ஒளிரும் பாதை
சாகித்திய
அகாதெமி பால சாஹித்திய புரஸ்கார் பெற்ற ஸிந்தி கதைத்தொகுப்பு. இதனை எழுதியவர் ஜகதீஷ்
லச்சானி. ஸிந்தியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்த்தவர் ஷாலினி ஸாகர். தமிழில் இதனை மொழி
பெயர்த்தவர் அலமேலு கிருஷ்ணன். இது சாகித்திய அகாதெமியின் வெளியீடு. இந்நூல் ஏழு சிறுகதைகளைக்
கொண்டது. அனைத்தும் சிறுவர்களுக்கான நல்ல படைப்புகள். மூல நூலின் ஆசிரியர் ஜகதீஷ் லச்சானி
ஸிந்தி இந்தி உருது மற்றும் ஆங்கில மொழிகளில்
சிறார் இலக்கியம் படைப்பவர். மனித வள
மேம்பாட்டு அமைச்சகம் போன்ற நிறுவனங்களிடமிருந்து
அனேக விருதுகளைப்பெற்றவர். இதனை இந்தியில்
மொழி பெயர்த்த ஷாலினி ஸாகர் ஸிந்தியின் மூத்த
மொழிபெயர்ப்பாளர். இந்திமொழி இலக்கியம் கலை மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிக்காக நிறைவாகப் பங்களிப்பவர்.
இதனைத்தமிழில்
தந்த அலமேலு கிருஷ்ணன் பணி நிறைவு பெற்ற ஆசிரியை. இந்தி மலையாளம் தமிழ் சமஸ்கிருதம்
ஆங்கிலம் இவைகளுக்கிடையே மொழியாக்கம் செய்பவர். நல்லி திசை எட்டும் விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்.
மூல நூலின்
ஆசிரியர் ஜகதீஷ் லச்சானி தன்னுடைய முன்னுரையிலிப்படிக் குறிப்பிடுகிறார்.
‘இன்றைய காலகட்டத்தில்
இலக்கியவாதிகள் இலக்கியம் படைக்கும்போது அறிவியல் முன்னேற்றத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியையும் அறிவியல் முன்னேற்றத்தையும் குழந்தை இலக்கியத்தின் எல்லைக்குள்
கொண்டு வருவதால் புதிய குழந்தை இலக்கியம்
உருவாவதோடு குழந்தைகளின் அறிவியல் அறிவின்
பரப்பு விரிபடும். குழந்தைகளின் கற்பனை சக்தியும் ஒளிரும்.
முதல் கதை
‘சிவப்பு வைரம்’ பழங்காலத்திய ராஜா ராணி கதை
போல் தொடங்குகிறது. கதை முழுவதும் டிஜிடல் ஊடகங்கள்,கணினிகள்,தொலைக்காட்சிகள்,ரோபாக்கள்,
லேசர் உபகரணங்கள், போன்ற இன்றைய அறிவியல் கருவிகள் மற்றும் தொழில் நுட்பங்களின் பயன்பாடுகளைக்
கூட்டி திறம்பட வழங்கியுள்ளார் ஆசிரியர். சிந்து நாட்டின் இளவரசி ரூபவந்தி சிந்துக்கடலிலிருந்து சிவப்பு வைரத்தை வெளியே கொண்டு வரும் வீரனையே மணப்பது என்கிற முடிவோடு உள்ளார். துணிச்சல் மிக்க இளவரசர்கள் இம்முயற்சியில் இறங்கி
இறந்து போனார்கள். சிந்து தேச இளவரசன் விக்ரமன்
ரூபவந்தி மீது காதல் கொள்கிறார். சிவப்பு வைரத்தை கண்டு எடுக்க அவர் நிகழ்த்தும் போராட்டம்தான் இந்தக் கதை. ரூபவந்தி விக்ரமின் சாகசங்களைத் தொடர்ந்து ஒளிப்படக்கருவிகள் தொலைக்காட்சிகள் மூலம் காண்கிறார்.
எட்டுக்கால் உயிரினம் மற்றும் சுறா மீன் நிகழ்த்தும் போர் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளது.
சிந்துக்கடலின் அடியில் சங்கு வடிவப் புழுவின்
வயிற்றில் சிவப்பு வைரம் இருப்பது உறுதியாகிறது. ரோபோ, ஹார்பூன் துப்பாக்கி
உதவியால் சிவப்பு வைரத்தை விக்ரமன் வெளியே கொண்டு வருகிறார். இளவரசியின் கையில் சிவப்பு வைரம் தரப்படுகிறது. இளவரசரின்
கழுத்தில் இளவரசியின் மலர் மாலை விழத்திருமணம் முடிகிறது.
இரண்டாவது
கதை எலிகளின் வசிப்பிடம். கிராமங்களில் எலிகள்
திடீரென எண்ணிக்கையில் பெருகுகின்றன. அட்டகாசம் தாங்க முடியவில்லை. தானியங்கள் கொள்ளை
போகின்றன. எலிகளைக்கட்டுப்படுத்த முடியவில்லை. எலிகள் மக்க்களைத் தாக்க ஆரம்பித்தன.மக்கள்
திண்டாடுகின்றனர். ஹெலிகாப்டர் வைத்து எலிகள்
இருப்பிடத்தை ஆய்வு செய்கின்றனர். எலிகள் பூனைகளைக்கூட
விரட்ட ஆரம்பித்தன. ரோபோக்கள் மக்களுக்கு உதவி
செய்கின்றன. எலிகளுக்கு ’சூம் சூம்’ எனும் மொழி இருக்கிறது. அவை தம்முள் பேசிக்கொள்கின்றன.
புல்லாங்குழல் வாசித்து எலிகளை மயக்கிய பழங்கதை கேட்டு அதனையும் பயன் படுத்தினர். எலிகளை
அழிக்க முடியவில்லை. அணுகுண்டு வெடித்து ஏரியை உடைத்து வெள்ளத்தில் எலிகளைச் சாகடிக்க முனைகிறார்கள். எலிகளோ மலையில்
குடியேறி விடுகின்றன. நிலநடுக்கம் வருகிறது.
மலைகள் எரிமலைக்குழம்பைக் கக்குகின்றன. இயற்கையே
எலிகளைக் கட்டுப்படுத்துகிறது.
குருவின்
அறிவுரை என்பது அடுத்த படைப்பு. ஒரு அரசர் தன் மகனை இழந்த சோகத்தில் அரச கடமையைச் சரியாக செய்யாமல் சோகத்தில் இருந்தார்.
வழக்கமாக அறிவுரை கூறும் மதகுருவின் வார்த்தையை மதிக்காமல் இருக்கிறார். மதகுரு சென்ற
பிறகு அரசரின் மனசாட்சி அவரைப்பிடித்து உலுக்குகிறது. மதகுருவை அவமானப்படுத்தி விட்டோம்
என வருந்துகிறார் ஒரு வாரம் கழித்து மதகுரு அரசைக் காண மீண்டும் வருகிறார்.
அரசர் மதகுருவிடம் மன்னிப்பு கோறுகிறார். மதகுரு சொல்கிறார்,’ மனிதன் தன் துக்கங்களை
மட்டும் நினைத்துக்கொண்டால் அவனால் உலகில் வாழமுடியாது.தன் கடமையைச் செய்யமுடியாது.’
என்று அரசரை எச்சரிக்கிறார்.
ஒளிரும் பாதை
என்கிற கதை அடுத்து வருகிறது. இதனில் ஒரு அரசர்
தான் புண்ணியம் சம்பாரிக்க வேண்டும் முனைகிறார். ஏது ஏதோ அறச்செயல்கள்
செய்கிறார். ஒரு யோகியின் யோசனைப்படி பிறருக்கு சேவை செய்வதன் மூலமே பெரிய புண்ணியம் தனக்குக் கிடைக்கும் என செயல்படுகிறார்.
யாரும் அவரை சேவை செய்ய அனுமதிக்கவேயில்லை. ஒரு குடிசையில் வாழும் கிழவி அரசருக்குச்
சொல்கிறாள்,’ அரசர் மக்களைக் காப்பவர். அவர் ஆட்சியை நேர்மையோடும் நீதியோடும் நடத்தி
மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார் என்றால் அது மட்டும் என்ன குறைந்த
சேவையா?’
அரசருக்கு
ஒளிரும் பாதையை அந்தக்குடிசைக் கிழவியே காட்டி
முடிக்கிறாள். அடுத்த ’கதை நித்திரைத் தெய்வம்’. தூக்கமே வராது அவஸ்தைபட்ட ஒரு அரசரைத்தூங்க வைக்க எத்தனையோ முயற்சி நடக்கிறது. அரசர் குழந்தையாக இருந்தபோது
கேட்ட தாலாட்டுப்பாடலைப் மீண்டும் பாடுகிறார்கள்.
அரசர் தூக்கம் வந்து நன்கு தூங்குகிறார். பிரச்சனை
தீர்ந்தது.
ஆறாவது கதை ’கருப்புப் பெட்டி’. விமான விபத்தொன்றில்
கிடைக்கும் கருப்புப்பெட்டியால் விமான விபத்து
எப்படி நேர்ந்தது என்பது அறிய முடிகிறது. எலி ஒன்று என்ஜினுக்கு பெட்ரோலை வழங்கும் குழாய்களை அறுத்து விட்டதே அந்த விபத்துக்குக்
காரணம் என்று முடிவாகிறது.
கடைசியாக
வருவது’ மகிழ்ச்சியாக இருப்பது யார்?’ என்னும் கதை. கருப்பு நாய் ஒன்று தான் நாயாகப் பிறந்து துன்பப்படுவதாக நினைக்கிறது.
காடு நோக்கி ஓடுகிறது.பிற விலங்குகள் பேசிக்கொள்வதை அந்த நாய்க்கேட்கிறது. மீன்கள்
பறவைகள் பூனை இவை இந்த நாயின் வாழ்க்கையே சிறப்பானது என்று சொல்கின்றன. ‘ வாழ்க்கை என்றிருந்தால் துயரமும்
இருக்கும். அவற்றை எதிர் கொள்வது ஒவ்வொரு உயிரினத்தின் கடமை என்கிற அறம் வாசகனுக்குச்
சொல்லப்படுகிறது. இப்படி உண்மையை அறிந்த பின் மீண்டும் அந்த கருப்பு நாய் தன் எசமானரை
நோக்கிச் செல்கிறது.
அற்புதமான
கதைகள் ஏழு. வாசகர்கள் படித்து மகிழவும் சிந்திக்கவும் வாய்ப்பு தரும் சிறார் கதைகள் இவை.
- எஸ்ஸார்சி