுநாதரின் வாழ்க்கைக் காட்சிகள்
மரச்சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கல் என்னும் தலைப்பில் முதல் மூன்று
கட்டுரைகள் மணற்கல்லினால் செதுக்கப்பட்ட சிலைகளைப்பற்றிப் பேசுகின்றன. முதல்
கட்டுரையில் காஞ்சீபுரம் தான்தோன்றீசுவரர்
மணற்சிற்பங்கள் குறித்து நிறைய செய்திகள் தரப்பட்டுள்ளன.
இக்கோயிலின் வெளிச்சுற்றுச்சுவரில் தனித்தனியாக ஏழு மணற்கல் புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
இவை காபாலிகர்களின் உருவங்களைத்தாங்கி நிற்கின்றன. இந்தியாவிலேயே காபாலிகர்கள் சிற்பம் காணப்படுவது
இந்தக்கோயிலில்தான். காபாலியோடு காபாலினியும் ஜோடியாகவே காணப்படுகிறார்கள். மாட்டுக்கொம்பில்
மதுவை நிரப்பிக்குடித்தபடி நடனமாடுகிறார்கள்.
முக்தீஸ்வரர் கோயிலில் அனேக மண்ற்கல் சிற்பங்கள் பார்க்கலாம்.
இராவண கர்வ பங்கம் என்னும் புடைப்புச்சிற்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. முக்தீஸ்வரர்
கோயிலின் வெளிச்சுவர்களில் ஈசன் நடராஜ வடிவங்கள்
இரண்டு இடங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வைகுண்டப்பெருமாள் கோயில் பல்லவப்பேரரசு
சாளுக்கிய மன்னனை வெற்றிகொண்டதற்குச் சின்னமாகக் கட்டப்பட்டது. இக்கோயில் காஞ்சிபுரம்
ரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ் ஸ்டேண்டுக்கும் இடையே அமைந்துள்ளது. வைகுண்டப்பெருமாள் கோயிலிலும்
ஏனைய பல்லவ காஞ்சிபுரத்துக்கோயில் போல அதிட்டானம்
கருங்கல்லால் ஆனது. மற்றவை மணற்கற்களால்ஆக்கப்பட்டுள்ளன. இகோயிலில் செதுக்கப்பட்டுள்ள
குதிரைச்சிற்பங்கள் நம்மைப்பார்ப்பது போன்றே
வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
கட்டுரைகள் ’ கல்’- நான்கும் ஐந்தும் கற்சிற்பங்களைப் பற்றிப் பேசுகின்றன. செஞ்சிக்கோட்டையில்
உள்ள வெங்கட ரமணர் கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர்
ஆண்டாள் கோயில், ஸ்ரீரெங்கம் அரங்கன் கோயில், சங்ககிரி வரதராஜப்பெருமாள் கோயில் தஞ்சைப்பெருவுடையார்கோயில்
ஆகியன சிறப்புமிக்க கற்கோயில்களாகும்.
அடுத்த ’கல்’கட்டுரை
ஐயங்கார் குளம், திருப்பனங்காடு மற்றும் கூழம்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள கற்சிலைகளைப்பற்றி
விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. ஐயங்கார் குளத்தில் உள்ள கோயிலுக்கு சஞ்சீவராயர் கோயில்
என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆஞ்சனேயர் சஞ்சீவி மலையோடு பறந்து செல்கையில் ஒரு துண்டு இந்தக் கோயில் உள்ள இடத்தில் வீழ்ந்துவிட்டதாம்
ஆகவே தான் இது சஞ்சீவராயர் கோயில் ஆனது என்கிறார்கள். ஐயங்கார் குளத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது திருப்பனங்காடு. பெயருக்கு ஏற்றார்போல் இவ்வூரில்
பனைமரங்கள் அதிகமாகக்காணலாம். கூழம்பந்தல் என்னும் ஊர் பற்றி விவரணை தொடர்கிறது. இங்குள்ள
கோயிலின் பெயர் கங்கைகொண்ட சோழீச்வரம். இக்கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கிடையாது. தென்திசை நுழைவாயிலில் பிரம்மாண்ட இரு துவார பாலகர் சிலைகள்
கம்பீரமாய் நிற்கின்றன. சற்று தூர நின்று பாருங்கள், இக்கோயில், சக்கரங்கள் இணைக்காத பெரும் கல் ரதம் போன்ற வடிவமைப்பைக் கொண்டது. கி.பி 1012-1044ல் கட்டிமுடிக்கப்பட்டதாகும் கோயிலுக்கு முன் பக்கத்தில்
இருபது பருத்த தூண்களைக்கொண்ட பெரிய நடன மண்டபம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து
இருபத்து நான்கு தேவரடியார்களை அழைத்து வந்து இந்த மண்டபத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக அறியப்படுகிறது.
அடுத்த கட்டுரை
புத்த ஜைன காஞ்சி.
1927ல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வரலாற்றுப் பேர்டாசிரியர்
துப்ரேல் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் பல பளிங்கிலான புத்த மதச்சின்னங்கள் கொண்ட தூண்களைக்
கண்டிருக்கிறார். இதை டாக்டர் மீனாட்சி என்கிற வரலாற்றாளர் வழிமொழிந்திருக்கிறார் என்பதனை
அறிகிறோம். திருப்பருத்திக்குன்றம் என்னும் ஊரில் சமணக்குடியிருப்புகள் இருந்திருக்கின்றன.
சந்திர பிரபா தீர்த்தங்கரர் திருக்கோயில் இங்கு
வெகு சிறப்பாக இருந்திருக்கிறது.
கட்டுரைகள் 12 ம் 13ம் மகாபலிபுரம் பற்றிப்பேசுகின்றன. இது கல்லிலே கலை வண்ணம் கண்ட தலம். மகாபலிபுரத்திலுள்ள
ராய கோபுரங்கள் இரண்டுமே முற்றுப்பெறாதவை. ஒன்று அர்ஜுன தபஸ் சிற்பத்திற்குப்பின்னால்
இருப்பது மற்றொன்று தலசயனப்பெருமாள் கோயிலுக்கு
முன்பாக நிற்பது. இவை இரண்டும் விஜயநகரப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்டவை. அலங்காரத்தூண்களும்
யாளி மீது நிற்கும் ஆளுயர மங்கயாக நிற்கும் கங்கைச்சிலையும் மிக முக்கியமானவை. 18 ஆம்
நூற்றாண்டில் கடல் வழி தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் மஹாபலிபுரத்தை ஏழு கோபுரங்கள் அல்லது ஏழு கோயில்கள் என்றே குறிப்பிட்டு அழைக்கின்றனர். இக்கோயில்களைக் கடல் கொண்டுபோய்
இருக்கலாம். 2004 டிசம்பரில் வந்த சுனாமி இயற்கைப்பேரழிவுக்குப்பின் வெகு மாற்றங்கள்
கடற்கரைக் கோவில்களில் பார்க்க முடிந்திருக்கிறது. வங்கக்கடல் அப்போது வெகு தூரம் உள் வாங்கியதால் பல கட்டிட இடிபாடுகளைக் கடற்கரை மக்கள் பார்த்ததாகச்சொல்வதையும் விட்டல்
ராவ் பதிவு செய்திருக்கிறார்.
மகாபலிபுரத்தில் உள்ள
பஞ்ச பாண்டவர் ரதச்சிற்பங்களைப்பற்றிக்குறிப்பிடும்போது தர்மராஜா ரதத்தைப்பற்றி
சிலாகித்துச்சொல்கிறார் ஆசிரியர். பொதுவாக பொதுமக்களை ரதத்தின் மேல் ஏறிப்பார்க்க அனுமதிப்பதில்லை.
சிறப்பாகத்தான் அனுமதி பெற்று ஆசிரியர் சென்றிருக்கிறார். தர்மராஜ ரதத்தின் மேற் பகுதியில்
இரண்டு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் சோமாஸ்கந்தரின் சித்தரிப்பு, குழந்தை வடிவத்தில்
முருகன். முருகனைப்பார்த்தபடி சிவனும் பார்வதியும்
இருக்கிறார்கள். இடது புறமும் வலது புறமும் பிரம்மாவும் விஷணுவும் இருக்கிறார்கள்.
புடைப்புச்சிற்பங்களுக்கு மேலே ’ஸ்ரீநரசிம்மா ’என்கிற கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. அர்ஜுனன்
பாசுபதம் பெறும் காட்சிச் சிற்பம் மிகச்சிறப்பானது. திருபுராந்தகச்சித்தரிப்புச் சிற்பம்
காண்போர் மனதைக் கொள்ளை கொள்வது. முண்டாசு
கட்டிக்கொண்டு எளிய தோற்றத்தில் ஒரு சிவன்
சிற்பம். காதில் குண்டலங்களோடு கையில் கழியொன்றை வைத்துக்கொண்டு அடியாரைப்பார்க்கும்
ஈசன், இப்படிச் சிற்பங்கள் பலவற்றைக்காணலாம்.
இரண்டாவது தளத்தில் கதையை ஊன்றிய துவாரபாலகர்கள், அடுத்து பக்தர் வடிவில் பல்லவ மன்னன்
தொடர்ந்து, அரச குடும்பம், கையில் மண்டையோடு வைத்திருக்கும் கபாலீசுரர் சிற்பம் என அற்புதச்சிலைகளைக்காணலாம்.
அடுத்து வரும் கட்டுரை சாளுக்கியர்களின் இரு கோயிற்கலை
மரபு என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. பாதமி
என்பது சாளுக்கியர்களின் தலைநகரம். வாதாபி என்பதுவே கால ஓட்டத்தில் பாதமி ஆயிற்று. சாளுக்கிய அரசர்களில் புகழ்பெற்றவன்
இரண்டாம் புலிகேசி. பதாமி குகைக்கோயில்கள் சிவப்பு நிற மணற்கற்களாலானவை. இவர்களின்
கட்டடக்கலை மரபு இரண்டு விதமானவை ஒன்று வடஇ ந்தியமரபு அது ‘நாகரமரபு ’ மற்றொன்று தென்னிந்தியாவினது’ திராவிட மரபு’. இவ்விடத்தில்
விட்டல் ராவ் ஒரு சிறிய விமர்சனத்தை சினத்தோடு சுட்டிச்செல்கிறார். நமது வெகு பழங்காலச்சொல்லான ’திராவிடம்’ என்கிற பதத்தை ஏதோ ஒரு ஆங்கிலேயன் வந்துதான் இங்கு ஆரம்பித்து வைத்தான் என்று யாரேனும் சொல்வார்களானால் அவர்களுக்கு
வரலாற்று அறிவு போதாது என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார். ஹியூவன் சாங் என்னும்
சீன யாத்ரீகன் தான் சாளுக்கிய நாட்டுக்கு
வருகை புரிந்ததைத் தன்னுடைய குறிப்புக்களில்
சொல்லியிருப்பதையும் வாசகனுக்குச் சொல்கிறார்
விட்டல் ராவ்.
இரண்டாம் புலிகேசி மக்லேந்திரவர்மனைத்தோற்கடித்துப் பல்லவச்சிற்பிகளையும் கலைஞர்களையும் பதாமிக்கு கூட்டிச்சென்று திராவிடப்பாணி
கோயில் கட்டுமானங்களையும் குகைக்கோயில்களையும் கட்டுவித்தான்.பதாமி மலையில் நான்கு
குகைக்கோயில்கள் உள்ளன. பல்லவ பாணியில் அமைக்கப்பட்ட சிவனும் திருமாலும் ஒன்றாகிய ஹரிஹரன் சிலை இங்கே
பிரசித்தி பெற்றது. பட்டதகல் கோயிலில் அமைந்திருக்கும் லஜ்ஜாகெளரி என்னும் சிற்பம் பெண்குறியைக் காட்டியபடி அமைந்திருக்கும். சில இடங்களில் ஆண்குறியோடு கூடியதாகவும் லஜ்ஜாகெளரி சிலை காணப்படும். விஜயநகரப்பேரரசு காலத்தில்
நிறைய பாலியல் உணர்த்தும் சிற்பங்கள் கோயில்களில்
தேர்களில் இடம்பெற்றன. இவை தமிழகத்துக்கும்விரிவடைந்தன. பட்டதகல் என்னும் ஊரின் பெயர், சாளுக்கிய மன்னர்கள் இந்த ஊருக்கு வந்து மட்டுமே ஒரு பெரிய
கல் மீது அமர்ந்து அரச முடிசூட்டுக்கொள்வதை
பழக்கமாகக்கொண்டதால் வந்தது என்பதையும் ஆசிரியர் தவறாமல் குறிப்பிடுகிறார்.
பதினைந்தாவது கட்டுரை எலிஃபண்டா குகைச் சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன.
எலிஃபண்டா தீவு மும்பை கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலுள்ள அபல்லோ பந்தரிலிருந்து பதினோரு
கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எலிஃபண்டா தீவின் புராதனப்பெயர் ‘கராபுரி’. இத் தீவின்
முனையில் யானைச்சிற்பம் ஒன்று நின்றதால் இத்தீவு எலிஃபண்டா தீவு என அழைக்கப்பட்டது.
அந்த யானையோ வெடிவைத்துத் தகற்கப்பட்டு விட்டது. இங்கு முத்தலை சிவனின் சிற்பம் புகழ்
பெற்றது. அது புகழ்பெற்ற தீன் மூர்த்தி சிலை
என்றழைக்கப்படுகிறது. துர்கைக்கான கோயில் ஒன்றும்
சிவனுக்கான கோயில் ஒன்றும் இங்கே இருப்பதைக்காண முடியும். சிவன் பார்வதி திருக்கல்யாணக்காட்சியைச்
சிற்பமாக வடித்திருப்பதையும் இங்கே பார்க்கலாம்.
அடுத்து மூன்று கட்டுரைகள் சுவர் ஓவியங்கள் பற்றிப்பேசுகின்றன.
கேரளாவில் வயநாட்டிலிருந்து 40 கிலோமீட்டர்
பயணித்தால் எடக்கல் மலைக்குகையை அடையலாம். இங்குள்ள மலையும் குகையும் மத்திய தொல் பொருள்
இலாகாவின் கட்டுப்பாட்டில் இருப்பவை. இங்கே
கூர்மையான கருவியைக்கொண்டே ஓவியங்கள் ஒத்த கீறல்களை ஆவணமாக செய்துவைத்துள்ளதைக் காணமுடியும். மத்தியப்பிரதேசத்தில்
பிம்பெட்கா மலைக்குகைகளில் பண்டைகால ஓவியங்கள்
காணப்படுகின்றன. மகாராஷ்ட்ரக் காடுகளில் உள்ளவை அஜந்தா குகை ஓவியங்கள். இவை அனைத்துமே
புத்தமதம் தொடர்பானவை. அஜந்தா ஓவியம் என்றாலே நினைவுக்கு வருவது ‘அப்சரஸ்’ என்னும்
தெய்வீக மங்கையின் ஓவியம். இது குகை எண் 17 ல் உள்ளது. மூக்கு உதடு இவைகளைத் தூக்கிக்காட்டும்
விதத்திலேயே இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. தஞ்சைப்பெருவுடையார் கோயில் ஓவியங்கள் அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரிய்ர் எஸ்
.கே கோவிந்தசாமி என்பவரால் வெளி உலகுக்குக் கொணரப்பட்டவை. பெருவுடையார் கோயில் பிரதட்சிணப்பாதையில் 15 அறைகள்
உள்ளன. இவைகளின் உள்ளே சோழர்கால ஓவியங்களும்
நாயக்கர் கால ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தியின் சித்தரிப்பு, சுந்தரர்
வெள்ளையானைமீதமர்ந்து கைலாயம் பயணித்தல், சிதம்பர நடராஜரை சோழ அரசர் வணங்குதல், கல்யாண
சுந்தரராய் சிவபெருமான், இராவணன் கயிலையைத் தூக்க முயற்சிக்கும் காட்சி, திருபுராந்தகர்
சினத்தோடு இருக்கும் காட்சி என்று தஞ்சை ஓவியங்கள் பெரும் புகழ் வாய்ந்தவை.
19 வது கட்டுரை திருபுவனச்சிற்பங்கள் என்னும் கட்டுரை.
விட்டல் ராவின் இனிய நண்பர் தேனுகா, நூல் ஆசிரியரை
சுவாமிமலைப்பகுதியில் 12 நாட்கள் தங்க வைத்துக் கும்பகோணம் நகரைச்சுற்றியுள்ள சிற்பக்கலைத்தலங்களைப்
பார்வையிட்டு வர உதவியிருக்கிறார். தஞ்சைப்பெருவுடையார் கோயில்,கங்கைகொண்டசோழபுரக்கோயில்,தாராசுரம்
ஐராவதீஸ்வரர் கோயில், மற்றும் திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் என்கிற பிரதான கோயில்
சிற்பங்கள் குறித்து இக்கட்டுரை இனிதே ஆய்கிறது. கம்பஹரேஸ்வரர் கோயில் இராமாயணச் சிற்பங்கள்
குறித்து விரிவான ஆய்வு இக்கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது.
5 அரசகுலங்களும் 3 சிற்பக்கோயில்களும் என்னும் அடுத்த கட்டுரையில்
சோழ அரசர்கள் கர்னாடக மண்ணில் எடுப்பித்த சிற்பங்கள் பற்றிப்பேசுகின்றன. பெங்களூருக்கு
60 கிலோமீட்டர் தொலைவில் நந்திமலைக்கு அடியிலுள்ள நந்தி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள்
பழமையான சைவக்கோயில் சோழ அரசர்களால் கட்டப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயில், போக
நந்தீஸ்வரர் கோயில், யோக நந்தீஸ்வரர் கோயில் என்று மூன்று சிறப்புப் பெற்ற கோயில்கள்
உள்ளன. கோலாரை அடுத்த முலபாகில் மத்வர்களுக்கான
மடம் உள்ளது. இங்கிருந்து சற்றுத் தொலைவில் குருடு மலை உள்ளது. கூடு மலையே பின்னர்
குருடு மலை என வழங்கலாயிற்று. சோழ மன்னனால் கட்டப்பட்ட சோமேசுரர் ஆலயம் இம்மலையில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள்
பழமையானது இத்திருக்கோயில்.
ஹொய்சாளர்களின் நுண் நுணுக்கச் சிற்பங்கள் என்னும் அடுத்த
கட்டுரை ஹாவேரி என்னும் ஊருக்கு நூலாசிரியர் தம் துணைவியாரோடு தேனிலவுலவுக்குச் சென்றதில்
ஆரம்பிக்கிறது. நூலாசிரியரின் தமக்கை அவ்வூரில் குப்பி வீரண்ணாவின் நாடகக்கம்பெனிமுகாமிட்டிருந்ததில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார். ஹொய்சாளர்கள் அமைத்த சித்தலிங்கேஸ்வரர் கோயில் இங்கே உள்ளது. ஹொய்சாளர்கள் சிற்பத்திற்கு ’சோப்
ஸ்டோன்ஸ்’ என்னும் சற்று மிருதுவான கருங்கல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 435 சிற்பக்கோயில்களை
ஹொய்சாளர்கள் அமைத்திருக்கிறார்கள். சுமார் 150 கோயில்களில் கல்வெட்டு குறிப்புகள்
உள்ளன. சிற்பிகளின் பெயர்கள் குறித்த விபரங்கள் ஹொய்சாளர்களின் கல்வெட்டுக்களிலிருந்து
பெறமுடிவது ஒரு அரிய விஷயமாகும். பிராகிருத மொழியில் ‘வோஜா’ என்றால் உபாத்யாயர். அதுவே
ஆச்சாரி என்று மற்ற மொழிகளுக்கு வந்ததையும் ஆசிரியர் சொல்கிறார்.’சரஸ்வதி கன தாசர்கள்’
என்றும் அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜன் கர்னாடகதேசத்துக்கு அடைக்கலமாக வந்து இங்கிருந்த ஹொய்சாள மன்னரை ஜைன
மதத்திலிருந்து வைணவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார். விஷ்ணுவர்த்தன் என்கிற பெயரை ராமானுஜரே
அவருக்கு வைத்தவர். ஹொய்சாளர் சிற்பக்கோயில்கள்
கர்நாடகத்தில் ஹாசன் மாவட்டத்தில் அனேகம்
உள்ளன.ஹளே பீடு, பேளூர் ஆகிய இடங்களில் புகழ் பெற்ற கோயில்கள் காணப்படுகின்றன. பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர்
கோயில் சிகரங்கள் கொண்ட அழகான கோயிலாகும்.
அடுத்து மூன்று கட்டுரைகள் விஜயநகரக் கலை குறித்துப்பேசுகின்றன. இன்றைய ஹம்பியே அந்த நாளைய
விஜயநகரம். பெர்ஷியத்தூதுவர் அப்துர் ரஜ்ஜாக்
இந்நகர் பற்றிச் சொல்லும்போது,’இந்த இடத்தைப்போல் இன்னொன்றைக்கண்கள் பர்த்ததில்லை,
இதற்கிணையான இன்னொரு இடத்தை உலகில் இருப்பதாய் என் செவிகள் கேட்டதுமில்லை’ என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய ஹம்பி என்பது கோயில்கள் அரண்மனைகள் மாளிகைகள் குளங்கள் இவைகளின் மிச்ச சொச்சங்களே ஆகும். விஜயநகரப்பேரரசில்
முக்கியமானவர் கிருஷ்ணதேவ ராயர். ஆமுக்த மால்யதா
என்னும் தெலுங்கு இலக்கிய நூலை எழுதியவர்.
ஹம்பியில் நுழைந்ததுமே நாம் காண்பது ஜைன பசதி என்னும் கலைக்கோயில். இது
சிற்ப ரூபக்கோயில்..அடுத்து நாம் காண்பது பீமனின் நுழைவாயில். தொடர்வது விருபாட்சர்
கோயில். சேதப்படுத்தப்படாத அழகுக்கோயில் இது. விருபாட்சர் கோயிலில் தலைவாசலில் காண்பது
நிர்வாணக்கோலத்தில் நிற்கும் பெண்ணின்
சுதையுருவம். தன் பெண் குறியை அகலத்திறந்து காட்டும் ஒரு வித, தாந்திரிகக் காட்சியாக அதனை நாம் காணலாம். ஹம்பி யாத்திரையைக் கோடைகாலத்தில் நாம் மேற்கொள்ளக்கூடாது. நவம்பர் டிசம்பர் ஜனவரியில்
மேற்கொள்வது சவுகரியமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.
விஜய விட்டலர் கோயிலின் ’கருங்கல் ரதம்’ குறித்து நல்ல விவரணையைத் தருகிறார்.
நாம் ஐம்பது ரூபாய் பச்சை நோட்டில் காணும்
கருங்கல் ரதம் நம் நினைவுக்கு வரலாம். இங்குள்ள அர்த்த மண்டபத்தில் இசைத்தூண்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணன் கோயிலும், ஹசாரா ராமர் கோயிலும் சிற்பக்கலையழகு
கொண்டவை. கிருஷ்ணன் கோயில் மகாமண்டபத்துத்
தூண்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்
அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. குதிரைத்தலையுடன் கூடிய கல்கி உருவம் அற்புதமானது. அர்த்த மண்டபத்தில் காதல்
சிற்பங்கள் சிறப்பானவை. அடுத்து சொல்லப்படுவது ’தாமரை மஹால்’ என்னும் ஹம்பியின் பெருமைபேசும்
அற்புதக் கட்டிடம். துங்கபத்திரை நதியிலிருந்து ஹம்பிக்கு உயரமான கால்வாய் வழியாகத்தண்ணீர்
கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனைப்பார்த்த டோமிங்கோ
பேயஸ் என்னும் போர்ச்சுகீசிய பயணி ஹம்பியை ரோம் நகரத்துக்கு ஒப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தாக உக்கிர நரசிம்மர் சிலை. 6.7 மீட்டர் உயரமானது. நரசிம்மருக்கு ஏழுதலை கொண்ட
நாகம் குடை பிடிக்கிறது. தொடைமீது இலக்குமியை இவர் கொண்டிருப்பதால் இவரை யோகநரசிம்மர் என்பதே சரி என்கிறார்கள். இசுலாமிய படையெடுப்பால் கண்டதுண்டமானது
நரசிம்மர் சிலை. 600 துண்டுகளாகச் சிதறிய சிலையை
கர்நாடக அரசின் தொல்லியல்துறையே நாகராஜ
ராவ் என்பவரின் தலைமையில் முயன்று மீண்டும் நிலை நிறுத்தியிருக்கிறது. அடுத்து லேபாக்ஷி என்னும் ஊர். அயோத்தி இராமன்
’சடாயு’ என்னும் கழுகைப் பார்த்து’
பறவையே எழுந்திரு’ என்றாராம்,அதுவே ‘லே பட்சி’
லேபாக்ஷியாய் ஆகியிருக்கிறது.
ராட்சஸ தங்கடி எனும் ஊரில் இசுலாமியப்படைகள் ஹம்பிக்கான
போரை இறுதியாய் நடத்தின. அவை வென்றன. ஹம்பி சூறையாடப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்டது.உடைக்கப்பட்டது.
தீயிடப்பட்டது. அழிக்கப்பட்டது. அந்தக்கால’
யுத்த தர்மம்” அதுவே என்கிறார் ஆசிரியர்.
இசுலாமியக்கலை என்னும் இரண்டு கட்டுரைகள் தொடர்ந்து வருகின்றன.
இசுலாமியக்கலை என்பது முக்கியமாய்ச் சங்கேதக்குறிகள் வாசகங்கள் கொண்டது. உருவங்களையோ அவற்றின் எவ்வித குறியீடுகளையோ கொண்டதன்று. உருவ
வழிபாடு இல்லாத காரணத்தால் இசுலாம் ஓவியம் சிற்பம் குறித்து எதுவும் சொல்வதில்லை. கலையுலகிற்கென்று இஸ்லாம் செய்திருக்கும் பெருங்காரியம் கட்டடக்கலை.
’காலிகிரஃபி’ என்னும் எழுத்துக்கள் முஸ்லிம்களால்
உயர்வாகக் கருதப்படுகிறது. ஜேட் என்பது உயர்தரக்கல் வகை. இதனை ஆபரணங்களில், கத்திகளுக்குக்
கைப்பிடியில், மூக்குப்பொடி டப்பி செய்வதில்,
மோதிரம், பூ ஜாடி, லோட்டா குவளை, பேலா, ஹூக்கா செய்வதில் உபயோகமாகிறது. மீனாகாரி எனாமல்
என்னும் கலை இஸ்லாமியர்க ளால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு
வந்திருக்கிறது. கி.பி 1367 ல் மன்சூரின் பேரன் ரஃபி என்பவரால்
கட்டப்பட்ட ஜாமி மசூதி இசுலாமியக் கலைப்பாணிக்கு
ஒரு எடுத்துக்காட்டு. ஐயாயிரம் பேர் ஒரே நேரத்தில் இதனுள்ளே தொழுகை செய்ய முடியும்.`
தக்காணக்கோட்டைகளில் முக்கியமானது கோல்கொண்டா. இதன் இளவரசன் குலிகுதுப் தன் காதலி பாக்மதியைச் சந்தித்த இடத்தில்தான்
’சார்மினார்’ கட்டப்பட்டுள்ளது.பாக்மதியை குலிகுதுப் மணந்தபிறகு அந்த இடம் பாக்நகர் என்று பெயரிடப்பட்டது.
பாக்மதியே பின்னர் ஹைதர் மஹல் ஆனாள். பாக்நகர் ஹைதராபாத் ஆனது. இந்த வரலாற்றையும் இங்கே சொல்கிறார்
விட்டல் ராவ்.
அடுத்துவரும் இரண்டு கட்டுரைகள் இந்திய ஐரோப்பியக் கலை பற்றிப்பேசுகின்றன. நவீன ஓவிய சிற்பக்கலையில் ’ரோகோகோ’ என்னும் வகைமை
ஃபிரான்சில் தொடங்கிச் சிறிதுகாலம் நடைபோட்டது.
எளிமைமிக்க அழகியலுக்கு ஆதரவு பெருகியது. பீங்கான் தங்கம் வெள்ளி வேலைப்பாடுகளில் ரோகோகோ
இணைந்துகொண்டது. இந்தியாவில் தவழும் கிருஷ்ணன், வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் போன்றவை ரோகோகோ கலையை வெளிப்படுத்தின.பிறகு
சலவைக்கல்லின் ஆளுமையைக் கலைத்துறையில் காணமுடிந்தது.
காலனிய சிற்பங்களில் கொண்டாடப்பட்டது விக்டோரியா மகா ராணியின்
சிலை. பம்பாயில் விக்டோரியா டெர்மினஸ் அந்த
ராணியின் புகழைப் பறைசாற்றியது. சென்னையில் அழகிய உலோகச் சிலை சர் தாமஸ் மன்றோ சிலை.
இன்றும் அது கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கிறது.
பெங்களூரில் கப்பன் பூங்காவில் ஏழாம் எட்வர்டின்
சிலையும் விக்டோரியாவின் சிலையும் புகழ் பெற்றவை.1901ல் விக்டோரியா மகாராணி ,காலமானபோது
அவருக்கு ஐம்பது சிலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டன. கர்நாடக நவாப் 1768ல் சேப்பாக்கம் அரண்மனையை இந்தோசாராசனிக் பாணியில் கட்டினார். இது பின்னர் பிரிட்டிஷார் வசமாயிற்று.
கல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் இருந்த பெரிய மைதானத்தில் பிரிட்டிஷ்ராஜின் தாஜ்மஹால் என்றழைக்கப்பட்ட ’விக்டோரியா
மெமோரியல் ஹால்’ என்னும் கட்டடம் உருவானது.
இதற்கு ராஜஸ்தானிலுள்ள மக்ரானா சலைவைக்கற்கள் தருவிக்கப்பட்டன. எண்பதனாயிரம் டன் சலவைக்கற்கள்
இந்த மஹாலுக்காக உபயோகப்படுத்தப்பட்டன. 1921 டிசம்பர் 28ல் வின்சர் கோமகன் வேல்ஸ் இள்வரசரால் இது திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவின் மாபெரும் சலவைக்கல் கட்டுமானம். இதனைக்கட்டி
முடிக்கவேண்டும் என்று பெரு முயற்சி செய்த கர்சன் பிரபு , லண்டனுக்குச்சென்றார் ஆனால் இந்தியாவுக்கு திரும்பவும் வந்து அதனை நேரில் பார்க்காமலே முடிந்து போனார் என்பது ஒரு வரலாற்றுச்சோகம். அவரது அழகுச் சிலை
மட்டும் மியூசியத்தின் வெளிப்பகுதியில் நின்றுகொண்டிருக்கிறது.
விட்டல் ராவின்
கலை ஆர்வம் வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. அவருடைய கலைப் பயணங்கள் திட்டமிடப்பட்டவை. எள்முனைகூட சலிக்காது ஒவ்வொரு
சிலையையும் ஓவியத்தையும் கட்டிடத்தையும் அவர்
கழுகுக்கண்கொண்டு பார்த்திருக்கிறார். மனைவி, மகள், உறவினர், நண்பர்கள் கலைப்பயணத்தில் அவருக்கு அத்தனை ஒத்தாசையாக இருந்திருக்கிறார்கள். அவர்கள்
அனைவருமே நம் நன்றிக்குரியவர்கள்.
-------------------------------------------------------------------------------------
சுற்றுசூழல் குறித்து அலட்டிக்கொள்ளாத உலகம்
‘சுத்தம் சோறு போடும்’ என்பது நம்மிடையே வழங்கும் பழமொழி. இப்பழமொழியின் பொருள் நம்மால் இன்னும் உணர்வு
பூர்வமாக கிரகித்துக் கொள்ளப்படவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக பொது நல அமைப்புக்கள் தோன்றியுள்ளன. சுற்றுப்புறத்தை எப்படித்தூய்மையாக
வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய கற்பித்தலை
அவை பிரதானமாய்ச் செய்து வருகின்றன.
சமூக பிரக்ஞை மேலோங்கிய சில நல்ல குடிமக்களின் செயல்பாடாக மட்டுமே அவை அங்கீகரிக்கப்படுகின்றன.
அறிவியலிலின் பங்களிப்பால்
முன்னேறிய நாடான அமெரிக்காவில் கலிஃபோர்னியா
மாநிலத்தில் அண்மையில் நான் பயணம் மேற்கொண்டேன். சாதாரணமாக அங்கு அனுசரிக்கப்படும்
சுத்தம் பற்றிய உணர்வு என்னைச் சிந்திக்க வைத்தது. வாகனங்கள் செல்லும் சாலைகளில் தூய்மையைக் காணும் போது பெருமிதமாக இருந்தது.
இப்படியும் சாலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது சாத்தியமா என்கிற ஆச்சரியம் என்னைக் கவ்விக்கொண்டது.
மழை நீர் செல்லும்
கால்வாயை பாலத்தின் அருகே இருந்து நோக்கினேன்.
அதனில் தண்ணீர் மட்டுமே சல சலத்துச் சென்று கொண்டிருந்தது. ஒரு சின்னக் கடுதாசி கூட
அநாவசியமாய் மிதந்து செல்வதைக் காண முடியவில்லை. அமெரிக்கர் ஒவ்வொருவரும்
ஒரு வளர்ப்பு நாயை தன்னோடு கூடவே அழைத்துசெல்கின்றனர்.
நம்மூர் சாலையில் அலைகின்ற நாய்களைப் போல்
அங்கே அவைகளைக்காண முடியாது. அமெரிக்கர்கள் வளர்க்கும் நாய்களின் கழிவுகள் வீதியில்
பிரத்யேகமாய் அமைக்கப்பட்ட கூடை அமைப்புக்களில் சேகரிக்கப்படுகின்றன. நீச்சல்குளங்களில் எப்போதும்
சுத்தமான தண்ணீர் நிரப்பப்படுகிறது.
நீச்சல் பழகுவதற்கு வருபவர்களின் ஆரோக்கியம் தெரிவு செய்யப்பட்டே தண்ணீரில் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.காய்கறிக்கடைகளும்
கனி விற்பனை செய்வோரும் மக்களின் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொள்வதை கண் எதிரே பார்க்கமுடியும்.
சுற்றுப்புறச்சூழல் பற்றி யோசிக்கும் வேளையில் சென்னையின் அடையாறும் கூவம் நதியும் பக்கிங்க்ஹாம்
கால்வாயும் மனத்திரையில் நிழலாக ஓடத்தான் செய்கின்றன. புற நகர் தொடர் வண்டியில் எக்மோரிலிருந்து பீச் செல்வதற்குள் நாம் சந்திக்கும் நீர்த்தடங்களில் எத்தனை மாசுகள் மலை மலையாய் குவிந்து கிடத்தலைப் பார்த்து இருக்கிறோம். வரலாற்றில்
புனித நதியாய் விளங்கியது சென்னையின்
கூவம் என்றால் இன்று யாராவது நம்புவார்களா?
மருத்துவக்கழிவுளை மொத்தமாய்ச் சுமந்து வரும் அடையாற்றிலிருந்து எழும் துர்நாற்றம்
சகிக்கத்தான் முடிகிறதா?. பள்ளிக்கரணை சதுப்பு
நிலக்காடுகள் அயல் நாட்டுப்பறவைகளின் அரிய சரணாலயமாய்
விளங்கிய பெருமை பெற்றது. இன்று காண்பதுவோ சதுப்பு
நீர் நிலைகளில் மலை மலையாய் குப்பைகளின் ஆக்கிரமிப்பு.
அண்மையில் சென்னையில்
வீசியது மிக்ஜாம் புயல். வெகுவாய் வெள்ளம்
சுமந்தது கொசஸ்தலை ஆறு. குப்பைகள் குன்றென ஆற்றில் மிதந்து சென்றன. திருவள்ளூர் நகர
பஞ்சாயத்துக்களில் வசிக்கும் மக்கள் குப்பை கொட்டும் இடமாக கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி
மாறிப்போயிருக்கிறது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று எண்ணூர் கோரமண்டல் உர ஆலையின்
அமோனியா கசிவு காற்றில் விடப்பட்டது.
அமோனியா வாயுக்கசிவால் மீனவர்கள் அல்லலுற்றனர்
. சதுப்பு நிலப் பறவைகள் கடல் வாழ் உயிர் இனங்கள்
சித்திரவதைக் குள்ளாயின. மீனவப் பெண்களும்
குழந்தைகளும் பட்ட அவஸ்தைகளை எண்ணிப்பார்ப்போம்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தமபோற் செயின் (குறள் 120)
இது ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நமது தமிழ் மண்ணின் வணிக அறம்.
அடுத்தவன் பொருளைத் தமது பொருளாய்ப்
போற்றுவதும் பேணுவதும் என்பதுவே அது. நுகர்வோர் இடத்தில் தன்னை வைத்து ஒரு வியாபாரி செயல்படவேண்டும். அத்தகைய மாண்புகளுக்கு
இன்று எங்கே போவது. வணிகக்கண்ணோட்டம் என்பது சுயலாபத்தை மட்டுமே கணக்கில் கொள்வது என்பதுவாய் காட்சி மாறிப்போயிருக்கிறது.
சென்னை வாசிகளில்
கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்கள் அங்கு காய்கறிகள் கனிகள் அழுகி
நாறும் துர் நாற்றத்தை அனுபவிக்காமல் திரும்ப முடியாது. வியாபார யுக்தியாய் கார்பைடு
கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைப்பதுவும், கனிகளின் மீது ரசாயனம் தடவி அவை
பளிச்சென்று நம் கண் முன்னே காட்சியாவதும் நாம் அறிந்திருப்போம்.
மதராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பிரதான சாலையில் வழக்கறிஞர்கள்
பதிவு அலுவலகம் முன்பாக எத்தனை அசுத்தங்கள்.
முகம் சுளிக்க வீசும் துர்நாற்றம்.
மெத்தப் படித்தவர்கள் இடையேதான் கூடுதல் சமூகப்பொறுப்பின்மை.
பொருளீட்டலும் சுயநலமும் மட்டுமே குருதியில் ஏற்றி, மதிப்பெண் அட்டையைக் கையில் கொடுத்து இன்றைய
கல்விக்கூடங்கள் பிள்ளைகளைச் சமுதாயத்துக்குப்
பிரஜைகள் என அனுப்பி வைக்கின்றன. மாறாக இந்திய விடுதலைக்கான தீவிர இயக்கங்கள் நடந்த
காலை தேசபிதா மகாத்மாவின் கட்டளையை ஏற்றுக் கல்விக்கூடங்களை விட்டு வெளியேறிய அன்றைய மாணவர்கள் வீதிக்கு வந்தனர். பிரிட்டீஷ்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப்போராடி சிறைக்கூடம் ஏகினர். அன்றைய காலத்தின் தேவை கருதி
நமது முன்னோர்கள் தம் வாழ்க்கையை தாய் நாட்டிற்காய் அர்ப்பணித்தனர்.
இன்றைக்கு நமது
ரயில் நிலையங்களும் பேருந்து நிலையங்களும் நாம் தூய்மையைப் பேணுவதில் எத்தனைக்கு அக்கறை
காட்டுகிறோம் என்பதை உலகுக்குப் பறை சாற்றுகின்றன. திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் சாயத்திரை
என்னும் தனது நாவலில் திருப்பூர் பகுதி நீர்த்தடங்கள் சாயப்பட்டறைக் கழிவுகளால் எப்படி
தமது சுத்தத்தைத்தொலைத்து நஞ்சாக மாறி ஊறு விளைவிக்கின்றன என்பதனைச் சொல்லியிருப்பார்.
நொய்யலாற்றின் சோகம் சொல்லில் அடங்காது. நொய்யல் கொணரும் நீரைக் கால்நடைகளும் அருந்தாது வயல்களுக்கும்
பாய்ச்ச முடியாது. 160 கிலோமீட்டர் ஓடும் ஆறு 152 கிலோ மீட்டருக்கு சாக்கடையாய்க்காட்சி
தருகிறது.
‘காவிரித் தென் பெண்ணைப்பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனை-நதி-என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு.’
என்றார் மகாகவி பாரதி. மேனி செழிக்கிறதா என்ன? இன்று காவிரியும் தென்பெண்ணையும்
பாலாறும் வைகையும் தாமிரபரணியும் எத்தனை வகை
வகையாய் குப்பை கூளங்களைச் சுமந்து செல்கின்றன. நதிகளைத் தாய்த்தெய்வமாக வழிபடும்
மரபு நமது. சரஸ்வதி, சிந்து ,கங்கை,பத்மா, நர்மதை, காவேரி, பொன்னி, வைகை, பெண்ணை எனப் பெண்குழந்தைகளுக்கு
நதிகளின் பெயர் வைத்து அழைப்பவர்கள் நாம்.
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதிI
நர்மதே சிந்து காவேரி
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு II
என்று சப்த (ஏழு)
கங்கைகளை அழைத்து வணங்கி மட்டுமே நீராடும்
பண்டை மரபு நமது. இறை தொழ நமது உடலும் உள்ளமும் அப்படித்தான் தூய்மையாயின.
பாலிதீன் பைகளை உபயோகிப்பதில் அனேக கட்டுப்பாடுகளைச் சில
ஆண்டுகள் முன்னே ஆட்சியாளர்கள் கொணர்ந்தார்கள். நெகிழிகள். அவை மண்ணில் மக்குவது அத்தனை
எளிதில் நிகழ்வதில்லை. கால்நடைகள் அவைகளை உணவென விழுங்கி அவதியுறுகின்றன. வானிலிருந்து
விழும் மழை நீர் பூமியின் அடி ஆழத்தைச் சென்றடைவதை
நெகிழிகள் தடுக்கின்றன. பூமியின் நீர் சேமிக்கும் அரிய குணாம்சத்தை அவை வெகுவாய்ப்
பாதிக்கத்தொடங்கின.
சில காலங்கள் முன்னே மஞ்சள் துணிப்பை உபயோகம் அரசாங்கத்தால்
வெகுவாக விளம்பரப்படுத்தப்பட்டது. மக்கள்
பாலிதீன் பைகள் உபயோகிக்காமல் இருப்பதைக் கவனமாகப் பின்பற்றத்தொடங்கினர். உணவுப்பொருட்களை மட்டுமா தேநீரையும் காபியையும் கூட பார்சலில் வழங்கிய உணவு நிறுவனங்கள், பாலிதீன் பைகள் உபயோகிப்பதை நிறுத்தின. மக்கள் தம்
வீட்டிலிருந்து பாத்திரங்களை டிபன் டப்பாக்களைக்
கொண்டு வந்து உணவகங்களில் பார்சல் உணவு வாங்கினார்கள். மளிகைக்கடைகள் பாலிதீன் பைகளை உபயோகிப்பதைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்தன.
மக்கள் துணிப்பையை எடுத்துக்கொண்டு சாமான்கள் வாங்க கடைத்தெருவுக்குப் போனார்கள். பேப்பர்
கப்புகள் தட்டுக்கள் பாக்கு மட்டைத்தட்டுக்கள்
என்பன அதிகமாக உபயோகத்திற்கு வந்தன. ஆரோக்கியமான சூழ்நிலை நோக்கிய நமது பயணம் துவங்கி விட்டதாக எண்ணத்தொடங்கினோம்.
யார் எதிர் பார்த்தார்கள், கொரானா என்னும் கொடிய உயிர்க்கொல்லி
( கோவிட் 19 )நோய் உலகெங்கும் பரவியது. மனித
நுரையீரலை கடுமையாக பாதிக்கும் வைரஸ்
SARS-CoV-2 அதற்குக் காரணமாகியது. கொரானாவால்
லட்சக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்பட்டன.
விண்ணில் தெரியும் நிலாவிலும் செவ்வாயிலும் மக்கள் குடியேறமுடியுமா என்பது பற்றி விவாதித்தவர்கள் நம்மிடையே உண்டு. ஆயின் கொரானா உயிர்கொல்லி கண்டு
இப்பூஉலகம் விழிபிதுங்கித் தவித்தது. மனிதக்கண்களால்
பார்க்கமுடியாத உயிரினம் மனத சமூகத்தை திக்குமுக்கு ஆட வைத்தது. இயற்கைக்கு என்ன கணக்கோ நாம் அறிய மாட்டோம். ஆயினும் தாவரங்களும் விலங்குகளும் பாதிப்பு ஏதுமின்றி உயிர்தப்பின. சீன தேசத்து உஹான்
உயிரியல் ஆய்வகத்திலிருந்து இது பரவியதாய்
சொல்லப்படுகிறது. வைரஸ் பாதித்த வவ்வாலைத்
தின்றது ஒரு சீனப் பாம்பு.அதனை உணவாக உட்கொண்ட சீன மனிதன் வழி உலகம் முழுவதும் அந்நோய் கடத்தப்பட்டதாகச்
சொல்கிறார்கள். உலகம் கொரானாவால் ஸ்தம்பித்துப்போயிற்று. கொரானா பாதித்த காலம் சற்றேரக்குறைய
மூன்றாண்டுகள். மனிதர்கள் தப்பிப் பிழைப்போமா மாட்டோமா என்று அஞ்சினார்கள்.
பாலிதீன் பை உபயோகம் கூடாது பற்றி எல்லாம்
எங்கே பிரச்சாரம் செய்வது.கொரானா சவங்களை பாலிதீன் பைகள் கொண்டே மூட்டை கட்டி
உலகெங்கும் அகற்றினார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் பாலிதீனும் பிளாஸ்டிக்கும்
கொண்ட கவசங்கள் அணிந்தே மருத்துவ சேவைகளைச்
செய்தார்கள். மனித உயிர்கள் கொரானா
அசுரனை விஞ்சி இவ்வுலகம் வாழுமா என்கிற அச்ச இருள் எங்கும் பரவியது. மனித குலத்தால் வாழ்தலின் அத்யாவசியம்
உணரப்பட்டது. மும்முரமாய் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகள் கொரானா தடுப்பூசிகளைக் கொண்டுவந்தன. உலகை கொரானா பாதிப்பிலிருந்து காப்பாற்றியதில்
நமது பாரத நாட்டின் பங்கு மகத்தானது. ஆகப்பெரிய செல்வந்த நாடுகள் தாம் வாழ்தலை மட்டுமே பிரதான இலக்காய் எடுத்துப்பணியாற்றின. மக்கள் தொகை
வெகுவாய்க்கொண்ட வளரும் நாடு இந்தியா. இந்தியத் திருநாட்டின் பெரிய மனம் உலக மக்களால்
உணரப்பெற்றது.’ வசு தெய்வ குடும்பகம்’ என்னும்
இந்தியாவின் மனித நேய விசுவாசம்
உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ பவர் கொண்ட
நாடுகள் தம் சுய நலத்தை மட்டுமே பிரதானப்படுத்திச் செயல் பட்டன. எங்கிருந்தாலும் மனிதகுலம்
ஒன்றே என்று இந்தியா தன் பங்கை ஆற்றியது. எப்படி
எல்லாமோ போராடினோம். மருத்துவப்பணியாளர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தார்கள். ஒரு வழியாய் கொரானா விடை பெற்றது. உலக அரங்கில்
மக்கள் தொகையில் இரண்டாவதாக இருந்த
நமது நாடு இந்தியா, சீனாவை விஞ்சி முதல்
இடத்திற்கு வந்திருக்கிறது. உயிர்க்கொல்லி
கொரானா அந்த அளவுக்கு சீனாவைப் பாதித்தும் இருக்கலாம்.
பூவுலகம் பருவநிலை
மாற்றத்தால் திணறத்தொடங்கியது.மண்ணில் உலாவும் மிருகங்களும், தாவர வகைகளும் வறட்சியை
உணரத்தொடங்கின. பூமியின் சராசரி வெப்பம் உயரத்தொடங்கியது. கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது.
அதன்காரணமாக இந்துமகா சமுத்திரத்தின் வெப்ப நிலையில் மாறுதல் உண்டானது. இது அதீத மழையையும்
அதீத வெப்பத்தையும் கொடுத்துப் புவியைக் கெடுத்து
வருவதைக்காண்கிறோம். இதனை எல்நினோவின் பாதிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
பூமியின் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்ந்தாலும்
அது ஆர்டிக் துருவப்பகுதிகளில் பனிமலைகளை உருகச்செய்துவிடும்.
பூவுலகின் தட்ப வெப்ப சூழலில் அது வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். பருவநிலை மாற்றம்
இந்தியத் திருநாட்டின் கடற்கரை ஒட்டிய நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தும் என்கிறார்கள்
விஞ்ஞானிகள். புவி வெப்ப மயமாதலைத் தடுக்க
அனல் வழி மின்சாரம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தி கடல் அலைகள், வீசும் காற்று, நீர்நிலைகள் இவைகளைப்பயன் படுத்தி மட்டுமே மின்சாரம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் வந்தாயிற்று.
மின்சாரம் தயாரிக்கும் டர்பைன்களை சுழற்ற நீர்
ஆவியைப்பயன்படுத்துகிறோம். அப்படி மின்சாரம்
உற்பத்தி செய்யும் ஆலைகளில் எரிபொருளாக நிலக்கரி
பயன் படுத்தப்படுகிறது. அணு உலைகளும் வெகுவாய் மின் சாரத்தைத் தயாரிக்கின்றன.அணு உலைகள்
வெளியிடும் வெப்பம், அணு உலைகள் வெளியிடும் கழிவுகள் ஆபத்தை விளைவிப்பவை. மின்சாரத்தின்
தேவை பன்மடங்கானதுவே இதற்கு அடிப்படைக்காரணம்.
மக்கள் தேவையை அனுசரித்துப் போக்குவரத்து சாதனங்களின் எண்ணிக்கைப்
பன் மடங்கு பெருகியது. அவை உபயோகிக்கும் பெட்ரோல் டீசல் இவற்றால் வெளியேறும் புகையில்
கார்பன் மோனாக்சைடு (CO) கார்பன் டை ஆக்சைடு CO2) போன்றவற்றின் அளவு கூடிக்கொண்டே போகிறது. உயிரினங்கள் சுவாசிக்கும் காற்று, உயிர் வளி ( o2) நஞ்சாகிறது. புவியின் வெப்ப நிலை
கூடிக்கொண்டே போகிறது.
உலகெங்கிலும் பொருட்களைப்
பாதுகாக்கும் குளிர் சாதனப்பெட்டிகளும், குளிர்சாத சாதனங்கள் பொறுத்தப்பட்ட அறைகளும் குளோரோ ஃப்ளுரோ கார்பன்கள் (CFC) எனும் வாயுவை வெளியிட்டு ஓசோன் என்னும் இயற்கைப் புவியரணை நாசப்படுத்துகின்றன. ஓசோன் அரண்
எனும் புவிக்காப்பில் அண்டார்டிகாவிற்கு நேர்
மேலாக ஓட்டை விழுந்திருக்கும் பேராபத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து
அறிவித்து இருக்கிறார்கள்.
புவி கூடுதலாய்
வெப்பம் அடையவே கூடாது. கரியமில வாயுக்கள் வெளிப்பாடு கட்டுப்படுத்தப்படவேண்டும்.
சாலைகளில் விரையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல் டீசல் பயன்பாட்டில் மிகக்கவனமாய் இருத்தல் வேண்டும். ஆகத்தான்
பாட்டரி கார்கள் சாலைகளில் ஓட ஆரம்பித்திருக்கின்றன. அவைகளின் உபயோகம்
கூடுதலாக ஊக்குவிக்கப்படவேண்டும்.
சமீபகாலமாக வீட்டுக்கு
வீடு சோலார் பாட்டரிகள் நிறுவப்பட்டு மின்சாரம் சூரிய சக்தியினின்று தயாரிக்கப்படுகிறது. இவ்வமைப்பிற்கு அரசாங்கமும் சில சலுகைகள்
வழங்கியிருக்கிறது. கார்களுக்கும் எலக்ட்ரிகல் ரீசார்ஜ் சூரிய சக்தியினின்று
கொடுக்கப்படவேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள் பாட்டரி மின்சாரத்தில் வெகுவாக இயங்கத்தொடங்கியுள்ளன.
புகை நச்சு வளிமண்டலத்தில் கலப்பதை அவை வெகுவாகக் குறைக்க உதவுகின்றன.
’புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’.
என்று உலகிற்கு நல்லது விழைந்தார் பாவேந்தர் பாரதிதாசன்.
ஆயின் யுத்தபேரிகை முழங்குவது எங்கே நின்றது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சூன்யாமாக்கும் போர், என்றேனும் சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தியது
உண்டா என்ன?நாடுகளுக்கு இடையே எழும் போர் முதலியவற்றால்
மனித உயிர்கள் லட்சக்கணக்கில் பலியாவது மட்டுமா நிகழ்கிறது. யுத்த களத்தில் துப்பாக்கிகளும்
டாங்குகளும் வெடிகுண்டுகளும் கிளப்பும் புகை நச்சு சொல்லி மாளாது. ஆண்டொன்றுக்கு மேலாய்
உக்ரைனுக்கும் ருஷ்யாவிற்கும் சண்டை, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் எப்போதும் முஸ்தீபு. இன்னும் எத்தனையோ அப்பாவி அழுகுரல்கள் உலகெங்கும் தொடர்கதையாகி நிற்கிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பெயரளவுக்கு மட்டுமே ஒரு அமைப்பாக இயங்க முடிகிறது. மனஞ்சிறுத்துப்போன அமெரிக்க ஐக்கிய நாடு (USA) தனக்கு யுத்த தளவாடங்கள் போணியானால் சரி என்று சொத்தை நியாயத்தைத்
தொடர்ந்து பேசிவருவது வேதனையான விஷயமாகும்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப்பிரச்சனையோடு, காசா முற்றுகை ஹமஸ் அமைப்புடன் சண்டை என ஓயாத துப்பாக்கி வெடிகுண்டுச்
சத்தங்கள் கேட்ட வண்ணமே உள்ளன. யாருக்கு யார் நியாயம் சொல்வது. சுற்றுச்சூழல் மாசு
கட்டுப்பாடு பற்றியெல்லாம் இந்த மக்களிடம் விவாதம் செய்ய சாத்தியப்படுமா. வவுனியாவில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சமாதி ஆனார்கள். சொச்ச இலங்கைத்தமிழர்கள்
உலகம் முழுவதும் அகதிகளாக இரண்டாம் பிரஜைகளாக
அங்கங்கே வாழ்ந்து வருகிறார்கள்.சொந்த மண்ணும் வீடும் நிலபுலனும் எங்கோ இருக்க அரை
வயிற்றுக்கஞ்சிக்காய் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று வயிற்றுப்பசிக்கு கூலி வேலை செய்கிறார்கள். மிச்சமாய் சிலவர் இலங்கையில். இலங்கையோ பொருளாதார கிடுக்கில் சிக்கிச் சீரழிகிறது. இவர்களிடம்
எல்லாம் போய் நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பருவநிலை மாற்ற ம் என்பது
எல்லாம் பற்றி விவாதிப்பது நேர்மையாகுமா?
ஆப்கானிஸ்தான்
ஒரு நாடு. இன்னும் ஆரோக்கியமான மக்கள் சமூகம் அங்கு ஸ்திரப்படவில்லை. ஆட்சியாளர்கள்
உலக அரங்கில் அங்கீகரிக்கப் படாதவர்களாக காலம் போய்க்கொண்டே இருக்கிறது. முன்னர் ரஷ்யா ஆப்கனை ஆக்கிரமித்தது.பின்னர் அமெரிக்கா ராணுவ முகாம் அமைத்தது. அதுவும் முகாமைக்காலி செய்தது.
இன்று கொம்பு முளைத்தவர்க:ள் தலையீடுகள் இல்லை. ஆனால் ஒரு ஜனநாயகச் சூழல் அங்கு மலரவில்லை.
அன்றாடம் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் அரங்கேறுகிறது. தலிபான்கள் அரசு நிர்வாகப் பொறுப்பு
எடுத்தார்கள். ஆப்கனிலிருந்து உலக நாடுகள்
அச்சத்துடன் சற்றுத்தள்ளியே நிற்கின்றன. வாழ்நிலையே கேள்விக்குறியாகி விட்டபோது சுற்றுச்சூழல் பற்றி
சிந்திக்க சாத்தியப்படுமா என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டங்கள் பருவ நிலை மாற்றங்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே
இருக்கிறது. கரியமில வாயு வெளிப்படுதலைக் கட்டுப்படுத்தும்
முயற்சிகளத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விவசாயம், கட்டுமானம், வனப்பராமரிப்பு
,தொழிற்சாலை போக்குவரத்து ஆகிய துறைகளில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பைத்
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை (UNO) சவலைக்குழந்தைதானே.
க்ரீன்ஹவுஸ் வாயுக்கள்( பசுமை இல்ல வாயுக்கள்) என்பன கார்பன்
டை ஆக்சைடு ( CO2),மீதேன்( CH4) , நைட்ரஸ்
ஆக்சைடு( N2O), செயற்கை ரசாயனங்கள். க்ரீன்ஹவுஸ்
என்பது கண்ணாடியால் ஆன வீடு. மோசமான வெப்ப தட்ப நிலையிலிருந்து தாவரங்களைக்
காப்பாற்றி வளர்க்க இவை நிறுவப்படுகின்றன. இவையே
தாம் பெற்ற வெப்பத்தை இருத்தி வைத்துக்கொள்கின்றன. பசுமை இல்ல வாயுக்களே புவி
வெப்பமாவதற்குப் பிரதான காரணிகள். இப்போதிருக்கும் வெப்ப நிலையில் 1.5 டிகிரி செல்ஷியஸ் புவியின் வெப்பம் இன்னும் கூடிப்போனால் சொல்லொணாத் துயரங்களை மக்கள் சமூகம் எதிர்கொள்ளவேண்டிய
சூழல் உருவாகும். அறிவியலாளர்கள் தொடர்ந்து இதனை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
செய்யவேண்டியவர்கள் புவி வெப்பம் குறைவதற்காய் உருப்படியாய் எதுவும் செய்யப்படவில்லை.
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடற்கரைக்கு யாத்திரை என்று
சென்று பார்த்தவர்கள் புனித நீராட வரும் மக்கள்
கடற்கரையை எவ்வளவு அசுத்தமாக்கியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். வட இந்திய யாத்திரைக்குச் செல்கிறவர்கள் கங்கைக்கரைகள்
எவ்வளவுக்கு அசுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன என்பதைப்பார்ப்பார்கள்.
பிளாஸ்டிக் கழிவுகள்
ஆற்றில் கொட்டப்பட்டு அவை கடலை அடைந்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்க்கையை சின்னா பின்ன
மாக்குகின்றன. சிறிய மீனிலிருந்து பெரிய திமிங்கிலம் வரை பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு
நோயுற்று மடிகின்றன. ஆண்டொன்றுக்கு எண்பது லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.மீன்களின்
வாழ்க்கைச் சக்கரத்தில் பிளாஸ்டி பேரிடி தரும் பெரிய விஷயமாகும். பிளாஸ்டிக்கை விழுங்கிய
மீன்களுக்கு ஏற்படும் அபாயம் மீன்களை உணவாகக்கொள்ளும் உட்கொள்ளும் மனிதர்களுக்கும் நீளும்தானே. பிளாஸ்டிக்
கழிவுகள் பவளப்பாறை உயிரினங்களை அழித்தொழித்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் கடல்சார்
விஞ்ஞானிகள். அரியவகை தாவரங்கள், கிளிஞ்சல் உயிரினங்கள் இவைகளின் இருப்பு கேள்விக்குறியாகி நிற்கிறது.
ஆண்டொன்றுக்கு
மூன்று டிரில்லியன் டாலர் ராணுவத்திற்குச் செலவு செய்கின்றன உலக நாடுகள். ஒரு டிரில்லியன் என்பதற்கு ஒன்று போட்டு
13 பூச்சியங்கள்.ராணுவச்செலவு குறைக்க முடியாததுவா. மனம்தான் செம்மையாகவில்லை. கணம் தோறும்
மாசுபடும் சுற்றுச்சூழல் குறித்து பருவ
நிலை மாற்றம் குறித்து இப்புவி அழியும் விளிம்பில்
இருப்பது குறித்து எவ்வளவு அக்கறையோடு ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது வேதனை.
-------------------------------------------
தொறகுனா இடுவண்டி சேவா.
ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் தலைப்பில் இசையையும்
இலக்கியத்தையும் பிசைந்து ஒரு எழுத்துப் படைப்பைக்கொண்டு வந்துள்ளார் ரவிசுப்ரமணியன்.
காலச்சுவடு பதிப்பகம் அப்புத்தகத்தை வெளியிட்டுப் பெருமை பெறுகிறது. இசையைத் ஆழத்தெரிந்து அதன் கலா பரிமாணங்களை முற்றாய் ஓர்ந்து
மோகமுள் புதினத்தில் தி.ஜானகிராமன் ரங்கண்ணாவைக்
கொண்டு வந்திருப்பார். மோகமுள் ரங்கண்ணா இசையின் தாளகதியைத் தன் குருதியில் எதிரொலிக்கக்
காண்பவர். தம்புராவை மீட்டுவது அவருக்கு ஆன்ம
சம்பாஷணை.சங்கீத ஞானமு பக்தி வினா என்பதற்கு சாட்சியமாய் நிற்கும் இலக்கிய பிம்பம்.
மோகமுள் ரங்கண்ணாவைத்தாண்டிய சமாச்சாரத்தை
இசைபயில் இலக்கிய மேதமையை இலக்கியப்படைப்பாளிகள்
வேறு யாரும் வாசகர்க்குப் பிரயத்திட்சமாக்கி உலவ விடவில்லை. இப்படைப்பில் ரவிசுப்ரமணியன் 13 கட்டுரைகளோடு இரண்டு
பின்னிணைப்புக்களையும் சேர்த்து 15 கட்டுரைகள் எனக்கொண்டு வந்துள்ளார். ஆசிரியரின்
உடன் பிறவாத்தங்கை காமாக்ஷி ஸ்வாமிநாதனுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் இக்கட்டுரைகள் பேசும் புதிய சக்தியில் வெளிவந்தவை. அவ்விதழின் ஆசிரியர்
ஜெயகாந்தன் சஹ்ருதயர் ரவிசுப்ரமணியத்தின் மேல்
வைத்துள்ள நம்பிக்கை மிகச்சரியானது என்பதனை வாசகன் வழிமொழிகிறான்.
என்னுரையில் ரவிசுப்ரமணியம்
இசையின் வல்லமை குறித்து இப்படிப்பேசுகிறார்.
‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளக்காதல்
கொண்ட நோயாளியாய்’ நீங்கள் அதைத் தொடர்கையில், முதலில் ரசிகனாக்கி, உணரவைத்து பின் விதிர்க்கவைத்து, மகிழ்ச்சி பரப்பி
பின் உங்களையே தனக்குப் பிரச்சாரகராகவும் ஆக்கிவிடுகின்ற வல்லமை இசைக்கு உண்டு’
இசைப்பேராசிரியர் திவாகர் சுப்ரமணியம் ‘தொகையறா’ என்னும்
தலைப்பிட்டு இந்நூலுக்கு ஒரு முன்னுரையைத்தந்துள்ளார்.
மாமேதை பீத்தோவன் இசையால் உலகத்தை மாற்றமுடியும் என்றார். அத்தகைய ஒரு சமுதாய மாற்றத்திற்கு
அணிவகுக்கும் படைப்புக்களில் இந்தக்கட்டுரைத்தொகுப்புக்கு இடமுண்டு என்கிறார் திவாகர்.
அ. முத்துலிங்கத்தின்
மார்க்கஹிந்தோளம் என்பது முதல் கட்டுரை. இது கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் 22.10.22 அன்று நடந்த அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்த
கட்டுரைத்தொகுப்பு வெளியீட்டு விழாவில் ரவிசுப்ரமணியனால் வாசிக்கப்பட்டது. இதனில் இசையை அனுபவிக்கத் தெரிந்து
எழுத்திலும் கொணர்பவர்கள் யார் யார் என்கிற
ஒரு பட்டியல் தருகிறார். சுவாமிநாத ஆத்ரேயன்,சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி,
கி. ராஜநாராயணன்,தி. ஜானகிராமன்,எஸ். வைத்தீஸ்வரன், கிருஷாங்கினி,ஆர். ராஜகோபாலன்,ஆனந்த்,
அபி, பிரம்மராஜன்,நா. விச்வநாதன்,ரெங்கநாயகி, லலிதாராம், சுகா, அருண்மொழிநங்கை. இசைப்பற்றித்தெரியாது
ஆனால் இசையை எப்படி அனுபவிப்பது என்பது தெரியும்
இப்படி ஒரு பட்டியலில் அ. முத்துலிங்கத்தை
ரவிசுப்ரமணியன் முன் நிறுத்துகிறார். முத்துலிங்கத்தின் ‘ரி’ என்னும்
ஒரு கதை. ஒரு தேர்ந்த கலைஞன் எதையெல்லாம்
எப்படியெல்லாம் புனைந்து கதைக்குள் அதனைக்கொண்டு
வருகிறான், வித்தை காண்பிக்கிறான், என்பதற்கு
இக்கதை ஒரு சான்று என்கிறார் ரவிசுப்ரமணியன். அ.முத்துலிங்கத்தின் ராகம் பற்றிய ஒரு விளக்கம் வாசனைக் கிரங்கச்செய்வதைத் தவறாமல்
சுட்டுகிறார்.’
‘இது மார்க்க ஹிந்தோளம். அடிமுடியைக்கண்டுபிடிக்க முடியாதபடிக்கு
ஓர் அபூர்வமான ராகம். ஆயுள் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த ராகத்தில் மறைந்துகிடக்கும்
சூட்சுமங்களை ஆழம் காணமுடியாது. எனக்குப் பிடித்தராகம்.’
றொறன்றோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்ட
ஒரு வேண்டுகோள்.அ. முத்துலிங்கம் அதற்கு ரவி சுப்ரமணியத்திடம் இப்படி ஒரு உதவி கேட்கிறார்.
‘ ஒரு நிமிடப்பாடல்
எழுதி மெட்டமைத்து பின்னணி இசை அமைத்து கடைசியில்
நிதி கேட்கும் கோரிக்கையாக வாய்ஸ் ஓவர் ஒருவர் தரவேண்டும்’
ரவி சுப்ரமணியம்
ஒத்துக்கொள்கிறார்.பாடல் எழுதி இசை அமைக்கிறார். பாரதிராஜா வாய்ஸ் ஓவர் குரல் கொடுக்கிறார். வெற்றிகரமாய் அந்தத்
திட்டம் உருப்பெறுகிறது. அ.முத்துலிங்கம் இப்படி ஒரு விபரத்தை மட்டும்தான் வெளியில்
சொல்கிறார். தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரவிசுப்ரமணியத்தின் பாடலும், பாரதிராஜாவின் கோரிக்கையும் வெளியிடப்படுவதற்கு
முன்பாகவே தேவைப்படுகின்ற டோலர்கள் தமிழன்பர்கள்
பலரிடமிருந்து வந்து குவிந்துவிடுகின்றன.
அ.முத்துலிங்கம் எண்ணியாங்கு தமிழ்
இருக்கை நிறுவப்படுகிறது. இவை அத்தனையும் முத்து
முத்தாய் இக்கட்டுரையில் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது.
’ தடமில்லாப் பாதைவழி பயணமேகிய கத்ரி கோபால்நாத்’ என்னும்
கட்டுரை அடுத்ததாய் வருகிறது. கத்ரி கோபால்நாத் சிகரம் தொடக்காரணமான ஒரு நிகழ்வைப்
பதிவு செய்கிறார் கட்டுரையாளர். இசைமேதை
டி. வி கோபாலகிருஷ்ணன் கோபால் நாத்தை சென்னைக்குக் கூட்டிவந்து மயிலாப்பூர்
முருடீஸ் ல் தங்கவைத்து ’இனி நீ என்கிட்டதான் இருக்கவேண்டும்’ என்று சொல்லி தனக்குத்தெரிந்த
எல்லா இசைக்கலை நுணுக்கங்களையும் சொல்லித்தந்திருக்கிறார்.
தரையில் அமர்ந்து கோபால் நாத் டி வி ஜி முன்பாக பத்துமணிநேரம்கூட அசுர சாதனை செய்தவர்
என்பதைப் பகிர்கிறார் ரவிசுப்ரமணியன். கற்கும் நேரத்தில் அவர் காட்டிய அந்த ஈடுபாடான
அர்ப்பணிப்புதான் பின்னாளைய அவரது எல்லாப் பரிமளிப்புக்கும் அடித்தளம் என்பதைச் சுட்டுகிறார்
கட்டுரையாளர்.
மூன்றாவது கட்டுரையாக வருகிறது தமிழ்+ அன்பு+ பதிப்பகம்=மீரா. கவிஞர் மீரா பற்றியும் அவரோடு ரவிசுப்ரமணியத்திற்கு
இருந்த தோழமை பற்றியும் அறிந்து நாம் துள்ளிக்குதிக்கலாம்.
அப்படிச்செல்கிறது அவ்விஷயங்களின் கோர்வை.
‘பின்னாளில் அந்தக்கவிஞரை நான் சந்திப்பேன் என்றோ, என்
முதலிரு கவிதைப்புத்தகங்களை அவரது அன்னம் பதிப்பகம் வழியாக அவர் வெளியிடுவார் என்றோ,
என்னைத்தம்பியாக ஏற்று என் விடுதியிலேயே எனது விருந்தினராக இரண்டு ஆண்டுகள் தங்கியிருப்பார்
என்றோ, எண்பதுகளின் தொடக்கத்தில் நான் வாசித்த அவரது கவிதைகளில் இரண்டு மெட்டமைக்கப்பட்டு
2019 இல் பாடலாய்ப் பதுவாகுமென்றோ அப்போது நான் நினைத்திருக்கவில்லை’
படித்துப் பரவசமாகி நிற்கிறோம்.
மீராவின் ‘ என்னை மீண்டும் இசைக்க வைத்துள்ளாய்’ ‘நீ தாமதிக்காதே’ என்கிற இரண்டு கவிதைகளுக்கும்
இசை அமைத்துள்ளார் ரவிசுப்ரமணியன். முதல் கவிதைக்கு ‘தேஷ் ராகத்தைத்தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தேஷ் ராகத்தைப்பற்றிய ஆசிரியரின் ஒரு விளக்கம் நம்மை அசைத்துப்பார்க்கிறது. தேஷ் -அது
மென்மையான ராகம் உணர்வுகளுக்கு ஏற்றது. தீன பாவத்திற்குப் பொருந்தி வருவது மெலங்க்கலியான
அனுபவத்தைக் கொணர்வது என்கிறார். ஒரு படி மேலே செல்கிறார்.’ வெல்லப்பாகை மேலிருந்து
ஊற்றினால் மடிந்து மடிந்து குழைவதுபோல் குழைகிற
ஒரு வடநாட்டு ராகம். மனசை உருக்கக்கூடிய ராகம்’
இப்படியாய் அழகு விளக்கம் வாசகனுக்குச் சொல்லப்படுகிறது. ’ துன்பம் நேர்கையில்
யாழெடுத்து நீ’ என்னும் பாரதிதாசனின் பாடலுக்கு தண்டபாணி தேசிகர் மெட்டமைத்துப்பாடியிருப்பார்.
அது தேஷ் ராகத்தில் பூத்தது என்று சொல்லிச்செல்கிறார்.
இரண்டாவதாக வரும் கவிதைக்கு கானடா ராகத்தைத் தேர்வு செய்துள்ளார்
ரவிசுப்ரமணியன். மீராவின் ‘ நீ தாமதிக்காதே’ கவிதையை மெட்டமைத்துப்பாடி அதனை இசை ஆர்வம்
உள்ள முந்நூறு நண்பர்களுக்குமேலாகவும் அனுப்பிவைக்கிறார்.
எழுத்தாளர் வண்ணதாசன் மட்டுமே இந்தப்பாடலுக்கு இந்த மெட்டு அமைத்துள்ளீர்கள் என்பதனைச்சரியா கண்டுபிடித்துச்சொல்கிறார்.
மாதவம்பட்டி சத்யன் மங்கையர் திலகம் படத்தில் பாடிய பாடலின் ராகமது என்கிறார் ஆசிரியர்.
நகுலனின் ஊர்ந்து செல்லும்நினைவு என்கிற கட்டுரை அடுத்ததாக
வருகிறது. இக்கட்டுரையில் வருகிறது இப்படி. நண்பர் தேனுகா
ஒருமுறை ‘நல்ல கவிஞனாக வரவேண்டுமா பெரிய
கவிஞனாக வரவேண்டுமா என்கிற கேள்வியை நூலாசிரியரிடம்
வைக்கிறார். ‘நான் வைரமுத்து மாதிரி’ பெரிய கவிஞனாக வரவேண்டும் என்கிறார் ரவிசுப்ரமணியன்.
அந்த சம்பாஷணை இப்படி நீள்கிறது ,
‘ சுத்தம். அந்தக்கசண்டெல்லாம் வேண்டாம்னுதான உங்கள நான்
திருப்பப்பாக்குறேன். அங்கயே போய் போய் நிக்கிறிங்க’
‘ஏன் அவர்ல்லாம் பொயட் இல்லியா சார்?’
‘அத காலமே சொல்லிடும். ஹீ ஈஸ் ய லிரிக் ரைட்டர் அவ்ளோதான்.அத
தாண்டி ஒரு மண்ணும் இல்ல’
நகுலனின் கவிதை ஒன்றைப் படிக்கத் தொடங்குகிறார் ரவிசுப்ரமணியன்.
‘ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும்யாருமில்லை
என்பதை
ஸ்டேஷன் இருந்தது
என்பதை
‘அது ஸ்டேஷன் இல்லை’
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் விடுவித்துக்கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது’
2007 ல் துவங்கி இதுவரை (ஆகஸ்ட் 2021) 85 கவிதைகளுக்கு
மேல் ரவிசுப்ரமணியன் மெட்டமைத்துள்ளார். முதன்
முதலில் மெட்டமைத்தது நகுலனின் கவிதைக்குத்தான்.
இசையோடு கூடிய பாடலாக அது பதிவாகுதல் மட்டும் கைகூடவில்லை. வருத்தப்படுகிறார் நூலாசிரியர்.
நகுலனின் இக்கவிதையோடு இந்தக்கட்டுரை முடிகிறது.
‘இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்’
நகுலன் இல்லாது தமிழ்க்கவிதை வெளிதான் எப்படிச்சாத்தியம்.
அடுத்து வரும் கட்டுரை ‘உணர்வுகளின் குரலொலியாய் உலவும் எஸ். பி.பி. அவரைத் ’தான்மையற்றவர் ’என்று குறிப்பிடுகிறார்
நூலாசிரியர். எதனிலும் தான் தான் என்று தன்னை
முன் நிறுத்திக்கொள்ளாதவர் என்பதால் தான்மையற்றவர்
என்கிற புது வார்த்தைப் பிரயோகத்தை நிறுவுகிறார். மெச்சத்தக்க வரிகள் எஸ்.பி.பி யின்
பெருமை பேசுகின்றன.
‘ எஸ் பி பி அவர்
இன்று இல்லை.ஆனால் அவர் குரல் நம் சந்ததிகள் வாழும் வரை வாழும்.கேட்டதும் சட்டெனக்
கடந்து வேறு வேலைகளில் ஈடுபட வைக்கிற ஒரு சராசரிக்குரல் இல்லை அது.நம்முள் ஊடுருவி
ஏதோ செய்துவிடுகிற குரல்.அது வெறும் குரல் மட்டுமா…? நூறு சதவிகித அர்ப்பணிப்போடு
,சங்கதிகள்,அஹாரங்கள்,சிட்டா ஸ்வரங்கள்,ப்ருகாக்களென உணர்ச்சிப்பெருக்கோடு, நம்மோடு
இருந்த பல தருணங்களின், குரல். ’என் உணர்வு உன் குரலில்’ என்று பல சமயம் நம்மை நெகிழவைத்த குரல். மகிழ்ச்சி,
காதல்,துள்ளல்,நையாண்டி,கழிவிரக்கம் பேச்சு,இருமல்,துயரம், காமம், உரையாடலெனப்பலவிதமான
பாவங்களோடு என் வாழ்வின் பல சமயங்களில் என்னோடு இருந்தது போலவே என் பிள்ளைகளோடும்என் பேரப்பிள்ளைகளோடும் இருக்கப்போகிற
குரல் அது. இதுதானே ஒரு கலைஞனின் உண்மையான
அசாத்திய வெற்றி. சரியான அர்த்தத்தில் அசல் கலைஞனாக வாழ்ந்தவனுக்கு ஒரு போதும் சாவு
இல்லை. அது வெந்ததைத்தின்று விதியின் கூற்றுக்குக் காத்திருந்து மாயும் பிரகிருதிகளுக்கு
மட்டுமே’
இவற்றை வாசிக்கின்ற வாசகனுக்கு பாரதியின் ‘தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி’ என்னும் கவிதை வரிகள் மனதில் நிழலாடவே செய்யும். எஸ். பி.பியின் வருகையை
‘ அரியவை எப்போதாவது நிகழும்’ என்று நெஞ்சம் திறக்கிறார் ரவிசுப்ரமணியன். இவற்றை எல்லாம் இருந்து கேட்க அவரை இயற்கை விட்டுவைக்கவில்லையே என்று வாசக மனம் ஏங்குகிறது.
’தமிழிசையே ஆதி இசையென நிறுவும் மம்மது’ என்னும் அடுத்த
கட்டுரை வேறு ஒரு புது செய்தியைச்சொல்கிறது.
‘ஸ்ருதி என்று இன்று நாம் அழைக்கும் சொல்லுக்குத்தூய தமிழ்
சொற்கள் இருபத்திரெண்டு உள்ளன.ஆனால் அத்தனையும் வீழ்த்தி ‘ஸ்ருதி’என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளதே! தமிழன்
எவ்வளவு ஏமாந்த சோணகிரி’ என்று மம்மது விசனத்தோடு
சொல்லும் போது, அது குறித்தும் அதன் பின்னுள்ள
மொழி அரசியல் குறித்தும் நாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை’ என்கிறார் ரவிசுப்ரமணியன்.
பாடித்திரிந்த பாடினிகள் என்னும் அடுத்து வரும் கட்டுரையில்
, தாம்பரம் கிருத்துவக்கல்லூரிப் பேராசிரியர் முனைவர். சு. சதாசிவம் 50 பெண்பாற்புலவர்களைப்
பெயர்களோடு கண்டடைந்து நிறுவுகிறார் என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது ‘சங்கப்பெண்பாற்புலவர்
வரலாறு’ என்னும் அவரது நூலில் வருகிறது என்பதை
அறிகிறோம்.
நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடுகள்,பற்கள்,தலை
இவை எட்டு உடல் உறுப்புகள். எடுத்தல், படுத்தல்,மெலிதல்,கம்பிதம்,குடிலம்,ஒலி, உருட்டு,
தாக்கு இவை எட்டும் முறையே அவற்றின் செயல்பாடுகள்.
இவை அனைத்தும் இசைந்து செயல்படுவதால்’ பண்’’ஆயிற்று, என்கிறார் அடியார்க்குநல்லார்.
இப்படியொரு காத்திரமான விளக்கம் இந்தக்கட்டுரையில் கிடைக்கிறது. அடியார்க்குநல்லார்
தமிழ்ப்பண்கள் மொத்தம் 11991 இருந்தன என்கிறார்.
அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளின் நிழலே இல்லாத ஒரு காலத்தில் இத்தனை அற்புதங்கள்
இம்மண்ணில் சாத்தியமாகி இருக்கிறது.
’காலத்தைத் தன் கலைக்குள் உறையவைத்த கலைஞன் இளையராஜா’ எனும் அடுத்த கட்டுரை ஆசிரியர் இசைஞானியை எப்படிப்புரிந்திருக்கிறார்
என்பதனைத் தெரிவிக்கிறது. இளையராஜாவை எல்லோரும் நன்றாகவே அறிவோம் என்றாலும் ரவிசுப்ரமணியத்தின்
எழுத்து வழி அறிதல் நம்மை நெகிழச்செய்கிறது. இதற்கு மேலுமா ஒரு கலைஞனை வாழ்த்திவிட
முடியும் என்று வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. ஜெயகாந்தன் திராவிட இயக்கத்திற்கு ஒவ்வாதவர்.
ஆனால் திராவிட இயக்கத்தினரால் கொண்டாடப்பட்டவர். எழுத்துக்கலை அவரைக் கொண்டு போய் அங்கே சேர்க்கிறது.
இளையராஜா ஆத்திகர். கடவுளை மறுத்த ஈ.வெ ரா
பெரியார் திரைப்படப் பாடலுக்கு இசை அமைக்க
ஒப்பாதவர். கோடிக்கணக்கான தமிழர்களை இசையால் வசப்படுத்தியவர்.அவர் கருத்தோடு முரண்படும்
தமிழர் உண்டு. ஆயின் அவரின் இசையைப் போற்றாத தமிழர் உண்டோ?
அற்ப, லெளகீக லாப நஷ்ட விஷயங்களின் வழியே , அதுவும் நமக்குத்தெரிந்த பாமர அளவீடுகளின் வழியே ஒரு தேர்ந்த கலைஞனை அளவிடுதல் சரியாகாது என்கிறார் ஆசிரியர்.
ஓசை உடைத்த கவிதைகளில் இசை என்னும் கட்டுரை பக்தி இலக்கியங்கள்
தமிழிசைக்கு அளித்த கொடை பற்றிப்பேசுகிறது.
உலக அளவிலும் கூட இந்தப் பங்களிப்பை வேறு எந்த மொழியிலும் காண்பதரிது என்கிறார் கட்டுரையாளர். புதுக்கவிதை
யுகம் வந்தது கவிஞர்கள் கவிதை தந்தார்கள்.இசையின்
பிரக்ஞை இல்லாத கவிதைகள் பிறந்தன. கவிதைக்கலைக்கும் இசைக்குமான தொடர்பு விட்டுப்போயிற்று.
இரண்டு கலையும் முகிழ்த்தலில் கிடைக்கும் அரும் பயன் வாராது போயிற்று. தமிழ் மொழி நஷ்டப்பட்டுப்போனது.
மணிக்கொடி எழுத்தாளர்கள் இந்தியவிடுதலைப்போரை மறந்து இலக்கியம்
படைத்தார்கள். அது ஒப்பவே சமகாலக் கவிஞர்கள்
இசையைப் புறந்தள்ளி கவிதை பொழிகிறார்கள். எது இவண் குறையோ அதனை லாகவமாய்ச் சுட்டுகிறார் ரவிசுப்ரமணியன்.
வள்ளலாரின் வானத்தின் மீது மயிலாடக்கண்டேன் ( மாண்ட்)
பாரதியின் சின்னஞ்சிறு
கிளியே
( காபி)
பாரதிதாசனின்
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ ( தேஷ்) இவையும் இவைபோன்ற பிறவும் இசையால் கவிதைக்குச்
சேர்ந்த சம்பத்து என்கிறார் நூலாசிரியர்.
அடுத்துவரும் கட்டுரை ‘மல்லாரி-நாத லயத்தின் வழியே ஒரு
வாசமாலை. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சந்நிதியிலேயே
பிறந்து வளர்ந்தவன் நான் என்கிறார் ஆசிரியர். ’கோயில் என்பது வெறும் மூலஸ்தான விக்ரஹத்தை
வணங்கி வழிபடும் ஒரு இடம் மட்டுமேயல்ல, இசை, கதை சொல்லும் கதாகாலட்சேபம்,பிரவச்சனம்,தமிழ்க்கல்வெட்டுகள்,நாட்டியம்,
ஓவியம் ,சிற்பம்,ஆடு மாடு பாம்பு பறவைகள் போன்ற
உயிரினங்கள், நந்தவனம்,ஸ்தல விருட்சம்,மூலிகைகள்,கேணிகள்,குளங்கள்,பூஜை சின்னங்களின்
வகைகள் தீப தூப வகைகள், பூ வாசனாதி திரவிய ஆடை அலங்கார வகைகள்,பாத்திர சமையல்வகைகள்,வான
சாஸ்திரம்,கட்டிடக்கலை,ஸப்ததாள படிக்கட்டு, இசைத்தூண்கள் என இப்படி நூறு நூறு கலாச்சார
சம்பத்துகள் நிறைந்த புனித இடம்’. கோயிலுக்கு
முன்னும் பின்னும் நிகழும் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு சூட்சுமத்தை நமக்குக்கொண்டு
தருகிறார் நூலாசிரியர். சிதம்பரம் நடராஜர்
திருக்கோயில் மல்லாரி வாசிப்பு பற்றி அரியதொரு
விளக்கம் இந்தக்கட்டுரையில் காண்கிறோம்.
’… முதல் நாள்
சங்கராபரணம் தொடங்கி, ரீதி கெளளை,
சக்கரவாகம்,ஹம்சபிரமரி, என நான்கு நாட்கள்
ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி
ஆறம் நாள் சண்முகப்பிரியா, ஏழாம் நாள்
காம்போதி, எட்டாம் நாள் ஒடக்கூறு எனும் தனி உருப்படி.
(தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற இந்த உடல் கூற்றின்
இரகசியத்தை பிட்சாடனர் உருக்கொண்டு சிவபெருமான்
பாடம் போதித்த உணர்வே ஒடக்கூறு. நாதநாமக்கிரியா ராகம் அன்று வாசிக்கப்படும்’
ஒன்பதா நாள் அன்று தேர் மல்லாரி
பத்தாம் நாள்
முத்துத்தாண்டவர் அம்பலவன் மீது பாடிய
பாடல்கள்.
பதினொன்றாம் நாள்
உசேனி வாசிக்கப்படும். உடன் விழா நிறைவெய்தும் என்று பட்டியல் தருகிறார்
ரவி சுப்ரமணியன். கேரளத்து செண்டை மேளம் இங்கே
வரலாம் அது நாகஸ்வரத்தின் இடத்தை ஆக்கிரமித்தல் அழகல்ல என்கிறார் கட்டுரையாளர்.
’பாமரர் மெட்டிலும்
பாடிய பாரதி’ என்னும் அடுத்து வரும் கட்டுரை
வாசகனைக் கிறங்கச்செய்துவிடும். பாரதி இசை அறிந்த தமிழ்க்கவிஞன்.’தமிழ்ழ்சபைகளிலே எப்போதும்
அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை
மீட்டும் மீ ட்டும் சொல்லுதல் நியாயமில்லை.அதனால் ,நமது ஜாதி சங்கீத ஞானத்தை
இழந்து போகத்தான் நேரும்’ என்று பாரதி நெஞ்சம் வருந்திச் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்
கட்டுரையாளர். பாரதியாருக்கு தியாகராஜ சுவாமிகள் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் மேல் மிகுந்த மரியாதை இருந்திருக்கிறது.
தியாகய்யரைப் பாரதி ரஸக்கடல் என்றழக்கிறார். தீட்சிதரின் கீர்த்தனைகள் கங்கா நதி. கம்பீரமானது என்கிறார் பாரதி. ஆயினும் பாமரர்க்குப்புரியும்படி தமிழில் பாடவேண்டும்
என்பதே பாரதியின் விருப்பமாக எப்போதும் இருந்தது.
‘எந்த ஜில்லாவுக்குப் போ,எந்த கிராமத்துக்குப் போ எந்த
வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால்,
திரும்பத்திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களையே வருஷக்கணக்கில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்’
என்று சாடுகிறார் பாரதி.
‘பொதுப்பள்ளிக்கூடத்திலே சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இது மற்ற நாகரீக தேசங்களிலே சாதாரணமாக நடந்து
வருகிறது. உயிரிலே பாதி சங்கீதம்’ இப்படிப் பாரதி
முத்தாய்ப்பாய்ச் சொல்வதை ரவிசுப்ரணியன் குறிப்பிட்டு
இக்கட்டுரையை முடிக்கிறார்.
தி.ஜானகிராமனின்’ நாத மோக உபாசனை’ என்னும் அடுத்த கட்டுரைக்கு
வருவோம். தி. ஜா வின் சிருஷ்டியில் ரங்கண்ணா என்னும்
மோகமுள் கதாபாத்திரம் இசையும் இலக்கியமுமாய்,
நாத பிந்துவாய் வாசகனுக்குத்தெரிகிறார். மோகமுள்
நாவல் நெடுகிலும் இசை ஒரு தோன்றாத் துணைவனாய் வாசகர்க்கு அனுபவமாதலை உணரமுடியும்.
‘பிராண பலம் வேணும் , மனோ பலம்,ஆத்ம பலம், எல்லாம் இருக்கணும்.
எல்லாத்துக்கும் சரீரம் வேணும். ஆனா இதுக்கு சரீரம் ரொம்ப ரொம்ப வேணும், டாப்பா ரொம்ப
வேணும்.பிராண சக்தி கண்ணுக்குத்தெரியாது. அதைத்தான் முரட்டுத்தனமா வளர்த்தாகணும். ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக்கடுக்கன்
வேணும் போலிருக்கும்,வர்ணம் வந்தா மயில்கண் வேஷ்டி, மல்லுச்சட்டை., கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும்.
அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும்.’ தி.ஜா வாசகனை அசரவைத்துவிடுவார்.
’மோகமுள்ளில் புரளும்
மொழியின் சரளம் அறுபதுகளில் சுழித்தோடிய காவேரி ஜலம். தன் பெருக்காத மார்பைப்பிடித்து
பிடித்து அடிக்கடி ரகசியமாய் வருடிப்பார்க்கிற ருதுவானவளின் கை போல இயல்பாய் வந்து
வந்து செல்லும் காமம். நம்முள்ளிருக்கும் கசடுகளை
நோக்கி நீளும் கேள்விகள் இயற்கையின் ஏகாந்தம்
என்று சொல்லித்தீருமோ மோகமுள்’ என்கிறார் கட்டுரையாளர்.
இப்புத்தகத்தின் பின் இணைப்பாக ரவி சுப்ரமணியனின் இரண்டு
நேர்காணல் கட்டுரைகள். ஒன்று சுவாமிநாத
ஆத்ரேயனுடன். தி.ஜானகிராமன் பற்றி அவர்
சுழித்தோடும் காவிரிபோல் பொங்கிப்பொங்கிப்பேசுகிறார்.
‘அவர் (.தி.ஜா)
வந்து சம்பாஷ்ணயையே சங்கீதமாக்கிப்புடுவார் எம்ட்டன் லயத்தையே சங்கீதமாக மாத்தி –சங்கீதமா, லயமா, பாவமா, வார்த்தையான்னு
தெரியாம ஒண்ணுக்கொன்னு, மலைத்தேனும் பசும்பாலும்
குடிக்கும் சூட்டில் கலந்தாற்போல, செய்ஞ்சு பதமா
தர வித்தை, அவர்கிட்ட குடிகொண்டிருந்தது’
கொஞ்சமாவது அகம்னு வச்சுக்கலைன்னா’ என்கிற தலைப்பில் நெய்வேலி
சந்தானகோபாலனுடன் அடுத்த ஒரு நேர்காணல். உங்களுக்கு ஒரு சான்று சந்தான கோபாலினின் பதிலிலிருந்து.
‘தியாகராஜ சுவாமிகள்லாம் பொறக்கறதுக்கு மின்னயே தமிழ் நாட்ல்
தமிழிசைதான் இருந்திருக்கு. அதைத்தான நம்ம முன்னோர்லாம் பாடிண்டு இருந்துருக்கா? சரபோஜி
வந்தப்புறம்தானே தெலுங்கு அவ்ளோ பிராபல்யம் ஆயிருக்கு……… தமிழிசைதான் முதல்ங்கிறதுல , மூத்ததுங்கறதுல இங்க யாருக்கும் அபிப்ராய பேதமில்லே!
ரவிசுப்ரமணியனின் இந்தப்புத்தகம் தமிழ் படைப்புலகம் ஆழ்ந்து
வாசிக்கவேண்டிய ஒன்று. வாசகர்களின் புரிதலை ஆழப்படுத்திட இத்தகைய புத்தகங்களின் வாசிப்பு
கட்டாயம் என்பதுவே என் பணிவான அபிப்ராயம்.
-----------------------------------------------------
விட்டல் ராவின்
தொலைபேசி நாட்கள்
சென்னைத்தொலைபேசியில் 35 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எழுத்தாளர் விட்டல் ராவ். தற்சமயம் பெங்களூரில்
வசித்து வருகிறார். தன்னுடைய பணிக்கால அனுபவங்களை சுவாரசியமானதொரு கட்டுரை நூலாக்கியிருக்கிறார்.
அம்ருதா இலக்கிய இதழில் தொடர்ந்து விட்டல் ராவால்
எழுதப்பட்ட 25 வார பங்களிப்பை அம்ருதா பதிப்பகம்’ தொலை பேசி நாட்கள் ‘என்னும்
ஒரு புத்தகமாய் வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது. விட்டல் ராவ் கலை இலக்கியம்
பற்றி ஆழமான புரிதல் உள்ள எழுத்துப் படைப்பாளி. பேசும் புதிய சக்தி இதழிலும் ஒவியம்
சிற்பம் கட்டிடக்கலைப் பற்றி விரிவான கட்டுரைத்தொடர்
ஒன்றை எழுதி வருகிறார்.
மேலட்டையில் பிரமாதமாக
விட்டல் ராவின் வண்ணப்புகைப்படத்தோடு இப்புத்தகத்தை அம்ருதா பதிப்பகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். சந்தியா நடராஜன் நல்லதொருஅணிந்துரை
வழ்ங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர் பாவண்ணன்’ இவர்தான் விட்டல் ராவ், நம்மாளு’ என்று
சொல்லி சந்தியாநடராஜனுக்கு அறிமுகப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார்.
‘எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலையோ தொழிலோ அமைவதில்லை.கிடைத்தவேலையில்
ஜீவித்துக்கொண்டு ஆன்மப்பசிக்குத்தீனி போடுகிறவர்கள் மிகச்சிலரே.அந்த மிகச்சிலரில்
விட்டல் ராவ் மேல்நிலைத் தகுதிக்குரியவர் என்பதில் எனக்கேதும் ஐயுறவு இல்லை.’ இப்படி ஆவணப்படுத்துகிறார் சந்தியாநடராஜன். தொலைபேசி
வரலாற்றைப் பேசிக்கொண்டே நேற்றைய சென்னையையும் அறிமுகப்படுத்திச் செல்கிறார் விட்டல்
ராவ் என்று சரியாகவே பதிவு செய்கிறார் சந்தியா நடராஜன்.
தன்னுடைய உரையை
’ஓர் உரை’ என்று புதிய தலைப்பிட்டு எழுதும்
விட்டல் ராவ் ‘ நீண்ட கால அன்புறவும்
பரஸ்பர அக்கறையும் கொண்ட எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான என் அருமைச்சகோதரி திருமதி
திலகவதி அவர்கள் விரும்பிக்கேட்டுக் கொண்டதற்கிணங்கி
’தொலைபேசி நாட்களை’ அம்ருதா இதழில் 25 மாதங்கள் தொடராக எழுதிமுடித்து வெளியிடச்செய்தேன்’
என்று செய்தி சொல்கிறார். இக்கட்டுரைகளில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை,எரிச்சல்,
எதிர்ப்பு,உவகை சாகசம்,வரலாறு என்று பல்வேறு சங்கதிகள் அடங்கியுள்ளன என்று விளக்கம்
தருகிறார்.
பாஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல்
1876 ல் டெலிபொனைக் கண்டுபிடித்தார்.. அது ஐந்தாண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது.
லண்டனைத்தலைமை இடமாகக்கொண்ட ஓரியண்டல் டெலிபோன் அண்ட் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற ஒரு
தனியார் நிறுவனத்தின் ஏஜண்டுகளான அர்புத்னாட் அண்டு கம்பெனியின் மேற்பார்வையில் சென்னையில் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது என்று ஆரம்பிக்கிறார் விட்டல் ராவ்.
தொலைபேசிநாட்கள் என்னும் முதற்கட்டுரையில் நடிகர் மேஜர்
சுந்தரராஜன் பற்றி விட்டல் ராவ் குறிப்பிடுகிறார். இவர் இந்தத்துறையில் டெலிபோன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர்.
திரையுலகில் பிரகாசித்த நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்னும் திரைப்படத்தில் நடித்துப்
புகழ்பெற்றார். அதிலிருந்து மேஜர் சுந்தரராஜன் ஆனார் என்கிற அரிய விஷயம் சொல்கிறார் விட்டல் ராவ்.
தொலைபேசித்துறையில்
பணியாற்றி இலக்கியத்துறையில் பிரகாசித்த பாவண்ணன் என்கிற பாஸ்கரன், சுப்ரபாரதிமணியன்,
எஸ்.சங்கரநாராயனன்,விட்டல்ராவ் எனும் விட்டல், ரா சேஷாத்ரி,ஜெயமோகன்,லதாராமகிருஷ்ணன்(ரிஷி)
இலந்தை.சு. ராமசாமி என்று தன் நினைவுக்குத்தெரிந்த பிரபலங்களை அடுக்கிச்செல்கிறார்.
பொதுமக்கள் பேசுவதற்கான செந்நிறக்கூண்டுகள்- பப்ளிக் கால்
ஆபிஸ் - நகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும்.அதனுள்ளாய் சில விஷமிகள் நுழைந்து தொலைபேசி
சேவையில் கிடைக்கும் இலவச எண்களோடு பேசுவார்கள்.
அடுத்தமுனையில் பெண் ஊழியர்கள் இருப்பார்கள்.
அவர்களோடு தேவையில்லாமல் பேசுவது விஷமிகளின் வாடிக்கையாகியிருந்தது. அவர்களை எப்படி
ஸ்விட்ச் ரூம் மெக்கானிக்குகள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தெரிவித்து தண்டனைக்குள்ளாக்கினார்கள்
என்பதனையும் விட்டல் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
எம் ஜி ஆர் அவர்கள் முதல்வராகப் பொறுப்பு ஏற்றபோது அவருக்குச்
சில மிரட்டல் கால்கள், அசிங்கமாகப் பேசும் கால்கள் வந்ததாகவும் அதன் மீது காவல்துறை
உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டதனையும் வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர்.
விட்டல்ராவ் நல்ல ஓவியர். தொலைபேசி இலாகா சார்பாக அகில இந்திய ஓவியப் போட்டி
ஹைதராபாத்தில் 1966 ல் நடைபெற்றதாகவும் அதனில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றதையும்
நமக்குச்சொல்கிறார். பின்னர் எழும்பூர் தினத்தந்தி அலுவலக மைதானத்தில் விட்டல் ராவ் நடத்திய ஒவியக்கண்காட்சியைப்பற்றி
அழகாகக் குறிப்பிடுகிறார். காட்சிக்கு வைத்த படங்கள் 22. அதனில் சில படங்கள் ஆண் பெண்
நிர்வாண நவீன ஓவியங்கள். தொலைபேசி ஊழியர்களில் பெரும்பான்மை ஆண் பெண்களுக்கு பெரிய
விஷயமாக,ஆர்வமூட்டுவதாக,அருவருப்பூட்டுவதாக,கிளர்ச்சிகரமாக,அசிங்கமானதாக,கிளிகிளுப்பூட்டுவதாக,
இந்த நவீன ஓவியங்களே இருந்தன என்பதை யதார்த்தமாகக்
குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.
சென்னைத்தொலைபேசியில்
பணியாற்றிய ரா. சேஷாத்ரி ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்.ஆனந்தவிகடனிலும் தினமணிகதிரிலும்
முத்திரைக் கதைகளையும் நட்சத்திரக்கதைகளையும் எழுதியிருப்பவர். இவர் இதே இலாகாவில் டைரக்டர் ஆஃப் விஜிலன்ஸ் உயர்பதவி
வகித்தவர் என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார். தொலைபேசி இலாகாவில் சென்னை மக்கள் தொடர்பு அதிகாரியாய் பணியில் இருந்த இலந்தை சு .இராமசாமி, அமுத சுரபி கலைமகள், கல்கி,
ஆகிய இதழ்களில் எழுதிப்புகழ்பெற்றவர் என்பதையும் சொல்லிச்செல்கிறார் விட்டல் ராவ்.
சென்னை தொலைபேசி இல்ல இதழ் டெலி நியூஸ் என்பது
அதனில் வெளியிடுவதற்காக தன்னை இலந்தை சு. இராமசாமி பேட்டி கண்டதையும் அப்போது எழுத்தாளர் சா.கந்தசாமி உடன் இருந்ததையும்
பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். தொலைபேசித்துறையில் எலக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்களை அறிமுகப்படுத்திய
தொழில்நுட்ப வல்லுநர் சாம்பிட்ரோடா பற்றி நிறைய செய்திகளை வாசகர்க்குச்சொல்கிறார்.
இந்தத் துறையில்
டெலிபோன் டயல் என்பது எப்படி வந்தது என்கிற சுவாரசியமான கதையை வாசகர்க்குச்சொல்கிறார்
விட்டல் ராவ். அமெரிக்காவில் கான்சாஸ் நகரில்
ஸ்டோவ்ஜர் என்பவர் சவப்பெட்டிகளை தனக்கு
வரும் ஆர்டர்களுக்கு சப்ளை செய்பவர். நம்பர் ப்ளீஸ் எக்சேஞ்கள் இயக்கத்தில் இருந்த போது அங்கு பணியாற்றிய பெண்கள் அடிக்கடி
’எங்கேஜ்டு எங்கேஜ்டு’ என்று சொல்லி ஸ்டோவ்ஜரை நோக அடித்து இருக்கிறார்கள். ஆக இதிலிருந்து
விடுபட 1891 ல் அவரே கண்டுபிடித்ததுதான் டயல். டயல் வந்த பிறகு
வேண்டும் தொலைபேசி எண்ணை அந்த அந்த வாடிக்கையாளரே
சுழற்றிக்கொள்ள முடியும். ஆப்ரேடர்களின் உதவி இல்லாமலே வாடிக்கையாளர் பேசி முடித்துவிடுவார்.
இதனைக்கண்டுபிடித்த ஸ்டோவ்ஜர் பெயராலேயே அந்த
எக்ஸ்சேஞ்சும் அழைக்கப்பட்டது.
சென்னை ஆலந்தூர் கடைத்தெருவில் மளிகைக்கடை வைத்திருந்த
சங்கரலிங்க நாடார்’ ஐயா நம்ம டயல சுத்தினா, அது அப்படியே நிக்கி’ என்று சொன்னதைத் தத்ரூபமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.
இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களே மனமுவந்து ஊழியர்களுக்கு கொடுத்த இனாம்’ பக்ஷீஸ்’ பின்னாளில் எப்படி கையூட்டாக
உருப்பெற்றது என்கிற கதையையும் வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர். ஊழியர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமைஆகி
அவஸ்தை பட்ட துன்ப வரலாறும் ஊடாகவே வந்துவிடுகிறது.
டெலிபோன் டைரக்டரிகள்
தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவதை
தமாஷாகச்சொல்கிறார் விட்டல் ராவ். அந்த ஊழியருக்கு ஆங்கிலம் தெரியவேண்டும், அவர் டை கட்டிக்கொள்ளவேண்டும். சென்னைத்தொலைபேசி டைரக்டரிகள் 1941ல் தி அசோசியேட்
பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. அச்சுப்பிழையின்மை,எழுத்துக்களின்
கூர்மை,சிறந்த வடிவமைப்பு எல்லாம் ஒருங்கே கொண்ட அச்சகமாக அது அந்நாளில் கொண்டாடப்பட்டது.
பிறகு ‘குமுதம்’ அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
அன்று குமுதத்திற்குரிய குனேகா செண்ட் வாசனையோடு
அந்த டைரக்டரிகள் விநியோகிக்கப்பட்டன.பிறகு டைரக்டரி தயாரிக்கும்பணி ‘யெல்லோ பேஜ்’
நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. பிறகு ஒரு காலத்தில் டைரக்டரி வழங்குவதே நின்றுபோனது
என்பதைக்குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.
மவுண்ட் ரோடில் அண்ணா சிலை இருக்குமிடத்திற்கு அருகில்
இருக்கும் வி ஜி பி காட்சிக்கூடம் பற்றிச்
சொல்கிறார். அங்கு நாற்காலி மேஜை வாங்கப்போகிறார் கதை சொல்லி. அந்தக்கடையில் ஒரு
விளம்பரம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.’ தவணை முறையில் நாங்கள்தான் இந்தியாவிலேயே முதன் முதலாக டிரான்சிஸ்டர் ரேடியோவை
நரிக்கிறவர்களுக்கு அளித்தோம்’. இன்று டிரான்சிஸ்டர் என்றால் வாழும் தலைமுறைக்கு அது என்னவென்றே தெரியாத சூழ்நிலையை அல்லவா காண்கிறோம். அறிவியலின் கொடையால் உலகம் எங்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறது.
கதை சொல்லி டெரிடோரியல் ஆர்மியில் பயிற்சிக்கு என கல்கத்தா
பயணமாகிறார். அங்கு விக்டோரியா மெமோரியல் மியூசியம் சென்று பார்க்கிறார். அங்குதான்
விட்டல் ராவ், பெயிண்டர்கள் டானியல்களின் ஓவிய
பிரிண்ட்கள் அடங்கிய காலரியைக் காண்கிறார். தமிழகக்கோட்டைகள், கோயில்கள்,மாளிகைகள்,
மகாபலிபுரக்காட்சிகள் என்று 1780ல் செய்திருக்கும்
வண்ண பதிப்போவியங்களை நோக்குகிறார். பின்னாளில் விட்டல் ராவ் தமிழகக்கோட்டைகள் என்னும்
நூல் எழுத இவ்விஷயமே காரணமாக அமைந்தது என்பதையும் வாசகனுக்குச் சொல்கிறார்.
தொழிற்சங்கம் என்னும் தலைப்பிட்ட கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது.
விட்டல் ராவ் தான் பணி ஓய்வு பெறும்வரை மே தின விழாவில் கலந்துகொண்டதை பெருமையோடு குறிப்பிடுகிறார்.
மே தின வரலாற்றையும் வாசகர்க்குச்சொல்கிறார். 1886 மே முதல்நாள் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட்
என்னும் இடத்தில் தொழிலாளர்கள் ’எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பு’ என்று கோஷமிட்டு
ஊர்வலம் செல்கின்றனர். கூட்டத்தைக் கலைக்க அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. பல
தொழிலாளர்கள் காயமுறுகிறார்கள். போராட்டத்திற்குத் தலைமையேற்ற ஜார்ஜ் எங்கெல்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ்,ஆல்பர்ட் பார்சன்ஸ்,சாமுவேல்
பில்டன், அடால்ஃப் ஃபிஷெர்ஸ் என்று ஐவர் தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர்.அவர்களின்
நினைவாகவே உலகெங்கும் மே தினம் கொண்டாடப்படுகிறது என்கிற மேதினச் செய்தியைச்சொல்கிறார் விட்டல்.
தொலைபேசித்துறையின் பலம் பொருந்திய தொழிற்சங்கமாக
NFPTE இருந்தது. அதிலிருந்து 1970ல் FNPTO
என்னும் ஒரு புதிய சங்கம் உருவானது. ஓம் பிரகாஷ் குப்தா என்னும் தலைவர் நீண்டகாலம் NFPTE அமைப்பில் பொறுப்பில் இருந்ததைச்சொல்கிறார்
விட்டல் ராவ். தமிழகத்தில் தொலைபேசித் தொழிற்சங்க இயக்கத்தில் மறக்கமுடியாத தலைவர்கள்
என்று,தோழர் ஞானையா,பிரேமநாதன்,முத்தியாலு,சந்திரசேகரன்,ஏ. கே வீரராகவன், சீனுவாச ராவ்,பாண்டுரெங்கன்,
ஏ. டி ருக்மணி,அப்துல் மஜித்,ஜே.ரங்கநாதன்,மற்றும் ஜெகன் ஆகியோரைக்குறிப்பிடுகிறார்.இடது
வலது இரு அணிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று ஜெகனை நேர்மையோடு குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.
தொழிலாளர்கள் வேலை
நிறுத்தம் செய்யும் போது அதனை எதிர்த்துச் சில தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் உண்டு.
அந்த கருங்காலி ஊழியர்களுக்கு நிர்வாகம் சிற்றுண்டி காபி மதிய உணவு ஏற்பாடு செய்து
வழங்கிய சிறுமையைக் குறிப்பிடுகிறார். இணைப்பக உயர் அதிகாரியே தன் கையால் ரொட்டியில்
வெண்ணெய் தடவி அவர்களுக்குத் தந்த அனாசார செயலையும் விடாமல் எழுதியிருக்கிறார். பொதுத்தொலைபேசி கூண்டுக்குள்
சென்று பணியில் இருக்கும் கருப்பு ஆடுகளை வண்டை வண்டையாகத்திட்டிய தீவிர தொழிற்சங்கப்
பற்றாளர்களையும் நமக்குக் காட்டிச்செல்கிறார் விட்டல் ராவ்.
1943 டிசம்பர் 12
அன்று இரவு ஜப்பானிய குண்டு வீச்சு சென்னையில் நிகழ்ந்ததைச் சித்திரமாய்த் தீட்டித்தருகிறார்
விட்டல் ராவ். வீசப்பட்டு சேதம் ஏற்படுத்திய ஜப்பானிய குண்டின் சிதறிய பாகம் ஒன்று
இன்றளவும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள, கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது
என்கிற வரலாற்றுச்செய்தியையும் வாசகன் அறிந்து கொள்கிறான்.
செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொலைபேசி அகத்தில் இருந்த ஆலமரங்கள்
செங்கல் முட்டுக்கள் அங்கு பிடிக்கப்பட்ட பாம்புகள் எல்லாம் பற்றிச் சுவாரசியமாக வாசகர்க்குச்சொல்கிறார்
நூல் ஆசிரியர். ருமால் பாவாடை ஆன கதை என்னும் கட்டுரையில் சில சுவாரசியமான செய்திகளை
நமக்குச்சொல்கிறார். ருமால் என்பது தலைப்பாகை. அதற்கு ஒண்ணரையடி நீளத்துக்கு வால் தொங்கும்.
இலாகா லைன் இன்ஸ்பெக்டர்கள் தலைக்கு ருமால் சுத்திக் கட்டிக்கொள்ளவேண்டும். ருமால் தனித்தனியே
இரண்டு நிறங்களினாலான கதர்த்துணியால் ஆனதாய்
இருக்கும். ஒன்று காக்கி மற்றொன்று இரத்தச்சிவப்பு, ஒரு ஊழியருக்கு இரண்டு ருமால்கள்
வழங்கப்படும். பொன்னுசாமி என்னும் ஊழியர் ருமால் தைப்பதற்கு ஒத்துக்கொண்டு அதனில் மீதமாகிய துணியை தொடர்பகத்திலுள்ள பதினைந்து பெண் ஊழியர்களுக்கு உள் பாவாடை தைக்க ஏற்பாடாகிய சுவாரசியமான செய்தி சொல்லப்படுகிறது.
அந்த உள் பாவாடைகள் தலையணை உறைகளாக மட்டுமே தைக்கப்பட்ட சோகத்தையும் வாசகன் அறிந்து கொள்கிறான்.
சடகோபன் என்னும் நேர்மையான ஊழியரை, லஞ்சம் கொடுத்தால் மறுக்கும்
நேர்மையான தொழிலாளியையும் அடையாளம் காட்டுகிறார் விட்டல் ராவ். அவருக்கு ‘சஞ்சார் ஸ்ரீ’ எனும் உயரிய விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறாது
என்பதனையும் இங்கே நாம் தெரிந்துகொள்கிறோம்.
எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னை
திரும்புகிறார். மொஹித்தே மைதானம் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. மக்கள் கடல் போல்
கூடி அவரை வரவேற்கிறார்கள். விட்டல் ராவின் கவலை எல்லாம் அவர் வருகைக்காக கொடுத்த அவசர தொலைபேசி இணைப்புகள் சரியாக
இயங்கி நம் பேர் சொல்லவேண்டுமே என்றுதான். மெய்யான தொழிலாளிக்கு உணர்வு அப்படித்தானே இருக்க முடியும்.
பேஜர் என்னும் செய்தி அனுப்பும் கருவியினையும் தொட்டுச்செல்கிறார்
விட்டல் ராவ். அதன் வழி ஒருவர் பேச முடியாது.
ஆனால் ஒரு பேஜரிலிருந்து அடுத்த பேஜருக்கு செய்தி
மட்டுமே அனுப்பலாம்.
தந்தி என்னும் வசதி உலக அரங்கில் மூடுவிழா கண்டதைப் பதிவு செய்கிறார். 1970 ல் தினமணி
கதிர் நடத்திய சிறுகதைப்போட்டியில் விட்டல் ராவ் முதற்பரிசு பெற்ற செய்தியை தந்தி மூலமே சாவி அவர்கள் அவருக்கு அனுப்பி வைத்ததையும் வாசகர்க்குச்சொல்கிறார்.
பின்னர் பாரத்
சன்சார் நிகம் லிமிடெட் என்கிற கார்ப்பரேட், BSNL
உதயமாகிறது.
ஓய்வூதியம் என்னவாகுமோ என்று கவலைப்பட்ட இலாகா ஊழியர்களுக்கு மய்ய அரசின் தொலைத் தொடர்புத்துறை
மூலம் அது அவர்களுக்கு பிரச்சனையே இல்லாமல் வழங்கப்படும் என்கிற நற்செய்தி,
தொழிற்சங்கப்போராட்டத்திற்குப்பிறகே
சாத்தியமானது என்பதனையும் வாசகர்க்குச்சொல்கிறார்
விட்டல்ராவ்.
இறுதியாய் ஒரு
சாம்ராஜ்யம் வீழ்ந்து போனது என்கிறார் விட்டல் ராவ். கனக்கும் இதயத்தோடு மட்டுமே இதனை எழுதுவதாய்க் குறிப்பிடுகிறார். இப்படைப்பில் இத்தனைச்செய்திகளையும் படித்து விட்ட வாசகன் நூலாசிரியரின் கழுகுக்கண்களுக்கு எதுவும்
தப்பவில்லை என்பதையும் வழி மொழிகிறான்.
-------------------------------------------
விட்டல் ராவின் ’மின்னற்பொழுதுகள்’ கட்டுரை நூல்
பேசும் புதிய சக்தி இதழில் வெளிவந்த கட்டுரைகள் அடங்கிய
நூல். பேசும் புதிய சக்தியின் திரு. ஜெ. ஜெயகாந்தன் இந்நூலை வெளியிட்டுள்ளார். பதினெட்டு கட்டுரைகள் இதனில் பளிச்சிடுகின்றன. ஆற்றல் மிகு எழுத்தாளுமைகள் பலருடன்
விட்டல் ராவ் கொண்ட தோழமையை வாசகர்கள் இங்கே தரிசிக்கலாம். இப்புத்தகத்தின் பதிப்புரையில் ஜெ. ஜெயகாந்தன் இப்படிக் குறிப்பிட்டுள்ளதை வாசகர்களாகிய நாமும் ஆமோதிக்கிறோம்.
‘எழுத்தாளர், சினிமா விமர்சகர், புகைப்படக்கலைஞர்,ஓவியர்
என்று பன்முகங்களைக்கொண்டவர் விட்டல் ராவ். ஒவ்வொரு அத்யாயத்திலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது நெருங்கிய நண்பர்களைப்பற்றியும் அவர்களுடன்
தனக்கும் தன்னுடைய இலக்கியத்திற்கும் அவருக்கும் அவர்களுடைய இலக்கியத்திற்குமான புரிதல்களையும்
முரண்களையும் நட்பு ரீதியான அணுகுமுறையுடன் அவருக்கேயுரிய எழுத்து வசீகரத்துடன் கட்டுரைகளாக
எழுதி வந்தார்’
மின்னற்பொழுதுகள் என்கிற இந்நூல் அமரர் சா. கந்தசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்லது.
இந்நூலுக்கு மின்னற்பொழுதுகள் என்று தலைப்பிட்டவர் மூத்த எழுத்தாளர் திரு. எஸ். சங்கரநாராயணன். அன்னாரின்
உழைப்புக்கு ஜெ. ஜெ நன்றி கூறுகிறார்.
விட்டல் ராவ் தன்னுடைய முன்னுரையில் தனது ஐம்பதாண்டு எழுத்தனுபவம்
இந்நூலுக்கு ஆதாரமாய் இருந்ததைக்குறிப்பிடுகிறார். ஒவ்வொரு எழுத்தாளரைப்பற்றியும் ஒரு
செய்தியை வாசகனுக்குச் சொல்லிப்போகிறார். அதுவே வெகு சுவாரசியமாக உள்ளது. .
சாவி- சுதந்திரமாக எழுத ஆரம்பம் முதலாகவே விட்டல் ராவுக்குப் பச்சைக்கொடி காட்டியவர்.
கோமல் சுவாமிநாதன் -
இலக்கியத்தில் அரசியலில் எதிரெதிர்
நிலைப்பாடுகளிலிருந்து இயங்கியவர்களுக்கெல்லாம் மேடை அமைத்துத் தந்தவர்.
பாவைசந்திரன் -
எழுத்தாளன் எனும் உறவுக்கு மேலே ஒரு நண்பன்.
அசோகமித்திரன் -
சக மனிதன் பேரில் அபரிமிதமான அபிமானம் உடையவர்.
சா. கந்தசாமி-
விட்டல் ராவ், மற்றும் சில இலக்கியவாதிகளோடு இணைந்து
பணியாற்றியவர்.
திலகவதி- விட்டல் ராவின் இளைய சகோதரியாய் அமைந்தவர்.
பாவண்ணன் – தன்னிடமிருக்கும் அறிவை ஞானத்தை தயங்காது மற்றவர்களுக்கும் தந்துதவும் அன்பு
மனிதர். உதாரண புருஷர்.
மா. அரங்கநாதன் -
தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களுள்
ஒருவர்.
வெங்கட் சாமிநாதன் – விட்டல் ராவின் மிகுந்த மரியாதைக்கும்
உயர்ந்த மதிப்பீட்டிற்கும் உரியவர்.
கலைஞன் மாசிலாமணி நர்மதா இராமலிங்கம்- பதிப்பாளர்களுள் விட்டல் ராவ் அன்பும் மரியாதையும் வைத்துள்ள இருவர். விட்டல் ராவுக்கு உடன் பிறவா சகோதரர்கள்.
ஏ. வி தனுஷ்கோடி- சிறந்த ஓவியர்- பன்முக ஆளுமை கொண்டவர். விட்டல் ராவின் நெருங்கிய நண்பர்.
தீபம் திருமலை-
நீண்ட கால நண்பர். திருமலையின் தீபம்
நாட்களை விட்டல் ராவால் மறக்கவே இயலாது
கோவை அருவி கலை இலக்கிய அமைப்பாளர்களின்- செயல்பாடுகள் வியப்பூட்டுவை
இந்நூலில் உள்ள பதினெட்டு கட்டுரைகளில் பதினைந்து பேசும்
புதிய சக்தியிலும். மூன்று அம்ருதாவிலும் வெளிவந்தவை.
விட்டல் ராவின் கட்டுரை நூலுக்குள்
இப்போது நுழையலாம்..
முதல் கட்டுரையின் தலைப்பு தேனுகா என்னும் அபூர்வராகம். தேனுகா பற்றித்தான்
விட்டல் ராவ் முன்னுரையில் குறிப்பிடாமல் விட்டிருந்தார். தேனுகா கும்பகோணத்துக்காரர். கர்நாடக இசையில் தேனுகா என்பது ஒரு ராகத்தின் பெயர். கும்பகோணம் ஸ்டேட் வங்கியில் காசாளரான சுவாமிநாதன்
தான் அந்த தேனுகா.
தீபம் திருமலை
தேனுகாவை விட்டல் ராவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். 1986ல் விட்டல் ராவ் தனது மனைவி
கமலா, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மகள் ஹரணி
இவர்களோடு கும்பகோணம் செல்கிறார். தேனுகா அவர்களை
இரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்றுத் தன் இல்லத்திற்கு அழைத்துச்செல்கிறார்.
கோபால் ராவ் லைப்ரரி,
காந்தி பூங்கா வெங்கட்ரமணா ஹோட்டல், சாரங்கபாணி கோவில் அருகில் இருக்கும் மாமி மெஸ்,
மாதவ அக்ரஹாரம்,, தாராசுரம் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க தேனுகா
இவர்களைக் கூட்டிச்செல்கிறார். விட்டல் ராவ் கும்பகோணத்துக் கரிச்சான் குஞ்சுவையும், எம். வி.
வெங்கட்ராமையும் காந்தி பூங்காவில் வைத்து
சந்திக்கிறார்.
இக்கட்டுரையில் ஒரு விஷயத்தை வாசகர்க்குச் சொல்கிறார் விட்டல் ராவ். தஞ்சை மண்ணின்
அசலான எழுத்து என்று யாரைச்சொல்லலாம் என்கிற
ஜெயந்தனின் கேள்விக்குப் பலர் தி. ஜானகிராமனை விடையாய்ச் சொல்கிறார்கள். விட்டல் ராவோ
தஞ்சை மண்ணின் அசலான எழுத்துக்கு இருவரைச் சுட்டுகிறார். ஒருவர் சா. கந்தசாமி, மற்றொருவர்
சி. எம் முத்து. அதற்கு விளக்கமும் தருகிறார், ’தி.ஜாவின் எழுத்து ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் நடையுடை மொழி வசனம்வாழ்வியல்
பற்றியது. அதுதான் தஞ்சை மண்ணின் அசல் எழுத்து என்பதை என்னால் ஏற்க முடியாது’ என்கிறார்
ராவ்.
பிறகு ஒரு முறை
1990 மார்ச்சு மாதம் தேனுகாவின் அழைப்பின்
பேரில் மீண்டும் கும்பகோணம் செல்கிறார். இம்முறை
விட்டல் ராவ் காசி லாட்ஜில் தங்குகிறார். ரவிசுப்ரமணியத்தோடு நட்பு கொள்கிறார்.
கோபால் ராவ் நூலகத்தில் வைத்து தஞ்சை பிரகாஷ்,
சி. எம். முத்து, கவிஞர் கிருஷாங்கினி,டாக்டர். இராமகுருநாதன், எம் வி வெங்கட்ராம்
கரிச்சான் குஞ்சு கலைக்கோ இவர்களோடு உரையாடுகிறார். டாக்டர். இராமகுருநாதன் விட்டல் ராவின் ‘ நதிமூலம்’ நாவலுக்கு ஒரு பாராட்டுக்கூட்டத்தை
நடத்தி முடிக்கிறார்.
தனது 64 வயதில் மறைந்துபோன தேனுகா பற்றிய குறிப்போடு சோகமாய்
முடிகிறது இக்கட்டுரை.
அடுத்து வருவது ‘ அன்பார்ந்த அசோகமித்திரன்’ என்னும் கட்டுரை.
சேலம் மகரிஷி விட்டல் ராவுக்கு நா. பார்த்தசாரதியை அறிமுகப்படுத்தினார். சேலத்தில்
மின்சாரம் வழங்கு அலுவலகத்தில் இருவரும் பணியாற்றி இருக்கிறார்கள். பிரதானமாய் சினிமா விஷயங்கள் விட்டல் ராவ் அசோக மித்திரன் இருவரையும் இணைத்திருக்கிறது. இருவரும் சென்னை வீதியில் சைக்கிள் ஓ ட்டுபவர்கள். அமெரிக்க நூலகத்திற்கு ஒன்றாய்ப்போய் வருபவர்கள்.
அசோகமித்திரனின் சைக்கிளில் கொலுவிருக்கும் எண்ணெய் விளக்கும் அதன் பச்சை சிவப்பு கண்ணாடிக்கதவுகளும்
பற்றிய சுவாரசியமான தகவல்கள் கட்டுரையில் வருகின்றன.
உஸ்மான் சாலையில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஒட்டிய
பிள்ளையார் கோவில் அருகில் செக்கச்செவேல்
நிறத்தில் இருந்த குடை ரிப்பேர்க்காரனிடம் இருவருமே குடை ரிப்பேருக்காய்ச்சென்று வந்திருக்கிறார்கள்.
‘இவனே’ என்றுதான்
எப்போதும் விட்டல் ராவை அசோகமித்திரன் விளிக்கிறார். சோவியத் கலாசார மையத்திற்குச்
சென்று ‘பொடெம்கின் யுத்தக்கப்பல்,’மதர்’ இவான் தி டெரிபுள்’ ‘ப்ளாக்சன்’ ஆகிய அரிய
திரைப்படங்களை இருவருமே பார்த்திருக்கிறார்கள்.
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் இருக்கும்
பாவேந்தர் இலக்கியப் பேரவைக்கு இருவரும் சென்று நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கிறார்கள்.
இந்தி நடிகர் திலீப்குமாரோடு அசோகமித்திரன் பழகியிருக்கிறார். தன் வசமிருந்த ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலை அவர் அசோகமித்திரனுக்கு வழங்கியிருக்கிறார்.
சாகித்ய அகாதெமி மாக்ஸ்முல்லர் பவனில் ஒரு மொழிபெயர்ப்புப்
பட்டறையை 90களின் தொடக்கத்தில் நடத்தியிருக்கிறது. பட்டறையின் இயக்குனராக அசோகமித்திரன்
இருந்திருக்கிறார். அது பத்து நாட்கள் நிகழ்வு.
திலீப்குமார்,ம.ந. ராமசாமி,திலகவதி, ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், மா. அரங்கநாதன் ஆகியோர்
இதனில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
மூன்றாவது கட்டுரை’ஒரு சாவியும் சில பூட்டுக்களும்’. இது
சாவி பற்றிப் பேசுகிறது. சாவி என்கிற சா. விசுவநாதன் ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராகப்பணி ஆற்றியவர். பிறகுதான் தினமணிக்கதிரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
விகடனுக்குப் போட்டியாகக் கதிரைக் கொண்டுவர சாவி பாடுபட்டார். ஜெயகாந்தன் கதைகள் அனைத்தையும்
முத்திரக்கதைகளாகவே சாவி வெளியிட்டார். விட்டல் ராவின் முதல் கதையே 1968 ஜனவரியில்
நட்சத்திரக்கதையாக வெளியானது. ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கோபுலுவின்
கோட்டோவியத்தோடு சாவி தினமணிக்கதிரில் வெளியிட்டார்.
இல்லஸ்டிரேடட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங்கை
முன் மாதிரியாக கொண்டு இதழ்ப் பணியில்
சாவி செயல்பட்டார்.
சாவியின் மகள் ஜெயாவுக்குத் திருமணம் நடக்கிறது. எம். எல். வி கச்சேரியோடு திருமண வரவேற்பு. சாவியின் மாப்பிள்ளை விமான விபத்தில்
காலமாகிறார். சாவியின் ஆற்றொணாத் துயரத்திற்கு ‘ஆறுதல் அளித்து ஆன்ம ஒத்தடம் கொடுத்த
ஒரே மனிதர் கலைஞர் கருணாநிதி என்பதையும் விட்டல் ராவ் பதிவு செய்கிறார்.
ஒரு வெளிநாட்டுப்பயணத்தில் சாவி இருந்தபோது தினமணிக்கதிரிலிருந்து
வெளியேற்றப்படுகிறார். கலைஞர் உதவியோடு சாவி ‘ குங்குமம்’ என்னும் புதிய இதழைக்கொண்டுவருகிறார்.’ வேறு பெயர்
அகப்படவில்லையா? எனக்கலைஞர் சிரித்துக்கொண்டே
கேட்டிருக்கிறார்.’ குங்குமம்’ பெண்கள்
விரும்புவது என்று சாவி விடை சொல்லியிருக்கிறார். 2001ல் அவரது சுயசரிதை வெளியீட்டுவிழா கலைஞர் கருணாநிதி
தலைமையில் நடக்கிறது. சாவி ஏற்புரையின் போது
மயங்கி விழுந்து மருத்துவ மனையில் முடிந்து போகிறார். அப்போது அவருக்கு வயது 85.
விட்டலும் கந்தசாமியும் என்பது அடுத்தக் கட்டுரை. சா. கந்தசாமியின்
கரடு முரடான ஆக்ருதிகளை அவரது ‘தக்கையின் மீது
நான்கு கண்கள்’ வாள், நிழல் பாய்ச்சல் ஆகிய சிறுகதைகளிலும், சூரிய வம்சம்,அவன் ஆனது
ஆகிய நாவல்களிலும் வாசகன் கண்டெடுத்துக் கொள்ளலாம். சொல்வதை விட சொல்லப்படாமல் விட்ட
கதைகளை அவர் படைத்திருப்பதை விட்டல் ராவ் அரிதும் அற்புதமும் என்கிறார். விட்டல் ராவின்
நதி மூலம் நாவல் குறித்துத் தக்கர் பாபா வித்யாலயத்தில் சா. கந்தசாமி
மிகக்கூர்மையானதொரு விமர்சனத்தைத் தந்ததாய்க் குறிப்பிடுகிறார்.
சா. கந்தசாமியின் குரோம்பேட்டை புது வீட்டு குடிபுகுவிழாவுக்கு
மா. அரங்கநாதனோடு சென்றதையும் யாழ்ப்பாணத்துத்
தென்னங்கன்று ஒன்றைப் பரிசுப்பொருளாய் கொடுக்க
எடுத்துச்சென்றதையும் நமக்குச் சொல்கிறார் விட்டல் ராவ்.டெல்லியில் சா. கந்தசாமியோடு குதூப்மினார்
கண்டதையும் அங்கு ஒரு குஜராத்தி உணவு விடுதியில் ஆளுக்கு ஒரு செம்பு மோர் வாங்கி சாப்பிட்டதையும்
நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்கிறார்.
குமரிமலர்க்காரர் என்னும் கட்டுரை யில் திரு. ஏ. கே செட்டியார் பற்றிய விஷயங்கள் வருகின்றன.
குமரி மலர் என்னும் இதழுக்குச் சொந்தக்காரரும் பதித்திரிகை ஆசிரியரும் உலகம் சுற்றும்
தமிழன் எழுதி அந்தப்பெயரைப் பட்டப்பெயராகச் சூட்டிக்கொண்ட திரு. ஏ. கருப்பண்ணச் செட்டியார்
பற்றி சுவாரசியமான பல விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ’தமிழ் நாடு’ என்னும்பயணக்கட்டுரைத்
தொகுப்பினைக் கொண்டு வந்தவர் ஏ. கே செட்டியார். அது கூறும் ஒரு செய்தி.’ இராயபுரம்
ரெயில்வே ஸ்டேஷன் தென்னிந்தியாவின் முதல் புகைவண்டி நிலையம். இந்த ஸ்டேஷன் கட்டடத்திற்கான கடகால் தோண்டு விழாவின் போது பாடப்பட்ட கும்மிப்பாடலும், டிராம் வண்டிக்கான ஒரு
விசேஷக் கும்மிப்பாடலும் ஏ. கே. செட்டியாரால்
பாடுபட்டுத் தேடிச் சேகரித்து இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.’
அடுத்த கட்டுரை ‘கலைஞன் மாசிலாமணி
சமூகம்’. லா. ச. ராவின் சிறுகதைத்தொகுப்பைத்தேடிக்கொண்டு பாண்டி பஜாரில் கலைஞன் பதிப்பகம்
போன விட்டல் ராவ் மாசிலாமணியைச் சந்திக்கிறார். 1933ல் தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டை
ஒட்டி கலைஞன் பதிப்பகம் 100 சிறுகதைகள் கொண்ட தொகுப்பை வெளியிடுகிறது. விட்டல் ராவ்தான் சிறுகதைகள் தேர்வுக்குப் பொறுப்பாக்கப்பட்டார்.
நர்மதா பதிப்பகம், இராமலிங்கம் மாசிலாமணியின் மைத்துனர். விட்டல் ராவின் வண்ணமுகங்கள்
நாவல் 1994ல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்றது.
அந்த நாவலை வெளியிட்டது நர்மதா. விட்டல் ராவின்
வாழ்வின் உன்னதங்கள் என்னும் கட்டுரைத் தொகுப்பு
2012ல் டெல்லி குசுமாஞ்சலி சாகித்ய
சம்மான் விருது பெற்றது. இதனையும் நர்மதா இராமலிங்கம்தான்
வெளியிட்டவர். கலைஞன் பதிப்பக வெள்ளி விழாவின்போது 1979-80 ல் தூறல் என்கிற விட்டல்
ராவின் நாவலை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. விட்டல் ராவின் தங்கையின் திருமணத்தின்
போது மாசிலாமணி நேரில் வருகை தந்து வாழ்த்தியவர். மாசிலாமணி அவர்கள் தனது எண்பது வயதில் காலமானார். எழுத்தாளர் ஜெயகாந்தன்
பெரிய மாலைபோட்டு அவரை வழியனுப்பி வைத்தார் என்கிற செய்தியும் சொல்லப்படுகிறது.
பாவண்ணன் சில நிகழ்வுகள்
சில அன்பர்கள் என்பது அடுத்த கட்டுரை. பாவண்ணன் எனும் பேனா பெயருக்குரிய பாஸ்கரன் பெங்களூருக்கு
வந்தது முதல் எனது உற்ற நண்பராய் உண்மையான வாசகராய் மிக அருகிலுள்ள முக்கியப் படைப்பாளியாய்
வாய்த்திருப்பது என் அதிருஷ்டம் என்கிறார் விட்டல் ராவ். பெங்களூரில் சேலம் விஜயனும் இளம் விஞ்ஞானி திருஞானசம்மந்தமும் விட்டல் ராவுக்கு
உற்ற துணையாய் விளங்குகிறார்கள். பாவண்ணனின்
நாவல் ‘பாய்மரக்கப்பல்’ மிகவும் குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு இலக்கியச்சிந்தனை பரிசு பெற்றது. இது புதுச்சேரியில் வாழ்ந்த மூன்று தலைமுறைகளைப் பற்றிப் பேசும் நாவல்.
பாவண்ணன் இயற்கையை அதன் அழகிய படைப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர் என்பது அவருடைய சில
கவிதைகளிலும் பல சிறுகதைகளிலும் தெரியவருகிறது என்கிறார் விட்டல் ராவ். பாவண்ணனுக்கு
இராமானுஜர், சங்கரர், பசவண்ணர் ஆகிய மூவரின் ஆன்மீகப்பங்களிப்பு பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. பாவண்ணனின் ஆட்டம்,ஜெயம்மா,சைக்கிள்,
கல்தொட்டி போன்ற சிறுகதைகள் உணர்ச்சி பொங்க படைக்கப்பட்டவை. கட்டுரைகளில் உச்சத்தைத்தொட்டவர் எழுத்தாளர் பாவண்ணன் என்கிறார் விட்டல் ராவ்.
திருமலை தீபம் பற்றிய கட்டுரை திருமலையின் தாராள மனசு பற்றிப் பேசுகிறது.’ தீபத்தில்
நான் நிறையவே எழுதினேன். மாதம் ஒரு சிறுகதை
குறுநாவல்கள் என ஏராளமாய் எழுதினேன்.’ வெப்பக்காற்று’ என்கிற தொடர் நாவலும் எழுதினேன்’ என்கிறார் விட்டல்.
1988 ஜனவரியில் உலகத்தமிழ் மாநாட்டுக்கு மலேஷியா
போய் வந்த நா. பா சென்னை வந்ததுமே மருத்துவ
மனையில் சேர்க்கப்படுகிறார். தனது ஐம்பத்து
நான்கு வயதில் நா. பா காலமாகிறார். மாசிலாமணி, இராமலிங்கம், இராம. கண்ணப்பன் ஆகியோரோடு
சென்று விட்டல் ராவ் நா. பாவுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன்,
வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, தொ மு சி ரகுநாதன், பி. எஸ். ராமையா, க. நா. சுப்பிரமணியம்
முதலிய இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடெமி
பரிசு கிடைக்கக் காரணமாக இருந்தவர் நா.பார்த்தசாரதிதான் என்று அசோகமித்திரன் குறிப்பிட்டதை
வாசகனுக்குச்சொல்கிறார் விட்டல் ராவ்.
நேர்மைக்குப் பெயர் பெற்றவரும்
உழைப்புக்கும் அலைச்சலுக்கும் அஞ்சாதவருமான தீபம் திருமலையின் அரிய குணங்களைப் போற்றிப் பேசுகிறார் விட்டல் ராவ்.
சகோதரி திலகவதி அவர்கள் என்கிற
தலைப்பிடப்பட்டது அடுத்த கட்டுரை. திரு இராமலிங்கம் இல்லத்தில் நடந்த எழுத்தாளர்கள்
கூட்டத்தில் மல்லிகையின் ஆசிரியர் இலங்கை டொமினிக். ஜீவா கலந்துகொள்கிறார். அந்தக்கூட்டத்தில்தான்
திலகவதியைச் சந்தித்துப் பேசுகிறார் விட்டல் ராவ். பின்னர் சைக்கிளிலேயே ஆதம்பாக்கத்திலிருந்து
போரூர் திலகவதியின் இல்லத்திற்குச் செல்கிறார்.
விட்டல் ராவின் இல்லத்திற்கு மகள் ஹரணி பிறந்தநாளன்று திலகவதி நேரில் வந்து வாழ்த்துகிறார். விட்டல் ராவ்
வசித்த தெருவுக்கு அடுத்த தெருவில் தி. க. சி
தன் மூத்த மகனோடு வசித்திருக்கிறார். தி.க.சி யை திலகவதி இல்லத்திற்கு விட்டல் ராவ் அழைத்துச்சென்றிருக்கிறார்.
விட்டல் ராவின் தங்கையின் திருமணத்திற்கு திலகவதி வந்து சிறப்பித்திருக்கிறார். திலகவதியின்
’நேசத்துணை’ நாவலை இந்தியா டுடேயில் விட்டல்
ராவ் விமர்சனம் செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி நடத்திய மொழிபெயர்ப்புப்பட்டறைகளில் இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.
‘ஆங்கிலம் நிச்சயம் இந்திய
மொழிகள் எதையும் அடித்துக் கொன்று விடாது, கொல்லவும் முடியாது. ஆங்கிலம் பிற பிராந்திய
மொழிகளைக்கொல்லும் என்பது விசாலமான பார்வையன்று. எந்த ஒரு மொழியும் மற்றொரு மொழியால்
அழிக்கப்பட்டு விடாது’ என்று சொல்கிறார் விட்டல் ராவ். திலகவதியின் ‘கல்மரம்’ சாகித்ய
அகாதெமி விருது பெற்றது. திலகவதியின் இதழ் ‘அம்ருதா’ வில் விட்டல் ராவ் நிறையவே எழுதியுள்ளார்.
அம்ருதாவுக்காக கணபதி ஸ்தபதியை திலகவதியும் விட்டலும் பேட்டி காண்கின்றனர். தமிழுடன்
சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருந்த கணபதி
ஸ்தபதியவர்கள் ’சமஸ்கிருத அறிவு கலைஞர்களுக்கு அவசிமென்கிறார்’ என்பதையும் விட்டல்
ராவ் பதிவு செய்கிறார். ஒவ்வொரு எழுத்தாளருக்கும்
முத்துக்கள் பத்து எனப் படைப்புக்களைத்தேர்ந்து வெளியிடும் திலகவதியை விட்டல் பாராட்டுகிறார்.
’கோவையில் ஒர் அருவி’ என்னும்
கட்டுரை கோவை நகரில் இலக்கிய சாகசங்கள் நிகழ்த்தும் அமைப்பு பற்றிப்பேசுகிறது. அருவியின் முக்கிய மனிதர்கள்
ஸ்ரீநிவாஸ், சூரி, சுரேஷ்குமார், ஆனந்த், ஞானவேல்
என அத்தனைபேரையும் பெருமையோடு விட்டல் நினைவு கூறுகிறார். தமிழகக்கோட்டைகள் பற்றியும் விட்டல் ராவ் இவ்வமைப்பில் உரையாற்றுகிறார். விட்டல்ராவ் அருவியின் சீனுவாசன் வீட்டில் தங்கியிருக்கச்செல்கிறார்.
அன்றிரவே சீனுவாசன் வாழ்வு முடிந்துபோனதை
நினைத்து நினைத்து வருந்துகிறார். 2016ல் அருவியில் ஒரு நிகழ்வுக்குப் பாவண்ணனோடு
மீண்டும் பயணம் செய்கிறார் விட்டல் ராவ்.
’எழுத்தில் சித்து’ மா. அரங்கநாதன் கட்டுரயை அடுத்ததாய்ப் பார்க்கலாம்.
விட்டல் ராவ் திருப்போரூருக்கு அரங்கநாதனோடு பேருந்தில் பயணிக்கிறார். அவர்களுக்கு
வந்த காசு கஷ்டம் பாருங்கள்.’ கோயில் வாசலில்
செருப்பு விடுவதற்கு இரண்டு மூன்று கடைகள். ஜோடி ஒன்றுக்கு இரண்டணா என அறிவிப்பு.
செருப்பை விட்டால் கையிருப்புக்காசு குறையும். செருப்பை விடாவிட்டால் கோயிலுக்குள் போக முடியாது.’ ’சரி வெளியிலிருந்தே
கோயிலைச் சுத்திடலாம்’ என்றார் அரங்கநாதன்.
மா. அரங்கநாதனின் ‘ பொருளின்
பொருள் கவிதை’ பற்றி வியந்து பேசுகிறார் விட்டல்
ராவ். அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும் சா.கந்தசாமியும் அக்கவிதைத் தொகுப்பைப் பாராட்டியிருக்கிறார்கள்
.’இவனே பிரமாதமா எழுதியிருக்கார். அவர் என்ன தமிழ் பண்டிட்டா?’ என்று அசோகமித்திரன் பேசியிருக்கிறார். க.நா. சுவை
விட்டல் ராவ் அரங்கநாதனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மா. அரங்கநாதன் ‘முன்றில்’
அமைப்பை ஏற்படுத்திப் பல கூட்டங்கள் நடத்தியவர்.
மா. அரங்கநாதனுக்குச் சாகித்ய அகாதெமி பரிசு
போன்ற விருது கெளரவம் அளிக்கப்படாதது
அது போன்ற நிறுவனங்களுக்கு கெளரவத்தையும் சிறப்பையும் பெருமையையும் சேர்க்காது என்று ஒரு கூரிய விமர்சனமே வைக்கிறார்
விட்டல் ராவ்.
அடுத்து தனுஷ்கோடியின் பன்முக
ஆளுமை என்னும் கட்டுரைக்கு வருகிறோம். வெளியுலகிற்குத்தெரியாமலே சுடர்விட்டுப் பிரகாசித்தவர்
திரு. ஆற்காடு வரதராசபிள்ளை தனுஷ்கோடி. மதராஸ்
ஆர்ட் கிளப்பின் ஓவியர் அதன் செயலர். நீர்
வண்ண ஓவியத்தில் நிபுணர். விட்டல் ராவ் அவர் உதவியோடுதான் அமெரிக்க நூலகத்தில் உறுப்பினரானார். தனுஷ்கோடி மேடை, அரங்கம்,நடிப்பு, நாடக இயக்கம் ஆகிய துறைகளில் பிரகாசித்தவர். மொழிபெயர்ப்புத்
திறன் மிக்கவர்.
தனது சினிமா அனுபவத்தில்
விட்டல் ராவுக்கு இருவர் கன்னத்தில் அறைவாங்கி உணர்ச்சியை வெளிப்படுத்தியது மனதில்
இன்றும் நிற்கிறது. ஒன்று சகஸ்ரநாமம் பத்மினியிடம்
அறைவாங்குவது படம் ‘ மண மகள்’. இரண்டாவது
ராஜபார்வை படத்தில் தனுஷ்கோடி கன்னத்தில்
அறை வாங்கினபோது காட்டும் முக பாவம்.
பதிமூன்றாவது கட்டுரை’ எல்லோருக்கும்
இனிய கோமல்’. கோமலின்’ கோடுகள் இல்லாத கோலம்’ நாடகத்தை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்ல் தன் மனைவியோடு விட்டல் ராவ் முதன் முதலில் பார்க்கிறார்.
அந்நிகழ்ச்சிக்கு அசோகமித்திரன், வைத்தீஸ்வரன்,லா.ச.ரா, தி.க.சி ஆகியோரும் வந்திருக்கிறார்கள்.
சுப மங்களா வை 1991ல் கோமலின் பொறுப்பில் வெளிவருகிறது.
ஸ்டான்லி க்ராமர், க்ளாட் மோனே ஆகிய நவீன ஓவியர்கள் குறித்துக் கோமல் கேட்டுக்கொண்டதற்கிணங்க
கட்டுரையைத்தந்தார் விட்டல் ராவ். கோமலுக்கு ஓவியத்தின் பால் இருந்த அபார ஞானம் விட்டலை பிரமிக்க வைக்கிறது.
விட்டல் குறித்து, கோமல்,
‘ஒரு மார்க்சிய தொழிறசங்கவாதியாக
இருந்து கொண்டும் உங்கள் இடது சாரி மனதை உங்கள்
எழுத்து வாயிலாகப் பார்க்க முடியவில்லை’ என்று சொன்னதை நாமும் ஆமோதிக்கிறோம்.
புதியபார்வையும் பாவையும்
என்னும் கட்டுரை பதினான்காவது கட்டுரை. இதனில் பாவைசந்திரனைப்பற்றிப் பேசுகிறார் விட்டல்
ராவ். சாவி குங்குமத்தைவிட்டுச்செல்கையில் பாவைசந்திரனை அடையாளம் காட்டிவிட்டுச் செல்கிறார்.
பாவை பொறுப்பாசிரியராக இயங்கிய குங்குமத்தில்
விட்டல் ராவின் கதைகள் நிறையவே வெளிவந்தன., 1992ல் துவங்கப்பட்ட புதியபார்வைக்கு
பாவை இணை ஆசிரியரானார். தாஜ்கொரமண்டலில் வைத்து திரு. நடராஜனால் இதழ் ஆரம்பிக்கப்ப்ட்டது.
கோமல்,பாவைசந்திரன், சா.கந்தசாமி,செ.யோகநாதன், கலைஞன் மாசிலாமணி, ஞானி, பாரதிராஜா,சுஜாதா,
விக்கிரமன் வைரமுத்து, இந்துமதி ஆகியோர் விழாவுக்கு வந்திருந்தனர். வாழ்த்தினர். புதியபார்வையின்
பெண்கள் சிறப்பிதழ், பம்பாய் சிறப்பிதழ் ஒரிசா
சிறப்பிதழ் ஆகியன புகழ்பெற்றவை.
மற்றொரு கோட்டை என்கிற அடுத்த
கட்டுரையில் சரித்திரப் பேராசிரியர் வெங்கணாச்சார் பற்றியும் சித்திரதுர்கம் கோட்டைபற்றியும் விஷயங்கள்
வருகின்றன. தொடர்ந்து வரும் கட்டுரை ‘இறந்து போனதாக’. விட்டல் ராவ்
என்னும் அதே பெயர் கொண்ட வேறு ஒருவர் தொலைபேசித் துறையில் பணியாற்றுபவர் இறந்து போக, இவர்தான் இறந்துவிட்டார் என்று தவறுதலாக
எண்ணிவிட்டதன் விளைவுகள் பற்றிய செய்தி வருகிறது.
முகம் என்னும் கட்டுரை ஐம்பத்து
மூன்று ஆண்டுகளுக்குப்பின் சேலத்துச் சண்முக
சுந்தரம் என்னும் நண்பரைச் சந்தித்த அனுபவம் பற்றிப்பேசுகிறது. இந்தக்கட்டுரையில் வரும்
மத நல்லிணக்க முன்னோடி ஃப்ராங்க்ளின் ஆசாத்
காந்தி என்னும் நபரை அறிமுகப்படுத்துகிறார் விட்டல் ராவ். இத்தொகுப்பில் வரும் கடைசிக் கட்டுரை மகரிஷி நினைவுகள். விட்டல் ராவோடு சேலத்தில் மின்சாரம் வழங்கு கம்பெனியில்
பணியாற்றிய ந்ண்பர் பற்றியது. மகரிஷியின் நாவல் ‘பனி மலை’ கே.எஸ். கோபாலகிருஷ்ணனால்
திரைப்படமாக்கப்பட்டது. மகரிஷிக்கு இந்த விஷயமே தெரியாது. நான் நீதிமன்றம் போவேன் என்று கே.எஸ். ஜி யிடம் மகரிஷி முறையிட
அவர் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
மகரிஷிக்கு உரிய பணமும் தந்தார்.
தீபம் நா.பாவுக்கும், கல்கி
கி. ராஜேந்திரனுக்கும் விட்டல் ராவை அறிமுகப்படுத்தியவர்
மகரிஷி. எழுத்தாளர் பாவண்ணனே மகரிஷி தனது
87 வயதில் இயற்கை எய்தியச் செய்தியை விட்டல்
ராவுக்குத் தெரிவிக்கிறார்.
விட்டல்ராவ் என்னும் இலக்கிய ஆளுமையின் ஆழமும் விசாலமும் அறிய நாம் வாசிக்கவேண்டிய ஒரு அரிய நூல் இது ’மின்னற் பொழுதுகள்’
----------------------------------------------------------------------------.
இந்திய வரலாற்றைப்
புரட்டிப்போட்ட மாமனிதர் ஜே .பி.
சுதன்ஷு ரஞ்சன் என்னும் ஒரு பத்திரிகையாளர் சமூகப் பொறுப்பாளி ஆங்கிலத்தில் எழுதிய Jayaprakash Narayan –Prophet of
Peoples Power என்னும் நூலை சமீபத்தில் படித்தேன்.
நேஷ்னல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியிட்ட புத்தகம். 2002 ல்
முதற்பதிப்பு கண்ட படைப்பு. 295 பக்கங்கள். வாசகனை உள்ளே அனுமதிக்கும் நேர்த்தியான ஆங்கிலம்.
எனக்கு ஜேபியை நிரம்பப்பிடிக்கும். நான் காந்தி அமைதி நிறுவன
அமைப்பில் என் கல்லூரி நாட்களில் தொடர்புடையவன்.தருண்
சாந்தி சேனா அமைப்பில் பங்கேற்றவன். தேச பிதா
காந்தியின் அணுக்கம் மகாதேவ தேசாயின் புதல்வர் நாராயண் தேசாய் தலைமையில் பெல்காம்
அருகே கடோலி கிராமத்தில் ஒரு மாதம் நடைபெற்ற அகில இந்திய கல்லூரி மாணவர்கள் முகாமில்
(1972) பங்கேற்றவன். அந்த முகாமில் ’ நாடு விடுதலை அடைந்து 25 ஆண்டுகளில் நாம் வென்றதும் தோற்றதும் என்ன? என்பதே பேசப்பட்ட பொருள்.
1975 கோடையில் கோவை வ. உ .சி மைதானத்தில் ஜேபி முழுப்புரட்சியைப்
பேச வருவார் எனக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கன மக்கள் கூட்டத்தில் நானும் உண்டு. அவர் கோவைக்கு
எங்கே வந்தார். தேசத்திற்கு நெருக்கடி நிலைதான் பிரகடனமாயிற்று. வரலாற்றில்
பாரதிய ஜனதாக்கட்சி சொகுசாய்ப்பயணிக்கத்
தளம் அமைத்துக்கொடுத்தவர் இந்த ஜெயப்பிரகாஷ்
நாராயண் என்று நான் வசை கூறுவதுண்டு….
இனி ’ஜெயப்பிரகாஷ் நாராயணன் –மக்கள் யுத்தத்தின் தீர்க்கதரிசி’
என்னும் நூலுக்கு வருவோம்.
தன்னைப்புறக்கணித்துப்போய்விட்ட முதற்காதலிக்கு இந்நூலை
சமர்ப்பித்துள்ளார் நூலாசிரியர் சுதன் ஷூ ரஞ்சன். இந்நூல் பேசுவது ஜெயப்பிரகாஷின் வரலாறு. பிகாரில் பலியா மாவட்டம் சீதப்தியாரா என்னும் ஊருக்கருகில் அமைந்த பாபர்பனி என்னும் இடத்தில், ஹர்சுதயாள்,
பூல்ராணி தம்பதியர்க்கு 11.10.1902 அன்று ஜெயப்பிரகாஷ் நாராயணன்ண் நான்காவது குழந்தையாகப்பிறந்தவர்.
1920 ல் மகாத்மா காந்தி பாட்னா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பல்லாயிரக்கனக்கான மக்கள் கூடி அவர் உரையைக்கேட்கிறார்கள்.ஜெயப்பிரகாஷ முதன் முதலாக
காந்தியைப்பார்க்கிறார். ’படிப்பதைத்தொடர்வதா இல்லை விடுதலைப்போரில் இறங்குவதா’ என
குழம்பிப்போகிறார். 1921 ஜனவரியில் ஜவகர்லார்நேருவும் மவுலானா அப்துல் கலாம் ஆசாதும் பாட்னா வருகிறார்கள். மவுலானாவின் பேச்சு ஜேபியை
சிந்திக்க வைக்கிறது. ‘பிரிட்டிஷாரின் மெக்காலே
கல்விமுறை நம்மை அடிமைகளாய்க் கட்டிப்போடுவதற்காகத்தான்..அதனை விரைவில் தொலைப்பது ஒன்று மட்டுமே விவேகம்’ என்பதை ஜேபி உணர்கிறார்.
பிராஜ் கிஷோர் என்னும் பிகார் காங்கிரஸ் மாநிலத் தலைவரின் மகளான பிரபாவதியைத் திருமணம் செய்துகொள்கிறார்.
மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லத் திட்டமிடுகிறார். ஜப்பான் வழியாகப்பயணித்து அக்டோபர்
8, 1922ல் சான்ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு வந்து சேருகிறார். அப்போது ஜேபிக்கு இருபது வயது. ஒருநாளைக்கு பத்து மணி நேரத்துக்கு
மேலாக உழைக்கிறார். வார ஓய்வு என்பதே கிடையாது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல்
மாணவராகிறார். ஓட்டல்களில் பாத்திரங்கள் துலக்குகிறார். வெயிட்டர் வேலை செய்கிறார். ஷூ துடைக்கிறார். ஓட்டல்களில் டாய்லெட் சுத்தம்
செய்கிறார். அமெரிக்கக் குளிரில் கட்டில் இல்லாமல்
தூங்குகிறார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில்
கல்விக்கட்டணம் இருமடங்காகிறது. அயோவா வுக்கு
குடி பெயர்கிறார். அயோவா பல்கலைக்கழகக் கட்டணம் அவரால் சமாளிக்க முடிகிறது. பின்னர் இங்கிருந்து விஸ்கான்சின்
பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமூக அறிவியல் படிக்க ஆர்வம் கொள்கிறார். அமெரிக்க பொதுவுடமைக்
கட்சியின் உறுப்பினர் ஆப்ரகாம் லேண்டியொடு தொடர்பு ஏற்படுகிறது. மார்க்ஸ் லெனின் பிளகனோவ்
எம் என் ராய் ரோசா லக்செம்பர்க் ஆகியோரின் எழுத்துக்களை கற்கிறார். லெனின் 1924 ல்
மரணமடைகிறார். 1925ல் ஜேபி கம்யூனிஸ்ட் உறுப்பினர்
ஆகிறார். சிகாகோவின் கோமெஸ் அவரை மார்க்சியம் பயில மாஸ்கோ செல்லப்பணிக்கிறார். சோவியத்
அரசு உணவு தங்குமிடம் கல்வி அனைத்தும் இலவசமாய்த் தருகிறது. ஆனால் பயணக்கட்டணம் தர மறுக்கிறது. பொருளாதாரச்சுமையை ஜேபியால் சமாளிக்க இயலவில்லை. ஓகியோ பல்கலைக்கழகம் சென்று படித்து BA ஆகி
13/8/29 ல் MA வும் ஆகிறார். ஜேபியின் தாயார்
உடல்நிலை சரியில்லாது போகவே இந்தியா திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். ஐந்து பல்கலைக்கழகங்களில்
பயின்றார். உடலுழைப்பு ஒன்று மட்டுமே மனித வாழ்க்கையை முற்றாய்ப்
புரிந்துகொள்ளத் துணை செய்யும் என்பதனை ஜேபி அமெரிக்காவில் தெளிந்தவர். சோஷாலாஜி ஆசிரியர் எஃப்
ஈ. டம்லி ‘ the germs of leadership’ the ideals of human welfare’ அமையப்பெற்ற மனிதர் ஜேபி என்று புகழாரம் சூட்டினார். இந்தியாவுக்குத்திரும்பும் சமயம் ஜேபி லண்டனில் சிறிது காலம் தங்கியிருந்தார். அங்கு டாக்டர். ராதாகிருஷ்ணனைச்
சந்தித்தார். பொதுவுடமை இயக்கத்தின் கிளெமென்ஸ் தத்தைச் சந்தித்துப் பேசினார். ரஜினி
பாமே தத்தின் சகோதரரே இந்த கிளெமென்ஸ் தத் ஆவார். இருவருமே பிரிட்டனின் பொதுவுடமை இயக்கத்துத்
தலைவர்களாவர்.
ஜெயப்பிரகாஷ் அமெரிக்காவில் இருந்த காலங்களில் அவரின் மனைவி
பிரபாவதி மகாத்மாவின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.ஜேபியின் அனுமதியோடுதான்
இது நிகழ்ந்தது. ஜேபி தாயகம் திரும்பியதும் பிரபாவதி கணவரிடம்
’ தாம்பத்திய உறவை மட்டும் இனி ஒரு போதும் தான் வைத்துக்கொள்வது இல்லை’ என்கிற விரதம் எடுத்திருப்பதைக்குறிப்பிடுகிறார்.
ஜேபி சற்று அதிர்ச்சியுறுகிறார். சபர்மதி ஆஸ்ரம வாழ்க்கை பிரபாவதியை மாற்றியிருக்கிறது
என்பதை உணர்ந்துகொள்கிறார். இதனைக்கேள்வியுற்ற காந்திஜி’ உமக்கு அது அவசியம் தேவை எனில்
நீர் மறுமணம் செய்து கொள்ளலாம்’ என்கிற யோசனையை வைக்கிறார்.’ மறுமணம் செய்துகொள்ளத்
தன்னால் முடியாது’ என்று ஜெபி மறுத்துவிடுகிறார். பிரபாவதியின் சுயமுடிவுதான் இந்த
விரதம். காந்திஜிக்கும் தான் எடுத்த இந்த முடிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை
தன் கணவருக்கு பிரபாவதி எடுத்துச்சொல்கிறார்.
காந்திஜியும் கஸ்தூரிபாவும் பிரபாவதியை தன் சொந்த மகள் போல் பாசம் காட்டி அரவணைக்கிறார்கள்.
வாழ்க்கை முழுவதும் ஜேபியோடு நிழல் போல் இருந்தவர் பிரபாவதி.
ஒரே அறையில் இருவரும் படுத்துக்கொள்வார்கள். படுக்கை மட்டும் வேறு வேறு. பிரபாவதியே
ஜேபிக்கு உணவு சமைத்துக்கொடுப்பவராக இறுதிவரை
இருந்தார். ஜேபியும் பிரபாவதியும் இணையற்ற தம்பதியராய் கடைசிவரை வாழ்ந்தவர்கள்.
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய போது பரிசுத்த கம்யூனிஸ்ட் ஆக இருந்த ஜேபி காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்தார். பாட்னாவில் 5/6/1974 ல் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அவரே சொல்கிறார்.
‘When I returned from America I was a pure communist
.But I joined the congress. Why did (I)
not join the Communist Party?.They said Mahatma Gandhi was the agent of
hoarders, capitalists. Jogelkar delivered a lecture at Chaupati,Bombay ,that
Gandhi was an agent of the capitalists and the
congress was the organization of
the Capitalists. ( Iபக்கம் 38)
ஜெயப்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவுத்தலைவராய்
செயல் பட்டார். அலஹாபாத்தில் ஜவஹர்லால் நேருவோடு இணைந்து பணியாற்றினார். பிரிட்டீஷ்
லேபர் பார்ட்டி, பிரிட்டிஷ் டிரேட் யூனியன் காங்கிரஸ் ஆகியற்றோடு ஆழ்ந்த தொடர்பு வைத்திருந்தார். பிரபாவதியும் நேருவின் துணைவியார் கமலாவும் மிக அன்யோன்யமாகப்
பழகிக்கொண்டனர். ஜேபி நேருவை’ மரியாயதைக்குரிய சகோதரா’ என்றுதான் விளித்துக் கடிதம்
எழுதுவார்.
1932ல் சென்னையில் ஜேபி முதன்முதலாய்க் கைது செய்யப்படுகிறார். அது பற்றி
‘ ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ காங்கிரசின் மூளையே சிறையில்’ என்று செய்தி
வெளியிட்டது. ராஜாஜி ஜேபியின் கைது செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார். கைது ஆணை
பம்பாய் ஆட்சியர்களால் வெளியிடப்பட்டது அதற்கு உயர்நீதி மன்றம் செவிசாய்க்கவில்லை. ஜேபி விலங்கு பூட்டி சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இயற்கை அழைப்புக்கு மண் சட்டி கொடுத்திருந்தார்கள். ஜேபியின் துணைவியார் பிரபாவதி அலஹாபாத்தில்
கைது செய்யப்பட்டு லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். கணவனும் மனைவியும் தேசத்திற்காகா
ஆங்காங்கே சிறைவாசம் இருந்தார்கள்.
கான்பூர் சதி வழக்கு மற்றும் மீரட் சதி வழக்கு தவிர்த்து விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு ஏது பங்கு
என்று நூலாசிரியர் சுதன்ஷூ ரஞ்சன் காட்டமாய்க்குறிப்பிடுகிறார்.அமெரிக்காவிலிருந்து
ஜேபி திரும்பியபோது பொதுவுடமை இயக்கத்தார்
இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று இருந்தால் தானும் அவ்வழி சென்று இருக்கமுடியும்
என்பதே ஜேபியின் கருத்து என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 1928 ல் நடந்த ஆறாவது கம்யூனிஸ்ட் இண்டர்நேஷ்னல் காங்கிரஸ் தேசிய சக்திகளை ஜனநாயக சோஷலிச சக்திகளை சமூக ஃபாசிஸ்ட்
( Social Fascist) என்று மட்டம்தட்டி தீர்மானித்ததை
ஜேபி ஏற்க மறுக்கிறார். இது லெனினைப் புறந்தள்ளி ஸ்டாலினைத் தூக்கிப்பிடித்த செயல்
என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
17 மே 1934ல் பாட்னா
அஞ்சுமான் இசுலாமியா ஹாலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் பார்ட்டி ( CSP) துவக்கப்பட்டது. பாட்னா மாநாட்டில் ஜெயப்பிரகாஷ் அமைப்புச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர்
பம்பாய் நகரில் சோஷலிஸ்ட் மாநாடு கூடியது. ஜேபி பொதுச்செயலர் ஆனார். நரேந்திர தேவா,மசானி, அசோக் மேதா,அச்யுத் பட்வர்தன்,
ராம் மனோகர் லோகியா ஆகியோர் பிரதான உறுப்பினர்களாயினர். சர்தார் வல்லபாய் படேலுக்கு
’ காங்கிரஸ் சோஷலிச கட்சி’ பிடிக்கவில்லை.
’சோஷலிஸ்ட்கள் ஜவஹர்லால் நேருவின் பெயரையும்
உபயோகித்துக்கொண்டு வருகிறார்கள். CSP யைத் துவக்கியவர்கள் கழிசடைகள்’ என்றார் படேல். இந்தியப் பொதுவுடமைக்கட்சி
ஜூலை 1934ல் தடை செய்யப்பட்டது. பி .சி ஜோஷியும் ஜேபியும் நண்பர்கள். ஈ.எம் எஸ் நம்பூதிரிபாட்,
ஏ கே கோபாலன், கிருஷ்ண பிள்ளை, ஜீவானந்தம், சுந்தரையா, சோகன் சிங் ஜோஷ் ஆகியோர் சி
எஸ் பி யில் இணைந்தார்கள். இணைந்தாலும் இந்தியப்
பொதுவுடமை இயக்கத்திலும் தொடர்பு வைத்துக்கொண்டனர். சோஷலிஸ்ட்
கட்சியைக் கம்யூனிஸ்ட்களின் ஆளுகைக் கீழ்க் கொண்டு வரும் ஒரு சதித்திட்டத்தை
கம்யூனிஸ்ட்கள் ரகசியமாய் வைத்திருப்பது அம்பலமாகியது. இடதுசாரிகள் முற்றாய் சி எஸ் பி யிலிருந்து விலகிக்கொண்டார்கள். சோஷலிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியில்’’ பிரஷர் க்ரூப் ஆக நின்று செயல் பட்டார்கள். இதற்கிடையில் இரண்டாம்
உலகப்போர் துவங்கலானது. இந்தியா
அதனில் பங்கேற்பதை ஜேபிவிரும்பவில்லை.டிசம்பர்
31, 1939 ல் ஜேபி ஒரு அறிக்கை வெளியிட்டார்.’
ஏகாதிபத்தியங்களின் யுத்தம் இது. பிரிட்டீஷாருக்காக இந்தியர்கள் சண்டையில் இறங்க முடியாது. சண்டையில்
இந்தியா இணைவது பிரிட்டீஷாருக்குக்
கீழாகத் தொடர்ந்து இந்தியா இருத்தலையே சாத்தியமாக்கும்.
விடுதலை பெற்ற இந்தியாவாகவே இருந்தாலும் ஏகாதிபத்திய
யுத்தத்தில் அது என்ன செய்து விட முடியும்.
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்டச் சாத்தியமானால் அதனைப்பயன் படுத்திக்கொள்ளலாம்’
யுத்தத்தில் இந்தியா பங்கு கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி
ஜேபி இந்திய நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். பிரிட்டீஷ் அடிமை விலங்கை ஒடித்தெறிய அறைகூவல் தந்தார். காவல்
துறையை நீதிமன்றத்தைப்புறக்கணியுங்கள் என்றார்.
மக்களாட்சி மலரட்டும் என்று கோஷமிட்டார். அவருடைய வன்முறைக்குத்தூண்டும் பேச்சுக்காக
அவர் கொடுஞ் சிறையில் அடைக்கப்பட்டார். நீதி மன்றத்தில் ஜேபியின் எழுத்து பூர்வமான
வாக்குமூலம் அவரின் நெஞ்சுரத்தை வெளிப்படுத்தியது.
‘My country is not a party to this war in any
manner, for it regards both German Nazism and British imperialism as evils and
enemies. It finds that both sides in this war are driven by selfish ends of
conquest and domination, exploitation and oppression. ( பக்கம் 67)
ஹசாரிபாக் சிறையிலிருந்து ஜேபி தப்பித்துச்செல்கிறார். அன்று தீபாவளித் திருநாள்.
பதினேழு அடி உயரமுள்ள சிறைச்சுவரத் தாண்டியாகவேண்டும்.
அறுவர் சிறைச்சாலையை விட்டு வெளியேறினார்கள். ஷாலிகிராம் சிங்,யோகேந்திர ஷுக்லா, சூர்யநாராயண
சிங்,ராம் நந்தன் மிஷ்ரா,குலாப் சந்திர குப்தா இவர்களோடு ஜேபி ஆக மொத்தம் ஆறுபேர்.
நடனமும் பாட்டுமாய்ச் சிறைசாலை இருந்தது.. கொசு வலையைத் தொங்கவிட்டு உள்ளே ஆட்கள் இருப்பதுபோல்
காட்சியை உண்டாக்கினார்கள். வெளிச்சுவர் அருகே
பிரமிட் போன்ற அமைப்பை அவர்களே தங்களுக்குள்
ஏற்படுத்தினார்கள். தலை அணியும் ஆடையைப் பயன்படுத்தி துணி ஏணி அமைத்துக் கொண்டார்கள்.சிறையிலிருந்து தப்பினார்கள். இரண்டு நாட்கள் ஓடி ஒரு சிறு கிராமத்தைக்கண்டார்கள்.
நாற்பத்தைந்து மணி நேரத்திற்குப் பிறகு முழு உணவு அவர்களுக்குக் கிடைத்தது. பழந்துணியும் காலுறையும் அவர்களுக்குப் பெறமுடிந்தது. சில சமயம் மாட்டு வண்டியிலும் பயணித்தனர்.நான்கு
தினங்கள் காட்டில் பயணித்து ஒரு மாவட்டத்திற்கு
வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. ஆனால் அதை எங்கே சில்லறை மாற்றுவது. சாத்தியமே
இல்லை. ஒரு நாலணா நாணயத்தைக்கொண்டு அனைவரும் இரண்டு நாள் பசி தீர்த்துக்கொண்டார்கள்.
ஜேபி மிக அயர்ந்து போயிருந்தார். தோழர்கள் அவரைக் கைத்தாங்கலாய் அழைத்து வந்தனர். ஜேபி
சிறையைவிட்டு தப்பிச்சென்றது அறிந்த பிரிட்டீஷ் அரசாங்கம் தப்பிச்சென்றவர்களின் தலைக்கு
விலை வைத்து அறிவிப்பு செய்தது. அவர்களை உயிரோடோ
அல்லது பிணமாகவோ பிடித்து தருவோர்க்கு ரூபாய் ஐயாயிரம் பரிசு என்றறிவிக்கப்பட்டது. ஜேபியின் தலைக்கு மட்டும்
பத்தாயிரம் ரூபாய் எனப் பின்னர் உயர்த்தி அறிவித்தார்கள்.
டில்லிக்குச் சென்றுவிட்ட ஜேபி ஆஃப்கன் மக்களின் உதவியை நாடலாம் என்று திட்டமிட்டு
டில்லியிலிருந்து ராவல்பிண்டிக்கு ரயிலில் பயணமானார். ரயிலில் முதல்வகுப்பு. ஜேபி நன்கு
முகச் சவரம் செய்துகொண்டு ஆங்கிலேய உடுப்பை அணிந்திருந்தார்.இரண்டு சீக்கியர்களும்
ஒரு ஆங்கிலேயரும் அவர் பயணம் செய்யும் பெட்டியில் ஏறினார்கள். ‘ இது நேபாளமும் இல்லை
பிகாரும் இல்லை. இது பஞ்சாப். சுட்டுவிடுவோம் உம்மை’ என்று விரட்டினார்கள். லாஹூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜேபி சித்திரவதை செய்யப்பட்டார்.
தனிமைச்சிறை. ஒரு வார்த்தைகூட பேசமுடியாத சூழலில்
விடப்பட்டார். எண்ணற்ற கேள்விகள் அவரைத்துளைத்தன.
சிறையிலிருந்து எப்படித்தப்பினாய். ஏன் தப்பினாய், பின் எங்கே தங்கினாய் யார் உனக்கு
உதவினார்கள் நேபாளத்திற்கு ஏன் சென்றாய், ராவல்பிண்டியில் உனக்கு என்னவேலை என்று அவரைத் துளைத்து எடுத்தார்கள்.
‘காந்திக்கும் நேருவுக்கும் பிறகு நீதானே மரியாதைக்குரிய
தலைவர். உண்மையைச்சொல் எங்கள் வேலையை நாங்கள் காப்பாற்றிக்கொள்ளவேண்டாமா, எங்கள் குடும்பம்
பசியாறவேண்டாமா என்று வினாக்கள் காவலர்களிடமிருந்து
வந்துகொண்டேயிருந்தன. ஜேபி லாஹூர் சிறையிலிருந்து
ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார். லோஹியாவும் அவருடன் ஆக்ரா சிறக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார்.இரண்டு
பிரதான விஷயங்கள் அவரைச்சிறையில் வாட்டி எடுத்தன. ஒன்று உலக யுத்தத்தில் காங்கிரசின் நிலைபாடு இரண்டு இந்தியாவை
இரண்டாகப்பிரித்து விடுதலை அளிப்பது.
ராஜாஜிதான் தேசப்
பிரிவினையை ஏற்கிறார். இந்தியா இரண்டு நாடுகளாய்ப்பிரியும் என்கிறார். ஜேபி சொல்கிறார்.
ஒரு உய்ர்நிலைப்பள்ளி மாணவன் கூட அறிவான், இப்படி இந்தியாவைப்பிரிப்பது சமூகத்தில்
எத்தகைய பெருங்குழப்பத்தைக் கொண்டுதரும் என்பதை.
சுதன்ஷு ரஞ்சன் இந்த இடத்தில் ‘Vivisection of this country ‘ என்கிற சொற்களைப்பயன்படுத்துகிறார். முப்பதொரு
மாதங்களுக்குப்பிறகு ஏப்ரல் 11, 1946 ஜேபி
சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்.
காந்திஜியின் அகிம்சை
வழி மீது ஆழ்ந்த பற்றுதல் உடையவர் ஜேபி. ஆயின் அவர் ஒரு வினா வைக்கிறார். பிரிட்டீஷாரோடு அகிம்சையைக் கடைப்பிடித்துப் போராடுகிறோம். ஜப்பானியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்தால்
பிரிட்டீஷார் தரும் ஆயுதம் வைத்து விடுதலைபெற்ற இந்தியர்கள் போராடுவதா? ஜப்பானியர்கள்
மனிதர்கள் இல்லயா? ஆங்கிலேயர்கள் ஜப்பானியர்களை ஆயுதம் வைத்து எதிர்ப்பது வன்முறையல்லவா?. இவை அனைத்துமே மொத்தமாய் முட்டாள்தனம்.’
‘Can freedom
come through dialogue?’ என்று வினா வைக்கிறார் ஜேபி.
இந்தியாவில் நடைபெற
வேண்டிய இரண்டாவது புரட்சி பற்றி ஜேபி குறிப்பிடுகிறார்.
‘இந்த போராட்டத்தில் நாம் கைதாகக்கூடாது. நாம் சிறை பிடிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்,கமிஷனர்,, ஆளுனர்
வைசிராய் முதலானோர் ஒவ்வொருவரும் கைது செய்யப்படவேண்டும்’
என்றார் ஜேபி.
All India Railway mens’ Federation, All India Postal Employees and the Grade IV Staff
Union,All India Ordinance Factories
Union, Defence Employees Federation
ஆகிய தொழிற்சங்கங்கள் ஜேபியின் வழிகாட்டுதலில் இயங்கின. உலக அளவில் ஜேபி தொழிற்சங்கத் தலைவரானார். இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் ஜேபி பெரு நகர
நிறுத்தங்களில் தொழிலாளர்கள் பலரோடு பேச்சுவார்த்தை
நடத்தினார். அஞ்சல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினார்.
இந்தியாவை இரண்டாகப் பிரிப்பதில் காந்திஜிக்கு விருப்பமேயில்லை.
காங்கிரஸ் இந்தியப்பிரிவினையை ஏற்கக்கூடாது.
அப்படி ஒரு சிந்தனை எழுமானால் பிரிட்டீஷார்
இங்கிருந்து விடைபெற்றபிறகே அது பற்றி யோசிக்கவேண்டும் என காந்திஜி எண்ணினார். ஆனால் காங்கிரஸ் காரியக்கமிட்டி காந்திஜியின் கருத்தை கணக்கில் கொள்ளவில்லை.சர்தார்
படேலும் ஜவஹர்லால் நேருவும் காந்திஜியின் கருத்தை ஏற்கவில்லை. இவற்றை எல்லாம் கண்ட
மவுண் பேட்டன் காந்திஜியிடம், ‘ Congress is with me, not with you’ என்று
ஏளனமாய்க் குறிப்பிட்டார். பிரிட்டீஷார் இந்தியாவை ஆண்டபோது இந்தியர்கள் கல்வி
கற்றார்கள், இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள் என்கிற இரண்டு விஷயத்தை
அவர்கள் தொடர்ந்து சொல்வதை ஜேபி ஏற்க மறுத்தார்.
பிரிட்டீஷார் ஏதாவது செய்திருக்கிறார்கள் என்றால், அது இந்தியாவை இரண்டாக உடைத்தது
மட்டுமே என்று ஜேபி குறிப்பிடுகிறார்.
இந்து முஸ்லிம் கலவரத்தைக்கண்டு மனம் கொதித்துப்போனார்
ஜேபி. பாட்னா நகரத்துக்கு அருகே ஹில்சா காவல்
நிலையத்துக்குக் கீழ் வரும் டெல்ஹதா கிராமத்திற்கு விஜயம் செய்கிறார்.
‘ What kind of insanity overwhelmed you, all of a
sudden,became animal from man. You changed from human beings in to ogres?’
பாதிப்புக்குள்ளான இசுலாமியர் பகுதியைப் பார்த்து குமுறுகிறார் ஜேபி. அதேபோல் நவகாளியில் நிகழ்ந்துவிட்ட சோகத்தைக்கண்டு,’ இந்தியநாடே
பற்றி எரிவதா, இந்த நாடே சாம்பலாகி முடிவதா, எத்தனை வீடுகள் பொடிக்கப்பட்டிருக்கின்றன,
எத்தனை மனிதப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது இங்கே,
‘I shall not take even a drop of water in this place, it will also appear like blood
instead of water’ என்று ஜேபி சோகத்தில் பொங்குவதை
நூலாசிரியர் அற்புதமாய் வாசகர்க்குக் கொண்டு சேர்க்கிறார்.
உலகில் எந்த எந்த
நாட்டில் யார் யாரெல்லாம் புரட்சியைத்
தலைமை தாங்கி நடத்தினார்களோ அவர்களே ஆட்சியாளர்
ஆனார்கள். ருஷ்யா, அமெரிக்கா, சீனா, துர்க்கி,
அல்ஜீரியா, க்யூபா எந்த நாட்டு வரலாரும் அப்படித்தாண் ஆனால் இந்திய தேசத்தில் மட்டும்தான்
மகாத்மா காந்தி அதிகாரம் எனக்கு வேண்டாம் என்று ஒதிங்கிப்போனார். மகாத்மா சரித்திரம் படைத்தார் என்கிறார் சுதன்ஷு
ரஞ்சன்.
பாகிஸ்தானைப் பிரித்துக்கொடுத்தால் மட்டுமே ஆயிற்று என்று
ஒங்கிஅடித்த ஜின்னாவைப்பார்த்து ஜேபி’
‘Mr. Jinnah is a deliberate
traitor to his country a Mir Jafar of the present day. Let Muslims remember
that it is not the sons of Mir jafar who rule Bengal today but dirty kin of
Clive’( பக்கம் 105) என்று வசை பாடுவதைப் பார்க்கிறோம்.
மகாத்மாஜி கொலையுண்டபோது பதறித்துடித்தார் ஜேபி. ரமண மகரிஷியையும், அரவிந்தரையும் விண்ணப்பித்துக்
கேட்டுக்கொண்டார்.’மிக இக்கட்டான நேரமிது. நாடு உங்களிடமிருந்து வழிகாட்டலை எதிர்பார்க்கிறது. நீங்கள் தனிமையில் தவமியற்றிக்கொண்டு இருக்காதீர்கள். தேசத்திற்கு
ஆன்மிக புத்துயிர்ப்பு தாருங்கள்’
நல்ல உணவும், நல்ல உடையும், நல்ல இருப்பிடமும் அமைந்து விட்டால் போதுமா இவை பெற்ற விலங்குகளாக மனிதர்கள் வாழ்வதுசரியா, நல்ல மனிதர்கள்
உருவாக வேண்டுமே. அரசியல் பணியில் அறத்தின் பங்களிப்பு என்ன? என்று ஜேபி குமுறினார்.. மக்கள் அரசாங்கத்தையே நம்பி வாழ்பவர்களா உருவாகக்கூடாது. அரசினும் மக்கள்
உயர்ந்த அதிகாரம் பெற்றவர்களாகப் பரிணமிக்க வேண்டும். நாடு விடுதலை பெற்ற பிறகு CSP, காங்கிரசோடு இணைந்திருப்பதில் நியாயமில்லை என்பதை உணர்ந்துகொண்டார்
ஜேபி. இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் என்பது வேறு
நம் கண் முன்னே இன்று நிற்கும் காங்கிரஸ் வேறு என்பதனை தெளிவுபடுத்திக்கொண்டார். ஜேபியின் CSP
என்பது SP ஆனது.
காந்திஜி சோஷலிசத்தைத் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தத்துவ அளவில் ஏற்றுக்கொண்டார். வன்முறையில் சோஷலிசத்தை
நடைமுறைப் படுத்துவதை அவர் அங்கீகரிக்கவில்லை.
1952 ஜூன் 23லிருந்து ஜூலை 13 வரை ஜேபி உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதம்
முடித்து மார்க்சியத்திலிருந்து முழுதுமாக
தன்னை விலக்கிக்கொண்டார். மனிதன் நல்லவனாக இருப்பதே மிக மிக முக்கியம் என்பதனை அறிவித்தார். அவரின் வார்த்தைகளிலேயெ அதனைக்காண்போம்.
‘For many years I have worshipped at the shrine of
the goddess- dialectical materialism- which seemed to me intellectually more satisfying than any other philosophy.
But while the main quest of philosophy
remains unsatisfied, it has become patent to me that materialism of any sort
robs man of the means to become truly human. …………….It may be that in the
kingdom of dialectical materialism, fear
makes men conform and party takes place
of God.’ ( பக்கம் 126)
1953 பிப்ரவரியில்
ஜவஹர்லால் நேரு ஜேபியை மந்திரி சபையில் இணையுமாறு அழைக்கிறார். ஜேபி அதற்கு
இசையவில்லை. 14 நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை நேருவுக்கு அனுப்புகிறார். தனியார் வங்கிகளை
இன்ஸூரன்ஸ் கம்பெனிகளை, நிலக்கரிச்சுரங்கங்களைத்
தேசிய மயமாக்குவது என்று இருந்தன அந்த நிபந்தனைகள்.
வினோபாவின் சர்வோதய செயல்பாடுகள் ஜேபியை மிகவும் கவர்ந்தன. மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இயற்றிய சட்டம் செய்யாததை வினோபாவின் வார்த்தைகள்
செய்துகாட்டுவதை ஜேபி நேரில் கண்டார்.
1951ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வோதயா மாநாட்டில் கலந்துகொள்ள வினோபா நூற்றுக்கணக்கான
மைல் கால் நடையாகவே நடந்து வருகிறார். ‘தாம் வைத்திருக்கும் நிலத்தில் ஆறில் ஒரு பங்கை
ஆறாவது மகன் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணித் தானமாக வழங்க வேண்டுகோள் வைக்கிறார்.
ராமச்சந்திர ரெட்டி என்பவர் 100 ஏக்கர் நிலத்தை
அந்த மாநாட்டிலேயே வழங்கி பூதான இயக்க வரலாற்றைத்துவக்கி வைக்கிறார்.
1953ல் ரங்கோனில் நடைபெற்ற ஆசிய சோஷலிச மாநாட்டில் ‘ பூதான்
இயக்கம்’ என்பது நிலப்பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் கொண்டுவரும் என்று ஜேபி முழங்குகிறார். சோவியத் பற்றி ஒரு விமரிசனம் வைக்கிறார். அது நம்மை
உலுக்குவதாக அமைந்து நிற்கிறது. ஆயிரமாயிரம் கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்று சென்று வந்திருக்கிறார்கள் ஆனால்
சோவியத் ஒன்றியம் சிதறும் வரை அவர்கள் அங்கு நடக்கும்
உண்மையை எங்கே மூச்சு விட்டார்கள். வரலாற்றில் சோவியத் உடைந்த பிறகு
அவர்களே’ அப்போது எங்களை எப்படிச்சொல்ல சொன்னார்களோ அதைத்தான் வெளியில் சொன்னோம்’
என்று அசடு வழிந்தார்கள். ஆனால் 1953 லேயே
ஜேபி பேசுவது இதுதான்.
‘It was hoped
that after a socialist government had been established in such a lerge country
as Russia we would have furher development of
the science of socialism,of its philosophy , of its historical
interpretation and so on, but we find
that in Russia of interpreting history , they are busy distorting history , and
if you start distorting history , you cannot interpret history’ ( பக்கம் 177)
ஜேபி தனக்குச் சொந்தமான நிலத்தில்
50 ஏக்கர் நிலத்தை பூதானமாக வழங்கிகிறார்.1954
ஏப்ரலில் புத்த கயாவில் நடைபெற்ற சர்வோதய மாநாட்டில் ஜேபி கலந்து கொள்கிறார். வினோபாவின்
பூதான இயக்கத்தின் மீது தனது மரியாதையைப்பதிவு செய்கிறார்.
1960 ஏப்ரல் 9 ல் நடைபெற்ற திபேத் பற்றிய
மாநாட்டில் ஜேபி ’ திபேத்தில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். சொல்லொணாத்துயரங்கள்
அரங்கேற்றப்படுகின்றன. பல லட்சம் சீன மக்கள் திபேத்தில் குடியமர்த்தப்படுகிறார்கள்.
திபேத்திய கலாசாரத்தை அழித்தொழித்து திபேத்தைச்
சீனக்காலனியாக சீனர்கள் மாற்றுகிறார்கள்’ என்று முழங்குகிறார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கத் தகுதி பெற்ற கிழக்கு பாகிஸ்தானின் ஷேக்முஜிஃபிர் ரஹ்மானை மேற்கு பாகிஸ்தானின் யாஹ்யாகான் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். ஜனநாயகம் நசுக்கப்படுகிறது.
சொந்த மக்களையே ராணுவம் கொன்று குவிக்கிறது கிழக்கு பாகிஸ்தானிய .மக்கள் பசியோடு பட்டினியோடு
இந்தியா நோக்கி ஓடிவருகிறார்கள். Refugee
Relief stamp ஐ ஒவ்வொரு தபால் அனுப்பும்போதும் சேர்த்து சேர்த்து
நாம் ஒட்டி அனுப்பியது நினைவுக்கு வரலாம்.
தவிர்க்கவே முடியாத நிலையில் இந்தியா தலையிட்டு
பங்களாதேஷ் உருவானது. பிரதமர் இந்திராகாந்தியை ஜேபி மனதார பாராட்டினார்.
ஏப்ரல் 1972ல்
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள்
250க்கு மேற்பட்டோர் குவாலியர் நகரில்
ஜேபி முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். அனைவரும் அமைதி வழிக்குத்திரும்பினார்கள்
1973 ஏப்ரல்
15 காலை 8.45 ஜேபியின் துணைவியார் பிரபாவதி காலமாகிறார்.
இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்படுவதை காங்கிரஸ்கட்சியில்
உட்கட்சி ஜனநாயகம் அற்றுப்போனதை ஜேபி கவனிக்கிறார்.
மற்றுமொரு விடுதலைப்போராட்டம் இங்கு தவிர்க்க முடியாது என்று முழங்குகிறார். குஜராத்திலும்
பிகாரிலும் மாணவர்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருந்தது. மாணவர்கள்
பீகார் சட்ட சபையை முற்றுகையிட்டார்கள் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மனித உயிர்கள்
சில பலியாயின. போலிசாருக்குக் கண்டதும் சுட
ஆணை பிறப்பிக்கப்பட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கை 25 கூடிப்போனது. ஆக்ராவில் பெண்கள் லஞ்சம் ஊழல் இவற்றிர்க்கு எதிராய் அமைதிபேரணி நடத்தினார்கள்.
இந்திய ஜன நாயகத்தைக் காப்பாற்ற அதனை வலுவாக்க
‘CITIZENS FOR DEMOCRACY’ என்கிற அமைப்பை 14 ஏப்ரல் 1974 ல் டில்லியில் ஜேபி உருவாக்கினார். 1965ல்
பிலிபைன்ஸ் அரசின் மாக்சேசே விருது
ஜேபியின் மக்கள் சேவைக்காக வழங்கப்படுகிறது.
1974 ஜூன் ஐந்தில் பாட்னாவில்
மிகப்பெரிய பேரணி ஜேபியின் தலைமையில் நடைபெற்றது. சட்டசபையைக் கலைத்துவிடவேண்டும்
என்பதே பிரதான கோரிக்கை. லட்சக்கணக்கான மக்களின் கையொப்பம் பெற்று அந்த விண்ணப்பங்கள்
முன்னே டிரக்கில் அணிவகுத்துச்செல்ல ஜேபி பின் செல்கிறார். ஏழு கிலோமீட்டர் நீளமான மக்கள்
கூட்டம். பீகார் கவர்னரிடம் மகஜர் அளிக்கப்படுகிறது. அன்று மாலை காந்தி மைதானத்தில் மாபெரும் கூட்டம். ஜேபி
முழுப்புரட்சி மட்டுமே இனி நமது திட்டம் என்கிற கோரிக்கையை அறிவிக்கிறார். பசி, விலைவாசி உயர்வு, லஞ்சம்,வேலையில்லாத்திண்டாட்டம்,
இதுவே நாடெங்கும் காட்சியாவதை இனியும் சகித்துக்கொள்ள
முடியாது என்கிறார் ஜேபி.
12 ஜூன் 1975 ல் அலஹாபாத் உயர்நீதிமன்றம் ராஜ் நாராயணன்
தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்டு பிரதமர் இந்திராகாந்தியின்
தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பு அளிக்கிறது. ஜக் மோகன் லால் சின்ஹா என்னும் நீதிபதியே
தீர்ப்பை வழங்கியவர். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துகொள்ள 20 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதுவரை பாராளுமன்ற உறுப்பினராயும் இந்திராகாந்தி தொடர முடியாது எனத் தீர்ப்பு வந்தது.
ஜூன் 25 ராம்லீலா மைதானத்தில் மக்களைப்பார்த்து ஜேபி கேட்கிறார்’ பிரதமர்
இந்திராகாந்தி நாட்டில் நெருக்கடி நிலையை
அறிவித்து நம்மை எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டால்
என்ன செய்வீர்கள்?’என்று வினா வைக்கிறார்.
மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்து எங்கள் ஒத்துழைப்பு உங்களுக்குண்டு என்கிறது. அன்று
இரவே உள்நாட்டில் தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கிறார் பிரதமர் இந்திராகாந்தி.
விடியற்காலம் நான்கு மணிக்கு எல்லாம் பார்லிமென்ட் வீதியின் காவல் நிலையத்தில் ஜேபி அடைக்கப்படுகிறார். நான்கரை மாதங்கள் தனிமைச்சிறை.
சித்திரவதை. ஜுலை 21 டைரியில் எழுதுகிறார்’ ’என் உலகம் என்னைச் சுற்றிலும் நொறுங்கிக் கிடக்கிறது’.
அக்டோபர் 5ல் டாக்டர்கள் ஜேபியின் இரண்டு சிறுநீரகங்களும் பழுடைந்துவிட்டதை
அறிவித்தனர். பிரிட்டீஷார் கூட இப்படி என்னைச்
சித்திரவதை செய்ததில்லை என்றார் ஜேபி.
இந்திராகாந்தி
39 வது சட்ட திருத்தம் கொண்டு வருகிறார். பிரதம மந்திரி, லோக்சபா சபாநாயகர்,
இவர்கள் மீது நீதிமன்றத்தில் யாருமே வழக்குத்தொடர
முடியாது என்று. நீதிமன்றத்தில் 32 நாட்கள்
விவாதம் தொடர்ந்தது. அலாஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு செத்துப்போனது. உச்ச நீதிமன்றம்
இந்திரா காந்திக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதியது.
தேசமே இருளில் தத்தளித்தது. நாட்கள் சென்றன.
ஜனவரி 18 , 1977
பிரதமர் இந்திரா காந்தி லோக்சபாவுக்கான
தேர்தலை அறிவிப்பு செய்கிறார். சர்வாதிகாரமா ஜனநாயகமா என்பதே தேர்தல் விவாதமாகியது.
இந்தியாவின் ஒரே ஒளி ஜேபி என்று மக்கள் முழங்கினர். ஜகஜீவன் ராம் காங்கிரசை விட்டு
வெளியேறி அரசு எதிர்ப்பாளர்களோடு சேர்ந்துகொண்டார்.
அவர்தான் நெருக்கடி நிலை அறிவிப்பு ஆவணத்தைத் தூக்கிப்பிடித்து அலைந்தவர். தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்திராகாந்தியும்
சஞ்சய் காந்தியும் தோல்வியுற்றனர். காங்கிரஸ் 153 சீட்டுக்களை மட்டுமே பெறமுடிந்தது.
அதுவும் தென் இந்தியாவிலிருந்து மட்டுமே.
மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். ஜகஜீவன் பாபுவுக்கு பிரதமர்
ஆக ஆசையுண்டு அது நிறைவேறவில்லை. ஜேபிதான் எல்லாவற்றிர்க்கும் பின்னால் இருந்தார்.
நாடாளுமன்றத்தில் ஜேபி ‘ என் கடமை முடிந்தது இனி
நான் இறக்கலாம்’ என்றார்.
இந்திராகாந்தி
இல்லத்திற்குச் சென்ற ஜேபி, ‘ இந்து, நீ மக்களுக்குச் சேவை செய்வதில் தயக்கம் காட்டிவிடாதே.
அதுவே ஆகப் பெரிய அறம்’ என்கிறார். இந்திராகாந்தி
மனம் உடைந்து போய்க் காணப்பட்டார்.
ஜேபி விழைந்தது எதுவும் நிகழவில்லை.
ஜூன் 5 1978 ல் ஜேபி
ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.
மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார்
தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’ என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.
பொருளாதார உச்சவரம்பு என்பதை சமூகத்தில் கல்வியில் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும்
சலுகையின் போது கணக்கில் கொள்ளவேண்டும் என்றார்
ஜேபி.
சமூகத்தில் முன்னேறிய வகுப்பாரும், பின் தங்கிய வகுப்பாரும்
அவரைச் சரியாக புரிந்துகொள்ளவில்லை. முழுப்புரட்சிக்கு அறிவிப்பு செய்த
தஸ்தாவேஜுகளை வீதியில் மக்கள் தீயிட்டுக்
கொளுத்தினார்கள்.
மார்ச் 22ல் ஜேபியின்
உடல் நிலை மோசமாகியது. அவர் இறந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்து அஞ்சலியும்
செலுத்தினார்கள். ஆனால் அவர் இறக்கவில்லை. உயிரோடுதான் இருந்தார். பிரதமர் மொரார்ஜி தேசாய் நிகழ்ந்துவிட்ட தவறுக்கு மன்னிப்புக் கேட்டார்.
அக்டோபர் 8 ஐந்து
மணி நாற்பது நிமிடத்திற்கு ஜெபியின் உயிர்,
ஜஸ்லோக் மருத்துவ மனையில் பிரிந்தது. பிரதமர் சரண் சிங்கும் ஜனாதிபதி நீலம்
சஞ்சீவி ரெட்டியும் பாட்னாவில் நடைபெற்ற ஜேபியின்
இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இந்திராகாந்தியும், மொரார்ஜி தேசாயும்
உச்ச நீதிமன்ற 13 நீதிபதிகளும் மொத்தமாய் வந்திருந்து மரியாதை செய்தார்கள்.
அமெரிக்காவைத் தனது இரண்டாவது தாயகம் என்று அழைத்தவர் ஜேபி
- இப்படி அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மிம் கார்ட்டர் இந்திய ஜனாதிபதி சஞ்சீவிரெட்டிக்கு எழுதிய
தனது அஞ்சலிக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நூலாசிரியர் சுதன்ஷூ ரஞ்சன், வாழ்க்கை வரலாற்றுப் படைப்பை அற்புதமாய் முடிக்கிறார். ’என் வாழ்க்கை’ செப்டம்பர் 9 1975ல் , ஜேபி
சிறையில் எழுதிய கவிதை.
அதன் இறுதி வரிகள்.
So I am satisfied with my failures
And this
unsuccesful life
Will be blessed a hundred times
If for the
dear young fellow seekers
The path strewn with thorns
Is made somewhat easy.’
இனியும் ஒரு ஜேபி இந்த மண்ணில் வருவாரா ? ஏங்கித்தவிக்கிறது வாசக மனம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ஏன் எழுதுகிறேன்.
எனது படைப்புகளில் தருமங்குடி என்று நான் குறிப்பிடுவது கடலூர் மாவட்டத்து தருமநல்லூர் கிராமத்தையே. அதுவே எனது பிறந்த ஊர். ஆனந்தாயி என்னும் பெத்தனாங்குப்பம் கிராமத்து ஆயா எங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்ப்பாள்.
வீடு கூட்டும் வேலை செய்வாள். எங்களது பெற்றோர்
வெளியூர் செல்லும்போது எல்லாம் அந்த ஆனந்தாயி இரவு நேரத்தில் எங்கள் வீட்டிலேயே உறங்குவாள்.
எங்கள் கிராமம்
என்று இல்லை எல்லா கிராமத்திலும் குதிரை மீது வரும் கொள்ளையர் பயம், கன்னக்கோல் வைக்கும்
திருடர் அச்சம், புளியமரத்துப்பேய், முருங்கை மரத்து பூதம் கொள்ளிவாய் பிசாசு மோகினிப்பிசாசு நொண்டி மினி எமன் வருகை அறியும் நாய்கள் அழுகை,
தூக்குமாட்டிக்கொண்டவர்கள் கொலையுண்டவர்களின் ஆவிகள் போக்கும் வரத்தும் என எத்தனையோ கதைகள். அறிவியலின் கொடையாம் மின்சார
விளக்குகள் வீதிக்கு வந்து ஒளிர்ந்த பின்னர்தான் இந்தபேய்க்கதைகள் மொத்தமாய் விடைபெற்றுக்கொண்டன.
குழந்தைகள் எங்களோடு
ஆனந்தாயி படுத்துக்கொள்வாள்.எங்களுக்கு உறக்கம்
வரும்வரை கதை சொல்வாள். நீண்ட கதைகள் சொல்லிக்கொண்டேயிருப்பாள். . ’வாழுறாங்க வாழுறாங்க
வாழக்குலையா சாயுறாங்க’ என்று அந்த ஆயா ஒவ்வொருகதையையும் முடிப்பாள். என் தந்தை சுந்தரேசன் ஒரு கதை சொல்லி, என் அண்டைவீட்டு சாமிநாதகுருக்கள்
கதை சொல்பவர், என் அப்பாவின் நண்பர் வாகடம் காசி, தேவாரம் ராஜகோபால் பிள்ளை, ஊரில்
ஆயிரம் பிரசவம் பார்த்த கத்தாழையாங்க என்னும் மருத்துவச்சி, ஊர்த்தொழிலாளர்கள் முடிதிருத்தும் நாகலிங்கம்
துணி வெளுக்கும் சிங்காரம் எனத்தொடரும் கதை சொல்லிகள் அணிவரிசை. நான் அடிநாட்களில் இவர்கள் சொல்லும் கதைகளைக்கூர்ந்து கேட்டவன்.
மனிதன் ஒரு சமூக
விலங்கு. சக மனிதர்களோடு உறவுகொண்டே இப்புவியில்
ஒவ்வொரு மனிதனும் இயங்குகிறான். இல்வாழ்க்கை
வாழ்பவன் துணை அல்லாது ஒரு துறவியும்கூட தனது செல்நெறியை
காத்துக்கொள்ளவோ வளப்படுத்திக்கொள்ளவோ முடியாது. நாம் ஒரு நிகழ்வைப்பார்க்கிறோம். அதனைப்பற்றி எண்ணுகிறோம். அது பற்றிச் சிந்திக்கிறோம். நமது கற்பனைகளை அதனோடுக்குழைத்து
அதற்கு ஓர் உரு கொடுக்கிறோம். அப்படி அதனைப்பிறருக்கு அறிவிக்க ஆயத்தமாகும் முயற்சியில்
எழுத்து நம் துணைக்கு வருகிறது.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பாரதியைப்பற்றி ஒரு சிறு
நூல் கொடுத்தார். யார் எழுதியது என்ற நினைவு இல்லை. மேலட்டையில் முண்டாசு கட்டிய பாரதியின்
படம் இருந்தது. அப்புத்தகத்தைப்படித்துவிட்டுவா என்றார். நான் இரண்டு முறை படித்தேன். புத்தகம் கொடுத்துபடிக்கச்சொன்ன
ஆசிரியரிடம் சென்று படித்து முடித்ததைச்சொன்னேன். ’படித்து
நீ என்ன தெரிந்துகொண்டாய் என்பதை வகுப்பில்
மாணவர்களைப்பார்த்து சொல்’ என்றார். அப்படியே
சொன்னேன். புத்தகத்தில் என்ன படித்தேனோ
அதனைத்தான் சொன்னேன். பாரதியின் இளமைக்காலம் பாரதியின் தமிழ்ப்பற்று தேசப்பற்று
அவர்கொண்ட சமூக அக்கறை இவைகளைப்பற்றி
அன்று எனக்குப்புரிந்ததைப் பகர்ந்தேன். நாற்பது பக்கம் கொண்ட கோடு போட்ட நோட்டு ஒன்றை ஆசிரியர் பரிசாகத்தந்தார்.
அந்த நோட்டின் மீது விஸ்டம் என்று ஆங்கிலத்தில்
எழுதியிருப்பதாக எனது அண்ணன் எனக்குச் சொன்னார்.
சுதந்திரதினம்
குடியரசு தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது பாரதியின் சுதந்திரப்பாடல்களைப்பாடிக்கொண்டு பள்ளி மாணவர்கள் வீதிகளில் வலம் வருவோம். அன்று ஆசிரியர்கள் எங்களை பொறுப்போடு நெறிப்படுத்தினார்கள்.
அண்டை நாடு சீனா நமது நாட்டின் மீது போர்தொடுத்த போது ’இந்திய தேசம் காப்போம்’ என்றும் ’சீனத்து சூயன்லாய் வீழ்க’ என்றும் முழக்கிக்கொண்டு தெருக்களில் ஊர்வலம் போனோம். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் எது நல்ல பாதை யெனக் கண்டு வாழ்ந்தும் காட்டினார்கள்.
ஒவ்வொரு வெள்ளிகிழமையும் மாலையில் காந்தி பஜனை பள்ளியில் நடைபெற்றது. அதனில் சர்வ மத பிரார்த்தனையை ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் கூடிச்செய்தோம்.
’ஈசுவர அல்லா தேரே நாம் சப்கோ ஷண்மதி தே பகவான்’ என்று ரகுபதி
ராகவ ராஜாராம் பாடலைப் பாடுவோம். வடலூர் வள்ளலார் இராமலிங்கரின் அருட்பாக்களை இசையோடு
பாடிமுடிப்போம்.
தினமும் பள்ளியில்
இறைவணக்கத்தின்போது தி்ருக்குறளிலிருந்து ஒரு குறளையும் அதற்கு விளக்கத்தையும்
ஒவ்வொரு மாணவனும் சொல்ல வேண்டும். எதாவது ஒரு திருக்குகுறளுக்கு உரை கேட்டுத்தான்
இறைவணக்கம் முடியும். குறளை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து திரும்பச்சொல்லுவோம். உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய
மன்றம் உயிர்ப்போடு இருந்தது. நான் மூன்றாண்டுகள் அதனில் பொறுப்பில் இருந்தேன். குன்றக்குடி
அடிகளார்( தெய்வசிகாமணி) கவிஞர் உளுந்தூர்பேட்டை
சண்முகம் போன்ற பெரியவர்கள் கலந்துகொண்டு இலக்கியக்கூட்டங்களைச் செறிவு செய்தார்கள்.
தமிழாசிரியர்கள்
கவிதை புனைந்து காட்டச்சொல்லி மாணவர்களை ஊக்குவிப்பார்கள்.
மாணவர்கள் இலக்கியத்தில் ஞானம் பெறத் தமிழாசிரியர்கள்
உடன் நின்றார்கள். தமிழ் இலக்கணத்தை பொறுப்போடு
போதித்தார்கள். கல்வி மாவட்டத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கிடையே கலைக்கழகப்போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டியில் ஒருமுறை நான் தமிழ் மனப்பாடப்போட்டியில்
முதற்பரிசு பெற்றேன். ஆங்கிலத்தில் மூன்றாவதாக
வந்தேன்.
எனக்குக் கல்லூரிப்படிப்பு சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம். எனது அம்மாவின்
அக்கா வீட்டில் தங்கிப்படித்தேன்.பெரியம்மாவுக்குத்தெரியாத புராணக்கதைகள் கூட இருக்குமா
என்ன? எத்தனையோ கதைகள் சொல்லியிருப்பார். பல்கலைக்கழகத்தில் சர். சி. பி ராமசாமி அய்யர் பெயரால் பெரிய நூலகம் இருந்தது. இன்றும் அது சிறப்பாக இயங்குகிறது.அந்த நூலகத்தில்
தமிழ் நூல்களைத்தொடர்ந்து படித்து வந்தேன். பல்கலைக்கழக ஆண்டு மலரில் பாரதிதாசனைப்பற்றி
‘பாரதிதாசனின் பனுவலில் சில’ என்னும் தலைப்பில்
ஒரு கட்டுரை எழுதினேன். அதுவே அச்சில் வந்த என்னுடைய முதல் படைப்பு. கோவை விவசாயக்கல்லூரியின் ஆண்டு மலர் ஒன்று
வாசிக்கக் கிடைத்தது. அதனில் பல்வேறு படைப்புகளைப்படித்தேன். உலகத்தமிழ் மாநாட்டு மலர் ஒன்றையும் பார்க்க வாய்த்தது. அதனில் வெளிவந்த ’தமிழ் மணம்’ என்னும் கி. வா ஜ
வின் கட்டுரை ஒன்று என்னை வெகுவாக ஈர்த்தது.
சிதம்பரம் நகரில்
காந்தி அமைதி நிலையத்தோடு தொடர்பு வைத்திருந்தேன். அவர்கள் நிகழ்த்தும் அனைத்து சமுதாயத்
தொண்டு நிகழ்வுகளுக்கும் சென்று வருவேன். அங்கு
தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் திருவாளர்கள்
குழந்தைசாமி ஞானம் இராமசாமி செயலாளர்
குஞ்சிதபாதம் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. சர்வோதயத்தலைவர் ட்டி டி திருமலையை அங்கு வைத்து சந்தித்திருக்கிறேன்.
சிதம்பரம் காந்தி நிறுவனத்தில்’ தொண்டு’ என்கிற கையெழுத்துப்பிரதி நடத்தினார்கள். அதன்
ஆசிரியர் குழுவில் இருந்து பணியாற்றினேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தியாகி ஜயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் சாந்தி சேனா என்கிற அகில இந்திய அமைப்பு
வாராணாசியைத்தலைமை இடமாகக்கொண்டு இயங்கியது.
அந்த அமைப்பின் அகில இந்திய முகாம் கர்நாடகாவின்(
அப்போது மைசூர்) பெல்காம் நகர் அருகே கடோலி
கிராமத்தில் ஒரு மாதம் நடந்தது. அதனில் கல்லூரி
மாணவனாகப் பங்கேற்றேன். இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து கல்லூரி மானவர்கள் ஆண்களும்
பெண்களும் வந்திருந்தார்கள்.பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகிய அடுத்த ஆண்டு அது. பங்களாதேஷிலிருந்தும்
கல்லூரி மாணவர்கள் பெல்காம் முகாமுக்கு வந்திருந்தார்கள்.
இந்திய விடுதலை பெற்று 25 ஆண்டுகள் முடிந்த
தருணம். இந்திய விடுதலை எத்திசையில் பயணிக்கிறது என்பது பற்றி விவாதித்தோம். விடுதலை
அடைந்து வெள்ளி விழா கொண்டாடும் தருணத்தில்
இந்திய மக்கள் நாம் எதனைச்சாதித்து இருக்கிறோம் எதனை இழந்துவிட்டிருக்கிறோம் என்பதனை ஆய்கின்ற அமர்வாக
அது அமைந்தது. காந்திஜியின் நேர்முகச்செயலாளர்
மகாதேவ தேசாயின் புதல்வர் நாராயண தேசாய் கலந்துகொண்ட முகாம் அது.
கல்லூரிப்படிப்பு முடித்து தொலைத்தகவல் துறையில் தொலைபேசி
இயக்குனராகப்பணியில் சேர்ந்தேன். டெலிபோன்
ஆப்ரேடர் பயிற்சி கோயம்புத்தூரில் முடித்தேன். பயிற்சியின் இறுதிநாளன்று ‘பகவத் கீதை’யின்
சிறப்பு பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.
கீதையும் உபநிடதமும் எனக்கு எப்போதுமே பிடித்த பெருவிஷயங்கள். ‘ ’பகவத்கீதை என் தாய்’
என்று தேசபிதா எழுதிய நூல் என்னை மிகவும் பாதித்தது
.’அறிந்தேன் என்பவர்கள் அறியாதவர்கள், அறிந்தேனில்லை என்பவர்கள்
அறிந்தவர்கள்’ என்னும் கேன உபநிடத வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை இந்திய தேசம் அனுபவித்துக்கொண்டிருந்தது.
மத்திய அரசின் தொழிலாளியாகிய நான் மத்திய தொழிற்சங்கத்தோடு உறவுகொண்டேன். தொழிற்சங்க அரங்கில் பல போராட்டங்களையும் தண்டனைகளையும்
சந்தித்தேன். தொழிற்சங்க உரிமைகளுக்காகக்குரல் கொடுத்தேன். பொதுவுடமைக்கருத்துக்கள்
இங்குதான் எனக்கு அறிமுகமாயின. பொதுவுடமைச் சித்தாந்தங்கள் மீது பெரும் ஈடுபாடு உண்டாயிற்று.
உழைப்பாளிக்கு மரியாதையும் உழைப்புக்கு அங்கீகாரமும் மார்க்சியத்தின் கொடை என்பது மறுக்கமுடியாத
உண்மை. சென்னையில் தோழர் ஜெகன் கடலூரில் ரகுநாதன் தொலைபேசி ஊழியர் தொழிற்சங்க அமைப்பில் கலங்கரை
விளக்கமாய் இருந்து எங்களுக்கு வழிகாட்டினர்.
மகாகவிபாரதி என் நெஞ்சம் நிறந்தவன். என்னை சிக்கெனப்பிடித்தவன்.
பாரதியின் கீழ்க்கண்ட கவிதை வரிகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தன.
‘தேடிச்சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள்
பேசி- மனம்
வாடித்துன்பமிக உழன்று- பிறர்
வாடப்பல செயல்கள் செய்து – நரை
கூடிக்கிழப்பருவமெய்தி-கொடுங்
கூற்றுக்கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப்போலே-நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
சுவாமி சித்பவாநந்தர் உரை எழுதிய மாணிக்கவாசகரின் திருவாசகம், வினோபாஜி எழுதிய கீதைப்பேருரைகள்
முதலியன என்னை வெகுவாய்க்கவர்ந்த புத்தகங்கள்.
பொதுவுடமை இயக்கத்தார் கொணர்ந்த தாமரை என்னும் இலக்கிய
ஏடு படிக்கத்தொடங்கினேன். தாமரை இதழ் என்னை ஈர்த்தது. கவிஞர் கே சி எஸ் அருணாசலம் அப்போது
தாமரை திங்களிதழுக்குப்பொறுப்பாக இருந்தார். தாமரையில் நிறையவே என் படைப்புக்கள் வெளிவந்தன. தொலைபேசித்துறையில் நெய்வேலியில்
ஆய்வாளராக திரு. கணேசன் என்பவர் எனக்குத் தொழிற்சங்கப்பணி
மூலமாக அறிமுகமானார். அவருக்கு இலக்கியத்தின்பால் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரே எனக்கு
‘கணையாழி’ இலக்கிய இதழை வாசிக்கச்சொல்லி சிபாரிசு செய்தார். முதன்முதலாக நான் கணையாழி
இதழை கும்பகோணத்தில் ஒரு பீடாக்கடையில் வாங்கினேன்.சுந்தர
ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் பற்றி அதனில் நீண்ட விமரிசனம் வந்திருந்தது. அதற்கு
எதிர்வினை எழுதி அனுப்பினேன். அது மறு இதழில் பிரசுரமாகியது. என் வீட்டு விலாசத்துக்கு
அக்கணையாழி இதழை அனுப்பிவைத்தார்கள். அது தொடங்கி கணையாழி இதழைத்தொடர்ந்து வாசிக்கலானேன்.
கணையாழியில் எனது படைப்புக்கள்
பல வெளியாகின. கணையாழி இதழ் என் எழுத்துக்கு வலு சேர்த்தது.
விருத்தாசலம் நகரில் நான் இருபது ஆண்டுகள் பணியில் இருந்தேன்.
நான் எப்படி எஸ்ஸார்சி ஆனேன் என்பதையும் சொல்லவேண்டும். பொதுவுடமை இயக்கத்தோடு தொடர்புடையது
எனது தொழிற்சங்கம். தொழிற்சங்க அரங்கில் ஆங்கில முன்னெழுத்துக்களைச் சொல்லியே தோழர்களை
அழைப்பது நடைமுறயாக இருந்தது.. எனது நண்பர் விருத்தாசலம் ரகுநாதன் என்னை எஸ்
ஆர். சி என்று தொழிற்சங்க வருகைப்பதிவில் குறிப்பிட்டிட்ருந்தார்.
ஏற்கனவே எஸ். ராகவேந்திரன் என்பவர் எஸ். ஆர்
ஆகியிருந்தார் ஆக நான் எஸ் ஆர் சி ஆனேன்.
அதனையே எஸ்ஸார்சி ஆக்கிக்கொண்டேன். என் நண்பர்
ரகுநாதன் மீது இன்றும் என்றும் நான் வைத்திருக்கும் உயர்ந்த மரியாதையும் அன்புமே அதற்குக் காரணம். எஸ்ஸார்சி – ஒரு தமிழ் எழுத்தாளருக்கு இப்படியும்
பெயர் ஆங்கிலத்தில் வரலாமா? என்னை விமர்சித்தவர்கள் அனேகர் உண்டு. கவிஞர் பழமலய் இதனைக் கணையாழியிலேயே எழுதினார். ‘நாம் என்ன எழுதுகிறோம்
அதுவே பிரதானம். ஒருவரின் பெயர் ஏதும் செய்துவிடப்போவதில்லை’
என்பதில் உறுதியாய் இருந்தேன்.
விருத்தாசலத்தில்
எழுத்தாளர்கள் பலரைச்சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் பழமலய், வே. சபாநாயகம்,
பல்லடம் மாணிக்கம், அருணா ஜவுளியகத்து சதாசிவம் அண்மையில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற
இமயம், கண்மணி குணசேகரன், கரிகாலன், இரத்தின
புகழேந்தி, சு. தமிழ்ச்செல்வி, கோவில்பட்டி சங்கர், பட்டிசெங்குட்டுவன், தெய்வசிகாமணி,
தபசி, பல்லவிகுமார் என்று இலக்கியக்கர்த்தாக்களின் குழாம் விருத்தாசலம் நகரில் இயங்கிக்கொண்டிருந்தது.
விருத்தாசலம் நகரம் ஒரு இலக்கியபூமி. எனது முதல் சிறுகதைதொகுப்பு’மறுபக்கம்’
கட்டுரை நூல்’ சில ஆய்வுகள் மதிப்புரைகள் விமர்சனங்கள்’ 1996ல் வெளியானது. அறிமுக விழாவினை
பல்லடம் மாணிக்கம் ஏற்பாடு செய்தார். புத்தகங்களின் பிரதியை தருமபுரி தொலைபேசிநிலையத்தில்
பணியாற்றிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பினேன்.
அவை படித்து ஜெயமோகன் எனக்கு ஒரு விரிவான கடிதம் எழுதினார். நூலறிமுக விழாவுக்கு ஜெயமோகனை அழைத்தேன். அவரும் வருவாதாக சம்மதித்தார்.
ஜெயமோகனுக்கு எதிர் அரசியல் முளைவிட்டிருந்த தருணம். அவரை அழைத்து விழா நடத்த முடியவில்லை.
இலக்கிய உலகில் வெண்முரசைச் சாதித்து விசுவரூபம் எடுத்து நிற்கிறார் இன்றைய ஜெயமோகன்.
அன்று எனக்கு அமைந்துவிட்ட
சூழல் அப்படி. நூல் அறிமுகவிழா கவிஞர் பழமலய்
குரல் நடராஜன் குறிஞ்சிவேலன் வே. சபாநாயகம்
மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களோடு முடிந்துபோனது. வந்திருந்தோர் ‘சனாதனியின் எழுத்து’
என்று என் படைப்பைக்கடுமையாக விமரிசித்தார்கள்.
விவரமில்லாமல் என் அண்ணனை விழாவுக்கு
வரச்சொல்லியிருந்தேன். அவர் கண்கள் ஈரமாகிப்போனார். ஒரு நல்லவிஷயம் நடந்தது.
அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த குறிஞ்சி வேலன் என் முதல் நாவல் வெளிவர மணியம் பதிப்பகத்து
சம்பந்தனார் வழி எனக்குப்பேருதவி செய்தார்.குறிஞ்சிவேலன் என்றும் என் வணக்கத்துக்குரியவர்.
அருகே உள்ள நெய்வேலியில் வடலூரில் கடலூரில் விழுப்புரத்தில்
என நிறைய இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். நெய்வேலி பாலு, மருதூர் அரெங்கநாதன், வேர்கள் இராமலிங்கம்,ஜீவகாருண்யன்,
பாரதிக்குமார், சத்திய மோகன், ஜி டி போஸ்கோ,
உ, செ துளசி, ஆயிஷா நடராஜன், வளவதுரையன், ச. சிவராமன் க. பொ இளம்வழுதி கோவி ஜெயராமன் வெ. நீலகண்டன் பேராசிரியர்கள் பாஸ்கரன்
குழந்தைவேலன் என்று இலக்கியத்தோழமையின் வரிசையைச் சொல்லிக்கிண்டேபோகலாம். வடலூர் ஜி. டி போஸ்கோவின் ‘சரியா’ இலக்கிய அமைப்பில் தங்கர் பச்சான் தான் எழுதிய
‘ ஒன்பது ரூபாய் நோட்டு’ புதினம் பற்றிப்பேசினார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தார்
ஆண்டுதோறும் நடத்திய ‘புத்தககாட்சி மிகப்பயனுள்ளதாக இருந்தது. நெய்வெலியில் கிழக்கு பதிப்பக பத்ரியோடும் பா. ராகவனோடும்
அனேகமுறை பேசியிருக்கிறேன்.
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற குறிஞ்சிப்பாடி குறிஞ்சிவேலனின் நட்பு எனக்கு கிடைத்த பெரும் பேறு. ராஜம்கிருஷ்ணனால்
பாராட்டப்பட்ட என்னுடைய முதல் புதினம் ‘மண்ணுக்குள் உயிர்ப்பு பத்தகத்தை குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பகம் வெளியிட்டது. தமிழக
அரசு விருதுபெற்ற’ நெருப்புக்கு ஏது உறக்கம்’ நாவலை குறிஞ்சிப்பாடி அலமேலு பதிப்பகம் வெளியிட்டது.
. திசைஎட்டும்
மொழிபெயர்ப்புக்காலாண்டிதழ் குறிஞ்சிவேலனை ஆசிரியராகக்கொண்டு சிறப்பாக வெளிவருகிறது.
அந்த இதழின் ஆசிரியர் குழுவிலும் என்னை குறிஞ்சிவேலன் இணைத்துக்கொண்டர். நல்லி குப்புசாமி
செட்டியார் ஆதரவுடன் இந்து நடராஜன் நட்புக்கரங்களோடு திசை எட்டும் தனது சாகசப்பயணத்தைத்தொடர்ந்து
நடத்திக்கொண்டு வருகிறது. ராஜாஜி எழுதிய’ Hinduism a doctrine and way of life ‘ என்கிற ஆங்கில நூலைத்தமிழாக்கம் செய்து தமிழ் வளர்ச்சித்துறையின்
பதிப்புதவிக்குத்தேர்வானேன். பட்னாகர் கவிதைகளை மொழிபெயர்த்து’ காலம் மாறும்’ என்றும், சிறந்த ஆங்கிலச் சிறுகதைகளைத்தேர்ந்து மொழியாக்கம் செய்து உலகச்சிறுகதைகள் என்றும் வெளியிட்டேன். தாரணி பதிப்பகத்து
வையவன் நெறிப்படுத்தினார்.
மாவட்டத் கடலூருக்குப் பதவி உயர்வோடு பணிமாற்றல் பெற்றுச்சென்றேன்.
அங்கு தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் மீண்டும் செயல்பட அந்தப்பொறுப்பினை எடுத்துக்கொண்டேன்.
பொன்னீலன் தனுஷ்கோடி ராமசாமி காமராஜ் இரவீந்திரபாரதி ஸ்டாலின் குணசேகரன் நூற்கடல் கோபாலய்யர் கவிஞர் பழமலய் ஆயிஷா நடராஜன்
மதுராந்தகம் ரகுவீரர் விழுப்புரம் அண்ணாதுரை
ஆகியோர் இலக்கியப்பெருமன்றச்செயல்பாடு சிறக்க
பல நிகழ்வுகளில் பங்கேற்று பேருதவி
செய்தார்கள். கடலூர் தொலைபேசி ஊழியர்கள் சிரில் நினைவு அறக்கட்டளை என்கிற அமைப்பைத்துவக்கி
தமிழ் வளர்ச்சிக்குத்தொண்டு செய்து வந்தனர். தோழர் சிரில் கடலூர் பகுதியில் தொழிற்சங்க
இயக்கத்தில் முன்னோடியாய் இயங்கியவர். சிறுகதை எழுத்தாளரும்கூட. அந்த அறக்கட்டளைஅமைப்பின் பொறுப்பாளராய் பத்தாண்டுகள்
பணியாற்றினேன். ஞானக்கூத்தன் தா. பாண்டியன் ராஜம் கிருஷ்ணன் பிரபஞ்சன் காசி ஆனந்தன்
அ. வெண்ணிலா சு.தமிழ்ச்செல்வி .புதுவை ராஜ்ஜா அறிவுமதி தஞ்சைகாமராஜ் அகரமுதல்வன் போன்ற இலக்கியப்பெருமக்கள் நிகழ்வுகளுக்கு வருகைதந்து
பெருமை சேர்த்தார்கள். கடலூர் நகரில் சங்கு வளவதுரையன் ராஜாராம் அரெங்கனாதன் க.பொ இளம்வழுதி பாஸ்கரன் ஜெயஸ்ரீ ரகு தம்பதியர்போன்ற
இலக்கிய வித்தகர்களின் தொடர்பு பேருதவியாக இருந்தது.
என்னுடைய முதல்
கவிதை நூல்’ ரணம் சுமந்து’ வல்லிக்கண்ணன் முன்னுரையோடு இலங்கை
எழுத்தாளர் தேவகாந்தன் வெளியிட்டார். கோவை ஞானி நிகழ் இதழில்
என் கவிதைகள் சில வெளியிட்டு என்னைப்பெருமைப்படுத்தினார்.காஞ்சிபுரத்தில்
வெ. நாராயணன் ஏற்பாடு செய்த ஒரு இலக்கிய நிகழ்ச்சியில்
தேவகாந்தனையும், இலக்கியவீதி இனியவனையும் சந்தித்து உரையாடினேன்.
அன்புக்கொண்டல் பட்டுக்கோட்டை மு. ராமலிங்கம் அவர்கள் இலக்கியச்சிறகு என்னும்
தமிழ் இலக்கிய இதழும் ஷைன் என்னும் ஆங்கில இதழும் கொண்டுவந்தார்கள். இரண்டு இதழ்களிலுமே
நான் என்னுடைய பங்களிப்பைச்செய்தேன். நான் ஆங்கிலத்தில் எம் ஏ, எம் ஃபில் பயின்றனதால் ஆங்கில இலக்கியங்களின் மீது இயல்பாகவே ஆர்வம் உண்டாகியது. ஆங்கிலக்கவிதைகள்
கட்டுரைகள் எழுதி இலக்கியச்சிற்றிதழ்களில் வெளியிட்டேன். ஒரு கவிதை நூலும்
(Rainbow) , பேகனும் திருவள்ளுவரும் என்னும்
ஒப்பாய்வு ( Comparative study) நூலும் வெளிவந்தது. பின்னர் சென்னைக்கு மாற்றலாகியது.
தொடர்ந்து இலக்கியப்பணியைச் செய்துகொண்டிருந்தேன். யுகமாயினி சித்தன் டிஸ்கவரி புத்தக அரங்கில் எனது ‘வேதவனம்’ பாரதம் போற்றும் பைந்தமிழ்க்கவிஞர்கள்’
நூல்களுக்கு அறிமிகவிழா நடத்தினார். நிகழ்ச்சிக்கு நரசய்யா மு. மேத்தா இளம்பாரதி ராஜ்ஜா
சங்கரநாராயணன் எட்வின் போன்றோர் வந்து சிறப்பித்தனர்.
வையவன் சந்தியாநடராஜன் சங்கரநாராயணன் உதய கண்ணன் சத்யாநந்தன்
அக்களூர் இரவி சிறகு ரவிச்சந்திரன் அழகியசிங்கர் மந்திரமூர்த்தி அழகு கே.பி நாகராஜ் போன்றோர் தோழமையோடு இலக்கியப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
பெங்களூரில் வசித்துக்கொண்டு தமிழ் எழுத்து உலகில் சாதனைகள் நிகழ்த்தி வரும் வளவனூர் பாவண்ணனின் தொடர்பு
என் இலக்கியப்பங்களிப்புக்கு வளம் சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. அவருடைய படைப்புகள்
பலவற்றை ஆய்ந்து ‘ பாவண்ணனின் எழுத்துலகம்’ கட்டுரை நூல் கொண்டுவந்தேன். சென்னை கலை
இலக்கியப்பெருமன்றத்து பாஸ்கர் உதவியோடு இணைய வழி மெய்நிகர் இலக்கிய நிகழ்வுகளில்
நிறைவாகப்பங்கேற்றேன். பெங்களூரில் வசிக்கும் மூத்த தமிழ் எழுத்தாளர் விட்டல் ராவ் இலக்கிய நட்பும் எனக்கு தொடர்ந்து என் எழுத்துக்கு உதவுகிறது.
நாவல் சிறுகதைத்தொகுப்பு கவிதைநூல் கட்டுரைநூல் மொழிபெயர்ப்பு
என இதுவரை 34 நூல்கள் வெளியாகியுள்ளன.
இதழ்கள் திண்ணை
சொல்வனம் விருட்சம் சிறகு தினமணிக்கதிர் பேசும் புதிய சக்தி சங்கு புதிய பல்லவி போன்றவற்றில்
அவ்வபோது இலக்கியபங்களிப்பு செய்கிறேன். அழகிய சிங்கர் நிகழ்த்தும் மெய்நிகர்
இலக்கிய அமர்வுகளில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறேன்.
நெருப்புக்கு ஏது உறக்கம் புதினத்திற்கு தமிழக அரசு விருது வழங்கியது. சேலம் தாரையார் விருதும் இந்நூலுக்கு
வழங்கப்பட்டது. கனவு மெய்ப்படும் புதினம் என் சி பி ஹெச் விருது திருப்பூர் இலக்கியச்சங்க
விருது பாரத ஸ்டேட் வங்கி விருது என்று மூன்று விருதுகள் பெற்றது. நெய்வேலி நிலக்கரி
நிறுவனத்தாரால் சிறந்த எழுத்தாளராகவும் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டேன். பேசும்
புதிய சக்தி இதழ் நடத்தும் சிறுகதைப்போட்டியிலும், சிவசங்கரி தினமணி சிறுகதைப்போட்டியிலும்
ஆறுதல் பரிசுபெற்றேன். கரூர் இலக்கியச் சிகரம் விருது, கம்பம் பாரதன் அமைப்பின் விருதுகள்
இருமுறைபெற்றேன். இவை என் எழுத்து தொடர்ந்து வெளிவரத்தூண்டுகோல்களாக இருந்து உதுவிசெய்கின்றன.
தமிழ்ப்படைப்புகளில் நான் மூன்று நூல்களை எப்போதும் வியந்து
போற்றி வருகிறேன். அவை திருக்குறள் திருவாசகம் திருமூலம் என்பன. திரும்பத்திரும்ப இந்த
அரிய தமிழ்நூல்களை வாசிப்பது எனக்கு பேரின்பம் தருவதாக அமைந்துள்ளது. தமிழ் மண்ணில்
பிறந்து தமிழ்ப் படித்து இம்மூன்று நூல்களையும்
அக்கறையோடு வாசிக்காத மனிதர்கள் இழந்தது அதிகம் என்பேன்.
இலக்கியம் பற்றி
எழுத்துப்பணி பற்றிச்சிந்திக்காத நாளை நான் வாழ்ந்த நாளாகக்கணக்கில் கொள்வதில்லை. இப்படியாய்’ நான் ஏன் எழுதுகிறேன்’ என்கிற வினாவுக்கு விடை சொல்லிவிட்டேன் என்றே கருதுகிறேன்.
‘
’
‘
No comments:
Post a Comment