Sunday, November 10, 2013

சுழல்


சுழல் -எஸ்ஸார்சி


,

'புதுச்சேரியிலிருந்து நாங்க பேசுகிறோம்.சார் கடலூர் சந்திரன் தானே'
'ஆமாம். நீங்க யாரு'
' நாங்க இன்டர்னேஷ்னல் ரெசார்ட் மேகர்ஸ் கம்பெனியிலிருந்து உங்ககிட்ட தொடர்பு கொள்றம். மொதல்ல எங்களோட மெனி மெனி ஹார்டியஸ்ட் அன்ட் சுவீட் கிரீடிங்க்ஸ் உங்களுக்கு'
'என்ன விஷயம் மேடம்'
'சார் உங்களுக்கு ஒரு மெகா பரிசு விழுந்திருக்கு. அத சொல்லத்தானே கூப்பிட்டம்'
நப்பாசை சிறகடித்துக்கொண்டு மனத்திரையில் கண்களைச்சிமிட்டியது.நாம்தான் வாழும் மனிதர்களிலேயே ஆகப்பெரிய் பரிசுக்கெல்லாம் மிகமிககத்தகுதி யுடையவர்கள். ஆனால் இந்த உலகம்தான் நம்மைச்சரியாகப் புரிந்துகொண்டு அங்கீகரிக்காமல் தொடர்ந்து துரோகம் செய்துகொண்டே வருகிறது. பாழும் மனம் இதனை எத்தனை தரம்தான் சொல்லும். அதற்கே சொல்லிச்சொல்லி அலுத்துப்போய்விட்டது. எப்படி என்று கேட்கிறீர்களா? இதுகள் எல்லாம் விஸ்தாரமாய் ஒருவரால் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்ன?. விடுங்கள்.
'எனக்கு எப்படி மேடம் பரிசு விழுந்துருக்கும். நான் எந்த போட்டியிலயும்.சேரலயே மேடம்'
'அப்படி சொல்லாதிங்க சாரு. போனவாரம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்துல நடந்த அகில இந்திய கைத்தறிப் பொருட்காட்சிக்கு போயிருந்தீங்கதானே'
' ஆமாம் என் மனைவியும் கூட வந்திருந்தாளே'
'கரெக்ட். உங்க என்ட்ரி டிக்கட்டை பொருட்காட்சியில ஒரு பாக்ஸ்ல போட்டிங்கல்ல.அதுக்கு பின்னாடி உங்க செல் போன் நெம்பரையும் எழுதி போட்டிங்கதானே'
'ஆமாம்.போடச்சொன்னாங்களே'
' கரக்ட். அந்த டிக்கட்டுங்களுக்குள்ளயே குலுக்கல் மொறைல ஒரு டிக்கட்டை எடுத்து அதுக்கு பின்னாடி நீங்க எழுதிருக்கிற செல் நெம்பரு வச்சி இன்டர்னேஷ்னல் ரிசார்ட் மேகர்ஸ்லேந்து கால் பண்றம்'
'எம் பேரு எழுதி நானு போடலயே. என் மொபைல் தொலைபேசி நெம்பர் எழுதியிருந்தேன்'
' என்ன சாரு உங்க செல் நெம்பரு ஒண்ணு இருந்தா போதும்ல . பாக்கி இன்பர்மேஷன் எல்லாம் நாங்க கரந்துகொண்டாந்துட மாட்டமா. மனைவி பேரு பானுமதி இல்லையா'
'மேடம் இதெல்லாம் எப்பிடி மேடம் உங்களுக்கு'
'அது கெடக்கு விடுங்க. நாளைய மறு நாள் சனிக்கிழமை. ஒரு பதினொரு மணிக்கு புதுச்சேரி ஜவஹர்லால் நேரு வீதி இண்டியன் காபி அவுஸ் எதிர்ல நாலாவது மாடியில இருக்கிற எங்க ஆபிசுக்கு வரணும். லிப்ட் வசதி இருக்கு. உங்க மனைவியோட வரணும்.அது ரொம்ப முக்கியம்,.பரிசு வாங்கிக்கத்தான் உங்கள கூப்பிடறம். உங்களுக்குப்பரிசு தர்ரதுக்கு எங்க கம்பெனி சேர்மேன் சிங்கப்பூர்லேந்து வர்ராரு.'
'என்னா பரிசு மேடம். மனைவி கட்டாயமா கூட வரணுமா. நிகழ்ச்சிய ஞாயற்றுக்கிழமை அண்ணிக்குன்னு மாத்தி வச்சிகலாமா'
'சாரு. எங்க வேல பாக்குறீங்க. அது எதுவோ ஒரு கவர்மென்ட் ஆபீசுதானே'
'மேடம். நான் டெலிபோன்ல வேல பாக்குறன்'
'ஒத்த வரியில மூணு கேள்வி அடுக்கி கிட்டுவரும் போதே நீங்க மய்யமோ மாநிலமோ ஒரு அரசு சம்பந்தப்பட்ட ஆபீசு ஆளுதான்னு நினைச்சேன் உறுதியாயிடுச்சி'
'அது இருக்கட்டும். மேடம் எனக்கு உங்க பதிலு வேணுமே'
'என்ன கேள்வி'
'டேட்ட மாற்றி வச்சிக்க முடியுமான்னு'
'எங்க சேர்மென் வர்ராரு. ஆக எதுவும் இதுல மாத்தமுடியாது. உங்க மனைவியோட நீங்க வருணும் சாரு. திரும்பவும் சொல்லுறேன் அது கட்டாயம்'
'அப்படி மனைவியோட வல்லன்னா'
'நீங்க வரவே வேணாம்'
'என்ன மேடம் இப்படி சொல்றீங்க'
'எங்க டேம்ஸ் அன் கண்டிஷன்ஸ் நா உங்களுக்குச் சொல்லிடணும்ல'
' பரிசு மட்டும் என்னன்னு சொல்லுங்க மேடம்'
'அது எப்படி நான் சொல்றது.அதுதான் சஸ்பென்ஸ் ஆச்சே'
'எவ்வளவு வர்த் இருக்கும் மேடம்'
'நார்மலா அது யாருக்கும் சொல்றது இல்ல. நீங்க கேக்குறீங்க. அதனாலே உங்களுக்கு மட்டும் சொல்லுறன். ஒரு லட்சம் இருக்கலாம். அதுக்கு மேலயும் இருக்கலாம்'
'சரி மேடம் நான் என் மனைவியோட வந்துடறேன்'
'உறுதிதானே'
உறுதிதான்'
எனக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.மண்டையில் பரிசு விஷயம் என்னவெல்லாமோ செய்தது. என்னைப்பெற்ற என்அம்மாவோ இல்லை அது என் அப்பாதானோ எப்போதோ ஓரு சமயம் எனக்கு கொஞ்சம் யோக ஜாதகம் என்று சொல்லிப்போனதெல்லாம் ஏனோ நினைவுக்கு வந்து வந்து நிழலாடியது. எனது வலது உள்ளங்கையை ஒரு முறை பார்த்துக்கொண்டேன். தன ரேகையில் அப்படி ஏதும் புதிய மாற்றம் தெரியவில்லை.
வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்த நான் கிடு கிடு என்று உள்ளே போனேன்..
' பானு பானு .ஒரு சேதி. நல்ல சேதி சொல்லப்போறேன்.'
' என்ன பெரிசா நல்ல சேதி இதுவரைக்கும் வந்துருக்கு. இனி வரப்போவுது. அட போங்களேன்'
புதுச்சேரியிலிருந்து எனக்கு கால் வந்த அந்த விஷயம் இன்னும் அது தொடர்பான விபரங்கள் அத்தனையும் சொன்னேன்.அவளுக்கு நம்பிக்கை வரவில்லைதான். ஆனால் என்னோடு கூட மனைவி கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களே அது கொஞ்சம் சரியாகவே தன் வேலையை செய்தது.
இந்த பரிசு சமாச்சாரத்தை அலுவலகத்தில் யாரிடமும் சொல்லிவிட வெட்கமாகவே இருந்தது. ஒருவர் ஓஹோ என்று நன்றாயிருப்பது எப்படிஅடுத்தவருக்குப் பிடிக்கும். பிடிக்காது தான். ஆக யாரிடமும் நான் சொல்லவில்லை. நான் வசிக்கும் கடலூருக்குப்பக்கத்து நகரமான புதுவை போக இருபது நிமிடங்கள் ஆகலாம்.அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டுபோகலாம். இன்று பார்த்து ஆடிட்டர் சென்னையிலிருந்து வருவதாகத்தகவல் ஆக விடுப்பு எங்கே சொல்வது. விடுப்புக் கேட்பது கூட நியாயமும் இல்லை 'பெரிய அதிகாரியிடம் போய் கொஞ்சம் வீடு வரை சென்று வருகிறேன் ஒரு உறவினர் வந்து இருக்கிறார்' என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். பொய்தான்..புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் அந்த பொய்யும் கூட மெய்யே. வள்ளுவர் சொல்லி விட்டுப்போயிருப்பதும் எவ்வளவோ ஒத்தாசை.
லன்ச் பிரேக்கில் கிளம்பி வந்துவிட்டதால் அத்தோடு சேர்த்து பெர்மிஷன் ஆக கொஞ்சம் டயத்தை நீட்டியே.எடுத்துக்கொண்டு விடலாம்.சரித்தான் ஆவது ஆகட்டும்.மனம் அந்தப் பரிசு மீதே லயித்து இருந்தது.
தத்துவங்க்கள் வியாக்கியானங்கள் பேசலாம் எழுதலாம். திருவண்ணாமலை கிரிவலத்துக்குப் போய் அப்படியே கிடைத்த இடுக்கில் ரமணாஸ்ரமம் சுற்றி வரும்போது பள பள என்று ஒரு இளம்பெண் இதமான அந்த வாசனையோடு அருகேயும் வந்து லேசாக க்கொஞ்சம் உரசினால் ஆகா மனம் ஜில்லெனத்தான் போகிறது. அப்படித்தான் சார் பரிசு விழுந்திருக்கும் சமாச்சாரமும்.

ஆக நானும் அவளுமாய் புதுச்சேரி பஸ் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டு விட்டோம். ரெட்டை வீடியோ வைத்த பேருந்து. ஏதோ படம் ஒன்று டர் புர் என ஓடிக்கொண்டிருந்தது.
நீங்கள்தான் அது பார்க்கவில்லை நடையும் பேச்சும் கூட அவளுக்கு ஒரு தோரணையாகத்தான் இருந்தது.எனக்கும் அப்படித்தானோ என்னவோ. அந்தப்பேருந்தில் எதிரே அமர்ந்து இருந்தவர்கள் யாரும் முகம் தெரிந்தவர்களாக இல்லை. இது சவுகரியமோ அசவுகரியமோ. கண்களை மூடி மூடி த்திறந்தேன். உறக்கமே வரவில்லை.எவ்வளவு பணம் வரும் எப்படி அதனை செலவு செய்யலாம் என்ற கணக்கு மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது.நான் இவ்வளவு அற்பமானவனா என்ன.. காசு எல்லாம் பெரிய சமாச்சாரம் இல்லை என்று எத்தனையோ தடவை சவடால் விட்டுப்பேசி இருக்கிறேன். ஆனால் அந்தப்பணம் கையில் வந்து விடும் போல் லேசாக ஏதும் அறிகுறி. தெரிந்தால் மனம் எத்தனை ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. அனுபவித்து அனுபவித்துத்தான் ஒருவர் இது விஷயங்கள் சொல்லவும் கூடலாம்.
புதுச்சேரி பேருந்து நிலையம் வந்தது. டம்பமாய்ப்போய் இறங்க வேண்டாமா,பாஷாண்டி மாதிரியாக ப்போயா பரிசு வாங்குவது. ஆக ஆட்டோ ஒன்று பிடித்து ஜவஹர்லால் சாலை வந்து இண்டியன் காபி அவுஸ் முன் இறங்கி நானும் அவளும் நடக்க ஆரம்பித்தோம்.எதிரே தான் அந்த நான்கு மாடி கட்டிடம். .கட்டிட உச்சியில் இன்டர்னேஷ்னல் ரிசார்ட் மேகர்ஸ் என்று எழுதிய டிஜிடல் விளம்பரம் வா வா என உற்சாகமாய் அழைத்தது.தரை தளத்தில் லிப்ட் அறைக்கு முன்பாக எங்களைப்போல நான்கு தம்பதியர் நின்று கொண்டிருந்தனர்.
'இன்டர்னேஷ்னல் ரிசார்ட்ஸ் வெல்கம்ஸ் யூ' என்று ஒரு இளம்வயது ப்பெண் எங்களை வரவேற்றாள்.
சரியாக வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டோம் மனம் லேசானது.நான்காவது மாடியில் தம்பதியர் இருபத்தைந்து எண்ணிக்கைக்கு இருந்தார்கள்.பரிசு நமக்கு மட்டும்தானே விழுந்ததாகச் சொன்னார்கள்.இதற்கு ஏன் இத்தனைக் கூட்டம். இத்தனை ஜோடிகள். . மனத்தின் ஒரு மூலையில் சிறு கலக்கம் ஜனித்தது.கழுத்தில் டை கட்டிக்கொண்ட ஒரு சார்' வெல்கம் யூ ஆல்' என்று ஆரம்பித்தார்.
'நேரா தெரியறது ஒரு ஹால். அதப்பாத்துகுங்க. அங்க டேபிள் சேர் போட்டு இருப்பாங்க.அங்க பிசினஸ் ப்ரோமோடிவ் எக்சிகூடிவ்ஸ் இருப்பாங்க. ஒரு டேபிளுக்கு ஒரு ஜோடி உக்காரணும் அப்படியே .நேரா போங்க'
'ஏதோ பங்க்ஷன் இருக்கு. அதுல பரிசு தருவாங்கன்னு வரச்சொன்னாங்க'
'நேராக போங்க சார் ஹாலுக்கு.அங்க எல்லாம் சொல்லிடுவாங்க'
நானும் அவளும் ஹாலுக்குள்ளாக நுழைந்தோம். பாதி இருட்டாக இருந்தது.ஆங்காங்கே டேபிள் போடப்பட்டு இருக்க ,ஒவ்வொரு மேஜைக்கு அருகேயும் ஒரு பெண் ஜில் புல் என ஆடை அண்ிந்து அமர்ந்திருந்தாள்.
ஒலி பெருக்கியில் அறிவிப்பு வந்தது.'அப்படியே அந்த அந்த டேபிள் சேர்ல உட்காருங்க.குவிக் குவிக்'
ஒரு டேபிள் பார்த்து நானும் அவளும் அருகிருந்த நாற்காலிகளில் எங்களைப்பொருத்திக்கொண்டோம்.
'வெல்கம் சார் வெல்கம் மேடம்'
' இதயே எத்தினி தரம் சொல்வீங்க'
'கூல் டவுன் ப்லீஸ்'
என் மனைவி , கொஞ்சம் அடக்கி வாசிக்க கட்டளை தந்தாள்.நீட்டமான டிரே ஒன்றில் கலர் பானம் நிறைத்துக்கொண்ட உயர உயர டம்பளர்கள் சில அடுக்கப்பட்டிருந்தன.அதனைத்தூக்கிக்கொண்டு வந்த வெள்ளைக் குல்லா போட்ட ஒருவன் டேபிளுக்கு இரண்டு டம்பளர்களை எடுத்து வைத்தான்.
'டேக் திஸ் டிரிங்க்ஸ் பிளீஸ்'
'மேடம் நீங்கள்'
'நாங்க சாப்டாச்சி'
நானும் என் மனைவியும் கலர்பான டம்பளர்களை கையில் எடுத்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தோம்.
'ஜஸ்ட் சிப் இட்'
சரித்தான். கிளாஸ் டம்பளரைத்தூக்கி எல்லாம் குடித்தால், பாதி சட்டையின் மேல்தான் விழும். ஆகவே பவ்யமாக கலர்பானத்தைச் சப்பி சப்பி குடித்து முடித்தோம். வளரும் தலைமுறையினருக்கு தூக்கிக்குடித்தல் என்றால் என்ன என்றே தெரியாது.நாங்கள் போன தலைமுறையின் மிச்சம். ஆகத்தான் இப்படியாய் சின்ன ஜம்பம்...
'ஒ.கே.. ஐ ஸ்டார்ட் நவ். மை டியர் பிரண்ட்ஸ். வி ஹேவ் பில்ட் நம்பர் ஆப் பியூட்டிபுல் ரிசார்ட் அவுசஸ் த்ரூ அவுட் தெ வேல்ட்.இன் சிங்கபூர்,பினாங்க்,மலேஷியா,ஆஸ்ற்றேலியா அண்ட் இன் மெனி மோர் கன்ட்றீஸ்.. ஜஸ்ட் யூ பை எனி சிங்கில் யூனிட் ஃபார் ஒன் டே,. ஒன்லி ஒன் டே காஸ்ட். தெ காஸ்ட் வில் பி ஜஸ்ட் ஒன் லேக் அன்ட் நதிங்க் மோர். யூ வில் பிகம் எ புரவுட் ஒனர் ஆஃப் கோல்டன் டிரஷர் அன்ட் லவ்லி பேரடைஸ் ஆன் எர்த்'
எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. என் மனைவி தன் தலை முடியைச் சரி செய்து கொண்டாள்.
'மேடம் பரிசு விழுந்திருக்கு. அத வந்து வாங்கிட்டுப்போகணும்னுதான் நாங்க வந்தம்' ஆரம்பித்தேன்.
என் மனைவிக்கு இப்போது கொஞ்சம் உயிர் வந்த மாதிரிக்கு த்தெரிந்தது..
'வாட் ஸ் திஸ் தென்.'
'தமிழ்ல பேசமாட்டாங்களா'
'தமிழ்ல பேசுங்களேன்' நானும் என் மனைவியோடு சேர்ந்துகொண்டேன்.
' ரெண்டு பேரும் கிட்டவாங்க'
எங்கள் நாற்காலிகளைக் கொஞ்சம் அந்தப் பெண் அருகில் நகர்த்தி அமர்ந்துகொண்டோம்.
'நானு தமிழ்ல பேசுனா இங்க என் வேல போயுடும்.' மிக மெதுவாகப்பேசினாள்.நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.எங்களுக்கும் அச்சமாக இருந்தது.
'பரிசு விழுந்திருக்குன்னு'
'சார் எதாவது ஒரு ரிசார்ட் வாங்கிகிங்க. அதுக்குத்தானே உங்க பேரு செலக்ட் ஆகியிருக்கு அதுவே எத்தனையோ லட்சம்னு சொல்லணும். ஒரு லட்சத்துக்கு நீங்க செக் கொடுத்தாலும். கேஷாவே குடுத்தாலும் சரி உங்களுக்கு ரிசார்ட் சொந்தமாயிடும். இதெல்லாம் அப்புறமா நினைச்சிப்பார்க்க முடியாது.அது சரி உங்களுக்கு எத்த்னி குழந்தைங்க. கொஞ்சம் கிட்ட வாங்க. உங்களுக்குன்னு நான் தமிழ்ல பேசுறேன்ல. என் நிலமைய புரிஞ்சுகிணும்'
' ரெண்டு பையங்க. படிக்கிறாங்க.எஞ்சினீயரிங்க்'
'ரொம்ப நல்லது.பையங்களுக்கு ஆளுக்கு ஒண்ணுன்னு ரிசார்ட் வாங்கிடலாம். வேற எதுவுமே வேணாமே எம்மாம் பணம் இருக்கு இப்ப. செக்கா குடுக்க முடியலேன்னா கையில இருக்கறது கொடுத்துட்டுப்போங்க. பிரிண்டட் ரசீது தருவோம். ஒண்ணும் பயமில்ல. கொஞ்சம் கிட்ட வாங்க'
'நாங்க எதுவும் கொண்டாருல.'
' எங்க பரிசு' என் மனைவி ஆரம்பித்தாள்.
'உண்டு உண்டு யாரு இல்லேன்னா. கிப்ட் பாக்ஸ் இங்க வந்திருக்கற எல்லாருக்கும் கண்டிப்பா உண்டு'
'எப்ப கொடுப்பிங்க'
'ஏம்மா. ரிசார்ட் வாங்குறது பத்தி சொல்லணும்ல. ஓட்ட ரீகார்டு மாதிரி பரிசு பரிசுண்ரிங்க. கொஞ்சம் கிட்ட வாங்க. எட்ட எட்டபோன பிறகு இங்க்லிஷ்ல பேசுவேன்'
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த பெண் அருகில் நகர்ந்து அமர்ந்துகொண்டோம்.
'பசங்க படிப்பு முடியணும் அப்புறமா தான் வேற செலவு எதுவா இருந்தாலும் பாக்க முடியும்' என்றேன் நான்.
'அறிவோடத்தான் பேசுறீங்களா. பசங்களுக்கு ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட்.போனா வராது தெரிஞ்சுகுங்க'.
என் மனைவி என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டாள். அந்த கருட பார்வைக்கு 'நாம் மட்டும்தானே இவனைத்திட்டிக்கொண்டு இருந்தோம் இது ஏது புதியதாய் இன்னொருத்தி' என்று சுமாராக ஒரு வசனம் எழுதிவிடலாம்.
'சாரு எப்பவும் இப்படிதானா மேடம். உங்க பாடு திண்டாட்டம் தான்'
நான் சுற்றிலும் நோட்டம் விட்டேன்.வந்து அரைமணிக்கு மேலாகி இருக்கலாம்.பாதிபேர் எழுந்து கலைந்து கொண்டிருந்தனர்.எழுந்திருந்தவர்கள் எல்லோருக்கும் கைகளில் ஒரு கிப்ட் பாக்கிட் இருந்தது. இருபத்தைந்து பேர் வந்ததில் ஒரு அய்ந்து பேர் தேறிவிட்டதாகவும் அவர்களை நிர்வாகம் அடுத்த தளத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டதாகவும் பாக்கி இருக்கிற எல்லோருக்கும் கிப்ட் பாக்கெட் கொடுத்து இடத்தைக்காலி செய்து விடவேண்டும் என்றும் கட்டளை ஸ்பீக்கரில் வந்தது. ஸ்பீக்கர் மட்டும் எனக்கு கண்களில் அகப்படவே இல்லை. என் கைக்கும் ஒரு கிப்ட் பாக்கெட் வந்துவிட நான் மகிழ்ந்து போனேன்.
'சர் யு ஆர் அட்டர் வேஸ்ட். ஹியர் மீ மேடம் இவர் கிட்ட நீங்க கவனமாகவே இருக்கணும்'
என்னிடமிருந்த பாக்கெட்டை என் மனைவியிடம் ஒப்படைத்தேன்.
'இதனுள் என்ன இருக்கும்'
'வெளியே போய் பிரித்துப்பார்க்கலாம்' நான் பதில் சொன்னேன்.
'நல்ல கனம்'
' உள்ளாற தங்க சொம்பு வச்சி இருப்பாங்க' சொல்லிச்சென்றாள் ' கிட்ட வா கிட்ட வா' என்று எங்களை அழைத்த அந்தப் பெண்.
நிஜமாக தங்க சொம்பு ஏதும் உள்ளே இருக்குமோ என்றது கள்ள மனம்.
'குவிக் பிளீஸ்' கட்டளை வந்துகொண்டே இருந்தது. அறையை விட்டு திபு திபு என்று கூட்டமாய் வெளியில் வந்தோம்.யாரும் யார் முகத்தையும் பார்த்துக்கொள்ளாமல் மெதுவாக நடந்தோம்.
லிப்ட் காரன் பேசினான்.' லிப்ட் ஒன்லி ஃபார் பீபில் கமிங்க் இன் அன் நாஆட் ஃபார் கோயிங்க் அவுட்' எதிரே இருந்த படிக்கட்டுகளைக்காண்பித்தான். பாக்கெட் பிரிக்க ஆரம்பித்தவர்கள் அதன் உள்ளே கிளாஸ் டம்பளர்கள் நான்கு இருப்பதை வெளியில் எடுத்து எடுத்து க்காண்பித்துப் படிகளில் பதமாய் இறங்கினர்.. எனக்குக்கொடுத்த பாக்கெட்க்குள்ளும் ஒரு நான்கு டம்பளர்கள் நிச்சயம் இருக்கத்தான் வேண்டும்
'நான் பாக்கெட்டை பிரிக்கட்டுமா'
'வீட்டுக்குப்போய் பார்க்கலாம்'
'இத எதுக்கு வீட்டுக்கு தூக்கிட்டுபோயிட்டு'
அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். கையில் பாக்கெட்டோடு நடக்க ஆரம்பித்தேன்.யாரேனும் நம்மை நோட்டம் விடுகிறார்களா என்று வீதியை ஒரு முறை சுற்றிப்பார்த்துக்கொண்டேன்.அவரவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் ஒருவன் வாழும் சூழலில்.அடுத்தவனைப்பற்றி எல்லாம் எங்கே யோசிக்க முடிகிறது. எதற்கேனும் எப்போதும் அலைந்து அலைந்து திரிந்து கொண்டு மட்டுமேதான் மனிதனின் வாழும் இந்தக்காலமும் இன்னும் சிறுத்துப்போகிறது.
அவள் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்தானே. வசமாய் ஏமாந்துபோனதை அவள் முகம் காட்டிக்கொண்டது. என்னுடைய அலுவலத்தில் இன்று சென்னையிலிருந்து வந்த அந்த ஆடிட்டர்கள் என்ன நோண்டிக்கொண்டிருக்கிறார்களோ அந்த நினைவு .என்னப்படுத்த ஆரம்பித்தது. நான் இப்படி ஜூட் அடித்து வெளியில் போன அந்த சமயம் பார்த்து மேலதிகாரிகள் எதற்கேனும் என்னைத்தேடியிருப்பார்களோ என்கிற அச்சம் மனதில்.முளைத்து அது வளர்ந்து கொண்டே போனது. அந்த செலவு இந்த செலவு என ஒரு நூறு ரூபாய் இன்று கோவிந்தா
பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ கீட்டோ என்று எதுவும் பிடிக்கவில்லை..பொடி நடையாய் ஒரு காபி க்கூட குடிக்காமல் புதுவைப்பேருந்து நிலையம் வந்து முன்னும் பின்னும் நகர்ந்து உறுமிக்கொண்டிருக்கும் அந்தக் கடலூர் செல்லும் பேருந்து பார்த்து ஏறி அமர்ந்து கொண்டோம்.. கிப்ட் பாக்கெட் இப்போது அவளிடம் பத்திரமாக இருந்தது.
'அத இப்படி குடு'
'எதுக்கு'
'குடன் சொல்றன்'
பாக்கெட்டை வாங்கிப்பிரித்து முடித்தேன்.அதனுள் நான்கு கிளாஸ்டம்பளர்கள் இருந்தன.ஒவ்வொன்றாய் எடுத்துப்பார்த்தேன்.நான்கிலும் சிறிய விரிசல் இருந்தது.
' இது அக்குறும்பு'
சொன்ன அவளை ஒரு முறை முறைத்துவிட்டு,மீண்டும் நான்கு டம்பளர்களையும் அதே பிரித்த காகித குப்பைக்குள் படுக்க வைத்து புதிய. பாக்கெட்டாய் அதனைச் சோடித்து முடித்தேன்..
கடலூர் வண்டி புறப்பட்டது. வங்ககக் கடலின் காற்று சுகமாய் உறக்கத்தை க்கொண்டுவந்தது. உறங்குவதுதான் எப்படி.. மனித மனம் விஷயத்தை லேசில். விட்டு விடுமா என்ன. பேருந்துக்குள்ளேயே அந்த பாக்கெட்டை சீட்டுக்குக்கீழே பத்திரமாய் வைத்துவிட்டு கடலூர் பெரிய போஸ்டாபீசு நிறுத்ததில் இருவரும் இறங்கினோம். நான் என் டெலிபோன் கணக்கு அலுவலகம் செல்ல அவள் வீட்டிற்குப் பைய நடந்தாள்.
எத்தனையோ பேர் எனக்கு அப்புறமாய் அதே புதுச்சேரிக்குப்போய் நான்கு கிளாஸ் டம்பள்ர்கள் வாங்கி வந்த அதே கதையை என்னிடம் சொன்னார்கள்.
நான் அங்கு போனதும் வந்ததும் உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான்.அது சரி ஒரு சின்ன ஒத்தாசை செய்ய வேண்டுமே அந்த இண்டர்னேஷ்னல் ரிசார்ட்டில் அப்படி விலைக்கு ஏதும் வாங்கியிருப்பவர்களில் யாரையேனும் உங்களுக்குத்தெரிந்திருந்தால் கொஞ்சம் எனக்கும் தகவல் சொல்லுங்களேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

.. .
.

.. .


... . .....
'


'
..




No comments:

Post a Comment