நெருடல் -எஸ்ஸார்சி
அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் 'படித்தலும் படைத்தலும்' அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது அவன் எழுதிய கட்டுரைகள்தான் சமீபத்தில் இப்படி ஒரு புத்தகமாக வந்தது...
அவன் எழுதி அவை வெளியும் வந்து சற்று பேசவும் பட்ட அவைகளை த் தொகுத்து ஒரு நூலாகவெளியிட சின்னதாக அவனுக்கு ஆசை. எங்கு எங்கோ போனான் எவர் எவரையோ கேட்டுப்பார்த்தான்.ஒன்றும் கதை ஆகவில்லை.கடைசியாக அண்டை ஊரில் ஒரு பதிப்பாளருக்கு ஒரு இலக்கிய நண்பர் வழி காட்டினார். நண்பர் ஊரும் பெயரும் மட்டும் சொல்லக்கூடாதுதான்.அவனுக்கு அங்கு போக அரைகுறை மனது. இருந்தாலும் போய்விட்டு வந்தான்.
யார் வேண்டாம் என்றார்கள். புத்தகத்தை த் தானே அச்சிட்டும் வெளியிடலாம். அப்படியெல்லாம் ஒரு காலம் இருந்தது.அதற்கு அரசாங்க நூலகங்களின் ஏற்பாணை வந்து சேரும். புத்தகம் அச்சிட செலவு செய்த காசு கையைக்கடிக்காமல் அந்தந்த மாவட்ட நூலக நிர்வாகத்திலிருந்து தாமதமாகவாவது அந்தப் படைப்பாளியின் வங்கிக்கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். புத்தகம் போட்டதில் நட்டம் என்று ஆகிவிடாது. புத்தகம் போடாமல் எப்படி ஒரு எழுத்தாளன் ஜீவிப்பது என்கிறபடிக்கு நினைப்புள்ள முந்திரிக்கொட்டைகள் ஒருவிதமாய்ப் பிழைத்துக்கொண்டு விடலாம்.
புத்தகத்தேர்வு என்னும் சடங்கு அதில் தரமாவது கிரமாவது நூலக ஏற்பிற்கென்று குறுக்கு வழிகள் நிச்சயமாக உண்டென்பார் சிலர் . அப்படியும் சென்று வென்று வென்று வந்தவர்கள் ஏராளம் உண்டு. வெற்றி எனபது என்ன என்று கேள்வி எல்லாம் கேட்டு வைக்காதீர்கள். ரொம்பவும் சிரமம்.அவனுக்கு அது எல்லாம் தெரிந்திருந்தால் ஏன் இப்படி..நேர்வழி போகவே உன்ன்னைப்பிடி என்னைப்பிடி என்பதுதானே அவன் சமாச்சாரம்அவனைச்சொல்லி குற்றமில்லை. அவன் வந்த வழி அப்படி.
கைகாசு போட்டு இலக்கியக் கட்டுரை நூலை அச்சிட்டு.
அதற்கு அரசாங்க நூலக ஆணையும் கிட்டாது போய்விட்டால் அப்போது என்ன செய்வது.
அரசாங்கம் தன் ஊழியருக்கு ஒதுக்கிய வீடுதானே அவன் குடியிருப்பது ஆக வீட்டுப்பரணையில் சில மாதங்கள் அச்சிட்ட அந்தப் புத்தகங்களை துயில் கொள்ளச்செய்யலாம். பிறகு பழைய புத்தகம் பேப்பர் பிய்ந்த பிளாஸ்டிக் செருப்பு இத்யாதிகள் வாங்க கள்ளத்தராசு சகிதம் வீதி வலம் வரும் அரிச்சந்திர பூபதிளிடம் . எடைக்குப்போட்லாம். வெங்காயம் தக்காளி எனச்சிலதுகள் வாங்கலாம். அப்படி மனம் வருமா என்னா. வேறு வழி தெரியவில்லையே
.பார்ப்பது அரசாங்க உத்யோகம்.மாதம் பிறந்தால் சம்பளம். அதனைக் கையில்.வாங்கவும் இன்னார் இன்னாருக்கு கொடுத்து பட்டுவாடா செய்யவும்தான் அவனால் முடிந்தது.
அண்டையூர் புத்தகப் பதிப்பாளரை அவரை ப்புத்தக வியாபாரி என்று சொன்னால் அது மிகச்சரி
ஒரு நாள் அந்த அண்டையூர் பதிப்பாள்ர் அவனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். 'சார் உங்க கட்டுரை பத்தகம் ரெடி நீங்க வரலாம் நீங்க கொடுத்த அந்த பத்தாயிரத்துக்கும் ஒரு நூறு காபி எடுத்துக்கலாம், நீங்க எப்ப முடியுமோ அப்ப வாங்க' அவன் மகிழ்ந்து போனான்.இப்படிஎல்லாம் கூட டெலிபோனில் கூப்பிட்டு விஷயம் சொல்லும் பெரிய மனமுள்ள ஒரு பதிப்பாளர் எந்த எழுத்தாளருக்கேனும் கிடைப்பாரா என்ன? மனதில் எண்ணிப்பார்த்தான். ஒரு பேருந்து பிடித்து அடுத்த ஊருக்குப்போய் வந்துவிடவேண்டியத்தான் அச்சிடப்பட்ட அந்த ப் புத்தகம் பார்க்காமல் மனம் கிடந்து அடித்துக்கொண்டது. ஒரு குழந்தையைப் பிரசவித்து மருத்துவ மனையில் அவன் மனைவி படுத்துக்கிடப்பது போலவும் உடன் தான் போய்ப்பார்க்காவிட்டால் எப்படியாவது என்கிறமாதிரியும் அவனுக்குத்தோன்றியது.ஒரு புத்தகம் அச்சில் வந்து அதனை அச்சுக்கூடத்தில் போய் முதல் முதலாய்ப்பார்த்தல் என்பது ஒரு படைப்பாளியாய் இருந்து அனுபவித்துப்பார்த்தால் மட்டுமே தெரியவரும். மற்றபடி இது விஷயம் பற்றி எவ்வளவு எழுதினாலும் அது சரிப்படாது.
பதிப்பகம் இருக்கும் அந்த அண்டை ஊருக்குப் பேருந்து பிடித்து அதனில் ஏறி அமர்ந்து கொண்டான்.மனம் புத்தகம் பற்றிய அதே நினைப்பில் நிறைந்து கிடந்தது.பேருந்தில் டிக்கட் வாங்கி அவனோடு அமர்ந்து பயணிப்பவர்களை ஒரு முறை பார்த்துக்கொண்டான்.ஏன் எல்லோருமே அவனைவிட உயரத்தில் ஒரு சாண் குறைந்த மாதிரியே தெரிகிறார்கள். அவனுக்கு அந்த சூட்சுமம்தான் பிடிபடவில்லை பேருந்தைவிட்டு இறங்கி நடந்தான். பதிப்பகம் இன்னும் தூரத்தில் இருந்தது.அது ஆட்டோ பிடித்துப்போகும் தூரத்திலும் இல்லை. ஆட்டோ வேண்டாம் நடந்தே சென்று விடலாம் என்கிற தூரத்திலும் இல்லை.இரண்டு கெட்டானாய் ஒரு தூரம் அது. வீதி வழி செல்லும் ஆட்டோக்காரன் ஒருவன்' சாரு எங்க போகணும்' என்று கேட்டதுதான் தாமதம். அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டான்.இப்படி லபக் என்று ஏறி ஆட்டோவில் அமர்ந்து கொள்ள ஆலாய்ப்பறக்கும் தனக்கு வேகு வேகு என்று நடக்கிற பிடிவாதம் எல்லாம் எதற்கு அவன் மனசாட்சியையே அவன் கேட்டுக்கொண்டான்.இது மாதிரி இன்னும் எத்தனையோ நடந்து தானே இருக்கிறது. நண்பர் வீட்டிற்குச்சென்று அங்கு சாப்பிடச்சொன்னால் முதலில் பிகு செய்வது பிறகு சாப்பிட உட்கார்ந்து மொத்தமாய் சமைத்த எல்லாவற்றையும் காலி செய்வது. சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முறை அவன் தோழர்களோடு காவேரி க்கல்லணைக்கு உல்லாசப்பயணம் போனான். காவேரியில் தண்ணீர் நிறைந்து கரையைத்தொட்டுக்கொண்டுபோன அந்தக்காலம்.கர்நாடகக்காரர்கள் தண்ணீர் பஞ்ச்சாயத்தில் இத்தனை சூது வாது புரட்டல் இத்யாதிகள் கற்றுக்கொண்டிராத நல்ல காலம் டூருக்குப்பணம் கட்டிவிட்டதால் வேறு வழி இன்றி போகவேண்டியதாயிற்று. டூருக்குக்கிளம்பும் அந்த சமயம் பார்த்து அவனுக்கு வயிறு என்னமோ செய்தது. வயிற்றை ப்பற்றி யாரும் லேசில் எடை போட்டுவிடாதீர்கள். ஒருவன் வாய் கிழியப் பேசிய அந்த ஜம்பத்தை எல்லாம் நான்கு முறை வயிறு கலக்கிக்கொண்டு பின்புறம் போய் போய்வந்த பிறகுதான் பார்க்க வேண்டும். கல்லணை டூருக்கு வரமுடியவில்லை உடம்பு கொஞ்சம் சுகம் இல்லை என்றால் அவன் கட்டிய காசு கோவிந்தா என்றார்கள்.டூர் நடத்துனர்கள் லேசுப்பட்டவர்களா என்ன.டூருக்கு வந்தவர்களுக்கு எல்லாம் சொன்னபடி இட்டலி பொட்டலம் வினியோகித்தார்கள்.அவனும் ஏழு இட்டலிகள் துயின்ற ஒரு பொட்டலம் வாங்கிச் சாப்பிட்டான் அந்த டூர் நிர்வாகிதான் அவனைப்பார்த்துக்க்கேட்டார்'உடம்பு சரியில்லை டூருக்கே வருவது சந்தேகம் என்றாய் எண்ணெய் மிளகாய்ப்பொடி முக்கிய ஏழு இட்டலிகள்.சாப்பீட்டு விட்டாய் பரவாயில்லை ' இப்படி எத்தனையோ வாங்கிக்கட்டிக்கொண்டுதானிருக்கிறான். கிடக்கிறது நம் கதைக்கு வந்துவிடுவோம். அவன்.
பதிப்பாளர் வீட்டு வாயிலில் ஆட்டோ விலிருந்து இறங்கிக்கொண்டான்.பதிப்பாளருக்கு வீடு அலுவலகம் எல்லாம் ஒன்றுதான்.
'வாங்க தசுரா வாங்க புத்தகம் பாக்க வந்தீகளா'
'ஆமாம். புத்தகம் பார்க்கத்தான் வந்தேன்'
' என் டேபிள்ள பத்திரமா ஒரு காபி இருக்கு பாருங்க உங்களுக்குச்சேரவேண்டியது அந்த நூறு காபியும் ஒரு பார்சலா கட்டி வச்சிருக்கேன். எடுத்துகுங்க. வேறு என்ன செய்தி' என்றார் பதிப்பாளர். அவன் திண்டாடித்தெருவில் நின்று ரூபாய் பத்தாயிரம் அவரிடம் கொடுத்துத்தான் இருந்தான்.பதிப்பகத்தாருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நூலக ஆணை வந்தால் லாபம் அப்படி இல்லை என்றால் ஒன்றும் குடி முழுகி விடாது..பதிப்பகத்தில் புதிய புதிய அச்சிட்ட புத்தகங்கள் இறைந்து கிடந்தன. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான்.அவன் எழுதிய கட்டுரை நூல் படித்தலும் படைத்தலும் மேசையின் மீது அழகாக அமர்ந்திருந்தது.கையில் எடுத்துக்கொண்டான்.தான் எழுதிய அந்த 'என்னுரை' யை வாசிக்கத்தொடங்கினான்.முதல் பக்கத்திலேயே எழுத்துப்பிழைகள். அவனுக்கு மனம் நொந்துபோனது.பக்கம் பக்கமாகப்புரட்டினான்.எழுத்துப்பிழை இல்லாத பக்கமே இல்லை. வாக்கிய்த்திற்கு வாக்கியம் எழுத்துப்பிழை.
பதிப்பாளர் தன் மேசையில் ஜோசியப்புத்தகம் எதையோ ஒன்றை வைத்துகொண்டு 'மாமாங்க வருடத்தில் திருமணம் செய்யலாமா' என்பதைப் படித்துக்கொண்டிருந்தார்.
'சார் இந்த புத்தகத்துக்கு ப்ரூஃப் பார்த்தது யாரு'
'ஏன் வழக்கமா ப்பாக்குற அந்த தீர்த்தமலைதான் '
'எனக்கும் அவரை த்தெரியுமே தீபம் தீர்த்தமலை தானே நீங்க சொல்றது'
'ஆமாம் அவரேதான் அந்த வயசான மனுசன் உயரமா தல க்கூட வழுக்கயா'
'கொஞ்சம் அவுரு டெலிபோன் நெம்பரு இருந்தா கொடுங்களேன்'
' ரைட்டா தர்ரேன் இதோ டேபிள் மேலேயே எழுதி வச்சிருக்கேன் பாருங்க'
அவன் அந்த தீர்த்தமலையின் டெலிபோன் எண்ணை ப்பார்தததுமே உடன் தன் செல் பேசி எடுத்துக்கொண்டு அடித்துப் பேசினான்.
'யாரு தீர்த்தமலை சாருதானா வணக்கம் சார்'
'யாரு பேசுறதுன்னு சொல்லிட்டு பேசலாமே'
'தப்புதான் நான் தசுரா பேசுறன்'
'அந்த தருமங்குடி சுந்தரேசன் ராமச்சந்திரன் தானே.'
'ஆமாம் சார் நானேதான் பேசுறேன்'
' உங்க கட்டுரை புத்தகம் பார்த்தேன். ப்ரூஃப் திருத்தணும்னு பதிப்பகத்துல குடுத்தாங்க. கவனமா படிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிது. ரொம்ப ப்பிரமாதம்னு வச்சிகுங்க. தொடர்ந்து எழுதுங்க சாரு, நீங்க எல்லாம் எழுதறத வுட்டுடப்பிடாது. ஆழமா இருக்கு அழகாவும் வருது.எனக்கு உங்கள நேரா கூப்பிட்டு பாராட்டணும்னு ஆசை.ஆனா உங்க நெம்ப்ரு தெரியலே. அதான்'
' அதே புத்தகத்துக்கு நான் எழுதியிருக்கிற என்னுரையில என் என் டெலிபோன் நெம்பரு கொடுத்து இருக்கேன் பாத்து இருக்கலாமே'
' ஆனா எனக்கு தோணலே. வயசாச்சி பாருங்கோ தசுரா நான் என்ன பண்ணுவேன்'
'பதிப்பகத்துக்காரங்க சொன்னாங்க தீர்த்தமலைதான் ப்ரூஃப் பார்த்ததுன்னு. அதனாலே உங்களை கூப்பிட்டு நான் ஒரு நன்றி சொல்லணும் இல்லயா அதுக்குத்தான் கூப்பிட்டேன்'
' இந்த காலத்துல இப்படி எல்லாம் நன்றி யாரு சொல்லுறா. தசுரா சார்னா ஒரு தனிரகம்னு சொல்வேன்'
'ரொம்ப நல்லா ப்ரூஃப் பார்த்து இருக்கிங்க நன்றி ரொம்ப நன்றி சாரு'
'என் கடமையை நான் செஞ்சேன். இதுல எனக்கு என்ன நன்றி அது இது எல்லாம்'
'அப்படி சொல்லக்கூடாது சார் நீங்க பெரிய வா நான் உங்களுக்கு எப்பவும் கடமைப்பட்டவன்'
'நீங்க பேசினதே ரொம்ப மகிழ்ச்சி..கொஞ்சம் பிசி மன்னிச்சுக்கணும் தசுரா'
தீர்த்தமலை டெலிபோனை வைத்துவிட்டார்.
அவன் பதிப்பாளரை ப்பார்த்துக்கொண்டான்.'
'சாரு தீர்த்தமலைண்ட பேசினீங்களா என்ன சொல்லுறாரு'
'ஒண்ணும் இல்லே ஒரு நன்றி சொன்னேன்'
'இதுல என்னா இருக்கு. சொல்லவேண்டிய விஷயம்தானே'
அவன் வேறு எதுவும் பதிப்பகத்தாரிடம் பேசவில்லை. அப்படிப்பேசித்தான் இனி என்ன ஆக இருக்கிறது;
'உங்க் புத்தகங்க நூத்தையும் எப்படி எடுத்த்கிட்டுப்போறீங்க இங்க இட நெருக்கடி புத்தகங்க வீணா போயிடும் இப்பவே எடுத்துகிணு போயிடுங்க அதான் நல்லது'
'இப்ப அப்படி வருல்லே. வேற ஒரு வேல இருக்கு அத முடிச்சிகிட்டு நான் ஊருக்கு ப்போகணும்'
'அப்படி என்னா வேல சாரு'
'அதையும் சொல்லிடறேன் நண்பர் பொண்ணுக்கு இன்னக்கி மஞ்ச தண்ணீ அதுக்குத்தான் வந்தேன் அப்படியே புத்தகத்தையும் பாத்துட்டு போலாம்னு'
'அப்படியா எனக்கும் ஒரு மஞ்ச தண்ணீருக்குப்போகணும் நீங்க எங்க சார் போகணும்'
அவனுக்கு கடுப்பாக வந்தது.பதிப்பாளருக்கு பதிப்பக வேலை ஒன்று மட்டுமா என்ன நினைத்துக்கொண்டான்.
மனதில் தைர்யத்தை வரவ்ழைத்துக்கொண்டு' அந்த கரும்பு விவசாயிங்க சங்க மண்டபத்துல அந்த நிகழ்ச்சிய வச்சிருக்காங்க. அங்கதான் போகணும்'
'அப்படி ப்போடுங்க நானும் அதே மண்டபத்து அதே மஞ்சதண்ணீருக்குத்தான் போறன். அவுரு உங்களுக்கு உறவா அவுரு ரெட்டியாரு இல்ல'
' எனக்கு அவர் உறவு இல்ல நண்பரு'
' அதானே பாத்தேன்.வாங்க நானு வண்டியில போறன். என் வண்டியிலயே உங்கள கூட்டிகினு போயி உட்டுடுறன் என்ன சாரு'
' மன்னிக்கணும் ஒரு அன்பளிப்பு வாங்கியாகணும் அதுக்கு கொஞ்சம் நேரம் வேணும் கடைத்ருவுல நாலு கட ஏறி எறங்கி வாங்கணும் சும்மா வாங்க முடியுமா'
'ஒரு புத்தகத்தையே பரிசா குடுக்கலாம் நீங்க எழுதின அந்த கட்டுரை நூலை கூட அன்பளிப்பா கொடுக்கலாம் அப்பதான் நீங்க ஒரு எழுத்தாளர்னு பளிச்சினு தெரியும்'
'நாம்ப எழுதறத நம்ப பொண்டாட்டி புள்ளங்களே படிக்க மாட்டேங்குது அப்பிடி இருக்கறப்ப ஏன் அந்த சின்ன பொண்ண தொந்தரவு பண்ணிகிட்டு'
'அப்புறம் உங்க சவுகரியம்' பதிப்பாளர் பேச்சை முடித்துக்கொண்டார் அவன் கையில் இன்னும் அந்த கட்டுரைப் புத்தகம் இருந்தது.மனம் கிடந்து அடித்துக்கொண்டது.பதிப்பகத்தை விட்டுக்கிளம்பினான்.
மஞ்சள் நீர் சடங்குக்கு வந்தது என்பதெல்லாம் அவன் சும்மாவிட்ட கதைதானே ஆமாம் அது எப்படி பதிப்பாளருக்கும் அதே மண்டபத்தில் ஒரு மஞ்சள் நீர் சடங்கு போகவேண்டும் என்கிறார். யோசிக்க யோசிக்க அவனுக்கு மண்டை விண் விண் என்று வலித்தத்து.
அவன் பொடி நடையாய் பேருந்து நிலையம் வந்தடைந்தான்.ஆட்டோ வாவது கீட்டோவாவது.அவன் நடக்கின்ற அசுர வேகத்தில் எந்த ஆட்டோக்காரன் தான் பேசுவான். கட்டுரைப்புத்தகத்தை அச்சிடுகிறேன் என்று சொல்லி அதனை வீணாக்கி க்கொடுத்திருக்கிறார் அந்த பதிப்பாளர்.இனி என்ன செய்ய இருக்கிறது.ஆனது ஆயிற்று.கொட்டிய பாலும் உடைந்த கண்ணாடியும் ஒப்பாரிவைத்து அழுதால் திரும்ப வந்துவிடுமா நமக்கு எதிலும் அவசரம் எதை ஒழுங்காய் ச்செய்ய நமக்கு யோக்கியதை இருக்கிறது. அவனையே அவன் திட்டித்தீர்த்தான்.
கையிலிருந்த கட்டுரைப்புத்தகத்தை வீசி எறிந்து விடலாமா என யோசித்தான்.நாம் பெற்ற பிள்ளை நொண்டியோ முடமோ நம்மோடு என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.புத்தகத்தின் மேலட்டை யாருக்கும் தெரியாமல் இருக்க ஒரு நியூஸ் பேப்பரால் அட்டை போட்டு அடக்கமாய் க்கையில் வைத்துக்கொண்டான்.புத்தகத்தைப்பிரித்துப்பார்க்கவே பயமாக இருந்தது.
அவன் கை எழுத்தும் அத்தனை மோசம்.நன்றாக எழுதவேண்டும் என்றாலும் அவன் எழுதுவான்தான். சமயத்தில் கிறுக்கியும்விடுவான். ஆனால் புத்தகம்போட க்கொடுத்த அத்தனையும் அச்சில் வெளி வந்தவையின் செராக்ஸ் நகல் தானே பின் ஏன் இப்படி என்று அவனையே அவன் நொந்துகொண்டான். வீட்டில் கொண்டுபோய் யாருக்கும் கண்ணில் படாமல் இருக்க அந்த க்கட்டுரைப் புத்தகத்தை வைத்தான்.ஒருக்கால் மனைவி கண்ணில் பட்டுவிட்டால் போனது மோசம் இத்தனை பிழை கொண்ட புத்தகம் அச்சிட எத்தனைச் செலவு என்பாள்
.நூறு புத்தகம் நமக்கென்று அங்கு கட்டிக்கிடப்பது பதிப்பாளரிடமே கிடக்கட்டும்.அது வீட்டுக்கே வரவேண்டாம் என முடிவோடு இருந்தான்.இப்படியாகக்காலம் சென்று கொண்டிருந்தது.இன்னொரு நல்ல புத்தகம் பிழை இல்லாமல் போட்டால் மட்டுமே மனம் ஆரும். அவன் மனம் ஆறினால் யாருக்கென்ன ஆறாவிட்டால் யாருக்கென்ன இருக்கிறது.
இப்படி வெட்டியாய் க்காலம் சென்று.கொண்டிருக்கும்போதுதான் ஜிஜியார் எழுதிய விமரிசனம் அதே இலக்கிய இதழில் வெளிவந்தது. அதிலும் சூப்பர் விஷயம் இதுதான்.'தசுரா அவர் நேரத்தையும் வீணாக்கி நமது நேரத்தையும் வீணாக்கிட இப்படி ஒரு கட்டுரை நூல் எழுதாமல் இருந்திருந்தால் அதுவே ஒரு இலக்கிய சேவையாக இருந்திருக்கும்'. இதைவிடவும் அவனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும். இந்த புத்தகத்தை ஜிஜியாருக்கு எந்த புண்னியவான் அனுப்பிக் கொடுத்தானோ.நன்றாக எழுதியதாய் ஒரு புத்தகத்தை ஊரெல்லாம் சொன்னாலும் ஒருவரி விமரிசனம் எழுத கையையும் காலையும் பிடிக்க வேண்டியிருக்கிற கலி காலம். இது யாருக்கும் தெரியவே வேண்டாம் என்று நினைத்து அவன் ஒரு முடிவோடு இருக்கும் அந்தக் கட்டுரை நூலுக்கு விமரிசனம் வேறு. .ஜிஜியார் மீது தப்பில்லை. அவர் சரியாத்தான் எழுதியிருக்கிறார்.
பதிப்பாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதை அவன் மனைவி அப்போதுதான் அவனிடம் காண்பித்தாள்.
' உங்களின் கட்டுரை நூலுக்கு அரசு நூலக ஏற்பு. ஆணை கிடைத்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்' அவன் படித்துமுடித்தான்
அவன் தன் நண்பர் எழுத்தாளர் சபாவிடம் பதிப்பாளர் பற்றிச் சொல்லிக்குறை பட்டுக்கொண்டான் இந்தக்கட்டுரை நூல் பிழை மலிந்து அச்சான அந்த விதம் பற்றித்தான். சபாசார்தான் அவனுக்கு ஆறுதலாய்ச் சொன்னார்' இலக்கிய பத்திரிகையில வந்திருக்குற அந்த ஜிஜியார் விமரிசனத்தை.ப்படிச்சிப்பார்க்கப்போறவங்க ரெண்டே பேரு ஒண்ணு நீங்க, ரெண்டு விமரிசனம் எழுதினதாலே அந்த ஜிஜியார். அதோடு சரி இதுல வருத்தப்பட என்ன இருக்கு தள்ளுங்க கழுதய'
---------------------------------------------------
...
. .
.
.
No comments:
Post a Comment