Wednesday, May 13, 2026

ஆனந்தம் - மதிப்புரை

 

ஆனந்தம்

இது சாகித்திய அகாதெமியின்  பால சாகித்திய புரஸ்கார்  விருதுபெற்றது. தாசரி வெங்கட்ரமணா தெலுங்கில் எழுதிய சிறார் இலக்கிய நூல். இதனை பாரனந்தி நிர்மலா இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.  அதனைத் தமிழாக்கம் செய்தவர். வி. பத்மாவதி.  சாகித்திய அகாதெமியின் வெளியீடாக  இந்நூல் வந்துள்ளது. குழந்தைகளுக்கு மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்பிக்கின்ற படைப்பு. பாரனந்தி நிர்மலா பிரபலமான தெலுங்கு மொழி எழுத்தாளர். இவரே இந்நூலை தெலுங்கிலிருந்து இந்திக்கு மொழி பெயர்த்துள்ளார்.  நல்லி திசை எட்டும் விருது பெற்ற வி. பத்மாவதி இதனைத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்.  மூல ஆசிரியர் தாசரி வெங்கட்ரமணா தனது முன்னுரையில்,’  நன்மை மற்றும் தீமை ஆகியற்றுக்கிடையே மோதல் ஏற்படும் பொழுது வாசகர்களின் மனம் நல்லவற்றையே நாடும். ஒவ்வொரு மனமும் கதையின் இறுதியில் தீயவற்றை தோற்கடித்து நல்லவற்றை வெற்றியடையச்செய்து அதை நிலை நிறுத்தவே  விரும்புகின்றது எனக் குறிப்பிடுகிறார்.

ஆனந்தம் என்கிற முதல் கதை எடுத்த எடுப்பிலேயே இப்படி சொல்லி ஆரம்பிக்கிறது.’ பிறர் நல்லது என நினைக்கும் பொருட்களைவிட நமக்கு நல்லதெனத் தோன்றும் பொருட்களில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது’ சுலஷன் நல்ல வாழ்க்கையைத் தனக்குப்பிடித்த மாதிரி எளிமையாய் வாழ்கிறான். அவனுடைய மாமனார் தனஞ்சயனுக்கு  மாப்பிள்ளை ஆகா ஓகோ என்று வாழவில்லை என்கிற வருத்தம் இருக்கிறது. செல்வநிலையில் உச்சத்தில் இருந்த மாமனார் போன்றே  சுலஷனும் ஒரு நாள் ஆகிப்போனான். ஆனால்  மாமனார்   தனஞ்சயனுடைய வியாபாரம் படுத்துவிட்டது. சுலஷன் அவனுக்கு உதவுகிறான். நகரத்தில் இருந்த கடையில் மாமனாரை அமர்த்திவிட்டு தான் கிராமம் நோக்கி மீண்டும் சென்று  தொழில் செய்கிறான். பணம் சம்பாதிக்கவும் முடியும் எளிமையாக வாழவும் முடியும் என்பதை நிரூபிக்கிறான்.

இரண்டாவது கதை  ‘புத்திசாலி மனிதன்’. இதனில்  வரும் சாரங்கன் என்னும் பாத்திரம் இப்படிப்பேசுகிறது.’ பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டைபோட்டால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி அவரிடம் கூறினேன்.இது மட்டுமல்லாமல், நாம் பிறரைவிட புத்திசாலி என்பதைக்காட்ட பகையை நட்பாக மாற்றுவதுதான் உலக வழக்கம் என்றேன்’.தனது புத்திசாலித்தனத்தால்  பிறருக்கிடையில் அன்பை வளர்க்கின்ற சாரங்கன் நம் மனதைத் தொட்டுவிடுகிறான். மூன்றாவது ’கதை சுப்ரதீக்கின் கேள்வி’. இக்கதையில்  இரத்தினகிரி அரசவையில்  பல பண்டிதர்களை வென்ற கங்கணம் என்பவருடைய ஆணவத்தைத் தனது மூன்று கேள்விகளால் சுப்ரதீக் என்னும் ஆடு மேய்ப்பவன் வென்று விடுகிறான்.

ஐந்தாவதாக வரும் கதை’பணத்தால் பிரச்ச்னை’. இக்கதையில் வரும் சேஷாசலம் என்னும் வியாபாரி யதார்த்தமாகப்  பேசுகிறார்.’ நண்பராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் கணக்கு வழக்கு  சரியாக இருந்தால் நட்பு எப்பொழுதும் நிலைத்து இருக்கும்’. ஆறவதாக வரும் கதை’ பொறாமை’. இக்கதையில் வரும் விட்டல் சிவபெருமானை நோக்கித் தவமிருக்கிறான். சிவபெருமான் அவன் முன்னே தோன்றியபோது’ ’ பரதன்  என்பவன்  முட்டாளக வேண்டும். அவன் எப்பொழுதும் கல்வியில் எங்கள் பின்னாலேயே இருக்க வேண்டும்’ என்று வரம் கேட்கிறான். விட்டலின் மனதில் இருந்த பொறாமைத் தீ அவனுடைய மனதில் இருந்த விவேகத்தை அழித்து விட்டது. சிவபெருமானே அவன் முன்னர் பிரத்யட்சமான போது  அற்பமான வரத்தையே கேட்கிறான்.

,பதிநான்காவது கதை,’ அதீத பணிவு’.  எல்லாக் கதைகளிலும் வருவது போல் அதன் தலைப்புக்குக் கீழ்  மூன்று வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வாசகனுக்குக் கனமான செய்தியொன்றைச் சொல்கிறது.’ பணிவானவர்கள் நம்மிடம் முறையாக நடந்து கொள்வார்கள். அதிகமாகப் பணிவைக்காட்டுபவர்கள் சமயம் கிடைக்கும் பொழுது நமக்குத் தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி மனிதர்களிடமிருந்து  தப்பித்து விடவேண்டும்.’ செளஷீல்ய நகர அரசன் நரோத்தமன் அந்தப்புரத்தில் இருந்து ரகசியங்கள் கசிந்து  அண்டை நாட்டு அரசருக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அப்படிச் செய்பவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.  பணியாட்கள் அனைவரும் அரசனை பத்துமுறைச் சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று அறிவித்த  போது அவசர அவசரமாக  அரசரை சுற்றிவர விரைந்த  இருவரை  அவர்களே   அந்த ஒற்றர்கள் என்று கண்டு பிடித்து நாடு கடத்துகின்றனர்.

பதினெட்டாவது கதையாக வருவது’ சந்தேக நிவர்த்தி என்னும் கதை. மனிதன் உயிரோடு இருக்க உணவு வேண்டும். ஆனால் சாப்பிடுவதற்காகவே  வாழக்கூடாது என்னும் நியதியைச் சொல்கிறது. ஒரு முறை செளஷீல்ய அரசர் சர்வோத்தமனுக்கும் அரசி  நிர்மலாதேவிக்கும்  ஒரு வாக்கு வாதம் வருகிறது. மகாராணி’ மனிதனுக்கு காற்று தண்ணீர் ஆகாரம் இவை மட்டுமே அவசியம் என்கிறார். அரசரோ ‘ மனிதன் வாழ்வதற்கு உனவுதான் முக்கியம் என்பது உண்மைதான்! ஆனால் உணவால் மட்டுமே அவன் திருப்தி அடைவதில்லை’ என்கிறார். இதைக்  விதூஷகர் கேள்வியுறுகிறார்’ இதில் எது சரி எது தவறு என்பதைக்கண்டு சொல்லப் பணிக்கப்படுகிறார்.   ஒரு காவலாளியை ஒரு வாரம் சிறையிலடைத்து  அவனுக்கு உணவு  மட்டும் அளிக்கவே  ஏற்பாடு செய்கிறார். காவலாளியோ ஒரு வாரத்தில் எப்போது விடுதலையாவோம் என்று நொந்து போய்விடுகிறார். தற்கொலை செய்துகொள்ளவும் துணிந்து விடுகிறார்.  ஆக மனிதனுக்கு,   ஆனந்தம் மகிழ்ச்சி யோசனை ஆவேசம்  ஆகியவையும் வேண்டும் என்கிற நியதியைச் சொல்லுகிற கதையாக இது மலர்கிறது.

இருபத்தியோராவது கதை’ உண்மையான வெற்றி’. சுருட்டு பிடிக்கும் தந்தையை மகன் தன்னுடைய  போராட்டத்தால் திருத்தி  வெற்றிகொள்கிறான். தந்தை இந்தப்பிறவிக்கு  இனி  சுருட்டு பிடிக்க மாட்டேன் என்கிற உறுதியைத் தருகிறார். தந்தை மகனிடம்’ நீ ஜெயித்து விட்டய்’ என்கிறார். மகனோ தந்தையிடம் ‘ சுருட்டுப்பிடிக்கும்  பழக்கத்தை  நீங்கள்தான் வென்று விட்டீர்கள்’ என்கிறான்.

இப்படி  முத்து முத்தான சிறார்க்கதைகள் இருபத்தியிரண்டைக் கொண்ட அற்புதமான தொகுப்பு இது. சிறுவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

-எஸ்ஸார்சி

---------------------------

 

 

No comments:

Post a Comment