Sunday, November 10, 2013

நீலமணியின்' செகண்ட் தாட்ஸ்'





நீலமணியின்' செகண்ட் தாட்ஸ்' -எஸ்ஸார்சி


நீலமணி யின் தமிழ்க்கவிதை அறிவோம்.நீலமணிக்கென ஒரு கவிதைப்பாணி.முத்து முத்தாய் அவிழும் சொல்ரத்தினங்கள்.வாசிப்புச்சுகம் அனுபவிக்கின்ற அதே தருணம் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நீலமணி என்னும் படைப்பாளி உச்சத்துக்குப்போய் வாசகனுக்கு அனுபவமாவார்.
நீலமணியின் ஆங்கிலக்கவிதைகள் ஒரு தொகுப்பாக 'செகண்ட் தாட்ஸ்' என்னும் பெயரில் வெளிவந்திருப்பது நல்ல விஷயம். புதியதோர் நல் வரவு.நீலமணி தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல பதிப்பாளர் வெள்ளயாம்பட்டு சுந்தரம் ஒரு தூண்டுகோல்.வெள்ளயாம்பட்டு கவி நீலமணியை ச்சரியாகவே கணித்திருக்கிறார். தமிழ்ச்சூழலில் வாழும் வெளியீட்டாளர்கள் இடையே எளிமையும் உயர்வும் நேர்மையும் இயல்பாய் அமைந்து இயங்குபவர்களில் வெள்ளயாம்பட்டு சுந்தரம் ஒருவர். அவரின் தெரிவு பாராட்டப்படவேண்டும்.
கும்பகோணம் பாணாதுரை உயர் நிலைப்பள்ள ஆங்கில ஆசிரியர் பார்த்தசாரதி அய்யங்க்காருக்கு நீலணி இப்படைப்பை சமர்ப்பித்துள்ளார். ஒரு உயர் நிலைப்பள்ளியின் ஆங்கில ஆசான் எத்தனை ஆழமாக நீலமணி போன்றோர்களால் உள்வாங்கப்பட்டிருக்கிறார் என்பது உற்சாகம் தருகிறது. இத்தொகுப்பு நூலுக்கு அணிசெய்யும் அணிந்துரைகள் நல்கிய அவ்வை நடராஜன்,கணபதி,ம.லெ.தங்கப்பா,ஈஸ்வரமூர்தி ஆகியோர் நீீலமணியின் படைப்புக்கு நிறைவாகவே வாசகவலு சேர்த்திருக்கிறார்கள். வாருங்கள் கவிதைத் தொகுப்புக்குள் நுழைவோம். .
'ஹங்ரி ஸ்டோன்ஸ்' என்னும் தலைப்பு கொண்ட கவிதை தொகுப்பில் மூன்றாவது கவிதையாக வருகிறது.கடவுள் பற்றி அக் கவிதை தரும் செய்தி வாசகனை விஸ்தாரமாய் ச்சிந்திக்க வைக்கிறது. கடவுளைக்கல்லில் வடித்ததே சரி. இறை தொழுவோர் உணர்வுக்கொதிப்பில் ஏனைய உலோகங்கள் உருகிப்போய்விடுமே ஆகத்தான்.
வசதி படைத்த ஆலயங்களில் வாழ்கின்ற(?) கடவுளுக்கு படைக்கப்படுவது மூன்று வேளை உணவு. அங்கே முப்பது வேளை நிவேதனம் கூட சாத்தியமாகலாம் ஆனால் சிதிலமாய்ப்போன கடவுள்கள் பட்டினித்தான் கிடக்கின்றன.கடவுள் ஏன் கல்லானார் என்பதற்கு மனித மனம் கல்லாய்ப்போன அச்சோகமே காரணம் என்கிற அந்தப் பார்வையும் நாம் அறிந்த ஒன்றுதான்.
.'இன்வட் தான்ஸ்' என்னும் கவிதை துன்பத்தை ப்பார்த்து 'தேங்க்ஸ் ஃபைன் ஃபார் யுவர் கம்பனி ' என்று பேசுகிறது.வள்ளுவர் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் என்றும் இடும்பைக்கே இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்றும் பேசுதலை இவ்விடத்து ஒப்பிட்டுப்பார்க்கலாம்.'காப்லெட் ஆஃப் ஃபயர்' என்னும் கவிதை, சிறு சுள்ளிக்குச்சி மீது அமரும் சிட்டுக்குருவி கடவுளின் ஆயிரம் பணி போற்றி ப்பாடுதலை எடுத்து ச்சொல்கிறது.
கடவுள் மரமொன்றின் பொந்தில் சிறு நெருப்பை வைத்தான்.காடு சாம்பலாகிவிட அன்று. அது திருவளர் அனல். அது வனவளர்ச்சியும் பசுஞ்செழுமையும் அங்கே உறுதி செய்தது. கதிரவன் வானிலிருந்து நெருப்பாய்க் காய்ந்து மரத்தை பழுப்பாகவும் இலையை பசுமையாகவும் கனியை சிவப்பாகவும் நமக்கு மாற்றிக்காட்டுகிறான். இப்படிப்பேசும் நீலமணியை சிறு நெருப்பை மரப்பொந்தில் வைத்துவிட்டு வெந்து தணிந்தது காடு என்று கூத்திடும் மாகவி பாரதியொடு ஒப்பிட்டுப்பார்க்கலாம். பாரதியின் கவிதா நெருப்பு அடிமைப்பட்டுக்கிடந்த தன் மக்களைப்பார்த்து விழி எழு போராடு ஒய்ந்திருக்க ஏது நேரம் வா வா என அழைத்தது.விடுதலை ஆனந்த விடுதலை சித்திக்கட்டும் இக்கணம் உனக்கு என்று கட்டியம் கூறிற்று.

ஃபால்ட் லைன், என்னும் கவிதை சீனாவும் இந்தியாவும் இமய மலைப்பகுதியில் முட்டிக்கொள்வது பற்றி அழகாகப்பேசுகிற்து. சின்னஞ்சிறுகவிதை .கீீர்த்தி மிகப் பெரியது.மக் மோகன் எல்லைக்கோடு என்று பிடித்துத்தொங்குகிறது இந்தியா. சீனாவுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன. திபேத்தை விழுங்கியது சீனா. மனசாட்சி மறத்துப்போனவர்களிடம் பேச என்ன இருக்கிறது. இமயத்தின் பனிமலை உருகி மக்மோகன் எல்லைக்கோடு பளிச்சென்று தெரியும் போது பிரச்சனை தீர்ந்து விடுமா என்ன. ஒரு இமாலயத்தவறு சரித்திரக்குழியில் சயனித்தபடி கிடக்கிறது.கையில் துப்பாக்கி பனிக்கட்டிகளின் மீது வாழ்க்கை. மனிதக்குருதி கொட்டி அப்பனியில் அது உறைவது பார்க்கலாம் சதாகாலமும்.
'ரெட் ஸ்டாப்' என்னும் கவிதை பெரியாரின் சிந்தனைகளை த்தொட்டுப்பேசுகிறது.காசைக்கரியாக்கும் எத்தனைப் புனிதப்பயணங்கள்.கடவுளைத்தேடியா அலைகிறாய் அவனைக் கண்டவர்கள் அவன் எதிலும்தான் ஏன் தூணிலும் துரும்பிலும் அவனே என்றார்கள்
.விதிகள் தொலைத்த சாலையில் அறிவிலிகள் சாரதிகளாய் நமக்குப் பாதி வாழ்க்கைப்பாழாய்த்தான்போனது மெத்தப்.பயின்ற பல்லிகள் மிச்ச வாழ்க்கைக்கு நன்மை சொல்லக்காணோம். படித்த பல்லிகள் நாம்தானோ? கவிதை இப்படி வாசகன் நெஞ்சம் தொட்டுப்பேசுகிறது.சமூக உணர்வோடு பேசும் நீலமணியை ச்சந்திக்க மனம் இங்கே குளிர்ந்துபோகிறது.
அமெரிக்க க்கழுகை விமரிசிக்கும் இன்னொரு கவிதை- 'ஸ்கை ஸ்டைக்'. விடுதலை ச்சீமாட்டியின் சிலை தூக்கிப்பிடித்த கையொளி அது வசதி படைத்தவன் கொள்ளை அடிக்கத்தான், பாய்கிறது பாருங்கள் அங்கே வெளிச்சம். அமெரிக்க பெற்றோல் எளியவர்களின் பசி நசுக்கிப்போடுகிறது. முடமாகின எளிய தேசங்களை.
நீலமணியின் எளிய கவிதை வரிகள் தீயின் கங்குகளாய் வாசகனோடு புரட்சி பேசுகின்றன.
ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் இன்னும் ஆயிரம் இருந்தென்ன போதிப்பது என்னவோ பேத்தலை, பொய்மையை என்கிறார் நீலமணி. அறிவுசால் விமரிசனங்கள் கூர்மையாய் கொப்பளித்து வருகிறது.
. கவிதை என்ன வியாபாரப்பொருளா, தத்துவ ப்பிரச்சாரம் எப்படிப்பொறுப்பது.படைப்பு ஒன்றில் இப்படி எல்லாம் வரலாமா?.கேட்போர் எப்போதும் இருக்கலாம்.இருக்கட்டும் விட்டு விடுங்கள். நீலமணிக்கு வருவோம்.
'ஃபெமினின் எரிகா' இது ஒரு அற்புதக்கவிதை.எளிமைச்சிகரம்.அழகின் சிரிப்பு.பெண்மையின் மாண்பினை ச்சொல்லி கவி நீலமணி காலத்தால் அழியாக்கவிதையைத் தந்திருக்கிறார்.வாசகன் மனம் நெகிழ்ந்து போதல் படைப்பாளியின் வெற்றி.வாசித்த வார்த்தைகள் இப்படி வாசகனைச் சிறை பிடிக்கின்றன.

'என்னிருப்பிலே நினது உயிர் அரண்
உனக்கு நான் எனக்கு நீ
வேறென்ன வந்திங்கு இடைபுக
மொழிகள் மொத்தமாய் வெறுமை
என்னொளியில் பாரேன்
அந்த நிஜஒளி மங்கிப்போவதை
தழுவிடு என்னை மனிதன் நீ அக்கணமே
பெண்ணை யாரென அறிவாயோ
ஆண்மகனை ஆனந்திக்க முடியாதவளா அவள்
ஆடவன் கேட்கும்
அத்தனையும் தரும் கல்பகத்தாரகை அவள்.

'டூம் ஃபேக்டரீஸ்' என்னும் கவிதையில் அறிவியலின் அழிக்கும் முகம் எத்தனைக்கொடியது என்று காட்டுகிறார் நீலமணி. கொதிக்கும் கூடங்குளம் நம் மனத்திரையில் சோகம் மீட்டுகிறது.
மண்ணில் நல்ல வண்ணம் வாழவிடுங்கள் இப்படிக் கோஷிப்போர்
எப்படி ஆகுவர் தேச விரோதிகள்
வினா வைக்கிறார் நீலமணி. நீலமணியின் ஆங்கிலக்கவிதைகள் வாசிக்கும் யார்க்கும் ஒரு இலக்கியப்பொக்கிஷம்.மனம் நிறைகிறது. இன்னும் இப்படி நிறையவே வரவேண்டும் தமிழில். படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------.










..

No comments:

Post a Comment