கடலூரில் சிரில்
நினைவு அறக்கட்டளையின் தமிழ் விழா
தோழர் சிரில் நினைவு
அறக்கட்டளை கடலூர் நிகழ்த்திய தமிழ் விழா 27/6/2026 சனியன்று மாலை பி் எஸ் என் எல் பொதுமேலாளர்
அலுவலக வாயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இருபத்தியிரண்டாம் ஆண்டு தமிழ் விழா இது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடலூர் மாவட்டச்சங்கம் என்.
எஃப் .டி. இ சிறப்பாகச் செய்திருந்தது.
நிகழ்ச்சிக்கு தோழர் கே. சீனுவாசன் தலைமை ஏற்றார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா துவங்கியது.
கடலூர் நகரத்து தமிழ் ஆர்வலர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள்
பிஎஸ் என் எல் ஊழியர்கள் அதிகாரிகள் எனத் தோழர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.
சிரில் அறக்கட்டளையின்
செயலர் வீ. லோகநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கடந்த காலங்களில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி ஒரு அற்புதமான விளக்கம் அளித்தார். ’தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை
செய்தல் வேண்டும்’ என்கிற பாரதியின் வரிகளை உயர்த்திப்பேசினார். அடுத்து சிரில் அறக்கட்டளையின்
மேனாள் ஒருங்கிணைப்பாளர் எஸ்ஸார்சி தொடக்க உரை ஆற்றினார். கடலூ மண்ணின் பெருமைகளை வள்ளலாரர்
தொடங்கி அஞ்சலை அம்மாள் ஜெயகாந்தன் ஞானியார்
அடிகள் என்று வரிசைப்படுத்தின்மார். சிரிலின் சிறுகதை ‘நிர்வாணம்’ பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்தியாவிலேயே தாய்மொழிக்கு இத்தகைய சிறப்பு செய்யும் விழா கடலூர் மாவட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது என்பதனைப்
பெருமையோடு குறிப்பிட்டார். கடலூர் தோழர்கள் செயல்பாட்டால் வித்தியாசமானவர்கள் என்பதைத்
தொட்டுக்காட்டினார்.
தலைமை உரை ஆற்றிய சிரில் அறக்கட்டளையின் தலைவர் கே. சீனுவாசன் தமிழ் மொழியின் தொன்மை குறித்தும்
திருக்குறள் சிறப்பு பற்றியும் குறிப்பிட்டார்.
அடுத்துப் பேசிய என் எஃப் டி இ தமிழ் மாநிலத்தலைவர் சேலம் பாலக்குமார் கடலூர் மாவட்டத்துத் தொழிற்சங்க
வரலாறு குறித்துப் பெருமையோடு பதிவு செய்தார். தோழர் ஸ்ரீதரின் முனைப்பான இயக்கப்பணி குறித்துப் பெருமையோடு குறிப்பிட்டார்.
அடுத்துப்பேசிய
துணைப்பொதுமேலாளர். பாலசந்திரன் அவர்கள் ஆழ்ந்த
கருத்துக்களை முன்வைத்துப் பேசினார். தமிழ் மொழி போல் ஒரு பெருமை மிகு மொழியை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது
என்றார். தொல்காப்பியம் தொட்டு அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு
நூல்கள் ஐம்பெருக் காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் தெய்வத்தமிழ் நூல்கள் பன்னிரு
திருமுறை நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தமிமிழின் விழுமியங்களை அழகாய்ப் பதிவு செய்தார். பரிசு பெறும் மாணவச்செல்வங்களை
நிறைவாக வாழ்த்தினார்.
சிதம்பரம் தோழியர்
வை. உஷா மாணவச்செல்வங்களுக்கு முத்தாய்ப்பான
அறிவுரைகள் வழங்கிப் உற்சாகப்படுத்தினார்.
சம்மேனச்செயலர் ஸ்ரீதர் கடலூர் தொலைபேசி
மாவட்டத்தின் தொழிற்சங்கச் சிறப்பு பற்றிக்குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு தான் பணியிலிருந்து
ஓய்வு பெறவிருப்பதையும் உணர்ச்சிப்பெருக்கோடு பதிவு செய்தார். அடுத்துப்பேசிய கடலூர்
மாவட்டச்செயலாளர் அ.சு. குருபிரசாத் கடலூர்
பி. எஸ்.என் எல் தோழர்களின் சமூகப்பொறுப்பு பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.
கடலூர் அரசு கலைக்கல்லூரி
தமிழ்ப்பேராசிரியர். ஜானகி.ராஜா நிகழ்ச்சியின்
சிறப்பு அழைப்பாளர்’. வணக்கம் வள்ளுவா’’
என்கிற தலைப்பில் இலக்கியப் பேருரை ஆற்றினார்.
தேசபிதா மகாத்மா காந்தி திருக்குறளின் சிறப்பு
பற்றி எப்படி அறிந்து கொண்டார் என்பதை விவரித்தார். புத்துயிர்ப்பு இலக்கியப் பொக்கிஷத்தை வழங்கிய உலகறிந்த
ருஷ்ய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய், ’தனக்குத் திருக்குறளின் மொழிபெயர்ப்பே ஆதர்சமாக இருந்தது’ என்று மகாத்மாவிடம் குறிப்பிட்டதை
நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற பி. எஸ். என் .எல் மாணவச்செல்வங்கள் அறுவர் பணமுடிப்பும் சான்றிதழும் பெற்றார்கள். தமிழ்ப்பாடம் மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி
பெற்ற கடலூர் அரசுப்பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு பணமுடிப்பும் சான்றிதழும்
வழங்கப்பட்டன.,
விழாவின் நிறைவாக கச்சிதமானதொரு நன்றியுரையை சிரில் அறக்கட்டளையின்
பொருளாளர் தோழர். செ. ஆனந்தன் வழங்கினார்.
தேசிய கீதத்தோடு தமிழ்விழா இனிதே நிறைவுக்கு வந்தது.
தமிழ் நிகழ்ச்சிக்கு
வந்திருந்த அனைவருக்கும் சிரில் அறக்கட்டளை
இரவு சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தது
மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்- பாரதிதாசன்.
-----------------------------------------------------------------------------------